பிப்ரவரி புரட்சியின் தன்னெழுச்சியும் நனவும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சோசலிச சமத்துவக் கட்சி யின் (அமெரிக்கா) தேசியச் செயலரான ஜோஷப் கிஷோர் ஏப்ரல் 22 சனிக்கிழமையன்று அளித்த உரையின் எழுத்துவடிவத்தை இங்கே நாங்கள் வெளியிடுகிறோம். 1917 ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டைக் கொண்டாடும் விதமாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஐந்து சர்வதேச இணைய உரைகளின் வரிசையில் இது நான்காவதாகும். உரை வரிசைக்கு பதிவு செய்ய, wsws.org/1917 க்கு செல்லவும்.

பிப்ரவரியின் பின்புலம்: ரஷ்யாவின் இணைந்த மற்றும் சமச்சீரற்ற அபிவிருத்தியும் நிரந்தரப் புரட்சித் தத்துவமும்

ரஷ்யாவில் 1917 பிப்ரவரியில் நடந்த நிகழ்வுகள், வரலாற்றின் பாதையை மாற்றிப் போட்ட புரட்சிகரக் கொந்தளிப்புகளின் தொடக்கத்தை குறித்து நின்றன. பிப்ரவரி 22 அன்று, புரட்சியின் சமயத்தில், இரண்டாம் நிக்கோலாஸ் தான் அப்போதும் அனைத்து ரஷ்யாவுக்குமான சக்கரவர்த்தியாகவும் எதேச்சாதிகாரியாகவும் இருந்தார். அடுத்த ஒரு வாரம் கழித்து, ரஷ்யாவை 300 வருடங்களுக்கும் அதிகமாய் ஆட்சி செய்திருந்த, வெல்ல முடியாததாகத் தோற்றமளித்திருந்த ரோமனோவ் வம்ச ஆட்சி தூக்கிவீசப்பட்டு, முதலாளித்துவ இடைக்கால அரசாங்கம் மற்றும் தொழிலாளர்கள்’ மற்றும் சிப்பாய்களது பிரதிநிதிகள் சோவியத் ஆகியவற்றின் ஸ்திரமற்ற “இரட்டை அதிகார”த்தைக் கொண்டு பிரதியிடப்பட்டது. இதுதான் போல்ஷிவிக் கட்சியின் தலைமையின் கீழ் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுகின்ற வரையான அடுத்த எட்டு மாத காலத்தில் அபிவிருத்தி கண்ட அரசியல் மோதல்களின் கட்டமைப்புக் களமாக இருந்தது.

1917 புரட்சியை நாம் ஆய்வு செய்யத் தொடங்குகையில், “ரஷ்ய பிரச்சினை”யானது புரட்சிகர இயக்கத்தால் எந்த வழியில் புரிந்து கொள்ளப்பட்டது மற்றும் பகுப்பாய்வு செய்யப்பட்டது என்பதை நாம் மீண்டும் மீளாய்வு செய்தாக வேண்டும், ஏனென்றால் அந்த உள்ளடக்கத்தில் மட்டுமே 1917 இன் அந்த மாபெரும் நிகழ்வுகளின் சமயத்தில் அபிவிருத்தி கண்ட அரசியல் மற்றும் சமூக மோதல்களைப் புரிந்து கொள்வது நமக்கு சாத்தியமாகும்.

நிலவும் உற்பத்தி உறவுகளின் கட்டமைப்புக்குள்ளே உற்பத்தி சக்திகளின் அபிவிருத்தி இனியும் சாத்தியமில்லை என்கிறபோதுதான் சமூகப் புரட்சி —அதாவது ஒரு ஆளும் வர்க்கமானது இன்னொன்றினால் பிரதியிடப்படுகின்ற நிகழ்ச்சிப்போக்கானது— நடந்தேறுகிறது என்பது மார்க்சிசத்தின் அடிப்படையான கோட்பாடாகும். விஞ்ஞான சோசலிசமானது, கற்பனாவாத பரவசக்கனவுகளில் வேரூன்றியதல்ல, முதலாளித்துவத்தின் புறநிலையான முரண்பாடுகளில், அவற்றுடன் பிணைந்த தொழிலாள வர்க்கத்தின் சமூக நலன்களில் வேரூன்றியதாகும். நாம் இன்றைய உலக சூழ்நிலையை கருத்தில் கொண்டு பார்த்தோமேயானால், முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறையானது உற்பத்தியின் மேலதிகமான அபிவிருத்திக்கும் மனிதகுலத்தின் வருங்காலத்திற்குமே கூட ஒரு மாபெரும் தடையாக ஆகியிருக்கிறது என்பதை தெளிவாய் காணலாம்.

ஆயினும், மார்க்சிசம் ரஷ்யாவில், ஒரு சோசலிச இயக்கத்திற்கு அவசியமாகக் கருதப்பட்ட சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி மட்டம் —குறிப்பாக முதலாளித்துவ சொத்து உறவுகளின் மேலாதிக்கம் மற்றும் ஒரு பாரிய எண்ணிக்கையிலான தொழிலாள வர்க்கம் ஆகியவை— மிகக் குறைவாக இருந்த நிலைமைகளின் கீழ் வேரூன்ற ஆரம்பித்தது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே கூட, விவசாய மக்கள் 85 சதவீதம் இருந்தது, அதன் பெரும்பகுதி அறியாமையிலும் வறுமையிலும் உழல்கின்ற வர்க்கமாய் இருந்தது. 1861 இல் பண்ணை அடிமைகளின் சம்பிரதாயபூர்வ விடுதலை இருந்தாலும், நில உடைமையானது பெரும் பிரபுக்களாலேயே மேலாதிக்கம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. மேற்கு ஐரோப்பாவில் 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் மாபெரும் முதலாளித்துவப் புரட்சிகளின் போது ஒழிக்கப்பட்டிருந்த பழைய நிலப்பிரபுத்துவ உறவுகள் இன்னும் எஞ்சியிருந்தன. அரசியல்ரீதியாக, ஜாரிச எதேச்சாதிகாரம் நாட்டில் ஆதிக்கம் செய்தது, மேற்கு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நிலவியதைப் போல ஜனநாயக மற்றும் நாடாளுமன்ற ஆட்சி வடிவங்களுக்கான எந்த உண்மையான பொறிமுறைகளும் இருக்கவில்லை. ரஷ்யாவில் புரட்சிகர இயக்கம் முகம்கொடுத்திருந்த உடனடியான கடமைகள் முதலாளித்துவ-ஜனநாயக தன்மையைக் கொண்டவையாக இருந்தன என்பதே இதன் அர்த்தமாய் இருந்தது.

”ரஷ்ய மார்க்சிசத்தின் தந்தை”யான ஜோர்ஜி பிளெக்ஹானோவ் தான், ரஷ்யாவின் தொழிலாள வர்க்கம், விவசாயிகளுடன் ஒப்பிடுகையில் சிறியளவாக இருந்த போதிலும், ஜனநாயகப் புரட்சியில் தீர்க்கமான புரட்சிகர சக்தியாக இருக்கும் என்பதை முதன்முதலில் அங்கீகரித்தவராக இருந்தார். “ரஷ்யாவில் புரட்சிகர இயக்கமானது ஒரு தொழிலாளர்’ இயக்கமாக மட்டுமே வெற்றிகாணும் இல்லையேல் அது வெற்றி காணவே போவதில்லை” என்று 1889 இல் இரண்டாம் அகிலத்தின் ஸ்தாபக மாநாட்டில் அவர் பிரகடனம் செய்தார். தொழிலாள வர்க்கம் ஜனநாயகப் புரட்சியில் முன்னணிப் பாத்திரம் வகிக்கும் என்றாலும் அதிகாரம் அவசியமான வகையில் ஏதோவொரு விதத்தில் முதலாளித்துவத்துக்கே மாற்றப்படும், தொழிலாள வர்க்கம் தானே அதிகாரத்தைக் கைப்பற்றுமளவுக்கு போதுமான வலிமை பெறுகின்ற வரையில் சற்று ஏறக்குறைந்த நீண்டதொரு முதலாளித்துவ அபிவிருத்தி காலக்கட்டத்தை இது அனுமதிக்கும் என இரண்டு கட்டங்களிலான ஒரு புரட்சி என்பதே அவரது கருத்தாக்கமாக இருந்தது.

சென்ற ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்பட்ட பிளெக்ஹானோவ் குறித்த தமது முக்கியமான கட்டுரையில் தோழர்கள் நோர்த்தும் வோல்கோவும் பின்வருமாறு குறிக்கின்றனர்: “தொழிலாள வர்க்கமானது பொருளாதார மற்றும் அரசியல் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பிடிக்கின்ற ஒரு பாரிய சமூகக் குழுவாக எழுவதற்கு வெகுமுன்பே, ரஷ்யாவில் முதலாளித்துவம் அதன் முதல் அடிகளையே எடுத்து வைத்திருந்த நிலையிலேயே, தொழிலாள வர்க்கத்தின் தீர்மானகரமான பாத்திரத்தை முன்கணித்தார் என்ற உண்மையில் தான் ஒரு அரசியல் சிந்தனையாளராக பிளெக்ஹானோவின் ஆகச்சிறந்த பாத்திரம் அமைந்திருந்தது.”[1] உண்மையில் பார்த்தால், இந்த அடிப்படையான மற்றும் தொலைநோக்கான கருத்தாக்கம் தான் ரஷ்யாவில் அடுத்துவந்த ஒட்டுமொத்த மார்க்சிச இயக்கத்தின் அபிவிருத்திக்கும் அடித்தளத்தில் அமைந்திருந்தது.

பிப்ரவரி புரட்சியின் தன்னெழுச்சியும் நனவும்

ஆயினும், ரஷ்ய முதலாளித்துவத்தின் அடுத்தடுத்த அடியெடுப்புகள், முன்னோக்கு தொடர்பான அதிமுக்கிய பிரச்சினைகளை எழுப்பின, அவை பிளெக்ஹானோவின் இரண்டு கட்டக் கருத்தாக்கத்தின் பலவீனங்களையும் பின்விளைவுகளையும் அம்பலப்படுத்தின. 1905 புரட்சியானது, தோழர் ஃபிரெட் வில்லியம்ஸின் உரையில் நாம் கண்டதைப் போல, தொழிலாள வர்க்கத்தின் பிரம்மாண்டமான சமூக சக்தியை எடுத்துக்காட்டியது மட்டுமல்ல, அதனுடன் பிணைந்து, முதலாளித்துவ வர்க்கத்தின் எதிர்ப்புரட்சிகர பாத்திரத்தையும் எடுத்துக்காட்டியது. 1905 இல் பிளெக்ஹானோவ், அப்போது ரஷ்ய சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் மென்ஷிவிக் கன்னையுடன் தொடர்புபட்டிருந்த நிலையில், புரட்சியானது முதலாளித்துவ தன்மை கொண்டதாக இருக்கும் என்று எழுதினார், “முதலாளித்துவம் பலவீனப்படுவதை” அது குறிக்கவில்லை, மாறாக ”முதல்முறையாகவும் உண்மையான வழியிலும், முதலாளித்துவம் பரந்த வகையிலும் துரிதமான வகையிலும் ஆசிய வழியில் அல்லாமல் ஐரோப்பிய வழியில் அபிவிருத்தி காண்பதற்கு பாதை உருவாக்கித் தந்து” அதன்மூலம் “முதன்முறையாக ஒரு வர்க்கமாக முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சியை” சாத்தியமாக்கும் என்பதே அதன் அர்த்தமாக இருந்தது.[2]

ஆனால் அதிகாரத்தை விரும்பாத ஒரு வர்க்கத்திற்கு, புரட்சியின் பிரதான உந்து சக்தியாக இருந்த வர்க்கத்தை —தொழிலாள வர்க்கம்— கண்டு மிரட்சி கண்டிருந்த ஒரு வர்க்கத்திற்கு அதிகாரத்தை மாற்றுவது என்பது எப்படி சாத்தியமாகும்? தொழிலாள வர்க்கத்தை பொறுத்தவரை, அது முதலாளித்துவத்தை அச்சுறுத்தி அதனை பிற்போக்குத்தன முகாமுக்கு தள்ளிவிடக் கூடாது என்ற அச்சத்தினால், தனது சொந்த நலன்களை முன்னெடுப்பதில் இருந்து ஒதுங்கியிருந்தாக வேண்டும் என்பது தான் இந்த முன்னோக்கின் தர்க்கம் அளித்த அர்த்தமாகும். நாம் காணவிருப்பதைப் போல, இந்த வேலைத்திட்டமும் முன்னோக்கும் தான், மென்ஷிவிக்குகளாலும், அவர்களோடு சேர்த்து சோசலிச புரட்சிக் கட்சியினாலும், பிப்ரவரி புரட்சியைத் தொடர்ந்து அபிவிருத்தி செய்யப்படுவதாக இருந்தது.

