லெனின் ரஷ்யாவிற்குத் திரும்புதலும் ஏப்பிரல் ஆய்வுகளும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சோசலிச சமத்துவக் கட்சியின் (ஆஸ்திரேலியா) தேசிய செயலாளரான ஜேம்ஸ் கோகன், மே 6, சனிக்கிழமை அன்று வழங்கிய விரிவுரையை இங்கே பிரசுரிக்கின்றோம். 1917 ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டைக்குறிக்கும் விதமாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது சர்வதேச இணையவழி விரிவுரை தொடரில் இது ஐந்தாவது ஆகும்.

1917ல் பெட்ரோகிராட்டில் பெப்ரவரி புரட்சி வெடித்தபோது, போல்ஷிவிக் கட்சியின் தலைவரான விளாடிமிர் இலிச் லெனின், சுமார் 2,400 கிலோமீட்டர் தூரத்தில் சுவிட்சர்லாந்தில் சூரிச்சில் அரசியல் தஞ்சம் பெற்றிருந்தார். 1905 புரட்சியைத் தொடர்ந்து, ஜாரிச ஆட்சியின் சிறைத்தண்டனை அல்லது மரண தண்டனையிலிருந்தும் கூட தப்புவதற்காக அவர் ரஷ்யாவை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கடந்திருந்தன.

போல்ஷிவிக் தலைவரும் லெனினின் மிக நெருக்கமான அரசியல் தோழர்களில் ஒருவருமான அவருடைய மனைவி நட்டேஸ்யா குருப்ஸ்கயா, ஜூலியன் நாட்காட்டிப் படி மார்ச் மாத தொடக்கத்தில், அவர்கள் பகல் உணவை முடித்துக்கொண்டிருந்த போது, போலந்து மார்க்சிசவாதியான மிசெஸ்லோ ப்ரோன்ஸ்கி அவர்களது குடியிருப்பிற்கு விரைந்து வந்ததை நினைவுகூர்ந்தார். 'நீங்கள் செய்தி கேள்விப்படவில்லையா? ரஷ்யாவில் ஒரு புரட்சி நடக்கிறது!' என்று ப்ரோன்ஸ்கி கூச்சலிட்டார்.

லெனின் ரஷ்யாவிற்குத் திரும்புதலும் ஏப்பிரல் ஆய்வுகளும்

குருப்ஸ்கயா, 1933ல் லெனினின் நினைவுத் திரட்டுகள் என்பதில் எழுதியதாவது:

ப்ரோன்ஸ்கி சென்றபின், நாங்கள் ஏரிக்குச் சென்றோம். அனைத்து பத்திரிகைகளும் வெளியானதும் அங்கு கரையோரத்தில் பார்வைக்கு வந்திருக்கும்.

செய்தி அறிக்கைகளை பல முறை படித்தோம். உண்மையாகவே ரஷ்யாவில் ஒரு புரட்சி நடந்திருந்தது. இலிச்சின் சிந்தனை உடனே வேலை செய்யத் தொடங்கியது. அன்றைய எஞ்சிய பகல் பொழுதும் இரவும் எப்படி கடந்தன என்பது சரியாக நினைவில் இல்லை. அடுத்த நாள், பெப்ரவரி புரட்சி பற்றிய இரண்டாம் தொகுப்பு உத்தியோகபூர்வ செய்தி அறிக்கைகளைக் கண்டவுடன், ஸ்டாக்ஹோமில் இருந்த கொலோந்தாய்க்கு இலிச் எழுதியதாவது: 'மறுபடியும் இரண்டாம் அகிலத்தின் வழியில் செல்ல வேண்டாம்! மீண்டும் காவுட்ஸ்கியுடன் செல்ல வேண்டாம்! எல்லா வழிகளிலும் ஒரு புரட்சிகர வேலைத்திட்டம் மற்றும் தந்திரோபாயங்களை கையாள வேண்டும்.' மேலும்: “… முன்னரைப் போல், ஒரு சர்வதேச தொழிலாள வர்க்கப் புரட்சியின் குறிக்கோளுடன் தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத்தின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு புரட்சிகர பிரச்சாரம், ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும்...'[1]

புவியியல்ரீதியாக, ரஷ்யாவில் இருந்து லெனின் நிச்சயமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். எனினும், அதற்காக அவருக்கு அங்கு செல்வாக்கு இருக்கவில்லை என்று அர்ததமில்லை. லெனின் மற்றும் குருப்ஸ்கயா மட்டுமன்றி, இனேஸா ஆர்மோன்ட் போன்ற குறிப்பிடத்தக்க புரட்சியாளர்களைக் கொண்டிருந்த சூரிச்சில் இருந்த போல்ஷிவிக் தலைமையானது ரஷ்யாவிலுள்ள சட்டவிரோத போல்ஷிவிக் அமைப்புடன் முடிந்தளவு தொடர்புகளைப் பேணி வந்தது –போரின் போது எந்தப் பக்கமும் சாராமல் இருந்த ஸ்வீடனில் வாழ்ந்த அலெக்ஸாண்ட்ரா கொலோந்தாய் போன்ற நம்பகமானவர்களுடன் பிரதானமாக கடிதங்கள் மற்றும் தந்திகள் மூலம் தொடர்புகள் பேணப்பட்டு வந்தன. இந்த கடிதங்களும் தந்திகளும் பின்லாந்துக்கு கடத்தப்பட்டு, பின்னர் செயிண்ட் பீட்டர்ஸ்பேர்க்கிற்கு கடத்தப்பட்டு அங்கிருந்து படிப்படியாக மிகப் பரவலாக விநியோகிக்கப்பட்டன.

மார்ச் 1917ல், லெனின் தனது 47 வது பிறந்த நாளை நெருங்கியிருந்தார். சுருக்கமாக கூறினால், அவர் வாழ்ந்த நிலைமைகள் வறியதாகும். அவர்கள் வாழ்ந்த அறை பற்றி குருப்ஸ்கயா நினைவுகூர்ந்தபோது எழுதியதாவது: 'அது ஒரு பழைய இருண்ட அறை, அது பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாயிருக்கும் என நினைக்கிறேன், மற்றும் துர்நாற்றம் வீசும் ஒரு முற்றம் இருந்தது.' 1916 இன் பிற்பகுதியில் 'எங்கள் வாழ்க்கைச் செலவுகளை மிகக்குறைந்தபட்ச அளவிற்கு நாங்கள் சுருக்கிக் கொள்ள நேர்ந்தது'[2] என அவர் சுட்டிக் காட்டியிருந்தார். நாடுகடந்து வாழ்ந்த போல்ஷிவிக்குகள் வளப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருந்தனர் –லெனினின் உடல்நலப் பிரச்சினைகளுக்கு இதுவும் ஒரு காரணமாக இருந்தது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

பெப்ரவரி புரட்சிக்கான லெனினின் பதிலிறுப்பானது, அவருடைய அரசியல் வாழ்வு முழுவதும், மற்றும் குறிப்பாக 1914 ஆகஸ்டில் இரண்டாம் அகிலத்தின் காட்டிக் கொடுப்புக்குப் பின்னர் –அச்சமயத்தில் இரண்டாம் அகிலத்தின் பெரும்பான்மையான கட்சிகளும் தலைவர்களும் முதலாம் உலக போரில் தமது சொந்த முதலாளித்துவ வர்க்கத்துக்கு ஆதரவளித்தனர்- அவர் போராடிய சர்வதேசியவாத முன்னோக்கில் இருந்து ஊற்றெடுத்திருந்தது.

அந்த காட்டிக்கொடுப்பை எதிர்த்த மார்க்சிஸ்டுகள் மத்தியில் கூட லெனின் சிறுபான்மையாக இருந்தார்.

1915ல் சிம்மர்வால்ட் எனும் கிராமத்தில் நடந்த, பின்னர் சிம்மர்வால்ட் சர்வதேச மாநாடு என்றழைக்கப்பட்டதில், பெரும்பான்மையான போர்-எதிர்ப்பு போக்கினர், போரிடும் நாடுகளின் அரசாங்கங்களை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு செல்ல அழுத்தம் கொடுப்பதற்கான கொள்கையை பரிந்துரைத்தன.

ஐரோப்பாவிலும் மற்றும் உலகம் பூராவுமான சோசலிசப் புரட்சி மூலம் மட்டுமே நிலையான சமாதானத்தையும் நாகரிகத்தின் எதிர்காலத்தையும் பாதுகாக்க முடியும் என்று லெனின் வலியுறுத்தினார். மார்க்சிசவாதிகள் மற்றும் உண்மையான சர்வதேசியவாதிகளது சகல வேலைகளும், தங்கள் சொந்த நாட்டில் வர்க்கப் போராட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கும், தங்கள் சொந்த ஆளும் வர்க்கத்தை தூக்கி வீசுவதற்கான நிலைமைகளை தயார் செய்வதற்கும் அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்ற புரட்சிகர முன்னோக்கு 'ஏகாதிபத்திய போரை ஒரு உள்நாட்டு யுத்தமாக மாற்று” என்ற லெனினின் சுலோகத்தில் உள்ளடங்கியிருந்தது.

1915ல் சிம்மர்வால்ட் போர்-எதிர்ப்பு மாநாட்டில் 'இடதுசாரிகளுக்கு' லெனின் எழுதிய தீர்மானம் பின்வருமாறு தொடங்கியது:

தற்போதைய போர் ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்டது. முதலாளித்துவம் ஏற்கெனவே அந்த உச்சக் கட்டத்தை அடைந்துவிட்டது. சமூகத்தின் உற்பத்தி சக்திகள், தனிப்பட்ட தேசிய அரசுகளின் குறுகிய வரம்புகளைக் கடந்து வளர்ந்துவிட்டன... முழு உலகமும் ஒரு ஒற்றை பொருளாதார அமைப்பாக ஒன்றிணைந்து வருகின்றது; அதை ஒரு சில பெரும் வல்லரசுகள் பங்கிட்டுக்கொண்டுள்ளன. சோசலிசத்திற்கான புறநிலை நிலைமைகள் முழுமையாக முதிர்ச்சியடைந்துள்ளன, இப்போதைய போரானது முதலாளித்துவத்தின் வீழ்ச்சியை தாமதப்படுத்தக் கூடிய சிறப்புரிமைகள் மற்றும் ஏகபோகங்களுக்காக முதலாளித்துவத்தினர் நடத்தும் போராகும். [3]

சிம்மர்வால்ட் இடதின் வரைவுத் தீர்மானம் பின்வருமாறு முடிவுக்கு வந்தது:

ஏகாதிபத்தியப் போரானது சமூகப் புரட்சியின் சகாப்தத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. அண்மைய காலத்தின் அனைத்து புற நிலைமைகளும், பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர வெகுஜனப் போராட்டத்தை அன்றாட நிகழ்வாக்கியிருக்கின்றன. தொழிலாள வர்க்கத்தினுடைய சட்ட ரீதியான போராட்டத்தின் ஒவ்வொரு வழிவகையையும் பயன்படுத்திக் கொள்கின்ற அதேவேளையில், அந்த வழிவகைகளின் ஒவ்வொன்றையும் இந்த உடனடியான மிக முக்கியமான பணிக்குக் கீழ்ப்படுத்துவதும் தொழிலாளர்களின் புரட்சிகர நனவை அபிவிருத்தி செய்வதும், அவர்களை சர்வதேச புரட்சிகரப் போராட்டத்தில் அணிதிரட்டுவதும், எந்தவொரு புரட்சிகர நடவடிக்கையையும் ஊக்குவித்து உற்சாகப்படுத்துவதும், மற்றும் ஏகாதிபத்திய போரை, ஒடுக்குபவர்களுக்கு எதிரான ஒடுக்கப்படுகின்ற வர்க்கத்தினரின் ஒரு உள்நாட்டுப் போராக, முதலாளித்துவ வர்க்கத்தை நிர்மூலமாக்குவதற்கான ஒரு போராக, அரசியல் அதிகாரத்தை தொழிலாள வர்க்கம் கைப்பற்றுவதற்கான மற்றும் சோசலிசத்தை யதார்த்தமாக்குதவற்கான ஒரு போராக மக்களுக்கு மத்தியில் மாற்றுவதற்கு உரிய அனைத்தையும் செய்வதும் சோசலிஸ்டுகளின் கடமையாகும்.[4]

இந்த முன்னோக்கானது உலக சோசலிசப் புரட்சிக்காக அர்ப்பணித்துக்கொண்ட கட்சிகளை மட்டுமே உள்ளடக்கிய ஒரு புதிய மூன்றாம் அகிலத்தை ஸ்தாபிக்க வேண்டிய அவசியத்தை முன்வைக்கின்றது என லெனின் வலியுறுத்தினார். இந்த பிரச்சினையில், எல்லாவற்றிற்கும் மேலாக, சிம்மர்வால்ட் சர்வதேச மாநாட்டில் லெனினுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. அதன் பெரும்பான்மை, இரண்டாம் அகிலத்தை மீண்டும் மார்க்சிசத்துக்குள் மீண்டும் இழுத்துச்செல்லும் சாத்தியத்தைப் பற்றி சிந்திப்பதில் தொடர்ந்தும் இணைந்திருத்தது.

உலகப் போருக்குள் ஏகாதிபத்தியத்தை தள்ளியிருந்த அதே முரண்பாடுகள், தொழிலாள வர்க்கத்தை புரட்சிகர போராட்டங்களுக்கு தள்ளிச் செல்லும், அதனால் மார்க்சிஸ்டுகளின் மேலான கடமை, அவர்களைத் தயார் செய்வதே ஆகும் என லெனின் உறுதியாக இருந்தார். எனினும், அந்த புரட்சி எப்போது வெடிக்கும், அல்லது அது எங்கே தொடங்கும் என அவரால் முன்கணிக்க முடியாதிருந்தது.

உண்மையில், 1917 ஜனவரியில் சூரிச்சில் மார்க்சிச இளைஞர்கள் கூடியிருந்த ஒரு அரங்கத்தில் உரையாற்றிய லெனின், 'வரவிருக்கும் புரட்சியின் தீர்க்கமான போராட்டங்களைப் பார்க்க பழைய தலைமுறையைச் சேர்ந்த நாங்கள் உயிரோடு இல்லாமல் போகலாம்' என முடித்தார். [5]

அடுத்த சில வாரங்கள் கழித்து பெப்ரவரி புரட்சி வெடித்தது, அத்துடன் 'வரவிருக்கும் புரட்சியின் தீர்க்கமான போராட்டங்களை' காணவும் வழிநடத்தவும் லெனின் உயிரோடு இருந்தார்.

