முன்னோக்கு

பிடெல் காஸ்ட்ரோவின் அரசியல் மரபியம்

மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

20 ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய ஆளுமைகளில் ஒருவரான பிடெல் காஸ்ட்ரோ மறைந்து விட்டார் என வெள்ளியன்று இரவு வந்த அறிவிப்பானது, அவரது முரண்பாடான வரலாற்று மரபுவழி குறித்த கடுமையான சர்ச்சைகளைப் பிரதிபலிக்கும் விதமாக பல்வேறு விதமான பொது எதிர்வினைகளைத் தூண்டியிருக்கிறது.

கியூபாவின் அரசியல் வாழ்வின் மீது அவர் செலுத்திய சவாலற்ற அதிகாரத்தின் கடிவாளத்தை ஒப்படைத்து விட்ட கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலத்திற்குப் பின்னர், அவரது 90வது வயதில், அவரது மரணம் நிகழ்ந்துள்ளது. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலத்திற்கு அவர் “ஆயுள்காலத்திற்கான ஜனாதிபதி”யாக, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் செயலராக அத்துடன் கியூப இராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருந்தார், இவற்றில் பெரும்பான்மையான அதிகாரம் வம்சாவளி முறை போன்று இப்போது 85 வயதாகும் அவரது தம்பி ராவுல் இன் கரங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது.

ஐசனோவர் தொடங்கி ஜோர்ஜ் W. புஷ் வரையிலும் 10 அமெரிக்க ஜனாதிபதிகளை அவரது ஆட்சி கண்டிருந்தது, இவர்கள் அனைவருமே அவரது ஆட்சியைத் தூக்கிவீசுவதற்கு உறுதிப்பாடு கொண்டிருந்தனர், 1961 இல் சிஐஏ ஆல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Pigs விரிகுடா ஊடுருவல், கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான கொலைமுயற்சிகள், அத்துடன் உலக வரலாற்றின் மிக நீண்ட பொருளாதாரத் தடை நடவடிக்கை ஆகியவையும் இந்த நடவடிக்கைகளில் இடம்பெற்றிருந்தன.

அவரது அரசியல் வாழ்க்கையின் நீண்டகாலம் பல வகைகளிலும் மலைப்பூட்டுவதாகும். அவரது ஆட்சியில் இலத்தீன் அமெரிக்க சர்வாதிகாரிகளின் அம்சங்களும் இருந்தன என்பதோடு அரசியல் எதிரிகளாகவும் போட்டியாளர்களாகவும் தென்பட்டவர்கள் விடயத்தில் அவர் தாட்சண்யமற்றவராக இருந்தார் என்பதில் சந்தேகமில்லை. அதேநேரத்தில், அவரிடம் ஒரு தனிப்பட்ட ஈர்ப்பும், குறிப்பிட்ட மட்டத்திலான மனிதத்தின் ஒரு வீச்சும் இருந்தது மறுக்கவியலாததாகும், இவை கியூபாவின் ஒடுக்கப்பட்ட மக்களிடம் இருந்தும் சர்வதேச அளவில் புத்திஜீவிகள் மற்றும் தீவிரப்பட்ட இளைஞர்களது பரந்த அடுக்குகளிடம் இருந்தும் அவருக்கு ஆதரவைக் கொண்டு வந்தன.

காஸ்ட்ரோவின் மரணத்திற்கு அமெரிக்க ஊடகங்களின் எதிர்வினை எதிர்பார்த்த வகையிலேயே இருந்தது. “கொடும் சர்வாதிகாரி” மீதான தலையங்கக் கண்டனங்களுடன் சேர்ந்து, கியூபாவில் பரந்த மக்களிடையே இருந்த உண்மையான துக்கத்தைக் காட்டுவதை விடவும் அதிகமாய் கியூபாவில் இருந்து நாடு கடத்தப்பட்டிருந்த சில நூறு வலது-சாரிகள் மியாமியின் லிட்டில் ஹவானா வீதிகளில் நடனமாடியதைக் காட்டுவதற்கே அதிகமான நேரம் செலவிட்ட கலகமூட்டல் செய்தியளிப்பு முறையும் கைகோர்த்திருந்தது.

1959 இல் அவர் தலைமையிலான புரட்சியால் கிளர்ந்திருந்த நாட்டின் மிகவும் வறுமைப்பட்ட அடுக்குகளின் சமூக நிலைமைகளில் மறுக்கவியலாத மேம்பாடுகளை ஏற்படுத்தியமைக்கான ஆதரவைப் பிரதிபலிக்கும் விதமாக, தீவில் அதிகாரத்தை விட்டு விலகிய பத்து வருடங்களுக்குப் பின்னரும் காஸ்ட்ரோ, சற்றுக் குறைந்திருந்தது என்றாலும், கணிசமான ஒரு வெகுஜன அடித்தளத்தைப் பராமரித்திருந்தார்.

கியூபாவில் இருக்கும் நிலைமைகளை, அதன் அருகிலிருக்கக் கூடிய, ஏறக்குறைய அதே அளவு மக்கள்தொகையும் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் கொண்ட டொமினிக்கன் குடியரசில் நிலவுகின்ற நிலைமைகளை ஒருவர் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த மாற்றங்களின் குறியீடுகள் தெளிவாகப் புலப்படும். கியூபாவில் கொலை விகிதம் டொமினிக்கன் குடியரசில் இருப்பதைக் காட்டிலும் நான்கில் ஒரு பங்கிற்கும் குறைவானதாகும்; எதிர்பார்ப்பு ஆயுள் சராசரி ஆறு வருடங்கள் அதிகம் (79 vs 73), அத்துடன் கியூபாவின் குழந்தை இறப்பு விகிதம் டொமினிக்கன் குடியரசைக் காட்டிலும் சுமார் ஆறில் ஒரு பங்கு அளவு தான்.

