லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டதிலிருந்து எழுபத்தி ஐந்து ஆண்டுகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

1940 ஆகஸ்ட் 21 அன்று, அப்போது GPU என்று அறியப்பட்ட சோவியத் ஒன்றிய இரகசிய போலிஸின் முகவர் ஒருவரால் ஒரு நாளுக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்டிருந்த படுகாயங்களின் காரணத்தால் ட்ரொட்ஸ்கி மரணமடைந்தார். வரலாற்றுரீதியாக முன்கண்டிராத அளவான அரசியல் பிற்போக்குத்தன அலை நிலவியதொரு சூழலில் இந்தப் படுகொலை நடந்திருந்தது. ஐரோப்பாவில் ஜேர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயினில் பாசிச சக்திகள் அதிகாரத்தில் இருந்தன. ஸ்ராலின்-ஹிட்லர் ஒப்பந்தம் கையெழுத்தான சில நாட்களிலேயே 1939 செப்டம்பர் 1 அன்று போலந்து மீது நாஜிக்கள் படையெடுத்ததை அடுத்து, இரண்டாம் உலகப் போர் கிட்டத்தட்ட ஒரு ஆண்டு முன்பாகத்தான் தொடங்கியிருந்தது. திடீரெனச் சூழ்ந்த ஏகாதிபத்திய வன்முறைச் சூழலில் பத்து மில்லியன் கணக்கான உயிர்கள் அழிக்கப்பட்டன. இரண்டாம் உலகப் போருக்கு முன்னரான ஆண்டுகளில் பாரிய சமூக ஜனநாயக மற்றும் ஸ்ராலினிசக் கட்சிகள் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டங்களுக்கு திட்டமிட்டு குழிபறித்ததன் பயங்கரமான பின்விளைவாக இது இருந்தது.

1917 அக்டோபர் புரட்சியின் தலைவர்களில் மகத்தானவரும் உயிர்வாழ்ந்து கொண்டிருந்தவர்களில் இறுதியானவருமான மனிதர் படுகொலை செய்யப்பட்டமையானது, போல்ஷிவிக் புரட்சியின் வெற்றியை பாதுகாத்து, வரலாற்றில் முதல் தொழிலாளர்’ அரசாக சோவியத் ஒன்றியத்தை ஸ்தாபித்து, அத்துடன் முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தை தூக்கிவீசுவதை ஒரு எட்டத்தக்க மூலோபாய இலக்காக சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் முன்வைத்த சோசலிசத் தொழிலாளர்கள்’ மற்றும் புத்திஜீவிகளது தீரமிக்க தலைமுறையை ஸ்ராலினிச ஆட்சி அழித்தொழித்ததன் உச்சகட்டத்தைக் குறித்ததாக இருந்தது.

ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்ட சமயத்திற்குள்ளாக, ஸ்ராலினின் அதிகாரத்துவ பயங்கர ஆட்சி ஏற்கனவே சோவியத் ஒன்றியத்திற்குள்ளாக நூறாயிரக்கணக்கிலான புரட்சியாளர்களை கொலை செய்து விட்டிருந்தது. 1936க்கும் 1938க்கும் இடையில் போல்ஷிவிக் கட்சியின் பிரதான தலைவர்களில் டசின் கணக்கானோரை ஒழித்துக் கட்டிய மாஸ்கோவில் நடைபெற்ற போலி விசாரணைகள் கொலைவெறி கொண்ட பயங்கரத்தினது ஒரு பரந்த அலையின் பொதுவிலான வெளிப்பாடு மட்டுமே. தனது ஆட்சிக்கான ஒரு நேரடியான அரசியல் அச்சுறுத்தலாக தான் கருதிய பழைய போல்ஷிவிக்குகளுடன் மட்டும் ஸ்ராலினது படுகொலை வெறியாட்டம் அடங்கி விடவில்லை.

அக்டோபர் புரட்சிக்குப் பிந்தைய காலத்தில் அபிவிருத்தி கண்ட சோசலிச சர்வதேசியவாதத்தினால் ஆழமான செல்வாக்கு செலுத்தப் பெற்றிருந்த ஒட்டுமொத்த சோவியத் கலாச்சாரத்தையும் இல்லாது செய்கின்ற நோக்கம் கொண்ட ஒரு யுத்தத்திற்குக் குறையாத ஒன்றாக ஸ்ராலினிச பயங்கரம் இருந்தது. எழுத்தாளர்கள், இசைக் கலைஞர்கள், ஓவியர்கள், கணிதவியலாளர்கள், இயற்பியலாளர்கள், உயிரியல் அறிஞர்கள், பொருளாதார அறிஞர்கள் மற்றும் பொறியாளர்கள் அனைவரும் தண்டிக்கப் பெற்று, மிருகத்தனமான சிறைமுகாம்களுக்கு அனுப்பப்பட்டு, சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். ட்ரொட்ஸ்கி மீது அனுதாபம் கொண்டிருக்கக் கூடும் என்ற வெறும் சந்தேகத்தைக் கொண்டே வெளிநாட்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்கள் மொத்தமாய் கொல்லப்பட்டனர். ஒட்டுமொத்த கட்சித் தலைமையும் இல்லாதொழிக்கப்பட்டது.

ஸ்ராலினிச ஆட்சியின் கீழ் இழைக்கப்பட்ட மிகப் பயங்கரமான குற்றங்கள் “ட்ரொட்ஸ்கிசத்திற்கு எதிரான போராட்டம்” என்ற பதாகையின் கீழ் நடத்தப்பட்டன. ட்ரொட்ஸ்கிக்கு எதிராக செலுத்தப்பட்ட இடைவிடாத வெறுப்புப் பிரச்சாரம் என்பது வெறுமனே ஸ்ராலின் தனது வளைந்துகொடுக்காத அரசியல் எதிர்ப்பாளரை பழிவாங்க விடாப்பிடியான விருப்பம் கொண்டிருந்ததன் வெளிப்பாடு மட்டுமன்று. மிகக் குறிப்பிடத்தக்க விதத்தில், ட்ரொட்ஸ்கி - அவர் உருக்கொடுத்த வரலாற்றிலும் அவர் போராடிய வேலைத்திட்டத்திலும் ஸ்ராலினின் அதிகாரத்துவ-தேசியவாத ஆட்சிக்கான நனவான சோசலிச-சர்வதேசியவாத மறுப்பின் பிரதிநிதியாகத் திகழ்ந்தார்.

