இரண்டாம் விரிவுரை: இருபதாம் நூற்றாண்டின் முந்தைய பொழுதில் மார்க்சிசத்தை எதிர்த்து திருத்தல்வாதம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இது "இருபதாம் நூற்றாண்டின் முந்தைய பொழுதில் மார்க்சிசத்தை எதிர்த்து திருத்தல்வாதம்" என்ற தலைப்பில் உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழுத் தலைவர் டேவிட் நோர்த், மிச்சிகன் அன் ஆர்பரில், அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தள கோடை பள்ளியில், ஆகஸ்ட் 14 முதல் ஆகஸ்ட் 20, 2005 வரை நிகழ்த்திய இரண்டாம் விரிவுரையாகும்.

மார்க்சிசத்தின் வெற்றி

19ம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டுகளின்போது ஐரோப்பிய சோசலிச இயக்கத்தின் வளர்ச்சி மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீது மார்க்சிசத்தின் செல்வாக்கு ஆகியன உலக வரலாற்றில் மிகவும் அசாதாரணமான அரசியல் மற்றும் அறிவார்ந்த இயல்நிகழ்ச்சி ஆகும். 1849ம் ஆண்டின் இறுதியில் மார்க்சும், பின்னர் ஏங்கெல்சும் இங்கிலாந்திற்கு அரசியல் அகதிகளாக வந்திறங்கினர். இதற்கு அடுத்த இரு தசாப்தங்களில், மிகுந்த சொந்த இடர்ப்பாடுகள் நிறைந்த சூழ்நிலையில், முதலாளித்துவ சமுதாயத்தின் இயக்க விதிகள் பற்றிய தத்துவார்த்த ஆய்வை மார்க்ஸ் மேற்கொண்டார். 1863 ஜனவரி 8ம் தேதி, ஏங்கெல்சுக்கு அவர் எழுதிய கடிதத்தில் இருந்து துன்பத்தை பொறுத்துக்கொள்ளும் எத்தகைய மன நிலையில் மார்க்ஸ் இருந்தார் என்பது பற்றி நாம் அறிய முடிகிறது:

"நம்முடைய வட்டத்தில் ஒவ்வொருவருக்கும் துரதிருஷ்டம் ஏன்தான் துரத்துகிறதோ என்பதை சாத்தான்தான் அறியமுடியும். எந்தப்புறம் செல்வது என்பது தெரியாமல் நான் திகைத்து நிற்கிறேன். பிரான்சிலும், ஜேர்மனியிலும் பணம் திரட்டுவதற்கு நான் எடுத்த முயற்சிகள் ஏதும் பலனளிக்கவில்லை; இரண்டு வாரங்களுக்கும் மேலாக வறுமைப் புயலின் சீற்றத்தை 15 பவுன்கள் தாக்குப்பிடிக்க முடியாது என்பது அறிந்ததேயாகும். கசாப்புக் கடைக்காரரையும், ரொட்டிக்கடைக்காரரையும் தவிர, வேறு ஒருவரும் எங்களுக்கு கடன் கொடுக்க மாட்டார்கள் என்ற உண்மை ஒரு புறம் இருக்க (அச்சலுகையும் இந்தவார இறுதியுடன் முடிந்துவிடும்), பள்ளிக்கட்டணங்கள், வாடகை என்று அனைவராலும் பிடுங்கலுக்குட்பட்டுள்ளேன். கணக்கில் சில பவுன்கள் வைத்திருந்தவர்கள் தந்திரமாக அவற்றைப் பதுக்கிவிட்டு, என்னிடம்தான் இரட்டை வேகத்தில் சார்ந்து நிற்க முயலுகின்றனர். இதற்கும் மேலாக வெளியே செல்வதற்கு தேவையாக குழந்தைகளுக்கு உடைகளோ, காலணிகளோ இல்லை. சுருங்கக் கூறின், நரகத்தின் எல்லாக் கூறுபாடுகளும் சூழ்ந்துள்ளன...

"உங்களிடத்தில் இக்கொடுமைகளை இந்நேரத்தில் கூறுவது என்பது மிக மோசமான தன்னலம்தான். ஆனால் இது ஒரு ஹோமியோபதி மருந்து போல் ஆகும். ஒரு பெருந்துன்பம் என்பது மற்ற பெருந்துன்பத்தில் இருந்து சற்று மாறுதலைக் கொடுக்கும். மேலும், இறுதியாக பார்த்தால், நான் வேறு என்ன செய்யக்கூடும்? லண்டன் முழுவதும் நான் என்னுடைய கருத்தைப் பகிர்ந்து கொள்ள ஒருவரும் இல்லை; என்னுடைய வீட்டிலேயே மறுபுறத்தில் இருந்து வரும் வெடிப்புக்களை சமன்படுத்தும் வகையில் பெரும் மெளனத்தைக் கடைபிடிக்கிறேன். இத்தகைய சூழ்நிலையின் கீழ் பணிசெய்வது என்பது கிட்டத்தட்ட இயலாததாகும்."[1]

இந்தக் கடிதம் எழுதப்படுவதற்கு மூன்று நாட்கள் முன்புதான், ஆகஸ்ட் 1867ல் அவர் முடித்திருந்த மூலதனம் என்ற நூலுக்கு இன்றியமையாத முன்னுரையான, அவரை நினைவூட்டவல்ல வியத்தகு மூன்று தொகுதிகள் கொண்ட உபரி மதிப்பு பற்றிய தத்துவங்களின் (Theories of Surplus Value) முக்கிய பகுதியின் வரைவை மார்க்ஸ் எழுதி முடித்திருந்தார்.

அக்காலத்திய முதலாளித்துவ பொருளாதாரவாதிகளால் அதிகம் கவனிக்கப்படாமல் விடுபட்டு விட்டாலும், மூலதனம் எழுதப்பட்டு 25 ஆண்டுகளுக்குள்ளாக, மார்க்சிசம் ஐரோப்பாவில் முதல் வெகுஜனக் கட்சியின் வளர்ச்சிக்கு தத்துவார்த்த ஊக்கம் கொடுத்ததுடன், வழிகாட்டுதலையும் வழங்கியது. ஜேர்மனியில் இந்த வெற்றி ஏற்பட்டது என்பது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. Aufklarung (Englightenment- அறிவுவொளிக் காலத்தில்) சகாப்தத்தில் கலாச்சாரம் மற்றும் அறிவார்ந்த வாழ்வியற்கூறுபாடுகளில் கற்பனையும் செய்து பார்க்கமுடியாத பெரும் சிறப்பு நிலையை ஜேர்மனி எய்தியிருந்த நிலையில் மார்க்சிசம் முதன்முறையாக அந்நாட்டின் தொழிலாள வர்க்கத்திடையே பெரும் திரளானோரின் கவனத்தை ஈர்த்தது.

தொல்சீர் ஜேர்மன் தத்துவஞான கருத்துவாதத்தின் பரந்த மரபியம், மிக ஆழ்ந்த முறையில் கான்ட், Fichte, எல்லாவற்றிற்கும் மேலாக ஹெகெல் ஆகியோரால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது, 1848ம் ஆண்டு புரட்சிக்கு பின்னர் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் மூலம் தொழிலாள வர்க்கத்திடம் சென்றடைந்தது. உண்மையில், அனைத்துவிதமான கருத்துவாதப் பொறிகளைத் தவிர்த்து, விமர்சனரீதியாக சடரீதியான அடிப்படையில் மறுவேலைசெய்தல், இயற்கையில் வேரூன்றி நிற்றல், மனித சமுதாயத்தின் பொருளாதார அடிப்படைகளை ஆய்வு செய்வதை நோக்கி இயக்குதல் என்ற வழிவகையில், ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தின் விடுதலையில் மெய்யியல் ஆற்றவிருந்த முக்கிய பங்கை மார்க்ஸ் முன்கூட்டியே எதிர்பார்த்திருந்தார். 1843ல் அவர் எழுதினார்:

"விமர்சனம் என்னும் ஆயுதத்தை, நிச்சயமாக ஆயுதங்களின் விமர்சனத்தினால் பதிலீடு செய்யமுடியாதுதான், சடரீதியான சக்தி, சடரீதியான சக்தியால்தான் தூக்கிவீசப்படமுடியும்; ஆனால் தத்துவமும் கூட அது மக்களைப் பற்றிக் கொண்டதும் ஒரு சடரீதியான சக்தியாக உருவெடுக்கும்."[2]

"பாட்டாளி வர்க்கத்தில் மெய்யியல் அதன் சடரீதியான ஆயுதங்களைக் கண்டுகொள்ளுவது போல பாட்டாளி வர்க்கமும் அதன் ஆன்மீக (spiritual) ஆயுதங்களை மெய்யியலிற் கண்டுகொள்ளும்... ஜேர்மனியனின் விடுதலை, மனிதகுலத்தவனின் விடுதலையாகும். இந்த விடுதலையின் தலை மெய்யியல் ஆகும், அதன் இதயம் பாட்டாளி வர்க்கமாகும். பாட்டாளி வர்க்கம் பாட்டாளி வர்க்கமாக இருப்பதை இல்லாமற் செய்யாமல் மெய்யியலை ஒரு யதார்த்தமாக்க முடியாது, மெய்யியலை யதார்த்தமாக்காமல் பாட்டாளி வர்க்கம் பாட்டாளி வர்க்கமாக இருப்பதை இல்லாமற் செய்ய முடியாது."[3]

இந்தப் பந்தி ஹெகலின் கருத்துமுதல்வாத மெய்யியலைப் பற்றி மார்க்ஸ் தனது விமர்சனத்தை ஆரம்பிக்குமுன் எழுதப்பட்டது ஆகும். ஹெகலின் கருத்துமுதல்வாத முறையின் அறிவுபூர்வமான கருவை பிழிந்தெடுத்து, அதாவது தன்னையே அந்நியப்படுத்திக் கொள்ளுவதாக ஹெகலால் உருவாக்கப்பட்ட இயங்கியல் வகையினங்கள் மற்றும் கருத்துப் படிவங்கள் மீது மீளவேலை செய்தல் மற்றும் முழுமுதல் கருத்து (Absolute Idea) இவற்றை சடரீதியில் மீளக்கட்டியமைத்தல் என்பது மகத்தான அளவில் தத்துவார்த்த-அறிவார்ந்த சாதனையாகும். ஆயினும், ஹெகலியனிசத்தை விஞ்சிநிற்பது என்பது ஊகச் சிந்தனையின் எல்லைக்குள் விமர்சனத்தை நடத்துவதன் மூலம் அடையப்பட முடியாததாகும். மார்க்சிற்கு முன்னரே ஜேர்மன் மெய்யியலாளரான ஃபயர்பாக், ஹெகலியனிசத்திற்கு ஒரு சடரீதியான விமர்சனத்திற்கான அஸ்திவாரத்தை ஏற்கனவே அமைத்திருந்தார். ஆனால் அவருடைய விமர்சனத்தின் வலிமை பெரும்பாலும் இயற்கைவாதம் மற்றும் அவருடைய சடவாதத்தின் இயந்திரவியற் பண்பினால் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஃபயர்பாக்கால் மெய்யியல் ரீதியாய் கருக்கொண்ட "மனிதன்" இயற்கையில் வாழ்ந்தானே அன்றி, வரலாற்றில் வாழவில்லை. அத்தகைய வரலாறு அற்ற இருப்பு அனைத்து சமூக ஸ்தூலத் தன்மையையும் இழந்து நிற்கும்.

