சோசலிச சமத்துவக் கட்சியின் ஸ்தாபக மாநாட்டின் ஆவணங்கள்: கோட்பாடுகள் பற்றிய அறிக்கை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சோசலிச சமத்துவக் கட்சியானது (அமெரிக்கா), அதன் ஸ்தாபக மாநாட்டிலிருந்து கட்சியின் கோட்பாடுகள் பற்றிய அறிக்கையை வெளியிடுகிறது. கோட்பாடுகள் பற்றிய அறிக்கை ஆகஸ்ட் 3-9, 2008ல் நடைபெற்ற அகல் பேரவையால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சோசலிச சமத்துவக் கட்சியின் உலகளாவிய பணிகள்

1. சோசலிச சமத்துவக் கட்சியானது, 1938ல் லியோன் ட்ரொட்ஸ்கியினால் ஸ்தாபிக்கப்பட்ட சோசலிசப் புரட்சியின் உலக கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அரசியல் ஆளுமையை ஏற்று, அதனுடன் ஐக்கியம் கொண்டுள்ளது. சோசலிச சமத்துவக் கட்சியின் கோட்பாடுகள் 20ம் நூற்றாண்டின் புரட்சிகர எழுச்சிகளின் முக்கிய அனுபவங்களையும், அத்துடன் ஒன்றிணைந்த உலக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்திற்காக மார்க்சிஸ்ட்டுக்கள் நடாத்திய போராட்டத்தின் அனுபவங்களையும் உள்ளடக்கியுள்ளது. பரந்துபட்ட மக்கள் முழு நனவோடு அரசியல் போராட்டத்தில் பலம்வாய்ந்த முறையில் நுழைவதை குறிக்கும் சோசலிசப் புரட்சி, உலக வரலாற்றில் மனிதனுடைய சமூக அமைப்பின் வடிவமைப்பின் மிகப் பெரிய, மிக முன்னேற்றமான மாற்றத்தை அர்த்தப்படுத்துகின்றது அதாவது வர்க்கங்களின் அடிப்படையிலான சமுதாயத்திற்கு முடிவு கட்டி, அதையொட்டி மனிதர்கள் பிற மனிதர்களால் சுரண்டப்படுவதற்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது. இத்தகைய மகத்தான மாற்றம் என்பது ஒரு முழு வரலாற்று சகாப்தத்தின் பணி ஆகும். இந்த சகாப்தத்தின் அனுபவங்களை சுட்டிக்காட்டி அவற்றில் இருந்துதான் சோசலிச சமத்துவக் கட்சியின் கோட்பாடுகள் பெறப்பட்டுள்ளன. அந்த சகாப்தம் 1914ல் முதல் உலகப் போர் வெடித்ததுடன் ஆரம்பித்து, அதன்பின்னர் விரைவில் 1917 அக்டோபர் புரட்சி மூலம் ரஷ்ய தொழிலாள வர்க்கம் அரச அதிகாரத்தை வெற்றி கொண்டதின் மூலம் தொடர்ந்தது.

2. சோசலிச சமத்துவக் கட்சி (SEP) இணைந்திருக்கும் நான்காம் அகிலம் லியோன் ட்ரொட்ஸ்கியின் தலைமையின் கீழ் சோவியத் ஒன்றியத்தின் அதிகாரத்துவ சீரழிவிற்கு எதிராகவும், உலக சோசலிச புரட்சி வேலைத்திட்டத்தை காட்டிக் கொடுத்த ஸ்ராலின் மற்றும் அவருடைய எடுபிடிகளின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகவும் சர்வதேச மார்க்சிஸ்ட்டுக்கள் நடாத்திய சற்றும் தளராத போராட்டத்தில் இருந்து எழுந்ததாகும். அந்த காட்டிக் கொடுப்பின் அரசியல் மூலமாக இருந்த ஸ்ராலினிச ஆட்சியால் சர்வதேசியவாதம் தேசியவாதத்தால் பதிலீடு செய்யப்பட்டதுதான் இறுதியில் 1991ல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதற்கு வழிவகுத்தது.

3. சோசலிசப் புரட்சி என்பது அதன் நோக்கில் சர்வேதேசிய தன்மையை கொண்டதாகும். ட்ரொட்ஸ்கி எழுதியது போல், "சோசலிசப் புரட்சி ஒரு தேசிய அரங்கில் ஆரம்பித்து, சர்வதேச அரங்கிற்கு விரிவடைந்து, உலக அரங்கில் பூரணப்படுகிறது. இவ்விதத்தில் சோசலிசப் புரட்சி ஒரு நிரந்தரப் புரட்சியாக, சொல்லின் புதிய பரந்த பொருளில் வெளிப்பட்டு, இறுதி வெற்றியான எமது முழுக் கோளத்திலும் வெற்றி என்பதில்தான் முழுமை அடைகிறது." நான்காம் அகிலத்தின் இந்த அடிப்படைக் கோட்பாடு, "தனி நாட்டில் சோசலிசம்" என்ற ஸ்ராலினின் "கருத்தாய்விற்கு" எதிராக வெளிப்பட்டு நின்றது. ஏனைய நாடுகளைப் போலவே அமெரிக்காவிலும், உலக நிலைமைகளை பற்றிய பகுப்பாய்வில் இருந்துதான் தொழிலாள வர்க்கத்தின் மூலோபாயம் உருவாக்கப்பட வேண்டும். தேசிய வேலைத்திட்டங்களின் சகாப்தம் முதல் உலகப் போர் வெடிப்புடன் முடிந்து விட்டது. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு பின்னர், உலகப் பொருளாதாரத்தின் மாபெரும் வளர்ச்சி மற்றும் பூகோள ரீதியாக ஒருங்கிணைந்த நிலையில், உலகப் பொருளாதார நிலமைகளும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டிகள் மற்றும் முதலாளித்துவங்களுக்கு இடையிலான போட்டிகள் ஆகியன தேசிய வாழ்வை நிர்ணயிக்கும் முக்கிய கூறுபாடுகளாகி விட்டன. எனவே ட்ரொட்ஸ்கி விளக்கியுள்ளதுபோல், "பாட்டாளி வர்க்கத்தின் தேசிய நோக்குநிலை ஒரு உலக நோக்குநிலையிலிருந்துதான் கட்டாயமாக எழவேண்டுமே அன்றி எதிர்மாறாக அல்ல."

4. எங்கெல்லாம் தொழிலாள வர்க்க புரட்சி முதலில் வெடித்து வெளிவருகிறதோ, வட அமெரிக்காவிலோ, தென்னமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ, ஆசியாவிலோ அல்லது ஆஸ்திரேலியாவிலோ, முன்னேற்றம் அடைந்த நாடோ அல்லது அதிக வளர்ச்சியுறாத முதலாளித்துவ நாடோ ஆயினும், சமூகக் கொந்தளிப்பானது தவிர்க்க முடியாமல் உலகப் பரிமாணத்தை பெறும். சோசலிசப் புரட்சி ஒரு நாட்டின் தேசிய வடிவமைப்பிற்குள் முற்றுப்பெற முடியாது. ட்ரொட்ஸ்கியால் அவருடைய நிரந்தரப் புரட்சி தத்துவத்தில் முன்கூட்டிக் காணப்பட்டது போல் அது உலக அரங்கில்தான் பூரணப்படும்.

5. தற்கால முதலாளித்துவ சமூகத்தில் முக்கியமான மற்றும் தீர்க்கமான முடிவெடுக்க கூடிய சர்வதேச புரட்சிகர சமூக சக்தியான தொழிலாள வர்க்கத்தின் நலன்களை சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டம் வெளிப்படுத்துகிறது. சோசலிச சமத்துவக் கட்சியின் மையப் பணி அமெரிக்க தொழிலாளர்களின் ஆதரவை சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்காக வெற்றிகொள்வது ஆகும். இவை வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றவும் அமெரிக்காவில் ஒரு தொழிலாளர் அரசை நிறுவுவதற்கும் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தவும் அணிதிரட்டவும் சோசலிச சமத்துவக் கட்சி முயன்று வருகிறது. இதையொட்டி அது ஒரு உண்மையான ஜனநாயக, சமத்துவ மற்றும் சோசலிச சமூகம் தோன்றுவதற்கான முன்னிபந்தனைகளை தோற்றுவிக்கும். இந்த இலக்குகள் ஒரு சர்வதேச மூலோபாயத்தின் கட்டமைப்பிற்குள்ளேதான் அடையப்பட முடியும். அதன் இலக்கு உலகளவில் அனைத்து நாடுகளின் தொழிலாளர்களையும் ஐக்கியப்படுத்தி உலக ஐக்கிய சோசலிச அரசுகளை உருவாக்குவது ஆகும்.

முதலாளித்துவத்தின் நெருக்கடி

6. முதலாளித்துவமும் அதன் பொருளாதார அடித்தளங்களில் வளரும் ஏகாதிபத்திய முறையுமே மனித வறுமை, சுரண்டல், வன்முறை மற்றும் நவீன உலகின் துன்பங்களுக்கு முக்கிய காரணங்கள் ஆகும். ஒரு சமூகப் பொருளாதார அமைப்பு முறை என்ற வகையில், முதலாளித்துவம் நீண்டகாலத்திற்கு முன்பே தன்னுடைய வரலாற்றுரீதியான முற்போக்கான பங்கை இழந்துவிட்டது. இருபதாம் நூற்றாண்டின் இரத்தம் தோய்ந்த வரலாறு (இரு உலகப் போர்கள், கணக்கிலடங்கா "பகுதி" பூசல்கள், நாஜிசம் இன்னும் பல வகை இராணுவ போலீஸ் சர்வாதிகார முறைகள், மனித இன அழிப்பு மற்றும் இனப்படுகொலைகளின் வெடிப்பு) முதலாளித்துவ அமைப்பு முறை பற்றி விடையிறுக்க முடியாத பெரும் குற்றச்சாட்டு ஆகும். முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பல நூறு மில்லியன்கள் ஆகும். இந்த எண்ணிக்கையில் முழு கண்டங்களிலும் இடையறா வறுமையாலும் அதையொட்டிய இடர்பாடுகளினாலும் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளடங்கவில்லை.

7. தற்போதுள்ள உற்பத்தி சக்திகளின் பிரமாண்டமான அளவும், தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான முன்னேற்றமும் வறுமையை அகற்றுவதற்கு தேவையானதையும் விட அதிகமாகத்தான் உள்ளன என்பதோடு உலகில் இருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தையும் கொடுக்க வல்லது. முன்னோடியில்லாத சடரீதியான செல்வத்தில் இருந்து கலாச்சாரம் மலர வேண்டும். ஆனால் இதற்கு மாறாக தொழிலாள வர்க்கத்தின் வாழ்வியற்கூறுபாடுகள் வீழ்ச்சியடைந்த வண்ணம் இருப்பதுடன், எதிர்காலம் பற்றிய முன்னோக்கும் நம்பிக்கையும் தகர்க்கப்பட்டு, கலாச்சாரமும் ஆழ்ந்த நெருக்கடியில் உள்ளது. எது உள்ளது, எது இருக்க வேண்டும் என்பதற்கு இடையேயான முரண்பாட்டின் ஆதாரம் உற்பத்தி சக்தியின் தனியார் சொத்துடைமையையும் உலகம் போட்டியிட்டிக் கொண்டிருக்கும் போட்டி தேசிய அரசுகளாக பகுத்தறிவற்ற வகையில் பிளவுண்டிருப்பதையும் அடித்தளமாகக் கொண்டுள்ளது.

8. தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களை உயர்த்தும் அனைத்து முயற்சிகளும், சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நிலையும் உற்பத்தி சாதனங்கள் தனியார் சொத்துடைமையாக இருத்தல், முதலாளித்துவ சந்தையின் அராஜகம், இலாப முறையில் பொருளாதாரக் கட்டாயங்கள், கடைசி ஆனால் முக்கியத்துவம் குறையாத தீராத பேராசை மற்றும் ஆளும் வர்க்கத்தின் பணப் பைத்தியம் ஆகிய தடைகளை எதிர்கொள்ளுகின்றன. முதலாளித்துவ சந்தை என்பது சிறந்தமுறையில் வளங்களை பகிர்ந்து கொடுப்பது மற்றும் சமூகத் தேவைகளின் மிகவும் புத்திசாலித்தனமாக ஒழுங்கமைக்கும் முறை என்று கூறப்படும் கூற்று கடந்த தசாப்தத்தில் உலகப் பொருளாதார முறையை அதிர்விற்கு உட்படுத்தியுள்ள பல ஊக ஊழல்கள் மற்றும் பல பில்லியன் டாலர் மதிப்பு திவால்கள் ஆகியவற்றால் முற்றிலும் இழிவுபடுத்தப்பட்டுவிட்டன. "சட்டபூர்வமான" நிதிய நடவடிக்கைகள் மற்றும் குற்றம் சார்ந்த மோசடி இவற்றிற்கு இடையே இருக்கும் எல்லைக் கோடுகள் மறைந்துவிட்ட நிலைக்கு குறுகிப்போய்விட்டன. உற்பத்தி முறையில் இருந்தும் உண்மையான மதிப்பை தோற்றுவிப்பதில் இருந்தும், தனியார் செல்வக் கொழிப்பை அகற்றுதல் முதலாளித்துவ முறையின் பொது அழுகிய முறையின் வெளிப்பாடாகிவிட்டது.

9. இலாப நோக்கு அமைப்புமுறைக்கும் மனிதகுலம் தப்பிப் பிழைப்பதற்கும் இடையே உள்ள சமரசத்திற்கு இடமில்லாத முரண்பாடு, உண்மையில் உலக வெப்பமயமாதல், மற்றும் இயற்கைச் சூழல் பிரச்சினையின் மிகத் தீமை பயக்கும் வெளிப்பாடாகும். இந்த நெருக்கடிக்கான காரணம், முதலாளித்துவ செய்தி ஊடகம் தவறாகக் கூறுவது போல் மக்கள் பெருக்கத்தில் இல்லை. இது ஒன்றும் விஞ்ஞான, தொழில்நுட்பத்தின் விளைவும் அல்ல; மாறாக பகுத்தறிவிற்கு பொருந்ததாத, காலம் கடந்துவிட்ட பொருளாதார ஒழுங்கு தவறாகப் பயன்படுத்தப்படுவதின் விளைவு ஆகும். பெருகிய முறையில் தட்ப வெப்ப நிலை மாற்றம் மற்றும் பிற சூற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு இலாபநோக்கு அமைப்பு முறையின் வடிவமைப்பிற்குள் உண்மையான தீர்வைக் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பது முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கு "அசௌகரீயமான உண்மையாகும்; இதை சுற்றுச் சூழல் பற்றி அக்கறை காட்டுவதாக கூறுபவர்கள் கூட மறுக்க முடியாது. அனைத்து விஞ்ஞான சான்றுகளும் உலகப் பொருளாதாரம் ஒரு சோசலிச மறுசீரமைப்பு செய்யப்பட்டால் அன்றி –அதில் இலாப உந்துதலுக்கோ அழிவுகரமான தேசிய நலன்களுக்கோ பூமியின் சுற்றுச் சூழலை பணயப் பொருளாக வைக்காது– பேரழிவை தடுக்க, சுற்றுசூழலை பாதிக்கும் (Greenhouse gases) வாயுக்கள் வெளிவருவது தடைக்கு உட்படுத்தப்படுதல் என்பதை சாதிக்க முடியாது என்று கூறுகின்றன.

10. பரவிவரும் பொருளாதார நெருக்கடி மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சரிந்து வரும் சமூக நிலைமைக்கான தீர்வு முதலாளித்துவ முறையின் சீர்திருத்தத்தில் இல்லை; ஏனெனில் அது சீர்திருத்த முடியாத நிலைமைக்கு போய்விட்டது. இந்த நெருக்கடி ஒரு முறையான வரலாற்று தன்மையை கொண்டுள்ளது. முதலாளித்துவத்திற்கு நிலப்பிரபுத்துவ முறை வழிவிட்டது போல், முதலாளித்துவம் சோசலிசத்திற்கு வழிவிட்டு அகன்றே தீர வேண்டும். முக்கியமான தொழில்துறை, நிதிய, தொழில்நுட்ப மற்றும் இயற்கை ஆதாரங்கள் முதலாளித்துவ சந்தை மற்றும் தனியார் சந்தை கட்டுப்பாட்டில் இருந்து எடுக்கப்பட்டு சமூகத்திற்கு மாற்றப்பட்டு, அவை ஜனநாயக கண்காணிப்பிலும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் கட்டுப்பாட்டின் கீழும் கொண்டுவரப்பட வேண்டும். பொருளாதார வாழ்வின் ஒழுங்கமைப்பு முதலாளித்துவ மதிப்பு விதிகளின் அடித்தளத்தில் இருந்து ஜனநாயக பொருளாதார வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சோசலிச மறுசீரமைப்பிற்குள் கொண்டுவரப்பட வேண்டும்; இதன் நோக்கம் சமூக தேவைகள் பூர்த்தி செய்யப்படுதலாக இருக்கும்.

ஏகாதிபத்தியமும் போரும்

11. நாடுகடந்த நிறுவனங்களால் தொழில்துறையும் மற்றும் நிதியும் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொருளாதார அமைப்புமுறை உலக அளவில் செயற்படுகையில் முலாளித்துவம் இன்னமும் தேசிய அரசு அமைப்பு முறையில் தன்னுடைய வேர்களை கொண்டிருக்கிறது. இறுதிப் பகுப்பாய்வில், தேசிய அரசு என்பது ஒவ்வொரு நாட்டின் ஆளும் வர்க்கமும் தன்னுடைய நலன்களை உலக அரங்கில் தொடர்வதற்கான தளமாகத்தான் சேவைசெய்கிறது. முக்கிய ஏகாதிபத்திய அரசுகளின் கட்டுப்பாடற்ற உந்துதல் –முதலும் முக்கியமானதுமான அமெரிக்கா உட்பட– புவி-அரசியல் மேலாதிக்கத்தை அடைந்து குறைவூதிய தொழிலாளர் தொகுப்பையும் பெறுவது ஆகும்; இது தவிர்க்க முடியாமல் போருக்கே இட்டுச் செல்லும். 2002ல் புஷ் நிர்வாகம் புதிதாகக் கொண்டுவந்த 1946 நூரெம்பேர்க் போர்க்குற்றங்கள் விசாரண காலத்தில் நிறுவப்பட்ட சட்டபூர்வ முன்னோடிகளை முற்றிலும் மீறிய வகையில் "முன்னரே தாக்கித் தனதாக்கிக்கொள்ளும் போர்" என்னும் கொள்கையை அரசியல் கருவியாக்கி போரை நெறிப்படுத்துவதுடன் முடிவில்லா பெருகிய வன்முறைக்கும் அரங்கு அமைத்துக் கொடுத்துள்ளது.

12. சற்றும் ஐயத்திற்கு இடமின்றி சோசலிச சமத்துவக் கட்சி "பயங்கரவாதத்தின் மீதான போர்" எனக் கூறப்படுவதை கண்டிக்கிறது; ஏனெனில் இது அமெரிக்க பெரு நிறுவன மற்றும் நிதிய உயரடுக்கு தன்னுடைய உலகந்தழுவிய அபிலாசைகளை தொடர்வதற்கு இராணுவ வன்முறையை மோசடிக் காரணமாக பயன்படுத்துகிறது. காலனித்துவ கொடுங்கோன்மைக்கு எதிராக, புரட்சிகர மரபினை அமெரிக்கா கொண்டிருந்ததை மறந்து விட்டு, அரசாங்கமும் செய்தி ஊடகமும், தத்தமது நாட்டை வெளிநாட்டுப் படைகள் ஆக்கிரமித்துள்ளதை எதிர்க்கும் அனைவரையும் "பயங்கரவாதிகள்" என்று முத்திரையிட்டுள்ளன. சோசலிச சமத்துவக் கட்சி இத்தகைய ஏகாதிபத்திய உந்துதல் கொண்ட அவதூறை கண்டிக்கிறது; மக்களின் அடிப்படை உரிமையான தங்களை பாதுகாப்பற்கு ஆதரவு கொடுக்கிறது; அதேபோல் தங்கள் வீடுகள், நாடுகளையும் நவ காலனித்துவ படையெடுப்பாளர்களிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ளும் உரிமைக்கும் ஆதரவு கொடுக்கிறது. இத்தகைய கொள்கை ரீதியான நிலைப்பாடு ஆக்கிரமிப்பு உள்ள நாடுகளிலோ அல்லது உலகின் பிற பகுதிகளிலோ வன்முறை நடவடிக்கைகளால் அப்பாவி மக்கள் குறிவைக்கப்படுவதன் மீதான சோசலிச சமத்துவக் கட்சியின் எதிர்ப்பை எவ்வகையிலும் குறைத்துவிடவில்லை. இத்தகைய செயல்கள் முறையாக பயங்கரவாதச் செயல்கள் என்று வரையறுக்கப்படலாம்; இவை அரசியல் ரீதியாக பிற்போக்குத்தனமானவையும் ஆகும். நிரபராதியான குடிமக்களை கொலை செய்தல் என்பது பொதுமக்களை சீற்றத்திற்கு உட்படுத்தி, நிலைகுலையச் செய்து, குழப்பத்திற்குள்ளாக்குகின்றது. இது ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டில் இருக்கும் குறுங்குழுவாதத்தை ஆழப்படுத்துவதுடன் வகுப்புவாதப் பிளவுகளையும் அதிகரிக்கிறது. பயங்கரவாதம் சர்வதேச அளவில் செயல்முறைப்படுத்தப்படும்போது, தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கான போராட்டத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தி, இத்தகைய நிகழ்வுகளை பயன்படுத்தி போருக்கு செல்லுவதை நியாயப்படுத்த முனையும் அமெரிக்க அரசியல் கட்டமைப்பில் இருக்கும் பிரிவுகளின் கருவியாக ஆகிறது.