போல்ஷிவிக்குகளது தலைவரான லெனினின் முன்னோக்கு மிகவும் மாறுபட்டதாய் இருந்தது. ரஷ்ய புரட்சியானது ஒரு முதலாளித்துவ-ஜனநாயக புரட்சியாகத் தான் இருக்க வேண்டியிருந்தது, ஆயினும் இந்தப் புரட்சியின் அடிப்படைக் கடமைகள் முதலாளித்துவ வர்க்கத்தின் மூலமோ அல்லது அதனுடன் கூட்டணி சேர்ந்தோ நிறைவேற்றப்படப் போகாதவையாக, நிறைவேற்றப்பட முடியாதவையாக இருந்தன. கிராமப்புறங்களில் நிலப்பிரபுத்துவ உறவுகளைக் கலைப்பது இந்தக் கடமைகளில் மிகவும் முக்கியமானதாக இருந்தது. ஆயினும் ரஷ்யாவில் முதலாளித்துவ வர்க்கத்திற்கு இந்தக் கடமையை நிறைவேற்ற விருப்பமோ திறனோ இல்லாதிருந்தது. “விவேகமற்ற நடவடிக்கைகள்” மூலமாக பாட்டாளி வர்க்க கட்சிகள் அல்லாதவற்றை விரட்டி விடாமல் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என்று 1905 இல் பிளெக்ஹானோவ் விடுத்த அறிக்கைக்கு பதிலிறுத்த லெனின், “தாராளவாதிகளும் நிலப்பிரபுகளுக்கும் உங்களை மில்லியன் கணக்கான ‘இங்கிதமற்ற செயலுக்காக’ மன்னிக்கலாம் ஆனால் நிலத்தை எடுத்துச் செல்லக் கூடிய ஒரேயொரு ஆணைக்கு மன்னிக்க மாட்டார்கள்” என்றார். [3]

பதிலாக லெனின் ஜாரிச பிரபுத்துவத்தை “பாட்டாளிகளதும் விவசாயிகளதும் ஒரு ஜனநாயக சர்வாதிகாரத்தின்” மூலமாக தூக்கிவீசுகின்ற ஒரு வேலைத்திட்டத்தை முன்வைத்தார்; “சர்வாதிகாரம்” என்ற வார்த்தை அரசு அதிகாரம் என்ற மார்க்சிச அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தது. தொழிலாள வர்க்கம் விவசாயிகளுடன் கூட்டுச் சேர்ந்து அதிகாரத்தைக் கைப்பற்றும், பின் மிகத் தீவிர ஜனநாயக நடவடிக்கைகளை செயல்படுத்தும். ஆயினும், இந்தப் புரட்சியானது முதலாளித்துவ சொத்துறவுகளின் கட்டமைப்பை மாற்றிவிடாது மாற்ற முடியாது. “சமூக ஜனநாயகம் ரஷ்யாவில் நிலுவையில் இருக்கின்ற புரட்சியின் முதலாளித்துவத் தன்மை குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது” 1905 இல் அவர் எழுதினார், “அத்துடன் குறைந்தபட்ச ஜனநாயக வேலைத்திட்டத்திற்கும் அதிகபட்ச சோசலிச வேலைத்திட்டத்திற்கும் இடையிலான ஒரு தெளிவான பிரிப்புக் கோட்டின் மீதும் அது வலியுறுத்தி வந்திருக்கிறது... புறநிலையாக” அவர் மேலும் சேர்த்துக் கொண்டார், “வரலாற்றுரீதியான நிகழ்வுகளின் பாதையானது இப்போது துல்லியமாக ரஷ்ய பாட்டாளி வர்க்கத்தின் முன்பாக ஜனநாயக முதலாளித்துவப் புரட்சியை புரட்சியினூடாக நடத்துகின்ற கடமையை முன்வைத்திருக்கிறது...; இந்தக் கடமையானது ஒட்டுமொத்த மக்களும், ஒட்டுமொத்த குட்டிமுதலாளித்துவ மற்றும் விவசாய வெகுஜனங்களும் முகம்கொடுப்பதாகும்; அத்தகையதொரு புரட்சி இல்லாமல் சோசலிசப் புரட்சிக்கான ஒரு சுயாதீனமான வர்க்க அமைப்பின் சற்றேறக்குறைய நீண்ட அபிவிருத்தி என்பது நினைத்தும் பார்க்கவியலாதது. சிந்திக்கவியலாததாகும்.”[4]

ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் தத்துவமானது பிளெக்ஹானோவ் முன்வைத்த இரண்டு கட்டத் தத்துவம் மற்றும் லெனின் முன்வைத்த “பாட்டாளிகளதும் விவசாயிகளதும் ஜனநாயக சர்வாதிகாரம்” இரண்டையுமே நிராகரித்தது.

முதலாளித்துவ-ஜனநாயகப் புரட்சியின் அடிப்படைக் கடமைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டியிருந்தது என்பதை ட்ரொட்ஸ்கி அங்கீகரித்தார். முதலாளித்துவ அபிவிருத்தியின் “சமச்சீரற்ற” தன்மையானது ரஷ்ய பொருளாதாரத்தின் மற்றும் சமூகத்தின் ஒப்பீட்டளவிலான பின்தங்கிய நிலையில் வெளிப்படுத்தப்பட்டது. ஆயினும், ரஷ்ய பொருளாதாரத்திற்கும் உலகப் பொருளாதாரத்திற்கும் இடையிலான கலப்புறவின் ஒரு விளைவாக, இந்தப் பின்தங்கிய நிலைக்குள்ளாக, மிக முன்னேறிய தன்மையுடனான வர்க்க உறவுகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பரந்த அடுக்கு மற்றும் கைவினைஞர்களது அபிவிருத்தியை உள்ளடக்கிய அபிவிருத்தியில் சம்பந்தப்பட்டிருந்த முதலாளித்துவத்தின் உறுப்பு ரீதியான வளர்ச்சியைக் காட்டிலும், “மூலதனமானது முடியாட்சியின் நேரடியான ஒத்துழைப்புடன் மேற்கிலிருந்து நுழைந்தது, ஒரு குறுகிய காலகட்டத்திலேயே அது ஏராளமான புராதன நகரங்களை வர்த்தகம் மற்றும் தொழிற்துறை மையங்களாக மாற்றியது, அத்துடன் குறுகிய காலத்திற்குள், முன்னதாக முற்றிலும் மனிதர் வசித்திராத இடங்களிலும் கூட வணிக மற்றும் தொழிற்துறை நகரங்களை உருவாக்கியது. “[5] என்று ட்ரொஸ்கி 1906ல் எழுதினார்.

இந்த நிகழ்வுப்போக்கை ட்ரொட்ஸ்கி பின்னர் “இணைந்த வளர்ச்சி விதி” (“law of combined development”) என்று குறிப்பிட்டார் — அதாவது “பயணத்தின் வெவ்வேறு கட்டங்களும் ஒன்றுசேர்வது, தனித்தனி படிகளும் ஒன்றுபடுவது, புராதனம் மிக சமகால வடிவங்களுடன் ஒட்டிக் கொள்வது.”[6]

ரஷ்ய அபிவிருத்தியின் இந்த “இணைந்த மற்றும் சமச்சீரற்ற” தன்மையானது பல்வேறு வர்க்கங்களின் சமூக அங்கலட்சணத்தையும் அரசியல் நோக்குநிலையையும் தீர்மானித்தது. தொழில்மயமாக்கத்தின் வேகமும் குவிப்பும் வர்க்கப் போராட்டத்திற்கு ஒரு குறிப்பான வெடிப்பான தன்மையைக் கொண்டுவந்து சேர்த்தது.

முதலாளித்துவ வர்க்கத்தை பொறுத்தவரை, இது முழுக்க முழுக்க அந்நிய மூலதனத்தை ஆகவே ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தை சார்ந்ததாக இருந்தது. வர்க்கப் போராட்டத்தின் தீவிரநிலை என்பதன் அர்த்தம், ஜாருக்கு எதிராய் ஒரு புரட்சிகர இயக்கத்தின் அபிவிருத்தி என்பது தனியார் உடைமைக்கு எதிராக ஒரு தொழிலாள-வர்க்க இயக்கத்தைத் தூண்டிவிடும் என்று ரஷ்யாவின் தாராளவாத முதலாளித்துவம் தொடர்ந்து மிரட்சிகாணச் செய்வதாக இருந்தது. இவ்வாறாக அது தொடர்ந்து ஜாரின் கரங்களுக்குள் ஓடிக் கொண்டிருந்ததோடு நிலப் பிரபுத்துவத்துடனும் ஒரு கூட்டணிக்கு எதிர்பார்த்தது.

இந்த நிகழ்வுப்போக்கானது, ஐரோப்பாவில், ஓரளவு மாறுபட்ட வடிவத்தில், 1848 புரட்சிகளின் போது ஏற்கனவே காணக்கூடியதாக இருந்தது. 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஹங்கேரி, ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியாவிலான புரட்சிகர இயக்கங்கள் பெருமளவிலான தொழிலாள வர்க்கப் போராட்டங்களினால் பண்பிடப்பட்டன, முதலாளித்துவ வர்க்கம் இந்தப் புரட்சிக்கு அஞ்சி பிற்போக்குத்தனத்துடன் கூட்டுச் சேர்ந்தது. "எந்தப் போராட்டமாக இருந்தாலும், சமூகப் பிரச்சினைகள் ஒரு தெளிவற்ற கூறாக அதில் உள்ளே நுழைவதும் பின்புலத்திலேயே இருப்பதுமாக இருக்குமாயின், அத்துடன் அது தேசிய புத்துயிர்ப்பு அல்லது முதலாளித்துவ குடியரசுவாதத்தின் பதாகையின் கீழ் முன்னெடுக்கப்படுமாயின், அது வெற்றிபெற முடியாது” என்று ஜேர்மன் புரட்சியாளரான ஃபெர்டினாண்ட் லஸ்ஸால் மார்க்சுக்கு 1849 இல் எழுதினார். [7] “விருப்பத்திற்குரிய அமைதியின் நலனுக்காக பாட்டாளி வர்க்கத்தின் திட்டவட்டமான கோரிக்கைகள் முன்கொண்டு வரப்படாதிருக்கின்ற ... பொதுவான ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை” உபதேசிக்கும் “ஜனநாயகக் குட்டி முதலாளித்துவத்தின் கபடவேட வசனங்களுக்கு” தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பைக் குறிப்பிடுவதற்காக ”புரட்சி நிரந்தரமாய்!” என்ற வாசகத்தை மார்க்சும் ஏங்கெல்சும் கம்யூனிஸ்ட் கழகத்தின் மத்திய அதிகாரக் குழுவிற்கு அவர்கள் அனுப்பிய 1850 ஆம் ஆண்டு அறிக்கையில் முதன்முதலாய் பயன்படுத்தினர்.[8]

அரைநூற்றாண்டுக்குப் பின்னர் ரஷ்யாவில் இருந்த வர்க்க மோதலின் மட்டம் அதனினும் இன்னும் பெரியதாக இருந்தது, அத்துடன் முதலாளித்துவத்தின் புரட்சிகர வேட்கை, 1789 இல் மாபெரும் பிரெஞ்சுப் புரட்சியின் காலம் கூட வேண்டாம், 1848 இல் ஐரோப்பாவில் இருந்ததை விடவும், இன்னும் குறைந்திருந்தது. ஜாரை தூக்கிவீசுவதும் “ஜனநாயகக் கடமைகளை” தீர்ப்பதும் ரஷ்யாவில் தொழிலாள வர்க்கத்தின் தோள்களில் விழுந்திருந்தது, அத்தொழிலாள வர்க்கமே விவசாயப் பெருமக்களை தன்பின்னால் அணிதிரட்டி புரட்சியில் தலைமைப் பாத்திரம் வகிக்கப் போகிறது என ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார்.

லெனின் கூறியதற்கு எதிராய் ட்ரொட்ஸ்கி, தொழிலாள வர்க்கம் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்குமானால், அது வெறுமனே முழு “முதலாளித்துவ” கடமைகளுடன் தன்னை மட்டுப்படுத்திக் கொள்ள இயலாது, முதலாளித்துவ சொத்துறவுகளுக்குள்ளே தலையிடவும், சோசலிசத்தை அறிமுகப்படுத்த தொடங்கவும் நிர்ப்பந்தம் பெறும் என்று வலியுறுத்தினார். அரசு அதிகாரத்தைக் கையிலெடுத்த பின்னர், தொழிலாள வர்க்கம் என்ன வேலைத்திட்டத்தை அமல்படுத்தப் போகிறது? அது விவசாயிகளுடன் கூட்டுச் சேர்ந்து ஒரு அரசை ஸ்தாபிக்குமென்றால் கூட, தொழிலாள வர்க்கத்தின் கட்சியானது வேலைவாய்ப்பின்மைக்கும் உணவுப் பற்றாக்குறைகளுக்கும் எவ்வாறு பதிலிறுக்கப் போகிறது, அல்லது தொழிலாளர்களது வேலைநிறுத்தங்களுக்கும் முதலாளிகளின் கதவடைப்புக்கும் எவ்வாறு பதிலிறுப்பு செய்யப் போகிறது? 1909 இல் எழுதிய அவர், “பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க நலன்களுக்கும் புறநிலைமைகளுக்கும் [அதாவது ரஷ்யாவின் பின்தங்கிய நிலைக்கும்] இடையிலான முரண்பாடானது, பாட்டாளி வர்க்கம்” ஒரு “வர்க்கத் துறவறம்” மேற்கொண்டு “தன் மீதே அரசியல் மட்டுப்படுத்தலைத் திணித்துக் கொள்வதன் மூலமாக தீர்க்கப்பட்டு விட முடியும்” என்று நம்புவதற்காக லெனினை விமர்சனம் செய்தார்.

மென்ஷிவிக்குகள், “நமது புரட்சி ஒரு முதலாளித்துவப் புரட்சி” என்ற மேலோட்டமான கருத்தில் இருந்து முன்சென்று, அரசு அதிகாரம் முதலாளித்துவ வர்க்கத்திற்கு மாற்றப்படுவதை உறுதிசெய்வதற்காக, தாராளவாத முதலாளித்துவத்தின் நடத்தைக்கு தக்கவாறு பாட்டாளி வர்க்கம் அதன் அத்தனை தந்திரோபாயத்தையும் தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனைக்கு வந்துசேர்கிறார்கள் என்றால், போல்ஷிவிக்குகளும் “சோசலிச சர்வாதிகாரம் அல்ல, ஜனநாயக சர்வாதிகாரம்” என்ற அதேயளவு மேம்போக்கானதொரு கருத்தில் இருந்து முன்சென்று, அரசு அதிகாரத்தை கையில் கொண்டுள்ள பாட்டாளி வர்க்கமானது தன் மீதே ஒரு முதலாளித்துவ-ஜனநாயக வரம்புஎல்லையை திணித்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனைக்கு வந்து சேர்கின்றனர். இவ்விவகாரத்தில் இரண்டு தரப்பினருக்கும் இடையிலான வித்தியாசம் மிகக் குறிப்பிடத்தக்கது என்பது உண்மையே: மென்ஷிவிசத்தின் எதிர்ப்புரட்சிகர அம்சங்கள் ஏற்கனவே முழுக்க வெட்டவெளிச்சமாய் இருக்கிறது, போல்ஷிவிசத்தினுடையதோ வெற்றியின் சமயத்தில் ஒரு முக்கியமான அச்சுறுத்தலாய் ஆகவிருக்கிறது.[9]

ரஷ்யாவில் புரட்சிக்கு தொழிலாள வர்க்கம் மட்டுமே தலைமை கொடுக்க முடியும், அத்துடன் அதிகாரத்தை கையிலெடுத்த பின்னர், தொழிலாள வர்க்கமானது சோசலிசத் தன்மை கொண்ட நடவடிக்கைகளை அறிமுகம் செய்ய நிர்ப்பந்திக்கப்படும். இது புரட்சி “நிரந்தர”மானதாக இருப்பதற்கான ஒரு அர்த்தமாய் இருந்தது.

