தனியொரு நாட்டில் சோசலிசமா அல்லது நிரந்தரப் புரட்சியா

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்த விரிவுரை மிச்சிகனில் உள்ள ஆன் ஆர்பரில் ஆகஸ்ட் 14 முதல் ஆகஸ்ட் 20, 2005 வரை நடைபெற்ற சோசலிச சமத்துவக் கட்சி / WSWS கோடைகால பள்ளியில் பில் வான் ஆகென் ஆல் வழங்கப்பட்டது.

அனைத்துலகக் குழுவில் பிளவு ஏற்பட்டு இருபது ஆண்டுகளுக்கு பின்னர்

தனியொரு நாட்டில் சோசலிசமா அல்லது நிரந்தரப் புரட்சியா என்கின்ற பிரச்சினையை ஆராயும்போது, நாம் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தத்துவார்த்த அடித்தளங்களைப் பேசுகிறோம். இந்த இரண்டு எதிரெதிர் முன்னோக்குகளுக்கு இடையிலான போராட்டத்தில் எழும்பும் அடிப்படைத் தத்துவார்த்த பிரச்சினைகள், 1920களின் பிற்பகுதியில் ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்டமாக அமைந்த பிரச்சினைகள் என்பது மட்டுமல்ல, நான்காம் அகிலத்திற்குள்ளேயே கூட திரும்பத் திரும்ப நடைபெற்ற போராட்டங்களுக்கு கருப்பொருளாக இந்தப் பிரச்சினைகள் மறுஎழுச்சி கண்டிருந்தன.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின், பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிக் கட்சியுடன் பிளவு ஏற்பட்டு இருபது ஆண்டுகள் முடிவதை இவ்வாண்டு குறிக்கிறது.

இந்தப் பிளவின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளுவதற்கு, அனைத்துலகக் குழு தோன்றிய போராட்டத்தைப் புரிந்து கொள்ளுவது அவசியமானதாகும். பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தில் 1953ம் ஆண்டு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) நிறுவப்பட்டது.

ஸ்ராலினிசம் சுய-சீர்திருத்தத்திற்கும் இன்னும் ஒரு புரட்சிகரப் பாத்திரம் ஆற்றவும் கூட திறம்படைத்திருந்தது என்று பப்லோவாதிகள் முன்வைத்த ஆய்வையும், அதனுடன் தொடர்புபட்ட வகையில் காலனித்துவ நாடுகளில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்திற்குத் தலைமை கொடுக்கும் திறனை முதலாளித்துவ தேசியவாதம் கொண்டிருந்தது என்ற அவர்களது கருத்துருவையும் இது எதிர்த்தது. ஒன்றிணைந்த வகையில் இந்தத் தத்துவங்கள் எல்லாம், நான்காம் அகிலத்தை நிறுவுவதில் ட்ரொட்ஸ்கியால் எடுத்துரைக்கப்பட்டு போராடப்பட்ட புரட்சிகர முன்னோக்கின் அடிப்படையின் மீது வரலாற்றுரீதியாக அணிதிரட்டப்பட்ட காரியாளர்களை கலைப்பதற்கான ஒரு முன்னோக்கையே உருவாக்கி நின்றன.

அமெரிக்க சோசலிசத் தொழிலாளர் கட்சி பப்லோவாதிகளுடன் மறுஐக்கியம் கொள்வதற்கு எதிரான போராட்டத்தை நடத்தும் பொறுப்பு, அப்பொழுது சோசலிசத் தொழிலாளர் கழகம் (SLL) என்றிருந்த பிரிட்டிஷ் பிரிவின் தலைமையின் தோள் மேல் 1963ல் விழுந்தது. கியூபாவில் பிடெல் காஸ்ட்ரோவின் குட்டி முதலாளித்துவ தேசியவாத கெரில்லா இயக்கம் ஓர் தொழிலாளர் அரசை ஸ்தாபித்திருந்தது, அதன் மூலம் பாட்டாளி வர்க்கமல்லாத சக்திகள் சோசலிசப் புரட்சிக்கு இட்டுச்செல்ல முடியும் என்று ஏறக்குறைய நிரூபித்துள்ளது என்ற உடன்பாட்டின் அடிப்படையில் இந்த மறுஐக்கியம் நடைபெற இருந்தது.

அக்காலக்கட்டத்தில் சேகுவாரா, கெரில்லாவாதம் மற்றும் மூன்றாம் உலகப் புரட்சியை போற்றுவதுதான் மிக்கவும் நாகரிகமானது என்று ஏற்கப்பட்டிருந்த நிலையில், SLL (சோசலிசத் தொழிலாளர் கழகம்) ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை பாதுகாப்பதற்கு சிறிதும் சமரசமின்றிப் போராடியது.

நவீன உலகளாவிய முதலாளித்துவத்தின் புரட்சிகர இயக்கவியல் குறித்து ட்ரொட்ஸ்கியினால் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்த இந்த ஆழமான ஆய்வின் அத்தியாவசிய அம்சங்களைப் பரிசீலிப்பதற்கு, நிரந்தரப் புரட்சியானது, ஒரு நாட்டின் பொருளாதார மட்டம் அல்லது உள்முக வர்க்க உறவுகளை தொடக்கப் புள்ளியாக எடுத்துக் கொள்ளாமல், உலக வர்க்கப் போராட்டத்தினையும் மற்றும் தேசிய நிலைமைகளை ஒரு குறிப்பிட்ட வெளிப்பாடாக உள்ளடக்கியிருந்த முதலாளித்துவப் பொருளாதாரத்தின் சர்வதேச அபிவிருத்தியையும் தொடக்கப் புள்ளியாக எடுத்துக் கொண்டது. இதுதான் இந்த முன்னோக்கின் உலக வரலாற்று முக்கியத்துவம் ஆகும்; இது ஒரு உண்மையான சர்வதேச புரட்சிகரக் கட்சியைக் கட்டியமைப்பதற்கான அஸ்திவாரங்களை அளித்தது.

பின்தங்கிய நாடுகள் மற்றும் முன்னாள் காலனித்துவ நாடுகளில், ஏகாதிபத்தியத்துடன் பிணைந்திருந்த மற்றும் தன்னுடைய தொழிலாள வர்க்கத்தையே கண்டு அச்சமுற்றிருந்த முதலாளித்துவ வர்க்கம் தன்னுடைய சொந்த "முதலாளித்துவ"ப் புரட்சியை நடத்தும் நிலையில் இல்லாதிருந்தது என்பதை இந்த முன்னோக்கு விளக்கிக்காட்டியது.

தொழிலாள வர்க்கம் மட்டுமே இந்தப் புரட்சியை நடத்தமுடியும் மற்றும் அதன் சொந்த பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை வடிவமைப்பதின் மூலம் மட்டுமே, புரட்சியை அதன் பூர்த்தியான நிலைக்குக் கொண்டு செல்லவும் முடியும். தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றியவுடன் ஜனநாயகப் பணிகளுடன் தன்னை மட்டுப்படுத்திக் கொண்டுவிடாமல், சோசலிச வகைப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நிர்பந்திக்கப்படும் என்ற உண்மையில் தான் இந்தப் புரட்சியின் நிரந்தரத்தன்மை அமைந்திருக்கிறது.

பின்தங்கிய நிலைமை, தனிமைப்படல் ஆகியவற்றால் சோசலிசக் கட்டுமானத்திற்கு ஏற்படும் வரம்புகள், முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் தொழிலாள வர்க்கத்தால் புரட்சி அபிவிருத்தி செய்யப்படுவதன் மூலம் மட்டும் தான் கடக்கப்பட முடியும்; இறுதியில் இது உலக சோசலிச உருமாற்றமாக உச்சமடைந்து, அதன்மூலம் ஒரு இரண்டாவது அர்த்தத்தில் புரட்சிக்கு ஒரு நிரந்தரத் தன்மையை வழங்கும்.

இந்த முன்னோக்கில் வெளிவரும் பாட்டாளி வர்க்க சர்வதேசியம், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம் ஆகிய இன்றியமையாத அரசியல் கோட்பாடுகள், ஸ்ராலினிசத்திற்கும் முதலாளித்துவ தேசியவாதத்திற்கும் தகவமைத்துக் கொண்டதில் பப்லோவாதிகளால் நிராகரிக்கப்பட்டன.

பிளவு ஏற்படுவதற்கு ஒரு தசாப்தத்திற்கு முன்பு, தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (WRP) தலைமை, பப்லோவாதத் திருத்தல்வாதிகளுக்கு எதிராக ட்ரொட்ஸ்கிசத்தை பாதுகாப்பதில் தான் ஆரம்பகாலத்தில் ஈட்டியிருந்த தத்துவார்த்த வெற்றிகளில் இருந்து கூர்மையாக விலகி இருந்தது.

1980களின் ஆரம்பத்தில் இந்த முன்னோக்கில் இருந்தான பிறழ்வு அனைத்துலகக் குழுவின் அமெரிக்கப் பகுதியான வேர்க்கர்ஸ் லீக்கிற்குள் (Workers League) பெருகிய முறையில் அமைதியின்மை ஏற்படக் காரணமாயிற்று.

அவர்களுக்கு முன்பு பப்லோவாதிகள் செய்தது போன்றே, WRP (தொழிலாளர் புரட்சிக் கட்சி) தலைமையும், ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம் மற்றும் முதலாளித்துவ தேசியவாதம் ஆகியவை இறுதிப்பகுப்பாய்வில் தொழிலாளர் இயக்கத்திற்குள்ளேயே அமையப் பெற்ற ஏகாதிபத்திய முகமைகளையே பிரதிநிதித்துவம் செய்தன என்கிற விஞ்ஞானபூர்வமான மதிப்பீட்டைக் கைவிட்டமை அதிகரித்துச் சென்றது. பதிலாக இந்த அரசியல் போக்குகளில் சில கூறுகளுக்காவது புரட்சிப் பாத்திரத்திற்கான சாத்தியக்கூறு இருந்தது என்று அது கற்பித்துக் கூறியது.

1982ம் ஆண்டு வேர்க்கர்ஸ் லீக் அனைத்துலகக் குழுவிற்குள்ளேயே WRP இன் அரசியல் சீரழிவைப் பற்றிய ஒரு விரிவான விமர்சனத்தை அபிவிருத்தி செய்து தனது போராட்டத்திற்கு துவக்கமளித்தது. அந்த விமர்சனத்தின் மையத்தானத்தில் நிரந்தரப் புரட்சி பற்றிய பிரச்சினை இருந்தது.