அரசியல் ஒடுக்குமுறைக்காக காஸ்ட்ரோ மீது கண்டனம் செய்வதைக் கொண்டு அமெரிக்க ஊடகங்களில் வந்த வருணனைகள் வரலாற்று உள்ளடக்கத்தில் நிறுத்திப் பார்க்கப்படுவதற்குத் தகுதியானவையாகும். எப்படிப் பார்த்தாலும், அமெரிக்கா ஒரு நூற்றாண்டு காலத்தில் இலத்தீன் அமெரிக்காவில் மட்டும் நூறாயிரக்கணக்கானோரின் மரணங்களுக்குப் பொறுப்பான கணக்கற்ற சர்வாதிகாரங்களை ஆதரித்திருக்கிறது. காஸ்ட்ரோவும் காஸ்ட்ரோயிசமும் இறுதியில் அந்த கசப்பான மற்றும் குருதிபாய்ந்த வரலாறின் விளைபொருளாகவே இருந்தனர்.

காஸ்ட்ரோவின் சொந்த அரசியல் பரிணாம வளர்ச்சியும் கூட, 1898 ஸ்பெயின்-அமெரிக்கப் போரின் ஒரு விளைவாக ஸ்பெயினின் காலனியாக இருந்ததில் இருந்து அமெரிக்காவின் ஒரு அரைக்காலனியாக இத்தீவு உருமாற்றம் கண்டதற்குப் பின்னர் பல தசாப்த காலம் அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திய கொள்ளையாலும் ஒடுக்குமுறையாலுமே உருக்கொடுக்கப்பட்டிருந்தது. பிளாட் திருத்தம் (Platt Amendment) என்று அழைக்கப்பட்டதான ஒன்றின் கீழ், அவசியமான சமயங்களில் கியூப விவகாரங்களில் தலையீடு செய்வதற்கான ”உரிமை”யை அமெரிக்கா தனக்குத் தானே உத்தரவாதமளித்துக் கொண்டதோடு, குவாண்டனாமோ விரிகுடாவை தனது இராணுவத் தளமாக சேவை செய்வதற்காக பிடித்து வைத்துக் கொண்டது.

மெரிக்க-ஆதரவுடனானபாடிஸ்ட்டாசர்வாதிகாரம்

புரட்சிக்கு முன்பாக, ஹவானாவில் இருந்த அமெரிக்காவின் ஆளாக ஃபுல்ஜென்சியோ பாடிஸ்ட்டா இருந்தார், வெளிநாட்டுப் பெருநிறுவனங்கள், நாட்டை சூதாட்டம் மற்றும் விபச்சார மையமாக மாற்றிய நாட்டின் நிதிப் பிரபுக்கள் மற்றும் மாபியாக்கள் ஆகியோரது நலன்களின் பேரில் ஆட்சி நடத்திய ஒரு மூர்க்கமான சர்வாதிகாரத்தின் தலைமையாக அவர் இருந்தார். சித்திரவதை என்பது சகஜமானதாக இருந்தது, குறைந்தபட்சம் 20,000 கியூபர்களது அரசியல் கொலைகளுக்கு இந்த ஆட்சி பொறுப்பாய் இருந்தது என்று ஜோன் F. கென்னடியே கூட கருத்துக் கூறியிருந்தார்.

இந்த ஆட்சி எத்தனை நச்சுத்தனமானதாய் இருந்தபோதும், இந்தப் பிராந்தியத்தில் இது ஒன்று மட்டுமே அவ்வாறிருக்கவில்லை. அதே காலகட்டத்தில், டொமினிக்கன் குடியரசில் ட்ருஜிலோ, ஹைத்தியில் துவாலியே மற்றும் நிக்கராகுவாவில் சோமோசா ஆகியோர் நடத்திய இதேபோன்ற பாரியக் குற்றங்களையும் அமெரிக்கா ஆதரித்தது.

1954 இல் குவாத்தமாலாவில் இருந்த ஆர்பென்ஸ் அரசாங்கம் சிஐஏ ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கவிழ்ப்பின் மூலமாக தூக்கியெறியப்பட்டதில் கண்டதைப் போல, நிலவும் ஒழுங்கை ஜனநாயக முறைகளின் மூலமாக மாற்றுவதற்கு முயற்சி செய்த அனைவரும் வன்முறையைக் கொண்டு அகற்றப்பட்டனர். இதன் விளைவாக இந்த அரைக்கோளம் எங்கிலும் அமெரிக்கா மீதான கடுமையான மக்கள் வெறுப்பு வளர்ச்சி கண்டது.

ஸ்பானிய நிலச்சுவாந்தர் குடும்பம் ஒன்றில் பிறந்த காஸ்ட்ரோ, ஹவானா பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் தேசியவாத அரசியலின் கனல் தகிக்கும் சூழலுக்குள் அரசியல்ரீதியாய் அபிவிருத்தி கண்டார். இளைஞராக இருந்தபோது அவர் ஸ்பெயினின் பாசிஸ்டான ஜோஸ் அந்தோனியோ பிறிமோ டி ரிவேரா மற்றும் இத்தாலியின் தலைவர் பெனிட்டோ முசோலினி ஆகியோரின் மீது பெரும் அபிமானம் கொண்டவராய் இருந்தார் என்று கூறப்படுகிறது.

1948 இல் மாணவனாக, கொலம்பியாவின் பொகோட்டாவிற்கு அவர் மேற்கொண்ட பயணம் அவரை அரசியல்ரீதியாக உருவாக்கிய அனுபவங்களில் ஒன்றாக அமைந்தது; பிராந்தியத்தில் அமெரிக்க மேலாதிக்கத்தை நிலைநாட்டும் பொருட்டு அமெரிக்கஅரசுகளின்அமைப்புஒன்றை ஸ்தாபிப்பதற்காக அமெரிக்க நாடுகளிடையேயான காங்கிரசை அமெரிக்கா அங்கு கூட்டியிருந்தது. அவரது இந்த விஜயத்தின் சமயத்தில், தாராளவாதக் கட்சியின் வேட்பாளரான ஜோர்ஜ் கைத்தான் (Jorge Gaitan) படுகொலை செய்யப்பட்டமையானது போகற்ராஸோ (Bogatazo) என்றழைக்கப்படுகின்ற வெகுஜன எழுச்சிக்கு இட்டுச் சென்றது, இதில் கொலம்பியாவின் தலைநகரத்தின் பெரும்பகுதி அழிக்கப்பட்டதோடு 3,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.

