ஜேர்மன் அக்டோபர்: 1923 இல் கைதவறவிடப்பட்ட புரட்சி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

1923ல் ஜேர்மனியில் புரட்சிக்கு தேவையான மிக மிகச் சாதகமான சூழ்நிலை உருவானது. ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி (Kommunistische Partei Deutschlands - KPD) கம்யூனிச அகிலத்துடன் (Comintern) நெருக்கமாக ஒத்துழைத்து ஒரு கிளர்ச்சிக்கு திட்டமிட்ட பின்னர் அக்டோபர் 21 இல் கடைசி நிமிடத்தில் அதை இரத்து செய்தது. “உலகளாவிய-வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மிகச் சிறப்பான விதிவிலக்கான ஒரு புரட்சிகர சூழ்நிலையை தவற விடுவது எப்படி என்பதற்கான மிகச் சிறப்பான எடுத்துக்காட்டாக இதை எடுத்துக் கொள்ளலாம்” என்று பின்னர் ட்ரொட்ஸ்கி கூறினார்.

1923 ஜேர்மன் தோல்வி நீண்டகால தாக்கங்களை கொண்டிருந்தது. அது ஜேர்மன் முதலாளித்துவம் தனது ஆட்சியை பலப்படுத்தி அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு நிலைமையை ஸ்திரப்படுத்திக் கொள்ள வாய்ப்பளித்தது. அடுத்த முக்கிய நெருக்கடி 1929 இல் வெடித்தபோது, KPD இன் ஸ்ராலினிச தலைமையால் தொழிலாள வர்க்கம் முற்றிலும் நோக்குநிலை தவறச் செய்யப்பட்டது. இது நேரடியாக துன்பகரமான நிகழ்வுகளுக்கு வழிவகுத்து இறுதியில் ஹிட்லர் ஆட்சிக்கு வருவதில் முடிவடைந்தது. உலகளாவியளவில் ஜேர்மன் அக்டோபரின் தோல்வி, சோவியத் ஒன்றியத்தை தனிமைப்படுத்தியதோடு இவ்வாறாக எழுச்சியடைந்துகொண்டிருந்த ஸ்ராலினிச அதிகாரத்துவத்தை பலப்படுத்துவதற்கு முக்கியமான உளவியல் மற்றும் சடரீதியான காரணியைக் கொண்டிருந்தது.

இன்றைய விரிவுரை, ஜேர்மன் அக்டோபரில் உள்ள மூலோபாய மற்றும் தந்திரோபாய பாடங்களில் கவனம் செலுத்தும்; அந்த பாடங்கள், விரைவிலேயே இடது எதிர்ப்புக்கும் ஸ்ராலின், சினோவியேவ், காமனேவ் தலைமையிலான முக்கூட்டுக்கும் (Troika) இடையே சர்ச்சைக்குரிய சூடான விவாதப் பொருளாகிவிட்டது. இந்த விவகாரங்களை கையாளுவதற்கு முன்பு, 1923 நிகழ்வுகள் குறித்து ஒரு கவனமான கணக்கெடுப்பைச் செய்யவேண்டியது அவசிமாகும்.

1923 ல் ஜேர்மனி

1914 இல் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தை முதல் உலகப்போருக்கு தள்ளிய அனைத்து அடிப்படை பிரச்சினைகளான அதன் சக்திவாய்ந்த தொழில்துறைக்காக சந்தைகளையும் மூலப்பொருட்களையும் பெறுதல், அதன் மேலாதிக்கத்தின் கீழ் ஐரோப்பாவை மறு ஒழுங்கு செய்தல் ஆகியவை 1923ல் தொடர்ந்து தீர்க்கப்படாமலே இருந்தன. மிகப் பெரிய மனித உயிர்சேதம் மற்றும் பொருட் சேதத்துடன், வேர்சாய் உடன்படிக்கையின்படி ஜேர்மனி தன்னுடைய பிரதான எதிரியான பிரான்சுக்கும் மற்ற ஏகாதிபத்திய சக்திகளுக்கும் யுத்தஇழப்பீடு கொடுக்க வேண்டியிருந்தது.

போருக்குப் பிந்தைய அடுத்துவந்த 1918 இருந்து 1921 வரையிலான ஆண்டுகளில் தொடர்ச்சியாக வந்த புரட்சிகர எழுச்சிகளை சமூக ஜனநாயகம் மற்றும் வலதுசாரி இராணுவப் படைகளின் கூட்டு முயற்சியால் மட்டுமே அடக்கக்கூடியதாக இருந்தது. ஜனவரி 11, 1923 அன்று, பிரெஞ்சு மற்றும் பெல்ஜிய துருப்புக்கள் ரூஹர் (Ruhr) பிராந்தியத்தை ஆக்கிரமித்து ஜேர்மனியில் அரசியல் மற்றும் சமூக நெருக்கடியை மீண்டும் எரியூட்டின.

ஜேர்மனி யுத்த இழப்பீட்டை செலுத்தவில்லை என்றும் அதன் கடமைகளை நிறைவேற்றவில்லை என்பதாலும்தான், ஜேர்மனியின் எஃகு மற்றும் நிலக்கரி தொழில்துறையின் இதயப் பகுதியில் தன்னுடைய இராணுவ ஆக்கிரமிப்பை நிலைக்கச் செய்ததாக பிரான்ஸ் அரசாங்கம் நியாயப்படுத்தியது. ஒரு தீவிர வலதுசாரி தொழிலதிபர் வில்ஹெல்ம் கூனோ (Wilhelm Cuno) தலைமையிலான ஜேர்மன் அரசாங்கம், ஒரு செயலற்ற எதிர்ப்பிற்கு (passive resistance) அழைப்பு விடுத்ததன் மூலம் தன்னுடைய எதிர்ப்பினை வெளிப்படுத்தியது. இதனை சமூக ஜனநாயகக் கட்சி (Sozialdemokratische Partei Deutschlands - SPD) சகித்துக் கொண்டது. நடைமுறையில், இதன் அர்த்தம், ரூஹரில் உள்ள உள்ளூர் அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு படைகளைப் புறக்கணித்தனர். அரசாங்கம், உள்ளூர் நிர்வாகத்திற்கு தொடர்ந்து ஊதியம் வழங்கியது மற்றும் அதன் இழப்புக்களை ஈடுசெய்ய நிலக்கரி மற்றும் எஃகு பெருமுதலாளிகளுக்கு மானியங்களை வழங்கியது.

இந்த பெருமளவிலான செலவினங்கள் மற்றும் ரூஹரிலிருந்து அவசர தேவையாக நிலக்கரி மற்றும் எஃகு இல்லாததன் விளைவாக ஜேர்மன் நாணயம் முழுமையாக வீழ்ச்சியடைந்தது. ஏற்கனவே உயர் பணவீக்கத்தில் இருந்த ஜேர்மன் நாணயமான மார்க், வருடத்தின் ஆரம்பத்தில் 1 அமெரிக்க டாலருக்கு 21,000 மதிப்புகளாக வர்த்தகத்தை கொண்டிருந்தது. ஆண்டின் இறுதியில், பணவீக்கம் உச்சத்தை அடைந்தபோது, ஜேர்மன் பணத்தின் மதிப்பு ஒரு டாலர் கிட்டத்தட்ட 6 ட்ரில்லியன் —அதாவது பன்னிரண்டு பூஜ்யங்களால் ஆன எண்ணிக்கை கொண்ட ஒரு எண்ணாக இருந்தது.

இந்த அதிகமான பணவீக்கம் அதாவது அதிபணவீக்க (hyperinflation) தாக்கம் சமூக மற்றும் அரசியல் துறையில் மிகப் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது. அது முன்னெப்போதும் இல்லாத வழியில் ஜேர்மன் சமூகத்தினை துருவமுனைப்படுத்தியது. தொழிலாளர்களுக்கு பணவீக்கம் அவர்கள் வாழ்க்கையையே அச்சுறுத்துத்துவதாக இருந்தது. அந்த வார முடிவில் தொழிலாளர்கள் தம் ஊதியங்களை பெற்றபோது, அவர்கள் வாங்கிய காகிதத் தாளில் அச்சடிக்கப்பட்டுள்ள ஏராளமான நிதிக்கும் அதன் உண்மையான மதிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது கண்டறியப்பட்டது. தொழிலாளர்கள் தங்கள் ஊதியத்தை பெற்ற மறுநாளே அதன் மதிப்பு இழந்து விடுமோ என்ற பயத்தில் தொழிலாளர்களின் மனைவிமார்கள் மாலை தொழிற்சாலை வாயிலில் காத்திருந்து அடுத்த கடைக்கு விரைந்து சென்று ஏதாவது வாங்க முயன்றனர்.

ஒரு உதாரணம் பார்ப்போம்: ஒரு முட்டை பிப்ரவரி 3 ஆம் தேதி 300 மார்க்குகளுக்கு விற்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஆகஸ்ட் 5 இல் 12,000 மார்க்குகளும் மற்றும் மூன்று நாட்கள் கழித்து அது இன்னும் அதிகமாகி பின்னர் 30,000 மார்க்குகளாகிவிடும். ஊதியங்கள் பணவீக்கத்திற்கு ஏற்ற வகையில் வழங்கப்பட்டன என்றாலும், டாலர் மதிப்பில் சராசரியாக ஊதியம் ஆறு மாத காலத்தில் 50 சதவீதம் சரிந்தது. அதே நேரத்தில், வேலையற்றோரின் எண்ணிக்கை மிக மிக அதிகமானது. ஆண்டின் ஆரம்பத்தில் 100,000 ஆக இருந்த வேலையற்றவர்களின் எண்ணிக்கை ஆண்டின் இறுதியில் 3.5 மில்லியன் வேலையற்றவர்களாகவும் மற்றும் 2.3 மில்லியன் குறுகிய நேர வேலை தொழிலாளர்களாகவும் அதிகரித்தது.

ஆனால் இந்த அதீத பணவீக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தொழிலாளர்கள் மட்டுமே அல்ல. ஓய்வூதியத்தை நம்பி வாழ்பவர்களுக்கு வாழ்வதற்கான அனைத்து வழிகளும் நின்று போயின. பணத்தை சேமித்து வைத்தவர்கள் ஒரே இரவில் எல்லாவற்றையும் இழந்தார்கள். உயிர்வாழ்வதற்காக அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சேமித்து வைத்திருந்த வீடு, நகைகள் மற்றும் எல்லாவற்றையும் விற்க வேண்டியிருந்தது. ஆனால் அப்படி விற்று ஈட்டிய வருவாய் அடுத்த நாளே பயனற்றதாக ஆனது.

1928 இல் வைமார் குடியரசின் முதல் உத்தியோகபூர்வ வரலாற்றை எழுதிய ஆர்த்துர் ரோசென்பேர்க் (Arthur Rosenberg), கூறுகிறார்: "ஜேர்மன் நடுத்தர வர்க்கங்களிடமிருந்து தொடர்ந்து திட்டமிட்டு சொத்துக்களை கையகப்படுத்தியது என்பது சோசலிச அரசினால் அல்ல தனிச்சொத்துடமையை காப்பாற்ற தன்னை அர்ப்பணித்துள்ள ஒரு முதலாளித்துவ அரசே இப்படி செய்தது என்பது உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய கொள்ளையாகக் கருதப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார். [2]

சமூக இடைவெளியின் மறுபுறத்தில் பணவீக்கத்தினை பயன்படுத்தி பங்கு வர்த்தகத்தில் இருப்பவர்கள், முதலாளிகள் மற்றும் தொழில்முனைவோர்கள் நிறைய பணம் சம்பாதித்தனர். எவரிடமாவது வெளிநாட்டு நாணயம் அல்லது தங்கம் கிடைத்தால் குறைந்த ஊதியம் காரணமாக வெளிநாட்டிற்கு ஜேர்மன் பொருட்களை ஏற்றுமதி செய்து அவரால் மிகப் பெரிய இலாபங்களை சம்பாதிக்க முடிந்தது. இந்த சக்திகள்தான் கூனோ அரசாங்கத்தின் பின்னணியில் இருந்தன. அவர்களில் குறிப்பிடத்தக்கவர், பிரபலமான 1,300 தொழிற்சாலைகளை வாங்கி இந்த காலகட்டத்தில் மிகப் பெரிய பில்லியனராக ஆன ஹூகோ ஸ்டின்னெஸ் (Hugo Stinnes), என்பவரை சொல்லலாம். அவர் திரைக்கு பின்னாலிருந்து அரசியல் காய்களை நகர்த்தும் பெரும் புள்ளியாக இருந்தார்.

சமூகத் துருவமுனைப்படல் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் சரிவு ஒரு கூர்மையான அரசியல் துருவமுனைப்படலை உருவாக்கியது.

சமூக ஜனநாயகக் கட்சி வேகமாக உறுப்பினர்கள் மற்றும் வாக்காளர்கள் இருவரையும் இழந்தது, மற்றும் சிதைந்தது. 1918 நவம்பர் புரட்சி மூலம் கைசர் தூக்கியெறியப்பட்டதில் இருந்து SPD ஜேர்மனியில் முதலாளித்துவ ஆட்சியின் முக்கிய தூணாக இருந்தது. அது, 1918 இல் பாட்டாளி வர்க்கப் புரட்சியை அடக்கியதோடு அதன் மிக சிறந்த தலைவர்கள் ரோசா லுக்செம்பேர்க் மற்றும் கார்ல் லீப்க்நெக்ட்டை படுகொலை செய்ய இராணுவ உயர் ஆணையம் மற்றும் வலதுசாரி இராணுவ துணைப்படையினர் (Freikorps) உடன் தன்னை இணைத்துக் கொண்டது.

ஜேர்மனியில் வைமார் குடியரசை எந்த நிபந்தனையுமின்றி பாதுகாத்த ஒரே கட்சி SPD ஆகும். பிற முதலாளித்துவ கட்சிகள் அனைத்தும் இன்னும் சர்வாதிகார வடிவம் நிறைந்த ஆட்சியையே விரும்பியது. ஃப்ரீட்ரிக் ஈபேர்ட் (Friedrich Ebert) என்ற சமூக ஜனநாயகக் கட்சி தலைவர் வைமார் குடியரசின் முதல் தலைவராக இருந்தார். அவர் ஜனாதிபதி பதவியை தனது மரணம் அதாவது பிப்ரவரி 1925, வரை தக்கவைத்துக் கொண்டார் -அதாவது இந்த விரிவுரை கையாளும் முழு காலத்திலும் அவர்தான் ஜனாதிபதியாக இருந்தார்.

SPD இன் எதிர்புரட்சிகரப் பாத்திரம் பல தொழிலாளர்களை கோபமடைய வைத்து அவர்களை KPD க்கு சார்பாக கொண்டு வந்தது. ஆனால் 1923 தொடக்கத்தில், தொழிற்சங்கங்களும் மற்றும் மேலும் பழமைவாத தொழிலாளர்கள் அடுக்குகளும் இன்னும் SPD க்கு ஆதரவளித்தன. பணவீக்கத்தின் தாக்கத்தினால், இந்த மாற்றம் துரிதமாய் ஏற்பட்டது.