இவ்வாறு சிந்தனையைவிட சடத்தின் தலைமைச் சிறப்பை வலியுறுத்திய போதிலும், அந்த அடிப்படையில் மனித நனவின் வடிவங்களின் சிக்கல் வாய்ந்த பன்முகத் தன்மைக்கு ஃபயர்பாக் சரியான விடையைக் காணமுடியவில்லை. அதிலும் குறிப்பாக மனிதகுலத்தின் வரலாற்று வளர்ச்சிப் போக்கில் நனவில் ஏற்படும் மாறுதல்களுக்கு ஒரு சரியான விளக்கத்தை அவரால் தரமுடியவில்லை.

ஹெகல் 1770லும், ஃபயர்பாக் 1804 லிலும் பிறந்த ஐரோப்பாவும் ஜேர்மனியும், பிரெஞ்சுப் புரட்சி மற்றும் நெப்போலியனின் போர்களின் எழுச்சிகளால் பெரும் மாற்றங்களுக்கு ஆளாயின. ஆனால் அத்தகைய நிகழ்வுகள் எவ்வாறு விளக்கப்படலாம்? சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற உயர் எண்ணங்களின் வெறும் விளைவுகள்தான் அவையா? இந்த உயர் சிந்தனைகளின் சக்தியை ஒருவர் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றால், அவை எங்கிருந்து வந்தன? முழுமுதற் கருத்தின் சுய அந்நியமாதலில் தர்க்க ரீதியாக தீர்மானிக்கப்படும் கணங்களில் இந்த அரிய சிந்தனைகள் தோன்றின என்று ஹெகலால் கூறப்பட்ட விடை, ஸ்தூலமான வரலாற்று நிகழ்ச்சிப்போக்குகளின் விளக்கம் என்ற வகையில் போதுமானதாக இல்லை. மனிதனின் வலரலாற்றை, ஒரு சமூக இருப்பு என்ற நிலையின் அடிப்படையில் ஆராய்ந்தால்தான், ஒரு சடவாத அடிப்படையில், சமூக நனவின் மூலங்கள், வளர்ச்சி ஆகியவற்றை பெறமுடியும்.

வரலாறு பற்றிய சடரீதியான எண்ணக்கருவின் அடிப்படைக் கூறுபாடுகள் 1844ல் இருந்து 1847 வரையிலான அசாதாரணமான ஆண்டுகளில் மார்க்சாலும், ஏங்கெல்சாலும் வளர்த்தெடுக்கப்பட்டன. அக்காலக்கட்டத்தில் அவர்கள், புனிதக் குடும்பம், ஜேர்மன் சித்தாந்தம், தத்துவத்தின் வறுமை இறுதியாக கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஆகியவற்றை எழுதினர். இதற்கு அடுத்த 20 ஆண்டுகளில் மூலதனம் எழுதப்படுவதற்கு வகை செய்த அரசியல் பொருளாதாரம் பற்றிய மார்க்சின் ஆராய்ச்சி, ஆய்வின் இயங்கியல் வழிமுறை மற்றும் வரலாற்றின் சடவாதக் கருத்துரு ஆகிய இரண்டிற்கும் தத்துவார்த்த அளவில் ஆதாரங்களை வழங்கியது. 1859ம் ஆண்டை ஒட்டி அரசியல் பொருளாதாரத்துறையில் மார்க்சின் படைப்பு மிக முன்னேற்றமான கட்டத்தை அடைந்து, அவர் தன்னுடைய தத்துவார்த்த படைப்பின் "வழிகாட்டும் நெறியை" சுருக்கிக் கூறினார்:

"தங்களுடைய வாழ்விற்காக சமூக உற்பத்தியில் ஈடுபடும்போது, மனிதர்கள் தவிர்க்கமுடியாமல் திட்டவட்டமான உறவுகளைக் கொள்கின்றனர்; இவை இவர்களுடைய தனிவிருப்பத்தனின்றும் சுதந்திரமானவை; அதாவது அவர்களுடைய சடரீதியான உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியில், ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு தக்கவகையில் உற்பத்திஉறவுகள் இருக்கும். இந்த உற்பத்தி உறவுகளின் முழுமையில்தான் சமுதாயத்தின் பொருளாதாரக் கட்டமைப்பு, உண்மையான அடித்தளம் இருக்கும், அதில்தான் சட்டபூர்வ, அரசியல் மேற்கட்டுமானங்கள் எழுகின்றன; சமூக நனவின் திட்டவட்டமான வடிவங்கள் அதற்கு ஒத்ததாக இருக்கும். சடரீதியான வாழ்வின் உற்பத்தி முறையானது, சமூக, அரசியல் மற்றும் அறிவார்ந்த வாழ்வின் பொதுவழிவகைகளை வரையறுக்கிறது. மனிதர்களுடைய நனவு ஒன்றும் அவர்களுடைய வாழ்வை நிர்ணயிக்கவில்லை; மாறாக அவர்களுடைய சமூக இருப்புதான் அவர்களுடைய நனவை நிர்ணயிக்கிறது. வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் சடரீதியான உற்பத்தி சக்திகள் நிலவும் உற்பத்தி உறவுகளுடன் ஒரு மோதலுக்கு வருகின்றன; அல்லது, இதையே சட்டபூர்வ சொற்களில் கூறவேண்டும் என்றால், இதுகாறும் அவர்கள் செயல்படுத்திவந்திருக்கும் சொத்து உறவுகளின் வடிவமைப்புக்களுடன் இந்த மோதல் வரும். உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி வடிங்களில் இருந்து, இந்த உறவுகள் அவர்களுடைய தளைகளாக மாறிவிடும்.

இவ்வாறு ஒரு சமூகப் புரட்சியின் சகாப்தம் தொடங்குகிறது. பொருளாதார அஸ்திவாரத்தில் ஏற்படும் மாறுதல்கள் விரைவிலோ, காலம் கடந்தோ, மிகப்பெரிய, முழு மேற்கட்டுமானங்களின் மாற்றங்களுக்கும் வழிவகுக்கும். அத்தகைய உருமாற்றங்களை ஆய்கையில், இயற்கை விஞ்ஞானத்தின் துல்லியத்துடன் தீர்மானிக்கப்படக்கூடிய உற்பத்தியின் பொருளாதார நிலைமைகளின் சடரீதியான உருமாற்றத்திற்கும், மற்றும் சட்ட, அரசியல், மத, கலை அல்லது மெய்யியல் என - சுருங்கக் கூறின், எந்த கருத்தியல் வடிவங்களில் இந்த பூசலைப் பற்றி மனிதர்கள் நனவாக இருந்து, தீர்க்க முயல்கின்றனரோ அந்த கருத்தியல் வடிவங்களுக்கும் இடையில் வேறுபடுத்திப் பார்த்தல் எப்பொழுதும் இன்றியமையாததாகும். ஒரு தனிநபர் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதை வைத்து, ஒருவர் எவ்வாறு அவரை மதிப்பீடு செய்வதில்லையோ, அதேபோல்தான், மாற்றங்கள் நிகழும் காலத்தைப் பற்றிய மதிப்பீட்டை அதன் நனவின் மூலம் மதிக்க முடியாது; ஆனால் இதற்கு மாறாக, இந்த நனவானது சடரீதியான வாழ்வில் இருக்கும் முரண்பாடுகளை கொண்டு, உற்பத்தி உறவுகளுக்கும் உற்பத்தியின் சமூக சக்திகளுக்கும் இடையே நிலவும் மோதலைக் கொண்டு விளக்கப்பட வேண்டும்."[4]

கிட்டத்தட்ட 150 ஆண்டுகளின் பின்னரும்கூட, இந்தப் பந்தியில் முன்வைக்கப்பட்டுள்ள தர்க்க அழகு, சொல்லாட்சித்திறன் இவற்றின் ஊடுருவிச் செல்லும் ஆற்றல் வியப்பையும் மலைப்பையும் தரும். வரலாற்றின் உந்து சக்தியை பற்றியும், மனிதனின் சமூக நனவு அதன் சிக்கல்கள் நிறைந்த அனைத்து வடிவமைப்புக்களிலும் மார்க்சினால் விரிவாக்கப்பட்டிருப்பதோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், பின்நவீனத்தின் சிடுமூஞ்சித்தனமான ஊகமாய் கொண்ட ஆய்வுப்பொருள் எவ்வளவு அற்பத்தனமும், அறிவுப் பக்குவமற்றதன்மையும் வெளிப்படையாக கூறினால் முட்டாள்தானத்தையும் அவநம்பிக்கைத்தன்மையையும் கொண்டிருக்கின்றன என்பது தெளிவாகும். 1859ன் மற்ற அயர வைக்கும் சாதனையான டார்வினின் உயிரினங்களின் தோற்றம் (Origins of the Species) போலவே, மார்க்ஸ் தன்னுடைய, அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சனத்திற்கு ஒரு பங்களிப்பு (A Contribution to the Critique of Political Economy) என்ற நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையில் முன்வைத்துள்ள தத்துவார்த்த கருத்துருக்கள் மனிதகுலத்தின் அறிவார்ந்த வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லை குறிக்கின்றன. உண்மையில் இரண்டு படைப்புக்களுக்கும் இடையே ஓர் ஆழ்ந்த, உள்ளார்ந்த தொடர்பு உள்ளது. இந்தப் படைப்புக்களுடன் மார்க்ஸ், வரலாறு பற்றிய ஆய்வையும், டார்வின் உயிரியியல், மனித சமூக இயல் பற்றிய ஆய்வையும் எல்லாக் காலத்திற்கும் உரியதாக மாற்றினர் என்று மட்டுமே எளிதாய் கூறமுடியாது.

