லியோன் செடோவ்

மகன், நண்பன், போராளி

அறிமுகவுரை

லியோன் செடோவ் 1938 பெப்பிரவரியில் ஸ்ராலினிச ஜிபியு இனால் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு மருத்துவ கொலைக்கு பலியாகினார்

லியோன் ட்ரொட்ஸ்கியின் படுகொலையின் 75 ஆண்டின் நினைவாக, ட்ரொட்ஸ்கியின் மகனான லியோன் செடோவ் பாரிஸில் மர்மமான முறையில் இறந்த பின்னர் ட்ரொட்ஸ்கியாலும், நத்தாலியாவாலும் எழுதப்பட்ட இந்த சிறு பிரசுரத்தை உலக சோசலிச வலைத் தளம் முதல் முறையாக தமிழில் பதிவிடுகின்றது. செடோவின் மரணத்திற்கு பயன்படுத்தப்பட்ட வழிமுறைகள் தெரியாமல் போன போதிலும், பழைய ட்ரொட்ஸ்கிசவாதியான ஜோர்ஜ் வெரிகெனின் வார்த்தைகளில் சொல்வதானால், “ட்ரொட்ஸ்கியின் மகன் ஜிபியு கொலைகாரர்களிடம் ஸ்பொரோவ்ஸ்கியால் திட்டமிட்டு ஒப்படைக்கப்பட்டார்” என்பதில் சந்தேகத்திற்கே இடமில்லை. தொடர்ச்சியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மேற்கொண்ட ஆய்வுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. எதிர்வரும் நாட்களில் அவை தமிழில் வெளிக்கொணரப்படும்.

லியோன் செடோவ், லியோன் ட்ரொட்ஸ்கியின் மகனாக இருந்தபோதும், அவர்கள் இருவரிடையே இருந்த உறவு அதனினும் ஆழமாக வேரூன்றியிருந்தது. ட்ரொட்ஸ்கி எழுதியவாறாக, செடோவ் “எங்களது சக-சிந்தனையாளராக, எங்களது சக-உழைப்பாளியாக, எங்களது காவலராக, எங்களது ஆலோசகராக, எங்களது நண்பராக” திகழ்ந்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாய், அவர்கள் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் காட்டுக்கொடுப்புகளுக்கும் குற்றங்களுக்கும் எதிராய் மார்க்சிசம் மற்றும் லெனினிசத்தின் தொடர்ச்சிக்காக போராட உணர்வுபூர்வமாக உறுதியேற்றிருந்த தோழர்களாய் இருந்தனர்.

1917 இல் தந்தை போல்ஷிவிக் புரட்சியின் தலைமையில் இருந்த சமயத்தில் செடோவ் சிறுவனாக இருந்தார். அவரது இளமைப்பருவம் ரஷ்ய உள்நாட்டுப் போரின் காலத்தில் கழிந்தது.

அந்த நிகழ்வுகள் செடோவின் அரசியல் வாழ்க்கையை வடிவமைத்தன. ஒரு இளைஞராக அவர் சாமானியத் தொழிலாளர்களுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தியிருந்தார். 1923 இல் அவரது 17வது வயதில், அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பிற்குள்ளாக, கட்சி மற்றும் புரட்சியை பற்றி விட்டிருந்த அதிகாரத்துவ சீரழிவுக்கு எதிராக ட்ரொட்ஸ்கி மற்றும் இடது எதிர்ப்பாளர்களது கொள்கைகளது வெளிச்சம் காட்டி நடந்தார். இந்த அடிப்படையான போராட்டத்தில் அவரது கோட்பாடுமிக்க நிலையானது, ஒரு மகன் தனது தந்தைக்குக் காட்டும் விசுவாசமாக அல்லாமல், ஒரு முழு நனவான புரட்சிகரவாதியாக செடோவ் எழுந்ததைக் குறித்தது.

1929 இல் ட்ரொட்ஸ்கியும் அவரது மனைவி நத்தாலியாவும் ஸ்ராலினால் நாடுகடந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டபோது, செடோவும் விருப்பத்துடன் அவர்களுடன் சென்றார். 1930கள் முழுவதிலும், நான்காம் அகிலத்தை ஸ்தாபிக்கவிருந்த சக்திகளை ஒன்றாகத் திரட்டுவதில் செடோவ் ஒரு அதிமுக்கியமான பாத்திரத்தை ஆற்றினார்.

முதலில் பேர்லினிலும் —1933 இல் ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்ததற்குப் பல வாரங்கள் பின்னர் வரைக்கும் அவர் அங்கே தான் இருந்தார்— பின்னர் பாரிஸிலும் வேலை செய்த செடோவ், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ஐரோப்பியப் பிரிவுகளது பணிகளுக்குரிய பிரதான பொறுப்பைக் கொண்டிருந்தார். ரஷ்ய எதிர்ப்பாளர்களது புல்லட்டின் என்ற இதழின் ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் இருந்த அவர், வரலாற்றின் மிகப் படுபயங்கரமான ஜோடிப்பான, மாஸ்கோ விசாரணைகளை அம்பலப்படுத்துவதில் முற்றுமுழுதான முக்கியமான பாத்திரத்தை ஆற்றினார். மாஸ்கோ விசாரணைகளில் பிரசன்னமில்லாமலே பிரதான பிரதிவாதிகளில் ட்ரொட்ஸ்கியுடன் சேர்த்து செடோவின் பெயரையும் இடம்பெறச் செய்ததன் மூலமாக, ஸ்ராலினே, அவரது சொந்த வழியில், செடோவின் வேலைகளது மதிப்பை ஒப்புக்கொண்டார்.

ரஷ்ய புரட்சிக்கு தலைமை கொடுத்த போல்ஷிவிக்குகளது ஒட்டுமொத்தத் தலைமுறையையும் கொலைசெய்து விட்ட பின்னர், ட்ரொட்ஸ்கிக்கும் செடோவுக்கும் எதிரான மரண தண்டனைகளை நிறைவேற்றும் பொறுப்பை ஸ்ராலின் தனது இரகசியப் போலிசான ஜிபியு இடம் ஒப்படைத்தார். 1938 பிப்ரவரி 16 அன்று, அந்த தண்டனைகளில் முதலாவது நிறைவேற்றப்பட்டது. அதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பாகத்தான் பாரிஸில் ஒரு மருத்துவமனையில் செடோவ் அனுமதிக்கப்பட்டிருந்தார், அங்கு அவர் குடல்நோயில் இருந்து நன்கு மீண்டுவந்து கொண்டிருந்தார். திடீரென்று பித்துப்பிடித்தவரைப் போல மருத்துவமனையின் வார்டுகளில் அவர் நிர்வாணமாக உலவியதாகச் சொல்லப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களில் அவர் இறந்து போனார். அப்போது அவரது வயது 32.

அர்ப்பணம்

ரொம் ஹீனஹன்,
மார்ச் 16, 1951 - அக்டோபர் 16, 1977

லியோன் செடோவ்: மகன், நண்பன், போராளி என்னும் சிறுநூலின் இந்த பதிப்பை மறைந்த தோழர் ரொம் ஹீனஹனுக்கு அர்ப்பணிப்பதில் வேர்க்கர்ஸ் லீக் பெருமிதம் கொள்கிறது.

இந்த அர்ப்பணிப்பை செய்வதன் மூலம், சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவைக் கட்டியெழுப்புவதற்காக தீரத்துடன் தனது உயிரையே கொடுத்து, லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் அவரது மகன் செடோவின் பாதச்சுவடுகளில் பயணித்த இந்த இளம் புரட்சிகரத் தலைவருக்கு வேர்க்கர்ஸ் லீக் நினைவஞ்சலி செலுத்துகிறது.

செடோவ் போலவே, தோழர் ஹீனஹனும் கொடூரமாக நடத்தப்பட்ட ஒரு அரசியல் படுகொலைக்கு பலியானவராவார். 1977 அக்டோபர் 16 அன்று நள்ளிரவுக்கு சற்றுப் பின்னர், வேர்க்கர்ஸ் லீக்கின் இளைஞர் அமைப்பான இளம் சோசலிஸ்டுகள் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிதி-திரட்டுவதற்கான நடன நிகழ்ச்சி ஏற்பாட்டை மேற்பார்வை செய்துகொண்டிருந்த சமயத்தில் அவர் ஒரு கூலிக் கொலையாளியால் சுடப்பட்டார்.

கொலை நடந்த நியூயோர்க் நகரத்தின் ஒட்டுமொத்த முதலாளித்துவ ஊடகங்களும் தோழர் ஹீனஹனின் கொலை குறித்த செய்தியை ஏறக்குறைய இருட்டடிப்பு செய்தன. அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் திருத்தல்வாத சோசலிச தொழிலாளர் கட்சியினரும் கூட இதே இருட்டடிப்பை பின்பற்றினர். சோசலிச தொழிலாளர் கட்சியானது தனது வாராந்திரப் பத்திரிகையான மிலிட்டண்ட் இல் தோழர் ஹீனஹனின் மரணம் குறித்து ஒரு வரியும் கூட பிரசுரிக்க மறுத்ததன் மூலம் அது இந்தக் கொலையை ஆமோதித்திருந்தது.

முதலாளித்துவ, ஸ்ராலினிச மற்றும் திருத்தல்வாத ஊடகங்களின் இந்த வெறுக்கத்தக்க மவுனமானது இந்தப் படுகொலையின் பின்னால் இருந்த அரசியல் நோக்கங்களை தெள்ளத் தெளிவாக அம்பலப்படுத்துகிறது. வேர்க்கர்ஸ் லீக்கின் ஒரு தலைவராக ரொம் ஹீனஹன், தொழிலாள வர்க்கத்தில் புரட்சிகர தலைமையை கட்டியெழுப்புவதில் ட்ரொட்ஸ்கிச கோட்பாடுகளுக்கான அனைத்துலகக் குழுவின் போராட்டத்திற்கு ஒரு உதாரணவடிவமாக திகழ்ந்து கொண்டிருந்த நிலையில், அவரைக் கொலைசெய்ததன் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் முகமைகளும் அனைத்துலகக் குழுவின் மீது ஒரு மிருகத்தனமான அடி கொடுப்பதற்கு முனைந்திருந்தன.

தோழர் ரொம் இறந்தபோது அவரது வயது வெறும் 26 தான். அவர் நான்கரை ஆண்டு காலம் வேர்க்கர்ஸ் லீக்கில் உறுப்பினராக இருந்திருந்தார். ஆனால் அந்தக் குறுகிய காலத்தில் ரொம் ஒரு எஃகுறுதி கொண்ட புரட்சிகரக் காரியாளராக அபிவிருத்தி கண்டிருந்தார். 1977 ஜனவரியில் வேர்க்கர்ஸ் லீக் கட்சி மாநாட்டில் அவர் மத்திய குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

ட்ரொட்ஸ்கியின் அனைத்து படைப்புகளிலும் இந்த சிறுவெளியீடு ரொம்முக்கு அர்ப்பணிக்கப்படுவது குறிப்பாக பொருத்தமானதாகும். புரட்சிகரக் கட்சியை கட்டியெழுப்புவதில் அவரது பங்களிப்புகள் இங்கே விவரித்து விட முடியாத அளவுக்கு மிகப் பெரியதும் பரந்துபட்டதும் ஆகும். ஒரு முழுநேரத் தொழில்முறை புரட்சியாளராக, தனது அத்தனை பிற அரசியல் பொறுப்புகளுடன் சேர்த்து, கட்சியின் அச்சகப் பிரிவில் உழைத்து வந்த தோழர் ரொம்மின் முத்திரை பதிக்கப்படாத இடமே கட்சியில் இல்லை எனலாம்.

அவரது உழைப்பில் ஒன்றினை மட்டும் மற்றவற்றிற்கு மேலாக அதிக முக்கியத்துவமளித்துக் காட்டுவது சாத்தியமாகும் என்றால், இளம் சோசலிஸ்டுகள் அமைப்பைக் கட்டுவதில் ரொம் அளித்த மிகவும் குறிப்பிடத்தக்க நின்றுநிலைத்த பங்களிப்பைக் குறிப்பிடலாம். அவரது உழைப்பின் குணாம்சங்களாய் விளங்கிய ஆற்றலும் மற்றும் தீர்மானகரமான உறுதியும் அமெரிக்காவில் தொழிலாள வர்க்க இளைஞர்களின் மிகச் சிறந்த போராடும் பண்புகளை உண்மையாக வெளிப்படுத்திக் காட்டின.

ஆனால் அது மட்டுமன்று. தோழர் ரொம் தனது நனவான அரசியல் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் இளைஞர்களையும் இளம் தொழிலாளர்களையும் ட்ரொட்ஸ்கிசத்திற்கு வென்றெடுப்பதற்கும் அவர்களை மார்க்சிஸ்டுகளாக பயிற்றுவிப்பதற்குமாய் அர்ப்பணித்திருந்தார். ரொம்மின் வாழ்க்கை முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடுவதற்கான தீர்மானகரமான உறுதிக்கு மட்டுமல்ல, சோசலிசப் புரட்சியின் வெற்றிக்கு தவிர்க்கமுடியாததாக இருக்கின்ற அரசியல் மற்றும் தத்துவார்த்த ஆயுதமயமாகலில் நிபுணத்துவம் பெறுகின்ற உந்துதலுக்கும் கூட உதாரணமாய் விளங்கியது.

கொலையாளியின் தோட்டா ரொம்மின் ஆயுளை விழுங்கிய சமயத்தில், தோழர் ரொம் அரசியல் மற்றும் தத்துவார்த்தப் பயிற்சியில் ஒரு உருப்பெறும் கட்டத்தில் தான் இருந்து கொண்டிருந்தார். ஆயினும் தொழிற்சங்கவாதிகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அவரது நடைமுறை, தனித்துவத்துடன் திகழ்கின்ற மட்டத்திற்கு அவர் ஏற்கனவே பிரம்மாண்ட அபிவிருத்தி கண்டிருந்தார். எல்லாவற்றுக்கும் மேல், ரொம் புரட்சிகரக் கட்சியை கட்டியெழுப்புவதற்கு தொடர்ச்சியாகப் போராடினார். அவரைப் பொறுத்தவரை தயக்கமும் இருந்ததில்லை, திரும்பிப் பார்த்ததும் இல்லை.

ரொம் எந்தக் கோட்பாடுகளில் வென்றெடுக்கப்பட்டிருந்தாரோ அக்கோட்பாடுகளில் மற்ற இளைஞர்களையும் தொழிலாளர்களையும் பயிற்றுவிப்பதற்கு அவர் மேற்கொண்ட போராட்டம் தான் ரொம்மின் வேலைகளின் தனித்துவமாக இருந்த மிக முக்கியமான பண்பு ஆகும். இளைஞர்களையும் தொழிலாளர்களையும் முதலாளித்துவ சித்தாந்தங்களில் இருந்து உடைத்துக்கொண்டு வரச் செய்கின்ற வேலையானது, ஒரு சில வேலைத்திட்ட கோரிக்கைகளுக்காக ஆர்ப்பாட்டம் செய்வதைக் காட்டிலும் அதிகமான ஆற்றலைக் கோரியது என்பதை அவர் புரிந்திருந்தார். அனைத்துக்கும் மேல் இயங்கியல் சடவாதம் என்ற ஒரு விஞ்ஞானபூர்வ சிந்தனையிலான உலகக் கண்ணோட்டம் அதற்கு அவசியமாய் இருந்தது. பிராந்தியவாதம் மற்றும் சர்வதேசவாத-விரோதங்களின் அத்தனை வடிவங்களுக்கும் எதிராக புரட்சிகர சர்வதேசியவாதத்தின் கோட்பாடுகளுக்கான ஒரு போராட்டத்தில் ரொம் வாழ்ந்து வந்ததுடன், அது பிரிக்கவியலாமல் தொடர்புபட்டிருந்தது.

துல்லியமாக இந்தக் காரணத்திற்காகத்தான் ரொம் நான்காம் அகிலத்தின் சர்வதேச இளைஞர் குழுவைக் கட்டியெழுப்புவதில் ஒரு தலைமையான பாத்திரத்தை ஆற்றினார். 1975 நவம்பரில் நடந்த அதன் ஸ்தாபக மாநாட்டில், அவர் அதன் தலைமைக் குழுவில் பணியாற்றினார்.

ரொம்மின் மரணச் செய்தி கேட்டு அவரது தோழர்கள் அடைந்த வேதனையானது அவரது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான தீர்மானமிக்க உறுதியால் புடமிடப்படுகிறது. செடோவின் வாழ்க்கையைப் போலவே, ரொம்மின் வாழ்க்கையும் இப்போது நான்காம் அகிலத்தின் வரலாற்றில் ஒரு அழியாத பக்கமாக ஆகியிருக்கிறது. இப்போது அவரது நினைவாக நாம் அர்ப்பணிக்கின்ற இந்த சிறுவெளியீடானது ரொம்மினால் மிகக் கவனமாக வாசிக்கப்பட்ட ஒன்று என்பதுடன் அவருக்கு மிகவும் உற்சாகமூட்டிய ஒன்றுமாகும். ஏகாதிபத்தியத்திற்கும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கும் எதிரான லியோன் செடோவின் வரலாற்றுப் போராட்டத்தில் இருந்து அவர் உத்வேகம் பெற்றதைப் போலவே, தோழர் ரொம் ஹீனஹனின் வாழ்க்கை எண்ணிலடங்கா இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

1977 ஆங்கில பதிப்பின் முன்னுரை

இச் சிறுபிரசுரத்தில் உள்ள “லியோன் செடோவ் கொலை செய்யப்பட்டுள்ளாரா?” என்ற இறுதிக் கட்டுரை செடோவ் “இயற்கை வியாதிகளால்” மரணமானதென்ற உத்தியோகபூர்வ கதைகளை ட்ரொட்ஸ்கி ஒருபோதும் நம்பவில்லையென்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. ட்ரொட்ஸ்கி மெக்சிக்கோவில் நாடு கடத்தப்பட்டிருந்தபோது பாரிசில் இருந்து கிடைத்த சுருக்கமான தகவல்களின் அடிப்படையில் இது ஜிபியு வின் கொலையென்பதை, அவர் தெளிவாகப் புரிந்துகொண்டார்.

ஆனால் பாரிசில் உள்ள ட்ரொட்ஸ்கிச இயக்கத்தினுள் ஊடுருவி செடோவின் நெருங்கிய ஒத்துளைப்பாளர்களில் ஒருவராக தன்னை காட்டிக்கொண்ட மார்க் ஸ்பொரோவ்ஸ்கி (Mark Zbrowski) ஓர் ஜிபியு வின் முக்கிய கையாள் என்பது ட்ரொட்ஸ்கிக்கு தெரியாததொன்றாக இருந்தது. ஸ்பொரோவ்ஸ்கி 1938 பெப்பிரவரியில் ட்ரொட்ஸ்கியின் காரியதரிசியாக இருந்த எர்வின் வொல்ஃப் (Erwin Wolf) ஐயும் ஜிபியு இலிருந்து விலகி நான்காம் அகிலத்துக்கு வந்த இக்னாஸ் றைஸ் (Ignance Reiss) இன் கொலையையும் ஒழுங்கு செய்தான். அவன் தனது கொலைப்பட்டியலில் ட்ரொட்ஸ்கியின் மற்றொரு காரியதரிசியான ருடொல்வ் கிளேமென்ட் இன் பெயரையும் சேர்த்துக் கொண்டான்.

ஆனால் லியோன் செடோவின் கொலையை ஒழுங்கு செய்வதே ஸ்பொரோவ்ஸ்கி இன் மிக முக்கியமான நடவடிக்கையாகும். இதனால் செடோவின் வேலைகள் மீது அவனது கைகள் எப்போதும் இருந்தன. செடோவ் பாரிஸ் வைத்தியசாலைக்கு செல்லும்போது ஓர் சிறியளவிலான நபர்களுக்கு மட்டுமே அவ்விடம் தெரிந்திருந்தது. ஸ்பொரோவ்ஸ்கி அவர்களில் ஒருவனாக இருந்ததுடன் அதன் முழு தகவல்களையும் தனது ஜிபியு பொறுப்பாளர்களுக்கு தெரியப்படுத்தினான். மிகுதி நடவடிக்கைகள் அவர்களால் கவனிக்கப்பட்டது.

ஸ்பொரோவ்ஸ்கி விஞ்ஞானி என்ற நற்பெயரையும் மதிப்பையும் அனுபவித்துக்கொண்டு சான்பிரான்சிஸ்கோவின் நாகரீகமான பகுதியில் இன்றும் வாழ்ந்து வருகிறான். பல வருடங்களாக ட்ரொட்ஸ்கிச முகமூடியுடன் இருந்த யோசப் ஹான்சன், ஜோர்ஜ் நோவாக் ஆகிய இருவரையும் ஸ்பொரோவ்ஸ்கி நன்றாக மதித்தான்.

ஜோர்ஜ் நோவாக், திருமதி லோலா டோலன் (Lola Dalin) உடன் இணைந்து பிரான்சிலிருந்து ஸ்பொரோவ்ஸ்கியை அமெரிக்காவிற்கு கொண்டுவரும் பொறுப்பை எடுத்ததுடன் ஏற்கனவே அவன் பற்றிய ஆழமான சந்தேகங்கள் இருந்தபோதிலும் அவனை நான்காம் அகிலத்தின் உயர்மட்டங்களினுள் புகுத்த முயற்சி எடுத்தனர்.

நோவாக் 35 வருடங்களாக இவ் விடயத்தை ட்ரொட்ஸ்கிச இயக்கத்தினுள் மூடி மறைத்தார். அமெரிக்க நீதிமன்றங்களிலும் செனட் குழு விசாரணைகளிலும் ஸ்பொரோவ்ஸ்கி ஒர் ஜிபியு கையாள் என அம்பலப்படுத்தப்பட்டபோது ஹான்சனும், நோவாக்கும் அவனது குற்றங்களை மூடிமறைக்கவும் அவன் புரட்சிகர இயக்கத்தின் பார்வையில் இருந்து ஒழிந்து கொள்ளவும் சாத்தியமான அனைத்தையும் செய்தனர். அவர்களது நடவடிக்கை, செடோவின் இரத்தத்தில் தனது கைகளை தோய்த்த மனிதனை 35 வருடங்களிற்கும் மேலாக அமைதியான முறையில் வாழவிடுவதை இலக்காகக் கொண்டிருந்தது.

இப்பணி இன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கு விடப்பட்டுள்ளது. நான்காம் அகிலமும் பாதுகாப்பும் என்ற புலனாய்வினூடாக, ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கு எதிரான ஸ்பொரோவ்ஸ்கியின் நடவடிக்கைகளை முழுமையான அளவு அம்பலப்படுத்தும்.

இவ்விடயங்களினுள் இன்னொரு புள்ளி கட்டாயம் தெளிவுபடுத்தப்பட வேண்டும். இப்பிரசுரத்தில் “தந்தையும் மகனும்” என்ற நத்தலியாவின் கட்டுரை உள்ளது. இக் கட்டுரை 1940 மே 24ல் கொயாகானில் ட்ரொட்ஸ்கி இருந்த வீட்டினுள் ஜிபியு கொலைகாரர்கள் தலையிட்ட சம்பவங்களை விபரிக்கும்போது அன்றிரவு கடமையில் நின்ற காவலாளி ரோபர்ட் ஷெல்டன் ஹார்ட் (Robert Sheldon Harte) இற்கான அஞ்சலியையும் உள்ளடக்கியுள்ளது.

மே 24 தாக்குதலின் பின்னர், ஹார்ட் காணாமல் போயுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டதுடன் ஒரு மாதத்தின் பின்னர், அவரது சடலம் சுண்ணாம்புக் குழியினுள் கண்டெடுக்கப்பட்டது.

ட்ரொட்ஸ்கி அந்த நேரத்தில் தனக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இளம் தோழரான ஹார்ட், ஸ்ராலினிஸ்ட்டுக்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற முடிவுக்கு வந்தார். ஆகஸ்ட் 20ல் ஜிபியு ஏஜன்டான ரமோன் மெர்காடர் இன் பனிக்கோடாரி தனது பிடரியை கொத்தும் வரை ட்ரொட்ஸ்கி மே 24 தாக்குதல் பற்றிய விசாரணைகளை அனைத்து முனைகளிலும் நடாத்தினார். ஹான்சனும், நோவாக்கும் மே 24 சம்பவங்களின் விசாரணைகளை மூடிமறைத்ததுடன் கொலை முயற்சி தொடர்பான ஆய்வுகளுக்கு எதையும் செய்யவில்லை. அவர்கள் ஷெல்டன் ஹார்ட் ஐ போற்றிப்புகழ்ந்ததுடன் ட்ரொட்ஸ்கிசத்திற்கான தியாகி என உயர்த்திப்பிடித்தனர்.

37 வருடங்களாக இப்புகழ்ச்சி உயர்த்திப்பிடிக்கப்பட்டது. ஹார்ட் இன் நடத்தை பற்றி ஆழமான சந்தேகங்களும் முக்கியமான அத்தாட்சிகளும் இருந்ததன் மத்தியிலும் 37 வருடங்களாக ஹான்சனும், நோவாக்கும் மிக கவனமாக அவரை போற்றிப்புகழ்ந்தனர்.

அதன் அத்தாட்சிகள் ஸ்ராலினிச கும்பலின் இரு அங்கத்தவர்களின் வாக்கு மூலத்தில் வெளியாகியது. மே 24 இரவன்று ஹார்ட் வாசல் கதவை திறந்து விட்டதுடன் தாக்குதல் கும்பலின் அங்கத்தவர்கள் உள்ளே நுழைய அனுமதித்தார் என்று மெக்சிக்கோ பொலிசுக்கு நெஸ்டர் சான்செஸ் ஹெர்னாண்டஸ் (Nester Sanchez Hernandz) உம் மரியானோ ஹெர்ரெரா வாஸ்சுயே (Mariano Herrera Vaszue) உம் சாட்சியமளித்தனர். பின்பு ஸ்ராலினிஸ்ட்டுக்கள் தமது சொந்த தடையங்களை மூடி மறைப்பதற்காக அவரைக் கொன்றனர். [பார்க்க “காட்டிக் கொடுத்த துப்பாக்கிதாரி” புல்லட்டின் May 10,13- 1977]

ட்ரொட்ஸ்கி பாட்டாளி வர்க்க இளைஞனுக்கு இப்பிரசுரத்தை அர்ப்பணிக்கின்றார். இதனுடன் ரஷ்ய புரட்சியின் 60வது ஆண்டு விழாவும் இணைந்துள்ளதால் இப்பிரசுரம் மறுபதிப்பு செய்யப்படுகிறது. ட்ரொட்ஸ்கியினதும் செடோவினதும் வாழ்க்கைகள் அப்புரட்சியை உலக அளவில் விஸ்தரிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டது. அவர்களது கொலைகள் தொழிலாள வர்க்கத்தினுள் புரட்சிகர மார்க்சிசத்தின் தொடர்ச்சியை அழிக்கும் இலக்கு கொண்டுள்ள எதிர்ப்புரட்சிகர சக்திகளால் நடாத்தி முடிக்கப்பட்டது.

இவ் அனைத்துக் குற்றங்களையும் அதை மூடிமறைத்த அனைவரையும் அம்பலப்படுத்தும் வேலையை இன்று ட்ரொட்ஸ்கிசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரேயொரு சக்தியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே செய்கின்றது.

இன்று நான்காம் அகிலத்தின் அணிகளில் இணையும் புரட்சிகர போராளிகளின் புதிய தலைமுறைக்கு லியோன் ட்ரொட்ஸ்கி, லியோன் செடோவினது வாழ்க்கையும் மரணமும் தீர்க்கமான படிப்பினைகளை வழங்கும். அச்சக்திகளை பயிற்றுவிப்பதற்கான பங்களிப்புச் செய்வதற்காக இப்பிரசுரம் தற்போது மறுபதிப்புச் செய்யப்பட்டுள்ளது.

Frank Martin
December 1, 1977.

லியோன் செடோவ்
மகன், நண்பன், போராளி

லியோன் ட்ரொட்ஸ்கி

லியோன் செடோவின் தாய் என்னருகே உள்ளபோது நான் இவ்வரிகளை எழுதிக்கொண்டிருக்கின்றேன், வெவ்வேறு நாடுகளில் இருந்து அனுதாபம் தெரிவிக்கும் தந்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. ஒவ்வொரு தந்தியும் எங்கள் முன் ஒரே கேள்வியையே எழுப்புகின்றன; “பிரான்சிலும், ஹாலண்ட்டிலும், இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்கா, தென்னாபிரிக்காவிலும், இங்கு மெக்சிக்கோவிலும் உள்ள நமது நண்பர்கள் செடோவ் உயிருடன் இல்லை என்பதை உறுதியான நம்பிக்கையுடன் ஏற்றுக் கொண்டிருப்பது உண்மையா?” ஒவ்வொரு தந்தியும் இப்போது அவரது மரணத்தைப் பற்றியே கதைக்கின்றது. ஆனால் எங்களால் இன்று மட்டும் அதை நம்பமுடியாதுள்ளது. ஏனெனில் அவர் எங்களது மகன் என்பதால் நாம் அவரை உண்மையாகவும், விசுவாசமாகவும் நேசித்த காரணத்தினால் அல்ல, ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக இப் பூமியில் வேறு எவரையும் விட அவர் எங்களது வாழ்க்கையின் பகுதியாக மாறியதுடன், நமது சக சிந்தனையாளனாகவும், நமது கூட்டுழைப்பாளியாகவும், நமது பாதுகாவலனாகவும், நமது ஆலோசகனாகவும், நமது நண்பனாகவும் அதன் அனைத்து வேர்களுடனும் பின்னிப் பிணைந்திருந்தார்.

கடந்த நூற்றாண்டின் இறுதியில் புரட்சியின் பாதையில் நாம் இணைந்த பழைய தலைமுறையின் அணி, அனைத்தும், எதுவித விதிவிலக்கும் இல்லாமல், அரங்கிலிருந்து துடைத்துக் கட்டப்பட்டுவிட்டது. ஜாரிசத்தின் கடும் சிறைக் கூடங்களும், குரூர நாடுகடத்தல்களும், வருத்தம் நிறைந்த வெளிநாட்டு வாழ்க்கையும், உள்நாட்டு யுத்தமும், நோய்களும் நிறைவேற்றத் தவறியவை, அண்மைய வருடங்களில் புரட்சியின் அச்சுறுத்தலான ஸ்ராலினால் பூர்த்தி செய்யப்படுகின்றன. பழைய தலைமுறையின் அழிப்பைத் தொடர்ந்து, அடுத்த சிறந்த பிரிவு, அதாவது 1917 அக்டோபர் புரட்சியில் விழித்தெழுந்து, புரட்சிகர முன்னணியில் 24 இராணுவங்களிடம் பயிற்சி பெற்ற புதிய தலைமுறையும், பழையதைப் போலவே அழிக்கப்படுகின்றது. லியோனின் சமகாலத்தை சேர்ந்த அனைவரும் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டனர். ஓர் அதிசயத்தினால் மட்டுமே அவர் உயிர் தப்பினார், இக் காரணத்தினால் அவர் நம்முடைய வெளிநாட்டு வாழ்க்கையிலும் பின்பு துருக்கியிலும் நம்முடன் இணைந்திருந்தார். நமது இறுதி வெளிநாட்டு வாழ்க்கையின் வருடங்களில் புதிய பல நண்பர்களை நாம் ஏற்படுத்திக் கொண்டோம், அவர்களில் சிலர் மிக நெருக்கமாக நமது வாழ்க்கையினுள் நுழைந்தவுடன், நமது குடும்ப அங்கத்தவர்களாகவும் மாறினர். ஆனால் கடந்த வருடங்களில் நாம் வயது முதிர்ந்த நிலையை அடைந்திருந்தபோதே, அவர்கள் அனைவரையும் முதல்தடவையாக நாம் சந்தித்தோம். லியோன் மட்டுமே நாம் இளமையாக இருக்கும் போது நம்மை தெரிந்திருந்த ஒரேயொருவராவார், அவர் தனது சுய விழிப்புணர்வின் சிறப்பான முதல் தருணத்தில் இருந்து, நமது வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டார். அவர் வருடங்களில் இளமையாக இருந்தாலும் பார்ப்பதற்கு நமது சக காலத்தவர்களைப் போலவே இன்னும் இருக்கின்றார். நம்முடன் இணைந்து அவர் நமது இரண்டாவது வெளிநாட்டு வாழ்க்கைக்கு வியன்னா, சுரிச், பாரிஸ், பாசிலோனா, நியூயோர்க், ஆம்ஹெர்ஸ்ட் (கனடாவின் சித்திரவதை முகாம்), இறுதியாக பெட்ரோகிராட் ஊடாக வந்தார்.

ஆனால் ஓர் சிறுவனாக இருந்தபோதே —அவருக்கு 12 வயது நடந்துகொண்டிருக்கும்போது— தனது சொந்த முறையில், பெப்பிரவரி புரட்சியில் இருந்து அக்டோபருக்கு நனவுபூர்வமான உருமாற்றம் அடைந்திருந்தார். அவருடைய சிறு வயது வாழ்க்கை உயர்ந்த அழுத்தங்களினூடாக கடந்து சென்றது. கம்யூனிச இளைஞர் அணியில் மிக விரைவாக இணைவதற்காக அவர் தனது வயதுக்கு மேலதிகமாக ஒரு வருடத்தை சேர்த்துக் கொண்டதுடன், ஓர் எழுச்சி பெற்ற இளைஞனாகவும் அந்நேரத்தில் இருந்தார். அவர் இளம் பேக்கரி தொழிலாளர்கள் மத்தியில் பிரச்சாரத்தைக் கொண்டு நடத்தியபோது, அவருக்கு புதிதாக வேகவைத்த வெள்ளைப் பாண் ஒன்று கிடைத்தால் அதை மிகுந்த சந்தோஷத்துடன், தனது கிழிந்துபோன மேலங்கியின் (Jacket) கைகளுக்கு வெளியே நீட்டிக் கொண்டிருப்பதை தனது கைகளினால் மறைத்து வீட்டுக்கு கொண்டுவருவார்.