KPD இன் முன்னணி உறுப்பினரான வரலாற்றாசிரியர் ரோசென்பேர்க், 1923 ல் (பின்னாளில் அவரும் SPD யில் சேர்ந்தார்), எழுதுகிறார்: "1923 களில் SPD தொடர்ச்சியாக வலிமை இழந்தது... எப்பொழுதும் SPD யின் முக்கிய தூணாக இருந்த குறிப்பாக தொழிற்சங்கங்களின் செல்வாக்கு முழுவதும் சிதைந்து கொண்டிருந்தது.... ஜேர்மனியின் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் இனி பழைய தொழிற்சங்க தந்திரோபாயங்கள் பற்றி எதுவும் கேட்க விரும்பாமல் தொழிற்சங்கங்களை விட்டு விலகினார்கள்... தொழிற்சங்கங்களின் சிதைவும் SPD யின் முடக்கமும் ஒரு உடன் ஒத்த நிகழ்வாக இருந்தது."[3]

SPD சிதைந்ததும், சமூக ஜனநாயக தொழிலாளர்கள், கம்யூனிஸ்டுகள் கூற வந்ததை கவனமாக கேட்டனர். SPD க்குள் ஒரு இடது கன்னை வளர்ந்து அது KPD யுடன் இணைந்து செயல்படத் தயாராக இருந்தது. நாம் பார்க்கப் போவதுபோல் இடது SPD மற்றும் KPD கூட்டணி அரசாங்கங்கள் அக்டோபர் மாதத்தில் ஒரு குறுகிய காலத்திற்கு சாக்சோனி, துரிங்கியா பகுதிகளில் உருவாக்கப்பட்டன. SPD யின் உறுப்பினர் எண்ணிக்கை குறையும்போது, KPD யின் செல்வாக்கு வளர்ந்தது. அதன் உறுப்பினர் எண்ணிக்கை ஓராண்டுக்குள் 225,000 லிருந்து 295.000 க்கு ஆக உயர்ந்தது.

1920 மற்றும் 1924 க்கு இடையே எந்த தேசிய தேர்தல்களும் இல்லாததால், KPD யின் தேர்தல் ஆதரவு எந்த அளவு இருந்தது என்று தெரியவில்லை. ஆனால் மெக்லென்பேர்க்-ஸ்ட்ரெலிட்ஸ் (Mecklenburg-Strelitz) ஆகிய சிறிய கிராமப்புற மாநிலங்களில் நடந்த தேர்தல், மக்கள் ஆதரவு பற்றிய ஒரு குறியீட்டைத் தருகிறது. 1920-ல் SPD 23,000 வாக்குகளைப் பெற்றது, சுதந்திர SPD (இந்தப் பிரிவின் பெரும்பான்மையானவர்கள் பின்னர் KPD யில் இணைந்துவிட்டனர்) 2,000 வாக்குகளை பெற்றது. KPD யினால் தேர்தலில் போட்டியிட முடியவில்லை. 1923 இல் SPD மற்றும் KPD இரண்டும் இணைந்து சுமார் 11,000 வாக்குகளை பெற்றன. முன்பு கத்தோலிக்க ஆதிக்கம் நிறைந்த ஒரு சுரங்க பகுதியான சார் (Saar) பிரதேசத்தில், KPD அதன் வாக்குகளை 1922 மற்றும் 1924 க்கு இடையே 14,000 இல் இருந்து 39,000 ஆக அதிகரித்திருந்தது.

தொழிற்சங்கங்களின் உள்ளே, கம்யூனிஸ்ட்டுகளின் செல்வாக்கு SPD இன் இழப்பில் வளர்ந்தது. ஜேர்மன் உலோக தொழிலாளர் சங்கத்தின் காங்கிரசின் பிரதிநிதிகள் பேர்லினில் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, KPD, SPD யை விஞ்சியது. KPD 54,000 வாக்குகளை பெற்றது SPD 22,000 வாக்குகள் பெற்றது, அதாவது KPD இன் வாக்குகளில் பாதியைவிடவும் குறைவாகவே அதற்கு கிடைத்தது. ஒரு KPD தலைவரின் கூற்றுபடி, ஜூன் மாதம் கட்சியில் 1.6 மில்லியன் வலுவான தொழிற்சங்கத்தில் 500 பிரிவுகள் இருந்தன. சுமார் 720,000 உலோக தொழிலாளர்கள் கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவு அளித்தனர். மேற்கு ஜேர்மனியின் வரலாற்றாசிரியர் ஹேர்மான் வேபர் KPD யின் வரலாற்று புத்தகத்தில் கீழ்கண்டவாறு முடிக்கிறார்: “1923 ஆம் ஆண்டு KPD-ன் சீரான வளர்ந்துவரும் செல்வாக்கைக் காட்டியது, தொடர்ந்து சீராக கம்யூனிசத்தின் வளர்ச்சியையே பதிவு செய்கிறது, இதன் பின்னால் சோசலிசத்தின்பால் நோக்குநிலை கொண்ட தொழிலாளர்கள் அநேகமாக பெரும்பான்மையாக இருந்திருக்கலாம்." [4]

1923 ற்கு முன்னர் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி

1923 இல் KPD ஒரு ஒன்றுபட்ட கட்சி என்பதற்கு அப்பால் அனைத்துமாக இருந்தது. இது தொடக்கப்பட்டு நான்கு ஆண்டுகள்தான் ஆகியிருந்தன, ஆனால் ஏற்கனவே கொந்தளிப்பான நிகழ்வுகள், தலைமையில் பல்வேறு மாற்றங்கள், பிளவுகள் மற்றும் இணைவுகள் ஊடாகச் சென்றிருந்தது மற்றும் தீவிர உட்பூசல்களாலும் பாதிக்கப்பட்டிருந்தது.

அதன் மிகச் சிறந்த தத்துவார்த்த மற்றும் அரசியல் தலைவர் சந்தேகத்திற்கிடமில்லாமல் ரோசா லுக்செம்பேர்க், இவர் கட்சி ஸ்தாபிக்கப்பட்டு இரண்டு வாரங்களில் கொலை செய்யப்பட்டுவிட்டார் —இது கட்சிக்கு ஒரு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். லுக்செம்பேர்க் மகத்தான தைரியமும் உண்மையும் மிகுந்த ஒரு புரட்சியாளராக இருந்தார். திருத்தல்வாதம் மற்றும் ஜேர்மன் சமூக ஜனநாயகம் வலதுசாரிகள் பக்கம் சாய்வதை எதிர்த்தும் அவர் சீக்கிரமே முன்னரே மிகத் துல்லியமாக லெனினைவிட கணித்திருந்தார். அவரது எழுத்துக்கள் எப்போதும் மார்க்சிச இலக்கியத்தில் எழுதப்பட்டுள்ள மிகச் சிறந்த எழுத்துக்களாக கருதப்படுகின்றன.

திருத்தல்வாதம் பற்றிய தன்னுடைய புரிதலின் அடிப்படையில் லெனின், எடுத்த கூர்மையான அமைப்பு ரீதியான முடிவுகளை, ட்ரொட்ஸ்கி போன்றும் மற்றும் அவரை விட இன்னும் மிக நீண்ட காலத்திற்கு லுக்செம்பேர்க்கினால் எடுக்க முடியவில்லை. ஆகஸ்ட் 4, 1914 இல், அவர் குரூப் இண்டர்நாஷனால் (Gruppe Internationale), ஐ உருவாக்கியபோது, பின்னர் அது ஸ்பார்டகுஸ் புண்ட் (Spartakusbund) என்று அழைக்கப்பட்டது, இருந்தாலும் அவர் முறையாக SPD இலிருந்து முறித்துக் கொள்ளவில்லை. அவரது முழக்கம் இதுவாகவே இருந்தது: "கட்சியை விட்டு விலக வேண்டாம் கட்சியின் பாதையை மாற்றுங்கள்."

1915 ஆம் ஆண்டில், ஸ்பார்டகுஸ் புண்ட், சிம்மர்வால்ட் (Zimmerwald) மாநாட்டில் லெனின் விடுத்த புதிய அகிலத்திற்கான அழைப்பை நிராகரித்தது, பின்னாளில் வந்த மார்ச் 1919 மூன்றாம் அகிலத்தின் முதல் காங்கிரஸில் KPD இன் பிரதிநிதியாக சென்ற ஹ்யூகோ ஏபர்லைன் (Hugo Eberlein) புதிய அகிலத்தை ஸ்தாபிப்பதற்கான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்தார். அதற்கு எதிராக வாக்களிக்கும்படி KPD அவருக்கு உத்தரவிட்டிருந்ததாலும், பின்னர் மாஸ்கோவில் அந்த முடிவு சரியானதுதான் என்று ஊக்குவிக்கப்பட்டார் – அதனால் அவர் வாக்கெடுப்பில் பங்கெடுக்கவில்லை.

போர் நிதிக்கு ஆதரவாக வாக்களிக்க மறுத்ததன் காரணமாக SPD இலிருந்து வெளியேற்றப்பட்ட ஜேர்மன் பாராளுமன்ற (ரைய்ஸ்டாக்) SPD உறுப்பினர்களால் 1917 இல் சுதந்திர SPD (Unabhängige Sozialdemokratische Partei Deutschlands - USPD) உருவாக்கப்பட்டது. இந்த மையவாத அமைப்புடன் லுக்செம்பேர்க்கும் ஸ்பார்டகுஸ் புண்டும் ஒரு தனிப்பிரிவாக இணைந்தனர். USPD இன் மிக முக்கிய தலைவர்களாக கார்ல் காவுட்ஸ்கி, அத்துடன், ஜேர்மன் திருத்தல்வாதத்தின் தத்துவார்த்த தலைவரான எட்வார்ட் பேர்ன்ஸ்டைன் இருந்தபோதும் அவர்கள் அவ்வாறு செய்தனர்.

லுக்செம்பேர்க் ஸ்பார்டகுஸ் புண்ட்ஒரு முதுகெலும்பில்லாத எதிரணியில் தன்னை கலைத்துக் கொள்வதற்காக USPD யுடன் சேரவில்லை என்று வலியுறுத்தும் கட்டுரையில் இதனை நியாயப்படுத்தினார். “சமூகநிலைமை மோசமாக அதிகரித்துவருவதில் மற்றும் அதற்காக வேலைசெய்வதில் நம்பிக்கை கொண்டு –புதிய கட்சியை முன்னோக்கி எடுத்துச் செல்லும் பொருட்டு, அதன் ஆலோசனை வழங்கும் மனசாட்சியாக இருக்கும் பொருட்டும், கட்சியின் உண்மையான தலைமையை எடுத்துக் கொள்ளும் பொருட்டும்– அது புதிய கட்சியில் சேர்ந்திருந்தது” என்று அவர் எழுதினார். [5]

USPD இல் சேர மறுத்து, அது நேரத்தை வீணாக்குவது என்று விவரித்த கார்ல் ராடெக் மற்றும் பிற்காலத்தில் லுக்செம்பேர்க்கின் வாழ்க்கை வரலாற்றாசிரியராக இருந்த போல் ஃப்ரோலிச் (Paul Frölich) ஆகியோரால் வழி நடத்தப்பட்ட பிரெமன் இடது என்ற பிரிவை (Bremen Left) லுக்செம்பேர்க் கடுமையாகத் தாக்கினார். ஒரு சுதந்திரமான கட்சியை கட்ட வேண்டும் என்ற அவர்களது வாதத்தை க்ளைன்குய்ஹின்சிஸ்டம் (Kleinküchensystem) அதாவது சிறு சிறு சமையலறைகளை கொண்ட வழிமுறை என்றார், மேலும் அதைப் பற்றி எழுதுகையில் “இதில் வருத்தம்மிக்க விஷயம் என்னவென்றால் இம்மாதிரி சிறு சிறு சமையலறைகளை வைத்துக் கொள்ளும் வழிமுறையானது, முக்கியமான விஷயமான புறநிலை சூழ் நிலைமையை மறந்துவிடுகின்றது, அதுதான் இறுதி ஆய்வில் தீர்க்கமானதாக இருக்கிறது, அது மக்களின் அணுகுமுறைக்கும் தீர்க்கமானதாக இருக்கும். ஒரு சிலரிடம் மட்டும் பைகளில் சிறந்த தீர்வு இருந்து, மக்களை எப்படி வழி நடத்துவது என்று தெரிந்தால் மட்டும் போதாது. கடந்த ஐம்பது ஆண்டு கால பாரம்பரியங்களில் இருந்து மக்களின் சிந்தனை விடுவிக்கப்பட வேண்டும். இது எப்போது சாத்தியமாகுமென்றால் ஒட்டு மொத்தமாக இயக்கம் பற்றிய தொடர்ச்சியான உள் சுய விமர்சனம் என்ற ஒரு பெரிய நிகழ்ச்சிப்போக்கில் மட்டுமே சாத்தியம்."[6] என்று கூறினார்.

1918 ஆம் ஆண்டு டிசம்பரில், USPD யின் மூன்று தலைவர்கள் வலதுசாரி SPD கட்சி தலைவர்களான பிரீட்ரிக் ஈபேர்ட் மற்றும் பிலிப் ஷைடமான் ஆகியோரின் தலைமையில் உருவான ஒரு இடைக்கால அரசாங்கத்தில் பங்கு பெற்ற ஒரு மாதத்திற்கு பின்னர் ஸ்பார்டகுஸ் புண்ட் USPD யுடன் உறவை முறித்துக் கொண்டது. ஈபேர்ட் அரசாங்கம் நவம்பர் புரட்சியினை நசுக்குவதாக மாறியது. அது விரைவில் இராணுவ ஆணையத்துடன் தன்னைப் பிணைத்துக் கொண்டது. இதுவரையில் தன் வேலையைச் செய்து முடித்த USPD, இனி தேவைப்படவில்லை.

ஆண்டு முடிவில், கடுமையான புரட்சிகர போராட்டங்களின் மத்தியில், இறுதியாக ஸ்பார்டகுஸ் புண்ட் இனால் பிரேமனின் இடது மற்றும் பிற இடதுசாரி அமைப்புகளால் KPD நிறுவப்பட்டது.

சமூக ஜனநாயக வாதிகள் மற்றும் மத்தியவாதிகள் அல்லாத சுயாதீனமான ஒரு உண்மையான புரட்சிகர கட்சியை ஸ்தாபிப்பதில் ஏற்பட்ட தாமதத்திற்கு காரணம், 1920 களின் முற்பகுதியில் ஜேர்மனியில் காளான்களைப் போல் பல தீவிர இடது போக்குகள் உருவானதுதான். சமூக ஜனநாயகக் கட்சியின் துரோகம் —முதலாவதாக 1914ல் அது போரை ஆதரித்த பொழுது, அதன் பின்னர் 1918ல் அது புரட்சியை இரத்தவெள்ளத்தில் மூழ்கடித்த பொழுது— தொழிலாளர்கள் மத்தியில் ஒரு கடும் எதிர்வினைக்கு இட்டுச்சென்றது, ஒரு உறுதியான, போல்ஷ்விக் வகைப்பட்ட அமைப்பு இல்லாத நிலையில், அவர்கள் பல்வேறு வடிவிலான இடது தீவிரவாதம் அல்லது அராஜகவாதத்திற்கும் கூட திரும்பினர். இந்த பிரச்சினை நீண்ட காலமாக ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியைப் பீடித்திருந்தது.