13. அனைத்து இராணுவப்படைகளும் ஈராக்கில் இருந்தும், ஆப்கானிஸ்தானில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி கோருகிறது; மேலும் ஈரான் இன்னும் பிற நாடுகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுகிறது; இந்நாடுகள் ஏதேனும் ஒரு காரணத்தை ஒட்டி வெள்ளை மாளிகை மற்றும் பென்டகன் ஆகியவற்றால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகந்தழுவிய நலன்களுக்கு தடைகள் எனக் கருதப்படுகின்றன. சோசலிச சமத்துவக் கட்சி அமெரிக்க இராணுவவாதத்திற்கும் அதன் போர்த் திட்டங்களுக்கும் எதிரான மிகப் பரந்த மக்கள் எதிர்ப்பிற்கு ஊக்கம் கொடுத்து ஆதரிக்கிறது. ஆனால் போருக்கான காரணங்கள் சமூகத்தின் பொருளாதார அமைப்பிலும் அதன் அரசியல் பிளவு தேசிய அரசுகள் அமைப்பு என்ற முறையிலும் பொதிந்துள்ளது என்ற உண்மையை ஒட்டி, ஏகாதிபத்திய இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிரான போராட்டம் என்பது ஒரு சர்வதேச புரட்சிகர முலோபாயம் மற்றும் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை அணி திரட்டுவதன் மூலம்தான் வெற்றியடைய முடியும்.

முதலாளித்துவ அரசும் ஜனநாயகமும்

14. சோசலிசக் கொள்கைகளை செயல்படுத்துவதற்கு அடிப்படையான முன்னிபந்தனை, தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வெற்றிகொண்டு ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை அமைப்பது ஆகும். அதிகாரத்தைப் பெறுவதற்கு தொழிலாள வர்க்கம் கிடைக்கும் அனைத்து ஜனநாயக, சட்டபூர்வ உரிமைகளயும் பயன்படுத்தினாலும், பரந்த வரலாற்று அனுபவம் சமூகத்தின் சோசலிச மறுசீரமைப்பை நிலவும் முதலாளித்துவ ஜனநாயகம், அரசு அமைப்புக்களின் கட்டமைப்பிற்குள்ளே செயல்படுத்த முடியாது என்பதைத்தான் நிரூபணம் செய்துள்ளது. அரசாங்கம் என்பது வர்க்க ஆட்சியின் ஒரு கருவி எனப்படும் மார்க்சிச சிறப்பு வரையறை, "வெறும் ஆயுதமேந்தியவர்களை மட்டும் கொண்டிராமல் பொருள்சார் துணைவளங்கள், சிறைகள், சகல விதமான வன்முறைக்கான அமைப்புக்களையும் கொண்டிருக்கும்" என்று கூறுகிறது. (ஏங்கெல்ஸ்): இது நூறாண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்பொழுது இன்னும் உண்மையாகத்தான் இருக்கிறது. சீர்திருத்தவாதிகள் வாடிக்கையாக உறுதியாகக் கூறுவது போல் அரசு சமூக மோதலில் மத்தியஸ்தம் வகிக்கும் ஒரு அமைப்பு அல்ல. அதன் இயல்பே சமூகம் என்பது சமரசத்திற்கு இடமில்லாத வகையில் விரோதப் போக்கு உடைய வர்க்கங்களைக் கொண்டிருப்பது என்ற உண்மையில் உள்ளது. முதலாளித்துவ அரசு முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தும் ஒரு கருவியாகும். முதலாளித்துவம் "ஒரு தெளிவான, தற்போதைய ஆபத்து உள்ளது" என்று உணர்ந்தால், சட்டத்தின்படி கூட தன்னுடைய அடிப்படை வர்க்க நலன்களை காப்பதற்காக, நாட்டின் அடிப்படை அரசியலமைப்பு பாதுகாப்பு விதிகளை ஒதுக்கித் தள்ளும் உரிமைகளை தன்னகத்தே கொண்டுள்ளது (உச்சநீதிமன்ற நீதிபதி ஒலிவர் வெண்டல் ஹோம்ஸின் வார்த்தைகளில்).

15. அமெரிக்காவிற்குள் தன்னுடைய ஆட்சியை நெறிப்படுத்த ஜனநாயக அலங்காரச் சொற்களை பயன்படுத்தி உலகம் முழுவதும் தன்னுடைய வன்முறையைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்தவும் செய்யும் தற்கால அமெரிக்க அரசு தன்னுடைய கரங்களில் இணையற்ற பரந்த தன்மையான அடக்குமுறைக் கருவிகளை கொண்டுள்ளது. இதன் சிறைச்சாலை முறை, இரண்டு மில்லியன் மக்களுக்கும் மேலாக சிறைக் கம்பிகளுள் வைத்துள்ளது, உலகிலேயே மிக அதிகமான கைதிகளைக் கொண்டுள்ளது; மகத்தான, நவீன ஆயுதங்களைக் கொண்ட போலீஸ் படைகளை வைத்துள்ளது; ஒவ்வொரு ஆண்டும் 14 மில்லியனுக்கும் மேற்பட்ட கைது செய்யப்படலை சரிபார்க்கும் நீதித்துறை; மரண தண்டனை விதிக்கும் அதிகாரத்தையும் பெற்றுள்ளது; ஒரு மகத்தான சக்திவாய்ந்த, பெரும் செலவில் நிறுவப்பட்டுள்ள இராணுவப் படைகள், இராணுவவாத, ஜனநாயக விரோத உணர்வுகளை நிரம்பப் பெற்றது; ஒரு பரந்த "தேசியப்பாதுகாப்பு" கருவி, அசாதாரண விதத்தில் ஒற்றுக் கேட்டல் மக்களுடைய பிரத்தியேக விவகாரங்களை வேவு பார்த்தல் முதலியவற்றைச் செய்தல் ஆகியவை. இந்த அமைப்புக்களின் மீது அமெரிக்க மக்கள் கிட்டத்தட்ட முறையான கண்காணிப்பு அல்லது கட்டுப்பாடு எதையும் கொண்டிருக்கவில்லை. சித்திரவதை கூட அரசாங்கக் கொள்கையாகிவிட்டது; ஆட்கொணர்தல் முறை (Habeas Corpus) உரிமை வியத்தகு முறையில் குறைக்கபட்டுவிட்டது; அமெரிக்காவில் உள்ள பொதுச் சிறைகளை தவிர அரசாங்கம் இரகசிய சிறைகளின் ஒரு சர்வதேச சித்திரவதை வலைப்பின்னலையும் நடத்துகிறது; அவற்றில் எண்ணிலடங்கா பேர்கள், "போர் விரோதிகள்" எனக் கருதப்படுபவர்கள் மறைந்துவிடுகின்றனர்.

16. முந்தைய வரலாற்றுக் காலத்தில் நிறுவப்பட்டிருந்த ஜனநாயக உரிமைகள் மிகக் கடுமையாக இல்லாதொழிக்கப்பட்டுவிட்டன. லிங்கனுடைய புகழ்வாய்ந்த "மக்களுடைய, மக்களுக்காக, மக்களினால் நடத்தப்படும்" அரசாங்கம் என்ற கண்ணோட்டம் நீண்ட காலத்திற்கு முன்பே சீரழிவிற்கு உட்பட்டு செல்வந்தர்களுடைய, செல்வந்தர்களுக்காக, செல்வந்தர்களினால் நடத்தப்படும் அரசாங்கம் என்று ஆகிவிட்டது. வாக்களிக்கும் உரிமை என்பது நடைமுறையில் முறையாக்கப்பட்டுவிட்ட "இருகட்சி முறை" செயல்படும் கடுமையான அரசியல் வழிவகையில் அதிக பொருளைக் கொள்ளவில்லை; இம்முறை தேர்தல் பிரச்சாரங்கள் மீது இரு பெருநிறுவன ஆதரவுடைய அரசியல் கட்சிகள் ஏகபோக உரிமை கொண்டிருப்பதைத்தான் உத்தரவாதம் அளிக்கிறது. இருக்கும் தேர்தல் விதிகள் ஜனநாயக, குடியரசுக் கட்சியினரை எதிர்க்கும் கட்சிகள் திறமையுடன் பங்கு பெறமுடியாமல் ஒதுக்கி விடுகின்றன. வாக்குச்சீட்டு பதிவிற்கான முறை இரு கட்சி சர்வாதிகாரத்திற்கு சவால்விடுவதை தடுக்கும் வகையில் வடிவமைப்பை கொண்டுள்ளது. இதே போல் செய்தி ஊடகத்தின் சுயாதீனம் என்பது பெரிய செய்தி ஊடகங்கள் சக்திவாய்ந்த பெருநிறுவன நலன்களால் கட்டுப்படுத்தப்படும் நிலையில் பயனற்றவையாக உள்ளன, மேலும் மாற்றீட்டு கருத்துக்கள் கேட்கப்பட முடியும் என்பதை கொண்டுவந்துள்ள குறிப்புக்களை காட்டும் இணைய தளம் கூட பெருகிய முறையில் அதிக கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்படும் என்ற நிலை தோன்றியுள்ளது.

தொழிலாளர் அதிகாரத்திற்கான போராட்டம்

17. ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படல் என்பது சோசலிசத்திற்கான போராட்டத்துடன் பிரிக்க முடியாமல் இணைந்துள்ளது. ஜனநாயகம் இன்றி சோசலிசம் இருக்க முடியாது என்பதைப் போல், சோசலிசம் இல்லாத ஜனநாயகமும் இருக்க முடியாது. அரசியல் சமத்துவம் என்பது பொருளாதார சமத்துவம் இல்லாமல் இருக்க இயலாது. போருக்கு எதிரான போராட்டத்தைப் போல், ஜனநாயக உரிமைகளக் காத்து விரிவாக்குவதற்கான போராட்டத்திற்கு தொழிலாள வர்க்கம் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் கீழ் சுயாதீனமான அரசியல் அணிதிரளலை கொள்வதுதான், அரச அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு தேவையாகும்.

18. "தொழிலாளர்களின் அதிகாரத்தை நிறுவுவதற்கு, தற்போதுள்ள முதலாளித்துவ அரசின் நிறுவன அமைப்புக்களுக்கு சோசலிச வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதைக் காட்டிலும் அதிகமாக செய்ய வேண்டியுள்ளது. புரட்சிகர வெகுஜன போராட்டங்கள் மற்றும் மக்களின் பெரும்பாலான தொழிலாள வர்க்க பிரதிநிதிகளிடம் இருந்து எழும் உண்மையான ஜனநாயக ரீதியான கலந்துகொள்ளலுக்கான புதிய வடிவமைப்புக்கள், நிறுவனங்கள் ஒரு தொழிலாளர் அரசாங்கத்தின் அஸ்திவாரங்களை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட வேண்டும், அதாவது தொழிலாளர்களின், தொழிலாளர்களுக்காக, தொழிலாளர்களால் ஒரு அரசாங்கம் நிறுவப்பட வேண்டும். இத்தகைய அரசாங்கத்தின் கொள்கை, அது பொருளாதார வாழ்வை சோசலிச மாற்றத்திற்கு தேவையான அடிப்படையில் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துகையில், மிகப் பரந்த அளவில் ஜனநாயக முறையில் தொழிலாள வர்க்கம் பங்கு பெறுதலை ஊக்குவிக்க, உற்சாகம் கொடுக்க மற்றும் முடிவெடுக்கும் வழிவகைகள் மீது கட்டுப்பாட்டைக் கொள்ளுவதற்கு ஊக்குவிக்கப்பட வேண்டும். இருக்கும் நிறுவன அமைப்புக்களை அகற்றுவதற்கு அது ஆதரவு கொடுக்கும்; ஜனநாயக வழிவகைகளைக் குறைத்தல் அல்லது மக்களுக்கு எதிரான சதித்திட்டங்கள் தீட்டும் மையங்கள் அகற்றப்படுவதற்கு (உதராணம் ஏகாதிபத்திய ஜனாதிபதி முறை, நிலைத்த இராணுவம், தேசிய-பாதுகாப்பு அமைப்புகள் போன்றவை). இவையும் இன்னும் பல தேவையான மாற்றங்களும், ஆழ்ந்த ஜனநாயகத் தன்மை கொண்ட மாற்றங்கள், மக்களாலேயே முடிவெடுக்கப்படும்; இவை தொழிலாள வர்க்கம் ஒரு சோசலிச நனவூட்டப்பட்ட வகையில் அணிதிரட்டப்படுவதின் பின்னணியில்தான் செயல்படுத்தப்பட முடியும்."

தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம்

19. அதிகாரத்திற்கான போராட்டத்திற்கு, கட்சிகள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தின் முகவர்களிடம் இருந்து நிபந்தனையற்ற அரசியல் சுயாதீனம் தொழிலாள வர்க்கத்திற்கு தேவைப்படுகிறது. ஏனைய வர்க்க நலன்களின் அரசியல் பிரதிநிதிகளுடன் அரசியல் ரீதியாக வலுவிழக்கச் செய்யும் சமரசங்களை கொண்டு கைகளை கட்டிப்போட்டுக் கொண்டால் தொழிலாள வர்க்கம் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை செயல்படுத்துவது ஒரு புறம் இருக்க, அரசியல் அதிகாரத்தைக் கூட கைப்பற்ற முடியாது. முதலும் முக்கியமானதுமாக, இதன் பொருள் காலம் கடந்து விட்ட மற்றும் மோசடிக் கட்டுக் கதையான, ஜனநாயகக் கட்சியானது குடியரசுக் கட்சியுடன் ஒப்பிடப்படும்போது ஒரு "குறைந்த தீமையை" பிரதிபலிக்கிறது என்ற கருத்து தயக்கமின்றி நிராகரிக்கப்பட வேண்டும். உள்நாட்டுப் போர் சகாப்தத்திற்கு முன்பிருந்தே அடிமைகளை கொண்டிருந்த வர்க்கத்தில் தன் முன்னோடிகளை கொண்டிருந்த இந்தப் பிற்போக்கு முதலாளித்துவ கட்சிக்கு தொழிலாள வர்க்கம் தன்னை அடிபணியச் செய்து கொள்ளுவது வரலாற்றுரீதியாக அமெரிக்காவில் தொழிலாளர் இயக்கத்தின் ஆபத்தான பலவீனமாக உள்ளது. வன்முறை வர்க்கப் பூசல் மற்றும் தொழில்துறைப் போர்க்குணம் என்ற மரபினை அது கொண்டிருந்த போதிலும்கூட, பல தசாப்தங்களாக தொழிற்சங்க அதிகாரத்துவத்தாலும், கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ராலினிஸ்ட்டுக்களாலும் கணக்கிலடங்கா மத்தியதர வர்க்க அரசியல் போக்குகளாலும் வளர்க்கப்பட்ட கருத்தான தொழிலாளர் இயக்கம் ஜனநாயகக் கட்சியை நம்பியிருத்தல் என்பது, தன்னுடைய பதாகையின்கீழ், தன்னுடைய வர்க்க நலன்களுக்குப் போரிடும், ஒரு சுயாதீன அரசியலில் நனவு கொண்ட தொழிலாள வர்க்கத்தின் இயக்க வளர்ச்சியை திறமையுடன் தடுத்து நிறுத்திவிட்டது. சோசலிச சமத்துவக் கட்சியின் தலையாய அரசியல் பொறுப்புக்களில் ஒன்று ஜனநாயகக் கட்சி, முழு இரு கட்சி முறை ஆகியவற்றுடன் உறுதியான, மாற்றத்திற்கு இடமில்லாத வகையில் உடைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு பிரசாரம் செய்து, ஊக்கம் கொடுத்து வளர்ப்பதே ஆகும்.

20. ஆனால் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளுக்கு சோசலிச சமத்துவக் கட்சியின் எதிர்ப்பு என்பது இந்த இரு நிறுவனமயப்பட்டுள்ள கட்சிகளுக்கு எதிராக வெளிப்படும் எந்த அரசியல் எதிர்ப்பு அல்லது வேலைத்திட்டத்திற்கும் ஆதரவு கொடுக்கப்படும் என்று அர்த்தப்படாது. அமெரிக்காவில் ஒரு நீண்டகால மூன்றாம் "எதிர்ப்பு" கட்சிகள் வரலாறு உள்ளது; இது எந்தவித உண்மையான, நடைமுறை மாற்றீடும் இல்லாமல் ஜனநாயகக் கட்சியினர், குடியரசுக் கட்சியினருக்கு எதிராக தொழிலாளர்கள் நலன்களின் நிலைப்பாட்டில் இருந்து எதையும் கொடுக்கா வகையில் இருகட்சி முறையின்மீது மக்கள் கொண்டிருக்கும் அதிருப்திக்கு முறையிடும் வகையில்தான் உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் Ross Perot இன் Reform Party கணிசமான ஆதரவைப் பெற்று எப்படி போதுமான நிதிய ஆதாரங்களும் செய்தி ஊடகத்தின் கவனமும் இருந்தால் மக்கள் அதிருப்தி என்பது முதலாளித்துவத்தால் திரிபுபடுத்தப்பட்டு அரசியல்ரீதியாக செயலற்றதாகக்கப்பட முடியும் என்பதைக் காட்டியது. பல தேசிய, மாநில, உள்ளுர் தேர்தல்களில் பங்கு பெற்றுள்ள பசுமைக் கட்சியை பொறுத்தவரையில், மத்தியதர வர்க்கத்தின் பிரிவுகள் சிலவற்றிற்காக இருக்கும் சமூகத்தில் குறைந்த வரம்புடைய சீர்திருத்தங்களுக்காக அது பிரச்சாரம் செய்கின்றது -- முக்கியமான சுற்றுச் சூழல் பிரச்சினைகளில். அதன் அரசியல் செயலர்கள் பலரும் ஜனநாயகக் கட்சிக்குள் அல்லது அதற்கு வெகு அருகில்தான் செயல்படுகின்றனர். மேலும் அமெரிக்க எல்லைகளுக்கு அப்பால் மற்ற நாடுகளில் இருக்கும் பசுமை வாதிகள் முதலாளித்துவ அரசாங்கங்களுடன் பணியாற்றி முதலாளித்துவ அரசுகளுக்கு அரிய சேவையைத்தான் செய்துள்ளனர்.

21. அரசியல் போக்குகளை மதிப்பீடு செய்கையில், சோசலிச சமத்துவக் கட்சி ஓரிரு பிரச்சினைகளில் அவ்வப்பொழுது எடுக்கப்படும் நிலைப்பாடு, முடிவான வழிகாட்டி நெறிகளாக இருக்காது என்று கருதுகிறது; மாறாக அதன் வரலாறு, வேலைத்திட்டம், முன்னோக்கு, வர்க்க அடிப்படை மற்றும் நோக்குநிலை இவற்றை கருத்திற்கொள்ளும். தேர்தலில் தற்காலிக வெற்றி பெறுவதற்காக தேர்தல் உடன்பாடுகளை செய்துகொண்டு அரசியலில் முன்னேற்றப் பாதையில்லாமல் அகப்பட்டுக் கொண்ட கணக்கிலடங்கா தொழிலாள வர்க்கத்தின் உதாரணங்களை வரலாறு காட்டுகிறது; இதற்காக தொழிலாளர் தங்கள் அடிப்படை அரசியல், சமூக, பொருளாதார நலன்களை கூடத் தியாகம் செய்துள்ளனர். ஸ்ராலினிஸ்ட்டுக்கள் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகள் கூட்டில் 1930 களில் அமைக்கப்பட்டிருந்த "மக்கள் முன்னணி" மிகவும் துன்பியலான உதாரணங்களாக, குறுகிய பார்வையுடைய காட்டிக்கொடுப்புமிக்க விளைவுகளுக்காக வரலாற்றுரீதியான நீண்ட கால நலன்கள் தியாகம் செய்யப்பட்டதை காட்டுகின்றன; இவை பரந்த தளத்தை கொண்ட பல வர்க்கங்களை கொண்ட, அதையொட்டி இயைந்திராத சமூக நலன்களின் சிதைந்த கூட்டணிகளாகத்தான் இருந்தன.

22. அனைத்து அரசியல் பிரச்சினைகள் மற்றும் தக்க தந்திரோபாயங்கள் பற்றிய அதன் தேர்வு பற்றிய அதன் அணுகுமுறையில், சோசலிச சமத்துவக் கட்சி முதலாளித்துவ அமைப்பின் விதிகளுக்கு உட்பட்டு இயங்கும் தன்மை பற்றிய ஒரு விஞ்ஞான ரீதியான புரிதல் மற்றும் வர்க்க சமூகத்தின் அரசியல் இயக்கவியல் மற்றும் வரலாற்றின் படிப்பினைகளை முறையாக உள்ளீர்த்துக்கொள்ளலின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை நலன்களைத்தான் உயர்த்திப் பிடிக்கிறது. இந்த அணுகுமுறைதான், குறுகிய கால தந்திரோபாய ஆதாயங்களை தொடர்வதற்காக நீண்ட கால தொழிலாள வர்க்க நலன்களை தியாகம் செய்யும் சந்தர்ப்பவாத அரசியலுக்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சியை சமரசத்திற்கு இடமின்றி நிறுத்தியுள்ளது. பல முறையும் சந்தர்ப்பவாதிகள் தங்கள் கொள்கைகளைக் காட்டிக் கொடுப்பதை நியாயப்படுத்தும் வகையில் தாங்கள் யதார்த்தமான அரசியல் வாதிகள் என்று கூறிக் கொண்டு, "வளைந்து கொடுக்காத" வரட்டுவாதங்களால் வழிகாட்டப்படவில்லை என்றும் எந்த நிலைமையின் தேவைக்கும் ஏற்ப தங்கள் நடைமுறையை மாற்றிக் கொள்ள முடியும் என்றும் கூறுகின்றனர். மீண்டும் மீண்டும் இத்தகைய "யதார்த்தவாத" அரசியல், பேரழிவிற்குத்தான் இட்டுச் சென்றுள்ளது -- துல்லியமாக ஏனெனில் அவை மேம்போக்கான, வெளித்தோற்றங்களுக்கு அடிபணியும், மார்க்சிசம் அல்லாத, அதையொட்டி புறநிலைமைகள் மற்றும் வர்க்கப் போராட்டத்தின் இயக்கவியல் பற்றிய உண்மைக்குப் புறம்பான மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளன.

