புரட்சியின் வேளையில்: போல்ஷிவிக் கட்சி, தொழிற்சாலை கமிட்டிகள், மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பாரிய இயக்கம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியக் குழுவின் ஒரு அங்கத்தவரான ரொம் கார்ட்டர் அக்டோபர் 21 சனிக்கிழமையன்று வழங்கிய ஒரு சொற்பொழிவின் உரையை இங்கே நாங்கள் வெளியிடுகிறோம். 1917 அக்டோபர் புரட்சியின் நூற்றாண்டை அனுசரிக்கும் விதமாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் வழங்கப்பட்டு வருகின்ற சர்வதேச இணையவழி விரிவுரையின் இரண்டாவது பாகத்தில் இது இரண்டாவது உரையாகும்.

இன்னும் இரண்டு உரைகள் அக்டோபர் 28 அன்றும் நவம்பர் 11 அன்றும் வழங்கப்பட இருக்கின்றன. வசந்தகாலத்தின் போது, ICFI ஐந்து உரைகள் கொண்ட விரிவுரை வரிசையின் முதலாவது பாகத்தை வழங்கியது. இந்த விரிவுரைகள் அனைத்தும் உலக சோசலிச வலைத் தளத்தில் கிடைக்கின்றன. இந்த விரிவுரை வரிசைக்கு பதிவு செய்ய, wsws.org/1917 க்கு விஜயம் செய்யவும்.

அறிமுகம்

உலக சோசலிச வலைத்தளத்தில் ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டை குறிக்கும் விதமாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு விரிவுரைகளை மேற்கொண்டு வருகிறது, இது உலகெங்கும் புதுப்பிக்கப்பட்ட ஆர்வத்தை ஈர்த்திருக்கிறது. அத்துடன் 1917 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்த பழைய அவதூறுகள் மற்றும் பொய்கள் அத்தனையும் உயிர்பெறுகின்ற மற்றும் பிரச்சாரம் செய்யப்படுகின்ற சமயமாகவும் இது உருவாகியிருக்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு முன்னணிக் குரலும் இராணுவ மற்றும் உளவு ஸ்தாபகத்துடன் நெருக்கமான உறவுகள் கொண்டதுமான நியூ யோர்க் டைம்ஸ், “சிவப்பு நூற்றாண்டு” என்ற தலைப்பின் கீழ் கட்டுரைகளின் ஒரு நீண்ட வரிசையில் ரஷ்ய புரட்சியை சிறுமைப்படுத்துவதற்கு அத்தனை பிரயத்தனங்களையும் செய்திருக்கிறது. இதேபோன்ற முயற்சிகள் உலகெங்கும் நடந்து கொண்டிருக்கின்றன.

போல்ஷிவிக்குகள் “ஜேர்மானிய தங்கத்தால்” நிதியாதாரம் அளிக்கப்பட்ட “ஜேர்மானிய முகவர்களாய்” இருந்தார்கள், போல்ஷிவிக்குகளுக்கு வெகுஜன ஆதரவு இல்லை, அக்டோபர் புரட்சியானது ஒரு சில வெளிநாட்டு தீவிரவாதிகளது சிறு சதியின் வேலையாக இருந்தது, மற்றும் பல, ரஷ்ய உள்நாட்டுப் போரின் சமயத்தில் சோவியத் அரசாங்கத்தை தூக்கிவீசுவதற்கு முயற்சி செய்த வெண்காவல் படையினரது (White Guardists) பிரச்சாரத்தை 100 ஆண்டுகளுக்கு பின்னர் நியூயோர்க் டைம்ஸ் வெறுமனே மீண்டும் வாந்தியெடுத்திருப்பதும், அதற்கு அலங்காரம் செய்து வைத்திருப்பதும் தான் பெரும்பாலும் நடந்திருக்கிறது.