நவம்பர் 1982ல் "ஜெரி ஹீலியின் ’இயங்கியல் சடவாதத்தில் ஆய்வுகள்’ மீதான விமர்சனம்" என்பதின் சுருக்கவுரையில் தோழர் டேவிட் நோர்த் மத்திய கிழக்கில் WRP தலைமையால் முன்வந்த கால கட்டத்தில் நிறுவப்பட்டிருந்த அரசியல் உறவுகள் பற்றித் திறனாய்வு செய்து எழுதினார்: "தேசிய விடுதலை இயக்கங்களை மார்க்சிசம் பாதுகாப்பதும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமும் பல்வேறு முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகளுக்கு விமர்சனமற்று ஆதரவை வழங்குவதென்னும் ஒரு சந்தர்ப்பவாத பாணியில் பொருள்விளக்கம் தரப்பட்டிருக்கின்றன". தொடர்ந்து எழுதினார்: "அனைத்து நோக்கங்கள் மற்றும் காரணங்களிலும், தற்போதைய சூழ்நிலையில் பயன்படுத்தப்பட முடியாது என்கின்ற வகையில் நிரந்தரப் புரட்சித் தத்துவம் அணுகப்பட்டிருக்கிறது”.

ட்ரொட்ஸ்கிசத்திற்கான அதன் முந்தைய போராட்டங்களின் வீரத்தழும்புகளால் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்குள்ளே இப்போதும் செறிவான செல்வாக்கைக் கொண்டிருந்த WRP தலைமை இதற்குக் கொடுத்த விடையிறுப்பு, அதன் கொள்கைகளை அரசியல் ரீதியாய் பாதுகாப்பதாக இல்லாமல், அமைப்புரீதியாய் உடனடியான பிளவு பற்றிய அச்சுறுத்தலாக இருந்தது.

ஆயினும்கூட, 1984ம் ஆண்டு மீண்டும் வேர்க்கர்ஸ் லீக் இந்தப் பிரச்சினைகளை எழுப்பியது. WRP பொதுச் செயலாளரான பண்டாவிற்கு எழுதிய கடிதத்தில், தோழர் நோர்த், தேசிய விடுதலை இயக்கங்கள் மற்றும் தேசிய முதலாளித்துவ ஆட்சிகளுடன் WRP கூட்டணிகளை அபிவிருத்தி செய்வதைச் சுட்டிக்காட்டி வேர்க்கர்ஸ் லீக்கின் பெருகிய கவலைகளை எடுத்துக் கூறினார்:

"ஏகாதிபத்திய எதிர்ப்பு நாடுகளில் பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் பாத்திரத்தை நிறுவுவதற்கான போராட்டத்தின் மையமான விடயமாக எமது சொந்த சக்திகளின் அபிவிருத்திக்கு அளிக்கத்தக்க எந்த தெளிவான நோக்குநிலையையும் இந்த கூட்டுக்களின் உள்ளடக்கம் மிக மிகக் குறைந்த அளவில் பிரதிபலித்திருக்கிறது. 1960களில் கியூபா, அல்ஜீரியா பற்றி சோசலிசத் தொழிலாளர் கட்சியால் (SWP) முன்னெடுக்கப்பட்டு நாம் கடுமையாக தாக்கியிருந்த அதே கருத்துருக்கள் நமது செய்தி ஊடகத்திலேயே அதிகரித்த அளவில் அடிக்கடி வருகின்றன."

அத்துடன், 1984 பிப்ரவரியில் நோர்த் அனைத்துலகக் குழுவுக்கு ஒரு அரசியல் அறிக்கை அளித்தார். நிரந்தரப் புரட்சித் தத்துவத்தை வெளிப்படையாக மறுதலித்து SWP தலைவரான ஜாக் பேர்னஸ் கொடுத்திருந்த ஒரு உரையின் மீதான விமர்சனத்துடன் அந்த அறிக்கை துவங்கியது. நடைமுறையில் அதேபோன்றதொரு முடிவுக்கே வழிவகுக்கக் கூடிய வகையில் முதலாளித்துவ தேசியவாதிகள், தொழிற்கட்சியினர் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் WRP தலைமை கொண்டிருந்த சந்தர்ப்பவாத உறவுகள் குறித்த ஒரு திறனாய்வுடன் அந்த அறிக்கை முடிந்தது.

இதைப்பற்றி விவாதிக்க WRP தலைமை மீண்டும் மறுத்து ஒரு பிளவு பற்றி அது அச்சுறுத்திய அதேவேளையில், ஓராண்டிற்கு சற்று அதிகமான காலத்துக்குள்ளேயே ஒரு உள்நெருக்கடி அவர்களின் அமைப்பைத் தகர்த்து, பழைய தலைமையின் அனைத்துப் பிரிவுகளும் அனைத்துலகக் குழுவில் இருந்து முறித்துக் கொள்வதற்கும் ட்ரொட்ஸ்கிசத்தை மறுப்பதற்கும் அழைத்துச் சென்றது.

சர்வதேசவாத விரோத முன்னோக்கு தான் WRP தலைமைக்கு வழிகாட்டிய முன்னோக்காக இருந்தது. 1985ல் நிகழ்ந்த பிளவின்போது, பிரிட்டிஷ் பகுதியின் தேசிய தன்னாட்சிக் கருத்திற்கு கிளீவ் சுலோட்டர் வாதிட்டு முன்னின்றார்; WRP க்குள்ளே தோன்றிய கன்னைவாத போராட்டத்தை உலக கட்சியை தெளிவூட்டி கட்டியமைக்கும் பணிக்குக் கீழ்ப்படுத்த வேண்டிய அவசியத்தை அவர் நிராகரித்தார்.

அனைத்துலக் குழுவின் அதிகாரத்தை நிராகரித்து 1985 டிசம்பரில் சுலோட்டரால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றில், "சர்வதேசியம் என்பது துல்லியமாக ...வர்க்கக் கோடுகளை வரைதலும்...... அவற்றின் வழி இறுதிவரை போராடுதலும் ஆகும்" என்று அவர் அறிவித்தார்.

இதற்கு விடையிறுக்கும் வகையில் வேர்க்கர்ஸ் லீக் ஒரு வினாவை எழுப்பியது: " ‘வர்க்கக் கோடுகள்’ எந்த வழிவகையில் நிர்ணயிக்கப்படுகின்றன? அதற்கு நான்காம் அகிலம் இருப்பது தேவைப்படுகிறதா? எந்த தேசிய அமைப்பும் தன் சொந்த முயற்சி மூலம் வர்க்கக் கோடுகளை வரைந்து அவற்றிற்காக இறுதிவரை போராடுதல் மூலம் சர்வதேசிய மட்டத்திற்கு உயரமுடியும் என்பதாகவே தோழர் சுலோட்டருடைய வரையறை தொனிக்கிறது – இதுதான் அவருடைய முழுக் கடிதத்திலும் வெளிப்படையான உள்ளடக்கமாக இருக்கிறது."

இந்த வினாக்கள் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் முன்னோக்கின் இதயத்தானத்திற்கு இட்டுச் செல்லுகின்றன. ட்ரொட்ஸ்கிசத்துடன் முறித்துக் கொண்ட அரசியல் போக்கு ஸ்ராலினிசத்தின் தோற்றுவாய் தொட்டு அதனை பண்பிட்டுக் காட்டிய தேசியக் கண்ணோட்டத்தை மறுஉற்பத்தி செய்தது, அதேவேளை வரலாற்று ரீதியாக அபிவிருத்தி செய்யப்பட்ட நான்காம் அகிலத்தின் முன்னோக்கை பாதுக்காத்து நின்றவர்கள் சர்வதேசியத்தின் நிலைப்பாட்டில் இருந்து தேசியக் கண்ணோட்டத்தை அணுகினர்.

ஸ்ராலினிசமும் சமூக சீர்திருத்தவாதமும்

ஸ்ராலினிசத்தை வழிநடத்திய முன்னோக்குகள் பிரத்தியேகமான ரஷ்ய அரசியல் நிகழ்வுகள் அல்ல என்பதைப் புரிந்துகொள்வது அவசியமாகும்.

ஸ்ராலினிசத்தின் தோற்ற மூலமே ஒரு தனிமைப்பட்டிருந்த, பின்தங்கிய நாட்டில் முதல் தொழிலாளர் அரசு முரண்பாடான வகையில் தோன்றியதில் அமைந்திருந்தது.

உள்நாட்டுப் போரின் விளைவாக ரஷ்யத் தொழிலாள வர்க்கம் அடைந்திருந்த களைப்புடன் ஐரோப்பியத் தொழிலாள வர்க்கம் அடைந்திருந்த தோல்விகள் மற்றும் முதலாளித்துவம் தற்காலிகமாய் ஸ்திரமுற்றது ஆகியவையும் இணைந்து சோவியத் அரசிற்குள்ளும் அதன் ஆளும் கட்சிக்குள்ளும் ஒரு தேசியக் கண்ணோட்டத்தின் வளர்ச்சிக்குப் பங்களித்திருந்தன.

முதல் தொழிலாளர் அரசு பொருளாதார பின்தங்கியநிலை மற்றும் தனிமைப்படலால் பீடிக்கப்பட்டிருந்ததின் விளைவாக தொடர்ந்து நிலவிக் கொண்டிருந்த சமூக சமத்துவமின்மையின் நிர்வாகியாக எழுந்திருந்த ஒரு அதிகாரத்துவத்தின் திட்டவட்டமான சடரீதியான நலன்களை இந்தக் கண்ணோட்டம் வெளிப்படுத்தியது.

ஆயினும், ஸ்ராலினிசமும் அதன் தேசியக் கண்ணோட்டமும் ஐயத்திற்கு இடமின்றி ஒரு சர்வதேச அரசியல் போக்குடன் தொடர்புபட்டதாய் இருந்தன; அதன் கருத்தியல் முந்தைய திருத்தல்வாத வடிவங்களில் வேரூன்றியிருந்தது. இறுதிப் பகுப்பாய்வில், இது சோவியத் தொழிலாளர் அரசிற்குள்ளேயே அக்டோபர் புரட்சிக்கு எதிரான விநோதமான, தீமைபயக்கும் தன்மை படைத்த தொழிலாளர் சீர்திருத்தவாதத்தின் ஒரு குறிப்பான வடிவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியது.