அர்ஜெண்டினாவில் அதிகாரத்திற்கு வந்திருந்த இராணுவ அதிகாரியான ஜுவான் பெரோன் (Juan Peron) இன் அரசியல் தன் மீது கணிசமான செல்வாக்கு செலுத்தியதை காஸ்ட்ரோவே ஒப்புக்கொண்டிருந்தார்; அவரது ஜனரஞ்சகவாதம், அமெரிக்க-எதிர்ப்பு மற்றும் ஏழைகளுக்கான சமூக நல உதவித் திட்டங்கள் ஆகியவற்றுக்காக அவர் மீது பெருமதிப்புக் கொண்டிருந்தார்.

இன்னும் தனது இருபதுகளில் இருந்த காஸ்ட்ரோ, கியூப குட்டி-முதலாளித்துவத்தில் வேரூன்றியிருந்த ஒரு தேசியவாத மற்றும் கம்யூனிச-விரோத அரசியல் போக்கான ஓர்தோடொக்ஸோ கட்சியின் (Ortodoxo Party) ஒரு அங்கத்தவராக, பாட்டிஸ்டாவின் அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரத்திற்கு எதிரான தனது போராட்டத்தைத் தொடக்கினார். 1952 இல் ஓர்தோடொக்ஸோ வேட்பாளராக கியூப நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்ட அவர், அதன் பின் ஒரு வருடம் கழித்து ஆயுத நடவடிக்கையின் பக்கம் திரும்பினார்; மொன்காடா இராணுவ முகாம்கள் மீது நடந்த மோசமான தலைவிதி கொண்ட ஒரு தாக்குதலுக்கு தலைமை தாங்கினார், இதில் கிளர்ச்சியாளர்கள் 200 பேர் அனைவருமே கொல்லப்பட்டனர் அல்லது சிறைப்பிடிக்கப்பட்டனர்.

சிறிதுகால சிறைத்தண்டனை அதன்பின் நாடு கடத்தப்பட்டமை இவற்றின் பின்னர், 1956 ஆம் ஆண்டின் இறுதியில், அரசாங்கத் துருப்புகளுடனான முந்தைய ஆரம்பகட்ட மோதல்களில் மிகப்பெரும் இழப்புகளை சந்தித்து பாதிக்கப்பட்டிருந்த ஓரளவுக்கு கணிசமாய் ஆயுதபாணியாக இருந்த ஆதரவாளர்களுடன் அவர் கியூபாவுக்குத் திரும்பினார். எனினும், பாட்டிஸ்ட்டாவின் நாட்டை ஆளும் திறத்தின் மீது கியூபாவின் முதலாளித்துவ வர்க்கமும் சரி அமெரிக்காவும் சரி நம்பிக்கையை இழந்து விட்டிருந்த நிலைமைகளின் கீழ், இரண்டு வருடங்களுக்குள்ளாகவே, அதிகாரம் அவரது ஜூலை 26 கெரில்லா இயக்கத்தின் கரங்களின் கீழ் வந்துசேர்ந்தது.

காஸ்ட்ரோவுக்கு பரவலான சர்வதேச அனுதாபம் இருந்தது, அவரது எழுச்சி ஜனநாயகத்திற்கான ஒரு போராட்டமாக பார்க்கப்பட்டது. அமெரிக்க எழுத்தாளர் ஏர்னெஸ்ட் ஹெமிங்வே புதிய ஆட்சிக்கு ஆதரவை வெளிப்படுத்தியவர்களில் ஒருவர், பாடிஸ்டா தூக்கிவீசப்பட்டதில் “மகிழ்ந்ததாக” அவர் விவரித்தார்.

ஆரம்பத்தில், காஸ்ட்ரோ கம்யூனிசத்துக்கென எந்த அனுதாபமும் இருப்பதை மறுத்ததோடு, தனது அரசாங்கம் அந்நிய முதலீட்டைப் பாதுகாக்கும் என்றும் புதிய தனியார் முதலீட்டை வரவேற்கும் என்றும் வலியுறுத்தி, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு இணக்கத்தை எட்ட முனைந்தார்.

ஆயினும், கியூபாவின் பாரிய தொழிலாளர்களும் விவசாயிகளும் காஸ்ட்ரோவின் புரட்சியில் இருந்து விளைவுகளைக் கோரிய நிலையில், அமெரிக்காவோ, அதன் கரைகளில் இருந்து 90 மைல்கள் தள்ளி இருக்கும் ஒரு பிராந்தியத்தில் மிக கண்ணியமான சமூக சீர்திருத்தங்களையும் கூட தான் சகிக்கப் போவதில்லை என்பதைத் தெளிவாக்கி விட்டது. பாட்டிஸ்டா வீழ்ந்து விட்டதைக் குறித்த சிறிதுகால கொண்டாட்டங்களுக்குப் பின்னர் புதிய அரசாங்கம் தனது வழக்கமான பாதைக்குத் திரும்பி விடும் என்பதே அமெரிக்க ஆளும் வட்டாரங்களுக்குள்ளான எதிர்பார்ப்பாக இருந்தது. காஸ்ட்ரோ தீவில் சமூக நிலைமைகளை மாற்றுவதிலும் அதன் வறுமைப்பட்ட பரந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் உண்மையாகவே மிகவும் கவனம் குவித்தவராய் இருந்தார் என்பதைக் கண்டு அவர்கள் மிரட்சியடைந்தனர். நிலவும் ஒழுங்கை மாற்றுவதற்கான எந்தவொரு முயற்சியையும் அவர்கள் சமரசத்திற்கிடமின்றி எதிர்கொண்டனர்.