ஜேர்மன் KPD இன் ஸ்தாபக மாநாட்டில், லுக்செம்பேர்க் தேசிய பாராளுமன்ற தேர்தலில் பங்கேற்கும் கேள்வி எழுந்தபோது சிறுபான்மையாகியிருந்தார். கடசியின் பெரும்பான்மை அதனை எதிர்த்தது. மற்றும் கட்சிக்கு வெளியே பல அதீத இடது போக்குகள் இருந்தன.

ஏப்ரல் 1920 இல், ரூஹரில் ஆயுதமேந்திய தொழிலாளர்களின் எழுச்சிக்கு பின்னர், கட்சியின் இடதுசாரி பிளவு பெற்று KAPD ஐ (ஜேர்மன் கம்யூனிஸ்ட் தொழிலாளர் கட்சி) உருவாக்கி, தீவிர இடது, பாராளுமன்ற எதிர்ப்பு மற்றும் அராஜகவாத கருத்துக்களை ஊக்குவித்தது. சில ஆதாரங்களின்படி, KPD யிலிருந்து பெரும்பான்மையான உறுப்பினர்களை KAPD தன் கட்சிக்கு பிரித்து எடுத்துச் சென்றது. ஆனால் அதில் எந்த ஒத்திசைவான திட்டமும் இல்லாததால் அது துரிதமாக சிதைந்தது. கம்யூனிச அகிலம் (Comintern), KAPD இன் ஆரோக்கியமான பிரிவுகளை மீண்டும் சேர்க்க முயற்சி செய்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்று அதை தங்களுடைய ஒரு காங்கிரசுக்கு அழைக்கவும் செய்தது.

எனினும், 1919-ல் முக்கியமாக தொழிலாள வர்க்கம் இடது பக்கம் திரும்பியதில் USPD க்குதான் இலாபகரமாக இருந்தது. 1920 நாடாளுமன்றத் தேர்தலில், SPD 6 மில்லியன் வாக்குகளையும் USPD 5 மில்லியன் வாக்குகளையும், KPD 600,000 வாக்குகளையும் பெற்றன.

USPD ஒரு பாரம்பரியமான மத்திய வாதக் கட்சியாக இருந்தது. தலைமையானது வலதுபுறம் நகர்ந்து, தொழிலாளர்கள் இடதுபுறம் நகர்வதை ஊடறுத்தது. USPD யை ஆதரித்த பல தொழிலாளர்கள் சோவியத் ஒன்றியத்தைப் பார்த்து புகழ்ந்தனர். USPD யின் வலதுசாரி தலைவர்கள் தாங்கள் அதிகமாக தனிமைப்படுத்தப்படுவதை உணர்ந்தனர். அகிலத்தின் இரண்டாம் காங்கிரஸ், உறுப்பினராக விதித்த 21 நிபந்தனைகள், USPD யின் உள்ளே பிரிவுகளை மேலும் ஆழமாக்கியது.

டிசம்பர் 1920 இல் பெரும்பான்மை, இறுதியாக KPD அல்லது சில நேரம் VKPD (Vereinigte Kommunistische Partei Deutschlands), என்று அழைக்கப்பட்ட கட்சியில் சேர்ந்தனர். சிறுபான்மையினர் பின்னர் SPD யில் மீண்டும் இணைந்தனர். USPD யின் இணைப்பு, KPD இன் உறுப்பினர் தொகையை அதிகமாக்கியது, கட்சியின் பலத்தை ஐந்து மடங்காக உயர்த்தியதோடு அதை வெகுஜனக் கட்சியாக மாற்றியது. ஆனால் புதிய உறுப்பினர்கள் தங்களுடன் பல பிரச்சினைகள் மற்றும் USPD யின் இடைநிலைவாத மரபுகளையும் கொண்டு வந்தனர்.

1921 மார்ச்சில், மத்திய ஜேர்மனியில் தோல்வியடைந்த மார்ச் நடவடிக்கை (Märzaktion) என்றழைக்கப்பட்ட ஒரு எழுச்சி, KPD அணிகளில் ஒரு புதிய நெருக்கடியை தூண்டியது. தேசிய அரசாங்கம் தொழிலாளர்களை நிராயுதபாணியாக்குவதற்காக தொழிற்சாலைகளுக்கு போலீஸை அனுப்பிய பின்னர், KPD மற்றும் KAPD ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கும் தேசிய அரசாங்கம் தூக்கிவீசப்பட்ட வேண்டும் என அழைப்பு விடுத்தது. எழுச்சி தெளிவாக முதிர்ச்சியில்லாமல் பக்குவப்படாமல் இருந்தது. அது ஒரு இரத்தம் தோய்ந்த தோல்வியில் முடிவடைந்தது.

சண்டை மற்றும் தொடர்ந்து வந்த மூர்க்கமான அடக்குமுறையில் அண்ணளவாக 2,000 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இதன் விளைவாக, ரோசா லுக்செம்பேர்க்கின் நெருங்கிய நண்பரும் கட்சியின் ஒரு முக்கிய தலைவரும், ஆரம்பத்தில் இருந்து எழுச்சியை சரியாக, எதிர்த்து வந்தவருமான, போல் லெவி (Paul Levi), மிகவும் கடுமையாகவும் மூர்க்கத்தனமாகவும் கட்சியை பகிரங்கமாகத் தாக்கினார். அவர் இறுதியாக கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு SPD யில் மீண்டும் காலடி எடுத்து வைத்தார்.

1921 ஜூன் 22 லிருந்து ஜூலை 21 வரை மாஸ்கோவில் நிகழ்ந்த அகிலத்தின் மூன்றாவது காங்கிரஸில், விவாதத்தின் முக்கி` விடயமாக ஜேர்மன் மார்ச் நிகழ்வுகள் இருந்தன. ட்ரொட்ஸ்கி பின்னர் அந்த காங்கிரஸை "மைல்கல்" என்று விவரித்து பின்வருமாறு அதன் முக்கியத்துவத்தை சுருக்கமாகக் கூறினார்: “கம்யூனிஸ்ட் கட்சிகளின் வளங்கள், அரசியல் ரீதியாகவும் அதேபோல அமைப்பு ரீதியாகவும், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குப் போதுமானதாக இல்லை என்ற உண்மையைப் புரியவைத்துவிட்டது. அது முழக்கத்தை முன்னெடுத்தது: “மக்களிடம் செல்லுங்கள்”, அதாவது மக்களின் நாளாந்த வாழ்க்கைப் போராட்டங்களின் அடிப்படையில் அடைந்த, வெகுஜனங்களின் முந்தைய வெற்றிகளினூடாக அதிகாரத்தைக் கைப்பற்றுவது. இது மக்களைப் பொறுத்தவரை ஒரு புரட்சிகர சகாப்தத்தில், ஏதோ வித்தியாசமான பாணியில் இருந்தாலும் கூட…. அவர்களின் நாளாந்த வாழ்க்கையை தொடர்ந்து வாழ்கிறார்கள் என்று அர்த்தப்பட்டது.…”[7]

மூன்றாவது காங்கிரஸ், இடைமருவுக் கோரிக்கைகளை முன்வைத்தது, ஐக்கிய முன்னணி தந்திரோபாயம் மற்றும் ஒரு தொழிலாளர்கள் அரசாங்கத்திற்கான முழக்கம் ஆகியவை இன்னும் சமூக ஜனநாயகவாதிகளுக்கு ஆதரவு தரும் தொழிலாளர்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்காக முன் வைக்கப்பட்டது. அது, தொழிற்சங்கங்களில் பணிபுரிவதின் அவசியத்தை வலியுறுத்தியது.

KPD இன் உள்ளேயிருந்த இடது-சாரி மற்றும் அதி-இடது போக்குகளிடமிருந்து இதற்கு பலமான எதிர்ப்பு கிளம்பியதோடு, அவை “தாக்குதல் தத்துவம்” (“offensive theory”) என்றழைக்கப்படுவதை முன் வைத்தனர், எந்த வடிவத்திலும் சமரசம் செய்து கொள்ளவோ பாராளுமன்ற மற்றும் தொழிற்சங்க வேலையையோ ஏற்றுக் கொள்ள மறுத்தனர். அவர்கள் "ஒரு தொடர்ச்சியான புரட்சிகர தாக்குதலை." நடத்த வேண்டும் என்று வாதாடிய நிக்கோலாய் புக்ஹாரின், (இவர் பின்னாளில் வலது எதிர்ப்பின் தலைவரானார்) ஆதரவை பெற்றனர். இந்தப் போக்குகளுக்கு எதிராக பதில் சொல்லும் விதமாகத்தான், லெனின் "இடது-சாரி" கம்யூனிசமும் இளம் பருவக் கோளாறும் (“Left-Wing” Communism—An Infantile Disorder) என்ற தனது துண்டுப்பிரசுரத்தை எழுதினார்.

இந்த மோதல்களை படிக்கும்போது, லெனின் அத்துடன் ட்ரொட்ஸ்கி இருவரும் KPD இன் வெவ்வேறு பகுதியினருக்கு எதிராக மிகவும் பொறுமையான அணுகுமுறையைக் கையாண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு விஷயத்தை கற்பிக்க, விளக்க மற்றும் அவர்களை ஒருங்கிணைக்க முயன்றனர் மற்றும் பக்குவமடையாத பிளவு ஏற்பட்டுவிடாமல் தடுக்க முயன்றனர். அவர்கள் இடது பக்கத்தில் மூளைசூட்டுக்காரர்களையும் மற்றும் வலது பக்கத்தில் தங்கள் எதிராளிகளை வெளியேற்ற விரும்பியவர்களையும் கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கினர், வலது புறமுள்ள லெவியைக் கூட அவர்கள் தங்கள் கட்சியில் வைத்துக் கொள்ள முயற்சித்தார்கள் ஆனால் லெவியின் ஆத்திரமூட்டும் நடத்தை அதனை சாத்தியமற்றதாக்கியது.

மூன்றாம் காங்கிரசின் போது, அவர்கள் KPDயின் பல்வேறு பிரிவுகளுடன் சிறு குழுக்களாக விவாதிக்க பல மணி நேரங்கள் செலவிட்டனர். அவர்கள் சிறுபிள்ளைத்தனமான இடதுசாரிகளிடம் விட்டுக்கொடுக்காத போக்கை கையாண்டாலும், கட்சித் தலைமையின் பழமைவாத போக்கிற்கு எதிராகத்தான் அவர்கள் இவ்வாறு எதிர்வினை ஆற்றுகின்றனர் என்பதை உணர்ந்து கொண்டனர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி இருவரும், கட்சியினுள் இருக்கும் பிளவுகளை சமாளிக்கக் கூடிய, மாறிவரும் சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளக் கூடிய பண்பட்ட, அனுபவம் மிகுந்த தலைமையை உருவாக்க முயன்றனர். இது ஸ்ராலின் கீழ் இயங்கிய அகிலத்தின் பிந்தைய நடைமுறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.

ரூஹர் நிகழ்வுகள்

நாம் இப்போது 1923 நிகழ்வுகளுக்கு திரும்புவோம்

அகிலத்தின் மூன்றாம் காங்கிரஸ் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆன பின்னரும் KPD இன் உட்பூசல்கள் உண்மையில் தீர்க்கப்படவில்லை. பிரெஞ்சு இராணுவத்தால் ரூஹர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பின்னர், தலைமை பெரும்பான்மை மற்றும் இடது எதிர்ப்புகளுக்கு இடையே மோதல் முழு சக்தியோடு மீண்டும் வெடித்தது. சாக்சோனியிலுள்ள இடது-சாரி சமூக ஜனநாயகக் கட்சி (SPD) அரசாங்கத்திற்கு KPD வழங்கிய ஆதரவு பற்றியும் ஆக்கிரமிக்கப்பட்ட ரூஹரில் கடைப்பிடிக்க வேண்டிய நிலைப்பாடு பற்றியும் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டன.

கட்சி இப்போது ஸ்பார்டகுஸ் புண்ட்இன் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான ஹெய்ன்ரிக் பிராண்டலர் (Heinrich Brandler), தலைமையில் இயங்கியது. பல முன்னாள் இடதுகள் கடுமையாக வலது பக்கம் திரும்பினாலும், புதிய இடதுசாரி பிரிவு ரூத் பிஷர் (Ruth Fischer), அர்காடி மாஸ்லொவ் (Arkadi Maslow) மற்றும் -ஒரு குறைந்த அளவிற்கு- ஏர்ன்ஸ்ட் தால்மான் (Ernst Thälmann) ஆகியோர் தலைமையின் கீழ் அமைக்கப்பட்டது. ஃபிஷர் மற்றும் மாஸ்லொவ் இருவரும் போருக்கு பின்னர் இயக்கத்தில் சேர்ந்த இரண்டு இளம் அறிவுஜீவிகள் ஆவர். அவர்களுக்கு பின்னால் முக்கியமான பேர்லின் அமைப்பின் பெரும்பான்மை இருந்தது. தால்மான் சுதந்திர SPD (USPD) மூலம் KPDயில் இணைந்த ஒரு தொழிலாளி ஆவார். அவர் ஹம்பேர்க்கில் KPD கட்சியின் தலைவராக இருந்தார்.

ஜனவரி 10 அன்று, சாக்சோனியில் உள்ள SPD கட்சி அரசாங்கம் வீழ்ந்தது, KPD ஒரு ஐக்கிய முன்னணிக்கும் தொழிலாளர்களின் அரசாங்கத்திற்கும் ஆன ஒரு பிரச்சாரத்தை மேற்கொண்டது. SPD யின் பெரும்பான்மையினர் முதலாளித்துவக் கட்சிகளுடன் ஒரு கூட்டணிக்கு சாதகமாக இருந்தபோது, இடது சிறுபான்மையினர் KPD உடன் கூட்டணிக்கு சாதகமாக இருந்தனர். KPD தீவிரமான போராட்டத்தை உருவாக்கி, "தொழிலாளர் வேலைத்திட்டம்" என்ற ஒரு கையேட்டை வெளியிட்டது – அதிலுள்ள முக்கிய கோரிக்கைகள்: முன்னாள் அரச குடும்பத்தின் சொத்து பறிமுதல்; தொழிலாளர்களுக்கு ஆயுதம் வழங்குதல்; நீதித்துறை, போலீஸ் மற்றும் நிர்வாகத்தினை ஒழித்தல்; தொழிற்சாலை சபைகளின் ஒரு மாநாட்டுக்கு அழைப்பு விடுதல் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களின் மூலம் விலைகளைத் கட்டுப்படுத்தல் ஆகியவையாகும்.