ட்ரொட்ஸ்கி, ஸ்ராலினிச ஆட்சிக்கு எந்த அச்சுறுத்தலையும் குறிக்கவில்லை என்பதாகக் குறிப்பிடப்படுவது மிக சமீபகால கல்வியாளர்களிடையே வழக்கமாகி இருக்கிறது. இத்தகைய சிடுசிடுப்பான கணக்குகள் ஸ்ராலினின் அந்தரங்க காப்பகத்தின் மீதான ஆய்வுடன் முரண்படுபவை ஆகும். நாடுகடத்தப்பட்ட நிலையில், அதிகாரத்தின் மீது வெளியிலிருந்தான எந்த பிடியும் இல்லாத நிலையிலும், ட்ரொட்ஸ்கி தன்னை பின்தொடருவதாக ஸ்ராலின் உணர்ந்தார். ஸ்ராலின் “தனது வாசிப்பறையில் வைத்திருந்த ஒரு சிறப்பு அலமாரியில்” ஏறக்குறைய “ட்ரொட்ஸ்கியின் அத்தனை படைப்புகளையும் ஏராளமான அடிக்கோடுகள் மற்றும் கருத்துரைகளுடன் அவர் வைத்திருந்தார், மேற்கத்திய ஊடகங்களுக்கு ட்ரொட்ஸ்கி கொடுத்த எந்தவொரு பேட்டி அல்லது அறிக்கையும் உடனுக்குடன் மொழிபெயர்க்கப்பட்டு ஸ்ராலினுக்கு கொடுக்கப்பட்டு விடும்” என்று ஸ்ராலினின் வாழ்க்கைசரித ஆசிரியரான ஜெனரல் டிமிட்ரி வோல்கோகோனோவ் (General Dmitri Volkogonov) நினைவுகூர்ந்திருந்தார். ட்ரொட்ஸ்கி மீது அந்த சர்வாதிகாரி கொண்டிருந்த அச்சத்தை விவரித்து வோல்கோகோனோவ் பின்வருமாறு எழுதினார்:

ட்ரொட்ஸ்கி தனக்காக மட்டும் பேசவில்லை, சோவியத் ஒன்றியத்திற்குள்ளாக இருக்கின்ற தனது மௌனமாக இருக்கும் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்புஅணியை சேர்ந்தவர்களுக்கும் சேர்த்துத் தான் பேசுகிறார் என்ற சிந்தனை ஸ்ராலினுக்கு குறிப்பாக வலி தருவதாக இருந்தது. ஸ்ராலினிச பொய்மைப்படுத்தல் பள்ளி, போல்ஷிவிக் கட்சியின் உறுப்பினர்களுக்கான ஒரு திறந்த கடிதம், அல்லது ஸ்ராலினிச தேர்மிடோர் போன்ற ட்ரொட்ஸ்கியின் படைப்புகளைப் படிக்க நேர்ந்தபோது, அவர் ஏறக்குறைய தனது சுய-கட்டுப்பாட்டை இழந்து விட்டார்.

ஸ்ராலினை பொறுத்தவரை, ட்ரொட்ஸ்கி முன்வைத்த அச்சுறுத்தல் என்பது சோவியத் ஒன்றியத்திற்குள் மறைமுகமான மற்றும் சாத்தியத்திறன் கொண்ட எதிர்ப்பு அணியுடன் மட்டுப்பட்டதில்லை. நான்காம் அகிலத்திற்கான, அதாவது அனைத்து நாடுகளிலும் தொழிலாள வர்க்கத்தின் வேலைத்திட்டமாக சோசலிச சர்வதேசியவாதத்தை மீண்டும் ஸ்தாபிப்பதற்கான ட்ரொட்ஸ்கியின் போராட்டமானது, ஆளும் அதிகாரத்துவத்தின் நலன்களின் பேரில் கிரெம்ளின் பின்பற்றிய தேசியவாதக் கொள்கைகளுக்கான மிக அபாயகரமான அச்சுறுத்தலாக ஸ்ராலினால் பார்க்கப்பட்டது.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இருந்த சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் GPUவின் முகவர்கள் ஊடுருவியிருந்ததன் மூலம் 1940 ஆகஸ்டில் நடந்த ட்ரொட்ஸ்கியின் படுகொலைக்கு பல ஆண்டுகளாகத் தயாரிக்கப்பட்டு வந்திருந்தது. இந்த ஸ்ராலினிச முகவர்கள் தமது நடவடிக்கைகளது ஆரம்ப கட்டத்தில், சர்வதேச இடது எதிர்ப்பாளர்கள் (நான்காம் அகிலத்தின் முன்னோடி) அணியின் பாகமாக இருந்த சிறு ட்ரொட்ஸ்கிச அமைப்புகளின் நடவடிக்கைகளை, கன்னைவாதம் மூலமாகவும் சதிவேலைகள் மூலமாகவும், குலைப்பதற்கு முனைந்து வந்தனர்.

இந்த முகவர்களில் முதலாவதாகவும் மிக முக்கியமானவர்களாகவும் அமைந்தவர்கள் ஸெனின் மற்றும் வெல் (Senin, Well) என்றறியப்பட்ட ஸொபோலோவேசியஸ் சகோதரர்கள் (Sobolovecius brothers) ஆவர். இவர்கள் இடது எதிர்ப்பாளர்கள் அணியின் ஜேர்மன் பிரிவுக்குள்ளாக உடைவை ஏற்படுத்தி, அதன் மூலமாக ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்த 1933 க்கு முந்தைய இரண்டு அதிமுக்கியமான ஆண்டுகளின் சமயத்தில் அதன் அரசியல் செயல்திறனை கீழறுத்தனர். ஜேர்மனியிலான அரசியல் பேரழிவைத் தொடர்ந்து, ஸெனினும் வெல்லும் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா இரண்டு இடங்களிலும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கு எதிரான GPU இன் நடவடிக்கைகளில் ஒரு முக்கிய மற்றும் மரணகரமான பாத்திரத்தை தொடர்ந்து ஆற்றினர்.

GPU முகவர்களில் மிக மோசமானவர் என்றால் மார்க் ஸ்பொரோவ்ஸ்கியை (Zborowski) சொல்லலாம். போலந்தில் இருந்து புலம்பெயர்ந்திருந்த இவர், பிரான்சில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள்ளாக ஊடுருவி விட்டிருந்தார். லோலா டோலன் (Lola Dallin -இந்தப் பெண்மணி ஒருமுறை தன்னை அவருடன் “ஒன்றாக ஒட்டிப்பிறந்தவர்” என்று வர்ணித்துக் கொண்டார்) என்ற கூட்டாளியின் சளைக்காத உதவியுடன் மார்க் ஸ்பொரோவ்ஸ்கி, “எத்தியான்” (Etienne) என்ற கட்சிப் பெயர் கொண்டு நான்காம் அகிலத்தின் தலைமைக்குள்ளாக வெற்றிகரமாக நுழைந்து விட்டிருந்தார். ட்ரொட்ஸ்கியின் மூத்த மகனும் ஐரோப்பாவில் நான்காம் அகிலத்தின் தலைவராகவும் இருந்த லியோன் செடோவின் எப்போதும் உடனிருக்கும் அரசியல் உதவியாளராக அவர் ஆனார். ஸ்பொரோவ்ஸ்கி-எத்தியான் வழங்கிய தகவலைக் கொண்டு, GPU, பாரிஸில் ஒரு ஆராய்ச்சி மையத்தில் இரகசியமாக சேகரித்து வைக்கப்பட்டிருந்த ட்ரொட்ஸ்கியின் ஆவணக்காப்பகத்தின் ஒரு மதிப்புமிக்க பகுதியை, 1936 நவம்பரில் திருடிவிட முடிந்தது. ஆயினும் மாஸ்கோவில் நடந்த முதலாவது விசாரணையில் ட்ரொட்ஸ்கிக்கும் செடோவுக்கும், அவர்கள் அங்கு இல்லாத நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னர், கிரெம்ளின் இந்த தண்டனைகளை நிறைவேற்றுவதற்கான வழிவகைகளைக் காணுமாறு தனது முகவர்களிடம் கோரியது.