ஆயினும், முன்னேற்றம் மற்றும் சீர்திருத்தத்திற்கான மூலவளமாக - தொழிலாள வர்க்கத்தின் சர்வதேசப் புரட்சிகர இயக்கத்தைக் காண்பதற்கு மாறாக - தேசிய அரசையும் மற்றும் அதன் பொருளாதாரம் மற்றும் தொழிற்துறை விரிவாக்கம் செய்யப்படுவதையும் காண்கின்ற வகையில் முதலாளித்துவ நாடுகளில் இருந்த உத்தியோகப்பூர்வ தொழிலாளர் இயக்கங்கள் பலவற்றுடனும் இது அநேகப் பொது அம்சங்களைக் கொண்டிருந்தது.

"தனியொரு நாட்டில் சோசலிசத்தைக் கட்டுதல்" என்கின்ற கருத்துரு ரஷ்யாவில் மூலம் கொண்டதல்ல, மாறாக ஜேர்மனியிலேயே தோன்றியது; அங்கு வலதுசாரி பவேரிய சமூக ஜனநாயகவாதி Georg von Vollmar அப்பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தார். 1879ம் ஆண்டு "தனிமைப்பட்ட சோசலிச அரசு" என்ற கட்டுரை ஒன்றை அவர் வெளியிட்டார்; இதில் ஜேர்மனிய சமூக ஜனநாயகத்திற்குள் சோசலிச தேச பக்தி பின் வளர்ந்ததற்கான கருத்தியல் அஸ்திவாரங்கள் போடப்பட்டிருந்தன.

சோசலிசத்தை கட்டமைப்பதற்கான சிறந்த சூழ்நிலை ஜேர்மனியில் உள்ளதான பேரில் முதலாம் உலகப் போரில் ஜேர்மனிய சமூக ஜனநாயகக் கட்சி தங்கள் சொந்த நாட்டு அரசாங்கத்திற்கு ஆதரவு தரும் நிலையில் போய் முடிந்தது. தனிமைப்பட்ட சோசலிச அரசும் முதலாளித்துவ உலகமும் நீண்டகாலம் "சமாதான சகவாழ்வு" வாழும் என்று வோல்மார் எதிர்பார்த்தார்; அக்காலகட்டத்தில் தொழில்நுட்ப அபிவிருத்தி மற்றும் உற்பத்திச் செலவினக் குறைப்பு ஆகியவற்றின் மூலம் சோசலிசம் தன்னுடைய உயர்நிலையை வெளிப்படுத்தி நிரூபிக்கும் என்று அவர் கருதினார்.

நிரந்தரப் புரட்சிக்கு எதிரான பிரச்சாரம்

சர்வதேசரீதியாக சோசலிசப் புரட்சியின் தலைவிதி என்னவாக இருந்தாலும் சோவியத் ஒன்றியத்தில் அதன் சொந்தக் கையிருப்பு வளங்களை அடிப்படையாகக் கொண்டே சோலிசத்தை எட்ட முடியும் என்று 1924ல் புக்காரினும், ஸ்ராலினும் முன்னெடுத்த முன்மொழிவானது, லெனினின் தலைமையின்கீழ் சோவியத் தலைமையையும் கம்யூனிஸ்ட் அகிலத்தையும் வழிநடத்தியிருந்த முன்னோக்கின் மீது அடிப்படையான ஒரு திருத்தலைப் பிரதிநிதித்துவம் செய்தது. உலக சோசலிசப் புரட்சியின் அபிவிருத்தியில் இருந்து சோவியத் ஒன்றியத்தின் வருங்கால வாய்ப்புவளங்களை இவ்விதமாக இரத்து செய்த முறை, 1917அக்டோபர் புரட்சி எதனை அடித்தளமாகக் கொண்டிருந்ததோ அந்த நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் மீது ஒரு தலையோடு தலையான மோதலாக அமைந்தது.

தன்னுடைய விளைவுகளும் வருங்கால வாய்ப்பு வளங்களும் என்ற நூலில் ட்ரொட்ஸ்கி எழுதினார்: "அக்டோபர் புரட்சிக்கு எதிரான பிற்போக்கு என்கின்ற ஈஸ்டில் இருந்து விளைந்த தனியொரு நாட்டில் சோசலிசம் என்ற ஒரு தத்துவம் மட்டும் தான் நிரந்தரப் புரட்சித் தத்துவத்தை தொடர்ந்தும் இறுதிவரை எதிர்ப்பதாகவும் அமையும் தத்துவமாகும்."

இதன் மூலம் அவர் அர்த்தப்படுத்தியது என்ன? நிரந்தரப் புரட்சித் தத்துவம் என்பது ஒரு சர்வதேசப் புரட்சிகர முன்னோக்கில் இருந்து தொடங்கிய ஒரு தத்துவமாகும்; தனியொரு நாட்டில் சோசலிசம் என்பது ஒரு தேசிய-சோசலிச அரசுக்கான கற்பனாவாத மற்றும் சீர்திருத்தவாதப் பரிந்துரை. நிரந்தரப் புரட்சி உலகப் பொருளாதாரத்தையும் உலகப் புரட்சியையும் தான் சோசலிசத்துக்கான தொடக்கப் புள்ளியாக எடுத்துக் கொண்டது. தனியொரு நாட்டில் சோசலிசம் சோசலிசத்தை தேசிய அபிவிருத்திக்கான ஒரு சாதனமாகக் காணும் நிலைப்பாட்டில் இருந்து தொடங்கியது.

இந்தப் பிரச்சினைகள் லெனினுக்கு பின் மூன்றாம் அகிலம் தொகுதியில் இடம் பெற்றிருக்கக் கூடிய கம்யூனிச அகிலத்தின் வரைவுத் திட்டத்தை பற்றி 1928ம் ஆண்டு ட்ரொட்ஸ்கி வைத்த விமர்சனத்தின் மையமாக இருந்தன. முன்னோக்கு உருவாக்கத்திற்கான ஒரு மார்க்சிச அணுகுமுறையின் அடித்தளங்களை எடுத்தியம்புவதாக அமைந்திருக்கும் இந்த விமர்சனத்தில் இருந்து சில பத்திகளை சற்று விரிவாக மேற்கோளிட நான் விரும்புகிறேன். இன்று முதலாளித்துவத்தின் உலகளாவிய ஒருங்கிணைப்பு முன்னெப்போதையும் விட மிக நெருக்கமாக இருப்பதை (அனைத்துலகக் குழுவின் முன்னோக்கை அபிவிருத்தி செய்வதில் இதற்கு நாம் மிக நெருங்கிய கவனம் கொடுத்திருக்கிறோம்) கணக்கில் கொண்டு பார்த்தால் இந்தப் பகுப்பாய்வின் காலத்தால் அழியாத பெருஞ்சிறப்பு இன்னும் தெளிவாகப் புலப்படக் காணலாம்.

''நமது சகாப்தத்தில் - இந்த ஏகாதிபத்திய சகாப்தத்தில் - அதாவது உலகப் பொருளாதாரமும், உலக அரசியலும் நிதிமூலதனத்தின் மேலாதிக்கத்தின் கீழ் உள்ள நிலையில், எந்த ஒரு கம்யூனிஸ்ட் கட்சியும் முழுமையாக அல்லது பிரதானமாக தனது சொந்த நாட்டினுள் இருக்கும் நிலைமைகள் அல்லது அபிவிருத்திகளின் போக்குகளின் ஊடாகச் சென்று தனது வேலைத்திட்டத்தை ஸ்தாபிக்க முடியாது… சோவியத் ஒன்றியத்தின் எல்லைகளுக்குள் அரசு அதிகாரத்தைச் செலுத்திக் கொண்டிருக்கும் கட்சிக்கும் இது முழுமையாகப் பொருந்தும். எக்காலத்திற்குமாக தேசிய வேலைத்திட்டங்களுக்கு சாவுமணி 1914 -ஆகஸ்ட் 4ம் தேதி அடிக்கப்பட்டு விட்டது. பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரக் கட்சி தற்போதைய சகாப்தத்தின், முதலாளித்துவத்தின் அதியுயர்ந்த வளர்ச்சியும், வீழ்ச்சியும் கொண்ட சகாப்தத்தின், தன்மைக்குப் பொருத்தமான ஒரு சர்வதேசிய வேலைத்திட்டத்தைத் தான் தனக்கு அடித்தளமாகக் கொள்ள முடியும். ஒரு சர்வதேசிய கம்யூனிச வேலைத்திட்டம் என்பது ஒருபோதும் தேசிய வேலைத் திட்டங்களின் கூட்டுமொத்தமோ அல்லது அவற்றின் பொது அம்சங்களின் கலவையோ அல்ல. ஒரு சர்வதேசிய வேலைத்திட்டம் உலகப் பொருளாதாரம் மற்றும் உலக அரசியல் அமைப்பை அதன் அத்தனை இணைப்புகள் மற்றும் முரண்பாடுகளுடன், அதாவது அதன் தனித்தனி பாகங்கள் பரஸ்பரம் குரோதத்துடன் ஒன்றோடொன்று சார்ந்திருப்பதுடன், ஒரு ஒட்டுமொத்தமாக எடுத்து அதன் நிலைமைகள் மற்றும் போக்குகளை பகுப்பாய்வு செய்வதில் இருந்து நேரடியாகப் பாய்கின்றதாக இருக்க வேண்டும். நடப்பு சகாப்தத்தில், கடந்த காலத்தை விடவும் மிகப் பெருமளவில், பாட்டாளி வர்க்கத்தின் தேசிய நோக்குநிலையானது ஒரு உலக நோக்குநிலையில் இருந்து தான் ஊற்றெடுத்து வர முடியும் வர வேண்டுமே அன்றி தலைகீழ் திசையில் அல்ல. இங்கேதான் கம்யூனிச சர்வதேசியத்திற்கும் தேசிய சோசலிசத்தின் அனைத்து வகையறாக்களுக்கும் இடையிலான அடிப்படையான பிரதானமான வேறுபாடு இருக்கின்றது.'' என அவர் எழுதினார்.

அவர் தொடர்ந்தார்: "அபிவிருத்தியின் வெவ்வேறு மட்டங்களில் நிற்கிற நாடுகளையும் கண்டங்களையும் பரஸ்பர சார்பு மற்றும் குரோத அமைப்புமுறைக்குள் பிணைத்தல், அவற்றின் பல்வேறு அபிவிருத்திக் கட்டங்களையும் சமன் செய்து கொண்டே அதே நேரத்தில் அவற்றிற்கிடையே உள்ள வேறுபாடுகளை உடனடியாக கூர்தீட்டுதல், அத்துடன் இரக்கமற்ற வகையில் ஒரு நாட்டை மற்ற நாட்டிற்கு எதிராக நிறுத்துதல், இப்படியெல்லாம் உலகப் பொருளாதாரம் தனித்தனி நாடுகள், கண்டங்கள் இவற்றின் பொருளாதார வாழ்வின் மீது மாபெரும் பிடியைக் கொண்ட மகாபலம் பொருந்திய யதார்த்தமாக ஆகியிருக்கிறது. இந்த அடிப்படை உண்மைதான் உலக கம்யூனிஸ்ட் கட்சி என்னும் கருத்துக்கு மிக உயர்ந்த உண்மை நிலையைக் கொண்டு முதலீடிடுகிறது."

