இலங்கை: மாபெரும் காட்டிக்கொடுப்பு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இலங்கை கூட்டணியின் பின்னணியில்

இலங்கையில் லங்கா சம சமாஜக் கட்சி (LSSP) கூட்டரசாங்கத்தில் நுழைந்தது பற்றிய உண்மை என்ன? இன்று உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு ட்ரொட்ஸ்கிசவாதிக்கும் மிகமுக்கியமான கேள்வி இதுதான்.

1964 ஜூன் 7 ம் தேதி அங்கத்தவர் மாநாட்டில், 507 உறுப்பினர்கள் திருமதி பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ அரசாங்கத்துடன் கூட்டணி அமைக்க ஆதரவாக வாக்களித்தனர்; ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி, LSSP மற்றும் பிலிப் குணவர்த்தனவின் கட்சியான மகாஜன ஏக்சத் பெரமுன (MEP) ஆகியவற்றை கொண்டதொரு ஐக்கிய இடது முன்னணி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் பாரிசில் உள்ள “நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலகத்தின்” ("Unified Secretariat of the Fourth Internationale") கொள்கைக்கு ஆதரவாக 75 பேர் வாக்களித்தனர்.

LSSP க்குள் கொல்வின் ஆர்.டி. சில்வா மற்றும் லெஸ்லி குணவர்தன வழிநடத்தும் மத்தியவாத குழுவானது, கட்சி கூட்டரசாங்கத்தில் நுழைவது என்று முடிவெடுத்தபோதிலும், கட்சியில் தொடர்ந்தும் இருப்பது என்று முடிவெடுத்தது.

வர்க்க ஒத்துழைப்புக் கொள்கையை எதிர்த்த 159 அங்கத்தவர்கள் மாநாட்டில் இருந்து வெளிநடப்பு செய்து, LSSP (புரட்சிகர பிரிவு) என்ற அமைப்பை நிறுவியுள்ளனர்.

1964 ஜூன் 22 அன்று பாரிசில் கூடிய “நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலகம்” ஒருமனதாக தற்போது பண்டாரநாயக்கவின் அமைச்சரவையில் நிதி மந்திரியாக இருக்கும் டாக்டர் என்.எம். பெரேரா, தகவல் தொடர்புத்துறை மந்திரியாக இருக்கும் அனில் மூனேசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினராகவும், மற்றொரு மந்திரிப் பதவியை ஏற்றவருமான சோல்மொண்டெலி குணவர்த்தன ஆகியோரை வெளியேற்றியது.

இதே ஐக்கிய செயலகம், சிறிதும் பொருட்படுத்தாமல், இதற்குப் பின்னர் கூட்டணிக்கு ஆதரவு கொடுத்ததற்காக 504 LSSP அங்கத்தவர்களை கட்சியின் அங்கத்துவத்திலிருந்து இருந்து தற்காலிகமாக நிறுத்திவைக்க தீர்மானித்தது. கூட்டணிக் கட்சியில் அங்கத்தவர்களாக இருந்தபோதிலும் டி சில்வா மற்றும் குணவர்த்தன ஆகியோரின் மத்தியவாத குழுவின் மீது, அது எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கம் ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்து இதுபோன்ற நிகழ்வு ஏற்பட்டதேயில்லை.

பெரும்லான LSSP உறுப்பினர்கள் முதலாளித்துவ கொள்கைகளுக்கு நிபந்தனையற்று சரணடைந்தமை, 1953ம் ஆண்டுப் பிளவின் நேரடி விளைவாகும். இதில் சோசலிச தொழிலாளர் கழகம் அங்கத்துவம் வகிக்கும் அனைத்துலகக் குழுவின் சக்திகளும் சம்பந்தப்பட்டுள்ளனர். அத்துடன், பப்லோவின் திருத்தல்வாதத்தை ஆதரித்தவர்கள் இப்பொழுது "ஐக்கிய செயலகத்தை" சுற்றி குழுச் சேர்ந்துள்ளனர்.

இந்த சீரழிவு, சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்துக்குள் நடக்கும் போராட்டத்துடன் பிரிக்க முடியாமல் பிணைந்துள்ளது. பப்லோ மற்றும் அவருடைய ஐரோப்பிய நண்பர்களான ஜேர்மைன் மற்றும் பியர் பிராங்க் ஆகியோரது காட்டிக் கொடுப்பிற்கான முழு உதாரணத்தை இது உள்ளடக்கியுள்ளது.

கடந்த 18 ஆண்டுகளாக இலங்கையில் உள்ள LSSP உடன் இடைவிடாத் தொடர்பைக் கொண்டிருப்பதால் இவர்கள்தான் கட்டாயம் இந்தப் பொறுப்பை ஏற்கவேண்டும்.

இதற்கான விடை இலங்கையில் இல்லை, மாறாக பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டம் பற்றிய சர்வதேச ஆய்வில்தான் உள்ளது. இக்கூட்டணியின் உண்மையான காரணகர்த்தாக்கள் பாரிசில் வசிக்கின்றனர்.

லங்கா சம சமாஜக் கட்சி, ஸ்ராலினிச காட்டிக் கொடுப்பிற்கு எதிராக சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பிரச்சாரத்தை ஆதரித்திருந்த, முக்கியமாக லண்டன் பல்கலைக் கழகங்களில் இருந்து தாயகம் திரும்பிய மாணவர்களால் 1935 இல் ஸ்தாபிக்கப்பட்டது.

பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் தளைகளில் இருந்து இலங்கையின் தேசிய சுதந்திர இயக்கத்திற்கு விமர்சனரீதியாக ஆதரவை கொடுத்துக்கொண்டு இக்கட்சி அரசியலில் நுழைந்தது. போரின் ஆரம்ப ஆண்டுகளில் இதன் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்; சிலர் இந்தியாவிற்கு தப்பி ஓடினர்; அங்கு அவர்கள் ட்ரொட்ஸ்கிச குழுக்களை நிறுவினர்; மற்றும் பலர் தீவிலேயே சட்டவிரோத போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்த மாணவர் தலைவர்கள் முக்கியமாக பூர்ஷ்வா குடும்பங்களில் இருந்து வந்தவர்களாவர். சிலரைப் பொறுத்தவரையில், அவர்களுடைய பெற்றோர்கள் தீவின் உயர்குடிக் குடும்பங்களுடன் உறவு கொண்டவர்களாவர்; அவர்களுடைய உள்ளூர் முதலாளித்துவ நலன்களின் காரணமாக இக்குடும்பங்கள் ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கு விரோதப் போக்கை காட்ட முற்பட்டன; இக்காரணியும் இளைய தலைவர்கள் பலரை ஆரம்பகால LSSP க்கு ஈர்த்தது.

1947ம் ஆண்டு இலங்கைக்கு சம்பிரதாயபூர்வமான சுதந்திரம் வழங்கப்பட்டது; இதையொட்டிய மற்றய விஷயங்களுக்கும் மத்தியில், தீவில் பாராளுமன்றத்தை அமைப்பதன் மூலம் வாக்குரிமையும் அளிக்கப்பட்டது.

1947 ஆம் ஆண்டுத் தேர்தலில் இக்கட்சி பல தொகுதிகளில் வெற்றிபெற்றது. LSSP யின் உயர்மட்ட தலைவர்களிடையே, தற்பொழுதுள்ள கூட்டணியின் பின்னணியில் காணக்கூடிய சந்தர்ப்பவாத கருத்துக்கள் கிட்டத்தட்ட அக்காலக்கட்டத்திலேயே உருவாகத் தொடங்கியிருந்தன.

ஏகாதிபத்தியம், இலங்கையில் உள்ளூர் முதலாளித்துவ வர்க்கத்தை அதன் கையாட்களாக தொடர்ந்து அதிகாரத்தை வைத்திருப்பதற்கு அனுமதித்த நிலைமைகளின் கீழ், ஏகாதிபத்தியத்திடமிருந்து சுதந்திரத்திற்காக தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்துவது என்பது இவர்களுக்கான ஒரு விஷயமாக இருந்தது.

ஆனால் LSSP ஐ ஒரு புரட்சிகரக் கட்சியாக கட்டமைத்து, பூர்ஷ்வா பாராளுமன்ற ஜனநாயகத்தை அழித்தல், உள்நாட்டு முதலாளிகளின் செல்வத்தை அபகரித்தல், மற்றும் இலங்கையில் தொழிலாள வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை நிறுவதல் என்பது வேறொரு விஷயமாகும். இதைப் பொறுத்த வரையில், பாராளுமன்ற முறையில் பங்கு பெறுவது என்பது இரண்டாந்தர முக்கியத்துவமானதாகும்.

ஆனால் LSSP க்கு முன்னால் இருந்த பிரதான பணியானது, குறிப்பாக ஏகாதிபத்திய முகவர்களான தேசிய முதலாளித்துவத்துக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தினதும், வறிய கிராமப்புற ஏழைகளுடையதுமான போராட்டங்களுக்கு தலைமை கொடுப்பதாக இருந்தது, அதே நேரத்தில் பாராளுமன்ற முறையையும் உள்ளிருந்தே அம்பலப்படுத்துவதாகவும் இருந்தது.

இந்தப் போராட்டத்தைத்தான் திட்டவட்டமாக LSSP தலைமை தவிர்த்தது. இப்பணியை செய்யக்கூடிய தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற ஏழைகளிடையே ஆழமாய் வேரூன்றக்கூடிய ஒரு மார்க்சிச தலைமையை பயிற்றுவிக்க வேண்டியதை அவர்கள் தொடர்ந்து தவிர்த்து வந்தனர்.

அப்படிச் செய்திருக்க வேண்டுமானால், அவர்கள் தங்கள் பிரபுத்துவ நண்பர்களுடன் அன்றாடம் வன்முறையில் மோத வேண்டியிருந்திருக்கும்; அத்தகைய மனக்கசப்பிற்கு அவர்கள் தயாராக இல்லை. பாராளுமன்றத்தில் வார்த்தைரீதியான நிழற்சண்டை போடும் விளையாட்டில் ஈடுபடுவது அவர்களுக்கு எளிதாக இருந்தது.

எனவே அவர்கள் இன்னும் அதிகமான முறையில் இத்தகைய பாராளுமன்ற வகையிலான போராட்டத்தின்பால் நாட்டம் கொண்டு, ஒரு புரட்சிகர கட்சியை கட்டியெழுப்ப வேண்டிய வரலாற்றுப் பொறுப்பில் இருந்து பின்வாங்கினர்.

1947ல் இருந்து 1956 வரை இலங்கை பாராளுமன்றம் மிகத்தீவிர வலதுசாரியான ஜக்கிய தேசிய கட்சியின் (United National Party) ஆதிக்கத்தில் இருந்தது; அதுவோ உலகிலேயே காணப்படும் மிக ஊழல் வாய்ந்த அரசியல்வாதிகளை தன்னுடைய உயர்மட்ட தலைவர்களாக கொண்டிருந்தது.

1940 களிலும் 50 களின் முற்பகுதியிலும், தீவின் பொருளாதார நிலைமை சரியத் தொடங்கியதும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஆதரவை இழக்கத் தொடங்கியது. நிலைமை எந்த அளவிற்கு மோசமாகப் போயிற்று என்றால், 1952ம் ஆண்டு தற்போதைய பிரதம மந்திரியின் காலம் சென்ற கணவர் திரு. பண்டாரநாயக்க அக்கட்சியில் ஒரு பிளவை ஏற்படுத்தி, பின்னர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை (SLFP) நிறுவியதில் போய்முடிந்தது.

பொருளாதார நிலைமையோ மோசத்தில் இருந்து படுமோசமான நிலைக்கு சென்றது; ஜக்கிய தேசிய கட்சி (UNP), தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளது வாழ்க்கைத் தரங்களின் மீது தொடர்ந்து தாக்குதல் மேல் தாக்குதல்களை தொடுத்தது.

ஆகஸ்ட் 12, 1953 இல் LSSP அரிசிவிலை உயர்வை எதிர்த்து மிகப்பெரிய ஹர்த்தால் நடவடிக்கைக்கு தலைமை தாங்கியது. அந்நடவடிக்கை முதலாளித்துவ UNP அரசாங்கம் மற்றும் இலங்கையின் முதலாளித்துவ வர்க்கம் முழுவதிற்கும் எதிரான நேரடியானதும் வன்முறையானதுமான மோதல் என்ற தன்மையை கொண்டிருந்தது. 1954ம் ஆண்டு LSSP தனது வருடாந்தர கட்சி மாநாட்டில் பின்வருமாறு கூறியது: "இம் மோதல்கள் முழு பிராந்தியங்களிலும் ஓர் உண்மையான கிளர்ச்சியின் மட்டத்தை எட்டியது... மக்கள் இத்தகைய முன்னோடியில்லாத நேரடி நடவடிக்கைப் போராட்டத்தில் வெற்றி பெற்ற உணர்வையும் மற்றும் தற்காலிகமாக செயலிழந்து விட்ட ஓர் அரசாங்கத்தையும் எதிர்கொண்டனர்."

ஆளும் வர்க்கத்தையும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையும் பொறுத்தவரை இந்த நிலைமை பெரும் ஆற்றொணா நிலையையாக ஆனது.

எனவே திரு. பண்டாரநாயக்க கட்சி அமைத்தது பிற்போக்குச் சக்திகளுக்கு மகத்தான முக்கியத்துவமாயிற்று. இனி UNP ஆளமுடியாது என்ற நிலையில், வார்த்தைஜாலக்கார பண்டாரநாயக்க அரங்கிற்கு கொண்டுவரப்பட்டார்.

உள்நாட்டு முதலாளித்துவ ஆட்சி மற்றும் ஏகாதிபத்திய நலன்களை காப்பாற்றுவதற்காக அவர் தன்னுடைய கட்சியின் ஸ்தாபக வேலைத்திட்டத்தில் வெற்று சோசலிசக் கோரிக்கைக்கு உதட்டளவில் ஆதரவளிக்கவேண்டி இருந்தார், அதே நேரத்தில் மிக உறுதியான முறையில் முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய நலன்கள் தீவில் காப்பாற்றப்படுவதற்கு அரும்பாடுபட்டார்.