ஏகாதிபத்தியத்தின் முகவர் என்று அவதூறு செய்து, ட்ரொட்ஸ்கிக்கான தண்டனையை நியாயப்படுத்த ஸ்ராலினிச ஆட்சி முனைந்த அதேவேளையில், முதலாளித்துவ நாடுகளில் இருந்த ஆளும் உயரடுக்குகள் தண்டிக்கப்படும் புரட்சியாளருக்கு எதிரான ஸ்ராலினது போரில் யார்பக்கம் தமது அனுதாபங்கள் இருக்க வேண்டும் என்பதில் சந்தேகத்திற்கு இடமற்று இருந்தனர். அமெரிக்காவில், நியூ யோர்க் டைம்ஸின் மாஸ்கோவுக்கான செய்தியாளரான வால்டர் துராந்தி, இந்த போலி விசாரணைகளது சட்டபூர்வ ஒழுங்குநிலைக்கு நற்சான்று பகன்றார். அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ருஸ்வெல்ட் நிர்வாகத்தும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்துகின்றதான பேரில் எண்ணற்ற தாராளவாத புத்திஜீவிகள், மாஸ்கோவில் பழைய போல்ஷிவிக்குகள் கொல்லப்படுவதை நியாயப்படுத்துவதற்கும் ட்ரொட்ஸ்கிக்கு எதிரான கேலிக்கூத்தான குற்றச்சாட்டுகளுக்கு நற்சான்று வழங்குவதற்கும் அசாதாரணமான அளவுக்கு சிரத்தை எடுத்துக் கொண்டனர்.

1936 ஆகஸ்டில் முதல் விசாரணை தொடங்கியபோது, ட்ரொட்ஸ்கி “ஜனநாயக” நோர்வேயில் நாடுகடத்தப்பட்டிருந்தவராக வாழ்ந்து கொண்டிருந்தார். இந்த ஜோடிப்பு விசாரணைகளை அம்பலப்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகள், ஸ்ராலின் மனதைப் புண்படுத்துவதைத் தவிர்க்கும் கவலையோடு இருந்த அந்நாட்டின் சமூக ஜனநாயக அரசாங்கத்தினால் தடுக்கப்பட்டன. ட்ரொட்ஸ்கியும் அவரது மனைவி நத்தலியா செடோவாவும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு ஊடகங்கள் மற்றும் அவர்களது சொந்த ஆதரவாளர்களுடனும் கூட அவர்களுக்கு தொடர்பு மறுக்கப்பட்டது. ட்ரொட்ஸ்கி அவருக்கு மிக நெருக்கமான அரசியல் உதவியாளர்களுடன் கூட தொடர்புகொள்ளும் உரிமை மறுக்கப்பட்டிருந்தார். ட்ரொட்ஸ்கியை சோவியத் ஒன்றியத்திற்கே திருப்பி அனுப்பி விடும் எண்ணத்தையும் வைத்துக் கூட நோர்வேயின் சமூக ஜனநாயக ஆட்சி கொஞ்ச காலம் விளையாடிக் கொண்டிருந்தது. இறுதியாக, மாபெரும் ஓவியரான டியகோ ரிவியேராவின் உதவியுடன், லசார் கார்டெனாஸ் (Lazar Cárdenas) இன் இடது தேசியவாத அரசாங்கம் ட்ரொட்ஸ்கிக்கு மெக்சிகோவில் அடைக்கலம் வழங்கியது. வயதாகியிருந்த போதிலும் வேகம் குன்றாத அந்த புரட்சியாளர் 1937 ஜனவரியில் மெக்சிகோ வந்தடைந்தார்.

ஒரு மாபெரும் “எதிர்-விசாரணை”யை ஒழுங்கமைக்கும் வேலையில் ட்ரொட்ஸ்கி உடனடியாய் இறங்கினார். ஸ்ராலினின் குற்றச்சாட்டுகளை மறுப்பது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த விசாரணைகளுமே ஒரு குற்றவியல் ஜோடிப்பு என்பதை அம்பலப்படுத்துவதும் அதன் நோக்கமாக இருந்தது. விசாரணையைக் கண்டித்து, காட்சிப்படச்சுருளில் பதிவுசெய்து வெளியிட்ட ஒரு பொது அறிக்கையில் ட்ரொட்ஸ்கி அறிவித்தார்:

எனக்கு எதிரான ஸ்ராலினின் வழக்குவிசாரணையானது, ஆட்சி செலுத்துகின்ற ஒரு கூட்டத்தின் நலன்களின் பேரில், நவீன விசாரணையாளர் மேலதிகார (Inquisitorial) வழிமுறைகளைக் கொண்டு அச்சுறுத்தி வாங்கப்பட்ட போலியான வாக்குமூலங்களின் மீது கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. சினோவியேவ்-காமனேவ் மற்றும் பியாடகோவ்-ராடேக் மீதான மாஸ்கோ விசாரணைகளை காட்டிலும் உள்நோக்கத்திலும் நிறைவேற்றத்திலும் மிகப் பயங்கரமான குற்றங்கள் வரலாற்றிலேயே கிடையாது. இந்த விசாரணைகள் கம்யூனிசத்தில் இருந்தோ, சோசலிசத்தில் இருந்தோ அபிவிருத்தி காணவில்லை, மாறாக ஸ்ராலினிசத்தில் இருந்து, அதாவது மக்கள் மீது அதிகாரத்துவம் செலுத்தும் கணக்குகூறப்படாத எதேச்சாதிகாரத்தில் இருந்து அபிவிருத்தி காண்கின்றன!

இப்போது எனது பிரதான கடமை என்ன? உண்மையை வெளிக்கொண்டு வருவதாகும். உண்மையான குற்றவாளிகள் குற்றம் சாட்டுபவர்களின் அங்கிகளுக்குள் தான் மறைந்திருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுவதும் விளங்கப்படுத்துவதும் ஆகும்.