பட்டினியும் குளிரும் நிறைந்த கொடிய வருடங்கள் அவை. லியோன் தனது சொந்த விருப்பத்தின்படி கிரெம்ளினை விட்டு விலகி, ஏனையோரிடம் இருந்து வேறுபட்டிருப்பதாக காட்டாமல் இருப்பதற்காக பாட்டாளி வர்க்க இளம் மாணவர் தங்கும் அறையில் குடியேறினார். அவர் அதிகாரத்துவத்தின் சலுகைகளை பாவிப்பதை நிராகரித்ததனால், எங்களோடு ஒருபோதும் காரில் பயணம் செய்தது கிடையாது. ஆனால் அவர் அனைத்து “சிகப்பு சனிக்கிழமை” (Red Saturdays) நிகழ்வுகளிலும், வேறு “தொழிலாளர்கள் அணிதிரள்வுகளிலும்” மிக ஊக்கத்துடன் பங்குபற்றியதுடன், மாஸ்கோ தெருக்களிலுள்ள பனிகளை அகற்றவும், மக்கள் மத்தியில் எழுத்தறிவின்மையை “அகற்றவும்”, வாடகை கார்களில் விறகுகளையும், பாணையும் ஏற்றவும் முன்னின்றதோடு பின், ஓர் பல்கலைகள் தெரிந்த மாணவனாய் இயந்திரங்களையும் பழுது பார்த்தார். அவர் ஒரேயொரு காரணத்தினால் மட்டுமே யுத்த முனைக்குச் செல்லவில்லை, அவர் தனது வயதுக்கு 2 அல்லது மேலதிகமாக 3 வருடங்களை சேர்த்துக் கொண்ட போதிலும் அவருக்கு அது உதவி செய்யவில்லை; உள்நாட்டு யுத்தம் முடிந்தபோது அவருக்கு 15 வயது கூட ஆகியிருக்கவில்லை. எதுவாயினும் என்னுடன் அவர் பல தடவை யுத்த முனையில் சேர்ந்திருந்ததுடன், இக் கொடூரமான போராட்டம் ஏன் நடத்தப்படுகின்றது என்பதை தெளிவாய் புரிந்து கொண்டதுடன், அதன் பலமான வெளிப்பாடுகளையும் கிரகித்துக் கொண்டார்.

பாரிசில், லியோன் செடோவினது வாழ்க்கை “மிக மோசமான நிலைமையின்” கீழ் இருந்ததென சமீபத்திய பத்திரிகை அறிக்கைகள் கூறுகின்றன –ஓர் தகமைமிக்க தொழிலாளியை விட, சொல்வதற்கு என்னை அனுமதியுங்கள், மிக மிக மோசமானதாக இருந்தது. மாஸ்கோவில் அவரது தந்தையும், தாயும் உயர் பதவிகளை வகித்த வருடங்களில் கூட, அவர் சிறப்பாக அல்ல, பாரிசில் கடந்த வருடங்களில் வாழ்ந்ததை விட மிக மோசமான நிலையின் கீழ் வாழ்ந்தார். இவை சில வேளைகளில் இளைஞர் மத்தியில் அதிகாரத்துவத்தின் ஆட்சியா? எது விதத்திலுமல்ல. அப்படியிருந்தாலும் அவர் ஓர் விதிவிலக்கானவர். அவர் ஓர் குழந்தையாக இருந்து, சிறுவனாகவும், இளைஞனாகவும் வளர்ச்சியடைந்து கொண்டிருந்தபோதே, கடமை உணர்வும், எழுச்சியும் ஆரம்பங்களிலேயே அவரைப் பற்றிக் கொண்டன.

1923ல் லியோன் இடது எதிர்ப்பாளர்களின் வேலைகளில் கண்மூடித்தனமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ஆனால் இது பெற்றோர்களின் செல்வாக்கினால் ஏற்பட்டதொன்றாக பார்ப்பது முழுமையாகவே தவறானதொன்றாகும். எல்லாவற்றுக்கும் மேலாக, அவர் நமது விருப்பத்திற்கு எதிராய் கிரெம்ளினின் வசதி நிறைந்த பகுதிகளை விட்டு வெளியேறிய பின் பசியும், குளிரும் நிறைந்த இருண்ட அறைகளில் தங்கியபோதும் கூட, நாம் அவரது செயலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இதே சுபாவத்தினால் தான் அவரது அரசியல் அடித்தளமும் தீர்மானிக்கப்பட்டது. அது கிரெம்ளினின் வசதி படைத்த மூடிய மோட்டார் கார்களை பார்ப்பதை விட, சன நெரிசல் நிறைந்த தெருக்களில் உள்ள வாகனங்களை தெரிவு செய்யத் தூண்டியது. அவருக்கு இயற்கையாகவே அமைந்த விசேட குணங்களின் அரசியல் வெளிப்பாடு இடது எதிர்ப்பாளர்களின் பிரிவில் பிரதிபலித்தது. லியோன், “ட்ரொட்ஸ்கிசத்தின்” இழிந்த தன்மையை பற்றி கதைத்த அதிகாரத்துவ தந்தையர்களை கொண்ட தனது மாணவ நண்பர்களுடன், எவ்வித சமரசங்களுக்கும் இடமில்லாமல் தனது உறவுகளை முறித்துக் கொண்டார். அவர் தனது 17 வயதில் ஓர் முழுமையான நனவுபூர்வ புரட்சியாளனின் வாழ்க்கையை ஆரம்பித்தார். அவர், தலைமறைவான வேலையையும், சட்டவிரோத கூட்டங்களையும், இடது எதிர்ப்பாளர்களின் ஆவணங்களை விநியோகிக்கும் கலையையும் மிக விரைவாய் கிரகித்துக் கொண்டார். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவு (Komsomol) இடது எதிர்ப்பு தலைவர்களின் தனது சொந்த காரியாளர்களை விரைவாக வளர்த்தெடுத்துக்கொண்டது.

லியோன் கணிதத்தில் ஒரு சிறப்புத் தன்மையை கொண்டிருந்தார். அவர் இலக்கண பாடசாலைகளினூடாக செல்லாத பல தொழிலாள-மாணவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் ஒருபோதும் களைப்புற்றது கிடையாது. இவ்வேலைகளில் அவர் தனது சக்தியை முழுமையாக அணிதிரட்டி ஈடுபடுத்தினார்; மாணவர்களை ஊக்குவிப்பது, தலைமை தாங்குவது, சோம்பேறிகளை கேலி செய்வது - இவ் வேலைகளை அவ் இளம் ஆசிரியர் தனது வகுப்பிற்கான சேவையாக பார்த்தார். ஆனால் அவர் தனது வேலை நாளின் ஒரு பகுதியை மட்டுமே இதற்கு எடுத்துக் கொண்டார். பெரும்பான்மையான அவரது நேரமும், பலமும், சிந்தனையும், புரட்சியின் முன்னேற்றத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தன.

1927ன் பனிக்காலத்தில் இடது எதிர்ப்பாளர்களின் மீதான பொலீஸ் படுகொலை ஆரம்பிக்கப்பட்டபோது, லியோன் தனது இருபத்திரண்டாவது வருடத்தை கடந்திருந்தார். அந்நேரத்தில் அவரிற்கு ஓர் குழந்தை பிறந்திருந்ததுடன் மிக பெருமையோடு தனது மகனை எமக்கு காண்பிப்பதற்காக கிரெம்ளின் கொண்டு வந்தார். ஓர் சிறிய தயக்கமுமில்லாமல், எப்படியென்றாலும், மத்திய ஆசியாவில் எமது தலைவிதியை பகிர்ந்து கொள்வதற்காக, லியோன் தனது பாடசாலையையும், தனது இளங்குடும்பத்தையும் விட்டுப் பிரிந்து செல்ல தீர்மானித்தார். இதில் அவர் எமது மகனாக மட்டுமல்ல, ஆனால் எல்லாவற்றிற்கு மேலாக எமது சக சிந்தனையாளனாகவும் செயலாற்றினார். இதன்போது எவ்விலை கொடுத்தாவது மாஸ்கோவுடனான நமது தொடர்புகளை உத்தரவாதம் செய்வது மிக முக்கியமான தொன்றாக இருந்தது. அல்மா அட்டா (Alma Ata) வில் அவ்வருடங்களில் அவரது வேலை, உண்மையில் அபாயகரமான தொன்றாக இருந்தது. நாம் அவரை நமது வெளிநாட்டு அலுவல்களுக்கான மந்திரி, பொலீஸ் படைக்கான மந்திரி, தொலை தொடர்புகளுக்கான மந்திரி என்றும் அழைத்தோம். இவ் அனைத்து வேலைகளையும் நிறைவேற்ற அவர் சட்ட விரோதமான முறைகளிலேயே தங்கியிருக்க வேண்டியிருந்தது. அந்நேரத்தில் புகையிரதப் பாதைகள் சீர்குலைக்கப்பட்டிருந்ததால் மாஸ்கோ எதிர்பாளர்களுடனான நமது தொடர்புகளை உறுதி செய்வதற்கு தோழர் X, ஓர் குதிரை வண்டியையும், மூன்று குதிரைகளையும் ஒழுங்கு செய்ததுடன் அல்மா அட்டா நகரத்திற்கும் Frunze (Pishpek) நகரத்திற்கும் இடையே ஓர் சுயாதீனமான வண்டிக்காரனாக தனது பெறுமதியான வேலையை நடாத்தினார். ஒவ்வொரு இரு கிழமைகளிலும் இரகசிய மாஸ்கோ கடிதங்களை நம்மிடம் கொண்டு வருவதும், மீண்டும் நமது கடிதங்களையும், செய்திகளையும், Frunzeல் உள்ள செய்தியாளரிடம் ஒப்படைப்பதும் செடோவினுடைய பணியாக இருந்தது. சில வேளைகளில் மாஸ்கோவிலிருந்து விசேட செய்தியாளர்களும் வந்து சேர்வார்கள். அவர்களை சந்திப்பது ஓர் இலகுவான விடயமல்ல. நாம், ஜிபியு வின் அனைத்து பிரிவுகளினாலும், அவர்களது டசின் கணக்கான ஏஜண்டுகளினாலும் அனைத்துப் பக்கத்தாலும் சூழப்பட்ட ஓர் வீட்டினுள் முடங்கி கிடந்தோம். வெளித் தொடர்புகள் அனைத்தும் லியோனிடம் கையளிக்கப்பட்டிருந்தன. அவர் நள்ளிரவில் மழைபெய்கையில் அல்லது கடுமையான பனிகொட்டும் போது வீட்டிலிருந்து வெளியேறுவதுடன் உளவாளிகளின் கண்களில் இருந்தும் தப்பித்துக்கொள்வார். பகல் வேளைகளிலும் உளவாளிகளின் பார்வையில் படாமல் நமது செய்தியாளனை, வாசக சாலைகளிலும், அல்லது பொதுசன குளியலிடங்களிலும் அல்லது, நகரங்களின் ஒதுக்குப்புறங்களிலுள்ள களை பிடுங்குமிடங்களிலும் அல்லது, குதிரைகளும், கழுதைகளும், சரக்கு சாமன்களும் விற்பனை செய்யும் Kirghiz சந்தைக் கூட்டத்திலும் சந்திப்பார். ஒவ்வொரு முறையும் கண்களில் வெற்றி பிரகாசத்துடன், உணர்ச்சி ததும்பிய சந்தோசத்துடனும் வீடு திரும்பும்போது போரின் மூலம் கைப்பற்றிய விலை உயர்ந்த ஆவணங்களை தனது சட்டையினுள் மறைத்துக் கொண்டு வருவார். ஒரு வருட காலப்பகுதியில் அவர் தனது அனைத்து எதிரிகளின் கண்ணில் படுவதை தவிர்த்துக் கொண்டார். அதைவிட மேலானதாக, நேற்றைய ‘தோழர்களான’ இவ் எதிரிகளுடன் மிக ‘சரியானதும்’ பெரும்பாலும் ‘நம்பகமானதுமான’ உறவுகளை பேணிக் கொண்டதுடன், சாமர்த்தியமான கட்டுப்பாட்டுடன் வெளித்தொல்லைகளில் இருந்தும் தடைகளிலிருந்து நம்மை கவனமாக பாதுகாத்தார்.

ஏப்ரலுக்கும் அக்டோபருக்கும் இடையில் நாம், ஏறத்தாழ 1000 அரசியல் கடிதங்களையும் ஆவணங்களையும் 700 தந்திகளையும் பெற்றுக் கொண்டோம். இதே காலப் பகுதியில் நாம் 800 க்கும் குறையாத அரசியல் கடிதங்களையும், 550 தந்திகளையும், “கம்யூனிச அகிலத்தின் வரைவு வேலைத்திட்டத்தின் மீது விமர்சனம்” போன்ற மேலதிக கட்டுரைகளையும் வேறும் சிலவற்றையும் அனுப்பி வைத்தோம். எனது மகன் இல்லாவிடில் இவ்வேலைகளில் அரைவாசியைக் கூட என்னால் செய்து முடித்திருக்க முடியாது.

அந்நேரத்தில் இடது எதிர்ப்பாளர்களின் சித்தாந்த வாழ்க்கை, இரும்பை உருக்கும் உலைபோல் கொதித்துக் கொண்டிருந்தது. அது, கம்யூனிச அகிலத்தின் 6வது காங்கிரஸ் நடந்த வருடமாகும். மாஸ்கோவிலிருந்து வந்த பொதிகளில், தெரிந்தும் தெரிந்திராத தோழர்களிடமிருந்து ஆய்வுகளும், கட்டுரைகளும் கடிதங்களின் கட்டுக்களும் வந்தடைந்தன. ஜிபியு வின் வேலையில் ஓர் கூர்மையான மாற்றம் ஏற்படுவதற்கு முன்னமே முதல் சில மாதங்களில், புலம்பெயர்வின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து உத்தியோகபூர்வமான தபால் சேவையினூடாக நாம் நிறைந்த பல கடிதங்களை பெற்றுக் கொண்டோம். இவ்விடயங்களை பிரித்துப் பார்த்து கவனமாய் ஆராய்வது மிக அவசியமான தொன்றாக இருந்தது. இவ் வேலைகளின் போதுதான், இச்சிறு இளைஞன் எப்படி நம்பமுடியாத அளவு வளர்ந்திருந்ததையும், எப்படி நமது தொடர்புகளை —என்னை விட அவருக்கு நிறைந்த எதிர்ப்பாளர்களை தெரிந்திருந்தது–— எவ்வளவு மிக சிறப்பாக கணிப்பிட தெரிந்திருந்தார் என்பதையும், அவரது புரட்சிகர சுபாவத்துடன் ஆதாரமற்றதிலிருந்து நிஜத்தையும், பொய் தோற்றத்திலிருந்து உண்மையையும் அடையாளம் காண எப்படி தன்னை அபிவிருத்தி செய்து கொண்டிருந்தார் என்பதை பார்ப்பதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. எமது கலந்துரையாடலின் போது, நமது மகனை நன்கு தெரிந்த அவரது தாயின் கண்கள் பெருமையுடன் பிரகாசிக்கும்.

எதுவாயினும், இந்நெருக்கமான கூட்டுழைப்பு நமக்கிடையே வாக்கு வாதத்தையும் அல்லது அடிக்கடி கூர்மையான சச்சரவுகளையும் உருவாக்கவில்லை என்பதை அர்த்தப்படுத்தாது. அந்நேரத்திலும், பின் வெளிநாட்டு வாழ்க்கையிலும், இதை தெளிவான முறையில் கட்டாயம் சொல்ல வேண்டும் —லியோனுடனான எனது உறவுகள் எவ்விதத்திலும் ஓர் அமைதியான தன்மையை கொண்டிருக்கவில்லை. அவரது கணிப்பின் தன்மை, இடது எதிர்ப்பாளர்களின் “மூத்த மனிதர்கள்” சிலருக்கு அநேகமாக மரியாதைக்குறைவாக இருக்கும், நான் இதற்கு நேர்எதிராக சமமான திருத்தங்களை மட்டுமல்ல, ஆனால் நடைமுறை பிரச்சனையில் எனது சரியான அணுகுமுறையை மிக கடுமையாக அவருக்கு சுட்டிக்காட்டுவேன். இந் நடத்தைகள் பாரிய அளவில் வேலைசெய்வதற்கும் அதைவிட மேலாக மிக கஷ்டமான நேரங்களின் மத்தியில் எனக்கு நெருங்கியவர்களுடன் தனிப்பட்ட உறவுகளை பேணிக் கொள்ளவும் இன்றியமையாததாகவிருந்தது. எனது மகன் ஏனைய எல்லா இளைஞர்களையும் விட எனக்கு மிக நெருங்கியவராக இருந்ததுடன், எல்லோரையும் விட வழமைபோல் மிக கஷ்டமான காலத்தையே முகம்கொடுத்தார். ஓர் சக்திவாய்ந்த கண்ணிற்கு நமது உறவுகள் அளவு மீறிய கண்டிப்புடனும் தொடர்பில்லாமலும் இருப்பதாக பார்ப்பதற்கிருக்கும். ஆனால் அடியின் மேற்பாகத்தில் செந்தணலாக பிரகாசிக்கும் ஆழமான பரஸ்பர கூட்டு இரத்தப்பிணைப்பை விட பாரிய அளவிடமுடியாத தொன்றை அடித்தளமாக கொண்டிருந்ததுடன் —அரசியல் பார்வைகளில் மதிப்பீடுகளில் தோழமையும், வெறுப்பும், சந்தோஷமும், வருத்தமும் நிறைந்து சேர்ந்த அனுபவங்களுடன், பொதுவான பாரிய நம்பிக்கையையும் நாம் கொண்டிருந்தோம். பீறிட்டுவரும் இப்பரஸ்பர கூட்டு, தினசரி வேலைகளில் நேரத்திற்கு நேரம் உருவாகும் சிறு சிறு உராய்வுகளுக்கு முந்நூறு நாநூறு மடங்கு வெகுமதி அளிப்பதைப் போன்றிருக்கும். உராய்வுளை உருவாக்குவதுடன், ஓர் முந்நூறு நாநூறு ஆட்டுக் கூட்டங்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்குவதை போன்றிருக்கும்.

மாஸ்கோவிலிருந்து 4000 கிலோமீட்டருக்கு அப்பாலும், அண்மைய புகையிரத நிலையத்திலிருந்து 250 கிலோமீட்டர் தள்ளியும், நாம் கழித்த கடுமையானதும், ஒருபோதும் மறக்க முடியாததுமான வருடங்கள் லியோன் என்ற பெயரின் கீழ் அல்லது லெவிக் அல்லது நாம் அழைக்கும் லெவுஸ்யான்கா என்ற பெயரின் கீழ் எமது ஞாபகத்தில் இருக்கும்.

1929 ஜனவரியில், அரசியல் குழு “சோவியத் யூனியனின் எல்லைகளுக்கப்பால்” என்னை நாடு கடத்த தீர்மானித்தது – பின் அது துருக்கிப் பக்கம் திருப்பப்பட்டது. குடும்ப அங்கத்தவர்கள் உரிமையோடு என்னுடன் இணைந்து கொண்டனர். மீண்டும், எதுவித தயக்கமுமில்லாமல் லியோன் தான் பிரியமாக நேசித்த தனது மனைவியையும் குழந்தையையும் என்றென்றைக்குமாய் விட்டுப் பிரிந்து, நம்முடைய வெளிநாட்டு வாழ்க்கையில் இணைய தீர்மானித்தார்.

ஓர் புதிய அத்தியாயம், பெரும்பாலும் வெள்ளையாகவுள்ள அதன் முதற் பக்கங்கள், நமது வாழ்க்கையில் திறக்கப்பட்டது. மீண்டும் ஒருமுறை நமது மகன் எங்களின் அனைத்து விடயங்களாகவும் மாறிவிட்டார்; ஆனால் ஓர் நிகரற்ற பரந்த அளவில் நமக்கும் வெளி உலகிற்குமிடையேயான உறவுகளாகவும், நமது பாதுகாவலனாகவும், கூட்டுழைப்பாளியாகவும், அல்மா அட்டாவில் காரியதரிசியாகவும் இருந்தார். ரஷ்ய மொழியை விட, அவருக்கு குழந்தைப் பருவத்திலிருந்தே பரிச்சயமான வெளிநாட்டு மொழிகளை, குழப்பமான புரட்சிகர வருடங்களில் பெரும்பாலும் முழுமையாக மறந்து விட்டார். இதனால், மீண்டும் ஓர் முறை முழுமையாக கற்கவேண்டியது அவசியமாகியது. நமது இணைந்த தத்துவார்த்த வேலைகள் ஆரம்பமானது. எனது ஆவணங்களும், நூலகமும் முழுமையாக லியோனின் கைகளில் இருந்தது. மார்க்ஸ், ஏங்கெல்ஸ் லெனினது எழுத்துக்கள் தொடர்பான முழுமையான அறிவை அவர் கொண்டிருந்தமையால், தேர்மிடோரியன் பொய்மைப்படுத்தல் வரலாற்றையும், புரட்சியினதும், கட்சியினதும் வரலாறு தொடர்பான எனது புத்தகங்களையும், குறிப்புகளையும் மிக தெளிவாக புரிந்து கொண்டார். அல்மா அட்டா பொது நூலகத்தின் பேரழிவினுள் அவர் சோவியத் ஆட்சி தொடர்பான பிராவ்தாவின் அறிக்கைகளை படித்ததுடன், மிக பெறுமதியான குறிப்புகளையும், அவசியமான தகவல்களையும் ஒன்று திரட்டி வைத்திருந்தார். முதல் துருக்கியிலும் பின் பேர்லினிலும் இறுதியாக பாரிசிலும் உள்ள நூலகங்களிலும், ஆவணங்களிலும் லியோன் நடாத்திய தொடர்ந்த ஆய்வுகளின் சுருக்கமான குறிப்புகள் இல்லாததுவிடின், கடந்த பத்து வருடங்களில் நான் எந்தவொரு வேலை செய்வதும் சாத்தியமாயிருந்திருக்காது. இது “ரஷ்ய புரட்சியின் வரலாற்றுக்கு” விசேடமாக பொருந்தக்கூடியது. பரந்த இப்புள்ளியில், அவருடைய கூட்டுழைப்பு எவ்விதத்திலும் ஓர் “இயந்திரரீதியான” தன்மையைக் கொண்டதல்ல. அவர் சுயாதீனமாக குறிப்புகளையும், தன்மைப்படுத்தலையும், தரவுகளையும் தெரிவு செய்வதுடன், நான் எடுத்துக் காட்டும் குறைகளிலும் அதேபோல் முடிவுகளிலும் அடிக்கடி தன்னை அடித்தளமாக கொண்டிருப்பார். “காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி” என்ற புத்தகத்தில், எனது மகனின் பல கடித வசனங்களும், என் கைக்கு எட்டாத சோவியத் பத்திரிகைகளிலிருந்து அவர் எடுத்த குறிப்புகளின் அடித்தளத்தில் எழுதிய பல பக்கங்கள் உள்ளடங்கியுள்ளன. அவர், லெனினின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்கு மேலும் பல தகவல்களை எனக்கு அனுப்பி வைத்தார். எமது சித்தாந்த ரீதியிலான தோழமை, நமது இரத்தத்தினுள்ளும், சதையினுள்ளும் சிறப்பாய் ஊடுருவியிருந்த ஒரு காரணத்தால் மட்டுமே இதுபோன்ற கூட்டுழைப்பை சாத்தியமாக்கியது. 1928க்கு பின் பெரும்பாலும் நான் எழுதிய அனைத்து புத்தகங்களிலும் எனது பெயருக்கு அடுத்ததாக உள்ள இடத்தில் எனது மகனின் பெயர் உரிமையோடு இடம் பெற வேணடும்.

மாஸ்கோவில், லியோன் தனது பொறியியல் கல்வியை பூர்த்தி செய்வதற்கு மேலும் ஒன்றரை வருடங்கள் பற்றாக்குறையாக இருந்தன. அவர் கைவிட்ட விஞ்ஞானத்திற்கு திரும்புமாறு அவரது தாயும் நானும் எடுத்துக் காட்டினோம். பிரங்கிப்போ (Prinkipo) தீவில் எனது மகனின் நெருங்கிய கூட்டுழைப்புடன் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த இளம் தொழிலாளர்களின் குழுவொன்று வெற்றிகரமாக நிறுவப்பட்டது. ஜேர்மனியிலுள்ள சர்வதேச இடது எதிர்ப்பாளர்களின் பிரிவுக்கு விலை மதிப்பற்ற சேவைகளை வழங்க வேண்டுமென்ற பெறுமதியான விவாதத்தின் காரணமாய் மட்டுமே லியோன் நம்மிடமிருந்து விலகிப்போக தீர்மானித்தார். பேர்லினில் அவர் தனது விஞ்ஞான கல்விகளை புதுப்பித்தார். (அவர் அதை ஆரம்பத்திலிருந்தே தொடங்க வேண்டியிருந்தது), அதே வேளையில் புரட்சிகர நடவடிக்கையினுள்ளும் கண்மூடித்தனமாய் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சர்வதேச செயலகத்தினுள் அவர் மிக விரைவாக ரஷ்ய பிரிவின் பிரதிநிதியாக மாறினார். அக்காலப்பகுதியில் அவர் தனது தாய்க்கும் எனக்கும் எழுதிய கடிதங்கள், எவ்வளவு விரைவாக அவர் ஜேர்மனியிலும்; மேற்கு ஐரோப்பாவிலுமுள்ள புதிய அரசியல் சூழ்நிலையினுள் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் என்பதையும், எவ்வளவு சிறப்பாக மக்களையும், நமது இயக்கத்தின் ஆரம்ப காலப்பகுதியில் உருவான எண்ணற்ற சச்சரவுகளையும், வேறுபாடுகளையும் அளவிட தெரிந்திருந்தார் என்பதையும் எடுத்துக்காட்டியுது. (எடுத்துக்காட்டின) அவரது புரட்சிகர சுபாவம், நீண்டகால முக்கிய அனுபவங்களால் செழுமைப்படுத்தப்பட்டிருந்தது. இது அவருக்கு எல்லாப் பிரச்சனைகளிலும் சரியான பாதையை சுயாதீனமாக கண்டறியும் சக்தியை கொடுத்தது. அவரிடமிருந்து வரும் கடிதங்களை உடனடியாக உடைக்கும்போது, அதில் நான் அவரது கவனத்திற்கு சிபார்சு செய்த அதே கருத்துக்களையும், முடிவுகளையும் நாம் கண்டுபிடிக்கும்போது எத்தனை தடவை நாம் மகிழ்ச்சியடைந்தோம். எவ்வளவு ஆழமாகவும் மிகவும் மகிழ்ச்சியாகவும் அவர் எமது கருத்துக்களுடன் ஒத்திருந்தார்! லியோனின் கடிதங்களின் திரட்டு, எதுவித சந்தேகமும் இல்லாமல் அவை நான்காம் அகிலத்தின் ஆரம்ப உள் வரலாற்றை படிப்பதற்கு மிக பெறுமதியானதொரு பங்களிப்பை வழங்கும்.

ஆனால் ரஷ்ய பிரச்சனை தொடர்ந்து அவரது கவனத்தின் மையத்தை ஈர்த்துக் கொண்டிருந்தது. பிரங்கிப்போவில் இருந்தபோது ரஷ்ய எதிர்ப்பாளர்களின் “புல்லட்டின்” (Bulletin)பத்திரிகையின் ஆரம்பத்தில் இருந்தே (1928ன் நடுப்பகுதியில்), அதன் முழுமையான ஆசிரியராக இருந்தார். பேர்லினை வந்தடைந்தபோது (1931ன் ஆரம்பத்தில்) இவ் வேலைக்கான முழுப் பொறுப்பையும் எடுத்துக் கொண்டதுடன், புல்லட்டினும் உடனடியாக பாரிசில் இருந்து மாற்றப்பட்டது. லியோனிடம் இருந்து எங்களுக்கு கிடைத்த கடைசிக் கடிதம், அவர் இறப்பதற்கு 12 நாட்களின் முன்பாக 1938 பெப்பிரவரி 4ம் திகதி எழுதப்பட்டது. அது பின்வரும் சொற்களுடன் ஆரம்பிக்கிறது. “புல்லட்டின் நாளை காலையிலேயே அச்சகத்தில் இருந்து வெளிவரும் என்பதால், நான் உங்களுக்கு புல்லட்டினின் திருத்தம்பார்க்கப்பட்ட பக்கங்களை அடுத்த கப்பலில் அனுப்பி வைக்க சிறிது நேரமுள்ளது”. ஒவ்வொரு பிரதியின் வெளியீடும் அவரது வாழ்க்கையில் ஓர் சிறிய சம்பவம், இச் சிறிய சம்பவம் பாரிய உழைப்பைக் கோரியது; பிரதியை தயார் செய்வது, மூலக்கருத்தை அபிவிருத்தி செய்வது, கட்டுரைகள் எழுதுவது, கவனம் மிக்க பிழை திருத்தம், நண்பர்களுடனும் கூட்டுழைப்பாளிகளுடனும் உடனடியான கடிதத் தொடர்புகளை ஏற்படுத்துவது, அத்தோடு நிதி சேகரிப்பையும் விட்டுவிடவில்லை, ஆனால் ஒவ்வொரு “வெற்றிகரமான” பிரதியையும் எண்ணி அவர் எவ்வளவு பெருமைப்பட்டார்!

வெளிநாட்டு வாழ்க்கையின் ஆரம்ப வருடங்களில் அவர் சோவியத் யூனியனில் உள்ள எதிர்ப்பாளர்களுடன் பரந்த தொடர்பு வேலைகளில் தன்னை ஈடுபடுத்தியிருந்தார். ஆனால் 1932ன் போது எமது அனைத்து முக்கிய தொடர்புகளையும் ஜிபியு (GPU) அழித்துவிட்டது. இதனால் வேறு வழிகளினூடாக புதிய தகவல்களைத் திரட்டுவது அவசியமாகியது. ரஷ்யாவுடன் வேறு உறவுகளை ஏற்படுத்துவது அபாயமாக அமையும் என்பதால் அதைத் தவிர்த்துக் கொள்ள, நாடு திரும்பும் உல்லாசப் பயணிகளை தேடிக்கண்டுபிடிப்பதுடன் எல்லைக்கப்பால் உள்ள சோவியத் மாணவர்களுடன் அல்லது வெளிநாடுகளில் உள்ள அவர்களது பிரதிநிதிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதில் லியோன் எப்போதும் முயற்சி செய்தார். ஜிபியு உளவாளிகள் லியோனை வேட்டையாட அவரது அடிச்சுவடுகளை பின்பற்றி செல்வதால், பேர்லினிலும் பின்பு பாரிஸ் தெருக்களினூடாக மணித்தியாலக் கணக்காக செல்வதனூடாக தன்னையும், தனது தகவல்காரரையும் அவர்களின் தேடுதல் வேட்டையில் இருந்து தவிர்த்துக் கொள்வார். இவ் அனைத்து வருடங்களிலும், அவரது கவலையீனத்தாலோ, அல்லது விவேகமற்ற, முன்யோசனையில்லாது அவர் நடந்து கொண்டதன் விளைவாய் எவராவது துன்பப்பட நேர்ந்தது என்றோ ஒரு சம்பவமும் கிடையாது.

ஜிபியு வின் அறிக்கைகளில் “சினோக்” அல்லது சின்ன மகன் என்ற புனைபெயரின் கீழ் அவர் குறிக்கப்பட்டிருந்தார். காலம்சென்ற இக்னாஸ் றைஸ் இன் தகவலின்படி லுபியன்கா (கேஜிபி தலைமையகம்) வில் அவர்கள் பல சந்தர்ப்பங்களில் பின்வருமாறு கூறியிருந்தார்கள்; “சின்ன மகன் தனது வேலையை புத்திசாலித்தனமாக செய்கிறான், அவனை இழந்திருப்பது என்பது மூத்த மனிதனுக்கு ஒரு சுலபமான வேலையல்ல”. முழுமையான உண்மையிது. அவரை இழந்து இருப்பது சுலபமான விடயமல்ல. அவர் இல்லாவிடின் எல்லாமே கஷ்டமானதாக இருந்திருக்கும். இக் காரணத்தினால் ஜிபியு வின் ஏஜன்டுகள், இடது எதிர்ப்பாளர் இயக்கத்தினுள் விடாமுயற்சியுடன் புகுந்து கொண்டதுடன், லியோனை சுற்றி கடுமையான மேற்பார்வை செய்யும் சதித்திட்டங்களின் தடித்த வலைப்பின்னலை உருவாக்கிக் கொண்டனர். மாஸ்கோ வழக்குகளில் அவரது பெயர் எனக்கு அடுத்ததாக மாற்றமுடியாத இடத்தைப் பிடித்துக் கொண்டது. மாஸ்கோ என்ன விலைகொடுத்தாவது அவரை வீழ்த்தும் சந்தர்ப்பத்தை பார்த்துக் கொண்டிருந்தது.

ஹிட்லர் ஆட்சியை கைப்பற்றியதன் பின், “ரஷ்ய எதிர்ப்பாளர்களின் புல்லட்டின்” பத்திரிகை உடனடியாக தடைசெய்யப்பட்டது. லியோன், ஜேர்மனியில் சில கிழமைகள் தங்கியிருந்ததுடன், நாஜிகளின் இரகசிய பொலிஸ் (GESTAPO) நடாத்தும் வேட்டையின் மத்தியிலும், சட்டவிரோதமான வேலைகளை கொண்டு நடாத்தினார். அவரது தாயும் நானும் எச்சரிக்கை மணியை அடித்தோம். அவரை ஜேர்மனியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு குறிப்பிட்டோம். இறுதியாக, லியோன் 1933 இலையுதிர்காலத்தில், தான் படித்ததும், நேசித்ததுமான நாட்டை விட்டு வெளியேறத் தீர்மானித்ததுடன் பாரிசுக்கு நகர்ந்தார், புல்லட்டினும் அவரை பின்தொடர்ந்து சென்றது. இங்கு லியோன் தனது கல்வியை மீண்டும் தொடர்ந்தார். அவர் மத்திய பாடசாலை பிரெஞ்சுத் தேர்விலும், மூன்றாம் தடவையாக இயற்பியலின் முதல் பகுதியிலும், சோர்போனில் கணிதத்திலும் சித்தியடைந்தார். பாரிசில் அவர் மிக கடுமையான நிலைமையின் கீழ் வாழ்ந்ததுடன், இடைவிடாத விருப்பத்துடன் விஞ்ஞான பாடங்களை கஷ்டமான நேரத்திலும் தொடர்ந்தார்; ஆனால் அவரது கல்வியை பூர்த்தி செய்வதற்கு உதவிய அவருக்கு இருந்த விசேட திறமைக்கு நன்றிகள். அது அவருக்கு பட்டச்சான்றிதழை பெற்றுக் கொடுத்தது.

