அமெரிக்க “இடதும்” எகிப்திய புரட்சியும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

எகிப்தில் நடைபெறும் புரட்சிகர எழுச்சியானது, நாட்டின் ஆளும் உயரடுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் முபாரக்கை ஒரு சுமை என அல்லது நடைபெற்று வரும் வெகுஜன இயக்கத்தை நசுக்கும் திறனற்றவர் என்று நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஒரு அரசியல் மாற்றீட்டைத் தயாரிக்க முயல வைத்துள்ளது. WSWS முன்னரே எச்சரித்துள்ளபடி, வாஷிங்டன் அனுமதிக்கும் எந்தவொரு மாற்றீடும் ஒரு வார்த்தைஜால ஜனநாயக போலித்திரையாக இராணுவ ஆட்சிக்கு அமைவதோடு, அது தொழிலாள வர்க்கத்தின் மீது குருதி கொட்டும் தாக்குதலைத்தான் நடத்தும்.

அமெரிக்காவிலுள்ள மத்தியதர வர்க்க “இடது” அந்த எதிர்ப் புரட்சி திட்டங்களுக்குத் தன் சிறிய பங்களிப்பைக் கொடுத்துவருகிறது. துனிசியாவில் சமீபத்திய நிகழ்வுகளில் செய்தது போல், தொழிலாள வர்க்கம் அதன் சொந்த புரட்சிகரத் திட்டத்தை முன்னேற்றுவதை தடுக்கத்தான் முன்னாள் இடது முயல்கிறது. அதன் காரணமாக அவை முபராக்கின் முதலாளித்துவ எதிர்த்தரப்பினரை வெகுஜன இயக்கத்தின் முறையான தலைவர்களாக ஊக்குவிக்கின்றன.

உண்மையில் இந்த நபர்கள் எகிப்தில் நடந்த வெடிப்புக்களுடன் எத்தொடர்பும் கொண்டிருக்கவில்லை, ஆரம்ப ஆர்ப்பாட்டங்களை அவர்கள் எதிர்த்ததுடன், கடந்த சில நாட்களாக அவற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் கடினமாக ஈடுபட்டுள்ளனர்.

“முபாரக் விலக வேண்டும்” என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில் இன்டர்நேஷனல் சோசலிச அமைப்பின் (International Socialist Organization-ISO) சோசலிசத் தொழிலாளர் (Socialist Worker) வலைத் தளத்தில், தொழிலாள வர்க்கம் தன்னை எகிப்திலுள்ள முதலாளித்துவத்தின் “ஜனநாயகச் சார்பு” எதிர்க்கட்சிக்கு தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்று வாதிடுகிறது. இதில் எல்பரடெய், முஸ்லிம் பிரதர்ஹுட் மற்றும் பல மத்தியதர வர்க்க சீர்திருத்தக்காரர்கள் உள்ளனர்.

முபாரக் “வர்க்க சமூகத்தின் எதிர்ப்பு இயக்கத்தைப் பிளப்பதை நோக்கி நகர்த்த முயல்கிறார், இதுவரை எகிப்திய சமூகம் ஒரு பரந்த தோற்றத்தைத்தான் கொண்டிருந்தது—அதாவது ஆட்சியின் கீழ் நேரடியாகக் கிட்டத்தட்ட பெரும் செல்வந்தர்களைத் தவிர வேறு எவரும் பயன்பெறவில்லை” என்று சுஸ்டர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்குச் சான்றாக, அவர் ஆர்ப்பாட்டக்காரர்களை திருப்திப்படுத்துவதற்காக ஒரு வேலைவாய்ப்புத் திட்டத்தை தோற்றுவித்தல், உணவுப் பொருட்களுக்கு நிதியுதவி அளித்தல் ஆகியவைகளை அறிவித்துள்ள முபராக்கின் முயற்சிகள் குறித்து சுட்டிக்காட்டுவது, இவைகள் “ஏழைகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஆதரவைப் பெறும் நோக்கம் கொண்டவை, ஜனநாயக சார்பு இயக்கத்தின் மத்தியதர வர்க்கத் தலைவர்களிடம் இருந்து அவர்களை அகற்றும் நோக்கத்தைக் கொண்டவை”.