மட்டுப்படுத்தப்பட்ட நிலச் சீர்திருத்தத்திற்கான பதிலிறுப்பாக அமெரிக்கா, கியூபாவின் சர்க்கரை ஏற்றுமதி ஒதுக்கீட்டை வெட்டியும், நாட்டின் எண்ணெயை தீவுக்கு மறுத்தும் கியூபாவின் பொருளாதாரத்தை மூச்சுத்திணறச் செய்ய முயற்சித்தது.

தேசியமயமாக்கங்களை கொண்டு - முதலில் அமெரிக்க உடைமைகளையும், அதன்பின் கியூப நிறுவனங்களையும் - பதிலிறுப்பு செய்த காஸ்ட்ரோ உதவி நாடி சோவியத் அதிகாரத்துவத்தை நோக்கித் திரும்பினார். அதேசமயத்தில், பாட்டிஸ்டாவை ஆதரித்து காஸ்ட்ரோவின் கெரில்லா இயக்கத்தை எதிர்த்து வந்திருந்ததும், மதிப்பிழந்து கிடந்ததுமான கியூப ஸ்ராலினிச மக்கள் சோசலிஸ்ட் கட்சியை நோக்கியும் அவர் திரும்பினார். அவரிடம் இல்லாதிருந்த அரசியல் எந்திரத்தை ஸ்ராலினிஸ்டுகள் அவருக்கு வழங்கினர்.

அல்ஜீரியாவில் பென் பெல்லா, எகிப்தில் நாசர், கானாவில் நுக்ருமா மற்றும் காங்கோவில் லுமும்பா மற்றும் இதுபோன்ற இன்னும் பலரது எழுச்சிக்கு வழிவகுத்த, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் காலனித்துவ மற்றும் ஒடுக்கப்பட்ட நாடுகளை வியாபித்த பரந்த முதலாளித்துவ-தேசியவாத மற்றும் ஏகாதிபத்திய-எதிப்பு இயக்கம் ஒன்றின் பிரதிநிதியாக காஸ்ட்ரோ இருந்தார். காஸ்ட்ரோவைப் போலவே, இவர்களில் பலரும் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பனிப் போர் மோதலை தங்களது சொந்த நலன்களைப் பாதுகாப்பதற்காய் சுரண்டிக் கொள்வதற்கு முனைந்தனர்.

காஸ்ட்ரோ தன்னை ஒரு “மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்” என்று சுய-பிரகடனம் செய்துகொண்டதிலும் சோவியத் ஒன்றியத்தை நோக்கி அவர் திரும்பியதிலும் சந்தர்ப்பவாதக் கூறு ஒன்று இருந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆனபோதும், 1960 இல், அதற்கு 43 வருடங்கள் முன்பாக ரஷ்யாவை உருமாற்றியிருந்த அக்டோபர் புரட்சியானது சர்வதேச அளவில் ஒரு பாரிய தாக்கத்தைக் கொண்டிருந்தது - அதன்பின் சோவியத் அதிகாரத்துவம் நீண்ட காலம் புரட்சியின் தலைவர்களை அழித்தொழித்ததோடு உண்மையான மார்க்சிசத்துடனான அத்தனை உறவுகளையும் துண்டித்து விட்டிருந்தது என்கிறபோதும் - என்பதும் ஒரு விடயமாக இருந்தது.

கியூபாவின் பரந்த மக்களின் அதிகரித்துச் சென்ற எதிர்பார்ப்புகளும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிடிவாதமான எதிர்வினையும் காஸ்ட்ரோவை இடது நோக்கி தள்ளுவதற்கு சேவை செய்தன என்ற அதேவேளையில், அவர் எந்த அர்த்தத்திலும் ஒரு மார்க்சிஸ்டாக இருக்கவில்லை. கியூப சமூகத்தில் கணிசமான சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்ற தனது ஆரம்பமுதலான நோக்கங்களில் அவர் நேர்மையுடன் இருந்தார் என்றாலும், அவரது அரசியல் நோக்குநிலை எப்போதும் ஒரு நடைமுறைவாதத் தன்மையை கொண்டதாகவே இருந்தது.

சோவியத்தின் ஸ்ராலினிசம் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் “சமாதான சகவாழ்வு” காண்பதற்கான தனது வேட்கையின் நோக்கத்திற்காய் பேரம்பேசுவதற்கான ஒரு துருப்புச்சீட்டாக கியூபாவை சுரண்டிக் கொள்வதற்கு பிரதிபலனாக, பாரிய உதவியையும் மானிய வர்த்தகத்தையும் கியூபாவுக்கு வழங்கும் என்ற ஒரு ஃபாஸ்திய பேரத்தை (Faustian bargain - வருங்கால செலவுகள் அல்லது விளைவுகள் ஆகியவற்றை கருதிப்பார்க்க வழியின்றி இன்றைய நலன்களுக்காக செய்யப்படும் ஒரு உடன்பாடு) சோவியத் ஸ்ராலினிசத்துடன் செய்து கொள்ளுமளவுக்கு இறுதியில் காஸ்ட்ரோ முன்சென்றார்.

ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் இறுதிக் காட்டிக்கொடுப்பான, 1991 சோவியத் ஒன்றியத்தின் கலைப்பை அடுத்து, கியூபா நிராதரவான பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்குள் தூக்கிவீசப்பட்டது; வெளிநாட்டு முதலாளித்துவ முதலீட்டுக்கு இன்னும் அகலத் திறந்து விடுவதன் மூலமும், அத்துடன் வெனிசூலாவிடம் இருந்தான முக்கிய மானிய உதவிகளின் மூலமும் - அதன் பொருளாதார நெருக்கடியானது இப்போது அந்த உதவி மூலத்தையும் மூடிக் கொண்டிருக்கிறது - மட்டுமே காஸ்ட்ரோ அரசாங்கத்தால் இதனை சமாளிக்க முடிந்தது.