1924ம் ஆண்டு லெனின் மறைவதற்கு முன், சோவியத் ஒன்றியத்திலோ அல்லது சர்வதேச அளவிலோ, கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இருந்த ஒருவரும் சோவியத் மண்ணிலோ அல்லது ஏனைய எங்குமோ தன்னிறைவு காணத்தக்க ஒரு சோசலிச சமுதாயத்தைக் கட்டியமைக்க முடியும் என்கின்ற கருத்தை ஒருபோதும் தெரிவித்திருந்தது கிடையாது.

உண்மையில், "லெனினிசத்தின் அஸ்திவாரங்கள்" என்று அவ்வாண்டு பெப்ரவரி மாதம் தான் எழுதியவற்றில் ஸ்ராலின், லெனினுடைய சோசலிசக் கட்டமைப்பு பற்றிய கருத்துக்களை சுருக்கி எழுதுகையில், தெரிவித்ததாவது:

"ஒரு நாட்டில் முதலாளித்துவத்தின் அதிகாரம் தூக்கியெறியப்பட்டு பாட்டாளி வர்க்க அரசாங்கத்தை நிறுவுவது என்பது சோசலிசத்தின் முழு வெற்றியை இன்னும் உறுதி செய்து விடவில்லை. சோசலிசத்தின் பிரதான பணி --சோசலிச உற்பத்திமுறையை ஒழுங்கமைத்தல்-- இன்னும் செய்யப்பட வேண்டியதாகத்தான் உள்ளது. பல முன்னேறிய நாடுகளின் தொழிலாள வர்க்கத்தின் கூட்டு ஒத்துழைப்பு முயற்சிகள் இன்றி இந்தப் பணியைச் சாதிக்க இயலுமா, ஒரு நாட்டில் சோசலிசத்தின் இறுதி வெற்றி என்பது எட்டப்பட முடியுமா? இல்லை, அது சாத்தியமில்லாதது. முதலாளித்துவத்தை அகற்றுவதற்கு ஒரு நாட்டின் முயற்சிகள் போதுமானவை; நமது புரட்சியின் வரலாறு அதை நிரூபிக்கிறது. சோசலிசத்தின் இறுதி வெற்றிக்கு, சோசலிச உற்பத்தி முறையைக் கட்டியமைப்பதற்கு, ஒரு நாட்டின் முயற்சிகள், அதிலும் குறிப்பாக ரஷ்யா போன்ற விவசாய நாட்டில், போதுமானதல்ல. இதற்கு பல முன்னேறிய நாடுகளின் பாட்டாளி வர்க்கத்தின் முயற்சி அவசியமாகும்.

"மொத்தத்தில் இவைதான் பாட்டாளி வர்க்கப் புரட்சி பற்றிய லெனினுடைய தத்துவத்தின் குணாம்சக் கூறுகள் ஆகும்."

ஆனால் அந்த ஆண்டு முடிவதற்குள்ளாகவே, "லெனினிசத்தின் அஸ்திவாரங்கள்" என்ற ஸ்ராலினுடைய நூல் திருத்தப்பட்ட பதிப்பாக மறுபடியும் விநியோகிக்கப்பட்டது. நான் இப்பொழுது மேற்கோளிட்டிருந்த பகுதிக்குப் பதிலாக அதற்கு நேரெதிரான ஒன்று பிரதியீடு செய்யப்பட்டிருந்தது. "பாட்டாளி வர்க்கம் தனியொரு நாட்டில் சோசலிச சமுதாயத்தை கட்டியமைக்க முடியும், கட்டாயம் கட்டியமைக்க வேண்டும்" என்று அது உறுதி கூறியது; இதுதான் "பாட்டாளி வர்க்கப் புரட்சி பற்றிய லெனினுடைய தத்துவம்" என்ற உத்தரவாதமும் அச்சுப்பிசகின்றி அதனைத் தொடர்ந்து வந்தது.

முன்னோக்கின் மீதான இந்தத் தடாலடியான மற்றும் ஒட்டுமொத்தமான திருத்தம் அதிகாரத்துவத்தின் அதிகரித்து வந்த சமூக எடையையும் அதன் குறிப்பான சொந்த நலன்கள் விடயத்தில் (தேசியப் பொருளாதாரத்தின் சீரான அபிவிருத்தியுடன் அது பிணைந்திருப்பதாக அது கண்டது) அதன் விழிப்படைந்த நனவையும் பிரதிபலித்தது.

மேலும், "தனியொரு நாட்டில் சோசலிசம்" கட்டியமைப்பதற்கான அழைப்பானது, களைத்த நிலையில் இருந்த சோவியத் தொழிலாள வர்க்கத்தினிடையே - இதன் மிகவும் முன்னேறிய கூறுகள் ஒன்று உள்நாட்டுப் போரில் தியாகம் செய்யப்பட்டிருந்தனர் அல்லது அரசு எந்திரத்துக்குள் இழுக்கப்பட்டிருந்தனர் - பரந்த ஆதரவைக் கண்டது. ஜேர்மனியில், 1923ம் ஆண்டு புரட்சிகர நெருக்கடியின்பொழுது ஜேர்மனிய கம்யூனிஸ்ட் கட்சியின் சரணாகதியின் விளைவாக நேர்ந்த படுதோல்வியானது உலகப் புரட்சியில் இருந்து விரைவான உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையை இன்னும் அதிகமாக உடைத்து, சோவியத் தொழிலாளர்களை ஒரு தேசியத் தீர்வு என்ற உறுதிமொழிக்கு ஆட்பட வைத்தது.

ட்ரொட்ஸ்கி, கம்யூனிச அகிலத்தின் ஆறாம் காங்கிரசின் வரைவுத் திட்டம் பற்றிய தன்னுடைய விமர்சனத்திலும் மற்றும் பல படைப்புக்களிலும் கூறியவாறு, தனியொரு நாட்டில் சோசலிசம் என்பது உலக சோசலிசப் புரட்சித் வேலைத்திட்டத்தின் மீதான ஒரு நேரடித் தாக்குதலையே பிரதிபலித்தது.

உலகில் ஏனைய இடங்களில் சோசலிசப் புரட்சிக்கு என்ன நடந்தாலும் ரஷ்யாவில் சோசலிசம் அடையப்பட முடியும் என்பது உண்மையானால், சோவியத் ஒன்றியம் ஒரு புரட்சிகர சர்வதேசிய கொள்கையில் இருந்து முற்றிலும் தற்காப்புக் கொள்கைக்கு திரும்பி விடும் என்று ட்ரொட்ஸ்கி விளக்கினார்.

கம்யூனிச அகிலத்தின் பிரிவுகள் எல்லைக் காவலர்களாய், அதாவது இராஜதந்திர வழிமுறைகளின் மூலமாக ஏகாதிபத்தியத் தாக்குதலைத் தவிர்த்துக் கொண்டு அதேவேளை உலகளாவிய நிலையில் உள்ளபடியான நிலையைப் பேணுவதன் மூலமாக சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாப்பதற்கு நோக்கம் கொண்ட ஒரு சோவியத் அயலுறவுக் கொள்கையின்கருவிகளாய், உருமாற்றம் பெறுவதே இந்த நகர்வின் தவிர்க்கவியலாத தர்க்கமாக இருந்தது. இறுதியில், இந்தக் கொள்கை, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நலன்களை ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் சொந்த நலன்கள் மற்றும் சலுகைகளுக்குக் கீழ்ப்படுத்துதலையே பிரதிநிதித்துவப்படுத்தியது.

1928ம் ஆண்டில் தீர்க்கதரிசனமாக ட்ரொட்ஸ்கி எச்சரித்தவாறு, வெளிநாட்டு ஆக்கிரமிப்பு இல்லாமல் இருந்தால் போதும் ரஷ்யாவில் மட்டுமே சோசலிசம் கட்டியமைக்கப்பட்டு விட முடியும் என்கிற முடிவானது "தலையீட்டைத் தவிர்க்கும் நோக்கத்துடன் வெளிநாட்டு முதலாளித்துவத்துடன் ஒரு ஒத்துழைப்புக் கொள்கைக்கு" தவிர்க்கமுடியாமல் இட்டுச் சென்றது.

கட்சியின் வேலைத்திட்டத்தின் மூலோபாய அச்சில் நிகழ்ந்த இந்த அடிப்படை மாற்றத்துடன், கம்யூனிச அகிலம் மற்றும் தேசியப் பிரிவுகளுக்குள்ளே இருந்த பழைய தலைமைகள் ஒட்டுமொத்தமாய் மாற்றப்பட்டதும் கைகோர்த்து நிகழ்ந்தது. களையெடுப்புகள், கட்சியை விட்டு வெளியேற்றுதல், மற்றும் அரசியல் கவிழ்ப்பு நடவடிக்கைகளை தொடர்ச்சியாய் மேற்கொண்டு, மாஸ்கோ அதிகாரத்துவம், உலக சோசலிசப் புரட்சியின் பாதுகாப்பைக் காட்டிலும் சோவியத் அரசின் பாதுகாப்பையே தனது மூலோபாய அச்சாகக் காணப் பயிற்சி பெற்ற அதிகாரிகளைப் பெற்றது.

உலகப் பொருளாதாரமும் சோவியத் ஒன்றியமும்

ரஷ்ய மற்றும் உலகப் புரட்சிகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள், சோவியத்திற்குள்ளேயே கட்சியின் பொருளாதாரக் கொள்கைகள் மீதாக வளர்ந்திருந்த பூசல்களில் இருந்து பிரிக்க முடியாததாயிற்று.

புதிய பொருளாதாரக் கொள்கை (NEP) தோற்றுவித்திருந்த உடனடி வளர்ச்சிக்கேற்ப நடைமுறையில் தங்களை அமைத்துக் கொண்டிருந்த ஸ்ராலினிச தலைமை, சோவியத் எல்லைக்குள் இருக்கும் நிலைமை தக்க வைத்துக் கொள்ளப்படலாம் என்ற கருத்திற்கும் ஆதரவு கொடுத்து, விவசாயிகள், தனி வணிகர்களுக்கு சலுகைகளை விரிவுபடுத்துதலையும் தொடர்ந்தது.