புரட்சியின் வேளையில்: போல்ஷிவிக் கட்சி, தொழிற்சாலை கமிட்டிகள், மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பாரிய இயக்கம்

ரஷ்ய புரட்சி விடயத்திலான திட்டவட்டமான அறிஞராக நியூ யோர்க் டைம்ஸ் தூக்கிநிறுத்தும் வரலாற்றாசிரியர் சோன் மக்மீக்கன், இது விடயத்தில், ஒரு “நவ வெண்காவல் படை”யைச் (“neo-White-Guardist”) சேர்ந்தவர் என்று கூடக் கூறத் தகுந்தவர். மக்மீக்கன் வழங்குகின்ற விவரிப்பின் படி, போல்ஷிவிக்குகள் அதிகாரத்தைக் கைப்பற்றியமையானது, போரினாலும் வறுமையாலும் பலவீனப்பட்டிருந்த ஒரு நாட்டின் “முதுகில் குத்தல்” ஆகவும், “முரட்டுத்துணிச்சலான, சந்தேகம் நிறைந்த, மயிரிழையில் நடந்த விவகாரம்” என்று மக்மீக்கன் குணாம்சப்படுத்திக் காட்டுகின்ற ஒரு “அற்ப அளவிலான கைப்பற்றலாகவும்” இருந்தது. [1]

மக்மீக்கன் தன் அரசியல் அனுதாபங்களை மறைக்கவில்லை. ”பெருகும் வலிகள், சமநிலையற்ற பொருளாதார வளர்ச்சி மற்றும் புரட்சிகர எண்ணங்களது மனக்கிளர்ச்சிகள் இத்தனையும் இருந்தபோதும் கூட” அவர் எழுதுகிறார், “1900 இல் ஏகாதிபத்திய ரஷ்யா ஒரு நடந்து கொண்டிருந்த ஸ்தாபனமாக இருந்தது, அதன் அளவும் ஆற்றலும் ஜாரின் அத்தனை குடிமக்களுக்கும் இல்லையென்றாலும் அநேக குடிமக்களுக்கு பெருமிதத்திற்கான ஒரு விடயமாக இருந்தது.”[2] ஜார், “ரஸ்புட்டினின் குறிப்பான எச்சரிக்கைகள்” என்று குறிப்பிடுகின்றவற்றைக் கேட்காமல் அவரது “தாராளவாத ஆலோசகர்களுக்கு” செவிமடுத்ததுதான், ரஷ்ய ஏகாதிபத்திய அரசாங்கத்தின் பிரச்சினையாக இருந்தது என்கிறார் மக்மீக்கன். சோவியத் அதிகாரம் என்பது “சமூகப் பரிணாமம், வர்க்கப் போராட்டம், பொருளாதார வளர்ச்சி, அல்லது மார்க்சிச தத்துவத்தில் முன்கணிக்கப்பட்ட மற்ற பிரிக்கவியலாத வரலாற்று சக்திகளது ஒரு விளைபொருள் அல்ல” என்று எழுதும் அவர், மாறாக, அது “தமது சொந்த நலன்களைப் பின்தொடர்ந்த அடையாளம்காணத்தக்க மனிதர்களது” வில்லத்தனமான வேலை என்று பிற்போக்கான வரலாற்றாசிரியர் ரிச்சர்ட் பைப்ஸை மேற்கோளிட்டுக் கூறுகிறார். அக்டோபர் புரட்சி என்பது “ஒரு சிறு சிறுபான்மையால் அரசாங்க அதிகாரம் கைப்பற்றப்பட்டதை” குறித்தது என்றார் பைப்ஸ். [3]

இவர்களை “கூர்நோக்கு வரலாற்றாசிரியர்கள்” என்று கூறி இவர்கள் சொன்ன கூற்றுக்களுக்கு அலங்காரம் செய்ய முயற்சிக்கிறார் மக்மீக்கன். உலகெங்கிலும் பெரிய பெரிய படிப்புச் சான்றிதழ்களை கையில் வைத்தபடி இந்தக் கூற்றுகளை ஏராளமானவர்கள் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஆயினும், கூர்நோக்கானவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் இருக்கின்ற வரலாற்றாசிரியர்கள் அத்தனை பேருமே -அவர்களது அரசியல் அனுதாபங்கள் போல்ஷிவிக்குகளுக்கு ஆதரவாய் இருக்கலாம் அல்லது எதிராய் இருக்கலாம்- 1917 அக்டோபருக்கு முன்வந்த காலகட்டத்தில் போல்ஷிவிக்குகளுக்கு வெகுஜன ஆதரவு இருந்தததற்கு அபரிமிதமான தகவல் ஆதாரங்களை கட்டாயம் அறிந்து வைத்திருப்பார்கள்.