ஆனால் பின்தங்கிய ரஷ்யாவில் எவ்வாறு இது சாத்தியமானது? சமூக உறவுகளின் மிகவும் முன்னேறிய வடிவங்கள் எவ்வாறு பொருளாதாரரீதியாய் மிகவும் பின்தங்கிய, மற்றும் பெரும்பகுதி விவசாயிகளைக் கொண்ட ஒரு நாட்டில் அறிமுகப்படுத்தப்பட இயலும்? இந்த சிக்கலைத் தீர்ப்பதற்கான திறவுகோல் ரஷ்யாவையும் ரஷ்ய புரட்சியையும், ஒரு தனிமைப்பட்ட தேசிய நிகழ்வாய் புரிந்து கொள்ளாமல், மாறாக ஒரு சர்வதேசப் புரட்சியின் ஒரு ஒருங்கிணைந்த பாகமாகப் புரிந்து கொள்வதில் அமைந்திருந்தது.

1905 புரட்சியின் மத்தியில், ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எழுதினார்:

அத்தனை நாடுகளையும் தனது உற்பத்தி வழிமுறை மற்றும் வர்த்தகத்தின் மூலமாகப் பிணைத்ததன் மூலம், முதலாளித்துவமானது ஒட்டுமொத்த உலகத்தையும் ஒற்றைப் பொருளாதார மற்றும் அரசியல் உயிரினமாய் மாற்றியிருக்கிறது. இப்போது கட்டவிழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளுக்கு இது ஒரு சர்வதேச தன்மையை அளிக்கிறது, ஒரு விரிந்த தொடுஎல்லையைத் திறந்து விடுகிறது. தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் ரஷ்யா அரசியல் விடுதலை காண்பதென்பது அந்த வர்க்கத்தை வரலாறு இதுவரை அறிந்திராத ஒரு உயரத்திற்கு இட்டுச் செல்லும், அதற்கு அபரிமிதமான சக்தியையும் வளங்களையும் கொண்டுசேர்க்கும், உலக முதலாளித்துவத்தை இல்லாது ஆக்கும் முன்முயற்சியாளராக அதனை ஆக்கும், வரலாறு அதற்குத் தேவையான அத்தனை புறநிலைமைகளையும் உருவாக்கித் தந்திருக்கிறது...[10]

1905க்கும் 1917 பிப்ரவரி புரட்சிக்கும் இடையில் கடந்து சென்ற பன்னிரண்டு ஆண்டுகள் ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வை மேலும் ஊர்ஜிதமே செய்தன. ஐரோப்பாவின் இரத்தக்களரியான யுத்தக்களங்களில், ஒவ்வொரு நாட்டின் தொழிலாளர்களது தலைவிதியும் பின்னிக் கிடந்தது. அந்த மாபெரும் போரும், தேசிய-அரசு அமைப்புமுறையின் மாபெரும் முறிவும், அத்தனை தேசிய வேலைத்திட்டங்களின் முடிவைக் குறிப்பதாகவும் இருந்தது. உலகப் பொருளாதாரத்தை சோசலிசரீதியாய் மறுஒழுங்குசெய்வதை அந்நாளுக்கான வேலையாக அது வைத்தது. இது புரட்சி “நிரந்தரமாக” இருக்க வேண்டியிருந்த இன்னுமொரு அர்த்தமாக இருந்தது. பாரிய சர்வதேசப் படுகொலையின் மத்தியில் எழுதிய ட்ரொட்ஸ்கி விளக்கினார்:

ரஷ்யாவில் ஒரு உண்மையான புரட்சிகர முதலாளித்துவ ஜனநாயகம் இல்லை என்ற காரணத்தால் இங்கு ஒரு தேசிய முதலாளித்துவப் புரட்சி சாத்தியமில்லாதது. தேசிய புரட்சிகளுக்கான காலம், ஐரோப்பாவில், கடந்து போன ஒன்று, அதைப் போலவேதான் தேசிய போர்களுக்கான காலமும். அவை இரண்டுக்கும் இடையில் ஒரு ஆழமான உட்தொடர்பு இருக்கிறது. நாம் ஏகாதிபத்தியத்தின் —இதன் பொருள் ஒரு காலனித்துவ விரிவாக்க அமைப்புமுறை என்பது மட்டுமல்ல, மிக தனித்துவமான ஒரு உள்நாட்டு ஆட்சி வகையுமாகும்— சகாப்தத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இனியும் இது ஒரு முதலாளித்துவ தேசம் பழைய ஆட்சியை எதிர்க்கின்ற விவகாரமல்ல, மாறாக பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவ தேசத்தை எதிர்க்கின்ற விவகாரமாகும்.[11]

ஏப்ரலுக்கும் அக்டோபருக்கும் இடையில் போல்ஷிவிக் கட்சியின் அத்தியாவசியமான மூலோபாய அடித்தளத்தை இந்த முன்னோக்கு வழங்கியது, ஆயினும் லெனின் தலைமையிலான ஒரு உட்கட்சிப் போராட்டம் அதற்கு முன்பாய் அவசியப்படாமலில்லை. அதற்கு நான் இந்த உரையின் பின்னொரு பகுதியில் வருகிறேன்.

ஐந்து நாட்கள்

சொல்லபோனால் இந்த விரிவான அறிமுகத்திற்குள் தான் நாம் 1917 பிப்ரவரியின் நிகழ்வுகளையும் மற்றும் ஒட்டுமொத்தமாக ரஷ்ய புரட்சியையும் ஆய்வு செய்கிறோம். அந்த ஆண்டின் போது ரஷ்யாவின் அபிவிருத்தியும், இன்னும் கூறினால், அடுத்துவந்த சோவியத் ஒன்றியத்தின் தேசியவாத மற்றும் ஸ்ராலினிச சீரழிவும் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் சரியான தன்மைக்கான சக்திவாய்ந்த ஊர்ஜிதப்படுத்தலை வெவ்வேறு வடிவங்களில் வழங்கின.

கடந்த 80 ஆண்டுகளின் காலத்தில் வரலாற்றாசிரியர்களால் கூடுதல் விவரங்கள் வெளிக்கொணரப்பட்டிருக்கின்றன, அத்துடன் பிப்ரவரி புரட்சி தொடர்பாக ஏராளமான மதிப்புமிக்க படைப்புகள் இருக்கின்றன, என்ற அதேநேரத்தில், ஒட்டுமொத்தமாக ரஷ்ய புரட்சி மீதான ஆகச்சிறந்த விபரப் படைப்பாக ட்ரொட்ஸ்கியின் ரஷ்ய புரட்சியின் வரலாறு தான் இப்போதும் இருக்கிறது. இந்த உரையின் பிரதான விளைவாக இன்னும் அதிக பேர் அந்த நூலை வாசிக்க ஊக்கம் பெறுவார்கள் என்றால், அதனை ஒரு வெற்றியாகவே நான் கருதுவேன்.

1905 புரட்சியில் போலவே, பிப்ரவரி புரட்சி குறித்துமான மிக உடனடியான உண்மை என்னவாக இருந்ததென்றால், அங்கு பிரதான உந்து சக்தியாக இருந்தது தொழிலாள வர்க்கமே, இன்னும் குறிப்பாய் பெட்ரோகிராட் தொழிலாள வர்க்கமே என்பதாகும்.

பிப்ரவரி 23க்கு முன்பும் கூட, போர் மற்றும் பரிதாபகரமான பொருளாதார நிலைமைகளின் கீழ் ரஷ்யாவில் வர்க்கப் போராட்டமானது தீவிரப்பட்டுச் சென்று கொண்டிருந்தது. வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களின் எண்ணிக்கை, போர் வெடிப்பதற்கு சற்று முன்பாக 1914 ஜனவரி-ஜூலையில் 1.3 மில்லியனாக இருந்ததில் இருந்து அந்த ஆண்டின் ஆகஸ்ட்-டிசம்பரில் 10,000க்கும் கீழ் வீழ்ச்சி கண்டிருந்தது என்றால், அது 1915 இல் 500,000க்கும் அதிகமாகி விட்டிருந்தது, 1916 இல் கிட்டத்தட்ட 1 மில்லியனை எட்டியிருந்தது. பிப்ரவரி புரட்சிக்கு முன்வந்த வாரங்களில், வேலைநிறுத்தங்களின் எண்ணிக்கை துரிதமாய் விரிந்து சென்றது, 1905 இரத்த ஞாயிறு படுகொலையின் ஆண்டுதினத்தை அனுசரிக்கும் விதமாக நடந்தவொரு வேலைநிறுத்தத்தில் 186,000 தொழிலாளர்கள் பங்குபெற்றமை, பிப்ரவரி 22 அன்று பெட்ரோகிராட்டின் மிகப்பெரும் தொழிற்சாலையான புட்டிலோவ் தொழிற்சாலையில் 25,000 தொழிலாளர்களது கதவடைப்பு போராட்டம் ஆகியவையும் அதில் அடங்கும். அந்த வேலைநிறுத்தங்கள் மேலும் மேலும் அதிகமாய் அரசியல் குணாம்சம் பெற்றுக் கொண்டிருந்தன, முடியாட்சிக்கும் போருக்கும் முடிவுகட்ட கோரின.

புரட்சியும் கூட, போல்ஷிவிக் கட்சி பிரதான ஆதரவுத் தளம் கொண்டிருந்த பெரிதும் தொழிற்துறைமயப்பட்ட வைபோர்க் மாவட்டத்தில் தொழிலாளர்களது ஆர்ப்பாட்டங்களும் வேலைப் புறக்கணிப்புகளும் வெடித்ததுடன் ஆரம்பமாகியது.

சர்வதேசப் பெண்கள் தினமான பிப்ரவரி 23 அன்று (மேற்கத்திய நாட்காட்டியில் மார்ச் 8) வைபோர்க் மாவட்டத்தில் இருந்த நூற்பாலைத் துறையின் பெண் தொழிலாளர்கள் நீண்ட வேலை நேரங்கள், முடிவற்ற போர், உணவுப் பற்றாக்குறை மற்றும் ரொட்டி வரிசைகள் ஆகியவற்றால் சலிப்படைந்து, அன்று காலை ஒன்றுகூடி வேலைப்புறக்கணிப்பு செய்தனர். அக்கம்பக்கத்தில் இருந்த பெரும் உலோகத் தொழிற்சாலைகளில் இருந்த தமது சக தொழிலாளர்களையும் தங்களோடு இணைவதற்கு அவர்கள் அழைப்பு விடுத்தனர். [12]

பெட்ரோகிராட்டின் மிகப்பெரும் தொழிற்சாலைகளில் ஒன்றாக வைபோர்க் மாவட்டத்தில் இருந்த ஒரு எந்திர நிறுவல் தொழிற்சாலையான நியூ லெஸ்னர் தொழிற்சாலையில் இருந்த ஒரு தொழிலாளி அதன்பின் என்ன நடந்தது என்பதை பின்வருமாறு விவரித்தார்: “அந்த தெருவில் பெண்களது குரல்கள் கேட்டதும் எங்கள் துறையின் ஜன்னல்கள் திறந்தன, அந்தப் பெண்கள் ‘போர் ஒழிக! விலைவாசியேற்றம் ஒழிக! பட்டினி ஒழியட்டும்! தொழிலாளர்களுக்கு ரொட்டி வேண்டும்’ என்று கோஷமிட்டுக் கொண்டிருந்தார்கள்.... போர்க்குணமிக்க பெண்கள், கூட்டம் கூட்டமாய் அந்த சந்தினை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். எங்களைப் பார்த்தவர்கள் தங்கள் கைகளை ஆட்டி ‘வெளியே வாருங்கள்! வேலையை நிறுத்துங்கள்!’ என்று குரல்கொடுத்தார்கள். பனியுருண்டைகள் ஜன்னல்கள் மீது வீசப்பட்டன. நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் இணைவதற்கு முடிவுசெய்தோம்.” [13]

அந்த சமயத்தில் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு அழைப்பது போல்ஷிவிக் கட்சியின் மத்திய தலைமையின் கொள்கையில் இருக்கவில்லை என்றபோதிலும், வைபோர்க் கமிட்டி கூடி அந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிக்க முடிவுசெய்தது. மென்ஷிவிக், சோசலிஸ்ட் புரட்சிகரக் கட்சி அத்துடன் போல்ஷிவிக் கட்சியை சேர்ந்த தொழிலாளர்களும் இடம்பெற்றிருந்த மற்ற தொழிற்சாலைகளிலும் இதேபோன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன. 100,000க்கும் அதிகமான தொழிலாளர்கள், அல்லது மொத்த தொழிலாளர் படையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கையிலானோர் அந்த நாள் முடிவதற்குள் வேலைநிறுத்தம் செய்து கொண்டிருந்தனர்.

அடுத்த நாள் பிப்ரவரி 24, வெள்ளிக்கிழமை அன்று, அந்த வேலைநிறுத்தம் அனைத்து தொழிற்துறை தொழிலாளர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேரை, அதாவது 200,000க்கும் அதிகமானோரை உள்ளடக்கி விரிந்திருந்தது, வைபோர்க் மாவட்டத்தைத் தாண்டி விரிவடையத் தொடங்கியது. போர் உற்பத்தி உள்ளிட தொழிற்துறை உற்பத்திக்கான மையங்களாக இருந்த பிரம்மாண்டமான தொழிற்சாலைகள் புரட்சிகர நடவடிக்கைக்கும் கிளர்ச்சிக்குமான மையங்களாய் ஆகின. அந்த நாள் போலிசுடன் மோதல்கள் தொடங்குவதையும் கண்டது. ஆயினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சுடுவதற்கு இராணுவத்திற்கு இன்னும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கவில்லை, தொழிலாளர்களுக்கும் சிப்பாய்களுக்கும் இடையில் சகோதரத்துவம் தோன்றியதற்கான ஆரம்ப அறிகுறிகள் அங்கே இருந்தன.

மூன்றாம் நாள் சனிக்கிழமை பிப்ரவரி 25 அன்று, வேலைநிறுத்தம் விரிவடைந்து நடைமுறைரீதியான பொதுவேலைநிறுத்தம் போல ஆகியிருந்தது. கிட்டத்தட்ட 250,000 தொழிலாளர்கள் பங்குபெற்றனர். வேலைநிறுத்தங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் ஒடுக்குவதில் போலிஸ் ஒரு முன்னிலைப் பாத்திரம் ஆற்றியது. நகர சிப்பாய்களுக்கும் போலிசுக்கும் இடையில் ஒரு மோதல் தொடங்கியது. ஒரு சம்பவத்தில், குதிரைப்படை சிப்பாய்கள் ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதில் போலிசுக்கு உதவ மறுத்ததோடு நில்லாமல், போலிஸ் மீதே தாக்குதல் நடத்தியதோடு அவர்களது ஆணையரைக் கொன்றுவிட்டனர்.