அவருடைய கட்சி ஒரு குட்டி முதலாளித்துவ, முதலாளித்துவக் கட்சியாகும்; அதன் முக்கிய நோக்கம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் வளர்ந்துவரும் அதிருப்தியைக் கொண்டிருந்த வெகுஜனங்களை தடுத்து நிறுத்துவதாக இருந்தது. ஹர்த்தால் நடவடிக்கைக்கு பின்னர், அந்நடவடிக்கை தீவு முழுவதிலும் LSSP க்கான ஆதரவைப் பெருக்கியிருந்தது.

நான்காம் அகிலத்தின் 1953 பிளவும் இலங்கை நிகழ்வுகளும்

1953 ஆம் ஆண்டு இறுதியில், நான்காம் அகிலத்தில் ஏற்பட்ட பிளவினால்; இலங்கையில் நடந்த பிந்தைய நிகழ்வுகளில் அதன் நேரடிப் பாதிப்பு இருந்தது என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது.

சர்வதேச நிகழ்வுகளின் அழுத்தங்களின் விளைவாக சோவியத் அதிகாரத்துவத்திற்குள் பின்னோக்கித்திரும்பவியலாத இடதுநோக்கிய நிகழ்ச்சிபோக்கு ஆரம்பமாகிவிட்டது என்ற பப்லோவின் தத்துவத்தை ஒட்டி பிளவு ஏற்பட்டது. இது, அதிகாரத்துவத்தின் ஒரு பகுதி உடைத்துக் கொண்டு சென்று, ஒரு புரட்சிகர தலைமையின் பாத்திரத்தை மேற்கொள்ள இட்டுச்செல்ல முடியும் மற்றும் சோவியத் ஒன்றியத்திற்குள் ஜனநாயகத்தை மீளவும் அறிமுகம் செய்யமுடியும் என்ற உட்குறிப்பை கொண்டிருந்தது.

ஐரோப்பாவில் பப்லோ தன்னுடைய, திருத்தல்வாதக் கோட்பாட்டை விளக்குவதற்காக, "ஸ்ராலினிசத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்" என்ற தீர்மானத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கையில், LSSP யின் செயலரான லெஸ்லி குணவர்த்தன SLFP இன் தன்மை பற்றி ஊகஞ்செய்ய தொடங்கினார்.

LSSP யின் ஆங்கில வாராந்திர ஏடான Sama Samajist இல் 1953 ஆண்டின் ஆரம்ப பதிப்பு ஒன்றில் அவர் SLFP ஐ ஒரு "மத்தியவாத கட்சி" என்று பெயரிட்டார்; இது முதலாளித்துவத்தை ஏற்று நின்றாலும், LSSP யின் கோரிக்கைகள் பலவற்றிற்கு ஆதரவு கொடுக்கக்கூடும் என்று அவர் கூறினார்.

சில குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் SLFP, இலங்கைத் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு ஏற்ற முறையில் கட்டாயமாக நடக்கும்படி நிர்பந்திக்கப்படும் என்ற பிரமை உருவாக்கப்பட்டது.

இவ்விதத்தில் அவர் தொழிலாள வர்க்கத்தை அடித்தளமாகக் கொண்டுள்ள சீர்திருத்தவாத கட்சிகளில் நன்கு அறிந்திருந்த செயல்முறைகளை, முதலாளித்துவத்தினை அடிப்படையாக கொண்ட ஒரு குட்டி முதலாளித்துவ கட்சியின் வார்த்தைஜால இடது மூடுதிரையுடன் குழப்பிக் கொண்டார்.

SLFP ஒரு மத்தியவாதக் கட்சி அல்ல, ஆனால் செல்வாக்கிழந்துவிட்ட UNP ஐ ஆபத்திலிருந்து மீட்க வந்த ஒரு முதலாளித்துவக் கட்சி ஆகும்; அதனது இடது மூடுதிரை, நடைமுறையில் பொருளற்றவை; அதன் எழுச்சியானது, LSSP ஐ தனிமைப்படுத்த வேண்டுமென்ற ஆளும் வர்க்கத்தால் திட்டமிட்ட கணக்கீட்டின் ஒரு பகுதியாகும்.

LSSP ஒரு புரட்சிகரக் கட்சி என்ற நிலையில், அதன் முழு எதிர்காலத்தின் மீதும் லெஸ்லி குணவர்த்தன ஒரு கேள்விக்குறியினை இட்டார், அதே நேரத்தில் பப்லோ நான்காம் அகிலத்தின் பாத்திரத்தின் மீதும், அதன் எதிர்காலத்தின் மீதும் ஒரு கேள்விக்குறியினை இட்டார். மார்க்சிசம் பற்றிய அத்தகைய ஒரு தத்துவார்த்த திருத்தலில் இருந்து, திருத்தல்வாதிகளான லெஸ்லி குணவர்த்தன மற்றும் கொல்வின் ஆர். டி சில்வாவிற்கு இலங்கையில் ஒரு புரட்சிகர கட்சியைக் கட்டுவது என்பது சாத்தியமற்றதாகும்.

ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக SLFP சில குறிப்பிட்ட நிலைமைகளில் பெரிதாகப் பேசினாலும், மற்றும் காப்பீட்டுத்துறை, பெட்ரோலிய கட்டமைப்புக்கள் போன்றவற்றை தேசியமயமாக்கினாலும்கூட, இந்நடவடிக்கைகள் தொழிலாள வர்க்கத்தின் நிலைமையை உயர்த்துவதற்கு சிறிதளவில் உதவின அல்லது எவ்வித மாற்றத்தையும் செய்துவிடவில்லை; பிரிட்டனில் முக்கிய தொழில்கள் தேசியமயமாக்கப்பட்டதால் விளைந்த முக்கியத்துவத்துடன் இதை குழப்பிக்கொள்ள கூடாது. குறிப்பாக அண்மையில் SLFP யினால் மேற்கொள்ளப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான தேசியமயமாக்கல் கொள்கைகள், முக்கியமான உள்நாட்டு முதலாளித்துவ நலன்களின் பொருளாதார நிலைமைகளை வலுப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.

1954ம் ஆண்டின் ஆரம்பத்தில் கொழும்பில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், LSSP தலைமை ஒருமனதாக பப்லோவின் திட்டங்களை நிராகரித்தது. அதே ஆண்டு ஜூன் மாதம் ஐரோப்பாவில் பப்லோவின் தீர்மானமான, "ஸ்ராலினிசத்தின் எழுச்சியும் சரிவும்" பற்றி விவாதிக்க ஒரு சர்வதேச மாநாடு கூடியது. அம்மாநாட்டிற்கு LSSP அனுப்பிய பேராளர் குழு கொல்வின் ஆர் டி. சில்வா மற்றும் லெஸ்லி குணவர்த்தன ஆகியோரால் தலைமை தாங்கப்பட்டிருந்தது.

இலங்கையில் அவர்களுடைய தேசியக் குழு ஏற்கனவே தீர்மானித்திருந்தபடி பப்லோவின் தீர்மானத்தை நிராகரித்து வாக்கு அளிப்பதற்கு மாறாக, இவர்கள் இருவரும் தாங்கள் கொண்டுவரும் சில திருத்தங்களை பப்லோ ஏற்றால் அதற்கு ஆதரவாக வாக்களிப்பதாக கூறினர்; உண்மையில் இலங்கையில் அவர்களுடைய சந்தர்ப்பவாதப் போக்கை பற்றி பப்லோ கண்டுகொள்ளாது இருந்தால் தாங்களும் ஐரோப்பாவில் நடப்பதை பற்றி கண்டுகொள்ளாது இருந்துவிடுவதற்கு ஒப்புக்கொண்டனர்.

அக்காலக்கட்டத்தில் இருந்து பப்லோவிற்கும் LSSP தலைவர்களுக்கும் சர்வதேச இயக்கத்தில் தொடர்ந்திருந்த கொள்கையற்ற உடன்பாட்டிற்கு இதுதான் அடிப்படையாக இருந்தது.

சர்வதேச நிகழ்வுகள் பற்றி ஓர் அரசியல் தெளிவுபடுத்தலை விரும்பிய அனைத்துலகக் குழுவில் இருந்த ட்ரொட்ஸ்கிஸ்ட்டுகளுக்கு எதிராக அவர்கள் பப்லோவிற்கு ஆதரவு கொடுத்தனர்; தன்னுடைய பங்கிற்கு பப்லோ இவர்களை உலகிலேயே "மிகப் பெரிய ட்ரொட்ஸ்கிச அமைப்பு" என்று வானளாவிற்கு உயர்த்திப் பாராட்டினார்; இதனூடாக இவர்களுடைய சந்தர்ப்பவாதம் வேண்டுமென்றே மூடி மறைக்கப்பட்டது. இயக்கத்தை எதிர்கொண்டுள்ள கடுமையான பிரச்சினைகளை விவாதிக்க முயன்றவர்கள் எவரொருவரும், குழப்பம் விளைவிப்பவர்கள், பிளவுபடுத்துபவர்கள் (disrupter and a factionalist) என இரு புறத்தாலும் கண்டனத்திற்கு உட்படுத்தப்பட்டனர்.

1956ம் ஆண்டு பொதுத் தேர்தலில், SLFP முதல் தடவையாக அரசாங்கத்தை UNP இடம் இருந்து கைப்பற்றியது. இப்போது SLFP ஒரு மத்தியவாத கட்சி என்ற தத்துவார்த்த வரைவிலக்கணம் LSSP தலைவர்களுக்கு ஒரு புதிய வடிவத்தை எடுத்தது. தேர்தலுக்கு சற்று பின்னர் SLFP தொடர்பான LSSP இன் கொள்கை "பொறுப்பான கூட்டுழைப்பு" என்பதாக இருக்கவேண்டும் என அறிவித்தனர்.

UNP ஐ போன்றே SLFP ஆலும் இலங்கையில் தொழிலாள வர்க்கமும் விவசாயிகளும் எதிர்கொண்டிருந்த அடிப்படை பிரச்சினைகளில் ஒன்றைக்கூடத் தீர்க்க முடியவில்லை.

1956 இல் திரு. பண்டாரநாயக்கவின் அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர், அவர் தொழிற்சங்கங்களில் சில வேர்களைக் கொண்டிருந்த குட்டி முதலாளித்துவக் கட்சியான MEP உடன் ஓர் உடன்பாட்டிற்கு வந்தார். அது முன்னர் LSSP யினால் வெளியேற்றப்பட்டிருந்த பிலிப் குணவர்த்தனவினால் நிறுவப்பட்டு, வழிநடத்தப்பட்டு வந்தது.

அவர் பண்டாரநாயக்கவின் மந்திரிசபையில் சேர்த்துக் கொள்ளப்பட்டு இந்தக் கூட்டரசாங்கத்தின் பெயர் M E P என்று மாற்றப்பட்டாலும்கூட, ஆரம்பத்தில் இருந்தே, எதிர்பார்த்ததைப்போல், அது தோல்வியடைந்தது.

1950 களின் கடைசிப் பகுதியில் வேலைநிறுத்தங்களும் வெகுஜனப் போராட்டங்களும் தீவு முழுவதும் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன. 1959 ஜூலை 18/19 ம் தேதிகளில் நிகழ்ந்த LSSP யின் வருடாந்திர மாநாட்டின் அரசியல் தீர்மானங்கள்கூட கீழ்கண்டவற்றையும் கூற நேர்ந்தது:

தற்போதைய அரசியல் நிலைமையில் MEP அரசாங்கத்தை அகற்றுவதற்கான போராட்டத்தில் கையாளப்பட வேண்டிய தந்திரோபாயங்கள் பற்றி தீர்மானிப்பதில் உள்ள இரண்டு முக்கிய கூறுபாடுகள் கவனமாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும். ஒரு புறத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மக்கட்திரட்டின் சில பிரிவுகளிடையே, அதிலும் குறிப்பாக தொழிலாள வர்க்கத்திடையே, நேரடியான, பாராளுமன்றத்திற்கு புறம்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற போக்கு உள்ளது.

நவம்பர் 1957 இல் இருந்து நாம் தொடர்ச்சியான தொழிலாள வர்க்க வேலைநிறுத்தங்களை கண்டு வருகிறோம்; தனித்தன்மை வாய்ந்த கடந்த மார்ச் 3 ம் தேதி ஒரு நாள் அடையாள பொதுவேலை நிறுத்தத்தைத் தவிர, இவை அனைத்தும் பொருளாதாரப் போராட்டங்களே ஆகும். மே 1958 இல் நிகழ்ந்த வகுப்புவாத கலவரம் மற்றும் அதைத் தொடர்ந்த அவசரகாலநிலையின் முதல் மாதங்களின் கடுமையான கெடுபிடிகளும் இப்போராட்டங்களை தாமதப்படுத்தத்தான் முடிந்தனவே அன்றி சமீப காலத்தில் அவை மீண்டும் வந்துள்ளதை தடுக்க முடியவில்லை. கடுமையாக உணரப்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்குகையில் தொழிலாளர்களிடையே வேலைநிறுத்தம் செய்ய வேண்டும் என்ற தயார்நிலை கட்டாயமாக உள்ளது.