நிச்சயமாக அது உண்மைதான், அது சிறிய சாதனை அல்லத்தான். ஆனால் இப்படைப்புக்கள் அவற்றையும் விடக் கூடுதலாக ஒன்றைக் கொண்டுள்ளன. 1859 அளவில், டார்வின், மார்க்ஸ் படைப்புக்களில் மனித இனம் தன்னுடைய சொந்த உயிரியல் மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சிகளின் விதி ஆளுமை செய்யும் வழிவகைகளை ஆளுமை செய்யும் விதிகளை புரிந்து கொள்ள முடிந்த பொழுது, மனித இனம் இறுதியாக ஒரு கட்டத்தை வந்து அடைந்துவிட்டது. மனிதனின் சொந்த உயிரியல் மற்றும் சமூக பரிணாமத்தின் இதுகாறுமான நனவற்ற நிகழ்ச்சிப்போக்கில் அவனது நனவுபூர்வமான தலையீட்டிற்கான அறிவார்ந்த முன்தேவைகள் இப்போது வெளிப்பட்டுவிட்டன.

சோசலிசத்தின் செல்வாக்கின் வளர்ச்சியும், முதலாளித்துவ வர்க்கத்தின் எதிர்த்தாக்குதலும்

ஆரம்பத்தில் மெதுவாக என்றிருந்தாலும்கூட, நாளடைவில் மார்க்ஸ், ஏங்கெல்சின் தத்துவார்த்த பணியின் செல்வாக்கு வளரத் தொடங்கியது. 1864ம் ஆண்டு நிறுவப்பட்ட முதலாம் அகிலம், பக்குனினிஸ்டுகளிடம் கடுமையான பூசலை கொண்டிருந்தபோதிலும், மார்க்சிச கருத்துக்கள் பரவுவதற்கு முக்கியமான அரங்காக அமைத்தது. 1869 ஆகஸ்ட் மாதம், ஐசெனாக் (Eisenach) மாநாட்டில் சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி (Sozial Demokratische Arbetira Partei) ஸ்தாபிக்கப்பட்டது. இந்தக் கட்சி தத்துவார்த்த ரீதியாக நிலையான மார்க்சிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அமைந்திருக்கவில்லை. அதில் லாசேல்லிய கருத்துருக்கள் செல்வாக்கை கொண்டிருந்தன-- நீண்ட காலம் அச்செல்வாக்கு தொடர்ந்தும் இருந்தது, ஜேர்மன் தொழிலாள வர்க்கத்திடையே இது கணிசமான அரசியல் செல்வாக்கை பெற்றிருந்தது.

ஆனால் இதைத் தொடர்ந்த தசாப்தத்தில், ஜேர்மனியின் சோசலிச எண்ணங்கொண்ட தொழிலாளர்களிடையே மார்க்சிசம் மேலோங்கிய செல்வாக்கை அடைந்தது. சமூக ஜனநாயகக் கட்சியை அடக்குவதற்கு பிஸ்மார்க்கிய ஆட்சி கொண்ட முயற்சிகள் எதிர் விளைவைத்தான் கொடுத்தன. 1890ம் ஆண்டு, "சோசலிசத்திற்கு எதிரான" சட்டங்கள் என்று கூறப்படுவனவற்றை அது இயற்றி 11 ஆண்டு காலத்திற்கு பின்னர் நடந்த தேர்தல்களில், சமூக ஜனநாயகக் கட்சி மொத்த வாக்குகளில் 19.7 சதவிகிதத்தைப் பெற்றது. முதலாளித்துவ ஒழுங்கின் சாவுமணி தனது வேலைத்திட்டம் என்று முழங்கிய வேலைத்திட்டத்தை கொண்டிருந்த ஒரு கட்சியின் தலைமையின் கீழ் தொழிலாள வர்க்கம் ஒரு பரந்த அரசியல் சக்தியாக வெளிப்பட்டதானது, ஆளும் வர்க்கத்தின் பொதுவான அறிவுஜீவித மற்றும் அரசியல் பார்வையில் தொலை நோக்குடைய பாதிப்பைக் கொண்டிருப்பதைத் தவிர வேறொன்றையும் கொண்டிருக்க முடியாது.

1880கள் அளவில், ஐரோப்பிய அரசியல் மற்றும் அறிவுஜீவித வாழ்வில் பெருகிய மற்றும் அதிகரித்த முறையில் மார்க்சிசத்தின் சக்தி வாய்ந்த செல்வாக்கு ஏற்பட்டிருந்ததை முதலாளித்துவ வர்க்கம் புறக்கணிக்க முடியவில்லை. நிலவும் சமூக ஒழுங்கிற்கு அத்தகைய பலமான சவாலை சமாளிக்கும் வேலையை பிஸ்மார்க் மற்றும் அவருடைய அரசியல் போலீசுக்கு மட்டும் விட்டுவிடமுடியாது என்பதை அது உணர்ந்தது. சோசலிசத்தைப் பற்றி வெறுமனே கண்டனம் கூறுவதும் போதுமானதாக இருக்காது. சோசலிசத்திற்கு எதிரான போராட்டம் மிகநுட்பமான கருத்தியல் வடிவத்தைத் தவிர்க்கமுடியாமல் மேற்கொண்டது. பொருளாதாரம், சமூகவியல், மெய்யியல் என்று பல்வேறு பன்முகத் தளங்களில் முதலாளித்துவ வர்க்கத்தின் அறிவுஜீவி பிரதிநிதிகள் மார்க்சிசத்துடன் போரிட முனைந்தனர்; அதன் தத்துவார்த்த அஸ்திவாரங்களில் பலவீனங்களைக் காண முற்பட்டனர். கான்டிய வகை மெய்யியலை புதுப்பித்தலுடன் தொடர்புடைய புதிய விமர்சனத்தின் ஒரு தொடர்ச்சியான அம்சம், மார்க்சிசம் தன்னை ஒரு விஞ்ஞானம் என்று தவறாக முன்வைத்தது என்பதாகும்..

இப்புதிய எதிர்ப்பாளர்கள், மார்க்சிசம் ஓர் அரசியல் இயக்கத்துடன் மறுக்கமுடியாமல் தொடர்புடையது என்பதனாலும், விஞ்ஞானத்திற்கு இருக்க வேண்டிய புறநிநிலைத் தன்மையையும், நடுநிலைத் தன்மையையும் கொண்டிருக்கவில்லை என்பதனாலும், மார்க்சிசம் விஞ்ஞானம் ஆகாது என்று வாதிட்டனர். சமூகவியல் வல்லுனரான Emil Durkheim, "ஆராய்ச்சியினால் ஒரு கொள்கைவழி (வகுத்தமைந்த கொள்கை முடிவு) விளைந்தது என்பதைவிட மார்க்சின் ஆய்வு ஒரு கொள்கைவழியை (வகுத்தமைந்த கொள்கை முடிவை) நிறுவுவதற்கு மேற்கொள்ளப்பட்டது... இந்த முறைகள் அனைத்திற்கும் தீவிர ஆர்வம்தான் உந்துதல் கொடுத்தது; இன்னும் சரியான நீதி வேண்டும் என்ற தாகம்தான் அவற்றிற்கு வலிமை கொடுத்தது... சோசலிசம் ஒன்றும் ஓர் விஞ்ஞானம் அல்ல, அது சமூகவியலின் சிறு வடிவம் ஆகும்; வலியின் அழுகைதான் அது." [5] இத்தாலிய தாராளவாத வரலாற்றாளரான Benedetto Croce இதன் முடிவுகள் ஒரு புரட்சிகர அரசியல் பெருவிருப்பின் விளைபொருளாய் இருப்பதால் மார்க்சிசம் ஓர் விஞ்ஞானமாக இருக்க முடியாது என்று இதேபோன்ற வகையில் வாதிடுகிறார். [6]

ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக, மார்க்சிசத்தின் செல்தகைமை மீதான முதலாளித்துவ-தாராளவாத தாக்குதல் அதன் விஞ்ஞான தன்மையை மறுப்பதைத்தான் மையமாகக் கொண்டிருந்தது. இத்தகைய விமர்சனம், தவிர்க்கமுடியாமல் மார்க்சும் ஏங்கெல்சும், அதை விஞ்ஞான அடிப்படையில் நிலைநிறுத்துவதாக அவர்கள் கூறியபொழுது எதை அர்த்தப்படுத்தினார்கள் என்பதை பல்வேறு வகையில் பொய்மைப்படுத்தலாக இருந்தது. இயற்பியலாளர்கள் (பெளதீகவியலாளர்கள்) வான்கோள்களுக்குரிய வளைவரை பாதையின் போக்கு பற்றி நிர்ணையிக்கும் விதிகளை கண்டுபிடித்துள்ளதுபோல், அதே துல்லியத்துடன் சமூக- பொரூளாதார வழிவகைகளை நிர்ணயிக்கும் விதிகளின் போக்கையும் துல்லியமாகக் கண்டுபிடித்துவிட்டதாக ஒரு பொழுதும் அவர்கள் கூறியதில்லை. அத்தகைய விதிகள் ஒன்றும் இருக்கவில்லை.

ஆனால், இது எவ்வகையிலும் மார்க்சிசத்தின் விஞ்ஞானபூர்வ தன்மையின் மதிப்பு ஒன்றையும் குறைத்துவிடவில்லை என்பது கீழ்க்கண்ட பொருளில் கட்டாயம் உணரப்படவேண்டும். சமூகத்தின் நிலவும் நிலைமைகளுக்கும் அதன் சீர்திருத்தத்திற்கும் மறுஉற்பத்திக்குமான அவர்களின் சொந்த திட்டங்களுக்கும் இடையிலான அத்தியாவசியமான மற்றும் புறநிலை ரீதியான காரண காரியத் தொடர்பின் உறவுகளை நிறுவ முடியாதிருந்த, கற்பனாவாதச் சிந்தனையாளர்களின் முந்தைய தலைமுறையின் திட்டங்கள் மற்றும் கருத்துக்கள் ஆகியவற்றில் இருந்து மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்சின் சோசலிசம் வேறுபட்டு இருந்தது. முதலாவதாக, வரலாற்றின் சடவாதக் கருத்துருவின் விளக்கத்துடன், மற்றும், இரண்டாவதாக முதலாளித்துவ உற்பத்தி முறையின் இயக்கவிதிகளை கண்டுபிடித்ததுடன் இந்த வரம்பு மார்க்சினாலும் ஏங்கெல்சினாலும் கடக்கப்பட்டது- இந்த விதிகள் தம்மைத்தாமே முழுமையாக கணித்துக்கூறக்கூடிய, அடுத்தடுத்து வரக்கூடிய தொடர் நிகழ்ச்சிகள் என்றில்லாமல் போக்குகளாக வெளிப்படுத்திக்கொள்கின்றன என்று கூறியது மார்க்சிசத்தின் குறை அல்ல, ஆனால் இன்னும் சொல்லப்போனால் அவை புறநிலை சமூக யதார்த்தத்தின் அடிப்படையில் பல்வேறு கூறுகளைக் கொண்ட மற்றும் உள்ளார்ந்து முரண்படும் தன்மையைத்தான் காட்டுகின்றன.