போர் முனைப்புக்கு அபாயமாகத்தக்க ஒரு கிளர்ச்சியை ஒடுக்குவதற்கு கூடுதல் அதிரடியான நடவடிக்கை எடுக்கும்படி இரண்டாம் சார் நிக்கோலஸ், பெட்ரோகிராட் இராணுவ மாவட்டத்தின் கமாண்டரான கபலோவுக்கு உத்தரவிட்டார். “தலைநகரின் இந்த அத்தனை ஒழுங்கின்மைகளையும் நாளைக்குள்ளாக நீங்கள் நிறுத்த வேண்டும் என்று நான் உத்தரவிடுகிறேன். ஜேர்மனியுடனும் ஆஸ்திரியாவுடனும் போர் நடந்து கொண்டிருக்கின்ற இந்த சிக்கலான நேரத்தில் இவற்றை அனுமதிக்க முடியாது.” வீதிகளில் கூடுவதற்கு தடைவிதிக்கும் உத்தரவைப் பிறப்பித்து கபலோவ் பதிலிறுப்பு செய்தார். மாலையில் கைதுகளும் நடத்தப்பட்டன, கைதானவர்களில் போல்ஷிவிக்குகளது பெட்ரோகிராட் கமிட்டியின் ஐந்து உறுப்பினர்களும் இருந்தனர், ஆக போல்ஷிவிக்குகளது நேரடி வழிகாட்டல் வைபோர்க் அமைப்பின் தோள்களில் விழுந்தது.

நான்காவது நாள் பிப்ரவரி 26 ஞாயிற்றுக்கிழமை, தொழிற்சாலைகள் மூடியிருந்தன. ஆயினும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தன, நிக்கோலஸின் உத்தரவுகளை கபலோவ் இரத்தக்களரியான வன்முறையுடன் பின்பற்றினார். பணியமர்த்தாத (non-commissioned) அதிகாரிகள் கொண்ட பயிற்சிப் படையினர் உள்ளிட நம்பகரமான இராணுவப் பிரிவுகளை அணிதிரட்டிய அவர், கூட்டங்களின் மீது சுடுவதற்கு துருப்புகளுக்கு உத்தரவிட்டார். நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

26 ஆம் தேதியன்று மாலையில் நடந்த ஒரு முக்கியமான சம்பவம் அடுத்த நாளில் நிகழவிருப்பனவற்றுக்குக் கட்டியம் கூறுவதாக இருந்தது. அரச காவற்படையின் பவலோவ்ஸ்கி பிரிவு, அவர்களது சொந்த பயிற்சிப் படையானது தொழிலாளர்கள் மீது சுட்டதன் மீது கோபமடைந்து கிளர்ச்சி செய்தது.

27 ஆம் தேதி காலை, வோலின்ஸ்கி பிரிவின் ஒரு கலகத்துடன் சிப்பாய்களது கலகம் தொடங்கியது. முந்தைய நாளில் தொழிலாளர்கள் மீது சுட உத்தரவிட்டிருந்த தங்களது கமாண்டரை அவர்கள் சுட்டுக் கொன்று விட்டனர். கலகக்காரர்கள் அருகிலிருந்த படைப்பிரிவுகளுக்குச் சென்று அங்கும் கிளர்ச்சிக்கு ஊக்குவித்தனர். ஒன்றன்பின் ஒன்றாக வேறுவேறு படைப்பிரிவுகளும் புரட்சியில் இணைந்தன. அரச துருப்புகளை ஒன்றுதிரட்டும் ஜாரின் கமாண்டர்களது முயற்சிகள் தோல்விகண்டன. தொழிலாளர்களது’ கிளர்ச்சி விரிவடைந்தது. அரசாங்க கட்டிடங்கள் கையகப்படுத்தப்பட்டன, அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

பிப்ரவரி புரட்சிக்கு யார் தலைமை கொடுத்தார்கள்? நிகழ்வுகளை வழிநடத்துவதற்கு மத்தியப்பட்ட எந்த அரசியல் கட்சியும் அங்கே இல்லை. மென்ஷிவிக்குகளும் சோசலிஸ்ட் புரட்சியாளர்கள் கட்சியினரும் ஒரு தொழிலாள வர்க்கப் புரட்சியை முன்கணிக்கவும் இல்லை, அதை அவர்கள் விரும்பவும் இல்லை. பிப்ரவரி நிகழ்வுகளின் போது, இந்த அமைப்புகளின் முன்னிலை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருந்தனர், நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் நிலைமை கட்டுப்பாட்டை மீறிப் போய் விடும் என்று அவர்கள் முதலாளித்துவக் கட்சிகளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தனர்.

The Mezhraiontsy குழு (மாவட்டங்களுக்கு இடையிலான குழு) —நாடுகடந்து நியூயோர்க்கில் வாழ்ந்த ட்ரொட்ஸ்கி இந்தக் குழுவுடன் தான் தொடர்புபட்டிருந்தார்— புரட்சியின் இரண்டாவது நாளில் ஒரு துண்டறிக்கை விநியோகம் செய்தது, ஒரு ஜனநாயகக் குடியரசுக்காகவும், சோசலிசத்துக்காகவும், அத்துடன் போருக்கு முடிவு கட்டுவதற்கும், ஒரு இடைக்கால புரட்சிகர அரசாங்கம் உருவாக்கப்படுவதற்கும் அது அழைப்பு விடுத்திருந்தது. ஆயினும், போல்ஷிவிக்குகளுக்கு இருந்த அளவுக்கான வெகுஜன ஆதரவுத் தளம், குறிப்பாக வைபோர்க்கில், அதற்கு இருக்கவில்லை.

கீழ்மட்ட போல்ஷிவிக் கட்சி அமைப்புகள், குறிப்பாக வைபோர்க் மாவட்ட கமிட்டி, ஒரு முக்கியமான பாத்திரத்தை வகித்தது. ஆனாலும் கட்சியின் மத்திய தலைமை தொடர்ந்து நிகழ்வுகளின் பின்னால் இருந்து கொண்டிருந்தது, நகரத்தில் இருந்த தலைமையானது கூடுதல் ஆக்கிரோஷத்துடன் பதிலிறுப்பு செய்வதற்கும், துண்டறிக்கைகள் விநியோகிப்பதற்கும், ஒரு பொதுவேலைநிறுத்தம் மற்றும் கிளர்ச்சிக்கு அழைப்பு விடுவதற்கும் போல்ஷிவிக் கட்சிக்குள்ளாக இருந்த தொழிலாளர்-செயல்பாட்டாளர்களிடம் இருந்து தொடர்ந்து அழுத்தம் பெற்றுக் கொண்டிருந்தது. பிப்ரவரி நிகழ்வுகளின் போது லெனின் உட்பட போல்ஷ்விக் கட்சியின் பெரும்பான்மையான தலைமை நாடுகடந்து வாழ்ந்து கொண்டிருந்தது, லெனின் சுவிட்சர்லாந்தில் இருந்தார், ஏப்ரல் வரையில் அவர் நாடு திரும்பியிருக்கவில்லை.

ஆயினும் இதன் அரத்தம், ட்ரொட்ஸ்கி குறித்தவாறு, “நேற்றுவரை அமைதியாக ஆட்சி செய்து கொண்டு, நீதி பரிபாலனம் செய்து கொண்டு, குற்றத்தை மெய்ப்பித்துக் கொண்டு, பிரதிவாதம் செய்து கொண்டு, வர்த்தகம் செய்து கொண்டு அல்லது ஆணையிட்டுக் கொண்டு, இன்று பார்த்தால் அவசர அவசரமாய் புரட்சிக்குத் தக்கவாறு தயாரிப்பு செய்து கொண்ட கண்ணியவான்களின் மனங்களில் மட்டுமல்லாது புரட்சி முழுக்க தூங்கிக் கொண்டிருந்துவிட்டு, மற்றவர்களிடமிருந்து எந்த விதத்திலும் வேறுபட்டவர்கள் அல்ல என்று சிந்திக்க விரும்பும் பல தொழில்முறை அரசியல்வாதிகள், முன்னாள் புரட்சியாளர்கள் மனங்களிலும் மிகவும் சந்தர்ப்பவசமாய் விழுந்துவிட்ட முற்றிலும் “தன்னியல்பான” ஒரு “புதிரான தத்துவம்” என்பது அல்ல.” [14]

அங்கே தொழிலாளர்கள் தலைமை கொடுத்திருந்தனர். அவர்கள் பல ஆண்டுகால சோசலிசப் பிரச்சாரத்தின் மூலமும், 1905 ஆம் ஆண்டின் கடுமையான அனுபவங்கள் மூலமும் பயிற்சியளிக்கப்பட்டிருந்த மற்றும் கல்வியூட்டப்பட்டிருந்த தொழிலாளர்களாவர். போர் வெடிப்பதற்கு முன்பே புரட்சிக்கு அச்சுறுத்திய 1912-14 வேலைநிறுத்த அலையை அவர்கள் கடந்து வந்திருந்தனர். அவர்கள் தாராளவாதிகளின் முதுகெலும்பற்ற தன்மையைக் கண்டிருந்தனர். போர் வெடித்த சமயத்தில் சிலர் தேசியவாத எழுச்சியால் செல்வாக்கு செலுத்தப்பட்டிருக்கலாம் அல்லது அதற்கு வளைந்து கொடுத்திருக்கலாம், ஆனாலும் போர் என்ன செய்திருந்தது என்பதை அவர்கள் கண்டுவிட்டிருந்தனர்.

இந்த தொழிலாளர்களில் பலரும், போர் வெடிப்பதற்கு முன்பாக பிரபலமாகி வந்த போல்ஷிவிக் கட்சியினால் வலிமையான செல்வாக்கு செலுத்தப்பட்டிருக்க வேண்டும். ட்ரொட்ஸ்கி எழுதியதைப் போல புரட்சியானது, “பெரும்பகுதி லெனினின் கட்சியால் கல்வியூட்டப்பட்டிருந்த நனவான மற்றும் புடம்போட்ட தொழிலாளர்களால்” தலைமை கொடுக்கப்பட்டது. ஆயினும், இந்தத் தலைமையானது தன்னளவில் “கிளர்ச்சியின் வெற்றியை உத்தரவாதம் செய்யுமளவுக்கு போதுமானதாய் நிரூபணமானது, ஆனால் புரட்சியின் தலைமையை பாட்டாளி வர்க்க முன்னணிப் படையின் கரங்களுக்கு உடனடியாகக் கைமாற்றும் அளவுக்கு அது போதுமானதாய் இருக்கவில்லை.”[15]

இரட்டை அதிகாரம்

பெட்ரோகிராட்டின் தொழிலாள வர்க்கமும் சிப்பாய்களும் புரட்சியை சாதித்திருந்தனர், ஆனாலும் அவர்களால் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற இயலவில்லை. அதற்குப் பதிலாக ஒரு சிக்கலான மற்றும் ஸ்திரமற்ற, அக்டோபர் புரட்சிவரையிலும் நீடித்த “இரட்டை அதிகார” ஆட்சி எழுந்தது, அக்டோபர் புரட்சி வரையிலும் அது நீடிப்பதானது.

பிப்ரவரி 27 அன்று, ஜார் அப்போதும் அதிகாரத்தில் இருந்த நிலையில், நாடாளுமன்றப் பிரதிநிதிகள், சூழ்நிலையை எவ்வாறு கட்டுப்படுத்தி புரட்சியை முடக்கலாம் என்று விவாதிப்பதற்காகக் கூடியிருந்தனர். நாடாளுமன்ற அங்கத்தவர்களது ஒரு இடைக்காலக் குழுவை உருவாக்க அவர்கள் முடிவு செய்தனர், அது, “அரசு மற்றும் பொது ஒழுங்கை மீட்சி செய்வதை தன் சொந்தக் கரங்களில் எடுக்கும் நிர்ப்பந்தத்திற்கு தான் தள்ளப்பட்டுள்ளதை காண்பதாக” அறிவிக்கின்ற ஒரு அறிக்கையை வெளியிட்டது.

டூமாவில் பிரதான கட்சிகளின் சார்பிலான பிரதிநிதித்துவத்தைப் பெற்றிருந்த தாராளவாத முதலாளித்துவமானது, பின்னாளில் அது மேற்கொண்ட கட்டுக்கதை கூறலுக்கு நேரெதிராய், எந்தவிதமான புரட்சிகர பாத்திரத்தையும் ஆற்றவில்லை. பரந்த மக்களைக் கண்டு மிரட்சி கண்டிருந்த அது, இரண்டாம் ஜார் நிக்கோலஸைக் கொண்டோ அல்லது அவர் இல்லாமலோ, ஏதோவொரு வகையில் எதேச்சாதிகார ஆட்சியைக் காப்பாற்றி விடுவதற்கு முயற்சி செய்தது. முதலாளித்துவ அரசியல்சட்ட ஜனநாயகக் கட்சி (கடேட்) தலைவரான போல் மில்யுகோவ் பின்னர் ஒப்புக்கொண்டார், “நாங்கள் இந்தப் புரட்சியை விரும்பவில்லை. இன்னும் குறிப்பாக இது போரின் சமயத்தில் வந்ததை நாங்கள் விரும்பவில்லை. இது நடந்து விடக்கூடாது என்பதற்காக நாங்கள் நப்பாசையுடன் போராடினோம்.” [16]

ஆயினும், ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு ஜாருக்கு அழுத்தமளிக்கும் அவர்களது முயற்சிகள் தோல்வியடைந்தபோது, பரந்த மக்கள் அதை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பது தெளிவாகி விட்ட நிலையில், அவரது முடிதுறப்பை நிர்ப்பந்திக்க, முதலாளித்துவத்தின் பிரதிநிதிகள் இராணுவத்தின் உயர் தலைமையை நோக்கித் திரும்பினர். புரட்சிக்கு முன்பாகவே, போரை நடத்துவதற்கு மேம்பட்ட நிலைமைகளை உருவாக்குவதற்காக, ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்குவது குறித்தும், இரண்டாம் நிக்கோலஸை பதவியகற்றுவது குறித்தும் கூட, இராணுவத்துக்கும் முதலாளித்துவக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் ஏற்கனவே விவாதிக்கப்பட்டிருந்தன. அத்தகைய முயற்சிகளுக்கு நேச ஏகாதிபத்திய நாடுகளும் ஓரளவுக்கு ஆதரவையும் சுட்டிக்காட்டியிருந்தன.