தொழிலாளர்களின் வேலைநிறுத்த நடவடிக்கையை தவிர, சமீப மாதங்களில் அரசியல் நிகழ்வுகளான சேரிகுடியிருப்புகளை அழிப்பிற்கு வெகுஜன எதிர்ப்பு, அரசுக்கு சொந்தமான நிலத்தை பரந்தளவில் ஆக்கிரமித்தல், இரயில் பாதைகளில் வெகுஜன சத்தியாக்கிரகம் போன்றவற்றையும் கண்ணுற்று வருகிறோம் அதிருப்தியின் இத்தகைய வெளிப்பாடுகள் தொழிலாள வர்க்கத்திடையே வேலைநிறுத்தங்கள் பரவுவது போன்ற வழிவகையில் பரவவில்லை என்பது உண்மையே. ஆயினும்கூட இவை குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும்; ஏனெனில் தொழிலாளர்களைத் தவிர உழைப்பாளர்களின் மற்ற பிரிவுகளும் வெகுஜன, நேரடி நடவடிக்கையை எடுக்கும் தன்மையை புலப்படுத்துகின்றன. இந்தப் பிரிவுகளும் நேரடியாக அன்றாடத் தேவைகளுடன் வேர்களை கொண்ட பிரிவுகளால்தான் நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சுருங்கக் கூறின், பெரும்பாலான மக்கள் இன்னமும் அரசியலமைப்புரீதியான முறைகளையும் வழிவகைகளையும்தான் முக்கியமாக நம்பியிருக்கின்றனர்; ஆனால் நேரடியான நடவடிக்கை மூலம்தான் விடயங்களை தீர்க்கமுடியும் என்று உணரும் சந்தர்ப்பங்களில் அரசியலமைப்புரீதியான வழிவகைகளுக்கு வெளியே அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுப்பதற்காகவும் அவர்கள் தயாராக உள்ளனர்.

LSSP இந்த இருவழிகளிலும் தங்கிநிற்க முயன்றது. தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு மற்றும் வேலைநிறுத்த நடவடிக்கையின் வளர்ச்சிக்கு அது உதட்டளவில் ஆதரவு கொடுத்தது; அதே நேரத்தில் மேலும் மேலும் கூடுதலான கவனத்தை பாராளுமன்ற அரசியல் திசையிலும் அது திருப்பியது.

கட்சிக்குள் நடந்த விவாதங்கள் இப்பிரச்சினைகளைத்தான் மையமாக கொண்டிருந்தன. எட்மண்ட் சமரக்கொடியின் தலைமையில் ஒரு சிறுபான்மை குழு, கட்சியை பாராளுமன்ற முறைக்கு புறம்பான நடவடிக்கைகளில் செலுத்த விரும்பியது; ஆனால் என்.எம். பெரேரா, லெஸ்லி குணவர்தன மற்றும் டி சில்வா தலைமையிலான குழு, மேலும் கூடுதலான வகையில் ஒரு பாராளுமன்ற வகையிலான கூட்டணியை SLFP உடன் வைத்துக் கொண்டு 1960 பொதுத் தேர்தலுக்கு தயாரிக்க விரும்பியது.

குறிப்பாக உயர்மட்டத் தலைவர்கள் பாராளுமன்ற தேர்தலுக்கான பட்டியலில் மொத்தமாக 80 உறுப்பினர்களை அறிவித்தபோதும், அதேநேரத்தில் ‘மோதல் தவிர்ப்பு’ ('No Clash') உடன்பாடு ஒன்றையும் SLFP மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பல முக்கியமான தொகுதிகளிலும் அறிவித்த பொழுது, கட்சியின் கீழ்மட்டத் தொண்டர்கள் முற்றிலும் குழப்பம் அடைந்தனர்.

அதிவலதுசாரியினர் அதிகாரத்தைக் கைப்பற்றி மீண்டும் ஒரு சர்வாதிகாரத்தை நிறுவும் ஆபத்திருப்பதன் காரணமாக அத்தகைய கூட்டு, தேவை என்று அவர்கள் கூறினர். ஒரு முதலாளித்துவக் கட்சிக்கான (SLFP) தமது ஆதரவை, ஸ்ராலினிஸ்டுகள் முன்பு ஸ்பெயினிலும், பிரான்சிலும் மக்கள் முன்னணி அரசாங்கங்களுக்கு வர்க்க ஒத்துழைப்பு காட்டிக்கொடுப்பை நியாயப்படுத்திய அதேநிலைப்பாட்டில் அவர்கள் நியாயப்படுத்தியிருந்தனர்.

அவர்களுடைய கடிதங்கள் SLFP வேட்பாளர்களுக்காக அத்தகைய ஒப்பந்தம் செய்திருந்த தொகுதிகளில் தேர்தல்களில் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்று வலியுறுத்தியிருந்த போதிலும், பாரிசில் இருந்த பப்லோ செயலகம் 1960களின் தொடக்கத்தில் LSSP க்கு எழுதிய கடிதம் ஒன்றில் "SLFP உடனான நடைமுறையில் மோதல் தவிர்ப்பு சாத்தியமானது" என்று உடன்பட்டிருந்தது.

1960 தேர்தல்களில் LSSP யின் முக்கிய நிலைப்பாட்டை, சில தயக்கங்களுடன் பப்லோவாத சர்வதேச செயலகம் ஒப்புதலளித்தது. அதே கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருந்ததாவது: "ஆனால் அதே நேரத்தில் பின்னர் SLFP அரசாங்கத்திற்கு முக்கிய ஆதரவு தேவை என்றால் அதுவும் அனுமதிக்கப்படலாம்; அக்கட்சியானது ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கையில் திறமையுடன் ஈடுபட்டிருக்குமானால் தற்காலிகமாக ஆதரவு வழங்கலாம்."

இவ்விதத்தில் பப்லோ SLFP இற்கான இவர்களுடைய நிபந்தனையற்ற சரணடைதலுக்கு இன்னும் கூடுதலான மறைப்பைக் கொடுத்தார்.

1960 தேர்தலுக்கு பின்னர்

இவற்றிற்கிடையே கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் LSSP இரண்டும் SLFP ஐ 1960ல் அதிகாரத்தை பெற உதவின. தேர்தலுக்காக LSSP மேற்கொண்டிருந்த தயாரிப்பு கட்சிக்குள் அப்பொழுது ஏற்பட்டிருந்த பாரிய அரசியல் சீரழிவை நன்கு புலப்படுத்தியது.

கட்சியினால் ஜனநாயகமுறையில் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை; ஆனால் உயர்மட்ட தலைவர்களுக்கு இடையே இருந்த உடன்பாட்டை அடுத்து அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். முக்கியமாக தங்கள் தேர்தல் செலவுகளை தாங்களே செய்துகொள்ள முடியும் என்ற நிலையில் இருந்தவர்கள்தான் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் விளைவாக LSSP பட்டியலில் ஏராளமான விரும்பத் தகாத கூறுபாடுகள் நிறைய இருந்தன.

இத்தகைய வழிமுறைக்கும், ஓர் ஊழல் மிகுந்த ஒரு சமூக ஜனநாயகக் கட்சியின் செயற்பாடுகள் பலவற்றிற்கும் எந்த வேறுபாடும் இல்லாமல் போயிற்று. LSSP தலைவர்கள், பரந்த மக்கள் போராட்டத்திற்கு தங்கள் முதுகை காட்டிவிட்டதுடன், இப்பொழுது மிக சந்தர்ப்பவாத தன்மை கொண்ட பாராளுமன்றவாதிகளைப்போல் செயல்பட்டனர். இப்படிப்பட்ட முயற்சிகளை செய்திருந்தபோதிலும் கூட அவர்களுடைய முயற்சியால் பாராளுமன்றத்தில் 14 இடங்களை மட்டுமே பெறமுடிந்தது.

தேர்தலின் போது SLFP உடன் இவர்கள் ஒத்துழைத்திருந்ததால், பெரும்பாலான சாதாரண மக்கள் கட்சியின் நோக்கத்தை பற்றி குழப்பம் அடைந்து, அதையொட்டி SLFP க்கு வாக்களித்தனர். இத்தேதியிலிருந்து கூட்டணிக்கான நடவடிக்கைகள் தீவிரமாக தயாரிக்கப்பட்டன.

இவற்றுள் மிகவும் முக்கியமானது, தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமை பற்றிய பிரச்சனையிலிருந்து இவர்கள் பின்வாங்கியதாகும். இந்தியாவில் இருந்து குடிபெயர்ந்திருந்த தமிழ் தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய அரசாங்கத்திற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணவேண்டிய பிரச்சினை என்று குறிப்பிடப்பட்டு கட்சியின் வேலைத்திட்டத்தில் இதுபற்றிய சிறு திருத்தப்பட்ட வடிவத்தை எடுத்தது.

குடியுரிமை பிரச்சினை பற்றிய முரண்பாடுகள் ஏகாதிபத்தியத்தின் ஆட்சிக்கு அவசியமானதாகும். ஏகாதிபத்தியம் வெற்றிகரமாக தூக்கியெறியப்படும் வரை இப்பிரச்சினை தீர்க்கப்பட முடியாததாகும். இதை இந்திய, இலங்கை முதலாளித்துவ அரசாங்கங்களின் அரசியலமைப்பு பிரச்சினையாக ஆக்கிய வகையில், LSSP தமிழ் வறிய மக்களின் புரட்சிகரத் தேவையில் இருந்து தன்னை முற்றிலுமாக விலக்கிக் கொண்டுவிட்டது.

இது கிராமப்புறங்களில் இருந்த தொழிற்சங்க உறவுகளில் மிகத் தீவிரமான முறையில் பிரதிபலித்தது.

பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்கள், கிட்டத்தட்ட 300,000 த்திற்கும் அதிகமானவர்கள், இரண்டு தொழிற்சங்கங்களுக்கு இடையே ஒழுங்கமைக்கப்பட்டிருந்தனர்; ஒன்று SLFP இன் வலதுசாரி ஆதரவாளர் எஸ். தொண்டமானால் தலைமை தாங்கப்பட்டது; மற்றொன்று மாஸ்கோ ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சியின், ஆதரவாளரான அசிஸ் ஆல் தலைமை தாங்கப்பட்டது.

1950 களின் கடைசிப் பகுதியில் தீவு முழுவதும், குறிப்பாக கிராமப்புற பகுதிகளில், முன்னர் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் ஊடுருவப்பட்டிராத கிராமப்புறங்களில், இதுகாறும் இல்லாத அளவிற்கு LSSP இன் செல்வாக்கு பெற்ற இளைஞர் குழுக்களின் (Youth Leaugues) பெரும் வளர்ச்சி இருந்தது.

இத்தகைய இளைஞர்களிடையே இருந்த இயக்கம், புரட்சிக்கு முந்தைய நிலையின் வளர்ச்சிக்கு ஒரு அறிகுறியாகும். LSSP இன் Lanka Estate Workers Union இன் வளர்ச்சியில் இதன் மிகவும் சாதகமான விளைவு இருந்தது; 1960ல் அது தமிழ் தொழிலாளர்களில் 80,000 பேரை உறுப்பினராக கொண்டிருந்த நிலையில் இருந்தது.

இதன் இளவயது அமைப்பாளர்களின் காரணமாக, சீர்திருத்தவாத தொழிற்சங்கத் தலைவர்கள் தொண்டமான், அசிஸ் போன்றவர்களிடம் இருந்த ஆதரவு தளத்தை உறுதியாய் தான் பெறத்தொடங்கியது. பின்னர் LSSP குடியுரிமைப் பிரச்சினையில் பின்வாங்கியபோது, இத்தொழிற்சங்கம் ஒரு நெருக்கடிக்குத் தள்ளப்பட்டு, கிட்டத்தட்ட சரிந்தது.

பெருமளவிலான தமிழ் தொழிலாளர்கள் தொழிற்சங்க உறுப்பினர்களாக இருப்பதிலிருந்து வெளியேறி, தொழிற்சங்கம் பல குண்டர் பிரிவுகளின் கோஷ்டி மோதல்களுள் அகப்பட்டு சீரழிய ஆரம்பித்தது. LSSP இவர்களுடைய கட்சிக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்தது. அக்கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முற்றுமுழுதான அவசியமாக இருந்த கிராமப் புறங்களில் வளர்ச்சியடைவற்கான பாதையை கிட்டத்தட்ட தடுத்து நிறுத்தியது.

SLFP இன் 1960 தேர்தல் வெற்றி பற்றி சாதாரண மக்களிடையே இருந்த பிரமைகள் கிட்டத்தட்ட உடனடியாக மறைந்துவிட்டன. 1961 ஆம் ஆண்டு, வேலைநிறுத்தங்கள் முக்கிய தொழிற்துறைகளில் ஒரு வாடிக்கையான விடயமாகியது.

மார்ச் 31, 1962 அன்று தங்களுடைய அரசியல் குழு அறிக்கையை மத்திய குழுவிற்கு கொடுத்ததில் LSSP இதைக் குறிப்பிட்டுள்ளது. 1961 ஆம் ஆண்டு வேலைநிறுத்த அலை பற்றி அவர்கள் கொடுத்த விவரமாவது:

பரந்த அளவில் பேசுவதானால், வேலைநிறுத்தங்களின் பிரதான வெற்றிகள் கீழ் கண்டவை எனக் கூறுவியலும்:--

01. அவை தொழிலாள வர்க்கத்திடையே அதன் ஐக்கியத்தை தோற்றுவித்த வகையில் அவர்களுடைய வலிமையின் முழு நனவை பெருக்கியது.

02. SLFP அரசாங்கத்திடம் தொழிலாள வர்க்கம் கொண்டிருந்த பல நப்பாசைகளை அவை அழித்தன.

03. அவை முழு நனவுடைய பரந்த தொழிலாளர் அடுக்கிற்கு தொழிற்சங்க அளவிலான போராட்டங்கள் அவர்களுக்கு அதிக முன்னேற்றத்தை கொடுக்காது என்பதையும் அரசியல் ஆட்சி பற்றிய கேள்விகள் உள்ளடக்கிய அரசியல் போராட்டங்கள் அத்தியாவசியமானவை என்பதையும் எடுத்துக்காட்டின.

இது முற்றிலும் சரியே

1962 முழுவதும் SLFP அரசாங்கத்திற்கான ஆதரவு தொடர்ந்து சரியத் தொடங்கியது.

