கிரேக்கத்தில் சிரிசாவின் காட்டிக்கொடுப்பின் அரசியல் படிப்பினைகள்

மொழிபெயர்ப்பின் மூலக்கட்டுரையை இங்கே காணலாம்

1. தொழிலாள வர்க்கத்துக்கு மிகப்பெரும் மூலோபாய அனுபவம்

கிரேக்கத்தில் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் தலைமையிலான சிரிசா ("தீவிர இடது கூட்டணி") அரசாங்கத்தை மீண்டும் பதவிக்குக் கொண்டுவந்த 2015 செப்டம்பர் தேர்தலானது, தொழிலாள வர்க்கத்திற்கு மிகப்பெரிய மூலோபாய அனுபவமாக நிரூபணமாகியிருக்கும் ஒரு திட்டவட்டமான கட்டத்தை நிறைவுசெய்கிறது.

ஜனவரி மாதம் பதவிக்கு வந்த சிரிசா, ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர வாக்குறுதியளித்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடூரமான சமூகத் தாக்குதல்கள், 2008 பொறிவு முதலாய் முன்னெடுக்கப்பட்டு வந்திருந்த தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் அடிப்படை உரிமைகள் மீதான இரக்கமற்ற உலகளாவிய தாக்குதல்களின் மையத்தில் கிரேக்கத்தை இருத்தியது; சர்வதேச அளவில் மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் கிரேக்க தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை கண்ணுற்றனர். ஊடக செய்திகள், பிற்போக்கு ஐரோப்பிய ஒன்றிய அரசியல்வாதிகளின் விமர்சனங்கள் மற்றும் சிரிசாவே வெளியிட்ட அனைத்து அறிக்கைகளும், சிப்ரஸும் அவருடைய நிதி அமைச்சர் யானிஸ் வாருஃபாக்கிஸும் கிரேக்க மற்றும் சர்வதேச முதலாளித்துவத்தை எதிர்த்து நிற்கத் தயாராகியிருக்கும் முன்னணி தலைவர்களென பரந்த மக்கள் நம்புவதற்கு இட்டுச்சென்றன.

கிரேக்கத்திற்கு உள்ளேயும் சரி வெளியேயும் சரி, "முதலாளித்துவ-எதிர்ப்பு" அல்லது "இடது" என்று தம்மைக் காட்டிக்கொள்கின்ற எண்ணற்ற கட்சிகள், சிரிசா ஆட்சிக்கு வந்ததை இடதின் ஒரு வெற்றி என்றும் ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்திற்கான ஒரு முன்மாதிரியான வடிவம் என்றும் பாராட்டின.

எவ்வாறாயினும், அடுத்துவந்த எட்டு மாத காலத்தில், சிரிசா அதன் தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாகக் காட்டிக்கொடுத்தது. ஆட்சிக்கு வந்த ஒரு சில வாரங்களுக்குள், பெப்ரவரியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகளை நீடிக்க ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர், சிரிசா, ஜூலையில் தானே அது ஏற்பாடு செய்திருந்த சிக்கன நடவடிக்கைகள் மீதான கருத்துக்கணிப்பில் மிகப்பெரும்பான்மையாய் அளிக்கப்பட்ட "வேண்டாம்" என்ற வாக்களிப்புகளை நசுக்கிவிட்டு, பாராளுமன்றத்தின் ஊடாக புதிய பாரிய சிக்கன பிணையெடுப்பை திணித்தது.

மக்களின் வாக்களிப்பு இவ்வளவு அப்பட்டமாக மீறப்பட்டமை பரந்த மக்களை அதிர்ச்சிக்கும் திகைப்புக்கும் உள்ளாக்கியது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வங்கிகளின் அபிமானத்துக்குரிய கட்சியாக சிரிசா ஆன பின்னர், பெருவாரியான மக்களின் புறக்கணிப்புக்கு மத்தியில், வலதுசாரி புதிய ஜனநாயகம் (ND) கட்சிக்கு எதிராக செப்டம்பர் மறு தேர்தலில் சிப்ராஸ் குறுகிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சிரிசா தனது இரண்டாவது பதவிக்காலத்தை தொடங்குகையில், ஏற்கனவே மில்லியன் கணக்கானவர்களை வேலையின்மை, வறுமை மற்றும் பட்டினிக்குள் தள்ளி விட்டிருக்கக்கூடிய சிக்கன நடவடிக்கைகளை அது உக்கிரப்படுத்தி வருகின்றது.

பெருந்திரளான மக்கள், ஒரு முழு வரலாற்று காலகட்டம் பூராவும் எதிர்ப்பு இயக்கங்களின் கடந்தகால இடது அரசியலையும், ஆதிக்கம் செலுத்தி வந்திருந்த அரசியல் கட்சிகளின் திவால்நிலையையும் துரோகத்தினையும் எதிர்நோக்க வேண்டியிருந்தது. எர்னெஸ்டோ லக்கிளோ போன்ற பின்நவீனத்துவ கல்வியாளர்களின் தத்துவங்களை பின்பற்றி, இந்த அமைப்புகள் தற்போதைய சகாப்தத்தை “மார்க்சத்திற்கு பின்னரான.”(post-Marxist) என பிரகடனம் செய்தன. நடுத்தர வர்க்கத்தின் வசதியான பிரிவுகளில் வேர்கொண்டிருந்த அவை, தொழிலாள வர்க்கம் இனியும் ஒரு புரட்சிகர சக்தியாக இல்லை என்றும், அது தேசியம், இனம், பாலினம் அல்லது வாழ்க்கை முறை அடையாளங்களால் வரையறுக்கப்படுகின்ற பல்தரப்பான சமூகப்பிரிவினரால் பிரதியீடுசெய்யப்பட்டு விட்டதாக வலியுறுத்தின.

பல தசாப்தங்களாக இந்தக் கட்சிகள் தங்களது அரசியலை தீவிரமயப்பட்டதாக அல்லது முதலாளித்துவ-விரோதமானதாக எடுத்துக்காட்டி வந்திருந்தன என்றபோதும் உண்மையில் அப்படி எந்தவொரு அம்சமும் அதில் இருக்கவில்லை. இந்த பாசாங்குகள், உழைக்கும் மக்களின் இழப்பில் சமூகத்தின் உயர்மட்டத்தில் உள்ள 10 சதவீதத்தினரின் நலன்களை முன்னேற்ற வடிவமைக்கப்பட்ட முதலாளித்துவ-சார்பு கொள்கைகளுக்கு அரசியல் மூடுதிரையை கொடுக்கின்ற ஒரு மோசடி என்பதை அவர்களால் அமைக்கப்பட்ட அரசாங்கத்துடனான முதல் அனுபவமே அம்பலப்படுத்தி விட்டிருக்கிறது.

செப்டம்பர் மாதத் தேர்தலுக்கு பிந்தைய அமெரிக்கப் பயணத்தின் போது, சிப்ராஸ் வெளிப்படையாக தனது நீண்ட கால வணிக-சார்பு திட்டத்தை முன்வைத்தார். நியூயோர்க்கில் கிளின்டன் பூகோள முன்முயற்சி அமைப்பில் வைத்து முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் கேட்ட கேள்விக்கு பதிலளித்த சிப்ராஸ் கூறினார்: "வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள், அவர்கள் நாட்டுக்கு மாற்றம் கொண்டு வருவதற்கான ஒரு தெளிவான ஆணையைப் பெற்றிருக்கும் அரசாங்கத்தைக் காண்பர்.... ஒரு சில ஆண்டுகளில், கிரேக்கம் வெளிநாட்டு முதலீட்டுக்கான பிரதான இலக்காக மாறும். அதுவே என் அபிப்ராயம், அதுவே என் ஆசையுமாகும்."

சிப்ராஸ் கிரேக்கத்திற்குள் முதலீடுகளை எப்படி ஈர்ப்பார்? ஐரோப்பா முழுவதும் அரசாங்கங்கள் ஊதியங்கள் மற்றும் சமூகநலஉதவிகள் மீது கொடூரமான தாக்குதல்களை முன்னெடுக்கின்ற நிலையில், மிக உச்ச மட்டத்திற்கு சுரண்டப்படுவதும் ஆகவே மிகவும் இலாபகரமானதாக இருப்பதுமான உழைப்பை தொடர்ந்தும் சர்வதேச மற்றும் கிரேக்க முதலீட்டாளர்களுக்கு வழங்க தமது வெட்டுக்கள் அனுமதிக்கும் என்று சிரிசா நம்புகிறது.

சிப்ராசின் திட்டமானது மேற்கு ஐரோப்பாவில் பல தலைமுறைகளாக அனுபவித்து வந்த அடிப்படை சமூக உரிமைகளின் அழிவில் நிறுவப்பட்டுள்ளது. கிரேக்கத்தில் முதலாளிகள் அனைவருக்குமான சுகாதாரப் பாதுகாப்பை பராமரிக்கும் செலவில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். சிரிசாவின் ஓய்வூதிய வெட்டுக்கள், அரசு-நிதியாதாரத்தில் இருந்தான ஓய்வூதியத்திற்கு தொழிலாளர்கள் கொண்டுள்ள உரிமையை முற்றாக முடிவுக்குக் கொண்டுவந்து, அவர்களை துணை ஓய்வூதியத் திட்டங்களுக்குள் பணம் செலுத்தக் கோருகின்ற, செய்தி ஊடகங்களில் விவாதிக்கப்பட்ட ஒரு பரந்த திட்டத்தின் பாகமாக இருக்கின்றன. கிரேக்கத்தின் குறைக்கப்பட்டுள்ள மாதாந்த 683 யூரோ குறைந்தபட்ச ஊதியமானது நெதர்லாந்து அல்லது பிரான்ஸ் போன்ற செல்வந்த ஐரோப்பிய மண்டல நாடுகளின் குறைந்தபட்ச ஊதிய மட்டங்களைக் காட்டிலும் சீனாவில் உள்ள ஊதிய நிலைமைகளுக்கு அல்லது மிக வறிய கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலான ஊதிய நிலைமைகளுக்கே இன்னும் அண்மித்ததாக உள்ளது.

சிரிசா அனுபவமானது தொழிலாள வர்க்கம், இளைஞர்கள், மற்றும் சோசலிச எண்ணம் கொண்ட புத்திஜீவிகள் அடிப்படையான அரசியல் மறு-நோக்குநிலை கொள்ள வேண்டிய அவசியத்தை சுட்டிக் காட்டுகிறது. 1930 களின் பின்னர் கண்டிராத ஒரு உலகப் பொருளாதார நெருக்கடிக்கும் ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கத்தின் கொடூரமான தாக்குதலுக்கும் முகம்கொடுக்கின்ற நிலையில், தொழிலாள வர்க்கத்தால் புதிய, "இடது" முதலாளித்துவ அரசாங்கங்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் தம்மை பாதுகாத்துக் கொள்ள முடியாது.

ஒரே ஒரு முன்னோக்கிய வழி, ஒரு உண்மையான புரட்சிகரக் கொள்கை மூலம் கிரேக்கத்திலும் உலகம் பூராவுமான ஒரு போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதே ஆகும். முதலாளித்துவத்தின் மீதான ஒரு நேரடியான தாக்குதலும், அவர்களது செல்வங்களைப் பறிமுதல் செய்வதும், பிரதான வங்கிகள் மற்றும் உற்பத்தி சக்திகளைக் கைப்பற்றி அவற்றை உழைக்கும் மக்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதும், ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் தொழிலாளர்கள் அரசை உருவாக்குவதும் இதற்கு அவசியமாய் உள்ளது. சிரிசா போன்ற கட்சிகளுக்கு எதிரான தயவுதாட்சண்யமற்ற போராட்டத்தில், தொழிலாள வர்க்கத்துக்கு அரசியல் தலைமை வழங்குவதற்காய் மார்க்சிச கட்சிகளை கட்டியெழுப்புவது இத்தகைய போராட்டங்களுக்கு அத்தியாவசியமாய் உள்ளது.

சிரிசா போன்ற கட்சிகளுக்கு எதிராக, ட்ரொட்ஸ்கிசத்தின் வரலாற்று தொடர்ச்சியை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பாதுகாப்பதன் வரலாற்று முக்கியத்துவம் இதுவே ஆகும். அனைத்துலகக் குழு சிரிசாவை "போலி இடது" என்று அழைக்கிறது. ‘சிரிசா ஒரு "தீவிர இடது" கட்சி அல்ல, மாறாக தொழிலாளர்களுக்கு குரோதமான ஒரு முதலாளித்துவ-சார்பு கட்சியாகும், சிக்கன நடவடிக்கைத் திட்டங்களுக்கு முடிவு கட்டும் தனது வாக்குறுதிகளை அது காட்டிக்கொடுக்கும்’ என்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே சர்வதேச அளவில் தொழிலாளர்களை எச்சரித்தது. அனைத்துலகக் குழு சிரிசா பற்றி முன்வைத்த விமர்சனங்கள் முற்றிலும் சரியென நிரூபிக்கப்பட்டுள்ளன.

போலி இடதுகளுக்கு எதிரான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் போராட்டம், ஒரு கன்னை மோதல் அல்ல, மாறாக சமரசத்திற்கு இடமில்லாத இரு வர்க்கப் போக்குகளுக்கு இடையேயான ஒரு போராட்டமாகும் என்பதை சிப்ரசின் நிலைச்சான்று காட்டியுள்ளது. சிரிசா, நிதி மூலதனத்தின் ஆணைகளுக்கும் கிரேக்கம் முதலாளித்துவ வர்க்கத்தின் தேவைகளுக்கும் தொழிலாள வர்க்கத்தை கட்டிப்போட முயன்ற வேளையில், அனைத்துலகக் குழுவானது தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புரட்சிகர முன்னோக்கை அபிவிருத்தி செய்யப் போராடியது.

2. சிரிசா காட்டிக்கொடுப்பு பற்றிய மூடி மறைப்புகளும் நியாயப்படுத்தல்களும்

சிரிசாவும் அதன் கூட்டாளிகளும் சிப்ராசின் செயல்கள் குறித்து முன்வைக்கின்ற நியாயப்படுத்தல்களை நிராகரிப்பது சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகத் தொடர்கின்ற போராட்டத்தின் முதல் படியாகும். எட்டு மாதங்களுக்கு முன்பு, சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு முன்னேற்றப் பாதையாக சிரிசாவின் தேர்தல் வெற்றியை ஊக்குவித்த, அதே சக்திகள், இப்போது தீவிரமாக இந்த சம்பவங்களின் முக்கியத்துவத்தை மூடிமறைக்கின்றன.

அதன் நடவடிக்கைகளைக் கண்டும் கூட, சிலர் இன்னும் சிரிசாவை ஒரு "தீவிர இடது" கட்சியாக சித்தரிக்கின்றனர். சிரிசா மறுதேர்வு செய்யப்பட்டது பற்றி பாராட்டிய ஜேர்மனியின் இடது கட்சி, கிரேக்க வாக்காளர்கள், "ஒரு நெருக்கடிக்கு மத்தியில் ஊழல் மிக்க பழைய கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வருவதை விட ஒரு இடதுசாரி அரசாங்கம் சிறந்தது” என முடிவெடுத்துள்ளனர் என அறிவித்துள்ளது.

ஏனையவர்கள், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சிரிசா அடிபணிவது கிரேக்க நெருக்கடிக்கான சாத்தியப்படக்கூடிய ஒரே பதிலிறுப்பாக இருந்தது என்றும், அதனால், அது எந்தவகையிலும் ஒரு காட்டிக்கொடுப்பு ஆகாது என்றும் ஒரு விரக்தியடைந்த பார்வையை முன்வைத்தனர். லண்டன் கிங்ஸ் கல்லூரி தத்துவப் பேராசிரியரும் (இப்போது வெகுஜன ஐக்கிய கட்சி எனப்படும்) சிரிசாவின் இடது அரங்கம் பிரிவின் (Left Platform faction) முன்னணி உறுப்பினருமான ஸ்ராதிஸ் கௌவெலாக்கிஸின் அணுகுமுறையும் இதுவே ஆகும். பிரிட்டனில் சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) கூட்டமொன்றில் அவர் பிரகடனம் செய்தார்:

என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டோமென்றால் 'காட்டிக்கொடுப்பு' என்ற சொல் பொருத்தமற்றதாகும் என நான் நினைக்கிறேன். மக்கள் ஆணை காட்டிக்கொடுக்கப்பட்டுவிட்டது என்றும் மக்கள் தாங்கள் காட்டிகொடுக்கப்பட்டுவிட்டதாக மிக நியாயமான வகையில் உணர்கின்றனர் என்றும் புறநிலையாக நாம் கூற முடியும் என்பது வாஸ்தவம் தான்.