அமெரிக்க ட்ரொட்ஸ்கியவாதியான ஜேம்ஸ் கனனின் ஒரு வசனத்தை இரவல் பெறுவதானால், அக்டோபர் புரட்சி ஒரு “நனவான நடவடிக்கை”யாக இருந்தது. வரலாற்றாசிரியர் ரெக்ஸ் வாட் கூறுவதைப் போல:

புரட்சி குறித்து எழுதுபவர்கள் பலரும் தொழிலாளர்களை தீவிரப்பட்டவர்கள் மற்றும் போல்ஷிவிக்குகளால் எளிதில் ஆட்டுவிக்கத்தக்கவர்களான ஒரு செயலூக்கமற்ற பகுத்தறியத் தெரியாத கூட்டமாக சித்தரித்து வந்திருக்கின்றனர். ஆனால் தொழிலாளர்கள் அதற்கெல்லாம் எட்டாத் தொலைவில் இருந்தனர். தொழிற்சாலைக் கூட்டங்கள் மற்றும் கமிட்டிகளின் மூலமும், அவர்களது பல்வேறு அமைப்புகளின் மூலமும், ஏதேனும் ஒரு கட்சிக்கு அவர்கள் அளித்த ஆதரவின் மூலமும், அத்துடன் அப்போது சாதாரணமாக இருந்த தெருமுனை மற்றும் தொழிற்சாலை வாயில் கூட்டங்கள் மூலமாகவும் புரட்சியில் ஒரு செயலூக்கமான பாத்திரத்தை வகித்தனர். 1917 பிப்ரவரி மற்றும் அதற்குப் பின்னர், பல்வேறு மாபெரும் போராட்டங்களிலான அவங்களது பங்கேற்பு, இது அவர்களது நலன்களை முன்னெடுத்தது என்று அவர்கள் எடுத்திருந்த முடிவின் ஒரு பிரதிபலிப்பாக இருந்ததே தவிர, வெறுமனே அரசியல் கட்சிகளின் ஆட்டுவிப்பு அல்ல: அவர்கள் பங்கேற்க முடிவுசெய்திருந்தனர்.[4]

தொழிற்சாலைக் கமிட்டிகள் மற்றும் தொழிலாளர்களது கட்டுப்பாடு என்னும் நிகழ்வுபோக்கு ஆகியவை உள்ளிட ரஷ்ய புரட்சிக்குப் பின்னால் இருந்த பாரிய இயக்கமானது எடுத்த பல்வேறு முக்கிய வடிவங்களில் சிலவற்றை இந்த உரை கையாளவிருக்கிறது. ஜூலை தினங்கள் முதலாக போல்ஷிவிக்கின் கிளர்ச்சி வரையான காலகட்டத்தில், இன்னும் குறிப்பாக கோர்னிலோவ் விவகாரத்தின் போது அவர்கள் வகித்த இன்றியமையாத பாத்திரம் குறித்து நான் கவனம் குவிக்க இருக்கிறேன்.

போல்ஷிவிக்குகளும் தொழிலாளவர்க்கமும்

1917 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பெட்ரோகிராட் உலகின் மிகப்பெரும் தொழிற்துறை ஆற்றல்மையங்களில் ஒன்றாக இருந்தது. அது, பிராந்தியத்தின் அமைதிதவழும் இடமல்ல; அது ஐரோப்பாவின் ஐந்தாவது பெரிய நகரமாக இருந்தது. இங்கிருக்கும் தொழிற்சாலைகளிலேயே ஜாரின் இராணுவங்களுக்கு போர் உபகரண பொருட்களின் உற்பத்தி குவிக்கப்பட்டிருந்தது, இத்தொழிற்சாலைகளில் பலவும் நவீன மின்சக்தியால் இயக்கப்பட்டவையாக இருந்தன, தானியங்கி எந்திரங்களும் பரவலாய் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. ரஷ்ய சாம்ராஜ்யத்தின் பெரும்பகுதி, பரிதாபத்திற்குரிய கிராமப்புற ஏழ்மையிலும் பின்தங்கிய தன்மையிலும் மூழ்கிக்கிடந்த அதேநேரத்தில், பெட்ரோகிராட் இந்த நிலப்பகுதியில் அதன் பரந்த தொழிற்சாலை பகுதிகளைக் கொண்டும், தொழிலாளர்களது படையணிகளைக் கொண்டும், அத்துடன் ஒப்பீட்டளவில் முன்னேறிய உற்பத்தித் தொழில்நுட்பத்தைக் கொண்டும் தனித்துவத்துடன் நின்று கொண்டிருந்தது.