ட்ரொட்ஸ்கி விடுத்த அழைப்பு மிகப் பிரபலமான அமெரிக்க தாராளவாத மெய்யியலாளரான ஜோன் டுவி தலைமையில் ஒரு சர்வதேச விசாரணை ஆணையம் அமைக்கப்படுவதற்கு இட்டுச் சென்றது. 1937 ஏப்ரலில், இந்த ஆணையத்தின் உறுப்பினர்கள் மெக்சிகோ பயணித்து அங்கே பொது விசாரணைகளை நடத்தினர். அதில் ட்ரொட்ஸ்கி அவரது அரசியல் கோட்பாடுகள், சிந்தனைகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான அத்தனை அம்சங்களைக் கையாளும் கேள்விகளுக்கும் பதிலளித்தார். பதினோரு நாட்கள் அவர் சாட்சியமளித்தார். பின் ஆணைய உறுப்பினர்கள் அமெரிக்கா திரும்பி, சாட்சியங்களை கவனமாகப் பரிசீலித்து இறுதியாக 1937 டிசம்பரில் தமது தீர்ப்பை வழங்கினர். அவர்கள் ட்ரொட்ஸ்கி குற்றமற்றவர் என்று கண்டதோடு மாஸ்கோவில் நடக்கும் விசாரணைகள் ஒரு ஜோடிப்பு என்றும் கண்டனம் செய்தனர்.

மாஸ்கோ விசாரணைகளை ட்ரொட்ஸ்கி அம்பலப்படுத்தியதிற்கு பதிலிறுப்பாக ஸ்ராலினிச ஆட்சி நான்காம் அகிலத்தின் மீதான தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியது. 1937 ஜூலையில், ட்ரொட்ஸ்கியின் மிகத் திறம்பட்ட செயலர்களில் ஒருவரான ஜேர்மன் ட்ரொட்ஸ்கிசவாதி எர்வின் வொல்ஃப் (Erwin Wolf) ஸ்பெயினில் ஒரு வேலையில் இருந்தபோது கடத்தப்பட்டார். சித்தரவதை செய்யப்பட்டு அவர் கொல்லப்பட்டார். 1937 செப்டம்பரில் இக்னாஸ் றீஸ் (Ignace Reiss) - இவர் GPUவில் இருந்து விலகி, ஸ்ராலினைக் கண்டனம் செய்ததோடு நான்காம் அகிலத்திற்கான தனது ஆதரவையும் அறிவித்தவர் - ஸ்ராலினிச இரகசிய போலிசால் பின்தொடரப்பட்டு சுவிட்சர்லாந்தில் படுகொலை செய்யப்பட்டார். றீஸ் கொல்லப்பட்ட சூழலானது நான்காம் அகிலத்தின் பாரிஸ் மையத்திற்குள்ளாக GPU ஆல் அனுப்பப்பட்டிருந்த ஒரு முகவரின் காட்டிக் கொடுப்பிலேயே நடந்திருக்க வேண்டும் என்பதான சந்தேகங்களை எழுப்பியது. இந்த சந்தேகங்கள் பிரதானமாக சென்றடைந்த இடம் மார்க் ஸ்பொரோவ்ஸ்கி-எத்தியான் (Mark Zborowski-Etienne) ஆகும். ஆயினும், லோலா டோலன், தன்னையும் ஸ்பொரோவ்ஸ்கியையும் தன்னலமற்ற தோழர்களாகவும் லியோன் செடோவின் உதவியாளர்களாகவும் காட்டி, மெக்சிகோவில் இருந்த நத்தலியா செடோவாவிற்கு தொடர்ச்சியாக கடிதம் எழுதி வந்த நிலையில், GPU முகவரின் மீது குற்றச்சாட்டுபவர்கள் பின்னடிக்க வேண்டியிருந்தது.

1938 பிப்ரவரியில் செடோவ் வழக்கமான குடல்வால் அழற்சி போல் தோன்றிய ஒன்றினால் நோய்வாய்ப்பட்டார். லோலா டாலின் தெரிவு செய்த ஒரு மருத்துவமனைக்கு (Clinic Mirabeau) அவர் கொண்டுசெல்லப்பட்டார். அது, போல்ஷிவிக்-விரோத ரஷ்ய புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் GPU முகவர்கள் நிரம்பிய இடம் என்பது நன்கறிந்த ஒன்றாகும். செடோவ் நோய்வாய்ப்பட்டிருப்பதையும் அவரது இருப்பிடத்தையும் ஸ்பொரோவ்ஸ்கி GPUவிடம் தெரிவித்தார். வழக்கமான ஒரு அறுவைச்சிகிச்சைக்கு பின்னர், செடோவ் ஆரோக்கியமடைந்து வருவதாகவே தோன்றியது. ஆனால் திடீரென்று அவரது உடல்நிலை மோசமடைந்து, ஜன்னி கண்டு, மரணவேதனை கண்டு இறந்துவிட்டார். செடோவின் மரணத்திற்கான உடல்ரீதியான காரணம் கடைசிவரை துல்லியமாகக் கண்டறியப்படவில்லை. மருத்துவரீதியாக திட்டமிட்டு தவறான சிகிச்சை வழங்கியதால் அல்லது விஷம் கொடுக்கப்பட்டதாலோ தான் வயிற்றின் இரட்டைச்சவ்வுப்பை முடங்கி அவர் உயிரிழந்திருக்க வேண்டும் என்பதையே கிடைத்த ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால், செடோவின் மரணத்திற்கு பயன்படுத்தப்பட்ட வழிமுறை தெரியாமல் போனபோதிலும், பழைய ட்ரொட்ஸ்கிசவாதியான ஜோர்ஜ் வெரிகெனின் (Georges Vereeken 1896-1978) வார்த்தைகளில் சொல்வதானால், “ட்ரொஸ்கியின் மகன் GPU கொலைகாரர்களிடம் ஸ்பொரோவ்ஸ்கியால் திட்டமிட்டு ஒப்படைக்கப்பட்டார்” என்பதில் சந்தேகத்திற்கே இடமில்லை.