எனினும், காட்டிக்கொடுப்பு என்பதன் கருத்து, சில தருணத்தில் தங்களின் கடமைப்பாடுகளை கைவிடுவதற்கு நீங்கள் நனவுடன் எடுக்கின்ற ஒரு முடிவையே பொதுவாய் குறிப்பதாகும். உண்மையில் என்ன நடந்தது என்று நான் நினைக்கிறேன் என்றால், சிப்ராஸ் பேச்சுவார்த்தைகள் மற்றும் நல்லெண்ணத்தை காண்பிப்பதை மையமாகக் கொண்ட ஒரு அணுகுமுறையை முன்வைப்பதன் மூலம் ஒரு சாதகமான முடிவைத் தன்னால் பெற முடியும் என்று அவர் நேர்மையாக நம்பினார், அதனால் தான் வேறு எந்த மாற்றுத் திட்டமும் தன்னிடம் இல்லை என்பதை அவர் தொடர்ந்தும் கூறி வந்திருந்தார்.

சிரிசாவை காப்பாற்ற என்னவொரு பரிதாபகரமான மூடிமறைப்பு வேலை! கூவெலாக்கிஸ், ஒரு வர்க்கப் பகுப்பாய்வை மலிவான உளவியல் ஊகத்தைக் கொண்டு பதிலீடு செய்கின்றார். சிக்கன நடவடிக்கைகளில் எந்தவித தளர்வையும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் மீண்டும் மீண்டும் அறிவித்த போதிலும், ஐரோப்பிய ஒன்றியம் தனக்கு அளிக்கும் எந்த ஒப்பந்தத்தையும் ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு எந்த மூலோபாயமும் தன்னிடம் கிடையாது என்று அறிவித்ததன் மூலம் அவர்களது சிக்கன கோரிக்கைகளை நிறுத்துவதற்கு அவர்களை சம்மதிக்க வைக்க முடியும் என்று சிப்ராஸ் உண்மையிலேயே நம்பினார் என்பதை நம்புமாறு கூவெலாக்கிஸ் தன்னை செவிமடுப்பவர்களிடம் கூறுகின்றார்.

இந்த விளக்கம் எதையும் தெளிவுபடுத்தவில்லை. முதலில், சிப்ராஸ் அதிகாரத்துக்கு வரும் முன்னர் அரசியலில் இரண்டு தசாப்தங்களைக் கழித்திருந்ததோடு அந்த கட்டத்தில் அவர் அரச தலைவர்கள் மற்றும் சர்வதேச அளவில் முன்னணி நிதியாளர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர் என்ற வகையில், கூவெலாக்கிஸ் சித்தரிப்பது போல் அவர் அரசியல் அப்பாவி என்று கூறுவது நம்பும்படியானது அல்ல. எனினும், சிப்ராஸ் கற்பனைக்கு அப்பாற்பட்ட மிக அப்பாவியான மனிதர் என்று ஒருவர் ஏற்றுக் கொண்டாலும், ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்த்தவாறு சிக்கனத்தை வலியுறுத்திய போது சிப்ராஸ் முழுமையான சரணடைவுக்கு ஒரு மாற்றீட்டை உருவாக்காதது ஏன் என்பதை கூவெலாக்கிஸ் சிரிசாவை பாதுகாக்க கொடுக்கும் விளக்கங்கள் தெளிவுபடுத்தவில்லை.

சிப்ராஸின் தீர்மானங்களை நெறிப்படுத்துகின்ற வர்க்க நோக்கங்கள் புரிந்து கொள்ளக் கடினமானவை அல்ல. யூரோ நாணயம், வங்கிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனும் நேட்டோ உடனுமான கிரேக்கத்தின் கூட்டணி ஆகியவற்றைப் பராமரிப்பதில் கிரேக்க மக்களில் உயரடுக்கில் இருக்கும் 10 சதவீதம் பேரது நலன்களைக் பாதுகாக்கவே அவர் செயல்பட்டார். வேலைநிறுத்தம் அல்லது ஆர்ப்பாட்டத்தின் ஊடாக சிக்கனத்துக்கு எதிராக நிலவும் வெகுஜன எதிர்ப்பை அணிதிரட்டுவதற்கான எந்தவொரு முயற்சியும், செப்டம்பர் தேர்தல்களின் பின்னர் அவர் தெளிவாக வெளிப்படுத்தியிருக்க கூடிய முதலாளித்துவ-சார்பு செயல்திட்டத்துக்கு குறுக்காக நின்றிருக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஜனவரியில் அதிகாரத்தைக் கைப்பற்றும் போது சிப்ராசின் நோக்கங்கள் என்னவாக இருந்தன என்பது, இறுதி ஆய்வுகளில், அவசியமற்றவையாகும். பிப்ரவரியில் ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நெறிமுறையில் அவர் கையெழுத்திட்டமை, ஜூலையில் நடத்திய கருத்துக் கணிப்பில் கிடைத்த “வேண்டாம்” என்ற வாக்களிப்பை நசுக்கி விட்டு அதற்கு மாறாக ஒரு புதிய சிக்கன பிணையெடுப்பில் அவர் கையெழுத்திட்டமை, மற்றும் இறுதியாக அக்டோபரில் ஒரு சிக்கன வரவு-செலவுத் திட்டத்தை அவர் முன்வைத்தமை போன்ற அவரது முக்கியமான முடிவுகள், ஐரோப்பிய ஒன்றிய சிக்கன கட்டளைகளை அமுல்படுத்துவதற்கான திடமானதொரு உறுதிப்பாட்டை அவர் கொண்டிருந்ததை எடுத்துக்காட்டின. இந்த நடவடிக்கைகள், சிக்கன நடவடிக்கைகளுக்கு முடிவுகட்டுவோம் என சிரிசா வழங்கிய தேர்தல் வாக்குறுதிகள் அப்பட்டமாகக் காட்டிக்கொடுக்கப்பட்டதை வெளிப்படுத்தின.

சிப்ராசின் நிலைச்சான்றை பூசிமெழுக கூவெலாக்கிஸ் மேற்கொண்ட நேர்த்தியற்ற முயற்சி, சிரிசாவுக்கு ஒரு இடது மாற்றீடு எழுந்துவிடாமல் தடுப்பது என்ற அவரது பரந்த நோக்கத்துடன் பிணைந்ததாகும்.

அதே சோசலிச தொழிலாளர் கட்சி கூட்டத்தில் கூவெலாக்கிஸ் தெரிவித்தார்: “ஒரு அரசியல் போராட்டத்தில் நிரூபணமானது அல்லது தோற்கடிக்கப்பட்டது என்பதன் அர்த்தம் என்ன என்பது பற்றிய மிகப் பொதுவான ஒரு பிரதிபலிப்பை நான் சேர்க்க விரும்புகிறேன். இந்த வார்த்தைகளின் வரலாற்றுவகையான புரிதல் ஒரு மார்க்சிஸ்ட்டுக்கு அவசியம் என நான் நினைக்கிறேன். ஒரு புறம், நீங்கள் கூறி வந்தவை உண்மை என்பதால் அவை நிரூபிக்கப்பட்டுவிட்டன என உங்களால் கூற முடியும். இது, நான்-தான்-கூறினேனே என்ற வழக்கமான மூலோபாயமாகும். ஆனால், உங்களால் அந்த நிலைப்பாட்டுக்கு ஒரு உறுதியான சக்தியைக் கொடுக்க முடியாவிட்டால், அரசியல்ரீதியாக நீங்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளீர்கள்."

கூவெலாக்கிஸ் இந்த கருத்து முற்றிலும் சிடுமூஞ்சித்தனமானதாகும். இடதில் இருந்து சிரிசாவை எதிர்ப்பவர்களுக்கு அவர் அழுத்தமாக சொல்வது இதுதான் என்றாகிறது: "சிரிசாவை நீங்கள் விமர்சித்த போதிலும், எமது காட்டிக்கொடுப்பை நாங்கள் நிறைவேற்றுவதில் இருந்து எங்களை உங்களால் தடுக்க முடிந்திருக்கவில்லை. அரச அதிகாரத்தில் இருந்த நாங்கள் பிற்போக்குக் கொள்கைகளை நடத்தினோம். ஆனால் எங்களை விமர்சிக்கும் உங்களால், ‘நான் தான் கூறினேனே’ என சொல்வதற்கும் அதிகமாய் வேறு எதுவும் செய்ய முடியவில்லை."

கூவெலாக்கிஸ் போன்று சிரிசாவுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் மறுக்க முயற்சித்தாலும் கூட, சிரிசாவின் காட்டிக் கொடுப்பின் அனுபவங்கள் அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். போலி-இடதுகளின் வர்க்கத் தன்மை விடயத்தில் ஒரு வலிமிகுந்த மற்றும் மறக்க முடியாத பாடத்தை தொழிலாள வர்க்கம் பெற்றுள்ளது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, அரசியல் சூழலை புரிந்து கொண்டுள்ளது மற்றும் தொழிலாளர்களுக்கு அது உண்மையை கூறியுள்ளது என்று தயக்கமின்றித் தெரிவிக்கிறது. இவ்வகையிலேயே ஒரு புரட்சிகரப் பாட்டாளி வர்க்க போக்கு தொழிலாள வர்க்கத்தினுள் தன்னுடைய ஆளுமையை நிலைநாட்டுகிறது, அத்துடன் சோசலிசப் புரட்சியில் அதை வழி நடத்தத் தயாரிப்பும் செய்கிறது. வேறு எந்த வழியிலும் அன்றி, இந்த செயல்முறை மூலம் மட்டுமே, தொழிலாள வர்க்கமானது சிரிசா உடனும் உலகில் உள்ள ஏனைய பிற்போக்கு அரசாங்கங்களுடனும் "உறுதியாக" கணக்குத் தீர்த்துக்கொள்ளும்.

3. சிரிசா பற்றி அனைத்துலகக் குழு தொழிலாள வர்க்கத்துக்கு எவ்வாறு எச்சரித்தது

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இணைய வெளியீடான உலக சோசலிச வலைத் தளம் கிரேக்க சமூக ஜனநாயக பாஸோக் கட்சியின் ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூ தேர்வானதன் பின்னர், 2009ல் வெடித்த கிரேக்க கடன் நெருக்கடியை தீவிரமாக ஆராய்ந்தது. அது ஆரம்பத்திலிருந்தே சிரிசா, கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி (KKE), அன்டர்ஸ்யா மற்றும், பாஸோக் ஐயும் மற்றும் பாஸோக் (Pasok) மேலாதிக்கம் செலுத்துகின்ற தொழிற்சங்க அதிகாரத்துவத்தையும் நோக்கி நோக்குநிலையமைத்துக் கொண்ட இதேபோன்ற குழுக்கள் மீது எந்த நம்பிக்கையும் வைக்க வேண்டாம் என தொழிலாளர்களை எச்சரித்து வந்தது.

2010 மே மாதத்தில், முதலாவது கிரேக்க சிக்கனப் பொதியை பாஸோக் ஏற்றுக்கொண்ட சமயத்தில், உலக சோசலிச வலைத் தளம் எச்சரித்தது: "தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் மூலோபாயமானது எதிர்ப்பை சிதறடிக்க செயற்படும் தொழிற்சங்கங்கள் மற்றும் நடுத்தர வர்க்க அமைப்புக்களுடன் உடனடியாக மோதலுக்கு இட்டுச் செல்லும். கிரேக்கத்தில் தொழிற்சங்கங்களும் சிரிசா மற்றும் கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி உட்பட அவற்றின் கூட்டாளிகளும், பாப்பாண்ட்ரூ உடனான தங்கள் கூட்டணியையும், தங்கள் பங்கை அரசியல் ஸ்தாபகத்தில் பராமரிக்க உறுதிபூண்டுள்ளனர். ... பாப்பாண்ட்ரூவின் சமூக ஜனநாயக பாஸோக் கட்சி மீது தாக்கம் ஏற்படுத்தும் ஒரு முன்னோக்கை முன்னிலைப்படுத்துவதன் மூலம் இந்த அடுக்குகள், பிறவெங்கிலும் உள்ள தங்கள் சகாக்களைப் போலவே, தொழிலாளர்களை அரசுக்கும், தேசியவாத அரசியலுக்கும், மற்றும் வங்கிகளின் சிக்கனநடவடிக்கை வேலைத்திட்டத்திற்கும் அடிபணியச் செய்ய நனவுடன் முனைகின்றன. "

அச்சமயத்தில் பாஸோக் -முதலில் பாப்பாண்ட்ரூவின் கீழும், பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தினால் திணிக்கப்பட்ட புதிய ஜனநாயகம் மற்றும் தீவிர வலது லாவோஸ் கட்சிகள் உள்ளடங்கிய ஒரு "வல்லுனர்" அரசாங்கத்தின் கீழும் - இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் ஐரோப்பாவில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான பேரழிவு மிக்க சமூகத் தாக்குதலுக்கு தலைமை கொடுத்தது. வாழ்க்கைத் தரம் சீரழிந்து மில்லியன் கணக்கானவர்கள் வறுமையில் தள்ளப்பட்டனர். இது, 1974ல் சி.ஐ.ஏ. ஆதரவிலான படைத்தளபதிகளின் இராணுவ ஆட்சிக் குழு வீழ்ச்சியடைந்ததற்கு பின்னர் ஜனநாயக கட்சியுடன் (ND) சேர்ந்து கிரேக்கத்தின் பிரதான ஆளும் கட்சியாக இருந்து வந்திருந்த பாஸோக் ஐ கதிகலங்கச் செய்தது.

மே 2012 தேர்தல் பிரச்சாரத்தில் பாஸோக் படுதோல்விகண்டு, புதிய ஜனநாயகத்துக்கு அடுத்ததாக சிரிசா வந்தபோது, உலக சோசலிச வலைத் தளம் சிரிசாவின் பிற்போக்கு வேலைத்திட்டம் பற்றி எச்சரித்தது: "ஐரோப்பிய ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டு வருவதும் அத்துடன் சிப்ராஸ் தற்போது தனது நம்பிக்கைகளை வைத்துள்ளதுமான 'வளர்ச்சி உடன்படிக்கை' என்பது நொடிந்திருக்கும் வங்கிகளுக்கு கூடுதல் நிதி வழங்குதலையும் மற்றும் போட்டித்திறனை –அதாவது நெகிழ்வான வேலை நிலைமைகள் மற்றும் குறைந்த ஊதியங்கள்– மேம்படுத்துவதற்கான ‘கட்டமைப்புச் சீர்திருத்தங்களையும்’ கொண்டிருக்கிறது. பொதுச் செலவுகளை வெட்டுவது தடையின்றி தொடரும். சிரிசா உண்மையில் கிரேக்க தேர்தலில் வெற்றி பெற்றால், அது அத்தகைய தாக்குதல்களை அமுல்படுத்துவதில் முக்கிய பாத்திரத்தை வகிக்கும்."

புதிய ஜனநாயகம் 2012 தேர்தல்களில் வெற்றி பெற்றதை அடுத்து முக்கிய ஏகாதிபத்திய அரசாங்கங்கள் சிப்ராஸைத் தயார்படுத்தத் தொடங்கின. இவர் முக்கியமான ஐரோப்பிய தலைநகரங்களுக்கும் பின் 2013ல், வாஷிங்டன் டிசி மற்றும் நியூயோர்க்குக்கும் விஜயம் செய்தார். ஏகாதிபத்திய சக்திகள், ஊடகங்கள் மற்றும் போலி இடது கட்சிகள் சிரிசாவை முன்னிலைப்படுத்துவதை பகுப்பாய்வு செய்த உலக சோசலிச வலைத் தளம் இவ்வாறு முடிவுக்கு வந்தது: "வரவிருக்கும் வர்க்கப் போராட்டங்களில், சிரிசா தொழிலாளர்களை ஒரு பகையாளியாக எதிர்கொள்ளும். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதன் நோக்கம், சிக்கன நடவடிக்கைகள் மீதான வெகுஜன எதிர்ப்பை கட்டுப்படுத்துவதும் தொழிலாள வர்க்கத்தின் மீது நிதி மூலதனத்தின் அரசியல் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதும் ஆகும்."