1917க்குள்ளாக, பெட்ரோகிராட் பெருநகரமானது, நூறாயிரக்கணக்கான வறுமைப்பட்ட விவசாயிகளை, சுற்றியிருந்த கிராமப்புறங்களில் இருந்து இழுத்து, அவர்களை துரிதகதியில் பாட்டாளி வர்க்கமயமாக்கிக் கொண்டிருந்தது. போருக்கு முந்தைய 15 ஆண்டுகளில், பெட்ரோகிராட்டில் இருந்த தொழிற்சாலை தொழிலாளர்களின் எண்ணிக்கை 73,000 இல் இருந்து 242,600 ஆகப் பெருகியிருந்தது. 1917க்குள்ளாக, அந்த எண்ணிக்கை 417,000 ஆக வளர்ந்திருந்தது. [5] ஒட்டுமொத்தமாக ரஷ்யாவில் 1905 இல் 1.5 மில்லியனாக இருந்த தொழிலாள வர்க்க எண்ணிக்கை 1917 ஆம் ஆண்டில் 2 மில்லியனுக்கு வளர்ச்சி கண்டிருந்தது. [6]

அந்த சமயத்தில் பெட்ரோகிராட் தொழிலாள வர்க்கத்தில், உலோகத்துறை தொழிலாளர்கள் முன்னிலையில் இருந்தனர், “நவீன தோண்டும் இயந்திரங்கள், நவீன கடைசல் இயந்திரங்கள், செங்குத்தாக துளையிடும் ஆலைகள், தானியங்கு திட்டமிடும் எந்திரங்கள் மற்றும் கிடைமட்ட வெட்டு இயந்திரங்கள்” என அவர்கள் வேலைசெய்த இயந்திரங்கள் அந்தக் காலத்தில் விஞ்ஞான புனைவுக் கதைகளில் இருந்து வந்ததைப் போல தென்பட்டிருக்க வேண்டும். [7]

1917 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பெட்ரோகிராட் உள்முக பதட்டங்கள் மற்றும் முரண்பாடுகள் செறிந்த மாநகரமாக இருந்தது. பெட்ரோகிராட்டின் ஆளும் உயரடுக்கினர் கிட்டத்தட்ட கற்பனாலோகத்து ஆடம்பரத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் சபைப் பதவிகளால் அழைக்கப்பட்டார்கள், தங்களைப் பெரும் வீர மிடுக்குகளுடன் அலங்கரித்துக் கொண்டார்கள். தங்கத்தால் இழைக்கப்பட்ட அரண்மனைகளில் அவர்களது கட்டளைகளுக்காக பணிப்பெண்களும், சாரதிகளும் காத்துக் கிடந்தார்கள். அதே நகரத்தில், தொழிற்சாலை பகுதிகளின் புகைபோக்கிகளது நிழலில், ஐரோப்பாவின் கனரகத் தொழிற்சாலைகள் மிகப்பெரும் அளவில் குவிந்திருக்கும் இடங்களில் ஒன்றினை ஒட்டி மிகப்பெரும் கொட்டகைகள் இருக்கும். பெட்ரோகிராட்டில் வாடகை விண்ணை முட்டும்படி இருக்கும். தொழிலாளர்கள் பலரும் ஒரு பகிர்ந்த அறையில் ஒரு படுக்கையின் வாடகையை பகிர்ந்து கொள்வார்கள், ஒரு தொழிலாளி ஒருநேர வேலைக்கு (shift) செல்லும் சமயத்தில் மற்ற தொழிலாளி தூங்கிக் கொள்வார். [8]