இது SPD இன் உள்ளே ஆதரவைக் கண்டது, அங்கே இடதுசாரிகள் இறுதியாக ஒரு பெரும்பான்மையை அமைத்தனர். அது பாராளுமன்றத்தைக் கலைத்தல் மற்றும் தொழிற்சாலை சபைகளின் மாநாட்டைக் கூட்டல் என்ற ஒரு விதிவிலக்குடன் ”தொழிலாளர் வேலைத்திட்டத்தை”: ஏற்றுக்கொண்டது. இந்த அடிப்படையில், SPD அரசாங்கம், KPD இன் ஆதரவுடன் அமைக்கப்பட்டது.

இந்த நடவடிக்கை, KPD தலைமையின் பெரும்பான்மையினரின் ஆதரவையும் அதேநேரம் அகிலத்தின் தலைவராக இருந்த கார்ல் ராடெக்கின் ஆதரவையும் பெற்றது, ஆனால் KPD இன் இடதுகளினால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. சாக்சோனி அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட ஆதரவு, சமூக ஜனநாயக தொழிலாளர்களை வெல்வதற்கான ஒரு தற்காலிக தந்திரோபாய திட்டமாக மட்டும் பார்க்கவில்லை, மாறாக வலது சாரிகளுக்கு எவ்விதத்திலும் சளைக்காத துரோகிகள் என்று அவர்கள் கருதிய இடது சமூக ஜனநாயகவாதிகளுக்கு ஒரு அரசியல் அடிபணிவாக கருதப்பட்டது. அவர்களுடைய சந்தேகங்களுக்கு காரணம் இல்லாமலில்லை என்பதை, பின்னர் வந்த நிகழ்வுகள் காண்பித்தன; இடது சமூக ஜனநாயக வாதிகள் ஆதரிக்கத் தயாராக இல்லாததால், திட்டமிட்டிருந்த கிளர்ச்சியை அக்டோபர் 21 ம் தேதி பிராண்ட்லர் கைவிட்டார்.

ரூஹரில், வில்ஹெல்ம் கூனோ அரசாங்கத்தின் "செயலற்ற எதிர்ப்பு" ("passive resistance") பிரச்சாரத்திற்கு முழு ஆதரவு அளித்த சமூக ஜனநாயகக் கட்சியிடமிருந்து, KPD தெளிவாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டது. அதன் பங்கிற்கு கூனோ அரசாங்கம் இராணுவத்தால் இரகசியமாக ஆதரிக்கப்பட்ட இராணுவத் துணைக் கும்பல்களுடன் இணைந்து, வெளிப்படையாக பாசிச சக்திகளுடன், பிரெஞ்சு ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான நாசவேலை செயல்களைச் செய்ய அவர்களை ஊக்குவிக்கும் செயல்களில் ஈடுபட்டனர். இந்த செயல்களினால், ரூஹர், ஜேர்மனி முழுவதும் இருந்த வலதுசாரிகள் மற்றும் பாசிஸ்டுகளின் கவனத்தை ஈர்த்தது. இந்த சக்திகளோடு எழுதப்படாத கூட்டு ஒன்றில் SPD தன்னை ஈடுபடுத்தியது.

SPD யின் தேசியவாதம், 1914 இல் போர் நிதிக்கு ஆதரவாக வாக்களித்த அதன் கொள்கைக்கு மீண்டும் திரும்புவதாக உள்ளது என்று கண்டனம் செய்து அதனை பலமாக KPD எதிர்த்தது. பிரெஞ்சு ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் அதேபோல் பேர்லின் அரசாங்கத்திற்கு எதிராகவும் ஒரு போராட்டத்திற்கு அது அழைப்பு விடுத்தது. செங்கொடி பத்திரிகையின் (Rote Fahne) இன் ஒரு பிரதி இந்த தலைப்புடன் பிரசுரமாகியது: "ரூஹர் மற்றும் ஸ்பிரீ ஆகிய இடங்களில் புவான்கரே (Poincaré) மற்றும் கூனோ விற்கு எதிராக போராடுங்கள்". தொழிலாளர்கள், தாங்க முடியாத சமூக நிலைமைகள், ஆக்கிரமிப்பாளர்கள், உள்ளூர் தொழிலதிபர்கள் மற்றும் பேர்லின் அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்து போராடினார்கள், இந்த போராட்டங்கள் அந்தப் பத்திரிகையில் வந்த வரியினை விரைவில் உறுதி செய்தது.

ஆனால் விரைவில் KPD யின் இடது தலைவர்கள் ரூஹர் கட்சி கூட்டங்களின் போது போராட்டம் செய்தனர். ரூத் ஃபிஷ்ஷர் (Ruth Fischer), தொழிற்சாலைகளையும், சுரங்கங்களையும் தொழிலாளர்கள் கைப்பற்றவும், அரசியல் அதிகாரத்தை கையில் எடுக்கவும் அதோடு ரூஹரில் ஒரு தொழிலாளர் குடியரசை நிறுவும்படி அழைப்பு விடுத்தார். இந்த குடியரசு பின்னர் ஒரு தொழிலாளர்களின் இராணுவத்திற்கான அடிப்படையாகி அதுவே "மத்திய ஜேர்மனிக்குள் அணிவகுத்து சென்று, பேர்லினில் அதிகாரத்தைக் கைப்பற்றி, அனைத்து தேசியவாத எதிர்ப்புரட்சியையும் ஒரேயடியாக நசுக்கும்" என்றும் கூறினார்.[8]

அவரது நிலைப்பாடு சாகசம் மிகுந்ததாக, 1921 மார்ச் நடவடிக்கையின் திரும்பச்செய்தலாக இருந்தது. ஜேர்மனியின் எஞ்சிய பகுதிகளில் ஆதரவு தயார் செய்யப்படாத நிலையில், ரூஹரில் எழுச்சியானது தொடர்ந்தும் தனிமைப்பட்டே இருந்திருக்கும். மேலும், ரூஹர் முழுவதும் இராணுவ மற்றும் பாசிச சக்திகளின் ஆட்சி இருந்ததோடு பிரெஞ்சு இராணுவம் நிச்சயமாக பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சியை அமைதியாக ஏற்றிருக்காது. பிரெஞ்சு ஆக்கிரமிப்பாளர்கள், ஜேர்மன் அரசாங்கத்திற்கு எதிராக இயக்கிய வேலைநிறுத்தங்களை சிறு அனுதாபத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாலும், அதே சமயம் ஒரு பாட்டாளி வர்க்க வன்முறைஎழுச்சி என்று வரும்போது முற்றிலும் வேறுபட்ட ஒரு விஷயமாக இருந்திருக்கும்.

ஜேர்மனியில் குழு மோதல்கள் பெருகி கசப்பாக வளர்ச்சி அடையும்போது அகிலத்தின் செயலர் சினோவியேவ், இரு பக்கங்களையும் மாஸ்கோவிற்கு அழைத்து பேசினார், அங்கே ஒரு சமரசம் ஏற்பட்டது. கம்யூனிச அகிலம், சாக்சோனியில் சமூக ஜனநாயகக் கட்சி அரசாங்கத்திற்கு கொடுத்த ஆதரவுக்கு உடன்பட்டது, ஆனால் சில சூத்திரங்களை விமர்சித்தது, இந்த ஆதரவு ஒரு தற்காலிக உத்தி என்பதை விட அதிகமாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டியது. அது ரூஹருக்கான ஃபிஷ்ஷரின் திட்டங்களை நிராகரித்தது.

ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட சமரசத் தீர்மானம், அகிலத்தின் தலைமையானது ஜேர்மனியில் நிகழ்வுகளின் வளர்ந்துவரும் வேகம் பற்றி அறிந்திருந்தது அல்லது அதிலிருந்து ஏதாவது முடிவுகளுக்கு வந்திருந்தது என்று எந்த அறிகுறியையும் காட்டவில்லை. அதற்கு நேர்மாறாக தீர்மானம் கூறியதாவது: “ஜேர்மனியில் புரட்சிகர அபிவிருத்திகளின் மெதுவான வேகத்திலிருந்து, மற்றும் இது இட்டுச்செல்லும் புறநிலை கஷ்டங்களிலிருந்து எழும் வேறுபாடுகள், ஒரேநேரத்தில் வலது மற்றும் இடது வழிவிலகலுக்கு ஊட்டம் அளித்துக் கொண்டிருக்கின்றன.” [9]

ஷிலாகிட்டர் பாதை

ஜூனில், ராடெக் ஏற்கனவே குழம்பிய KPD ஐ மேலும் நோக்குநிலை தவறச்செய்ய, ஒரு புதிய திசைதிருப்பலை — ஷிலாகிட்டர் பாதை என்று அழைக்கப்படுவதை அறிமுகப்படுத்தினார்.

ஜேர்மனியில் பாசிசத்தின் வளர்ச்சி குறித்து சிலகாலம் KPD கவலைப்பட்டுக் கொண்டிருந்தது. அக்டோபர் 1922ல், தொழிலாளர் அமைப்புகளுக்கும் போர்க்குணம் மிக்க தொழிலாளர்களுக்கும் எதிராக, முசோலினியின் ஃபாசி (fasci) ஆயுதமேந்திய படைகளின் தீவிர தாக்குதலுக்குப் பின்னர், ரோமின் ஆட்சி அதிகாரத்தை அவர் கைப்பற்றினார்.

ஜேர்மனியில், தீவிர வலதுசாரியானது முன்பு ஏகாதிபத்திய இராணுவத்தின் எஞ்சியுள்ளவர்கள் மற்றும் சிறிய யூத-எதிர்ப்பு கட்சிகளுக்கு மட்டுமே வரம்புபடுத்தப்பட்டிருந்தது. ஆனால் 1923ல் அது வளர்ந்து சமூகஅடித்தளத்தை பெறத்தொடங்கியது, அது 1930ல் ஹிட்லரின் சமூகஅடித்தளத்தைக் காட்டிலும் மிகச் சிறியதாக இருந்தாலும்கூட. “நவம்பர் குற்றவாளிகளுக்கு” எதிரான கிளர்ச்சியில், வர்க்கமாக இருந்து தரம் தாழ்ந்துவிட்ட குட்டி முதலாளித்துவ கூறுகள் மற்றும் பணவீக்கத்தின் விளைவால் பாதிக்கப்பட்ட சில ஏழ்மையடைந்த தொழிலாளர்கள் மத்தியில் யூதர்களும் வெளிநாட்டவரும் ஒரு ஆதரவை கண்டார்கள். ரூஹரில் அதிவலதுசாரி உறுப்பினர்கள் தங்களை பிரெஞ்சு ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டக் கதாநாயகர்களாக காட்டிக் கொண்டார்கள்.

குறிப்பாக பவேரியாவில், அதன் மிகப் பெரிய நகர பகுதிகள், தீவிர வலதுசாரிக்கான கோட்டையாக வளர்ந்தது. 1919ல் மூனிச் சோவியத் குடியரசின் இரத்தம் தோய்ந்த அடக்குமுறைக்குப் பின்னர் அது தேசியவாத, பாசிச மற்றும் துணை இராணுவ அமைப்புகளுக்கு ஏற்ற சிறந்த இடமாக மாறியது.

ஏப்ரல் 7 இல், இராணுவ துணைப்படைப் பிரிவின் (Freikorps) உறுப்பினர் ஆல்பர்ட் ஷிலாகிட்டர் இரயில் பாதைகளில் குண்டு வீச்சு தாக்குதல்களில் பங்கேற்றதாக டுஸ்ஸெல்டோர்ஃப் நகரில் பிரெஞ்சு படையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது மற்றும் அவருக்கு மே 26 அன்று தண்டனை நிறைவேற்றப்பட்டது. வலதுசாரிகள் உடனடியாக அவரை ஒரு தியாகியாக மாற்றினர். ஜூனில் நடந்த அகிலத்தின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் (Executive Committee of the Comintern - ECCI), இந்தப் பிரச்சாரத்தில் இணைந்து பாசிஸ்டுகளின் தேசியவாதத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம், பாசிஸ்டுகளால் ஆசைகாட்டி இணங்கச்செய்யப்பட்ட குட்டிமுதலாளித்துவ கூறுகள் மற்றும் தொழிலாளர்களை KPD வென்றெடுக்க ராடெக் முன்மொழிந்தார்.

“புரட்சியில் பெரும் பங்கு வகிக்கக் கூடிய குட்டிமுதலாளித்துவ வெகுஜனங்கள் மற்றும் புத்திஜீவிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அவர்களை சிறுமைப்படுத்துகின்ற முதலாளித்துவத்திற்கு தேசிய எதிர்ப்பின் நிலையில் இருக்கின்றனர்” என ராடெக் அறிவித்தார். “அதிகாரத்திற்கான போராட்டத்தை மேற்கொள்ளக்கூடிய ஒரு தொழிலாளர் கட்சியாக நாம் இருக்க விரும்பினால், வெகுஜனங்களுக்கு அருகாமையில் நம்மை கொண்டு வருவதற்கான ஒரு வழியினை நாம் கண்டறிய வேண்டும், மற்றும் அது நம்முடைய பொறுப்புகளை குறைப்பதாக இருக்கக்கூடாது, ஆனால் தொழிலாள வர்க்கத்தினால் தான் நாட்டைக் காப்பாற்ற முடியும் என்பதைத் தெரிவிக்க வேண்டும்."[10]

அந்தக் கூட்டத்தின் பிற்பகுதியில் அவர் ஷிலாகிட்டரை பிரமாதமாகப் புகழ்ந்தார், “அவர் ஒரு எதிர்புரட்சிக்கான துணிவுள்ள படைவீரர்” இருந்த போதிலும், ”புரட்சிக்கான படைவீரராக நம்மால் உண்மையாக மரியாதை செய்யப்படுவதற்கு தகுதியுள்ளவர்” “இந்த ஜேர்மன் தேசியவாதியின் தலைவிதி மறக்கப்படக்கூடாது, அல்லது வெறும் வார்த்தைகளால் கௌரவிக்கப்படக்கூடாது” என்றார் ராடெக். “பொது நோக்கங்களுக்காக தங்களின் உயிரைத் தியாகம் செய்யவும் தயாராக இருக்கும், ஷிலாகிட்டர் போன்ற மனிதர்கள் வெற்றிடத்தில் அலைந்து திரிபவர்களாக இல்லாமல், மனித குலம் முழுமைக்குமான சிறந்த எதிர்காலத்திற்குள் பயணிப்பவர்களாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.”