புதிய ஜனநயாக கட்சியின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராய் ஒருவருட காலம் வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் பெருகியதன் பின்னர் 2015 ஜனவரியில் சிரிசா ஆட்சிக்கு வந்த போது, உலக சோசலிச வலைத் தளம் தெரிவித்ததாவது: "உழைக்கும் மக்களைப் பொறுத்தவரை, சிரிசா அரசாங்கம் நெருக்கடியில் இருந்து வெளியேறுவதற்கான ஒரு வழியைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை; அதற்கு நேர்மாறாய், அது ஒரு பிரம்மாண்டமான ஆபத்தை பிரதிநிதித்துவம் செய்யும். சிரிசாவின் இடதுசாரி தோரணைகள் ஒருபுறம் இருந்தாலும், அது நடுத்தர வர்க்கத்தின் வசதியான தட்டுக்களில் தங்கியிருக்கும் ஒரு முதலாளித்துவக் கட்சி ஆகும். அதன் கொள்கைகள், இந்த சமூக ஒழுங்கை பாதுகாப்பதன் மூலம் தங்கள் சலுகைகளை பேணிக்கொள்ள விரும்பும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர், கல்வியாளர்கள், தொழில்நிபுணர்கள் மற்றும் பாராளுமன்றவாதிகளாலேயே தீர்மானிக்கப்படுகிறது. அதன் தலைவர் அலெக்சிஸ் சிப்ராஸ், வாக்காளர்களுக்கு கிரேக்கத்தில் கொடூரமான சிக்கன நடவடிக்கையை (மிகவும் சிறிதளவு) குறைப்பதாக உறுதியளிக்கின்ற அதேசமயத்தில், வெளிநாட்டில் வங்கிகள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளுக்கு சிரிசா அரசாங்கத்தைப் பற்றி 'பயப்பட ஒன்றுமில்லை' என்று சளைக்காமல் உறுதிமொழி வழங்கி வருகிறார்."

இந்த எச்சரிக்கைகள் சிரிசா அரசாங்கத்தின் நிலைச்சான்றில் நிரூபணமாயின. தொடக்கத்திலிருந்தே சிரிசா, தன்னை பதவிக்குக் கொண்டுவர வாக்களித்த மில்லியன் கணக்கான மக்களின் அபிலாசைகளைக் கண்டு அஞ்சியதோடு அவற்றை எதிர்த்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகள் தொடர்பான சர்வதேச எதிர்ப்புக்கள் மற்றும் ஏனைய வடிவங்களிலான வெகுஜன எதிர்ப்புக்கு அழைப்பு விடுப்பதற்கு மாறாக, சிரிசா ஐரோப்பிய ஆளும் வர்க்கங்களை நயந்து சாதிக்கும் தாக்குதல் தொடுக்க முயன்றது. ஐரோப்பிய வங்கியாளர்களின் தயாளகுணத்திற்கு வேண்டுகோள் விடுப்பதன் மூலம் பெறக்கூடிய மட்டுப்படுத்தப்பட்ட கடன் நிவாரணம் மற்றும் ஏனைய சலுகைகள் ஊடாக, ஐரோப்பிய ஒன்றியத்திடத்திடம் இருந்தான சிக்கனக் கொள்கைகளில் ஒரு சிறு தளர்வைப் பெறுவதே அதன் முன்னோக்காய் இருந்தது.

சிப்ராசின் முதல் நிதி அமைச்சரான யானிஸ் வாருஃபாக்கிஸ், தான் ஆரம்பகட்ட ஐரோப்பிய ஒன்றிய பேச்சுவார்த்தைகளின் போது “நிலையான தாட்சரிச அல்லது ரேகனிச” பொருளாதாரக் கொள்கைகளை முன்மொழிந்ததாக பின்னர் ஒப்சேவர் பத்திரிகையிடம் தெரிவித்தார். இந்தக் கொள்கைகளை, ஜோன் மேஜரின் பிரித்தானிய கன்சர்வேடிவ் கட்சியில் கருவூலத் தலைவராக இருந்த தாட்சர்வாதி லோர்ட் நோர்மன் லெமொன்ட், அதே போல் முன்னாள் அமெரிக்க கருவூலச் செயலாளர் லோரன்ஸ் சம்மர்ஸ் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு "சர்வதேச ஆலோசகர் குழு”வுடன் இணைந்து தான் உருவாக்கியிருந்ததாக அவர் தெரிவித்தார்.

சிரிசா அதிகாரிகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன் தங்களை தாழ்த்திக்கொண்டு, பேர்லின், வங்கிகள் மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் கிரேக்கத்திற்கு எதிரான தங்களது கோரிக்கைகள் மற்றும் மிரட்டல்களை துரிதப்படுத்துவதற்கு ஊக்குவித்தனர். பெப்பிரவரி 11, வாருஃபாக்கிஸ் பேர்லினுக்கு சென்றிருந்தபோது: ஜேர்மன் அதிபர் "அங்கேலா மேர்க்கெல் ஐரோப்பாவில் மிக மதிநுட்பமான அரசியல்வாதி. அதில் எந்த சந்தேகமும் இல்லை, மேலும் அவரது நிதி அமைச்சர் வொல்ப்காங் ஷொய்பிள, புத்திஜீவித சாரத்துடனான ஒரே ஐரோப்பிய அரசியல்வாதி என்று கூட சொல்லலாம்" என அறிவித்தார்.

கிரேக்க முதலாளித்துவத்தின் வேட்டையாடல்களுக்கு எதிராக தொழிலாளர்களை பாதுகாக்க ஒரு சிறு நடவடிக்கையை கூட சிரிசா எடுக்கவில்லை. கிரேக்கத்திற்கு கடன் வழங்குபவர்களுடனான பேச்சுவார்த்தையிலும் கூட சிரிசா கிரேக்க முதலாளித்துவத்தின் நலன்களையே முதன்மையாக கருத்தில் கொண்டிருந்தது. சிரிசா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பின்னரான மாதங்களில், கிரேக்கத்தின் நிதிய உயரடுக்கு பில்லியன் கணக்கான யூரோக்களை நாட்டிற்கு வெளியே அனுப்பி பொருளாதாரத்தை சூறையாடுவதற்கு அது அனுமதித்திருந்தது. மூலதனம் வெளியில் பாய்வதை தடுத்து நிறுத்துவதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை, அதேபோல வங்கிகள் தேசியமயமாக்கப்படுவதற்கான அல்லது கிரேக்க ஆளும் வர்க்கத்தின் செல்வம், அதிகாரம் மற்றும் சலுகைகளில் கைவைப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மாற்றத்திற்கான வெகுஜன உற்சாகமும் எதிர்பார்ப்புகளும் தளர்ந்து விட்டது என்பதிலும், அரசியல் நிலைமை ஸ்திரமடைந்து விட்டது என்பதிலும் சிரிசாவுக்கு நம்பிக்கை ஏற்பட்டதும், அது உடனடியாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வளைந்துகொடுத்தது. பெப்பிரவரி 20 அன்று அது சிக்கன உடன்படிக்கையை நீட்டிக்கவும், அதன் தேர்தல் பிரச்சாரத்தின் அடிப்படையான தெசலோனீக்கி திட்டத்தில் அது வாக்குறுதி அளித்திருந்த மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களை ஒதுக்கித் தள்ளி விட்டு, புதிய சிக்கன நடவடிக்கைப் பொதி ஒன்றை முன்வைக்கவும் ஒப்புக்கொண்டது. நான்கு நாட்களின் பின்னர் அது சுகாதாரம், கல்வி, பொதுப் போக்குவரத்து, உள்ளூராட்சி, மற்றும் ஏனைய அத்தியாவசிய சமூக சேவைகளுக்கான செலவுகளை வெட்டுவதற்கு உறுதியளித்தது. இதன் பின்னர், சிப்ராஸ் இந்த வெட்டுக்களைச் சுமத்த எத்தகைய அரசியல் சூழ்ச்சித்தந்திரங்களை பயன்படுத்தியிருந்தாலும், சிரிசாவின் பிற்போக்குத்தனமான வர்க்கத் தன்மை குறித்து கேள்வி எதுவும் இருக்க முடியாது.

வசந்த காலம் பூராவும், ஐரோப்பிய ஒன்றியம் ஒப்பனை சலுகைகளைக் கூட மறுத்திருந்த நிலையில், வெட்டுக்களை தான் ஏற்றுக் கொண்டதை கிரேக்க மக்களிடம் நியாயப்படுத்துவதற்கு ஒரு வழியைக் கண்டுபிடிக்க சிப்ராஸ் பிரயாசையுடன் முயன்றார்.

ஏப்ரல் 30 அன்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன திட்டத்தின் மீது கருத்துக்கணிப்பை நடத்தும் யோசனையை சிப்ராஸ் முதலில் முன்வைத்த போது, உலக சோசலிச வலைத் தளம் எச்சரித்தது: "ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு உடன்பாட்டை அடைவதற்கு, ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன திட்டத்துக்கு முடிவு கட்டுவதாக சிரிசா முன்னெடுத்த பிரச்சாரத்தை அப்பட்டமாக மீறும் ஆழமான சமூக வெட்டுக்களை அமுல்படுத்த சிரிசா தயாராகி வருகின்றது. எனவே மிகப்பெருமளவில் கிரேக்க மக்களால் நிராகரிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியம் ஆணையிட்டுள்ள கொள்கைகளுக்கு, ஒரு ஜனநாயகப் போர்வையை போர்த்தும் முயற்சியாக ஒரு கருத்துக் கணிப்பை ஏற்பாடு செய்வதைப் பற்றி சிரிசா ஆராயும் என சிப்ராஸ் சமிக்ஞை செய்துள்ளார்."

இறுதியில், ஜூன் மாதத்தில், சிப்ராஸ், ஐரோப்பிய ஒன்றிய சிக்கனப் பொதி மீதான கருத்துக் கணிப்பை ஜூலை 5 நடத்துவதாக அறிவித்து, "வேண்டாம்" என்ற வாக்குகளுக்கு அழைப்பு விடுத்தார். உலக சோசலிச வலைத் தளம் எச்சரித்திருந்ததைப் போல இது ஒரு வஞ்சகத்தனமான அரசியல் மோசடி என்பதை சிரிசா ஆதரவாளர்கள் கூட இப்போது ஒப்புக்கொள்கின்றனர். சிப்ராஸ் கருத்துக் கணிப்பில் தோல்வி காண்பதற்கு திட்டமிட்டதோடு "வேண்டும்" என்ற வாக்குமுடிவை சாக்காகப் பயன்படுத்தி இராஜினாமா செய்து, ஒரு வலதுசாரி கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி சிக்கன வெட்டுக்களை திணிப்பதற்கு வழிவகுக்க திட்டமிட்டார்.

சிரிசாவின் ஒரு ஆதரவாளரும் விசுவாசியும், நீண்ட கால பப்லோவாதியுமான தாரிக் அலி, லண்டன் ரிவ்யூ ஒஃப் புக்ஸ் சஞ்சிகைக்கு எழுதினார்: "சிப்ராஸ் மற்றும் அவரது உள் வட்டத்தில் இருப்பவர்கள் ஒரு 'வேண்டும்' என்ற வாக்களிப்பை அல்லது ஒரு மிகக் குறுகிய வித்தியாசத்திலான 'வேண்டாம்' என்ற வாக்களிப்பையே கருத்துக் கணிப்பில் எதிர்பார்த்திருந்தனர் என்பது இனிமேலும் ஒரு இரகசியம் அல்ல... மொத்தத்தில் சிப்ராஸ் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பை நடத்தியது ஏன்? 'அவர் மிகவும் கடினமானவர் மற்றும் சிந்தனையாளர்,' என மேர்க்கெல் அவரது ஆலோசகர்களிடம் குறைப்பட்டுக் கொண்டார். அப்படி மட்டும் இருந்திருந்தால். அது ஒரு முன்கணிக்கப்பட்ட ஆபத்தாக இருந்தது. அவர், 'வேண்டும்' என்ற முகாம் வெற்றி பெறும் என்று நினைத்தார், இராஜிநாமா செய்துவிட்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் கைக்கூலிகள் அரசாங்கத்தை நடத்துவதற்கு விட்டுவிடத் திட்டமிட்டார்."

இந்த மதிப்பீடு, கருத்துக்கணிப்பு சூழ்ச்சிக்கு கீழே இருந்த வஞ்சகக் கணக்குகள் குறித்த முந்தைய கணிப்புகளை மேலும் உறுதிப்படுத்துகிறது. கருத்துக்கணிப்பு மற்றும் சிரிசாவின் சரணாகதியைத் தொடர்ந்து, சிரிசாவின் முன்னாள் நிதி அமைச்சர் வாருஃபாக்கிஸ், கார்டியன் பத்திரிகைக்கு கூறுகையில்: "எங்களுக்கான ஆதரவும் மற்றும் வேண்டாம் என்ற வாக்களிப்பும் அதிவேகமாக மங்கிவிடும் என்று நான் உணர்ந்திருந்தேன், மற்றும் பிரதமரும் உணர்ந்திருந்தார் என்றே நம்புகிறேன்."

நியூயோர்க்கர் பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட வாருஃபாக்கிஸ் குறித்த விபரிப்பில், இந்த முன்னாள் நிதி அமைச்சர் கருத்துக் கணிப்பின் சமயத்தில் "தேர்தல் முடிவு குறித்து நிச்சயமாக தெரிந்த ஒரு அமைதியுடன், திருப்தியை ஏற்கனவே சுவைத்துக்கொண்டிருக்கும் ஒருவரைப் போல்” இருந்தார் என வருணிக்கப்பட்டிருந்தது. ”அவரது அரசாங்கம், இடது-கன்னை சிரிசா கட்சி, தோல்வியடையும். மக்கள் ‘வேண்டும்' ’என்று வாக்களிப்பர் –அதாவது, தங்களால் வழங்க முடியும் என வாருஃபாக்கிஸும் அலெக்சிஸ் சிப்ராஸும் கூறியதை விட... கூடுதலான சலுகைகள் செய்வதற்கு ஆதரவாக வாக்களிப்பர். வாருஃபாக்கிஸ் அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்து விடுவார், அதன்பின் மீண்டும் புருஸ்ஸல்ஸ் மற்றும் லுக்சம்பேர்க்கில் முழு நாள் கூட்டங்களில் பங்குபற்றி அவர் அவதியுற நேராது... "

சிப்ராஸின் பலிகொடுத்து ஆடும் சர்வஜனவாக்கெடுப்பு மற்றும் அதையடுத்த தோல்வியின் ஒரே சாத்தியமாகக்கூடிய விளைவு, கிரேக்க பாசிசக் கட்சியான "கோல்டன் டோன் மேலும் பலப்படுவது" மட்டுமே என்று வாருஃபாக்கிஸ் கார்டியனுக்கு கூறினார்.

ஆயினும் கூட, சிரிசாவின் கூட்டாளிகள் கருத்துக்கணிப்பை ஒரு தீர்க்கமான நடவடிக்கையென்றும், முதலாளித்துவ ஜனநாயகத்தின் மலர்ச்சி என்றும் கூட பாராட்டினர். அமெரிக்காவில் உள்ள சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பானது (ISO) சிரிசாவின் இடது அரங்கத்தின் ஒரு பாகமான ரெட் நெட்வொர்க்கில் (Red Network )இருந்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. “கடன் கொடுப்பவர்களின் நிபந்தனைகளை நிராகரித்து, கடும் சிக்கனத்தை தினிக்கும் ஒரு புதிய உடன்படிக்கையில் கையெழுத்திட மறுத்து, ஜூலை 5 அன்று கருத்துக்கணிப்பை நடத்தி மக்களின் விருப்பத்தை வெளிப்படுத்துமாறு கேட்க சிப்ராஸ் எடுத்த முடிவானது, கிரேக்க அரசியலை உருமாற்றும் ஒரு முடிவாகும்."

"சிரிசாவை சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுக்கும் ஒரு கட்சியாக எளிதாக மாற்றிவிட முடியாது" என்று அது மறக்கமுடியாதவொரு பிரகடனம் செய்தது.