மெரிக்காவுடன்நல்லிணக்கம்

இவை தான் அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையில் ஒரு நல்லிணக்கத்திற்கு களமைத்துத் தந்த நிலைமைகள் ஆகும்; ஹவானாவில் அமெரிக்கத் தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டது; ஒபாமா சென்ற மார்ச் மாதத்தில் இந்நாட்டுக்கு விஜயம் செய்தார். அமெரிக்க முதலாளித்துவம், தனது பங்காக, கியூபாவின் மலிவு உழைப்பையும் அதன் இலாபகர சாத்தியமுள்ள சந்தைகளையும் சுரண்டிக் கொள்ளவும் நாட்டில் சீனா மற்றும் ஐரோப்பியப் போட்டி நாடுகளின் செல்வாக்கு அதிகரித்துச் செல்வதை விரட்டவும் தீர்மானத்துடன் இருக்கிறது.

கியூபாவில் இருக்கும் ஆளும் அடுக்கு, சீனாவை ஒத்த ஒரு பாதையை பின்பற்றுகின்ற அதேசமயத்தில் அமெரிக்க மூலதனத்தின் பாய்வை தங்களது ஆட்சியைக் காப்பாற்றுவதற்கான ஒரு வழிவகையாகப் பார்க்கிறது. தீவில் சமூக சமத்துவமின்மையானது துரிதமாக ஆழமடைந்து செல்கின்ற நிலைமைகளின் கீழ் கியூபத் தொழிலாள வர்க்கத்தின் நலன்களை விலையாகக் கொடுத்து தனது சொந்தச் சலுகைகளையும் அதிகாரத்தையும் காப்பாற்றிக் கொள்ள கியூப உயரடுக்கு நம்பிக்கை கொண்டிருக்கிறது.

இவை அனைத்தும் காஸ்ட்ரோவை அவரது வாழ்வின் இறுதி தசாப்தத்தில் மிகவும் துன்புறுத்தின என்பதில் சந்தேகமில்லை. இக் காலகட்டத்தில், “பிரதிபலிப்புகள்” (Reflections) என்று அழைக்கப்படுகின்ற ஒரு பத்தியின் மூலமாக கியூப ஊடகங்களில் அவர் தொடர்ந்து கருத்திட்டு வந்தார். இந்த எழுத்துக்கள் தத்துவார்த்த உட்பார்வையின் பாதையில் அரிதாகவே பங்களித்தன; ஒரு நேர்மையான குட்டி-முதலாளித்துவ தீவிரப்பட்ட மனிதரின் சிந்தனைகளை பிரதிபலித்தன.

அவருக்குப் பெருமைதரும் விதமாக, அவர் தனது மரணம் வரையிலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் எதற்கெல்லாம் ஆதரவாக நின்றதோ அவை அத்தனையையும் தொடர்ந்து வெறுத்து வந்திருந்தார். பராக் ஒபாமாவின் கபடவேடத்தையும், “மனித உரிமைகள்” வாய்வீச்சை ஏகாதிபத்தியப் போர்கள் மற்றும் ஆளில்லா விமானப் படுகொலைத் திட்டங்களுடன் உடன்சேர்த்து அவர் பயன்படுத்தியதையும் காஸ்ட்ரோ ஆவேசத்துடன் தாக்கினார்.

கியூபாவுக்கு ஒபாமா வந்து சென்றதற்குப் பின்னர், காஸ்ட்ரோ தனது இறுதிக்கால பத்திகளில் ஒன்றில், ஹவானாவில் அமெரிக்க ஜனாதிபதியின் பேச்சைக் கடுமையாகக் கண்டனம் செய்து எழுதினார். அவர் கூறினார்: “...எங்களுக்குத் தேவையான உணவையும் பொருள் வளங்களையும் எங்களது மக்களின் உழைப்பையும் புத்தியையும் கொண்டே உருவாக்கும் அளவுக்கு எங்களுக்குத் திறமிருக்கிறது. சாம்ராஜ்யம் எங்களுக்கு எதனையும் வழங்குவதற்கு அவசியமில்லை.”

ஆனாலும், காஸ்ட்ரோவின் புரட்சியானது, ஒவ்வொரு மற்ற முதலாளித்துவ தேசியவாத இயக்கத்தையும் குட்டி-முதலாளித்துவ சக்திகளால் தலைமை கொடுக்கப்பட்ட தேசிய விடுதலைப் போராட்டத்தையும் போலவே, அதன் இறுதி முட்டுச் சந்தை அடைந்து விட்டிருந்தது; கியூபா மீதான ஏகாதிபத்திய ஒடுக்குமுறையில் இருந்து எழுந்திருந்த வரலாற்றுப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தோல்வி கண்டிருந்த நிலையில், முன்பு தான் எதிர்த்து வந்திருந்த அதே நவகாலனித்துவ உறவுகளை மீட்சி செய்வதை நோக்கி அது நகர்ந்திருந்தது என்பதையே ஒபாமாவின் விஜயமும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான உறவுகளை “இயல்புக்கு கொண்டுவருவதற்கான” நடவடிக்கையும் சமிக்கை செய்தன என்பதே நிதர்சனமாகும்.

காஸ்ட்ரோவின் வாழ்க்கையில், எல்லாவற்றுக்கும் மேல், கியூப மக்களின் நெடுநாள் போராட்டத்தில், ஒரு சாகசத் தீரம் மற்றும் துன்பியலின் கூறுகள் இருந்தன என்பதை சிடுமூஞ்சி ஒருவரால் மட்டுமே மறுக்கமுடியும்.

ஆயினும், காஸ்ட்ரோவின் மரபுவழியை கியூபாவின் பட்டகத்தின் (prism) மூலமாக மட்டும் முழுமையாக மதிப்பீடு செய்து விட முடியாது, அவரது அரசியல் சர்வதேசரீதியாக, எல்லாவற்றுக்கும் மேல், இலத்தீன் அமெரிக்காவில் ஏற்படுத்திய பாதிப்பையும் கணக்கில் எடுத்துக் கொண்டாக வேண்டும்.