செங்கொடி பத்திரிகையால், ஷிலாகிட்டரின் நிலைப்பாடு எடுத்துக்கொள்ளப்பட்டு பல வாரங்களுக்கு அதனை ஆதிக்கம் செலுத்தியது. அது இதுவரை தேசியவாதிகளின் அழுத்தங்களை எதிர்த்த கம்யூனிஸ்ட் அணிகளின் மத்தியில் பெருமளவுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது, அது பாசிச அணிகளை பலவீனப்படுத்தியது என்பதற்கான சிறு அறிகுறிகள் கூட இல்லை – அதில் விதிவிலக்காக இருந்தது என்னவென்றால் சில குழம்பிப்போன தேசிய-போல்ஷிவிக்குகள், KPD அணியில் இணைந்து, நிறைய பிரச்சனைகளை உண்டு பண்ணினார்கள், மீண்டும் அது அவர்களிடம் இருந்து விடுபடும் முன்னர்வரை அவ்வாறு செய்தார்கள். ஷிலாகிட்டர்–பிரச்சாரம், கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான SPD யின் பிரச்சாரத்திற்கு ஏராளமான வெடிமருந்துகளை வழங்கியது மற்றும் அது ஜேர்மன் தொழிலாளர்களுக்காக பிரெஞ்சு படைவீர்ர்களிடையே ஒற்றுமையுணர்வை ஏற்படுத்துவதில் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சிக்கு (Parti communiste français - PCF) மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியது.

கூனோ வேலைநிறுத்தங்கள்

ஷிலாகிட்டர் நிலைப்பாட்டை ராடெக் உருவாக்கியபோது, வர்க்கப் போராட்டம் ஜேர்மனியில் தீவிரமடைந்தது. ஜூன் மற்றும் ஜூலையில், நாடு முழுவதும் விலை உயர்வுக்கு எதிரான கலவரங்களும் போராட்டங்களும் வெடித்தன. ஆயிரக்கணக்கானவர்கள் பெரும்பாலும் பங்கேற்றனர், அவர்களிடையே தொழிலாளர்களின் பகுதியினர் முன்பு எந்த சமூகப் போராட்டங்களிலும் பங்கு கொண்டதில்லை. ஜூன் தொடக்கத்தில், சிலேசியாவில் 100,000 விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பிராண்டன்பேர்க்கில் 10,000 தினக்கூலிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ஆகஸ்டு 8 அன்று, பாராளுமன்றத்தில் சான்சிலர் கூனோ பேசினார். அவர் மேலும் வெட்டுக்களையும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல்களையும் கோரினார், இந்தக் கோரிக்கையை நம்பிக்கை வாக்கெடுப்புடன் இணைத்தார். இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது தவிர்ப்பதன் மூலம் அவரது அரசாங்கத்தைக் காப்பதற்கு SPD முயற்சித்தது.

பேர்லினில், கூனோ அரசாங்கம் பதவி விலகக்கோரி, தன்னியல்பான வேலை நிறுத்த அலைகள் தொடங்கியது. ஆகஸ்ட் 10 அன்று, SPD இன் அழுத்தம் காரணமாக ஒரு பொது வேலை நிறுத்தத்திற்கான அழைப்பினை தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் ஒரு சம்மேளனம் நிராகரித்தது. ஆனால் அடுத்த நாள் தொழிற்சாலை கவுன்சில்களின் ஒரு கூட்டமைப்பு, KPD ஆல் அவசரம் அவசரமாக கூட்டப்பட்டு, பொது வேலை நிறுத்திற்கான முன்முயற்சியை எடுத்து அறிவிக்கவும் செய்தது. மூன்றரை மில்லியன் தொழிலாளர்கள் பங்கேற்றனர். பல நகரங்களில் காவல்துறையினரோடு மோதல்கள் ஏற்பட்டன மற்றும் பல டஜன் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து கூனோ அரசாங்கம் இராஜினாமா செய்தது.

முதலாளித்துவ ஆட்சி ஆழமாக ஆட்டம் கண்டது. “கோடை 1923ல் இருந்தது போல் ஒருபோதும் நவீன ஜேர்மனிய வரலாற்றில் சோசலிசப் புரட்சிக்கு சாதகமாக இருந்ததில்லை.” என்று ஆர்தர் ரோஸன்பேர்க் எழுதுகிறார். அந்த தருணத்தில் SPD முதலாளித்துவ ஆட்சியைக் காப்பாற்றியது. தனது சொந்தக்குழுவிலேயே கணிசமான எதிர்ப்பிற்கு எதிராக ஒரு பெரிய வணிக கட்சியான ஜேர்மன் மக்கள் கட்சியின் (DVP) குஸ்ரவ் ஸ்ரெஸ்மான் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இணைந்து கொண்டது.

புரட்சிக்கு தயாரித்தல்

ஆகஸ்டில் கூனோவுக்கு எதிரான வேலை நிறுத்தங்களுக்குப் பின்னர் இப்போது தான், KPD மற்றும் அகிலம் ஜேர்மனியில் உருவாகியுள்ள புரட்சிக்கான வாய்ப்பினை உணர்ந்தனர் மற்றும் தங்களின் இலக்கை மாற்றிக் கொண்டார்கள். ஆகஸ்டு 21 அன்று —அதாவது கிளர்ச்சியைத் திரும்பப் பெற்றுக் கொண்ட சரியாக இரண்டு மாதங்களுக்கு பின்னர் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் செயலகம் பிராண்ட்லர் ஜேர்மனியில் புரட்சிக்கு தயார்படுத்திக் கொள்ள முடிவெடுத்தது. அது ஜேர்மனியில் வேலைகளை மேற்பார்வையிடுவதற்காக “சர்வதேச விவகாரங்களுக்கான குழுவை” உருவாக்கியது. சினோவியேவ், கமெனேவ், ராடெக், ஸ்ராலின், ட்ரொட்ஸ்கி மற்றும் சீச்ஷேரின் ஆகியோர் குழுவில் இருந்தனர், பின்னர் ஜெர்ஜின்ஸ்கி, பியட்டகோவ் மற்றும் சோகோல்நிக்கோவ் சேர்க்கப்பட்டனர்.

தொடர்ந்து வரும் நாட்கள் மற்றும் வாரங்களில், மாஸ்கோவுக்கு அடிக்கடி பயணித்த KPD தலைவர்களுடன் எண்ணற்ற விவாதங்கள் மற்றும் தொடர்ச்சியான கடிதப் போக்குவரத்துகள் நடைபெற்றன. நிதி, பொருள் மற்றும் இராணுவ உதவி, பாட்டாளி நூற்றுவர்களை (Proletarian Hundreds) ஆயதபாணியாக்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது, இந்தப் பாட்டாளி நூற்றுவர்கள் அமைப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்டதாகும். ராடெக், பியட்டகோவ் மற்றும் சோகோல்நிக்கோவ் எழுச்சிக்கு உதவுவதற்காக ஜேர்மனிக்கு அனுப்பப்பட்டார்கள்.

ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஏற்கனவே உள்ள ஜேர்மனிய பிரிவிலும் ரஷ்ய கட்சியிலும் ஒரே மாதிரியாக இருந்த விதிவசவாதம் (fatalism) மற்றும் சுயதிருப்தியை (complacency) வீழ்த்துவதற்காக அயராது பாடுபட்டவர் ட்ரொட்ஸ்கி தான். ஸ்ராலின், தாமதமாக ஆகஸ்ட் 7 அன்று —அதாவது, கூனோ வேலை நிறுத்தப் போராட்டம் வெடிப்பதற்கு ஒரு நாளைக்கு முன்னர், ”எனது கருத்துப்படி, ஜேர்மனியர்கள் கட்டாயம் கட்டுப்படுத்த வேண்டும், ஊக்குவிக்கக்கூடாது,” மற்றும் “பாசிஸ்டுகள் முதலில் தாக்கினால் நமக்கு அது சாதகமாக இருக்கும்” என்று சினோவியேவ் எழுதினார். ஆயுதக்கிளர்ச்சி, சில மாதங்களுக்குப் பின்னர் அல்லாமல் சில வாரங்களுக்குள்ளேயே தயார்படுத்த வேண்டும், மற்றும் ஒரு நிச்சயமான தேதி அமைக்கப்பட வேண்டும் என்று ட்ரொட்ஸ்கி வலியறுத்தினார்.[11]

முதல் பார்வையில் ஒரு அமைப்பு ரீதியான முன்மொழிவு எனக் கருதப்பட்ட ஒன்று —தேதி நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது ஒரு உயர்ந்த அரசியல் கோரிக்கை ஆனது. ட்ரொட்ஸ்கியை பொறுத்தவரை முதன்மை இலக்கு இப்போது புரட்சிக்கு தயார்படுத்துவதில் சக்தி முழுமையையும் ஒன்று சேர்த்து கட்சியின் கவனத்தை செலுத்த வேண்டும். மிகப் பொதுவான, பிரச்சாரத்திற்கான தயார்படுத்தலில் இருந்து அது ஆயுத கிளர்ச்சிக்கான நடைமுறை தயார்படுத்தலுக்கு கடந்து செல்ல வேண்டும்.

ஆகஸ்டு 21ல் நடந்த ரஷ்ய கட்சியின் அரசியல் செயலகத்தின் ஒரு கூட்டத்தில் அவர் இவ்வாறு வாதிட்டார்: "ஜேர்மனியில் புரட்சிக்கான வெகுஜனங்களின் மனநிலையைப் பொறுத்தவரை, அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றும் நிலையில் இருக்கின்றனர் என்ற உணர்வு —இத்தகையதொரு மனோபாவம் இருந்தது. தயாரிப்பு பற்றிய பிரச்சனையே முன்வைக்கப்பட்ட பிரச்சனையாக இருந்தது. புரட்சிசார்ந்த குழப்பத்துக்கு முத்திரைக் குத்தப்படக்கூடாது. இதில் கேள்வி என்னவென்றால், புரட்சியை நாம் தூண்டுவதா அல்லது அதற்கு நாம் ஏற்பாடு செய்வதா என்பதேயாகும்.” நன்று ஒழுங்கமைக்கப்பட்ட பாசிஸ்டுகள், தொழிலாளர்களின் ஒருங்கமைக்கப்படாத நடவடிக்கைகளை நசுக்கிவிடுவார்கள் என்று ட்ரொட்ஸ்கி எச்சரித்தார் மற்றும் பின்வருமாறு கோரினார்: "தயார்படுத்தலுக்கான —இராணுவ தயார்படுத்தலுக்ககான— ஒரு கால வரம்பினை, KPD நிர்ணயிக்க வேண்டும் — அதற்கு ஏற்ற வேகத்தில் அரசியல் கிளர்ச்சியையும் நடத்த வேண்டும்.”

இது ஸ்ராலினால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. ஒரு நேர அட்டவணைக்கு எதிராக வாதிட்ட அவர், “தொழிலாளர்கள் இன்னும் சமூக ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்” என்று கூறியதோடு அரசாங்கம் மற்றுமொரு எட்டு மாதங்களுக்கு நீடிக்கும் என்றார். [12]

ஆகஸ்டு 28 அன்று அகிலத்தின் நிர்வாகிகளுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் பிராண்ட்லர், பின்வருமாறு நீண்டகாலத்திற்கு வாதிட்டார்: "ஸ்ட்ரெஸ்மான் அரசாங்கம் நீண்ட காலத்திற்கு நிலைக்கும் என்று நான் நம்பவில்லை.” என்றார். “இருப்பினும், ஏற்கனவே வந்து கொண்டிருக்கும் அலை அதிகாரத்திற்கான கேள்வியை முடிவு செய்யும் என்றும் நான் நம்பவில்லை.... நமது சக்திகளை ஒருமுகப்படுத்த நாம் முயற்சிப்போம், அது தவிர்க்க முடியாததென்றால், அடுத்த ஆறு வாரங்களில் போராட்டத்தைக் கையிலெடுப்போம். ஆனால் அதே சமயம் ஐந்து மாதங்களில் மிகவும் திடமான திட்டத்துடன் தயாராக இருப்பதற்கான ஏற்பாடுகளை நாம் செய்வோம்.” என்று எழுதினார். அடுத்த ஆறிலிருந்து எட்டு மாதங்கள் மிகவும் சாத்தியமானவை என்று தான் நம்புவதாக அவர் மேலும் கூறினார்.

ஒரு மாதத்திற்கு பின்னர் ரஷ்ய ஆணைக்குழுவிற்கும் மற்றும் ஜேர்மன் தலைமைக்கும் இடையே மேற்கொண்டு நடந்த விவாதத்தில், ட்ரொட்ஸ்கி நேர அட்டவணைக்கான பிரச்சனையைத் திரும்ப கொண்டுவந்தார். ரூஹர் விஷயம் பற்றிய விவாதத்தை இடைமறித்து, அவர் சொன்னதாவது: "ரூஹர் விஷயத்தில் எதற்கு இத்தனை அக்கறை செலுத்தப்படுகிறது என்று எனக்குப் புரியவில்லை... இப்போதைய பிரச்சனை ஜேர்மனியில் அதிகாரத்தைக் கையில் எடுப்பதாகும். இதுதான் பணி, மற்ற அனைத்தும் அதனை பின்தொடர்ந்து வரும்.”

ஜேர்மன் தொழிலாளர்கள் பொருளாதாரத் தேவைகளுக்காக போராடக்கூடும், ஆனால் அவ்வளவு எளிதாக அரசியல் நோக்கங்களுக்காகப் போராட மாட்டார்கள் என்ற கவலைகளுக்கு ட்ரொட்ஸ்கி பதிலளித்தார். “வெகுஜனங்களின் மூளையில் முந்தைய தோல்விகள் விட்டுச் சென்ற குறிப்பிட்ட சந்தேகமே அரசியல் தடை வேறு ஏதுமில்லை” என்று அவர் சொன்னார். “தொழிலாள வர்க்கத்தின் பெரிய பிரிவை, அதன் முன்னணிப் பிரிவை, அது அமைப்பு ரீதியிலும் கூட, வெற்றிக்கு வழிநடத்தும் திறன் கொண்டது என்பதை மிகவும் உறுதியான வார்த்தையில் நம்ப வைத்தால் மட்டுமே முடிவான புரட்சிப் போராட்டத்திற்காக ஜேர்மனிய தொழிலாள வர்க்கத்தினை வென்றெடுக்க முடியும் —அவ்வாறான சூழ்நிலை தற்போது இங்கே இருக்கிறது— .... அத்தகையதொரு சூழலில் விதிவசவாத போக்கினை கட்சி வெளிப்படுத்துமானால், அதுதான் மிகப் பெரிய ஆபத்து.”

பின்னர் ட்ரொட்ஸ்கி விதிவசவாதம் வெவ்வேறு வடிவங்களை எடுக்கலாம் என்பதை விளக்கினார்: முதலில், ஒருவர் அதை புரட்சிக்கான சூழல் என்று சொல்கிறார் மற்றும் அதனை தினமும் திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார். அதை ஒருவர் அன்றாடம் கேட்டுப் பழக்கப்பட்டுவிடுகிறார், மற்றும் புரட்சிக்காக காத்திருப்பது கொள்கையாகிறது. பின்னர் ஒருவர் தொழிலாளர்களுக்கு ஆயுதங்களைத் தருகிறார் மற்றும் இது ஆயுத மோதலுக்கு வழிவகுக்கும் என்று கூறுகிறார். ஆனால் இது வெறும் “ஆயுத விதிவசவாதம் மட்டுமே”.