தன் பங்கிற்கு, உலக சோசலிச வலைத் தளம் எச்சரித்தது: "சிப்ராஸ் அவரது கருத்துக்கணிப்பின் உள்ளடக்கத்தை சுருக்கமாக உழைக்கும் மக்களிடம் விளக்குவாரெனில் அவர் இப்படிச் சொல்லலாம்: தலை விழுந்தால் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் வென்றார்கள், பூ விழுந்தால் நீங்கள் தோற்றீர்கள். ஐந்து ஆண்டு கால சிக்கன திட்டத்துக்கு முடிவு கட்டுவதாக வாக்குறுதி கொடுத்து சிரிசா தேர்தலில் வென்ற சில மாதங்களுக்குள், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அடிபணிவதை மறைப்பதற்காக அரசியல் மறைப்பை வழங்க ஒரு கருத்துக்கணிப்புக்கு அழைக்கப்பட்டுள்ளது. சிரிசாவுக்கு போராடும் எண்ணம் இருக்குமெனில், ஏற்கனவே கிரேக்க மக்களால் நிராகரிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகளைப் பற்றி ஒரு சர்வஜனவாக்கெடுப்பு அழைப்பு விடுக்க வேண்டிய தேவையே இருந்திருக்காது."

எவ்வாறெனினும் சிப்ராஸின் சர்வஜனவாக்கெடுப்பு திட்டம் திருப்பித் தாக்கியது. வர்க்க அடிப்படையில் கூர்மையாகத் துருவப்பட்டிருந்த ஒரு வாக்கெடுப்பில் கிரேக்க மக்கள் ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைத் திட்டம் "வேண்டாம்" என 61 சதவீதம் அறுதிப் பெரும்பான்மை வாக்கை வழங்கினர். "வேண்டாம்" என்ற வாக்குமுடிவு கிட்டினால் கிரேக்கத்தை யூரோ மண்டலத்தில் இருந்து வெளியேற்றி ஒரு முன்கண்டிராத நிதி நெருக்கடியை உருவாக்கி ஐரோப்பிய ஒன்றியம் பதிலிறுப்பு செய்யும் என்று கிரேக்க ஊடகங்களும் ஐரோப்பிய ஒன்றியமும் பொழிந்த தொடர் அச்சுறுத்தல்களை அவர்கள் எதிர்த்து நின்றிருந்தனர். கிரேக்கத் தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்துடன் ஒரு மோதலுக்குத் தயாராயிருந்தது என்பதே வாக்களிப்பின் முடிவின் தெளிவான அர்த்தமாய் இருந்தது.

சிரிசா மக்களை ஏமாற்றும் பொருட்டு அழைத்த வாக்கெடுப்பில் "வேண்டாம்" என்ற வாக்களிப்பு வெற்றி பெற்றதில் அது பீதியும் திகைப்பும் அடைந்தது. "அவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்”, "அவர்கள் பீதியடைந்தனர்" என தாரிக் அலி லண்டன் ரிவியூ ஒஃப் புக்ஸ் சஞ்சிகைக்கு எழுதினார். ஒரு அவசர அமைச்சரவை கூட்டம் அவர்கள் முழுமையாக பின்வாங்கியதை காட்டியது. அவர்கள் கிரேக்க அரச வங்கிக்கு பொறுப்பில் இருந்த ஐரோப்பிய மத்திய வங்கியின் மனிதரை அகற்றுவதற்கு மறுத்த்துடன் வங்கிகளை தேசியமயமாக்கும் யோசனையையும் நிராகரித்தனர். சர்வஜனவாக்கெடுப்பு முடிவுகளை ஏற்பதற்குப் பதிலாக, சிப்ராஸ் சரணடைந்தார்."

ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களுடனான சீற்றம் நிறைந்த சில வார கால பேச்சுவார்த்தைகளின் பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டளைகளிலேயே மிக ஆழமான சிக்கன வெட்டுப் பொதியான, 13 பில்லியன் யூரோ (14.34 பில்லியன் அமெரிக்க டாலர்) சிக்கனப் பொதியை சிப்ராஸ் ஏற்றுக்கொண்டார்.

சர்வஜனவாக்கெடுப்பின் தன்மை பற்றி உலக சோசலிச வலைத் தளம் விடுத்த எச்சரிக்கைகள் அடுத்து நிகழ்ந்தவற்றால் ஊர்ஜிதப்பட்டன. "வேண்டாம்" என்ற வாக்கானது தொழிலாள வர்க்கத்தின் போராட்ட விருப்பையும் சிரிசாவின் கொள்கைகளின் முறையற்ற தன்மையையும் தெளிவாக்கியது என்றாலும், அது வெகுஜனப் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட எதையும் செய்யவில்லை. அந்த சர்வஜனவாக்கெடுப்பு அரசியல் முன்முயற்சிகளை சிப்ராசின் கைகளில், அதாவது சிக்கன நடவடிக்கையை முன்னெடுக்க விரும்பும் சக்திகளிடம், விட்டிருந்தது.

ஜூலை சர்வஜனவாக்கெடுப்பில் "வேண்டாம்" என வாக்களித்த தொழிலாள வர்க்கமும் பரந்த பெரும்பான்மை கிரேக்கர்களும் அடுத்துவந்த 2015 செப்டம்பரில் நடந்த தேர்தலில் முழுமையாக வாக்குரிமை இழந்த நிலைக்குத் தள்ளப்பட்டனர். இரு பிரதான வேட்பாளர்களான சிப்ராஸ் மற்றும் ஜனநாயகக் கட்சியின் மைமராக்கிஸ் இருவருமே வெளிப்படையாகவே சிக்கன நடவடிக்கைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர். பெருவாரியான மக்கள் தேர்தலைப் புறக்கணித்த நிலைமையில், சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக தேர்தலில் எந்த மாற்றீடும் இல்லாத காரணத்தால், புதிய ஜனநாயகக் கட்சியின் மீதான ஆழமான வெகுஜன விரோதத்தின் தகுதியற்ற பயனாளியாக சிப்ராஸ் இயல்பாக மறு தேர்தலில் வெற்றி பெற்றார்.

மறு தேர்வானதில் இருந்து, சிப்ராஸ், ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒருங்கிணைந்து கிரேக்க தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகள் மீது காட்டுத்தனமான தாக்குதலில் சிரிசாவை வழிநடத்தினார். அவரது சிக்கன வரவு-செலவுத் திட்டம் குறைந்தபட்ச ஓய்வூதிய மட்டங்களில் ஒரு 20 சதவீத வெட்டை உள்ளடக்கியிருந்தது, அத்துடன் அடமான கடன் தொகைகள் நிலுவையில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் வெளியேற்றப்படாமல் இருப்பதற்கான அரச பாதுகாப்பை வெட்டும் முயற்சியில் முன்நிற்கின்ற சிரிசா, நூறாயிரக்கணக்கான குடும்பங்கள் மொத்தமாக வெளியேற்றப்படும் சாத்தியத்திற்கு களம் அமைத்துத் தருகின்றது. சிரிசாவுக்கு எதிரான உறுதியான போராட்டத்தின் மூலம் மட்டுமே தொழிலாள வர்க்கத்தால் தன்னை பாதுகாக்கொள்ள முடியும் என்பதை இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் தேவைக்கும் அதிகமாகவே ஊர்ஜிதம் செய்கின்றன.

4.சிரிசாவின் தோற்றமும் பரிணாமமும்

சிரிசாவின் காட்டிக்கொடுப்பு வானில் இருந்து விழுந்ததல்ல. சிரிசா தன்னை ஒரு "தீவிர இடது" கட்சியாக சந்தைப்படுத்தப்படுத்திக்கொண்ட போதும், அது முன்னெடுத்த கொள்கையானது, அது தன் தோற்றம்தொட்டே தொழிலாள வர்க்கத்துக்கும் மார்க்சிசத்துக்கும் குரோதமான ஒரு முதலாளித்துவக் கட்சியாக இருந்தது என்ற அதன் வரலாற்றில் இருந்தே தவிர்க்க முடியாமல் ஊற்றெடுத்திருந்தது.

பல்வேறு குட்டி முதலாளித்துவ கட்சிகள், கூட்டணி (சீனஸ்பிஸ்மொஸ் அல்லது SYN) ஐ சூழ இணைந்தே 2004ல் சிரிசா உருவானது. அச்சமயம் சிப்ராஸ், KKE உடன் சேர்ந்து, பொறிந்துபோன கிரேக்க ஸ்ராலினிசத்தின் மிச்சசொச்சமாய் இருந்த SYN இன் ஒரு இளம் தலைவராக இருந்தார். DEA (சர்வதேச தொழிலாளர் இடது - சோவியத் ஒன்றியத்தை "அரச முதலாளித்துவ" சமூகம் என கண்டனம் செய்த ஒரு ட்ரொட்ஸ்கிச-விரோதக் கட்சி) போன்ற 1974ல் தளபதிகளின் இராணுவ ஆட்சிக் குழு வீழ்ச்சி கண்ட பின்னர் அபிவிருத்தியடைந்த மாணவர் இயக்கத்தில் இருந்து தோன்றிய அமைப்புகளையே அது ஈர்த்துக்கொண்டது.

பாசிசத்தின் குற்றங்கள், கிரேக்க உள்நாட்டுப் போர் மற்றும் அடுத்தடுத்த கிரேக்க இராணுவ சர்வாதிகாரங்களால் கிரேக்க மக்களின் பரந்த அடுக்குகளின் மத்தியில் முதலாளித்துவம் மதிப்பிழந்திருந்த நிலைமைகளின் கீழ் இந்த மாணவர் இயக்கம் அபிவிருத்தி கண்டது. மாணவர்கள், தங்களுக்கு விளம்பரத்தையும் ஒரு குறிப்பிட்ட அரசியல் செல்வாக்கையும் வழங்குவதாய் இருந்த, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஆயத்தமாய் பங்குபற்றினர் அல்லது பாஸோக் கட்டுப்பாட்டிலான தொழிற்சங்கங்கள் அழைத்த வேலை நிறுத்தங்களுக்கு ஆதரவளித்தனர். எவ்வாறிருந்தபோதிலும், இந்த மாணவர்கள் பாட்டாளி வர்க்கப் புரட்சி முன்னோக்குக்கு ஆதரவளித்தார்கள் என்பதை இது குறிக்கவில்லை.

மாறாக, அவர்கள் 1968 இன் பின்னர், குட்டி-முதலாளித்துவ புத்திஜீவிதத்துவத்தில் ஏற்பட்ட வலது நோக்கிய பரந்த சர்வதேச மாற்றத்தின் வரிசையிலேயே பரிணமித்தனர். அந்த ஆண்டு, சோவியத் இராணுவம் பிராக் வசந்தம் (Prague Spring) எழுச்சியை நசுக்கியிருந்தது, 1968 மே-ஜூனில் பிரெஞ்சு பொது வேலை நிறுத்தத்தின் பின்னர் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதை கம்யூனிஸ்ட் கட்சி தடுத்துவிட்டிருந்தது. தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களிடையே பரந்த தீவிரமயப்படல் ஏற்பட்டதற்கு மத்தியில், நிலவுகின்ற ஒழுங்கின் பாதுகாவலர்களாக ஸ்ராலினிச கட்சிகள் அம்பலப்பட்டு வந்தன. சோவியத் அதிகாரத்துவத்தின் எதிர்ப்புரட்சிகர வெளியுறவுக் கொள்கைக்கு தக்கபடி, சமூக எதிர்ப்பைக் கட்டுப்படுத்துவது மற்றும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டங்களைத் தடுப்பது ஆகிய, தாங்கள் முன்னர் வகித்து வந்திருந்த பாத்திரத்தை இனியும் அவர்களால் ஆற்ற முடியாமல் போனது.

எவ்வாறெனினும், மாணவர் இயக்கத்தில் இருந்த நடுத்தர வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய தட்டுக்கள், ஸ்ராலினிசம் அம்பலப்பட்டதற்கு பதிலிறுக்க தொழிலாள வர்க்கத்தினுள் உண்மையான புரட்சிகர கட்சிகளைக் கட்டியெழுப்ப முயற்சிக்கவில்லை. மாறாக அவர்கள், தொழிலாள வர்க்கத்தை ஒரு புரட்சிகர சக்தியாக ஏற்க மறுப்பதையும், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் தலைமையில் 1917ல் ரஷ்யாவில் முதலாளித்துவத்தை தூக்கிவீசிய போல்ஷிவிக் கட்சி போன்ற புரட்சிகர கட்சிகளை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தை நிராகரிப்பதையும் நியாயப்படுத்துவதற்காக, இடது அல்லது சோசலிச வார்த்தை ஜாலங்களை பயன்படுத்தினர்.

கிரேக்க குட்டி-முதலாளித்துவ அரசியலில் சிரிசாவின் பிரதான எதிரியான அந்தார்ஸ்யா (Antarsya) இன் தலைவர்களில் ஒருவரான பனாஜியோடிஸ் சோட்டிரிஸ் சுட்டிக்காட்டியவாறு, மாறாக அவர்கள் நடுத்தர வர்க்கத்தினுள் கட்டியெழுப்ப முயன்றனர். அச்சமயம், ஜாக்கோபின் சஞ்சிகைக்கு கருத்துத் தெரிவித்த அவர், “உண்மையில், பல்கலைக்கழகங்களுக்குள் இடது மறுகுழுவமைதல் போன்ற ஒருமுனைப் பரிசோதனைகள் கூடுதலான மூலோபாய பண்பைக் கொண்டிருந்தன என நாங்கள் சிந்தித்துக்கொண்டிருந்தோம். அமைப்புகள் கட்டுதல் அல்லது கட்சிகளை கட்டுதல் ஆகிய மரபுரீதியான வடிவங்களுக்கு எதிராக, தீவிர இடதின் இந்தவகையான மறு ஒழுங்குசெய்வதற்கு அவை உதவ முடியும்," என்றார்.

இந்த வடிவிலான குட்டி முதலாளித்துவ அரசியலின் தத்துவார்த்த மற்றும் அரசியல் அடித்தளங்கள், பிரிட்டனில் உள்ள எசெக்ஸ் பல்கலைக் கழகத்தில் சிரிசாவின் தற்போதைய பல தலைவர்களை பயிற்றுவித்த, ஒரு ஆர்ஜெண்டினிய பேராசிரியரான எர்னெஸ்டோ லக்கிளோ(Ernesto Laclau) போன்ற பின்நவீனத்துவ "மார்க்சிசத்திற்கு பின்னான" அறிவுஜீவிகளாலேயே வழங்கப்படுகின்றன. 1985ல் பெல்ஜிய கல்வியாளர் ஷந்தால் மூஃப் (Chantal Mouffe) உடன் இணைந்து இவர் எழுதி பரவலாக வாசிக்கப்படும் அவரது மேலாதிக்கம் மற்றும் சோசலிச மூலோபாயம் என்ற நூலில், தொழிலாள வர்க்கம் மற்றும் மார்க்சிசத்தின் மீது ஒட்டுமொத்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

லக்கிளோ மற்றும் மூஃப், "பாரம்பரியமாக கற்பிக்கப்பட்ட 'தொழிலாள வர்க்கம்' போன்ற உறுதியாக ஐக்கியப்பட்ட மற்றும் ஒருபடித்தான செயற்பாட்டாளர் பற்றிய சிந்தனையை நிராகரிக்குமாறு" தமது வாசகர்களுக்கு அழைப்புவிடுக்கின்றனர். தொழிலாள வர்க்கத்தின் இருப்பையும் மற்றும் சோசலிசத்துக்கான அல்லது சோசலிசப் புரட்சிக்கான புறநிலை சமூகப் பொருளாதார அடிப்படையின் இருப்பையும் நிராகரித்து அவர்கள் எழுதினர்: "'உண்மையான' தொழிலாள வர்க்கத்தையும் மற்றும் அதன் வரம்புகளையும் தேடுவதானது ஒரு பொய்யான பிரச்சனையாகும் மற்றும் உள்ளபடியே அதற்கு எந்த தத்துவார்த்த அல்லது அரசியல் பொருத்தமும் கிடையாது. வெளிப்படையாக, இது அர்த்தப்படுத்துவது என்னவென்றால் ... சோசலிசத்திலான அடிப்படை நலன்கள் பொருளாதார நிகழ்வுப்போக்கின் நிர்ணயகர நிலைகளில் இருந்து தர்க்கரீதியாய் தருவிக்கப்பட முடியாது."

காலம் செல்லச்செல்ல லக்கிளோ, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரத்தை நிராகரிப்பதை மேலும் அபிவிருத்தி செய்து, முதலாளித்துவ சமூகத்தை புரிந்து கொள்வதற்கு மேற்கொள்ளப்படும் எந்த ஒரு முயற்சிக்கும் முன்னெப்போதினும் வெளிப்படையான பகுத்தறிவற்ற குரோதம் காட்டுவதாக்கினார்.