லியோன் செடோவின் கொலையைத் தொடர்ந்து, ஸ்பொரோவ்ஸ்கியும் டோலனும் பறிகொடுத்த பெற்றோருக்கு ஒரு மனமுருக்கும் இரங்கல் செய்தியை அனுப்பினர். ஆயினும், ஸ்பொரோவ்ஸ்கி மற்றும் டோலன் இருவருக்கு எதிரான சந்தேகங்களும் அதிகரித்தன, ஒரு விசாரணை ஆணையத்தை உருவாக்க ட்ரொட்ஸ்கி முயற்சி மேற்கொண்டார். விசாரணை ஆணையம் அமைப்பதற்கு ட்ரொட்ஸ்கி விடுத்த அழைப்பு, நான்காம் அகிலத்தின் செயலரான ருடோல்ஃப் கிளெமண்ட்டிடம் (Rudolf Klement) நான்காம் அகிலத்தின் ஸ்தாபக காங்கிரஸ் நடப்பதற்கு வெறும் ஆறு வாரங்களுக்கு முன்பாய் 1938 ஜூலையில் அவரது பாரிஸ் குடியிருப்பு வீட்டில் இருந்து அவர் திடீரென காணாமல் போன சமயத்தில், அவரின் கைவசத்தில் இருந்ததாக நம்பப்படுகிறது. கடைசியில் கிளெமண்ட்டின் தலையற்ற முண்டம் செயின் நதியில் இருந்து எடுக்கப்பட்டது. ஒரு வருட இடைவெளிக்குள்ளாக, நான்காம் அகிலத்தின் நான்கு முக்கிய மனிதர்கள் கொல்லப்பட்டு விட்டிருந்தனர். இந்த ஒவ்வொரு கொலையிலுமே, ஸ்பொரோவ்ஸ்கி-எத்தியான வழங்கிய தகவலைக் கொண்டே GPUவின் கொலைப் படைகள் செயல்பட்டன. செடோவ் மற்றும் கிளெமெண்ட் இருவரும் கொல்லப்பட்டு விட்ட நிலையில், நான்காம் அகிலத்தின் ஸ்தாபக காங்கிரசில் உத்தியோகபூர்வ ரஷ்ய பிரதிநிதியாக ஸ்பொரோவ்ஸ்கி பங்கேற்றார்.

ட்ரொட்ஸ்கியுடன் நெருக்கமாக இருந்தவர்களையும் ஆதரவாளர்களையும் GPU கொலைசெய்து விட்டதால், ட்ரொட்ஸ்கியின் படுகொலைக்கான தயாரிப்புகள் தீவிரமடைந்தன. ட்ரொட்ஸ்கி குறித்த தகவலை அறிவதற்காகவும் ட்ரொட்ஸ்கியை அணுகுவதற்காகவும் 1938 இல் சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) நியூயோர்க் தலைமையகத்தில் ஒரு முகவரை GPU வெற்றிகரமாக நுழைத்தது. இந்த முகவர் சில்வியா பிராங்ளின் (Sylvia Franklin) என்ற பெயரில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு இளம் உறுப்பினராவார். இவர் சல்மோன் பிராங்ளின் என்ற பெயரிலான ஒரு ஸ்ராலினிச முகவரைத் திருமணம் செய்திருந்தார். Worker என்னும் ஸ்ராலினிச தினசரியின் ஆசிரியரும் ட்ரொட்ஸ்கிச-விரோத வேவு வேலைகளில் அதிகமாய் ஈடுபட்டிருந்தவருமான லூயிஸ் பூடென்ஸ் (Louis Budenz) பிராங்ளினை அமெரிக்காவில் இருந்த சோவியத் GPUவின் உயர்மட்ட அதிகாரியான கிரிகோரி ரபினோவிட்ச் (“ஜான்”) என்ற ஒருவருக்கு அறிமுகம் செய்து வைக்க, அவர் இந்தப் பெண்மணியை இந்த வேலைக்காய் தெரிவு செய்தார். அவர் சில்வியா கோல்ட்வெல் என்ற கட்சிப் பெயரை எடுத்துக் கொண்டு, வெகுவிரைவிலேயே சோசலிச தொழிலாளர் கட்சியின் தேசிய செயலரான ஜேம்ஸ் பி.கனனின் அந்தரங்க காரியதரிசியாகவே ஆகிவிட்டார். அந்த இடத்தில் அவருக்கு, கனனுக்கும் ட்ரொட்ஸ்கிக்கும் இடையில் நடந்த அத்தனை தகவல்பரிமாற்றங்களையும் அறிந்துகொள்ள முடிந்தது. கனனின் அலுவலகத்தில் இருந்து ஆவணங்களை ஒழுங்குபட நகலெடுத்து அவர் GPUவிடம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

ட்ரொட்ஸ்கிக்கு எதிரான சதியில் அடுத்தவொரு முக்கியமான கட்டமாக, பூடென்ஸ் மீண்டும் ரபினோவிட்ச் உடன் சேர்ந்து வேலை செய்து, ரூபி வேய்ல் என்ற கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு உறுப்பினருக்கும், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் செயலூக்கத்துடன் இயங்கத் தொடங்கியிருந்த சில்வியா அகெலோஃப் என்ற அவரது பழைய தொடர்பிற்கும் இடையில் மிக கவனத்துடன் நாடகமாடி அவர்களது நட்பை மீண்டும் துளிர்க்கச் செய்தனர். 1938 இல் அகெலோஃப் ஐரோப்பாவுக்கு பயணம் சென்றபோது, வேய்ல் அவருடன் உடன்சென்றார். அங்கே தான் ட்ரொட்ஸ்கியை பின்னாளில் கொல்ல இருந்த ரமோன் மெர்காடர் (Ramon Mercader) என்ற “ஃபிராங்க் ஜாக்சன்” (Frank Jacson) வேய்ல் மூலம் அகெலோஃபுக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டார்.

ட்ரொட்ஸ்கியின் கோயோகான் வதிவிடத்திலும் GPU தனது முகவர்களை நுழைத்து விட்டிருந்தது. பல ஆண்டுகளுக்குப் பின்னர், 1956 மே மாதத்தில், சோவியத் வேவு பார்த்தது குறித்த அமெரிக்க செனட் விசாரணை ஒன்றில், தோமஸ் எல்.பிளாக் (Thomas L. Black) என்ற பெயரிலான முன்னாள் அமெரிக்க GPU முகவர், ட்ரொட்ஸ்கிக்கு எதிரான சதியில் பங்குபெற தான் ரபினோவிட்ச்சினால் தெரிவு செய்யப்பட்டதை சாட்சியமளித்தார். அவர் செனட் கமிட்டியில் கூறியது என்னவென்றால்:

முதலில் நான் கோயோகான் போக வேண்டும், அங்கே ட்ரொட்ஸ்கியின் வீட்டில் மற்ற சோவியத் முகவர்கள் இருப்பார்கள், நான் அவரிடம் யார் அவர்கள் என்று கேட்டேன்.

நேரம் வரும்போது நான் தெரிந்து கொள்வேன் என்று அவர் கூறினார்.

திட்டமிடப்பட்டிருந்த வேலையின் தன்மை பற்றி உங்களுக்குத் தெரிந்திருந்ததா என்று பிளாக்கிடம் கேட்கப்பட்டது. அவர் அதற்கு: “ட்ரொட்ஸ்கியின் படுகொலைக்கு ஏற்பாடு செய்வது.” என பதிலளித்தார்.