பாரிசில் அவரது பிரதான பொறுப்புகள், பேர்லினில் இருந்ததை விட பாரிய அளவில் இருந்தது, அங்கு அவர் புரட்சிக்கும் என்னுடனான எழுத்து வேலை கூட்டுழைப்பிற்கும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அண்மைய வருடங்களில் லியோன், நான்காம் அகிலத்தின் பத்திரிகைகளில் மிக சிரமமான எழுத்து வேலைகளை ஆரம்பித்தார். பிரங்கிப்போவில் அவர் எழுத்து வேலையில் அபிவிருத்தியடைந்திருந்த போதிலும், தனிமைப்படுத்தப்பட்ட அவரது குறிப்புக்களும், எனது சுயசரிதை எழுதுவதற்கான அவரது பழைய சொந்த நினைவுகளும், என்னை சந்தேகப்பட வைத்தன. ஆனால் அவர் ஏனைய அனைத்து வேலைகளின் சுமையின் கீழ் இருந்தார். நாம் நமது கருத்துக்களிலும் குறிப்பிட்ட பிரச்சனைகளிலும் ஓர் பொதுமையை கொண்டிருந்ததால், எழுத்து வேலைகளை அவர் என்னிடம் விட்டுவிடுவார். நான் திரும்பி பார்க்கும்போது துருக்கியில் அவர் ஒரே ஒரு பிரதான கட்டுரையை எழுதினார். “ஸ்ராலினும் செம்படையும்- அல்லது எப்படி வரலாறு எழுதப்பட்டுள்ளது, இக்கட்டுரை N. Markin என்ற புனைபெயரின் கீழ் எழுதப்பட்டது. அவர் ஒரு புரட்சிகர மாலுமி, லியோன் தனது சிறு வயதிலிருந்தே அவரின் ஆழமான நட்பிலும் முக்கியமான நடத்தைகளுடனும் இணைக்கப்பட்டிருந்தார். இக்கட்டுரையானது “ஸ்ராலினின் பொய்மைப்படுத்தும் பள்ளி” என்ற புத்தகத்தில் உள்ளடங்கியுள்ளது. அவரது தொடர்ந்த கட்டுரைகள் மேலும் மேலும் புல்லட்டினின் பக்கங்களிலும் நான்காம் அகிலத்தின் ஏனைய வெளியீடுகளிலும் அடிக்கடி வெளிவர ஆரம்பித்தன. ஒவ்வொரு முறையும் அவசியம் என்ற அழுத்தத்தின் கீழேயே அவை எழுதப்பட்டன. லியோன், தான் சொல்வதற்கு ஏதாவது இருந்தாலும் அதை வேறொருவரும் சிறப்பாக சொல்லமாட்டார்களளென்று தெரிந்தால் மட்டுமே எழுதுவார். நோர்வேயில் நமது வாழ்க்கையின்போது வெவ்வேறு இடங்களிலிருந்து ஸ்ரெக்காவோனிச இயக்கம் (Stakhanovist movement) தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் படியான வேண்டுகோள்கள் எனக்கு கிடைத்தது. இது எமது இயக்கத்தினை ஆச்சரியத்தில் பிடித்துக் கொண்டது. இப்பணியை நிறைவேற்ற எனது தொடர்ந்த சுகவீனம் தடையாக வந்துள்ளதென தெரிந்தவுடன், லியோன் “ஸ்ரெக்காவோனிசம்” தொடர்பான கட்டுரையின் வரைவை மிக பணிவான கடிதத்துடன் எனக்கு அனுப்பி வைத்தார். இக்கட்டுரை, முக்கியமான பூரண ஆய்வுகளுடன் அதேபோல் சுருக்கமாக தெளிவாய் எடுத்துக்காட்டியதொன்றென எனக்கு தோன்றியது. இக்கட்டுரை பலமொழிகளில் பிரசுரிக்கப்பட்டதுடன் அதிகாரத்துவத்தின் சவுக்கின் கீழுள்ள இக்கைக்கூலி “சோசலிஸ்டுகளின்“ மேல் சரியான ஆய்வுகளை வழங்கியது.

லியோன் தனது பிரதான எழுத்துப் பணியை, “மாஸ்கோ வழக்குகளின் சிகப்பு நூல்” என்பதில் நடாத்தினார். இது 14 பேர்களின் (சினோவியேவ், காமனேவ், சிமிர்ஹேவ், மேலும் பலருடைய வழக்கு தொடாபான ஆய்வுகளை செய்தது. இது பிரெஞ்சு, ரஷ்ய, ஜேர்மன் மொழிகளில் வெளியிடப்பட்டது. அந்நேரத்தில் எனது மனைவியும் நானும் நோர்வேயில் மிக பேய்த்தனமான குற்றச்சாட்டுகளின் மத்தியில் கையும் காலும் கட்டப்பட்டு கைதி போன்றொரு நிலையில் இருந்தோம். அங்கு குறிப்பிட்ட வடிவங்களில் ஸ்தம்பிதங்கள் இருந்தன. நாம் மரண ஆபத்ததை முகம் கொடுத்துள்ளோம் என்பதை மக்கள் பார்த்தனர், கேள்விப்பட்டனர், ஆனால் அதற்கெதிராய் ஓர் சிறிய விரலைக்கூட அசைக்கமுடியாத நிலையில் அவர்கள் இருந்தார்கள். நோர்வேயின் “சோசலிச” அரசாங்கத்தினால் இதைப் போன்ற அரசியல் ஸ்தம்பிதங்களின் கீழேயே நாம் அடிமைப்படுத்தப்பட்டோம். இந்நிலைமையின் கீழ், கிரெம்ளின் பொய்யர்களுக்கு அழுத்தமான முதலாவது பதிலை அளித்த லியோனின் புத்தகம் ஓர் விலைமதிப்பற்ற பரிசாக எமக்கு கிடைத்தது. நான் ஞாபகப்படுத்தி பார்க்கும்போது அதன் முதல் பக்கங்கள் மங்கலாகவே தெரிகின்றன. ஏனெனில் சோவியத் யூனியனின் பொது நிலைமை தொடர்பாய் ஏற்கனவே செய்த அரசியல் மதிப்பீடுகளில் அவை அடித்தளமாக கொண்டிருந்ததே அதற்கு காரணமாகும். ஆனால் அதன் ஆசிரியர் அந்நேரத்திலிருந்தே மாஸ்கோ வழக்குகள் தொடாபாய் சுயாதீனமான ஆய்வுகளை மேற்கொண்டிருந்ததனால், எனது முழு மனதும் அதனால் கவரப்பட்டது. அதில் அடுத்து வருகின்ற ஒவ்வொரு அத்தியாயமும் முன்சென்றதை விட சிறந்ததொன்றாக நான் கண்டு கொண்டேன். “லெவுஸ்யாற்கா, சிறந்த பையன்!, நமக்கொரு பாதுகாவலனுள்ளான்” என எனது மனைவியும், நானும் கூறிக் கொண்டோம். நமது வாழ்த்துக்களை லியோன் படித்திருப்பின் கட்டாயம் அவரது கண்கள் சந்தோஷத்தில் பிரகாசித்திருக்கும். பல செய்தி பத்திரிகைகளும், குறிப்பாய் டென்மார்க் சமூக ஐனநாயகத்தின் உத்தியோகபூர்வமான பத்திரிகை, செடோவின் பெயரின் கீழ் வெளியான கட்டுரையை கடுமையான கட்டுப்பாடுகளின் மத்தியிலும் நான் கொண்டிருந்த தன்னம்பிக்கையுடன் பிரசுரிக்கும் விதிமுறைகளை கண்டது. “ஒருவர் அவற்றில் ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களை காணக்கூடியதாக இருந்தது....” என்று கூறுவதெல்லாம் ஓர் கட்டுக்கதை. இந்நூலில் எனது சொந்த வரிகள் ஒன்று கூட இல்லை. செடோவின் மீது விருப்பமாய் இருந்த பல தோழர்கள் அவரை “ட்ரொட்ஸ்கியின் மகன்” என்பதனாலேயே மதிப்பளித்தனர் —கார்ல் லிப்னெக்ட், வில்லியம் லிப்னெக்ட்டின் மகன் என்ற ஓரே காரணத்தினால் மட்டும் மதிப்பளிக்கப்பட்டது போல்— ஆனால் இச்சிறிய புத்தகத்தினால் அவர்கள் செடோவை சுயாதீனமான ஒருவராக மட்டுமல்ல, ஓர் பிரபல்யமான நபராகவும் அங்கீகரித்தனர்.

லியோன் தனது ஏனைய வேலைகளைப் போன்றே தனது எழுத்து வேலைகளையும் மிக நேர்மையான வாசிப்புடன், அதன் பிரதிபலிப்புக்களையும் பரிசோதித்து பார்த்தார். கர்வமான எழுத்துக்கள் அவருக்கு அன்னியமாய் இருந்தன. கிளர்ச்சிகரமான பேச்சுக்கள் அவரின் மனதை கவர்ந்ததொன்றல்ல. அதேநேரத்தில் அவர் எழுதிய ஒவ்வொரு வரியும், அவரது உண்மையான புரட்சிகர மனோபாவத்தில் தன் ஊற்றைக் கொண்டிருந்ததால் அது ஓர் எரிந்து கொண்டிருக்கும் தீச்சுடரைப்போல் பிரகாசித்தது. இம் மனோபாவம், நமது சகாப்தத்தின் பாரிய அரசியல் நிகழ்வுகளுடன் தொடர்புடைய தனிப்பட்ட, குடும்ப வாழ்க்கையின் சம்பவங்களினால் உருவாக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டது. 1905ல் அவரது தாய் பீட்டர்ஸ்பேர்க் சிறைச்சாலையில் ஓர் குழந்தையை எதிர்பார்த்த வண்ணமிருந்தார். இளவேனிற் காலத்தில் ஏற்பட்ட மிதவாதத்தின் திடீர்காற்று அவரை விடுதலை செய்தது. அடுத்த வருடம் பெப்ரவரியில் ஓர் ஆண்குழந்தை பிறந்தது. இந்நேரத்தில் நான் சிறைச்சாலையின் எல்லையினுள் இருந்தேன். 13 மாதங்கள் கழித்து நான் சைபீரியாவில் இருந்து தப்பியதன் பின்னரே எனது மகனை நான் முதல் முறையாய் பார்த்தேன். நம்மை ஆஸ்திரியாவிற்கு அனுப்பி வைத்த முதல் ரஷ்ய புரட்சியின் மூச்சின் தோல்வி, அவரது ஆரம்பகால மனதில் துளையிட்டது. நம்மை சுவிட்சர்லாந்திற்கு அனுப்பி வைத்த யுத்தம், எட்டு வயது தாண்டிய சிறுவனின் நனவிற்கு சக்தியை கொடுத்தது. நாம் பிரான்சுக்கு நாடு கடத்தப்பட்டது அவருக்கு அடுத்த பெரும் படிப்பினையாக இருந்தது. நமது கப்பல் பிரயாணத்தின் போது அவர் அங்கிருந்த கட்டலான் (Catalan) தொழிலாளியுடன் புரட்சி பற்றி சைகை மொழியில் கதைத்தார். புரட்சி அவருக்கு, எல்லாவற்றிலும் மேலாக நாம் ரஷ்யாவுக்கு திரும்பி போகவேண்டும் என்ற சாத்தியமான நம்பிக்கைகளை எடுத்துக்காட்டியது. நாம் அமெரிக்காவில் இருந்து திரும்பும்போது, ஹாலிஃபாக்ஸ் (Halifax) இற்கு அருகில், 11 வயது நிரம்பிய லேவிக் ஓர் பிரிட்டிஷ் உத்தியோகத்தரை தனது முஷ்டியால் தாக்கினார். அவருக்கு யாரை அடிப்பதென்று தெரிந்திருந்தது; என்னை கப்பலில் கொண்டு சென்ற மாலுமிக்கல்ல, மாறாக உத்தரவை பிறப்பித்த உத்தியோகத்தருக்கு. கனடாவில், சித்திரவதை முகாமில் நான் சிறையிடப்பட்டிருந்த வேளையில், பொலிஸ் வாசிக்காமல் கடிதங்களை மறைப்பது எப்படியென்றும், அவற்றை ஒருவரின் கண்ணில்படாமல் தபால் பெட்டியில் வைத்திருப்பது எப்படியென்றும் லியோன் பழகினார். பெட்ரோகிராட்டில் போல்ஷிவிக்குகளுக்கு எதிரான சூழ்நிலைக்குள் தான் மூழ்கடிக்கப்படுவதை உடனடியாக கண்டுகொண்டார். அவர் ஆரம்பத்தில் இருந்து பதிவு செய்திருந்த முதலாளித்துவ பாடசாலைகளில் ட்ரொட்ஸ்கியின் மகன் என்றமையால் மிதவாதிகளினதும், சமூக புரட்சியாளர்களினதும் மகன்களால் தாக்கப்பட்டார். ஓர் முறை அவர் தனது தாய் வேலைபார்த்த மரத் தொழிலாளர் தொழிற்சங்கத்துக்கு இரத்தம் தோய்ந்த கைகளுடன் வந்தார். அவர் அப் பாடசாலையில் கெரன்ஸ்கியின் மகனுடன் அரசியல் கலந்துரையாடல்கள் நடத்தியிருந்தார். தெருக்களில் அவர் போல்ஷிவிக்குகளின் அனைத்து ஆர்ப்பாட்டங்களிலும் இணைந்து கொள்வதுடன் மக்கள் முன்னிலையில் (கெரன்ஸ்கி, சமூக புரட்சியாளர்கள், மென்ஷிவிக்குகளின் கூட்டு) ஆயுதப் படைகளை பார்த்து ஓர் அகதிபோல் கதவின் பின்னால் ஒளிந்து கொள்வார். யூலை நாட்களின் பின், கெரன்ஸ்கி–ரெசேர்ற்லி சிறைச்சாலையின் தடித்த கம்பிகளினூடாக அவர் என்னை பார்க்க வருவார். ஓர் இராணுவ அதிகாரியின் வீட்டு சாப்பாட்டு மேசையில், லியோனும் சேர்ஜியும் போல்ஷிவிக்குகளை கைசர் இன் ஏஜன்டுக்கள் என்று கூறிய உத்தியோகத்தர்கள் மேல் கத்திகளை எறிந்தனர். அவர்கள் இதைப்போன்ற துணிந்த பதிலை தற்போது ஸ்ராலினிச மத்திய குழுவின் அங்கத்தவராக இருக்கும் சேரபுறோப்ஸ்கி (Serebrobsky) க்கு வழங்கினார். சேரபுறோப்ஸ்கி லெனினை ஜேர்மன் உளவாளி என நம்பச்செய்ய முயற்சி செய்திருந்தார். லெவிக் பத்திரிகைகளில் சோடிப்புக்களை வாசிக்கும்போது அவற்றை தன் இளம் பற்களால் பொடியாக்குவதற்கு பழகியிருந்தார். அவர் அக்டோபர் நாட்களை, மாலுமி மார்க்கின் (Markin) இன் ஒத்துழைப்புடன் கடந்து சென்றதுடன், அமைதியான நேரங்களில், அவர் லெவிக் இற்கு துப்பாக்கி சுடும் கலையை நிலவறைகளில் பயிற்றுவித்தார்.

ஓர் எதிர்காலப் போராளி இதனூடாய் பரிணாமம் அடைந்தார். அவருக்கு, புரட்சி அருவமானதொன்றல்ல. இல்லவே இல்லை! அது இவரது சிறப்பான கவனத்துக்குள் வேரோடியிருந்தது. சிவப்பு சனிக்கிழமைகள் (Red Saturdays) உடன் ஆரம்பமான புரட்சிகரக் கடமைகளை நோக்கி இவர் ஓர் தீவிரமான அணுகுமுறையை உருவாக்கிக் கொண்டதுடன், பின்தங்கியவர்களுக்கும் வழியைக் காட்டினார். இதனால் பின் அவர் அதிகாரத்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் தீவிர ஊக்கத்துடன் இணைந்துகொண்டார். 1927ன் இலையுதிர் காலத்தில் லியோன் மிராக்கோவ்ஸ்கி (Mrachkovsky) உடனும் பெலோபொரோடா (Beloborodov) உடனும் இணைந்து எதிர்ப்பாளர்களது விஜயம் ஒன்றை உரால்ஸ் (Urals) பகுதியில் மேற்கொண்டார். அவர்கள் திரும்பி வந்தபோது இருவரும் லியோனின் கூர்மையான நம்பிக்கை கொண்ட போராட்டத்தின் நிஜ ஊக்கம் தொடர்பாயும், இளைஞர்களது கூட்டங்களில் அவர் நிகழ்த்திய இடைவிடாத பேச்சுக்கள் பற்றியும், அதிகாரத்துவத்தின் போக்கிரித்தனம் நிறைந்த முகத்தின் முன், உடல் பயமற்ற தன்மை பற்றியும், தோல்வியின் முன் தன் இளம் தலையை உயர்த்தி நிற்கும் அவரது துணிந்த நடத்தையின் சக்தி தொடர்பாயும் கதைத்தனர். அவர் உரால்ஸ்ஸில் இருந்து திரும்பியபோது, அந்த 6 வருடங்களில் அவர் வளர்ச்சியடைந்திருந்தார். இந்நேரத்தில் நான் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தேன். இதனால் வெளிநாட்டு வாழ்க்கைக்கு தயாரிப்பு செய்ய வேண்டியது அவசியமாகியது. இதில் அவர் தனது வேகத்தையோ அல்லது தைரியத்தையோ காட்டத் தயங்கவில்லை. அவர் எச்சரிக்கையும் அவதானமும் கொண்டவராய் இருந்தார். ஆனால், யுத்தத்தைப் போலவே புரட்சியிலும் ஆபத்து ஓர் பகுதியாய் உள்ளதென்பது அவருக்கு தெரிந்திருந்தது. தேவை எழுந்தபோதெல்லாம், அவை அடிக்கடி எழுந்தன. ஆபத்திற்கு எப்படி முகங்கொடுப்பது என்பதை அவர் அறிந்திருந்தார். பிரான்சில், ஜிபியு அரசாங்க கட்டிடங்களின் ஒவ்வொரு மாடியிலும் தனது நண்பர்களை வைத்திருந்தபோது, இவரது வாழ்க்கை பெரும்பாலும் உடைவில்லாத சங்கிலித் தொடர் போன்ற ஆபத்துக்களை கொண்டதாக இருந்தது. இவர் வாழ்ந்த குடியிருப்புக்கு அடுத்ததாய் அவர்கள் வாழ்ந்தனர். இவரது கடிதங்களையும் ஆவணங்களையும் அவர்கள் திருடியதுடன் தொலைபேசி பேச்சுக்களையும் ஒட்டுக்கேட்டனர். அவர் தனது சுகவீனத்தின் பின் மத்தியதரை கடற்கரையோரம் இரு கிழமைகள் தங்கியிருந்தபோது —வருடங்கள் நிறைந்த காலப்பகுதிகளுக்கான அவரது ஓய்வு இது–— ஜிபியு வின் ஏஜண்டுக்கள் விடுதியின் அதே பகுதியினுள் தங்கியிருந்தனர். அவர் ஸ்ராலினிச பத்திரிகைகளின் சேறடிப்புகளுக்கு எதிரான சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்பதற்கான தொடர்பை ஏற்படுத்த, சுவிஸ் சட்டத்தரணியுடன் மாநாடு ஒன்றை ஒழுங்குபடுத்தி முல்ஹவுசன் (Mulhausen) செல்லவிருந்த நேரத்தில், ஜிபியு ஏஜன்டுக்கள் நிறைந்த முழுக்கும்பல் ஒன்று புகையிரத நிலையத்தில் இவரை எதிர்பார்த்த வண்ணம் நின்றது. இதே கும்பல் தான் பின்பு இக்னாஸ் றைஸ் ஐ கொலை செய்தது. லியோன் புறப்படும் தருணத்தில், தான் சுகவீனமாய் இருப்பதாய் உணர்ந்த காரணத்தினால் மட்டுமே அவர் இக் குறிப்பிட்ட மரணத்தில் இருந்து தப்பினார். அவர் பாரிசை விட்டு விலக முடியாத அளவு கடும் ஜுரத்தால் அவதிப்பட்டிருந்தார். இவ் அனைத்து விடையங்களும் பிரான்சிலும் சுவிட்சர்லாந்திலும் உள்ள சட்டபூர்வமான பிரதிநிதிகளால் உறுதிப்படுத்தப்பட்டது. வெளிவராதுள்ள இரகசியங்கள் இன்னும் எத்தனை? 3 மாதங்களின் பின்பு அவரது நெருங்கிய நண்பர்கள் பாரிசில் அவர் நேரடி ஆபத்துக்களுக்கு முகங்கொடுக்கின்றார் என நமக்கு எழுதியிருந்ததுடன், அவரை மெக்சிக்கோ செல்லும்படியும் குறிப்பிட்டிருந்தனர். “ஆபத்து உள்ளதென்பது மறுக்கப்பட முடியாததொன்று, ஆனால் பாரிஸ் இன்று மிக முக்கியமான போராட்டத்தின் மையமாக வந்துள்ளது; இங்கிருந்து இப்போது விலகுவது ஓர் குற்றமாக இருக்கும்”. என லியோன் பதிலளித்தார். இவ்விவாதத்திற்கு வளைந்து கொடுப்பதை தவிர்ந்த வேறொன்றும் இருக்கவில்லை.

கடந்த வருடத்தின் இலையுதிர் காலத்தில் கிரெம்ளினிலும் ஜிபியு விலும் இருந்து சில வெளிநாட்டு சோவியத் ஏஜன்டுக்கள் வெளியேற ஆரம்பித்தபோது, லியோனை உடனடியாக இச் சம்பவங்களின் மத்தியில் காணக்கூடியதாய் இருந்தது. குறிப்பிட்ட சில நண்பர்கள் “பரிசோதிக்கப்படாத” அவரது புதிய நண்பர்களின் கூட்டிற்கு எதிராய் ஆர்ப்பாட்டம் செய்தனர்; ஆத்திரமூட்லுக்கு சாதகமான நிலை உள்ளதென அவர்கள் குறிப்பிட்டனர். சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் ஆபத்து உள்ளது, ஆனால் இதிலிருந்து நாம் ஓர் பக்கமாய் ஒதுங்கி நிற்பின் இம் முக்கியமான இயக்கத்தை கட்டி எழுப்புவது சாத்தியமற்றதொன்றாகும் என லியோன் பதிலளித்தார். இந்த நேரத்தில் நாம் இதை லியோனின் இயற்கையான குணாம்சம் என்றும் அரசியல் நிலைமையே அவரை இப்படி உருவாக்கியது என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. ஓர் நிஜ புரட்சியாளனைப் போல் அவர் வாழ்க்கையின் மேலுள்ள பெறுமதியை, விடுதலைக்கான பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்திற்கு சேவை செய்யும் அளவிற்கு மட்டுமே வைத்திருந்தார்.

பெப்பிரவரி 16ம் திகதி மெக்சிக்கோவின் மாலை பத்திரிகைகள், ஓர் அறுவை சிகிச்சையின் பின் இடம்பெற்ற லியோன் செடோவின் மரணம் சம்பந்தமான செய்தியை வெளியிட்டன. அவசரமான வேலைகளில் ஈடுபட்டிருந்ததால், நான் அப்பத்திரிகை செய்திகளை பார்க்க முடியவில்லை. டியகோ ரிவேரா, தன் சொந்த முயற்சியால் வானொலி செய்தியினூடாய் இதை பரிசோதித்துப் பார்த்ததுடன், அக் கோரமான செய்தியுடன் என்னிடம் வந்தார். ஒரு மணித்தியாலத்தின் பின்னர் நத்தலியாவுக்கு நமது மகனின் மரணம் தொடர்பாய் நான் கூறினேன்– 32 வருடங்களின் முன் இதே பெப்பிரவரி மாதம் அவர் பிறந்த செய்தியை நத்தலியா சிறையினுள் எனக்கு கொண்டு வந்தார். இதனால் பெப்பிரவரி மாதம் 16ம் திகதி, எமது தனிப்பட்ட வாழ்க்கையில் கறுத்த நாட்களாக முடிவடைந்தது.

நாம் பல விடயங்களை எதிர்பார்த்தோம், பெரும்பாலும் எல்லாவற்றையும், ஆனால் இதையல்ல. மிக அண்மையில், ஒரு தொழிற்சாலையில் தான் தொழிலாளியாக வேலைசெய்ய முயற்சி எடுத்து வருவதாய் எமக்கு எழுதியிருந்தார். அதே நேரம் விஞ்ஞான கலாசாலைக்கு ரஷ்ய எதிர்ப்பாளர்களின் வரலாற்றை எழுதப்போவதாகவும் தெரிவித்திருந்தார். அவர் நிறைந்த திட்டங்களுடன் இருந்தார். அவரது மரணம் சம்பந்தமான செய்தியை நாம் அறிந்ததற்கு இரு தினங்கள் முன்பாக, பெப்பிரவரி 4ம் திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றை நாம் அவரிடம் இருந்து பெற்றுக் கொண்டோம். அதில் உற்சாகமும் துணிவும் நிறைந்திருந்தது. அது இப்போது எம்முன் உள்ளது. “சுவிட்சர்லாந்தில் ஓர் வழக்கிற்காக நாம் தயாரித்துக் கொண்டிருக்கிறோம், ‘நிர்வாகத்திலும்’ ‘பொதுஜன அபிப்பிராயம்’ என்று சொல்லப்படுபவற்றிலும் உள்ள நிலைமைகள் நமக்கு சாதகமாய் உள்ளன”, என்று அவர் எழுதியிருந்ததுடன் சாதகமான விடயங்கள் தொடர்பான குறிப்புகளை ஓர் பட்டியலாய் போட்டார். En Sommes Nous Marquons des Points. [மொத்தத்தில் நாங்கள் வெற்றியடைந்து கொண்டிருக்கின்றோம்]. இக் கடிதம், எதிர்காலம் தொடர்பாய் உறுதியான மூச்சுடன் இருந்தது. இப்படி உள்ளபோது உயிராபத்தான நோயும் திடீர் மரணமும் எப்படி இடம்பெற்றது? நம்மை பொறுத்த அளவில் இக் கேள்வி ஆழமான மர்மத்தினால் சூழப்பட்டுள்ளது. என்றாவது இது தெளிவுபடுத்தப்படுமா? முதலாவதும் இயற்கையானதுமான மதிப்பீடு அவருக்கு நஞ்சூட்டப்பட்டுள்ளது என்பதாய் இருந்தது. லியோனையும், அவரது உடைகளையும், உணவையும் அடையும் வழிகளை கண்டுபிடிப்பது ஸ்ராலினிச ஏஜன்டுகளுக்கு ஓர் சிரமமான விடயமல்ல. சட்டரீதியாய் தேர்ச்சி பெற்றோர் ‘இராஜதந்திர’ எண்ணம் கொண்டிருந்தபோதிலும், இப் புள்ளியில் ஒரு உறுதியான முடிவுக்கு வரும் தகமை கொண்டுள்ளனரா? இன்றய நாட்களில் நஞ்சூட்டும் கலை யுத்த இரசாயனத்துடன் இணைந்த வண்ணம் ஓர் வழமைக்கு மாறான அபிவிருத்தியை அடைந்துள்ளது. கண்டுபிடிக்க முடியாத கொலைகளை செய்வதே இக் கொலையின் இரகசியம் என்பது உறுதியானதொன்றாகும். ஆனால் ஜிபியு வின் நஞ்சூட்டுபவர்கள் அனைத்தையும் அடையும் வழிகளைக் கொண்டுள்ளார்கள். மரணத்தின் பின்னும், மிக அவதானமான ஆய்வுகளை செய்தாலும் கண்டுபிடிக்க முடியாத முறையில் நஞ்சூட்ட முடியும் என்று கருதுவதற்கு முழு சாத்தியக் கூறுகளும் உள்ளன. இப்படியானதொரு ஆய்விற்கு யார் உத்தரவாதம் அளிக்க முடியும்?

அல்லது இரசாயனத்தின் உதவியை நாடாமல் அவர்கள் அவரை கொலை செய்தார்களா? ஆழ்ந்த அறிவுள்ளதும் மதிநுட்பம் வாய்ந்த இவ் இளைஞன் நிறைய விடயங்களை சகித்துக் கொள்ள வேண்டியிருந்தது. லியோன் தன் குழந்தைப் பருவத்திலிருந்து மரியாதையையும் அன்பையும் காட்டிவந்த அவரது தந்தைக்கும், சிறந்த மூத்த தோழர்களுக்கும் எதிரான நீண்ட வருடங்களான பொய்களின் பிரச்சாரம் அவரது உளவியல் அமைப்புமுறையை ஏற்கனவே ஆட்டங்காணச் செய்திருந்தது. எதிர்ப்பாளர் அங்கத்தவர்களின் ஓர் நீண்ட வரிசைக்கிரமமான அடிபணிவு கனமான அடிகளை அவருக்கு வழங்கியிருந்தது.

1915 ல் அவரது மகள் ஸீனாவுடன் ட்ரொட்ஸ்கி

இதை தொடர்ந்து எனது மூத்த மகளான ஸீனா (Zina) பேர்லினில் தற்கொலை செய்து கொண்டார். ஸீனா, ஸ்ராலினால் மிக துரோகத்தனமாய் பழிவாங்கப்பட்டதுடன், அவர் தனது குழந்தையிடமிருந்தும், தன் குடும்பத்திடமிருந்தும், தன் சொந்த வட்டாரங்களிலிருந்தும் பிரித்தெடுக்கப்பட்டிருந்தார். லியோன் தன் கைகளில் தனது மூத்த சகோதரியின் பிரேதத்துடனும், அவளது 6 வயது இளம் சிறுவனையும் தாங்கிய வண்ணமும் நின்றார். அவர் மாஸ்கோவில் உள்ள தனது இளம் சகோதரரான சேர்ஜி (Sergi) உடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் முயற்சி எடுக்கத் தீர்மானித்திருந்தார். ஜிபியு, ஸீனாவின் தற்கொலையின் நேரத்தின்போது குழப்படைந்து இருந்திருக்கலாம் அல்லது சில இரகசியங்களை அறியலாம் என அவர்கள் எதிர்பார்த்திருக்கலாம் என்றபோதிலும் அனைத்து எதிர்பார்ப்புகளுக்கும் எதிர்மாறாக, ஒரு தொலைபேசி தொடர்பினூடாக லியோன் தனது சொந்தக் குரலால் இத் துக்ககரமான செய்தியை மாஸ்கோவிற்கு அனுப்பி வைத்தார். இதுதான், நமது இரு இளைஞர்களுக்கும் இடையிலான இறந்த தமது சகோதரியின் சூடாறாத உடல் பற்றிய இறுதி உரையாடலாக இருந்தது. நாம் பிரங்கிப்போவில் இருந்தபோது கிடைத்த லியோனின் கடிதங்களில், அவர் முகங்கொடுத்த கடும் வேதனைகளை சுருக்கமாய் விபரித்திருந்தார். அவர் நமக்கு முழுப்பலத்தையும் தந்தார். ஆனால், அதன் ஒவ்வொரு வரிகளிலும் தாங்கமுடியாத உளவியல்ரீதியான வலியை ஒருவரால் உணர முடிந்தது.

1935 ல் சேர்ஜி செடோவ் NKVDஆல் கைது செய்யப்பட்டபோது

தேவையான பொருட்களின்மையையும் கடுமையான நிலைமையையும் ஒரு உண்மையான தொழிலாளிபோல் லியோன் இலகுவாகவும் நகைச்சுவையுடனும் தாங்கிக்கொண்டார். ஆனால் நிச்சயமாக அவை அடையாளங்களை விட்டுச்சென்றன. நிச்சயமாக மிகவும் தொந்தரவளித்தவை அதனைத்தொடர்ந்த உளவியல்ரீதியான சித்திரவதைகளாகும். 16 பேர் தொடர்பான மாஸ்கோ வழக்குகள், குற்றச்சாட்டுகளின் படுபயங்கரமான தன்மை, லியோனுக்கு மிகவும் நெருக்கமாக தெரிந்த அவர் அன்புசெலுத்திய சிமிர்நோவ், மார்க்கோவ்ஸ்கி உள்ளடங்கலான குற்றம்சாட்டப்பட்டவர்களின் நினைத்துக்கூட பார்க்கமுடியாத வாக்குமூலங்கள், நோர்வேக்கு தனது தந்தையும் தாயும் எதிர்பாராதவிதமாக நாடுகடத்தப்பட்டமை, எவ்வித தகவல்களும் இல்லாத நான்கு மாதங்கள், ஆவணக் காப்பகம் களவாடப்பட்டமை, எனது மனைவியையும் என்னையும் இரகசியமாக மெக்சிக்கோவிற்கு அகற்றியமை இன்னும் மேலதிகமான மோசமான குற்றச்சாட்டுகளும் ஒப்புக்கொள்ளுதல்களும் உள்ளடங்கிய இரண்டாவது மாஸ்கோ வழக்குகள். அவரது சகோதரனான சேர்ஜி காணாமல்போனமை, “தொழிலாளர்களுக்கு நஞ்சூட்டுவது” பற்றிய குற்றச்சாட்டுகள், நெருங்கிய நண்பர்கள் அல்லது இறுதிவரை நண்பர்களாக இருந்த எண்ணுக்கணக்கற்றவர்களை சுட்டுக்கொன்றது, பிரான்சில் ஜிபியு தொந்தரவுகளும் முயற்சிகளும், றைஸ் சுவிற்சலாந்தில் கொல்லப்பட்டமை, பொய்கள், எவ்வித ஆதாரமும் அற்றதன்மை, நேர்மையற்றதன்மை, பொய்வழக்குகள் போன்றவை, “ஸ்ராலினிசம்” என்பது லியோனுக்கு ஒரு அருவமற்ற அரசியல் கருத்துரு மட்டுமல்ல ஒரு தொடர் எண்ணற்ற உளவியல் தாக்கங்களும் கருத்தியல்ரீதியான காயங்களுமாகும். மாஸ்கோவின் தலைவர்கள் இரசாயனத்தில் தஞ்சமடைந்திருந்தர்களோ அல்லது அவர்கள் முன்னர் செய்திருந்த அனைத்துமே ஒரே ஒரு முடிவினை நிரூபிக்க போதுமானதாக உள்ளது: அதாவது அவர்கள் அவனைக் கொன்றனர். அவர்களது தேர்மிடோரியன் அதிகாரத்துவ நாட்காட்டியில் அவர்கள் அவனது மரணத்தை குறித்துவைத்துள்ள திகதி அவர்களுக்கு ஒரு பாரிய கொண்டாட்டமாகும்.