“புரட்சிகர பாதுகாப்புவாதத்தின்” அழுத்தம்

சுவிட்சர்லாந்தில் தஞ்சமடைந்திருந்த லெனினும் ஏனைய புரட்சிகர புலம்பெயர்ந்தவர்களும் ரஷ்யாவிற்கு எப்படி திரும்பிச் செல்வது என்ற மையப் பிரச்சினைக்கு முகம்கொடுத்திருந்தனர். சுவிட்சர்லாந்து நிலத்தால் சூழப்பட்ட ஒரு நாடு. அந்த நேரத்தில், அதன் தெற்கு எல்லையில் இத்தாலி இருந்தது, மேற்கில் பிரான்ஸ், கிழக்கில் ஆஸ்திரிய-ஹங்கேரிய பேரரசு மற்றும் வடக்கில் ஜேர்மன் பேரரசு இருந்தது. ரஷ்யாவானது ஆஸ்திரியா மற்றும் ஜேர்மனியுடனான போரில் ஈடுபட்டிருந்ததோடு, பிரான்சோடு கூட்டிணைந்திருந்தது. பிரெஞ்சு ஆளும் வர்க்கம், லெனின் போன்ற ஒரு போருக்கு எதிரான மனிதர் ரஷ்யாவிற்கு திரும்புவதற்கு உதவப் போவதில்லை.

நேரம் பிரதான காரணியாக இருந்தது.

லெனினும் போல்ஷிவிக்குகளும் எதிர்பார்த்திருந்ததைப் போலவே, மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கியும் அவரது நிரந்தரப் புரட்சித் தத்துவத்தில் மிகவும் தெளிவாக எதிர்ப்பார்த்திருந்ததைப் போலவே, புரட்சியில் தொழிலாள வர்க்கமே முன்னணிப் பாத்திரத்தை ஆற்றியது. தங்கள் வர்க்க பின்னணியில், ரஷ்யாவின் பரந்த விவசாயிகளின் கீழ்மட்ட ஏழ்மைத் தட்டினரைச் சேர்ந்தவர்களாக இருந்த இலட்சக்கணக்கான சிப்பாய்களும் தொழிலாளர்களுடன் இணைந்தனர்.

தொழிலாளர் போர்ப்படை, மே 1917

ரஷ்யாவில் நிலைமை 'இரட்டை அதிகாரம்' உடையதாக இருந்தது. பரந்த மக்களின் செயலூக்கமான ஆதரவின் அர்த்தத்தில் உண்மையான அதிகாரம் சோவியத்துக்களிடம் இருந்தது. அவற்றின் அதிகாரம் ஆயுதமேந்திய சிப்பாய்கள் மற்றும் தொழிலாளர் போர்ப்படைகளின் வல்லமையினால் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. எனினும், சோவியத்தில் இருந்த மென்ஷிவிக் மற்றும் சோசலிச புரட்சிக் (SR) கட்சி தலைவர்கள், முதலாளித்துவ வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய மற்றும் இன்னும் முழுமையாக அழிக்கப்பட்டிராத ஜாரிச அரசு எந்திரத்துடன் பல்வேறு தொடர்புகளை கொண்டிருந்த, முதலாளித்துவக் கட்சிகளால் ஸ்தாபிக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்திற்கு அதிகாரத்தை மாற்றுவதற்கு நனவுடன் வேலைசெய்து கொண்டிருந்தனர்.

ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரிக்கு எதிரான போரை ரஷ்யா தொடர்வதோடு, பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு ஏகாதிபத்திய கூட்டாளிகளுக்கு அதன் கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டும் என முதலாளித்துவக் கட்சிகள் வலியுறுத்தின. ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஒரு அரசியலமைப்பு சபை எப்போது தேர்ந்தெடுக்கப்படும் என்பது உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகள், போரின் 'வெற்றி' வரை தாமதிக்கப்பட வேண்டும் என அவர்கள் கோரினர். சிப்பாய்களை மீண்டும் இராணுவ ஒழுக்கத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் மற்றும் ஆயுதபாணியான தொழிலாளர்கள் தங்கள் ஆயுதங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறினர்.

ஆனால், தொழிலாள வர்க்கம் அதன் சொந்த கோரிக்கைகளை முன்னெடுத்தது. அதன் சுயாதீனமான நடவடிக்கைகள் மூலம், எட்டு மணித்தியால வேலை நேரத்தை ஏற்பதற்கு முதலாளித்துவ தொழில் வழங்குனர்களை அது நிர்ப்பந்தித்திருந்தது. தொழிற்சாலைகள் மற்றும் வேலையிடங்களின் மீது ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கான கட்டுப்பாட்டை அது ஸ்தாபித்திருந்தது. அது தனது வறுமை நிலைமைகளைக் குறைக்க விலை கட்டுப்பாடுகளையும் ஏனைய நடவடிக்கைகளையும் கோரியது. எல்லாவற்றிற்கும் மேலாக, 1.75 மில்லியன் ரஷ்ய சிப்பாய்களை பலியெடுத்த இன்னும் பத்து இலட்சக்கணக்கானவர்களை காயப்படுத்திய அல்லது முடமாக்கிய போரின் பேரழிவை முடிவுக்கு கொண்டுவர தொழிலாளர்கள் கோரினர்.

தொழிலாளர்களைப் போலவே சிப்பாய்களும் சமாதானத்தைக் கோரினர். ட்ரொட்ஸ்கி அவரது ‘ரஷ்யப் புரட்சியின் வரலாறு’ என்ற நூலில் இல் குறிப்பிட்டதைப் போல, தாங்கள் இறந்து போவோமாயின் நிலச் சீர்திருத்தம் மற்றும் ஜனநாயக உரிமைகளினால் தங்களுக்கு பயனேதுமில்லை என விவசாய சிப்பாய்கள் சரியாக முடிவு செய்தனர். [6]

சோவியத்துக்களை அவற்றின் கைகளில் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்த, போல்ஷிவிக் செல்வாக்கு பெற்ற தொழிலாளர்களின் மற்றும் இராணுவத்தினரின் தீர்மானங்களில், தொழிலாள வர்க்கம் மற்றும் சிப்பாய்களின் கோரிக்கைகள் மிகத் தெளிவாக பிரதிபலித்தன.

யுத்தம் பற்றிய பிரச்சினை விரைவில் மைய அரங்கிற்கு வந்திருந்தது. சோவியத் ஒன்றியத்தில், அப்போது வரை ரஷ்யத் தலையீட்டை எதிர்த்து வந்த ஷீயிட்ஸ் மற்றும் செரெடெலி போன்ற மென்ஷிவிக் தலைவர்களும், இடைக்கால அரசாங்கத்தில் ஒரு அமைச்சுப் பொறுப்பை எடுத்துக் கொண்ட அலெக்ஸாண்டர் கெரென்ஸ்கியும், பெப்பிரவரி புரட்சி மற்றும் அது பெற்ற வெற்றிகள், முதலாம் உலகப் போரில் ரஷ்யப் பங்கெடுப்பின் பண்பை உருமாற்றியிருப்பதாக வலியுறுத்தினர். ரஷ்யாவின் பக்கத்தில் இனியும் அது சூறையாடல் போர் அல்ல, மாறாக, இது 'ஜனநாயகத்தையும்' ஜேர்மனிய மற்றும் ஆஸ்திரிய-ஹங்கேரிய இராணுவவாதத்துக்கு எதிராக புரட்சியையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கான யுத்தமாகும் என அவர்கள் பிரகடனம் செய்தனர். இது 'புரட்சிகர பாதுகாப்புவாதம்' என்ற பெயரில் போரை நியாயப்படுத்துவதாக இருந்தது.

'புரட்சிகர பாதுகாப்புவாத' நிலைப்பாடானது வெகுஜனங்களையும் சோவியத்துக்களையும் இடைக்கால அரசாங்கத்திற்கு முழுமையாக அடிபணியச்செய்வதை நோக்கமாகக் கொண்டதாயிருந்தது. மற்றும் இது பல மில்லியன் விவசாய சிப்பாய்கள் மற்றும் அப்போதுதான் அரசியல் வாழ்வில் நுழையத் தொடங்கியிருந்த குறைந்த அளவிலான அரசியல் விளக்கத்தையும் நனவையும் கொண்டிருந்த பரந்த தட்டினர் மீது ஒரு மறுக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தியது. புரட்சியின் நன்மைகளை வெளிப்புற ஆக்கிரமிப்பிலிருந்து காக்க வேண்டியது அவசியம் என்ற உணர்வு நியாயமானதாகத் தென்பட்டது. ஜாரின் கொள்ளையடிக்கும் நோக்கங்களுக்காக வீரர்கள் போராடமாட்டார்கள். எனினும், தேவைப்பட்டால், அவர்கள் நிலச் சீர்திருத்தம், ஜனநாயகம் மற்றும் சமாதானத்தை வழங்குவதாக உறுதியளித்த அரசாங்கத்தைப் பாதுகாக்க போராடுவார்கள்.

மார்ச் 14 அன்று, மென்ஷிவிக் மற்றும் சமூக புரட்சிக் கட்சியின் கட்டுப்பாட்டிலான பெட்ரோகிராட் சோவியத்தின் நிறைவேற்றுக் குழுவானது ரஷ்யா சமாதானத்தை விரும்புகிறது, ஆனால் 'எமது சொந்த சுதந்திரத்தை உறுதியாக பாதுகாத்து நிற்போம்,' என்ற உலகத்திற்கான ஒரு அறிக்கையை ஏற்றுக்கொண்டது. அரசர்கள், நில உரிமையாளர்கள் மற்றும் வங்கியாளர்களின் கைகளில் ஆக்கிரமிப்பு மற்றும் சூறையாடலுக்கான ஒரு கருவியாக செயற்பட மறுக்குமாறு ஜேர்மனிய மற்றும் ஆஸ்திரியத் தொழிலாளர்களுக்கு அது அழைப்பு விடுத்தது. [7]

ரஷ்யப் புரட்சியின் வரலாறு எனும் நூலில் ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டதைப் போல, ரஷ்யாவின் நிலப்பிரபுக்களுக்கும் வங்கியாளர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கக் கோராததைக் கூட விடுவோம், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் உடனான ரஷ்யாவின் ஏகாதிபத்திய கூட்டுக்களை நிராகரிக்க வேண்டும் என்றோ பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு தொழிலாளர்கள் 'நாடுகளைக் கைப்பற்றும் கருவியாக' செயற்பட மறுக்க வேண்டும் என்றோ கூட கோரிக்கைகள் முன்வைக்கப்படவில்லை. எனினும் இந்த அறிக்கை பெட்ரோகிராட் சோவியத்தால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மார்ச் 14 அன்று சோவியத்தில் நிறைவேற்றுக் குழுவின் அறிக்கையை வழிமொழிந்தவர்களில் டசன்கணக்கில் போல்ஷிவிக் பிரதிநிதிகளும் கூட இருந்தனர். இதனைத் தொடர்ந்து போல்ஷிவிக் கமிட்டிகள் மென்ஷிவிக் மற்றும் சோசலிச புரட்சியாளர்களின் (SR) நிலைப்பாடுகளை ஏற்றுக் கொண்டதும் மற்றும், பெட்ரோகிராட்டின் வைபோர்க் பகுதி போன்ற தொழிலாளம் வர்க்க பலம் மிகுந்த பகுதிகளில் கட்சியின் பிரிவுகளிடையே கடுமையான ஆட்சேபத்திற்கு முகம் கொடுத்த நிலையில் புதிய இடைக்கால அரசாங்கத்திற்கு “விமர்சனரீதியான ஆதரவை” வெளிப்படுத்தியதுமான சம்பவங்கள் வரிசையாய் நிகழ்ந்தன.

லெவ் கமெனேவ்

மார்ச் 15 அன்று, சோவியத்தின் 'உலகத்திற்கான அறிக்கை' வெளியிடப்பட்ட மறுநாள், கட்சியின் மீதான பிரமாண்டமான வர்க்க அழுத்தங்களை பிரதிபலிக்கின்ற விதமாக, ஜோசப் ஸ்ராலினுடன் சேர்ந்து கட்சியின் செய்தித்தாளான பிராவ்தாவின் கட்டுப்பாட்டை கையில் கொண்டிருந்த, போல்ஷிவிக் தலைவரான லெவ் கமெனேவ், ஒரு ஆசிரியர் தலையங்கத்தில் இவ்வாறு எழுதினார்:: 'சமாதானம் இல்லாத சமயத்தில், மக்கள் தங்கள் நிலைகளில் உறுதியுடன் நிற்க வேண்டும், துப்பாக்கி ரவைக்கு துப்பாக்கி ரவை, ஷெல் குண்டுக்கு ஷெல் குண்டு என்ற வகையில் பதிலளிக்க வேண்டும்,'[8].

அடுத்த நாள் ஸ்ராலின் எழுதினார்: 'எம்முடைய, ‘போரை நிறுத்து!’ என்பது, வெற்றுக் கோஷம் அல்ல — அது புரட்சிகர இராணுவத்தின் மற்றும், கூடுதல் புரட்சிகரமாக மாறி வருகின்ற புரட்சிகர இராணுவத்தின் ஒழுங்கின்மையை அர்த்தப்படுத்துவதாகி விடும். எமது சுலோகமானது உலக ஜனநாயகத்தின் கண்களுக்கு முன்னால், தோல்வி இல்லாமல், வெளிப்படையாக, உலக யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக உடனடிப் பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கு அனைத்து போரிடும் நாடுகளையும் நெருக்கும் ஒரு முயற்சியை மேற்கொள்ள இடைக்கால அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாகும். அதுவரை அனைவரும் தங்கள் பதவிகளில் இருக்கட்டும்.'[9]

பிராவ்தாவின் போக்கு, போல்ஷிவிக் கட்சியின் சில பிரிவுகளின் எதிர்ப்பை சந்தித்தது. ஆனால், இடைக்கால அரசாங்கத்தை ஏற்றுக்கொண்டு, மென்ஷிவிக்குகளும் சமூகப் புரட்சியாளர்களும் சோவியத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இணக்கமாகவும், மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான போராட்டத்தை கட்டுப்படுத்துவதையும் மட்டுப்படுத்துவதையும் நோக்கிய ஒரு போக்கு கட்சிக்குள் வளர்ந்து கொண்டிருந்தது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

முதலாளித்துவ அரசாங்கத்திற்கு எந்தவித ஆதரவும் கிடையாது, போருக்கு எதிரான கட்சியின் எதிர்ப்பில் எந்த மாற்றமும் கிடையாது, சோவியத்துக்களும் தொழிலாள வர்க்கமும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்குப் போராட வேண்டும் என்பதிலும் எந்த மாற்றமும் கிடையாது, என, லெனின் அவரது தொலைவில் இருந்து எழுதிய கடிதத்தில் வகுத்திருந்த அரசியல் பாதை, போல்ஷ்விக் தலைமையால் அலட்சியம் செய்யப்பட்டது. அவரது நான்கு கடிதங்களில் ஒன்று மட்டுமே பிராவ்தாவில் பிரசுரமேனும் செய்யப்பட்டிருந்தது, அதுவும் கூட, இடைக்கால அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் எவரும் 'தொழிலாளர்களுக்கு துரோகியாவார், உழைப்பாளிகளின் நன்மைக்கும் சமாதானம் மற்றும் சுதந்திரத்திற்கான நன்மைக்கும் துரோகம் செய்பவராவார்,”என லெனின் கண்டனம் செய்திருந்த பகுதியை அகற்றியமை உட்பட, அந்தக் கடிதம் கணிசமாக திருத்தப்பட்டிருந்தது.'[10]

1917 இல் ஸ்ராலின்

இடைக்கால அரசாங்கத்திற்கு விமர்சனரீதியான ஆதரவு கொடுப்பது என்பது, போல்ஷிவிக்குகள் பெப்பிரவரியின் வெற்றிகளை ஒருங்கிணைத்து, ரஷ்யாவில் முதலாளித்துவப் புரட்சியை 'பூர்த்தி” செய்யக்கூடியதான 'தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளது ஜனநாயக சர்வாதிகாரத்தை' எதிர்காலத்தில் ஸ்தாபிப்பதற்காகப் போராடுவதற்கான சிறந்த நிலைமைகளை உருவாக்குவதற்கு அவசியமாக இருந்தது என்பதாக கமெனேவ் மற்றும் ஸ்ராலினுடைய வாதம் இருந்தது.