பரந்த அளவில் கூறும்போது, பொருளாதார நிகழ்ச்சிப்போக்குகளில் தீர்க்கமான பங்கு பற்றிய கண்டுபிடிப்பும் விளக்கமும், மற்றும் மனித சமூகத்தில் உறவுகளும் புதிரைக் களைவதையும், வரலாற்றை நனவாகப் புரிந்துகொள்ளுவதையும் சாத்தியமாக்கியது. முதலாளித்துவம் பற்றிய அவருடைய ஆய்வின்போக்கில், உழைப்புச் சக்தி, மதிப்பு, இலாபம் போன்ற மார்க்சால் பயன்படுத்தப்பட்ட, வளர்த்தெடுக்கப்பட்ட மற்றும் செழுமையாக்கப்பட்ட வகையினங்கள் உண்மையாய் புறநிலைரீதியாக நிலவும் சமூகப் பொருளாதார உறவுகளின் அருவமான தத்துவார்த்த சொற்களாகும்.

அரசியல் பக்கச்சார்பு, விஞ்ஞானபூர்வ புறநிலைத் தன்மையுடன் பொருந்தாது என்ற கூற்று சொற்புரட்டு ஆகும். ஆய்வின் செல்தகைமை பக்கச்சார்பினால் விலக்கப்படுவதும் இல்லை; அக்கறையின்மையால் உறுதியளிக்கப்படுவதும் இல்லை. பக்கம் சார்தல் என்பது மார்க்சிசத்தின் புறநிலையான மற்றும் விஞ்ஞானத்தன்மைக்கு எதிரான வாதமும் அல்ல; இந்த பக்கம்சார்தல் ஆராய்ச்சியின் நேர்மையை சமரசம் செய்தது மற்றும் தவறான முடிவுகளைக் கொடுத்தது என்று காட்டப்பட்டிருக்க வேண்டும்.

1890களின் மத்தியில், மார்க்சிசத்தின் இடைவிடா முதலாளித்து விமர்சனத்தின் தாக்கம் சோசலிச இயக்கத்தில் நன்கு உணரப்பெறல் ஆயிற்று. ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் முக்கியமான தலைவர்களுள் ஒருவரான எடுவார்ட் பேர்ன்ஸ்டைன், ஆரம்பத்தில் எச்சரிக்கை உணர்வுடனும் பின்னர் அரசியலில் காட்டிக் கொடுப்பவர்கள் பொதுவாக வெளிப்படுத்தும் தடையற்ற உற்சாகத்தின் மூலமும், மார்க்சிசத்தின் புரட்சிகர வேலைத்திட்டங்களுக்கு தன்னுடைய எதிர்ப்புக்களை வெளிப்படுத்தினார். ஜேர்மனியிலும் சர்வதேச சோசலிச இயக்கத்திலும் பேர்ன்ஸ்டைன் வகித்த பெருமதிப்பு வாய்ந்த நிலையை எடுத்துக் கொண்டால் --அவர்தான் பிரெடெரிக் எங்கல்சின் படைப்புக்களை வெளியிடும் உரிமை பெற்றிருந்தவர் -- மார்க்கிசத்தைப் பற்றிய அவருடைய விமர்சனம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பது தவிர்க்கமுடியாததானது, ஐரோப்பா முழுவதும் சோசலிசஸ்ட் கட்சிகளிடையே உட்கட்சிப் போராட்டங்களை தூண்டிவிட்டன. மார்க்சிசத்தை பற்றிய பேர்ன்ஸ்டைனின் "திரித்தல்களின்" மீதான பூசலின் அளவு அவரே எதிர்பார்க்காத வகையில், விரும்பாத வகையில், இப்பூசல், முற்றிலும் தனிப்பட்டகாரணங்களை கொண்டிருப்பதைக் காட்டிலும், சமூகக் காரணங்களையே கொண்டிருந்தது.

நான் ஏற்னவே குறிப்பிட்டுள்ளபடி, முதலாளித்துவ தத்துவார்த்தவாதிகள், தங்கள் சிந்தனைப்போக்கில், ஒரு தற்காப்பு இயங்குமுறை என்ற வகையில், 1890களை ஒட்டி, சோசலிச இயக்கத்தின் வளர்ச்சிக்கு காட்டமாகவே விடையிறுக்கும் வகையை தொடங்கியிருந்தனர். ஆனால் இந்த எதிர்த்தாக்குதலின் பாதிப்பு உலகப் பொருளாதார நிலையில் ஏற்பட்டிருந்த கணிசமான மாறுதல்களால் வரையறுக்கப்பட்டிருந்தது. 1870களின் இடைப்பகுதியில் தொடங்கிய நீடித்த கால பொருளாதார மந்த நிலை இறுதியில் இலாப அளவுகள் மீட்சியடையவும் தொழிற்துறையும் நிதி நிலையும் பெருத்த விரிவாக்கத்தை அடையவும் வகைசெய்தன. சிற்சில பின்னடைவுகள் இருந்தபோதிலும், 1890 களின் நடுப்பகுதியில் தொடங்கிய பொருளாதார விரிவாக்கம் முதலாம் உலகப் போருக்கு சற்று முந்தைய ஆண்டுகள் வரை தொடர்ந்திருந்தன. கொச்சை மட்டத்தில் அனுபவவாத மற்றும் ஆக்க நிலைப்பாட்டில் இருந்து, குட்டி முதலாளித்துவப் பகுதிகள் மற்றும் சில தொழிலாள வர்க்கத் தட்டின் வாழ்க்கைத் தரம் பற்றிய அவர்களது சாதகமான மற்றும் பரந்த அளவில் உணரப்படும் பாதிப்புடன் சேர்ந்து, முதலாளித்துவ உற்பத்தி முறை மற்றும் வணிகம் இவற்றின் அடிப்படைக் குறியீடுகள் வலிமையுடன் வெளியே காணக்கூடியநிலையானது, முதலாளித்துவ அமைப்பை பற்றிய மார்க்சிச பகுப்பாய்வை வினாவிற்கு உட்படுத்தியது; அதிலும் குறிப்பாக, அதன் புரட்சிகர நிலைமுறிவு உடனடியாக நிகழக்கூடிய நிலையை கேள்விக்குட்படுத்தியது.

1870ம் ஆண்டு பிராங்கோ-பிரஷ்ய போருக்கு பின்னர் மிகப் பெரிய அளவில் ஜேர்மனி தொழில்துறைமயமாக்கப்பட்டதும், முறையான வகையில் 1871ம் ஆண்டு பேரரசு தோற்றுவிக்கப்பட்டதும் (இது பிஸ்மார்க்கின் தலைமையில் ஜேர்மன் ஐக்கியம் ஏற்பட்டதைக் குறிக்கும்), ஜேர்மன் தொழிலாளர் இயக்கத்தின் முரண்பாடுகளுக்கு அடிப்படையாய் இருந்தது. அது அசாதாரண முறையிலான அதன் விரைவான வளர்ச்சியை, அதன் வேலைத் திட்டத்திற்கு தத்துவார்த்த புரட்சிகர அடிப்படையாக மார்க்சிசத்தை அது மேலோட்டமாக ஏற்றதை, மற்றும் திரித்தல்வாதத்தின் வளர்ச்சியை சாத்தியமாக்கியது. முதலில், ஜேர்மனியின் புதிய தொழில்கள் மிக நவீனமான தொழில்நுட்பங்களின் அடிப்படையில் வளர்ந்தன; இதையொட்டி, நன்கு படித்திருந்த, மிகவும் பயிற்சி பெற்றிருந்த தொழிலாள வர்க்கம் தோன்றியது. இந்த முக்கியமான தட்டின் மத்தியில்தான் மார்க்சிச கருத்துருக்கள் புதுக் கருத்துருக்களை ஏற்கவல்ல ஆதரவாளர்களை கொண்டிருந்தது. மேலும், பிரஷ்ய இராணுவவாதத்தின் மரபுகளில் ஆழ்ந்திருந்த மற்றும் அனைத்துவிதமான ஜனநாயக வடிவமைப்புக்களுக்கும் நோய்க்குறியாய் எதிர்ப்புக் காட்டிய நிலம் படைத்த செல்வந்தத்தட்டின் கையில் குவிந்திருந்த, ஹோகன்ஜோலெர்ன்-பிஸ்மார்க்கிய அரசு கட்டமைப்பின் முழுப் பிற்போக்குத் தன்மையுடைய அரசியல் அதிகாரம், துணிவற்ற தாராளவாத முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்து எந்தக் குறிப்பிடத்தக்க எதிர்ப்பையும் சந்திக்கவில்லை.

அரசிற்கான, பரந்த மக்கள் எதிர்ப்பின் உண்மையான குவிமையமாக சோசலிச இயக்கம் இருந்தது. உண்மையில் தொழிலாள வர்க்க வாழ்வின் அனைத்து அம்சங்களையும் தழுவிய பெரும் அமைப்பு ரீதியான வலைப்பின்னலை சமூக ஜனநாயகம் தோற்றுவித்திருந்தது. August Bebel தலைமையில் இருந்த SPD "அரசுக்குள் அரசு" என்ற கருத்தைப் பிரதிபலித்தது. உண்மையில் இரண்டாம் வில்லியம் ஜேர்மனிய பேரரசின் கைசராக இருந்தபோது, 1860ல் இருந்து தன்னுடைய வாழ்வு முழுவதையும் சோசலிச இயக்கத்தை கட்டமைப்பதற்கு அர்ப்பணித்திருந்த, இதற்காக கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் சிறைவாசம் கூட சென்றிருந்த பெபல், தொழிலாளர்களால் தங்களுடைய "கைசர்" என்று போற்றப்பட்டிருந்தார்.