அவர்கள் நமது மகனை கொலை செய்யும் முன் அவரை சமகாலத்தவர்களினதும், எதிர்காலத்தவர்களினதும் கண்களின் முன்னால் சேறடிக்கவும், இருட்டடிப்புச் செய்யவும் தமது சக்தியிலிருந்து எல்லாவற்றையும் செய்தனர். கெய்ன் ஜூகாஷ்விலி (Cain Djugashville) உம் அவரது கைக்கூலிகளும், லியோனை பாசிசத்தின் ஏஜண்டு என்றும், சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவ மறுசீரமைப்பின் இரகசிய அனுதாபி என்றும், தொழிலாளர்களை கொலை செய்தவர் என்றும், புகையிரதப் பாதைகளை அழிப்பவர் என்றும் வர்ணித்தனர். இப் போக்கிரிகளின் முயற்சிகள் எல்லாம் வீணாகிப்போயின. அவரது இளமைக் காலத்திலிருந்து அழுத்தி வந்த தொன் கணக்கான தேமிடோரியன் அழுக்கு, அவர்மேல் எதுவித கறையையும் ஏற்படுத்தவில்லை. லியோன் முழுமையாய் மாசுபடாத, நேர்மையான, தூய்மையான மனித இருப்பு. அவர் தொழிலாள வர்க்கத்தின் எல்லாக் கூட்டங்களின் முன்பும் தனது வாழ்க்கையின் கதையை சொல்லக்கூடியவர் -மிக சுருக்கமாய், எல்லாவற்றையும்- நாளுக்கு நாள், நான் இங்கு சுருக்கமாய் கூறியதைப்போல், அவர் மறைப்பதற்கோ, வெட்கப்படுவதற்கோ ஒன்றையும் வைத்திருக்கவில்லை. சிறந்த குணம் அவரின் நடத்தையின் அடியில் இழையோடியிருந்தது. அவர் தனக்கு நேர்மையாய் இருந்த காரணத்தினால், ஒடுக்கப்பட்டோரின் நலன்களை விசுவாசமாய் பாதுகாத்தார். வரலாற்றினதும், இயற்கையினதும் கைகளிலிருந்து அவர் ஓர் வீரம் நிறைந்த மனிதனாய் உருவானார். நம்மேல் வட்டமிட்டு கொண்டிருக்கும் பாரிய நெருக்கடியான சம்பவங்களிற்கு இதைப்போன்ற நபர்கள் தேவை. இச்சம்பவங்களில் பங்கு கொள்வதற்கு லியோன் உயிரோடு இருந்திருப்பாராயின் அவர் தனது உண்மையான தகமையை காண்பித்திருப்பார். ஆனால் அவர் உயிரோடில்லை. எமது லியோன், இளைஞன், மகன், வீரம் நிறைந்த போராளி, இறந்து விட்டான்.

உலகில் வேறு எந்த நபரையும் விட அவருக்கு நெருக்கமான நானும் அவரது தாயும் இக்கொடூரமான மணித்தியாலங்களில் அவரது ஞாபகங்களை ஒவ்வொரு பகுதி பகுதியாய், ஞாபகப்படுத்திக் கொள்வதுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர் இறந்து விட்டார் என்பதை நம்ப முடியாதுள்ளது, இதை நம்புவது சாத்தியமற்ற காரணத்தினால் நாம் அழுதுகொண்டிருக்கிறோம். மனித இருப்புக்கள் என்பது நம்மை பொறுத்த அளவில் மிருதுவான கூட்டினாலும், பரஸ்பர புரிந்துணர்வினாலும், பொதுவான சிந்தனைகளாலும் பிரிக்கமுடியாதபடி இழையோடியுள்ளது, இப் பூமியின் மேல் அன்பு இல்லாமல் போய்விட்டது என்ற கருத்துக்கு எப்படி நாம் எம்மை பழக்கப்படுத்திக் கொள்ள முடியும்? நமது பலமானதும், பலவீனமானதுமான பக்கங்கள், அவருக்கு தெரிந்ததைப்போல், வேறு ஒருவருக்கும் தெரியாது. அவர் எங்கள் இருவரின் ஓர் பகுதியாய் இருந்தார், எமது இளமையான பகுதியாகவிருந்தார். நமது உணர்வுகளையும், சிந்தனைகளையும் கொண்ட நூற்றுக்கணக்கான அலைவரிசைகள் பாரிசில் தினசரி அவரையடைந்தது. எங்களது இளைஞனுடன் சேர்ந்து நமக்குள் இன்னும் இளமையாய் எஞ்சியிருந்த அனைத்தும் இறந்துவிட்டது.

சென்று வா, லியோன், அன்பார்ந்த நிகரற்ற நண்பனே, சென்று வா. நீ இறந்த விபரத்தை எழுதும் கொடூரமான பணியை விதி எம்மீது நிர்ப்பந்திக்கும் என்பதை உனது தாயும் நானும் ஒருபோதும் நினைக்கவில்லை, ஒருபோதும் எதிர்பார்த்ததில்லை. நாம் சென்ற பின்பு நமது பொதுப்பாதையில் நீ தொடர்ந்து முன்னேறிச்செல்வாய் என்ற உறுதியான நம்பிக்கையுடன் நாம் வாழ்ந்திருந்தோம். ஆனால் எங்களால் உன்னைப்பாதுகாக்க முடியவில்லை. சென்று வா, லியோன்! உலகத் தொழிலாளர்களின் இளந்தலைமுறைக்கு குறைகாணமுடியாத உனது ஞாபகத்தை கொடுக்கின்றோம். ஓர் சிறந்த உலகத்திற்காக போராடுபவர்களினதும், தியாகம் செய்பவர்களினதும், உழைப்போர் அனைவரினதும் இதயங்களில் உரிமையுடன் நீ வாழ்வாய். அனைத்து நாடுகளையும் சேர்ந்த புரட்சிகர இளைஞர்களே! நமது லியோனின் ஞாபகத்தை எங்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளுங்கள், அவரை உங்களது மகனாய் சேர்த்துக் கொள்ளுங்கள்- அதற்கு அவர் தகுதியானவர், உங்களது இறுதி வெற்றியில் மகிழ்ச்சியுடன் அவர் பங்கு கொள்வதற்கு விதி மறுத்து விட்டதால், இது முதற்கொண்டு புலப்படாத உங்களது போராட்டத்தில் பங்குபற்ற அவரை அனுமதியுங்கள்.

First published in russian in byulletin oppositzii (64) March 1938

தந்தையும் மகனும்

நத்தாலியா செடோவா ட்ரொட்ஸ்கி

“ஆகவே நான் இந்த உலகத்தில் வாழ்வது விதிக்கு இணங்க அல்ல மாறாக விதிக்கு விலக்கான வகையில் என்பதை என்னால் சொல்ல முடியும்.”
ஜூன் 8, 1940, ட்ரொட்ஸ்கி

இரவு. இருள். விழித்துக்கொண்டேன். வெளிறிய வெளிச்சங்கள் தோன்றித் தோன்றி மறைகின்றன. தலை உயர்த்திப் பார்க்கிறேன்... துப்பாக்கி சுடும் சத்தம் என் செவிகளை துளைக்கிறது. காதுகளில் கேட்கிறது. எங்கள் அறையில் அவர்கள் சுட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் எப்போதுமே ஆழ்ந்து தூங்குவதில்லை, விழித்தவுடனேயே சட்டென்று என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

லெவ் டாவிடோவிச் (Lev Davidovich) தனது இளம் வயதுகளில் ஆழ்ந்து தூங்குபவராகவே இருந்தார். சோவியத் ஒன்றியத்தில் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக தாக்குதல்கள் தொடங்கியபோது, படிப்பவரை திக்குமுக்காடச் செய்து மூச்சுப் பேச்சற்றவர்களாக ஆக்கக் கூடிய இழிவான, கற்பனை பண்ணமுடியாத மற்றும் திடுக்கிட வைக்கக் கூடிய அவதூறுகளைக் கொண்டு பிராவ்தாவின் பக்கங்கள் நிரம்பி வழியத் தொடங்கிய போது, முதன்முறையாக அவரைத் தூக்கமின்மை சூழ்ந்து கொண்டது. அவதூறாளர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கும் நியாயப்படுத்துவதற்கும் பொய்களைப் பயன்படுத்தினர். அவர்களிடம் அதைத் தவிர வேறெந்த ஆயுதமும் இருக்கவில்லை.

படித்த மக்கள் நம்பினார்களா? என்றால் ஆமாம் மற்றும் இல்லை இரண்டும் தான். தீயநோக்கமெனும் ஆவேசமான பிரம்மாண்ட அலை அவர்களை அடித்துச் சென்றது, அவர்களை சூழ்ந்து கொண்டது, அவர்கள் நோக்குநிலை தவறியவர்களாக ஆயினர்... புரட்சியின் வீரதீரமான ஆண்டுகளால் களைத்து, இளைத்து, தமது வெற்றிகளின் எதிர்காலம் குறித்த அச்சம் சூழ்ந்த நிலையில், வீழ்ச்சி மற்றும் தாக்குதலுக்குட்பட்ட காலகட்டங்களில் மக்கள் அற்புதங்களில் எப்படி நம்பிக்கை வைக்கத் தொடங்குகிறார்களோ, அதைப் போல அவர்கள் அவதூறுகளை நம்பத் தொடங்கினர். பிராவ்தாவின் பெரிய பக்கங்களைப் பிடித்திருக்கையில் வாசகர்களின் கரங்கள் எப்படி நடுங்கும் என்பதை நான் பார்த்திருக்கிறேன்; அவர்களின் கரங்கள் கீழே விழும் பின் மீண்டும் மேலே உயரும்.

எங்களது பிள்ளைகளும் தூக்கத்தைத் தொலைத்தனர். இளையவன், கடும் குழப்பத்துடன் என்னைக் கேட்பான்: “என்ன இது? அப்பாவைப் பற்றி ஏன் இப்படியெல்லாம் சொல்கிறார்கள்? எவ்வளவு துணிச்சல் அவர்களுக்கு?” மூத்தவன் லியோன் பதட்டம் மிகுந்தவனாக ஆனான், எப்போதுமே ஒரு பதட்டம் இருந்து கொண்டே இருக்கும். இளைஞர் வட்டாரங்களில் தன்னைக் குறித்து நிலவும் பிம்பங்கள் குறித்தும் அவதூறுச் சாக்கடைக்கு எதிரான தனது போராட்டம் குறித்தும் வெளிறிய முகத்துடன் எனக்குச் சொல்வான். அவன் சொல்வதை நேசத்துடன் கேட்டு “துணிச்சலான சிறிய தையல்காரன்” (“Brave little tailor”, ஆண்டர்சனின் கதை ஒன்றின் நாயகன்) என்பார் அவன் அப்பா.

இந்த “துணிச்சலான சிறிய தையல்காரன்” தனது ஆரோக்கியம் குறித்து பெருமிதத்துடன் இருந்தான். எதிர்பாராது வந்த தூக்கமின்மையால் அந்தக் காலகட்டத்தில் அவன் பட்ட வருத்தம் கொஞ்சமல்ல, ஆனாலும் அவன் தளர்ந்து விடவில்லை. அவனது வாழ்வின் இறுதி இரண்டு ஆண்டுகள் வரைக்கும் அவன் தனது ஆரோக்கியம் குறித்து பெருமிதத்துடனேயே இருந்தான், அந்த கடைசி இரண்டு ஆண்டுகளில் தான் அது திடீரென்று ரொம்ப மோசமானது. வெறுப்பு கக்கும் மாஸ்கோ விசாரணைகளது கறுப்பு ஆண்டுகள் அவனை சாய்த்து விட்டது. ஏனென்றால் எங்கள் பையன் லியோன், அங்கு இல்லாத நிலையில், தலைமைப் பிரதிவாதிகளில் ஒருவனாக இருந்தான். குற்றவியல் அவதூறுகளின் நஞ்சு அவனது பிஞ்சு உடலில் விஷம் போல் நுழைந்தது. சினோவியேவ், பியாடகோவ், முராலோவ், ஸ்மிர்னோவ், காமனேவ், புகாரின் மற்றும் இன்னும் பலரது கொலைகளால் அவனது ஒட்டுமொத்த நரம்பு மண்டலமும் பாதிக்கப்பட்டு விட்டது; காமனேவையும் புகாரினையும் அவனுக்கு சிறுவயதில் இருந்து தெரியும், மற்றவர்கள் பின்னாளில் பரிச்சயமானவர்கள், அவர்கள் அனைவரையுமே நேர்மையான புரட்சியாளர்களாக அறிந்திருந்தவன் அவன். அவர்களிடம் இருந்து கற்றுக் கொண்டான், அவர்களை நேசித்தான், அவர்களுக்கு மரியாதையளித்தான், அதாவது தனது துணிகர செயலுடனும் தனது லெனினுடனும், ட்ரொட்ஸ்கியுடனும் இருக்கக் கூடிய புரட்சியுடன் அவர்களை தொடர்புபடுத்திக் கண்டான்.

தூக்கங்களற்ற இரவுகள் மீண்டும் திரும்பின, அவற்றை எதிர்த்துப் போராடும் வலு அவனுக்கு இருக்கவில்லை. தூக்க மாத்திரைகள் அவனுக்கு பலனளிக்கவில்லை. விடியப் போகும் போது தான் அவனுக்குத் தூக்கமே வந்திருக்கும். மறுபடியும் வேலையைத் தொடங்க காலை ஏழில் இருந்து எட்டுக்குள் அவன் எழுந்தாக வேண்டும். எப்போதும் விழித்திருக்கும் ஜிபியு இன் கண்காணிப்பில் வேலை என்பது மேலும் கடினமான ஒன்றாக ஆகியிருந்தது. ஜிபியு முகவர்கள், பின்னாளில் வெளிப்பட்டதைப் போல, அவனுக்கு அடுத்த குடியிருப்பிலேயே தங்கியிருந்தனர். அவன் 26 ஆம் எண் குடியிருப்பில் இருந்தான், அவர்கள் 28 ஆம் எண் குடியிருப்பில் இருந்தார்கள்.

மாஸ்கோ விசாரணைகளின் சமயத்தில் தந்தையும் மகனும்

நோர்வேயில் எங்களைத் தடுத்து வைத்திருந்தமையானது எங்கள் பிள்ளையின் ஆழ்ந்த சிந்தனைகளை உசுப்பி விட்டது: அதன் அர்த்தத்தை அவன் முழுமையாக அறிந்திருந்தான். எதிரிகள் மட்டுமே சூழ்ந்திருக்கும் நிலையில் ஆயில் டாங்கரில் மூன்று வார பயணமாகச் சென்ற மெக்சிகோவுக்கான எங்களது புறப்பாடு அவனது வாழ்வில் மரண எச்சரிக்கையை அறிமுகம் செய்தது. Gourum இல் —நோர்வேயில் நாங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த இடம்— நாங்கள் இருந்த சமயத்தில் அவன் வெற்றுக்கண்ணுக்குப் புலப்படாத மையில் சங்கேதக் குறிப்புகளாய் எங்களது பயணத்தை எப்படி ஒழுங்கமைப்பது என்பதற்கான வழிகாட்டல்களை அனுப்பினான். எங்கள் எதிரிகள் அதைக் கண்டுபிடிக்கவில்லை, எங்களுக்கு அது கிடைத்தது. பிரான்சில் இருந்து எங்களுக்கு அவன் நண்பர்களை அனுப்பினான். ஆனால் எங்களைப் பார்க்க எவரொருவரும் அனுமதிக்கப்படவில்லை. எங்களது நண்பர்களில் எவரும் எங்களுடன் இருக்கவும் அனுமதிக்கப்படவில்லை. முழு நிச்சயமற்றதாக இருந்த அந்த மூன்று வாரங்கள் லியோனுக்கு ஒரு பெரும் சோதனைக் காலமாக இருந்தது.

அவனது தந்தை கூண்டிலடைக்கப்பட்ட புலி போல உறுமிக் கொண்டிருந்தார். அப்போது பிரபலமான மாஸ்கோ விசாரணைகளின் முதலாவது கட்டம் குறித்த தாமதமான செய்தித்தாள் குறிப்புகளும், அதற்குப் பதிலளிக்கவும் பொய்யர்களை அம்பலப்படுத்தவும் முடியாமல் தவித்ததும் லெவ் டாவிடோவிச்சுக்கு மாபெரும் சித்திரவதையாக இருந்தன. அவதூறுக்கு எதிராக தன்னைப் பாதுகாக்கவும், அதனை எதிர்த்துப் போராடவும் —அது அவரது இயல்பான அம்சம், அவரது இருப்பின் அங்கமான ஒரு உணர்ச்சி— அவர் உழைப்பிலும் இகழ்ச்சிக்குரிய அவரது அனைத்து எதிரிகளுக்கும் எதிரான போராட்டத்திலும் தஞ்சம் புகுந்தார். ஆனால் இங்கே Gourum இல் அவர் வாய்திறக்க முடியாதபடி செய்யப்பட்டிருந்ததால், நோயில் விழுந்தார்.

எங்கள் பையன் லியோன் இதைப் புரிந்து கொண்டான்: அவனது கையறுநிலைக்கு எல்லையே இருக்கவில்லை. அவனது தந்தை நிறைவேற்ற முடியாத கடமைக்கு தன்னை அவன் ஆட்படுத்திக் கொண்டான். அவரின் சுமையைக் குறைப்பதற்காக ”மாஸ்கோ விசாரணைகளின்” கொடிய எஜமானர்களை -அவர்களை அவர்களுக்குரிய குணாம்சங்களை கொண்டு காட்டினான்- வரலாற்றின் பக்கங்களில் அதன் மிக அவமானகரமான மற்றும் மிகவும் அதிர்ச்சியூட்டுகின்ற பக்கங்களை எழுதியவர்களை அம்பலப்படுத்துகின்ற வேலையை அவன் எடுத்துச் செய்தான். லியோன் இந்த வேலையை மிகச் சிறப்பாக செய்திருந்தான். எங்களது சிறையில் நாங்கள் இந்த சிகப்பு புத்தகத்தை பெரும் ஆர்வத்துடன் படித்தோம். “அத்தனையும் முழு உண்மை, முழு உண்மை, நல்ல பையன்” என்றார் அவன் அப்பா ஒரு நண்பனுக்குரிய நேசத்துடன். அவனை நேரில் பார்த்து கட்டித் தழுவ வேண்டும் போல் இருந்தது எங்களுக்கு!

புரட்சிகர நடவடிக்கை மற்றும் எழுத்து வேலை தவிர்த்து, எங்கள் பையன் உயர் கணிதத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தான், அதில் அவனுக்குப் பெரும் ஆர்வம் இருந்தது. பாரிஸில் அவன் பரீட்சைகளில் தேர்ச்சி பெற்று விட்டிருந்தான், கொஞ்சம் முறைப்படி வேலை செய்வதற்கு நேரம் ஒதுக்கவும் கனவு கண்டு கொண்டிருந்தான். அவனது மரணத்தின் சமயத்தில், அவன் ஹாலந்து அறிவியல் நிறுவனத்தில் ஒரு இணைஆய்வாளராக ஏற்கப்பட்டிருந்தான், ரஷ்ய எதிர்ப்பாளர்கள் என்ற ஆய்வுப்பொருளில் வேலையை தொடங்கவிருந்தான். இளைஞர்களில் இந்தத் துறையில் மிகப் பிரம்மாண்டமான அனுபவம் படைத்திருந்தவர்களில் ஒருவன் என்பதோடு எதிர்ப்பாளர்கள் அணியின் தோற்றத்தில் இருந்தான அதன் முழு வரலாறுக்கும் அவன் முழுக்கப் பரிச்சயமானவனாய் இருந்தான்.

எங்களது பொருளாதார ஸ்திரமின்மை அவனை வாட்டியது. பொருளாதார சுதந்திரத்திற்காக எப்படி ஏங்கினான்! எதிர்கால சம்பாத்திய வாய்ப்புகள் குறித்து ஒருமுறை எனக்கு எழுதியிருந்தான். சாத்தியங்கள் நன்றாய்த் தான் இருந்தன, ஆனாலும் அவனுக்கு இன்னும் திட்டவட்டமான உறுதி கிட்டியிருக்கவில்லை. (அறிவியல் நிறுவனத்தில் வேலை செய்வது) “ஒரு அருமையான விடயமாக இருக்கும்” என்றான், “எனது வயதான பெற்றோருக்கும் என்னால் உதவ முடியும்” என்று மகிழ்ச்சி பொங்க சேர்த்துக் கொண்டான். “ஏன் கனவு காணக் கூடாது” அவன் கேட்டான். எங்கள் பிள்ளையின் இந்த வார்த்தைகளை நானும் அவரும் அன்புடனும் நேசத்துடனும் அடிக்கடி நினைவுகூர்ந்து கொள்வோம். திரு. ஸ்பால்டிங், — ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் ரஷ்யத் துறையில் உதவி மேற்பார்வையாளர்— வரவிருக்கும் ஒரு வேலை குறித்து பாரிஸில் எங்களது பையனுடன் கொஞ்சம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார், அவர் பின்னாளில் லியோன் குறித்து இப்படி எழுதினார்:

செடோவின் மரணம் எனக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஒரு மிகத் திறமையான மற்றும் ஈர்ப்பான மனிதனாக அவர் என்னைப் பெரிதும் கவர்ந்திருந்தார், அவரது எதிர்காலம் சிறப்பானதாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகத்திற்கிடமில்லை. அவர் மரணமடைந்த சூழல் குறித்து எங்களுக்குத் தெளிவாகத் தெரியவில்லை: மருத்துவ அலட்சியத்தாலோ, அல்லது இன்னும் பயங்கரமான விடயத்தினாலோ நடந்திருக்கலாம் என்பதாக சில தகவல் ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. சென்ற அக்டோபரில் லியோனுடன் நான் பேசி முடிவுக்கு வந்திருந்த தற்காலிக உடன்பாடு உள்ளிட்ட பேச்சுவார்த்தையின் சுருக்கத்தை ஒரு சிறு குறிப்பாக எனக்கு எழுதி அனுப்ப முடியுமா? ரஷ்ய உள்நாட்டுப் போர் மற்றும் போர் கம்யூனிசம் தொடர்பாக ட்ரொட்ஸ்கியிடம் இருந்து சில விபரங்களை எடுத்துக் கொள்ள அந்த குறிப்பை நான் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

புரட்சியில் ஒரு குழந்தையாக காலடி எடுத்துவைத்த லியோன் தனது வாழ்க்கையின் இறுதி வரை அதில் இருந்து விலகவில்லை. குழந்தைப் பருவத்தில் அரை-நனவுடன் புரட்சிக்கு அவன் கொண்டிருந்த விசுவாசம் பின்னாளில் ஒரு நனவான ஆழமாக வேரூன்றிய அர்ப்பணிப்பாக முதிர்ச்சியடைந்தது. 1917 கோடையில், அவன் ஒரு கையில் ரத்தம் வடிய பள்ளியில் இருந்து மரவேலைத் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்திற்கு (போல்ஷிவிக்) வந்தான். அங்கு அதன் பத்திரிகையான வூட்வேர்க்கர்ஸ் எக்கோ வில் நான் ஆசிரியராகவும் பிழைதிருத்துபவராகவும் வேலை செய்து கொண்டிருந்தேன். சூடான விவாதங்கள் Tauride Palace, Smolny, அல்லது Circus ஆகிய இடங்களில் மட்டுமல்ல வீதிகளிலும், வீதிவாகனங்களிலும், பள்ளிகளிலும், வேலையிடங்களிலும் நடந்து வந்ததான ஒரு காலம் அது. காலை நேரத்தில், ஒரு நியதியாகவே, எங்களது சங்க அலுவலகத்தில் பல தரப்பட்ட தொழிலாளர்களும், நடப்பு பிரச்சினைகள் குறித்து, அதாவது பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றவிருப்பது சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து, காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

பரந்த தொழிலாளர்களைப் பொறுத்தவரை, இந்தப் பிரச்சினைகள் லெவ் டாவிடோவிச்சின் ஆளுமையுடன் பிரிக்கவியலாதபடி பிணைந்ததாய் இருந்தன. அவரது பேச்சுக்களை அவர்கள் விவாதித்தார்கள் — இந்த விவாதங்களில் உறுதித்தன்மை கொண்ட மற்றும் ஒன்றுபட்டதன்மை கொண்ட மனத்திட்பத்தை: வெற்றியின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையுடன் ஒரு தீர்மானகரமான போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து முன்நோக்கி நடைபோடுவதற்கான ஒரு தீவிர வேட்கையையும் உணரக் கூடியதாய் இருந்தது.

பிள்ளைகள், சங்கத்தின் உணவருந்தும் அறையில் என்னுடன் சேர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். அந்த சமயத்தில் லெவ் டாவிடோவிச் இடைக்கால ஜனநாயக அரசாங்கத்தின் சிறைச்சாலையில் இருந்தார். கை குறித்து தோழர்கள் கேட்டபோது லியோன், கெரென்ஸ்கி (பிரதம ஆட்சியாளரின் மகன்) கடித்து விட்டதாகக் கூறினான். அது எப்படி? “அவன் பல்லைப் பார்த்து ஒன்று கொடுத்தேன்”. என்ன நடந்தது என்பது எங்களுக்குப் புரிந்து விட்டது. அதே பள்ளியில் அப்போது தொழிலாளர் துறை அமைச்சராக இருந்த ஸ்கோபேலேவின் பிள்ளைகளும் படித்தனர். சண்டை நடப்பது தினசரி வாடிக்கை.

மறைந்திருந்து தாக்கிய ஜிபியு எங்கள் பிள்ளை மற்றும் நண்பனின் இளமையான, காயம்பட்ட வாழ்க்கையின் ஆயுளைக் குறைத்து விட்டது. அக்டோபர் புரட்சியின் வரலாற்றில் முன்கண்டிராத ஒரு மேல்நோக்கிய உயர்வுக்காய் இந்த விலை எடுக்கப்பட்டு விட்டது. அதன் வீழ்ச்சிக்குப் பொறுப்பானவர்கள் இப்போது தமது வெறுக்கத்தக்க வேலையை முடிவு நிலைக்குக் கொண்டுவருகின்றனர். இரண்டாவது அக்டோபர் வரும்; அது மொத்த உலகையும் வெல்லும், அதன் முன்னோடியினது நாயகர்களுக்கும் சரி அதற்குக் குழிதோண்டியவர்களுக்கும் சரி உரிய பரிசினை அது வழங்கும்.

கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான பிராவ்தாவின் அழுக்கான பக்கங்களில் லெவ் டாவிடோவிச் ஆழ்ந்து செல்வதில்லை. வேகமாய் ஒரு பார்வை பார்த்து விட்டு, வெறுப்புடன் பக்கவாட்டில் விசிறிவிடுவார்.

அவர்கள் சுடுகிறார்கள்... லெவ் டாவிடோவிச் கூட இப்போது முழித்து விட்டார். நான் அவர் காதில் முணுமுணுக்கிறேன்: “அவர்கள் நமது அறையில் சுட்டுக் கொண்டிருக்கிறார்கள்”. அவரை ஒட்டி நெருங்கி, அவரை மிக மென்மையாகத் தள்ளி நானும் அவருடன் சேர்ந்து படுக்கைக்குக் கீழே தரையில் விழுகிறோம்.

”அவர்கள் சுடுகிறார்கள்” என்று சொல்லும் போது 1917 ஜூலை நாட்களில் “அவர்கள் வந்திருக்கிறார்கள்” என்று சொன்ன அதே உணர்வே எனக்கு இருந்தது. அது நடந்தது பெட்ரோகிராட்டில் —பின்னாளில் அது லெனின்கிராட் என்று பெயரிடப்பட்டது— கெரென்ஸ்கி அரசாங்கத்தின் போலிஸ் லெவ் டாவிடோவிச்சை கைது செய்ய வந்தபோது. அந்த சமயத்தில் அந்தக் கைதை நாங்கள் எதிர்பார்த்திருந்தோம் - அது தவிர்க்கமுடியாததாக இருந்தது. ஸ்ராலினின் தாக்குதலும் அதேபோல நாங்கள் எதிர்பார்த்ததுதான். அதுவும் தவிர்க்கமுடியாததுதான். எப்படியிருந்தபோதும் 1917 கைதை விடவும் 1940 மே 24 அன்று இரவு, எதிர்பார்த்திருந்த ஒன்று எதிர்பாராத நேரத்தில் வந்தது.

கெரென்ஸ்கி லெவ் டாவிடோவிச்சை கைது செய்தபோது

அச்சமயம் கெரென்ஸ்கியின் அரசாங்கம், நீண்ட காலம் தாக்குப்பிடிக்காத ஒன்றாய் இருந்தாலும் ஒரு வெற்றியை ஈட்டியிருந்தது, போல்ஷிவிக் தலைவர்களைக் கைதுசெய்வதில் அது வெற்றி பெற்றிருந்தது. இடைக்கால ஜனநாயக அரசாங்கத்தின் நெருக்கடி எங்ஙனம் தீர்க்கப்பட்டது என்பதை நினைத்துப் பார்க்கிறேன். Tauride அரண்மனையின் தூண் மண்டபத்தில் ஒரு அனல்பறக்கும் அமர்வு நடந்து கொண்டிருக்கிறது. சபாநாயகர் மேடைக்கு மிக அருகில் Lieberdans (இந்தப் பெயரில் தான் Demyan Bedny தனது பிரபலம் பெற்ற கவிதையில் மென்ஷிவிக்குகளைக் குறிப்பிட்டிருந்தார்) நிரம்பி வழிந்த ஒரு அரங்கில் நான் அமர்ந்திருந்தேன். திடீரென்று அங்கே வெற்றி இசை கேட்டது. காதைப் பிளக்கும் கரகோசத்துடனும் பரவசமான வாழ்த்துக்களுடனும் ஒரு இராணுவ இசைக்குழு அரண்மனைக்குள் நுழைந்தது. அரசாங்கம் தனது படைப்பிரிவில் தனக்கு விசுவாசமாக இருந்த ஒன்றை —இவையே இறுதியான விசுவாசப் பிரிவுகளென்பதை எதிர்காலம் நிரூபித்தது— அனுப்பியிருந்தது. ஆனால் அந்த சமயத்தில் அந்த எண்ணிக்கையினரே போதுமானதாய் இருந்தது. அதிகாரத்தில் இருந்தவர்கள் தங்களின் காலை ஊன்ற முடிந்திருப்பதாக உணரத் தொடங்கினர். வெற்றி பெற்றவர்கள் எப்படி தங்களுக்குள் இரகசியமாகக் கைகுலுக்கிக் கொண்டார்கள் என்பதையும், அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை கட்டுப்படுத்த எவ்வளவு சிரமப்பட்டார்கள் —முகங்கள் ஒளிர்ந்தன— என்பதையும், வெளித்தோற்றத்திற்கும் கூட அவர்களால் அமைதியை பராமரிக்க முடியாதிருந்தது, அங்ஙனம் சூழல்கள் உத்தரவிட்டிருந்தது என்பதையும் நான் கண்டேன்.

அடுத்த சில நாட்களில் கைதுகள் தொடங்கின. அந்த சமயத்தில் நானும் லெவ் டாவிடோவிச்சும் தோழர் வை. லாரினது குடியிருப்பில் ஒரு சிறு அறையில் தங்கியிருந்தோம். எங்களது பிள்ளைகள் சில நண்பர்களுடன் Terioki இல் இருந்தனர். லெவ் டாவிடோவிச் எப்போதும் போலவே தனது முழு நாள் பொழுதையும் கூட்டங்களில் கழித்து விட்டு பீட்டர்ஸ்பேர்க்கிற்கு இரவில் வெகுநேரம் கழித்து வந்திருந்தார்.

காலை ஐந்து மணி, வீட்டின் முற்றப் பகுதியில் கவனமாக காலடி எடுத்து வைக்கும் சத்தம் கேட்டது, சன்னல் அருகே சென்று திரையை லேசாக விலக்கிப் பார்த்தேன். அதிகாலையின் மங்கிய வெளிச்சத்தில் துப்பாக்கிகள் தோளில் தொங்க வெளிறிய சீருடைகள் நிற்பதை நான் பார்த்தேன். அது இடைக்கால ஜனநாயக அரசாங்கத்தின் ஒரு இராணுவப் படைப்பிரிவு. சந்தேகமேயில்லை, அவர்கள் எங்களைத் தேடித்தான் வந்திருக்கிறார்கள். லெவ் டாவிடோவிச்சின் தோளைத் தொட்டு நான் சொன்னேன், “அவர்கள் வந்திருக்கிறார்கள்”. விருட்டென்று உடனே எழுந்த அவர் சடுதியில் உடைமாற்றிக் கொண்டார். அழைப்பு மணி அடித்தது. லுனாசார்ஸ்கி இருக்கிறாரா என்று அவர்கள் கேட்டார்கள், அது ஒரு ஏய்ப்புத் தந்திரம். பின் அவர்கள் ட்ரொட்ஸ்கியைக் கைது செய்வதற்கான ஒரு உத்தரவை வழங்கினர். லாரின் சுலபத்தில் விட்டு விடவில்லை. அவர்களைக் காத்திருக்கும்படி செய்தார். பொறுப்பான Lieberdansகளை தொலைபேசியில் பிடிக்க அவர் முயற்சி செய்தார். எங்குமே பதிலே கிடைக்கவில்லை. நாங்கள் விடைபெற்றுக்கொண்டோம். எனக்கு மன உறுதியை அளிப்பதற்கு லெவ் டாவிடோவிச் அத்தனையும் செய்தார். அவர்கள் அவரை அழைத்துக் கொண்டு சென்றார்கள். அந்த நேரத்தில் அரசியல் சூழ்நிலை மிகவும் அபாயகரமாக இருந்தது. சண்டை பகிரங்கமாகி விட்டிருந்தது, நேரடி நடவடிக்கைகள் ஏற்கனவே செயலாக்கப்பட்டிருந்தன. அது வாழ்வா சாவா போராட்டம். ஆனாலும் அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பாய், லெவ் டாவிடோவிச் என்னை இறுதியாகப் பார்த்த பார்வையில் நம்பிக்கையும் சவாலும் நிரம்பியிருந்தது. “யாரை யார் ஜெயிக்கிறார்கள் பார்ப்போம்” என்று அந்த பார்வை என்னிடம் சொன்னது.

