போரும் புரட்சியுமான சகாப்தத்தில் மெய்யியலும் அரசியலும்

பிராங்பேர்ட் கோத்த பல்கலைக்கழகத்தில் வழங்கிய ஒரு உரை

மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்த உரை உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுத் தலைவரான டேவிட் நோர்த் பிராங்பேர்ட்டில் உள்ள கோத்த பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 22 மொழியில் வழங்கியதாகும். சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் அழைப்பின் பேரில் இந்த உரை நிகழ்த்திய டேவிட் நோர்த் அத்துடன் பிராங்பேர்ட் பள்ளி, பின்நவீனத்துவம் மற்றும் போலி-இடது அரசியல்” என்ற தனது நூல் குறித்தும் பேசினார்.

இங்கே, பிராங்பேர்ட் கோத்த பல்கலைக்கழகத்தில், பேசுவதற்கு எனக்கு வாய்ப்பை உருவாக்கித் தந்த சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பிற்கு (IYSSE) எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். “போரும் புரட்சியுமான சகாப்தத்தில் மெய்யியலும் அரசியலும்” என்ற தலைப்பில் உரை வழங்க இருக்கிறேன். இந்தத் தலைப்பு, இந்த மாலையில் நான் விவாதிக்க இருக்கும் தத்துவார்த்தப் பிரச்சினைகளில் எனது ஆர்வத்தின் தன்மையையும் அவற்றை நோக்கிய எனது அணுகுமுறையையும் சுட்டிக்காட்டியிருக்கும். பிராங்பேர்ட் பள்ளி மற்றும் பின்நவீனத்துவத்தின் மீதான எனது விமர்சனம், கல்வியாராய்ச்சி குணாம்சத்தைக் காட்டிலும், ஒரு அரசியல் குணாம்சத்தைக் கொண்டதாகும்.

இந்தப் பள்ளியின் பிரதிநிதிகள் திறம்பட்ட, இன்னும் மேலேபோய் புரட்சிகரமான, சமூக மாற்றத்திற்கான தத்துவார்த்த மற்றும் புத்திஜீவித அடித்தளங்களை வழங்கக் கூடிய தீவிரப்பட்ட ஒரு சிந்தனைப் போக்கினைக் குறிப்பதாகவே பரவலாய் நம்பப்படுவதால், இவ்வாறான எனது அணுகுமுறை அவசியமானது என்று நம்புகிறேன். மார்க்சிசத்திற்கு அத்தியாவசியமான திருத்தங்களைக் கொண்டு துணையளிப்பு செய்துள்ளதாகவோ அல்லது அதன் காலத்திற்கு ஒவ்வாத தன்மையை அம்பலப்படுத்தியிருப்பதாகவோ அவர்கள் கூறிக் கொள்வது நிரூபிக்கப்படமுடியாதும் அத்தோடு அப்பட்டமான பொய்யும் ஆகும்.

கிரீசில் சிரிசாவின் முழு வெட்கக்கேடான சரணாகதிக்குப் பின்னர், கிரேக்க குட்டி-முதலாளித்துவ வர்க்கத்தின் மிக வசதியான மற்றும் மிகவும் சுய-திருப்தி பட்டுக்கொள்ளக்கூடிய பிரிவுகளின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒரு பிற்போக்குத்தனமான கட்சியாக அது அம்பலப்பட்டதன் பின்னர், பிராங்பேர்ட் பள்ளி மற்றும் பின்நவீனத்துவத்தின் பல வகையறாக்களின் பிரதிநிதிகளால் பயன்படுத்தப்படும் திட்டமிட்டு தெளிவற்றதாக்கப்பட்ட வார்த்தைஜாலங்களின் என்ன வேடமணிந்து அவை வந்தபோதும் கல்வித்துறைசார் பின்-மார்க்சிசத்தின் முக்கிய கூறுகளுக்கும் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு மிகவும் குரோதம் காட்டுகின்ற அரசியல் திட்டநிரல்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பிருப்பதை மறுப்பதென்பது சாத்தியமில்லாததாகும்.

வரலாற்றுரீதியாகவும் மற்றும் அரசியல்ரீதியாகவும் ஒரு முக்கியமான தினம் அண்மிக்கும் வேளையில் நாம் கூடியிருக்கிறோம். 1991 டிசம்பர் 26 அன்று, சோவியத் ஒன்றியம் உத்தியோகபூர்வமாகக் கலைக்கப்பட்டது. இந்த நிகழ்வு சோசலிசத்தின் ஒரு முற்றுமுழுதான மறுதலிப்பாகவும் அத்துடன் முதலாளித்துவத்தின் வெற்றியாகவும் உலகம் முழுக்கவும் விளக்கமளிக்கப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் முடிவானது ஒரு முதலாளித்துவ அடிப்படையில் அன்றி வேறு எந்த வகையிலும் சமூகத்தை ஒழுங்கமைப்பதற்கு சாத்தியமில்லை என்பதை எடுத்துக்காட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. 1917 அக்டோபர் புரட்சிக்கு எழுபத்தி-நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், தடையற்ற சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படையில் உலகத்தை மீளஒழுங்கமைப்பதற்கு இப்போது முதலாளித்துவ உயரடுக்கினருக்கு தடையேதும் இல்லாதிருந்தது. அமெரிக்காவின் ஜனாதிபதி ஒரு “புதிய உலக ஒழுங்கின்” தொடக்கத்தை பிரகடனம் செய்தார். சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு வெறும் ஆறே வாரங்களின் பின்னர் 1992 பிப்ரவரி 7 அன்று, மாஸ்டிரிச்ட் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டு, யூரோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஸ்தாபிக்கப்படுவதற்கான அடித்தளங்கள் இடப்பட்டன.

இந்த வெற்றிக்களியாட்டங்களில் இருந்த வரலாற்று மோசடி கொஞ்சநஞ்சமல்ல.

முதலாவதாய், 1991 இல் சோவியத் ஒன்றியம் முடிவுக்கு வந்தமை அதற்கு 74 ஆண்டுகளுக்கு முன்பாய் நிகழ்ந்திருந்த, சோசலிசப் புரட்சியின் ஒட்டுமொத்த வரலாற்று மரபையும் அழித்து விடவில்லை. அக்டோபர் புரட்சி, உலக வரலாற்றின் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வுகளில் ஒன்றாய் இருந்தது. 1917 அக்டோபரில் போல்ஷிவிக் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியமை உலகை உலுக்கியது. உலகெங்கும் அலைபோல் எழுந்த புரட்சிகர முதலாளித்துவ-விரோத மற்றும் ஏகாதிபத்திய-விரோதப் போராட்டங்களுக்கான அரசியல் உத்வேகத்தை அது வழங்கியது. சோவியத் ஒன்றியத்தின் எல்லைகளைக் கடந்து, இந்த மாபெரும் புரட்சியானது பரந்த மக்களின் நனவை மேலுயர்த்தியது. புரட்சி மற்றும் அதற்குப் பிந்தைய காலத்தின் வரலாற்றை தீவிரமாக ஆராயாமல், இருபத்தியோராம் நூற்றாண்டை புரிவது இருக்கட்டும், இருபதாம் நூற்றாண்டை புரிந்து கொள்வது கூட சாத்தியமில்லாதது.

மோசடியின் இரண்டாவது கூறு, 1991 டிசம்பரில் தன்னை கலைத்துக் கொண்டு, அதன்மூலம் முதலாளித்துவ மீட்சிக்கென இருந்த அத்தனை தடைகளையும் அகற்றிய ஆட்சியை, சோசலிசத்துடனும் மார்க்சிசத்துடனும் அடையாளம் காண்பதாகும். கோர்பசேவ் தலைமையிலான ஆட்சி, ஸ்ராலினிச ஆட்சியே தவிர, சோசலிச ஆட்சியல்ல. 1930களில் ஏறக்குறைய ஒட்டுமொத்த மார்க்சிச புத்திஜீவித்தட்டையும் அத்துடன் தொழிலாள வர்க்கத்தின் போல்ஷிவிக்-சோசலிச முன்னணிப் படையையும் அழித்தொழித்த ஒரு பயங்கர நடவடிக்கைகளின் மூலம் தனது அதிகாரத்தை வலுப்படுத்திக் கொண்ட ஒரு அதிகாரத்துவ ஆட்சியின் தலைமையில் தான் கோர்பசேவ் அமர்ந்திருந்தார். 1991 டிசம்பரில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டமையானது, அதற்கு சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பாக லியோன் ட்ரொட்ஸ்கி முன்வைத்த ’ஒன்றில் தொழிலாள வர்க்கம் அதிகாரத்துவத்தை தூக்கிவீசும், இல்லையேல் அதிகாரத்துவ ஆட்சி சோவியத் ஒன்றியத்தை அழித்து விடும்’ என்ற எச்சரிக்கைகளை ஊர்ஜிதப்படுத்தியது.

சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு உலக முதலாளித்துவத்தின் அரசியல் தலைவர்களுக்கு ஏறக்குறைய ஒரு முழுமையான ஆச்சரியமாகவே வந்துசேர்ந்தது. 1989 இல் கிழக்கு ஐரோப்பிய ஸ்ராலினிச ஆட்சிகள் பொறிந்த பின்னரும் கூட, சோவியத் ஒன்றியம் அடுத்துவரும் பல தசாப்தங்களுக்கு இருக்கும் என்ற எண்ணமே பரவலாய் கருதப்பட்டு வந்திருந்தது. சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலம் மட்டுமே, கோர்பசேவின் பெரெஸ்த்ரோய்கா ஸ்ராலினிச ஆட்சியின் மரணவலியைக் குறித்தது என்று 1986 இலேயே கணித்திருந்த ஏறக்குறைய ஒரேயொரு அமைப்பாய் இருந்தது. முதுமையடைந்துபோயிருந்த அதிகாரத்துவ உயரடுக்கு, பெருகிச் சென்ற தொழிலாள வர்க்க எதிர்ப்பைக் கண்டு அச்சமடைந்தும் தனது சலுகைகளைக் காப்பாற்றிக் கொள்ளும் நப்பாசையிலும் முதலாளித்துவத்தை மீட்சி செய்வதற்கு தயாரிப்பு செய்து கொண்டிருந்தது.

சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு குறித்த வெற்றிக்களியாட்ட விளக்கத்தின் பிரதான பிரச்சினை என்னவென்றால், உலக முதலாளித்துவ அமைப்புமுறை முகம்கொடுத்த வரலாற்று நிலைமை குறித்த ஒரு துல்லியமற்ற, இன்னும் கூறப்போனால் மனப்பிரமையளிக்கக் கூடிய ஒரு மதிப்பீட்டை அது ஊக்குவித்தது என்பதுதான். 1917 புரட்சியும் அதன் புரட்டிப்போட்ட பிந்தைய காலமும் ஒருபோதும் நடந்தேயிராததைப் போல கருதிக்கொண்டு, இந்த கோளத்தின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ஒழுங்கமைப்பை நாம் முன்னெடுக்கலாம் என்று அதன் தலைவர்கள் தங்களைத் தாங்களே நம்பவைத்துக் கொண்டார்கள். “வரலாற்றின் முடிவு” என்று பிரகடனம் செய்த பிரான்சிஸ் புக்குயாமா, 1914 இல் முதலாம் உலகப் போரின் வெடிப்புக்கும் 1991 இல் சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்கும் இடையிலான காலம் “குறுகிய இருபதாம் நூற்றாண்டு” என்ற சிந்தனையைப் பிரபலப்படுத்திய எரிக் ஹோப்ஸ்பாம் போன்ற எழுத்தாளர்கள் இந்தப் பிரமைகளுக்கு புத்திஜீவித்தன அங்கீகாரத்தை வழங்கியிருந்தனர். போர் மற்றும் புரட்சியின் காய்ச்சல் இறுதியில் நொருங்கி விட்டிருந்தது என்றும் முதலாளித்துவ–மூலதன சமூகத்தின் இயல்பான வளர்ச்சி தொடர்ந்து முன்செல்லலாம் என்றும் அவர்கள் கூறிக் கொண்டனர்.

சோவியத் ஒன்றியத்தின் முடிவு குறித்த இந்த மதிப்பீடுகள் மீது ஒரு தீர்ப்பை வழங்கக் கூடிய ஒரு நிலையில் நாம் இப்போது இருக்கிறோம். முதலாளித்துவத்தின் வரலாற்று வெற்றி குறித்த பிரகடனங்கள் எல்லாம், குறைந்தபட்சமாய் சொல்வதென்றால், முதிர்ச்சியற்றவையாக இருந்தன. வரலாறு முடிந்து விட்டிருக்கவில்லை, புதிய நூற்றாண்டின் கொந்தளிப்புகள் இருபதாம் நூற்றாண்டின் ஒரு உணர்வையே கொண்டிருக்கின்றன. உலக முதலாளித்துவம் தோள்களைத் திருப்பிப் பார்த்து சோசலிசம் மற்றும் மார்க்சிசத்தைக் கண்டு கலவரப்படாமல் அதனால் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்ட இருபத்தைந்து ஆண்டுகள் அதற்குக் கிடைத்திருந்தது. இக்காலகட்டத்தில் அவர்களின் உழைப்பின் பயன்தான் என்ன?

சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்கு கால்நூற்றாண்டுக்கு பின்னர் பார்த்தால், சோவியத்துக்கு பிந்தைய முதலாளித்துவ உலகமானது உயிர்வாழ்க்கைக்கான ஒரு உலகளாவிய நெருக்கடியால் உலுக்கப்பட்டிருக்கிறது. வோல்ரேய்ரின் டாக்டர் பான்குளூஸ் உயிருடன் இருந்து, அவரிடம் நவீன உலகத்தின் நிலைமை குறித்துக் கூறுமாறு கேட்டால், அநேகமாக அவர் நம்பிக்கையின்றி தன் கைகளை விரித்திருப்பார். அரசியல், பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாச்சாரம் என ஒவ்வொரு நிலையிலுமே முதலாளித்துவ சமூகமானது பெருமந்த நிலை மற்றும் இரண்டாம் உலகப் போரின் சகாப்தத்துடன் மட்டுமே ஒப்பிட இயலுகின்ற ஒரு நெருக்கடிக்கு முகம்கொடுத்திருக்கிறது. முதலாம் உலகப் போருக்கு முந்தைய சமூக ஜனநாயகக் கட்சியின் பழைய சீர்திருத்தவாதிகள், எட்வார்ட் பேர்ன்ஸ்டைன் இன் ஆதிக்கத்திற்குட்பட்டு, Zusammenbruchstheorie (னைத்தும் உடைந்துவிடும் தத்துவம்) குறித்து நகைத்துக் கொண்டிருந்தார்கள். அது நகைச்சுவை அல்ல என்பது 1914 இல் நிரூபணமானது. இன்று பேரழிவுகரமான பின்விளைவுகளைக் கொண்டு அச்சுறுத்துகின்ற ஒரு பெருகிச் செல்லும் அமைப்புமுறை நெருக்கடியின் மத்தியில் நாம் நின்று கொண்டிருக்கிறோம்.

பொருளாதார முனையில், முதலாளித்துவ அமைப்புமுறையானது நெருக்கடி மாற்றி நெருக்கடியாய் திணறி வந்திருக்கிறது. 2008 பொறிவு உலகப் பொருளாதாரத்தை அதலபாதாளத்தின் விளிம்புக்குக் கொண்டுவந்தது. அதற்கு சுமார் ஒரு தசாப்தத்திற்கு பின்னர், உலகப் பொருளாதாரமானது தேக்கமடைந்து கொண்டிருக்கிறது. அடுத்து வரவிருக்கும் பல தசாப்தங்களுக்கு இல்லையென்றால் பல ஆண்டுகளுக்கேனும் வளர்ச்சி விகிதம் குறைவானதாகவே தொடரவிருக்கிறது.

கடந்த இரண்டு தசாப்தங்கள் சமூக சமத்துவமின்மையின் அசாதாரண அளவிலான அதிகரிப்பைக் கண்டிருக்கின்றன. உலகின் 62 மிக உயர்ந்த பணக்காரர்களது சொத்து உலக மக்கள் தொகையின் கீழிருக்கும் 50 சதவீதம் பேருக்கும் அதிகமானதாகும், அதாவது அந்த 62 பேரின் சொத்துமதிப்பு 3.5 பில்லியன் மனிதர்களது சொத்துமதிப்புக்கு நிகரானதாக இருக்கிறது. சராசரியாக எடுத்துப் பார்த்தால், இந்த 62 பேரில் ஒவ்வொருவரது தனிப்பட்ட சொத்துமதிப்பும் 56 மில்லியன் ஏழை மக்களது மொத்தச் சொத்துக்கு நிகரானதாகும்! இத்தகைய அளவிலான சமூக சமத்துவமின்மை, ஜனநாயகத்துடன் இணக்கமற்றதாகும். உலகெங்கும் பிற்போக்குத்தனமான கட்சிகளின் வளர்ச்சியானது, முதலாளித்துவ ஜனநாயக ஸ்தாபனங்களின் பயனுடைமை மீது ஒரு அடிப்படையான நம்பிக்கை இழப்பு ஏற்பட்டிருப்பதையே பிரதிபலிக்கிறது. அத்துடன் இந்த நிறுவனங்களும் பரந்த மக்களின் நம்பிக்கையை ஏன் தக்க வைக்க வேண்டும்? கடந்த கால் நூற்றாண்டு காலமாய், உழைக்கும் மக்களின் பரந்த பிரிவுகள் தமது வாழ்க்கைத் தரங்களில் ஒரு இடைவிடாத சரிவையே சந்தித்திருக்கின்றன. இது ஒரு ஐரோப்பிய ஒன்றியத்திற்கான திட்டத்தை மதிப்பிழக்கச் செய்திருப்பதோடு பிரிட்டன் கருத்துவாக்கெடுப்பில் பிரெக்ஸிட்டின் வெற்றியிலும் விளைந்திருக்கிறது.

உலக முதலாளித்துவத்தின் மாபெரும் கோட்டையான அமெரிக்காவிற்குள்ளும், பத்துமில்லியன் கணக்கான உழைக்கும் மக்களின் ஏமாற்றமும் அவநம்பிக்கையும் டொனால்ட் ட்ரம்பின் எழுச்சியில் அரசியல் நோக்குநிலை தவறிய ஒரு வெளிப்பாட்டைக் கண்டு கொண்டிருக்கிறது. ”அமெரிக்கர்களுக்கு பித்துப் பிடித்து விட்டதா?” என்று அமெரிக்கத் தேர்தல் குறித்த ஒரு வருணனையில் Die Zeit கேட்டிருந்தது. தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவ்வாறு தெரியக் கூடும். ஒரு ஊழலடைந்த மற்றும் பாசிச சுருட்டல் பேர்வழியான டொனால்ட் ட்ரம்ப் இருபெரும் பிரதான அரசியல் கட்சிகள் ஒன்றின் ஜனாதிபதி வேட்பாளராக ஆக முடிந்தது எப்படி? ஆயினும், இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பது ஜேர்மனியர்களுக்கு இயலும். இந்த நாட்டின் மக்களுக்கு அமெரிக்காவில் கட்டவிழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் நிகழ்முறைகளைப் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்காது. எண்பத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, ஹிட்லரின் புகழ்வளர்ச்சியின் மூலகாரணத்தை லியோன் ட்ரொட்ஸ்கி பின்வருமாறு விளக்கினார்:

வடுக்கள் மற்றும் புதிய காயங்கள் சகிதமாய் நொடித்துப் போன மற்றும் ஏழ்மையான மக்கள் நாட்டில் ஏராளமாய் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் தங்கள் முஷ்டியை மடக்கி மேசையின் மீது ஓங்கிக் குத்துவதற்கு விரும்பினார்கள். இதனை அவர்களை விட ஹிட்லர் சிறப்பாக செய்யக்கூடிவராக இருந்தார். தீமையிலிருந்து குணப்படுத்துவது எப்படி என்பது அவருக்குத் தெரியாது என்பது உண்மைதான். ஆனாலும் கூட அவரது ஆவேசப் பேச்சுகள் இப்போது தடுத்துநிறுத்தமுடியாத தலைவிதியைக் கொண்டவர்களை நோக்கிக் கூறப்பட்ட உத்தரவுகளைப் போலவும் பிரார்த்தனைகளைப் போலவும் ஒலித்தது. [1]

அக்கறையற்ற மற்றும் தண்டிக்கிறதான ஒரு சமூகத்தினால் ஏற்படுத்தப்பட்ட வடுக்களையும் காயங்களையும் தாங்கி இன்று மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் இருக்கிறார்கள். ட்ரம்ப் கோபத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையை வழங்குகிறார். அமெரிக்காவின் ஜனாதிபதிப் பதவிக்கு குடியரசுக் கட்சி பரிந்துரைத்திருக்கும் வேட்பாளர், மூனிச் நகர மதுச்சாலையின் ஒரு அமெரிக்க பதிப்பாக எழுந்தவரல்ல. டொனால்ட் ட்ரம்ப் ஒரு பில்லியனர். மன்ஹாட்டன் வீட்டு கட்டிட சுருட்டல்கள், கசினோ சூதாட்டத்தின் பாதிக் குற்றவியல் நடவடிக்கைகள், மற்றும் அபத்தமான, வெறுப்பூட்டத்தக்க அத்துடன் அடிப்படையாக கற்பனையான “உண்மை வாழ்க்கை” நிலைமைகளை உருவாக்கி பார்வையாளர்களை மகிழ்விப்பதும் முட்டாளாக்குவதுமான கிறுக்குத்தனமான “ரியாலிட்டி தொலைக்காட்சி” உலகம் ஆகியவற்றின் மூலம் பணம் சம்பாதித்தவர். டொனால்ட் ட்ரம்ப் வேட்பாளரானதை ரியாலிட்டி தொலைக்காட்சியின் தந்திரங்கள் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டதாய் கூட விவரிக்கலாம்.

“அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக்க” ட்ரம்ப் வாக்குறுதியளிக்கிறார். ஒருகாலத்திலும் மீட்சி செய்ய முடியாத மற்றும் உண்மையில் இருந்திரவே இருந்திராத ஒரு கடந்தகாலத்திற்கான மலரும் நினைவுகளை இந்த சுலோகம் தூண்டுகிறது. அமெரிக்கர்கள் எப்போதும் தலைமுடி உதிர்வதற்கும் வாய்வுக்கோளாறுக்கும் தீர்வு அளிப்பதாக தந்திரமாக ஏமாற்றுபவர்களிடம் எளிதில் ஏமாறுபவர்களாய் இருந்து வந்திருக்கிறார்கள். மலிவான பொருட்களை விளம்பரப்படுத்தி விற்றுவிடுவதில் கைதேர்ந்தவரான ட்ரம்ப், அவர்களுக்கு வெற்றி மற்றும் அபரிமிதமான செல்வம் ஆகியவற்றுக்கான இரகசியத்தை வழங்குவதாக வாக்குறுதியளித்து செல்வத்தைக் குவித்திருக்கிறார். இப்போது அமெரிக்காவின் “மகத்தான தன்மை”யை மீட்டுக் கொண்டுவருவதற்கு அவர் வாக்குறுதியளித்துக் கொண்டிருக்கிறார். சமகால அமெரிக்காவில் ’வாழ்க்கை நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது’ என்று சொல்ல முடியாத மில்லியன் கணக்கான மக்களுக்கு ட்ரம்பின் சுலோகம் விண்ணப்பம் செய்கிறது. கடந்த காலத்தின் ”மகத்தான தன்மை” எவ்வாறு மீட்கப்பட இருக்கிறது? அமெரிக்காவின் தெற்கு எல்லையில் 2,000 மைல்களுக்கும் அதிக நீளமான ஒரு சுவற்றைக் கட்டுவதன் மூலமும், மில்லியன் கணக்கான ஹிஸ்பானிக் குடியேற்றவாசிகளை திருப்பியனுப்புவதன் மூலமும், முஸ்லீம்களை அமெரிக்காவிற்குள் நுழைவதில் இருந்து தடுப்பதன் மூலமும், சீனப் பொருட்கள் மீது பாரிய வரிவிதிப்புகளை திணிப்பதன் மூலமும், எல்லாவற்றுக்கும் மேலாய், பெரிய நிறுவனங்களுக்கும் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட தனிப்பட்ட பணக்காரர்களுக்கும் வரிகளைக் குறைப்பதன் மூலமும்.

இவையெல்லாம் வெற்று மயக்கங்களை அளிக்கக்கூடியவை மட்டுமே. மாறாக இவரது இயக்கத்திற்கான எரிசக்தியாக விளங்கக் கூடிய கோபமும் விரக்தியும் அமெரிக்க முதலாளித்துவத்திடம் அதற்கு எந்தத் தீர்வும் இல்லாத உண்மையான சமூக அவல நிலைகளில் தான் வேர்கொண்டிருக்கிறது. ட்ரம்பினை எதிர்த்து நிற்கும் ஹிலாரி கிளிண்டனோ, வோல் ஸ்ட்ரீட்டுடனும் இராணுவ-உளவு அமைப்புடனும் முழுமையாக அடையாளம் காணக்கூடிய ஒரு ஊழலடைந்த நிலவும்நிலையின் உருவடிவமாய் இருக்கிறார். மிகப் பெரும்பான்மை அமெரிக்கர்களை பாதிக்கும் சமூகப் பிரச்சினைகளில் ஒன்றுக்கும் கூட அவரது தேர்தல் வேலைத்திட்டத்தில் நிவாரணம் இல்லை. வீழ்ச்சி காணும் வாழ்க்கைத் தரங்கள், அதிகரித்துச் செல்லும் ஆரோக்கிய பராமரிப்புச் செலவுகள், வேலைப் பாதுகாப்பின்மை, மற்றும் மில்லியன் கணக்கான இளைஞர்களுக்கு திகைக்க வைக்கும் மாணவர் கடன் அளவுகள் ஆகியவையும் இந்த சமூகப் பிரச்சினைகளில் உண்டு.

ட்ரம்ப் பெறுகின்ற ஆதரவு ஒருபக்கம் இருந்தாலும் கூட, அமெரிக்காவில் ஒரு வெகுஜன பாசிச இயக்கம் இன்னும் வந்துவிடவில்லை. இந்த ஆண்டின் ஆரம்பத்தில், தன்னை ஒரு சோசலிஸ்டாக பொதுவாக அடையாளப்படுத்திக் கொண்ட பேர்னி சாண்டர்ஸின் பிரச்சாரத்திற்கு மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் உற்சாகத்துடன் வாக்களித்திருந்தனர் என்பதை மறந்து விடக்கூடாது. சாண்டர்ஸ் தனது பிரச்சாரத்தை கைவிட்டு தனது ஆதரவை கிளிண்டனுக்கு மாற்றி விட்ட பின்னர், அவரது ஆதரவாளர்கள் பலரும் நிலவும்நிலைக்கான ஒரே மாற்றாக ட்ரம்பைக் கண்டனர். ஆனால் அதற்காக அவர்கள் ஒரு பாசிச இயக்கத்தை விரும்பினார்கள் என்று அர்த்தமாகி விடாது. என்றாலும், ட்ரம்ப் இறுதியில் நவம்பர் தேர்தலில் தோற்று விடுகி்றார் என்றே வைத்துக் கொண்டாலும், அவரது பிரச்சாரம் ஒரு எச்சரிக்கையாகும். சோவியத் ஒன்றியம் தோல்வியடைந்து இருபத்தியைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், அமெரிக்க ஜனநாயகம் ஒரு மரண நெருக்கடியான நிலையில் இருக்கிறது.

சர்வதேச சூழ்நிலையை கொஞ்சம் பரிசீலித்துப் பார்ப்போம். சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்குப் பிந்தைய காலத்தில், “அமைதியை பங்கிடுவது“ குறித்து பெரிதாகப் பேச்சு இருந்தது. பனிப் போர் முடிந்து விட்டதையடுத்து, இராணுவ மோதலுக்கான சாத்தியம் பெருமளவில் குறைந்து விடுமென்றும் ஆயுதங்களுக்கான மிகப்பெரும் செலவினங்கள் குறைக்கப்பட்டு விட முடியும் என்றும் வாதிடப்பட்டது. ஆனால் அப்படியேதும் நடக்கவில்லை. ஏறக்குறைய இடைவிடாத போர் தான் கடந்த கால் நூற்றாண்டு காலத்தின் இயல்பாய் இருந்திருக்கிறது. சோவியத் ஒன்றியம் உத்தியோகபூர்வமாய் கலைக்கப்படுவதற்கு முன்பாகவே, கிரெம்ளினில் நிலவிய குழப்பத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு 1990-91 இல் ஈராக் மீதான முதல் படையெடுப்பை அமெரிக்கா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவும் ஜேர்மனியும் ஒன்றுசேர்ந்து யூகோஸ்லாவியாவை உடைப்பதற்கு ஏற்பாடு செய்யும் கூட்டு முடிவை எடுத்தமை நடந்தது. இது பால்கன் பிராந்தியத்தில் இரத்தம் பாயும் உள்நாட்டுப் போருக்கு இட்டுச் சென்றதோடு 1999 இல் சேர்பியாவுக்கு எதிரான அமெரிக்கப் போராய் உச்சமடைந்தது. 2001 செப்டம்பர் 11 அன்று நியூ யோர்க்கில் உலக வர்த்தக மையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலானது 15 ஆண்டுகளுக்கு அதிகமாகியும் இப்போதும் தொடர்ந்து ஆவேசம் குறையாதிருக்கும் “பயங்கரவாதத்தின் மீதான போரை” தொடக்குவதற்கான போலிச்சாக்கினை வழங்கியது.