23. ஆனால் சந்தர்ப்பவாதம் என்பது வெறுமனே புத்திஜீவித, தத்துவார்த்த பிழையின் விளைவு அல்ல. அதற்கு முதலாளித்துவ சமூகத்தில் கணிசமான சமூகப் பொருளாதார வேர்கள் உள்ளன, அது தொழிலாளர் இயக்கத்தினுள்ளே விரோத வர்க்க சக்திகளின் அழுத்தத்தின் ஒரு வெளிப்பாடாக வளர்ச்சியுறுகிறது. சந்தர்ப்பவாதத்தின் அனைத்து வெளிப்பாடுகளும் --19ம் நூற்றாண்டின் இறுதியில் ஜேர்மனிய சமூக ஜனநாயக கட்சிக்குள் வெளிப்பட்ட பேர்ன்ஸ்டைன் கருத்தில் இருந்து 1920களில் போல்ஷிவிக் கட்சிக்குள் வளர்ந்த ஸ்ராலின் கருத்து, பப்லோ, மண்டேல் என்று 1950 களின் ஆரம்ப ஆண்டுகளில் நான்காம் அகிலத்திற்குள் வளர்ச்சியுற்ற கருத்துக்கள் மற்றும் இறுதியாக 1980களின் நடுப்பகுதியில் ICFI ல் இருந்து உடைத்துக் கொள்ள வகை செய்த பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சந்தர்ப்பவாதம் வரை அனைத்தும்--தொழிலாள வர்க்கத்தின் மீது முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ சமூக சக்திகள் செலுத்தும் செல்வாக்கில் காணப்படலாம். இதுதான் திருத்தல்வாதம் மற்றும் சந்தர்ப்பவாத அரசியலின் அடிப்படைக் காரணமும் முக்கியத்துவமும் ஆகும். இத்தகைய போக்குகளுக்கு எதிரான போராட்டம் என்பது கட்சியை கட்டியமைப்பதில் இருந்து திசைதிருப்புவது அல்ல; மாறாக தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் மார்க்சிசத்திற்கான போராட்டத்தில் மிக உயர்நிலையில் ஈடுபடுவதாகும்.

சோசலிச நனவும் தலைமை நெருக்கடியும்

24. நான்காம் அகிலத்துடன் அரசியல் ஐக்கியம் கொண்டுள்ள சோசலிச சமத்துவக் கட்சி போல்ஷிவிக் கட்சியை கட்டமைப்பதில் லெனினால் முறையாக வளர்க்கப்பட்டு மற்றும் நான்காம் அகிலத்தை நிறுவிக் கட்டியமைக்கும் போராட்டத்தில் ட்ரொட்ஸ்கியினால் முன்னெடுக்கப்பட்ட மரபார்ந்த தொல்சீர் மார்க்சிச கருத்தாய்வான, புரட்சிகர சோசலிச நனவு தொழிலாள வர்க்கத்திடம் தன்னியல்பாய் வெளிப்படுவதில்லை என்பதை காத்து நிற்கிறது. சோசலிச நனவிற்கு முதலாளித்துவ உற்பத்திமுறை மற்றும் வரலாற்று வளர்ச்சி விதிகள் பற்றிய விஞ்ஞான ரீதியான உட்பார்வை தேவை. இந்த அறிவும் புரிதலும் தொழிலாள வர்க்கத்திடையே அறிமுகப்படுத்தப்பட வேண்டும், அதுதான் மார்க்சிச இயக்கத்தின் முதன்மையான பணி ஆகும். லெனின் இந்தக் கருத்தைத்தான் துல்லியமாக என்ன செய்ய வேண்டும்? என்ற நூலில் வலியுறுத்தி எழுதினார்: "ஒரு புரட்சிகர தத்துவம் இல்லாவிட்டால் ஒரு புரட்சிகர இயக்கம் இருக்க முடியாது." தொழிலாளர் இயக்கத்தில் மார்க்சிச தத்துவத்தை அறிமுகப்படுத்தும் புரட்சிகர கட்சியின் முயற்சிகளுக்கு அப்பால், பரந்த தொழிலாள வர்க்க நனவின் மேலாதிக்கம் செய்யும் வடிவமானது, தொழிற்சங்கவாத மட்டத்திலேயே தொடர்ந்தும் இருக்கும். தொழிற்சங்கவாதம் தொழிலாள வர்க்கத்தின் "முதலாளித்துவ நனவு" என லெனினால் வரையறுக்கப்பட்டது. புத்திஜீவித மற்றும் மார்க்சிச "உயரடுக்குமனோபாவம்" மீதான கிளர்ச்சியூட்டும் வகையிலான தாக்குதல்களுடன் வழக்கமாய் இணைந்த வகையில், புரட்சிகர நனவிற்கான போராட்டத்தை இழிவுபடுத்துவது பிற்போக்கு கல்வியாளர்கள் மற்றும் அரசியல் சந்தர்ப்பவாதிகளின் கைச்சரக்கு ஆகும்.

25. சோசலிசத்தின் வெற்றிக்கு --எனவே மனித நாகரிகம் தப்பிப் பிழைத்தல் மற்றும் முற்போக்காய் அபிவிருத்தி அடைதல்-- மார்க்சிச தத்துவத்தின் அஸ்திவராங்களில், சோசலிசப் புரட்சியின் உலக கட்சியை, நான்காம் அகிலத்தை கட்டியமைப்பது தேவையாகும். ஒரு நனவற்ற வரலாற்று நிகழ்வுப் போக்கின் தவிர்க்க முடியாத விளைவாக சோசலிசம் அடையப்பட முடியாது. 20ம் நூற்றாண்டின் முழு வரலாறும் அத்தகைய "தவிர்க்க முடியாமல் நடக்கும்" என்ற விதிக்கு எதிரானதைத்தான் நிரூபிக்கிறது; இது வரலாற்று சடவாத உறுதிப்பாட்டை கேலிக்கூத்தாகச் செய்வதுடன் அறிகை, தத்துவம், நடைமுறை என்று மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ட்ரொட்ஸ்கி போன்றோர் படைப்புக்களின் ஆற்றல் வாய்ந்த ஒன்றின் மற்றொன்று மீதான பாதிப்புடன் எந்த தொடர்பையும் பெற்றிருக்கவில்லை. சோசலிசம் கனிவதற்கு புற நிலைமைகள் போதுமானதாக இல்லை என்பதால் முதலாளித்துவம் 20ம் நூற்றாண்டில் உயிர் தப்பிவிடவில்லை; மாறாக, தொழிலாள வர்க்க வெகுஜனக் கட்சிகளின் தலைமை ஒரு சோசலிசப் புரட்சிக்கான "போதுமான தகுதியின்மையால்" தப்பிப் பிழைத்தது. மீண்டும் மீண்டும் பெரும் போராட்டங்களில் தொழிலாள வர்க்கம் ஈடுபட்டது. ஆனால் ஸ்ராலினிஸ்டுகள், சமூக ஜனநாயகவாதிகள், மையவாதிகள் மற்றும் சீர்திருத்தவாத அமைப்புக்கள் ஆகியவற்றால் தவறாக வழிநடத்தப்பட்ட இந்தப் போராட்டங்கள் தோல்விகளில் முடிவுற்றன.

26. தொழிலாள வர்க்கத்தை அதன் சொந்த அமைப்புக்களே --வெகுஜன அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும்-- காட்டிக் கொடுத்ததால்தான் இன்றும் முதலாளித்துவம் நிலவுகிறது. "உலக அரசியல் நிலைமை ஒட்டுமொத்தமும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமை பற்றிய வரலாற்று நெருக்கடி என்பதால் முக்கியமாக பண்பிடப்படுகிறது." இச்சொற்களுடன்தான் நான்காம் அகிலத்தின் நிறுவன ஆவணத்தை லியோன் ட்ரொட்ஸ்கி தொடக்கி வைத்தார்; அவை இன்றளவும் தற்கால அரசியல் யதார்த்தத்தின் ஒரு வரையறை என தலையாய முறையில் பொருத்தமுடையதாக உள்ளன. இன்று உலகில் ஒரு வெகுஜன அமைப்புகூட, தொழிலாள வர்க்கத்தை ஒரு புரட்சிகர போராட்டத்திற்கு அழைப்புவிடாதது ஒரு புறம் இருக்கட்டும், நிலவும் உலக முதலாளித்துவ ஒழுங்கிற்கு ஒரு எதிராளி எனத் தன்னை முன்வைக்கவில்லை. இது ஒரு மிகையதார்த்த சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது; இதில் தொழிலாள வர்க்கத்தின் சீற்றமும் அதிருப்தியும் பழைய, அரசியலில் சிதைந்துவிட்ட அமைப்புக்களால் நசுக்கப்படுகின்றன. ஆனால் நான்காம் அகிலத்தின் நிறுவன ஆவணமான, இடைமருவு வேலைத்திட்டத்தில் ட்ரொட்ஸ்கி எழுதினார்: "பரந்த மக்களின் நோக்குநிலை முதலில் சிதைந்து கொண்டிருக்கும் முதலாளித்துவத்தின் புறநிலைமைகளாலும் இரண்டாவதாக பழைய தொழிலாளர் அமைப்புக்களின் துரோக அரசியலாலும் நிர்ணயிக்கப்படுகிறது. இந்தக் காரணிகளில் முதலாவது தீர்க்கமான ஒன்றாகும்: வரலாற்று விதிகள் அதிகாரத்துவக் கருவியை விட வலிமையானவை ஆகும்."

மார்க்சிச தத்துவமும் தொழிலாள வர்க்கமும்

27. முதலாளித்துவ அமைப்பின் முரண்பாடுகள் சமூகத்தை புரட்சிகரமாக மறு ஒழுங்கு செய்வதை முன்வைக்கும் போராட்டத்திற்குள் தொழிலாள வர்க்கத்தை உந்தித்தள்ளும். இப்போராட்டங்கள் உற்பத்தி சக்திகளின் உலகந்தழுவிய ஒருங்கிணைப்பின் முன்னேறிய மட்டத்திலிருந்து புறநிலையாக எழும் வெளிப்படையான ஒரு சர்வதேச தன்மையை கொள்ளும். எனவே நவீன சகாப்தத்தின் பெரும் மூலோபாய பணி அனைத்து நாடுகளின் தொழிலாளர்களின் அரசியல் ஐக்கியத்தை உறுதியான சர்வதேச புரட்சிகர சக்தியாக உருவாக்குவதாகும்.

28. சோசலிச சமத்துவக் கட்சி தன்னுடைய செயற்பாட்டை வரலாறு மற்றும் சமூகத்தின், புறநிலை விதிகள், குறிப்பாக அவை முதலாளித்துவ உற்பத்தியின் முரண்பாடுகளில் வெளிப்படுகிறவாறு, அவை பற்றிய ஒரு பகுப்பாய்வின் அடிப்படையில் மேற்கொள்கிறது. மெய்யியல் சடவாதத்தில் வேரூன்றி, மார்க்சிசமானது நனவைக் காட்டிலும் சடத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது; "உயர் இலக்கு என்பது சடப்பொருள் உலகத்தைவிட வேறு எதுவும் இல்லை" என்று மார்க்ஸ் எழுதினார்: "இது மனித மனத்தில் பிரதிபலிக்கிறது, சிந்தனை வடிவங்களாக மாற்றப்படுகிறது." மார்க்சின் சடவாதம், இயங்கியல் ரீதியானது, அதில் அது சடரீதியான உலகம் மற்றும் சிந்தனையில் அது பிரதிபலிக்கும் வடிவங்கள் நிலையான பொருட்கள் மற்றும் உட்புறத்தே வேறுபாடற்ற நிலையிலான கருத்தாய்வுகள் ஆகியவற்றின் கூட்டுத் தொகுப்பாக அல்லாமல், மாறாக, குரோதம் மிக்க மாறுபட்ட போக்குகளுடன், நிரந்தரமான மாற்றத்திற்குள்ளாகும் மற்றும், ஒன்றின் மீது ஒன்று தாக்கத்தை கொண்ட, ஒரு சிக்கலான நிகழ்வுப் போக்குகளாக இருக்கும்.