விடயங்களை ஏற்பாடு செய்வது, அனுப்புவது, அது போன்றவை தொடர்பாக சிறைச்சாலைக்கு பார்க்கச் செல்ல வேண்டியிருக்கும். எனக்கு லியோன் மற்றும் சேர்ஜியின் உதவி இருந்தது. பொட்டலங்களை (உணவு மற்றும் மற்றவை) வழங்கி வரும் வேலையை அவர்கள் பார்த்துக் கொண்டனர், “யார் முதலில் செல்வது பார்க்கலாம்” என்று அதை ஒரு விளையாட்டாகவே மாற்றிக் கொண்டனர். நிரம்பி வழிந்த வீதி வண்டிகளால் அவர்கள் சிரமத்தை எதிர்கொண்டாலும், எப்போதும் சிறைச்சாலைக்கு சந்திப்புக்கு வழங்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்திற்கு துல்லியமாகச் சென்று விடுவார்கள்.

தந்தையின் இரண்டாவது கைதில் அவர்கள் பெருமளவு உளைச்சல்பட்டார்கள். ஆனாலும் ஒட்டுமொத்த சூழலும் விரைவான விடுதலை மற்றும் வெற்றியை வாக்குறுதியளிப்பதாக இருந்தது. 1917 இல் ரஷ்யாவுக்கு வரும் வழியில் Halifax இல் ஆங்கிலேயர்களால் கப்பலில் இருந்து அகற்றப்பட்டு பிரிக்கப்பட்டதில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. அப்போது பிள்ளைகள் கைதிகள் அந்தஸ்தில் என்னுடனேயே இருந்தனர், சிறைச்சாலையில் அல்ல, ஒரு ரஷ்ய உளவாளியின் அழுக்கடைந்த வீட்டில் ஒரு அறை எங்களுக்காய் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் லெவ் டாவிடோவிச் எந்தவொரு விளக்கமும் தெரிவிக்காமல் மற்றவர்களுடன் சேர்த்து, கொண்டு செல்லப்பட்டிருந்தார். அந்த சமயத்தில் முழுமையான நிச்சயமற்ற தன்மையும் தனிமைப்படலும் எங்களை ஒடுக்கியது.

படுகொலை முயற்சி

பல நிமிடங்களுக்கு இடைவிடாமல் பொழிந்த துப்பாக்கி தோட்டாக்களில் இருந்து விலகி சுவற்றை ஒட்டி தரையில் ஒரு மூலையில் நாங்கள் படுத்திருந்தோம். பிற்சமயம் எங்களது படுக்கையறையின் சுவற்றிலும் கதவுகளிலும் இருந்த துளைகளை நாங்கள் எண்ணியபோது, அவை அறுபதைத் தொட்டிருந்தது. சுவற்றை ஒட்டி நெருக்கிப் படுத்திருந்து நாங்கள் காத்திருந்தோம்... லெவ் டாவிடோவிச்சை மறைப்பதற்காக கொஞ்சம் மேலே என்னை உயர்த்திக் கொண்டேன், ஏனென்றால் அந்த துப்பாக்கித் தோட்டாக்கள் அவரை நோக்கியே செலுத்தப்பட்டதாக எனக்குத் தெரிந்தது, ஆனால் அவர் என்னை தடுத்து நிறுத்தி விட்டார்.

அந்த கிரிமினல்கள் புகுந்து விட்டிருந்த பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்த எங்கள் பேரனின் “தாத்தா!” என அழும் குரல் கேட்டது. அவனது குரல் எங்கள் மீதான அபாயம் குறித்து எச்சரித்தது பாதியும் உதவி கோரி அழைத்தது பாதியுமாய் இருந்தது. எங்கள் பேரனுக்கு அது சுத்தமாக மறந்து விட்டது, அவனது பெரும் அழுகை மறந்து விட்டது, அவனது அனுபவங்களையும் ஞாபகங்களையும் நினைவுக்குக் கொண்டுவர நான் எவ்வளவு முயற்சி செய்தும், அவனால் அதை நினைவுகூர முடியவில்லை. ஆனால் அந்த அழுகைச் சத்தம் எங்களை சில்லிடச் செய்திருந்தது. எல்லாமே அமைதியாகியிருந்தது....

“…அவர்கள் அவனைக் கடத்தி விட்டார்கள்” என்றார் அவர் என்னிடம் சத்தமில்லாமல். எங்களது படுக்கையறைக்கும் எங்களது பேரனது அறைக்கும் பிரித்து நின்ற பகுதியில், ஒரு எரியும் குண்டின் நெருப்பு வெளிச்சத்தில், ஒரு நிழலுருவம் தோன்றி மறைந்தது: ஹெல்மெட் போன்றதொரு வளைவுடனும், பளபளப்பான பொத்தான்களுடனும் ஒரு நீள்வடிவ முகம் என்னில் ஒரு கனவு போல் தோன்றி மறைந்தது, அதன்பின் அந்த மனிதன் எனக்குத் தட்டுப்படவில்லை. அறையில் துப்பாக்கிச் சூடு நின்று விட்டது. தூரத்தில் முற்றத்தில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது.

மெதுவாக சத்தமில்லாமல் எங்களது படுக்கையறையைக் கடந்து குளியலறைக்குள் சென்றேன், அங்கிருக்கும் சன்னல் வழியாக முற்றத்தைப் பார்க்கலாம். எங்களது நண்பர்களும், எங்களது பாதுகாவலரும் வசித்த அந்த சிறிய வீடு தெரிந்தது. அங்கே ஒரு பெரிய யூகலிப்டஸ் (eucalyptus) மரமும் இருந்தது, அங்கிருந்து தான் அவர்கள் சுட்டிருக்கிறார்கள்! இந்த யூகலிப்டஸ் மரத்தின் பின்னால், எதிரிகள் ஒரு எந்திரத் துப்பாக்கியை வைத்திருந்திருக்கிறார்கள் என்பதைப் பின்னர் தெரிந்து கொண்டோம். தொடர்ந்து அங்கிருந்து சுட்டதன் மூலம், பாதுகாவலர்களை எங்களை அண்ட விடாமல் செய்வதற்கான உத்தி அது. விசாரணை நீதிபதிகள் பிற்சமயம் வளாகத்தில் ஒன்றரை கிலோ டைனமைட் கொண்ட ஒரு வெடிகுண்டையும் கண்டெடுத்தனர். சிகேய்ரோஸ் (Siqueiros) இன் தாக்குதல் வழக்கின் நீதிமன்றக் குறிப்புகளில் இது பதிவு செய்யப்பட்டிருப்பதைக் காணலாம். சிகேய்ரோஸ் மார்ச் 28, 1941 அன்று விடுதலை செய்யப்பட்டார்: தடயரீதியாக குற்றவாளியாக்கும் ஆதாரம் இல்லையாம்! எத்தனை கொடுமையானது! “சோவியத் மண்ணின் எஜமானர்”, “மக்களின் தந்தை”, இன்னபிற., இன்னபிற., பாட்டாளி வர்க்கத்தின் கருவூலத்தில் இருந்து தாராளமாக அள்ளியிறைத்திருக்கிறார். அந்த வெடிகுண்டில் ஒருவகையான தொழில்நுட்பக் குறைபாடு இருந்ததால் அதனைக் குற்றவாளிகள் பயன்படுத்தியிருக்க முடியாது என்று ஆவணங்களில் பதியப்பட்டது. ஆனாலும் அது ஒட்டுமொத்த வீட்டையும் அதன் அடித்தளத்தோடு தகர்க்கும் அளவுக்கு சக்தியுடைதாய் இருந்தது என்ற உண்மையை விசாரணை வெளிக்கொண்டு வந்தது.

முற்றத்திலும் துப்பாக்கிச் சூடு நின்று விட்டது. பின் மொத்தமும் அமைதியாய் இருந்தது. அமைதி.... சகிக்க முடியாத அமைதி. “உங்களை நான் எங்கே பாதுகாப்பாக மறைக்க முடியும்?” சூழ்நிலையின் பதட்டத்திலும் நம்பிக்கையின்மையிலும் நான் எனது வலுவை இழந்து கொண்டிருந்தேன். எந்த தருணத்திலும், அவர்கள் அவரை முடிக்க வருவார்கள். என் தலை சுற்றியது...அப்போது திடீரென்று அதே குரல், என் பேரனின் குரல் கேட்டது, ஆனால் இந்த முறை முற்றத்தில் இருந்து, முற்றிலும் வித்தியாசமானதாக, அமைதியைத் தொடர்ந்து வரும் இசைக் குறிப்புகள் போல் தைரியத்துடன், உற்சாகமாக ஒலித்தது: "Al–fred! Mar–gue–rite!” எங்களுக்குப் போன உயிர் திரும்பி வந்தது. ஒரு கணம் முன்னதாக, துப்பாக்கிச் சூடு ஓய்ந்த பின்னர் நிலவிய அமைதி, எங்களுக்கு ஒரு மயானத்தில், மரணத்தைப் போன்றதொரு தருணமாக உணரச் செய்திருந்தது... “அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்”.

“Alfred! Marguerite!” இல்லை, அவர்கள் உயிரோடு தான் இருக்கிறார்கள்... உயிரோடு! ஆனால் ஏன் அவர்கள் வரவில்லை? ஏன் எங்களை ஒருவரும் கூப்பிடவில்லை? எப்படிப் பார்த்தாலும், மற்றவர்கள் எல்லாம் போய் விட்டிருந்தார்கள் தானே. அநேகமாக அவர்கள் சரிசெய்யமுடியாத ஒன்றை நேருக்கு நேர் காண அஞ்சியிருந்திருக்கலாம். எங்களது படுக்கையறையில் இருந்து லெவ் டாவிடோவிச்சின் வேலை அறைக்குச் செல்லும் கதவின் கைப்பிடியைப் பற்றினேன். அது மூடியிருந்தது, நாங்கள் அதனை மூடுவதில்லை என்பதை ஒரு விதியாகவே வைத்திருந்தோம் என்ற நிலையில். கதவு புல்லட்களால் சல்லடையாகத் துளைக்கப்பட்டிருந்தது. அவர்கள் அதன் வழியாகத்தான் படுக்கையறைக்குள் சுட்டிருக்கிறார்கள். இடைவெளி வழியாகப் பார்த்தபோது கூரையில் இருந்த விளக்கில் இருந்து வந்த மெல்லிய தங்க நிற ஒளி அறையை நிரப்பியிருந்தது; கையெழுத்துப் பிரதிகள் இருந்த மேசை முழு ஒழுங்கில் இருந்தது; அலுமாரியில் இருந்த புத்தகங்கள் கைவைக்கப்படவில்லை. ஒவ்வொன்றும் சலனமற்று இருந்தது. முன்னர் எப்படி இருந்ததோ அப்படியே...எத்தனை விநோதம்: ஒழுங்கு, அமைதி, வெளிச்சம், மேசை மீதான அத்தனையும் அப்படியே இருக்கிறது....துப்பாக்கித் தோட்டாக்களால் சல்லடையாக்கப்பட்டிருந்த கதவு மட்டுமே இழைக்கப்பட்டிருந்த குற்றத்திற்கான சாட்சியாகப் பேசியது.

கதவில் பலமாகத் தட்டினேன். ஓட்டோ (Otto) ஓடிவந்தார். “ஏனோ கதவு அடைத்துக் கொண்டிருக்கிறது”. சேர்ந்து தள்ளி கதவைத் திறந்தோம். அந்த அருமையான, அச்சமயத்தில் ஒழுங்கு குலைக்கப்படாத அறைக்குள் நாங்கள் நடந்து போனோம்.

ரோபர்ட் ஷெல்டன் ஹார்ட்

ஸெவா, ஆல்பிரட், மார்கெரெட், ஓட்டோ, சார்லி, ஜாக், ஹரோல்ட் — எல்லோரும் அங்கே இருந்தார்கள். பாப் ஷெல்டன் மட்டும் தான் அங்கே இல்லை. பாவம், அந்தப் பையன், இரவுக் காவலில் இருந்தவனை அவர்கள் கடத்திச் சென்றுவிட்டனர். அவனது உடைமைகள் சில, உடைகள் சில, மற்றும் அவனது சாதனத்தின் பகுதிகள் எல்லாம் அந்த காலி அறையில் இன்னும் இருந்தன... இவையெல்லாம் ஒருவருக்கு நெஞ்சடைக்கச் செய்பவையாக இருந்தன; எங்கள் நண்பன், எங்கள் காவலனுக்கு என்ன ஆனது? என்று அவர்களைக் கேட்க வேண்டும் போலிருந்தது. எங்கே போனான்? அவனை அவர்கள் என்ன செய்தார்கள்? மர்மத்தால் மூடப்பட்டிருந்த பாப் குறித்த விடயங்கள் அவனுக்கு நேர்ந்த கேட்டை எங்களுக்குச் சொன்னது. ஷெல்டன் 23 வயதைக் கடந்து வந்திருந்தான். எத்தனை நம்பிக்கைகள், எத்தனை இலட்சியவாதம், எதிர்காலத்திலான நம்பிக்கை, அதற்காகப் போராட தயாராயிருக்கின்ற நிலை அந்த இளம் உயிரோடு சேர்ந்து மரித்துப் போனது! விந்தையான மெக்சிகோ அவனுக்கு எப்போதும் உற்சாகப்படுத்துவதாய் இருந்தது. வண்ண வண்ணமான சின்னஞ்சிறு பறவைகள் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும், அவற்றில் சிலவற்றை வாங்கி எங்கள் தோட்டத்தில் வளர்த்து வந்தான், அவற்றை ரொம்பவும் அன்புடன் பார்த்துக் கொண்டான். இருபத்தி மூன்று வருடங்கள்: வாழ்க்கையின் அனுபவம் அவற்றில் இல்லை; அபாயம் குறித்த ஒரு விழிப்புணர்வுக்கு, எப்போதும் உஷாராக இருக்க வேண்டிய அவசரத்துக்கு அவை இன்னும் பக்குவப்பட்டிருக்கவில்லை, ஆனாலும் கூட இந்த அத்தனையையும் வெகு குறைந்த காலத்தில் பெற்று விடத்தக்க அளவுக்கு அவை மிகுந்த உணர்திறனுடையவையாக இருந்திருந்தன. ஷெல்டனுக்கு நடப்பது ரொம்பப் பிடிக்கும். அவனது ஓய்வு நேரங்களில் கோயாகான் சுற்றுப்புறங்களை ஒரு நடை சென்று பார்த்து வருவான், வரும்போது பூங்கொத்துகளை அள்ளிக் கொண்டு வருவான்.

அவன் வந்து கொஞ்ச காலத்திலேயே லெவ் டாவிடோவிச்சிடம் இருந்து ஒரு பாடம் பெற்றான். எங்கள் இடத்தில் மறுகட்டுமான வேலை நடந்து கொண்டிருந்தது, ஒருசக்கரவண்டியுடன் ஒரு தொழிலாளி ஒவ்வொரு 15-20 நிமிடங்களுக்கு ஒருமுறை வெளியே சென்று விட்டுத் திரும்ப வேண்டியிருக்கும், அவருக்கு வாயிற்கதவைத் திறந்து விட வேண்டும். பாப் ஒரு பறவைக் கூண்டை ரொம்ப மும்முரமாகக் கட்டிக் கொண்டிருந்ததால், அந்த வேலை கெட்டு விடக் கூடாது என்பதற்காக அந்தத் தொழிலாளியிடமே வாயிற்கதவின் சாவியைக் கொடுத்து விட்டான். இது லெவ் டாவிடோவிச்சின் கவனத்திற்குத் தப்பவில்லை. பாப்பின் இந்த செயல் மிகக் கவனக்குறைவானது என்று அவனுக்கு விளக்கிய அவர் “உன்னுடைய கவனக்குறைவுக்கு நீயே கூட முதல் பலியாகி விடக் கூடும்” என்றும் சொன்னார். பாப்பின் துயரகரமான மரணத்திற்கு ஒரு மாதம் அல்லது ஆறு வாரத்திற்கு முன்னால் தான் இப்படிக் கூறியிருந்தார்.

மே 24 அன்றான தினம் எங்களுக்கு மிக சீக்கிரமாகவும் முழு பரபரப்போடும் தொடங்கியது. தோட்டாக்கள் சல்லடையாக்கியிருந்த சுவர்களையும் விரிப்புகளையும் குறித்து ஆராய ஆராய எங்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த அபாயம் குறித்த உணர்வு மேலும் நிரம்பப் பெற்றவர்களாக ஆனோம் என்பதோடு, தப்பிப் பிழைத்ததாகவும் உணர்ந்தோம். இரவின் பதட்டமான உணர்வு ஒரு பெரும் துருதுருப்பான மனோநிலையாக மாறி, அமைதியாக இருப்பதற்கான முயற்சிகளால் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இந்த தாக்கப்பட்ட நிலைமையானது இல்லாததுதான், விரக்தியின்மைதான், புத்தியற்றதும் வெட்கமற்றதுமான“தாங்களே ஏற்பாடு செய்துகொண்ட தாக்குதல் கோட்பாட்டு”க்கு ஆதரவான வாதங்களில் ஒன்றாக பின்னாளில் சேவை செய்தது. பகலில் எங்களை வந்து பார்த்த நண்பர்களிடம், ஜிபியு வின் இரவுநேரத் தாக்குதல் நிகழ்வுகளை நான் நினைவுகூர்ந்தபோது, அதனை ஏறக்குறைய குதூகலித்துக் கூறியது போலவே நான் உணர்ந்தேன். ஆனால் நான் கூறக் கேட்டவர்கள் எச்சரிக்கையடைந்தார்கள், சுவர் முழுவதும் தோட்டா ஓட்டைகளால் புள்ளி வைக்கப்பட்டிருந்த இரண்டு படுக்கைகளின் தலைப் பகுதியை நோக்கி அவர்கள் மிரட்சியான பார்வை பார்த்தார்கள், “எப்படிப் பார்த்தாலும் எதிரிகளுக்குத் தோல்வி தானே கிட்டியது” என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டிருந்தேன்.

எங்களது எதிரிகளின் இந்தத் தருணத்திலான இந்த தோல்வி கண்டிப்பாக அவர்களால் நிவர்த்தி செய்யப்பட்டே தீரும்; இந்த குற்றத்தின் சூத்திரதாரி அசரப் போவது கிடையாது என்பதிலான உறுதி அடுத்து வந்த நாட்களில் எங்களுக்கு மேலும் மேலும் வலுவடைந்து சென்றது. ஒரு புதிய வருகை நடக்கலாம், அதற்குத் தயாரிக்க வேண்டிய அவசியம் இருந்தது என்ற எண்ணமானது எங்களது உற்சாக மனோநிலையை மழுங்கடித்துக் கொண்டிருந்தது.

இறுதி மாதங்களில் லெவ் டாவிடோவிச்சின் பணிகள்

அதேசமயத்தில் லெவ் டாவிடோவிச் மே 24 சம்பவத்தின் வழக்கு விசாரணையிலும் பங்குபெற்றுக் கொண்டிருந்தார். அதன் மந்தமான வேகம் லெவ் டாவிடோவிச்சை ரொம்பவும் கவலைப்படுத்தியது. அவர் அந்த அபிவிருத்திகளை பொறுமையாகவும் சளைப்பின்றியும் —சம்பவ சூழ்நிலைகளை நீதிமன்றத்திற்கும் ஊடகங்களுக்கும் விளக்கிக் கொண்டும், வெளிப்பட்ட மற்றும் நம்பவழியற்ற பொய்களை அல்லது கெட்ட நோக்கத்துடனான அபத்தக் கதைகளை மறுப்பதற்கு தனக்கு சக்தியளித்துக் கொள்வதற்காக அசாத்தியமான முயற்சிகளை செய்து கொண்டும், இவை அத்தனையையும் தனக்கே உரித்தான தீவிரமான நுண்பார்வையுடன் செய்துகொண்டும், ஒரேயொரு சிறு விபரமும் கூட தனது கவனத்திற்குத் தப்பிவிட அனுமதிக்காமல் பார்த்துக் கொண்டும்— பின்பற்றி வந்தார். ஒவ்வொரு தனித்தனி விடயத்திற்கும் உரிய முக்கியத்துவம் கொடுத்து அவற்றை ஒரே மொத்தமாக கோர்த்துக் கொண்டிருந்தார்.

அவரது தளர்ச்சி பெருகியது. சரியாகத் தூங்கவில்லை, கண்ணை மூடுவார், பின் அதே சிந்தனைகளைக் கொண்டு எழுந்து விடுவார். சிலசமயங்களில் லெவ் டாவிடோவிச் அவர் தனியாய் இருக்கும் சமயங்களில் “நான் களைத்து விட்டேன்...களைத்து விட்டேன்” என்று ஆழ்மனதில் இருந்து தனக்குள் பேசுவார். எனக்கு ஒரு பெரும் எச்சரிக்கை தொற்றிக் கொள்ளும்: அதன் அர்த்தம் என்னவென்று எனக்குத் தெரியும். ஆனால் இன்னொன்றும் எனக்குத் தெரிந்திருந்தது: அவர் மட்டும் தனது உண்மையான வேலைக்கு அமைதியாகத் திரும்ப முடியும் என்றால் எத்தனை உற்சாகம், ஆதர்சம் மற்றும் சக்தி அவரது உணர்வில் பாயும் என்பதும் எனக்குத் தெரியும். செம்படை குறித்த ஒரு பகுப்பாய்வுப்பணி குறித்து யோசித்து வைத்திருந்தார், அதற்கான விடயங்களை அவர் சேகரித்துக் கொண்டிருந்தார், சர்வதேசச் சூழ்நிலை குறித்த இன்னொன்று; உலகப் பொருளாதாரம், மற்றும் போரின் சமீப காலகட்டம் ஆகிய இன்னும் மற்றவற்றையும் எழுத சிந்தித்துக் கொண்டிருந்தார். அன்றாடம் நடந்த சம்பவங்களும் ஸ்ராலின் செய்த அடுத்தடுத்த குற்றங்களும் இந்தப் பணிகளை எல்லாம் இரண்டாவது இடத்திற்குத் தள்ளுவதை அவசியமாக்கி விட்டது.

ஸ்ராலின் பற்றிய அவரது புத்தகம், நிதி அவசியம் மற்றும் அவரது புத்தக வெளியீட்டாளர்களின் அழுத்தம் ஆகிய சம்பந்தமில்லாத சூழ்நிலைகளால் அவர் மீது திணிக்கப்பட்டிருந்தது. “ஜனரஞ்சகமான”, இப்படித்தான் அவர் அதனை அழைத்தார், ஒரு புத்தகத்தை எழுதி கொஞ்சம் பணம் சம்பாதித்து விட்டு பின் ஓய்வாக தனக்குப் பிடித்த விடயங்களில் வேலைசெய்வதற்கு தனக்கு இருந்த விருப்பம் குறித்து அவர் பலமுறை என்னிடம் கூறியிருக்கிறார். ஆனால் அவரால் ஒருபோதும் இதனைச் செய்ய முடிந்ததில்லை, ஏனென்றால் அவருக்கு “ஜனரஞ்சகமான” புத்தகங்களை எழுதும் திறனில்லை. வெளியீட்டாளரின் ஆலோசனையை ஏற்க அவர் நீண்ட நாட்களாய் தயங்கி வந்தார், ஆனால் ஏற்பதற்கு எங்கள் நண்பர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள். லெவ் டாவிடோவிச் இறுதியாக ஒப்புக்கொண்டார். குறுகிய காலத்தில் இந்த வேலையைச் செய்துமுடிக்க அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் அதனை செய்ய ஆரம்பித்ததுமே, அவருக்கே உரித்தான மனச்சாட்சிக்கு மரியாதையளிக்கும் தன்மையும், அதனுடன் சேர்த்து நுட்பமாக தகவல்களை அலசும் தன்மையும் கறார்தன்மையும் அந்த வேலையைச் சூழ்ந்து கொண்டன, இதுகுறித்து அவர் அடிக்கடி என்னிடம் புலம்புவார். எப்படியிருந்தபோதிலும், அவர் அதனை முழுமையாக 1940 மார்ச்-ஏப்ரலுக்குள் முடித்து விடத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவரால் அது முடியாமல் போனது. முதலில் எங்கள் கட்சியிலான பிரச்சினை —அதன் அமெரிக்கப் பிரிவு அவரை கவனம் சிதறச் செய்தது— அதன்பின் மே 24 நிகழ்வுகள்.

மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸுக்கு இடையில் இருந்த நட்பினை விபரித்து எழுதுவது லெவ் டாவிடோவிச்சின் இரகசிய மற்றும் ரொம்பவும் விருப்பமான ஆசைகளில் ஒன்றாக இருந்தது. அவர்களுக்கு இடையில் இருந்த “காதல்”, அப்படித் தான் அவர் என்னிடம் கூறுவார், அவரைப் பொறுத்தவரை அது யாராலும் ஆராயப்படாமல் இருந்தது, அவர் அதனைச் செய்ய விரும்பினார். லெவ் டாவிடோவிச்சுக்கு ஏங்கெல்ஸ் மீது, அவரது முழு ஆழமான மானுட ஆளுமையின் மீது அபரிமிதமான காதல் இருந்தது. இரண்டு நண்பர்களில், மிகப்பெரியவர்களாக மற்றும் முற்றிலும் மாறுபட்ட ஆளுமைகளாக இருந்த அவர்கள் இருவருமே ஒற்றை இலட்சியத்திற்காக ஒன்றாக இணைந்து பாடுபட்டனர் என்ற விடயம் மிகப்பெரும் அளவில் அவரது உள்ளத்திற்குக் கிளர்ச்சியூட்டியது.

லெனின் குறித்து எழுத திட்டமிட்டிருந்த புத்தகம்

லெனின் குறித்த புத்தகத்தை தொடர்வதை தற்காலிகமாக விட வேண்டியிருந்தது குறித்து அவருக்கு வருத்தமில்லாமல் இல்லை. லெனின் குறித்து தம் சுயத்தை நுழைத்தும் அவரை தமது சொந்த அளவுகோல்களில் அளந்தும் எழுதப்பட்டிருந்த படைப்புகள் அத்தனைக்கும் மாறாய் லெனினை உண்மையில் அவர் இருந்தவாறாக காட்ட வேண்டும் என்று அவருக்குள் ஆழமான மற்றும் பற்றியெரியும் ஒரு விருப்பம் இருந்தது. அது எத்தனை அற்புதமானதாக இருப்பினும், இழிபாசாங்கினர்களின் கற்பனையின் சிறு துளியும் கூட, உண்மையுடன் ஒப்பிடத்தகாதது. வரலாற்றில், தனது அத்தனை மேதமையுடனும் தனது அத்தனை மனிதாபிமான பலவீனங்களுடனும் லெனின் காட்சியளிக்க வேண்டும், அதற்கான ஒவ்வொரு உரிமையும் அவருக்கு உண்டு. இந்த இழிபாசாங்கினர்களோ, அதற்கு மாறாக, லெனினுக்கு நல்ல சுபாவம், கண்ணியம், எளிமை, இன்னபிறவற்றை சொத்தாக்கிக் கொண்டிருக்கிறார்கள் — லெனின் தொடர்பாக இவை அத்தனையினதும் அர்த்தம்தான் என்ன? அவர்கள் அவரை “தமது சொந்த அளவுகோலால்” சித்தரித்தார்கள். விளாடிமிர் இலிச் ஒரு சராசரி வடிவத்திற்குள்ளாக பிடித்து விடக் கூடிய ஒரு மனிதராக இருக்கவில்லை. லெனின் குறித்து என்னிடமிருந்தும் மிக நுண்ணிய முக்கியத்துவமற்றதாக தோன்றக் கூடிய, ஆனால் யதார்த்தத்தோடு பொருந்தக்கூடிய விடயங்களையும் கூட, ஆனால் அவை நிஜத்துக்குரியவையாக இருக்க வேண்டும், நினைவுகூர்ந்து பார்க்குமாறு லெவ் டாவிடோவிச் கேட்பதுண்டு. அவருக்குத் தெரியாத அதே சமயத்தில் உண்மையான லெனினை அவருக்கு உணரத்தக்கதாக இருக்கக் கூடிய பல்வேறு தகவல்களையும் நான் அவருக்கு நினைவுகூர்ந்து சொல்வேன் அல்லது குறிப்பாக எழுதித் தருவேன், அதில் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார்.

1917 இல் பெட்ரோகிராடில், ஸ்மோல்னியில், எங்களது குடியிருப்பு இருந்த அதே வளாகத்தில் தான் லெனின் மற்றும் அவரது குடும்பத்தாரின் குடியிருப்பும் இருந்தது. நாங்கள் புழங்கும் பகுதியில் இருந்த குளியலறையைத் தான் அவர்கள் பயன்படுத்தி வந்தனர். கடந்து செல்கையில் நாங்கள் சந்தித்துக் கொள்வதுண்டு. லெனின் எப்போதும் உற்சாகம் பொங்கவும், சுறுசுறுப்பாகவும், அமைதியாகவும் இருப்பார். ஒருமுறை உள்ளே வந்த அவர் பையன்களை ஒன்றாய் பக்கத்தில் நிறுத்திப் பார்த்தார், கொஞ்சம் பின்னால் சென்று, கைகளை தன் பாக்கெட்களில் வைத்திருந்த வண்ணம், “எனக்கு இது ரொம்பப் பிடித்திருக்கிறது” என்று கூறி என்னை வியப்பில் ஆழ்த்தினார். குழந்தைகள் உடுத்தியிருந்த உடை அவரது கண்களை ஈர்த்திருந்தது. அந்த நாட்களில், துணி எளிதில் கிடைக்காது, சில சட்டைகள் தைப்பதற்கு துணி பெற ஒரு சிறப்பு பதிவு செய்யவேண்டும் என்பது மறந்து போய்விட்டது. எங்களிடம் பூவேலைப்பாடு கொண்ட வெல்வெட் மேசைத்துணி ஒன்று இருந்தது. அதனைச் சுத்தம் செய்து, வெட்டி குழந்தைகளுக்கு துணியாகத் தைத்திருந்தேன். குழந்தைகளுக்கு அது பிடிக்கவில்லை. “ஏன் நமக்கு முரட்டுத் துணியில் போய் சட்டைகள் தைக்க வேண்டும்?” நானே எனக்கு நியாயம் சொல்லிக் கொண்டாலும், அதனால் எந்த பிரயோசனமும் இல்லை. குழந்தைகள் அந்த ஆடைகளை உடுத்திக் கொண்டார்கள் தான், என்றாலும் முணுமுணுக்காமல் இல்லை. விளாடிமிர் இலிச் பாராட்டிய பின்னர், அவர்கள் அமைதியாகி விட்டார்கள்.

லெவ் டாவிடோவிச்சின் ஆரோக்கியம்

சோவியத் ஒன்றியத்தில் நாங்கள் இருந்த பத்து ஆண்டுகளின் போது லெவ் டாவிடோவிச்சின் ஆரோக்கியத்தில் அத்தனை பெரிய ஏற்ற இறக்கங்கள் இருக்கவில்லை. புலம்பெயர்ந்து வாழுகையில், அல்லது இடம்பெயர்கையில், அவரது உடல்நிலை ஏற்ற இறக்கங்களை காணத் தொடங்கியது. புலம்பெயர்ந்து நாடுகடந்து (அல்மா-அட்டா) வாழுகையில், லெவ் டாவிடோவிச்சின் வாழ்க்கை கடிதப் பரிமாற்றத்தினால் விழுங்கப்பட்டது — அதன் வழியில் இது மாஸ்கோவில் கடைசியாக வாழ்ந்த எங்களது வாழ்க்கையின் ஒரு தொடர்ச்சியாக இருந்தது; நடப்பு அரசியல் மற்றும் தந்திரோபாயப் பிரச்சினைகள் தான் எப்போதும் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. அத்தனை கடிதங்களையும் ஒரேநாளில் படிக்க முடியாது என்ற அளவுக்கான கடிதங்கள் எங்களுக்கு வந்து கொண்டிருந்தது. அப்பாதான் பெரும்பான்மையானவற்றுக்குப் பதிலனுப்புவார் என்றாலும் பையன் லியோன் செடோவ் ஒரு பகுதிக்குப் பதிலனுப்புவது வழக்கமாகியிருந்தது. எங்களது கடைசி மாதங்களின் போது (அல்மா-அட்டாவில்) அத்தனை கடிதப் போக்குவரத்தும், அனைவரும் நன்கறிந்தவாறு, தடைசெய்யப்பட்டு விட்டது. அது சட்டவிரோதமாக்கப்பட்டு விட்டதால், அதன் எண்ணிக்கை பெருமளவு குறைந்தது.