ட்ரொட்ஸ்கியும், இடது எதிர்ப்பாளர்களும், கனரகத் தொழில்களை வளர்க்கும் விரிவான திட்டத்தை முன்வைத்து, தொழிற்துறையில் வளர்ச்சி இல்லாவிட்டால், கிராமப்புறத்தில் உள்ள முதலாளித்துவ உறவுகளின் வளர்ச்சி சோசலிசத்தின் அடிப்படைகளையே கீழறுத்துவிடும் என்றும் எச்சரித்தனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக, முதலாளித்துவத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையேயான உலகளவிலான போராட்டம் மற்றும் உலகப் பொருளாதாரம் இவற்றிலிருந்து தனித்த முறையில், "சோசலிசம் தனியொரு நாட்டில்" என்பதுடன் சோவியத் ஒன்றியத்தின் பொருளாதார வளர்ச்சி எப்படியும் இடம்பெற முடியும் என்ற கருத்தை ட்ரொட்ஸ்கி நிராகரித்தார்.

"ஒரு நத்தையின் வேகத்தில் ஊர்ந்தாலும், நாம் சோசலிசத்தை கட்டமைப்போம்" என்று புகாரின் கூறியிருந்தார். ஸ்ராலினோ "எமது சோசலிச வளர்ச்சிக்குள் சர்வதேச காரணியை புகுத்த தேவையில்லை" என்று வலியுறுத்தினார்.

இராணுவத் தலையீடு ஒன்றுதான் சோவியத்தின் சோசலிசக் கட்டமைப்பிற்கு ஒரே அச்சுறுத்தல் என்ற இத்தகைய தவறான ஸ்ராலினிச கருத்தாய்வு, உலக முதலாளித்துவ சந்தையினால் அதன்மீது சுமத்தப்பட்ட மிகப்பெரிய அழுத்தத்தை புறக்கணித்திருந்தது.

இந்த அழுத்தத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில், சோவியத் அரசு, வெளி வர்த்தகத்தில் ஏகபோக உரிமையை நிறுவியது. தவிர்க்கமுடியாத பாதுகாப்புக் கருவியான அதேவேளை, ஏகபோக உரிமைதாமே உலகச் சந்தையை சோவியத் நம்பி இருக்க வேண்டிய நிலையையும் மற்றும் முக்கிய முதலாளித்துவ அரசுகளோடு ஒப்பிடுகையில் உழைப்பின் உற்பத்தித் திறனில் அதன் ஒப்பீட்டளவிலான பலவீனத்தையும்தான் வெளிப்படுத்தியது. முதலாளித்துவ மேற்கில் இருந்து குறைந்த விலைப் பொருட்கள் கொடுக்கும் அழுத்தத்தை அது கட்டுப்படுத்தினாலும், ஏகபோக உரிமையால் அதை அகற்றிவிட முடியவில்லை.

இந்த அழுத்தத்தை எதிர்கொள்வதற்கு ட்ரொட்ஸ்கி, தொழிற்துறை வளர்ச்சி மிக விரைவாக இருக்க வேண்டும் என்று போராடினார்; அதே நேரத்தில் பொருளாதார சுயதேவைப்பூர்த்தி என்ற கருத்தையும் அவர் நிராகரித்தார். சோவியத் பொருளாதாரத்திற்கும் உலகச் சந்தைக்கும் இடையே இருக்கும் உறவை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் முற்றிலும் தேசியத் தன்மை கொண்ட திட்டத்தின் வளர்ச்சி என்பது தோல்வியில்தான் முடியும் என்று அவர் கூறினார். உலகத்தில் இருக்கும் உழைப்பு பிரிவினை முறையை தம் நலனுக்கு ஏற்றவாறு சோவியத் ஒன்றியம் பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்; இதையொட்டி தன்னுடைய பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்ளுவதற்கும் முன்னேறிய நாடுகளில் இருக்கும் தொழில்நுட்பம், பொருளாதார ஆதாரங்களை இவற்றை அடைவதற்கும் முயற்சிகள் வேண்டும் என்றார்.

ரஷ்யாவின் பின்தங்கிய வளங்களின் அடிப்படையில், ஒரு தன்னிறைவு பெற்ற "சோசலிச" பொருளாதாரத்தை வளர்க்க முயல்வது பெருந்தோல்வியில்தான் முடியும்; இதற்கு ரஷ்யாவின் பின்தங்கிய நிலைமை மட்டும் காரணமல்ல; அது முதலாளித்துவத்தினால் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் உலகப் பொருளாதாரத்தில் இருந்து பின்தங்கிய நிலைமையும் பிரதிநிதித்துவப்படுத்தியது என்பதானால் என்றார் அவர். நிரந்தரப் புரட்சி நூலின் ஜேர்மனிய பதிப்பு 1930ல் வெளிவந்தபோது, அதன் முன்னுரையில் ட்ரொட்ஸ்கி கீழ்க்கண்டவாறு எழுதினார்:

"மார்க்சிசம் உலகப் பொருளாதாரத்தை புறப்பாட்டுப் புள்ளியாக கொண்டது, தேசியப் பகுதிகளின் மொத்தம் என்பதினால் அல்ல, மாறாக சர்வதேச உழைப்பு பிரிவினை மற்றும் உலகச் சந்தையால் உருவாக்கப்பட்டிருக்கும் மகத்தான, சுதந்திரமான உண்மையால் ஆகும், மற்றும் தேசிய சந்தைகளை எமது சகாப்தத்தில் பெரும் ஆரவாரத்துடன் அது ஆதிக்கம் கொண்டுள்ளது என்பதினாலும் ஆகும். முதலாளித்துவ சமுதாயத்தின் உற்பத்தி சக்திகள் நீண்ட காலத்திற்கு முன்பே தேசிய எல்லைகளை கடந்து விட்டன. (1914-18 ஆண்டுகளின்) ஏகாதிபத்திய போர் இந்த உண்மையின் வெளிப்பாடுகளில் ஒன்றாகும். உற்பத்தி தொழில்நுட்பத்தை பொறுத்தவரையில், சோசலிச சமுதாயம் முதலாளித்துவ முறையை விட உயர்ந்த கட்டத்தை பிரதிபலிக்க வேண்டும். தேசிய அளவில் தனிமைப்படுத்தப்பட்ட சோசலிச சமுதாயத்தை கட்டியமைப்பதை நோக்கமாக கொள்ளுவது, அனைத்து வெற்றிகள் இருந்தாலும், முதலாளித்துவத்துடன் ஒப்பிடும்போது உற்பத்தி சக்திகள் அனைத்தையும் பின்னடைவிற்கு உட்படுத்துவது போல் ஆகும். புவியியல், கலாச்சார, வரலாற்று நிலைமைகளை ஒரு நாட்டின் வளர்ச்சியில் அவை எப்படி இருந்தபோதிலும் --உலக ஐக்கியத்தின் ஒரு பகுதிதான் அது-- தேசிய வடிவமைப்பிற்குள் பொருளாதாரத்தின் அனைத்துக் கூறுபாடுகளையும் ஒதுக்கி வைத்து ஒரு இலக்கை காண முற்படுதல் என்பது பிற்போக்கான கற்பனை களத்தை தொடருவதற்கு அர்த்தமாகும்."

"ஒரு நாட்டில் சோசலிசம்" என்ற கருத்தியலை சுமத்த முற்படும் ஸ்ராலினிச தலைமை, தவிர்க்கமுடியாமல் "ட்ரொட்ஸ்கிசத்திற்கு" எதிரான பல்வேறு போராட்ட வடிவை எடுத்தது; அதுவும் குறிப்பாக நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டிற்கு எதிராக கொண்டது.

எனது வாழ்க்கை, என்ற தன்னுடைய சுயசரிதையில், "நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் மீது முற்றிலும் பாமரத்தனமான, அறியாமை நிறைந்த, முட்டாள்தனமான தாக்குதல்" நடத்தப்படுவதின் அரசியல் உளவியலை, ட்ரொட்ஸ்கி விளக்கினார்.

"ஒரு பாட்டில் மது அருந்திக் கொண்டு அரட்டை அடித்தாலும், வாக்குச் சாவடியில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தாலும், சுயதிருப்தி அடைந்த அதிகாரி ஒருவர் மற்றொருவரிடம் கூறுவார்: 'தான் நிரந்தர புரட்சியைத் தவிர வேறு எதையும் சிந்திக்க முடியாது' என்று. இத்தகைய சமுக இணக்கமில்லா தன்மை, தனிநபர்வாதம், பிரபுத்துவத்தன்மை போன்ற குற்றச் சாட்டுக்கள் கூறப்பட்டது ஒரு குறிப்பிட்ட உணர்வுடன் நெருக்கமான தொடர்பு உடையவை ஆகும். "அனைவரும், எப்பொழுதுமே புரட்சிக்காகத்தான் என இல்லாமல், தனக்கென்றும் உண்டு" என்பது, "நிரந்தரப் புரட்சி வீழ்க" என்று மொழிபெயர்க்கப்பட்டது. மார்க்சிச கோட்பாடுகளின் கடுமையான தத்துவார்த்த கோரிக்கைகளுக்கும் கடுமையான அரசியல் கோரிக்கைகளுக்கும் எதிரான கிளர்ச்சி, நாளடைவில் இந்த மக்களுடைய பார்வையில், "ட்ரொட்ஸ்கிசத்திற்கு" எதிரான போராட்டம் என்ற வடிவமைப்பை பெற்றன. இந்தப் பதாகையின்கீழ், போல்ஷிவிக்கில் இருந்த மேம்போக்கான, பாமரத்தனமானவர்களின் சுதந்திரம் தொடரப்பட்டது."

அக்டோபர் 1917க்கு எதிர்விளைவு

நிரந்தரப் புரட்சிக்கு எதிரான பிரச்சாரம் போல்ஷிவிக் கட்சிக்குள்ளேயே தேசியவாதம் வளர்ந்ததின் இன்றியமையாத வெளிப்பாடு ஆகும்; அதேபோல் அத்தத்துவத்தின் அடிப்படையில் தோன்றியிருந்த அக்டோபர் புரட்சிக்கு எதிரிடையான கருத்தின் ஆரம்பமுமாகும்.