29. தொழிலாள வர்க்கத்தின் முன்னேறிய பகுதிகளுக்குள்ளே வரலாறு பற்றிய விஞ்ஞான புரிதலை, முதலாளித்துவ உற்பத்தி முறை பற்றிய அறிவு மற்றும் அது பிரசவிக்கும் சமூக உறவுகள், மற்றும் தற்போதைய நெருக்கடியின் உண்மை இயல்பிற்குள்ளேயான உட்பார்வை மற்றும் உலக வரலாற்று தாக்கங்கள் ஆகியவை பற்றிய அறிவை வளர்க்க சோசலிச சமத்துவக் கட்சி முற்படுகிறது. ஒரு புறநிலை வரலாற்று வழிவகையால் தோற்றுவிக்கப்படும் சமூகப் புரட்சிக்கான சடரீதியான திறனை ஒரு வர்க்க நனவாகவும், தன்னம்பிக்கை நிறைந்த அரசியல் இயக்கமாகவும் மாற்றுவதற்கு சோசலிச சமத்துவ கட்சி முயற்சிக்கிறது. உலக நிகழ்வுகளுக்கு வரலாற்று சடவாத பகுப்பாய்வு முறையை பிரயோகம் செய்து, சோசலிச சமத்துவக் கட்சி உலக முதலாளித்துவ நெருக்கடி உக்கிரமடைவதன் விளைவுகளை எதிர்பார்த்து அதற்காக தயாரிக்கிறது; நிகழ்வின் தர்க்கங்களை வெளிப்படுத்தி, --மூலோபாய ரீதியாகவும், தந்திரோபாய ரீதியாகவும்-- அதற்கு உரிய அரசியல் விடையிறுப்பை வடிவமைக்கிறது. சமூகத்தில் முற்போக்கான மற்றும் சோசலிச மாற்றம் என்பது அரசியல் ரீதியாக நனவுடைய தொழிலாள வர்க்கத்தின் பரந்தபோராட்டத்தின் மூலம்தான் சாதிக்கப்பட முடியும் என்று சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது. தனிப்பட்ட நபர்களின் நடவடிக்கைகள், வன்முறை போன்றவற்றில் ஈடுபடுவது, ஒருபோதும் தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த போராட்டத்திற்கு பதிலீடாக கருதப்பட முடியாது. நீண்ட அரசியல் அனுபவம் காட்டியிருப்பது போல், தனிநபர் வன்முறையானது, ஆத்திரமூட்டல்காரர்களின் நடவடிக்கையால் தூண்டிவிடப்படுகிறது; மற்றும் அரசுகளின் நோக்கங்களுக்கு சார்பாக செயலாற்றி அதில் சென்று தானே சிக்குகிறது.

30. அனைத்து சூழ்நிலையிலும் அடிப்படை புரட்சிகர சோசலிசக் கோட்பாட்டை சோசலிச சமத்துவக் கட்சி நிலைநிறுத்தும்: அதாவது தொழிலாள வர்க்கத்திடம் உண்மையையே கூறவேண்டும். கட்சியின் வேலைத்திட்டம் அரசியல் உண்மை பற்றிய ஒரு விஞ்ஞான ரீதியான, புறநிலை மதிப்பீட்டை கட்டாயம் அடித்தளமாக கொண்டிருக்க வேண்டும். சந்தர்ப்பவாதத்தின் இழிந்த வடிவம், தொழிலாளர்கள் உண்மையை ஏற்கத் தயாராக இல்லை என்பதால் தன்னை நியாயப்படுத்திக் கொள்ளும் விதத்தில், மார்க்சிஸ்ட்டுக்கள் வெகுஜனங்களுடைய தற்போதைய நனவின் மட்டத்தை புரிந்து கொண்டு --இன்னும் துல்லியமாக சந்தர்ப்பவாதிகள் கற்பனை என்று கருதுவதை-- தங்களின் புறப்பாட்டு புள்ளியாகக் கொண்டு தங்கள் திட்டத்தை வெகுஜனங்கள் மத்தியில் நிலவும் குழப்பங்கள் மற்றும் தப்பெண்ணங்கள் ஆகியவற்றிற்கு ஏற்ப இயற்ற வேண்டும் எனக் கூறுவர். இந்தக் கோழைத்தன அணுகுமுறை கோட்பாடு வழிப்பட்ட புரட்சிகர அரசியலுக்கு நேர்மாறானதாகும். "வேலைத்திட்டம் தொழிலாளர்களுடைய பின்தங்கியநிலையை காட்டிலும் தொழிலாளர்களின் புறநிலை பணிகளையே கட்டாயம் வெளிப்படுத்த வேண்டும். அது சமூகத்தை உள்ளது உள்ளவாறே பிரதிபலிக்க வேண்டுமே அன்றி, தொழிலாள வர்க்கத்தின் பின்தங்கிய நிலையை அல்ல. அது பின்தங்கிய நிலையை கடந்து, வெற்றி பெறுவதற்கான ஒரு கருவி ஆகும். எனவேதான் நாம் எமது வேலைத்திட்டத்தில் முதலில் அமெரிக்காவில் இருப்பது உட்பட, முதலாளித்துவ சமூகத்தின் முழு சமூக நெருக்கடியின் தீவிரம் பற்றியும் கட்டாயம் வெளிப்படுத்த வேண்டும்" என்று 1938ல் ட்ரொட்ஸ்கி அறிவித்தார். "கட்சியின் முதல் பொறுப்பு, இந்த நிலைமையில் இருந்து ஊற்றெடுக்கும் வரலாற்றுப் பணிகளை பற்றி, அதற்கு இன்றைய தொழிலாளர்கள் பக்குவப்பட்டு இருந்தாலும் இல்லாவிட்டாலும், புறநிலைமை பற்றிய ஒரு தெளிவான, நேர்மையான சித்திரத்தை கொடுப்பதாகும். எமது பணிகள் தொழிலாளர்கள் என்ன சிந்திக்கின்றார்கள் என்பதில் தங்கியிருப்பதில்லை. தொழிலாளர்களின் சிந்தனையை வளர்ப்பதுதான் எமது பணி. இதைத்தான் வேலைத்திட்டமானது வடிவமைத்து முன்னேறிய தொழிலாளர்களின் முன் வைக்க வேண்டும்." இச்சொற்கள் சோசலிச சமத்துவக் கட்சியால் எடுக்கப்படும் அணுகுமுறையை துல்லியமாக தெளிவுபடுத்துகின்றன.

தொழிற்சங்கங்களின் காட்டிக் கொடுப்பு

31. தொழிலாளர்களுக்கு உண்மையை கூற விரும்பாத சந்தர்ப்பவாதிகளின் கடும் வெறுப்பு உண்மையில், முதலாளித்துவ அமைப்புக்கு தொழிலாள வர்க்கத்தை தாழ்த்திவைப்பதை பராமரிக்கும் பழைய பிற்போக்கு, அதிகாரத்துவ மற்றும் முற்றிலும் பெருநிறுவன தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் அமைப்புக்கள் இவற்றின் பொறுப்பைப் பேணும் அதற்கு ஒரு அரசியல் மூடி மறைப்பை வழங்கும் அவர்களின் முயற்சியுடன் எப்பொழுதும் தொடர்புடையதாகும். சந்தர்ப்பவாதிகளின் இந்த அணுகுமுறைக்கு மாறான வகையில், சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கத்திடம் பழைய அமைப்பின் இயல்பு பற்றி, முக்கியமாக அமெரிக்காவில், தொழிலாளர்களை பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறும் அதன் தொழிற்சங்கங்களை புரிய வைக்க முயலவேண்டும். AFL-CIO மற்றும் அதன் போட்டிப் பிரிவான "Change to Win" கூட்டணியும், தொழிலாள வர்க்கத்தை பெருநிறுவனம் சுரண்டுவதற்கான வசதி ஏற்படுத்திக் கொடுப்பவராக தாங்கள் ஆற்றும் செயலூக்கமான மற்றும் நனவான பாத்திரத்திலிருந்து தங்களின் தனிநபர் வருமானத்தைப் பெறும் மத்தியதர வர்க்க வினையாளர்களின் கணிசமான அடுக்கால் கட்டுப்படுத்தப்பட்டு, அவர்களுடைய நலனுக்கே சேவை செய்கின்றன. கடந்த கால் நூற்றாண்டில், தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தங்களை முறியடித்தல், ஊதியங்களை குறைத்தல், நலன்களை அகற்றுதல், வேலைகளை குறைத்தல், ஆலைகளை மூடுதல் ஆகியவற்றில் முக்கிய பங்கை கொண்டன. இந்த வழிவகையில் உறுப்பினர்கள் இழப்பு இருந்தபோதிலும்கூட, தொழிற்சங்கங்களின் வருவாய் மற்றும் அதில் உள்ள செயலர்களின் ஊதியங்கள் தொடர்ந்து ஏற்றம்தான் பெற்று வந்துள்ளன. உறுப்பினர்களின் இடர்பாடுகளில் இருந்து ஒதுங்கிய வகையில், அதைப்பற்றி பொருட்படுத்தாமல் இருக்கும் நிலையில், "வரவேண்டிய பணம் வந்துவிடும்" என்ற விதத்தில் பாதுகாப்பு கொண்ட நிலையில், உறுப்பினர்கள் எதிர்ப்பில் இருந்து தொழிலாளர் சட்டத்தால் பாதுகாக்கப்பட்ட நிலையில், தொழிற்சங்கங்கள் பெருநிறுவனங்களுடனும், உளவுத்துறை அமைப்புக்கள் உட்பட முதலாளித்துவ அரசுடனும் ஆயிரம் இழைகளால் பிணைந்துள்ளன. தொழிலாள வர்க்கத்தை பிரதிநிதித்துவம் செய்யாத இந்த ஊழல் நலிந்த அமைப்புக்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்து அவற்றுடன் உடைத்துக் கொள்ள வேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுகிறது. இதன் பொருள் சோசலிச சமத்துவக் கட்சி அத்தகைய அமைப்பினுள் பணி செய்வதில் இருந்த விலகிக் கொள்கிறது என்பது அல்ல; முதலாளிகள் மற்றும் தொழிற்சங்க அலுவலர்கள் ஆகியோரால் கூட்டாக நசுக்கப்படும் தொழிலாளர்களுக்கு உதவவும் அவர்களை எளிதில் அணுகவும் தேவைப்படும் மட்டத்திற்கு அத்தகைய செயற்பாடு தேவைப்படும். ஆனால் அத்தகைய பணியை சோசலிச சமத்துவக் கட்சி ஒரு புரட்சிகர முன்னோக்கின் அடிப்படையில் செய்யும்; ஒவ்வொரு கட்டத்திலும் புதிய சுயாதீனமான அமைப்புக்களை, ஆலை, மற்றும் வேலைத்தளங்களில் ஆலைக்குழுக்கள் போன்றவற்றை நிறுவுதற்கு ஊக்கம் கொடுக்கும் -- அவைதான் உண்மையாய் அடிமட்ட உறுப்பினர்களுடைய நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் அவர்களின் ஜனநாயக கட்டுப்பாட்டிற்கு கீழ்ப்பட்டதாகவும் இருக்கும்.