கடைசியில் பிளாக், மெக்சிகோ சென்று படுகொலையில் பங்குபற்ற முடியவில்லை. ஆயினும் முகவர்கள் ஏற்கனவே கோயோகானில் அமர்த்தப்பட்டிருந்தனர், அத்துடன் - பிந்தைய ஆதாரங்கள் இறுதியாக ஊர்ஜிதம் செய்தவாறு - SWP இல் இருந்த குறைந்தபட்சம் இன்னுமொரு அமெரிக்க GPU உளவாளியேனும் 1940 வசந்தகாலத்தில் படுகொலை சதியில் பங்குபெறுவதற்காக நியூயோர்க்கில் இருந்து மெக்சிகோவுக்கு அனுப்பப்பட்டிருந்தார்.

தன்னைக் கொல்வதற்கும் நான்காம் அகிலத்தின் கழுத்தை நெரிப்பதற்கும் ஸ்ராலின் செய்த முயற்சிகளை ட்ரொட்ஸ்கி அறியாமலும் இல்லை, அதற்கு அலட்சியம் காட்டவும் இல்லை. 1937 நவம்பரில் அவர் “அத்தனை தொழிலாளர் அமைப்புகளுக்குமான ஒரு பகிரங்கக் கடிதம்” ஒன்றை எழுதினார்.

தொழிலாளர் இயக்கமானது ஸ்ராலினை சுற்றிய கூட்டத்தையும், அவரது சர்வதேச முகவர்களையும் போன்ற மிகக் கொடுமையான, ஆபத்தான, சக்திவாய்ந்த மற்றும் மனச்சாட்சியற்ற ஒரு எதிரியை முன்னொருபோதும் தனது சொந்த அணியில் கொண்டிருந்தது கிடையாது. இந்த எதிரிக்கு எதிரான போராட்டத்தை அலட்சியமாக அணுகுவது என்பது காட்டிக்கொடுப்புக்கு ஒப்பானதாகும். வாய்ச்சவடால் ஆசாமிகளும் அரைகுறைகளும் தான் பரிதாபகரமான அறச்சீற்றங்களுடன் தங்களை மட்டுப்படுத்திக் கொள்ள முடியுமே தவிர்த்து, தீவிரமான புரட்சிகரவாதிகளால் அது முடியாது. ஒரு திட்டமும் ஒரு ஒழுங்கமைப்பும் இருப்பது அவசியமானதாகும். ஸ்ராலினிஸ்டுகளின் சூழ்ச்சிகள், இரகசிய வேலைகள் மற்றும் குற்றங்களைப் பின்தொடர்ந்து சென்று தெரிந்து கொள்வதற்கும், காத்திருக்கும் அபாயங்கள் குறித்து தொழிலாளர் அமைப்புகளை எச்சரிப்பதற்கும், மாஸ்கோ கூலிப்படையினரை தடுப்பதற்கான மற்றும் எதிர்ப்பதற்கான சிறந்த வழிமுறைகளை விளக்கிச் சொல்வதற்கும் சிறப்பு ஆணையங்களை உருவாக்குவது அவசரமான பணியாகும்.

நான்காம் அகிலத்திற்கு GPU முன்வைத்த அபாயத்திற்கான பதில் நடவடிக்கைகளை விடுவோம், அபாயம் குறித்த எந்த விவாதத்தையும் கூட ட்ரொட்ஸ்கி திட்டவட்டமாக எதிர்த்தார் என்பதாக படுகொலைக்குப் பின்னர் SWP பிரச்சாரம் செய்த அபத்தமான பொய்க் கூற்றை மேற்கூறிய பத்தி மறுக்கிறது. GPU இன் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தவும் எதிர்நடவடிக்கைகள் எடுக்கவும் ட்ரொட்ஸ்கி செயலூக்கத்துடன் முனைந்தார் என்பதையே வரலாற்று ஆவணங்கள் ஸ்தாபிக்கின்றன. ஆயினும் இந்த முயற்சிகள் நான்காம் அகிலத்திற்கு உள்ளே ஏற்கனவே நுழைக்கப்பட்டிருந்த முகவர்களால் பலனற்றவையாக்கப்பட்டன.

1938 இன் பிற்பகுதியில் GPU இன் ஒரு உயர் பதவியில் இருந்திருந்த அலெக்ஸாண்டர் ஓர்லோவ் (Alexander Orlov) சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேறினார். அவர் நான்காம் அகிலத்திற்கு எதிரான GPU இன் படுகொலை நடவடிக்கைகளை நெருக்கமாக அறிந்து வைத்திருந்தவர். என்ன நோக்கத்தில் என்பது தெரியவில்லை என்றாலும், ஓர்லோவ் ட்ரொட்ஸ்கிக்கு அனுப்பிய ஒரு இரகசிய தகவல் ஒரு குறிப்பிட்ட “மார்க்” GPU இன் முகவர் என அடையாளம் காட்டியது. அவருக்கு அந்த முகவரின் கடைசிப் பெயர் தெரியவில்லை என்றாலும் கூட, அது ஸ்பொரோவ்ஸ்கி-எத்தியான் தான் என்பது தெளிவு. ஓர்லோவ் பற்றித் தெரியாத ட்ரொட்ஸ்கி, இந்த செய்தியை வழங்கிய முகம்தெரியாத அந்த மனிதரை தொடர்பு கொள்ள முனைந்தார். ஆனால் அந்த முயற்சி, காரணங்கள் தெளிவாக இல்லை என்றாலும், வெற்றியடையவில்லை.

அதற்குப் பல மாதங்களுக்குப் பின்னர், ஓர்லோவ் பாரிஸ் முகவர் குறித்து இரண்டாவது மற்றும் இன்னும் விரிவானதொரு கண்டனத்தை அனுப்பினார். GPU இன் ஒரு பெண் முகவர் மெக்சிகோவுக்கு வரவிருப்பதையும் அவர் ட்ரொட்ஸ்கிக்கு விஷமளிக்க முனையவிருப்பதையும் குறித்து அந்தக் கடிதம் ட்ரொட்ஸ்கியை எச்சரித்தது. அடுத்த சிறிது காலத்திலேயே, 1939 கோடையில், லோலா டோலன் மெக்சிகோ வந்துசேர்ந்தார். ட்ரொட்ஸ்கி அந்த கடிதத்தை பற்றி அவரிடம் கேட்டார். இந்த கடிதம் GPUவின் ஒரு ஏமாற்று என ட்ரொட்ஸ்கியை நம்பச்செய்ய தான் முயற்சித்ததாக பின்னாளில் ஒரு செனட் துணைக்குழுவிடம் அளித்த சாட்சியத்தில், டோலன் கூறினார். அவர் ட்ரொட்ஸ்கியிடம் பின்வருமாறு கூறியிருந்தார்: “அவர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் பாருங்கள்? பிரான்சில், பாரிஸில், உங்களுக்கென எஞ்சியிருக்கும் சில ரஷ்யர்களிடமிருந்து கூட நீங்கள் முறித்துக் கொள்ள வேண்டும் என்பதே அவர்கள் விருப்பமாக இருக்கிறது.” அந்த எச்சரிக்கையை புறந்தள்ள டோலன் முயற்சி செய்தாலும், ட்ரொட்ஸ்கி அந்த முகம்தெரியாத மனிதரை தொடர்பு கொள்ள மீண்டும் முயற்சி செய்தார், ஆனாலும் அது வெற்றிபெறவில்லை.