தொழிற்சாலை வேலையும் கூட உடல்ரீதியாக கடினமானதாக இருக்கும், வாயு நச்சுகலந்திருக்கும், நிலைமைகள் பாதுகாப்பற்தாய் இருக்கும். தொழிற்சாலை விபத்துக்கள் சர்வசாதாரணம்; தொழிலாளர்கள் எந்திரங்களில் மாட்டிக் கொள்வார்கள் அல்லது அவர்கள் வெறுமனே களைத்து விழுந்திருப்பார்கள். பெட்ரோகிராட்டின் தொழிற்சாலைகளில் பத்து முதல் 12 மணி நேரம் வரை முதுகொடிய வேலைசெய்தால் அந்தத் தொழிலாளிக்கு கிடைக்கும் கையளவு கோபெக்குகள், உணவுக்கும் இருப்பிட வாடகைக்குமே போதாது. குடும்பங்கள் கூட்டமாய் வாழ்ந்தன, பெரும்பாலும் போதுமான சுகாதாரம் இருக்காது, காற்றோட்டம் இருக்காது, அல்லது குழாய்நீர் இருக்காது. பாட்டாளி வர்க்கப் பகுதிகளில் உள்கட்டமைப்பு என்பது உதாசீனப்படுத்தப்பட்டது அல்லது சுத்தமாய் இல்லாதிருந்தது. அந்தக் குறைந்த ஊதியங்களிலும், பல தொழிலாளர்கள் பட்டினி கிடந்து, ஒரு சில ரூபிள்களை ஊரில் கவலையுடன் காத்திருக்கும் அவர்களைச் சார்ந்து வாழும் உறவினர்களுக்கு அனுப்புவார்கள். வாழ்க்கைச் செலவு மற்றும் வாடகை உயர்ந்த நிலையைச் சமாளிப்பதற்காக, பெட்ரோகிராட்டின் பத்தாயிரக்கணக்கான பெண்கள், ஆண்களை விடவும் குறைந்த ஊதியங்களுக்கு தொழிலாளர் படைகளுக்குள் இழுக்கப்பட்டனர்.

பெட்ரோகிராட்டின் தொழிலாள வர்க்கத்தை பொறுத்தவரை, அரசியல் வெளிப்பாட்டின் கிட்டத்தட்ட அத்தனை வடிவங்களுமே தடைசெய்யப்பட்டிருந்தன. குறைகளிருந்தால் ஒவ்வொருவராக, தொழிலாளர்கள் நிர்வாகத்தை நேரில் அணுக வேண்டும் என்று தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்த முயற்சித்தால், அவர்களுக்கு போலிசின் கைகளால் அடிகிடைக்கின்ற, சிறையிலடைக்கப்படுகின்ற அல்லது சைபீரியாவுக்கு நாடுகடத்தப்படுகின்ற அபாயம் இருந்தது. 1915 ஜூன் மாதத்தில், கோஸ்ட்ரோமாவில் வேலைநிறுத்தம் செய்த நூற்பாலைத் தொழிலாளர்கள் மீது போலிஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில், நான்கு பேர் கொல்லப்பட்டனர், ஒன்பது பேர் காயமடைந்தனர். இரண்டு மாதங்களுக்குப் பின்னர், இவானோவோ-வோஸ்னெசென்ஸ்க் இல் தொழிலாளர்கள் மீது துருப்புகள் துப்பாக்கி சூடு நடத்தின. பதினாறு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர், 30 பேர் காயமடைந்தனர்.