1880களின் சோசலிச விரோத சட்டங்களுக்கு எதிரான கடுமையான போராட்ட காலத்திற்கு திரும்பிச்சென்றால், சோசலிச இயக்கத்தின் நடைமுறை அதன் அமைப்பை படிப்படியான முறையில் வளர்த்தெடுப்பதிலும் வலிமைப்படுத்துவதிலும் பெரும் கவனத்தைச் செலுத்தியிருந்தது. ஜேர்மன் மக்களுடைய மரபாரந்த திறமை இந்தக் குறிப்பிட்ட துறையில் மார்க்சிசத்தால் வழங்கப்பட்ட உட்பார்வைகளினால் விரிவடைந்தது. மேலும், ஜேர்மன் தொழிலாள வர்க்க இயக்கத்தின் வளர்ச்சி அமைப்பியல் ரீதியாகவே ஜேர்மன் தொழிற் துறையின் வளர்ச்சியுடன் பிணைந்திருந்தது. ஜேர்மன் தொழிற்துறை-பொருளாதார வளர்ச்சிக்கும் ஜேர்மன் தேசிய தொழிலாளர் இயக்கத்திற்கும் இடையே இருந்த ஆழ்ந்த உட்தொடர்பின் துன்பகரமான அரசியல் உட்குறிப்புக்கள் 1914ம் ஆண்டு நெருக்கடியின்போது இன்னும் தெளிவானதாக மாற இருந்தது.

ஆகஸ்ட் 1914 நிகழ்வுகள் பெரும் அதிர்ச்சி தருபவையாக இருந்தன என்றாலும், அவை நீண்ட காலமாக தயாரிக்கப்பட்டவை ஆகும். இதைப் பற்றி சற்று விரிவாக பின்னர் நான் பேசுவேன். ஆனால் அமைப்பு மற்றும் அரசியல் நடைமுறை என்ற இருவகைகளிலும் சமூக ஜனநாயக இயக்கத்தின் சில பண்பியல்புகள், பின்னர் 1914 பெருந்துன்பத்திற்கு வழிகோல இருந்தவை, ஏற்கனவே 1890களின் மத்தியில் தெளிவாக இருந்தன.

1893ம் ஆண்டு Erfurt திட்டம் ஏற்கப்பட்டது, சமூக ஜனநாயகக் கட்சியை முறையாக சமூகத்தின் புரட்சிகரமான மாற்றத்திற்கு சம்பிரதாயமாக ஒப்புக்கொள்ள வைத்திருந்த போதிலும்கூட, ஜேர்மன் சோசலிச இயக்கத்தின் நடைமுறை, விரைவான பொருளாதார விரிவாக்க காலத்தில் நிலவிய புறநிலைக் காரணிகளால் ஒரு பெரும் அளவுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த வகையில், சீர்திருத்த தன்மையைத்தான் முக்கியகூறாகக் கொண்டிருந்தது. ஹோஹென்ஜோலெர்ன் ஜேர்மனியின் மார்க்சிசம், தனித்தன்மை வாய்ந்த முறையில், ஒரு புரட்சிகர முன்னோக்கை சீர்திருந்த வழக்கத்துடன் சமரசப்படுத்திக் கொள்ளும் நிலையில்தான் எப்பொழுதும் இருந்தது என்று ட்ரொட்ஸ்கி பின்னர் குறிப்பிடுகிறார். இந்த வடிவமைப்பிற்குள் இரண்டுவித துறைகள் விதிவிலக்கான முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடுகளை கொண்டிருந்தன: ஒன்று, ஜேர்மனியின் பாராளுமன்றத்திலும் பல மாநிலப் பாராளுமன்றங்களிலும் சமூகஜனநாயக பிரதிநிதித்துவத்தை பெருக்கிக் கொள்ளும் இலக்குடைய தேர்தல் சார்புடைய செயற்பாடு; இரண்டாவது தொழிற்சங்க நடவடிக்கை; அதாவது, முதலாளித்துவ தொழிற்கூடங்களுள் தொழிலாளர்கள் அமைப்பை நிறுவி அவர்களின் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்துதல் என்பதாகும்.

இரண்டு துறைகளிலும் சமூக ஜனநாயகக் கட்சி குறிப்பிடத்தக்க வகையில் நடைமுறை விளைவுகளை சாதித்தது. ஆயினும், ஒரு புரட்சிகர மூலோபாய நிலைப்பாட்டில் இருந்து இதற்கு குறிப்பிடத்தக்க இழப்புக்களும் இருந்தன. பாராளுமன்ற பிரிவுகளின் (கன்னைகளின்) செயற்பாடுகள் கணக்கிலடங்கா வகையில், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை முதலாளித்துவ அரசில் இருந்து பராமரிப்பதற்கும், நடைமுறை விளைவுகளை உருவாக்குவதற்கான அழுத்தத்திற்கும் இடையிலான பிரச்சினையின் கணக்கற்ற வடிவங்களில் தோன்றின. சமூக ஜனநாயகக் கட்சி ஜேர்மனியில் மிகப் பெரிய அரசியல் கட்சியாக இருந்தாலும், பாராளுமன்றத்தில் பிரபுக்கள் மற்றும் முதலாளித்துவ எதிராளிகள் ஆகியோரின் இணைப்பு அதைவிட எண்ணிக்கையில் அதிகமாக இருந்தது. இதன் விளைவாக தன்னுடைய முயற்சியில் இக்கட்சி பாராளுமன்றத்தில் அரசாங்க நடவடிக்கைகளுக்கு எதிராக பாராளுமன்ற சிறுபான்மைக் கட்சி என்ற முறையில்தான் வாக்களிக்க முடிந்ததை தவிர அதிகமாக ஒன்றும் செய்ய முடியாதிருந்தது.

இந்தப் பெரும் சோர்வுதரும் நிலைமைக்கு கொள்கைரீதியான தீர்வு ஒருபுறம் இருக்க, எளிமையான தீர்வுகூட இல்லை. ஆனால் சமூக ஜனநாயகக் கட்சியிலேயே சில கூறுபாடுகள், குறிப்பாக தெற்கு ஜேர்மனியில் இருந்தவர்கள், ஒரு தீர்வை கண்டனர்; அதாவது முதலாளித்துவ தாராளவாதிகளுடன் ஒருவித பாராளுமன்றக் கூட்டு என்பதே அது. இது தேசிய தலைமையினால் எதிர்க்கப்பட்டது மற்றும் தேசியப் பாராளுமன்றத்தில் இந்த வடிவிலான வர்க்க ரீதியான ஒத்துழைப்பிற்கு, அங்கு கட்சிப் பகுதியின் தலைமைப் பொறுப்பை வகித்திருந்த பெபல் அனுமதி மறுத்துவிட்டார். ஆனால் ஜேர்மன் முதலாளித்து வர்க்கத்தின் சில பகுதிகளுடனான நடைமுறை ஒத்துழைப்பிற்கான அழுத்தம் தொடர்ந்து இருந்தது.

மற்றொரு பணித்துறையான தொழிற்சங்கங்கள் இன்னும் பெரிய பிரச்சினைகளை வைத்தன. 1870களிலும், 1880களிலும் சமூக ஜனநாயகக் கட்சி ஜேர்மன் தொழிற்சங்க வாதத்தின் செவிலித்தாய் போல செயலாற்றி வந்தது. தொழிற்சங்கங்களின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு தேவையான தலைமை, நிதியம் ஆகியவற்றை அது அளித்து வந்தது. ஆனால் 1890 களின் தொடக்கத்தில் இருந்து தொழிற்சங்கங்களுக்கும் கட்சிக்கும் இடையே இருந்த உறவு மாறத் தொடங்கியது. தொழிற்சங்கங்கள் கட்சியைவிட விரைவாக வளர்ந்தன; கட்சி நாளடைவில் தொழிற்சங்கங்களிடம் நிறுவன மற்றும் நிதி ஆதரவிற்கு சார்ந்துநிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஜேர்மனியின் பெரிய தொழிற்சங்கங்கள் சமூக ஜனநாயகக் கட்சி தலைமையில் இருந்த பெபல் பிரிவு (கன்னை) கொடுத்திருந்த அரசியல் நிலைப்பாட்டை முறையாகப் பின்பற்றுவதைத் தக்கவைத்திருந்த சமூகஜனநாயகவாதிகளின் தலைமையின் கீழ் இயங்கின. ஆனால் தவிர்க்க முடியாமல் தொழிற்சங்கத் தலைவர்களின் அன்றாடப்பணி பொதுவாக சீர்திருத்த தன்மையைத்தான் கொண்டிருந்தது.

பேர்ன்ஸ்டைனால் பயன்படுத்தப்பட்ட தத்துவார்த்த சூத்திரங்கள் முதலாளித்துவ வர்க்கத்தின் மார்க்சிச எதிர்ப்பு மெய்யிலில் நடைமுறையில் இருந்த போக்குகளினால் நேரடியாக செல்வாக்கிற்குட்பட்டிருந்தாலும், பேர்ன்ஸ்டைனின் திருத்தல்வாதத்திற்கான நடைமுறை உந்ததுல் ஐரோப்பாவிலும் ஜேர்மனியிலும் இருந்த புறநிலை சமூகப் பொருளாதார நிலைமைகளினால் நிர்ணயிக்கப்பட்டன. இந்தப் புறநிலை உள்ளடக்கத்தில், பேர்ன்ஸ்டைனின் திருத்தல்வாதப் போக்கு ஜேர்மன் சோசலிச இயக்கத்தின் பொதுவான சீர்திருத்தவாத நடைமுறையின் தத்துவார்த்த வெளிப்பாடாக எழுந்தது. இந்த புறநிலைச் சூழ்நிலைகள் மற்றும் நடைமுறை செயற்பாட்டு வடிவங்கள் ஏற்கனவே ஓரளவு இருந்திருந்த மட்டத்திற்கு, ஏனைய நாடுகளில், குறைந்த அல்லது கூடுதலான மட்டத்திற்கு, பேர்ன்ஸ்டைனின் திருத்தல்வாதப் போக்கிற்கு ஒரு சர்வதேச ஆதரவு கிடைத்தது.