டோலன், அவர் பாரிஸுக்குத் திரும்பிய உடனேயே -அவரது செனட் சாட்சியத்தின் படி- ட்ரொட்ஸ்கி பெற்றிருந்த எச்சரிக்கைகள் குறித்து ஸ்பொரோவ்ஸ்கியை எச்சரித்தார். இந்த தகவலானது, ஸ்பொரோவ்ஸ்கியின் நடவடிக்கைகளை இரகசியமாக பின்தொடர பாரிஸிலிருந்த தனது அனுதாபிகளுக்கு ட்ரொட்ஸ்கி அளித்திருந்த ஆலோசனையை பிரயோசனமற்றதாக்கி விட்டது.

1940 மே 24 அன்று அதிகாலை நேரத்தில், ஓவியரும் வெறிகொண்ட ஸ்ராலினிஸ்ட்டுமான டேவிட் அல்ஃபரோ சிக்வரோஸ் (David Alfaro Siqueiros) தலைமையில், எந்திரத் துப்பாக்கிகள் ஏந்திய ஸ்ராலினிச துப்பாக்கிதாரிகள், அவெனிடா வியனாவில் இருக்கும் ட்ரொட்ஸ்கியின் வதிவிடத்தின் வளாகத்திற்குள்ளாக நுழைந்து விட முடிந்திருந்தது. அவர்கள் வில்லாவின் சுவர்களில் ஏறிக் குதிக்கும் அவசியமோ அல்லது முன்னாலிருந்த கேட்டை வெடிவைத்துத் தகர்த்துத் திறக்கவோ அவசியமிருக்கவில்லை. ஏனென்றால் SWPக்குள் நுழைந்து விட்டிருந்த நியூயோர்க் நகரத்தைச் சேர்ந்த ராபர்ட் ஷெல்டன் ஹார்ட் (Robert Sheldon Harte) என்ற 25 வயது ஸ்ராலினிஸ்ட் அவர்களுக்காக கதவைத் திறந்து வைத்திருந்தார். பாதுகாப்பு குறித்த அலட்சியம் என்ற SWP இன் தலைமைக்கே உரித்தான பண்பால், தனிநபர் மற்றும் அரசியல் பின்புலம் பற்றி ஏறக்குறைய ஒன்றுமே அறிந்திருக்கப்படாத ஹார்ட்டிடம் ட்ரொட்ஸ்கியின் பாதுகாப்பு விவரங்கள் அளிக்கப்பட்டிருந்தது.

துப்பாக்கிதாரிகள் ட்ரொட்ஸ்கியின் படுக்கையறையை சுற்றிவளைத்து எந்திரத் துப்பாக்கி ரவைகளால் அறையை நிரப்ப, ட்ரொட்ஸ்கியும் நடாலியாவும் படுக்கைக்குக் கீழே தாவி மயிரிழையில் உயிர்தப்பினர். ட்ரொட்ஸ்கியின் பாதுகாப்பு என்பது எந்த அளவுக்கு தயாரிப்பு இல்லாததாக இருந்தது என்பதை அந்த சம்பவம் அம்பலப்படுத்தியது. சுட வந்த கூட்டம் தங்களது வேலை முடிந்துவிட்டதாக எண்ணி வதிவிடத்தில் இருந்து திரும்பிச் சென்ற பின்னர், ட்ரொட்ஸ்கி தான் முதல் ஆளாக வெளியில் வந்து பார்த்தார். அவர் தனது பாதுகாவலர்களை தேட வேண்டியதாய் இருந்தது. அவர்களில் யாரும் தமது துப்பாக்கிகளை பயன்படுத்தி சுட்டிருக்கவேயில்லை. திருப்பிச் சுட எண்ணியிருந்த சிலருக்கும் அது முடியாதவண்ணம், அவர்களது எந்திரத் துப்பாக்கிகள் அடைத்துக் கொண்டு விட்டிருந்தது, காரணம் அவர்கள் தவறான ரவைகளைப் பயன்படுத்தியிருந்தார்கள்.

ஏறக்குறைய உடனடியாக இந்தத் தாக்குதலில் ஷெல்டன் ஹார்ட்டின் பங்கு குறித்த மிக நியாயமான சந்தேகங்கள் எழுந்து விட்டன. அவர் சுட வந்தவர்களுடன் சேர்ந்து சென்று விட்டிருந்தார், அவர் தனது சொந்த விருப்பத்தில் தான் சென்றார் என்பதற்கு கண்ணால் கண்ட சாட்சிகள் இருந்தன. ஹார்ட்டின் நியூயார்க் குடியிருப்பு வீட்டில் ஸ்ராலினின் ஒரு படம் கண்டெடுக்கப்பட்டது. அவர் கைவசம் இருந்த ஒரு அகராதியில் சிகரோஸ் (Siqueiros) கையெழுத்து இருந்தது. இந்த சம்பவம் நடந்து பல வாரங்களுக்கு பின்னர், ஹார்ட்டின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சிகரோஸ் கும்பலைச் சேர்ந்த உறுப்பினர்கள் அவரைக் கொன்றிருந்தார்கள். அந்த சமயத்தில் ஹார்ட்டுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ட்ரொட்ஸ்கி ஏற்கவில்லை. ஆனால் ஹார்ட்டின் நடத்தையில் இருந்த விநோதமான மற்றும் பெரும் சந்தேகத்திற்குரிய அம்சங்கள் அந்த மனிதர் குற்றமற்றவர் என்று திட்டவட்டமாக அறிவிக்க ட்ரொட்ஸ்கியை அனுமதித்திருக்கவில்லை. தனது வாழ்க்கையை கொல்ல நடந்த முயற்சியில் ஹார்ட் சம்பந்தப்பட்டிருக்க முடியும் என்பதற்கான சாத்தியத்தை அவர் திறந்தே வைத்திருந்தார். எப்படியிருந்தாலும், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பின்னால் கண்டறியப்பட்ட ஆவணங்கள் ஹார்ட், உண்மையில், ஒரு ஸ்ராலினிச முகவரே என்பதை மறுப்பிற்கிடமின்றி ஸ்தாபித்தன. அமைப்பு குறித்தும் துப்பாக்கிசூடு குறித்துமான விபரங்களை அவரை நம்பி விட்டுவைக்க முடியாது என்று சிகரோஸ் சந்தேகித்ததன் பேரில் அவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.