ஜேர்மன் தோழர்களினால் அவருக்குத் தரப்பட்ட தகவல்களில் இருந்து ட்ரொட்ஸ்கி, இந்த பணியை அவர்கள் மிக எளிதாக கருதுவதாக முடிவு செய்கிறார். அவர் சொன்னார், ”புரட்சி என்பது குழப்பமான முன்னோக்கிற்கு அதிகமான ஒன்றாக இருக்க வேண்டுமானால்”, ”அது ஒரு முக்கியமான பணியாக இருக்க வேண்டுமானால், ஒருவர் அதை நடைமுறையானதாக, அமைப்பு சார்ந்த பணியாக ஆக்க வேண்டும்... ஒரு தேதியை தீர்மானித்து, தயார்படுத்திக் கொண்டு போராட வேண்டும்.” என்று அவர் கூறினார். [14]

செப்டம்பர் 23 அன்று, ட்ரொட்ஸ்கி பிராவ்தாவில் ஒரு கட்டுரையை வெளியிட்டார்: "ஒரு எதிர்ப்புரட்சி அல்லது புரட்சியை அட்டவணைப்படி தயாரிக்க முடியுமா?” ட்ரொட்ஸ்கி இந்த கேள்வியை பொதுவான வகையில் ஜேர்மனியின் பெயரைக் குறிப்பிடாமல் விவாதித்தார், காரணம் ஒரு சோவியத் தலைமையின் ஒரு முன்னணிப் பிரதிநிதியால் ஜேர்மன் புரட்சிக்கான ஒரு தேதியை நிர்ணயிக்க அழைப்பு விடுவது, ஒரு சர்வதேச நெருக்கடியை அல்லது ஒரு போரைக் கூடத் தூண்டியிருக்கலாம். இருப்பினும், இந்தக் கட்டுரை ஜேர்மனியின் மீதான விவாதத்திற்கு பங்களித்தது.”

தவறவிடப்பட்ட புரட்சி

இறுதியாக புரட்சி வெடிப்பதற்கான ஒரு தேதியாக நவம்பர் 9 கருதப்பட்டது. ஆனால் நிகழ்வுகள் வேகத்தைக் கூட்டின.

செப்டம்பர் 26 அன்று, அதிபர் ஸ்ட்ரெஸ்மான் ரூஹரில் பிரெஞ்சு ஆக்கிரமிக்கு எதிரான ஒரு செயல்பாடற்ற எதிர்ப்பினை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்தார். அதிகப்படியான பணவீக்கத்தினைக் கொண்டு வருவதற்கு வேறு வழியில்லை என்றும் அவர் வாதிட்டார். இது தீவிர வலதுசாரியைத் தூண்டிவிட்டது. அதே நாளில், பவேரிய அரசாங்கம் நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியது மற்றும் ரிட்டர் வோன் கார் தலைமையிலான ஒரு சர்வாதிகாரத்தை நிறுவியது. வோன் கார் ஹிட்லரின் நாஜிப் படைகளுடன் இணைந்து, முசோலினியின் ரோமுக்கான அணிவகுப்பை பின்பற்றி, தேசிய அளவில் சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக பேர்லின் நோக்கி அணிவகுக்கத் திட்டமிட்டார். காருக்கு ஆதரவு தந்த குடியரசின் இராணுவ பிரிவுகள் பவேரியாவில் நிலை நிறுத்தப்பட்டிருந்தன.

பேர்லின் அரசாங்கம் தனது சொந்தவடிவத்திலான சர்வாதிகாரத்தை அமைப்பதன் மூலம் எதிர்வினையாற்றியது. முழு நிறைவேற்று அதிகாரமும் பாதுகாப்பு அமைச்சருக்கு மாற்றப்பட்டது, அவர் அதை குடியரசின் இராணுவத்தின் படைத்தலைவரான ஜெனரல் ஹான்ஸ் வோன் சீக்டிடம் ஒப்படைத்தார். சீக்ட் தீவிர வலதுசாரியுடன் அனுதாபப்பட்டு புரட்சிகர பவேரிய தளபதிகளை தண்டிக்க மறுத்தார். ஹியூகோ ஸ்டின்னஸ் போன்ற முன்னணி தொழிலதிபர்கள், தேசிய சர்வாதிகாரத்துக்கு ஆதரவு தெரிவித்ததோடு, சர்வாதிகாரியாக சீக்ட் ஐ தேர்ந்தெடுத்தார்கள்.

அக்டோபர் 13 அன்று பாராளுமன்றம், பல்வேறு நாட்கள் விவாதத்திற்குப் பின்னர், ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் என்பதை உள்ளிட்டு, நவம்பர் புரட்சியின் சமூக சாதனைகளை ஒழிப்பதற்கு அரசாங்கத்திற்கு அங்கீகாரம் வழங்கும், ஒரு அதிகாரமளித்தல் சட்டத்தை நிறைவேற்றினார். SPD இந்த அதிகாரமளித்தல் சட்டத்திற்கு வாக்களித்தது. சில SPD அமைச்சர்கள் மற்றும் எம்பிக்களின் உயிர்களை சாதாரணமாக பலியெடுக்கக் கூடிய ஆட்சிக் கவிழ்ப்பு பேர்லினை அச்சுறுத்திக் கொண்டிருந்தபோது, SPDயின் எம்பிக்கள் தொழிலாள வர்க்கத்தின் மீது மேலதிக தாக்குதல்கள் செய்வதில் மும்முரமாக இருந்தார்கள்.

இந்த எதிர்ப்புரட்சித் தயார்படுத்தல்களுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு மையங்களாக சாக்ஸோனியும் துரிங்கியாவும் இருந்தன. இந்த இரண்டு மாநிலங்களிலும் KPD இடது-சாரி SPD அரசாங்கங்களுடன் முறையே அக்டோபர் 10 மற்றும் அக்டோபர் 16ல் கூட்டணி சேர்ந்தது. இது மாஸ்கோவின் விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாகும். கூட்டணி ஆட்சியில் சேர்ந்ததன் மூலம், KPD உறுதியான நிலையையும் ஆயுதங்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை கொண்டிருந்தது.

அந்த இரண்டு அரசாங்கங்களும் ஏற்கனவே உள்ள சட்டங்களின்படி அமைக்கப்பட்டது மட்டுமின்றி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்டிருந்தது, இருப்பினும் சாக்ஸோனியில் இருக்கும் குடியரசின் இராணுவ தளபதியான, ஜெனரல் முல்லர், அவற்றின் அதிகாரத்தை அங்கீகரிக்க மறுத்துவிட்டார். பேர்லின் அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி தனது கட்டைளைக்கு காவல்துறையை அடிபணியச் செய்தார்.

தெற்கில் சாக்ஸோனி மற்றும் துரிங்கியாவை எல்லைகளாகக் கொண்ட பவேரியாவிலிருந்தான அச்சுறுத்தலும், வடக்கில் அமைந்துள்ள பேர்லினின் மைய அரசாங்கத்திடமிருந்தான அச்சுறுத்தல் காரணமாகவும், புரட்சிக்கான திட்டங்களை KPD முன்னெடுக்க வேண்டியிருந்தது. அது கெம்னிட்ஸ் நகரில் உள்ள தொழிற்சாலைகளின் கவுன்சிலின் காங்கிரஸை அக்டோபர் 21 அன்று சாக்ஸோனியில் கூட்டியது. இந்த காங்கிரஸ் ஒரு பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து, ஜேர்மனி முழுவதும் கிளர்ச்சிக்கான ஒரு சமிக்ஞையைத் தருவதற்காக என்று கருதப்பட்டது.

ஆனால் இடது சமூக ஜனநாயகவாதிகள் இதனை ஏற்காததால், பிராண்ட்லர் இந்த திட்டங்களை இரத்து செய்து விட்டு, கிளர்ச்சியை திரும்பப் பெற்றுக்கொண்டார். பிராண்ட்லர் தனது நெருங்கிய நம்பிக்கைக்குரியவரான கிளாரா ஜெட்கின்னுக்கு எழுதிய தனிப்பட்ட கடிதத்தில், பெரும்பாலான பிரதிநிதிகள் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கக்கூடும். ஆனால் இடது சமூக ஜனநாயகவாதிகளின் ஆதரவில்லாமல் செயல்படவிரும்பவில்லை என்றார்.

“கெம்னிட்ஸ் மாநாட்டின் போது நான் ஒன்றை உணர்ந்து கொண்டேன், அதாவது பொது வேலை நிறுத்தத்திற்கான முடிவில் இடதுசாரி SPDகள் கையொப்பமிடுவதற்கு அவர்களை சம்மதிக்க வைக்க முடியவில்லை என்றால், எந்த சூழ்நிலையிலும் தீர்க்கமான போராட்டத்தில் நுழைய முடியாது” என்று பிராண்ட்லர் எழுதினார். “பெருமளவு எதிர்ப்புக்கு எதிராக நான் முடிவை மாற்றியமைத்தேன் மற்றும் கம்யூனிஸ்டுகளாகிய நாம் சொந்தமாக போராட்டத்தில் இறங்குவதிலிருந்து தடுத்தேன். நிச்சயமாக கெம்னிட்ஸ் மாநாட்டில் பொது வேலை நிறுத்தத்திற்காக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை நாம் பெற்றிருக்கலாம். ஆனால் SPD மாநாட்டை விட்டு வெளியேறியிருப்பார்கள் மற்றும் சாக்ஸோனிக்கு எதிரான குடியரசின் தலையீட்டின் நோக்கம் பவேரியாவிற்கு எதிரான குடியரசின் தலையீட்டினை மூடி மறைப்பதற்காக மட்டுமே என்ற அவர்களின் குழப்பமான முழக்கம், நமது போராடும் உணர்வினை உடைத்திருக்கும். எனவே நான் நனவுபூர்வமாக ஒரு பொய்யான சமரசத்திற்காக வேலை செய்தேன்.” என்றார். [15]

புரட்சியை இரத்து செய்வதற்கான முடிவு ஹம்பேர்கை சரியான நேரத்தில் சென்றடையவில்லை. இங்கே ஒரு கிளர்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது, ஆனால் அது தனிமைப்படுத்தப்பட்டதாக இருந்ததோடு மூன்று நாட்களுக்குள்ளேயே தோற்கடிக்கப்பட்டது.

கெம்னிட்ஸ் காங்கிரஸ் சந்திப்பு நடந்து கொண்டிருக்கும்போதே, குடியரசின் இராணுவம் சாக்ஸோனியை ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிட்டது. ஆயுத மோதல்களில் பல தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அக்டோபர் 28 ஜனாதிபதி ஃபரெட்ரிக் ஈபேர்ட், ஒரு சமூக ஜனநாயகவாதி, சாக்ஸோனிக்கு எதிராக குடியரசின் சட்டத்தை நிறைவேற்ற உத்தரவிட்டார், அது குடியரசின் இராணுவத்தினால் எரிக் ஜீக்னர் தலைமையிலான ஆட்சியை சாக்ஸோனியிலிருந்து அகற்றுவதாகும். எரிக் ஜீக்னரும் ஒரு சமூக ஜனநாயகவாதியே. பொதுமக்களின் கட்டுக்கடங்காத கோபத்தின் காரணமாக பேர்லினில் ஸ்ட்ரேஸ்மான் அரசாங்கத்திலிருந்து SPD இராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் உண்டானது. சில நாட்களுக்கு பின்னர் குடியரசின் இராணுவம் துரிங்கியாவில் நுழைந்து அங்கிருந்த அரசாங்கத்தை அகற்றியது.

இரண்டு இடதுசாரி அரசாங்கங்கள் ஏபேர்ட் மற்றும் சீக்ட்டினால் அகற்றப்பட்டதன் விளைவாக பவேரியாவில் தீவிர வலதுசாரிகள் ஊக்குவிக்கப்பட்டனர். நவம்பர் 8, அடால்ஃப் ஹிட்லர் மூனிச்சில் “தேசிய புரட்சியை” பிரகடனப்படுத்தி ஆட்சிக் கவிழ்ப்பை அரங்கேற்றினார். பவேரிய சர்வாதிகாரி கார் (Kahr) ஐ பேர்லினுக்கு அணிவகுக்க செய்து அதிகாரத்தை கையிலெடுக்க வற்புறுத்துவதே அவருடைய நோக்கமாக இருந்தது. ஹிட்லருக்கு முதலாம் உலகப் போரின் உயர் தளபதிகளில் ஒருவரான லூடன்டோர்ஃப் ஆதரவளித்தார்.

ஹிட்லர்-லூடன்டோர்ஃப் ஆட்சிக்கவிழ்ப்பு தோல்வியடைந்தது. பேர்லின் ஏற்கனவே வலதுசாரிகளின் கையில் சென்று விட்டது, பவேரிய வலதுசாரிக்கு ஹிட்லர் போன்ற சந்தேகத்திற்குரிய நபரின் தேவை இனி ஒருபோதும் இருக்கவில்லை. ஏபேர்ட், அனைத்து ஆயுதப்படைகளுக்குமான தளபதியாக சீக்ட் ஐ நியமித்து மற்றும் அதிகாரத்தையும் அவர் கையில் கொடுத்தார், இதன் மூலம் ஆட்சிக்கவிழ்ப்புக்கு இசைவாக செயற்பட்டார். வைமார் குடியரசின் நிறுவனங்கள் இன்னும் சம்பிரதாயபூர்வமாக இருக்கும் அதேவேளை, எழுத்தில் இல்லா நடைமுறையில் மார்ச் 1924 வரை ஜேர்மனி ஒரு இராணுவ சர்வாதிகாரத்தினால் ஆட்சி செய்யப்பட்டது.

KPD ஏன் புரட்சியைத் தவறவிட்டது?

இதற்கான எளிய பதில் பிராண்ட்லரை அனைத்துக்கும் குற்றஞ்சாட்டுவதாகும். இது சினோவியேவ் மற்றும் ஸ்ராலினின் எதிர்வினையாக இருந்தது, அவர்கள் பிராண்டலரை பலிக்கடா ஆக்கினார்கள். அதே சமயம் ஜேர்மனியில் புரட்சிக்கான சாத்தியமுள்ள சூழ்நிலை பற்றி மிகைப்படுத்தப்பட்ட தவறான தகவல்களை வழங்கியதற்காக அவர்கள் KPD ஐ குற்றஞ்சாட்டினார்கள். இந்த வகையில், ஒரு புரட்சிகர ஆயுதக்கிளர்ச்சிக்கான திட்டம் அடிப்படையாகக் கொண்டிருந்த முழு மதிப்பீட்டையும் அவர்கள் சவால்செய்தனர்.

ஆயுதக்கிளர்ச்சி திரும்பப் பெற்ற மூன்று வாரங்களுக்கு குறைவான காலத்தில், அவர்கள் ஜேர்மனியின் நிகழ்வுகளை வேறுவிதமாக கூறத் துவங்கினர். இடதுசாரி எதிர்ப்புடனான போராட்டம் முழுமையாக வெடித்துள்ளதால், தங்கள் பங்கினை மறைப்பதற்காகவும் உட்பூசலுக்கான காரணங்களுக்காகவும் அவ்வாறு செய்தார்கள். அக்டோபர் 15 அன்று இடது எதிர்ப்பின் முக்கிய ஆவணமான, ஸ்டேட்மென்ட் ஆஃப் தி 46 (Statement of the 46) வெளியிடப்பட்டது. நவம்பர் இறுதியில், ட்ரொட்ஸ்கி புதிய பாதையை (The New Course) வெளியிட்டார்.