தொழிலாள வர்க்கத்திற்கும் எதிர்க் கட்சிகளிலுள்ள உயர் மத்தியதர வர்க்கத் தலைவர்களுக்கும் இடையே முபாரக் ஒன்றும் “பிளவை” ஏற்படுத்தவில்லை —இப்பிளவு ஏற்கனவே புறநிலையில் உள்ளது. பரந்த தொழிலாளர்கள் மற்றும் வேலையின்மையில் வாடும் இளைஞர்களும் நடத்தும் போராட்டம், தங்கள் கோரிக்கைகளை வெல்வதற்கு தனியார் சொத்துக்கள் மற்றும் எகிப்திய ஆளும் வர்க்கத்தினதும், வெளிநாட்டு வங்கிகள் மற்றும் பெரும் நிறுவனங்களினதும் சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்துவது அவசியமாகிறது. முதலாளித்துவ எதிர்க்கட்சித் தலைவர்கள் முற்றிலும் இதை எதிர்ப்பவர்கள், ஒரு சோசலிசப் புரட்சிக்குப் பதிலாக சர்வாதிகாரத்தை நிறுவத்தான் முற்படுவர்.

எல்பரடெய் மற்றும் ஏனையவர்களை தொழிலாளர்களிடையே “தளம் அற்றவர்கள்” என்பதை ஒப்புக் கொண்டு, ISO வின் பங்கு தொழிலாள வர்க்கத்திடம் தங்கள் நம்பகத் தன்மையைக் கட்டமைப்பதுதான் என சுஸ்டர் காண்கிறார்—அதாவது முபாரக்-எதிர்ப்பு இயக்கத்திற்குள் இருக்கும் வர்க்க விரோதங்களை இதையொட்டி மறைக்கிறார். “சோசலிச செயற்பாட்டாளர்களின் முன்னோக்கு புதிய தொழிலாளர்களின் இயக்கங்களுக்கும் ஜனநாயக சார்பு முயற்சிகளுக்கும் துனிசியாவில் எழுச்சிக்கு முன்பிருந்த பிணைப்புக்களை ஒருங்கிணைப்பதுதான்” என்று சுஸ்டர் கூறுகிறார்—அதாவது ஒரு சிறிய சமூகத் தளத்தில் மத்தியதர வர்க்கச் சீர்திருத்தவாதிகளுடன் பிணைப்புக்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என.

“ஜனநாயகத்திற்கான இயக்கத்திற்கு ஒரு சமூக கனமும், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நிறுவனமும் தேவை—முபாரக் தொடர்ந்து இருப்பது, இதை இயலாமற் செய்துவிடும் என்பது மட்டுமின்றி, அவருடைய ஆட்சியின் அடிப்படையாக இருந்த அவருடைய எடுபிடிகள் மற்றும் ஊழல் நலிந்த வணிக நலன்களுக்கு எதிராப் போராடுவதற்கும்தான்” என்று சுஸ்டர் தொடர்ந்து கூறுகிறார்.

முபாரக் ஆட்சியின் மையத்தளம் ஊழல் அல்ல, முதலாளித்துவமும் எகிப்தின் மீது ஏகாதிபத்திய மேலாதிக்கமும்தான். முதலாளித்துவ எதிர்ப்பு, இந்த முறையை தூக்கியெறிய முற்படவில்லை, ஆனால் கூடுதல் மூலதனத்திற்கும் அரசியல் செல்வாக்கிற்குமான அணுகுமுறையை நாடுகிறது, இரண்டுமே பொலிஸ்-இராணுவக் கருவிகளுக்கும் வாஷிங்டனுக்கும் கீழ்ப்பட்டிருக்கும்.

உயர் வர்க்கங்களுள் “ஐக்கியத்தை” தக்கவைத்துக் கொள்ளுதல் என்னும் பெயரில், அனைத்து சோசலிசக் கோரிக்கைகளும் அடக்கப்பட வேண்டும். கட்டுரையில் ஒரு சொல்கூட தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன நலன்களைப் பற்றி இல்லை. எந்த இடத்திலும் தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, சோசலிசக் கொள்கைகளை செயல்படுத்தி, வெகுஜன இயக்கத்தின் கோரிக்கைகளான வேலைகள், கௌரவ வாழக்கைத் தரங்கள் மற்றும் அரசியல் உரிமைகள் அடையப்படுவது பற்றி சுஸ்டர் கூறவில்லை.