இலங்கை மிகத்தீவிர வர்க்கப் பதட்ட நிலையில் நுழைந்துவிட்டிருந்தது; இதுவேதான் ஒரு புத்த துறவியால் திரு.பண்டாரநாயக்கா படுகொலை செய்ததில் பிரதிபலித்தது.

கொழும்புத் துறைமுகத்தின் தொழிலாளர்கள், தீவிலேயே மிகக் குறைவான ஊதியத்தை பெறுவோரில் ஒரு பிரிவாக இருப்பவர்கள், இன்னும் கூடுதலான ஊதியத்திற்காக ஒரு விட்டுக்கொடுக்காத போராட்டத்தில் ஈடுபட்டனர்; இது 1959 ஆம் ஆண்டு அவர்கள் நடாத்திய வேலை நிறுத்தத்தின் தொடர்ச்சியாகும். அந்த வேலைநிறுத்தம் அவர்களுடைய நிலைமை பற்றிய விசாரணை ஒன்றை தொடர்ந்து வெளிவந்தது; அதன் முடிவுகள் இன்னமும் வெளியிடப்படாமல் உள்ளன. ஒரு அவசரகால பிரகடனத்தை அடுத்து அது முடிவிற்கு கொண்டுவரப்பட்டது.

துறைமுக வேலைநிறுத்தத்தை தொடர்ந்து, 90 நாட்கள் நீடித்த வங்கி எழுத்தாளர்கள் வேலை நிறுத்தம் நடைபெற்றது. இப்பொழுது பிரதம மந்திரி பதவியை ஏற்றிருந்த திருமதி பண்டாரநாயக்க வேலைநிறுத்த தொழிலாளர்களுக்கு எதிரான விரோதப் போக்கு வெடிப்பில் தன்னுடைய வர்க்க உணர்வுச் சீற்றத்தை வெளிப்படுத்தினார். இலங்கை வங்கி ஊழியர்களின் தொழிற்சங்கத்தின் இதழான The Bank Clerk தன்னுடைய ஜூன், ஜூலை 1962 இதழ்களில் அவ்வம்மையாரின் அணுகுமுறையை கீழ்க்கண்டவாறு கூறுகிறது:

26 ஏப்ரல் அன்று காலை இலங்கையின் பிரதம மந்திரியான திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க "நாட்டிற்கு ஒரு செய்தி" எனப் புகழ்பெற்ற அவருடையை செய்தியில் தொழிற்சங்கத்தின் மீது அரசியல் தாக்குதல் ஒன்றை நடத்தினார். "இந்த இயக்கம் F.P. (Federal Party) இனால் தொடக்கப்பட்டது என்பதை பற்றி எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது"; இந்நாட்டின் சட்டபூர்வமாக நிறுவப்பட்டுள்ள அரசாங்கத்தை தூக்கி வீசுவதற்கு இரகசியமாய் திட்டமிட்டுவரும், தீவின் பல பகுதிகளிலும் உள்ள பல்வேறு அமைப்புக்களால் ஊக்கப்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக வங்கி எழுத்தாளர்கள் தொழிற்சங்கம் ஏற்பாடு செய்துள்ள வேலைநிறுத்தம் பற்றி நான் குறிப்பிட விரும்புகிறேன். வங்கிப் பணியாளர்களை நாட்டின் பொருளாதார வாழ்விற்கு மிகப் பெரிய தீங்கை தோற்றிவிப்பதற்கு சில குறிப்பிட்ட கூறுபாடுகள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன என்று நம்புவதற்கு இடம் உண்டு."

துறைமுகத் தொழிலாளர்கள் மற்றும் வங்கித் எழுத்தாளர்களின் வேலைநிறுத்தங்களின் முக்கியத்துவமானது அவை அடிப்படையில் அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் வேலைநிறுத்தங்கள் ஆகும்.

1963ம் ஆண்டு ஜனவரி மாதம், இலங்கை போக்குவரத்து வாரியம் வேலைநிறுத்தம் ஒன்றினால் பாதிக்கப்பட்டது; இது முக்கிய போக்குவரத்துப் பணிகள் அனைத்தையும் முடக்கிவிட்டது. திருமதி பண்டாரநாயக்க இராணுவத்தை அழைத்து பேருந்துகளை உடனடியாக ஓட்டுவதற்கும் வேலைநிறுத்தத்தை முறியடிப்பதற்கும் முயன்றார்.

ஜூலை 10, 1963 அன்று கொழும்பு புறநகர் பகுதியான வெள்ளவத்தையில் ஜவுளி ஆலைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். திருமதி பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ அரசாங்கத்துடன் முடிவான போராட்டத்திற்கான கட்டம் அடையப்பட்டுக் கொண்டிருந்தது.

1963 ஜூன், செப்டம்பர் மாதங்களுக்கு இடையே இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் நடந்தன; அவை கூட்டணிப் பின்னணியில் உடனடியான கவனத்தை கொண்டிருந்தன.

ஜூனில் அமெரிக்காவின் சோசலிச தொழிலாளர் கட்சி சில சட்டரீதியான காரணங்களுக்காக அது அவ்வாறு அங்கத்தவராக முடியாது என்றிருந்த போதிலும், பப்லோவின் நான்காம் அகிலத்துடன் மறு ஜக்கியத்திற்கு ஆதரவு கொடுத்தது. ஐக்கியத்திற்கான மாநாடு தன் பங்கிற்கு LSSP தலைவர்கள் கொல்வின் டி சில்வா, என். எம் பெரேரா மற்றும் லெஸ்லி குணவர்த்தன ஆகியோருக்கு முழு ஆதரவு கொடுத்தது; அவர்கள்- "மிகச் சரியான முறையில் ஒரு ஐக்கிய இடது முன்னணிப் (ULF) பிரச்சினையை எழுப்பினர்; இயக்கம் வலதுபுறம் செல்லாமல் இருக்கவும் மக்களை ஒரு இடது மாற்றீட்டை நோக்கி திருப்புவதற்கும் இவ்வாறு செய்தனர்" என்று அது கூறிற்று.

இந்த ஐக்கிய இடது முன்னணியானது கம்யூனிஸ்ட் கட்சி, பிலிப் குணவர்த்தனவின் MEP கட்சி மற்றும் LSSP இவற்றிற்கு இடையே ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையை தளமாகக் கொண்டிருந்தது. பப்லோவாதிகளின் வார்த்தைகளில் உடன்பாட்டின் நோக்கம், ஒரு உடன்பட்ட வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு "முதலாளித்துவ எதிர்ப்பு" ஐக்கிய இடது முன்னணியை அமைப்பதாகும்.

இந்தக் கட்டத்தில் LSSP தலைவர்கள் ஏன் ஐக்கிய இடது முன்னணிக் கருத்தை முன்வைத்தனர்? பொதுத் தேர்தலில் LSSP ஒரு படுதோல்வியை எதிர்கொண்வுடன் 1960ல் ஒரு சிறப்பு மாநாட்டில் வலதுசாரி பிரிவினர் கூட்டணி பற்றிய தீர்மானம் ஒன்றை விரைந்து முன்வைத்தனர்.

ஆனால் அதே மாநாடு ஒரு மத்திய குழுவை தேர்ந்தெடுத்தது; அதில் வலதுசாரி பிரிவினர் ஒரு சிறுபான்மையாகத்தான் இருந்தனர். என்.எம். பெரேராவின் வலதுசாரி அணி திகைப்பில் ஆழ்ந்தது. இதன்பின் தலைவர்கள் அவர்களுக்கு உதவும் வகையில் ஐக்கிய இடது முன்னணி (ULF) தந்திரத்தைக் கையாண்டது -- அதாவது கூட்டணிக்கான இனிப்பு தடவிய கசப்பு மாத்திரையைக் கொடுத்தது.

இதற்கு முன்னதாக, கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவையும் கொடுத்து 1956ம் ஆண்டு SLFP அரசாங்கத்துடன் ஒரு கூட்டணியிலும் பங்கு பெற்றிருந்தது.

அக்டோபர் 14/15, 1961 அன்று மத்திய குழுவிற்கு LSSP சமர்ப்பித்திருந்த தீர்மானம் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தியிருந்தது:

ஜூலை 1960 தேர்தல்களுக்கு முன்பு எந்நிலையில் இருந்ததோ அப்படித்தான் இப்பொழுதும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது. அரசியலில் இதன் நிலைபாடு கணிசமான அளவில் மாறாமல் உள்ளது; நிபந்தனையற்ற முறையில் அது SLFP அரசாங்கத்திற்கு ஆதரவைக் கொடுத்துள்ளது. சோவியத் அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை தேவைகளுக்கு இதன் கொள்கைகள் சேவை செய்யும்வரை இத்தகைய நிபந்தனையற்ற ஆதரவு தொடர்ந்து இருக்கும்.

இப்பொழுது அவையனைத்தும் LSSP தலைவர்களாலும் "ஐக்கிய செயலகம்" என்று கூறப்படுவதாலும் வசதியாக மறக்கப்பட்டுவிட்டன; ஒரு சர்வசாதாரண உண்மை என்னவென்றால் CP மற்றும் MEP இரண்டுமே திருமதி பண்டாரநாயக்கவின் கூட்டணிப் பையில் இருந்தன மற்றும் SLFP உடனான தேர்தல் கூட்டுவைப்பதன் மூலம், LSSP அரைவாசி தூரத்திற்கும் மேலாக அங்கே சென்றிருந்தது.

"தான் உடன்பாடு கொண்டுள்ள" விடயங்களில் திருமதி பண்டாரநாயக்கவின் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தொடர்ந்து பிரச்சாரம் செய்தது. இவ்விதத்தில் 1960ம் ஆண்டு பப்லோவாத தடத்திலேயே இதுவும் கவனமாக தொடர்ந்தது.

ஐக்கிய இடது முன்னணியின் வேலைத்திட்டத்தில் இருந்த குடியுரிமைப் பிரச்சினை தொடர்பான புள்ளி 14(a), 14(b) ஆகியவற்றை திருத்துவதன் ஒரு வடிவம் பற்றி ஐக்கிய செயலகம் சில வாரங்களுக்கு பேசிக்கொண்டிருந்தது. ஜூலை 1ம் தேதி, இறுதி வரைவு "உறுதியாக ஒரு முன்னேற்றம்தான்" என்றும் "இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே இவ்விடயம் பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்துவதில் எந்தத் தவறும் இல்லை என்பதை நாங்கள் உணர்கிறோம்" என்றும் உடன்பட்டு, அவர்கள் லெஸ்லி குணவர்த்தனவுக்கு கடிதம் எழுதினர்.

இவ்விதத்தில் குடியுரிமைப் பிரச்சினையில் LSSP முற்றிலும் பின்வாங்கியதற்கு செயலகம் முழுமையாக பொறுப்பேற்கின்றது.

ஐக்கிய இடது முன்னணி பற்றிய பப்லோவாத ஜக்கிய செயலகத்தின் தத்துவம், அதிகாரத்தை எடுத்துக் கொள்ளுவதற்கு ஒரு புரட்சிகரக் கட்சி தேவையில்லை மாறாக "ஒரு முன்னணியின்" ஊடாக ஒழுங்கு செய்துகொள்ள முடியும் என்ற தத்துவத்தை பின்பற்றியது. இன்று கம்யூனிஸ்ட் கட்சியும் MEP யும் முழுமையாக LSSP கூட்டணியில் சேர்வதற்கு வழிவகுத்தன.

ஏப்ரல் 1964ல், கூட்டணிக்கு இரு மாதங்கள் முன்பு, பாரிசில் இருந்த ஜக்கிய செயலகம் LSSP இன் தலைமக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் எழுதிய கடிதத்தில் கூறியதாவது:

இடதின் ஐக்கிய முன்னணியானது, மக்கள் போராட்டத்தால் வலுப்பெற்று, ஒரு உண்மையான சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தன்னுடைய சொந்த அரசியல் அதிகாரத்தை நிறுவ வழிநடத்தப்படும், இது பிற்போக்கு அலையை தடுப்பதற்கு ஒரு வழிவகையை கொடுப்பதுடன், எமது முன்னோக்குகள் இறுதியில் பூர்த்தியடையப்படுவதற்காக எமது சொந்தக் கட்சியின் தொண்டர்களையும் வெகுஜனங்களையும் ஐக்கியப்படுத்துகிறது. இலங்கை மற்றொரு கியூபா அல்லது அல்ஜீரியாவாக ஆகிக்கொள்ள முடிந்து, உலகெங்கிலும் இருக்கும் புரட்சிகர எண்ணங்கொண்ட தொழிலாளர்களுக்கு இன்னும் கூடுதலான ஊக்கமாக இருக்க முடியும் என நிரூபிக்கும்.

இலங்கையின் ஸ்ராலினிச கட்சி, முன்னணியில் பங்கேற்பதன் மூலம் அதிகாரத்தை கையில் எடுக்க முடியும் என்ற கருத்து, முதலில் புரட்சிகரக் கட்சியின் பிரிவுகள் பற்றிய பப்லோவின் 1953ம் ஆண்டு கருத்துருவிலிருந்து தோன்றியதாகும்.

புரட்சிகர-கட்சி-இல்லாத-பாதை என்றிருந்த கியூப மற்றும் அல்ஜீரிய முறையை பற்றி அவர்கள் பெரிதும் சிந்தித்திருந்தனர்; அவர்கள் பகிரங்கமாக என்.எம். பெரேரே மற்றும் LSSP இன் தலைவர்களில் இருந்து முறித்துக் கொள்வதையும் எப்படியும் தவிர்க்க விரும்பினர். சர்வதேச ஐக்கியம் என்ற முகப்பையும் தக்க வைத்துக் கொள்ள விரும்பினர்; குறிப்பாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் விமர்சனங்களுக்கு எதிராக இவற்றை எல்லாம் விரும்பினர்.