ட்ரொட்ஸ்கி எழுதியது போல்: 'கமெனேவ்-ஸ்ராலின் கன்னை, புரட்சிகர ஜனநாயகம் என்றழைக்கப்படுவதன் இடது பிரிவாக தன்னை படிப்படியாய் மாற்றிக் கொண்டிருந்தது, முதலாளித்துவ வர்க்கத்தின் மீது பாராளுமன்ற நடைபாதைகளில் நின்றுகொண்டு அழுத்தம் கொடுக்கும் பொறிமுறையில் பங்கெடுத்துக் கொண்டிருந்தது.' [11]

மார்ச் மாத முடிவில், நீண்டகாலப் பிளவுகளைக் கொண்ட போல்ஷிவிக் மற்றும் மென்ஷிவிக் போக்குகளை மறு ஒருங்கிணைப்பது பற்றி, அவை இடைக்கால அரசாங்கத்துக்கும் 'புரட்சிகர பாதுகாப்புவாதத்துக்கும்' விமர்சனரீதியாகவோ அல்லது வேறு வகையிலோ வழங்கிவரும் பரஸ்பர ஆதரவை அடிப்படையாகக் கொண்டு, வெவ்வேறு மட்டங்களில் நிறைய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன.

பின்னணியில், சோவியத்தில் இருந்த கட்சிகள் இடைக்கால அரசாங்கத்திற்கு அதிகாரத்தை வழங்க முற்பட்ட அதேவேளை, முதலாளித்துவக் கட்சிகளுக்குள் இருந்த சக்திகள், புரட்சியை போதுமானளவு பின்தள்ளி, தொழிலாள வர்க்கத்தின் மீது இரத்தம் தோய்ந்த ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிடுவதற்காக முன்னாள் ஜாரிச தளபதிகளுடன் சதி செய்து வந்தன.

சோவியத்துக்கள் மற்றும் குறிப்பாக போல்ஷிவிக்குகள் செய்துகொண்ட ஒவ்வொரு சமரசத்தின் போதும் எதிர்-புரட்சியின் ஆபத்து வளர்ந்து வந்தது.

மூடியடைக்கப்பட்ட புகையிரதம்

லெனின் தனது பொறுப்புகளையும் மற்றும் ஒரு அரசியல் தலைவர் என்ற வகையில் அவரது முடிவுகள் மற்றும் நடவடிக்கைகளின் சாத்தியமான தாக்கத்தையும் பற்றி ஆழமாக புரிந்து வைத்திருந்தார். அவர் சூழ்நிலையின் அவசரத்தை உணர்ந்திருந்தார். போல்ஷிவிக் கட்சியானது முதலாளித்துவ வர்க்கத்துக்கும் போரை தொடர்ந்து முன்னெடுப்பதற்குமான ஒரு முண்டுகோலாக மாற்றப்பட்டுக் கொண்டிருந்தது.

பலவருடங்களாக நாடுகடந்து வாழ்ந்திருந்தாலும், லெனின் தன்னுடைய கட்சியினதும் அதன் உறுப்பினர்களதும் தரத்தை அறிந்திருந்தார். அவர்கள் மார்க்சிசத்தில் பயிற்றுவிக்கப்பட்டவர்களாக, அரசியல்ரீதியாக நனவானவர்களாக சோசலிசத்திற்காக அர்ப்பணித்தவர்களாக இருந்தனர். கமெனேவ் மற்றும் ஸ்ராலினுடைய நிலைப்பாடுகள், போல்ஷிவிக் இயக்கத்தினுள்ளும் அதன் அடித்தளத்திலும் எதிர்ப்புக்கு முகங்கொடுக்கும் என்று அவர் எதிர்பார்த்திருக்க வேண்டும். எப்படியாயினும் ரஷ்யாவுக்குள் நிகழ்வுகள் கண்ணிமைக்கும் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில், போல்ஷிவிக் கட்சி நெருக்கடியில் இருந்தது, பெட்ரோகிராட் நகரில் அவர் இருப்பது இன்றியமையாததாக இருந்தது.

மார்ச் 19 அன்று சூரிச்சில் ரஷ்ய புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் நடந்த ஒரு விவாதத்தில், மென்ஷிவிக் தலைவர் ஜூலியஸ் மார்ட்டோவ், தம்மை ஜேர்மனியை கடந்து செல்ல அனுமதிப்பதற்கான உடன்பாட்டை ஜேர்மனிய அரசாங்கத்துடன் உறுதிப்படுத்திக்கொள்ளும் சாத்தியத்தை பரிந்துரைத்தார். அதன்பின் அவர்கள் பால்டிக் கடலைக் கடந்து சுவீடன் சென்று, பின்லாந்து வழியாக ரஷ்யாவுக்குச் சென்றுசேர முடியும். அதற்குப் பிரதியுபகாரமாக, ரஷ்யாவில் உள்ள ஜேர்மனிய போர்க்கைதிகளை விடுவிப்பதற்கான பிரச்சாரம் ஒன்றை முன்னெடுப்பதாக உறுதியளிக்கலாம் என்றும் மார்ட்டோவ் முன்மொழிந்தார்.

லெனின் இந்த யோசனையை பற்றிக்கொண்டார். ரஷ்யப் பேரினவாதிகள், ஜேர்மனியின் ஊடாக வரும் எவரொருவரையும், எதிரியாக சொல்லப்பட்டுக் கொண்டிருந்தவர்களிடம் உதவியை பெற்றுக்கொண்டவர்களாக அவதூறு செய்ய முயற்சிப்பார்கள் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். எனவே, அவர் தனது பயணத்தின் விதிமுறைகள் வெளிப்படையானதாகவும், புரட்சிகரக் கொள்கையை சமரசம் செய்யாததாகவும் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சுவிஸ் மார்க்சிசவாதியான ஃபிரிட்ஸ் பிளாட்டன் என்பவரால் சூரிச்சில் உள்ள ஜேர்மன் தூதரகத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

குருப்ஸ்கயா நினைவுகூர்ந்த வகையில் அவை பின்வருமாறு:

 நாடுகடந்துவாழும் ரஷ்யர்கள் போர் தொடர்பாக அவர்களது நிலைப்பாடு என்னவாயிருப்பினும் ஜேர்மனியின் வழியாகச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.

 பிளாட்டனின் அனுமதி இன்றி நாடுகடந்துவாழுவோர் பயணிக்கும் புகையிரதப் பெட்டிகளுக்குள் யாரும் நுழையக் கூடாது.

 நாடுகடந்துவாழ்வோரின் பொதிகளை சோதனையிடும் நடவடிக்கைகளோ அல்லது கடவுச் சீட்டை பரிசோதிக்கும் நடவடிக்கைகளோ இருக்கக் கூடாது.

 பயணிக்கும் நாடுகடந்துவாழ்வோரின் எண்ணிக்கைக்குப் பொருத்தமான எண்ணிக்கையில் ரஷ்யாவில் உள்ள ஜேர்மனிய மற்றும் ஆஸ்திரிய கைதிகளை விடுவிக்கப் போராடுவதற்கு நாடுகடந்துவாழ்வோர் கிளர்ச்சிசெய்வர்.[12]

இனேஸா ஆர்மோன்ட்

'மூடியடைக்கப்பட்ட புகையிரதம்' என்று அழைக்கப்பட்ட அந்த புகையிரதம் லெனின் மற்றும் குருப்ஸ்காயா, இனேஸா ஆர்மோன்ட் மற்றும் கிரிகோரி சினோவியேவ் போன்ற ஏனைய போல்ஷ்விக் தலைவர்கள் உட்பட 29 பேரை சுமந்து கொண்டு மார்ச் 27 அன்று சூரிச்சை விட்டுப் புறப்பட்டது.

மார்ச் 31 அன்று, பால்டிக்கை கடந்து, அவர்கள் ஸ்வீடனை அடைந்தனர். அங்கிருந்து அவர்கள் பின்லாந்துக்குள் சென்று அங்கிருந்து பெட்ரோகிராட்டுக்கு ஒரு புகையிரதத்தில் ஏறினர். 'நாம் அங்கு சென்று இறங்கும் சமயத்தில் கைது செய்யப்படுவோமோ என்று லெனின் கேட்டார்' என குருப்ஸ்காயா நினைவு கூர்ந்தார். அவரது தோழர்கள் 'புன்னகைத்ததாக' அவர் எழுதியிருந்தார்.[13]

1917 ஏப்பிரல் 3 அன்று மாலை பெட்ரோகிராட்டில் உள்ள பின்லாந்து புகையிரத நிலையத்தை லெனின் அடைந்தார்.

கைது செய்யப்படுவதற்குப் பதிலாக, ஆயிரக்கணக்கான போல்ஷ்விக்-சார்பு தொழிலாளர்களும் சிப்பாய்களும் அவரை சந்தித்தனர், மேலும் ரோஜா பூச்செண்டுகளையும் கொடுத்தனர். சோவியத்துகளின் சார்பில், மென்ஷிவிக்கான அலெக்ஸாண்டர் ஷீயிட்ஸ் அவரை நேரில் வாழ்த்தினார். ஷீயிட்ஸ், சோவியத்தின் நிறைவேற்றுக் குழுவின் சமரச நிலைப்பாட்டிற்கு ஆதரவளிக்குமாறு லெனினை வலியுறுத்தினார்.

அதற்கு மாறாக லெனின், சோசலிசப் புரட்சிக்கான ஒரு உணர்ச்சிமிக்க அழைப்பை விடுத்தார். தனிப்பட்டமுறையில் பேசும்போது, பிராவ்தாவில் முன்னெடுக்கப்பட்டுவந்த பாதுகாப்புவாத, போர்-சார்பு அரசியல் நிலைப்பாடு சம்பந்தமாக கமெனேவை அவர் கடுமையாக கண்டித்தார்.

ஏப்பிரல் ஆய்வுகளும் கட்சியை மீள் ஆயுதபாணியாக்கலும்

அதனைத் தொடர்ந்து இடம்பெற்றவற்றை, “கட்சியை மீள ஆயுதபாணியாக்கல்” என லியோன் ட்ரொட்ஸ்கி பண்புமயப்படுத்தினார்.

லெனின், அடுத்த நாள் ஏப்பிரல் 4 அன்று, தொழிலாளர்கள் மற்றும் சிப்பாய்களது பிரதிநிதிகளது பெட்ரோகிராட் சோவியத்தின் போல்ஷிவிக் பிரதிநிதிகளிடம் தனது 'ஏப்பிரல் ஆய்வுகளை' முன்வைத்தார்; பின்னர் மீண்டும் போல்ஷிவிக் மற்றும் போட்டி மென்ஷிவிக் போக்கு இரண்டின் பிரதிநிதிகளின் ஒருங்கிணைந்த கூட்டத்தில் முன்வைத்தார்.

ஏப்பிரல் ஆய்வுகள் என்னவாக இருந்தன? ஆவணம் பத்து புள்ளிகளை உள்ளடக்கியிருந்தது. இது இடைக்கால அரசாங்கம் மற்றும் போர் சம்பந்தமாக லெனினுடைய அணுகுமுறையையும் அத்துடன் ஒரு புதிய மற்றும் உயர்ந்த அரசு வடிவம் என்ற வகையில் சோவியத்துகளின் வரலாற்று முக்கியத்துவம் பற்றிய அவரது மதிப்பீட்டையும் சுருக்கமாக விளக்கியது. அது, ரஷ்யாவிற்குள் தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற விவசாயிகளின் நிலைமைகளைக் கையாள்வதற்கு புறநிலையில் அவசியமாயிருந்த அவசரமான பொருளாதார நடவடிக்கைகளை எடுத்துவைத்தது; மற்றும், அது கட்சியின் பெயரை ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி என்பதில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சி என மாற்றுவதற்கு அழைப்பு விடுத்தது.

இறுதியாக, அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக, போல்ஷிவிக்குகள் முன்முயற்சி எடுத்து ஒரு புதிய புரட்சிகர அகிலத்தை உருவாக்க வேண்டும் என்று லெனின் வலியுறுத்தினார். இந்த வலியுறுத்தல், போரில் தங்கள் சொந்த முதலாளித்துவத்தை ஆதரிப்பதன் மூலம் சோசலிசத்தை காட்டிக் கொடுத்த இரண்டாம் அகிலத்தின் கட்சிகளுக்கு எதிரானது மட்டுமன்றி, அந்த கட்சிகளிடமிருந்து முறித்துக்கொள்ள மறுத்த அனைத்து 'மத்தியவாதிகளுக்கு' எதிரானதாகவும் அமைந்தது.

நான் இப்போது ஏப்பிரல் ஆய்வுகளை மீளாய்வு செய்ய இருக்கிறேன்.

புள்ளி 1: போர் சம்பந்தமாக கட்சியின் நிலைப்பாட்டில் மாற்றமேதுமில்லை.