இதற்குள்ளாக, ”பயங்கரவாதத்தின் மீதான போர்” என்பது அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக மேலாதிக்கத்திற்கான தனது உந்துதலை நியாயப்படுத்துவதற்காக பயன்படுத்திய ஒரு பிரச்சார வாசகம் என்பது மிகவும் தெளிவாகியுள்ளது. அத்துடன் அமெரிக்கா மத்திய கிழக்கில் தனது பூகோள அரசியல் நோக்கங்களை சாதிப்பதற்காக அல் கெய்தா மற்றும் அதனுடன் தொடர்புபட்ட அல்-நுஸ்ரா முன்னணி போன்ற அதன் பயங்கரவாத எதிரிகளாக கூறப்படுபவையின் சேவைகளை பயன்படுத்தவும் கூட தயங்கியிருக்கவில்லை. மேலும், மத்திய கிழக்கிலும் மத்திய ஆசியாவிலும் அமெரிக்கா தூண்டியிருக்கும் போர்கள் உலக மேலாதிக்கத்திற்கான ஒரு மூலோபாயத்தின் ஆரம்ப கட்டங்கள் மட்டுமேயாகும். இதுவே ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளுக்கு எதிராகவும் ஒரு தீவிரமான மோதல் அதிகரிப்புக்கு ஏற்கனவே இட்டுச் சென்றுவிட்டிருக்கிறது. இயல்பாகவே, ஐரோப்பிய முதலாளித்துவமானது அதிகரித்துவரும் உலகளாவிய மோதலில் வெறும் பார்வையாளனாக நிற்க முடியாது. ஜேர்மன் ஆளும் வர்க்கம் மீண்டுமொருமுறை ஒரு உலக சக்தியாக தனது பாத்திரம் குறித்து பேசிக் கொண்டிருக்கிறது, ஊடகங்கள் இராணுவவாதத்தின் வார்த்தைப் பிரயோகங்களை அன்றாட அரசியல் கலந்துரையாடல்களுக்குள் திட்டமிட்டு மறுஅறிமுகம் செய்து கொண்டிருக்கின்றன.

அணு ஆயுதங்களை பயன்படுத்துவது குறித்த பரிசீலனை உட்பட இராணுவ மோதலுக்கான முன்னேறிய தயாரிப்புகளுக்கும், அபாயத்தின் விரிவெல்லை குறித்த பொதுமக்களின் நனவிற்கும் இடையில் ஒரு மிகப் பரந்த இடைவெளி இருக்கிறது. அமெரிக்காவில், அடுத்த தசாப்தத்திற்குள்ளாக, ரஷ்யாவுடனும் சீனாவுடனுமான ஒரு பெரும் போர் அநேகமாக சாத்தியம், இன்னும் கூறினால் தவிர்க்கவியலாதது என்று அனுமானிக்கும் எண்ணற்ற ஆவணங்கள் இராணுவ மூலோபாய நிபுணர்களால் வெளியிடப்பட்டிருக்கின்றன. 2015 செப்டம்பரில், அமெரிக்க இராணுவத்தின் ஓய்வுபெற்ற தளபதியும் முன்னாள் இராணுவ கூட்டுப்படை தலைவருமான மார்ட்டின் டெம்ப்ஸி (Martin Dempsey) “இது எனது வாழ்க்கைக்காலத்தில் நான் கண்டிருக்கும் மிக அபாயகரமான காலகட்டம்” என கூறியிருந்தார். [2]

சென்ற மாதத்தில், அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கை வடிவாக்கத்தில் ஒரு செல்வாக்கான பாத்திரம் வகிக்கும், அட்லாண்டிக் கவுன்சில் அமைப்பானது, இராணுவத்தின்எதிர்காலம் என்ற தலைப்பில் ஒரு ஆவணத்தை வெளியிட்டது. அது அப்பட்டமாய் பின்வருமாறு கூறியது: “பல வகைகளிலும், அமெரிக்கா ஒரு இடைவிடாத போரின் சகாப்தத்திற்குள் நுழைந்திருக்கிறது, ஏனென்றால் இந்த அச்சுறுத்தலின் பல்வேறு வெளிப்பாடுகளையும் அது வரவிருக்கும் பல ஆண்டுகளுக்கு அநேகமாக பல தசாப்தங்களுக்கு தொடர்ந்து நிவர்த்தி செய்ய வேண்டியிருக்கும்.” [3] ”மிகத் திறம்படைத்த எதிரிகள், உயர்ந்த அளவுகளிலான உயிரிழப்பு மற்றும் அழிவு, அத்துடன் நூறாயிரக்கணக்கிலான அமெரிக்கத் துருப்புகள் ஈடுபடுத்தப்படும் ‘அடுத்த பெரும் போருக்கு’” இராணுவம் தயாரிப்பு செய்து கொள்ள வேண்டும். அதன் மிக வெளிப்படையாய் பேசும் பத்திகள் ஒன்றில், அந்த அறிக்கை அறிவிக்கிறது:

சிந்திக்க கடினமாய் இருக்கலாம், ஆனாலும் இராணுவம் பெரும் எண்ணிக்கையிலான சேதங்களை தாங்கிக் கொண்டு தொடர்ந்து போரிடுகின்ற திறனை மேம்படுத்தியாக வேண்டும்… இந்த உறையச் செய்யும் சாத்தியநிலைக்கான சித்தாந்தமும் பயிற்சியும் புத்துயிரூட்டப்பட வேண்டும், அத்துடன் தலைவர்களும் கனமான இழப்புகளுக்கு முகம் கொடுக்கும் நிலையிலும் மறுகுழுவாகிக் கொள்வதற்கும் நடவடிக்கைகளையும் போராட்ட உறுதியையும் தக்கவைத்துக் கொள்வதற்கும் தயாரித்துக் கொள்ள வேண்டும். பயிற்சியானது அலகுகளை, பாரிய ராக்கெட் மற்றும் ஆட்டிலறி தாக்குதல்களுக்கும், இரசாயன தாக்குதல்களுக்கும், அத்துடன் நடவடிக்கைகளை தொடர வேண்டுமென்றால் மறுஒழுங்கமைவை அவசியமாக்க கூடிய மிகப்பெருமளவு இழப்புகளை செயற்கையாகக் கொண்டுவரக் கூடிய அணுஆயுதத் தாக்குதல்களுக்கும் ஆட்படுத்தி பரிசோதிக்க வேண்டும். [5]

ரஷ்யாவின் கண்ணோட்டத்தில் இருந்து எழுதப்பட்ட வேறொரு பகுப்பாய்வானது, உலகப் பதட்டங்களின் நடப்பு நிலை குறித்த பின்வரும் மதிப்பீட்டை வழங்கியது:

பெரும் சக்திகள் தங்கள் ஆயுதக்கிடங்குகளை நவீனப்படுத்துகின்ற, படை அமைப்புகளை மறுதகவமைக்கின்ற, அத்துடன் அபாயத்தின் விளிம்பு வரை நிலைமைகளை கொண்டுசெல்கின்ற நிலையில், சூழல் செக்கோவ் இன் “rifle on the wall,” நிலையை ஒத்ததாக, வெடித்தே தீரப் போவதான அத்தனை அறிகுறிகளையும் கொண்டதாய் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும், சக்திகளிடையேயான போட்டியும், இராணுவ பலிகொடுத்து ஆடும் சூழ்ச்சிகளும் மற்றும் தவறான கணக்கீடுகளும் அழிவுகரமான பின்விளைவுகளை கொண்ட அரசுகளிடையேயான ஒரு மோதலை மீண்டும் தூண்டிவிடலாம்…

ஒப்பீடுகள் அனைத்துமே துல்லியமாயிருக்க முடியாதவை தான், ஆனாலும் சில முக்கியமான விதங்களில் இன்றைய உலகமானது முதலாம் உலகப் போருக்கு முன்வந்த ஆண்டுகளை ஒத்திருக்கிறது. பலதுருவங்களாக அது இல்லாமால் இருக்கலாம், ஆனாலும் பிராந்தியக் கூட்டணிகள், இருதரப்பு உடன்பாட்டு உத்தரவாதங்கள் மற்றும் இவற்றைப் போன்றவற்றின் ஒரு சிக்கலான வலை அதனைச் சுற்றிப் பின்னியுள்ளது. [6]

கால் நூற்றாண்டு அனுபவத்தை சுருங்கக் கூறினால், சோவியத் ஒன்றியத்தின் கலைப்பிற்கு பின்னர் பிரகடனம் செய்யப்பட்ட “முதலாளித்துவத்தின் வெற்றி” ஆனது, வரலாற்று யதார்த்தத்தை அழிவுகரமான வகையில் தப்பாக கணக்கிட்டதாக நிரூபணமாகியுள்ளது. முதலாளித்துவத்தின் மீதான மார்க்சிச பகுப்பாய்வு சரியென நிரூபணம் பெற்றுள்ளது. இருபதாம் நூற்றாண்டின் போர்களுக்கும் புரட்சிகளுக்கும் இட்டுச் சென்றவையான மார்க்சிசத்தினால் கண்டறியப்பட்ட முதலாளித்துவத்தின் அதே அடிப்படை முரண்பாடுகளான சமூக உற்பத்திக்கும், உற்பத்தி சக்திகள் தனியார் உடைமையாக இருப்பதற்கும் இடையிலான மற்றும் உற்பத்தி பூகோளரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்ச்சிப்போக்காக இருக்கின்ற யதார்த்தநிலைக்கும் தேசிய அரசு நிலவுவதற்கும் இடையிலான முரண்பாடுகள்தான் நவீன உலகத்தின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் கொந்தளிப்புகளுக்கும் அடித்தளத்தில் உள்ளன.