ரஷ்யாவில் "ஒரு நாட்டில் சோசலிசத்தை" அமைக்க முடியும் என்று நம்ப மறுத்ததற்காக 1924ம் ஆண்டு ட்ரொட்ஸ்கியை கண்டனத்திற்கு உட்படுத்திய ஸ்ராலின் போன்றோர், மேற்கு ஐரோப்பாவில் தொழிலாளர்கள் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பே ரஷ்ய தொழிலாள வர்க்கம் அதிகாரத்திற்கு வரமுடியும் என்று கூறியதற்காக அவரை 1905ல் இருந்து 1917 வரையிலும் கற்பனாவாதி என்று கண்டித்திருந்தனர், அவர்கள் அந்த நேரத்தில் ரஷ்யா மிகவும் பின்தங்கிய நாடு என்று வலியுறுத்தியிருந்தனர்.

தன்னுடைய சொந்த தேசிய பொருளாதார வளர்ச்சியின் தரத்தை ஒட்டி நிர்ணயிக்கப்படாமல், இறுதிப்பகுப்பாய்வில் ரஷ்யா, உலக முதலாளித்துவம் அதன் சர்வதேச நெருக்கடியினால் எவ்வாறு மேலாதிக்கம் செய்யப்படும் என்பதை ஒட்டி ரஷ்ய புரட்சியின் தன்மை நிர்ணயிக்கப்படும் என்பதை ட்ரொட்ஸ்கி உணர்ந்திருந்தார். காலம் தாழ்ந்து வந்துள்ள முதலாளித்துவ வளர்ச்சி, உலகப் பொருளாதாரத்துடன் ஒன்றிணைப்பு மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வளர்ச்சி ஆகியவை முதலாளித்துவ வர்க்கத்தை, முதலாளித்துவ புரட்சியுடன் தொடர்பு கொண்டிருந்த பணிகளை செய்ய முடியாமல் ஆக்கிற்று.

1939ம் ஆண்டு வெளிவந்த "ரஷ்ய புரட்சி பற்றிய மூன்று கருத்துருக்கள்" என்ற கட்டுரையில் ட்ரொட்ஸ்கி சுருக்கிக் கூறியவாறு, "ரஷ்யாவில் ஜனநாயகப் புரட்சியின் பூரண வெற்றி விவசாயிகளை ஆதாரமாகக் கொண்ட பாட்டாளி வர்க்க சர்வாதிகார வடிவத்தில் மட்டுமே எண்ணிப்பார்க்கக்கூடியது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அது தப்பமுடியாதபடி நாளின் நடப்பாக ஜனநாயக கடமைகளை மட்டுமல்லாமல் சோசலிசக் கடமைகளையும் முன்வைக்கும், அதேசமயம் அது சர்வதேச சோசலிசப் புரட்சிக்கும் ஒரு சக்திவாய்ந்த உந்துதலை வழங்கும். மேற்கில் பாட்டாளி வர்க்கத்தின் வெற்றி மட்டுமே ரஷ்யாவில் முதலாளித்துவம் மீண்டும் கொண்டுவரப்படுவதிலிருந்து பாதுகாத்து சோசலிச கட்டுமானத்தை அதன் பூரணப்படுதலுக்கு கொண்டு செல்வதற்கான சாத்தியத்தை உத்திரவாதம் செய்யும்."

அக்டோபர் புரட்சியின் அனுபவத்தை ஒட்டிச் சரிபார்க்கப்பட்டுவிட்ட, இத்தத்துவத்தின் சர்வதேச அடித்தளங்களை நிராகரித்த வகையில், ஸ்ராலினிச தலைமை தன்னை ஒரு முறையான தேசிய அணுகுமுறையில் நிலைக்கச் செய்து, சோசலிச கட்டமைப்பிற்கு தேவையான முன்நிபந்தனைகளை கொண்டனவா அல்லது கொள்ளவில்லையா என்ற வகையில் உலகத்திலுள்ள நாடுகளை பிரித்தது.

இந்த அணுகுமுறையை இருவிதமாக தவறானது என்று ட்ரொட்ஸ்கி கண்டித்தார். உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி என்பது பின்தங்கிய நாடுகளில் உள்ள தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை வெற்றிகொள்ள வேண்டிய பிரச்சினையை வெளிப்படுத்தியது மட்டும் அல்லாமல், முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் தேசிய வடிவமைப்பிற்குள் சோசலிசம் கட்டமைக்கப்படுவதை இயலாததாக்கி விடும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

அவர் எழுதியதாவது: "இந்த வரைவு வேலைத்திட்டம் இப்பொழுதுள்ள உற்பத்தி சக்திகளுக்கும் தேசிய எல்லைகளுக்கும் இடையே இருக்கும் ஒத்திசையாத் தன்மை பற்றிய அடிப்படைக் கருத்தாய்வை மறந்துள்ளது, இதிலிருந்து தனி ஒருநாட்டில் சோசலிசத்தைக் கட்டுவதற்கு மிக உயர்ந்த வளர்ச்சியுடைய உற்பத்தி சக்திகள், குறைந்த உற்பத்தி சக்திகளைவிட எந்தவகையிலும் குறைந்த தடைகளைக் காண்கின்றன என்று பொருளாகிவிடாது என்பது ஊற்றெடுக்கின்றது. உண்மையில் எதிரிடைக் காரணத்தால், அதாவது பிந்தையது ஒரு அடிப்படையாக பயன்படுவதற்கு போதுமான கூறுபாடுகளை கொண்டிராத நிலையில், முந்தையதற்கு அவ்வடிப்படையே போதுமானதாக இராது என்பதை நிரூபிக்கும்."

அதாவது, காலனித்துவ நாடுகள் பொருளாதார/தொழில்துறை தளத்தைக் கொண்டிருக்கவில்லை; அதேவேளை முன்னேறிய முதலாளித்துவ நாட்டில், முதலாளித்துவ பொருளாதாரம் ஏற்கனவே தேசிய எல்லைகளுக்கு அப்பால் சென்றுள்ளது. ட்ரொட்ஸ்கி சுட்டிக்காட்டியவாறு, அதனுடைய உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின் காரணமாக பிரிட்டனுக்கு, மூலப் பொருட்களையும் சந்தைகளையும் வழங்குவதற்கு உலகம் முழுவதும் தேவைப்பட்டது. சோசலிசத்தை ஒரு தீவில் கட்டமைக்கும் முயற்சி அறிவிற்கு பொருந்தாத வகையில் பொருளாதாரப் பின்னடைவை ஏற்படுத்திவிடும்.

சோசலிசம் ஒரு நாட்டில் என்ற கருத்தும் சீனாவும்

கம்யூனிச அகிலத்தின் பகுதிகளுக்கு "ஒரு நாட்டில் சோசலிசம்" கொள்கையின் உட்குறிப்புக்கள் பற்றிய விரிவான ஆய்விற்கு நேரம் இல்லை என்றாலும், சுருக்கமான முறையிலாவது 1925-27 ன் சீனப் புரட்சியின் காட்டிக் கொடுப்பு பற்றி சுட்டிக்காட்டுவது தேவை என்றுதான் நான் நினைக்கிறேன். ஸ்ராலினிச பிற்போக்கு தத்துவத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்டம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் இக்காட்டிக் கொடுப்பு வெளிவந்து, சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கான பேரழிவுகர தோல்விகளுக்குத்தான் இது வழிவகுக்கும் என்ற கடுமையான எச்சரிக்கையையும் உறுதி செய்தது.

1930ம் ஆண்டு எழுதும்போது, இந்த "இரண்டாம்" சீனப் புரட்சி "1917ம் ஆண்டு ரஷ்ய புரட்சியை அடுத்து தற்கால வரலாற்றில் மிகப் பெரிய நிகழ்வு" என்று ட்ரொட்ஸ்கி விளக்கினார். சீனத் தொழிலாள வர்க்கம் மற்றும் விவசாயிகள் நிகழ்த்திய புரட்சிகர போராட்டத்தின் எழுச்சி அலையும், 1920ம் ஆண்டு நிறுவப்பட்ட பின்னர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் விரைந்த வளர்ச்சி மற்றும் அரசியல் செல்வாக்கு ஆகியவை அதன் தனிமைப்படல் மற்றும் சுற்றிவளைக்கப்பட்டிருந்த தன்மை இவற்றை உடைப்பதற்கு சோவியத் ஒன்றியத்திற்கு மிகச் சாதகமான வாய்ப்பை கொடுத்தது.

நிரந்தரப் புரட்சியை நிராகரித்து, காலனித்துவ மற்றும் அரைக் காலனித்துவ நாடுகளில் மென்ஷிவிக் தத்துவமான "இரண்டு-கட்ட" புரட்சியை உயிர்த்தெழச்செய்து, சீனத் தொழிலாள வர்க்கம் தன்னுடைய போராட்டத்தை சியாங் கேய்-ஷேக்கின் தலைமையிலான முதலாளித்துவ தேசிய கோமின்டாங் இயக்கத்திற்கு கீழ்ப்படிந்து நடந்து கொள்ள வேண்டும் என்று ஸ்ராலினிச தலைமை வலியுறுத்தியிருந்தது.

ட்ரொட்ஸ்கியின் எதிர்ப்பையும் மீறி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கோமின்டாங்கில் நுழைந்து, அதன் நிர்வாகக் கட்டுப்பாட்டிற்கு இணங்க நடந்து கொள்ள வேண்டும் என்று உத்திரவு இடப்பட்டது; அதே நேரத்தில் சியாங்கே ஷேக் கொமின்டேர்னுடைய நிர்வாகக் குழுவின் கௌரவ உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்; இதற்கு ட்ரொட்ஸ்கியின் வாக்கு ஒன்றுதான் எதிர்ப்பு வாக்கு ஆகும்.

கோமின்டாங்கை, தொழிலாள வர்க்கம், விவசாயிகள், முதலாளித்துவ வர்க்கம் மற்றும் தேசிய முதலாளித்துவ வர்க்கம் ஆகியவற்றை கொண்டிருக்கும் ஒரு "நான்கு வர்க்க கூட்டு" என்று ஸ்ராலினிச தலைமை வரையறுத்திருந்தது.

சீனா இன்னும் ஒரு சோசலிசப் புரட்சிக்கு கனிந்திருக்கவில்லை, அதனிடம் சோசலிசக் கட்டமைப்பு வளர்ச்சிக்கு இன்றியமையாத "மிகக் குறைந்த தேவை" கூட இல்லை என்பது ஸ்ராலினுடைய நிலைப்பாடு ஆகும். எனவே அரசியல் அதிகாரத்திற்கு தொழிலாள வர்க்கம் போராட முடியாது.