1991ல் எழுதிய "கடவுள் மட்டுமே அறிவார்" என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையில் "'பகுத்தறிவின்' ஏகாதிபத்தியத்தை” கண்டித்து லக்கிளோ பின்வருமாறு எழுதினார்: "தொழிலாள வர்க்கம் தான் இன்னமும் முக்கிய வரலாற்று அகநிலையாக இருக்கின்றதா அல்லது அதன் பாத்திரம் புதிய சமூக இயக்கங்களுக்கு கடந்து சென்றுவிட்டிருக்கிறதா என்பது குறித்த விவாதத்தைப் பரிசீலித்துப் பார்ப்போம். பிரச்சனையை சூத்திரப்படுத்தும் இந்த வழியே கூட அது மாற்றியெழுத முனைகின்ற அதே பழைய அணுகுமுறையின் தளையில் இன்னமும் சிறைப்பட்டிருப்பதாகவே நான் வாதிடுவேன், ஏனென்றால் பகுத்தறிவான முறையில் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு வரலாற்று மற்றும் சமூக முழுமையினால் வரையறை செய்யப்படுகிற வரலாற்று மாற்றத்திற்கு, சிறப்புரிமை பெற்ற ஒரேயொரு முகவர் இருந்தாக வேண்டும் என்ற சிந்தனையை அது பராமரிக்கிறது. ஆனால் துல்லியமாக இந்த கடைசி அனுமானமே கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும்."

ஆன்ட்ரியாஸ் பாப்பாண்ட்ரூவின் பாஸோக் அரசாங்கத்தின் நெருக்கடி மற்றும் நிலைகுலைவின் மத்தியில், 1989 பெப்பிரவரியில் SYN உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, நடுத்தர வர்க்கங்களில் இத்தகைய மிகவும் பகுத்தறிவற்ற கருத்தாக்கங்களே நிலவிக் கொண்டிருந்தன. SYN, கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சிக்கும் (KKE) கிரேக்க இடது கட்சிக்கும் இடையிலான ஒரு தேர்தல் கூட்டணியாக இருந்தது. கிரேக்க இடது கட்சியானது "யூரோகம்யூனிஸ்டுகள்" என்ற KKE இல் இருந்து உடைந்து வந்திருந்த ஒரு ஸ்ராலினிச போக்கினால் ஆதிக்கம் செலுத்தப்பட்டதாய் இருந்தது எனினும், முன்னாள் பாஸோக் கட்சி உறுப்பினர் நிகோஸ் கொன்ஸ்டன்டொபோலோஸ் போன்ற முதலாளித்துவ அரசியல்வாதிகளும் அதில் இடம்பெற்றிருந்தார்கள்.

ஸ்ராலினிசம் பற்றிய யூரோகம்யூனிஸ்டுகளின் விமர்சனத்திற்கும், கிரெம்ளின் அதிகாரத்துவம் குறித்து ட்ரொட்ஸ்கியும் நான்காம் அகிலமும் அபிவிருத்தி செய்த மார்க்சிச முறையிலான எதிர்ப்பிற்கும் பொதுவான எதுவும் கிடையாது. ஒட்டுண்ணி அதிகாரத்துவத்தை அகற்றவும், தொழிலாளர்’ ஜனநாயகத்தை மீண்டும் ஸ்தாபிக்கவும் அக்டோபர் புரட்சியின் அத்தியாவசிய சமூக வெற்றிகளைப் பாதுகாக்கவும் சோவியத் தொழிலாள வர்க்கம் ஒரு அரசியல் புரட்சியை செய்ய வேண்டும் என ட்ரொட்ஸ்கி பரிந்துரைத்தார் என்றால், யூரோ கம்யூனிசமோ ஸ்ராலினிசத்தின் வலது நோக்கிய அபிவிருத்தியாக இருந்தது.

யூரோ கம்யூனிஸ்டுகள், ஸ்ராலினிச கட்சிகளுக்கு உள்ளேயே லக்கிளோ வாதாடிய மார்க்சிச-விரோத கருத்துவகைகளின் செல்வாக்கு வளர்ந்து வந்ததைப் பிரதிபலித்தனர். அவர்கள் தமது சொந்த ஆளும் வர்க்கங்களுடன் மிகவும் நெருக்கமாக ஒத்துழைத்துச் செல்லும் பொருட்டு, மாஸ்கோவிடம் இருந்து தங்களை அன்னியப்படுத்தி கொள்வதற்காக, புரட்சி, மார்க்சிசம் மற்றும் அக்டோபர் புரட்சியை வெளிப்படையாக கைதுறந்தனர். இத்தாலிய மற்றும் ஸ்பானிய கம்யூனிஸ்ட் கட்சிகளில் மேலாதிக்கம் செய்த இந்த போக்கு, மிகையில் கோர்பச்சேவ் தலைமையின் கீழ் மாஸ்கோவின் ஸ்ராலினிச அதிகாரத்துவம் முதலாளித்துவத்தை மீள்புனருத்தானம் செய்யவும் சோவியத் ஒன்றியத்தை கலைத்துவிடுவதற்கும் மேற்கொண்ட ஒரு முனைப்புக்கு முன்னறிகுறியாக இருந்தது.

SYN இன் உருவாக்கமானது கிரேக்க ஸ்ராலினிசத்தின் அனைத்து வண்ணங்களாலும் தொழிலாள வர்க்கம் சகாப்த காட்டிக்கொடுப்புக்கு ஆளாகவிருந்ததற்கான ஒரு முகவுரையாக இருந்தது. ஆன்ட்ரியாஸ் பாப்பன்ரூவின் அரசாங்கம் வீழ்ச்சி கண்டு, அடுத்த தேர்தல்களில் புதிய ஜனநாயகம் கட்சி (ND) பெரும்பான்மை வெற்றியைப் பெறுவதில் தோல்வி கண்டபோது, புதிய ஜனநாயகம் கட்சியுடன் SYN ஒரு கூட்டணி அரசாங்கத்தில் நுழைந்துகொண்டது. இது, 1946-1949 ஆண்டுகளின் கிரேக்க உள்நாட்டு போரின் சமயத்திலும் அதேபோல 1967-1974 தளபதிகளின் இராணுவ ஆட்சியின் கீழும் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை இரத்தத்தில் மூழ்கடித்திருந்த கிரேக்க வலதுடன் ஸ்ராலினிஸ்டுகளை ஒரு கூட்டணிக்குள் கொண்டு வந்தது. இந்த கூட்டணி பின்னர் அது 1990ல் வீழ்ச்சி காணும் வரை பாஸோக் ஐயும் உள்ளடக்கி விரிவாக்கப்பட்டது.

KKEயும் மற்றும் சிரிசாவின் முன்னோடிகளும் தாம் இப்போது உறுதியாக முதலாளித்துவ ஒழுங்கின் முகாமில் இருப்பதை முதலாளித்துவத்துக்கு சமிக்கை காட்டியிருந்தனர். புதிய ஜனநாயகம் கட்சியுடனான கூட்டணி அரசாங்கங்களின் போது, SYN நிர்வாகிகள் உள்துறை மற்றும் நீதி அமைச்சர்களாகப் பணியாற்றினர். இதன் மூலம் அவர்கள் இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்த கிரேக்க உள்நாட்டுப் போரின் போதும் மற்றும் தளபதிகளின் இராணுவ ஆட்சியின் போதும், தொழிலாளர்கள், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் KKE உறுப்பினர்களும் கூட மொத்தமாகப் படுகொலை மற்றும் சித்திரவதைகளுக்கு இலக்கானது குறித்த கோப்புகளை தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். SYN இந்த குற்றங்களை விசாரணை செய்யத் தவறியது மட்டுமன்றி, பொறுப்பாளிகள் தண்டிக்கப்படுவதை சாத்தியமாக்கத்தக்க ஏராளமான கோப்புகள் அழிக்கப்படுவதற்கும் அது அனுமதித்தது.

ஒரு வருடத்தின் பின்னர், சோவியத் அதிகாரத்துவத்தில் இருந்த SYN இன் கூட்டாளிகள் சோவியத் ஒன்றியத்தை கலைத்து, முதலாளித்துவத்தை மீண்டும் ஸ்தாபித்து, சோவியத் தொழிலாள வர்க்கத்தை சூறையாடியதுடன் முன்னாள் சோவியத் ஒன்றியத்தை ஏகாதிபத்திய தலையீட்டுக்காக திறந்துவிட்டனர். இந்த மாபெரும் குற்றங்களின் மூலம், KKEயும் மற்றும் சிரிசாவின் முன்னோடிகளும், இருபதாம் நூற்றாண்டில் தொழிலாள வர்க்கம் நடத்தியிருந்த போராட்டங்களுடன் தமக்கிருந்த தொடர்புகள் அனைத்தையும் துண்டித்துக்கொண்டு விட்டதைக் காட்டினர். எவ்வாறெனினும், 1991ல் SYN உடனான கூட்டணியில் இருந்து KKE வெளியேறி, SYN ஐ முன்னாள் “யூரோகம்யூனிஸ்டுகளின்" ஒரு கோட்டையாக விட்டுவிட்டது.

SYN, KKE இரண்டுமே சோவியத் அதிகாரத்துவத்தின் எதிர்ப்புரட்சிகர கொள்கைகளுடன் பிணைந்திருந்த கட்சிகளாய் இருந்ததில் இருந்து அப்பட்டமான முதலாளித்துவ கட்சிகளாக தங்களது உருமாற்றத்தை முழுமைசெய்தன.

DEA, மாவோயிச மற்றும் சுற்று சூழலியல் குழுக்கள் மற்றும் KKEயில் இருந்து உடைந்து வந்தவை என சிரிசாவில் உள்ள ஏனைய போக்குகள், இந்த முதலாளித்துவ-சார்பு பரிணாமத்தின் அடிப்படையில் சிரிசாவில் இணையச் சென்றன. 2000 களின் ஆரம்பத்திற்குள், DEAயின் பானொஸ் பெத்ரோ, சிரிசாவின் ஸ்தாபிதம் பற்றிய ஒரு கட்டுரையில் எழுதியவாறாய், SYN, "வாக்குவங்கி வீழ்ச்சியை கண்டிருந்தது, நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் காண்பதற்கான எல்லையளவை கடக்கப் போதுமான வாக்குகளை வெல்ல முடியாது என்ற அச்சுறுத்தலை அது எதிர்கொண்டிருந்தது. முன்வந்த ஆண்டுகளில் கட்சியை, பாஸோக் இன் சுற்றுவட்டத்தில் செயற்படுவது போன்று தோன்றச் செய்திருந்த அதன் மைய-இடது கொள்கைகளின் விளைவாய் இது இருந்தது."

2004ல் சிரிசா உருவாக்கப்பட்டமையானது ஒரு கூடுதல் "இடது" முகத்தை முன்நிறுத்துவதையும் அத்துடன் ஈராக் போர்-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் இணைந்துகொண்ட மற்ற கட்சிகளை உள்ளீர்த்துக்கொண்டு SYN ஐ உயிர்பிழைக்க வைப்பதையும் இலக்காகக் கொண்ட தந்திரமாக இருந்தது. பெத்ரோ குறிப்பிட்டபடி, "SYN இன் தலைமையை பொறுத்தவரை சிரிசாவானது, பாராளுமன்றத்தில் நுழைவதற்கு இன்றியமையாததாக இருக்கின்ற நாடளவிலான வாக்குகளில் 3 சதவிகிதம் என்ற எல்லை அளவைக் கடப்பதற்கு உதவுவதற்கான ஒரு தேர்தல் கூட்டணியாகவே பெரும்பாலும் இருந்தது."

அவற்றின் பங்கு, சிரிசாவிற்கு உள்ளே இருந்த சமூக தட்டுக்களின் செல்வம் மற்றும் பழமைவாதம் பெருகுவதை பிரதிபலித்தது. சிரிசா அமைச்சர்களின் பெரும் சேமிப்பு கணக்குகள் மற்றும் பல எண்ணிக்கையிலான வீடுகள் பற்றிய பத்திரிகை செய்திகள் தெளிவாக்கியது போல், முன்னாள் மாணவர்கள் அவர்களை வசதியான மத்தியதர வர்க்கத்தினராக ஆக்கிய தொழில்வாழ்க்கைகளை பெற்று விட்டிருந்தனர். ஐரோப்பிய பொருளாதாரத்தின் நிதிமயமாக்கம், அதிகரித்துச் செல்கின்ற கட்டுமானச் சொத்து சந்தை, மற்றும் யூரோ அறிமுகம் ஆகியவற்றால் ஆதாயம் பெற்றிருந்த நிலையில், லக்கிளோ மற்றும் அவரைப் போன்ற எழுத்தாளர்களை அவர்கள் வாசித்தமையானது முதலாளித்துவத்தின் மேன்மைகளில் அவர்களுக்கு உறுதிபேணச் செய்தது.

வர்க்கப் போராட்டத்தையும் அத்துடன் சமூக வர்க்கம் என்ற கருத்தையுமே கூட லக்கிளோ நிராகரித்ததில் அவர்களது மனோநிலை முழுமையடைந்த வெளிப்பாட்டைக் கண்டது. 2007ல் அவர் எழுதிய கருத்தியலும் பின்-மார்க்சிசமும் (Ideology and Post-Marxism) என்ற நூலில் அவர் பிரகடனம் செய்தார்: "'முதலாளித்துவ-எதிர்ப்பு' போராட்டத்தின் குடிமக்கள் ஏராளமாய் உள்ளனர் 'வர்க்கம்' போன்ற ஒரு எளிய வகையறாவிற்குள் அவர்களைக் குறைத்துவிட முடியாது. நாம் போராட்டங்களின் ஒரு பன்முக வடிவத்தைக் கொண்டிருக்கப் போகிறோம். நாம் பூகோளமயமான சகாப்தத்துக்குள் செல்லச் செல்ல, நம் சமூகத்திலான போராட்டங்கள் மேலும் பல்கிப் பெருகத் தலைப்படும், ஆனால் அவை ‘வர்க்க’ப் போராட்டங்களாக இருப்பது மேலும் மேலும் குறைந்து செல்லும்."

கிரேக்க தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களில் ஒரு மிகப்பரந்த பின்னடைவை ஏற்படுத்துவதில் சிரிசா அரசாங்கத்தின் பாத்திரமானது இத்தகைய பகுத்தறிவுக்கு முரணான மற்றும் மார்க்சிச-விரோத நிலைப்பாடுகளின் பிற்போக்கு விளைவுகளுக்கு சான்றளிக்கின்றது. யதார்த்தத்தை அறிவார்ந்த முறையில் புரிந்து கொள்ள முடியாது என்று இருட்டடிக்கும்விதமாய் வலியுறுத்துவதும் மற்றும் தொழிலாள வர்க்கத்தை நிராகரிப்பதும், பெயரளவில் மட்டுமே "இடது" என்று காட்டிக்கொள்ளும் குட்டி முதலாளித்துவ கட்சிகளுக்கு தத்துவார்த்த அடித்தளத்தை வழங்கியுள்ளது. சிரிசா, பரந்த வெகுஜன உழைக்கும் மக்களை ஒட்டுமொத்தமாக அலட்சியம் செய்து, கிரேக்கத்தின் பொருளாதார தற்கொலைக்கு சமமான பகுத்தறிவற்ற சிக்கன கொள்கைகளை திணிக்கின்றது.

5. சிரிசாவின் "இடது" உடந்தையாளர்கள்

இத்தகைய ஊழல்மிக்க போலி-இடது அரசியலில் இருந்து முறித்துக் கொள்வது சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்திற்கு இன்றியமையாத முன்நிபந்தனையாக இருக்கிறது. சிப்ராசின் முதலாவது அரசாங்கத்தை விமர்சிக்கும் "இடது" விமர்சகர்களாக காட்டிக்கொண்ட கிரேக்கத்தில் உள்ள கட்சிகள், செப்டெம்பர் தேர்தலில் எந்தவொரு குறிப்பிடத்தக்க வாக்குகளையும் பெறத் தவறியதில் அவர்களது திவால்நிலை வெட்டவெளிச்சமாகி இருக்கிறது.

சிரிசாவை விட்டு விலகிய பின்னர், இடது அரங்கத்துக்கு ஆதரவு வழங்க அந்தர்ஸ்யா கூட்டணியில் இருந்து மாவோவாத குழுக்களை கொண்டுவந்த மக்கள் ஐக்கிய (Laiki Enótita) கட்சி, பாராளுமன்றத்தில் ஒரு வேட்பாளரை நிறுத்த தேவையான 3 சதவீத குறைந்தபட்ச வாக்குகளை கூட பெறமுடியாது தோற்றது.