இவ்விடத்தில், மிகப் பேரழிவுகரமான பாத்திரம், ஒரு சிறிய கெரில்லா இராணுவத்தின் தலைமையில் அமர்ந்து காஸ்ட்ரோ அதிகாரத்துக்கு வந்தமையானது தொழிலாள வர்க்கத்தின் நனவான மற்றும் சுயாதீனமான அரசியல் தலையீடும் அவசியமில்லாமல், புரட்சிகர மார்க்சிசக் கட்சிகளைக் கட்டியெழுப்புவதற்கும் அவசியமில்லாமல் சோசலிசத்துக்கான ஒரு புதிய பாதையை திறந்ததாகக் கூறி விளம்பரம் செய்த, இலத்தீன் அமெரிக்காவில் இருந்த இடது தேசியவாதிகளாலும் அத்துடன் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் இருந்த குட்டி-முதலாளித்துவ தீவிரப்போக்கினராலும் நிகழ்த்தப்பட்டது.

ப்லோவாததிருத்தல்வாதத்தின்பாத்திரம்

இந்த தவறான முன்னோக்கின் மிகப் பிரபலமான ஆலோசகர்களாக, நான்காம் அகிலத்திற்குள் ஐரோப்பாவில் ஏர்னெஸ்ட் மண்டேலின் தலைமையிலும் அமெரிக்காவில் ஜோசப் ஹான்சன் தலைமையிலும் எழுந்து பின்னர் அர்ஜென்டினாவில் நகுவேல் மொரீனோ இணையப் பெற்ற பப்லோவாத திருத்தல்வாதப் போக்கு இருந்தது. காஸ்ட்ரோ அதிகாரத்துக்கு வந்தமையானது, குட்டி-முதலாளித்துவத்திற்கு தலைமை கொடுத்திருந்த மற்றும் விவசாயி வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஆயுதமேந்திய கெரில்லாக்கள் “இயற்கையான மார்க்சிஸ்டுகளாக” ஆக முடியும் என்பதையும், அவர்கள் புறநிலை நிகழ்வுகளின் நிர்ப்பந்தத்தால் சோசலிசப் புரட்சியை நடத்தத் தள்ளப்படுவர் என்பதையும், அத்துடன் தொழிலாள வர்க்கம் செயலற்று வேடிக்கைபார்க்கும் பாத்திரத்திற்கு குறைக்கப்பட்டு விட்டதையும் நிரூபணம் செய்திருந்ததாக அவர்கள் வாதிட்டனர்.

இன்னும் மேலே சென்று அவர்கள், காஸ்ட்ரோவின் தேசியமயமாக்கங்கள் தொழிலாளர்’ அதிகாரத்தின் எந்த அங்கங்களும் இல்லாமலேயே, கியூபாவில் ஒரு “தொழிலாளர் அரசை” உருவாக்கி விட்டிருந்ததாக முடிவுக்கு வந்தனர்.

கியூப புரட்சிக்கு வெகு காலத்திற்கு முன்பாகவே, லியோன் ட்ரொட்ஸ்கி, குட்டி-முதலாளித்துவ சக்திகளால் நடத்தப்படுக்கின்ற தேசியமயமாக்கங்களை எடுத்த எடுப்பில் சோசலிசப் புரட்சியுடன் அடையாளம் காண்பதை, வெளிப்படையாக நிராகரித்திருந்தார். 1938 இல் எழுதப்பட்ட நான்காம் அகிலத்தின் ஸ்தாபக ஆவணமான இடைமருவுவேலைத்திட்டம் இவ்வாறு அறிவித்தது: “முழு விதிவிலக்கான நிலைமைகளின் கீழ் (போர், தோல்வி, நிதிப் பொறிவு, வெகுஜன புரட்சிகர அழுத்தம், போன்றவை) ஸ்ராலினிஸ்டுகளும் உள்ளிட்ட குட்டி-முதலாளித்துவக் கட்சிகள் முதலாளித்துவத்துடன் ஒரு முறிவுக்குச் செல்லும் பாதையில் தாங்கள் விரும்புவதை விடவும் அதிகமாய் செல்லக் கூடும் என்பதற்கான சித்தாந்தரீதியான சாத்தியத்தை யாரும் திட்டவட்டமாக முன்கூட்டி மறுத்து விட முடியாது.” ஆயினும், அப்படியானதொரு அத்தியாயத்தை பாட்டாளி வர்க்கத்தின் ஒரு உண்மையான சர்வாதிகாரத்தில் இருந்து அது பிரித்துக் காட்டியது.

1939 இல் (ஹிட்லர் உடனான கூட்டணியில்) போலந்தின் மீதான படையெடுப்பின் பாதையில் கிரெம்ளின் ஆட்சியால் முன்னெடுக்கப்பட்ட சொத்துடைமை மாற்றங்களுக்கான பதிலிறுப்பில் ட்ரொட்ஸ்கி இவ்வாறு எழுதினார்: “இந்தப் பகுதி அல்லது இன்னொரு பகுதியில் சொத்துகளின் உருமாற்றம் என்பது, தன்னளவில் அவை எத்தனை முக்கியமானவையாக இருந்தபோதிலும் கூட, நமக்கு பிரதான அரசியல் அளவுகோல் அதுவன்று, மாறாக உலகப் பாட்டாளி வர்க்கத்தின் நனவிலும் ஒழுங்கமைப்பிலும் ஏற்படக் கூடிய மாற்றமும், முன்னாள் வெற்றிகளைப் பாதுகாப்பதற்கும் புதிய வெற்றிகளை சாதிப்பதற்குமான அதன் திறனை உயர்த்துவதுமே நமது பிரதான அரசியல் அளவுகோலாகும்.”