ISO ஒரு முற்றிலும் வேறுபட்ட திசையில்தான் நோக்குநிலை கொண்டுள்ளது. தொழிலாள வர்க்கம் அதன் கனத்தை முதலாளித்துவ ஜனநாயக இயக்கத்திற்கு அளிப்பதற்குத் தாழ்த்தப்படுகிறது. தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர வலிமையைச் செயலற்றதாக ஆக்குவது —அதுவோ வெகுஜன இயக்கத்தின் மிகப் பிரதான சக்தியாகும்— ஜனநாயகத்திற்கு வழிவகுக்காது, சர்வாதிகாரத்திற்கும் குருதி கொட்டுவதற்கும்தான் வழிவகுக்கும்.

ISO “தீவிர செயற்பாட்டாளர், சோசலிஸ்ட்” என்று அது விபரிக்கும் முஸ்தபா ஒமரின் கருத்துக்களுக்கும் ஆதரவைக் கொடுக்கிறது. அதன் வலைத் தளத்தில் ஜனவரி 26ம் திகதி பேட்டி கொடுத்த ஒமர் அரச கட்டுப்பாட்டின் கீழுள்ள பெருநிறுவனச் சார்பு எகிப்திய தொழிற்சங்கக் கூட்டமைப்பை ஒரு முற்போக்குச் சக்தி என்று அறிமுகப்படுத்துகிறார்.

“எகிப்திய தேசிய தொழிற்சங்கக் கூட்டமைப்பு —அரசாங்கத்தால் நியமிக்கப்படும் நபர்களால் வழிநடத்தப்படுவது— ஓரளவிற்கு அரசாங்கத்திடம் இருந்து துனிசிய எழுச்சியை தொடர்ந்த இரு வாரங்களில் முறித்துக் கொண்டுள்ளது. அவை விலைக் கட்டுப்பாடுகளை விரும்புகின்றன, ஊதியங்களில் அதிகரிப்பு மற்றும் அடிப்படை உணவுற்கு நிதியுதவி அளிக்கும் முறையை விரும்புகின்றன…தொழிற்சங்க அதிகாரிகளைப் பொறுத்த வரை இத்தகைய கோரிக்கைகள் இதுகாறும் கேட்கப்படாதவை, ஏனெனில் இவர்கள் புதிய தாராளவாதத்திற்கு ஆதரவளித்தவர்கள். இதுதான் துனிசியாவின் தாக்கம்.”

தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீனமான அணிதிரள்வுக்கும் விரோதப் போக்குக் காட்டும் ISO, நீண்டகாலமாகவே அரச கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் தொழிற்சங்கங்கள் முறையான தொழிலாளர் அமைப்புக்கள் என்ற கருத்தை வளர்த்து வருகின்றன. அமெரிக்காவிலுள்ள AFL-CIO விற்கு இதன் பாராட்டு நன்கு அறியப்பட்டதுதான். கடந்த மாதம் இது துனிசிய பொது தொழிலாளர் சங்கத்தை (UGTT)--நீண்டகாலமாக பென் அலி சர்வாதிகாரத்தை முட்டுக் கொடுத்து நிறுத்தும் தூணாக இருப்பதை—துனிசியா எழுச்சியின் “முக்கியத்துவம் நிறைந்த கரு” என்று பாராட்டியது (See, மத்தியதர வர்க்க “இடதும்” துனிசிய புரட்சியும்”).

கடந்த ஆண்டு சோசலிஸ்ட் தொழிலாளர் வலைத் தளத்தில் வெளியிட்ட மூன்று பகுதித் தொடர் கட்டுரையில் ஒமர் வெளிப்படையாக எல்பரடெயைப் புகழ்ந்து அவருடைய “ஜனநாயகத்திற்கான புதிய இயக்கம்” “வறுமையையும் அரசியல் அடக்குமுறையும் நீண்ட நாட்களாக இருக்கும் நாட்டை மின்னதிர்விற்கு உட்படுத்தியுள்ளது” என்று கூறினார். எகிப்தியத் தொழிலாள வர்க்கம் இதற்கு ஆதரவு கொடுத்தால் இயக்கம் இப்பிராந்தியத்திலுள்ள அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கு 1960 களின் அரபு தேசியவாத வேலைத்திட்ட நாட்களுக்குப் பின்னர் ஒரு தீவிர சவாலை கொடுக்கும்” என்றும் கூறினார்.