தனது வாழ்வின் எஞ்சியிருந்த இறுதி வாரங்களில், ட்ரொட்ஸ்கி, தனது ஆற்றலின் பெரும் பாகத்தை ஸ்ராலினிச கொலை எந்திரத்தை அம்பலப்படுத்துவதற்காய் அர்ப்பணித்திருந்தார். மே 24 சம்பவம் குறித்து அவர் இரண்டு முக்கியமான ஆவணங்களை எழுதினார்: “ஸ்ராலின் எனது மரணத்தை எதிர்பார்க்கிறார்” 1940 ஜுன் 8 அன்று எழுதி முடிக்கப்பட்டது, ”கம்யூனிச அகிலமும் GPUவும்” ஆவணம் 1940 ஆகஸ்ட் 17 அன்று, அதாவது அவர் படுகொலை செய்யப்படுவதற்கு வெறும் மூன்று நாட்கள் முன்னதாக எழுதி முடிக்கப்பட்டிருந்தது.

1940 ஆகஸ்ட் 20 அன்று, மாலை ஐந்து மணிக்கு சற்று நேரம் தாண்டி, அவெனிடா வியனாவில் இருக்கும் வதிவிடத்திற்கு ஃபிராங்க் ஜாக்சன் எதிர்பாராமல் வந்துசேர்ந்தார். ஜாக்சனின் முந்தைய ஆகஸ்ட் 17 விஜயத்தின் போது, அவரது விநோதமான நடத்தை குறித்து ட்ரொட்ஸ்கி அதிருப்தி வெளியிட்டிருந்தார். ஜாக்சன் தன்னை ஒரு பிரெஞ்சுக்காரர் என்று கூறிக் கொள்வது குறித்து ட்ரொட்ஸ்கி சந்தேகம் எழுப்பினார். சில்வியா அகெலோஃப் உடனான அவரது உறவு தவிர்த்து, நான்காம் அகிலத்திலான அவரது ஆர்வம் குறித்த தன்மை முற்றிலும் அறியப்படாததாகவும் ஆராயப்படாததாகவும் இருந்தது.

ஆனால் ட்ரொட்ஸ்கியின் கவலைகள் கவனத்தில் எடுக்கப்படாமல், ஜாக்சன் வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டிருந்தார். அன்றைய தினம் இதமான வெயிலுடன் தான் இருந்தது என்ற நிலையிலும், ஜாக்சன் ஒரு மழைக்காலத்தில் அணியும் மேலங்கியை அணிந்திருந்தார், அதில் அவர் ஒரு பனிக்கோடாரி, ஒரு தானியங்கி துப்பாக்கி, ஒரு பெரிய குத்துவாள் ஆகியவற்றை மறைத்திருந்தார். மிக அடிப்படையான பாதுகாப்பு நடைமுறைகளையும் மீறியவிதமாக, ஜாக்சன் ட்ரொட்ஸ்கியின் ஆய்வுஅறைக்குள் அவருடன் தனியாய் உடன்செல்ல அனுமதிக்கப்பட்டார். சில நிமிடங்களுக்கு பின்னர், ட்ரொட்ஸ்கி ஜாக்சன் எழுதியதொரு கட்டுரையை திறனாய்வு செய்து கொண்டிருந்த சமயத்தில், அந்த கொலைகாரர் ட்ரொட்ஸ்கியை பனிக்கோடாரி கொண்டு பின்னால் இருந்து தாக்கினார். தலையிலடித்தால் ட்ரொட்ஸ்கி உடனடியாக நினைவிழந்து விடுவார் என்று ஜாக்சன் எதிர்பார்த்திருக்க வேண்டும். ஆனால் ட்ரொட்ஸ்கி குரலெடுத்து அலறியதோடு, தனது நாற்காலியில் இருந்து எழுந்து அந்த கொலையாளியை எதிர்த்துப் போராடினார். பாதுகாவலர்கள் உள்ளே ஓடிவந்து, ஜாக்சனிடம் இருந்து ஆயுதத்தைப் பறித்தனர்.

மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட வழியிலேயே ட்ரொட்ஸ்கி நினைவிழந்து விட்டிருந்தார். 1940 ஆகஸ்ட் 21 அன்று, தாக்குதல் நடந்து 26 மணி நேரம் கடந்திருந்த நிலையில், அவர் மரணமடைந்தார். அறுபத்தியோராவது வயதைத் தொட அவருக்கு இரண்டு மாதங்களே இன்னும் இருந்தது.

ட்ரொட்ஸ்கியின் படுகொலை சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு கதிகலங்கச் செய்த அடியாக இருந்தது. எந்த ஒரு ஆணை அல்லது பெண்ணையாவது சோசலிசத்தின் பாதையில் அரசியல்ரீதியாக தவிர்க்கமுடியாதவொரு மனிதராக குறிப்பிட முடியுமாயின், ட்ரொட்ஸ்கி அப்படியொரு மனிதராக இருந்தார். அவர் பரந்த மற்றும் இணைசொல்லமுடியாதவொரு அரசியல் அனுபவத்தின் உருவடிவமாகத் திகழ்ந்தார். இருபதாம் நூற்றாண்டின் அரசியல் வரலாற்றில் இத்தகையதொரு மிகப் பிரம்மாண்டமான பாத்திரத்தை ஆற்றிய மனிதர், அநேகமாய் லெனினை தவிர்த்து, வேறொருவர் கிடையாது. மேலும், இறந்து எழுபத்தியைந்து ஆண்டுகள் ஆன பின்னரும், ட்ரொட்ஸ்கி, அசாதாரணமான அளவில் இன்னும் சமகால மனிதராகவே தொடர்ந்து இருக்கிறார். அவர் இன்னும் முழுமையாக வரலாற்றுக்குள் சென்றுவிடவில்லை. கடந்த காலத்தின் அளவுக்கு நிகழ்காலத்திலும் பொருத்தமான மனிதராகவே அவர் இருக்கிறார். ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களும், அவரது தத்துவார்த்த மற்றும் அரசியல் கருத்தாக்கங்களும், அவரது புரட்சிகர சர்வதேசியவாதமும், நாம் இன்று வாழும் உலகத்தின் பிரச்சினைகளுக்கும் இன்னும் அதே தீவிரமான சக்தியுடன் பேசுகின்றன. இருபதாம் நூற்றாண்டிலிருந்து இருபத்தியோராம் நூற்றாண்டுக்குக் விட்டுச்செல்லப்பட்ட முடிவுறாத புரட்சிகரக் கடமைகளின் மகத்தான குரலாக ட்ரொட்ஸ்கி திகழ்கிறார்.

Loading