சினோவியேவ் மற்றும் ஸ்ராலினால் எடுக்கப்பட்ட எளிதான அணுகுமுறையை ட்ரொட்ஸ்கி நிராகரித்தார். ஆயுதக்கிளர்ச்சியை திரும்பப் பெற்றுக்கொள்வதற்கான பிராண்ட்லரின் முடிவை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அதை அவர் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட முடிவாகப் பார்க்கவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, சர்வதேச கம்யூனிஸ்டுகளின் பிரதிநிதியாகவும், மத்திய கட்சித் தலைமையான ஜேர்மன் தலைமையகத்தின் பிரதிநிதியாகவும் கெம்னிட்ஸில் இருந்த கார்ல் ராடெக், பிராண்ட்லரின் முடிவை ஏற்றுக்கொண்டார்.

பிராண்ட்லரின் வற்புறுத்தல் அதாவது புரட்சி தோல்வியடையும் என்பதாகவும் —இடது சமூக ஜனநாயகவாதிகளின் ஆதரவில்லாமல் ஆயுதக்கிளர்ச்சியை தொடங்கினால் கம்யூனிஸ்டுகள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று கூறுவது— முந்தைய தவறுகளுக்கு ஏற்ப இருந்தது, அதற்கு பிராண்ட்லர் மட்டும் காரணம் அல்ல, அகிலமும்தான். சினோவியேவ் தலைமையேற்ற அகிலம் மற்றும் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை (அதன் பெரும்பான்மை மற்றும் இடதுசாரிப் பிரிவு) நீண்டகாலத்திற்கு ஒரு செயலற்ற, பொதுவாக ”மத்தியவாத” மனப்போக்கினை ஜேர்மனியில் உருவாகி வரும் நிகழ்வுகள் தொடர்பாக காட்டி வந்தார்கள். ஜனவரியில் ரூஹரை பிரான்ஸ் ஆக்கிரமித்த பின்னர் சமூக மற்றும் அரசியல் சூழ்நிலைகள் வியக்கத்தக்க வகையில் மாறிவந்த போதிலும், புரட்சி என்பது உடனடி நிகழ்ச்சி நிரலாக இல்லாதபோது, ஆரம்ப நிலையில் அவர்கள் அபிவிருத்தி செய்த அதே அரசியல் வழி முறைகளிலேயே, தொடர்ந்து பணியாற்றி வந்தார்கள்.

அவர்கள் மிகத் தாமதமாகத் தான், ஆகஸ்ட் நிகழ்வுகளின் நடுவில், தங்கள் பாதையை மாற்றிக் கொண்டு, ஆயுதக் கிளர்ச்சிக்கு தயார்படுத்த தொடங்கினார்கள். இது அவர்கள் தயார்படுத்துவதற்கு இரண்டு மாதங்களைத் தந்தது, மற்றும் தயார்படுத்தல்கள் ஒருங்கிணைப்பில்லாதவையாகவும், தயக்கம் காட்டுவதாகவும் போதுமானதாக இல்லாத தன்மையாகவும் இருந்தது.

ஜூன் 1924ல் 5வது மருத்துவ மற்றும் கால்நடைமருத்துவப் பணியாளர்களின் அனைத்து யூனியன் காங்கிரஸிற்கு வழங்கிய உரையில், ட்ரொட்ஸ்கி தோல்விக்கான பின்வரும் காரணங்களை கொடுத்தார்: “ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் தோல்விக்கான அடிப்படைக் காரணம் என்ன?” என்று அவர் கேட்டார். “ரூஹர் ஆக்கிரமிப்புக் கணத்திலிருந்து புரட்சிகர நெருக்கடியின் சரியான நேரத்தை மதிப்பிடவில்லை, குறிப்பாக செயலற்ற எதிர்ப்பு முடிவுற்ற கணத்திலிருந்து (January-June 1923) எனலாம். அது முக்கியமான கணத்தைத் தவறவிட்டது.... ஐக்கிய முன்னணி சூத்திரத்தின் அடிப்படையில் அதன் போராட்ட மற்றும் கொள்கைப் பரப்பு பணிகளை மேற்கொள்ள ரூஹர் நெருக்கடி தொடங்கிய பின்னரும்கூட, நெருக்கடிக்கு முன்பிருந்த அதே வேகத்தில் அதே வடிவத்தில் தொடர்ந்தது இதற்கிடையே, இந்த தந்திரோபாயம் ஏற்கனவே தீவிரமானவகையில் போதுமானதாக இல்லை.

“வெகுஜனங்களுக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக கட்சிக்குமே, அதாவது இந்த நேரம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான உடனடி தயாரிப்பில் ஈடுபடுவதற்கான விஷயம் பற்றியதாகும் என்பதைக் காட்ட வேண்டியிருந்தது. நிறுவன அளவில் வளர்ந்து வரும் கட்சியின் செல்வாக்கினை வலுப்படுத்தி, அரசின் மீது நேரடித் தாக்குதல் நடத்துவதற்கான ஆதரவிற்கான அடித்தளத்தை ஏற்படுத்தவும் வேண்டியிருந்தது. ஒட்டுமொத்த கட்சியினையும் தொழிற்சாலை அலகுகளின் அடிப்படையில் மாற்றவேண்டிய அவசியம் இருந்தது. இரயில்வேயிலும் அலகுகளை உருவாக்க வேண்டிய அவசியம் இருந்தது. இராணுவத்தில் வேலைக்கான கேள்வியை தீர்க்கமாக எழுப்ப வேண்டிய அவசியம் இருந்தது. இந்தப் பணிகளுக்காகவும், அதற்கு மிகவும் தீர்க்கமான மற்றும் உறுதியான வேகத்துடன் அதிக புரட்சிகரமான பாத்திரத்தைத் தருவதற்காகவும், ஐக்கிய முன்னணியின் உத்தியை முழுவதுமாகவும் ஏற்பது அவசியமாக இருந்தது சிறப்பாக அவசியமாக இருந்தது. இந்த அடிப்படையில், இராணுவ-தொழில்நுட்ப தன்மையுடைய பணி மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்....

“எனினும், மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அதிகாரத்தைக் கைப்பற்றுவதை நோக்கி தீர்மானமான உத்தி சார்ந்த திருப்பத்தை உண்டாக்குவதை நல்ல நேரத்தில் உறுதி செய்வதாகும். இது செய்யப்படவில்லை. இதுதான் முக்கியமான மற்றும் அபாயகரமான விலக்கலாகும். இதிலிருந்து தான் அடிப்படை முரண்பாடு தொடர்ந்தது. ஒருபுறம், கட்சி ஒரு புரட்சியை எதிர்பார்த்தது, மற்றொரு புறம், மார்ச் நிகழ்வுகளில் அது தனது கையை சுட்டுக்கொண்டதால் [இங்கே ட்ரொட்ஸ்கி 1921ஐ குறிப்பிடுகிறார்], அது 1923ன் கடைசி மாதம் வரை, புரட்சியை ஏற்படுத்துவதற்கான ஒரு யோசனையைத் தவிர்த்தது. அதாவது, கிளர்ச்சிக்குத் தயாராவது. பேரழிவு நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், கட்சியின் அரசியல் செயல்பாடு ஒரு அமைதியான நேரத்திற்கான வேகத்தில் மேற்கொள்ளப்பட்டது.

"ஆயுதக்கிளர்ச்சிக்கான நேரம் தீர்மானிக்கப்பட்ட போது, எதிரிகள் ஏற்கனவே கட்சி இழந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு தனது நிலையை வலுப்படுத்திக் கொண்டு விட்டார்கள். கட்சியின் இராணுவ-தொழில்நுட்ப தயார்ப்படுத்தல் தொடங்கிய கடும் வேகம், முந்தைய அமைதி நேரத்திற்கான வேகத்தில் கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால், அதிலிருந்து பிரிந்து நின்றது. வெகுஜனங்கள் கட்சியைப் புரிந்துகொள்ளவில்லை மற்றும் அதனுடன் செயல்பட முடியவில்லை. ஒரு கட்டத்தில் கட்சி வெகுஜனத்திடம் இருந்து துண்டிக்கப்பட்டதாக உணர்ந்தது, மற்றும் செயலிழந்துவிட்டதாக உணர்ந்தது. இது முதல் நிலைகளில் இருந்து சண்டையிடாமல் திடீரென்று திரும்பப் பெற்றுக்கொள்வதை விளைவித்தது — எல்லா சாத்தியமான தோல்விகளிலும் இதுவே கடினமாதாகும்.” [16]

அக்டோபர் 1923ல் தேசிய அளவில் ஒரு ஆயுதக்கிளர்ச்சியை ஏற்பாடு செய்வது சாத்தியமான ஒன்றாக இருந்ததா?

ஜேர்மனியில் முன்னணி கம்யூனிஸ்டுகள், அதேபோல் ஜேர்மனியில் இருந்த அகிலத்தின் தலைவர்கள் மற்றும் இராணுவ நிபுணர்கள் அளித்த பல்வேறு அறிக்கைகள் உள்ளன, அவை அவர்களின் மிகமோசமான தயார்படுத்தல் நிலைகளை சாட்சிப்படுத்துகின்றன. புரட்சிகர நூற்றுவர்கள் என்று அழைக்கப்படும் துருப்புக் குழு உருவாக்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டது, ஆனால் ஆயுதமேதும் கிடைக்கவில்லை. KPDயின் பிரச்சாரக் கருவிகள் —தடைகள் மற்றும் ஒடுக்குமுறையின் காரணமாக— படுமோசமான நிலையில் இருந்தன. கட்சியின் பிராந்தியங்களுக்கு இடையேயான தகவல் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பு மிக மோசமாக செயல்பட்டது.

மற்றொருபுறம், ஹம்பேர்க்கில் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள் தனிச்சிறப்பான அளவிலான தைரியம், ஒழுக்கம் மற்றும் திறனை வெளிப்படுத்தினார்கள். தடுப்புகள் மீது 300 தொழிலாளர்கள் மட்டும் போராடிக் கொண்டிருந்தார்கள், ஆனால் அவர்கள் விரிவான, நேர்மறையான ஆதரவை பெரிய அளவிலான மக்களிடமிருந்து பெற்றார்கள், இருந்தபோதிலும் அது பெருமளவு செயலற்ற ஆதரவாக இருந்தது.

மருத்துவ மற்றும் கால்நடை மருத்துவப் பணியாளர்களுக்கான தனது உரையில், புரட்சியின் இயங்கு சக்தியை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார். “கம்யூனிஸ்டுகள் தங்கள் பின்னால் தொழிலாளர் வெகுஜனங்களின் பெரும்பான்மையைக் கொண்டிருந்தார்களா?” என்று அவர் கேட்டார். “இது புள்ளிவிவரத்துடன் பதிலளிக்க வேண்டிய கேள்வி அல்ல. இந்தக் கேள்வி புரட்சியின் இயங்கு சக்தியின் மூலம் முடிவு செய்யப்பட வேண்டியதாகும்.”

“வெகுஜனங்கள் போராடும் மனநிலையில் இருந்தார்களா?” என்று அவர் தொடர்ந்தார். “இது தொடர்பாக 1923க்கான வரலாறு முழுவதும் எந்தவிதமான சந்தேகத்தையும் ஏற்படுத்தவில்லை”. ட்ரொட்ஸ்கி இவ்வாறு நிறைவு செய்தார்: "அத்தகைய சூழ்நிலைகளில் வெகுஜனங்கள் ஒரு உறுதியான, தன்னம்பிக்கையுள்ள தலைமை இருந்து, அந்த தலைமையின் மேல் வெகுஜனத்திற்கு நம்பிக்கை இருந்தால் மட்டுமே அவர்கள் முன்னோக்கி செல்ல முடியும். மக்கள் போராடும் மனநிலையில் இருந்தார்களா இல்லையா என்ற கலந்துரையாடல்கள் இயல்பிலே மிக அகநிலைத் தன்மையையே கொண்டிருக்கின்றன மற்றும் அடிப்படையில் கட்சியின் தலைவர்கள் மத்தியில் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியது. .."[17]

அக்டோபர் படிப்பினைகள்

ஒரு போராட்டமில்லாமல் சரணாகதி அடைவது என்பதுதான் நிச்சயமாக ஜேர்மன் நிகழ்வுகளின் மோசமான சாத்தியமான விளைவாக இருந்தது. அது KPDஐ சோர்வடையச் செய்து சீர்குலைத்தது மற்றும் ஆளும் உயர் தட்டும் இராணுவமும் தாக்குதல் நடத்தி தங்களின் அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்ளக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கியது. எனவே ட்ரொட்ஸ்கி ஜேர்மனியின் தோல்விக்கான படிப்பினைகள் இரக்கமற்ற வகையில் வரையப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் பலிகடாக்களை சுட்டிக்காட்டுவதை நிராகரித்தார், அதுவே அடிப்படை அரசியல் பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி என்றார். இந்த படிப்பினைகளை வரையறுப்பது இன்றியமையாதது மட்டுமல்ல, தவிர்க்கமுடியாத வகையில் எழக்கூடிய எதிர்கால புரட்சிகர வாய்ப்புகளுக்கு ஜேர்மானிய தலைமையை தயார்படுத்துவதற்குமானதாகும். அது அகிலத்தின் பிற பிரிவுகளுக்கும் முக்கியமானது, அவர்கள் அதேபோன்ற சவால்களையும் பிரச்சனைகளையும் எதிர் கொள்வார்கள்.

வரலாற்றில் ஒரே வெற்றிகரமான பாட்டாளி வர்க்கப் புரட்சியான, ரஷ்ய அக்டோபர் புரட்சியின் படிப்பினைகள் முறையாக ஒருபோதும் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை என்று ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டார். 1924ஆம் ஆண்டு கோடையில் அக்டோபர் படிப்பினைகள் (Lessons of October)என்ற சிறுநூலை வெளியிட்டார், அது ஜேர்மனியின் தோல்வியைக் கருத்தில் கொண்டு ரஷ்யாவின் வெற்றிகரமான அக்டோபர் புரட்சியை விவாதித்தது.