காஸ்ட்ரோயிசம், சோசலிசத்துக்கான ஏதோ புதிய பாதையைக் குறிக்கவில்லை, மாறாக முன்னாள் காலனித்துவ உலகின் பெரும்பான்மையானவற்றில் அதிகாரத்திற்கு வந்திருந்த முதலாளித்துவ தேசியவாத இயக்கங்களின் கூடுதல் தீவிரப்பட்ட வகைகளில் ஒன்று மட்டுமே அது என்பதை வலியுறுத்தி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) பப்லோவாத முன்னோக்கிற்கு எதிராக சமரசமற்று போராடியது. காஸ்ட்ரோயிசத்தின் மீதான பப்லோவாத போற்றிபுகழ்தலானது, மார்க்ஸ் வரை செல்கின்ற சோசலிசப் புரட்சி குறித்த முழுமுதல் வரலாற்று மற்றும் தத்துவார்த்தக் கருத்தாக்கத்தின் ஒரு மறுதலிப்பைக் குறித்தது என்பதோடு, சர்வதேசரீதியாக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் அணிதிரட்டப்பட்ட புரட்சிகர காரியாளர்களை முதலாளித்துவ தேசியவாதம் மற்றும் ஸ்ராலினிசத்தின் முகாம்களுக்குள் கலைப்பதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொண்டிருந்தது என்றும் அது எச்சரித்தது.

ICFI, ஏகாதிபத்திய மூர்க்கத்தனத்திற்கு எதிராக கியூபாவை கோட்பாடான முறையில் பாதுகாத்து நின்ற அதேவேளையில், காஸ்ட்ரோயிசம் மீதான தனது பகுப்பாய்வை ஏகாதிபத்திய சகாப்தத்தில் முதலாளித்துவ தேசியவாதத்தின் பாத்திரம் குறித்த ஒரு பரந்த மதிப்பீட்டிற்குள்ளாக ஊன்றி நிறுத்தியது.

ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை பாதுகாத்து, 1961 இல் அது எழுதியது: “இத்தகைய தேசியவாதத் தலைவர்களின் பாத்திரத்திற்கு ஊக்கமளிப்பது ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் வேலை அல்ல. சமூக ஜனநாயகத்தின் மற்றும், குறிப்பாக ஸ்ராலினிசத்தின் தலைமைகளது காட்டிக்கொடுப்பின் காரணத்தால் மட்டுமே அவர்களால் வெகுஜன ஆதரவைப் பெற முடிந்திருக்கிறது, இவ்வகையில் அவர்கள் ஏகாதிபத்தியத்திற்கும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பரந்த மக்களுக்கும் இடையில் இடைத்தடைகளாக ஆகின்றனர். சோவியத் ஒன்றியத்தில் இருந்து பொருளாதார உதவி கிட்டக் கூடிய சாத்தியமானது, பலசமயங்களில் ஏகாதிபத்தியங்களுடன் கடுமையான பேரம்பேசலுக்கு அவர்களுக்கு வழிதருகிறது; அதற்கும் மேல் முதலாளித்துவ மற்றும் குட்டி-முதலாளித்துவ தலைவர்களிடையே இருக்கக் கூடிய கூடுதல் தீவிரப்பட்ட கூறுகள் ஏகாதிபத்திய உடைமைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் வெகுஜனங்களிடம் இருந்து அவர்கள் இன்னும் அதிக ஆதரவு பெறுவதற்கும் கூட வழியமைக்கிறது. ஆனால், நம்மைப் பொறுத்தவரை, இந்த நாடுகளில் உள்ள தொழிலாள வர்க்கங்களில் ஒன்று ஒரு மார்க்சிச கட்சியின் மூலமாக அரசியல் சுயாதீனம் பெறுவதும், சோவியத்துகளைக் கட்டியெழுப்புவதில் ஏழை விவசாயிகளுக்குத் தலைமை கொடுப்பதும், சர்வதேச சோசலிசப் புரட்சியுடனான அவசியமான பிணைப்புகளை உணர்ந்து கொள்வதுமே இன்றியமையாத பிரச்சினை ஆகும். ட்ரொட்ஸ்கிஸ்டுகள் இதனை எந்த சந்தர்ப்பத்திலும், தேசியவாதத் தலைமை சோசலிஸ்டுகளாக ஆகித் தான் தீர வேண்டும் என்பதான நம்பிக்கையைக் கொண்டு பிரதியீடு செய்யக் கூடாது என்பதே நமது கருத்தாகும். தொழிலாள வர்க்கத்தின் விடுதலை தொழிலாளர்கள் தாங்களே செய்து முடிப்பதற்கான கடமையாகும்.”

இந்த எச்சரிக்கைகள் இலத்தீன் அமெரிக்காவில் துன்பியலான வகையில் நிரூபணம் பெற்றன, இங்கு பப்லோவாதிகளால் ஊக்குவிக்கப்பட்ட தத்துவங்கள் தீவிரமயமான இளைஞர்கள் மற்றும் இளம் தொழிலாளர்களின் ஒரு ஒட்டுமொத்த அடுக்கையும், முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான போராட்டத்தில் இருந்து திசைதிருப்பி ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட தற்கொலை ஆயுதப் போராட்டங்களுக்குள் தள்ள உதவின; தொழிலாளர்’ இயக்கத்தை நோக்குநிலை பிறழச் செய்வதற்கு சேவையாற்றின; அத்துடன் பாசிச-இராணுவ சர்வாதிகாரங்களுக்கு பாதையமைக்க உதவின.

முதல் நிகழ்வில், இந்தத் தத்துவங்கள் பொலிவியாவில் குவேராவின் உயிரைப் பறித்தன. சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் பொலிவியத் தொழிலாள வர்க்கத்தின் பிற பிரிவுகளின் போர்க்குணமிக்க போராட்டங்களை உதாசீனம் செய்துவிட்டு, பயனற்ற வகையில் விவசாயி வர்க்கத்தின் மிகவும் பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவுகளில் இருந்து ஒரு கெரில்லா இராணுவத்தை வளர்த்தெடுப்பதற்கு அவர் முயற்சித்தார்; விளைவாய் 1967 அக்டோபரில் சிஐஏ மற்றும் பொலிவிய இராணுவம் அவரை வேட்டையாடிக் கொல்வதற்கு முன்பாக அவர் தனிமைப்பட்டும், பட்டினியிலும் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார்.