அடையாள அரசியலுக்கு எதிராக வர்க்க ஐக்கியம்

32. தொழிலாள வர்க்கத்திடம் ஐக்கியத்திற்கான போராட்டத்தை கீழறுத்ததிலும் வர்க்க நனவைத் தாழ்த்தியதிலும் கணிசமான பங்கைக் கொண்ட மற்றொரு வகை சந்தர்ப்பவாதம், வர்க்க நிலைப்பாட்டிற்கு மேலாக தேசிய, இனம், மதம், நிறம் மொழி, பால் வேறுபாடுகளை உயர்த்துவதை அடிப்படையாகக் கொண்ட "அடையாள" அரசியலின் எண்ணிறைந்த வடிவங்களை முன்னிலைப்படுத்தியதாகும். வர்க்கத்தில் இருந்து அடையாளத்திற்கு மாறுதல் என்பது முதலாளித்துவ அமைப்பு முறையில் வேரூன்றி இருக்கும் உண்மையான காரணங்களை, அனைத்துத் தொழிலாளர்களையும் எதிர்கொள்ளும் இடர்பாடுகளை புரிந்துகொள்வதை பலியிட்டுவிடுகிறது. மிக மோசமான விதத்தில் அது கல்வி நிறுவங்கள், வேலைகள் இன்னும் பிற "வாய்ப்புக்கள்" கிடைப்பதற்கு போட்டியை ஏற்படுத்துகின்றன; ஒரு சோசலிச சமூகத்தில் அனைத்து மக்களுக்கும் தடையின்றிக் கிடைக்கும்; எந்தவித இழிவு, மனிதத் தன்மை குறைதல், ஒருதலைப்பட்ச வேறுபாடுகளும் இருக்காது. உடன்பாட்டு நடவடிக்கைத் திட்டங்கள் பெரும்பாலும் ஒப்புமையில் ஒரு சிறிய மத்தியதர வர்க்க அடுக்கிற்குத்தான் நலன்களை கொடுத்துள்ளன. சட்டபூர்வ, சமூக சமத்துவத்திற்கான கோரிக்கை, 1950, 1960 களில் ஆபிரிக்க- அமெரிக்க வெகுஜனங்களிடையே சிவில் உரிமைகள் இயக்கத்தை ஆதிக்கத்திற்கு கொண்டு வந்திருந்தது; பின்னர் இது அரசியல் கவனக்குவிப்பில் வர்க்க நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டதால் கீழறுக்கப்பட்டது; இது பரந்த வறுமைக்கு எதிரான போராட்டத்திற்கு பதிலாக ஒரு சிலருக்கு சலுகைகள் முறை என்பதை பதிலீடாக்கியது. நிலைப்பாட்டில் கொண்ட இந்த மாற்றம் ஜனநாயகக் கட்சியினாலும் குட்டி முதலாளித்துவ அடையாள அரசியலின் ஆதரவாளர்கள் மத்தியில் உள்ள அதன் நட்பு சக்திகளாலும் வளர்க்கப்பட்டது. இது பரந்த சிறுபான்மை தொழிலாள வர்க்கத்திடம் பேரழிவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து மக்களுக்கும் முழு சமத்துவம் வேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி கோருகிறது மேலும் சற்றும் தளராத முறையில் அனைவருக்கும் ஜனநாயக உரிமைகள் வேண்டும் என்றும் கோருகிறது. தேசிய, இன, மத அல்லது மொழி, மரபு அல்லது பால் சார்பை ஒட்டிய அனைத்துவித வேறுபாடுகளும் அகற்றப்பட வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சி அதன் வேலைத்திட்டத்தின் இந்த அடிப்படை ஜனநாயகக் கூறுபாட்டை தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பகுதியினரையும் அரசியல் ரீதியாய் ஐக்கியப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்ட ஒரு சோசலிசத்திற்கான போராட்டத்தின் உள்ளடக்கத்தற்குள்ளே முன்னெடுக்கிறது.

புலம்பெயர்ந்தோர்கள் மற்றும் அமெரிக்கப் பழங்குடி மக்கள் ஆகியோரின் உரிமைகளுக்காக

33. இந்த ஐக்கியத்தை காய்ச்சி அடித்து வடிவமைப்பதற்கான இன்றியமையாத முன்நிபந்தனை அமெரிக்காவில் வசிக்கும் புலம்பெயர்ந்தோர்களின் ஜனநாயக உரிமைகளை நிபந்தனையற்ற முறையில் பாதுகாப்பது ஆகும். சோசலிச சமத்துவக் கட்சி ஒவ்வொரு நாட்டின் தொழிலாளர்களும் அவர்கள் விரும்புமிடத்திற்கு சென்று வசிக்கலாம், உழைக்கலாம் என்னும் நிபந்தனையற்ற உரிமைக்கு நிலையான ஆதரவைக் கொடுக்கிறது. அனைத்து புலம்பெயர்ந்தவர்களுக்கும், ஆவணமற்ற அல்லது "சட்ட விரோதம்" எனக் கூறப்படும் 12 மில்லியன் அல்லது அதற்கும் அதிகமானவர்கள் உட்பட, முழு ஜனநாயக உரிமைகள் கொடுக்கப்பட வேண்டும். மேலும், சோசலிச சமத்துவக் கட்சி அமெரிக்க பழங்குடி மக்கள் பற்றி சிறப்பு அக்கறை கொண்டுள்ளது; அவர்களின் வருந்தத்தக்க நிலைமை கண்டத்தில் அமெரிக்க முதலாளித்துவத்தின் குருதி தோய்ந்த வகையிலான அதிகாரக் கைப்பற்றலால் ஏற்பட்டதாகும். வட அமெரிக்க கண்டத்தில் ஏற்கனவே வசித்து வந்த மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களின் பாரதூர விளைவுதரும் தாக்கங்களை தட்டிக் கழிக்கும் அமெரிக்க ஜனநாயகம் பற்றிய மதிப்பீடுகள் முற்றிலும் பாசாங்கான முறையில் வைக்கப்படுகின்றன. இந்தக் குற்றங்களின் சமூக விளைவுகள் --தீவிர வறுமை, தேசிய சராசரியை விட ஆயுட்காலம் 20 ஆண்டுகள் குறைவு என்ற நிலை, போதுமான வீடுகள் இல்லாத நிலைமை, அரசாங்க நிறுவனங்களால் அமெரிக்க பழங்குடி மக்களின் ஒதுக்கீடு மற்றும் சமூக தேவைகள் பொதுவாக புறக்கணிக்கப்படல் என்பது-- இன்றளவும் தொடர்கிறது.

பாதுகாப்புவாதம் மற்றும் "தடையற்ற வணிகத்திற்கு" எதிராக சோசலிச கொள்கைகள்

34. தேசிய வெறியர்களால் முன்வைக்கப்படும் கூற்று, ஒரேசீராய் தொழிற்சங்கங்களால் ஒப்புதல் கொடுக்கப்படுவது, அமெரிக்காவிற்குள் வேலை இழப்புக்கள் என்பது பாதுகாப்பு முறையில் உள்ளது எனப்படுவது தவறானது ஆகும். நடைமுறையில் இனி, பூகோளமயமாக்கல் காலத்தில் இருந்து பழைய முறையான பொருளாதார தேசியவாதத்திற்கு செல்ல முடியாது. அதே நேரத்தில் "தடையற்ற வணிகம்" என்று உரத்த குரலில் நாடுகடந்த ஏகபோக உரிமை நிறுவனங்கள் கூறுவது எப்படி அவர்கள் "சுதந்திரம்" பற்றி புகழாரம் சூட்டுகின்றனரோ அதே போன்ற மோசடித்தனந்தான் இதுவும். சோசலிச சமத்துவக் கட்சி பாதுகாப்பு வாதத்தையோ, "தடையற்ற வணிகத்தையோ" ஆதரிக்கவில்லை, ஆனால் அதற்குப் பதிலாக உற்பத்தி சக்திகளின் சமூக உடைமைக்காக, தேசிய எல்லைகள் அகற்றப்பட மற்றும், திட்டமிட்ட, அறிவார்ந்த முறையில் ஒருங்கிணைக்கப்பட்ட உலகப் பொருளாதாரத்தை உருவாக்க போராடுகிறது. அந்த இலக்கை அடைவதற்காக சோசலிச சமத்துவக் கட்சியினால் முன்வக்கப்படும் முக்கிய அடி எடுத்து வைப்பு, தன்னிச்சையான அடிப்படையில் வடக்கு, மத்திய மற்றும் தென்னமெரிக்க ஐக்கிய சோசலிசக் கூட்டமைப்பை நிறுவுதலாக இருக்கும்.

ஜனநாயக மத்தியத்துவம்

35. தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டத்திற்கு அமைப்பு தேவைப்படுகிறது; கட்டுப்பாடு இல்லாமல் அமைப்பானது இயங்காது. புரட்சிகர போராட்டத்திற்குத் தேவையான கட்டுப்பாடு மேலிருந்து அதிகாரத்துவ முறையில் திணிக்கப்பட முடியாது. அது கோட்பாடுகள் மற்றும் வேலைத் திட்டம் மீதாக, உடன்பாட்டு அடிப்படையில் கட்டாயம் வளரவேண்டும்; இந்த நம்பிக்கைதான் சோசலிச சமத்துவக் கட்சியின் அமைப்பு ரீதியான கட்டமைப்பில் வெளிப்பாட்டை கொண்டுள்ளது; இது ஜனநாயக மத்தியத்துவம் என்ற கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டது. இக்கொள்கையை இயற்றுதல், தக்க தந்திரோபாயங்களை கொள்ளுதல் ஆகியவற்றிற்கு கட்சிக்குள் முழுமையான ஜனநாயகம் செயல்பட வேண்டும். கட்சியின் அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ளதை தவிர வேறு எந்த தடைகளும் SEP யின் கொள்கைகள் செயல்கள் இவற்றில் வைக்கப்படவில்லை. தலைவர்கள் ஜனநாயக முறைப்படி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்; விமர்சனம், கட்டுப்பாடு ஆகியவற்றிற்கு கீழ்ப்படுகின்றனர். விமர்சனத்தை பொறுத்துக்கொள்ள முடியாத தலைமைக்கு விரும்பும் வேட்பாளர்கள் அமெரிக்காவில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் நிறுவனரான ஜேம்ஸ் பி. கனனுடைய சொற்களை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். "உண்மை எவரையும் வருத்தப்படுத்தாது, ஒருவருக்கு அந்த மட்டத்திற்கு வழங்கப்பட்டால்." ஆனால் கொள்கை இயற்றுவதற்கு மிகப் பரந்த விவாதம், வெளிப்படையான, நேர்மையான விமர்சனம் தேவை என்றால், அதை அமல்படுத்துவதற்கு மிகக் கடினமான கட்டுப்பாடு தேவையாகும், கட்சிக்குள் ஜனநாயக ரீதியாக எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்து உறுப்பினர்களையும் கட்டுப்படுத்தும். இந்த மத்தியத்துவம், முடிவுகளை செயல்படுத்துவதில் அடிப்படைக் கூறுபாட்டை எதிர்ப்பவர்கள், அதை தங்கள் சுதந்திரத்தை மீறுதல் என்று கருதுபவர்கள் புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் அல்லர், வர்க்கப் போராட்டத்தின் தேவைகள் மற்றும் தாக்கங்கள் இவற்றை அறிந்து கொள்ளாத அராஜகவாத தனிநபர்வாதிகள் ஆவர்.