பல்வேறு பப்லோவாத மற்றும் மாவோவாத குழுக்கள் உட்பட மீதமுள்ள அந்தர்ஸ்யா பிரிவுகள், மற்றும் சவாஸ் மிஷேல்-மேட்சாஸின் தொழிலாளர் புரட்சிக் கட்சி (EEK) ஆகியவற்றை ஒட்டுப்போட்டு உருவாக்கப்பட்ட ஒரு கூட்டணியானது மொத்தமாக 0.85 சதவீத வாக்குகளையே பெற்றது.

கிரேக்கத்தில் நிலவும் தீவிர நெருக்கடி நிலைமையின் கீழ், இந்த அற்பமான விளைவுகள், 2015 ஜனவரியில் இருந்து செப்டம்பர் வரை இந்தப் போக்குகள் ஆற்றிய பாத்திரத்தின் மீதான ஒரு குற்றப்பத்திரிகையாக இருக்கிறது. அவர்கள் அடிப்படையில் தங்களை சிரிசாவில் இருந்து வேறுபடுத்தவோ அல்லது ஒரு புரட்சிகர முன்னோக்குக்காக வெகுஜனங்களை வெற்றிகொள்ளவோ போராடாத காரணத்தால் அவர்கள் காத்திரமான ஆதரவு எதனையும் பெற முடியாமல் போனது.

ஜனவரி முதல் ஜூலை வரை சிரிசா அரசாங்கத்துக்குள் விசுவாசமாக செயற்பட்ட இடது அரங்கம்-Left Platform-, சிரிசாவுக்கு இடதின் பக்கமிருந்து எழுந்த எதிர்ப்பை தடுக்க சேவை செய்தது. பெப்பிரவரியில் சிக்கன நடவடிக்கைகளை திணிக்க சிரிசா உறுதிபூண்ட போதிலும் அது இன்னமும் இடது-சாரிக் கொள்கைகளை செயல்படுத்தக் கூடும் என்ற பொய்யை இடது அரங்கம் ஊக்குவித்தது. சிரிசா தலைமையை குறிப்பிட்டு கூறிய அதன் தீர்மானம் ஒன்று, "உங்களது ஆரம்ப சமரசம் கடுமையாக இருந்த போதிலும், திசையை மாற்றிக் கொண்டு தேவையான தீவிர மற்றும் சோசலிச கொள்கைகளை கடைப்பிடிப்பதன் மூலமாக இந்த சூழ்நிலைக்கு தீர்வு காண உங்களுக்கு இன்னும் கால அவகாசம் இருக்கின்றது," என்று வலியுறுத்தியது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கையின் ஒரு எதிரியாக இடது அரங்கம் காட்டிக்கொள்ள முயற்சிப்பது ஒரு அரசியல் மோசடியாகும். ஜூலை முடிவில், சிப்ராஸ் பேச்சுவார்த்தை நடத்திய சிக்கன நடவடிக்கைகள் சம்பந்தமாக சிரிசாவின் மத்திய குழுவுக்குள் ஒரு வேண்டும்-வேண்டாம் வாக்கெடுப்பை தவிர்ப்பதற்கான நகர்வுகளுக்கு அது தலைமை வகித்தது. அதன் மூலம் அது, சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுப்பதை தவிர்த்த அதே சமயம், அவை நிறைவேற்றப்படுவதற்கும் அனுமதித்தது.

சிரிசா ஜூலையில் சிக்கன உடன்பாட்டில் கையெழுத்திட்ட பின்னர், இடது அரங்கத்தின் வெற்று விமர்சனங்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடனான சிப்ராஸின் கொடுக்கல் வாங்கல்களுக்கு தொந்தரவாக மாறிய சமயத்தில், அவர் தனது சொந்த அரசாங்கத்தை கலைத்துவிட்டதோடு சிரிசாவின் சட்டமன்ற வேட்பாளர்கள் பட்டியலில் இருந்து அவர்களை நீக்கிவிட்டார். அதன் பின்னரே இடது அரங்கம் சிரிசாவை விட்டு வெளியேறி, சிரிசா பற்றிய மாயைகளை தொடர்ந்தும் பரப்புவதற்கும் சிப்ராஸ் அரசாங்கத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் போராட்டத்தை தடுப்பதற்காகவும் மக்கள் ஐக்கிய கட்சியை அமைக்க முடிவு செய்தது.

சிப்ராஸின் எரிசக்தி அமைச்சராகப் பணியாற்றிய இடது அரங்கத்தின் தலைவர் பனஜியோடிஸ் லஃபாசானிஸ் அறிவித்தார்: "சிரிசாவின் சிறந்த வேலைத்திட்ட பாரம்பரியங்களை தொடர்வதற்கு மக்கள் ஐக்கியம் விரும்புகிறது. மிகவும் தீவிரமான கடமைப்பாடுகளுடன் இணைந்திருக்கவே நாங்கள் விரும்புகிறோம்."

திகைப்புக்கு இடமின்றி, சிரிசாவின் பிற்போக்குத்தனமான செயல்வரலாற்றைப் பாதுகாக்க லஃபாசனிஸ் அழைப்பு விடுத்தமையானது, மக்கள் ஐக்கிய கட்சிக்குள் இடது அரங்கத்தோடு நேரடி கூட்டணியில் நுழைவதற்கான நேரம் வந்துவிட்டது என அந்தர்ஸ்யாவின் பல பிரிவுகளுக்கும் உறுதியேற்படுத்தியது.

சவாஸ் மிஷேல் மற்றும் EEK யை பொறுத்தவரை, அந்தர்ஸ்யாவின் ஏனைய கன்னைகளுடன் ஒரு "மீள்குழுவாக்கத்திற்கும்", சிரிசாவுக்கும் கிரேக்க ஆளும் வர்க்கத்துக்கும் ஒரு புதிய இடது மறைப்பை அமைக்கவுமான ஒரு வாய்ப்பாக அதைக் கண்டனர்.

இந்த போக்குகளின் நோக்குநிலை தொழிலாள வர்க்கத்தை நோக்கியதாக அல்லாமல் மாறாக சிரிசாவை நோக்கியதாகவே இருந்தது. முடிவில், தொழிலாளர்கள் தங்களைக் காட்டிக்கொடுத்த முழு அரசியல் அமைப்புமுறையின் ஒரு பகுதியாகவே அவர்களை சரியானவகையில் கண்டுகொண்டனர்.

ஜனவரி மாதம் முதல் செப்டெம்பர் வரையான எட்டு மாதங்களில் இந்த பிரிவினர் என்ன நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர் என்பதை, லெனின் மற்றும் போல்ஷிவிக் கட்சியினர் 1917 பெப்பிரவரியில் இடைக்கால அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து அக்டோபர் புரட்சி வரையான எட்டு மாதங்களை எவ்வாறு பயன்படுத்திக்கொண்டனர் என்பதுடன் ஒருவர் ஒப்பிட்டு பார்த்தல் தகும். போல்ஷிவிக்குகள், இடைக்கால அரசாங்கத்தின் மீதான பரந்த மக்களின் பிரமைகளை இடைவிடாது சவால் செய்து, தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ கட்சிகள் மற்றும் அவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களின் பிடியில் இருந்து மீட்கப் போராடினர். மிகமிகச் சிக்கலான அரசியல் சூழ்நிலைகளின் கீழ், அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் மீது முன்னெப்போதினும் பெரிய செல்வாக்கை வெல்வதிலும், அதன் மூலம் அக்டோபர் புரட்சியைத் தயார் செய்வதிலும் வெற்றிகண்டனர்.

சிரிசாவுக்கு இடதில் இருப்பதாகக் கூறப்படும் சக்திகளுக்கு மத்தியில் அத்தகைய புரட்சிகர சமரசமின்மையின் ஒரு சுவடும் கூட இல்லை. அவர்கள் அனைவரும், சிரிசா அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்துக்கு தலைமை கொடுக்கும் என்பதான மாயைகளை ஊக்குவித்து சிரிசா அதிகாரத்திற்கு வருவதற்கு தயாரிப்பு செய்தனர், அதன் பின்னர் சிரிசா அரசாங்கத்துக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொண்டு அதன் கொள்கைகளைப் பற்றிய பொய்களை பரப்பி, அது தன் காட்டிக்கொடுப்பை நிறைவேற்றுவதற்கு ஒரு இடையூறற்ற பாதை கொண்டிருப்பதை உறுதிப்படுத்துவதிலேயே ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான எட்டு மாதங்களைக் கழித்தனர்.

6. "பரந்த இடது கட்சிகளும்" புதிய காட்டிக்கொடுப்புகளுக்கான தயாரிப்புகளும்

சிரிசா அரசாங்கம் கிரேக்க தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு கசப்பான அனுபவம் மட்டுமல்ல. சிரிசா அதிகாரத்துக்கு வர உதவி செய்ததன் மூலமும் உடந்தையாக இருந்ததன் மூலமும், கிரேக்கத் தொழிலாளர்கள் மீது இப்போது சிரிசா நடத்துகின்ற தாக்குதல்களுக்கு அரசியல் பொறுப்பைக் கொண்டிருக்கக் கூடிய, ஐரோப்பாவிலும் மற்றும் உலகம் பூராவும் உள்ள அதையொத்த போலி-இடது கட்சிகளையும் அது அம்பலப்படுத்தியுள்ளது. ஆளும் வர்க்கம் அவற்றை அதிகாரத்திற்கு வர அனுமதிக்குமெனில், கிரீஸில் சிரிசாவை போன்ற அதேமட்டத்திற்கு அவையும் பிற்போக்கானவையாகவே நிரூபணமாகும் என்பதில் சர்வதேச அளவில் தொழிலாளர்கள் எச்சரிக்கப்பட்டாக வேண்டும்.

ஸ்பெயினில் பொடேமொஸ் மற்றும் ஜேர்மனியில் இடது கட்சி என ஐரோப்பாவில் இந்தக் கட்சிகள் ஏற்கனவே நன்கு காலூன்றி விட்டிருக்கின்றன. சிரிசா போலவே இக்கட்சிகளும், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பின்னர் பல்வேறு குட்டி-முதலாளித்துவப் போக்குகள், ஸ்ராலினிச சக்திகளுடன் கூட்டணிகளை உருவாக்கிய நிலையில் எழுந்தவையாகும். நடுத்தர வர்க்கத்தின் சலுகை படைத்த பிரிவுகளின் நலன்களுக்கு மிகப்பொருத்தமான ஏகாதிபத்திய-ஆதரவு கொள்கைகளுடன் சிக்கன-நடவடிக்கை எதிர்ப்பின் வெறுமையான வாய்வீச்சைக் கலந்ததொரு அரசியல் திட்டநிரலை அவை முன்னெடுக்கின்றன.

சிரிசாவுக்கு முன்னதாக, இத்தாலியில் கம்யூனிச மறுஸ்தாபிதம் (Partito della Rifondazione Comunista, PRC), இந்த நோக்குநிலையின் பின்விளைவுகளுக்கு ஐரோப்பாவில் மிகவும் பிரதானமான எடுத்துக்காட்டை வழங்கியிருந்தது. சோவியத் ஒன்றியத்திலும் கிழக்கு ஐரோப்பாவிலும் முதலாளித்துவத்தை மீண்டும் ஸ்தாபிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் மத்தியில், இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி (PCI) கலைக்கப்பட்டதில் இருந்தே இந்த Rifondazione தோன்றியிருந்தது. PCI இன் ஒரு கன்னையைத் தவிரவும், லிவியோ மைய்ற்ரான் தலைமையிலான ட்ரொட்ஸ்கிச-விரோத பப்லோவாத திரிபுவாதிகள், மாவோவாதிகள் மற்றும் அராஜகவாதப் போக்குகளையும் இந்தக் கட்சி கொண்டிருந்தது. 1991ல் இருந்து, யூகோஸ்லாவியா முதல் ஆப்கானிஸ்தான் வரையான ஏகாதிபத்திய போர்களில் பங்கேற்ற அதே வேளை, உள்நாட்டில் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தி வந்த தொடர்ச்சியான இத்தாலிய அரசாங்கங்களில் அது இணைந்திருந்தது.

Rifondazione மீண்டும் மீண்டும் பிற்போக்கு அரசாங்கங்களில் பங்கெடுத்துக்கொண்ட நிலையில், அதன் பாதுகாவலர்கள் பிற்போக்கு கொள்கைகளையும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல்களையும் முன்னெடுக்கவிருக்கின்ற முதலாளித்துவக் கட்சிகளைத்தான் தாம் கட்டியெழுப்பிக்கொண்டிருக்கின்றோம் என்பதில் மிகவும் நனவுடன் இருந்தனர்.

பப்லோவாத பத்திரிகையான இன்டர்நேஷனல் வியூபாயிண்ட் (International Viewpoint ), "பரந்த இடது கட்சிகள்" என அது அழைத்த சிரிசா மற்றும் Rifondazione போன்ற கட்சிகளின் பாத்திரம் பற்றிய ஒரு பொது கலந்துரையாடலில், "அரசுடனுனான உறவும் சமூகத்தில் அதன் பாத்திரம் குறித்த கட்சியின் புரிதலும்" ஒரு அழுத்தும் பிரச்சினையாக ஆகிவிட்டிருந்தது என்பதை ஒப்புக்கொண்டது. இந்தக் கட்சிகள், "வெளிப்படையாக அரசின் உயர் மட்டத்தில் நிறுவன மேலாண்மைக்கு அல்லது சமூக-தாராளவாத [அதாவது, சிக்கன-ஆதரவு] அரசாங்கங்களுக்கு வெளிப்படையான ஆதரவுக்கு இட்டுச் செல்லக் கூடிய வண்ணம் குறிப்பிட்ட தருணங்களில் கோடு தாண்டிச் சென்றிருக்கின்றன”, என அது குறிப்பிட்டது.

சிரிசா ஆட்சிக்கு வருவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்த விவாதம், அதன் போலி-இடது ஊக்குவிப்பாளர்களின் அரசியல் அவநம்பிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சிரிசாவை இடதுகளுக்கான ஒரு முன்னோக்கிய பெரிய அடியெடுப்பு என அவர்கள் பாராட்டிய அதேவேளையில், நீண்ட வரிசையிலான அரசியல் காட்டிக்கொடுப்புகளை தாங்கள் தொடர்ந்து கொண்டிருப்பதை அவர்கள் அறிந்திருந்தனர். இந்த முற்றிலும் சிடுமூஞ்சித்தனமான அரசியலை அவர்கள் பின்பற்றியமையானது, வரலாறு குறித்த அவர்களின் அலட்சியம் மற்றும் பண்படாத நடைமுறைவாத அணுகுமுறையில் தங்கியிருந்தது.

பிரான்சில் பப்லோவாத புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) தலைவர் அலன் கிறிவின் கூறுவதன் படி, NPA "சில பிரச்சினைகளை தீர்ப்பதில்லை, எதிர்கால மாநாடுகளுக்காக அவற்றை திறந்து வைத்திருக்கிறது. உதாரணமாக, அதிகாரத்தை கைப்பற்றுவது, இடைமருவு கோரிக்கைகள், இரட்டை அதிகாரம் போன்றவை குறித்த அனைத்து மூலோபாய விவாதங்களையும் கூறலாம். இது தன்னை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என கூறிக்கொள்வதில்லை, மாறாக புரட்சிகர இயக்கத்துக்கு மற்ற பங்களிப்பாளர்களுடன் சேர்த்து ட்ரொட்ஸ்கிசத்தையும் ஒரு பங்களிப்பாளராய் கருதுகிறது. ஸ்ராலினிசத்தின் கீழ் நாம் செய்ய நேர்ந்தது போல, பின்புறம்காட்டும் கண்ணாடி வழியாக ஒரு கொள்கையை வடிவமைக்க விரும்பவில்லை என்பதால், சோவியத் ஒன்றியம் என்னவாக இருந்தது, ஸ்ராலினிசம் என்னவாய் இருந்தது மற்றும் இன்னபிறவற்றில் NPA க்கு எந்த நிலைப்பாடும் கிடையாது. கொள்கையானது ஒரு காலகட்டத்தின் ஆய்வுகளினதும் கடமைகளினதும் மீதான உடன்பாட்டினை அடித்தளமாக கொள்கிறது."