21 அம்சங்களைச் சுற்றி தொழிற்சங்கங்கள்

1963 கோடை காலத்தில் நிகழ்ந்த இரண்டாவது முக்கிய சம்பவம் தீவில் இருந்த தொழிற்சங்கங்கள் அனைத்திடமும் ஏற்பட்ட மகத்தான ஐக்கியத்தின் வளர்ச்சியாகும். LSSP மற்றும் அதன் சந்தர்ப்பவாத நண்பர்கள் மக்களுடைய கவனத்தை ஐக்கிய இடது முன்னணி ஊடாக பாராளுமன்றப் பாதையை நோக்கி ஈர்ப்பதில் கவனத்தை காட்டுகையில், தொழிற்சங்கங்கள் திருமதி பண்டாரநாயக்கவின் அரசாங்கத்துடன் போராடுவதற்கு ஒன்றாக வந்தன.

செப்டம்பர் 29 ஞாயிறன்று, அனைத்து பெரிய தொழிற்சங்கங்களையும், ஒன்றரை மில்லியன் தொழிலாளர்கள், தோட்டங்கள் மற்றும் தொழிற்துறைகளில் வேலை செய்பவர்கள் ஆகியோரை பிரதிபலித்த வகையில் 800 பிரதிநிதிகள் கொழும்பில் இருந்த சிலிங்கோ மாடி கட்டிடத்தில் கூடி கீழ்க்கண்ட 21 அம்சங்களுக்கும் ஒப்புதல் கொடுத்து, அவை அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளின் வேலைத்திட்டமாக இருக்கும் என்றும் உடன்பட்டனர்:

(1) சம்பள உயர்வு: நாளொன்றுக்கு ரூபாய் 1 அல்லது மாதம் ரூபாய் 30 அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

(2) (a) அனைத்து ஊழியர்களுக்கும் மாதாந்த ஊதியம் அளிக்கப்பட வேண்டும்; (b) வருடாந்திர ஊதிய உயர்வு அனைவருக்கும் அளிக்கப்பட வேண்டும்.

(3) வருமான வரியில் இருந்து, வாழ்க்கைத்தர உயர்வு படிகள், சேமலாப நிதி கொடுப்பனவுகள் மற்றும் முன்கூட்டி பெறப்பட்ட மொத்த ஓய்வூதிய தொகைகள் தவிர்க்கப்பட வேண்டும்.

(4) அனைத்து ஊழியர்களுக்கும் வாரம் அதிகபட்சம் 45 மணி நேர வேலைதான் இருக்க வேண்டும்; 45 மணி நேரத்திற்கு மேற்பட்டு உழைக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கூடுதல் நேர ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

(5) போதிய வீட்டு வசதி அல்லது வீட்டு வாடகைப்படி அனைத்து தொழிலாளர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும்.

(6) முதலாளிகளால் கொடுக்கப்படும் இல்லங்களில் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் முழு வாடகை உடன்படிக்கை பத்திரம் பெறும் உரிமை வழங்கப்பட வேண்டும்.

(7) (A) ஏழு நாட்கள் தற்செயல் விடுப்பு மற்றும் முப்பது நாட்கள் மருத்துவ விடுப்பு அனைத்து தனியார் பிரிவு, உள்ளூர் நகராட்சிகளில் பணிபுரிபவர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட வேண்டும்; (B) மகப்பேறுகால விடுப்பு பிரசவத்திற்கு ஆறு வாரம் முன்பும், பின்பும் கொடுக்கப்பட வேண்டும்; பேறுகாலத்தின் இறுதிக்கட்டத்திலும் அதேபோல் பிரசவத்திற்கு பின்னரும் முழுவேலை நேரம் கொடுக்கப்படக்கூடாது; (C) விடுப்பு, பொது விடுமுறை என்று அரசாங்க நிறுவனங்களிலும் உள்ளாட்சி அமைப்புக்களிலும் சனிக்கிழமை அரை நாளாகத்தான் கருதப்பட வேண்டும்; (D) ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை வரும்போது மறுநாள் விடுமுறையாக அறிவிக்கப்பட வேண்டும்; (E) கடைகள், அலுவலகங்கள் சட்டப்படி அனைத்து உத்தியோகபூர்வ விடுமுறைகளும் தனியார் தொழிற் துறையிலும் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்; (F) அனைத்து தொழிலாளர்களுக்கும் ஞாயிறு அன்று ஊதியத்துடன் விடுமுறை வழங்கப்பட வேண்டும்.

(8) பொதுத்துறை, உள்ளூராட்சி உட்பட, ஊழியர்களும் 6 மாத பணிக்காலத்திற்கு பின்னரும், அனைத்து தற்காலிக ஊழியர்களும் மூன்று ஆண்டுகள் பணிக்காலத்திற்கு பின்னரும் நிரந்தர ஊழியர்களாகவும், ஓய்வூதிய உரிமையை பெறுபவர்களாகவும் செய்யப்பட வேண்டும். தொடர்ச்சியில்லாமல் அல்லது இடைவெளி விட்டுவிட்டு பணியில் இருந்திருந்தால் அவையும், ஊதிய உயர்வு, ஓய்வூதியம் வழங்குதல் ஆகியவற்றிற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

(9) (A) மாற்று வேலை தராமலோ, கடந்தகால வேலைக்கு போதிய இழப்பீட்டுத் தொகை கொடுக்கப்படாமலோ பணி நீக்கம் செய்யப்படக்கூடாது; (B) வேலையற்று இருப்போருக்கு பணி அல்லது உதவித் தொகை வேலையற்றோருக்கான காப்புறுதித் திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட வேண்டும்.

(10) (a) தொழிலாளர்களின் சேமலாப நிதிக்கு (Provident Fund) வேலைகொடுப்பவர்கள் அளிக்கும் நிதியை மொத்த ஊதியத்தில் 10 சதவிகிதமாக உயர்த்த வேண்டும்; (b) இந்த நிதியில் ஊழியர்கள் கணக்கில் இருக்கும் பணத்தை தடையின்றி பெற்றுக் கொள்ளவும், 10 ஆண்டுகள் உறுப்பினராக இருந்த பின் இந்நிதிக்கு மாற்றப்பட்ட தொகைகள் உட்பட அனைத்தையும் எடுத்துக் கொள்ளப் போதுமான விதிகள் இயற்றப்பட வேண்டும்; (c) விதவைகள் மற்றும் அனாதைகள் நலன்கள் இருமடங்காக ஆக்கப்பட வேண்டும்.

(11) கடந்த காலப் பணியில் ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒரு மாத மொத்த தொகை மேலதிக உதவித்தொகையாக சேமலாப நிதி தொடக்குவதற்கு முன்வழங்கப்பட வேண்டும்.

(12) அரசாங்க நிறுவனங்களின் நிர்வாகக் குழுக்களில் தொழிலாளர்களின் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் நியமிக்கப்பட வேண்டும்.

(13) தொழிற்சங்க பிரதிநிதிகள் மாற்றம் மற்றும் பதவி உயர்வைப் பெறுவதற்கான குழுவை அமைத்திடல்.

(14) முழுத் தொழிற்சங்க, அரசியல், குடியுரிமை ஆகியவை அனைத்து பொதுப்பணி ஊழியர்களுக்கும், ஆசிரியர்கள், அரசாங்க நிறுவனங்கள், உள்ளூராட்சிப் பணியாளர்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட வேண்டும்; அனைத்து பண்ணைகள், தோட்டங்கள் ஆகியவற்றிற்கு செல்லுவதற்கு தொழிற்சங்க அதிகாரிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட வேண்டும்.

(15) பணிநீக்கம் செய்யப்பட்ட அல்லது வேலைநிறுத்தம், தொழிற்சங்க நடவடிக்கைகளில் பங்கு பெற்றதற்காக கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்ட அனைவரையும் மீண்டும் பணியில் இருத்த வேண்டும்; பங்கு பெற்றதற்காக கொடுக்கப்பட்ட அனைத்து தண்டனைகளும் திரும்பப் பெற வேண்டும்.

(16) மறைந்த பிரதம மந்திரி திரு. S.W.R.D பண்டாரநாயக்க அளித்த உத்தியோகபூர்வ மொழிச் சட்டம் மற்றும் தமிழ் மொழி சிறப்பு விதிகள் நடைமுறை பற்றிய உறுதிமொழிகள் செயல்படுத்தப்பட வேண்டும்; எவ்வித தண்டனைகளும் பழைய பொதுப் பணியாளர்கள் மீண்டும் சேர்க்கப்படும்போதும், உள்ளூராட்சி ஊழியர்களுக்கும் வழங்கப்படக்கூடாது.

(17) ஆட்சி மொழியில் தக்க பயிற்சி தேவைப்படாத பணிகளில் இருக்கும் பொது ஊழியர்கள் திறமைத் தேர்வில் இருந்து விலக்களிக்கப்பட வேண்டும்.

(18) (a) ஆரம்ப நிலைப்பணியில் இருந்து உயர்ந்த பதவி வரை செல்லும் வாய்ப்புக் கொடுக்கக் கூடிய நல்ல எதிர்காலம், பதவி உயர்வு ஆகியவற்றை கொண்ட ஒரு ஒருங்கிணைந்த நிர்வாக பணித்துறை, பொருத்தமான உயர்மட்ட பிரிவுகளுக்கான பதவிகளில் 50 சதவிகிதம் கீழ்ப் பிரிவுகளில் இருந்து வருபவர்களுக்கு ஒதுக்கீடு என்பது பொதுப் பணித்துறையில் செய்யப்பட வேண்டும். (b) தொழில்துறையில் இருக்கும் தொழிலாளர்களுக்கும் தொழில்நுட்ப ஊழியர்களுக்கும் குறைந்த நிலையில் இருந்து உயர்ந்த நிலை வரை செல்லக்கடிய உத்தியோக உயர்வு வாய்ப்புக்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

(19) பொதுப் பணித்துறை தேர்வுக் குழு, உள்ளூராட்சி பணிக் குழு ஆகியவற்றை, அவை நன்மதிப்புப் பெறும் வகையில் மறு சீரமைக்கவும்; முந்தைய PSC மற்றும் LGSC ஆகியவற்றின் முடிவுகளுக்கு பாராளுமன்றத்திற்கு விடையறுக்கும் பொறுப்பு உடைய முறையீட்டு மன்றத்தையும் நியமிக்க வேண்டும்.

(20) தொழிலாளர்கள் இழப்பீட்டுத் தொகை சட்டத்தின்படி கிடைக்கவுள்ள தொழிலாளர்கள் இழப்பீட்டுத் தொகை வீதத்தை மூன்று மடங்காக அதிகரித்து, விபத்து நடந்த தினத்தில் இருந்து முழு ஊதியமும் அளிக்கவேண்டும்.

(21) சம வேலைக்கு சம ஊதியம்; (a) மகளிருக்கு எதிராக பாகுபாடு ஏதும் காட்டக்கூடாது; (b) ஆசிரியர்களுக்கு இருப்பது போல் மொழி அடிப்படையிலான ஊதிய பாகுபாடு இருக்கக்கூடாது.

ஆறு வாரங்களுக்குப் பின்னர், தீவிலேயே சிறந்த முறையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த Ceylon Mercantile Union என்னும் தொழிற்சங்கம், தன்னுடைய அங்கத்தவர்களான எழுதுவினைஞர்கள் மற்றும் துறைமுகங்களில் வேலைபார்ப்போர் மற்றும் கொழும்பில் இருக்கும் பிரதான தொழில் நிறுவனங்களில் வேலைபுரிபவர்கள் அனைவரையும் உள்ளடக்கிய, 69 நாட்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கியது.

LSSP மாநாட்டின் போது வெளிநடப்பு செய்த மற்றும் சிறுபான்மை பிரிவிற்கும் தலைவராக இருக்கும், இதன் பொதுச் செயலாளரான பாலா தம்பு, தன்னுடைய தொழிற்சங்கத்தை ஆரம்பத்தில் இருந்தே திருமதி பண்டாரநாயக்கவின் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுத்தினார்.

இந்த வேலைநிறுத்தம் நீண்ட காலமாக தீவில் காணப்படாத உற்சாகத்தை காட்டியது. 1964 ஜனவரி 9 ல் அரசாங்கம் தலையிட்டு Ceylon Mercantile Union க்கு எவ்வித சலுகைகளும் வழங்கமுடியாது எனக் கூறியது.

இதற்கு அடுத்த நாள் திருமதி பண்டாரநாயக்க அவர்களுக்கு "வேலைக்குத் திரும்புக, இல்லையேல்..." என்று இறுதி எச்சரிக்கையை விடுத்தார்: ஆனால் CMU தலைமை சரியான முறையில் நின்று காலக்கேட்டை நிராகரிக்க முடிவெடுத்தது; இதன் விளைவு ஞாயிறு, ஜனவரி 12 க்குள், அது ஒரு தீர்மானகரமான பொருளாதார, அரசியல் வெற்றியை பெற்றது.

இது திருமதி பண்டாரநாயக்க மற்றும் அவருடைய அரசாங்கத்திற்கு பொறுத்துக் கொள்ளமுடியாததாக போயிற்று; எனவே அவர் பெப்ருவரி 1964 இல் பாராளுமன்றத்தை கலைத்துவிடுவது என்ற முடிவிற்கு வந்தார். CMU வேலைநிறுத்தம் அவரையும் அவருடைய அரசாங்கத்தையும் மிகப் பெரிய நெருக்கடியில் ஆழ்த்திவிட்டது. 21 அம்சங்களில் உடன்பாடு, CMU வின் வெற்றி, அரசாங்கத்தின் நெருக்கடி என்ற நிலையால் செறிவூட்டப்பட்ட தொழிற்சங்க இயக்கத்தின் உணர்வு இருந்தது. இதன்பின்னர் அவர்கள் 21 அம்சத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மார்ச் 2, 1964 அன்று கொழும்பில் மகத்தான ஆர்ப்பாட்டத்தை நடத்த முடிவு செய்தனர்.