காஸ்ட்ரோயிசமும் பப்லோவாத திருத்தல்வாதமும் அரைக்கோளம் முழுமைக்கும் கொண்டுவரவிருந்த அழிவுகரமான விளைவுகளுக்கான ஒரு துன்பியலான முன்கூறலாக குவேராவின் விதி அமைந்தது. இதேபோல, ஆர்ஜென்டினாவில், கெரில்லாவாதத்தின் வழிமுறையானது 1969 இல் கொர்டோபசோ வெகுஜன வேலைநிறுத்தங்களுடன் வெடித்திருந்த புரட்சிகர தொழிலாள வர்க்க இயக்கத்தை மழுங்கடிப்பதற்கும் நோக்குநிலை பிறழச் செய்வதற்கும் சேவையாற்றியது.

காஸ்ட்ரோவே கூட, சோவியத் அணியைச் சார்ந்திருந்தவராக இருந்த அதேசமயத்தில், தனது ஆட்சியின் ஸ்திரத்தன்மையை பத்திரப்படுத்திக் கொள்வதற்கான முயற்சியில் நடைமுறைஅரசியலை (realpolitik) பின்பற்றுபவராகவும் இருந்து, அவரை ஆதர்சமாகக் கொண்டு நடந்தவர்கள் தூக்கிவீச முயற்சி செய்து கொண்டிருந்த அதே இலத்தீன் அமெரிக்க முதலாளித்துவ அரசாங்கங்களுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு முனைந்தார். இவ்வாறாக, 1971 இல் சிலிக்கு சுற்றுப்பயணம் சென்ற அவர், அங்கு தொழிலாள வர்க்கத்தை நசுக்குவதற்கு பாசிஸ்டுகளும் இராணுவமும் முயற்சி செய்து கொண்டிருந்த நிலையிலும், அந்நாட்டின் “சோசலிசத்தை நோக்கிய நாடாளுமன்றப் பாதை”யை வியந்து பாராட்டினார். பெருவிலும் ஈக்குவடோரிலும் இருந்த இராணுவ ஆட்சிகளை ஏகாதிபத்திய-எதிர்ப்பு ஆட்சிகளாய் அவர் பாராட்டினார், அத்துடன் மெக்சிகோவில் 1968 இல் மாணவர்கள் படுகொலை செய்யப்படுவதை மேற்பார்வை செய்திருந்த ஆளும் PRI இன் ஊழலடைந்த எந்திரத்தையும் கூட அவர் ஏற்றார்.

இந்த அரைக்கோளம் முழுமையிலும் சோசலிசப் புரட்சியை பின்னிழுத்து வைத்திருந்தது தான் காஸ்ட்ரோவின் கொள்கைகள் மற்றும் அவரைப் போற்றிய அரசியல் போக்குகளின் கொள்கைகளது ஒட்டுமொத்தமான தாக்கமாக இருந்தது.

இப்போது, பொதுவாக ஏகாதிபத்திய சக்திகள், குறிப்பாக அமெரிக்கா, கியூபா மற்றும் அதனைத் தாண்டி தங்களது நலன்களை முன்னெடுப்பதற்கு காஸ்ட்ரோவின் மரணத்தை எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை மதிப்பிட்டுக் கொண்டிருக்கின்றன.

ஜனாதிபதி பராக் ஒபாமா விடுத்த ஒரு கபடத்தனமான அறிக்கையில், “இந்த ஒற்றை மனிதர் தன்னைச் சுற்றிய மக்களின் மீதும் உலகத்தின் மீதும் செலுத்திய பிரம்மாண்டமான தாக்கத்தை வரலாறு பதிவு செய்யும், தீர்ப்பளிக்கும்” என்று அறிவித்ததோடு, “கியூப மக்கள் அமெரிக்காவில் தங்களுக்கு ஒரு நண்பரும் கூட்டாளியும் இருப்பதை அறிந்து கொள்ள வேண்டும்” என்றும் உறுதியளித்தார்.

ஜனாதிபதியாகத் தேர்வாகியிருக்கும் ட்ரம்ப், அவரது பங்காக, “சுமார் ஆறு தசாப்தங்களாக தனது சொந்த மக்களை ஒடுக்கி வந்த ஒரு கொடூரமான சர்வாதிகாரி மறைந்ததை” கொண்டாடும் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். கியூபாவில் அமெரிக்க வங்கிகளும் பெருநிறுவனங்களும் உள்நுழைவதற்கு வகைசெய்யும்படியாய் ஒபாமாவால் கொண்டுவரப்பட்ட நடவடிக்கைகளை கைவிடும் தனது மிரட்டல்களை ட்ரம்ப் முன்னெடுப்பாரா என்பதான ஊகம் அங்கே பெருகிக் கொண்டிருக்கிறது.

ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதிகள் பிற்போக்கு நலன்களை முன்னெடுப்பதற்காக காஸ்ட்ரோவின் மரணத்தை சுரண்டிக் கொள்வதற்கு முனைகின்ற நேரத்தில், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஒரு புதிய தலைமுறையை பொறுத்தவரையில், காஸ்ட்ரோயிசத்தின் வரலாற்று அனுபவத்தையும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அபிவிருத்தி செய்திருக்கும் தொலை-நோக்குடனான விமர்சனத்தையும் கற்பது தொழிலாள வர்க்கத்தை வரவிருக்கும் பாரிய புரட்சிகரப் போராட்டங்களுக்குத் தயாரிப்பு செய்வதிலும் அவர்களுக்குத் தலைமை கொடுக்கவிருக்கும் கட்சிகளைக் கட்டியெழுப்புவதிலும் இன்றியமையாத ஒரு பணியாகத் திகழ்கிறது.

Loading