உலகப் பொருளாதாரத்தில் வெளிப்பட்ட தேக்கநிலை, செல்வங்கள் மலைக்கவைக்கும் வகையில் ஓரிடத்தில் குவிந்திருப்பது, சமூக சமத்துவமின்மை மற்றும் சமூக அவலத்தின் பெருக்கம், அத்துடன் அணு ஆயுத சக்திகள் பங்குபெறக்கூடிய ஒரு பேரழிவுகரமான போரின் துரிதமாகப் பெருகுகின்ற அபாயம் என உலக முதலாளித்துவ நெருக்கடியின் ஆழத்தைக் கொண்டு பார்த்தால், இந்தக் கேள்வி கண்டிப்பாக கேட்கப்பட்டாக வேண்டும்: ஏன் அங்கே சர்வதேச வெகுஜன புரட்சிகர முதலாளித்துவ-விரோத மற்றும் சோசலிச இயக்கம் இருக்கவில்லை? இன்னும் குறிப்பாய் கேட்பதானால், ஏறக்குறைய 25 ஆண்டுகால முடிவுகாணாத போருக்குப் பின்னரும் கூட, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக எந்த உலகளாவிய இயக்கமும் ஏன் இல்லை? வரலாற்றுரீதியாக முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்துடன் அடையாளப்படுத்திக் காணக்கூடிய, இடதுகளுக்கே அனுகூலமானதாக காணக்கூடிய நிலைமைகளின் கீழ், வலது-சாரிக் கட்சிகள் வலுப்பெறுவது எப்படி?

இவையெல்லாம் எளிதில் விடை கிடைத்து விடாத கேள்விகளாகும். புரட்சிகர தொழிலாளர் இயக்கத்தின் நீடித்த நெருக்கடியின் கீழாக புறநிலை மற்றும் அகநிலைக் காரணிகளின் ஒரு சிக்கலான இடைத்தொடர்பு இருக்கிறது. எப்படியிருந்தாலும், அரசியல் தலைமையின் —அல்லது இன்னும் துல்லியமாகச் சொன்னால், தவறான தலைமையின்— “அகநிலைக் காரணி”யானது தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர முன்னெடுப்புக்களுக்கு குழிபறிப்பதிலும் அழிப்பதிலும் ஒரு மையமான பாத்திரத்தை ஆற்றி வந்திருக்கிறது. ஸ்ராலினிசத்தால் உருவாக்கப்பட்ட புத்திஜீவித்தன மற்றும் அரசியல் நாசத்தை மிகைப்படுத்திக் கூறல் கடினமானதாகும். சோவியத் அதிகாரத்துவமும் அதன் சர்வதேச வலைப்பின்னலும் மேற்கொண்ட குற்றங்களாலும் அவலட்சணமான பொய்மைப்படுத்தல்களாலும் தொழிலாளர்கள் மற்றும் சோசலிச சார்புகொண்ட புத்திஜீவிகளின் பல தலைமுறையினர் நோக்குநிலை தவறினர் விரக்தியடைந்தனர்.

ஸ்ராலினால், ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது திணிக்கப்பட்ட நாசகரமான கொள்கைகள் முக்கிமாக பொறுப்பேற்கும் 1933 இல் ஜேர்மன் தொழிலாள வர்க்கம் தோற்கடிக்கப்பட்டு ஹிட்லர் அதிகாரத்துக்கு வந்தமை, மாஸ்கோ விசாரணகள் மற்றும் பாரிய பயங்கரம், ஸ்பானிய புரட்சி காட்டிக் கொடுக்கப்பட்டமை, 1939 இல் ஸ்ராலின்-ஹிட்லர் ஒப்பந்தம், லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டமை, பிரான்ஸ், இத்தாலி மற்றும் கிரீசில் தொழிலாள வர்க்கத்தின் போருக்குப் பிந்தைய புரட்சிகர எழுச்சி காட்டிக்கொடுக்கப்பட்டமை, கிழக்கு ஜேர்மனியிலும் ஹங்கேரியிலும் தொழிலாள வர்க்க எழுச்சிகள் குருதிகொட்ட ஒடுக்கப்பட்டமை, பிரான்சில் 1968 மே-ஜூன் காலத்தில் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் நடத்திய பொதுவேலைநிறுத்தம் காட்டிக்கொடுக்கப்பட்டமை, அல்லது அதற்கு இரண்டே மாதங்களின் பின்னால் 1968 ஆகஸ்டில் பிராக் வசந்தத்தை சோவியத் ஒடுக்கியமை, மற்றும் போலந்தின் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை ஒடுக்குவதற்காக இராணுவச் சட்டம் திணிக்கப்பட்டமை ஆகியவற்றின் பாதிப்புகளை ஒருவர் எவ்வாறு மதிப்பிட தொடங்க இயலும்? சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு என்பது அறுபதுக்கும் மேலான ஆண்டுகளாய் தத்துவார்த்தரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் மார்க்சிசம் இடைவிடாமல் பொய்மைப்படுத்தப்பட்டதன் உச்சகட்டமேயாகும். ஸ்ராலினிசத்தை மார்க்சிசத்துடன் அடையாளம் கண்டதுதான் இருபதாம் நூற்றாண்டின் மிகவும் நாசகரமான பொய்யாகும். மேலும், அதன் குற்றங்கள் குறித்த ஒரு முழுமையான கணிப்பெடுப்பில் ஸ்ராலினிசத்தில் வேர்கொண்ட மாவோயிசத்தின் கொள்கைகளும் நடைமுறைகளும் கண்டிப்பாக இடம்பெற்றாக வேண்டும்.

பிராங்க்பேர்ட் பள்ளி மற்றும் பின்நவீனத்துவம் இவை இரண்டுடனும் சம்பந்தப்பட்ட தத்துவார்த்த மற்றும் அரசியல் கருத்தாக்கங்களை உருவாக்குவதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒரு முக்கியமான பாத்திரத்தை வகித்திருக்கக் கூடிய குட்டி-முதலாளித்துவ தத்துவாசிரியர்களின் நோக்குநிலை பிறழ்வில் ஸ்ராலினிசத்தின் மரபு ஒரு மிகப்பெரும் காரணியாக இருந்திருக்கிறது என்பது கேள்விக்கிடமில்லாததாகும். அவர்களது கண்ணோட்டத்தில் ஒரு முக்கியமான கூறாக இருக்கக் கூடிய வரலாற்று அவநம்பிக்கையானது, ஸ்ராலினிச ஆட்சிகளால் இழைக்கப்பட்ட குற்றங்களின் பின்விளைவுகளுக்கான பொறுப்பை, தொழிலாள வர்க்கத்தின் மீது அவர்கள் சுமத்திக் கூறுவதுடன் நெருங்கிய தொடர்புடையதாகும்.

சோவியத் ஒன்றியத்தின் முடிவு, மற்றும் மாவோயிச ஆட்சியால் சீனாவில் முதலாளித்துவம் மறுஅறிமுகம் செய்யப்பட்டதையும் நாம் சேர்த்துக் கொண்டாக வேண்டும், இவை இரண்டுடன் கைகோர்த்து ஸ்ராலினிசத்தை (அதன் மாவோயிச அவதாரத்தையும் சேர்த்து) சோசலிசம் மற்றும் மார்க்சிசத்துடன் அடையாளப்படுத்தி வந்த, குறிப்பாக பல்கலைக்கழகங்களில் இருந்த, இடது புத்திஜீவித் தட்டின் ஒரு பரந்த பிரிவிடையே ஏறக்குறைய ஒரு ஒட்டுமொத்தமான அரசியல் உருக்குலைவும் நடந்தது. ஒரு அரசியல் இலக்காக சோசலிசத்தை அவர்கள் கைவிடுவதற்கு இது துரிதமாக இட்டுச்சென்றது. சோவியத் ஒன்றியத்தின் அழிவுக்கு ஸ்ராலினிசம் கொண்டிருந்த பொறுப்பினை ஆய்வுசெய்வதற்கு விருப்பமில்லாத நிலையில், 1991 மற்றும் அதன் பிந்தைய காலத்தின் நிகழ்வுகள் குட்டி-முதலாளித்துவ இடது புத்திஜீவிகளின் மார்க்சிச-விரோத தப்பெண்ணங்களையும் முகச்சுளிப்புகளையும் ஆழப்படுத்தியது.

கடந்த 25 ஆண்டுகளாய், மேலோட்டத்தில் தீவிரப்பட்ட மற்றும் அராஜகவாத வசனங்களைக் கொண்ட, ஆனால் மார்க்சிசத்தின் தத்துவார்த்த அடித்தளங்கள் மற்றும் புரட்சிகர முன்னோக்கில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டதாய் இருக்கும் “இடது” அரசியலாக முன்வைக்கப்பட்டிருந்ததானது, உலகின் பெரும்பகுதி முழுவதும் பல்கலைக்கழகங்களில் பிராங்க்பேர்ட் பள்ளி என்றும் பின்நவீனத்துவம் என்றும் பொதுவாக குறிப்பிடப்பட்டு வந்திருக்கின்ற இரண்டு மேலோங்கிய மெய்யியல் போக்குகளின் செல்வாக்கை பிரதிபலித்து வந்திருக்கிறது. இந்த இரண்டு போக்குகளும் ஒரேமாதிரியானவை அல்ல. அவற்றின் புத்திஜீவித, தத்துவார்த்த மற்றும் கலாச்சார மூலங்களில் கணிசமான வித்தியாசங்கள் இருக்கின்றன. இருந்தபோதிலும், அவை குறிப்பாக மார்க்சிசத்தை மறுப்பது மற்றும் மறுதலிப்பது என்ற அவற்றின் அரசியல் கண்ணோட்டம் மற்றும் இலக்கின் நிலைப்பாட்டில் இருந்து பார்த்தோமேயானால் நெருக்கமான தொடர்புடையவையாகி விடுகின்றன. வரலாறு பற்றிய சடவாதக் கருத்தாக்கத்திலிருந்து தேற்றம் செய்யப்பட்ட மெய்யியல் சடவாதம் (philosophical materialism) என்ற மார்க்சிசத்தின் அத்தியாவசியமான கூறினை இப்போக்குகள் சாபக்கேடானதாக கருதுகின்றன.