இந்த 21 அம்சத் திட்டங்கள் பற்றி மிகக் குறிப்பிடத்தக்க விஷயம், இவை முதன் முதலாக வரலாற்றில் தோட்டத் தொழிலாளர்களை, நகர்ப்புறத் தொழிலாள வர்க்கத்துடன் இணைத்ததாகும்.

உண்மையில், LSSP ஒரு புரட்சிகரக் கட்சியாக இருந்திருந்தால், அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான நேரம் வந்துவிட்டிருந்தது.

கூட்டம் திங்கள் 4 மணிக்கு ஆரம்பமாகியது; தொண்டமான், அசிஸ் போன்றோர் 21 அம்ச கோரிக்கைகளுக்காக முழுப் போராட்டத்திற்கு உறுதியளித்தனர். தீவிலேயே இதுகாறும் கண்டிராத மிகப் பெரிய தொழிலாளர் கூட்டம் இதற்கு ஒருமனதாக ஆதரவைக் கொடுத்தது.

LSSP தொழிற்சங்கங்களின் சார்பில், கொல்வின் டி சில்வா 21 அம்ச கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். ஆனால் காலிமுகத் திடலில் (Galle Face) இவர் பேசிக்கொண்டிருந்த அதே நேரத்தில், இவருடைய சகாவான என்.எம்.பெரேரா ஏற்கனவே திருமதி பண்டாரநாயக்கவுடன் இரகசியப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

காலிமுகத் திடலில் தொழிலாளர்கள் குழுமிக் கொண்டிருந்தவேளையில் அவ்வம்மையாரை பேட்டி கண்ட செய்தியாளர் ஒருவர், அவர் ஆர்ப்பாட்டம் பற்றி உடல் நடுக்கமே கொண்டிருந்தார் என்றும் எல்லாவற்றிற்கும் மேலாக ஆர்ப்பாட்டக்காரர்கள் புரட்சிப் பாதையில் சென்று தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை தீவின் அதிகாரத்திற்கு கொண்டுவருவதின் தொடக்கத்தையும் ஏற்படுத்திவிடுவரோ என்று அஞ்சினார் என்றும் எழுதியுள்ளார்.

எனவே அந்த நேரத்தில் டாக்டர் என்.எம். பெரேரா LSSP பெரும்பான்மையின் சார்பில் அவ்வம்மையாரை இக்கட்டில் இருந்து காப்பாற்றுவதற்கு வந்தது என்பது புரிந்து கொள்ளக் கூடியதுதான்.

ஏனெனில் இத்தீவானது திருமதி பண்டாரநாயக்கவின் குடும்பம் போல ஒரு சில பெரிய பிரபுக்களின் குடும்பங்களினால் மட்டும் இதுகாறும் ஆளப்படவில்லையல்லவா?

இந்தக் குடும்பங்களில் இருந்த ஆண்ககளும் பெண்களும் லண்டனுக்கு சென்று, சிலர் இடது பற்றியும், சிலர் வலது பற்றியும் பேசுவதற்கும் கற்றுக்கொள்ளவில்லையா?

காலிமுகத் திடலில் கொல்வின் டி சில்வா இடது ஒலியை முழக்கிக் கொண்டிருக்கையில், அவருடைய சகா என்.எம். பெரேரா பிரதம மந்திரியின் இல்லமான “அலரி மாளிகை” (Temple Trees) க்குள் வேலையாட்களுக்கான நுழைவாயில் மூலம் ஊர்ந்து சென்றார்.

மார்ச் 21 சனிக்கிழமை மாலை, திருமதி பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ இல்லம் பற்றியெரியத் தொடங்கியபோது, பிரபுக்களின் மகன்களான குணவர்த்தனாக்களும், டி சில்வாக்களும் பெரேராக்களும் தங்களுடைய சொந்தவழியில் திருமதி பண்டாரநாயக்காவிற்கும் மற்றும் அவருடைய வர்க்கத்திற்கு உதவிக்குச் செல்வது மிகவும் இயல்புதானே.

இரகசிய கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் நடத்தும்போது என்.எம். பெரேராவிற்கு தான் உறுதியான நிலையில்தான் இருக்கிறார் என்பது நன்கு தெரியும். கூட்டணிக்கு எப்பொழுதும் ஆதரவு கொடுத்து வந்த மற்றும் ஐக்கிய இடது முன்னணி என்று அழைக்கப்பட்டதில் முக்கிய தூணாக இருந்த, கம்யூனிஸ்ட் கட்சியின் முழு ஆதரவையும் அவர் பெற்றிருந்தார். பாரிசின் "ஐக்கிய செயலகத்தின்" மறைமுகமான ஒத்துழைப்பும் அவருக்குக் கிடைத்து வந்தது.

1964ம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்தே ஐக்கிய செயலகம் இலங்கையில் நடப்பது பற்றி எந்த விவாதத்தையும் அனுமதிக்கவில்லை. அவ்வாறு செய்தால் ஐக்கியப்படுவதை குழப்பி, அவர்கள் எந்தவிலை கொடுத்தாவது தவிர்க்க விரும்பிய LSSP தலைமையுடன் முரண்பாட்டில் கொண்டு சென்றுவிடும் என்று அவர்கள் கருதினர்.

அத்தகைய விவாதத்தை கோரிய ஒரு திறனாய்வாளருக்கு அவர்கள் கீழ்க்கண்டபடி எழுதினர்:

மறு ஐக்கிய மாநாடானது (Reunification Congress, June 1963) உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் புதிய ஒழுங்கும் உறுதியும் வருவதற்கு, அதுவும் பல பிளவுகளின் பின்னர் தொடர்புகளை மீளுருவாக்கி உறுதிப்படுத்துவதற்கான அனைத்தையும் செய்யவேண்டும் என்ற பொறுப்பைக் ஐக்கிய செயலகத்தின் தலைமையிடம் கொடுத்துள்ளது. இதையொட்டி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சில அமைப்புமுறை விதிகளை தளர்த்துதல் தேவையாகும்; அதேபோல் ஐக்கிய இயக்கத்தின் பல கூறுபாடுகள், பல பிரிவுகளிலும் இருக்கும் உட்பூசல்களை சீர்படுத்துவதற்கும் அவகாசம் தேவையாகும்; அதிலும் குறிப்பாக கடந்த காலத்தில் இருந்து தொடரும் பூசல்கள் பற்றி இக்கவனம் தேவை; அப்பொழுதுதான் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பொதுப் பிரச்சினைகளுக்கு உதவுவதற்கு புதுத் தொடக்கத்திற்கு உதவ முடியும். இவை அனைத்தும் விளக்கப்பட்டு, மறு ஐக்கிய மாநாட்டில் பங்கு பெற்ற பிரதிநிதிகளால் ஒருமனதாக ஒப்புக் கொள்ளவும் பட்டது.

இலங்கையிலும் ஏனைய இடங்களிலும் இருந்த நிலைமை பற்றிய ஐக்கிய செயலகத்தின் பார்வை இத்தகைய மறு ஐக்கிய மாநாட்டில் அடித்தளமிடப்பட்ட இந்த பரந்த பரிசீலனைகளின் அடிப்படையில் பொதிந்திருந்தது.

தோழர் ஆண்டர்சன் குறிப்பிடுவது போல், 'சாராம்சத்தில்' ஐக்கிய செயலகத்தின் ஏழாம் உலக மாநாடு LSSP மீதுவைத்த விமர்சனங்களை சிறிதும்கூட மாற்றவில்லை. LSSP யின் தலைமை இவ் விமர்சனங்களுக்கு விடையிறுக்கும் திறனுடையது என்ற நம்பிகையைத்தான் செயலகம் கொடுத்தது. LSSP க்கு எழுதப்பட்ட கடிதம் ஒன்றும் தோழர் ஆண்டர்சன் நினைப்பது போல் ஒருவகை பழிப்பிற்கு ஆளாக்குவதற்கு அல்லது குழுவாத மோதல்களுக்குள் பாய்ந்து வீழ்வதற்கான நோக்கத்தை கொண்டதல்ல. அதில் கூறப்பட்ட விமர்சனங்கள் உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பிரதிநிதிகள் முழு நல்லெண்ணத்தில் வெளிப்படுத்தியவைதான்; அதுவும் LSSP அவற்றிற்கு உரிய கவனத்தைக் கொடுக்கும் என்ற முழு நம்பிக்கையுடன்தான் அவை கூறப்பட்டிருந்தன. இலங்கைப் பிரிவுடன் இத்தகைய விசுவாசமான, தோழமை நிரம்பிய அணுகுமுறையை தக்க வைத்துக் கொள்ள ஐக்கிய செயலகம் முற்பட்டது; அதே நேரத்தில் அதன் உறுப்பினர்கள் அரசியல் அளவில் LSSP இன் இடது கன்னையுடன் பரிவு உணர்வு காட்டுவதையும் வெளிப்படையாக ஒப்புக் கொண்டது.

ஆனால், ஐக்கிய செயலகம், இயக்கத்தை முழுமையாக பிரதிபலிக்கும் அமைப்பு என்னும் முறையில், LSSP தலைமையின் பெரும்பான்மையின் அறிவிப்புக்களை ஒதுக்கி வைப்பது என்ற நிலைப்பாடும் மற்றும் அதேபோல் ஐக்கிய இடது முன்னணியுடனான தமது நிலைப்பாட்டை செயலிலும், உளப்பூர்வமான முறையிலும் நிரூபிக்க கால அவகாசத்தை வழங்க மறுப்பதும் அவர்களின் உத்தரவாதங்களை நம்ப மறுப்பதும் தவறாக போய்விடலாம் என்றும் கருதுகிறது.(அழுத்தம் எங்களுடையது)

அப்படி நடந்து கொண்டால் முதலில், மிகத் தீவிரமான பிரிவுவாதத்தை தூண்டும்வகையில் LSSP க்குள் இருக்கும் சூழ்நிலையை சூடேற்றுவது போல் ஆகிவிடும். இரண்டாவதாக, விஷயங்களை கூர்மையடைய செய்வது இன்னும் கூடுதலான வகையில் பூசலை பகிரங்கமாக ஆக்கிவிடக் கூடும். இத்தகைய பிளவுண்டாக்கும் கொள்கை ஐக்கிய செயலகத்திற்கும் LSSP தலைமையிடத்திற்கும் இருக்கும் சகோதர உறவுகளை பாதிப்பிற்கு, ஏன் அழிவிற்குக் கூட, உட்படுத்திவிடும். இதன் இறுதி விளைவு நான்காம் அகிலத்திற்குப் பெரும் ஊறு விளைவிப்பதுடன், LSSP க்கும் ஊறு விளைவிக்கும். இது அதன் இடது கன்னைக்கும் பாதிப்பு ஏற்படுத்தும்; அக்கன்னைக்கோ யாரால் உருவாக்கப்பட்டாலும் அளவிற்கதிகமான உட்பூசல் மற்றும் பதட்டம் ஆகியவை மூலம் கட்சியின் ஐக்கியம் கேள்விக்குள்ளாக்கப்படுவதில் முற்றிலும் அக்கறை இல்லை.

இவ்விதத்தில் பண்டாரநாயக்கவின் கோழிகூட்டுக்குள் அனைத்து கோழிக்குஞ்சுகளும் தமக்குரிய இடத்தை வந்தடைந்துவிட்டன. பாரிசில் இருந்து கொழும்பு வரை தொழிலாள வர்க்கத்திற்கு அதிகாரத்தை எடுத்துக் கொள்வதற்கு உறுதியாக வழிகாட்ட ஆர்வத்துடன் இருந்த திருத்தல்வாதிகள் அனைவரும் இப்பொழுது வர்க்க எதிரியின் பக்கத்தில் சேர்ந்துவிட்டனர்.

மாபெரும் காட்டிக்கொடுப்பின் கடைசிக் கட்டத்தை இப்பொழுது நாம் அடைந்துவிட்டோம். ஞாயிறு, மே 10, 1964 அன்று, பிரதம மந்திரி திருமதி பண்டாரநாயக்க கூட்டணி அரசாங்கம் பற்றிய அவருடைய திட்டத்தை பகிரங்கமாக அறிவித்தார்.

அவருடைய உரையில் இருந்து எடுத்துக் கீழே கொடுக்கப்பட்டுள்ள சுருக்கவுரை வரலாற்றிலேயே மிகவும் சிந்தனை மிகுந்த வர்க்க அறிக்கை எனக் குறிப்பிடத்தக்கதாகும்.

ஜூலை 1960க்குப் பின்பு, திரு. சி.பி.டி சில்வா மற்றும் அக்கறை கொண்டவர்களின் அழைப்பின் பேரில் நான் கட்சித் தலைவியாக ஆன பின்பு, SLFP, MEP ஐத் தவிர மற்ற இடது கட்சிகளுடன் கொண்ட உடன்பாட்டின் அடிப்படையில் 75 இடங்களை பெற்று அரசாங்கத்தை அமைக்க முடிந்தது. இதன் உண்மையான முக்கியத்துவம் என்ன? மார்ச் மாதம் எமக்கு 46 இடங்கள் கிடைத்தன; ஜூலையில் 75 இடங்கள் கிடைத்தன; ஏனெனில் எமக்கு இடதின் ஆதரவு இருந்தது. இது நேர்மையாக ஒப்புக்கொள்ளப்பட வேண்டும். 75 இடங்களைவிட நாம் குறைவாக ஒருவேளை பெற்றிருந்தால், எமக்கு தேர்தலில் ஆதரவு கொடுத்திருந்த கட்சிகள் அரசாங்கத்தை உருவாக்குவதில் அவர்களுக்கு ஒரு இடம் கிடைத்திருக்கும்.

ஆனால், அரசாங்கத்தை அமைத்த பின்னர், நாம் சில வினாக்களை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. எம்முடன் இயைந்து பணிபுரிந்திருந்த இடதுகள் தொடர்ச்சியான வேலைநிறுத்தங்களை ஆரம்பித்தனர்; ஏனெனில் அரசாங்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. வகுப்புவாத கலவரங்கள் வெடித்துக் கொண்டிருக்கும் வடக்கில் இன்னும் பல பிரச்சினைகள், மொழிப் பிரச்சினைகள் போன்றவையும், வெளிப்பட்டுக் கொண்டிருந்தன.