கொமின்டேர்னின் பெப்ரவரி 1927 தீர்மானம் கூறியதாவது: "சீனப் புரட்சியின் தற்கால நிலை பொருளாதார நிலைப்பாட்டில் இருந்தோ (விவசாயப் புரட்சி, பழைய நில அடிப்படை உறவுகள் அகற்றப்பட்ட தன்மை) அல்லது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தேசிய போராட்ட நிலைப்பாட்டில் இருந்தோ (சீன ஐக்கியமும் தேசிய சுதந்திரம் நிறுவப்படுதலும்) அல்லது நாட்டின் வர்க்க உறவுத் தன்மை நிலைப்பாட்டில் இருந்தோ (பாட்டாளிகளினதும் விவசாயிகளினதும் ஜனநாயக சர்வாதிகாரம்) முற்றுப் பெற்றிராத நிலையில் முதலாளித்துவப் புரட்சியின் காலமாக உள்ளது...."

இத்தீர்மானத்தில் சீனாவை பற்றிய அனைத்துமே, ரஷ்யாவில் 1917 பெப்ரவரிப் புரட்சிக்கு பின்னர் மென்ஷிவிக் மற்றும் போல்ஷிவிக் கட்சியில் ஸ்ராலின் உட்பட பெரும்பாலான தலைவர்கள் கொண்டிருந்த கருத்தையே பிரதிபலிக்கிறது என்று ட்ரொட்ஸ்கி சுட்டிக் காட்டினார். அப்பொழுது அவர்கள் புரட்சி அதன் வளர்ச்சியின் முதலாளித்துவ ஜனநாயகக் கட்டத்தை பாய்ச்சல் முறையில் கடந்துவர முடியாது என்றும் முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்திற்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை கொடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர். ஏப்ரல் 1917ல் லெனினுடைய ஆய்வுக் கட்டுரைகளில் இருந்த "ட்ரொட்ஸ்கிசத்தை" அவர்கள் எதிர்த்தனர்; அதாவது முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் அடிப்படைப் பணிகள் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றி தன்னுடைய சர்வாதிகாரத்தை நிறுவுதல் மூலம் மட்டுமே நிறைவு செய்யப்படும் என்ற கருத்தை எதிர்த்தனர்.

சீனாவில் ஏகாதிபத்திய ஒடுக்குமுறை -- உண்மையில் அனைத்து காலனித்துவ, அரைக்காலனித்துவ நாடுகளிலும் அவ்வாறான ஒடுக்குமுறை -- பாட்டாளி வர்க்கத்தில் இருந்து முதலாளித்துவ வர்க்கம் வரையில் அனைத்து வர்க்கங்களையும் ஒன்றாய் இணைத்து ஏகாதிபத்தியத்திற்கு எதிரான பொதுப் போராட்டத்தில், ஒரு பொதுக் கட்சியில் அவர்களின் ஐக்கியத்தை நியாயப்படுத்தியுள்ளது என்று ஸ்ராலினிச தலைமை வலியுறுத்தியிருந்தது.

இந்த கருத்துருவிற்கு எதிராக, ட்ரொட்ஸ்கி, உள்நாட்டு முதலாளித்துவ வர்க்கத்துடன் பலதரப்பட்ட உறவுகளை கொண்டிருந்த ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது என்று தெளிவாக நிறுவினார். "துல்லியமாக ஏகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் இராணுவ வலிமையின் காரணமாக, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் சீன மக்களின் ஆழ்ந்த தன்மையில் இருந்து சக்திகளின் மிக கடுமையான முயற்சிகள் வெளிவரவேண்டும் எனக் கோருகின்றது. ஆனால் உழைக்கும் மக்களின் ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட வெகுஜனங்களை எழுச்சியுறச் செய்யும். எதுவும் தவிர்க்கமுடியாமல் தேசிய முதலாளித்துவ வர்க்கத்தை ஏகாதிபத்தியவாதிகளுடன் வெளிப்படையான கூட்டுக்கு தள்ளிவிடும். முதலாளித்துவத்திற்கும் தொழிலாளர்கள் விவசாயிகள் தொகுப்பிற்கும் இடையே உள்ள வர்க்கப் போராட்டம் பலவீனம் அடையாது; மாறாக, ஏகாதிபத்தியத்தின் அடக்கு முறையால் குருதி கொட்டும் உள்நாட்டுப் போருக்கு ஒவ்வொரு கட்டத்திலும் இடம் உண்டு என்ற அளவிற்கு தீவிரப்படுத்தப்படும்." என்று ட்ரொட்ஸ்கி கூறினார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் விருப்பத்திற்கு எதிராக ஸ்ராலின் மென்ஷிவிக் கொள்கையை சீனாவில் திணிக்க முடிந்தது; நகரங்களில் தொழிலாளர்கள் மற்றும் அதேபோல கிராமப்புறங்களில் விவசாய புரட்சியை வலிந்து கட்டுப்படுத்துமாறு சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது. இறுதியில், தன்னுடைய ஆயுதங்களையும் சியாங்கின் இராணுவத்திடம் ஒப்படைக்குமாறு அதற்கு உத்தரவிடப்பட்டது. இதன் விளைவு ஏப்ரல் 12, 1927ல் ஷாங்காயில் இராணுவத்தினரால் கிட்டத்தட்ட 20,000 கம்யூனிஸ்டுகள் படுகொலை செய்யப்பட்டனர்.

இதன் பின்னர் தன்னுடைய வழிவகைதான் சரியானது என்பதை இப்படுகொலைகள் உறுதிபடுத்தியுள்ளன என்று ஸ்ராலினிச தலைமை வலியுறுத்தியது; மேலும் சியாங் முதலாளித்துவ வர்க்கத்தைத்தான் பிரதிநிதித்துவப்படுத்தினார் என்றும் தொழிலாளர்கள், விவசாயிகள் என்றுள்ள கோமின்டாங்கில் "பத்தில் ஒன்பது பேரை" பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும், அவர்களுடைய நெறியான தலைவர் வாங் சிங் வெய் என்றும், அவர் வுஹானில் கோமிண்டாங் "இடது" அரசாங்கத்தின் தலைவர் என்றும் பிரகடனப்படுத்தியது; இதற்கு கம்யூனிஸ்ட் கட்சி அடிபணிந்து நடக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஜூலை 1927ல் சியாங்குடன் ஓர் உடன்பாட்டை வாங் கண்டபின்னர், அவர் ஷங்காயில் இருந்த தொழிலாளர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகளை படுகொலை செய்தார்.

"புரட்சிகர ஜனநாயக சர்வாதிகாரத்தின் தலைவர்" என்று ஸ்ராலினால் பிரகடனப்படுத்தப்பட்ட இந்த "இடது" கோமிண்டாங்கின் தலைவர், நான்கிங்கில் ஜப்பானிய ஆக்கிரமிப்பின் கைப்பொம்மை அரசின் நலைவராக ஆவதற்கு இருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

ஷங்காய் மற்றும் வுஹானில் கொமின்டேர்னுடைய சந்தர்ப்பவாதத்தின் பேரழிவு விளைவுகளை மூடி மறைக்கும் பயனற்ற முயற்சியில், ஸ்ராலின் சீனப் புரட்சி தன்னுடைய ஏறுமுகத்தில்தான் இன்னும் இருப்பதாகக் கூறி, கன்டோனில் மற்றும் ஒரு சாகசவாத எழுச்சிக்கு வகை செய்தார்; அதுவும் மற்றொரு பெரும் படுகொலையில் முடிந்தது.

இதன் விளைவு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தூலமாக அழிவுற்றதும், 1917க்கு பின்னர் மிகவும் உறுதித்தன்மை கொண்டிருந்த புரட்சிகர வாய்ப்பு இழக்கப்பட்டதும்தான்.

சீனாவில் ஸ்ராலினிச தலைமையின் சந்தர்ப்பவாதம், கோமின்டாங்கின் வெற்றி ஏகாதிபத்தியத்திற்கு எதிர் எடையாக பயன்படுத்தப்பட முடியும் மற்றும் அதன் மூலம் சோவியத் ஒன்றியத்திற்கு "ஒரு நாட்டில் சோசலிசத்தை" கட்டியமைக்கும் திட்டத்திற்கு மூச்சு வாங்கும் நேரம் கிடைக்கும் என்ற கருத்துருவை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

ஆனால் சீனாவில் மார்க்சிச-எதிர்ப்பு மற்றும் சந்தர்ப்பவாத கொள்கை, ஒரு நாட்டில் சோசலிசம் என்ற தத்துவத்தின் தேசியவாத அடிக்கட்டுமானத்திலிருந்து எழுந்தது. சீனாவை பொறுத்தவரையில், இந்த வழிவகை உலகப் புரட்சியில் இருந்து ஒதுங்கிய வகையில் தேசிய புரட்சியை பகுத்தாய்ந்தது. இதன் விளைவாக ஒரு புறம் சீனா சோசலிசத்திற்கு போதுமான வகையில் பக்குவம் அடையவில்லை என்று கருதப்பட்டது; மறுபுறமோ தேசிய முதலாளித்துவ வர்க்கம் மற்றும் தேசிய அரசு வடிவமைப்பிற்கு ஒரு வரலாற்றளவிலான முற்போக்குப் பாத்திரம் கொடுக்கப்பட்டது.

இந்த இரு கருத்துருக்களையும் ட்ரொட்ஸ்கி நிராகரித்தார்; மேலும் சீனப் புரட்சி உலக முதலாளித்துவ வளர்ச்சியினால் நிர்ணயிக்கப்படுகிறது என்றும், ரஷ்யாவில் 1917ல் இருந்ததைப் போல் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை எடுத்துக் கொள்வது ஒன்றுதான் நாட்டின் தேசிய மற்றும் ஜனநாயகப் பணிகளை செய்வதற்கு ஒரே வழி என்பதை முன்வைத்துள்ளது என்றும் வலியுறுத்தினார்.

"தனியொரு நாட்டில் சோசலிசம்" என்ற கொள்கையின் விளைவு பற்றிய ட்ரொட்ஸ்கியின் எச்சரிக்கைகள் சரியானவை என்று காலம் கூறியது; ஆனால் ஸ்ராலினுக்கு இது மாபெரும் தோல்வி என்று கருதிய இடது எதிர்ப்பாளர்களை அவர் எச்சரித்தவாறு, சீனா தோல்வியடைந்ததில் புறநிலை விளைவு சோவியத் தொழிலாளர்களை பொறுத்த வரையில் அதிகாரத்துவத்தின் கரங்களைத்தான் வலுப்படுத்தியது. அவரே 1927ம் ஆண்டு நவம்பர் மாதம் இத்தோல்வியை அடுத்து கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு, சில மாதங்களுக்குப் பிறகு ரஷ்ய-சீன எல்லையிலுள்ள அல்மா அட்டாவிற்கு நாடு கடத்தப்பட்டார்.