NAC எனப்படும் தேசிய மாற்றத்திற்கான சங்கமானது இஸ்லாமிய சகோதரர்கள் (Muslim Brotherhood) இன்னும் பிற எதிர்க்கட்சிகளுடன் எல்பரடெய் நிறுவியதை ஒமர் பாராட்டுகிறார். “இது அரசியல் தோற்ற இடதிற்கு வலதில் உள்ளவை அனைத்தையும் இணைக்கிறது” என்றார். இந்த இயக்கத்தின் முதலாளித்துவத் தன்மையை இயன்றளவு மறைக்க முற்படும் ஒமர், “வறிய விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை அடைகிறார், பகிரங்கமான வேலைநிறுத்த உரிமைக்கு எல்பரடெய் ஆதரவு கொடுக்கிறார்” என்று கூறியுள்ளார். மேலும் தொழிலாளர்கள் NAC யில் சேரவும் அழைப்பு விடுத்துள்ளார்.

“எல்பரடெய் ஒரு நிதானமான, ஜனரஞ்சகச் சீர்திருத்தக் கூட்டணியை ஒருங்கிணைக்க முயல்கிறார், அது மக்கள் சீற்றத்தை ஈர்த்து அதை பாதுகாப்பாக ஜனநாய முறைக்குள் செலுத்தும், அதே நேரத்தில் ஆட்சியுடன் வன்முறை மோதலையும் தவிர்க்கும்” என்று ஒமர் ஒப்புக்கொள்கிறார்.

இத்தகைய “நிதானமான நிலைப்பாடுகள் இருந்தபோதிலும்கூட, இடது எண்ணிக்கையிலும் செல்வாக்கிலும்” அவருடைய இயக்கத்திற்கு ஆதரவு கொடுப்பதின் மூலம் வளரும் வாய்ப்பைக் கொண்டுள்ளது” எல்பரடெய் இங்கு வந்ததிலிருந்து நலன் அடைந்துள்ள “புரட்சிகர சோசலிஸ்ட் குழுக்கள்” என்பவற்றை அவர் பட்டியலிடுகிறார்: “முன்னாள் ஸ்ராலினிச அமைப்பில் எஞ்சியிருப்பவை, நீண்ட காலக் காட்டிக் கொடுத்த வரலாறு உள்ளவை கூட, புதுப்பிக்கப்பட்டுள்ளன” என்றும் கூறியுள்ளார்.

ISO வின் “எகிப்திலுள்ள நபர்” எல்பரடெய் பற்றி “தீவிர இடது மற்றும் பங்குபெறாத்தன்மை அணுகுமுறைக்கு” எதிராகவும் எச்சரிக்கிறார். “எகிப்திய சோசலிஸ்ட்டுக்கள் எல்பரடெயின் பிரச்சாரத்தை ஒரு தாராளவாத முதலாளித்துவ முயற்சி, ஒரு திவாலான முறையை இயன்றளவு பாதுகாக்கும் முயற்சி என்று குறைகூறுவதில் சரி என்றாலும், எல்பரடெய் வெகுஜன அழுத்தத்தின் கீழ் குறைந்தபட்சம் பெயரளவிற்கேனும் முற்போக்கு நிலைப்பாட்டை கட்டாயமாகக் கொள்ளும் நிலை வராது என்பது இன்னும் முன்கூட்டிய முடிவு அல்ல—உதாரணமாக இஸ்ரேல் மற்றும் ஏகாதிபத்தியப் பிரச்சினை உள்ளது. இது சாதாரண மக்களுக்கு போராட்டத்தில் நம்பிக்கையை அதிகரிக்கும்.”

இதுதான் எகிப்திய ஆளும் வர்க்கம் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர விழைவுகளை அடக்கும் ஒரு முதலாளித்துவ அரசியல்வாதிக்கான வக்காலத்து ஆகும். இதையொட்டி முபாராக் இருந்தாலும், இல்லாவிட்டாலும், சர்வாதிகாரம் மீண்டும் உறுதிப்படுத்துவதற்கான சிறந்த சூழ்நிலை தோற்றுவிக்கப்படும். தொழிலாள வர்க்கத்தை இத்தகைய சக்திகளுடன் பிணைக்கும் முயற்சியில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு கருவியாகத்தான் ISO செயல்படுகிறது.

Loading