இராணுவத்தின் ஆதரவு இல்லாமல், ஜார் மார்ச் 2 அன்று முடிதுறந்தார், அவர் தனது அதிகாரங்களை அவரது தம்பியான மகா இளவரசர் மிக்கேயில் அலெக்சாண்ட்ரோவிச்சிற்கு மாற்றினார். அதேநாளில், இளவரசர் லு’வோவ் தலைமையில் இடைக்கால அரசாங்கம் உருவாக்கப்பட்டது, புதிய ஜாரின் கீழ் சேவைசெய்வதே அதன் நோக்கமாய் இருந்தது. ஆனால் உயிருக்கு அஞ்சி மிக்கேயிலும் முடிதுறந்தார். புதிய அரசாங்கத்துக்குத் தலைமை கொடுத்த முதலாளித்துவப் பிரதிநிதிகளது அனுகூலமான நோக்கங்களையும் தாண்டி, ரோமோனோவ் வம்ச ஆட்சி ஒழிக்கப்பட்டது.

டாரைட் அரண்மணையில் நாடாளுமன்றக் கமிட்டி உருவாக்கப்பட்ட பிப்ரவரி 27 அன்று அதேநாளில், அதே கட்டிடத்தில், இன்னுமொரு நிர்வாக அமைப்பும் உருவாக்கப்பட்டது, அதற்கு தொழிலாளர்கள் மற்றும் சிப்பாய்களது பரந்த எண்ணிக்கையிலானோரின் ஆதரவு இருந்தது, அதுதான் தொழிலாளர்கள்’ பிரதிநிதிகளது சோவியத் ஆகும், இது பின்னர் தொழிலாளர்கள் மற்றும் சிப்பாய்களது பிரதிநிதிகளது சோவியத் ஆனது. அதன் முதல் கூட்டத்தில் சுமார் 250 தொழிலாளர்கள், சிப்பாய்கள் மற்றும் சோசலிஸ்ட் புத்திஜீவிகள் பங்குபெற்றனர். மென்ஷிவிக்குகளும் மற்றும் சோசலிஸ்ட் புரட்சியாளர்கள் கட்சி என்ற விவசாயிகளில் ஒரு அடித்தளம் கொண்ட ஒரு குட்டி முதலாளித்துவக் கட்சியும், இந்த சோவியத்தின் ஆரம்பத் தலைமையில் மேலாதிக்கம் கொண்டிருந்தனர்.

“இரட்டை அதிகாரம்” என்ற நிகழ்வுப்போக்கு என்பது ரஷ்ய புரட்சிக்கே தனித்துவமாய் இருந்ததல்ல. முந்தைய புரட்சிகளிலும், ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை இடம்பெயர்க்கின்ற சமயத்தில், இரண்டு ஆளும் ஸ்தாபனங்கள் இருப்பது நடந்திருக்கிறது. அத்தகையதொரு சூழ்நிலையானது ஒரு உள்நாட்டுப் போரின் மூலமாகவே தீர்வை எட்ட முடியும். ஆயினும், பிப்ரவரி புரட்சிக்குப் பின்னர் எழுந்த இரட்டை அதிகார ஆட்சியின் தனித்தன்மை என்னவென்றால், புரட்சியின் இயக்கு சக்தியாக இருந்த தொழிலாளர்கள் மற்றும் சிப்பாய்களது ஆதரவைக் கொண்டிருந்த சோவியத்துகளின் தலைவர்கள், அதிகாரத்தை முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்துக்கு மாற்றுவதற்கு நனவுடனும் திட்டமிட்டும் வேலைசெய்தனர். பல மாதங்களுக்குப் பின்னர் சோவியத்துகளின் கட்டுப்பாட்டை போல்ஷிவிக்குகள் வெற்றி கண்ட போதுதான் இரண்டு அமைப்புகளுக்கும் இடையில் மறைக்கப்பட்டிருந்த அடிப்படையான வர்க்க மோதல் நேரடியாக எழுவதானது.

பரந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களும் சிப்பாய்களும் தலைமைக்காக நாடாளுமன்றத்தை எதிர்பார்க்கவில்லை, மாறாக சோவியத்தையை எதிர்நோக்கினர். ஆனால் சோவியத்துக்குத் தலைமை கொடுத்த கட்சிகளோ அதிகாரத்தை விரும்பவில்லை என்பதுடன் தொழிலாளர்கள்’ மற்றும் சிப்பாய்களது’ கோரிக்கைகளை நிவர்த்தி செய்யக் கூடிய நடவடிக்கைகளை எடுப்பதற்கும் விருப்பமின்றி இருந்தன. புரட்சிக்குத் தலைமை கொடுத்திருந்த தொழிலாளர்கள் மற்றும் சிப்பாய்களின் அடிப்படை ஜனநாயக மற்றும் சமூக அபிலாசைகள் முதலாளித்துவ நலன்களுடன் மோதல் கண்டதாய் இருந்தது, ஆயினும் சோவியத்தில் இருந்த அவர்களது பிரதிநிதிகளோ முதலாளித்துவ வர்க்கம் தான் ஆட்சி செய்தாக வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த “விசித்திரப் புதிர்” பல்வேறு வடிவங்களில் வெளிப்பாடு கண்டது. அதில் முதலாவது, அதிகாரம் மற்றும் இடைக்கால அரசாங்கத்தின் அங்கீகாரம் குறித்த பிரச்சினை. ஜார் நிக்கோலஸ் முடிதுறந்த உடனேயே, சோவியத் செயல் கமிட்டியின் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்த பிரதிநிதிகளுடன் சந்தித்து எந்த நிபந்தனைகளின் பேரில் சோவியத் புதிய அரசாங்கத்தை ஆதரிப்பதாக இருக்கும் என்பது குறித்து விவாதித்தனர். போரை முடிவுக்குக் கொண்டுவருவது, ஒரு குடியரசு, நிலம், அல்லது எட்டு-மணி நேர வேலை ஆகியவை உள்ளிட தொழிலாளர்கள் மற்றும் சிப்பாய்களது அடிப்படையான கோரிக்கைகளில் எதுவொன்றும் அவர்களது நிபந்தனைகளில் இடம்பெறவில்லை. ஆர்ப்பாட்ட சுதந்திரம் என்ற ஒற்றைக் கோரிக்கை மட்டுமே அவர்களிடம் இருந்தது. அதாவது, முதலாளித்துவ வர்க்கம் அவர்களை கைது செய்யாமலிருக்க உடன்படுகின்ற வரை, அவர்களிடம் அதிகாரத்தை ஒப்படைக்க அவர்கள் விரும்பினர், இன்னும் சொன்னால், ஆர்வம் கொண்டிருந்தனர்.

இரண்டாவதும் அதிகாரம் குறித்த பிரச்சினைக்கு நெருக்கமான தொடர்புடையதுமாய் இருந்தது, தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களது போராளிக் குழுக்களை ஆயுதபாணியாக்குவது —அல்லது நிராயுதபாணியாக்குவது— பற்றிய பிரச்சினை. புரட்சியின் போது, மிகவும் போர்க்குணமிக்க தொழிலாளர்கள் —இவர்களும் வைபோர்க் மாவட்டத்தில் குவிந்த எண்ணிக்கையில் இருந்தனர்— போராளிக் குழுக்களை உருவாக்கும் முன்முயற்சி எடுத்திருந்தனர். சோவியத்தானது, இந்த போராளிக் குழுக்களை தனது சொந்த அதிகாரத்தின் கீழ் ஒழுங்கமைக்க முனைந்ததன் மூலமாக இந்த ஸ்தாபகமாகி விட்டிருந்த உண்மையை அங்கீகரித்தது, நாடாளுமன்றக் கமிட்டி தனது சொந்த போராளிக் குழுக்களை அமைத்தது. இது இரண்டு தரப்பு போராளிக் குழுக்களுக்கும் இடையிலான ஒரு ஆயுதமேந்திய மோதலின், அதாவது உள்நாட்டுப் போரின், சாத்தியத்துக்கான நிலைமைகளை உருவாக்கியது.

பிப்ரவரி புரட்சியின் ஒரு வரலாற்றாசிரியர் குறிப்பிட்டதைப் போல, “ஏற்கனவே பிப்ரவரி 28 அன்று சோவியத் செயல் கமிட்டியானது தொழிலாளர்கள்’ போராளிக்குழுக்களது சுதந்திரத்தை தியாகம் செய்வதன் மூலமாக இந்த மோதலைத் தீர்ப்பதில் நாடாளுமன்றக் கமிட்டியுடன் ஒத்துழைக்க தான் விருப்பம் கொண்டுள்ளதை தெளிவாக்கி விட்டிருந்தது.”[17] இரண்டு போராளிக்குழுக்களையும் ஒன்றுபடுத்துவதற்கு, அதாவது மார்ச் 1 மற்றும் மார்ச் 7 அன்றான செயல் கமிட்டியின் முடிவுகளில் புனிதப்படுத்தப்பட்டவாறாய், தொழிலாளர்களை நிராயுதபாணியாக்குவதற்கும் தொழிலாளர்களது’ போராளிக்குழுக்களை முதலாளித்துவ வர்க்கத்தின் ஆளும் அதிகாரத்திற்கு கீழ்ப்படியச் செய்வதற்கும் அது வேலை செய்தது.

மூன்றாவதாய், தொழிலாளர்கள் தொழிற்சாலைகளுக்குத் திரும்புகின்ற பிரச்சினை. ஆரம்பத்தில் செயல் கமிட்டியானது, தொழிற்சாலைகளில் உழைப்பின் நிலைமைகளில் எந்தவித மாற்றமும் இல்லாத நிலையிலும், வேலையைத் தொடர்வதற்கான தேதியாக மார்ச் 5 ஐ முடிவு செய்திருந்தது. முதலாளித்துவ வர்க்கத்தை அச்சுறுத்துவதாக இருக்கும் என்ற காரணத்தின் அடிப்படையில் எட்டு-மணி நேர வேலைக்கான தொழிலாளர்களின் கோரிக்கைகளை அவர்கள் நிராகரித்தனர்.

ஆனால், தொழிலாளர்கள் விடயங்களை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டிருந்தனர், முக்கிய தொழிற்சாலைப்பகுதி தொழிற்சாலைகள் பலவற்றிலும் தொழிலாளர்கள் எட்டு மணி நேரம் வேலை முடிந்தவுடன் கூட்டம்கூட்டமாய் வேலையிலிருந்து கிளம்பி விட்டனர். உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு அத்தியாவசிய விடயம் என்று கூறி எட்டு-மணி நேர வேலையைத் தயக்கத்துடன் ஒப்புக்கொள்வதில் முடிந்தது. முதலாளித்துவ செய்தித்தொடர்பாளர்களில் ஒருவர் பின்வருமாறு விளக்கினார்: “மென்ஷிவிக்குகளுக்கான துரதிர்ஷ்டமாய், போல்ஷிவிக்குகள் ஏற்கனவே பயங்கரத்தின் மூலமாக உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பினை எட்டு-மணி நேர வேலையை உடனடியாக அறிமுகம் செய்ய ஒப்புக்கொள்ள நிர்ப்பந்தம் செய்து விட்டிருந்தனர்.”[18]

நான்காவது, இராணுவத்திற்குள்ளான உறவுகளின் பிரச்சினை. நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் இராணுவத்தின் மீதான கட்டுப்பாட்டை மீட்கும் முயற்சியில், சிப்பாய்கள் தங்கள் அதிகாரிகள் கூறும் ஒழுங்கிற்கு அடிபணிந்து நடக்க வேண்டும், தங்களது ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர், இதற்கு சோவியத் தலைவர்களும் ஆதரவாய் நின்றனர். ஆனால், இந்த முயற்சிகளை நிராகரித்து விட்ட சிப்பாய்கள், மார்ச் 1 உத்தரவு எண் 1 ஐ நிறைவேற்றுவதற்கு பெட்ரோகிராட் சோவியத்துக்கு நெருக்குதலளித்தனர். நாடாளுமன்றக் கமிட்டியிடம் இருந்து வருகின்ற எந்த உத்தரவும் சோவியத்தின் உத்தரவுக்கு முரண்பாடாய் இருக்கின்ற பட்சத்தில் அதற்குக் கீழ்ப்படிய வேண்டாம் என்று அந்த உத்தரவு அறிவுறுத்தியது. சிப்பாய்கள் ஆயுதங்களை தமது கட்டுப்பாட்டில் கொண்டிருப்பதற்கும், ஒவ்வொரு படையணியிலும் கமிட்டிகளைத் தேர்ந்தெடுப்பதற்கும் கூட அது அறிவுறுத்தியது.

மென்ஷிவிக்குகள் மற்றும் சோசலிஸ்ட் புரட்சியாளர்களது உயர்மட்ட தலைவர்கள் இல்லாத சமயத்தில் உத்தரவு எண் 1 நிறைவேற்றப்பட்டது. பின்னர், அவர்கள் பெட்ரோகிராட்டுக்கு இதன் அமலாக்கத்தை மட்டுப்படுத்துகின்ற உத்தரவு எண் 2 ஐ நிறைவேற்றுவதன் மூலமாக, முதலாம் உத்தரவை பலவீனமாக்க முயற்சி செய்தனர். ஆயினும் இராணுவத்துக்குள்ளாக உறவுகளை வலுப்படுத்துவதிலான இந்த முயற்சி தோல்வியடைந்தது, புரட்சியானது ஏற்கனவே இராணுவத்துக்குள், சிப்பாய்களுக்கும் அவர்களது அதிகாரிகளுக்கும் இடையில் அபிவிருத்தி கண்டு வந்த கிட்டத்தட்ட உள்நாட்டுப் போர் போன்ற ஒன்றை மேலும் ஊக்குவித்தது.

இறுதியானதும், மிக முக்கியமானதுமாய், போர் என்ற பிரதான முன்னுரிமைப் பிரச்சினை. முதலாளித்துவ வர்க்கத்தை பொறுத்தவரை “முழுமையான வெற்றிக்கான போர்” என்பதே பதாகையாக இருந்தது. போரின் பிரச்சினையை இரண்டு வாரங்களுக்கு உதாசீனம் செய்து விட்டிருந்ததற்குப் பின்னர், செயல் கமிட்டியானது மார்ச் 14 அன்று ஒரு தீர்மானம் நிறைவேற்றியது, உலக மக்களுக்கான ஒரு அறிக்கையாக இருந்த அது பல சமாதானவாத வசனங்களைக் கொண்டிருந்தது, ஆயினும், “உள்ளிருந்தும் வெளியிருந்துமான அத்தனை பிற்போக்குத்தனமான முயற்சிகளில் இருந்தும் எங்களது சொந்த சுதந்திரத்தை நாங்கள் உறுதியுடன் பாதுகாப்போம். ரஷ்ய புரட்சியானது நாடுபிடிப்பவர்களின் துப்பாக்கிமுனைகளுக்கு எதிராக ஒருபோதும் பின்வாங்காது, அத்துடன் அது அந்நிய இராணுவ சக்தியால் தான் நசுக்கப்படுவதை அனுமதிக்காது” என்று சூளுரைத்தது.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், போர் தொடரும் என்றது. இந்தத் தீர்மானம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தாலும் ரஷ்யாவிலுள்ள முதலாளித்துவக் கட்சிகளாலும் பாராட்டப்பட்டது.