அவர் “பாட்டாளி வர்க்கப் புரட்சியின் விதிகள் மற்றும் வழிமுறைகளின் ஆய்வுக்கான” தேவையை வலியுறுத்தினார். "ஒரு புரட்சிகரமான காலத்தில் நுழையும்போது ஒவ்வொரு கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனைகள் இருக்கின்றன: ”பொதுவாக சொன்னால், கட்சியின் இலக்கின் ஒவ்வொரு தீவிரமான திருப்பத்திலும் கட்சியில் சிக்கல்கள் எழும், அது திருப்பத்திற்கான முன்னோடியாகவோ அல்லது அதன் ஒரு பின்விளைவாகவோ இருக்கலாம். இதற்கான விளக்கமானது, கட்சியின் வளர்ச்சிக்கான ஒவ்வொரு காலகட்டத்திலும் அதற்கென்ற ஒரு சிறப்பம்சம் இருக்கும் மற்றும் சிறப்பு பழக்கங்கள் மற்றும் பணியாற்றுமுறைகளுக்கு அது அழைப்பு விடுக்கும் என்ற உண்மையில் இருக்கிறது. ஒரு உத்திமுறை திருப்பம் ஒரு பெரிய அல்லது சிறிய முறிவை இந்த பழக்கங்கள் மற்றும் வழிமுறைகளில் குறிக்கிறது. இங்குதான் உட்கட்சி விரிசல்கள் மற்றும் நெருக்கடிகளுக்கான நேரடியான மற்றும் மிகவும் உடனடியான மூலம் இங்குதான் இருக்கிறது.”

ஜூலை 1917ல் லெனின் எழுதியதை ட்ரொட்ஸ்கி குறிப்பிடுகிறார்: “வரலாற்றில் திடீரென்று ஒரு மாற்றம் ஏற்படும் போது, மிகவும் மேம்பட்ட கட்சிகள் கூட புதிய நிலைமைகளுக்கு நீண்டகாலத்திற்கு அல்லது ஒரு குறுகிய காலத்திற்கு மாற்றியமைத்துக்கொள்ள இயலாது இருக்கும், இது மிக அடிக்கடி நிகழ்கிறது. அவர்கள் நேற்று சரியானதாக இருந்த நேற்றைய முழக்கங்களை திரும்பத்திரும்ப கூறிக் கொண்டே இருந்தார்கள், ஆனால் இன்று அவற்றின் அர்த்தத்தை அவை இழந்துவிட்டன, வரலாறு அதன் திடீர்த் திருப்பத்தைச் செய்யும்போது அதேபோன்று ‘திடீரென்று’ அதன் அர்த்தத்தையும் இழந்ததாக மாறுகிறது”.

“எனவே,” ட்ரொட்ஸ்கி இவ்வாறு முடித்தார், “மிகவும் எதிர்பாராமல் அல்லது மிகவும் திடீரென்று இந்த திருப்பம் ஏற்படுமானால், மற்றும் முந்திய காலங்களில் அதிகப்படியான செயலின்மை மற்றும் பழமைவாதத்திற்கான கூறுகள் கட்சியின் முக்கிய அமைப்புகளில் குவிந்துவிட்டால், அப்போது கட்சியானது, பல ஆண்டுகளுக்கு அல்லது பல தாசப்தங்களுக்கு தன்னைத் தயார்படுத்தி வந்த அந்த உயர்ந்த மற்றும் முக்கியமான தருணங்களிலும், தனது தலைமைப் பாத்திரத்தை நிறைவேற்றத் திராணியற்றது என்பதை கட்சி தானே நிரூபித்துவிடுகிறது. கட்சி நெருக்கடியினால் மூழ்கடிக்கப்படுகிறது, இயக்கமானது கட்சியைக் கடந்து செல்கிறது, மற்றும் தோல்வியை நோக்கி செல்கிறது. …

"எல்லாத் திருப்பங்களிலும் மிகவும் எதிர்பாராதது என்னவென்றால் பாட்டாளிக் கட்சியைத் தயார்படுத்தல் மற்றும் பிரச்சாரத்திற்கான பணியிலிருந்து அல்லது அமைப்பு மற்றும் கிளர்ச்சியிலிருந்து, உடனடியாக ஆட்சிக்கான போராட்டத்திற்கு, முதலாளித்துவத்திற்கு எதிராக ஒரு ஆயுத் கிளர்ச்சிக்கு திரும்பியதே ஆகும். உறுதியற்ற, ஐயுறவுவாத, சந்தர்ப்பவாத, சுருக்கமாக சொன்னால் மென்ஷிவிக் என எது கட்சிக்குள் இன்னும் எஞ்சியிருந்தாலும் அவை அனைத்தும் ஆயுதக்கிளர்ச்சிக்கு எதிராக மேற்பரப்பில் எழுகிறது, அதன் எதிர்ப்பினை நியாயப்படுத்துவதற்கான கோட்பாட்டு சூத்திரங்களை நாடுகிறது, மற்றும் அவற்றை நேற்றைய சந்தர்ப்பவாத எதிரிகளின் ஆயுதங்களில் தயாராக கண்டறிகிறது. எதிர்காலத்தில் ஒருமுறைக்கும் மேலாக இந்த நிகழ்வினை கவனிப்பதற்கான சந்தர்ப்பம் நமக்கு கிடைக்கும். "[18]

ட்ரொட்ஸ்கியின் இந்த அணுகுமுறையை சினோவியேவும் ஸ்ராலினும் நிராகரித்தனர். உட்பூசல் மற்றும் அகநிலை நோக்கங்களால் இயக்கப்பட்டு, தங்களின் சொந்தத் தடங்களை மறைப்பதற்காக மற்றும் தவறான, முடிந்த அனைத்திற்கும் பிராண்ட்லரை பலிகடாவாக ஆக்கிவிட்டு, ஜேர்மனியின் நிகழ்வுகளை பொய்மைப்படுத்தினார்கள். பின்விளைவுகள் பேரழிவாக இருந்தது. KPD இன் தலைமை —எந்தவிதமான படிப்பினைகளும் வரையறுக்கப்படாமல்— ஐந்தாண்டுகளில் ஐந்தாவது முறையாக மாற்றியமைக்கப்பட்டது.

ஜனவரி 1924ல் ரஷ்ய மத்திய கமிட்டியில் நடந்த உயர்தலைமைக் கூட்டத்தில் ஸ்ராலினுடன் காரசாரமான வாதங்களை பரிமாறிக்கொண்டபோது ராடெக், அனுபவமிக்க மார்க்சிச காரியாளர்கள், மத்தியவாத பின்புலத்தைக் கொண்டிருந்த UPSD (சுதந்திர SPD) அல்லது எந்தவித புரட்சிகர அனுபவமும் இல்லாத நபர்களால் மாற்றியமைக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார். இயக்கத்தில் 25 ஆண்டுகால வரலாற்றினைக் கொண்ட ஸ்பார்டகுஸ் புண்ட்டின் நிறுவன உறுப்பினரான ஹெயின்ரிச் பிராண்ட்லர், ரூத் ஃபிஷர் மற்றும் அர்காடி மஸ்லோவால் ஆகிய எந்தவிதமான கடந்தகால புரட்சிகர அனுபவமும் இல்லாத வளமான முதலாளித்துவ பின்புலத்தைக் கொண்ட இளம் அறிவாளிகளைக் கொண்டு மாற்றப்பட்டார். மத்தியவாத UPSD இன் இடது பெரும்பான்மை KPD உடன் இணைந்த போதுதான், புதிய தலைமையின் பெரும்பான்மையை கொண்ட, மையக்குழு, டிசம்பர் 1920ல் KPD இல் சேர்ந்தது.

அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் —மேலும் களையெடுப்புக்கள் மற்றும் மாற்றீடுகளுக்கு பின்னர்— தலைமையின் மாற்றம் ஒரு பாதையை வகுத்தது, ஸ்ராலினின் கட்டளைகளுக்கு KPD முற்றிலும் அடிபணிந்தது, 10 ஆண்டுகளுக்குப் பின்னர் KPD இன் அழிவுகரமான நிலைப்பாடு ஹிட்லர் ஆட்சிக்கு வருவதற்கு வழி வகுத்தபொழுது அத்தகைய பேரழிவுண்டாக்கும் பின்விளைவுகளைக் கொண்டிருந்திருந்தது. இடதுசாரி பிஷ்ஷர் மற்றும் மஸ்லோவ் உடனான ஸ்ராலினின் இணக்கம் குறிப்பாக இழிவானது, அந்த நிகழ்வின் போது அவர், அனேகமாக வலதுசாரி நிலைப்பாடுகளை வகித்தார். 1921 மார்ச் நிகழ்வுகளின் போது காவல்துறைக்கு தகவல்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைக்குட்பட்டிருந்த மஸ்லோவை, அனைத்து குற்றச்சாட்டுகளிலும் இருந்து விடுவிப்பதை உறுதி செய்தததன் மூலமாக, அவரது விசுவாசத்தை ஸ்ராலின் பெற்றார்.

சமூக ஜனநாயகத்தை பாசிசத்துடன் சமன்படுத்துகின்ற சமூக பாசிசம் பற்றிய தத்துவம், அதன் முதலாவது வெளிப்பாட்டை சினோவியேவால் வரையறுக்கப்பட்ட ஜேர்மன் நிகழ்வுகள் பற்றிய ஆவணத்தில் கண்டது மற்றும் ஜனவரி 1924ல் இடது எதிர்ப்புக்கு எதிராக அகிலத்தின் நிறைவேற்றுக் குழுவின் தலைமையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அது சொல்வதாவது: "ஜேர்மன் சமூக ஜனநாயகத்தின் தலைமை தட்டுகள், சோசலிச முகமூடி அணிந்துள்ள ஜேர்மன் பாசிசத்தின் ஒரு பிரிவே அன்றி வேறு இல்லை”. "[19]

ஐக்கிய முன்னணியின் உத்தியிலிருந்து சரியான நேரத்தில் ஆட்சிக்கான போராட்டத்திற்காக நகர்வதற்கு கட்சி தவறியதால், சினோவியேவ் மற்றும் ஸ்ராலின் ஐக்கிய முன்னணி உத்தியை ஒட்டுமொத்தமாக நிராகரித்தனர். நாஜிகளுக்கு எதிரான SPD உடனான ஐக்கிய முன்னணியின் எந்த வடிவத்தையும் நிராகரித்த, சமூக பாசிசம் பற்றிய கோட்பாடு 1929ல் புத்துயிர் பெற்றது, அது பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தில், தொழிலாள வர்க்கத்தை நிராயுதபாணியாக்குவதில் ஒரு அழிவுகரமான பங்கினை ஆற்றியது.

1928ல், ஜேர்மன் அக்டோபரிலிருந்தான அடிப்படைப் பாடங்களை ட்ரொட்ஸ்கி மீண்டும் ஒருமுறை சுருங்க உரைத்தார். அகிலத்தின் ஆறாவது காங்கிரஸுக்கான வரைவுத் திட்டத்தை விமர்சித்து எழுதுகையில்: "மெதுவான, அமைப்பு ரீதியான வளர்ச்சிக் காலகட்டத்தில், அகநிலைக் காரணிகளின் பங்கு, இரண்டாம்தரம்மிக்க ஒன்றாக இருக்கலாம். பின்னர் படிப்படியான வளர்ச்சிக்கான “மெதுவாக ஆனால் உறுதியாக” மற்றும் “ஒருவர் ஊசிகளுக்கு எதிராக உதைக்கக் கூடாது” போன்ற மாறுபட்ட பழமொழிகள் எழுகின்றன. அவை “கட்டங்களை பாய்ந்து செல்லுதல்” என்பதில் வெறுப்படைந்த ஒரு அமைப்பு ரீதியான சாகப்தத்தின் தந்திரோபாயத்தை தாங்கிநிற்கின்றது. ஆனால் புறநிலை முன்நிபந்தனைகள் முதிர்ச்சியடைந்தவுடன், முழு வரலாற்று நிகழ்வுப்போக்கிற்கான சாவி, அகநிலைக்காரணியின் கைகளுக்கு செல்கிறது, அதாவது கட்சி. கடந்தகால சகாப்தத்தின் உத்வேகத்தின் மீது நனவுபூர்வமாகவோ அல்லது நனவற்ற முறையிலோ மேம்பட்டிருந்த சந்தர்ப்பவாதம், அகநிலைக் காரணியின் பங்கினை எப்போதும் குறைத்து மதிப்பிடுகிறது, அதாவது கட்சி மற்றும் புரட்சிகரத் தலைமையின் முக்கியத்துவத்தை. இவை அனைத்தும், ஜேர்மன் அக்டோபரின் படிப்பினைகள், சீனப் புரட்சி மற்றும் ஆங்கில-ரஷ்ய கமிட்டி படிப்பினைகள் மீதான விவாதத்தில் முழுமையாக வெளியிடப்பட்டன. இந்த எல்லா நிகழ்வுகளிலும், அதோடு முக்கியத்துவம் குறைந்த மற்றவற்றிலும் சந்தர்ப்பவாத போக்கு, ஒரு பாதையை ஏற்பதில் ”வெகுஜனங்களையே” முற்றிலும் நம்பியிருந்தது, எனவே, அது புரட்சிகரத் தலைமையின் ”தலைமைக்கான” கேள்வியை முற்றிலுமாக அகற்றிவிட்டது. அத்தகையதொரு மனப்பான்மை, பொதுவாக தவறானது, அது ஏகாதிபத்திய சகாப்தத்தில் நேர்மறையாக அபாயகரமான விளைவுடன் செயல்படுகிறது." என்றார்[20]

முற்றும்

குறிப்புகள்:

1. Leon Trotsky, The Lessons of October, in The Challenge of the Left Opposition (1923-25), p. 201.[return]

2. Arthur Rosenberg, (Entstehung und Geschichte der Weimarer Republik, Frankfurt am Main: Athenäum 1988), p. 395.[return]

3. Ibid., p. 402.[return]

4. Hermann Weber, (Die Wandlung des deutschen Kommunismus, Band 1, Frankfurt 1969), p. 43.[return]

5. Rosa Luxemburg, (Rückblick auf die Gothaer Konferenz, in Gesammelte Werke Band 4, Berlin 1974), p. 273.[return]

6. Ibid., p. 274.[return]

7. Leon Trotsky, (The Third International After Lenin, New Park: 1974), pp. 66-67.[return]

8. Quoted by Pierre Broué (The German Revolution 1917-1923, Haymarket Books: 2006) p. 702. [return]

9. Quoted by Broué, ibid., p. 705. [return]

10. Quoted by Broué, ibid., p. 726. [return]

11. Bernhard H. Bayerlein u.a. Hsg., (Deutscher Oktober 1923. Ein Revolutionsplan und sein Scheitern, Berlin: 2003) p. 100. [return]

12. Ibid., pp. 122-27. [return]

13. Ibid., pp. 135-136. [return]

14. Ibid., pp. 165-167. [return]

15. Ibid., pp. 359. [return]

16. Leon Trotsky, [Through What Stage Are We Passing, in The Challenge of the Left Opposition (1923-25), Pathfinder Press, 1975], pp. 170-71. [return]

17. Ibid., p. 169. [return]

18. Leon Trotsky, (Lessons of October, New Park Publications, 1971), pp. 4-7. [return]

19. Bernhard H. Bayerlein u.a. Hsg., (Deutscher Oktober 1923. Ein Revolutionsplan und sein Scheitern, Berlin: 2003), p. 464. [return]

20. Leon Trotsky, (The Third International after Lenin, New Park, 1974), p. 64. [return]

Loading