பிரிங்கிபோவில் (துருக்கி) இருக்கும்போது லெவ் டாவிடோவிச்சுக்கு முதலில் இது ரொம்பவும் கடினமாக இருந்தது. செயலற்று இருப்பதும் தனிமைப்படலும் அவரை ஒடுக்கியது. வாழ்வாதாரத் தேவைகள், பாதுகாப்புக்கான நிதி, வெளிநாட்டில் உள்ள எதிர்ப்பாளர் குழுக்களுக்கான நிதிகள் ஆகியவை குறித்த பிரச்சினைகள் எழுந்தன. இவை அனைத்தும் சுயசரிதை எழுதுவதற்கு ஒரு வெளியீட்டாளர் அளித்திருந்த யோசனையை ஏற்பதற்கு அவரைத் தள்ளின. இந்த வேலைக்குள் நுழைவதென்பது உளவியல்ரீதியாக லெவ் டாவிடோவிச்சுக்கு மிகவும் கடினமான காரியமாக இருந்தது. அவரது பொதுவான மனோபாவத்தில் இருந்து மிகவும் கூரிய வகையில் இணக்கமற்றதான ஒன்று அது. “நினைவுகூருவதற்கு” அவர் தன்னைத் தானே நிர்ப்பந்திக்க வேண்டியிருந்தது. இவை அவரது நரம்பு மண்டலத்திலும் அவரது ஆரோக்கியத்திலும் எதிர்வினையாற்றியதில் ஒட்டுமொத்த உடல்நிலையும் பாதிக்கப்பட்டது.

ஐரோப்பிய சக-சிந்தனையாளர்களுடனான உறவு ஸ்தாபிக்கப்பட்டதில் அவரது மனோநிலை மற்றும் உடல்நிலை மீட்சி கண்டது. அயலகங்களில் இருந்து பார்வையாளர்கள் வருவது, அவர்களுடன் விவாதிப்பது, கடிதப் போக்குவரத்து, ஐரோப்பாவில் எதிர்ப்பாளர் அணிப் பத்திரிகைகளுக்கு அரசியல் கட்டுரைகள் எழுதுவது — இவை அத்தனையும் லெவ் டாவிடோவிச்சை அவரது இயல்பு நிலைக்கு மீட்டது. இது சுயசரிதை தொடர்பாக அவர் அளித்துக் கொண்டிருந்த கட்டாய உழைப்பில் இருந்து அவரைக் கொஞ்சம் தளர்த்தியது.

உணவு மேசையிலும் சரி அல்லது மர்மோரா கடலில் மீன் பிடிக்கச் செல்கையிலும் சரி, “அலை ஓய்ந்துவிட்டதான” சந்தேகமே யாருக்கும் எழவில்லை. அரசியல் விடய உரையாடல்கள், நகைச்சுவையூட்டும் பேச்சுக்கள், நொந்து போயிருக்கும் தோழருக்கு உற்சாகமூட்டுவது இவை அனைத்துமே லெவ் டாவிடோவிச்சின் மனோநிலை சமநிலைப்பட்டிருந்ததற்கு சாட்சியம் கூறின. எங்களுடன் வாழ்ந்த எங்கள் பையன் மட்டுமே, அவ்வாறில்லை என்பதாக ஊகித்தான். ”வெள்ள அலை”யின் அந்த காலகட்டத்தை நான் எத்தனை நேசித்தேன், அச்சமயத்தில் நான் எத்தனை மகிழ்ச்சியாக இருந்தேன்! இளமை, புதுமை, உற்சாகம் அனைத்தும் இந்தக் காலத்தில் லெவ் டாவிடோவிச்சுக்கு திரும்பியிருந்தது. உணர்ச்சிப் பெருக்குடன் அரசியல் கடிதங்களை எழுதப் பணிப்பார். நண்பர்களுக்கு ஆலோசனைகள் சொல்வார், தனது சுயசரிதை மற்றும் பல்வேறு கட்டுரைகளை எழுதப் பணிப்பார், அதன்பின் நீலக்கடலில் மீன் பிடிக்கச் செல்வார்.... அவர் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தார். இவை அத்தனையும் முழுமையான தனிமைப்படலில்.

நான்கு சுவர்களுக்குப் பின்னால்

ரோயான் (பிரான்ஸ்) அருகே அட்லாண்டிக் கடற்கரையில் எங்களது நண்பர்கள் எங்களுக்காக வாடகைக்கு அமர்த்தியிருந்த தனித்திருந்த ஒரு கிராமத்து வீட்டில், எங்களது வாழ்க்கை ஒரு ஆர்ப்பரிப்பான தொடக்கத்துடன் தான் இருந்தது. பல்வேறு நாடுகளில் இருந்துமான நண்பர்களும் சக-சிந்தனையாளர்களும் லெவ் டாவிடோவிச்சை பார்க்க தினசரி வந்து விடுவார்கள். ஒருநாளைக்கு 15 முதல் 20 பார்வையாளர்கள் வரை வருவார்கள். லெவ் டாவிடோவிச் தினந்தோறும் இரண்டு அல்லது மூன்று விவாதங்கள் நடத்துவார். முழு எழுச்சியூட்டல், உற்சாகம் மற்றும் தீர்ந்தே போகாதது போல தோன்றக் கூடிய ஆற்றல் இவற்றுடன் அவர் தனது களைப்பின்மையையும் உத்வேகத்தையும் கொண்டு எங்கள் நண்பர்களை மலைக்க வைத்தார், மகிழ்ச்சி கொள்ள வைத்தார்.

பிரான்சில் எங்கள் வாழ்க்கையின் நிதி அம்சம் மிகக் கூர்மையாக மேலெழுந்தது. அமைதியான வேளையும் இருந்தது. நான் மருத்துவச் சிகிச்சைக்காக பாரிஸ் செல்ல வேண்டியிருந்தது. லெவ் டாவிடோவிச் அதை வலியுறுத்தினார். அவரது சொந்த உடல்நிலையிலும் ஏற்ற இறக்கங்கள் மாறி மாறி வந்தன.

மோசமான உடல்நிலையிலும் கூட வந்திருந்த சில நண்பர்களுடன் ஒரு விவாதத்தை, எங்களது பையனும் உடன் இருக்கையில் நடத்தி முடித்ததாகவும், அதனை வெற்றிகரமாகச் செய்துவிட்டதாகவும் ரோயான் (Royan) இல் இருந்து ஒருமுறை லெவ் டாவிடோவிச் எழுதியிருந்தார். “லியோவிக்கை கவனித்தேன்” அவர் எழுதினார், “அவன் கண்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. பிரகாசத்துடன் இருந்தான்.” விவாதம் முடிந்ததும், அலுப்பின் காரணத்தால் லெவ் டாவிடோவிச் அன்று சீக்கிரமே தூங்கச் சென்று விட்டார். சீறும் கடல் தனது நுண்துளிகளை அவரது சன்னல்கள் மீது விசிறியடித்து, சன்னல் கண்ணாடிகளில் நீர்த்துளிகளை படியச் செய்திருந்தது. லியோன் அப்பாவிடம் இருந்து விடைபெற வந்தான். அந்த இரவே அவன் பாரிஸ் திரும்ப வேண்டியிருந்தது. அவர்கள் அப்போதுதான் முடிந்திருந்த விவாதம் குறித்து சில குறிப்புகளைப் பகிர்ந்து கொண்டார்கள். எங்கள் பையன் ரொம்ப உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் இருந்தான். தன் தந்தையின் படுக்கையை நெருங்கி, தன் தலையைக் குனிந்து, அவன் அப்பா எழுதியவாறாக, “ஒரு குழந்தையைப் போல” தனது தந்தையின் மார்பில் அழுந்தச் சாய்ந்து, “அப்பா, உங்களை நான் ரொம்பவும் நேசிக்கிறேன்” என்றான். இருவரும் கட்டித்தழுவிக் கொண்டு கண்ணீருடன் விடைபெற்றனர்.

கடல் தொடர்ந்து தனது சீற்றமான அலையின் ஏற்றங்களுடனும் இறக்கங்களுடனுமே வாழ்கிறது. அது உணர்ச்சிகரமாய் கொந்தளிக்கிறது. அந்த மகத்தான போராளியும் வன்முறையுடன் வாழ்க்கையை தொடர்ந்திருக்க வேண்டியிருக்கலாம். வன்முறையைக் கையாளுபவர்கள் பழிவாங்கலை சந்திப்பார்கள். வன்முறை பலமிழந்து போய்விடும். அதன் எண்ணிலடங்கா பலிகளை நினைவுகூர்ந்து, வருங்காலத்தின் சுதந்திரமான மனிதகுலம் தலைவணங்கும்.

லியோன் செடோவ் கொல்லப்பட்டாரா ?

திரு. பெனகல் அவர்களுக்கு,

கீழ் நீதிமன்ற விசாரணை நீதிபதி,

செய்ன் நிர்வாக பிரிவு.

கனம் நீதிபதி அவர்களே:

இன்று காலை எனக்கு எனது வழக்கறிஞர்களான கனம்பொருந்திய றோசென்தால் (Rosenthal) மற்றும் றோஸ் (Rous) இடமிருந்து, எனது மகன் லியோன் செடோவின் மரணம் பற்றிய ஆரம்ப விசாரணை ஆவணங்களும் மருத்துவ அறிக்கைகளும் கிடைத்தன. இது மிகவும் முக்கியமான மற்றும் துன்பகரமான ஒரு விடயமென்பதால், இராஜீய தந்திரங்கள் எதுவுமின்றி முழுமையான வெளிப்படையோடு பேசுவதை எனது உரிமையாக நினைக்கிறேன். எனக்கு வழங்கப்பட்டுள்ள ஆவணங்களில் இருக்கும் வெளிப்படையின்மை என்னை ஆச்சரியமூட்டுகின்றன. பொலிஸ் விசாரணையும், அத்துடன் மருத்துவ நிபுணர்களின் அறிக்கையும், வெளிப்படையாகவே மிக மிக மேலோட்டமான போக்கில் சென்று கொண்டிருக்கின்றன. இவ்விதத்தில் உண்மையை வெளிக்கொணர முடியாது.

கனம் நீதிபதி அவர்களே, மருத்துவ நிபுணர்கள் செடோவ் மரணத்தை இயற்கையாய் ஏற்பட்டதென விளங்கப்படுத்தும் முடிவுக்கு வருகிறார்கள். நிலவும் சூழலையை வைத்து பார்த்தால், அம்முடிவு ஏறக்குறைய அர்த்தமற்றதாகிறது. எந்தவொரு வியாதியும் குறிப்பிட்ட நிலைமைகளின் கீழ் மரணத்திற்கு இட்டுச் செல்லக்கூடும். மறுபுறம் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் நிச்சயமான மரணத்தில் கொண்டு போகின்ற அளவிலான வியாதியோ அல்லது கிட்டத்தட்ட ஒன்றுமே இல்லாமல் இருப்பதும் உண்டு. நீதித்துறை விசாரணை, ஒரு குறிப்பிட்ட வியாதி தான் மரணத்திற்கு இட்டுச் சென்றதா என்ற தத்துவார்த்த கேள்வியை எதிர்கொள்ளாமல் விடுத்தாலும், செடோவை யாரேனும் வேண்டுமென்றே, எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவில் கொல்ல வியாதியை மோசமடையச்செய்தார்களா என்ற நடைமுறைக் கேள்வியை முகங்கொடுக்கிறது.

மாஸ்கோவில் இந்தாண்டு நடந்த புக்காரின்-றைக்கோவ் (Bukharin-Rykov) விசாரணையின்போது, ஜிபியு நடைமுறைகளில் உயிரிழக்க இட்டுச்செல்லும் நோயைத் தூண்டிவிடுவதும் ஒரு நடைமுறையாக இருந்தது என்பது எரிச்சலூட்டும்விதத்தில் வெளிப்படையாக வெளிப்பட்டது. ஜிபியு இன் முன்னாள் தலைவர் மென்ஸின்ஸ்கி (Menzhinsky), மற்றும் எழுத்தாளர் கோர்க்கியும் (Gorky) இளைஞர்கள் இல்லை, ஆனால் நோயாளிகள்; அதன் காரணமாக, அவர்களது மரணத்தை வேண்டுமானால் சுலபமாக 'இயற்கை மரணமென்று' விளங்கப்படுத்தி விடலாம். மருத்துவர்களின் உத்தியோகபூர்வ கண்டுபிடிப்புகளும் உண்மையில் அதைத்தான் அறிவித்தன. ஆனால் ஜிபியு இன் முன்னாள் தலைவர் யகோடாவின் (Yagoda) வழிகாட்டலின் கீழ், மாஸ்கோ மருத்துவ உலகின் பிரகாசமான வெளிச்சம், நோயாளிகளது நோயைக் கண்டுபிடிக்க முடியவில்லை அல்லது கண்டுபிடிக்க மிகவும் சிரமமாக உள்ளது என்ற அணுகுமுறைகளைக் கொண்டு மரணத்தை துரிதப்படுத்தியதை மாஸ்கோ நீதி விசாரணைகளிலிருந்து மனிதயினம் தெரிந்து கொண்டது. நாம் அக்கறை கொண்டுள்ள கேள்வியின் நிலைப்பாட்டிலிருந்து, குற்றஞ்சாட்டப்பட்டவரது சாட்சியம் குறிப்பிட்ட ஸ்தூலமான சந்தர்ப்பங்களில் உண்மையா பொய்யா என்பது ஏறத்தாழ கருத்துவேறுபாட்டிற்குரிய ஒரு விடயமாகிறது. இரகசியமாக விஷம் செலுத்தும் அணுகுமுறைகள், தொற்றுநோயை பரவச் செய்தல், குளிரூட்டுதல் மற்றும் பொதுவாக மரணத்தைத் துரிதப்படுத்துதல் ஆகியவை ஜிபியு இன் அகராதியில் உள்ளடங்கியதே என்பதும் இதில் பிற்சேர்க்கையாக சேர்கிறது. மேற்கொண்டும் விபரங்களுக்குச் செல்லாமல், சோவியத் நீதித்துறை ஆணைக்குழுவால் (Soviet Commissariat of Justice) பிரசுரிக்கப்பட்ட, புக்காரின்-றைக்கோவ் விசாரணையின் அறிக்கையை வார்த்தைக்கு வார்த்தை, நீங்கள் கவனமெடுக்குமாறு அழைப்புவிடும் சுதந்திரத்தை நான் எடுத்துக் கொள்கிறேன்.

நீதிபதி அவர்களே, அம்மரணம் இயற்கையாக 'நடந்திருக்கலாமென' நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். ஒருவேளை, அப்படியும் நடந்திருக்கலாம். ஆனால், அவ்விடயத்தின் எல்லா சூழல்களிலிருந்தும் தெளிவாக தெரிவது, மருத்துவர்களில் எவருமே செடோவின் மரணத்தை எதிர்பார்க்கவில்லை என்பது தான். செடோவின் ஒவ்வொரு அசைவையும் பின்தொடர்ந்து கொண்டிருந்த ஜிபியு கூட, முறையான சிகிச்சையளிக்காமல் கொல்லும் அவர்களது வேலையை, சாத்தியமானளவிற்கு 'இயற்கை காரணங்களே' செய்துவிடுமென நம்பியிருக்கவில்லை. இதற்கிடையில்தான் செடோவின் வியாதியும் மற்றும் அவரது அறுவை சிகிச்சையும் ஜிபியு தலையீடு செய்வதற்கு அசாதாரணமானரீதியில் அதற்கு சாதகமான நிலைமைகளை வழங்கியது.

கனம் நீதிபதி அவர்களே, செடோவைக் கொலை செய்வதை ஜிபியு அதன் மிக முக்கிய பணிகளில் ஒன்றாக கருதியது என்பதை நிரூபிக்க அவசியமான எல்லா தகவல்களையும் எனது வழக்கறிஞர்கள் உங்கள் மேற்பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். பொதுவாக கூறுவதானால், மூன்று மாஸ்கோ விசாரணைகளுக்கு பின்னர் முக்கியமாக இக்னாஸ் றைஸ் இன் படுகொலை சம்பந்தமாக சுவிஸ் மற்றும் பிரெஞ்சு பொலிஸ் வெளியிட்ட தகவல்களுக்குப் பின்னர், இதன் மீது பிரெஞ்சு நீதித்துறை கனவான்களுக்கு எந்த ஐயமும் இருக்க முடியாது. நீண்டகாலமாக, மிக முக்கியமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக, மாஸ்கோவில் இருந்ததைப் போலவே ஏறத்தாழ அதேளவிற்கு சுதந்திரமாய் பாரிஸ் பிராந்தியத்தில் செயல்பட்டுவரும் ஒரு இரகசிய பொலிஸ் கும்பலால் நிரந்தரமாக முற்றுகையிடப்பட்ட நிலையில் செடோவ் வாழ்ந்து வந்தார். எல்லா விதத்திலும், இக்னாஸ் றைஸ் பலியாக்கப்பட்டதை போன்ற அதேமாதிரியான ஒரு பொறியை செடோவிற்காக முல்ஹவுஸில் (Mulhouse) கூலிக்கமர்த்தப்பட்ட கொலையாளிகள் ஏற்பாடு செய்திருந்தனர். அக்குற்றவாளிகளின் பெயர்களும் அவர்கள் வகித்த பாத்திரங்களும் உங்களுக்கே தெரியும் என்பதால், கனம் நீதிபதி அவர்களே, நான் இப்புள்ளிக்குள் சுற்றிச்சுழல மாட்டேன்.

பெப்ரவரி 4, 1937 இல், செடோவ் பிரெஞ்சு வாரயிதழான Confessions இல் ஒரு கட்டுரை எழுதியிருந்தார், அதில் அவர் தாம் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதையும்; வழக்குகளால் அவரது உத்வேகம் குறைந்துவிடவில்லை என்பதையும்; அவர் நம்பிக்கை இழப்பை நோக்கியோ அல்லது தற்கொலையை நோக்கியோ சாய்ந்துவிடவில்லை என்பதையும்; அவருக்கு திடீர் மரணம் ஏற்பட்டால் அதற்கு பொறுப்பானவர்களை ஸ்ராலினின் முகாமில் தான் தேட வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த வாக்குமூலங்களின் பிரதியை உங்கள் கரங்களில் கிடைக்க பாரீஸிற்கு அனுப்பியிருந்தேன் என்பதால், மேதகு நீதிபதி அவர்களே, இதை நான் எனது நினைவிலிருந்து குறிப்பிடுகிறேன். மறுக்கவியலாத மற்றும் உலகறிந்த பரந்த வரலாற்று உண்மைகளிலிருந்து வந்திருந்த, செடோவின் தீர்க்கதரிசனமான அந்த எச்சரிக்கை, என்னைப் பொறுத்த வரையில், நீதி விசாரணையின் போக்கையும் தன்மையையும் தீர்மானித்திருக்க வேண்டும். செடோவை துப்பாக்கியால் சுட்டோ, தூக்கிலிட்டோ, மூழ்கடித்தோ, விஷம் கொடுத்தோ அல்லது நோய் பரப்பியோ கொல்வதற்கு ஜிபியு இன் சூழ்ச்சிகள், கடந்த இரண்டு ஆண்டுகளில் அவரது வாழ்வில் ஒரு நிரந்தரமான மற்றும் அடிப்படை உண்மையாக இருந்தது. அவர் நோய்வாய்ப்பட்டமை வெறுமனே ஓர் அத்தியாயம் தான். அவரது நகர்வுகளை நாயைப்போல பின்தொடர்ந்து கொண்டிருந்த வஞ்சகர்களின் வேலையை, பகுதியாகவேனும், சற்றே கடினமாக்குவதற்காக, மருத்துவமனையில் கூட அவர் மார்ட்டின் என்ற போலி பெயரில் சேர நிர்பந்திக்கப்பட்டிருந்தார். இந்நிலைமைகளில், அந்த எதிர்மாறானவை ஸ்தாபிக்கப்படாத வரையில், குறிப்பிட்டு கூறுவதானால் 'இயற்கை மரணத்திற்கு காரணமானவற்றிற்கு" சிகிச்சையளிக்க சாதகமான சந்தர்ப்பத்திலிருந்து நழுவுதற்கு, பலம்பொருந்திய ஜிபியு அனுமதித்திருந்தது என்பதை ஸ்தாபிக்காத வரையில், 'செடோவ் இயற்கையாக மரணம் அடைந்திருக்கலாம்' என்ற வார்த்தையளவிலான சூத்திரத்தைக் கொண்டு தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்ள நீதித்துறைக்கு உரிமையில்லை.

சாதாரண வழக்கல்ல

மேலே உருவாக்கப்பட்ட கருத்துக்கள் எவ்வளவுதான் பலமாக இருந்தாலும், அவை மருத்துவ ஆய்வு செய்த நிபுணர்களின் எதிர்மறை முடிவுகளை மாற்றமுடியாது என்று வாதிடலாம். தகுதிவாய்ந்த மருத்துவர்களுடனான கலந்துரையாடலுக்கு பின்னர் வேறொரு முக்கிய ஆவணத்தில் இப்பிரச்சினைக்குத் திரும்ப உரிமை எடுத்துக்கொள்கிறேன். விஷம் இருந்ததற்காக எந்த தடயமும் இல்லை என்பதாலேயே விஷமளிக்கப்படவில்லை என்றாகாது, அதேபோல ஓர் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சுகவீனத்திலிருந்து தேறிவருவதற்கான உடல் எதிர்ப்பாற்றலை தடுக்கும் எந்த நடவடிக்கைகளிலும் ஜிபியு ஈடுபடவில்லை என்றும் ஆகிவிடாது. இங்கே இருக்கும் பிரச்சினை ஒரு சாதாரண வழக்காக, வழமையான வாழ்க்கை நிலைமைகளின் கீழ் இருந்திருந்தால், பின் மருத்துவ நிபுணர்களின் ஆய்வுகள், அப்பிரச்சினையைத் தீர்க்குமளவிற்கு இல்லையென்றாலும், தீர்ப்பின் மீது அவற்றின் முழு பலத்தைக் கொண்டிருந்திருக்கலாம். ஆனால் நாம் முற்றிலும் அசாதாரணமான ஒரு வழக்கை, பெயரிட்டு கூறுவதானால், வற்றாத ஆதாரப்பொருட்கள், தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான ஆதாரவளங்களோடு ஆயுதந்தரித்த ஒரு பலம்பொருந்திய அரசு எந்திரத்திற்கும், அவருக்கும் இடையிலான ஒரு நீண்ட நெடியகால நேருக்குநேரான சண்டைக்குப் பின்னர், தனிமைப்படுத்தப்பட்டு நாடுகடத்தப்பட்ட ஒருவரது, மருத்துவர்களே எதிர்பார்க்காத, மரணத்தைக் குறித்த வழக்கை நம் முன்னால் கொண்டிருக்கிறோம்.

ஆகவே பொதுவான மருத்துவ ஆய்வறிக்கை மட்டுமே போதாது, ஏனென்றால் அது அந்த நோயினது வரலாற்றின், முக்கிய சந்தர்ப்பத்தை பிடிவாதமாய் கவனிக்கத் தவறுகிறது. அந்த அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய முதல் நான்கு நாட்களுக்கு, அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அந்த நோயாளின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் இருந்தது, மருத்துவமனை நிர்வாகம் சிறப்பு தாதிமாரை அனுப்பிவிடும் அளவிற்கு அவரது நிலைமை மிகவும் தேறிவருவதாகவே பார்க்கப்பட்டது. இருப்பினும் பெப்ரவரி 14 அன்று இரவு, அந்நோயாளி, முன்னறைகளிலும் மருத்துவமனை வளாகங்களிலும் அவர் கட்டுப்பாடின்றி சித்தப்பிரமை பிடித்தவரைப் போல நிர்வாணமாக சுற்றி அலைந்து திரிவதை காணுமாறு விடப்பட்டிருந்தார். இந்த அதிமுக்கிய உண்மை நிபுணர்களின் கவனத்தில் மதிப்பு பெறவில்லையா?

கவனிப்பின்றி விடப்பட்மை

இயற்கையான காரணங்களே அத்துயரமான உச்சக்கட்டத்திற்கு இட்டுச் சென்றிருந்தது (இட்டு சென்றிருக்கலாம் என்பதல்ல, இட்டு சென்றிருந்தது) என்றாலும், பின்னர் அந்த நோயாளியை மிகவும் ஆபத்தான தருணத்தில் முற்றிலும் கவனிக்காமல் விட்ட, அதற்கு பொறுப்பான, அந்த மருத்துவர்களது உறுதியான கருத்துக்களை எவ்வாறு மற்றும் எதைக் கொண்டு விளங்கப்படுத்துவது? ஒட்டுமொத்த வழக்கையும், ஆய்வறிக்கையின் பிழையாகவும் மோசமான மருத்துவ சிகிச்சையாகவும், குறைத்துக் காட்ட முயற்சிப்பதற்கும் சாத்தியமுள்ளது. ஆனால் விசாரணை அறிக்கைகளில் அம்மாதிரியாக எதுவுமே குறிப்பிடப்படவில்லை. ஏனென்று புரிந்துகொள்வதொன்றும் சிரமமில்லை: போதுமான மேற்பார்வை இல்லாதிருந்தால், பின்னர், செடோவ் மீது எப்போதும் கண் வைத்திருந்த அவரது எதிரிகள் அவர்களது குற்றகரமான நடவடிக்கைகளுக்கு இந்த சாதகமான சூழலைப் பாவித்திருக்கலாம் என்ற முடிவுக்குத் தான் தானாகவே வர வேண்டியிருந்திருக்காதா?

மருத்துவமனை பணியாளர்கள், சுகவீனமுற்றிருந்த அந்த நபருடன் தொடர்பில் இருந்தவர்களை தொடர்பு கொள்ள முயன்றார்கள் என்பது உண்மை தான். ஆனால் பணியாளர்களுக்கு யாரென்றே தெரியாத அந்த நோயாளி, அவரது படுக்கையை விட்டு மற்றும் அவரது அறையை விட்டு வெளியே வந்து, இயல்புக்குமாறாக பிதற்றிக்கொண்டிருந்த ஒரு நிலைமையில் மருத்துவமனை கட்டிடமெங்கிலும் யாருக்கும் இடைஞ்சலின்றி சுற்றி திரிவதற்கு வாய்ப்பிருந்தது எனும்போது, இந்த வாக்குமூலங்கள் என்ன மதிப்பைப் பெறுகின்றன?

எதிர்பாரா திருப்பம்

செடோவிற்கு அறுவைசிகிச்சை செய்த மருத்துவர் திரு. தால்ஹைமர் (M.Thalheimer), ஒவ்வொரு சமயத்திலும், அந்த கடைசி இரவு சம்பவங்களைக் குறித்து அவருக்கு ஒன்றும் தெரியாது என்கிறார். அவர், செடோவின் மனைவி ஜேன் மார்ட்டன் டு பலியேரெஸ் (Jeanne Martin de Palliéres) இடம், 'நோயாளி தற்கொலைக்கு முயன்றிருக்கிறாரா?' என்று வினவி இருந்தார். வியாதித் தன்மையின் பொதுவான வரலாற்றிலிருந்து தவிர்க்கவியலாததாக இருந்த இந்த கேள்விக்கு, செடோவ் மரணத்திற்கு ஓராண்டுக்கு முன்னர் அவரே மேலே குறிப்பிட்ட அதே கட்டுரையில் முன்கூட்டியே பதிலளித்திருந்தார். பாதிக்கப்பட்டிருந்த அந்நபர் யாரென்பதைக் குறித்தோ அல்லது அவரது வாழ்க்கை நிலைமைகள் குறித்தோ பரிச்சயமில்லாத அந்த அறுவைசிகிச்சை மருத்துவரே, தற்கொலை குறித்த உத்தேசங்களுக்குச் செல்ல நிர்பந்திக்கப்படுமளவிற்கு, அந்த நோயாளியின் நிலைமைகள் திடீரென்றும் எதிர்பாராத விதத்திலும் மோசமடைந்திருந்தது. இந்த உண்மை, நான் மீண்டும் கூறுகிறேன், எனது மகனின் வியாதி மற்றும் மரணத்தின் பொதுவான சித்திரத்திலிருந்து அழிக்க முடியாது! ஒன்றைச் செய்வதற்கான வாய்ப்பு உள்ளவர்கள் ஒருவருக்கு நாட்டமிருந்தால், அவர், செடோவின் உற்றார் உறவினர்களின் அவநம்பிக்கைகள் அவர்களது கவலைகளிலிருந்து எழுவதாக கூறலாம். ஆனால் நம்முன்னால் ஒரு மருத்துவர் இருக்கிறார், அவரைப் பொறுத்த வரையில் செடோவ் ஒரு சாதாரண நோயாளி, மார்ட்டின் என்ற பெயர் கொண்ட ஒரு அறிமுகமில்லாத பொறியாளர். அதனால் அந்த அறுவை சிகிச்சை மருத்துவர் கவலைகளோ அல்லது அரசியல் பாரபட்சத்தன்மையோ கொண்டிருக்கவில்லை. அவர் அந்த வியாதியஸ்தரின் உடல் நிலைமையிலிருந்து தோன்றிய அறிகுறிகளுக்கேற்ப மட்டுமே தன்னைத்தானே வழிநடத்தினார். இந்த நோயாளியின் விடயத்தில் ஏற்பட்ட எதிர்பாரா திருப்பத்திற்கு, அதாவது எந்தவிதமான 'இயற்கை காரணங்களும்' இல்லாமல் ஏற்பட்ட மாற்றத்திற்கு, சிறந்த அனுபவஸ்தரான பெயர்பெற்ற அந்த மருத்துவரின் முதல் பிரதிபலிப்பு, எதிர்பாராத விதமாக அந்நோயாளியின் தரப்பில் தற்கொலை முயற்சி இருந்ததா என சந்தேகிக்கும் அளவிற்கு இருந்தது. அந்த தருணத்தில் அந்நோயாளி யாரென்று அடையாளம்கண்டும், அவரது வாழ்க்கை நிலைமைகளையும் அறிந்திருந்தால் அம்மருத்துவர் உடனடியாக 'இது கொலைகாரர்களின் வேலையாக இருக்குமோ?' என்று கேட்டிருப்பார் என்பது தெளிவாக இல்லையா, இதுவே மிகவும் வெளிப்படையான ஆதாரமாக இல்லையா?

துல்லியமாக இந்தக் கேள்விதான் முழு சக்தியோடு நீதி விசாரணையின் முன் நிற்கிறது. கனம் நீதிபதி அவர்களே, இந்த கேள்வி என்னால் அல்ல, அறுவைசிகிச்சை செய்த மருத்துவர் தால்ஹைமர் ஆல், தன்னிச்சையாக முன்கொண்டு வரப்பட்டிருக்கிறது. எனக்கு அனுப்பப்பட்டுள்ள ஆரம்ப விசாரணை ஆவணங்களில் இந்த கேள்விக்கு நான் முற்றிலுமாக எந்த பதிலும் காணவில்லை. இதற்கான ஒரு பதிலைத் தேடும் முயற்சியைக் கூட நான் அதில் காணவில்லை. அந்த கேள்வி மீதான ஆர்வத்தைக் கூட என்னால் அதில் காண முடியவில்லை.

அந்த முக்கிய இரவில் நடந்த குழப்பம் இதுவரையில் விளக்கமளிக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, விசாரிக்கப்படவே கூட இல்லை என்ற உண்மை நிஜமாகவே ஆச்சரியமூட்டுகிறது. அடுத்தடுத்து எந்தவொரு விசாரணைப் பணியையும் முற்றிலும் சிக்கலாக்கும் வகையில், காலங்கடத்துவதற்கு அனுமதிக்கப்படுகிறது என்பதால், அதையொரு விபத்தாக விவரித்து விட்டுவிட முடியாது. அந்த மருத்துவமனை நிர்வாகம், 'அவரையே ஆபத்துக்கு உட்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை செய்திருக்கக்கூடிய அல்லது அதுபோன்ற நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கக்கூடிய மரண ஆபத்தான நிலையிலுள்ள ஒரு நோயாளியை எந்தவித 'கவனிப்புமின்றி' விட்டுவிட்டதற்கு பொறுப்பான, அதன் முழு அலட்சியத்தையும் எந்தவொரு விசாரணையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வர தவறாது என்பதால், இதற்காக அதை மருத்துவமனை நிர்வாகம் இயல்பாகவே தவிர்க்க முயன்றுள்ளது. மருத்துவ நிபுணர்கள், அவர்களது பங்கிற்கு, அந்த துயரகரமான இரவின் சம்பவங்களை தெளிவுபடுத்த சிறிதும் வலியுறுத்தவே இல்லை. பொலிஸ் விசாரணையோ குறைந்தபட்ச அலட்சியப்படுத்தியத்தோடு, குற்றவாளியான தனிநபர்கள் குறித்த மேலோட்டமான சுயஒப்புதல்களோடு நிறுத்திக் கொண்டுவிட்டது, அவ்விதத்தில் அது அதை மூடிமறைக்கவே ஆர்வமுற்றிருந்தது. இருப்பினும் சிலரது அலட்சியத்திற்குப் பின்னால், மற்றவர்களது குற்றகரமான வேட்கை சுலபமாக ஒளிந்து கொள்ள முடியும்.

X யாரென தெரியும்

பிரெஞ்சு நீதிபரிபாலனம் ‘X க்கு எதிரான’ விசாரணை சூத்திரத்தைப் பின்தொடர்கிறது. இந்த சூத்திரத்தின் கீழ் தான் செடோவ் மரணம் குறித்த விசாரணை இப்போது நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வழக்கில், வார்த்தையளவிலான அர்த்தத்திலேயே, X முற்றிலும் 'அறியப்படாதவர்' இல்லை. இது, நெடுஞ்சாலையில் வாய்ப்பு கிடைக்கும் போது வழிப்போக்கர்களை கழுத்தறுத்து படுகொலை செய்துவிட்டு, தலைமறைவாகிவிடுவது குறித்த பிரச்சினை அல்ல. இது பிரான்சின் எல்லைக்குள்ளே ஏற்கனவே ஒன்றுக்கும் மேற்பட்ட குற்றங்களைச் செய்துள்ள மற்றும் சுமூக இராஜாங்க உறவுகளை மேலங்கியாக போர்த்திக்கொண்டு அவற்றைப் பயன்படுத்துகின்ற ஒரு திட்டவட்டமான சர்வதேச கும்பலைக் குறித்த பிரச்சினையாகும். இந்த நிஜமான காரணத்தினால் தான், எனது ஆவணக் காப்பகத்தின் திருட்டு குறித்த புலனாய்வோ, முல்ஹவுஸில் செடோவை கொல்லும் முயற்சி மீதான வழக்குகளோ, இறுதியாக ஏற்கனவே ஐந்து மாதங்கள் கடந்துவிட்ட செடோவ் மரணம் மீதான இப்போதைய விசாரணையோ எந்த முடிவுக்கும் கொண்டு வரப்படவில்லை, கொண்டு வருவதாகவும் இல்லை. இந்த குற்றத்திற்குப் பின்னால் சம்பந்தப்பட்டிருக்கும் முற்றிலும் நிஜமான மற்றும் சக்திவாய்ந்த அரசியல் காரணிகள் மற்றும் சக்திகளைத் தவிர்க்கும் முயற்சியாக, இங்கே பிரச்சினையிலிருப்பது ஒரு தனிப்பட்ட நபரது வாழ்க்கையின் ஒரு சாதாரண அத்தியாயம் என்ற புனைகதையிலிருந்து விசாரணை தொடங்குகிறது; அது குற்றவாளியை X என்று முத்திரை குத்தி, அவரைத் தெரியாதவாறு விட்டுவிடுகிறது.