அத்தனை மெய்யியல் “சிந்தனைப் பள்ளிகளையும்” ஒரு கடுமையான தத்துவார்த்த பகுப்பாய்வு செய்தோமென்றால் அவற்றின் சிக்கலான புத்திஜீவித உறவுமுறை வெளிப்பட்டு விடும். நிச்சயமாக, பிராங்பேர்ட் பள்ளியும் பின்நவீனத்துவமும் ஷொப்பென்ஹவர் மற்றும் நீட்சேயின் கருத்துவாத பகுத்தறியாமையில் ஆழமாகப் பிணைந்துள்ளன. பிற்போக்குவாதத்தின் ஆதரவாளரான ஹைடெக்கரின் செல்வாக்கு பிராங்பேர்ட் பள்ளியின் குறிப்பிட்ட சீடர்களது எழுத்துக்களிலும் —குறிப்பாக மார்க்கூஸ இன் எழுத்துகளில்— மற்றும் இன்னும் பரவலாக பின்நவீனத்துவவாதிகள் மத்தியிலும் நிச்சயமாக இருக்கக் காணலாம்.

ஆயினும், பிராங்க்பேர்ட் பள்ளி மற்றும் பின்நவீனத்துவம் ஆகிய இரண்டையும் மதிப்பீடு செய்கையில், பியர்-ஜோசப் புருடோனின் பொருளாதார தத்துவங்கள் மீதான மார்க்சின் மதிப்பீட்டை நினைவுகூர்வது பயன்தரக் கூடியதாகும். 1846 இல் அனென்கோவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் மார்க்ஸ் புருடோனின் வறுமையின் மெய்யியல் (Philosophy of Poverty) மீது ஒரு உலுக்கும் தீர்ப்பை வழங்கினார். மார்க்ஸ் எழுதினார், “திரு. புருடோன், அரசியல் பொருளாதாரம் குறித்த ஒரு பிழையான விமர்சனத்தை வழங்கியிருப்பதற்கு காரணம் அவரது மெய்யியலே அபத்தமானது என்பதால் அல்ல. அவர் ஒரு அபத்தமான மெய்யியலை உருவாக்குகிறார், ஏனென்றால் அவர் நடப்பு சமூக நிலைமைகளை, ஃபூரியே (Fourier) இடம் இருந்து இரவல் பெற்று எடுத்தாண்ட மற்ற நிறைய சொற்களைப் போலவே இதற்காக பயன்படுத்திய சொல்லைக் கொண்டு கூறுவதானால், அவற்றின் தொடர்புகளை புரிந்து கொண்டிருக்கவில்லை.” [7]

மார்க்சின் உள்ளடக்கத்தில் விடயங்களை வகுத்துக்கொள்வோமாயின், பின்நவீனத்துவவாதிகளும் பிராங்க்பேர்ட் பள்ளியின் சீடர்களும் ஒரு அபத்தமான அரசியலை முன்னெடுக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் அவர்களது மெய்யியல் அபத்தமானது என்பதால் அல்ல. அதனை விடவும், அவர்களது மெய்யியலின் அப்பட்டமான அபத்தங்கள் அவர்களது பிற்போக்குத்தனமான குட்டி-முதலாளித்துவ அரசியலில் இருந்து எழுகின்றன என்பதே பொருத்தமாகும். மார்க்சிசத்தையும் தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட சோசலிசப் புரட்சி முன்னோக்கையும் நிராகரிப்பதுதான் இவற்றின் தத்துவங்களது அரசியல் உந்துசக்தியின் அடித்தளமாக அமைந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளாமல், ஒருவர் பிராங்க்பேர்ட் பள்ளியையோ அல்லது பின்நவீனத்துவத்தையோ புரிந்து கொள்ளவே முடியாது.

பின்நவீனத்துவ தத்துவம், மிகக்குறிப்பாக மார்க்சிசம் மற்றும் பாட்டாளி வர்க்கப் புரட்சி முன்னோக்கிற்கான ஒரு மறுதலிப்பாகவே எழுந்தது. அதன் தோற்றத்தில் பிரான்சுவா லியோத்தார் (François Lyotard) வகித்த ஸ்தாபகப் பாத்திரம் நன்கறிந்தது. அவர், “மிக அதீதமாக எளிமைப்படுத்துவதென்றால், பெரும் கதையாடல்களை (metanarratives) நோக்கிய நம்பவியலாத தன்மை என்றே நான் பின்நவீனத்தை வரையறுக்கிறேன்” என்ற வாசகத்தை எழுதியவர். சோசலிசப் புரட்சிக்கான மார்க்சிச முன்னோக்கை முன்வைத்தவர்களை ஒதுக்கித்தள்ளவதே “பெரும் கதையாடல்கள்” ஆகும். இவ்வாறாக, கல்வித்துறைசார் வட்டாரங்களில் “பின்நவீனத்துவம்” ஆக அறியப்படுவதை, “கல்வித்துறைசார் பின்-மார்க்சிசம்” ஆக இன்னும் துல்லியமாக வரையறை செய்யப்பட முடியும்.

பிரான்சுவா லியோத்தார், பிரான்சில் Socialisme ou Barbarie என்றதலைப்பிலான ஒரு சிற்றிதழை வெளியிட்டு வந்த முன்னாள்-ட்ரொட்ஸ்கிச புத்திஜீவிகளது வட்டம் ஒன்றில் அங்கத்தவராக இருந்தார். இந்த சிற்றிதழின் மூலங்கள் ட்ரொஸ்கிசத்தை அவை நிராகரித்ததில் தான் அமைந்திருந்தன.குறிப்பாக, Socialisme ou Barbarie சோவியத் ஒன்றியத்தின் சமூகக் கட்டமைப்பு குறித்த ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வை, குறிப்பாக ஒரு உருக்குலைந்த தொழிலாளர் அரசாக சோவியத் ஒன்றியத்தை அவர் வரையறை செய்ததை, எதிர்த்தது. ட்ரொட்ஸ்கியின் காட்டிக் கொட்டுக்கப்பட்ட புரட்சி என்ற நூல் அக்டோபர் புரட்சி, அதன் அரசியல் பரிணாமவளர்ச்சி, மற்றும் மனித குலத்தின் வருங்கால வரலாற்று அபிவிருத்தியுடனான அதன் உறவு ஆகியவை குறித்த “பெரும் கதையாடலை” முன்வைத்ததால் லியோத்தார் அதை நிராகரித்தார். சோவியத் ஒன்றியத்தை ஆட்சி செய்த அதிகாரத்துவமானது ஒரு சுயாதீனமான அரசியல் பாத்திரம் இல்லாத, அத்துடன் ’மீளெழுச்சி கண்ட சோவியத் தொழிலாள வர்க்கத்தால் தூக்கியெறியப்பட்டாக வேண்டும் இல்லையானால் முதலாளித்துவத்தின் மீட்சிக்கு அது தலைமை தாங்கும்’ என்கிறபடியான ஒரு ஒட்டுண்ணி சாதி என்ற ட்ரொட்ஸ்கி கூறியதைப் போலல்லாது அது ஒரு புதிய வகை ஆளும் வர்க்கமாக இருந்தது என்று Socialisme ou Barbarie வலியுறுத்தியது.

மார்க்சிசத்தால் தொழிலாள வர்க்கத்திற்கு கொடுக்கப்பட்டிருந்த புரட்சிகரப் பாத்திரம் மறுதலிக்கப்பட்டிருந்தது என்பதுதான் அதன் தத்துவத்தில் இருந்து பிறந்த அரசியல் முடிவாகும். தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ வர்க்கத்தை தூக்கிவீச முடிந்த இடங்களிலும் கூட, அது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளும் திறனற்றதாக நிரூபணமாகியது. ஒரு புதிய சுரண்டல் வர்க்கத்தின் எழுச்சிக்குக் களம் தயாரித்துத் தருவதற்கு அதிகமாக அதனால் வேறெதுவும் செய்ய முடியாதிருந்தது. இவ்வாறாக மார்க்சிச “பெரும் கதையாடல்கள்” செல்லுபடியாகாத ஒன்று, அது ஆரம்பத்தில் இருந்தே செல்லுபடியாகாததாகவே இருந்தது. வரலாறு குறித்த சடவாத கருத்தாக்கம் என்பது கற்பனைக்கதையே அன்றி வேறல்ல, புறநிலை உண்மையாக அது கூறிக்கொள்வது ஒதுக்கப்பட வேண்டியதாகும். ”தீவிரப்பட்ட மார்க்சிசத்தின், ’நம்முடைய’ என்பதில் தொடங்குகின்ற (அல்லது முடிகின்ற) விடுதலை குறித்த பெரும் கதைகள் எல்லாம் அவற்றின் புத்திஜீவித அங்கீகரிப்பையும் அவற்றின் சாரத்தையும் தொலைத்து விட்டிருக்கின்றன என்பதான சான்றுக்கு” சிந்தனை வளைந்துகொடுத்தாக வேண்டும் என்று லியோத்தார் எழுதினார்.