லெவோவ் மற்றும் அவரைச் சுற்றியவர்களின் புதிய அரசாங்கத்தின் முதலாளித்துவ இயல்பு காரணமாக, அதன் கீழ் இடம்பெறும் போரில், கேள்விக்கிடமின்றி ரஷ்யா ஒரு ஏகாதிபத்திய கொள்ளையடிக்கும் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளது என்பதால், போருக்கு எதிரான நமது அணுகுமுறையில் “புரட்சிகர பாதுகாப்புவாதத்துக்கு” அற்ப அளவிலேனும் சலுகை கிடையாது..…

போரை, நாடுகளைக் கைப்பற்றும் வழிமுறையாக அல்லாமல், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு அத்தியாவசியமான ஒன்றாக ஏற்றுக்கொண்டுள்ள, புரட்சிகர பாதுகாப்புவாதத்தில் நம்பிக்கை வைத்துள்ள, வெகுஜனங்களின் பரந்த தட்டினரின் சந்தேகத்திற்கிடமற்ற நேர்மையைப் பார்க்கும் போது, அவர்கள் முதலாளித்துவ வர்க்கத்தால் ஏமாற்றப்பட்டு வருகின்றனர் என்ற உண்மையை நோக்கும் போது, குறிப்பிட்ட திட்டநுட்பத்துடன், உறுதிப்பாட்டுடன் மற்றும் பொறுமையுடன் அவர்களுடைய பிழையை அவர்களுக்கு தெளிவுபடுத்துவதும், மூலதனத்திற்கும் ஏகாதிபத்திய போருக்கும் இடையே உள்ள பிரிக்க முடியாத தொடர்பை விளக்குவதும், அத்துடன் மூலதனத்தை தூக்கி எறியாமல், வன்முறையால் திணிக்கப்படாத, உண்மையான ஜனநாயக சமாதானத்தின் மூலம் போரை முடிவுக்கு கொண்டுவருவது முடியாத காரியம் என்பதை நிரூபிப்பதும் அவசியமாயுள்ளது.[14]

இந்த புள்ளியில், லெனினின், முதலாளித்துவத்தின் கொள்ளையடிக்கும் அபிலாசைகளுக்கும், ஒரு புரட்சிகர தற்காப்புவாத நிலைப்பாட்டை கடைப்பிடிக்கின்ற வெகுஜனங்களின் “நேர்மைக்கும்” இடையிலான வேறுபாட்டை காட்டுவது அதிமுக்கியமான ஒன்றாகும். லெனினின் என்ன செய்ய வேண்டும்? நூல் எழுதப்பட்ட காலத்தில் இருந்தே, தொழிலாள வர்க்கத்தின் தன்னிச்சையான முதலாளித்துவ நனவுக்கு எதிராக, சோசலிச நனவை அறிமுகப்படுத்தி, தொழிலாள வர்க்கத்துக்குள் உள்கொண்டுசெல்ல வேண்டும், என்ற புரிதலை அடிப்படையாக கொண்டிருந்த, போல்ஷிவிசத்தின் முழு மரபில் இருந்து எடுக்கப்பட்டதாய் அது இருந்தது..

மார்க்சிச கட்சியானது, அனைத்து நிலைமைகளிலும் தொழிலாள வர்க்கத்தின் முதலாளித்துவ நனவை எதிர்ப்பதோடு, அவர்களுக்கு 'பொறுமையாக விளக்கமளித்து' அவர்களை ஒரு சோசலிச நிலைப்பாட்டிற்கு வென்றெடுக்க வேண்டும் என்பதை லெனினும் போல்ஷிவிக்குகளும் எப்பொழுதும் வலியுறுத்தி வந்துள்ளனர். போல்ஷிவிக்குகளால் தசாப்த காலங்களாக கல்வியூட்டப்பட்டு விழிப்படைந்திருந்த, அரசியல்ரீதியாக முன்னேறிய தொழிலாளர்கள் மத்தியில், நடப்பு உணர்வுகளுக்கு அடிபணியச் செய்யும் உக்கிரமான அழுத்தத்தின் கீழ், இந்த அடிப்படைப் புரிதலை மீண்டும் ஸ்தாபிப்பது தீர்க்கமானதாக இருந்தது.

தற்போது கட்சி சிறுபான்மையாக இருப்பது ஒரு பிரச்சினை அல்ல என லெனின் போல்ஷிவிக் காரியாளர்களிடம் கூறினார். உண்மையைச் சொல்ல வேண்டியது எமது கடமை. வர்க்கப் போராட்டத்தின் தர்க்கம், கெரென்ஸ்கி மற்றும் மென்ஷிவிக்குகளின் எதிர்-புரட்சிகர குணாம்சம் அம்பலப்படுவதைக் காணும். தீர்க்கமான கட்டத்தில், புறநிலை அபிவிருத்திகளுடன் கட்சியின் வேலைத்திட்டம் ஊடுருவி சோசலிசப் புரட்சி முன்னோக்கிற்கு தொழிலாள வர்க்க வெகுஜனங்களை வென்றெடுக்கும் இயலுமையை போல்ஷிவிக்குகளுக்கு வழங்கும்.

புள்ளி 2: லெனின், 'இடையறாத' அல்லது 'நிரந்தரப் புரட்சி' என்ற தத்துவத்தை தழுவிக்கொண்டமையானது ஏனையோரை விட லியோன் ட்ரொட்ஸ்கியுடன் ஒன்றுபடுத்தியது.

ரஷ்யாவில் நடப்பு சூழ்நிலையின் சிறப்பான அம்சம் என்னவென்றால், பாட்டாளி வர்க்கத்திற்கு போதுமான வர்க்க நனவின்மை மற்றும் ஒழுங்கமைப்பின்மை காரணமாக, முதலாளித்துவத்தின் கைகளில் அதிகாரத்தை விட்டு வைத்த, புரட்சியின் முதல் கட்டத்திலிருந்து, நாடு, தொழிலாள வர்க்கம் மற்றும் விவசாயிகளின் வறிய பகுதியினரின் கைகளில் அதிகாரத்தை கையளிக்க வேண்டிய இரண்டாவது கட்டத்துக்கு சென்று கொண்டிருக்கின்றது. [15]

ட்ரொட்ஸ்கிக்கு எதிராக லெனின், தொழிலாளர்களின் அரசாங்கத்தை, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை, ஸ்தாபிப்பதற்கு, ரஷ்யாவின் பொருளாதார மற்றும் சமூக பின்தங்கிய நிலையானது தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புறநிலையான தடையாக இருப்பதாக வாதிட்டு வந்திருந்தார். ஜனத்தொகையில் பெரும்பகுதியாக இருந்த பரந்த கிராமப்புற விவசாயிகள் ஒரு குட்டி முதலாளித்துவ வர்க்கமாக இருந்தனர், அவர்கள் நிலச் சீர்திருத்தத்தையும் ஜனநாயக உரிமைகளையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். இந்த தட்டுக்கு அடிப்படையாகவே அவர்கள் சார்ந்த வர்க்கத்தின் நலன் காரணமாக சோசலிசத்தில் ஆர்வம் இருக்கவில்லை.

இதனால், லெனின், ரஷ்யாவில் 'தொழிலாளர்களதும் விவசாயிகளதும் ஜனநாயக சர்வாதிகாரம்' என்ற வடிவிலான இடைநிலை ஆட்சியை (intermediary regime) ஸ்தாபிக்கும் கோட்பாட்டை கொண்டுவந்தார். இந்த இடைநிலை ஆட்சியில், தொழிலாளர்களது சோசலிச இயக்கமானது மிகச் சாத்தியமான அளவிற்கு நில சீர்திருத்தத்தையும் ஜனநாயக விரிவாக்கத்தையும் நடைமுறைப்படுத்துவதற்காக, விவசாயிகளை தளமாகக் கொண்ட கட்சிகளில் மிகத் தீவிரமானவற்றுடன் ஒரு கூட்டணியில் செயல்படும். இது நாட்டின் மிக விரைவான பொருளாதார அபிவிருத்தியையும் தொழிலாள வர்க்கத்தின் விரிவாக்கத்தையும் தூண்டிவிடுவதுடன், எதிர்காலத்தில் சோசலிசத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான சிறந்த நிலைமைகளை உருவாக்கும்.

அத்தகைய 'ஜனநாயக சர்வாதிகாரத்தில்' எந்த வர்க்கம், ஆகவே எந்த நலன்கள் ஆதிக்கம் செலுத்தும், மற்றும், அந்த வகையில் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே தவிர்க்க முடியாத மோதல் வெடிக்கும்போது அது எவ்வாறு தனது பிரதிபலிப்பை காட்டும் என்ற கேள்விகளுக்கு லெனின் பதில் அளிக்காமல் விட்டுவிட்டார்.

1917 ஏப்ரலில், லெனின் ஒரு தொழிலாளர் அரசை ஸ்தாபிக்க வேண்டும் என்ற தெளிவுடன் முன்வந்தார். அந்த அரசு, நிலச் சீர்திருத்தம் மற்றும் ஜனநாயகத்தை முழு அளவில் செயல்படுத்துவதன் மூலம், விவசாயிகளில் பெரும்பான்மையினரின் விசுவாசத்தை வென்று தக்கவைத்துக்கொள்ளும்.

ரஷ்யாவை தனியாக எடுத்துக்கொண்டால், நிச்சயமாக அது பொருளாதார மற்றும் சமூக பின்தங்கிய நிலையினால் குணாம்சப்படுத்தப்படும். எவ்வாறெனினும், உலக அளவில் எடுத்துக்கொண்டால், லெனின் மதிப்பீடு செய்திருந்தவாறு, ஏகாதிபத்திய யுத்தமானது சோசலிசத்திற்கான புறநிலை நிலைமைகள், ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட உலகப் பொருளாதாரம், முழுமையாக முதிர்ச்சியடைந்திருப்பதைக் குறித்து நின்றது. ரஷ்யாவில் தொழிலாள வர்க்கத்தின் பணி, அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான வாய்ப்புகளை பற்றிக்கொண்டு, உலகப் புரட்சிக்கான பாதையை அபிவிருத்தி செய்வதற்கு அதைப் பயன்படுத்துவதாகும். ரஷ்யாவின் அபிவிருத்தியானது சர்வதேச சோசலிச திட்டமிடலின் அபிவிருத்தியின் ஒரு பகுதியாகவே இடம்பெறும்.

போல்ஷிவிக் கட்சிக்குள்ளான விவாதங்களில், இது 'ட்ரொட்ஸ்கிச' நிலைப்பாடு என நியாயமான முறையில் லெனின் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஏப்பிரல் ஆய்வுகள், அதன் அனைத்து அடிப்படைகளிலும், ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் தத்துவத்துடன் இணங்கியதாக இருந்தது.

புள்ளி 3: இடைக்கால அரசாங்கத்திற்கு எந்த ஆதரவும் கிடையாது; சோவியத் தலைமை மற்றும் போல்ஷிவிக் கட்சியின் கமெனேவ்-ஸ்ராலின் கன்னை இரண்டுக்கும் கடுமையான கண்டனம் செய்து, ஏப்பிரல் ஆய்வுகள் வெளிப்படையாக அறிவித்ததாவது:

இடைக்கால அரசாங்கத்திற்கு எந்தவித ஆதரவும் கிடையாது; அதன் அனைத்து வாக்குறுதிகளும், குறிப்பாக நாடுகளை இணைப்பதை கைவிடுவது தொடர்பான வாக்குறுதிகளும் முழு பொய் என்பது அம்பலப்படுத்தப்பட வேண்டும்.

இந்த அரசாங்கம், அதாவது முதலாளிகளின் அரசாங்கம், ஒரு ஏகாதிபத்தியவாதிகளின் அரசாங்கமாக இருக்கக் கூடாது என அனுமதிக்கவியலாத பிரமைகளை பரப்பும் “கோரிக்கைகளை” அம்பலப்படுத்த வேண்டும்.[16]

புள்ளி 4: சக்திகளின் சமநிலை மற்றும் சோவியத்துக்களின் முக்கியத்துவம் பற்றிய ஒரு புறநிலை மதிப்பீடு

முதலாளித்துவ செல்வாக்குக்கு அடிபணிந்து, அந்த அடிபணிவை தொழிலாளர்கள் மத்தியில் பரப்பிவிடும் ஜனரஞ்சக சோசலிஸ்டுகள் மற்றும் சோசலிசப் புரட்சியாளர்கள் முதல், ஒழுங்கமைப்பு குழு (ஷீயிட்ஸ், செரெடெலி போன்ற) ஸ்டெக்லோவ், மற்றும் இதுபோன்ற இன்னும் பல அமைப்புகள் வரையான, குட்டி முதலாளித்துவ சந்தர்ப்பவாத சக்திகள் அனைத்தினதும் கூட்டுக்கு எதிரான நிலையில் பார்க்கும்போது, அநேகமான தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத்துக்களில் எமது கட்சி சிறுபான்மையாக, இதுவரையிலும் ஒரு மிகச்சிறுபான்மையாக உள்ளது என்ற உண்மையை உணர்தல்.

புரட்சிகர அரசாங்கத்தின் ஒரே சாத்தியமான வடிவமாக தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத்துக்களைக் கண்டுகொள்ளும் நிலைக்கு வெகுஜனங்களைக் கொண்டு வர வேண்டும். ஆகவே, இந்த அரசாங்கம் முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வாக்குக்கு அடிபணிந்து இருக்கும் வரை, அவர்களது தந்திரோபாயங்களின் பிழைகள் பற்றி வெகுஜனங்களுக்கு பொறுமையாக, திட்டமிட்ட முறையிலான இடைவிடாத விளக்கத்தை, விசேடமாக வெகுஜனங்களின் நடைமுறைத் தேவைகள் பற்றிய தெளிவுபடுத்தலை முன்வைப்பதே எமது பணியாகும்.

நாம் சிறுபான்மையினராக இருக்கும் வரை, பிழைகளை விமர்சிக்கின்ற மற்றும், அம்பலப்படுத்துகின்ற பணியை தொடர்ந்தும் முன்னெடுக்கின்ற அதேவேளையில், முழு அரசு அதிகாரத்தையும் தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத்துகளுக்கு மாற்றுவதற்கான அவசியத்தையும் நாம் அறிவுறுத்துவோம். அப்போது மக்கள் அனுபவத்தின் மூலம் தமது தவறுகளில் இருந்து விடுபடலாம். [17]

'பாட்டாளிகளதும் விவசாயிகளதும் ஜனநாயக சர்வாதிகாரத்தை' ஸ்தாபிப்பதற்கான நிலைமைகள் இன்னமும் வராத காரணத்தினால், இடைக்கால அரசாங்கத்துக்கு விமர்சனரீதியான ஆதரவை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாடு நிலவத் தொடங்கியிருந்த ஒரு அமைப்பினுள், லெனினின் இந்த அறிக்கைகள், பேராசிரியர் அலெக்ஸாண்டர் ரபினோவிட்ச் எழுதியிருந்தவாறு 'ஒரு வெடிப்பார்ந்த தாக்கத்தை' கொண்டிருந்தன.

லெனின், சோவியத்துக்களின் கைகளுக்குள் அதிகாரம் மாற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை மட்டுமன்றி, சோவியத் அதிகாரத்திற்கான போராட்டமானது ஏனைய ஒவ்வொரு அரசியல் போக்கிற்கும் எதிராக போல்ஷிவிக்குகளால் மட்டுமே அபிவிருத்தி செய்யப்பட முடியும் என்பதையும் முன்னிலைப்படுத்தினார்.

புள்ளி 5: உயர்ந்த அரசு வடிவமாக சோவியத்து.