இருபதாம் நூற்றாண்டின் முக்கிய வரலாற்று அனுபவங்கள், மார்க்சிச இயக்கம் அல்லது தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் புரட்சிகர மூலோபாயத்தின் முக்கிய பிரச்சினைகள் ஆகியவை பற்றி NPA பேச விரும்பவில்லை. இந்த வரலாற்று அடிப்படையில் NPA சூத்திரப்படுத்திய கொள்கைகள், ஊடக செய்திகளின் மேலோட்டமான படிமங்களாலும் மற்றும் அரசாங்க அரசியல்வாதிகளுடனான உரையாடல்களின் மூலம் அதன் தலைவர்கள் கற்றுக்கொண்டவற்றாலும் கட்டளையிடப்பட்ட, மிகவும் குறுகிய நோக்கும் பிற்போக்குத் தன்மையையுமே கொண்டிருக்க இயன்றது.

எனினும், கிறிவினுடைய கருத்து தெளிவுபடுத்தியுள்ளது போல், NPA யின் தலைமை இதை ஒரு அனுகூலமாய் கண்டது. தொடர்ந்து "இடது" என்று காட்டிக் கொண்டே, சிரிசா போன்ற “பரந்த இடது கட்சிகள்” சிக்கன நடவடிக்கை மற்றும் போருக்கு ஆதரவான கட்சிகள் என்பதை அறிந்திருந்த போதும் அவற்றை சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு மிகப்பெரும் நம்பிக்கையாக வழிமொழிவது போன்ற கோட்பாடற்ற தந்திரோபாய சூழ்ச்சிகளில் ஈடுபட அவர்களை இது அனுமதித்தது.

கிரேக்கத்தில், சிரிசா ஆட்சிக்கு வந்தை ஒரு வெற்றியாகப் பாராட்டுவதில், ஒட்டுமொத்த சர்வதேச போலி-இடது சகோதரத்துவத்துடன் NPA இணைந்துகொண்டது. "சிரிசாவின் தேர்தல் வெற்றி ஒரு மிகச்சிறந்த செய்தியாகும். ஐரோப்பாவில் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடி வரும் அனைவருக்கும் இது நம்பிக்கை ஊட்டியுள்ளது," என்று அது அறிவித்தது. அதே வேளை, ஜேர்மனியின் இடது கட்சி விடுத்த பத்திரிகை அறிக்கை தெரிவித்தது: "கிரேக்கத் தேர்தல், கிரேக்கத்துக்கு மட்டுமான ஒரு திருப்புமுனை அல்ல, அது முழு ஐரோப்பாவுக்குமானதாகும். இது ஜனநாயக புதுப்பிப்புக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் திசையில் ஒரு அடிப்படையான மாற்றத்துக்குமான வாய்ப்புகளைத் திறந்துவிடும்."

சோசலிஸ்ட் கட்சியின் (இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்) தலைமையிலான சர்வதேச போக்குடன் இணைந்த ஒரு கிரேக்க கட்சியான செக்கினிமா (Xekinima) (தொடக்கம் - சர்வதேச சோசலிச அமைப்பு), இதற்கு மற்றொரு உதாரணமாகும். சிரிசாவுக்குள் நுழைந்து பின்னர் விலகிய அது, 2015 ஜனவரி தேர்தலில் சிரிசாவை ஆதரித்தது.

தேர்தல் நெருங்கிய சமயத்தில் சோசலிஸ்ட் கட்சி உடனான ஒரு பேட்டியில், செக்கினிமா தலைவர் அன்ரோஸ் பெயாட்சோஸ் கூறுகையில், சிரிசாவானது, "சந்தை சக்திகளுடன் ஒரு புரிதலுக்கு வர சாத்தியமான அனைத்தையும் செய்து கொண்டிருந்தது" என்பதற்கு போதிய ஆதாரங்கள் இருந்த போதிலும், வெகுஜனங்கள், "சிரிசா அரசாங்கத்தை இடது பக்கம் தள்ள போராட வேண்டும், அவர்கள் போராடுவார்கள்," என்று கூறினார்.

அமெரிக்காவில் உள்ள சர்வதேச சோசலிச அமைப்பின் (ISO) கிரேக்க இணைப்பான DEA இன்னும் திட்டவட்டமானதாக இருந்தது. சிரிசாவின் இடது அரங்கத்தின் பாகமாக அது எழுதியது: "இந்த புதிய சூழ்நிலையில், ஒரு அரசியல் கட்சியாக சிரிசாவின் பாத்திரம் ஈடுசெய்ய முடியாததாகும். கட்சி முழுமையிலும் கூட்டுப் பங்கேற்பு மற்றும் ஜனநாயகம் சகிதமாக அதன் அமைப்பு சபைகள் மற்றும் உறுப்பினர்களது செயற்பாடு, ஒரு மேலதிக விருப்பத் தேர்வு அல்ல, மாறாக அது சிரிசாவின் இறுதி வெற்றிக்கும் மற்றும் ஒட்டு மொத்த இடதுகளது மற்றும் நமது மக்களது இறுதி வெற்றிக்குமான ஒரு முன் நிபந்தனையாகும்."

மறைந்த நகுவெல் மொரேனோ தலைமையிலான லத்தீன் அமெரிக்க திருத்தல்வாத இயக்கத்தின் பிளவில் இருந்து எழுந்த பிரதான கட்சிகளில் ஒன்றான, பிரேசிலின் ஐக்கிய சோசலிச தொழிலாளர் கட்சி (PSTU), கிரேக்கத்தை "புரிந்துணர்வு உடன்படிக்கைகள் மூலம் கொள்ளையடிக்கும் கட்சிகளை தூக்கி வீசுவதற்கு கிரேக்க தொழிலாளர்கள் கொண்டிருக்கும் ஒரு பிரதான கருவி” என சிரிசாவை வருணித்து அதற்கு வாக்களிக்குமாறு அழைப்பு விடுத்தது.

சிரிசவின் முதலாளித்துவ-சார்பு வேலைத்திட்டம் பற்றி இந்தப் போக்குகள் என்ன விமர்சனங்களை முன்வைத்தாலும், தொழிலாளர்கள் தங்களை சிரிசாவின் தேர்தல் வெற்றிக்கான முயற்சிக்கு கீழ்ப்படியச் செய்துகொள்ள வேண்டும் என்றும் சிரிசாவை இடது பக்கம் நகர அழுத்தம் கொடுக்கும் ஒரு வழிமுறையாக தமது போராட்டங்களை காண வேண்டும் என்றும் கோருகின்ற நிலைப்பாட்டில் இருந்தே அவர்கள் அனைவரும் அவ்விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

அவர்களில் எவரும் சிரிசா பற்றிய ஒரு வர்க்கப் பகுப்பாய்வை செய்தது கிடையாது. சமூகப் போராட்டங்களின் விளைபொருள் என்று கட்சியின் வெற்றியை அவர்கள் பாராட்டும் அதேவேளை, சிரிசாவானது தொழிலாளர்கள் போராட்டங்களை தணிப்பதற்காகவும், கிரேக்க வலதுகளால் அமுல்படுத்த முடியாமல் இருக்கின்ற சிக்கன நடவடிக்கைகளை திணிப்பதற்குமான ஒரு வழிமுறையாக முன் கொண்டுவரப்பட்ட ஒரு முதலாளித்துவ கட்சி என்ற உண்மையை அவர்கள் அனைவரும் மூடி மறைக்கின்றனர்.

சிரிசாவை இந்தக் கட்சிகள் தூக்கிப் பிடிப்பது ஒரு பிழையோ அல்லது ஒரு தத்துவார்த்த பகுப்பாய்வின் தோல்வியோ அல்ல. அவை சிரிசாவையும் அதன் கொள்கைகளையும் ஆதரித்தன என்றால் அதன் காரணம் அவை தமது பல்வேறு நாடுகளில், இதே "இடது" கல்வியாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொழில் வல்லுனர்களது அதே வசதியான தட்டினரை பிரதிநிதித்துவம் செய்கின்ற காரணத்தாலும், இதே போன்ற கொள்கைகள் ஊடாகவே அவை தமது வர்க்க நலன்களை முன்னெடுக்க முனைகின்றன என்ற காரணத்தாலும் தான். ஆளும் வர்க்கம் சிரிசாவை அதிகாரத்திற்கு வர அனுமதித்த போது, இவையனைத்தும் அதை ஒரு முன்மாதிரியாகக் கண்டதோடு தங்கள் சொந்த நாடுகளில் இதேபோன்ற பாத்திரத்தை ஆற்றும் வாய்ப்பு தமக்கு கிட்டும் என்றும் நம்பிக்கை கொண்டன.

ஜூலை மாதம் பல பில்லியன் யூரோ சிக்கனப் பொதியை சிரிசா திணித்த பின்னர், அதனை ஊக்குவிப்பதை, பொதுவெளியில் மிதமாக்கிக்கொள்ள அவை நிர்ப்பந்தம் பெற்ற அதே வேளை, அதை தொடர்ந்தும் ஆதரித்தன.

இவ்வாறாகவே, சிப்ராஸ் ஜூலை 5 வாக்கெடுப்பின் "வேண்டாம்" என்ற வாக்களிப்பை மிதித்து நசுக்கிவிட்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கனப் பொதியை திணித்த பின்னரும், சிப்ராசைப் பாராட்டிய பிரான்சின் இடது முன்னணியின் ஜோன்-லூக் மெலோன்சோன், "நாம் அலெக்சிஸ் சிப்ரஸையும் கிரேக்க மக்களின் எதிர்ப்பை அனுமதிப்பதற்கான அவரது போராட்டத்தையும் ஆதரிக்கின்றோம்" என்று அறிவித்தார். யதார்த்தத்தை தலைகீழாக திருப்பிச் சித்தரித்த இடது முன்னணியின் ஊடக அறிக்கை பிரகடனம் செய்தது: "அலெக்சிஸ் சிப்ராசின் அரசாங்கம் எதிர்த்து நின்றது போன்று ஐரோப்பாவில் வேறு யாரும் செய்யவில்லை. எனவே, அதற்கு எதிராக தொடுக்கப்பட்ட போரில் அது தற்காலிக போர்நிறுத்தத்தை ஏற்றுகொண்டுள்ளது. நாங்கள் இந்த யுத்தத்தை, அதை நடத்துபவர்களை மற்றும் அவர்களது குறிக்கோள்களை கண்டனம் செய்கிறோம்."

சிரிசா போன்று ஆட்சிக்கு வர இதே போன்ற பாதையை பின்பற்ற எதிர்பார்க்கும் ஸ்பெயினின் பொடேமொஸ் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற வகையில், சிப்ராசுடன் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்த பப்லோ இக்லெஸியாஸ், "உடன்பாடு காண வேண்டும் அல்லது யூரோவில் இருந்து வெளியேற வேண்டும்” என்பதே மாற்றீடுகளாய் இருந்தன என்ற அடிப்படையில் சிப்ராசின் சிக்கனக் கொள்கைக்கு மன்னிப்பளித்தார். அவர் மேலும் கூறினார்: "அலெக்சிஸ் இன் கொள்கைகள் மிகத் தெளிவானதாக இருந்த போதும், உலகமும் மற்றும் அரசியலும், சக்திகளின் இடையுறவுகளுக்கேற்பவே இயங்கியாக வேண்டியிருக்கிறது... கிரேக்க அரசாங்கம் செய்துள்ளது தான், சோகத்துக்குரியவகையில், அதனால் செய்ய இயன்ற ஒரே விடயமாகும்".

மீண்டும், கூர்மையான எச்சரிக்கைகள் பொருத்தமாகின்றன: சிரிசாவின் சிக்கன நடவடிக்கைகளது செயல்வரலாறு குறித்து இத்தகயை அறிக்கைகளை விடுக்கும் கட்சிகள், அதன் அடிச்சுவடுகளை பின்பற்ற முயல்கின்றன.

இந்தப் போக்குகளில் இருந்து நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை பிரித்து நிற்கின்ற அரசியல் மற்றும் வர்க்க இடைவெளி குழப்பத்திற்கு இடமில்லாததாகும். சிரிசா எதற்கு தயாரிப்பு செய்து கொண்டிருந்தது என்பதை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தொழிலாளர்களை எச்சரிக்க முனைந்து கொண்டிருந்த அதேவேளையில், போலி இடதுகள் சிரிசாவின் பிற்போக்கு கொள்கைகளுக்கு அரசியல் மறைப்பை வழங்கிக் கொண்டிருந்தன.

7. சவாஸ் மிஷேலின் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் பாத்திரம்

அனைத்துலகக் குழுவானது தனது முன்னோக்கு மற்றும் பகுப்பாய்வுகளை கிரேக்கத் தொழிலாளர்களுக்கு தெரியப்படுத்தி சிரிசா எத்தகைய பாத்திரத்தை ஆற்றும் என்பது பற்றி அவர்களை எச்சரிப்பதற்கு தன்வசமிருந்த இருந்த அனைத்து வழிவகைகளிலும் போராடியது. என்றாலும், அதற்கு கிரேக்கத்தில் ஒரு கிளை இருக்கவில்லை.

இதற்கான அரசியல் பொறுப்பு, கிரேக்க தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (EEK) பொதுச் செயலாளர் சவாஸ் மிஷேலுக்கே உரியதாகும். பிரிட்டனில் ஜெரி ஹீலி தலைமையிலான தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) 1985ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் பிளவுகண்டபோது, ஹீலிக்கு ஆதரவு கொடுத்த அனைத்துலகக் குழுவின் ஒரே கிளைக்கு சவாஸ் மிஷேல் தலைமை கொடுத்திருந்தார். சவாஸ் மிஷேல், மிகவும் கொள்கையற்ற அடிப்படையில் அனைத்துலகக் குழுவிடம் இருந்து முறித்துக் கொண்டிருந்தார். ஏனைய பிரிவுகளுடன் அனைத்து கலந்துரையாடல்களையும் நிராகரித்த அவர், அனைத்துலகக் குழுவின் "வரலாற்றுத் தலைவராக" அவர் வருணித்த ஹீலியின் அனுமதி இல்லாமல் கூடுவதற்கும் கூட அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்ற நிலைப்பாட்டையும் பேணிவந்தார். சவாஸ் மிஷேலின் நடவடிக்கைகளுக்கான அரசியல் அடிப்படை, அவர் பகிர்ந்து கொண்ட ஹீலியின் தேசிய சந்தர்ப்பவாத நோக்குநிலை உடனான அவரது உடன்பாடாகும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடனான தனது பிளவுக்குப் பின்னர், "நான்காம் அகிலத்துக்கான ஒரு புதிய சகாப்தத்தை" பிரகடனம் செய்த சவாஸ் மிஷேல், அதில் "குறுகிய பிரச்சாரவாதத்தில்" இருந்தும் "ட்ரொட்ஸ்கிசத்தின் தோல்விகள் மற்றும் தனிமைப்படுத்தல் நடைமுறைகளில்" இருந்தும் ட்ரொட்ஸ்கிசம் விடுவிக்கப்படும் என்றார். நடைமுறையில் அவரது "புதிய சகாப்தமானது" கிரேக்கத்தில் பாஸோக்கிற்கு ஆதரவு கொடுப்பதையும் சோவியத் ஒன்றியத்தில் மிகையில் கோர்பச்சேவின் பெரஸ்துரோய்காவை (மீள்கட்டுமானம்) "அரசியல் புரட்சியின்" தொடக்கமாக பாராட்டுவதையுமே கொண்டிருந்தது. அப்போதிருந்து தசாப்த காலங்களாக அவர் சிரிசாவின் சுற்றுவட்டத்திலேயே வேலைசெய்து வந்திருக்கிறார்.

சிரிசாவின் தேர்தல் வெற்றிக்கு முந்திய மாதங்களில், EEK அதை உற்சாகத்துடன் ஊக்குவித்தது. "KKE, சிரிசா, அந்தர்ஸ்யா முதல் EEK, ஏனைய இடது அமைப்புக்கள், அராஜகவாத மற்றும் அதிகாரத்துவ-எதிர்ப்பு இயக்கங்கள் வரை அத்தனை தொழிலாளர்கள்’ மற்றும் மக்கள் அமைப்புக்களைக் கொண்ட ஒரு சக்திவாய்ந்த ஐக்கிய முன்னணி”யுடன் ஒரு அரசியல் கூட்டை அபிவிருத்தி செய்வதன் மூலம், சிரிசாவை இடது நோக்கித் தள்ள வெகுஜனங்களுக்கு தன்னால் உதவ முடியும் என்று அது கூறிக்கொண்டது. சிரிசா மீது நம்பிக்கை கொண்டுள்ள எவரொருவரும் “முதலாளித்துவத்தினர், அரசியல் நிர்வாகிகள், மூலதனத்தின் பலத்துக்குப் பின்னால் ஓடும் அனைத்து சந்தர்ப்பவாதிகளிகள் மற்றும் வக்காலத்துவாதிகளிடம் இருந்தும் முறித்துக் கொள்ள தமது தலைமையிடம் கோர வேண்டும்" என EEK அழைப்பு விடுத்தது.