மார்க்சிசத்தின் “பெரும் கதையாடல்களை” நிராகரித்து விட்ட பின்னர், பின்-மார்க்சிசத்தின் தீர்க்கதரிசிகள் அதனிடத்தில் எதனை அமர்த்துவதற்கு முன்மொழிகிறார்கள்? திறம்பட்ட சமூக நடவடிக்கைக்கான போதுமானதொரு தத்துவார்த்த அடித்தளமாக சேவை செய்யத்தக்க, எந்த பெரும் கதையாடலும் அல்லாத என்னவொன்றை அவர்கள் அபிவிருத்தி செய்திருக்கிறார்கள்? முதலாளித்துவ-எதிர்ப்பு நடவடிக்கைக்கும், புரட்சிகர மாற்றத்திற்குமான ஒரு திறம்பட்ட சமூக சக்தியாக தொழிலாள வர்க்கத்தின் திவால்நிலையை ஸ்தாபித்து விட்டதாக கூறிவிட்டு, முற்போக்கான அரசியல் போராட்டத்திற்கான எந்த மாற்று அடிப்படையை இந்த பின்-மார்க்சிசவாதிகள் கண்டுபிடித்துவிட்டிருக்கின்றனர்? பதில் தேடி அவர்களது சமீபத்திய எழுத்துக்களை சல்லடை போட்டுப் பார்ப்போம்.

அலன் பாடியு (Alain Badiou) என்பவர் நன்கறிந்த சமகால பிரெஞ்சு மெய்யியலாளர்களில் ஒருவர். அவர் தனது நெடிய கல்வித்துறை வாழ்க்கையின் பாதையில், மிஷேல் ஃபூக்கோ (Michel Foucault), ஜீல் டுலூஸ் (Gilles Deleuze) மற்றும் லியோத்தார் ஆகியோருடன் நெருக்கமாய் தொடர்பு கொண்டிருந்தார். பின்நவீனத்துவத்தின் குறிப்பிட்ட கூறுகள் தொடர்பாக விமர்சனப் பார்வையை வெளிப்படுத்தினாலும், அதுவும் தவிர, புறநிலை உண்மை எனும் கருத்தாக்கத்தை முன்வைப்பதாக கூறிக் கொண்டாலும், பாடியு இருபதாம் நூற்றாண்டின் மார்க்சிசக் கருத்தாக்கங்கள் அனைத்தின் பொருத்தமற்ற தன்மையையும் பிரகடனம் செய்திருக்கிறார்.

மார்க்சிசம், தொழிலாளர் இயக்கம், பரந்துபட்ட ஜனநாயகம், லெனினிசம், பாட்டாளி வர்க்க கட்சி, சோசலிச அரசு ஆகிய இருபதாம் நூற்றாண்டின் இந்த கண்டுபிடிப்புகள் அனைத்துமே இனியும் நமக்கு உண்மையாகவே பயனில்லாது போய்விட்டன. தத்துவார்த்த மட்டத்தில் அவை நிச்சயமாக ஆய்வுக்கும் பரிசீலனைக்கும் தகுதியானவையே; ஆனால் நடைமுறை அரசியலை பொறுத்தமட்டில் அவை இயங்கமுடியாதவையாகி விட்டன… [19 ஆம் நூற்றாண்டு] இயக்கமும் [20 ஆம் நூற்றாண்டு] கட்சியும் கம்யூனிச அனுமானத்தின் குறிப்பான வழிவகைகளாய் இருந்தன; மீண்டும் அவற்றுக்கு திரும்புவது சாத்தியமில்லாததாகும்.” [8]

இன்னொரு கட்டுரையில் பாடியு எழுதுகிறார்:

ஆம், சுற்றிவளைக்காமல் ஒப்புக்கொள்வோம்: மார்க்சிசம் நெருக்கடியில் இருக்கிறது; மார்க்சிசம் அணுத்துகள்களாகிக் கலந்து விட்டிருக்கிறது. 1960களின் உத்வேகம் மற்றும் படைப்புத்திறன்பெற்ற உடைவுகளைக் கடந்து, தேசிய விடுதலைப் போராட்டங்கள் மற்றும் கலாச்சாரப் புரட்சி ஆகியவற்றின் பின்னர், நெருக்கடி மற்றும் உடனடிப் போர் அச்சுறுத்தலின் காலங்களில் நாம் மரபாக கொண்டுசெல்வது, அழிவுகளும் உயிர்தப்புதல்களும் கொண்ட ஒரு முற்றுத்தெரியாத வலைப்பின்னலுக்குள் சிக்கிக் கொண்ட சிந்தனைகளினதும் மற்றும் நடவடிக்கைகளினதும் ஒரு குறுகிய மற்றும் முற்றுப்பெறாத ஒன்றிணைப்பு மட்டுமே. [9]

இந்த பின்-மார்க்சிச பேராசிரியர் எதை மார்க்சிசத்திற்கான மாற்றாக முன்வைக்கிறார்? நிராகரிக்கப்பட்ட மரபுவழி மார்க்சிசத்தின் இடத்தில் பிரதியிடுவதற்கென எந்த மாற்றும் கண்டறியப்பட்டிருக்கவில்லை என்பதை மரியாதைக்குரிய ஒரு வெளிப்படைத்தன்மையுடன் பாடியு ஒப்புக் கொண்டிருக்கிறார். “நமது சமகால கையலாகாத்தனம்” என்ற தலைப்பை தாங்கி நிற்கின்ற ஒரு ஒப்புதல் கட்டுரையில் பாடியு பின்வருமாறு எழுதுகிறார்:

“நாம் இன்று கண்டு வருவதைக் குறித்து நான் என்ன நினைக்கிறேன் என்றால்… இயக்க செயல்பாட்டாளர்கள் நமது இன்றைய சூநிலைகளைக் குறித்து சிந்திப்பதற்கும் அவற்றை மாற்றியமைப்பதற்கும் பயன்படுத்த முயலுகின்ற பெரும்பான்மையான அரசியல் வகைகள், உள்ளபடியே, பெரும்பாலும் செயலிழந்தவையாக இருக்கின்றன.” [10]

பிரெடரிக் ஜேம்சன் பல தசாப்தங்களாக செவ்வியல் மார்க்சிசத்தின் ஒரு தீர்மானமான விமர்சகராக இருந்து வருபவர். வரலாற்று சடவாதம் இறுகிப் போயிருப்பதாகக் கூறி அதனிடத்தில் பிரதியிட ஒரு மாற்றினைத் தேடி அவரும் பின்-மார்க்சிச அகநிலைவாதத்தின் ஏதோவொரு கூறினை இழுத்துப் பார்க்கிறார். பேராசிரியர் ஜேம்சன் என்ன அரசியல் முடிவுகளுக்கு வந்துசேர்ந்திருக்கிறார்? அவரது சமீபத்திய புத்தகத்தில், அவர் ஒரு குறிப்பிடத்தக்க ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார்:

ஒருகாலத்தில் இடதுகளிடம் புரட்சி என்ற ஒரு அரசியல் வேலைத்திட்டம் இருந்தது. இனியும் யாரும் அதை நம்பிக் கொண்டிருப்பதாய் தெரியவில்லை, அதைக் கொண்டுவருவதாக இருந்த முகமை மறைந்து விட்டிருப்பது பகுதிக் காரணம், அது எந்த அமைப்புமுறையை பிரதியீடு செய்வதாக இருந்ததோ அதை மாற்றியமைப்பதை கற்பனை செய்யவும் இயலாத அளவுக்கு சகலவியாபகமாகி விட்டதென்பது இன்னொரு பகுதிக் காரணம், அத்துடன் புரட்சியின் தொடர்புபட்ட அந்த மொழி அதன் ஸ்தாபகத் தந்தைகளின் அளவுக்கு பழைய-நாகரிகத்தினுடையதாகவும் பழயதாகவும் ஆகி விட்டிருப்பது இன்னுமொரு பாதிக் காரணம். ஒருவர் ஒருமுறை சொன்னார், முதலாளித்துவத்தின் முடிவைக் கற்பனை செய்ய முடிவதைக் காட்டிலூம் உலகத்தின் முடிவைக் கற்பனை செய்வது சுலபம் என்று. அத்துடன் முதலாளித்துவத்தைப் புரட்சி தூக்கியெறிவதான சிந்தனை எல்லாம் மறைந்து விட்டதாகத் தோன்றுகிறது.[11]

பிராங்க்பேர்ட்டிற்கு வந்து, குறைந்தபட்சம் நான் பிராங்க்பேர்ட் பள்ளியின் சமகாலப் பிரதிநிதி ஒருவரது கருத்தையேனும் இந்த உரையில் மேற்கோளிட்டுக் கூறாமல் இருக்க முடியாது. பேராசிரியர் அக்சல் ஹொனெத் எழுதிய சோசலிசம் என்னும் கருத்து (Die Idee des Sozialismus) என்ற அவரது சமீபத்திய புத்தகம் குறித்த அண்மைய விவாதம் ஒன்றில், அவரிடம் கேட்கப்பட்டது: “சோசலிச சிந்தனைகள் மீண்டும் ஜேர்மனியில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்க முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?”

அதற்கு அவர் கூறிய பதில்:

நமது சமகால அனுபவங்களுடன் ஏதொவொரு விதத்தில் தொடர்புபடுகின்ற ஒரு வடிவத்தை அது எடுக்கின்ற பட்சத்தில்தான் சோசலிசத்துக்கு வாய்ப்புக் கிட்டும் என்று நான் நம்புகிறேன். அது நடக்க வேண்டும் என்றால், பாட்டாளி வர்க்கம் ஒரு புரட்சிகர அகநிலை என்ற கருத்தாக்கம், முன்னேற்றம் என்பது ஒரு விதிகளால்-ஆளப்படுகின்ற நிகழ்முறையில் இருந்து எழுவதாகச் சொல்வது, மற்றும் நமது சமூகத்தின் உருமாற்றம் என்பது பொருளாதாரத் தன்மை கொண்ட மாற்றங்களின் மீதுதான் பிரதானமாக சார்ந்திருப்பதாகக் கூறுவது போன்ற அந்தப்பழைய மற்றும் காலத்திற்கு ஒவ்வாத சோசலிசக் கூறுகள் பலவற்றையும் நாம் தூக்கிவீச வேண்டும். அதற்குப் பின்னர் இத்தகைய ஒரு திருத்தப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட சோசலிசமானது மக்களின் ஒரு பெரும்பகுதியின் இதயங்களையும் உணர்வுகளையும் அசைப்பதற்கு நாம் காத்திருக்க வேண்டும், நம்பிக்கை கொள்ள வேண்டும்.