கனம் நீதிபதி அவர்களே குற்றவாளிகள் அம்பலப்படுத்தப்பட வேண்டும்: குற்றத்தின் பரப்பெல்லை மிக மிக பெரியது, ஒருவரோடு ஒருவர் அடிக்கடி முரண்படுகின்ற பெருந்திரளான மக்களும் மற்றும் நலன்களும் இதற்குள் இழுக்கப்பட்டுள்ளன; வெளிப்பாடுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன, தொடர்ச்சியான குற்றங்களின் நூலிழைகள் ஜிபியு ஐ நோக்கி, ஜிபியுக்கு உள்ளாக, நேரடியாக ஸ்ராலினை நோக்கி இட்டுச் செல்கின்றன என்பதை அவை அம்பலப்படுத்தும். இத்தகைய அம்பலப்படுத்தல்களில் பிரெஞ்சு நீதித்துறை ஒரு ஆக்கபூர்வமான பாகமாக இருக்குமா என்பதை என்னால் கூறவியலாது. நான் மனதார அதை வரவேற்கிறேன், என் தரப்பிலிருந்து எல்லா விதத்திலும் என் சக்திக்குட்பட்டு அதற்கு உதவ தயாராக உள்ளேன். ஆனால், ஏதோவொரு வழியில், உண்மை கண்டறியப்படும்!

மேற்கூறியவற்றிலிருந்து, செடோவ் மரணம் பற்றிய விசாரணை இன்னும் தொடங்கவே இல்லை என்பது முற்றிலும் வெளிப்படையாகிறது. அந்த வழக்கின் எல்லா சூழல்நிலைமைகளையும் மற்றும் பெப்ரவரி 4, 1937 இல் செடோவ் அவரே எழுதிய தீர்க்கதரிசனமான வார்த்தைகளையும் கருத்தில் கொண்டு, அந்த விசாரணையை, அவர் மரணம் ஒரு வன்முறையான குணாம்சத்தில் இருந்தது என்ற அனுமானத்திலிருந்து தொடங்காமல் விட்டுவிட முடியாது. அந்த குற்றத்தை ஒழுங்கமைத்தவர்கள் ஜிபியு முகவர்களும், பாரீஸில் இருந்த சோவியத் அமைப்புகளின் போலி செயல்பாட்டாளர்களும் ஆவர். குடிபெயர்ந்த வெள்ளை ரஷ்யர்கள், பிரெஞ்சு அல்லது வெளிநாட்டு ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் இன்னும் இதர பிறரால் நியமிக்கப்பட்ட அந்த உளவாளிகளின் உளவாளிகள், குற்றவாளிகளுக்கு உடந்தையாய் இருந்தவர்களாவர். பாரீஸில் அல்லது அதற்கு மிக நெருங்கிய வட்டாரங்களில் இருந்த ஒரு ரஷ்ய மருத்துவமனையில் ஜிபியு அதன் முகவர்களைக் கொண்டிருக்காமல் இருந்திருக்காது. இந்த விசாரணையானது, குற்றத்தைக் கண்டறிய விரும்பினால், நானும் அதை தான் விரும்புகிறேன் என்ற நிலையில், இந்த வழிகளில் தான் விசாரணை தொடர வேண்டுமே ஒழிய, மேலோட்டமான போக்கில் அல்ல.

கனம் நீதிபதி அவர்களே, என்றும் உடனிருக்கும்,

உங்களின் மிக உண்மையுள்ள,

லியோன் ட்ரொட்ஸ்கி

ஜூலை 19, 1938, கொயோகான், மெக்சிகோ

லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டதிலிருந்து எழுபத்தி ஐந்து ஆண்டுகள்

1940 ஆகஸ்ட் 21 அன்று, அப்போது ஜிபியு என்று அறியப்பட்ட சோவியத் ஒன்றிய இரகசிய போலிஸின் முகவர் ஒருவரால் ஒரு நாளுக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்டிருந்த படுகாயங்களின் காரணத்தால் ட்ரொட்ஸ்கி மரணமடைந்தார். வரலாற்றுரீதியாக முன்கண்டிராத அளவான அரசியல் பிற்போக்குத்தன அலை நிலவியதொரு சூழலில் இந்தப் படுகொலை நடந்திருந்தது. ஐரோப்பாவில் ஜேர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயினில் பாசிச சக்திகள் அதிகாரத்தில் இருந்தன. ஸ்ராலின்-ஹிட்லர் ஒப்பந்தம் கையெழுத்தான சில நாட்களிலேயே 1939 செப்டம்பர் 1 அன்று போலந்து மீது நாஜிக்கள் படையெடுத்ததை அடுத்து, இரண்டாம் உலகப் போர் கிட்டத்தட்ட ஒரு ஆண்டு முன்பாகத்தான் ஆரம்பித்திருந்தது. திடீரெனச் சூழ்ந்த ஏகாதிபத்திய வன்முறைச் சூழலில் பத்து மில்லியன் கணக்கான உயிர்கள் அழிக்கப்பட்டன. இரண்டாம் உலகப் போருக்கு முன்னரான ஆண்டுகளில் பாரிய சமூக ஜனநாயக மற்றும் ஸ்ராலினிச கட்சிகள் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டங்களுக்கு திட்டமிட்டு குழிபறித்ததன் பயங்கரமான பின்விளைவாக இது இருந்தது.

1917 அக்டோபர் புரட்சியின் தலைவர்களில் மகத்தானவரும் உயிர்வாழ்ந்து கொண்டிருந்தவர்களில் இறுதியானவருமான மனிதர் படுகொலை செய்யப்பட்டமையானது, போல்ஷிவிக் புரட்சியின் வெற்றியை பாதுகாத்து, வரலாற்றில் முதல் தொழிலாளர்’ அரசாக சோவியத் ஒன்றியத்தை ஸ்தாபித்து, அத்துடன் முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தை தூக்கிவீசுவதை ஒரு எட்டத்தக்க மூலோபாய இலக்காக சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் முன்வைத்த சோசலிசத் தொழிலாளர்கள்’ மற்றும் புத்திஜீவிகளது தீரமிக்க தலைமுறையை ஸ்ராலினிச ஆட்சி அழித்தொழித்ததன் உச்சக்கட்டத்தை குறித்ததாக இருந்தது. ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்ட சமயத்திற்குள்ளாக, ஸ்ராலினின் அதிகாரத்துவ பயங்கர ஆட்சி ஏற்கனவே சோவியத் ஒன்றியத்திற்குள்ளாக நூறாயிரக்கணக்கிலான புரட்சியாளர்களை கொலை செய்து விட்டிருந்தது. 1936க்கும் 1938க்கும் இடையில் போல்ஷிவிக் கட்சியின் பிரதான தலைவர்களில் டசின் கணக்கானோரை ஒழித்துக் கட்டிய மாஸ்கோவில் நடைபெற்ற போலி விசாரணைகள், கொலைவெறி கொண்ட பயங்கரத்தினது ஒரு பரந்த அலையின் பொதுவிலான வெளிப்பாடு மட்டுமே. தனது ஆட்சிக்கான ஒரு நேரடியான அரசியல் அச்சுறுத்தலாக தான் கருதிய பழைய போல்ஷிவிக்குகளுடன் மட்டும் ஸ்ராலினது படுகொலை வெறியாட்டம் அடங்கி விடவில்லை.

அக்டோபர் புரட்சிக்குப் பிந்தைய காலத்தில் அபிவிருத்தி கண்ட சோசலிச சர்வதேசியவாதத்தினால் ஆழமான செல்வாக்கு செலுத்தப் பெற்றிருந்த ஒட்டுமொத்த சோவியத் கலாச்சாரத்தையும் இல்லாது செய்கின்ற நோக்கம் கொண்ட ஒரு யுத்தத்திற்குக் குறையாத ஒன்றாக ஸ்ராலினிச பயங்கரம் இருந்தது. எழுத்தாளர்கள், இசைக் கலைஞர்கள், ஓவியர்கள், கணிதவியலாளர்கள், இயற்பியலாளர்கள், உயிரியல் அறிஞர்கள், பொருளாதார அறிஞர்கள் மற்றும் பொறியாளர்கள் அனைவரும் தண்டிக்கப் பெற்று, மிருகத்தனமான சிறைமுகாம்களுக்கு அனுப்பப்பட்டு, சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். ட்ரொட்ஸ்கி மீது அனுதாபம் கொண்டிருக்கக் கூடும் என்ற வெறும் சந்தேகத்தைக் கொண்டே வெளிநாட்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்கள் மொத்தமாய் கொல்லப்பட்டனர். ஒட்டுமொத்த கட்சித் தலைமையும் இல்லாதொழிக்கப்பட்டது.

ஸ்ராலினிச ஆட்சியின் கீழ் இழைக்கப்பட்ட மிகப் பயங்கரமான குற்றங்கள் “ட்ரொட்ஸ்கிசத்திற்கு எதிரான போராட்டம்” என்ற பதாகையின் கீழ் நடத்தப்பட்டன. ட்ரொட்ஸ்கிக்கு எதிராக செலுத்தப்பட்ட இடைவிடாத வெறுப்புப் பிரச்சாரம் என்பது வெறுமனே ஸ்ராலின் தனது வளைந்துகொடுக்காத அரசியல் எதிர்ப்பாளரை பழிவாங்க விடாப்பிடியான விருப்பம் கொண்டிருந்ததன் வெளிப்பாடு மட்டுமன்று. மிகக் குறிப்பிடத்தக்க விதத்தில், ட்ரொட்ஸ்கி - அவர் உருக்கொடுத்த வரலாற்றிலும் அவர் போராடிய வேலைத்திட்டத்திலும் ஸ்ராலினின் அதிகாரத்துவ-தேசியவாத ஆட்சிக்கான நனவான சோசலிச-சர்வதேசியவாத மறுப்பின் பிரதிநிதியாகத் திகழ்ந்தார்.

ட்ரொட்ஸ்கி, ஸ்ராலினிச ஆட்சிக்கு எந்த அச்சுறுத்தலையும் குறிக்கவில்லை என்பதாகக் குறிப்பிடப்படுவது மிக சமீபகால கல்வியாளர்களிடையே வழக்கமாகி இருக்கிறது. இத்தகைய சிடுசிடுப்பான கணக்குகள் ஸ்ராலினின் அந்தரங்க காப்பகத்தின் மீதான ஆய்வுடன் முரண்படுபவை ஆகும். நாடுகடத்தப்பட்ட நிலையில், அதிகாரத்தின் மீது வெளியிலிருந்தான எந்த பிடியும் இல்லாத நிலையிலும், ட்ரொட்ஸ்கி தன்னை பின்தொடருவதாக ஸ்ராலின் உணர்ந்தார். ஸ்ராலின் “தனது வாசிப்பறையில் வைத்திருந்த ஒரு சிறப்பு அலமாரியில்” ஏறக்குறைய “ட்ரொட்ஸ்கியின் அத்தனை படைப்புகளையும் ஏராளமான அடிக்கோடுகள் மற்றும் கருத்துரைகளுடன் அவர் வைத்திருந்தார், மேற்கத்திய ஊடகங்களுக்கு ட்ரொட்ஸ்கி கொடுத்த எந்தவொரு பேட்டி அல்லது அறிக்கையும் உடனுக்குடன் மொழிபெயர்க்கப்பட்டு ஸ்ராலினுக்கு கொடுக்கப்பட்டு விடும்” என்று ஸ்ராலினின் வாழ்க்கைசரித ஆசிரியரான ஜெனரல் டிமிட்ரி வோல்கோகோனோவ் (General Dmitri Volkogonov) நினைவுகூர்ந்திருந்தார். ட்ரொட்ஸ்கி மீது அந்த சர்வாதிகாரி கொண்டிருந்த அச்சத்தை விவரித்து வோல்கோகோனோவ் பின்வருமாறு எழுதினார்:

ட்ரொட்ஸ்கி தனக்காக மட்டும் பேசவில்லை, சோவியத் ஒன்றியத்திற்குள்ளாக இருக்கின்ற தனது மௌனமாக இருக்கும் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்புஅணியை சேர்ந்தவர்களுக்கும் சேர்த்துத் தான் பேசுகிறார் என்ற சிந்தனை ஸ்ராலினுக்கு குறிப்பாக வலி தருவதாக இருந்தது. ஸ்ராலினிச பொய்மைப்படுத்தல் பள்ளி, போல்ஷிவிக் கட்சியின் உறுப்பினர்களுக்கான ஒரு திறந்த கடிதம், அல்லது ஸ்ராலினிச தேர்மிடோர் போன்ற ட்ரொட்ஸ்கியின் படைப்புகளைப் படிக்க நேர்ந்தபோது, அவர் ஏறக்குறைய தனது சுய-கட்டுப்பாட்டை இழந்து விட்டார்.

ஸ்ராலினை பொறுத்தவரை, ட்ரொட்ஸ்கி முன்வைத்த அச்சுறுத்தல் என்பது சோவியத் ஒன்றியத்திற்குள் மறைமுகமான மற்றும் சாத்தியத்திறன் கொண்ட எதிர்ப்பு அணியுடன் மட்டுப்பட்டதில்லை. நான்காம் அகிலத்திற்கான, அதாவது அனைத்து நாடுகளிலும் தொழிலாள வர்க்கத்தின் வேலைத்திட்டமாக சோசலிச சர்வதேசியவாதத்தை மீண்டும் ஸ்தாபிப்பதற்கான ட்ரொட்ஸ்கியின் போராட்டமானது, ஆளும் அதிகாரத்துவத்தின் நலன்களின் பேரில் கிரெம்ளின் பின்பற்றிய தேசியவாதக் கொள்கைகளுக்கான மிக அபாயகரமான அச்சுறுத்தலாக ஸ்ராலினால் பார்க்கப்பட்டது.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இருந்த சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் ஜிபியுவின் முகவர்கள் ஊடுருவியிருந்ததன் மூலம் 1940 ஆகஸ்டில் நடந்த ட்ரொட்ஸ்கியின் படுகொலைக்கு பல ஆண்டுகளாகத் தயாரிக்கப்பட்டு வந்திருந்தது. இந்த ஸ்ராலினிச முகவர்கள் தமது நடவடிக்கைகளது ஆரம்ப கட்டத்தில், சர்வதேச இடது எதிர்ப்பாளர்கள் (நான்காம் அகிலத்தின் முன்னோடி) அணியின் பாகமாக இருந்த சிறு ட்ரொட்ஸ்கிச அமைப்புகளின் நடவடிக்கைகளை, கன்னைவாதம் மூலமாகவும் சதிவேலைகள் மூலமாகவும், குலைப்பதற்கு முனைந்து வந்தனர்.

இந்த முகவர்களில் முதலாவதாகவும் மிக முக்கியமானவர்களாகவும் அமைந்தவர்கள் ஸெனின் மற்றும் வெல் (Senin, Well) என்றறியப்பட்ட ஸொபோலோவேசியஸ் சகோதரர்கள் (Sobolovecius brothers) ஆவர். இவர்கள் இடது எதிர்ப்பாளர்கள் அணியின் ஜேர்மன் பிரிவுக்குள்ளாக உடைவை ஏற்படுத்தி, அதன் மூலமாக ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்த 1933 க்கு முந்தைய இரண்டு அதிமுக்கியமான ஆண்டுகளின் சமயத்தில் அதன் அரசியல் செயல்திறனை கீழறுத்தனர். ஜேர்மனியிலான அரசியல் பேரழிவைத் தொடர்ந்து, ஸெனினும் வெல்லும் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா இரண்டு இடங்களிலும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கு எதிரான ஜிபியு இன் நடவடிக்கைகளில் ஒரு முக்கிய மற்றும் மரணகரமான பாத்திரத்தை தொடர்ந்து ஆற்றினர்.

ஜிபியு முகவர்களில் மிக மோசமானவர் என்றால் மார்க் ஸ்பொரோவ்ஸ்கியை (Mark Zborowski-Etienne) சொல்லலாம். போலந்தில் இருந்து புலம்பெயர்ந்திருந்த இவர், பிரான்சில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள்ளாக ஊடுருவி விட்டிருந்தார். லோலா டோலன் (Lola Dallin -இந்தப் பெண்மணி ஒருமுறை தன்னை அவருடன் “ஒன்றாக ஒட்டிப்பிறந்தவர்” என்று வர்ணித்துக் கொண்டார்) என்ற கூட்டாளியின் சளைக்காத உதவியுடன் மார்க் ஸ்பொரோவ்ஸ்கி, “எத்தியான்” (Etienne) என்ற கட்சிப் பெயர் கொண்டு நான்காம் அகிலத்தின் தலைமைக்குள்ளாக வெற்றிகரமாக நுழைந்து விட்டிருந்தார். ட்ரொட்ஸ்கியின் மூத்த மகனும் ஐரோப்பாவில் நான்காம் அகிலத்தின் தலைவராகவும் இருந்த லியோன் செடோவின் எப்போதும் உடனிருக்கும் அரசியல் உதவியாளராக அவர் ஆனார். ஸ்பொரோவ்ஸ்கி-எத்தியான் வழங்கிய தகவலைக் கொண்டு, ஜிபியு, பாரிஸில் ஒரு ஆராய்ச்சி மையத்தில் இரகசியமாக சேகரித்து வைக்கப்பட்டிருந்த ட்ரொட்ஸ்கியின் ஆவணக்காப்பகத்தின் ஒரு மதிப்புமிக்க பகுதியை, 1936 நவம்பரில் திருடிவிட முடிந்தது. ஆயினும் மாஸ்கோவில் நடந்த முதலாவது விசாரணையில் ட்ரொட்ஸ்கிக்கும் செடோவுக்கும், அவர்கள் அங்கு இல்லாத நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னர், கிரெம்ளின் இந்த தண்டனைகளை நிறைவேற்றுவதற்கான வழிவகைகளைக் காணுமாறு தனது முகவர்களிடம் கோரியது.

ஏகாதிபத்தியத்தின் முகவர் என்று அவதூறு செய்து, ட்ரொட்ஸ்கிக்கான தண்டனையை நியாயப்படுத்த ஸ்ராலினிச ஆட்சி முனைந்த அதேவேளையில், முதலாளித்துவ நாடுகளில் இருந்த ஆளும் உயரடுக்குகள் தண்டிக்கப்படும் புரட்சியாளருக்கு எதிரான ஸ்ராலினது போரில் யார் பக்கம் தமது அனுதாபங்கள் இருக்க வேண்டும் என்பதில் சந்தேகத்திற்கு இடமற்று இருந்தனர். அமெரிக்காவில், நியூயோர்க் டைம்ஸின் மாஸ்கோவுக்கான செய்தியாளரான வால்டர் துராந்தி, இந்த போலி விசாரணைகளது சட்டபூர்வ ஒழுங்குநிலைக்கு நற்சான்று பகன்றார். அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ருஸ்வெல்ட் நிர்வாகத்துக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்துகின்றதான பேரில் எண்ணற்ற தாராளவாத புத்திஜீவிகள், மாஸ்கோவில் பழைய போல்ஷிவிக்குகள் கொல்லப்படுவதை நியாயப்படுத்துவதற்கும் ட்ரொட்ஸ்கிக்கு எதிரான கேலிக்கூத்தான குற்றச்சாட்டுகளுக்கு நற்சான்று வழங்குவதற்கும் அசாதாரணமான அளவுக்கு சிரத்தை எடுத்துக் கொண்டனர்.

1936 ஆகஸ்டில் முதல் விசாரணை தொடங்கியபோது, ட்ரொட்ஸ்கி “ஜனநாயக” நோர்வேயில் நாடுகடத்தப்பட்டவராக வாழ்ந்து கொண்டிருந்தார். இந்த ஜோடிப்பு விசாரணைகளை அம்பலப்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகள், ஸ்ராலின் மனதைப் புண்படுத்துவதை தவிர்க்கும் கவலையோடு இருந்த அந்நாட்டின் சமூக ஜனநாயக அரசாங்கத்தினால் தடுக்கப்பட்டன. ட்ரொட்ஸ்கியும் அவரது மனைவி நத்தாலியா செடோவாவும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு ஊடகங்கள் மற்றும் அவர்களது சொந்த ஆதரவாளர்களுடனும் கூட அவர்களுக்கு தொடர்பு மறுக்கப்பட்டது. ட்ரொட்ஸ்கி அவருக்கு மிக நெருக்கமான அரசியல் உதவியாளர்களுடன் கூட தொடர்புகொள்ளும் உரிமை மறுக்கப்பட்டிருந்தார். ட்ரொட்ஸ்கியை சோவியத் ஒன்றியத்திற்கே திருப்பி அனுப்பி விடும் எண்ணத்தையும் வைத்துக் கூட நோர்வேயின் சமூக ஜனநாயக ஆட்சி கொஞ்ச காலம் விளையாடிக் கொண்டிருந்தது. இறுதியாக, மாபெரும் ஓவியரான டியகோ ரிவிராவின் உதவியுடன், லசார் கார்டெனாஸ் (Lazar Cárdenas) இன் இடது தேசியவாத அரசாங்கம் ட்ரொட்ஸ்கிக்கு மெக்சிகோவில் அடைக்கலம் வழங்கியது. வயதாகியிருந்த போதிலும் வேகம் குன்றாத அந்த புரட்சியாளர் 1937 ஜனவரியில் மெக்சிகோ வந்தடைந்தார்.

ஒரு மாபெரும் “எதிர்-விசாரணை”யை ஒழுங்கமைக்கும் வேலையில் ட்ரொட்ஸ்கி உடனடியாய் இறங்கினார். ஸ்ராலினின் குற்றச்சாட்டுகளை மறுப்பது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த விசாரணைகளுமே ஒரு குற்றவியல் ஜோடிப்பு என்பதை அம்பலப்படுத்துவதும் அதன் நோக்கமாக இருந்தது. விசாரணையைக் கண்டித்து, காட்சிப்படச்சுருளில் பதிவுசெய்து வெளியிட்ட ஒரு பொது அறிக்கையில் ட்ரொட்ஸ்கி அறிவித்தார்:

எனக்கு எதிரான ஸ்ராலினின் வழக்கு விசாரணையானது, ஆட்சி செலுத்துகின்ற ஒரு கூட்டத்தின் நலன்களின் பேரில், நவீன விசாரணையாளர் மேலதிகார (Inquisitorial) வழிமுறைகளைக் கொண்டு அச்சுறுத்தி வாங்கப்பட்ட போலியான வாக்குமூலங்களின் மீது கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. சினோவியேவ்-காமனேவ் மற்றும் பியாடகோவ்-ராடேக் மீதான மாஸ்கோ விசாரணைகளை காட்டிலும் உள்நோக்கத்திலும் நிறைவேற்றத்திலும் மிகப் பயங்கரமான குற்றங்கள் வரலாற்றிலேயே கிடையாது. இந்த விசாரணைகள் கம்யூனிசத்தில் இருந்தோ, சோசலிசத்தில் இருந்தோ அபிவிருத்தி காணவில்லை, மாறாக ஸ்ராலினிசத்தில் இருந்து, அதாவது மக்கள் மீது அதிகாரத்துவம் செலுத்தும் கணக்குகூறப்படாத எதேச்சாதிகாரத்தில் இருந்து அபிவிருத்தி காண்கின்றன!

இப்போது எனது பிரதான கடமை என்ன? உண்மையை வெளிக்கொண்டு வருவதாகும். உண்மையான குற்றவாளிகள், குற்றம் சாட்டுபவர்களின் அங்கிகளுக்குள் தான் மறைந்திருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுவதும் விளங்கப்படுத்துவதும் ஆகும்.

ட்ரொட்ஸ்கி விடுத்த அழைப்பு மிகப் பிரபலமான அமெரிக்க தாராளவாத மெய்யியலாளரான ஜோன் டுவி தலைமையில் ஒரு சர்வதேச விசாரணை ஆணையம் அமைக்கப்படுவதற்கு இட்டுச் சென்றது. 1937 ஏப்ரலில், இந்த ஆணையத்தின் உறுப்பினர்கள் மெக்சிகோ பயணித்து அங்கே பொது விசாரணைகளை நடத்தினர். அதில் ட்ரொட்ஸ்கி அவரது அரசியல் கோட்பாடுகள், சிந்தனைகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான அத்தனை அம்சங்களைக் கையாளும் கேள்விகளுக்கும் பதிலளித்தார். பதினோரு நாட்கள் அவர் சாட்சியமளித்தார். பின் ஆணைய உறுப்பினர்கள் அமெரிக்கா திரும்பி, சாட்சியங்களை கவனமாகப் பரிசீலித்து இறுதியாக 1937 டிசம்பரில் தமது தீர்ப்பை வழங்கினர். அவர்கள் ட்ரொட்ஸ்கி குற்றமற்றவர் என்று கண்டதோடு மாஸ்கோவில் நடக்கும் விசாரணைகள் ஒரு ஜோடிப்பு என்றும் கண்டனம் செய்தனர்.

மாஸ்கோ விசாரணைகளை ட்ரொட்ஸ்கி அம்பலப்படுத்தியதிற்கு பதிலிறுப்பாக ஸ்ராலினிச ஆட்சி நான்காம் அகிலத்தின் மீதான தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியது. 1937 ஜூலையில், ட்ரொட்ஸ்கியின் மிகத் திறம்பட்ட செயலர்களில் ஒருவரான ஜேர்மன் ட்ரொட்ஸ்கிசவாதி எர்வின் வொல்ஃப் ஸ்பெயினில் ஒரு வேலையில் இருந்தபோது கடத்தப்பட்டார். சித்திரவதை செய்யப்பட்டு அவர் கொல்லப்பட்டார். 1937 செப்டம்பரில் இக்னாஸ் றைஸ் - இவர் ஜிபியுவில் இருந்து விலகி, ஸ்ராலினைக் கண்டனம் செய்ததோடு நான்காம் அகிலத்திற்கான தனது ஆதரவையும் அறிவித்தவர் - ஸ்ராலினிச இரகசிய போலிசால் பின்தொடரப்பட்டு சுவிட்சர்லாந்தில் படுகொலை செய்யப்பட்டார். றைஸ் கொல்லப்பட்ட சூழலானது நான்காம் அகிலத்தின் பாரிஸ் மையத்திற்குள்ளாக ஜிபியு ஆல் அனுப்பப்பட்டிருந்த ஒரு முகவரின் காட்டிக் கொடுப்பிலேயே நடந்திருக்க வேண்டும் என்பதான சந்தேகங்களை எழுப்பியது. இந்த சந்தேகங்கள் பிரதானமாக சென்றடைந்த இடம் மார்க் ஸ்பொரோவ்ஸ்கி-எத்தியான் ஆகும். ஆயினும், லோலா டோலன், தன்னையும் ஸ்பொரோவ்ஸ்கியையும் தன்னலமற்ற தோழர்களாகவும் லியோன் செடோவின் உதவியாளர்களாகவும் காட்டி, மெக்சிகோவில் இருந்த நத்தலியா செடோவாவிற்கு தொடர்ச்சியாக கடிதம் எழுதி வந்த நிலையில், ஜிபியு முகவரின் மீது குற்றச்சாட்டுபவர்கள் பின்னடிக்க வேண்டியிருந்தது.

1938 பிப்ரவரியில் செடோவ் வழக்கமான குடல்வால் அழற்சி போல் தோன்றிய ஒன்றினால் நோய்வாய்ப்பட்டார். லோலா டாலின் தெரிவு செய்த ஒரு மருத்துவமனைக்கு (Clinic Mirabeau) அவர் கொண்டுசெல்லப்பட்டார். அது, போல்ஷிவிக்-விரோத ரஷ்ய புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் ஜிபியு முகவர்கள் நிரம்பிய இடம் என்பது நன்கறிந்த ஒன்றாகும். செடோவ் நோய்வாய்ப்பட்டிருப்பதையும் அவரது இருப்பிடத்தையும் ஸ்பொரோவ்ஸ்கி ஜிபியுவிடம் தெரிவித்தார். வழக்கமான ஒரு அறுவைச்சிகிச்சைக்கு பின்னர், செடோவ் ஆரோக்கியமடைந்து வருவதாகவே தோன்றியது. ஆனால் திடீரென்று அவரது உடல்நிலை மோசமடைந்து, ஜன்னி கண்டு, மரணவேதனை கண்டு இறந்துவிட்டார். செடோவின் மரணத்திற்கான உடல்ரீதியான காரணம் கடைசிவரை துல்லியமாகக் கண்டறியப்படவில்லை. மருத்துவரீதியாக திட்டமிட்டு தவறான சிகிச்சை வழங்கியதால் அல்லது விஷம் கொடுக்கப்பட்டதாலோ தான் வயிற்றின் இரட்டைச்சவ்வுப்பை முடங்கி அவர் உயிரிழந்திருக்க வேண்டும் என்பதையே கிடைத்த ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால், செடோவின் மரணத்திற்கு பயன்படுத்தப்பட்ட வழிமுறை தெரியாமல் போனபோதிலும், பழைய ட்ரொட்ஸ்கிசவாதியான ஜோர்ஜ் வெரிகெனின் (Georges Vereeken 1896-1978) வார்த்தைகளில் சொல்வதானால், ”ட்ரொஸ்கியின் மகன் ஜிபியு கொலைகாரர்களிடம் ஸ்பொரோவ்ஸ்கியால் திட்டமிட்டு ஒப்படைக்கப்பட்டார்” என்பதில் சந்தேகத்திற்கே இடமில்லை.

லியோன் செடோவின் கொலையைத் தொடர்ந்து, ஸ்பொரோவ்ஸ்கியும் டோலனும் பறிகொடுத்த பெற்றோருக்கு ஒரு மனமுருக்கும் இரங்கல் செய்தியை அனுப்பினர். ஆயினும், ஸ்பொரோவ்ஸ்கி மற்றும் டோலன் இருவருக்கு எதிரான சந்தேகங்களும் அதிகரித்தன, ஒரு விசாரணை ஆணையத்தை உருவாக்க ட்ரொட்ஸ்கி முயற்சி மேற்கொண்டார். விசாரணை ஆணையம் அமைப்பதற்கு ட்ரொட்ஸ்கி விடுத்த அழைப்பு, நான்காம் அகிலத்தின் செயலரான ருடோல்ஃப் கிளெமண்ட்டிடம் (Rudolf Klement) நான்காம் அகிலத்தின் ஸ்தாபக காங்கிரஸ் நடப்பதற்கு வெறும் ஆறு வாரங்களுக்கு முன்பாய் 1938 ஜூலையில் அவரது பாரிஸ் குடியிருப்பு வீட்டில் இருந்து அவர் திடீரென காணாமல் போன சமயத்தில், அவரின் கைவசத்தில் இருந்ததாக நம்பப்படுகிறது. கடைசியில் கிளெமண்ட்டின் தலையற்ற முண்டம் செயின் நதியில் இருந்து எடுக்கப்பட்டது. ஒரு வருட இடைவெளிக்குள்ளாக, நான்காம் அகிலத்தின் நான்கு முக்கிய மனிதர்கள் கொல்லப்பட்டு விட்டிருந்தனர். இந்த ஒவ்வொரு கொலையிலுமே, ஸ்பொரோவ்ஸ்கி-எத்தியான் வழங்கிய தகவலைக் கொண்டே ஜிபியுவின் கொலைப் படைகள் செயல்பட்டன. செடோவ் மற்றும் கிளெமெண்ட் இருவரும் கொல்லப்பட்டு விட்ட நிலையில், நான்காம் அகிலத்தின் ஸ்தாபக காங்கிரசில் உத்தியோகபூர்வ ரஷ்ய பிரதிநிதியாக ஸ்பொரோவ்ஸ்கி பங்கேற்றார்.