சிரிசா ஒரு முதலாளித்துவக் கட்சி என்ற ஒரு முக்கியமான புள்ளியை சிரிசாவின் முழு அரசியல் சுற்றுவட்டத்தையும் போலவே, EEK யும் விட்டுவிட்டது. முதலாளித்துவத்திற்கு தங்கள் ஆதரவையும் தொழிலாள வர்க்கத்திற்கும் மற்றும் சோசலிசத்திற்கும் தங்கள் பகைமையையும் திட்டவட்டமாக ஸ்தாபித்திருக்கின்ற ஒரு தொகை அமைப்புகளுக்குப் பின்னால் தொழிலாள வர்க்கம் ஐக்கியப்படுவதற்கு சவாஸ் மிஷேல் ஆலோசனை முன்வைத்துக் கொண்டிருந்தார்.

சிரிசாவின் தலைமை "முதலாளித்துவத்துடன் முறித்துக்கொள்ள" கோர வேண்டும் என தொழிலாளர்களை வலியுறுத்துவதென்பது, அக்கட்சியின் மீது பிரமைகளை விதைப்பதற்கும் அது தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக நச்சுத்தனமாய் திரும்புவதன் தவிர்க்கவியலாத தன்மையை மூடி மறைப்பதற்கும் மட்டுமே சேவை செய்யும். சிரிசாவின் "தலைமைக்கு" –அதாவது, சிப்ராஸ் மற்றும் வாருஃபாக்கிஸ் போன்ற செல்வம் மிக்க அரசியல் குற்றவாளிகளுக்கு- "அனைத்து சந்தர்ப்பவாதிகள் மற்றும் மூலதனத்தின் பலத்தின் பின்னால் ஓடுபவர்களிடம்" இருந்து முறித்துக்கொள்ளுமாறு அழைப்புவிடுப்பதானது, அவர்களை தங்கள் சொந்த தோல்களில் இருந்து வெளியே குதிக்கக் கோருவதாகும்.

கிரேக்கத்தில் தனது அரசியல் நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் சவாஸ் மிஷேல், சிரிசாவின் முதலாளித்துவ தன்மையை அம்பலப்படுத்தியதற்காகவும் தொழிலாள வர்க்கத்திற்கு அது கொடுத்த வாக்குறுதிகளை தவிர்க்க முடியாமல் காட்டிக் கொடுக்கும் என எச்சரிக்கை செய்ததற்காகவும் அனைத்துலகக் குழுவை "குறுங்குழுவாதிகள்" எனத் தாக்கினார். சிரிசாவின் தேர்தல் வெற்றிக்குப் பின் எழுதிய அவர், அனைத்துலகக் குழுவால் "சிரிசா தலைமையின் முதலாளித்துவ இயல்பு பற்றி சரியான சில விடயங்களை சொல்ல முடிகிற அதே நேரத்தில், அவர்கள் சிரிசாவின் வெற்றியின் முக்கியத்துவத்தை கணக்கில் எடுக்கவில்லை... குறுங்குழுவாதிகள் வெகுஜன இயக்கத்தை அலட்சியம் செய்வதால் அவர்கள் வாய்ப்புகளைக் காணமுடியாத குருடர்களாகவே இருக்கின்றனர்," என்று வாதிட்டார்.

ஒன்பது மாதங்களின் பின்னர், சிரிசாவுக்கான சவாஸ் மிஷேலின் உற்சாகத்தை தூண்டிய "வாய்ப்புக்கள்" மற்றும் "வெகுஜன இயக்கம்" பற்றிய ஒரு சரியான மதிப்பீட்டை செய்துகொள்வது கடினமானது இல்லை. ஐரோப்பிய முதலாளித்துவம் அதனது சிக்கன கொள்கைகளை தொடர்வதற்கும் மில்லியன் கணக்கான வறிய உழைக்கும் மக்களிடம் இருந்து பல பில்லியன் யூரோக்களை பிழிந்தெடுப்பதற்குமான வாய்ப்பை சிரிசா அதற்கு வழங்கியது.

ஒரு "வெகுஜன இயக்கத்தைப்" பொறுத்தவரை, சிரிசா தொழிலாள வர்க்கத்தினுள் எதையும் கட்டியெழுப்பவில்லை, அது முயற்சியும் கூட செய்யவில்லை. சிரிசா இன்று, முதலாளித்துவ அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்களின் ஒரு குழுவுக்கு ஒரு தேர்தல் கருவியாக உள்ளது. அது, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ உடனான கிரேக்க முதலாளித்துவத்தின் கூட்டையும் மற்றும், அதன் எதிர்பார்க்காததாய் கூறமுடியாத ஒரு பக்கவிளைவாக, முன்னணி சிரிசா அரசியல்வாதிகளுக்கு பதவிகள் மற்றும் தனிப்பட்ட சலுகைகளையும் ஏற்படுத்திக் கொள்ளும் பொருட்டு, சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராய் தொழிலாள வர்க்கத்திற்குள் இருந்த சக்திவாய்ந்த எதிர்ப்பை அது சூழ்ச்சியான வகையில் சுரண்டிக் கொண்டது.

சவாஸ் மிஷேல் அனைத்துலகக் குழுவை "குறுங்குழுவாதிகள்" என்று குற்றம் சாட்டுவதற்கு காரணம், அது EEK செய்தது போல், சிரிசாவை வானளவு பாராட்டவில்லை என்பது தான். சவாஸ் மிஷேல் சாவகாசமாக ஒப்புக்கொள்கின்ற ஒரு புள்ளியான, சிரிசா ஒரு முதலாளித்துவ தலைமையைக் கொண்டுள்ளது என்று மட்டும் அனைத்துலகக் குழு எச்சரிக்கவில்லை, அது ஒரு முதலாளித்துவக் கட்சி அக்காரணத்தினாலேயே தொழிலாளர்கள் சிரிசாவை எதிர்க்க வேண்டும் என்றும் எச்சரித்தது.

அதாவது, முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுக்கு அழைப்பு விடுப்பது என்ற மார்க்சிச நோக்குநிலையின் அரிச்சுவடிகளை ICFI பேணியது. ஆனால் 1985 இல் ICFI உடனான முறிவின் மூலம் மார்க்சிசத்தில் இருந்தான தனது திட்டவட்டமான முறிப்பைக் குறித்து நின்ற EEKயைப் பொறுத்தவரையில், இது தனது எல்லைக்கு அப்பாற்பட்ட விடயமாக தென்பட்டது.

EEK சிரிசாவை பாராட்டியது, அதன் வெற்றியின் "முக்கியத்துவத்தை" தெளிவற்ற ஆனாலும் ஒளிரும் வார்த்தைகளில் எழுதியது, மற்றும் தொழிலாளர்களுக்கு கடந்து செல்வதற்கான ஒரு அற்புதமான மற்றும் அறிவுபுகட்டும் அனுபவமாக அதை புகழ்ந்தது. ஆளும் வர்க்கம் கிரேக்கத் தொழிலாளர்களுக்கு சிரிசா என்ற நஞ்சு மாத்திரையை கொடுத்த நிலையில், என்ன தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது என்பது பற்றி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு விடுத்த எச்சரிக்கைகளை மதிப்பிழக்கச் செய்வதற்கு தன்னால் இயன்ற அனைத்தையும் EEK செய்தது. EEK சிரிசாவின் கடும்போக்கு உடந்தையாளராகவும் கிரேக்க முதலாளித்துவத்தின் ஒரு பிற்போக்கு கருவியாகவும் செயற்பட்டது.

8. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை கட்டியெழுப்புவோம்!

சிரிசா அரசாங்க அனுபவம் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு பெரும் தோல்வியாக அமைந்திருப்பதை அப்பட்டமாக கூறியாக வேண்டும். இந்தத் தோல்வியின் அரசியல் படிப்பினைகளை தேற்றம் செய்து, எதிர்வரும் காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டங்களுக்கு கிரேக்கம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலகம் பூராவும் உள்ள தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக மீண்டும் ஆயுதபாணியாக்குவதே இப்போதைய அதிமுக்கிய பணி ஆகும்.

"தீவிர இடது" கட்சிகள் என அழைக்கப்படும் கட்சிகள் பதவிகளில் அமர்ந்திருக்கிற முதலாளித்துவ அரசாங்கங்களை நம்பியிருப்பதன் மூலமோ, அல்லது சாதகமான கொள்கைகளை முன்னெடுக்க இத்தகைய அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சிகள் மூலமோ தொழிலாள வர்க்கத்தால் தனது மிகக் குறைந்தபட்ச நலன்களைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாது என்பதையே நிகழ்வுகள் நிரூபித்துள்ளன. புரட்சிகரப் பாதையை எடுப்பதைத் தவிர தொழிலாளர்களுக்கு வேறு வழியில்லை என்பதையே சிரிசாவின் கொள்கைகள் காட்டியுள்ளன.

ரஷ்ய தொழிலாள வர்க்கம் 1917ல் முதலாளித்துவத்தை தூக்கிவீச நிர்ப்பந்திக்கப்பட்டது ஏன் என்பதை ஆளும் வர்க்கம் தொழிலாள வர்க்கத்திற்கு நினைவூட்டிக் கொண்டிருக்கிறது. அக்டோபர் புரட்சியினாலும் சோவியத் ஒன்றியத்தின் இருப்பினாலும் முன்வைக்கப்பட்ட அரசியல் மற்றும் சித்தாந்த சவாலுக்குப் பதிலிறுப்பில், இருபதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் முதலாளித்துவ நாடுகளில் உள்ள தொழிலாள வர்க்கத்துக்கு வழங்கப்பட்ட அனைத்து சமூக சலுகைகளையும் கிழித்தெறிவதே ஆளும் வர்க்கத்தின் மூலோபாயமாய் இருக்கிறது. தொழிலாளர்கள் பல தசாப்தங்கள் பின்நோக்கித் தூக்கிவீசப்பட்டு, கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள சக வறிய தொழிலாளர்களின் நிலைக்கு கீழிறக்கப்பட உள்ளனர்.

கிரேக்கத்தில் தோல்விக்கான பொறுப்பு தொழிலாள வர்க்கத்தினுடையது அல்ல. போராடுவதற்கான உறுதிப்பாட்டில் கிரேக்க பாட்டாளி வர்க்கம் எந்த குறைவையும் காட்டவில்லை அத்துடன் அது தன் புரட்சிகர உள்ளுணர்வுகளை தொடர்ச்சியாக வெளிப்படுத்தியது. ஐரோப்பா முழுவதுமான பரந்த தொழிலாளர்கள், தாங்களும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகரித்துச் செல்லும் தாக்குதலின் கீழ் இருந்த நிலையில், கிரேக்கத் தொழிலாளர்கள் மீதான சிரிசாவின் தாக்குதலையிட்டு கோபம் மற்றும் அவநம்பிக்கையுடன் எதிர்வினையாற்றி, கிரேக்க தொழிலாளர்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தினர்.

தொழிலாள வர்க்கம் தம்மீதான ஆழமான ஒடுக்குமுறையையிட்டு சீற்றம் கொண்டிருந்தபோதிலும், தனது அரசியல் நலன்களுக்கு வாதாடவும் தனது வரலாற்றுக் கடமைகளின் மட்டத்திற்கு தன்னை உயர்த்திக்கொள்ளவுமான தன்னியல்பான வழி எதனையும் அதனால் காண முடியவில்லை. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வங்கிகளின் ஈவிரக்கமற்ற தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தில் தன்னை வழிநடத்துவதற்கு இயலுமை கொண்ட ஒரு அரசியல் தலைமையை அதனால் திடீரென்று முன்னேற்றி விட முடியவில்லை.

மாறாக, பொய்களின் அடிப்படையில் வெகுஜன அதிருப்திக்கு சிடுமூஞ்சித்தனமாக அழைப்புவிடும் அதே வேளை தனது வாக்குறுதிகளை மீறுவதற்கு நனவுடன் தயாரிப்பு செய்து கொண்டிருந்த ஒரு கட்சியான சிரிசாவுக்குப் பின்னால் தொழிலாளர்களின் சமூக எதிர்ப்பு மீண்டும் மீண்டும் பாயச்செய்யப்பட்டது. கிரேக்க மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் கட்டளைகளை அது எதிர்க்கும் என்பதான பிரமைகளைக் கட்டியெழுப்புகின்ற அரசியல் போக்குகளின் ஒரு ஒட்டுமொத்த அடுக்கின் சேவைகளின் மீது சிரிசா தங்கியிருந்தது. இந்த போலி-இடது கட்சிகளின் பரந்த கும்பல், நிதி மூலதனத்தின் பிற்போக்குக் கருவிகளாய் அம்பலமாகி நிற்கின்றன.

இந்த தோல்விக்கு பொறுப்பான கட்சிகள், ஆளுமைகள் மற்றும் அரசியல் கருத்தாக்கங்களின் மீது ஒரு தாட்சண்யமற்ற விமர்சனத்தின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக மறுஆயுதபாணியாக்குவதும் மற்றும் ஒரு புதிய புரட்சிகர தலைமையைக் கட்டியெழுப்புவதுமே மையமான பணி ஆகும். இதுவே கிரேக்க நிகழ்வுகள் தொடர்பாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மேற்கொண்ட வேலைகளின் முக்கியத்துவமாய் இருப்பதாகும்.

கிரேக்கத்திலும், ஐரோப்பாவிலும் மற்றும் உலகம் முழுவதிலும் முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்து கன்னைகளில் இருந்தும் முற்றிலும் சுயாதீனமாய், தொழிலாளர்’ ஆட்சியை ஸ்தாபிப்பது, முதலாளித்துவ அமைப்பு முறையை ஒழித்துக்கட்டுவது மற்றும் ஒரு உலக சோசலிச சமுதாயத்தை ஸ்தாபிப்பது ஆகியவற்றை இலக்காகக் கொண்ட ஒரு சர்வதேச புரட்சிகர வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய தொழிலாள-வர்க்கக் கட்சிகளைக் கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே தொழிலாள வர்க்கம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே முதலாளித்துவ சுரண்டல், வறுமை மற்றும் போருக்கு எதிரான போராட்டத்தில் உலகம் பூராவும் தொழிலாள வர்க்கத்தை ஒழுங்கமைக்கவும் ஐக்கியப்படுத்தவும் முனைகின்ற ஒரே அரசியல் அமைப்பு ஆகும். மார்க்சிச மற்றும் ட்ரொட்ஸ்கிசக் கோட்பாடுகளைப் பாதுகாத்தான அதன் தசாப்த கால போராட்டமானது, ஒரு பிரம்மாண்டமான அரசியல் அனுபவம் மற்றும் இப்போது திறந்து கொண்டிருக்கும் புதிய புரட்சிகர சகாப்தத்திற்கு தொழிலாள வர்க்கத்தை ஆயுதபாணியாக்குவதற்கென கடைந்தெடுக்கப்பட்ட முழுமையானதொரு முன்னோக்கு ஆகியவற்றின் உருவடிவாய் உள்ளது. ட்ரொட்ஸ்கிசத்தின் தொடர்ச்சியைப் பாதுகாக்க அது ஆறு தசாப்தங்களாக நடத்தியிருந்த போராட்டத்தின் மையத்தில் இருந்த அரசியல் மற்றும் வரலாற்றுப் பிரச்சினைகள் இப்போது பற்றியெரியும் வெகுஜனப் பிரச்சினைகளாய் ஆகியிருக்கின்றன.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை கட்டியெழுப்புவதே இன்று தீர்க்கமான மூலோபாய பிரச்சினை ஆகும். இந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ள முன்னோக்கிற்காக போராடுவதற்கும், சோசலிச புரட்சிக்கான உலகக் கட்சியாம் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இணைவதற்கும், கிரேக்கத்திலும் மற்றும் உலகம் பூராவும் உள்ள அரசியல் நனவுள்ள தொழிலாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் இளைஞர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

Loading