ஹொனெத்தின் பதிலானது, அதன் விதத்தில், பிராங்பேர்ட் பள்ளியின் ஆரம்ப நாட்கள் தொட்டே அதன் குணாம்சமாக விளங்கி வருகின்ற அடிப்படையான பழமைவாத, ஆழமான அவநம்பிக்கையுடைய மற்றும் விரக்தியான அதன் கண்ணோட்டத்தின் ஒரு சுருக்கமான வெளிப்பாடாய் இருக்கிறது. இந்த குணாம்சங்கள் மார்க்சிசத்திற்கு, அதாவது தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரம் குறித்த அதன் வலியுறுத்தலுக்கு பிராங்பேர்ட் பள்ளி கொண்டிருக்கும் மையமான ஆட்சேபத்தில் வேரூன்றியவையாகும். ஹொனெத் மற்றும் அவர் பின்பற்றுகின்ற “பள்ளி”யைப் பொறுத்தவரையிலும், வர்க்கப் போராட்டம் என்பது ஒரு சாபக்கேடு அல்லது அனுமதிக்கத்தகாதது, அத்துடன் உற்பத்தி சாதனங்களின் தனியார் உடமையை ஒழிக்கும் முனைப்பை சோசலிசம் விட்டொழிக்க வேண்டும். ஆக, சோசலிசம் ஒரு கருத்தாக மட்டுமே உயிர்வாழலாம்.

நான் தேர்ந்தெடுத்துக் கூறிய மேற்கோள்கள் போலி-இடது மார்க்சிச-விரோதிகளால் உருவாக்கப்பட்டிருக்கும் ஏராளமான தொகுதிகளில் காணப்படுவதை பிரதிநிதித்துவம் செய்பவை. ஆனால், பின்நவீனத்துவத்தின் பல வகைகள் மற்றும் பிராங்பேர்ட் பள்ளியின் எஞ்சியவைகளின் சீடர்களது எழுத்துக்களில், முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான புரட்சிகரப் போராட்டம் தனக்கு அடித்தளமாகக் கொள்ளக்கூடிய வேலைத்திட்டம் எதனையும் மட்டும் கண்டுவிடவே முடியாது.

மார்க்சிசத்திற்கான ஒரு மாற்றீட்டை தேடுவது வீண் முயற்சி. இந்த மகிழ்ச்சியற்ற மற்றும் உருப்படாத முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பேராசிரியர்கள், வர்க்கப் போராட்டம் இல்லாத ஒரு புரட்சிக்கான தத்துவத்தையும், முதலாளித்துவத்தின் மீது கை வைக்காத ஒரு சோசலிச வேலைத்திட்டத்தையும் எதிர்பார்க்கின்றனர். புத்திஜீவித்தன ரீதியாய் தவறான நம்பிக்கை மற்றும் அரைவேக்காட்டுத்தனத்தின் அடிப்படையில் மட்டுமே இத்தகையதொரு அபத்தமான திட்டத்திற்கு தத்துவார்த்த நியாயம் கற்பிக்கப்பட முடியும்.

நாம் புரட்சிகரமான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். போருக்கு வழிவகுக்கும் அதே முரண்பாடுகள் சோசலிசப் புரட்சிக்கும் களம் தயாரிக்கவும் செய்கின்றன. மார்க்ஸ் சிந்தித்தவாறான சோசலிசப் புரட்சிக்கான அகநிலை முகமை எல்லாம் மறைந்து விட்டதாகப் பிரகடனம் செய்கின்ற இந்த அகநிலைவவாதிகள் மற்றும் பகுத்தறியாமைவாதிகள் கூறுவதற்கு முரண்பட்ட விதத்தில், கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் முதலாளித்துவத்தின் உலகளாவிய அபிவிருத்தியானது, தொழிலாள வர்க்கத்தின் சாமானிய படையணியை பரந்த அளவில் விரிவுபடுத்தியிருக்கிறது. இதுவே மார்க்சிஸ்டுகள் நோக்குகின்ற அடிப்படையான சக்தியாகும். தொழிலாள வர்க்கத்தின் எதிர்வரக் கூடிய வெகுஜன இயக்கத்தை அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதை நோக்கிச் செலுத்தக்கூடிய முன்னேறிய தொழிலாளர்களின் ஒரு முன்னணிப்படையை அரசியல்ரீதியாக தயாரிப்பு செய்வதே மார்க்சிஸ்டுகள் முகம்கொடுக்கின்ற மாபெரும் சவாலாகும். இந்தத் தயாரிப்பில் என்ன அடங்கியிருக்கிறது?

லெனின், 1908 இல் எழுதிய, சடவாதமும் அனுபவவாத-விமர்சனமும் என்ற தனது சிறப்பு வாய்ந்த மெய்யியல் படைப்பில், சமூக இருப்பின் பரிணாம வளர்ச்சியை தீர்மானிக்கும் பொருளாதார விதிகளது “புறநிலை தர்க்க”த்தை மார்க்சிசம் கண்டறிந்திருந்தது என்பதை விளக்கினார்.

பொருளாதார பரிணாம வளர்ச்சியின் (சமூக வாழ்வின் பரிணாம வளர்ச்சி) இந்த புறநிலை தர்க்கத்தை, அதன் பொதுவான மற்றும் அடிப்படையான அம்சங்களில், புரிந்துகொள்வது மனிதகுலத்தின் மிக உயர்ந்த பணியாகும். ஏனென்றால் அப்போது தான் அதற்குத் தக்கபடி ஒருவரின் சமூக நனவையும் அத்தனை முதலாளித்துவ நாடுகளில் இருக்கக் கூடிய முன்னேறிய வர்க்கங்களின் நனவையும் முடிந்த அளவுக்கு திட்டவட்டமான, தெளிவான மற்றும் இன்றியமையாத வகையில் தகவமைத்துக் கொள்வது சாத்தியமாகக் கூடும்.” [12]

1914 இல், அதாவது சடவாதமும் அனுபவவாத-விமர்சனமும் வெளியாகி ஐந்தாண்டுகளுக்கு பின்னர், முதலாம் உலகப் போர் தொடங்கியது. ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் இரண்டாம் அகிலத்தின் காட்டிக்கொடுப்புக்கு முகம்கொடுத்த நிலையில், லெனின் ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் இருந்த புரட்சிகர சர்வதேசியவாதிகளை அணிதிரட்டுவதற்கு முனைந்தார். காவுட்ஸ்கி போன்று போரின் புறநிலைக் காரணங்களை மறைப்பதற்கு முனைந்த ஏகாதிபத்தியத்தின் வக்காலத்துவாதிகளுக்கு எதிராக, 1914 மற்றும் 1917க்கு இடையிலான லெனினின் தத்துவார்த்த வேலையானது, ஏகாதிபத்தியப் போர் மற்றும் இரண்டாம் அகிலத்திற்குள்ளாக சந்தர்ப்பவாதத்தின் வளர்ச்சி ஆகியவற்றின் புறநிலைக் காரணங்களை வெளிக்கொணர்ந்தது. ஏகாதிபத்தியம் குறித்த தனது மிகச்சிறந்த பகுப்பாய்வை எழுதுகையில், போரின் தர்க்கத்தை அம்பலப்படுத்துவதும், அதன்மூலமாக ரஷ்ய மற்றும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் நனவையும் நடைமுறையையும் புரட்சிக்கு இட்டுச் செல்லக் கூடிய புறநிலை நிகழ்ச்சிப்போக்குடன் ஒன்றுடன் ஒன்று இணைக்கும் சாத்தியத்தை ஸ்தாபிப்பதும் லெனினின் நோக்கமாய் இருந்தது. புறநிலை யதார்த்தத்தையும் தொழிலாள வர்க்கத்தின் சமூக நனவையும் ஒன்றுடன் ஒன்று இணைத்தது 1917 அக்டோபரில் ரஷ்யத் தொழிலாள வர்க்கம் ஆட்சியை வென்றெடுத்ததில் உணரப்பட்டது.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்ததை விடவும் உலகம் கூடுதல் சிக்கலானதாக ஆகியிருக்கிறது. ஆனாலும் அடிப்படையான பணி அதேதான்: சமூக சிந்தனையானது, யதார்த்தத்துடன் இணைக்கப்பட்டாக வேண்டும். தொழிலாள வர்க்கம் நடப்பு நெருக்கடியின் தர்க்கத்தைப் புரிந்து கொண்டு புறநிலை அவசியத்துக்குத் தக்கபடி தனது நடைமுறைகளை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். அத்தகைய ஒரு புரிதலானது மார்க்சிசத்தின் அடிப்படையில் மட்டுமே சாத்தியமானது ஆகும்.

***

Footnotes:

[1] “What Is National Socialism?” in The Struggle Against Fascism in Germany, by Leon Trotsky (New York: Pathfinder, 1971), p. 525

[2] Foreign Affairs, August 1, 2016, accessed at: https://www.foreignaffairs.com/print1117930

[3] The Future of the Army, by David Barno and Nora Bensahel (The Atlantic Council, September 2016), p. 7. Entire document available at: http://www.atlanticcouncil.org/publications/reports/the-future-of-the-army

[4] Ibid, pp. 8–9

[5] Ibid, p. 31

[6] “What Makes a Great Power War Possible?” by Michael Kofman and Andrei Sushenstov, Russia in Global affairs, June 17, 2016

[7] https://www.marxists.org/archive/marx/works/download/Marx_Engels_Correspondence.pdf

[8] Published in NLR, 49 (2008): 2008. Cited in The Actuality of Communism, by Bruno Bosteels (London: Verso, 2011), pp. 14–15

[9] Cited by Bruno Bosteels in Badiou and Politics

[10] Published in Radical Philosophy, September/October 2013, p. 44

[11] An American Utopia: Dual Power and the Universal Army

[12] Lenin Collected Works, Volume 14 (Moscow: Progress Publishers, 1978), p. 325

Loading