செயல் கமிட்டியில் ஒரு உறுப்பினரும், முன்னதாக 1915 இல் சிம்மர்வால்ட் போரெதிர்ப்பு மாநாட்டில் பங்குபற்றியிருந்தவருமான, சுக்ஹானோவ், பின்னாளில் தனது நினைவுகளில் நேர்மையாக பின்வருமாறு எழுதினார்:

‘முழுமையான வெற்றியை நோக்கிய போர்’ என்ற கருத்துக்கு குழிபறித்துக் கொண்டிருந்த ஒரு இயக்கத்துடன் முதலாளித்துவத்துக்கு எதுவொன்றும் பொதுவாக இல்லை என்பது தெளிவாக இருந்தது. அத்தகையதொரு எந்த இயக்கத்தையும், ஜேர்மன் தூண்டுதலின் விளைவாய் மட்டுமே, அது கண்டது, அல்லது குறைந்தபட்சம் பேசியது..... ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தையும் முதலாளித்துவ வர்க்கம் புரட்சிக்கு இணங்கி நடப்பதையும் எதிர்பார்ப்பதாக இருந்தால், தற்காலிகமாக போருக்கு எதிரான சுலோகங்களை மூட்டைகட்டி வைப்பதும், ரஷ்ய பாட்டாளி வர்க்கத்தின், இன்னும் குறிப்பாய் பீட்டர்ஸ்பேர்க் பாட்டாளி வர்க்கத்தின் பதாகையாக ஆகிவிட்டிருந்த சிம்மர்வால்ட் பதாகையை கொஞ்ச காலத்திற்கு சுருட்டி வைப்பதும் அவசியம் என்பது ஒரு முன்நிபந்தனையாகி விட்டிருந்தது தெளிவாகியிருந்தது.[19]

லார்ஸ் லிஹ் மற்றும் புதிய வரலாற்றுப் பொய்மைப்படுத்தல்

பிப்ரவரி மற்றும் மார்ச் ஆரம்பத்தின் நிகழ்வுகள், கட்டவிழ்ந்து கொண்டிருந்த புரட்சியில் முதல் கட்டத்தைக் குறித்தன. அடுத்த கட்டமானது, புதிய சூழ்நிலையால் முன்நிறுத்தப்பட்டிருந்த அரசியல் கடமைகள் கூர்மையாக தெளிவுபடுத்தப்படுவதன் மூலமாக தயாரிப்பு செய்யப்பட வேண்டியிருந்தது. என்ன நடந்தேறியிருந்தது என்பதை பகுப்பாய்வு செய்வதில் சுவிட்சர்லாந்தில் இருந்த லெனின் மற்றும் நியூயோர்க்கில் இருந்த ட்ரொட்ஸ்கி இருவருமே துல்லியத்துடன் பதிலிறுப்பு செய்தனர். ட்ரொட்ஸ்கி, மார்ச் 6 (O.S.) அன்று நோவி மிர் இல் வெளியான ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார், “நகர்ப்புற பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான புரட்சியின் படைகளுக்கும், தற்காலிகமாக அதிகாரத்தில் இருக்கும் எதிர்ப்புரட்சிகர தாராளவாத முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலான ஒரு பகிரங்கமான மோதல் முற்றிலும் தவிர்க்கமுடியாததாகும்.”[20]

மார்ச் 3 அன்று, லெனின் ரஷ்யாவுக்கு வழிகாட்டுதல்களை அனுப்பியிருந்தார்: “நமது தந்திரோபாயம் — முழுமையான நம்பிக்கையின்மை. இடைக்கால அரசாங்கத்துக்கு எந்த ஆதரவுமில்லை. எல்லாவற்றுக்கும் மேல் கெரென்ஸ்கி மீதான நம்பிக்கையின்மை. ஒரே உத்தரவாதமாய் பாட்டாளி வர்க்கத்தை ஆயுதபாணியாக்குங்கள்.” மார்ச் 7 அன்று அவர் எழுதிய முதல் “தூரத்திலிருந்தான கடித”த்தில் லெனின் எழுதியிருந்தார்: “ஜாரிச பிற்போக்குத்தனத்திற்கு எதிரான போராட்டத்தின் நலன்களின் பேரில் புதிய அரசாங்கத்துக்கு தொழிலாளர்கள் ஆதரவளித்தாக வேண்டும் என்று சொல்கின்ற எவரொருவரும்... தொழிலாளர்களின் துரோகி, பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்கு துரோகமிழைப்பவர், அமைதிக்கும் சுதந்திரத்திற்கும் துரோகமிழைப்பவர் ஆவார். ஏனென்றால் நடைமுறையில், சாட்சாத் இந்த புதிய அரசாங்கம்தான் ஏற்கனவே ஏகாதிபத்திய மூலதனத்தின் மூலமும், போர் மற்றும் சூறையாடலின் ஏகாதிபத்தியக் கொள்கையின் மூலமும் கைகால்கள் கட்டிப் போடப்பட்டிருக்கிறது...”[21]

இந்த முன்னோக்கானது லெனினின் அடுத்துவந்த தூரத்தில் இருந்தான கடிதங்கள் இல் அபிவிருத்தி செய்யப்பட்டது, அதில் அவர் அதிகாரம் சோவியத்துக்கு மாற்றப்படுவதற்கும், போருக்கு உடனடியாக முடிவுகட்டுவதற்கும், பண்ணை நிலங்களை விவசாயிகள் பறிமுதல் செய்வதற்கும், உற்பத்தி தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் வருவதற்கும், சோசலிசத்துக்கான உருமாற்றத்தை தொடக்குவதற்கும் அழைப்புவிடுக்கின்ற ஒரு வேலைத்திட்டத்தை வரைந்துகாட்டினார்.

லெனினின் நிலைப்பாடுகள் 1917 மார்ச்சிலும் ஏப்ரலிலும் போல்ஷிவிக் கட்சிக்குள்ளாக ஒரு பெரும் அரசியல் மோதலைத் தூண்டியது, அதில் அவர் ட்ரொட்ஸ்கியுடன் தொடர்புபடுத்தப்பட்டு வந்த ஒரு அரசியல் நிலைப்பாட்டுக்காகப் போராடினார். அவ்வாறு செய்கையில், லெனின் போல்ஷிவிக் கட்சியின் சில பிரிவுகளுடன், குறிப்பாக காமனேவ், ஸ்ராலின் மற்றும் முரனோவ் —மார்ச் மத்தியில் பெட்ரோகிராட் திரும்பியிருந்த இவர் பிராவ்தாவின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றிருந்தார்—ஆகியோருடன் தொடர்புபட்டிருந்த, கட்சியை இடைக்கால அரசாங்கத்துக்கும் போருக்கும் ஆதரவளிப்பதை நோக்கி நோக்குநிலை அமைக்க முயன்ற ஒரு வலது-சாரி கன்னையுடன் சண்டையிட வேண்டி வந்தது.

இந்தப் போராட்டத்தில், லெனினுக்கு போல்ஷிவிக் கட்சிக்குள்ளாகவே, சக்தி வாய்ந்த கூட்டாளிகள் இருந்தனர், குறிப்பாக அதன் தொழிலாள-வர்க்க அடித்தளம் இருந்தது. வரலாற்றாசிரியர் அலெக்ஸாண்டர் ரபினோவிட்ச் குறிப்பிட்டுக் காட்டுவதைப் போல, மார்ச் 1 சமயத்திலேயே, கட்சியின் வைபோர்க் மாவட்ட குழுவானது, “தொழிலாளர்கள் உடனடியாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் நாடாளுமன்றத்தின் இடைக்கால குழு ஒழிக்கப்படுவதற்கும் அழைக்கின்ற ஒரு தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது.”

ஸ்லியாப்னிகோவ் தலைமையிலான மத்திய குழு பிரிவு, இடைக்கால அரசாங்கம் “பெரும் முதலாளிகள் மற்றும் பெரும் நிலப்பிரபுக்களின் பிரதிநிதி”யாக இருந்தது என்றும் “இடைக்கால புரட்சிகர அரசாங்கம் உருவாக்கப்படுவதற்கான ஒரு போராட்டத்திற்கு முன்முயற்சியளிப்பது” அவசியம் என்றும் அறிவிக்கின்ற ஒரு தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. ஆயினும், இந்தத் தீர்மானம் கட்சியின் பீட்டர்ஸ்பேர்க் குழுவின் முன்பாகக் கொண்டுவரப்பட்டபோது, ”இடைக்கால அரசாங்கத்தின் கொள்கைகள்... மக்களின் நலன்களுக்கேற்றதாய் இருக்கின்ற வரையில்” அதனை போல்ஷிவிக் கட்சி எதிர்க்காது என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக, மென்ஷிவிக்குகளது சூத்திரத்தை பிரதிபலித்த சூத்திரத்தை நிராகரித்தது. [22]

இந்த வரலாறு, ஸ்ராலினிஸ்டுகளால், ட்ரொட்ஸ்கியையும், அத்துடன் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் முக்கியத்துவத்தையும் வரலாற்றில் இருந்து அகற்றவும், தமது சொந்த தேசியவாத மற்றும் சந்தர்ப்பவாத அரசியலை நியாயப்படுத்தவுமான ஒரு பொதுவான முயற்சியின் பாகமாக, இடையறாத பொய்மைப்படுத்தலின் இலக்காக இருந்து வந்திருக்கிறது. ஆயினும், கவனமான வரலாற்றாசிரியர்களை பொறுத்தவரை, ரஷ்ய புரட்சியின் அடிப்படை அரசியல் இயக்கவியல் தெளிவாகவே இருந்து வந்திருக்கிறது: இரட்டை அதிகாரத்தின் முரண்பட்ட குணாம்சம், சோவியத்துகளுக்கும் இடைக்கால அரசாங்கத்துக்கும் இடையிலான உறவு, போல்ஷிவிக் கட்சிக்குள்ளான பிரிவுகளது முக்கியத்துவம், ஏப்ரலில் லெனின் நாடு திரும்பியதன் தாக்கம்.

நாம் இப்போது, அடிப்படையாக புதிய-ஸ்ராலினிச குணாம்சம் கொண்ட, வரலாற்றுப் பொய்மைப்படுத்தலின் ஒரு புதுப்பிக்கப்பட்ட பிரச்சாரத்தைக் கண்டு வருகிறோம். அதற்கு பிரபலமான உதாரணம், சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பினாலும் (ISO) மற்றும் அதன் வெளியீடான ஹேமார்க்கெட் மூலமும் பெருமளவில் விளம்பரப்படுத்தப்படுகின்ற வரலாற்றாசிரியர் லார்ஸ் லிஹ். சொல்லப் போனால், இதே மாலையில் லிஹ், நியூ யோர்க்கில், வரலாற்றுச் சடவாதம் மாநாட்டில், போல்ஷிவிக் கட்சிக்குள் மார்ச் மாதத்திலான பிளவுகள் என்ற பொருளில் ISO அங்கத்தவரான ரொட் கிறித்தியான் உடன் ஒரு அறிஞர் குழுவில் பங்குபற்றியிருந்தார்.

சமீபத்திய பல கட்டுரைகளில், லிஹ், பிப்ரவரி புரட்சியைப் பின்தொடர்ந்த மாதங்களில் போல்ஷிவிக் கட்சிக்குள்ளாக எந்த அடிப்படை கருத்துபேதங்களும் இருந்திருக்கவில்லை என்றும், பிப்ரவரி புரட்சிக்கும் அக்டோபர் புரட்சிக்கும் இடையில் பிசிறில்லாத ஒரு தொடர்ச்சி இருந்ததென்றும், “இரட்டை அதிகாரம்” என்பது இரண்டு புரட்சிகளுக்கும் இடையிலான காலகட்டத்தைப் புரிந்துகொள்வதில் ஒரு பயனுள்ள வகைப்பாடு அல்ல என்றும், அத்துடன், நம்பவியலாத வண்ணம், ரஷ்ய புரட்சிக்கும் சோசலிசத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் வாதிடுகிறார்.

2014 இல் வெளியான “முழு ஆயுதபாணியாக: 1917 மார்ச்சில் காமனேவும் பிராவ்தாவும்” என்ற லிஹ் இன் கட்டுரையானது, மார்ச்சில் ஸ்ராலின் மற்றும் காமனேவின் நிலைப்பாடானது அக்டோபரில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு போல்ஷிவிக்குகளை “முழுமையாகத் தயாரிப்புசெய்தது” என்று வாதிடுவதற்காய் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.[23] தனது ”விவரிப்பை” கட்டுமானம் செய்வதில், லிஹ், காமனேவ், முரனோவ் மற்றும் ஸ்ராலின் மார்ச் 15 அன்று நாடு திரும்பியதற்குப் பின்னர் பிராவ்தாவில் வெளியான தலையங்கங்களில் ஒன்றே ஒன்றை மேற்கோள் காட்டுகிறார். கையெழுத்திடாமல், ஆனால் காமனேவ் எழுதியாகக் கூறப்படும் அந்த தலையங்கமானது கூறுகிறது, “பழைய ஆட்சி மற்றும் முடியாட்சியை முழுமையாகக் கலைப்பது, சுதந்திரங்களை அமலாக்குவது ஆகியவற்றில் நாம் [புதிய இடைக்கால அரசாங்கத்தை] முழு ஆற்றலுடன் ஆதரிக்கின்ற அதே வேளையில், இடைக்கால அரசாங்கம் அது அறிவித்திருக்கும் நோக்கங்களில் செயல்படத் தவறுகின்ற ஒவ்வொரு முறையும், தீர்மானகரமான போராட்டத்தில் இருந்தான ஒவ்வொரு விலகலையும், மக்களின் கைகளைக் கட்டிப் போடுவதற்கோ அல்லது தகிக்கும் புரட்சிகரத் தீயை அணைப்பதற்கோ செய்யும் ஒவ்வொரு முயற்சியையும் அதே முழு ஆற்றலுடன் விமர்சனம் செய்வோம்.”