இவற்றை நாம் தைரியமாக எதிர்கொண்டோம் என்றாலும், என்னுடைய அனுபவத்தின் அடிப்படையில், உங்களுக்கு ஒன்றை நினைவுறுத்த விரும்புகிறேன். எப்படிப்பட்ட முற்போக்கான பணியை நாம் செய்தாலும், தொழிலாள வர்க்கத்தின் ஒத்துழைப்பை பெறாவிடில் நாம் நல்ல முடிவுகளை எதிர்பார்க்க முடியாது. துறைமுக செயற்பாடுகள் பிற தேசியமயமாக்கப்பட்ட நிறுவனங்களின் செயற்பாடுகள் ஆராயப்பட்டால் இது நன்கு விளங்கும். நாம் பின்னோக்கிப் போய்விடக் கூடாது. நாம் முன்னேற வேண்டும். வேலைநிறுத்தங்கள், குறிப்பாக, மெதுவாக வேலை செய்தல் போன்றவை கட்டாயம் அகற்றப்பட வேண்டும், நாட்டின் வளர்ச்சி கட்டாயம் முன்னேற வேண்டும்.

இவ்விஷயங்கள் பற்றி சிலர் பலவிதமான கருத்துக்களை கொண்டுள்ளனர். ஒரு சர்வாதிகாரம் நிறுவப்பட்டால் இத்தகைய குழப்பங்கள் அகற்றப்பட்டுவிடலாம் என்று சிலர் நினைக்கின்றனர். வேறுசிலர் தொழிலாளர்கள் துப்பாக்கி, கத்தி முனையில் வேலை வாங்கப்பட வேண்டும் என்று கூறுகின்றனர். இன்னும் சிலர் ஒரு தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டு இப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று கூறுகின்றனர். இந்தக்கருத்துக்கள் அனைத்தையும் நான் தனித்தனியாகவும் மற்றும் உலக நிகழ்வுகளின் உள்ளடக்கத்திலும் ஆராய்ந்தேன்.

மேற்கூறிய தீர்வுகள் அனைத்தும் நாம் விரும்புவதைத் தரப்போவதில்லை என்பது நான் கண்ட முடிவு. எனவே எமது மனச்சாட்சிக்கு ஒப்ப எமது தலைவர் வகுத்துள்ள வழியில் நாம் செல்ல வேண்டும். இத்தகைய பாதையில் சென்றால்தான், எமது நாட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்களின் தன்மைக்கு ஏற்ப, நாம் எமது இலக்கை அடைய முடியும்.

ஆகவே, சீமான்களே, நான் தொழிலாள வர்க்கத்தின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க முடிவெடுத்துள்ளேன்; குறிப்பாக திரு பிலிப் குணவர்த்தன மற்றும் டாக்டர் என்.எம் பெரேரா ஆகியோருடன். இருவரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்திருந்த போதிலும்கூட, அவர்கள் கூறுவது அனைத்திற்கும் நான் உடன்படவில்லை என்றுதான் கூறவேண்டும். தீர்க்கப்படாத பிரச்சினைகளை பற்றி நான் மேலும் விவாதங்களை மேற்கொண்டேன்.

ஒரு கூட்டரசாங்கத்தை நாம் அமைக்கலாமா? அப்படியானால் அது எவ்வாறு செய்யப்படலாம்? இந்தப் பிரச்சினைகளை நாங்கள் ஆராய்ந்தோம். அதன்பின்னர் அவர்கள் 1956ம் ஆண்டு MEP யின் கூறுபாடுகளாக இருந்த கட்சிகளை ஒன்றிணைத்த ஒப்பந்தம் ஒன்றைப்போல், ஒரு பொதுத் திட்டத்தின் அடிப்படையில் அரசாங்கம் ஒன்றை அமைக்கலாம் என்று கூறினர். அத்தகைய அரசாங்கம்தான் பொது நலன்களுக்காக இயங்கும் என்று அவர்கள் கருதினர்.

LSSP மாநாட்டில் 1964, ஜூன் 7ம் தேதி ஞாயிறு, வாக்கெடுப்பு எடுப்பதற்கு சில மணி நேரங்கள் முன்பு, பாரிசில் ஐக்கிய செயலகத்தின் பியர் பிராங் ஐக்கிய இடது முன்னணிக்கான கொள்கைகளுக்காக இன்னமும் வாதிட்டுக் கொண்டிருந்தார். லெஸ்லி குணவர்த்தன மற்றும் கொல்வின் டி சில்வா வின் 'நுழைவுவாத' குழு அவருக்கு ஆதரவைக் கொடுத்திருந்தது.

அதிருஷ்டவசமாக, புரட்சிகர இடது கன்னை இதைக் கருத்திற் கொள்ளாமல் மாநாட்டைவிட்டு வெளியேறியது.

ஆனால் இப்பொழுது நிதியமைச்சராக பதவியேற்க உள்ள டாக்டர் என்.எம்.பெரேரா, இதுகாறும் முற்றிலும் குழப்பத்தில் ஆழ்ந்து, ஊழல் நலிந்து, பாரிசில் உள்ள ஐக்கிய செயலகத்தினாலும், அதன் சீரழிந்த தலைமைகளான குணவர்த்தன, டி சில்வா போன்றவர்களாலும் காட்டிக் கொடுக்கப்பட்ட நிலையில் இருந்த கட்சிக்கு, முழு பன்றிகளுடன் தலைமை ஏற்றுச் சென்று தனக்கு ஒரு பாரிய பெரும்பான்மையை ஏற்படுத்திக்கொள்வதில் கஷ்டம் எதையும் காணவில்லை.

இலங்கை புரட்சிகர இடதின் சில பிரச்சினைகள்

லங்கா சம சமாஜக் கட்சியின் தலைவருக்கும், மற்றும் ஐரோப்பாவில் இருந்த பப்லோவாத சர்வதேச மையத்திற்கும் இடையே இருந்த உறவு அரசியல் வசதிக்காக செய்யப்பட்ட ஒரு திருமணம் போன்றது எனலாம்.

லங்கா சம சமாஜக் கட்சி இலங்கையில் இருந்த முதலாளித்துவ அரசியல்வாதிகளின் அழுத்தத்திற்கு நிபந்தனையற்று சரணடைந்து, இறுதியில் கூட்டணி அரசாங்கத்தில் சேருவதற்கான தனது பாதையை கண்டுகொண்டது. பப்லோவாத சர்வதேச மையமோ ட்ரொட்ஸ்கியினால் 1938ம் ஆண்டு நிறுவப்பட்ட நான்காம் அகிலத்தின் பிரிவுகளை அழித்துவிடுவதில் குவிப்பைக் காட்டியது.

பிரிட்டனில், பப்லோதான் ஜோன் லோரன்சிற்கும் அவருடைய குழுவிற்கும் 1954ம் ஆண்டு எமது அமைப்பில் இருந்து பிரிந்து செல்லுவதற்கு அடித்தளம் அமைத்து அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் சேருவதற்கு வழிவகுத்தார். லோரன்ஸ் அதில் சேருவதாக முன்மொழிந்த கணத்திலேயே பப்லோ பின்வாங்கி அவரை விமர்சித்தார்.

அவ்வப்பொழுது பாரிசில் உள்ள மையத்தில் இருந்து LSSP பற்றி கூறப்படும் விமர்சனங்களையும் நாம் படிக்கிறோம். எப்போதுமே அவர்கள் இக்கட்சிதான் உலகிலேயே மிகப் பெரிய ட்ரொட்ஸ்கிச அமைப்பு என்று உயர்த்திப் பேசி வந்தனர். அதன் தலைவர்களுடன் மிக நட்புறவாக அவர்கள் பழகி வந்தனர்.

பப்லோ, பிராங்க், மற்றும் ஜேர்மைன் ஆகியோர் என்.எம். பெரேரா திருத்தல்வாத கொள்கையைத்தான் தொடர்ந்தார் என்பதை முழுமையாக அறிந்திருந்தனர். 1960 தேர்தலுக்கு பின்னர் கூட்டணியில் சேருவதற்கான தன்னுடைய தயாரிப்பை கோடிட்டு ஒரு நீண்ட தீர்மானத்தை எழுதினார்; அது பாரிஸ் மையத்திற்கு அனுப்பப்பட்டது. அதில் பப்லோ தலைமையில் நடைமுறைப்படுத்தப்பட்ட 'நுழைவுவாத' கொள்கையின் அடிப்படையில் அவர் தன்னுடைய கொள்கைகளை நியாயப்படுத்தியிருந்தார்.

கீழேயுள்ள கருத்துக்கள் அவருடைய எண்ணங்களை வெளிப்படுத்துகின்றன; அவை "நுழைவுவாதம்" பற்றியும் தேசிய முதலாளித்துவ கட்சிகள் பற்றியும் அல்ஜீரியாவில் FLN பற்றியும் பப்லோ கொண்டிருந்த கொள்கைக்கு முழு ஆதரவை கொடுப்பதாக உள்ளன.

அவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார், உறுதியான முறையில் LSSP கீழ்க்கண்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். முதலில் எதிர்வரவிருக்கும் தேர்தல்களில் போட்டிதவிர்ப்பு உடன்பாட்டைக் காணவேண்டும். பிரச்சாரத்திலேயே SLFP அரசாங்கம் ஒன்று அமைக்கப்படுவதை ஆதரிப்பதற்கான எமது தயார்நிலையை அறிவித்தல் வேண்டும். இதில் தேவையற்ற நிபந்தனைகள் ஏதும் கூடாது; அப்படி இருந்தால் ஒரு மாற்றீட்டு அரசாங்கத்திற்கு தயாராக இருக்கும் சக்திகளை நாம் வலுவிழக்க செய்வது போல் ஆகிவிடும்.

இரண்டாவதாக, ஒரு கூட்டு அரசாங்கத்தை அமைக்கும் வகையில் SLFP உடன் ஒரு வேலைதிட்ட அடிப்படையில் ஓர் உடன்பாட்டை காண்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒரு மார்க்சிச-SLFP கூட்டின் சாதகமற்றதன்மைகள் ஏற்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக தேர்தலுக்கு முன்னரான எதிர்ப்பு, தேர்தலுக்கு பின்னர் காணப்படாது. எமது நிலைப்பாட்டில் பெரும்பாலானவை நமக்குக் கிடைக்காது, ஆனால் உதாரணமாக, (a) ஆயுள் காப்பீடு தேசியமயமாக்கப்படல், ஆனால் அனைத்துக் காப்பீடுகளும் அல்ல; (b) வங்கிகளின் தேசியமயமாக்கல் இல்லையென்றாலும், கட்டுப்பாடுகள்; (c) அனைத்து இன்றியமையாத பொருட்களையும் அரசாங்கமே இறக்குமதி செய்தல், ஆனால் அனைத்து ஏற்றுமதி, இறக்குமதிகளும் அல்ல; (d) வருமானத்தின் மீதான உச்ச வரம்பு, போன்றவை ஒரு பரந்த முற்போக்கான திட்டம் ஊடாக கைகூடலாம்.

இத்தகைய வழிவகையை, ஒரு வர்க்க ஒத்துழைப்பு என இழிவுபடுத்தி உடனே அதைக் கண்டிப்பது இலகு. இந்த வர்க்க ஒத்துழைப்பு என்ற குற்றச் சாட்டு SLFP ஒரு குட்டி முதலாளித்துவ கட்சி என்பதை ஏற்காவிட்டால்தான் ஒப்புக் கொள்ளப்பட முடியும். எப்படிப் பார்த்தாலும், நுழைவுவாத முறையிலான உத்தி, சீர்திருத்தவாத, சமூக ஜனநாயகக் கட்சிகளை பொறுத்தவரையில் கூட ஒன்றும் புதிதல்ல. சர்ச்சைக்கிடமின்றி மக்களுடைய நப்பாசைகளை களைவதற்கும் எமது உண்மைத்தன்மையில் நம்பிக்கையை ஏற்படுத்தவும் தேவையான அனுபவத்தினூடாக அவர்களை அழைத்துச் செல்கிறோம். எம்மால் ஆதரவழிக்கப்படும் ஒரு சில தைரியமான முற்போக்கான நடவடிக்கைகள், எம்மால் பல ஆண்டுகள் செய்யப்படும் பிரச்சாரத்தைவிட அதிகமாய் அவர்களை கற்றுக்கொள்ள வைக்கும். இந்த நடவடிக்கைகள் எமது சோசலிச வேலைத்திட்டங்களுடன் இயைந்து நின்று, எமது சோசலிசக் கொள்கைகளை முன்னோக்கி கொண்டுசெல்லும்.

இதை ஒரு பாராளுமன்றவாத முறை என்று கண்டனத்திற்கு உட்படுத்தவும் கூடும். நான் ஏற்கனவே கூறியுள்ளபடி, வரலாற்று காரணிகள் கட்சியை பெரியளவிலான ஒரு பாராளுமன்றரீதியான போராட்டத்தில் தள்ளியுள்ளன. பாராளுமன்ற ரீதியான போராட்டமும் அதிகாரத்திற்கான ஒரு போராட்டமேயாகும். வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்பது ஒன்றும் பாராளுமன்ற போராட்டத்தை உயர்த்திவிடுவது அல்ல. எந்த நாட்டில் வயது வந்தோருக்கு வாக்குரிமை உள்ளதோ அங்கு முதலாளித்துவ வர்க்கம் ஒரு புரட்சியினால் தூக்கிவீசப்படவில்லை என்பது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. பரந்துபட்ட போராட்டத்தின் மூலம் முதலாளித்துவ முறை அகற்றப்படலாம் என்றாலும், உண்மையில் அத்தகைய நிலைமை இன்னும் எழவில்லை; ஏனெனில் வயது வந்தோருக்கு வாக்குரிமை தொழிலாள வர்க்கத்தின் கரங்களில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான ஒரு கருவியை கொடுத்துள்ளது. அனைவருக்கும் வாக்குரிமை என்பது பரந்துபட்ட போராட்டத்தின் தீவிரத்தை மழுங்கச் செய்யும் தன்மையை கொண்டுள்ளது என்பதும் ஒப்புக் கொள்ளப்பட வேண்டும். போராளித்தனமான தொழிலாள வர்க்க நடவடிக்கைகள் தொடர்ந்து நிகழும்; ஆனால் அவை அதிகாரத்தை எடுத்துக் கொள்ளுவதற்கு தேவையான மிக உயர்ந்த மட்டத்தை அடையவில்லை....