ஸ்ராலின்-புக்காரின் ஆகியோரது முன்னோக்கான "ஒரு நாட்டில் சோசலிசம்" என்பது ஏற்கப்பட்டதின் அரசியல் முக்கியத்துவம், நிரந்தரப் புரட்சிக்கு எதிரான பிரச்சாரத்துடன் இணைந்து ட்ரொட்ஸ்கி மற்றும் அவருடைய சக சிந்தனையாளர்கள் ஒடுக்கப்பட்டது உலக முதலாளித்துவத்தின் மிக வர்க்க நனவு கொண்டவர்களால் நன்கு புரிந்துகொள்ளப்பட்டது.

ஜூல் 1931ல் நியூ யோர்க் டைம்ஸ் அதன் புகழ்பெற்ற மாஸ்கோ நிருபர் Walter Duranty கொடுத்த சிறப்பு அறிக்கையை வெளியிட்டது; "ஸ்ராலினிசத்தின் இன்றியமையாத கூறுபாடு, அது தன்னை லெனினிசத்தில் இருந்து வேறுபடுத்தி, முற்போக்குடையதாகக் காட்டிக் கொள்வது என்னவென்றால் ...அது உலகப் புரட்சிக்குக் காத்திராமல், ஒரு நாட்டில் சோசலிசத்தை வெற்றிகரமாக நிலைநாட்ட, வெளிப்படையாக இலக்கு கொண்டுள்ளது.

"லியோன் ட்ரொட்ஸ்கியுடன் கடுமையான விவாதத்தைக் கொண்டிருந்த இந்த வரட்டு வாதத்தின் முக்கியத்துவம் மிகைப்படுத்த தேவையற்றது. இதுதான் ஸ்ராலினிச "கோஷத்திலேயே" தலை சிறந்தது; ரஷ்யாவிலோ மற்ற இடங்களிலோ தங்கள் கருத்துக்களை ஏற்க மறுக்கும் கம்யூனிஸ்டுகளை மாறான கொள்கை உடையவர்கள் அல்லது "தோல்வியாளர்கள்", என முத்திரையிட்டு விடும்."

Duranty தொடர்ந்தார்: "சோவியத் சோசலிச தன்னிறைவு என அழைக்கப்படக்கூடியது உலகப் புரட்சியில் ஆர்வத்தை ஓரளவு குறைத்துக் கொண்ட தன்மையைப் பெற்றது; வேண்டுமென்றே என்று இல்லாவிடினும், சூழ்நிலையை அனுசரித்து எனக் கூறலாம். ஸ்ராலினிச வகையில் ரஷ்யாவை சோசலிச மயமாக்குதல் என்பதற்கு மூன்று கட்டாயத் தேவைகள் உண்டு; ஒவ்வொரு துளி முயற்சி, ஒவ்வொரு சிறுநாணயச் சேகரிப்பு மற்றும் சமாதானம் என்பவையே அவை. இதனால் கிரெம்ளினுக்கும் நேரமோ, காசோ, ஆற்றலோ "வெளி உலகில் சிகப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு இல்லை என்று போய்விட்டது; அது போருக்குக் காரணமாகக் கூட அமையலாம்; சமுதாய அழிப்பு சக்தி என்ற வகையில் சமூக அமைப்பின் சக்தியாக உள்ள ஐந்தாண்டுத் திட்டத்தின் இலக்குடன் கூட ஆபத்திற்கு உட்படும் வகையில் பூசலைக் காணலாம்."

இதேபோல் பிரெஞ்சு செய்தித்தாளான Le Temps இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் கூறியது: "ஓர் உண்மையான சர்வதேச ஆபத்தைத் தன்னுடைய நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் மூலம் பிரதிநிதித்துவம் செய்திருந்த ட்ரொட்ஸ்கி அகற்றப்பட்டதில் இருந்து, ஸ்ராலினுடைய தலைமையில் இருக்கும் சோவியத் ஆட்சியாளர்கள், உலகில் மற்ற இடங்களில் பிரச்சினை தரக்கூடிய புரட்சிக்காகக் காத்திராமல், ஒரு நாட்டில் சோசலிசத்தைக் கட்டியமைக்கும் கொள்கையைத்தான் பிடித்துக் கொண்டுள்ளனர்."

ஸ்ராலினுடைய அதிகாரத்துவத்தின் புரட்சிகர வார்த்தைஜாலத்தைப் பற்றித் தீவிரமாக எடுத்துக் கொள் வேண்டாம் என்றும் பிரெஞ்சு ஆளும் வர்க்கத்திற்கு செய்தித்தாள் ஆலோசனை கூறியது.

"ஒரு நாட்டில் சோசலிசம்" பற்றி முதலாளித்துவ வர்க்கத்தினரின் ஒப்புதல்களைத் தொகுத்த "வெள்ளை நூல்" மற்றும் சமூக ஜனநாயகவாதிகளுடைய பரிவு, ஆதரவு அறிக்கைகள் அடங்கிய "மஞ்சள் நூல்" என்று இரண்டைத் தோற்றுவிக்க ட்ரொட்ஸ்கி இக்காலக் கட்டத்தில் திட்டமிட்டிருந்தார்.

எட்டு தசாப்தங்களுக்கு பின்னர், நிரந்தரப் புரட்சி தத்துவத்திற்கும் தனியொரு நாட்டில் சோசலிசத்திற்கும் இடையேயான போராட்டத்தின் உட்குறிப்புக்கள் தெளிவாகக் காணப்படலாம். சோவியத் ஒன்றியத்தின் சோசலிச வளர்ச்சி அனைத்தையும் சர்வதேச வளர்ச்சிகள், உலகப் புரட்சியில் இருந்து பிரிக்கும் முயற்சிகள் பேரழிவிற்குத்தான் வகை செயும் என்ற ட்ரொட்ஸ்கியின் துல்லியமான, முன்னுணர்வு எச்சரிக்கைகள் உலக நாடுகள் மீண்டும் வரைபட மாற்றத்திற்குட்படுத்தப்பட்டுள்ளதின் மூலமும், முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் தொழிலாளர் வர்க்கம் பெரும் வறிய நிலைக்குத் தள்ளப்பட்டதின் மூலமும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டானது, அனைத்துலகக் குழுவில் ஏற்பட்ட பிளைவைத் தவிர, மிகையில் கோர்பச்சேவ் கொண்டு வந்த பெரஸ்துரொய்ய்கா திட்டத்தின் இருபதாம் ஆண்டு நிறைவையும் குறிக்கிறது. இக்கொள்கை அக்டோபர் புரட்சியை ஸ்ராலினிசம் காட்டிக் கொடுத்ததின் முழுமையைக் காட்டுகிறது. மார்க்சிச வார்த்தையாலங்களுக்கு பின்புறம், அதிகாரத்துவம் சோசலிசத்தை முதலாளித்துவத்தைப் புரட்சிகரமாக அகற்றும் திட்டமாகக் கொள்ளாமல், தன்னுடைய சொந்த சலுகைகளுக்குத் தளமாக இருக்கும் ஒரு தேசியப் பொருளாதாரத்தை வளர்க்கும் வழிவகையாகத்தான் கொண்டுள்ளது.

இந்த சலுகைகளை காப்பதற்கு முதலாளித்துவ மீட்சிக் கொள்கைபால் கவனத்தைத் திருப்பி, சோவியத் மக்கள்மீது உலக வரலாற்றுப் பரிமாணம் கொண்ட பேரழிவையும் கட்டவிழ்த்துவிட்டது. இதன் மிகக் கடுமையான வெளிப்பாடு மக்கட்தொகைக் குறைப்பில் உள்ளது; கடந்த 10 ஆண்டுகளில் ரஷ்ய மக்கட் தொகை 9.5 மில்லியன் குறைந்துவிட்டது; பல ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் முன்னாள் சோவியத் குடியரசில் இருந்து திரும்பிய பின்னரும் இந்நிலைதான். இல்லங்கள் அற்ற குழந்தைகளுடைய எண்ணிக்கை இன்று உள்நாட்டுப் போரின்பொழுது அல்லது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இருந்த மோசமான நாட்களில் இருந்த எண்ணிக்கையைவிட மிக அதிகமாகும்.

தேசிய அளவில் ஒதுக்கப்பட்டுவிட்ட சோவியத் பொருளாதாரத்தின்மீது உலகந்தழுவிய ஒருங்கிணைந்த முதலாளித்துவம் செலுத்திய அழுத்தத்தின் விளைவாக வெளிவந்த சோவியத் ஒன்றியத்தை ஸ்ராலினிச அதிகாரத்துவம் கலைத்த செயல், சோசலிசம் அல்லது மார்க்சிசத்தின் தோல்வியைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை; மாறாக ஸ்ராலினிச அதிகாரத்துவம் ஒரு ஒதுங்கிய, தன்னிறைவு உடைய தேசியப் பொருளாதாரத்தை, அதாவது ஒரு நாட்டில் சோசலிசம் என்ற முன்னோக்கை தக்க வைத்துக்கொள்ள எடுத்த நடவடிக்கைகளின் தோல்விதான் எனலாம்.

தனியொரு நாட்டில் சோசலிசம் என்ற தத்துவத்திற்கு எதிராக ட்ரொட்ஸ்கி நடத்திய போராட்டம் அக்டோபர் புரட்சிக்கு எதிரான விளைவுகளின் காரணத்தைப் பற்றிய ஆழ்ந்த பகுப்பாய்வை வழங்கியது மட்டுமல்லாது, இவ்வகையில் சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சி ஒன்றை அமைக்க வேண்டிய விரிவான வேலைத்திட்டத்தை விவரிக்கும் நிகழ்ச்சிப்போக்கில், சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு அதன் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தியது.

நிரந்தரப் புரட்சியை ட்ரொட்ஸ்கி பேணிக்காத்ததும், உலகப் பொருளாதாரம், உலக அரசியல் இவை பற்றிய அடிப்படைக் கருத்துருக்களும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சர்வதேச முன்னோக்கின் தத்துவார்த்த கால்கோளைப் பிரதிநித்துவப்படுத்தும் புரட்சிகர மூலோபாயத்திற்கான ஒரே புறநிலை அடித்தளத்தைக் கொண்டிருக்கிறது.

Loading