இந்த தலையங்கமானது, பழைய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க அழைக்கும் எவரொருவரையும் “பாட்டாளி வர்க்க நலன்களுக்குத் துரோகமிழைப்பவர்” என குணாம்சப்படுத்திய லெனினின் “தூரத்தில் இருந்தான கடித”த்துடன் நேரடியாக மோதலுறுகிறது. சொல்லப் போனால், பிராவ்தா பின்னர் இந்தக் கடிதத்தை பிரசுரித்தபோது -தூரத்தில் இருந்தான கடிதங்களில் பிரசுரிக்கப்பட்ட ஒரேயொரு கடிதம்- ஆசிரியர்கள் அதில் பல பத்திகளை அகற்றி விட்டனர், அதில் இதுவும் ஒன்று. லெனின் எழுதியிருந்ததன் முக்கியத்துவத்தை அவர்கள் தெளிவுபட புரிந்து வைத்திருந்தனர்.

காமனேவ் எழுதிய கட்டுரைக்கு வெளிப்படையாக இருக்கின்ற பொருள்விளக்கத்தை, ஒட்டுமொத்த தலையங்க கட்டுரையையும் படிக்காத “நுனிப்புல் வாசகர்களின்” விளைபொருள் என்று கூறி லிஹ் நிராகரிக்கிறார். லிஹ் மொழிபெயர்ப்பின் படி அந்த தலையங்க கட்டுரை அதன்பின் கூறுகிறது: “ஜனநாயக சக்திகள் மற்றும் இடைக்கால அரசாங்கத்தின் பாதைகள் பிரிந்து நிற்கும் — முதலாளித்துவத்துக்கு உணர்வில் உறைக்கும் சமயத்தில், அது தவிர்க்கவியலாமல் புரட்சிகர இயக்கத்தை தடுத்துநிறுத்துவதற்கு முனையும், பாட்டாளிகளதும் விவசாயிகளதும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்கின்ற புள்ளிவரை அதனை அபிவிருத்தி காண அனுமதிக்காது.... அவர்களது கோரிக்கைகளின் இந்த முழுப் பூர்த்தியானது முழுமையான மற்றும் பூரணமான அதிகாரம் அவர்களது சொந்தக் கரங்களில் இருக்கும்போது மட்டுமே சாத்தியமாகும்.”

இது உண்மையில் ஒரு முழுமையான மென்ஷிவிக் வாதம். ’இப்போது, இடைக்கால அரசாங்கம் —அதாவது முதலாளித்துவ வர்க்கம்— புரட்சிகர நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது. அவ்வாறு செய்வதில் அது ஊக்குவிக்கப்பட வேண்டும்.’ அப்பட்டமான சந்தர்ப்பவாத பாணியில், புரட்சிகரக் கடமைகள் சற்று காலவரையற்ற எதிர்காலத்திற்கு தள்ளி வைக்கப்பட வேண்டும். இது இடைக்கால அரசாங்கத்துக்கான ஆதரவை நியாயப்படுத்துவதற்காகக் கூறப்படுகின்ற வாதமாகும்.

காமனேவின் அறிக்கைக்கு லிஹ் தனது சொந்த விளக்கத்தைச் சேர்க்கிறார்:

அரசியல் வாழ்க்கைக்கு புதிதாக விழித்துக் கொண்ட, பாரிய பரந்த எண்ணிக்கையிலான சிப்பாய்களும் தொழிலாளர்களும், இப்போதும் புதிய இடைக்கால அரசாங்கத்தையும், அதன் வெளித்தோற்றத்திற்கு பிரமாதமாகத் தெரியும் ஜாரிச-எதிர்ப்பு செயல்வரலாற்றுச் சான்றுகளையும் நம்பிக்கொண்டிருந்தனர். இந்த நம்பிக்கையென்பது, வெறுமனே புரட்சிகர நற்தோற்றத்தின் ஒரு பிரமையை அடிப்படையாகக் கொண்டதாய் இருக்கவில்லை, ஏனென்றால் சூழ்நிலையை நாம் சற்று பெருந்தன்மைக்கும் அதிகமான ஒன்றுடன் விவரிப்பதைப் போல நடந்து கொள்கிறோம். உண்மை என்னவென்றால் இந்தக் கால இடைவெளியில், இடைக்கால அரசாங்கம் உண்மையில் புரட்சிகரமான நடவடிக்கைகளையே முன்னெடுத்துக் கொண்டிருந்தது: ஜாரிச போலிஸ் எந்திரத்தை அகற்றுவது, அரசியல் கைதிகளை விடுதலை செய்வது, அடிப்படை அரசியல் சுதந்திரங்களுக்கான உத்தரவாதங்களை அமைப்பது, தேசியத் தேர்தல்களுக்கு களம் அமைப்பது, மற்றும் இது மாதிரியாக.

ஒரு மோதல் வரும், அப்போதுதான் இடைக்கால அரசாங்கத்தை எதிர்ப்பது அவசியமாக இருக்க முடியும், அது பல மாதங்களுக்குப் பின்னர் நடந்தது. இவ்வாறாக, லிஹ் கூறுவதன் படி, காமனேவின் நிலைப்பாடானது, “போல்ஷிவிக்குகளை அக்டோபருக்கு கூட்டிச் சென்றது.”

இந்த ஆய்வானது ஆரம்பம் முதல் இறுதி வரை பிழையானதாக இருக்கிறது. புதிய அரசாங்கத்திற்கு “பிரமாதமான ஜாரிச-எதிர்ப்பு செயல்வரலாற்றுச் சான்றுகள் இருப்பதான தோற்றம்” எதுவும் இருக்கவில்லை. அது எப்பாடுபட்டேனும் எதேச்சாதிகாரத்தை காப்பாற்றுவதற்கு முனைந்து கொண்டிருந்தது. பரந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களும் சிப்பாய்களும் புரட்சிகர நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இடைக்கால அரசாங்கத்தை எதிர்நோக்கியிருக்கவில்லை, மாறாக சோவியத்துகளையே எதிர்நோக்கியிருந்தனர், அந்த சோவியத்துகள் இடைக்கால அரசாங்கத்திற்கு ஆதரவை ஊக்குவிக்க முயற்சி செய்து கொண்டிருந்த அரசியல் கட்சிகளால் தலைமை கொடுக்கப்பட்டவையாக இருந்தன. லெனினையும் ட்ரொட்ஸ்கியையும் பொறுத்தவரை, அரசியல் பேதங்களை மேலும் கூர்மைப்படுத்துவது, அரசாங்கத்தின் மீதும் கெரென்ஸ்கி போன்ற ஆளுமைகளின் மீதும் முழு நம்பிக்கையின்மையை ஊக்குவிப்பது, அரசாங்கம் ஜனநாயக சீர்திருத்தங்களை முன்னெடுக்கும் என்றும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் என்பதான பிரமைகளை ஆலோசனையளிக்காமல் இருப்பது ஆகியவையே கடமையாக இருந்தன.

லிஹ் தனது கூற்றுகளில், போர் என்ற, மார்ச்சில் போல்ஷிக் கட்சிக்குள்ளான மோதலில் சம்பந்தப்பட்டிருந்த மிக அடிப்படையான பிரச்சினையை முற்றிலுமாக உதாசீனப்படுத்துகிறார். மார்ச் மாதத்தில், காமனேவும் ஸ்ராலினும், இடைக்கால அரசாங்கத்திற்கு அவர்கள் ஆதரவு அளித்ததற்கேற்ப போர் விடயத்தில் பாதுகாக்கின்ற ஒரு நிலைப்பாட்டை அனுசரித்துக் கொண்டு எழுதிய பல தலையங்க கட்டுரைகளும், ஏனைய கட்டுரைகளும் வெளியாகியிருந்தன என்பதை லிஹ் உதாசீனம் செய்கிறார்.

மார்ச் 15 அன்று ”இரகசிய இராஜதந்திரம் இல்லாமல்” என்ற தலைப்பில் காமனேவ் எழுதிய தலையங்கம் ஒரு முழு மென்ஷிவிக் ஆவணமாகும். “போர் தொடர்கிறது, மகா ரஷ்யப் புரட்சி அதனை நிறுத்தி விடவில்லை” என்று அது தொடங்குகிறது. “அத்துடன் அது நாளையோ நாளை மறுநாளோ முடிந்து விடும் என்பதான நம்பிக்கைகளையும் யாரும் வளர்க்கவில்லை. தூக்கிவீசப்பட்ட ஜாரின் அழைப்பின் பேரில் போருக்குச் சென்ற மற்றும் அவரது பதாகைகளின் கீழ் இரத்தம் சிந்திய ரஷ்யாவின் சிப்பாய்களும், விவசாயிகளும், மற்றும் தொழிலாளர்களும் தங்களுக்கு விடுதலையளித்துக் கொண்டார்கள், ஜாரிசப் பதாகைகள் புரட்சியின் செம்பதாகைகள் மூலம் பிரதியிடப்பட்டிருக்கின்றன.”

அதாவது, போரானது இடைக்கால அரசாங்கத்தின் தலைமையில் புரட்சிகர விடுதலைக்கான ஒரு போராக ஆகி விட்டிருக்கிறது —மென்ஷிவிக்குகளும் சோசலிஸ்ட் புரட்சியாளர்களும் ஊக்குவித்த அதே நிலைப்பாடு. காமனேவ் எழுதினார்: “இராணுவம் இராணுவத்துக்கு எதிராய் நிற்கையில், அவர்களில் ஒரு தரப்பு மட்டும் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு வீடு திரும்ப வேண்டும் என்று சொல்வது மிக அபத்தமான கொள்கையாக இருக்கும். இந்தக் கொள்கை அமைதியின் ஒரு கொள்கையாக இருக்காது, மாறாக அடிமைத்தனத்தின் ஒரு கொள்கையாகவே இருக்கும், சுதந்திரமான மக்கள் எவரும் அவமதித்து நிராகரிக்கின்ற ஒரு கொள்கையாக அது இருக்கும். அது கூடாது, அது தன் நிலையில் உறுதியுடன் நிற்கும், தோட்டாவுக்கு தோட்டாவாலும் ஷெல்லுக்கு ஷெல்லாலும் பதிலளிக்கும். இது கட்டாயமாகும்.”

ஏகாதிபத்திய நேச நாடுகளுக்கு முன்பாக முழு சரணாகதியடைந்ததை வெளிப்படுத்துகின்ற விதமாக, அவர் தொடர்ந்தார்,

ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளுடனான கூட்டணிகளுக்கு கட்டுண்டுள்ளது. அமைதி குறித்த பிரச்சினைகளில் அவற்றில் இருந்து தனித்து அதனால் செயல்பட முடியாது. ஆயினும், ஜாரிச மையத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டிருக்கக் கூடிய புரட்சிகர ரஷ்யாவானது, அமைதிப் பேச்சு வார்த்தைகளை தொடங்குகின்ற பிரச்சினையை மீளாய்வு செய்கின்ற ஒரு யோசனையுடன் தனது கூட்டாளிகளை நோக்கி நேரடியாகவும் வெளிப்படையாகவும் திரும்ப வேண்டும் என்பது மட்டுமே இது கொடுக்கின்ற அர்த்தமாகும்.

எங்களது சுலோகம், புரட்சிகர இராணுவத்தை அத்துடன் மேலதிகமாய் புரட்சிகரமாகிக் கொண்டிருக்கின்ற இராணுவத்தை ஒழுங்கு குலைக்க வேண்டும் என்பதல்ல; அல்லது “போர் ஒழிக” என்ற வெற்று சுலோகமும் அல்ல. எங்களது சுலோகம் இதுதான்: உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு வழி குறித்து உடனடியாக பேச்சுவார்த்தைகளை தொடக்குவதற்கு சண்டையிடும் அத்தனை நாடுகளையும் தூண்டுவதற்கு, இடைக்கால அரசாங்கமானது, ஒட்டுமொத்த உலக ஜனநாயகத்திற்கும் முன்பாக பகிரங்கமாகவும் மற்றும் உடனடியாகவும் முயற்சி செய்வதற்கு நிர்ப்பந்திக்கும் வகையில் அதற்கு அழுத்தமளிப்பது. அதுவரை, அனைவரும் அவரவர் பதவியில் தொடர்ந்தாக வேண்டும்.[24]

நான் முன்பு குறிப்பிட்டிருந்த, சுக்ஹானோவ் வரைவு செய்திருந்த சோவியத்தின் விண்ணப்பத்துக்கு ஒரு “இனிய வாழ்த்து”டன் அது நிறைவடைகிறது.

ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் பொய்மைப்படுத்தல் இருபோதிலும் காமனேவின் போர் ஆதரவு நிலைப்பாடே ஸ்ராலினாலும் திரும்பக் கூறப்பட்டது. மார்ச் 16 அன்று ஸ்ராலின் எழுதிய ”போர்” என்ற கட்டுரையில், ”போர் ஒழிக” என்ற சுலோகத்தை நிராகரிக்கின்ற அவர், அதற்குப் பதிலாக, “தொழிலாளர்களும், சிப்பாய்களும் மற்றும் விவசாயிகளும் கூட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் ஏற்பாடு செய்து, தேசங்களது சுய-நிர்ணய உரிமையை அங்கீகரிப்பதன் அடிப்படையில் அமைதிப் பேச்சுவார்த்தைகளை உடனடியாகத் தொடக்குவதற்கு போரிடும் நாடுகள் அத்தனையையும் தூண்டுகின்ற ஒரு முயற்சியை வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும் இடைக்கால அரசாங்கம் மேற்கொள்வதற்கு கோர வேண்டும்” என்று வலியுறுத்தினார்.[25]

போரின் இரத்தக்களரியான பாதை முழுக்க அதன் மிக உற்சாகமான ஆதரவாளர்களாய் இருந்து வந்திருக்கும் அமைப்புகளையும் தனிமனிதர்களையும் கொண்ட அவர்களால் வழிநடத்தப்பட்ட இந்த அரசாங்கம் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, இந்த முதலாளித்துவ அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பதற்கு, இடைக்கால அரசாங்கத்திற்கு அழுத்தமளிக்க வேண்டும்.