அத்தகைய நுழைவுவாத முறையில் உள்ள ஆபத்துக்களையும் குறைபாடுகளையும் மறுப்பது என்பதும் தவறாகிவிடும்; இதைத்தான் நான் முன்பே ஆதரித்து பேசியுள்ளேன். தொடக்கத்தில் இது குறிப்பாக SLFP யின் முற்போக்குத்தன்மையில் இன்னும் பிரமைகளை உருவாக்கும். அதிகாரத்தை எடுத்துக் கொள்வதில் இயல்பாகவே சில ஆபத்துக்களும் உள்ளன; LSSP இன் மந்திரிகள் வேலைநிறுத்தங்கள், தொழிலாளர்களின் கோரிக்கைகள் பற்றி கசப்பான முடிவுகளை எடுக்க நேரிடலாம், இத்தகைய ஆபத்துக்களை எம்மால் அகற்ற முடியாமல் போகலாம்; ஆனால் அவற்றைக் கீழ்க்கண்ட வகைகளில், நாம் குறைக்க முடியும்;

(a) எமது கட்சி அமைப்பை முடுக்கிவிடுவதன் மூலமும் மற்றும் திட்டமிட்ட பிரசாரத்தின் ஊடாகவும் இந்த நுழைவுவாத உத்தியின் உண்மையான காரணங்கள், தேவைகளை பற்றி விளக்கமளிக்கலாம். இந்தப் பணி சரியாகச் செய்யப்பட்டால் நாம் SLFP இன் கிளைகளினுள் ஊடுருவி இன்னும் கூடுதலான முற்போக்கான நோக்கம் கொண்ட கிராமப்புற இளைஞர்களை நம்பால் ஈர்த்துக் கொள்ள முடியும்.

(b) ஒரு பரந்த தொழில் சட்டத்திருத்த நடைமுறையை புகுத்துவதன் மூலமாக தற்போதுள்ள அமைப்புமுறையிலுள்ள மோசமான தீமையின் வேர்களை களைவதற்கு உதவும் மிக அத்தியாவசமான சீர்திருத்தங்களை செய்யமுடியும்.

இன்னும் கூடுதலான பரிவுணர்வை முதலாளிகளுக்கு எதிராக தொழிலாளர்களுக்கு காட்டுவதின் மூலம் தொழிலாளர்களுடைய நம்பிக்கையை பெறமுடியும்; அதையொட்டி நாம் அதிகாரத்தை கைப்பற்றும் வகையில் அடுத்த கட்டத்தை அடைய முடியும்.

அண்மையில் பப்லோவும் அவரை பின்பற்றுபவர்களும் குருஷ்சேவிற்கு ஆதரவான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது, இலங்கையில் கூட்டணி அரசாங்கம் அமைந்துள்ளதற்கு பொருத்தமான நேரத்திலேயே ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ஆயினும் பப்லோவை வெளியேற்ற பிராங்க் மற்றும் ஜேர்மைனின் வழிவகைக்கும், என்.எம். பெரேரா மற்றும் அவருடைய ஆதரவாளர்களை வெளியற்றும் வழிவகைகளுக்கும் இடையே அடிப்படை வேறுபாடு ஏதும் இல்லை.

உண்மையில் கடந்த ஓராண்டு காலமாக இலங்கையில் நடப்பது பற்றி பப்லோவிற்கு நேரடிக் கட்டுப்பாடோ செல்வாக்கோ கிடையாது. அனைத்து முடிவுகளும் ஜேர்மைன், மற்றும் பிராங்கினால் அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சியின் ஆதரவுடன் எடுக்கப்பட்டவை ஆகும்.

இப்பொழுது SWP க்கு எதிராக ஐரோப்பாவில் ஒரு பிரிவை கட்டமைக்கும் முயற்சியில் ஜேர்மைன் ஈடுபட்டுள்ளார் என்பது நன்கு அறியப்பட்டதேயாகும். அவருடைய உடனடி ஒத்துழைப்பாளர்கள்தான் கட்சியை கரைத்துவிட்டு சமூக ஜனநாயகக் கட்சியில் சேர விழைபவர்களாகும்.

சமீபத்தில் மறைந்த லியோன் ட்ரொட்ஸ்கியின் செயலாளர் என அழைக்கப்படுவதை விரும்பும் திரு ஜோசப் ஹான்சனை, "ஒரு மனச்சிதைவுற்ற மூதாட்டி போன்றவர்" என்று ஜெர்மைன் விவரித்தார்; அதேபோல் SWP ஐயும் "ஒரு சந்தர்ப்பவாதக் கட்சி" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

LSSP இன் புரட்சிகர பிரிவின் பிரச்சினைகளை, இத்தகைய சீரழிவில் இருந்து நாம் பிரிக்க முடியாது. 1953ல் இருந்து சர்வதேச இயக்கத்தில் என்ன நடந்தது என்பது பற்றி நிறைய விவாதிக்க வேண்டியுள்ளது என்பதை இந்த தோழர்கள் அறிவர்.

ஒரு சில சுருக்கமான எழுத்துவடிவில் உள்ள கருத்துக்கள், சர்வதேச வேலைகள் பற்றிய சில குறிப்புக்கள் ஆகியவற்றை தவிர, கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக உள்ள பிரச்சனைகள் பற்றி LSSP க்குள் தீவிரமான விவாதம் ஏதும் நடக்கவில்லை. சிறுபான்மையை ஆதரிக்கும் பல தோழர்களும் இப்பொழுதுதான் 1938ம் ஆண்டு ட்ரொட்ஸ்கியினால் நிறுவப்பட்ட நான்காம் அகிலத்தின் சர்வதேச, தேசிய சீரழிவுகளுக்கு இடையிலான உறவுகள் பற்றி உணர ஆரம்பித்துள்ளனர்ர்ந்துள்ளனர்.

அப்புரட்சிகர பிரிவின் எதிர்காலம் இப்பொழுது முக்கியமாக இந்த உறவைப் பற்றிய தீவிர ஆய்வில்தான் உள்ளது.

ஐக்கிய செயலகம், ஜேர்மைன் மற்றும் பிராங்கின் உத்தரவின்கீழ், SWP கொடுத்த ஆதரவின் அடிப்படையில், லெஸ்லி குணவர்த்தன மற்றும் கொல்வின் டி சில்வா மற்றும் ஐக்கிய இடது முன்னணியின் மத்தியவாத கொள்கையை, LSSP மாநாட்டில் ஜூன் 7 வாக்கெடுப்பு வரையில் ஆதரித்து வந்தது. அவர்கள் வெளிநடப்பு செய்தபின்னர்தான் பியர் பிராங் பெரும் தயக்கத்துடன் புரட்சிகர பிரிவிற்கு ஆதரவைக் கொடுத்தார்.

அவர்கள் எந்த விதத்திலும் சிறுபான்மை புரட்சிகர பிரிவை மாநாட்டிற்கு முன்பு ஆதரிக்கவில்லை. உண்மையில் அனைத்து வேளைகளிலும் ஐக்கியம், உள்கட்சி சமாதனம் என்ற பெயரில் அதன் உற்சாகத்தை நசுக்கும் வகையில் பெருமுயற்சி செய்தனர்.

ஐக்கிய இடது முன்னணி மற்றும் அதற்கும் அவர்களுக்கும் இடையேயான இறுதி உடன்பாட்டிற்கான அடிப்படை பற்றி, LSSP தலைமை எழுதிய கடிதத்தைப் பற்றி ஜனவரி 1964ல் ஐக்கிய செயலகம் ஓர் அறிக்கையை வெளியிட்டது.

இந்த தகவல் அறிக்கையில் அவர்கள் சிறுபான்மையினர் இயற்றிய தீர்மானத்தையும் வெளியிட்டனர். இத்தீர்மானம் விவாதத்திற்கு 1963 ஜூலை 7ம் தேதி அளிக்கப்பட்டது; ஆனால் ஐக்கிய செயலகம் இதை ஏனைய பிரிவுகளுக்கு 1964 தொடக்கம் வரை தெரிவிக்கவில்லை. இத்தீர்மானம், முழு இயக்கத்தையும் ஐக்கிய இடது முன்னணியின் ஆபத்துக்களை பற்றி கீழ்க்கண்டவிதத்தில் கூறிய அளவில் எச்சரிக்கை கொடுத்தது:

தொழிலாள வர்க்கத்தையும் நாளைய பரந்த புரட்சிகர வெகுஜனங்களையும் தங்களுடைய விடிவு, "இடது முன்னணி" என்பதை அதிகாரத்தில் இருத்துவதில் உள்ளது என்ற நம்பிக்கைக்கு தள்ளக்கூடாது; மாறாக SLFP அரசாங்கத்திற்கும், இலங்கையில் உள்ள மற்ற முதலாளித்துவ சக்திகளுக்கும் எதிராக ஒரு தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கத்திற்கான பாதையில் நேரடியான வெகுஜன இயக்கத்தை அமைத்து ஒன்றுபடுத்தி எடுக்கும் நடவடிக்கையில்தான் உள்ளது என்பதை உணரவைக்க வேண்டும்.

இக்கடிதம் ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ ஒரு கருத்தும் கூட தெரிவிக்கப்படாமல் அப்படியே ஐக்கிய செயலகத்தினால் பிரசுரிக்கப்பட்டது. அத்தகைய மௌனம், சிறுபான்மைக்கு வெற்றி அளித்திருக்கக் கூடிய பல தோழர்களையும் ஐயத்திற்கிடமின்றி குழப்பத்திற்கு உட்படுத்தியது.

இப்படி திரைக்கு பின்னால் பாரிஸ் மையத்தின் சில தலைவர்கள் தெளிவற்ற முறையில் சிறுபான்மையினரை ஆதரித்தாலும், பொது செயல்பாட்டில் இரட்டை முகம் காட்டுதல் என்பது பப்லோவாத வழிவகைகளில் இயல்பாக இருந்தது.

இப்பொழுதும் கூட, லெஸ்லி குணவர்த்தன மற்றும் கொல்வின் டி சில்வா இருவரும் அவர்களுடைய ஆதரவாளர்களுடன் என்.எம். பெரேரா மற்றும் கூட்டணி அரசாங்கத்துடன் ஆர்வத்துடன் நிற்கையில், ஐக்கிய செயலகம் அவர்களை வெளியேற்றவில்லை. அவர்களை புரட்சிகர இடதினுள் ஒன்றாக கொண்டுவருவது சாத்தியம் என இன்றும் எதிர்பார்த்து, அவ்வாறான ஒரு அமைப்பினுள் இடது வலது பிரிவுகளுக்கு இடையை தமது கைமாற்றுவேலைகளை செய்யலாம் என கருதுகின்றனர்.

ஐக்கிய செயலகம் உண்மையில் சிறுபான்மை தலைவர்களில் பலருக்கும் எதிராக மிகத் தீவிர விரோதப் போக்கைத்தான் கொண்டுள்ளது; ஏனெனில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் கொள்கைகள் பற்றி கரிசனைமிக்க ஆய்வு வரவிருக்கிறது என்பதை அவர்கள் நன்கு அறிவர்.

கூட்டரசாங்கம் அமைத்தபின்னர், இரு போட்டிப் பிரிவுகளுக்கும் இடையே மிகக் கடுமையான போராட்டம் பல தொழிற்சங்கங்களிலும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக நிகழ்ந்தது. இப்போராட்டத்தில் பெரும்பாலும் ஐயத்திற்கு இடமின்றி பலனடைந்தது சண்முகதாசன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியின் சீனப் பிரிவாகும். அவருடன்தான் பியர் பிராங்க் தீவிற்கு வந்திருந்தபோது சிறப்பான விவாதங்களை நடாத்தியிருந்தார்.

ஐக்கிய இடது முன்னணி மூலம் தள்ளாடி வந்தபின், பிராங் மற்றொரு உடன்பாட்டை சீன ஆதரவுப் போக்குடன் கொள்ள விரும்பவில்லை; அது ட்ரொட்ஸ்கிசத்துடன் பெரும் விரோத போக்கை கொண்டுள்ளது. பிராங்க், சண்முகதாசனுடன் விவாதித்துக் கொண்டிருந்தபோதே, சண்முகதாசன் கூட்டணி அமைக்கப்பட்டதை முழுமையாக தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, செய்தி ஊடகத்தில் இதுதான் ட்ரொட்ஸ்கிச கொள்கைகளின் நேரடி விளைவு என்று வலியுறுத்தினார்.

LSSP புரட்சிகர பிரிவிற்கு இப்பொழுது இலங்கையில் ஒரு புரட்சிகரக் கட்சியை மறுகட்டமைக்கும் வரலாற்றுப் பணி உள்ளது. கடந்தகாலத்துடன் அது கொண்டிருந்த உறவை அவர்கள் நன்கு அறிந்தால், இப்பணியை அவர்கள் நன்கு செய்யலாம்; அதேபோல் அவர்கள் பாரிசில் உள்ள ஐக்கிய செயலகத்திடம் இருந்தும் முற்றிலும் முறித்துக் கொள்ள வேண்டும்; அவர்களுடைய இடம் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அணியில் இருப்பதுதான்.

Loading