முதலாளித்துவ அரசைத் தூக்கியெறிந்து, ஒரு புதிய, உயர்ந்த அரசு அதிகார வடிவத்தை, அதாவது விவசாயிகளின் வறிய தட்டினரை வழிநடத்தும் தொழிலாள வர்க்க சர்வாதிகாரத்தை, ஸ்தாபிப்பதையே லெனின் பரிந்துரைக்கின்றார் என்பதை தெளிவாக்கும் வகையில் ஏப்பிரல் ஆய்வுகளின் ஐந்தாவது புள்ளி பிரகடனம் செய்தது:

தொழிலாளர் பிரதிநிதிகள், சோவியத்தில் இருந்து ஒரு நாடாளுமன்ற குடியரசுக்குத் திரும்புவதானது ஒரு பின்வாங்கல் நடவடிக்கையாகும், ஆகவே, ஒரு நாடாளுமன்றக் குடியரசை அன்றி, மாறாக, நாடு முழுவதிலும் மேலிருந்து கீழ் வரை தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பிரதிநிதிகளது சோவியத்துகளின் குடியரசையே ஸ்தாபிக்க வேண்டும்.

பொலிஸ், இராணுவம் மற்றும் அதிகாரத்துவத்தை ஒழித்தல்.

அனைத்து அதிகாரிகளதும் ஊதியம் -இவர்கள் அனைவருமே தேர்ந்தெடுக்கப்படக் கூடியவர்கள் மற்றும் எந்த நேரத்திலும் இடமாற்றம் செய்யத்தக்கவர்கள்- ஒரு திறம்பட்ட தொழிலாளியின் சராசரி ஊதியத்தை விட அதிகமாக இருக்கக் கூடாது.[18]

இவற்றைத் தொடர்ந்து, விவசாயிகளின் ஆதரவை வென்றெடுக்க, பெரும் நிலப்பிரபுக்களின் இழப்பில் நிலச் சீர்திருத்தத்தை மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தல், மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தின் இழப்பில் தொழிலாளர்களின் சோவியத்துக்கள் மூலம் நிதி, உற்பத்தி, விநியோகம் ஆகியவற்றை தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருதலையும் சுருங்க விளக்கும் மேலதிக புள்ளிகளும் உள்ளடக்கப்பட்டிருந்தன.

புள்ளி 6, விவசாயிகளின் அபிலாசைகளையும் கோரிக்கைகளையும் பூர்த்தி செய்வதற்கு விளைநிலங்கள் தேசியமயமாக்கப்படுவதற்கும் நிலப்பிரபுக்களின் பெருமளவிலான சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கும் அழைப்பு விடுத்தது.

புள்ளி 7, வங்கிகளை, சோவியத்துக்களின் கட்டுப்பாட்டிலான ஒற்றை தேசிய வங்கியாகக் கூட்டிணைப்பதற்கு அழைப்புவிடுத்தது.

புள்ளி 8, உற்பத்தி மற்றும் விநியோகத்தின் மீது தொழிலாளர்களின் கட்டுப்பாட்டிற்கு அழைப்பு விடுத்தது.

புள்ளி 9, கட்சியின் வேலைத் திட்டத்தை சோவியத் அதிகாரத்திற்கான போராட்டத்தின் பாதையில் கொண்டுவருவதற்கும் மற்றும் கட்சியின் பெயரை ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி என்றதில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சி என்று மாற்றுவதற்கும் ஒரு கட்சி மாநாட்டை நடத்தப் பரிந்துரைத்தது.[19]

புள்ளி 10: ஒரு புதிய அகிலம்.

இது எளிமையாக தெரிவித்ததாவது: 'நாம் சமூக-பேரினவாதிகளுக்கு மற்றும் ‘மத்திக்கு’ எதிராக ஒரு புரட்சிகர அகிலத்தை உருவாக்க முன்முயற்சி எடுக்க வேண்டும்.'[20]

லெனின், இரண்டாம் அகிலத்தில் காணப்படுகின்ற “பேரினவாதிகளுக்கும் (= ‘பாதுகாப்புவாதிகள்’) சர்வதேசியவாதிகளுக்கும் இடையில் ஊசலாடிக்கொண்டிருக்கும் ஒரு 'போக்கு' என “மத்தியை” வரையறுத்தார். அவர் அதன் பிரதிநிதிகளில் ஜேர்மனியில் காவுட்ஸ்கி மற்றும் அவரைச் சுற்றியவர்கள், பிரான்சில் லோங்கே மற்றும் அவரைச் சுற்றியவர்கள், இத்தாலியில் துராட்டி மற்றும் அவரைச் சுற்றியவர்கள், பிரிட்டனில் மெக்டொனால்ட் மற்றும் அவரைச் சுற்றியவர்கள் மற்றும் மிகவும் வெடிப்புத்தன்மை வாய்ந்த ரஷ்யாவில் ஷீயிட்ஸ் மற்றும் அவரைச் சுற்றியவர்கள் -அதாவது, போல்ஷிவிக் குழுக்கள் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்த அதே மென்ஷிவிக்குகள், சில நாட்களுக்கு முன்னர் ஸ்ராலின் இவர்களுடன் தான் ஒரு ஒன்றுபட்ட அமைப்பை மீண்டும் உருவாக்குவதை பரிந்துரைத்திருந்தார்- ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டிருந்தார்.[21]

ஏப்பிரல் ஆய்வுகளைக் கேட்டு போல்ஷிவிக்குகளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியானது, அதைக் கேட்ட மென்ஷிவிக் சோவியத் பிரதிநிதிகளின் எதிர்வினையுடன் ஒப்பிடுகையில் மிகச் சாதாரணமானதாகி விட்டது. மென்ஷிவிக் சுக்ஹானோவ் நினைவுகூர்ந்தவாறு, லெனினின் அறிக்கை, 'ஒரு பைத்தியக்காரனின் உளறல்' மற்றும் 'ஆதிகால அராஜகவாதம்' என முத்திரை குத்தப்பட்டது. மென்ஷிவிக் தலைவர் ஸ்கோபெலேவ், லெனின் இயக்கத்தின் அணிகளுக்கு வெளியே நிற்கும் முக்கியத்துவம் அற்றவர் என அறிவித்தார்.[22]

போல்ஷிவிக் கட்சியின் தலைமையிடம் இருந்து லெனின் உடனடியாக ஆதரவைப் பெற்றிருக்காவிட்டாலும், அவர் நிச்சயமாக 'முக்கியத்துவம் அற்ற முன்திறம் இழந்தவராக இருக்கவில்லை'. அரசியல் சூழ்நிலையில் அவர் செய்த தலையீடு தீர்க்கமான தாக்கத்தைக் கொண்டிருந்தது.

ஏப்பிரல் 6, போல்ஷிவிக் மத்திய குழு கூட்டத்தில் கமெனேவ் மற்றும் ஸ்ராலின் இருவரும் லெனினை எதிர்த்தனர்.

ஏப்பிரல் 7 அன்று, பிராவ்தா பத்திரிகையில் இந்த ஆய்வுகள், இவை லெனினின் கருத்துக்களை மட்டுமே பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறி, தமக்கு அதற்கும் பொறுப்பில்லை என்ற குறிப்புடன் வெளியிடப்பட்டன.

எவ்வாறெனினும், கட்சிக்குள் ஏற்கனவே கொந்தளிப்பான கலந்துரையாடல்களும் மறு அணிதிரள்வுகளும் நிறையவே நடைபெற்றுக்கொண்டிருந்தன.

அதேதினம், ஏப்பிரல் 7 அன்று, சோவியத் நிறைவேற்றுக் குழுவில் பதினொரு போல்ஷிவிக் பிரதிநிதிகளும் மற்றும் மூன்று பேரும், இடைக்கால அரசாங்கத்திற்கு 'விமர்சன ரீதியான ஆதரவு' கொடுப்பதில் இருந்து மாறி, யுத்தத்தை தொடர்வதற்கு நிதியளிப்பதற்காக 'விடுதலைக் கடன்' (“Liberty Loan”) என்று அழைக்கப்பட்டதற்கு சோவியத்தின் அங்கீகாரத்தை அளிக்கும் மென்ஷிவிக்குகள் / சோசலிச புரட்சியாளர்கள் பெரும்பான்மையின் தீர்மானத்தை எதிர்த்து, 'வேண்டாம்' என்று வாக்களித்தனர்.

ஏப்பிரல் 8, பிராவ்தா ஆசிரியர்களின் சார்பில், கமெனேவ் ஏப்பிரல் ஆய்வுகளை சவால் செய்ய முயன்றார். அவர் எழுதியதாவது:

தோழர் லெனினின் பொதுவான திட்டத்தைப் பொறுத்தவரையில், அது முதலாளித்துவ-ஜனநாயகப் புரட்சி பூர்த்தியடைந்துவிட்டது என்ற அனுமானத்தில் இருந்து முன்னேறி இந்தப் புரட்சியை ஒரு சோசலிசப் புரட்சியாக உடனடியாக மாற்றுவதன் மீது கட்டியெழுப்பப்படுவதால் அது எங்களுக்கு ஏற்கவியலாததாகத் தெரிகிறது.[23]

ஏப்பிரல் 8க்கும் 13க்கும் இடைப்பட்ட நாட்களில், லெனின் தனது “தந்திரோபாயம் சம்பந்தமான கடிதங்களை” எழுதினார். அவை கமெனேவின் நிலைப்பாடுகளுக்கு பதிலளித்தன. அவை பெட்ரோகிராட்டில் இருந்த போல்ஷிவிக் தலைமையிடையே சுற்றில் விடப்பட்டு, ஏப்பிரல் 24 முதல் 29 வரை நடந்த கட்சி மாநாட்டிற்கு முன்னதாக ஒரு துண்டுப்பிரசுரமாகவும் வெளியிடப்பட்டன.

குறிப்பாக “தந்திரோபாயம் சம்பந்தமான கடிதங்களில்”, லெனின், கட்சிக்குள் கமெனேவ் மற்றும் ஏனையவர்களால் பாதுகாக்கப்பட்டு வந்த, 'பாட்டாளிகளதும் விவசாயிகளதும் ஜனநாயக சர்வாதிகாரம்' என்ற முந்தைய போல்ஷிவிக் முன்னோக்கில் இருந்து ஏப்பிரல் ஆய்வுகளால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் மாற்றங்களை விளக்கினார்.

பிப்ரவரி புரட்சியில், இடைக்கால அரசாங்கம் என்ற வடிவில் அரசு அதிகாரம் முதலாளித்துவ வர்க்கத்திற்கு கைமாற்றப்படுவதில் விளைந்திருந்தது என லெனின் வலியுறுத்தினார். 'இந்த மட்டத்திற்கு,' முதலாளித்துவ-ஜனநாயகப் புரட்சி 'பூர்த்தியடைந்தது' என கமெனேவுக்கு எதிராக அவர் எழுதினார்.

முதலாளித்துவ-ஜனநாயகப் புரட்சியை 'ஜனநாயக சர்வாதிகாரத்தின்' மூலம் மட்டுமே யதார்த்தமாக்க முடியும் என்று போல்ஷிவிக் கட்சி எப்பொழுதும் வலியுறுத்தி வந்துள்ளது எனக் கூறிய எந்திரத்தனமான எதிர்-வாதங்களுக்கு எதிராய் லெனின் பதிலளித்தார்:

என் பதில்: போல்ஷிவிக் கோஷங்களும், கருத்துக்களும் மொத்தமாக வரலாற்றினால் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளன; ஆனால், ஸ்தூலமாக விடயங்கள் வேறுபட்ட விதத்தில் நிகழ்ந்தேறியிருக்கின்றன; அவை மிகவும் அசலானவை, மிகவும் தனித்துவமானவை மற்றும் யாரும் எதிர்பார்த்திருக்கக் கூடியதில் இருந்து மிகவும் வேறுபட்டவை.

இந்த உண்மையை புறக்கணிப்பது அல்லது தாண்டிச் செல்வதானது, புதிய மற்றும் உயிரோட்டமான யதார்த்தத்தின் தனிச்சிறப்பான அம்சங்களை கற்றுக்கொள்வதற்குப் பதிலாக, பகுத்தறிவின்றி மனப்பாடம் செய்துகொண்ட சூத்திரங்களை வலியுறுத்துவதன் மூலம், எமது கட்சியின் வரலாற்றில் ஒரு தடவைக்கும் மேல், ஏற்கனவே, வருந்தத்தக்க பாகம் ஆற்றிய 'பழைய போல்ஷிவிக்குகளது' செயலை ஒத்திருப்பதையே அர்த்தப்படுத்தும்.

ரஷ்யப் புரட்சியில் 'பாட்டாளிகளதும் விவசாயிகளதும் புரட்சிகர-ஜனநாயக சர்வாதிகாரம்', நிச்சயமான வடிவத்திலும் குறிப்பிட்ட அளவுக்கும் ஏற்கனவே ஒரு யதார்த்தமாக ஆகிவிட்டது. ஏனெனில், இந்த 'சூத்திரமானது' வர்க்கங்களின் உறவை மட்டுமே எதிர்நோக்குகிறதே அன்றி, இந்த உறவுகளை, இந்த ஒத்துழைப்பை அமுல்படுத்தும் ஒரு உறுதியான அரசியல் நிறுவனத்தை அல்ல. 'தொழிலாளர்கள் மற்றும் சிப்பாய்களது பிரதிநிதிகளின் சோவியத்தில்' ஏற்கனவே 'பாட்டாளிகளதும் விவசாயிகளதும் புரட்சிகர-ஜனநாயக சர்வாதிகாரம்' நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இந்த சூத்திரம் ஏற்கனவே பழமையாகிவிட்டது. சம்பவங்கள் அதை சூத்திரங்களின் களத்தில் இருந்து யதார்த்தத்தின் களத்துக்கு நகர்த்தி விட்டிருக்கின்றன, எலும்பு மற்றும் சதை கொண்டு அதற்கு ஆடையணிவித்திருக்கின்றன, அதனை ஸ்தூலப்படுத்தியிருக்கின்றன ஆகவே அதனை மாற்றியமைத்துள்ளன.[24]

'அதிகாரத்தை பாட்டாளி வர்க்கத்தின் கைகளுக்கும் விவசாயிகளின் வறிய பகுதியினரின் கைகளுக்கும் மாற்றுவதற்கான' போராட்டமே புரட்சியின் அடுத்த கட்டம் என்ற ஏப்பிரல் ஆய்வுகளின் வலியுறுத்தலை மீண்டும் உறுதிப்படுத்தி, லெனின் வெளிப்படையாக எழுதியதாவது:

இப்பொழுது 'பாட்டாளிகளதும் விவசாயிகளதும் புரட்சிகர ஜனநாயக சர்வாதிகாரத்தை' பற்றி மட்டுமே பேசும் ஒருவர், கடந்த காலத்தில் இருப்பதோடு அதன் விளைவாக அவர் தொழிலாளர்களின் வர்க்கப் போராட்டத்திற்கு எதிராக, குட்டி முதலாளித்துவ வர்க்கத்திற்கு சென்றுவிட்டார்; அந்த நபரை புரட்சிக்கு முந்திய 'போல்ஷிவிக்' அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும். (அது 'பழைய போல்ஷிவிக்குகளின் ஆவணக் காப்பகமாக' அழைக்கப்படலாம்.)[25]

சோவியத்துக்களில் 'ஒரு நிச்சயமான வடிவத்தில் மற்றும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு' 'ஜனநாயக சர்வாதிகாரம்' யதார்த்தமாகியுள்ளது எனக் கூறியதில் அவர் எதை அர்த்தப்படுத்தினார் என்பதை லெனின், இந்த ஆவணத்திலும் ஏனையவற்றிலும், தெளிவாக விளக்கியுள்ளார்.