இத்தகைய வசனங்களை ஒருவர் லெனின் எழுதியதுடன் ஒப்பிட்டுப் பார்த்தாலே போதும் விரிந்த அரசியல் பிளவை கண்டுகொள்ள முடியும். “இந்த அரசாங்கமானது ஏகாதிபத்தியப் போரை தொடர விரும்புகிறது என்பதை, இது பிரிட்டிஷ் மூலதனத்தின் முகவராக இருக்கிறது என்பதை, இது முடியாட்சியை மீட்சி செய்ய விரும்புகிறது மற்றும் நிலப்பிரபுக்கள் மற்றும் முதலாளிகளின் ஆட்சிக்கு வலுவூட்ட விரும்புகிறது என்பதை நம்மிடம் இருந்தும் மக்களிடம் இருந்தும் மறைப்பதென்பது முற்றிலும் அனுமதிக்க முடியாததாகும்” என்று லெனின் மார்ச் 9 இல் எழுதினார். பின்னர் மார்ச் 12 இல் அவர் எழுதினார், “ஒரு வேகமான, நேர்மையான, ஜனநாயகரீதியான மற்றும் நல்ல அண்டைநட்புரீதியிலான அமைதியில் முடிக்கும்படி குச்கோவ்-மில்யுகோவ் அரசாங்கத்தை வலியுறுத்துவது என்பது, நல்ல கிராமப் பாதிரி நிலப்பிரபுக்களையும் வியாபாரிகளையும் ‘கடவுளின் வழியில் நடக்கும்படியும்”, அக்கம்பக்கத்திலிருப்போரை நேசிக்கும்படியும், மறுகன்னத்தைக் காட்டும்படியும் வலியுறுத்துவதைப் போன்றதாகும்.”[26]

காமனேவை லிஹ் பாதுகாப்பது —ஸ்ராலினை சம்பந்தப்படுத்தி— அவர் சென்ற மாதத்தில் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் வழங்கிய ஒரு அறிக்கையில் விரித்துரைத்தவாறாய், பிப்ரவரி புரட்சி “முதலாளித்துவ ஜனநாயக”ப் புரட்சியாக இருந்தது என்றும் அக்டோபர் புரட்சி “சோசலிசப் புரட்சி” என்றும் கூறுவது சாத்தியமில்லாதது என்ற இன்னுமொரு நிலைப்பாட்டால் ஆதரவுத்துணை ஆகிறது. இது மற்றவர்களுடன், ட்ரொட்ஸ்கி மற்றும் அவரைப் பின்பற்றியவர்களால் ஊக்குவிக்கப்பட்ட ஒரு கட்டுக்கதையாம்; அவர்கள் லெனின் ரஷ்யாவுக்கு திரும்பும் முன்பாக, ஸ்ராலினுக்கும் காமனேவுக்கும் ஒரு முதலாளித்துவ-ஜனநாயகப் புரட்சியைத் தாண்டிச் செல்லும் எண்ணமிருக்கவில்லை என்றும், லெனின் அவரது ஏப்ரல் ஆய்வறிக்கைகளில் ஒரு சோசலிசப் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார் என்றும் கூறுவதற்கு அதனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்களாம்.

அதற்கு மாறாய் 1917 இன் அத்தனையுமே ஒரு “முதலாளித்துவ-எதிர்ப்பு ஜனநாயகப் புரட்சி”யாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டுமாம். ஒரு சோசலிசப் புரட்சியின் நோக்கமென்பது 1917 முழுக்க போல்ஷிவிக் செய்தியின் பாகமாய் இருக்கவில்லை என்று லிஹ் திட்டவட்டம் செய்கிறார்.[27]

லிஹ் தனது அத்தனை வாதங்களிலும், தனது வாசகர்களின் அறியாமை மீதே நம்பிக்கை வைக்கிறார். போல்ஷிவிக்குகள் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவில்லை என்ற திட்டவட்டமானது, லெனின் திரும்பியதற்குப் பிந்தைய ஏப்ரல் மாநாடு உள்ளிட கட்சி ஆவணங்கள் மீதான ஒரு பகுப்பாய்வின் மூலம் நிரூபண மறுப்புக்குரியதாய் உள்ளது. பிராவ்தாவின் ஆசிரியர்கள் லெனின் முன்வைத்த ஆலோசனைகளின் முக்கியத்துவத்துவம் குறித்த எந்தப் பிரமைகளும் இல்லாதிருந்தனர். லெனினின் ஏப்ரல் ஆய்வறிக்கைகள் வெளியானதற்குப் பின்னர் ஏப்ரல் 8 அன்று அவர்கள் எழுதினர், “தோழர் லெனினின் பொதுவான செயற்திட்டத்தை பொறுத்தவரை, அது முதலாளித்துவ-ஜனநாயகப் புரட்சி முடிந்து விட்டது என்ற அனுமானத்தில் இருந்து தொடங்குகிறது, அத்துடன் இந்தப் புரட்சியை உடனடியாக ஒரு சோசலிசப் புரட்சியாக உருமாற்றுவதற்கு எதிர்பார்க்கிறது என்ற விதத்தில் எங்களுக்கு ஏற்கமுடியாததாகத் தெரிகிறது.”[28]

லெனின் 1917 செப்டம்பரில் எழுதிய “எதிர்வரவிருக்கும் பேரழிவு என்ன மற்றும் அதனை எதிர்த்துப் போராடுவது எப்படி” இல் “நாம் சோசலிசத்தை முன்னெடுக்க அச்சம் கொண்டவர்களாய் இருந்தால் முன்னேறிச் செல்ல முடியுமா?” என்ற தலைப்பிலான பிரிவில், புரட்சியானது முழுக்க முழுக்க முதலாளித்துவ-ஜனநாயகத் தன்மை கொண்டதாகும், அது சோசலிசக் கொள்கைகளை அமல்படுத்த முடியாதென்றும் கூறுகின்ற மென்ஷிவிக்குகள் மற்றும் சோசலிசப் புரட்சியாளர்களுக்கு எதிராக வாதாடுகிறார்.

லெனின் கூறுகிறார்:

பொதுவாக வரலாற்றிலும், இன்னும் குறிப்பாக போரின் சமயத்திலும், இயங்காநிலையில் நிற்பது என்பது சாத்தியமில்லாததாகும். ஒன்று நாம் முன்னேறியாக வேண்டும் அல்லது பின்வாங்கியாக வேண்டும். ஒரு புரட்சிகரமான வழியில் ஒரு குடியரசையும் ஒரு ஜனநாயகத்தையும் வென்றெடுத்திருக்கக் கூடிய இருபதாம் நூற்றாண்டு ரஷ்யாவில், சோசலிசத்தை நோக்கிய முன்னெடுப்புகள் இல்லாமல், அதனை நோக்கி அடிகளெடுத்து வைக்காமல் (தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரத்தின் மட்டத்தால் பக்குவப்படுத்தப்பட்ட மற்றும் தீர்மானிக்கப்பட்ட அடிகள்: பெரிய அளவிலான எந்திர உற்பத்தியானது சிறுவிவசாயி விவசாயத்தில் ‘அறிமுகப்படுத்தப்படவும்’ முடியாது அல்லது சர்க்கரை துறையில் அகற்றப்படவும் முடியாது) முன்னேறிச் செல்வது என்பது சாத்தியமில்லாததாகும்....

போரானது, ஏகபோக முதலாளித்துவத்தை அரசு ஏகபோக முதலாளித்துவமாக உருமாற்றுவதை அசாதாரண வேகத்தில் துரிதப்படுத்துவதன் மூலமாக, மனிதகுலத்தை அசாதாரணமான விதத்தில் சோசலிசத்தை நோக்கி முன்னேற்றியிருக்கிறது என்ற வகையில் வரலாற்றின் இயங்கியல் இருக்கிறது.[29]

இந்தப் பிரச்சினையை இந்த உரையில் நான் விரிவாகப் பேசிக் கொண்டிருக்க இயலாது எனினும், இந்த கடைசி மேற்கோளானது லெனினையும் ட்ரொட்ஸ்கியையும் தத்துவார்த்தரீதியாகவும் வேலைத்திட்டரீதியாகவும் ஒன்றாகக் கொண்டுவந்த நிலைமைகளை சுட்டிக்காட்டுகிறது. ஏகாதிபத்தியப் போரானது ஒரு உலக அமைப்பாக முதலாளித்துவத்தின் முரண்பாடுகளை அம்பலப்படுத்தியிருந்தது, அத்துடன் ஒரு சர்வதேச வர்க்கமாக தொழிலாள வர்க்கத்தின் தலைவிதி கொண்டிருந்த உள்ளார்ந்த தொடர்பை வெளிப்படுத்தியது. அது ஒரு தேசிய முதலாளித்துவ-ஜனநாயகப் புரட்சி குறித்த பிரச்சினை அல்ல, மாறாக, தோழர் நிக்கின் உரையின் முடிவில் இருந்தான மேற்கோளைக் குறிப்பிடுவதானால், “ஏகாதிபத்தியப் போரை, சோசலித்தை அடைவதற்காக ஒடுக்கப்படுவோர் ஒடுக்குவோருக்கு எதிராய் நடத்துகின்ற ஒரு உள்நாட்டுப் போராக” உருமாற்றுவது குறித்த பிரச்சினையாகும்.

ரஷ்ய புரட்சியின் வரலாறு சமகாலத்திலும் பிரம்மாண்டமான முக்கியத்துவம் கொண்டிருக்கிறது என்பதையே லிஹ் இன் பொய்மைப்படுத்தல்கள் மீண்டுமொரு முறை ஊர்ஜிதம் செய்கின்றன. இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றில் பலமுறை, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர எழுச்சிகள், குறிப்பாக ஸ்ராலினிசத்தின் துரோகத்தின் வழியாக, முதலாளித்துவ வர்க்கத்துக்கு கீழ்ப்படியச் செய்யப்பட்டு வந்திருக்கின்றன. 1927 இல் சீனாவில், 1930களில் ஸ்பெயினில், 1940களில் இந்தியாவிலும் இந்தோசீனாவிலும், போருக்குப் பின்னர் ஐரோப்பா முழுமையாக, 1960களில் இந்தோனேசியாவில், 1970களில் சிலியிலும் இலத்தீன் அமெரிக்காவிலும், 1979 இல் ஈரானில், அத்துடன் 2011 இல் எகிப்து முழுமையாகவும் அப்படி நடந்திருக்கின்றன.

இன்று, நாம் போர் மற்றும் புரட்சியின் புதியதொரு காலகட்டத்திற்குள்ளாக நுழைகின்ற வேளையில், உயர் நடுத்தர வர்க்கத்தின் கட்சிகள், சோசலிசத்துக்கான தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கம் அபிவிருத்தி காண்பதைத் தடுப்பதற்கு தங்களால் முடிந்த ஒவ்வொன்றையும் செய்து கொண்டிருக்கின்றன.

தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர எழுச்சியை, அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்ற அதன் அத்தியாவசியமான நிறைவுக்கு வழிநடத்திச் செல்லக் கூடிய ஒரு புரட்சிகரமான தலைமை, அங்கே லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் தலைமையில் இருந்தது என்பதே, ரஷ்ய புரட்சியை தனிச்சிறப்பு மிக்கதாக ஆக்கியது. அந்தப் போராட்டத்தின் அடுத்த கட்டமான, லெனின் ரஷ்யாவுக்குத் திரும்புதல் மற்றும் ஏப்ரல் ஆய்வறிக்கை தான், அடுத்த உரைக்கான கருப்பொருள் ஆகும்.

Notes:

[1] “Georgi Valentinovich Plekhanov (1856–1918): His Place in the History of Marxism,” by David North and Vladimir Volkov, World Socialist Web Site, December 5, 2016.

[2] Quoted in “Three Conceptions of the Russian Revolution,” Leon Trotsky, 1939.

[3] Ibid.

[4] “The Revolutionary-Democratic Dictatorship of the Proletariat and the Peasantry,” V.I. Lenin, Collected Works, Vol. 8, Progress Publishers, 1965, pp. 294-98.

[5] Results and Prospects, Leon Trotsky, Chapter II: The Towns and Capital, Leon Trotsky, 1906.

[6] History of the Russian Revolution, Leon Trotsky, Pluto Press, 1977, p.27.

[7] Quoted in Results and Prospects, Leon Trotsky, Chapter III: 1789-1848-1905.

[8] “Address to the Central Committee of the Communist League,” Karl Marx and Friedrich Engels, March 1850.

[9] “Our Differences,” in 1905, Vintage Books, 1971, pp. 315-17.

[10] “Introduction to Ferdinand Lassalle’s Speech to the Jury,” quoted in Results and Prospects, Chapter IX: Europe and Revolution.

[11] “The Struggle for Power,” in 1905, Ibid., p. 322.

[12] All dates in the account of the February Revolution and after are given in the Old Style Julian calendar.

[13] Quoted in The Russian Revolution, 1917, Rex. A. Wade, Cambridge University Press, 2017, p. 29.

[14] History of the Russian Revolution, Leon Trotsky, p. 161.

[15] Ibid., p. 171

[16] Quoted in The February Revolution: Petrograd, 1917, Tsuyoshi Hasegawa, University of Washington Press, 1989, p. 227.

[17] “The Formation of the Militia in the February Revolution: An Aspect of the Origins of Dual Power,” Tsuyoshi Hasegawa, Slavic Review, Vol 32, No 2, June 1973, pp. 303-22.

[18] Quoted in The History of the Russian Revolution, Trotsky, Ibid., p. 258.

[19] The Russian Revolution 1917: A Personal Record, N. N. Sukhanov, Princeton University Press, 1984, p. 12.

[20] “The Growing Conflict,” L. Trotsky (tr. Fred Williams).

[21] Lenin, Collected Works, Vol. 23, Progress Publishers, 1964, p. 292 and p. 305.

[22] Prelude to Revolution: The Petrograd Bolsheviks and the July 1917 Uprising, Alexander Rabinowitch, Indiana University Press, 1991, p. 34–35.

[23] “Fully Armed: Kamenev and Pravda in March 1917,” Lars T. Lih, The NEP Era: Soviet Russia 1921-1928, 8 (2014), pp. 55-68.

[24] Pravda, Wednesday, 15 [28] March 1917. (Translated by Fred Williams from the Russian).

[25] Pravda, Thursday, 16 [29] March 1914, published in Stalin Works, Vol. 3, March-October, 1917.

[26] From Lenin’s second and fourth “Letters from Afar,” Collected Works, Vol. 23, Ibid., p. 315 and p. 336.

[27] Lih made these arguments in a report delivered at the University of Michigan Ann Arbor conference, Revolutionary Longings, March 2017.

[28] Quoted in Trotsky, History of the Russian Revolution, Ibid., pp. 326-27.

[29] Lenin, Collected Works, Vol. 25, Ibid.

Loading