வர்க்க நனவு, பண்பாடு, மற்றும் உலக சோசலிச வலைத் தளம்

36. சோசலிசத்திற்கான போராட்டமானது அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில், தொழிலாளர் இயக்கத்தின் அரசியல், புத்திஜீவித மற்றும் பண்பாட்டு உயர்வில் மகத்தான வளர்ச்சியை கோருகிறது. நடைமுறைவாத மற்றும் சந்தர்ப்பவாத அரசியலை நடத்துபவர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட வகையில், மிக உயர்ந்த தத்துவார்த்த மட்டத்தில் செயல்படும் இயக்கம் ஒன்றுதான் தொழிலாள வர்க்கத்தை தன் பதாகையின்கீழ் ஈர்க்கக் கூடியதாகவும், முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தயார் செய்யக் கூடியதாகவும், அதற்கும் அப்பால் ஒரு சோசலிச சமூகத்தை கட்டியமைக்க கூடியதாகவும் திறன் உடையது என்பதை நிரூபிக்கும் என்பதில் சோசலிச சமத்துவக் கட்சி முழு நம்பிக்கை கொண்டுள்ளது. முதலாளித்துவ அரசியல்வாதிகள் தொழிலாள வர்க்கத்தை தங்கள் இழிந்த அறிவுத்தரத்தற்கு கீழிறக்க முயல்கையில், சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கத்தை அதன் வரலாற்று பணிகளுக்கு தேவையான உயர்ந்த தரத்திற்கு எழுப்ப விழைகிறது. அரசியலில் மட்டும் இல்லாமல் அறிவியல், வரலாறு, தத்துவம், இலக்கியம், திரைப்படங்கள், இசை, நுண்கலைகள் இன்னும் பண்பாட்டுக் கூறுபாடுகளின் அனைத்துப் பிரிவுகளும் சோசலிசக் கல்வி முறையில் அடங்கும். தொழிலாள வர்க்கத்தினுள்ளே சோசலிச நனவை வளர்ப்பதற்கு சோசலிச சமத்துவ கட்சியின் மிக முக்கியமான கருவி உலக சோசலிச வலைத் தளம் [www.wsws.org] ஆகும். உலக அரசியல், பொருளாதார நிகழ்வுகளை அன்றாடம் பகுப்பாய்வு செய்யும் வகையில், முதலாளித்துவத்தின் சமூக உண்மைகளை அம்பலப்படுத்தப்படும் விதத்தில், தொழிலாளர் போராட்டங்களை பற்றித் தகவல் கொடுக்கும் விதத்தில், பண்பாடு பற்றிய முக்கிய பிரச்சினைகளில் கருத்துக் கூறும் வகையில் வரலாற்று, தத்துவக் கருத்துக்களை ஆராயும் நோக்கத்தில், புரட்சிகர மூலோபாயம், தந்திரோபாயங்கள், நடைமுறை ஆகியவற்றை ஆய்வதில், தற்கால உலக மார்க்சிச இயக்கத்தில் WSWS ஒரு முக்கியமான பங்கை ஆற்றுகிறது.

புரட்சிகர மூலோபாயம் மற்றும் இடைமருவுக் கோரிக்கைகள்

37. நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவுடன் அரசியல் ஐக்கியம் கொண்ட, சோசலிச சமத்துவக் கட்சியின் மூலோபாய இலக்கு, தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவத்திற்கு எதிரான புரட்சிகர போராட்டத்திற்காக, தொழிலாளர் அதிகாரத்தை நிறுவுவது மற்றும் சோசலிச சமுதாயத்தை தோற்றுவிப்பது இவற்றுக்காக கல்வியூடுவது மற்றும் தயாரிப்பது ஆகும். எமது நோக்கம் முதலாளித்துவத்தை சீர்திருத்துவது அல்ல; அதைத் தூக்கி எறிவதாகும். இந்த இலக்கை அடைவதற்கு தொழிலாளர்களின் பரந்த தொகுப்பின் வாழ்க்கை நிலைமை பற்றி மிகக் கவனமான, விரிவான கவனிப்புடன் ஆராயப்பட்டு அத்தேவைகளை தீர்க்கும் கோரிக்கைகளை வடிவமைப்பதும் ஆகும். நடைமுறையில் சோசலிசப் புரட்சி முன்னோக்கிற்கும் தொழிலாள வர்க்கம் ஸ்தூலமாக ஈடுபட்டிருக்கும் போராட்டங்களுக்கும் இடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்துவதின் தேவையை சோசலிச சமத்துவக் கட்சி கண்டுணர்கிறது. இந்த முயற்சியில் சோசலிச சமத்துவக் கட்சியின் பணி இடைமருவு வேலைத்திட்டத்தில் லியோன் ட்ரொட்ஸ்கியினால் வாதிடப்பட்ட அணுகுமுறையினால் வழிகாட்டப்படுகிறது: "அன்றாட போராட்ட நிகழ்வுப் போக்கில் மக்களுக்கு உதவும் வகையில் தற்போதைய கோரிக்கைகளுக்கும் புரட்சியின் சோசலிச வேலைத்திட்டத்திற்கும் இடையே ஒரு பாலத்தைக் காண உதவ வேண்டும். இந்தப் பாலமானது, இன்றைய நிலைமையில் இருந்தும் தொழிலாள வர்க்கத்தின் பரந்த அடுக்குகளின் இன்றைய நனவில் இருந்தும் கிளைத்தெழும் இடைமருவுக் கோரிக்கைகளின் முறையை உட்கொண்டிருக்க வேண்டும், தவறுக்கு இடம் இல்லாமல் ஒரு இறுதி முடிவுக்கு இட்டுச்செல்லும்: அதாவது, பாட்டாளி வர்க்கத்தால் அதிகாரம் வெற்றி கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு இட்டுச்செல்லும்."

38. இத்தகைய கோரிக்கைகளில், அனைவருக்கும் வேலை, தடையற்ற முறையில் அனைவருக்கும் தரமான மருத்துவப்பாதுகாப்பு, கல்வி, கௌரவமான வீடுகள், பணம் கட்டத்தவறியதால் கட்டாய ஏலத்திற்கு விடுவதை இரத்துசெய்தல் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படுதல் நிறுத்தப்படுதல், பணவீக்கத்திற்கு ஏற்ப இயல்பாகவே ஊதியம் சமன் செய்யப்படல், பணி இடத்தில் ஜனநாயக செயற்பாடு, பெருநிறுவனம் மற்றும் நிதிய அமைப்புக்களின் கணக்குகளை தடையற்ற முறையில் பொதுமக்கள் ஆய்வு செய்தல், நிர்வாகிகளின் ஊதியங்களில் தடைகள் கொண்டுவருதல், ஊதிய இழப்பு இன்றி பணி நேரத்தைக் குறைத்தல், உண்மையான அதிக ஊதியத்திற்கு அதிக வரிவிதிப்பு, பெரும் தனியார் சொத்து மரபுரிமையாய் மாற்றப்படுதலுக்கு தடை, தேசிய, உலகப் பொருளாதாரத்திற்கு முக்கியமான பெரு நிறுவனங்களை தேசியமயமாக்கல், தொழிலாளர்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருதல், தேசிய "தன்னார்வ" இராணுவத்தை கலைத்தல், தொழிலாள வர்க்கத்தாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளாலும் கட்டுப்படுத்தப்படும் மக்கள் குடிப்படை தொகுப்பிற்கு அதிகாரத்தை மாற்றுதல், இன்னும் ஜனநாயக முறையிலும் சமூக நன்மை கொடுக்கும் அளவிலும் இருக்கும் ஏனைய கோரிக்கைகளும் உள்ளடங்கும்.

39. சோசலிச நனவை வளர்க்கும் பரந்த பிரச்சாரத்தில் அவற்றின் பங்கைக் கொண்டிருக்கும் விதத்தில் இடைமருவுக் கோரிக்கைகள் தொழிலாள வர்க்கத்தை அரசியலில் திரட்டுவதில் முக்கிய பங்கினை கொள்ளும். இடைமருவு வேலைத்திட்டம் தக்க அரசியல் பின்னணி அல்லது பரந்த அரசியல் இலக்குகள் பற்றிய குறிப்பைக் கவனியாமல் தன்னிச்சையாக கோரிக்கைகளை தேவையானவற்றை எடுத்துக் கொள்ளுகின்ற நவீன பட்டியல் அல்ல. சோசலிசத்திற்கு ஒரு பாலம் போல் இடைமருவு வேலைத் திட்டம் உதவ வேண்டும் என்றால், இறுதி இலக்கு என்பது தொழிலாள வர்க்கத்திடம் இருந்து இரகசியமாக வைக்கப்படக்கூடாது. (தொழிலாள வர்க்கமும் சோசலிசப் புரட்சியும்)

40. சோசலிச சமத்துவக் கட்சியின் பணி தொழிலாள வர்க்கத்தின் பங்கு மற்றும் வருங்காலம் இவை பற்றிய கருத்துக்களில் அசைக்க முடியாத நம்பிக்கையை தன்னகத்தே கொண்டு, முன்னேற்றகரமான விஞ்ஞான தத்துவம் மற்றும் செழிப்பு மிக்க வரலாற்று அனுபவத்தில் தோய்ந்து பரவி இருக்கிறது. ஆனால் சோசலிசப் புரட்சியின் வெற்றி என்பது தொழிலாளர்களின் நனவான போராட்டத்தில்தான் தங்கியுள்ளது. தொழிலாள வர்க்கத்தின் விடுதலை என்பது, இறுதிப் பகுப்பாய்வில், தொழிலாள வர்க்கத்தின் பணியேதான். ஏங்கெல்ஸ் நன்கு கூறியுள்ளது போல், "சமூக அமைப்பை முழு மாற்றத்திற்கு உட்படுத்த வேண்டும் என்ற வினா வரும்போது, மக்களேதான் அதை செய்யவேண்டும், மக்களேதான் எது ஆபத்திற்குட்பட்டது என்பதை அறியவேண்டும், எதற்காக போராடுகிறோம் என்பதை உடலளவிலும் உள்ளத்தளவிலும் முழுமையாக அறிய வேண்டும்." இவ்விதத்தில் சோசலிசம் என்பது தொழிலாளர்களே அதை விரும்பும்போதுதான் நிறுவப்பட முடியும்; மற்றும், மறுதலையாக, நெருக்கடியில் பீடித்துள்ள முதலாளித்துவத்தின் அதிர்ச்சிக்குக் கீழே அந்த முடிவு எடுக்கப்படும்போது, உலக சோசலிச புரட்சியின் முன்னணிப்படையில் தங்கள் இடத்தை எடுப்பதில் இருந்து அமெரிக்க தொழிலாளர்களை உலகில் எந்த சக்தியும் தடுத்து நிறுத்த முடியாது.

Loading