தாராளவாத முதலாளித்துவம் பெப்ரவரி புரட்சியில் குறிப்பிடத்தக்க எந்த பாத்திரமும் வகிக்கவில்லை. அப்புரட்சி தொழிலாள வர்க்கத்தால் முன்னெடுக்கப்பட்டு, தலைமை தாங்கப்பட்டது. எவ்வாறாயினும், அதன் வெற்றி, விவசாய வெகுஜனங்களை தன் பக்கம் வென்றெடுத்ததில் தங்கியிருந்தது. அது, கிராமப்புறங்களிலான எழுச்சியின் வடிவத்தில் அன்றி, மாறாக விவசாயிகள் மத்தியிலிருந்து கட்டாயமாக இராணுவத்தில் சேர்க்கப்பட்டு ஏகாதிபத்திய போருக்குள் தள்ளப்பட்டிருந்த இலட்சக்கணக்கான படைச் சிப்பாய்கள், ஜாரிச சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடியதில் வெளிப்படுத்தப்பட்டது. அவர்கள் சமாதானத்தைப் பெறுவதற்காக சோவியத்துக்களை நோக்கித் திரும்பினர்.

சோவியத்தின் தலைமை, தொழிலாள வர்க்கத்தாலும் பரந்த எண்ணிக்கையிலான விவசாய சிப்பாய்களாலும் அதனது கைகளில் ஒப்படைக்கப்பட்ட அதிகாரத்தைச் செலுத்த மறுத்துக் கொண்டிருந்தது. மாறாக, லெனின் எழுதியதைப் போல், அது இடைக்கால அரசாங்கத்தை ஆதரித்ததன் மூலம் 'முதலாளித்துவ வர்க்கத்திற்கு தானாகவே அதிகாரத்தை விட்டுக்கொடுத்தது, தானாகவே முதலாளித்துவ வர்க்கத்தின் ஒட்டுச்சேர்க்கையாகிக் கொண்டது'.

தொழிலாள வர்க்கம் புரட்சியின் இன்றியமையாத 'இரண்டாவது கட்டத்தை' முன்னெடுத்தால் மட்டுமே, அதாவது அதன் சோவியத்துக்கள், முழு அரசு அதிகாரத்தையும் கைப்பற்றுவதன் மூலம் மட்டுமே, அதன் வர்க்க நலன்கள் முன்னெடுக்கப்பட முடியும் என்பதை, போல்ஷிவிக்குகள் தொழிலாள வர்க்கத்திற்கு பொறுமையுடன் தெளிவுபடுத்த வேண்டியிருந்தது.

லெனின் எழுதியதாவது: சோவியத்துக்கள், 'சோசலிசத்தை நோக்கி என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் மற்றும் அந்த நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பவற்றை மிகவும் விளைபயனுள்ள வகையில், மிகவும் நடைமுறை சாத்தியமான வகையில் மற்றும் மிகவும் சரியானவிதத்தில் தீர்மானிக்க வேண்டும். ஒரு வங்கியைக் கட்டுப்படுத்துவதும், அனைத்து வங்கிகளையும் ஒன்றிணைப்பதும் சோசலிசம் ஆகிவிடாது, ஆனால் அது சோசலிசத்தை நோக்கிய அடிவைப்பாகும். … அத்தகைய நடவடிக்கைகளை கட்டாயப்படுத்துபவை எவை? பஞ்சம், பொருளாதாரச் சீர்குலைவு. தவிர்க்கமுடியாத பொறிவு. போரின் பயங்கரங்கள். போரின் மூலம் மனிதகுலத்திற்கு ஏற்படுத்தப்படும் காயங்களின் பயங்கரங்கள்.'[26]

ஏப்பிரல் 10 அன்று,“நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் பணி” என்ற தலைப்பில், போல்ஷிவிக் மாநாட்டிற்கான தனது வரைவுத் திட்டத்தை வெளியீட்டுக்காக லெனின் சமர்ப்பித்திருந்தார். செப்டம்பர் வரை அது பகிரங்கமாக வெளியிடப்படவில்லை, ஆனாலும், அவருடைய கடிதங்களைப் போலவே, அது போல்ஷிவிக் கட்சிக்குள் விநியோகிக்கப்பட்டதுடன், லெனின் பின்னர் குறிப்பிட்டது போல், மாநாட்டுத் தீர்மானங்களின் “மூல வரைவாக எனது சிறுபிரசுரம் அடிக்கடி விநியோகிக்கப்பட்டதை ஆழ அவதானிக்கும் வாசகர் கவனித்திருப்பார்.”

லெனினின் நூல் தொகுப்பு 24ம் பாகம், மாநாட்டிற்கு முன்னதாக, ஏப்பிரல் ஆய்வுகளின் நோக்கத்திற்காக வாதிடும் அவரது ஒரு தொகை கட்டுரைகளையும் கருத்துரைகளையும் பதிவாக்கியுள்ளது.

என் விரிவுரையின் இறுதிப் பகுதியை, ஏப்பிரல் ஆய்வுகளில் உள்ள மிக தீர்க்கமானவையாக கூறத்தக்க இரண்டு விடயங்களுக்காய் ஒதுக்க விரும்புகிறேன். அவை, “தந்திரோபாயங்கள் சம்பந்தமான கடிதங்கள்” மற்றும் “நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள்” என்ற இரு படைப்புகளிலும் லெனினால் சற்று விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

அவையாவன: முதலாவதாக, சோவியத்துகளின் முக்கியத்துவம், இரண்டாவதாக, உலக சோசலிசப் புரட்சிக்கான போராட்டத்தை அரசியல் ரீதியில் வழிநடத்துவதற்கு, ஒரு புதிய, மூன்றாம் அகிலத்தை ஸ்தாபிப்பதற்கான அவசியம்.

“பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின்” அரசு வடிவமாக சோவியத்துக்கள்

பாரிஸ் கம்யூனின் உலக வரலாற்று முக்கியத்துவம் குறித்த கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரடெரிக் ஏங்கெல்ஸின் எழுத்துக்களின் மரபுகளைக் கொண்டு சோவியத் ஒன்றியத்தை லெனின் மதிப்பீடு செய்தார். பாரிஸ் கம்யூன் மூலம், 1871ல் இரண்டு சிறு மாதங்களுக்கு, நகரத்தின் தொழிலாள வர்க்க வெகுஜனங்கள் பிரெஞ்சு முதலாளித்துவத்துக்கு எதிராக அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தனர்.

அதன் சாதனைகள் மற்றும் அதன் தவறுகளிலிருந்தான படிப்பினைகள் இரண்டையும் திறனாய்வு செய்த விஞ்ஞான சோசலிசத்தின் ஸ்தாபகர்கள், முதலாளித்துவ உறவுகளை மீள்நிலைப்படுத்தும் முயற்சிகளுக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தின் ஆட்சியை பாதுகாக்கும் புதிய அரசு வடிவத்தின் முதல் உதாரணமாக கம்யூனினை மதிப்பிட்டனர். கம்யூன் வடிவமானது அரசு ஒன்று தேவைப்படாத ஒரு வர்க்கமற்ற சமுதாயத்திற்கான உருமாற்றத்திற்குத் தலைமை வகித்தது, அதாவது அது முதலாவது 'பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை' பிரதிநிதித்துவப்படுத்தியது.

“பொதுவில் ஒரு புரட்சியின் காலத்திலும், குறிப்பாக முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு மாற்றம் பெறும் காலத்திலும், ஒரு அரசும் மற்றும் அரசு அதிகாரமும் தேவைப்படுகின்றது என்பதை அங்கீகரிப்பதன் மூலம் மார்க்சிசம் அராஜகவாதத்திலிருந்து வேறுபடுகிறது” என லெனின் எமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் பணிகள் என்பதில் வலியுறுத்தினார்.[27]

'கம்யூன் வகையிலான' ஒரு அரசே, '1905 மற்றும் 1917ல் ரஷ்யப் புரட்சி உருவாக்கத் தொடங்கியிருந்த அரசு வடிவமாகும்' என்று அவர் தொடர்ந்தார்.[28]

தொழிலாள வர்க்கம் உருவாக்கிய சோவியத்துக்கள், சோசலிசத்தை அடைவதற்குத் தேவையான புதிய, உயர்ந்த, அரசு வடிவத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன என்ற நனவை தொழிலாளர்களுக்குள் ஏற்படுத்துவதே போல்ஷிவிக் கட்சி முகம்கொடுத்த பிரச்சினையாகும். பழைய அரசு அதிகாரத்துவம் தகர்க்கப்படுவதை அல்லது நசுக்கப்படுவதை, பொலிஸ் மீண்டும் நிறுவப்படமால் தடுக்கப்படுவதை, இராணுவ எந்திரம் தூக்கியெறியப்படுவதை, மற்றும் உற்பத்தி சாதனங்களின் பொது உடமையை ஸ்தாபிப்பதன் ஊடாக பெரும்பான்மை மக்களின் நலன்களின் பேரில் பொருளாதார வாழ்வு மறு ஒழுங்கமைக்கப்படுவதை சோவியத்துகளால் மட்டுமே உறுதிசெய்ய முடியும்.

இன்று, இராணுவ அல்லது பாசிச ஆட்சி வடிவத்திற்குத் திரும்புவதைக் கொண்டு விளையாடுகின்ற மற்றும் தமது இராணுவ-பொலிஸ் உளவுத்துறை எந்திரங்களைக் கட்டியெழுப்பி வருகின்ற நாடாளுமன்ற ஜனநாயகங்களுக்கு முகம்கொடுக்கும், உலகெங்கிலுமுள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்களின் எண்ணங்களில் எதிரொலிக்கத் தகுந்ததான வார்த்தைகளில் லெனின் எழுதியதாவது:

(வரலாறு நிரூபித்துள்ளது போல்) பாராளுமன்ற முதலாளித்துவ குடியரசில் இருந்து ஒரு முடியாட்சிக்கு மாறுவது மிகவும் எளிது. ஏனெனில் இராணுவம், பொலிஸ் மற்றும் அதிகாரத்துவம் ஆகிய அனைத்து அடக்குமுறை எந்திரங்களும் உள்ளநிலையில் பேணப்படுகின்றன. கம்யூன் மற்றும் சோவியத் அந்த எந்திரங்களைத் தகர்த்து அவற்றை இல்லாதொழித்துவிடும்.

பாராளுமன்ற முதலாளித்துவக் குடியரசு, வெகுஜனங்களின் சுயாதீனமான அரசியல் வாழ்வுக்கும், கீழிருந்து மேல் வரையான அரசின் உயிர்வாழ்வின் ஜனநாயக அமைப்பில் அவர்களது நேரடி பங்களிப்புக்கும் முட்டுக்கட்டை போட்டு அவர்களை இடறச் செய்கிறது. சோவியத்துக்களில் இது நேரெதிரானதாகும்.[29]

லெனின் அடுத்து வந்த மாதங்களை ஒரு மகத்தான பணிக்காக அர்ப்பணித்திருந்தார். ஒரு தொழிலாளர் அரசைப் பற்றி திறனாய்வு செய்து விவரிக்கும் அவரது மிகச்சிறந்த படைப்பான அரசும் புரட்சியும் நூலை எழுதி முடித்தார்.

தொழிலாள வர்க்கம் புரட்சியின் முதல் கட்டத்தை நடத்தி சோவியத்துக்களை உருவாக்கி விட்டதன் பின்னர், முதலாளித்துவத்தால் அதிகாரம் கைப்பற்றப்படுவதை அது அனுமதிக்க முடியாது என்று லெனின் வலியுறுத்தினார். அது புரட்சியை தொடர வேண்டியிருக்கிறது. இந்த அவசியம் ரஷ்ய நிலைமைகளிலிருந்து மட்டுமன்றி, எல்லாவற்றிற்கும் மேலாக, உலக நிலைமைகளிலிருந்து எழுகின்றது.

லெனின் நிரந்தரப் புரட்சியைத் தழுவிக்கொண்டதன் ஒரு சுருக்கமான விவரிப்பில், போல்ஷ்விக் கட்சியின் வரைவு வேலைத்திட்டம் அறிவித்ததாவது:

போரானது உலக முதலாளித்துவத்தின் மற்றும் அதன் பில்லியன் கணக்கான இழைகள் மற்றும் இணைப்புகளது அரை நூற்றாண்டு கால அபிவிருத்தியின் விளைபொருள் ஆகும். மூலதனத்தின் அதிகாரத்தை தூக்கியெறிந்து, அரசு அதிகாரத்தை மற்றொரு வர்க்கத்திற்கு, அதாவது பாட்டாளி வர்க்கத்திற்கு மாற்றாமல், ஏகாதிபத்திய போரில் இருந்து நழுவிச்சென்று ஒரு ஜனநாயகரீதியான மற்றும் பலவந்தமற்ற சமாதானத்தை அடைவது சாத்தியமற்றதாகும்.

1917 பெப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெற்ற ரஷ்யப் புரட்சி, ஏகாதிபத்திய போரை ஒரு உள்நாட்டுப் போராக மாற்றுவதற்கான ஆரம்பமாகும். இந்தப் புரட்சி போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு முதல் அடியை எடுத்து வைத்தது; ஆனால் போருக்கு முடிவுகட்டுவதை நிச்சயமாக்குவதற்கு, அரசு அதிகாரத்தை பாட்டாளி வர்க்கத்தின் கைகளுக்கு மாற்றுவது என்ற இரண்டாம் அடியை இது கோரியது. இது உலக அளவில் “தடைகளை உடைத்து முன்னேறுவதன்” ஒரு ஆரம்பமாக இருக்கும், முதலாளித்துவ நலன்களது வேலிமுனையினுள் தடைகளை உடைத்து முன்னேறுவது. இந்த முனையில் தடைகளை உடைத்து முன்னேறுவதன் மூலம் மட்டுமே பாட்டாளி வர்க்கத்தால் போரின் கொடூரங்களிலிருந்து மனிதகுலத்தை காப்பாற்றி சமாதானத்தை அதற்கு உரித்தாக்க முடியும்.

தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத்துக்களை உருவாக்கியதன் மூலம் ரஷ்யப் புரட்சியானது, ஏற்கனவே ரஷ்யப் பாட்டாளி வர்க்கத்தை முதலாளித்துவத்தின் முகப்பு எல்லையில் நேரடியாக “உடைத்து முன்னேறுகின்ற” இடத்திற்குக் கொண்டுவந்துள்ளது.[30]

போல்ஷிவிக் கட்சி தன்னை கம்யூனிஸ்ட் கட்சியாக மறுபெயரிட்டுக் கொண்டு, உடனடியாக ஒரு மூன்றாவது அகிலத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்ற அவரது வலியுறுத்தலின் இருதயத்தானத்தில், லெனின் கூறியதுபோல், ரஷ்யப் புரட்சியின் சர்வதேச உள்ளடக்கம், மற்றும் 'ரஷ்யாவில் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச கடமைப்பாடுகள்',[31] ஆகியவை இருந்தன.

சர்வதேச அளவில் இரண்டாம் அகிலத்தின் காட்டிக்கொடுப்பை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்ட அதேநேரத்தில் ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கத்தின் மீது அழுத்தம் கொடுப்பதன் மூலம் சமாதானத்தை அடைய முடியும் என்ற கருத்துருவை ஊக்குவித்ததுடன், தங்களின் சொந்த ஆளும் வர்க்கத்தை ஆதரித்தவர்களிடம் இருந்து வெளிப்படையாக முறித்துக்கொள்ள மறுத்த மத்தியவாதப் போக்கை –இந்தப் போக்கினரை சமூக பேரினவாதிகள் என்று லெனின் வகைப்படுத்தினார்– லெனின் கடுமையாகக் கண்டனம் செய்தார்.

மத்தியவாதம் 'ஒருவரின் சொந்த அரசாங்கத்திற்கு எதிராக ஒரு புரட்சிக்கான அவசியத்தில் முழுநம்பிக்கை கொள்ளவில்லை; அது புரட்சிக்காக பிரச்சாரம் செய்வதில்லை; அது முழுமனதுடன் புரட்சிகர போராட்டத்தை முன்னெடுக்கவில்லை...”. என வரைவு வேலைத் திட்டத்தில் அவர் எழுதியிருந்தார்.[32]

அவர்கள் 'வார்த்தையில்” புரட்சியாளர்களாகவும், யதார்த்தத்தில் சீர்திருத்தவாதிகளாகவும் உள்ளனர்' மற்றும் 'வார்த்தைகளில் சர்வதேசியவாதிகளாகவும் யதார்த்தத்தில் சமூகப் பேரினவாதவாதிகளின் கூட்டாளிகளாகவும் உள்ளனர்'.[33]

1915ல் சிம்மர்வால்ட் போர்-எதிர்ப்பு மாநாட்டில் இடது சிறுபான்மையினரால் அபிவிருத்தி செய்யப்பட்ட நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பவர்கள் மட்டுமே சர்வதேசியவாதத்தையும், தொழிலாள வர்க்கத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே போக்கு என லெனின் பிரகடனம் செய்தார்.

ஏப்பிரல் ஆய்வுகளைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடல்கள், ஸ்ராலினிச ஆட்சியின் அதிகாரத்துவ சர்வாதிகாரமானது போல்ஷிவிசத்தில் இருந்து இயல்பாகவே உருவானதாகும் எனக் கூறுகின்ற மார்க்சிச-விரோதமான நிலைப்பாட்டைத் தெளிவாக நிராகரிக்கின்றது. லெனின், மில்லியன் கணக்கான தொழிலாளர்களை விடுவோம், போல்ஷிவிக் கட்சிக்குப் புரிய வைக்கக்கூட அதிகாரத்துவ வழிமுறையைப் பயன்படுத்தவில்லை. அவரிடம் எந்த எந்திரமும் இருக்கவில்லை, அச்சுறுத்துவதற்கான எந்த வழிவகையும் இருக்கவில்லை. அவர் தனது கருத்துக்களின் ஊடாகவே அவற்றைப் புரியவைத்தார்.

போல்ஷிவிக் கட்சி, லெனினின் மேலாதிக்கத்திலான, ஒரு ஒருதலைப்பட்ட, சிந்திக்க முடியாத அரசியல் எந்திரமாக இருந்தது எனக் கூறும் முட்டாள்த்தனம், ஏப்பிரல் 24 முதல் 29 வரை நடந்த போல்ஷிவிக் மாநாட்டின் பெறுபேறுகளால் இன்னும் தெளிவாக மறுக்கப்பட்டுள்ளது. ரஷ்யப் புரட்சியின் வரலாறு [34] நூலில், ட்ரொட்ஸ்கியால் மேற்கோள் காட்டப்பட்ட புள்ளிவிவரங்களின் படி, தொழிலாளர்கள், சிப்பாய்கள், விவசாயிகள், அறிவுஜீவிகள், தொழில் வல்லுனர்கள் மற்றும் கலைஞர்களுமாக 79,000 கட்சி உறுப்பினர்களை பிரதிநிதித்துவம் செய்து அவர்களின் சார்பில் பேசுவதற்காக ரஷ்யா முழுமையிலும் இருந்து சுமார் 150 பிரதிநிதிகள் வந்து கூடியிருந்தனர். சிலர் நீண்டகால புரட்சியாளர்களாக இருந்தனர். பலர், சில ஆண்டுகளுக்கு அல்லது சில மாதங்களுக்கு முன்பே கட்சியில் சேர்ந்தவர்களாக இருந்தனர்.

இந்த பத்தாயிரக்கணக்கான போல்ஷிவிக் உறுப்பினர்கள் கூட்டாக தொழிலாள வர்க்கத்தின் முன்னணிப் படையை, சோசலிச நனவு புகட்டப்பட்டிருந்த ஒரு முன்னேறிய தட்டினை பிரதிநிதித்துவப்படுத்தினர்.

இடைக்கால அரசாங்கம் பற்றி ஏப்பிரல் ஆய்வுகளில் அபிவிருத்தி செய்யப்பட்ட அணுகுமுறை, போர் சம்பந்தமான அணுகுமுறை, மற்றும் சோவியத்துகளினால் அதிகாரம் கைப்பற்றப்பட வேண்டும் என்ற முன்னோக்கு ஆகியவை ஏப்பிரல் போல்ஷிவிக் மாநாட்டில் தெளிவான பெரும்பான்மை ஆதரவை வென்றன. எவ்வாறெனினும், ஒரு மூன்றாம் அகிலத்தை உடனடியாக ஸ்தாபிப்பதற்கு லெனின் அழைப்பு விடுத்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. ரஷ்யாவில் உள்ள மென்ஷிவிக்குகளுடன் மட்டுமன்றி, உலகம் பூராவும் உள்ள அவர்களது மத்தியவாத சமதரப்பினருடனும் முழுமையாக முறித்துக் கொள்வதற்கு பல மாதகால மேலதிக கலந்துரையாடல்கள் அவசியப்படும் என்பதில் அனைவரும் முழுமையாக உடன்பட்டனர்.

மாநாட்டிலிருந்து பிரதிநிதிகள் தங்கள் கட்சிப் பகுதிகளுக்குத் திரும்பி, அங்கு “அனைத்து அதிகாரமும் சோவியத்துக்களுக்கு' என்ற நிலைப்பாட்டிற்காகப் போராடினர்.

1940ல், தொழிலாள வர்க்கம், புரட்சிகரக் கட்சி மற்றும் புரட்சிகர இயக்கத்தின் தலைமை இடையிலான சிக்கலான உறவைப் பிரதிபலிக்கும் வகையில், ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எழுதினார்:

1917 பெப்ரவரி அல்லது மார்ச்சில், ரஷ்யப் பாட்டாளி வர்க்கத்தின் முதிர்ச்சியில் ஒரு மகத்தான காரணியாக லெனின் இருந்தார். அவர் வானத்திலிருந்து வந்து விழவில்லை. அவர் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பாரம்பரியத்தின் உருவடிவாய் இருந்தார். லெனினின் சுலோகங்கள் வெகுஜனங்களை சென்றுசேரும் வழியைக் காண்பதற்கு அங்கே காரியாளர்கள் -தொடக்கத்தில் சிறிய எண்ணிக்கையிலானதாக இருந்தாலும்- இருந்தாக வேண்டும்; அந்த காரியாளர்களுக்கு தலைமையின் மீது நம்பிக்கை, கடந்த காலத்தின் ஒட்டுமொத்த அனுபவத்தின் அடிப்படையிலான நம்பிக்கை, இருந்தாக வேண்டும். ஒருவரின் கணிப்பீடுகளில் இருந்து இந்தக் கூறுகளை அகற்றுவதானது, உயிர்த்துடிப்புடைய புரட்சியை சாதாரணமாக அலட்சியம் செய்வதாகவும், அவ்விடத்தில் மேலோட்டமான 'சக்திகளின் உறவை' பிரதியிடுவதாகவும் அமையும். ஏனெனில், பாட்டாளி வர்க்கத்தின் நனவில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கத்தின் கீழ் சக்திகளுக்கிடையிலான உறவு இடைவிடாமல், துரிதமாக மாறிக்கொண்டே இருக்கின்றமை, பின்தங்கிய தட்டினர் முன்னேறிய தட்டினரை நோக்கி ஈர்க்கப்படுகின்றமை, தனது சொந்த பலம் சம்பந்தமாக வர்க்கத்துக்கு உள்ள உறுதிப்பாடு வளர்ச்சியடைகின்றமை போன்ற காரணிகள், புரட்சியின் அபிவிருத்தியில் துல்லியமாக உள்ளடங்கியிருக்கின்றன. கட்சியின் இயங்குமுறையில் அதன் தலைமை எத்தகைய மூலவிசையாக இருக்கிறதோ அதேபோன்று மேற்கூறப்பட்ட நிகழ்ச்சிப்போக்கின் மூலவிசையாக கட்சி இருக்கிறது. ஒரு புரட்சிகர சகாப்தத்தில் தலைமையின் பங்கும் பொறுப்புகளும் அளப்பரியவை ஆகும்.[35]

அதே ஆவணத்தில் ட்ரொட்ஸ்கி மேலும் எழுதியதாவது:

1917 ஏப்பிரல் 3, பெட்ரோகிராட்டிற்கு லெனினின் வருகை தந்தமை, போல்ஷிவிக் கட்சியை சரியான நேரத்தில் மாற்றியமைத்து, புரட்சியை வெற்றிக்கு இட்டுச்செல்வதற்கு கட்சிக்கு வழிவகை கொடுத்தது. 1917 தொடக்கத்தில் லெனின் வெளிநாட்டில் இறந்து போயிருந்தாலும் கூட அக்டோபர் புரட்சி 'இதே விதமாய்' நடந்தேறியிருக்கும் என எமது ஞானிகள் கூறலாம். ஆனால் அது அப்படி அல்ல. லெனின், வரலாற்று நிகழ்ச்சிப்போக்கின் உயிர்த்துடிப்பான கூறுகளில் ஒன்றை பிரதிநிதித்துவப்படுத்தினார். அவர் பாட்டாளி வர்க்கத்தின் மிகவும் செயலூக்கமான பிரிவின் அனுபவத்துக்கும், நுண்ணறிவுக்கும் உருவடிவாக விளங்கினார். முன்னணிப் படையை அணிதிரட்டவும் தொழிலாள வர்க்கத்தையும் விவசாயிகளையும் அணிதிரட்டுகின்ற வாய்ப்பை அதற்கு வழங்கவும் புரட்சிகர அரங்கில் அவருடைய சரியானசமயத்திலான வருகை அவசியமாக இருந்தது. ஒரு போரின் தீர்க்கமான தருணங்களில் பிரதான கட்டளைத் தளபதியின் தீர்க்கமான பாத்திரத்தைப் போன்று, வரலாற்றுத் திருப்பங்களின் தீர்க்கமான தருணங்களில் அரசியல் தலைமையும் ஒரு தீர்க்கமான காரணி ஆக முடியும். வரலாறு ஒரு தானியங்கு நிகழ்முறை அல்ல. இல்லையென்றால், தலைவர்கள் எதற்கு? கட்சிகள் எதற்கு? திட்டங்கள் எதற்கு? தத்துவார்த்தப் போராட்டங்கள் எதற்கு? [36]

ட்ரொட்ஸ்கியும் லெனினும் ஒன்றுபடுதல்

தலைவர்கள் எதற்கு? கட்சிகள் எதற்கு? திட்டங்கள் எதற்கு? தத்துவார்த்தப் போராட்டங்கள் எதற்கு? ஆகிய ட்ரொட்ஸ்கியின் கேள்விகள், ஏப்பிரல் ஆய்வுகளின் மிகவும் தீர்க்கமானதாய் கூறத்தக்க விளைபயன் மூலமாக அடிக்கோடிடப்படுகின்றன. 14 ஆண்டுகால அரசியல் வேறுபாடுகளுக்குப் பின்னர், விளாடிமிர் லெனினையும் லியோன் ட்ரொட்ஸ்கியையும் ஒன்றாகக் கொண்டு வந்த ஆவணமாக இது அமைந்திருந்தது.

1917 இல் ட்ரொட்ஸ்கி

நியூயோர்க்கிற்கு பலவந்தமாக நாடுகடத்தப்பட்டிருந்த ட்ரொட்ஸ்கி, 1917 ஏப்ரலில் ரஷ்யாவிற்குத் திரும்புவதைத் தவிர்ப்பதற்காக, கனடாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் தடுத்து வைக்கப்பட்டார். அதிகளவில் பெட்ரோக்கிராட் தொழிலாள வர்க்கத்தினதும் போல்ஷிவிக்குகளதும் இடைவிடாத கோரிக்கைகளின் காரணமாகவே, இடைக்கால அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் மில்யுகோவ், ட்ரொட்ஸ்கி விடுதலை செய்யப்பட வேண்டும் என்று பிரிட்டனுக்கு தயக்கத்துடன் வேண்டுகோள் விடுத்தார்.

பிரிட்டிஷ் தடுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட ட்ரொட்ஸ்கி, 1917 ஏப்பிரல் 16 அன்று ஐரோப்பாவிற்கு கப்பலில் ஏறினார்.

நான் மீளாய்வு செய்திருக்கின்ற ஏப்பிரல் மாதம் நடந்த அனைத்து நிகழ்வுகளின் போதும் ட்ரொட்ஸ்கி சிறைமுகாமிலோ அல்லது கடலிலோ எந்த வித தகவல்தொடர்பும் இன்றி இருந்திருந்தார். அவர் இறுதியில் ஜூலியன் நாட்காட்டியின் படி மே 4 அன்று ரஷ்யாவிற்கு வந்தார். அவர் ஏப்பிரல் ஆய்வுகளை அல்லது அதை அடுத்து வந்த ஆவணங்களில் எதையும் படித்திருக்கவில்லை.