எடுவார்ட் பேர்ன்ஸ்டைனின் திருத்தல்வாதம்

எப்போது பேர்ன்ஸ்டைனின் திருத்தல்வாதம் முதலில் வெளித்தோன்றியது? இதற்குப் பல அறிகுறிகள் இருந்தன. உண்மையில் அவருடைய சோசலிச வாழ்க்கைப் போக்கின் (Career) ஆரம்பத்தில், பேர்ன்ஸ்டைன், புரட்சிகர மார்க்சிசத்தை, குட்டி முதலாளித்துவ மனிதநேயச் சொற் சலசலப்புகளினால் நீராளமாக்கும் (Diluting) போக்கிற்கு எளிதில் ஆளாகும் தன்மையை புலப்படுத்தி இருந்தார். 1870ம் ஆண்டுகளின் பிற்பகுதியில், சோசலிசம் ஜனரஞ்சகமான (Popular) பல - வர்க்க (Multi-class) இயக்கமாக, ஒழுக்கவியல் அடிப்படையில் சிறப்பாக நடுத்தர வர்க்கத்தை கவரக் கூடியதாக்குவதன் மூலம், அதற்கு மேலும் சிறந்த வருங்கால வாய்ப்பு வரும் என்று நம்பிய, இளம் சமுக ஜனநாயக இயக்கத்தின் செல்வந்த ஆதரவாளரான ஹோஷ்பேர்க்குடன் (Höchberg) பேர்ன்ஸ்டைன் தன்னை சேர்த்துக் கொண்டார். பெபெல் மற்றும் ஏங்கெல்ஸ் ஆகியோரின் அழுத்தத்தின் கீழ் பேன்ஸ்டைன் இந்த நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கினார்; ஆனால், அரசியலில் மீண்டும் மீண்டும் நடப்பதுபோல், முதலில் இளம் பிராயத்து தவறுகள் போல் தோன்றுபவை, பின்னர் ஒரு அரசியல் போக்கின் ஆரம்ப அறிகுறிகளாக வெளிப்படுகின்றன.

பின்னர், பேர்ன்ஸ்டைன் இங்கிலாந்திற்கு இடம் பெயர்ந்தார்; அங்கு அவர் சீர்திருந்தவாத ஃபாபியன் (Fabian) இயக்கத்தின் பிரதிநிதிகளுடன் மிகவும் நட்புறவு ரீதியான உறவுகளை வளர்த்துக் கொண்டார். புரட்சிகர பேருரிமைக் கிளர்ச்சி இயக்கத்தின் (Chartism) பொறிவின் பின்னர், களைகளைப்போல சீர்திருத்தவாதம் படர்ந்திருந்தது, பிரிட்டினில் பேர்ன்ஸ்டைனினிற்கு ஏற்பட்ட அனுபவங்கள், அநேகமாக அவர் மனதில் ஆழ்ந்து பதிந்திருக்கக் கூடும். நிலையான மத்தியதர வர்க்கம் மற்றும் ஆழமாக வேர் ஊன்றிய பாராளுமன்ற முறை என்பனவற்றை கொண்ட செல்வமிக்க பிரிட்டனில், புரட்சிகரமாக முதலாளித்துவத்தை தூக்கி வீசுவதற்கான வாய்ப்பு மிகவும் நெடுந்தொலைவில் இருப்பதாக பேர்ன்ஸ்டைனுக்குத் தோன்றியது.

மார்க்சினால், 1850ல் எழுதப்பட்ட "பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள்" என்ற நூலின் புதிய பதிப்பிற்கு ஏங்கெல்ஸ் எழுதிய முன்னுரையை பேர்ன்ஸ்டைனும், காவுட்ஸ்கியும் திருத்தியமைத்திருந்த முறை, அந்த முதுபெரும் புரட்சியாளர், சமாதானப் பாதையில் சோசலிசம் என்பதன் சீடர்களுள் ஒருவர் ஆகிவிட்டார் என்ற எண்ணப் பதிவை (Impression) ஏற்படுத்தும் முறையில் இருந்தது. 1895ன் தொடக்கத்தில் இதைக் கண்டறிந்த ஏங்கெல்ஸ், ஆழமான வேதனைக்கு உள்ளானார். தான் இறப்பதற்கு வெறும் நான்கு மாதங்களுக்கு முன்பு, ஏப்ரல் 1, 1895ல், ஏங்கெல்ஸ் கோபத்துடன் காவுட்ஸ்கிக்கு எழுதியதாவது:

"இன்று வோவாட்ஸில் (Vorwärts) எனக்குத் தெரியாமல் என்னுடைய "முன்னுரையின்" ஒரு பகுதி அச்சிடப்பட்டுள்ளதைப் பார்த்து நான் மலைத்துப் போனேன். அதில், சமாதான வேட்கை கொண்ட, எந்த ஒரு விளைவானாலும் சட்டத்திற்கு கட்டுப்பட்டேயாக வேண்டும் என்று வாதிடுபவர் போல, என்னை வஞ்சித்து காட்டப்பட்டுள்ளது. இந்த முன்னுரை அதன் முழுமையில் நியு சைற்றில் (Neue Zeit) வெளி வரவேண்டும் என்று நான் விரும்புவதற்கு இதுவே எல்லாவற்றிற்கும் அதிகமாக முக்கிய காரணமாக உள்ளது. அப்பொழுதுதான் என்னைப்பற்றிய இந்த வெட்கக்கேடான மனதில் உண்டாக்கப்பட்ட கருத்து அழிக்கப்படக்கூடும். நான் இதன் மூலம் லீப்னெக்ட்டை (Liebknecht) அதைப் பற்றி என்ன கருதுகின்றேன் என்பது பற்றி ஐயத்துக்கு இடம் இன்றி விடுவதோடு, இதே நிலைதான் அவர்கள் எவராயிருந்தாலும் அவர்களுக்கும் பொருந்தும். ஏனென்றால் அவர்கள், என்னிடம் ஒரு வார்த்தை கூடக் கூறாது, எனது கருத்துக்களை அவர் உருத்திரித்து பொருள் கொடுக்க, அவருக்கு இந்த சந்தர்ப்பத்தை கொடுத்துள்ளார்கள்." [7]

1896 அக்டோபரில், ஏங்கெல்ஸ் காலமாகி ஓராண்டிற்கு சற்று பின்னர், பேர்ன்ஸ்டைன், "சோசலிசத்தின் பிரச்சினைகள்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினார். இது மார்க்சிசத்தின் புரட்சிகர வேலைத்திட்டத்தை வெளிப்படையாக அவர் நிராகரிப்பதன் முறையான ஆரம்பத்தை குறித்துக் காட்டிற்று. அவரது கட்டுரை ஐரோப்பாவில் சோசலிச இயக்கம் விரைவாக முன்னேறுவது பற்றியும், அதன் வளர்ச்சியுறும் செல்வாக்கு பற்றியும் குறிப்பிட்டுக் கொண்டு, ஆரம்பித்தது. முதலாளித்துவ கட்சிகள் கூட சோசலிஸ்டுகள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு கவனம் செலுத்த வேண்டி இருந்தது. பேன்ஸ்டைன் இந்த வெற்றிகள், சோசலிசம் முழுமையாக வெற்றியின் விளிம்பில் நிற்கின்றது என்று வாதிடாவிட்டாலும் அவர், நிலவும் யதார்த்தம் தொடர்பாக சோசலிச இயக்கத்தால் பெரும்பாலும் எடுக்கப்படும் மறுப்பு ரீதியான (Negative) மனப்பான்மையை கைவிடுவது நிச்சயமாக அவசியமாகிவிட்டது என்று வாதிட்டார். அதன் இடத்தில், சோசலிஸ்டுகள் "ஆக்கமுறையான சீர்திருத்த ஆலோசனைகளை முன்வைக்க வரவேண்டும்."[8]

அடுத்து வந்த இரு ஆண்டுகளில், சோசலிசத்திற்கான முன்நிபந்தனைகள், என்ற புத்தக வெளியீட்டோடு உச்சத்தை அடைந்த பேர்ன்ஸ்டைன், தனது மரபுவழி மார்க்சிசத்தை பற்றிய விமர்சனத்தை விரிவுபடுத்தினார். இந்த எழுத்துக்கள், நடைமுறையில் மார்க்சிசத்தின் எந்த ஒரு அடிப்படைக் கூறுடனும் பேர்ன்ஸ்டைனுக்கு உடன்பாடு இல்லை என்பதை தெளிவுபடுத்தின. ஹேகலுக்கு மார்க்சிசம் கொண்டிருந்த மெய்யியற் கடனை, மற்றும் அது இயங்கியல் வழிமுறையை ஆரத் தழுவியிருத்தலை அவர் நிராகரித்தார். குறிப்பாக, பேர்ன்ஸ்டைன், "சோசலிசத் திடீர் கவிழ்வுவாதம்" ("Socialist Catastrophitis,") என்று அவர் வர்ணித்த, முதலாளித்துவம் அதன் உள் முண்பாடுகளின் காரணமாக உச்ச நெருக்கடிக்கு சென்று கொண்டிருக்கின்றது என்ற நம்பிக்கையை நிராகரித்தார். பருவ ரீதியான (Periodic) நெருக்கடிகள் ஏற்பட முடியம் என்பதை ஏற்றுக் கொண்ட பேன்ஸ்டைன், அதே நேரத்தில் அவர் முதலாளித்துவம் --கடனை பயன்படுத்துவது போன்ற-- "பொருத்தமாக மாறியமைவதன் வாயிலாக" ("Means of adaptation") தொடர்ந்தும் அபிவிருத்தியடையும் - இதன் மூலம் அப்படிப்பட்ட நெருக்கடிகள் கால வரையறையற்று தள்ளிப்போட முடியும் அல்லது செம்மைப்படுத்த முடியும் என்று வலியுறுத்தினார்.

எச்சந்தர்ப்பத்திலும், சோசலிசத்தின் எதிர்காலம், முதலாளித்துவ அமைப்பின் தவிர்க்க முடியாத பெரும் நெருக்கடியுடன் இணைக்கப்படக் கூடாது, என்று பேர்ன்ஸ்டைன் வலியுறுத்தினார். 1898ம் ஆண்டு சமூக ஜனநாயகக் கட்சியின் ஸ்ருட்கார்ட் அகல் பேரவைக்கு அவர் எழுதியது போல:

"முதலாளித்துவ சமுதாயத்தின் உடனடியாக நிகழக்கூடிய பொறிவின் வாயிலில் நாம் நிற்கின்றோம் என்ற கருத்தை, மற்றும் இத்தகைய வரவிருக்கும் பெரும் அழிவின் சாத்தியக் கூறு சமூக ஜனநாயகத்தின் தந்திரங்களை நிர்ணயிப்பதையோ அல்லது அதில் அது தங்கியிருப்பதையோ நான் எதிர்த்து வந்துள்ளேன். இந்த நிலைப்பாட்டின் எல்லா அம்சங்களுடனும் நான் உறுதியாக இருக்கின்றேன்.[9]

இது ஒரு மையக் கருத்தாக இருந்தது: துல்லியமான மற்றும் விளக்கமான வகையில் "பேரழிவு" எடுக்கும் வடிவம் எப்படி முன்கூட்டிக் கூறுவது என்பது அல்ல அடிப்படைப் பிரச்சினை. எந்த முன்கூட்டிக் கூறலும், அனைத்து நேரங்கள், சூழ்நிலைமைகள் என்பனவற்றிற்கு செல்லுபடியானவையாக கூறமுடியாது. மாறாக, சோசலிசத்தின் வளர்ச்சிக்கும், முதலாளித்துவ அமைப்பில் உண்மையில் நிலவும் உள் முரண்பாடுகளுக்கும் இடையில், ஏதாவது புறநிலை ரீதியாக மற்றும் இன்றியமையா முறையில் இணைப்பு எதுவும் இருக்கின்றதா என்பதே தீர்க்கமானதாக (Critical) இருந்த பிரச்சனையாகும். அத்தகைய இணைப்பு (Connection) எதுவும் இல்லை என்றால், அப்பொழுது சோசலிசத்தை ஒரு வரலாற்று இன்றியமையாமை என்று கூற முடியாது.