ட்ரொட்ஸ்கியுடன் நெருக்கமாக இருந்தவர்களையும் ஆதரவாளர்களையும் ஜிபியு கொலைசெய்து விட்டதால், ட்ரொட்ஸ்கியின் படுகொலைக்கான தயாரிப்புகள் தீவிரமடைந்தன. ட்ரொட்ஸ்கி பற்றிய தகவலை அறிவதற்காகவும் ட்ரொட்ஸ்கியை அணுகுவதற்காகவும் 1938 இல் சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) நியூயோர்க் தலைமையகத்தில் ஒரு முகவரை ஜிபியு வெற்றிகரமாக நுழைத்தது. இந்த முகவர் சில்வியா பிராங்ளின் (Sylvia Franklin) என்ற பெயரில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு இளம் உறுப்பினராவார். இவர் சல்மோன் பிராங்ளின் என்ற பெயரிலான ஒரு ஸ்ராலினிச முகவரைத் திருமணம் செய்திருந்தார். Daily Worker என்னும் ஸ்ராலினிச தினசரியின் ஆசிரியரும் ட்ரொட்ஸ்கிச-விரோத வேவு வேலைகளில் அதிகமாய் ஈடுபட்டிருந்தவருமான லூயிஸ் பூடென்ஸ் (Louis Budenz) பிராங்ளினை அமெரிக்காவில் இருந்த சோவியத் ஜிபியுவின் உயர்மட்ட அதிகாரியான கிரிகோரி ரபினோவிட்ச் (“ஜோன்”) என்ற ஒருவருக்கு அறிமுகம் செய்து வைக்க, அவர் இந்தப் பெண்மணியை இந்த வேலைக்காய் தெரிவு செய்தார். அவர் சில்வியா கோல்ட்வெல் என்ற கட்சிப் பெயரை எடுத்துக் கொண்டு, வெகுவிரைவிலேயே சோசலிச தொழிலாளர் கட்சியின் தேசிய செயலரான ஜேம்ஸ் பி.கனனின் அந்தரங்க காரியதரிசியாகவே ஆகிவிட்டார். அந்த இடத்தில் அவருக்கு, கனனுக்கும் ட்ரொட்ஸ்கிக்கும் இடையில் நடந்த அத்தனை தகவல்பரிமாற்றங்களையும் அறிந்துகொள்ள முடிந்தது. கனனின் அலுவலகத்தில் இருந்து ஆவணங்களை ஒழுங்குபட நகலெடுத்து அவர் ஜிபியுவிடம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

ட்ரொட்ஸ்கிக்கு எதிரான சதியில் அடுத்தவொரு முக்கியமான கட்டமாக, பூடென்ஸ் மீண்டும் ரபினோவிட்ச் உடன் சேர்ந்து வேலை செய்து, ரூபி வேய்ல் என்ற கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு உறுப்பினருக்கும், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் செயலூக்கத்துடன் இயங்கத் தொடங்கியிருந்த சில்வியா அகெலோஃப் என்ற அவரது பழைய தொடர்பிற்கும் இடையில் மிக கவனத்துடன் நாடகமாடி அவர்களது நட்பை மீண்டும் துளிர்க்கச் செய்தனர். 1938 இல் அகெலோஃப் ஐரோப்பாவுக்கு பயணம் சென்றபோது, வேய்ல் அவருடன் உடன்சென்றார். அங்கே தான் ட்ரொட்ஸ்கியை பின்னாளில் கொல்ல இருந்த ரமோன் மெர்காடர் (Ramon Mercader) என்ற “ஃபிராங்க் ஜாக்சன்” (Frank Jacson) வேய்ல் மூலம் அகெலோஃபுக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டார்.

ட்ரொட்ஸ்கியின் கோயோகான் வதிவிடத்திலும் ஜிபியு தனது முகவர்களை நுழைத்து விட்டிருந்தது. பல ஆண்டுகளுக்குப் பின்னர், 1956 மே மாதத்தில், சோவியத் வேவு பார்த்தது குறித்த அமெரிக்க செனட் விசாரணை ஒன்றில், தோமஸ் எல்.பிளாக் (Thomas L. Black) என்ற பெயரிலான முன்னாள் அமெரிக்க ஜிபியு முகவர், ட்ரொட்ஸ்கிக்கு எதிரான சதியில் பங்குபெற தான் ரபினோவிட்ச்சினால் தெரிவு செய்யப்பட்டதை சாட்சியமளித்தார். அவர் செனட் கமிட்டியில் கூறியது என்னவென்றால்:

முதலில் நான் கோயோகான் போக வேண்டும், அங்கே ட்ரொட்ஸ்கியின் வீட்டில் மற்ற சோவியத் முகவர்கள் இருப்பார்கள், நான் அவரிடம் யார் அவர்கள் என்று கேட்டேன்.

நேரம் வரும்போது நான் தெரிந்து கொள்வேன் என்று அவர் கூறினார்.

திட்டமிடப்பட்டிருந்த வேலையின் தன்மை பற்றி உங்களுக்கு தெரிந்திருந்ததா என்று பிளாக்கிடம் கேட்கப்பட்டது. அவர் அதற்கு: “ட்ரொட்ஸ்கியின் படுகொலைக்கு ஏற்பாடு செய்வது.” என பதிலளித்தார்.

கடைசியில் பிளாக், மெக்சிகோ சென்று படுகொலையில் பங்குபற்ற முடியவில்லை. ஆயினும் முகவர்கள் ஏற்கனவே கோயோகானில் அமர்த்தப்பட்டிருந்தனர், அத்துடன் - பிந்தைய ஆதாரங்கள் இறுதியாக ஊர்ஜிதம் செய்தவாறு - SWP இல் இருந்த குறைந்தபட்சம் இன்னுமொரு அமெரிக்க ஜிபியு உளவாளியேனும் 1940 வசந்தகாலத்தில் படுகொலை சதியில் பங்குபெறுவதற்காக நியூயோர்க்கில் இருந்து மெக்சிகோவுக்கு அனுப்பப்பட்டிருந்தார்.

தன்னைக் கொல்வதற்கும் நான்காம் அகிலத்தின் கழுத்தை நெரிப்பதற்கும் ஸ்ராலின் செய்த முயற்சிகளை ட்ரொட்ஸ்கி அறியாமலும் இல்லை, அதற்கு அலட்சியம் காட்டவும் இல்லை. 1937 நவம்பரில் அவர் “அத்தனை தொழிலாளர் அமைப்புகளுக்குமான ஒரு பகிரங்கக் கடிதம்” ஒன்றை எழுதினார்.

தொழிலாளர் இயக்கமானது ஸ்ராலினை சுற்றிய கூட்டத்தையும், அவரது சர்வதேச முகவர்களையும் போன்ற மிகக் கொடுமையான, ஆபத்தான, சக்திவாய்ந்த மற்றும் மனச்சாட்சியற்ற ஒரு எதிரியை முன்னொருபோதும் தனது சொந்த அணியில் கொண்டிருந்தது கிடையாது. இந்த எதிரிக்கு எதிரான போராட்டத்தை அலட்சியமாக அணுகுவது என்பது காட்டிக்கொடுப்புக்கு ஒப்பானதாகும். வாய்ச்சவடால் ஆசாமிகளும் அரைகுறைகளும் தான் பரிதாபகரமான அறச்சீற்றங்களுடன் தங்களை மட்டுப்படுத்திக் கொள்ள முடியுமே தவிர்த்து, தீவிரமான புரட்சிகரவாதிகளால் அது முடியாது. ஒரு திட்டமும் ஒரு ஒழுங்கமைப்பும் இருப்பது அவசியமானதாகும். ஸ்ராலினிஸ்டுகளின் சூழ்ச்சிகள், இரகசிய வேலைகள் மற்றும் குற்றங்களைப் பின்தொடர்ந்து சென்று தெரிந்து கொள்வதற்கும், காத்திருக்கும் அபாயங்கள் குறித்து தொழிலாளர் அமைப்புகளை எச்சரிப்பதற்கும், மாஸ்கோ கூலிப்படையினரை தடுப்பதற்கான மற்றும் எதிர்ப்பதற்கான சிறந்த வழிமுறைகளை விளக்கிச் சொல்வதற்கும் சிறப்பு ஆணையங்களை உருவாக்குவது அவசரமான பணியாகும்.

நான்காம் அகிலத்திற்கு ஜிபியு முன்வைத்த அபாயத்திற்கான பதில் நடவடிக்கைகளை விடுவோம், அபாயம் குறித்த எந்த விவாதத்தையும் கூட ட்ரொட்ஸ்கி திட்டவட்டமாக எதிர்த்தார் என்பதாக படுகொலைக்குப் பின்னர் SWP பிரச்சாரம் செய்த அபத்தமான பொய்க் கூற்றை மேற்கூறிய பத்தி மறுக்கிறது. ஜிபியு இன் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தவும் எதிர்நடவடிக்கைகள் எடுக்கவும் ட்ரொட்ஸ்கி செயலூக்கத்துடன் முனைந்தார் என்பதையே வரலாற்று ஆவணங்கள் ஸ்தாபிக்கின்றன. ஆயினும் இந்த முயற்சிகள் நான்காம் அகிலத்திற்கு உள்ளே ஏற்கனவே நுழைக்கப்பட்டிருந்த முகவர்களால் பலனற்றவையாக்கப்பட்டன.

1938 இன் பிற்பகுதியில் ஜிபியு இன் ஒரு உயர் பதவியில் இருந்திருந்த அலெக்ஸாண்டர் ஓர்லோவ் (Alexander Orlov) சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேறினார். அவர் நான்காம் அகிலத்திற்கு எதிரான ஜிபியு இன் படுகொலை நடவடிக்கைகளை நெருக்கமாக அறிந்து வைத்திருந்தவர். என்ன நோக்கத்தில் என்பது தெரியவில்லை என்றாலும், ஓர்லோவ் ட்ரொட்ஸ்கிக்கு அனுப்பிய ஒரு இரகசிய தகவல் ஒரு குறிப்பிட்ட “மார்க்” ஜிபியு இன் முகவர் என அடையாளம் காட்டியது. அவருக்கு அந்த முகவரின் கடைசிப் பெயர் தெரியவில்லை என்றாலும் கூட, அது ஸ்பொரோவ்ஸ்கி-எத்தியான் தான் என்பது தெளிவு. ஓர்லோவ் பற்றித் தெரியாத ட்ரொட்ஸ்கி, இந்த செய்தியை வழங்கிய முகம்தெரியாத அந்த மனிதரை தொடர்பு கொள்ள முனைந்தார். ஆனால் அந்த முயற்சி, காரணங்கள் தெளிவாக இல்லை என்றாலும், வெற்றியடையவில்லை.

அதற்குப் பல மாதங்களுக்குப் பின்னர், ஓர்லோவ் பாரிஸ் முகவர் குறித்து இரண்டாவது மற்றும் இன்னும் விரிவானதொரு கண்டனத்தை அனுப்பினார். ஜிபியு இன் ஒரு பெண் முகவர் மெக்சிகோவுக்கு வரவிருப்பதையும் அவர் ட்ரொட்ஸ்கிக்கு விஷமளிக்க முனையவிருப்பதையும் குறித்து அந்தக் கடிதம் ட்ரொட்ஸ்கியை எச்சரித்தது. அடுத்த சிறிது காலத்திலேயே, 1939 கோடையில், லோலா டோலன் மெக்சிகோ வந்துசேர்ந்தார். ட்ரொட்ஸ்கி அந்த கடிதத்தை பற்றி அவரிடம் கேட்டார். இந்த கடிதம் ஜிபியுவின் ஒரு ஏமாற்று என ட்ரொட்ஸ்கியை நம்பச்செய்ய தான் முயற்சித்ததாக பின்னாளில் ஒரு செனட் துணைக்குழுவிடம் அளித்த சாட்சியத்தில், டோலன் கூறினார். அவர் ட்ரொட்ஸ்கியிடம் பின்வருமாறு கூறியிருந்தார்: “அவர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் பாருங்கள்? பிரான்சில், பாரிஸில், உங்களுக்கென எஞ்சியிருக்கும் சில ரஷ்யர்களிடமிருந்து கூட நீங்கள் முறித்துக் கொள்ள வேண்டும் என்பதே அவர்கள் விருப்பமாக இருக்கிறது.” அந்த எச்சரிக்கையை புறந்தள்ள டோலன் முயற்சி செய்தாலும், ட்ரொட்ஸ்கி அந்த முகம்தெரியாத மனிதரை தொடர்பு கொள்ள மீண்டும் முயற்சி செய்தார், ஆனாலும் அது வெற்றிபெறவில்லை.

டோலன், அவர் பாரிஸுக்குத் திரும்பிய உடனேயே -அவரது செனட் சாட்சியத்தின் படி- ட்ரொட்ஸ்கி பெற்றிருந்த எச்சரிக்கைகள் குறித்து ஸ்பொரோவ்ஸ்கியை எச்சரித்தார். இந்த தகவலானது, ஸ்பொரோவ்ஸ்கியின் நடவடிக்கைகளை இரகசியமாக பின்தொடர பாரிஸிலிருந்த தனது அனுதாபிகளுக்கு ட்ரொட்ஸ்கி அளித்திருந்த ஆலோசனையை பிரயோசனமற்றதாக்கி விட்டது.

1940 மே 24 அன்று அதிகாலை நேரத்தில், ஓவியரும் வெறிகொண்ட ஸ்ராலினிஸ்ட்டுமான டேவிட் அல்ஃபரோ சிக்வரோஸ் (David Alfaro Siqueiros) தலைமையில், எந்திரத் துப்பாக்கிகள் ஏந்திய ஸ்ராலினிச துப்பாக்கிதாரிகள், அவெனிடா வியனாவில் இருக்கும் ட்ரொட்ஸ்கியின் வதிவிடத்தின் வளாகத்திற்குள்ளாக நுழைந்து விட முடிந்திருந்தது. அவர்கள் வில்லாவின் சுவர்களில் ஏறிக் குதிக்கும் அவசியமோ அல்லது முன்னாலிருந்த கேட்டை வெடிவைத்துத் தகர்த்துத் திறக்கவோ அவசியமிருக்கவில்லை. ஏனென்றால் SWPக்குள் நுழைந்து விட்டிருந்த நியூயோர்க் நகரத்தைச் சேர்ந்த ரோபர்ட் ஷெல்டன் ஹார்ட் என்ற 25 வயது ஸ்ராலினிஸ்ட் அவர்களுக்காக கதவைத் திறந்து வைத்திருந்தார். பாதுகாப்பு குறித்த அலட்சியம் என்ற SWP இன் தலைமைக்கே உரித்தான பண்பால், தனிநபர் மற்றும் அரசியல் பின்புலம் பற்றி ஏறக்குறைய ஒன்றுமே அறிந்திருக்கப்படாத ஹார்ட்டிடம் ட்ரொட்ஸ்கியின் பாதுகாப்பு விவரங்கள் அளிக்கப்பட்டிருந்தது.

துப்பாக்கிதாரிகள் ட்ரொட்ஸ்கியின் படுக்கையறையை சுற்றிவளைத்து எந்திரத் துப்பாக்கி ரவைகளால் அறையை நிரப்ப, ட்ரொட்ஸ்கியும் நத்தாலியாவும் படுக்கைக்குக் கீழே தாவி மயிரிழையில் உயிர்தப்பினர். ட்ரொட்ஸ்கியின் பாதுகாப்பு என்பது எந்த அளவுக்கு தயாரிப்பு இல்லாததாக இருந்தது என்பதை அந்த சம்பவம் அம்பலப்படுத்தியது. சுட வந்த கூட்டம் தங்களது வேலை முடிந்துவிட்டதாக எண்ணி வதிவிடத்தில் இருந்து திரும்பிச் சென்ற பின்னர், ட்ரொட்ஸ்கி தான் முதல் ஆளாக வெளியில் வந்து பார்த்தார். அவர் தனது பாதுகாவலர்களை தேட வேண்டியதாய் இருந்தது. அவர்களில் யாரும் தமது துப்பாக்கிகளை பயன்படுத்தி சுட்டிருக்கவேயில்லை. திருப்பிச் சுட எண்ணியிருந்த சிலருக்கும் அது முடியாதவண்ணம், அவர்களது எந்திரத் துப்பாக்கிகள் அடைத்துக் கொண்டு விட்டிருந்தது, காரணம் அவர்கள் தவறான ரவைகளைப் பயன்படுத்தியிருந்தார்கள்.

ஏறக்குறைய உடனடியாக இந்தத் தாக்குதலில் ஷெல்டன் ஹார்ட்டின் பங்கு குறித்த மிக நியாயமான சந்தேகங்கள் எழுந்து விட்டன. அவர் சுட வந்தவர்களுடன் சேர்ந்து சென்று விட்டிருந்தார், அவர் தனது சொந்த விருப்பத்தில் தான் சென்றார் என்பதற்கு கண்ணால் கண்ட சாட்சிகள் இருந்தன. ஹார்ட்டின் நியூயோர்க் குடியிருப்பு வீட்டில் ஸ்ராலினின் ஒரு படம் கண்டெடுக்கப்பட்டது. அவர் கைவசம் இருந்த ஒரு அகராதியில் சிகரோஸ் (Siqueiros) கையெழுத்து இருந்தது. இந்த சம்பவம் நடந்து பல வாரங்களுக்கு பின்னர், ஹார்ட்டின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சிகரோஸ் கும்பலைச் சேர்ந்த உறுப்பினர்கள் அவரைக் கொன்றிருந்தார்கள். அந்த சமயத்தில் ஹார்ட்டுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ட்ரொட்ஸ்கி ஏற்கவில்லை. ஆனால் ஹார்ட்டின் நடத்தையில் இருந்த விநோதமான மற்றும் பெரும் சந்தேகத்திற்குரிய அம்சங்கள் அந்த மனிதர் குற்றமற்றவர் என்று திட்டவட்டமாக அறிவிக்க ட்ரொட்ஸ்கியை அனுமதித்திருக்கவில்லை. தனது வாழ்க்கையை கொல்ல நடந்த முயற்சியில் ஹார்ட் சம்பந்தப்பட்டிருக்க முடியும் என்பதற்கான சாத்தியத்தை அவர் திறந்தே வைத்திருந்தார். எப்படியிருந்தாலும், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பின்னால் கண்டறியப்பட்ட ஆவணங்கள் ஹார்ட், உண்மையில், ஒரு ஸ்ராலினிச முகவரே என்பதை மறுப்பிற்கிடமின்றி ஸ்தாபித்தன. அமைப்பு குறித்தும் துப்பாக்கிசூடு குறித்துமான விபரங்களை அவரை நம்பி விட்டுவைக்க முடியாது என்று சிகரோஸ் சந்தேகித்ததன் பேரில் அவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.

தனது வாழ்வின் எஞ்சியிருந்த இறுதி வாரங்களில், ட்ரொட்ஸ்கி, தனது ஆற்றலின் பெரும் பாகத்தை ஸ்ராலினிச கொலை எந்திரத்தை அம்பலப்படுத்துவதற்காய் அர்ப்பணித்திருந்தார். மே 24 சம்பவம் குறித்து அவர் இரண்டு முக்கியமான ஆவணங்களை எழுதினார்: “ஸ்ராலின் எனது மரணத்தை எதிர்பார்க்கிறார்” 1940 ஜுன் 8 அன்று எழுதி முடிக்கப்பட்டது, ”கம்யூனிச அகிலமும் ஜிபியுவும்” ஆவணம் 1940 ஆகஸ்ட் 17 அன்று, அதாவது அவர் படுகொலை செய்யப்படுவதற்கு வெறும் மூன்று நாட்கள் முன்னதாக எழுதி முடிக்கப்பட்டிருந்தது.

1940 ஆகஸ்ட் 20 அன்று, மாலை ஐந்து மணிக்கு சற்று நேரம் தாண்டி, அவெனிடா வியனாவில் இருக்கும் வதிவிடத்திற்கு ஃபிராங்க் ஜாக்சன் எதிர்பாராமல் வந்துசேர்ந்தார். ஜாக்சனின் முந்தைய ஆகஸ்ட் 17 விஜயத்தின் போது, அவரது விநோதமான நடத்தை குறித்து ட்ரொட்ஸ்கி அதிருப்தி வெளியிட்டிருந்தார். ஜாக்சன் தன்னை ஒரு பிரெஞ்சுக்காரர் என்று கூறிக் கொள்வது குறித்து ட்ரொட்ஸ்கி சந்தேகம் எழுப்பினார். சில்வியா அகெலோஃப் உடனான அவரது உறவு தவிர்த்து, நான்காம் அகிலத்திலான அவரது ஆர்வம் குறித்த தன்மை முற்றிலும் அறியப்படாததாகவும் ஆராயப்படாததாகவும் இருந்தது.

ஆனால் ட்ரொட்ஸ்கியின் கவலைகள் கவனத்தில் எடுக்கப்படாமல், ஜாக்சன் வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டிருந்தார். அன்றைய தினம் இதமான வெயிலுடன் தான் இருந்தது என்ற நிலையிலும், ஜாக்சன் ஒரு மழைக்காலத்தில் அணியும் மேலங்கியை அணிந்திருந்தார், அதில் அவர் ஒரு பனிக்கோடாரி, ஒரு தானியங்கி துப்பாக்கி, ஒரு பெரிய குத்துவாள் ஆகியவற்றை மறைத்திருந்தார். மிக அடிப்படையான பாதுகாப்பு நடைமுறைகளையும் மீறியவிதமாக, ஜாக்சன் ட்ரொட்ஸ்கியின் ஆய்வுஅறைக்குள் அவருடன் தனியாய் உடன்செல்ல அனுமதிக்கப்பட்டார். சில நிமிடங்களுக்கு பின்னர், ட்ரொட்ஸ்கி ஜாக்சன் எழுதியதொரு கட்டுரையை திறனாய்வு செய்து கொண்டிருந்த சமயத்தில், அந்த கொலைகாரர் ட்ரொட்ஸ்கியை பனிக்கோடாரி கொண்டு பின்னால் இருந்து தாக்கினார். தலையிலடித்தால் ட்ரொட்ஸ்கி உடனடியாக நினைவிழந்து விடுவார் என்று ஜாக்சன் எதிர்பார்த்திருக்க வேண்டும். ஆனால் ட்ரொட்ஸ்கி குரலெடுத்து அலறியதோடு, தனது நாற்காலியில் இருந்து எழுந்து அந்த கொலையாளியை எதிர்த்துப் போராடினார். பாதுகாவலர்கள் உள்ளே ஓடிவந்து, ஜாக்சனிடம் இருந்து ஆயுதத்தைப் பறித்தனர்.

மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட வழியிலேயே ட்ரொட்ஸ்கி நினைவிழந்து விட்டிருந்தார். 1940 ஆகஸ்ட் 21 அன்று, தாக்குதல் நடந்து 26 மணி நேரம் கடந்திருந்த நிலையில், அவர் மரணமடைந்தார். அறுபத்தியோராவது வயதைத் தொட அவருக்கு இரண்டு மாதங்களே இன்னும் இருந்தது.

ட்ரொட்ஸ்கியின் படுகொலை சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு கதிகலங்கச் செய்த அடியாக இருந்தது. எந்த ஒரு ஆணை அல்லது பெண்ணையாவது சோசலிசத்தின் பாதையில் அரசியல்ரீதியாக தவிர்க்கமுடியாதவொரு மனிதராக குறிப்பிட முடியுமாயின், ட்ரொட்ஸ்கி அப்படியொரு மனிதராக இருந்தார். அவர் பரந்த மற்றும் இணைசொல்லமுடியாதவொரு அரசியல் அனுபவத்தின் உருவடிவமாகத் திகழ்ந்தார். இருபதாம் நூற்றாண்டின் அரசியல் வரலாற்றில் இத்தகையதொரு மிகப் பிரம்மாண்டமான பாத்திரத்தை ஆற்றிய மனிதர், அநேகமாய் லெனினை தவிர்த்து, வேறொருவர் கிடையாது. மேலும், இறந்து எழுபத்தியைந்து ஆண்டுகள் ஆன பின்னரும், ட்ரொட்ஸ்கி, அசாதாரணமான அளவில் இன்னும் சமகால மனிதராகவே தொடர்ந்து இருக்கிறார். அவர் இன்னும் முழுமையாக வரலாற்றுக்குள் சென்றுவிடவில்லை. கடந்த காலத்தின் அளவுக்கு நிகழ்காலத்திலும் பொருத்தமான மனிதராகவே அவர் இருக்கிறார். ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களும், அவரது தத்துவார்த்த மற்றும் அரசியல் கருத்தாக்கங்களும், அவரது புரட்சிகர சர்வதேசியவாதமும், நாம் இன்று வாழும் உலகத்தின் பிரச்சினைகளுக்கும் இன்னும் அதே தீவிரமான சக்தியுடன் பேசுகின்றன. இருபதாம் நூற்றாண்டிலிருந்து இருபத்தியோராம் நூற்றாண்டுக்குக் விட்டுச்செல்லப்பட்ட முடிவுறாத புரட்சிகரக் கடமைகளின் மகத்தான குரலாக ட்ரொட்ஸ்கி திகழ்கிறார்.

David North
30 September 2015

சொல்விளக்கக்களஞ்சியம்

எமது இறுதி குடியகல்வு’ – ட்ரொட்ஸ்கி நவம்பர் 1927ல் போல்ஷிவிக் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டதை அடுத்து 1928ல் அவர் அல்மா அட்டாவுக்கு அனுப்பப்பட்டபோது ஆரம்பமானது. 1929ல் பிரிங்கிபோவுக்கு (துருக்கி) வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்டார்; 1933ல் பிரான்சுக்கு சென்றார், 1935ல் நோர்வேக்கு சென்றார், 1936 டிசம்பரில் மெக்சிக்கோ சென்றார்.

‘எமது இரண்டாவது குடியகல்வு’ - 1905 புரட்சி தோல்வி அடைந்ததன் பின்னர் கைது செய்து சிறையிடும் காலகட்டத்தை தொடர்ந்து, போரின்பொழுது ட்ரொட்ஸ்கி ஆஸ்திரியா, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினிலிருந்து வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டார். பிப்ரவரி புரட்சி வெடிக்கையில் அவர் நியூயோர்க்கில் இருந்தார்.

கிரெம்ளின் – மாஸ்கோவில் அரசாங்கத்துறைகள் அமைந்துள்ள கட்டிடம். ஸ்ராலின் அவரது காலத்தில் வசித்தது போல, புரட்சிக்குப் பின்னர் இருந்து அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் அங்கு வசித்தனர்.

‘சிவப்பு சனிக்கிழமைகள்’ – சிவப்பு போராளி படையினர் சம்பளம் எதுவும் வாங்காமல் போக்குவரத்து, கட்டிடம் கட்டுதல், முக்கிய உற்பத்திகள் முதலானவற்றில் வேலை செய்தபொழுது, உள்நாட்டு யுத்தத்தின்போது முன்னெடுக்கப்பட்ட (1918-1921) தாமாகவே தொழிலாளர் அணிதிரண்ட நாட்கள்.

எதிர்ப்பு – ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கும் அதன் கொள்கைகளுக்கும் எதிராக போராடுவதற்கு 1923ல் போல்ஷிவிக் கட்சியின் ஒரு பிரிவு ட்ரொட்ஸ்கியின் தலைமையில் தொடங்கப்பட்டது. ‘எதிர்ப்பின் மீதான பொலீஸ் படுகொலை’, எனப்படுவது 15வது கட்சிக் காங்கிரஸூக்கான தயாரிப்பில், எதிர்ப்பினரை பரந்த அளவில் கைது செய்தலையும் மற்றும் களையெடுத்தலையும் (இது 1927 குளிர் காலத்தின் பொழுது உச்சநிலை அடைந்தது) குறிக்கிறது.

ஆறாவது உலக காங்கிரஸ் – கம்யூனிச அகிலத்தின் ஆறாவது உலக காங்கிரஸ் (பேராயம்) 1928 ஜூலையில் நடந்தது. அதில் ட்ரொட்ஸ்கியால் அவரது கொமின்டேர்னின் வரைவு வேலைத்திட்டத்தின் மீதான விமர்சனம் (நியூ பார்க் வெளியீடு, லண்டன்) என்பதில் விமர்சிக்கப்பட்ட ஸ்ராலின்-புக்காரின் இன் வேலைத்திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஜிபியு – ஸ்ராலினது இரகசிய பொலீஸ்-ஐ குறிக்கிறது, அவை ஒஜிபியு (OGPU) என்றும் அறியப்பட்டது, பின்னர் வெளிவிவகார அமைச்சகத்துள் என்கேவிடி (NKVD) ஆக உட்சேர்க்கப்பட்டது.

‘தேர்மிடோரியன் பொய்மைப்படுத்தல்’ – எதிர்ப்பினருக்கு எதிரான போராட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பொய்கள், தவறாக மேற்கோள் காட்டல் மற்றும் வரலாற்றை திரித்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது (ட்ரொட்ஸ்கியின் ஸ்ராலின் பொய்மைப்படுத்தல் பள்ளி பார்க்க). பிரெஞ்சுப் புரட்சியில் பிற்போக்கானது, ரொபேர்ஸ்பியரின் புரட்சிகர ஆட்சியை தேர்மிடோர் 9 அன்று (ஜூலை 27, 1794) அதே நுட்பங்களைப் பயன்படுத்தி தூக்கி எறிந்தது.

பிராவ்தா – ‘உண்மை’ 1912 போல்ஷிவிக் கட்சியின் உத்தியோகபூர்வ செய்தித்தாள், பின்னர் ஸ்ராலினின் பிரதான கருவியாக ஆனது.

சர்வதேச இடது எதிர்ப்பு - ரஷ்ய எதிர்ப்பினருக்கு தங்களின் ஆதரவை அளித்ததற்காக கம்யூனிச அகிலத்தின் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட குழுக்களின் அமைப்பு. 1933ன் பின்னர் இருந்து நான்காம் அகிலத்திற்கான இயக்கமாக அறியப்பட்டது. ஐரோப்பாவில் உள்ள சர்வதேச செயலகம் சர்வதேச இயக்கத்தின் வேலைகளை, நான்காம் அகிலத்தின் பேராளர் குழுவின் கீழ் ஒழுங்கமைத்தது.

இக்னாஸ் றைஸ் – ஜிபியுவின் முகவர், 1937ல் ஸ்ராலினுடன் முறித்துக் கொண்டு நான்காம் அகிலத்தவர்களுடன் இணைந்தார். 1937 செப்டம்பர் 4-ல் சுவிட்சர்லாந்தில், லுசான் அருகில் ஜிபியு ஆல் கொல்லப்பட்டார்.

மாஸ்கோ வழக்கு விசாரணைகள்- 1934ல் கிரோவின் படுகொலையை தொடர்ந்து பழைய போல்ஷிவிக்குகள் மீது சுமத்தப்பட்ட ஒரு தொடர் நீதிமன்ற பொய்புனைவுகள். இவற்றில் முக்கியமானவை: 1936ல் பதினாறுபேர் (சினோவியேவ், காமனேவ், சிமிர்னோவ் முதலானோர்) மீதான விசாரணை; 1937 ஜனவரியில் பதினேழுபேர் (பியட்டகோவ், ராடெக் போன்ற) மீதான விசாரணை, 1937 மே இல் தளபதிகள் (டுக்காச்செவ்ஸ்கி, கமார்னிக் போன்ற) மீதான விசாரணை; 1938 மார்ச்சில் இருபத்தோருபேர் (ரக்கோவ்ஸ்கி, புக்காரின், ரிக்கோவ் போன்ற) மீதான விசாரணை அடங்கும்.

ஸ்ரெக்காவோனிச இயக்கம் – 1935ல் சோவியத் ஒன்றியத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட உற்பத்தியை விரைவுபடுத்தும் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தும் சிறப்பு முறை. இது பரந்த தொழிலாளர்கள் மத்தியில் பெரிய அளவு சம்பள வேறுபாடுகளுக்கும் அதிருப்திக்கும் வழிவகுத்தது.

‘1905ல்…. தாராளவாதத்தின் புயல்’ – 1905 அக்டோபரில், வேலைநிறுத்த இயக்கத்தால் அஞ்சிய ஜார் ஒரு அரசியலமைப்பு அறிக்கையை வழங்கினார் மற்றும் எழுந்துவரும் புரட்சியை தடுப்பதற்கு சில தாராளவாத சமிக்கைகளை செய்தார்.

கடேட்டுகள் – அரசியலமைப்பு ஜனநாயகவாதிகள் (KDs), பேராசிரியர் மில்லியுகோவ் தலைமையிலான முற்போக்கான நிலப்பிரபுக்கள். நடுத்தர முதலாளித்துவ வர்க்கத்தின் கட்சி, அரசியல் சட்ட முடியாட்சி மற்றும் இறுதியில் ஒரு குடியரசுக்காக நின்றது.

(SR-s) சமூகப் புரட்சியாளர்கள் – சிறுநிலப்பிரபுக்களை பிரதிநிதித்துவம் செய்த விவசாய சோசலிச கட்சி, பிளவுற்று இடது சமூகப் புரட்சியாளர்கள் சிலகாலம் போல்ஷிவிக் கட்சி அரசாங்கத்தில் பங்கேற்றனர், மற்றும் வலது சமூகப் புரட்சியாளர்கள் இடைக்கால கெரன்ஸ்கி அரசாங்கத்திற்கு ஆதரவளித்தனர்.

மென்ஷிவிக்குகள் – ரஷ்ய வலதுசாரி சமூக ஜனநாயகவாதிகள், தங்களை மார்கசிஸ்டுகள் என அழைத்துக்கொண்டவர்கள், ஆனால் ஒரு ஜனநாயக குடியரசை நிறுவுவதற்கு தொழிலாளர்களுக்கும் தாராளவாத முதலாளித்துவத்திற்கும் இடையிலான ஒரு கூட்டை ஆதரித்தனர்.

கெரென்ஸ்கி-செரெட்டெலி - போல்ஷிவிக்குகளால் தூக்கி எறியப்பட்ட தற்காலிக அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட ஒரு பெயர். அது கடேட்டுகள், மென்ஷிவிக்குகள் மற்றும் சமூகப் புரட்சியாளர்களின் ‘மக்கள் முன்னணி’யால் ஆதரிக்கப்பட்டது. சமூகப் புரட்சியாளர் கட்சியை சேர்ந்த கெரென்ஸ்கி பிரதமர் ஆகவும், அதேவேளை செரெட்டெலி சோவியத்துகளின் மென்ஷிவிக் தலைவராகவும் இருந்தனர்.

சேர்ஜி - ட்ரொட்ஸ்கியின் இளைய மகன், லியோனின் தம்பி.

லெனின் ஒரு ஜேர்மன் உளவாளி’ – நேசநாடுகளும் கெரென்ஸ்கி அரசாங்கமும் யுத்தத்திற்கு எதிராக லெனின், ட்ரொட்ஸ்கி மற்றும் போல்ஷிவிக்குகள் கிளர்ச்சி செய்ததால் அவர்களை ஜேர்மன் படைத்தளபதிகளின் ஏஜெண்டுகளாக இருப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டினர்.

‘சுவிட்சர்லாந்தில் விசாரணை’ – இக்னாஸ் றைஸ் படுகொலையில் சம்பந்தப்பட்ட ஜிபியு ஏஜெண்டுகள் பற்றிய 1937 அக்டோபரில் நடைபெற்ற விசாரணையைக் குறிக்கும்.

‘கெய்ன் ஜூகாஷ்விலி’ – ஸ்ராலினது உண்மையான பெயர் ஜோசப் ஜூகாஷ்விலி. கெய்ன் என்பது தனது சகோதரன் ஆபெலைக் கொன்ற பைபிள் பாத்திரம்.

Loading