பின்னாளில், தான் எழுதிய லெனினுடைய வாழ்க்கை வரலாற்றில் ட்ரொட்ஸ்கி எழுதியதாவது:

பீட்டர்ஸ்பேர்க்கிற்கு [பெட்ரோக்கிராட்] நான் வருகை தந்து இரண்டாவது அல்லது மூன்றாம் நாள், லெனினின் ஏப்பிரல் ஆய்வுகள் எனக்குப் பரிச்சயமாயின. நிச்சயமாக அதுவே புரட்சிக்குத் தேவைப்பட்டதாக இருந்ததாகும். …

[லெனினுக்கும் ட்ரொட்ஸ்கிக்கும் இடையேயான] முதல் சந்திப்பு மே 5 அல்லது 6ம் திகதிகளில் நடந்திருக்க வேண்டும். ஏப்பிரல் ஆய்வுகள் மற்றும் அவர் வந்ததில் இருந்து கட்சி முன்னெடுத்த ஒட்டு மொத்த நடவடிக்கைகளில் இருந்து எதுவும் என்னை அவரிடம் இருந்து வேறுபடுத்தவில்லை என நான் லெனினிடம் கூறினேன். ...'[37]

ட்ரொட்ஸ்கியின் விவரிப்பின் படி, அடுத்து வந்த கலந்துரையாடல், அவர் வெளிப்படையாக எப்போது போல்ஷிவிக் கட்சியில் சேரப் போகிறார் என்ற தந்திரோபாய பிரச்சினையின் மீதே முழுமையாக மையம் கொண்டிருந்தது. கணிசமானளவு புரட்சியாளர்களும் சுமார் 3,000 தொழிலாளர்களும் உள்-மாவட்ட-கமிட்டிகளில் இருந்தனர். இந்தக் கூறுகள் மென்ஷிவிக் பெரும்பான்மையை எதிர்த்த போதும், போல்ஷிவிக்குகளை ஆதரிக்காதவர்கள், இவர்கள் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் தத்துவத்துடனும் மற்றும் ’பாட்டாளிகளதும் விவசாயிகளதும் ஜனநாயக சர்வாதிகாரம்’ என்ற போல்ஷிவிக் முன்னோக்கு பற்றிய அவரது நீண்டகால விமர்சனத்துடனும் உடன்பாடு கொண்டவர்களாக இருந்தனர் என்பது இதற்கு பெரியதொரு காரணமாக இருந்தது.

உள்-மாவட்ட-குழுக்களின் (மெஸ்ரெயோனிஸ்ட் Mezhrayontsi) பெரும்பான்மையை போல்ஷிவிக் கட்சியில் இணைவதற்கு உடன்பட வைக்கக் கூடிய சிறந்த நிலைமையில் தான் இருப்பதாக ட்ரொட்ஸ்கி நம்பினார். அதுவே நடந்தது. உள்-மாவட்ட-குழுக்கள் 1917 ஆகஸ்ட்டில் போல்ஷிவிக்குகளுடன் முறையாக இணைந்தன.

அரசியல்ரீதியாக மறு-வலுவூட்டப்பட்ட, எல்லாவற்றிற்கும் மேலாக லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியினால் தலைமை கொடுக்கப்பட்ட போல்ஷிவிக் கட்சியானது ரஷ்யத் தொழிலாள வர்க்கத்தின் மிகப் பெருவாரியான பெரும்பான்மையின் விசுவாசத்தை வென்றெடுத்தது. தொழிலாள வர்க்கம், பரந்த வெகுஜன சிப்பாய்கள் மற்றும் கிராமப்புற விவசாயிகளது ஆதரவுடன், ’ரஷ்யப் புரட்சியானது உலக சோசலிசப் புரட்சியின் முதல் தாக்குதலாகும்’ என்ற வெளிப்பட்ட முன்னோக்கின் அடிப்படையில் முதலாவது தொழிலாளர் அரசை ஸ்தாபித்தது.

லெனினும் ட்ரொட்ஸ்கியும் ஒன்றாகச் சேர்ந்தமை, நவீன வரலாற்றின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக இடம்பிடிக்கத் தகுந்ததாகும். இன்று அனைத்து புரட்சியாளர்களாலும் புரிந்து கொள்ளப்பட வேண்டிய, இரண்டு தீர்க்கமான அங்கங்களை இது உள்ளடக்கியிருந்தது.

லெனின் தனது கட்சியை உலக சோசலிசப் புரட்சியின் முன்னோக்கின் மீது மறுஆயுதபாணியாக்குவதை அது அவசியமாக்கியது. போல்ஷிவிக்குகள் லெனினின் ஏப்பிரல் ஆய்வுகளை நிராகரித்து, இடைக்கால அரசாங்கத்திற்கும் போருக்கும் 'விமர்சன ரீதியில் ஆதரவு கொடுப்பது' என்ற கமெனேவ்-ஸ்ராலின் வழியைப் பின்தொடர்ந்திருந்தால், அப்போது ட்ரொட்ஸ்கி அவர்களுடன் இணைந்திருக்க மாட்டார்.

எவ்வாறெனினும், சந்தர்ப்பவாதத்துடன் சமரசம் எதுவும் இருக்கக்கூடாது என்று லெனின் வலியுறுத்தியதன் தொலைநோக்குத் தன்மையை ட்ரொட்ஸ்கி அங்கீகரித்ததன் குறைவிலா விளைபயனே அவர்கள் இருவரதும் கூட்டிணைவாகும். எல்லாவற்றுக்கும் மேலாக, இன்றைய தலைமுறை புரட்சியாளர்கள் கிரகித்துக்கொள்ள வேண்டியது இதையே ஆகும்.

1915 சிம்மர்வால்ட் மாநாட்டில் இருந்தே, லெனின், ட்ரொட்ஸ்கியை, இரண்டாம் அகிலத்தின் காட்டிக்கொடுப்பை கடுமையாக எதிர்த்ததுடன் யுத்தத்துக்கு எதிரான ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்திற்காக போராடிய அதேவேளையில், முழுமையாக முறித்துக்கொண்டு ஒரு புதிய மூன்றாம் அகிலத்தை ஸ்தாபிப்பதற்கு பகிரங்கமாக அழைப்புவிடுக்காத ஒரு 'மத்தியவாதியாக' தனித்துக் காட்டி வந்திருந்தார்.

அனைத்து சந்தர்ப்பவாத, அதாவது முதலாளித்துவப் போக்குகளிடம் இருந்து முழுமையாக வேறுபடுத்திக்கொள்ள வேண்டியது, தொழிலாள வர்க்கத்தில் சுயாதீனமான, புரட்சிகர, சோசலிச நனவை அபிவிருத்தி செய்வதற்கு இன்றியமையாதது என 1903ல் இருந்து லெனின், ட்ரொட்ஸ்கிக்கு எதிராய், வலியுறுத்தி வந்தார். லெனின் நிரந்தரப் புரட்சியின் இன்றியமையாத முடிவுகளுக்கு வென்றெடுக்கப்பட்டதற்கு சளைக்காத விதத்தில், ட்ரொட்ஸ்கி உலகப் போரின் காரணமாக இந்த நிலைப்பாட்டிற்கு வென்றெடுக்கப்பட்டார்.

ரஷ்யாவில் மென்ஷ்விக் 'மத்தி” மற்றும் அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் இருந்த இதேபோன்ற குழுவாக்கங்கள் ஒரு வெளிப்படையான முதலாளித்துவ, ஏகாதிபத்திய-சார்பு, போர்-சார்பு போக்காக பரிணாம வளர்ச்சி கண்டதானது 1903ல் இருந்து மென்ஷிவிக்களுடன் முழுமையான முறிவை ஏற்படுத்திக்கொள்வதற்கு லெனின் எடுத்த முயற்சிகளின் முழு முக்கியத்துவத்தையும் ட்ரொட்ஸ்கிக்கு தெளிவுபடுத்தியிருந்தன.

ட்ரொட்ஸ்கி ரஷ்யாவிற்கு திரும்பியதன் பின்னர், மென்ஷிவிக்குகளுடன் ஐக்கியப்படுவதற்கான எந்த சாத்தியத்தையும் நிராகரித்ததோடு மூன்றாம் அகிலத்தின் தேவையை ஏற்றுக்கொண்ட பின்னர், அவரை விட 'சிறந்த போல்ஷிவிக் இல்லை' என சில மாதங்கள் கடந்து லெனின் குறிப்பிட்டார்.[38]

பதினான்கு ஆண்டுகள் லெனினும் ட்ரொட்ஸ்கியும் ஒரு தத்துவார்த்த யுத்தம் நடத்தியிருந்தனர். 1917ல், ரஷ்யத் தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை தன் கைகளில் எடுப்பதற்கும் உலக தொழிலாள வர்க்கத்திற்கு முன்னோக்கிய பாதையைக் காட்டுவதற்கும் அதனை வழிநடத்துவதற்கு அவசியமான அரசியல் முன்னோக்கு மற்றும் கட்சியின் தன்மையைப் பற்றிய ஒரு பொதுவான புரிதலுக்கு அவர்கள் வந்து சேர்ந்திருந்தனர்.

1917 ரஷ்யப் புரட்சியானது முதலாவதும் மற்றும் ஒரே வெற்றிகரமான சோசலிசப் புரட்சியாகவும் இருப்பதற்கு இதுவே காரணம்.

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தொழிலாள வர்க்கத்தின் வேறெந்தவொரு முயற்சியும் இதனுடன் ஒப்பிடத்தக்க அளவுக்கு தயாரிக்கப்பட்டதாகவோ அல்லது அபிவிருத்தி செய்யப்பட்டதாகவோ இருக்கவில்லை. 1920களில் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து அதிகாரத்தை அபகரித்துக்கொண்டு 1930களில் மிகப் பெருந்தொகையான அரசியல் கல்வியூட்டப்பட்டிருந்த போல்ஷிவிக் புத்திஜீவிகள் மற்றும் தொழிலாளர்களை பூண்டோடழித்த ஸ்ராலினிச எந்திரத்தின் அரசியல் குற்றவியல் பாத்திரமே, எல்லாவற்றையும் விட, இதற்குக் காரணமாய் இருந்தது.

ரஷ்யப் புரட்சியின் படிப்பினை இதுதான்: ஒவ்வொரு நாட்டிலும், நிரந்தரப் புரட்சி தத்துவத்தையும் உலக சோசலிசப் புரட்சி முன்னோக்கையும் தனக்கு அடித்தளமாகக் கொண்டு அனைத்து முதலாளித்துவ மற்றும் மார்க்சிச-விரோத போக்குகளிலிருந்தும் தன்னை வேறுபடுத்திக் கொள்வதற்கு ஒரு இடைவிடாத போராட்டத்தை முன்னெடுக்கின்ற ஒரு உலகக் கட்சியின் கிளை அவசியமாகும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவே அந்த உலகக் கட்சியாகும். இது மட்டுமே இருபத்தியோராம் நூற்றாண்டின் புரட்சிகளுக்கு தொழிலாள வர்க்கத்தைத் தயார்படுத்துகிறது.

குறிப்புகள்

1.என்.கே. குருப்ஸ்கயா, Reminiscences of Lenin -லெனினின் நினைவுத் திரட்டுகள்- (நியூ யோர்: இன்டர்நஷனல் பப்லிஷர்ஸ், 1975), பக். 336

2.அதே நூல், பக். 318.

3. வி.ஐ. லெனின், “சிம்மர்வால்டில் இடது குழுவால் பிரேரிக்கப்பட்ட வரைவுத் தீர்மானம்,” நூல் தொகுப்பு, பாகம் 21 (மொஸ்கோ: முன்னேற்றப் பதிப்பகம், 1964), பக். 345.

4.அதே நூல், பக்கங்கள் 347-348.

5. வி.ஐ. லெனின், “1905 புரட்சி பற்றிய விரிவுரை,” நூல் தொகுப்பு, பாகம்.23, (முன்னேற்றப் பதிப்பகம், 1964), பக்.253)

6. லியோன் ட்ரொட்ஸ்கி, ரஷ்யப் புரட்சியின் வரலாறு (லண்டன், புளூட்டோ பிரஸ், 1977), பக். 284.

7.அதே நூல், பக். 294.

8.லியோன் ட்ரொட்ஸ்கி, அக்டோபர் படிப்பினைகள் (லண்டன், நியூ பார்க் பப்லிகேஷன்ஸ், 1973), பக். 16.

[9] அதே நூல், பக். 17.

[10] வி.ஐ. லெனின், “The First Stage of the First Revolution,”- “முதலாவது புரட்சியின் முதலாவது கட்டம்”, நூல் தொகுப்பு, பாகம். 23.

[11] ட்ரொட்ஸ்கி, ரஷ்யப் புரட்சியின் வரலாறு பக். 306-307.

[12] லெனினின் நினைவுத் திரட்டுகள் பக். 340-341

[13] அதே நூல் பக். 346

[14] வி.ஐ. லெனின், “தற்போதைய புரட்சியில் தொழிலாள வர்க்கத்தின் பணிகள்,” நூல் தொகுப்பு, பாகம். 24, (மாஸ்கோ: முன்னேற்றப் பதிப்பகம், 1964), பக். 21-22.

[15] அதே நூல், பக். 22.

[16] அதே பக்கம்

[17] அதே நூல், பக்கங்கள் 22-23

[18] அதே நூல், பக். 23

[19] அதே நூல், பக். 23-24.

[20] அதே நூல், பக், 24.

[21] அதே பக்கம், அடிக்குறிப்பு***.

[22] அலெக்ஸான்டர் ரபினோவிட்ச் எழுதிய Prelude to Revolution (புரட்சிக்கு முன்னோடி) நூலில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது, (Bloominton: Indiana University Press, 1991) பக். 40.

[23] லெனினின் “தந்திரோபாயம் சம்பந்தமான கடிதங்கள்,” நூல் தொகுப்பு, பாகம். 24, பக். 50

[24] அதே நூல்., பக். 44-45.

[25] அதே நூல்., பக். 45.

[26] அதே நூல்., பக். 53-54.

[27] லெனின், “நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் பணிகள்” தொகுதி 24, பக். 68.

[28] அதே நூல்., பக். 68.

[29] அதே நூல்., பக். 69.

[30] அதே நூல்., பக். 67.

[31] அதே நூல்., பக். 74.

[32] அதே நூல்., பக். 76.

[33] அதே நூல்.,பக். 80.

[34] ரஷ்யப் புரட்சியின் வரலாறு, பக். 340.

[35] லியோன் ட்ரொட்ஸ்கி, “வர்க்கம், கட்சி மற்றும் தலைமைத்துவம்,” ஸ்பானிய புரட்சி (1931-39), (நியூ யோர்க்: பாத்ஃபைன்டர் பிரஸ், 1973), பக். 359-60.[36] அதே நூல்., பக். 10.

[37] லியோன் ட்ரொட்ஸ்கி, “அக்டோபர் புரட்சிக்கு முன்னர்,” லெனின் (நியூ யோர்க்: கப்ரிகோர்ன் புக்ஸ், 1962), பக். 67-68.

[38] “SDLPR (போல்ஷிவிக்) பீட்டர்ஸ்பேர்க் கமிட்டி அமர்வுகளின் குறிப்புகள், நவம்பர் 1, 1917,” லியோன் ட்ரொட்ஸ்கியின் ஸ்ராலினின் பொய்மைப்படுத்தல் பள்ளி, (லண்டன், நியூ பார்க் பப்லிகேஷன்ஸ்,, 1974), பக். 82.

Loading