அப்பொழுது எது, இன்றியமையாமை இல்லாத நிலையில், சோசலிசத்திற்கான பகுத்தறிவுக்கு ஒத்த காரணத்தை கொடுத்துள்ளது? பேர்ன்ஸ்டைனை பொறுத்தவரையில், சோசலிசம் ஒரு நன்நெறி ரீதியாக (Ethical), மற்றும் மனிதநேய அடிப்படையில்தான் நியாயப்படுத்தப்படலாம், மற்றும் நியாயப்படுத்தப்படமுடியும் -அதாவது, கான்டின் (Kant's) தவிர்க்க முடியா கடப்பாட்டை (Categorical Imperative) அரசியல் அரங்கில் பயன்படுத்துவதாகும். இதில் கீழ்க்கண்ட கட்டாய உத்தரவும் அடங்கியுள்ளது: "மனிதனை, உங்களில் உள்ள மனிதனையும், அதேபோல மற்ற எவரிலும் உள்ள மனிதனையும், எப்பொழுதும் வெறுமனே ஒரு வழிவகையாக (Means) நடத்தாமல், ஒர் இறுதியாக அடையும் நிலையாக (End) நடத்தச் செயற்படுங்கள்."

சோசலிசத்திற்கு ஒரு நன்நெறி (Ethical) அடிப்படையை நிறுவ பேர்ன்ஸ்டைன் எடுத்த முயற்சிகள் ஒன்றும் புதுமையானவை அல்ல. உண்மையில் 1890களில் கான்டின் தவிர்க்க முடியாக் கடப்பாடு (Categorical imperative) தர்க்க ரீதியாக சோசலிசத்திற்கு இட்டுச் செல்லும் என்று நம்பிய ஒரு கணிசமான அளவுடைய நவீன கான்டிய கல்வியாளர்கள் குழு ஒன்று இருந்து வந்தது. முக்கியமான நவ கான்டிய மெய்யியல்வாதியான, மாரிஸ் கோஹென் போன்ற சிலர், கான்டின் இந்த நன்நெறியின் அடிப்படையில் அவரை "நிஜமாக மற்றும் நடைமுறை ரீதியாக ஜேர்மன் சோசலிசத்தின் நிறுவனராக" கருதவெண்டும் என்று வாதிட்டனர். [10]

இது தவறானதாகவும் அதேபோல எதுவும் அறியாத் தன்மையையும் (Naïve) கொண்டிருந்தது. சாதாரண சிந்தனை முறை (Common Sense) பொதுவாக சராசரி மனிதனின் நாளாந்த செயற்பாடுகளில் பெற்றிருக்கும் அதே இடத்தைத்தான், தவிர்க்க முடியாக் கடப்பாடும் (Categorical Imperative) நன்நெறி நடத்தைத் துறையில் வகுக்கின்றது. சாதாரண சிந்தனை, முறை அதிகம் அறிவாற்றலின் பயன்பாடு வேண்டப்படாத நிலைமைகளில் எப்படிப் போதுமானளவு திருப்திகரமான விளைபயன்களை கொடுக்கக் கூடியதாக இருக்கின்றதோ, அதேபோல தவிர்க்க முடியா கடப்பாடும், ஒரு மட்டுப்படுத்தப்பட்ட சமூக வரைச்சட்டத்தின் (Framework) கீழ் ஏற்புடைய நடத்தைக்கான வழிகாட்டியாக பயன்பட முடியும். முற்றிலும் சொந்த மற்றும் தனிப்பட்ட உறவுகளை நடத்தும் பொழுது, ஒருவர் தனது சக மனிதரை ஒரு வழிவகையாக (Means) நடத்தாமல், அவரை ஒர் இறுதியாக அடையும் (End) நிலையில் வைத்து நடத்துவாராயின் அது மிகவும் போற்றக் கூடியதாக இருக்கும். ஆனால் பொது வாழ்வில் இந்தக் கட்டுப்பாட்டை (Imperative) கடுமையாய் கடைப்பிடிப்பது என்பது மிகவும் பிரச்சினைக்குரியதாகும்.

வர்க்கங்களாக பிரிக்கப்பட்டுள்ள சமுதாயம் ஒன்றில், சர்வவியாபகமாக இந்த நீதிச் சித்தாந்தத்தை (Maxim) பிரயோகிப்பது என்பது, எத்த ஒரு கருத்தாழமான (Serious) அரசியல் அர்த்தத்திலும் முடியாததாகும். தொழிற்துறை முதலாளித்துவம் ஜேர்மனியில் பரந்தளவில் அபிவிருத்தி அடைவதற்கு எவ்வளவோ முன்னர் வாழ்ந்திருந்த கான்ட், தன்னுடைய மைய நன்நெறி அடிக்கோளானது (Postulate) புறநிலை ரீதியாக முதலாளித்துவ சமுதாயத்தின் உற்பத்தி உறவுகளுடன் ஒத்திணைந்து வராது (Irreconcilable) என்பதை புரிந்து கொண்டு இருந்திருக்க முடியாது. ஒரு கூலித் தொழிலாளி, ஒரு முதலாளிக்கு, உபரிமதிப்பை மற்றும் இலாபத்தை ஈட்டித்தரும் ஒரு வழிவகையேயன்றி வேறு என்ன?

பேர்ன்ஸ்டைனை பகிரங்கமாக சவால் செய்ய ஆரம்பத்தில் ஜேர்மன் சமூக ஜனநாயக கட்சியினுள் பெரும் தயக்கம் இருந்தது. ரஷ்ய மார்க்சிஸ்டுகள்தான், முதலில் பார்வஸ், அதன் பின்னர் பிளெக்கனோவ் ஆகியோரே, பேர்ன்ஸ்டைனின் திருத்தல்வாதத்திற்கு எதிராக வெளிப்படையான, மற்றும் முற்று முழுமையான போராட்டத்தை தொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினவர்களாவர். தத்துவார்த்த விவாதங்களில், நன்கு பிரபலமான "கைதிகளை கைப்பற்றாதீர்கள்" என்ற தனது அணுகுமுறையை பிளெக்கனோவ் கையாண்டு, நிர்மூலமாக்கும் தனது தொடர் கட்டுரைகளை எழுதினார். இவை பேர்ன்ஸ்டைனின் மெய்யியல் கருத்துருக்களின் (Conceptions) திவாலை அம்பலப்படுத்தின. இக் கட்டுரைகள், இயங்கியல் வழிமுறை மற்றும் மார்க்சிச தத்துவத்தின் அடித்தளங்கள் என்பன பற்றிய மிக உன்னதமான விரிவுரைகளுள் தமது இடத்தை வகுக்கின்றன. சீர்திருத்தமா அல்லது புரட்சியா? என்ற, 27 வயதுடைய ரோசா லுக்சம்பேர்க்கின் கூரறிவு மிக்க தத்துவார்த்த விவாதப் படைப்பு, இவற்றையும் விட நன்கு பிரசித்தி பெற்றது. அதன் முதல் அத்தியாயத்தில் அவர், மார்க்சிசத்தின் மீது பேர்ன்ஸ்டைன் தொடுத்த தாக்குதல் கிளப்பியுள்ள அடிப்படை பிரச்சினை பற்றி சுருக்கமாக தொகுத்துக் கூறினார்.

"திருத்தல்வாத தத்துவம், இவ்விதத்தில் தன்னை ஒரு இரண்டக நிலையினுள் (Dilemma) உட்படுத்திக் கொண்டுள்ளது. இன்றுவரை ஏற்றுக் கொள்ளப்பட்டுவந்தது போல, சோசலிச உருமாற்றம் என்பது, முதலாளித்துவ உள்முரண்பாடுகளின் விளைபயனால், மற்றும் வளர்ச்சியுடன் முதலாளித்துவம் அதன் உள் முரண்பாடுகளை வளர்த்துக் கொள்வதினால், தவிர்க்கமுடியாமல் ஒரு கட்டத்தில் அதன் பொறிவில் முடியும். (அதாவது அப்பொழுது "பொருத்தமாக மாறியமைவது" (Means of adaptation') பயனற்றுப்போக, பொறியும் தத்துவம் சரியானதாகிவிடும்.) அல்லது "பொருத்தமாக மாறியமையும் வழிவகை" முதலாளித்துவ முறையின் பொறிவை உண்மையில் நிறுத்தி, அதன் மூலம் முதலாளித்துவத்தை அதன் சொந்த முரண்பாடுகளை அதுவே அமுக்கிவைத்து (Suppress) அது தன்னைத் தானே பேணிக் கொள்ள அதற்கு வகை (Enables) செய்கின்றது, அப்பொழுது சோசலிசம் ஒரு வரலாற்றுத் தேவை என்பது இல்லாமற் போய்விடும். அதன் பின் அது, நீங்கள் அதை எப்படி வேண்டுமென்றாலும் அழைக்கலாம், ஆனால் அது சமூதாயத்தின் சடரீதியான வளர்ச்சியின் விளைபயனாக இருக்காது.

"இந்த இரண்டக நிலை (Dilemma) மற்றொரு இரண்டக நிலைக்கு இட்டுச் செல்லுகின்றது. ஒன்றில் முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் பயணம் (Course) பற்றிய திருத்தல்வாதம் அதன் நிலைப்பாட்டில் சரியாக இருக்கின்றது எனவே சமுதாயத்தை சோசலிச உருமாற்றம் செய்வது என்பது நடைமுறைக்கு ஒவ்வா கற்பனை கோட்பாடு (Utopia). அது அப்படி இல்லையென்றால் சோசலிசம் என்பது ஒரு கற்பனை கோட்பாடு அல்ல, அதோடு முதலாளித்துவம் "பொருத்தமாக மாறியமையும் வழிவகையை" (‘Means of adaptation') கொண்டுள்ளது என்பது ஒரு பொய்யான தத்துவமாகும். மணிச்சுருக்கமாக இதுதான் பிரச்சினை.[11]

சோசலிசத்திற்கான முன்நிபந்தனைகள் என்பதை வாசிக்கும் பொழுது, எந்த அளவிற்கு பேர்ன்ஸ்டைன் சரிகின்ற முதலாளித்துவ சமுதாயத்தின் மேற்பரப்பின் கீழ் அபசகுனமாய் (Ominous) கிழம்பிக் கொண்டிருக்கும் இரையொலியை, முற்று முழுதாகக் கவனிக்காது இருந்தார் என்பதைப் பார்க்கும் பொழுது, ஒருவர் மலைத்துப் போகாமல் இருக்க முடியாது. பொருளாதார வளர்ச்சியின் குறியீடுகள் என்றும் கால எல்லையின்றி மேல்நோக்கியே சென்று கொண்டிருப்பன என்றும், பரந்த மக்களின் வாழ்கைத் தரங்களும் தளராது உறுதியாக உயர்ந்துகொண்டே செல்லுவன என்றும், தடுமாற வைக்கும் மனநிறை அமைதியுடன் (Staggering complacency) எதையும் ஆராயாது அவர் எண்ணிக் கொண்டார். ஒரு பெரும் நெருக்கடி என்ற கருத்து, பேர்ன்ஸ்டைனுக்கு கலப்பற்ற பைத்தியக்காரத்தனமாக தோன்றியது. காலனித்துவமுறை, இராணுவவாதம் ஆகிய புதிய இயல்நிகழ்வுகள் பிரமாண்ட ரீதியில் ஆயுதமேந்திய முதலாளித்துவ நாடுகளுக்கு இடையே வன்மையான மோதுதலுக்கு இட்டுச் செல்லும் என்ற எச்சரிக்கைகள் கூட --எக்கணமும் நிகழ இருக்கும் பேரழிவு எடுக்கக் கூடிய வடிவங்களில் ஒன்று-- பீதியை கிளப்புதல் என்று பேர்ன்ஸ்டைனினால் உதறித்தள்ளப்பட்டது. "அதிருஷ்டவசமாக, நாம் அரசியல் வேறுபாடுகளை வேட்டுப் படைக் கருவிகளைக் (Firearms) கொண்டு தீர்ப்பதை விட்டு விட்டு, மேலும் பெருகிக் கொண்டு செல்லும் வேறுமுறைகளிற் தீர்த்துக் கொள்ளப் பழக்கப் பட்டு வருகின்றோம்", என்று பேர்ன்ஸ்டைன் அற்பத் தன்னிறைவுடன் (Smugly) குறிப்பிட்டார்.[12] இதை அவர் குறிப்பிட்டது இருபதாம் நூற்றாண்டின் முன்னணை பொழுதிலாகும் (Eve) !

ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி தலைவர்கள் தயக்கம் காட்டிய பொழுதும், பேர்ன்ஸ்டைனின் கருத்துக்களுக்கு எதிரான ஒரு பகிரங்க போராட்டத்தை அவர்களால் தவிர்க்க முடியவில்லை. பேனாவை கையில் எடுப்பதற்கு முடிந்த அளவு தாமதித்த பொழுதும் கூட - ஜேர்மனிய மற்றும் ஐரோப்பிய சோசலிச இயக்கங்களினுள் அனைத்து தத்துவார்த்த பிரச்சினைகளிலும் இறுதித் தீர்ப்பாளரான காவுட்ஸ்கி, பேன்ஸ்டைனுக்கு எதிரானவர்களின் பட்டியலில் அவரும் கடைசியாக சேர்ந்து கொண்டார். காவுட்ஸ்கி, மிக எழுச்சியற்ற முறையில் (Soberly) பேர்ன்ஸ்டைனின் பிரதான வாதங்களை அவை தவறானவை என்று மறுத்துரைத்தார். 1898ம் ஆண்டு நடைபெற்ற கட்சியின் அகல் பேரவையிலும் (Congress) அதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டுகளில் நடந்தவற்றிலும், பேர்ன்ஸ்டைனின் பிறழ்ந்த கருத்துக்கள் (Heresies) உத்தியோகபூர்வமாக கண்டனம் செய்யப்பட்டன. தத்துவார்த்த தளத்தில் மார்க்சிசம் உச்ச உயர் நிலையில் இருந்து கோலோச்சிற்று. ஆனால் வேறொரு தளத்தில், கட்சி நடைமுறை மற்றும் இயக்க அமைப்புத் தளங்களில் தத்துவார்த்த திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டம் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

பிளெக்கனோவ், பேர்ன்ஸ்டைனை கட்சியில் இருந்து அகற்றுமாறு சமூக ஜனநாயகக் கட்சிக்கு அழைப்பு விடுத்தபோது, கட்சித் தலைவர்கள் அதை, அக்கணமே நிராகரித்தார்கள். திருத்தல்வாத தத்துவத்திற்கும், சமூக ஜனநாயக கட்சியின் நடைமுறை மற்றும் இயக்க அமைப்பு முறைக்கும் இடையில் இருந்த ஒரு மிகவும் நிஜமான இடைத் தொடர்பை ஆராய, மற்றும் அம்பலப்படுத்த, கட்சியின் தலைவர்களிடையே எந்த ஒரு பேரார்வமும் இருக்கவில்லை. அப்படி அவர்கள் செய்திருந்தால், தவிர்க்கமுடியால் சமூக ஜனநாயகக் கட்சிக்கும் மற்றும் தொழிற் சங்கங்களுக்கும் - பெயரளவிற்கேனும் கட்சியின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த தொழிற் சங்கங்களுக்கும், கட்சிக்கும் இடையில் இருந்த உறவு பற்றிய வினா எழுந்திருக்கும்.

சந்தர்ப்பவாதத்தின் நடைமுறை வடிவங்களுக்கு எதிராக, குறிப்பாக தொழிற் சங்கங்களின் நாளாந்த நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்ட சந்தர்ப்பவாதத்தின் நடைமுறை வடிவங்களுக்கு எதிராக பகிரங்கமான போராட்ட சாத்தியக்கூறை கண்டு சமூக ஜனநாயகக் கட்சி தலைவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதற்கு பல காரணங்கள் இருந்தன அவர்கள் அத்தகைய போராட்டம் கட்சியை உடைத்துவிடும் என்றும், தொழிலாள வர்க்க அணியினுள் பிளவை ஏற்படுத்தி பல தசாப்தங்களின் இயக்க ரீதியான முன்னேற்றத்தை கீழறுப்பது மட்டுமல்லாது சமூக ஜனநாயகக் கட்சிக்கு எதிராக அரச அடக்கு முறைக்கு வகை செய்யும் என்றும் அஞ்சினர், இவை மிகவும் முக்கியமான காரணங்களாகத்தான் இருந்தன. இருந்த பொழுதும், அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தை சமூக ஜனநாயகக் கட்சி தட்டிக் கழித்ததன் விளைபயன்கள் மிகவும் ஆழமான மற்றும் கடுந்துயரத்திற்கு வழிவகுத்தவையாக அமைந்தன.

அதுமட்டுமல்லாது திருத்தல்வாதம் ஒரு வெறும் ஜேர்மனிய பிரச்சினை அல்ல. அது, வெவ்வேறு வடிவங்களில் இரண்டாம் அகிலம் முழுவதும் தன்னை வெளிப்படுத்திற்று. பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி, அதன் தலைவர்களில் ஒருவரான அலெக்சாண்டர் மில்லறன்ட் (Alexander Millerand), பிரான்சின் ஜனாதிபதி வால்டெக் றூசோவின் (Waldeck-Rousseau) அழைப்பை ஏற்று, அவரது அமைச்சர் அவையில் வர்த்தக அமைச்சராக 1899ம் ஆண்டு சேர்ந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தது. பேர்ன்ஸ்டைனிசத்தின் தர்க்கம், வர்க்க ஒத்துழைப்பிற்கு, முதலாளித்துவ வர்க்கத்திடம் அரசியல் சரணாகதிக்கு, மற்றும் அதன் அரசின் பாதுகாப்பிற்கு இட்டுச் செல்லும் என்பதை இந்த நிகழ்வு மிகவும் தெளிவாக்கியது.

இரண்டாம் அகிலத்தின் ஒரேயொரு பகுதியில்தான், ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியில் மட்டும்தான், திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டம் நெறிமுறையாக அபிவிருத்தி செய்யப்பட்டு அதன் அனைத்து நிலைகளிலும் ஆராயப்பட்டு மிகுந்த தொலைவிற்கு செல்லும் அதன் அரசியல் முடிவுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

Notes:

[1] Marx and Engels Collected Works, Volume 41 (New York: International Publishers, 1985), p. 442.

[2] Marx and Engels, Collected Works, Volume 3 (New York: International Publishers, 1975), p. 182.

[3] Ibid, p. 187.

[4] Preface to A Contribution to the Critique of Political Economy, Collected Works, Volume 29 (New York: International Publishers, 1987), p. 263.

[5] Quoted in H. Stuart Hughes, Consciousness and Society (New York: Vintage, 1977), p. 77.

[6] Ibid, p. 88.

See Also:

Socialist Equality Party and WSWS hold summer school in US

[29 August 2005]

Lecture one: The Russian Revolution and the unresolved historical problems of the 20th century

Part 1

Part 2

Part 3

Part 4

[7] திரட்டு நூல்கள், தொகுதி 50 (நியூ யோக் சர்வதேச வெளியூட்டாளர்கள், 2004) பக்கம் 86

[8] மார்க்சிசமும், சமூக ஜனநாயகமும்: திருத்தல்வாத விவாதம் 1896-1898, பதிப்பாசிரியர்கள்: எச். ரியூடர் மற்றும் ஜே. எம்.ரியூடர் (கேம்பிரிஜ் பல்கலைக் கழக அச்சகம். 1988), பக்கம் 74.

[9] எடுவாட் பேர்ன்ஸ்டைன், சோசலிசத்திற்கான முன் நிபந்தனைகள் (கேம்பிரிஜ் பல்கலைக் கழக அச்சகம், 1993), பக்கம் 1.

[10] பீட்டர் கேயினால், ஜனநாக சோசலிசத்தின் இரண்டக நிலையில் (நியூ யோர்க் கொல்லியர், 1970), பக்கம் 152ல் மேற்கோள்.

[11] லண்டன் நூல் அடையாளங்கள், 1989, பக்கம் 29

[12] முன் நிபந்தனைகள். பக்கம் 162

Loading