ஜாரிச அதிகாரிகள் தொழிற்சாலைப் பகுதிகளில் உளவாளிகள் மற்றும் இரகசிய போலிசின் ஒரு வலைப்பின்னலை பராமரித்தனர். “அரசியல்” ரீதியானவர்களாக முத்திரைகுத்தப்பட்ட தொழிலாளர்கள் கருப்புப்பட்டியலில் வைக்கப்பட்டனர், எந்த தொழிற்சாலையும் அவர்களை வேலைக்கு அமர்த்தாது. போர் நடவடிக்கைகள் தொடர்பான தொழிற்சாலைகள் இராணுவ ஒழுங்கின் கீழ் வைக்கப்பட்டிருந்தன, எந்த வகையான அதிருப்தியும் துரோகமாக முத்திரையிடப்பட்டது. ஆயிரக்கணக்கான சந்தர்ப்பங்களில், ஜாரிச அதிகாரிகள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகச் சந்தேகப்படுகின்ற தொழிலாளர்களை இராணுவத்தில் கட்டாயமாகச் சேர்த்து அவர்களை போர்முனைக்கு அனுப்புவது நடந்தேறியது.

முதலாளிகள், தொழிற்சாலைகளை குட்டி சர்வாதிகாரிகள் போலத்தான் நடத்தினர். ஒருநேர வேலை ஆரம்பிக்கும் சமயத்தில் மேற்பார்வையாளர் (foremen) தொழிலாளர்களை சிறுமைப்படுத்துகின்ற விதமாக கூட்டமாக நிற்க வைத்துக் கொள்வார், பின் அவர்களை எந்திரங்களுக்கு ஆடுமாடுகளை விரட்டுவது போல விரட்டுவார். தொழிற்சாலைகளில் வேலைவாங்கும் இவர்களை தொழிலாளர்கள் ”குட்டி-ஜார்கள்” என்று குறிப்பிடுவர் (இன்று அமெரிக்கத் தொழிலாளர்கள் குறிப்பாக வசவுமயமான மேலாளர்களை எப்படி ஒரு “குட்டி-ட்ரம்ப்” என்று குறிப்பிடக் கூடுமோ அதைப் போல).

ஒருநேர வேலை முடிந்த பின்னர், தொழிற்சாலையை விட்டு போகும்போது தொழிலாளர்கள் சோதனையிடப்படுவார்கள், எதையும் அவர்கள் திருடிச் செல்கிறார்களா என்பதைப் பார்ப்பதற்காக. குறைந்த கூலிகள், அபாயகரமான வேலைநிலைமைகள் மற்றும் அரசியல் சுதந்திரமின்மை ஆகியவற்றால் பெட்ரோகிராட் தொழிலாளர்கள் அதிருப்தியுடன் இருந்தாலும், குறிப்பாக இந்த சோதனைகளை அவர்கள் அறவே வெறுத்தனர், ஏனென்றால் இந்த சோதனைகள் மனிதர்களாக அவர்களது அடிப்படை கண்ணியத்தின் ஒரு பகுதியை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்ததாய் அவர்கள் உணர்ந்தனர்.

இந்த ஒடுக்குமுறை நிலைமைகளையும் தாண்டி, பெட்ரோகிராட்டில் ஒரு செயலூக்கமான தலைமறைவு அரசியல் இயங்கிக் கொண்டிருந்தது. “சோசலிசம்”, “மார்க்சிசம்” மற்றும் “புரட்சி” போன்ற வார்த்தைகள் புழக்கத்தில் இருந்தன. எதிர்ப்புகளையும் தாண்டி, தொழிற்சாலைகள் வேலைநிறுத்தத்தில் இறங்கவே செய்தன, ஒரு இடத்தில் வேலைநிறுத்தம் நடந்ததென்றால், 1) அந்த தொழிற்சாலையில் ஒரு போல்ஷிவிக் செல் இருக்க வேண்டும் 2) முந்தைய வேலைநிறுத்தங்களில் அனுபவம் கொண்டிருந்த தொழிலாளர்கள் அதில் பங்குபெற்றிருக்க வேண்டும் என்ற இந்த இரண்டு விடயங்களுக்கு அநேக சாத்தியம் இருந்தது. [9]

ஆயினும், போல்ஷிவிக்குகள் ஒரு தொழிற்சங்க இயக்கம் அல்ல. போல்ஷிவிக்குகள் பொருளாதாரப் பிரச்சினைகளுக்காகவும் வேலையிடப் பிரச்சினைகளுக்காகவும் மட்டும் வேலைநிறுத்தங்களை ஒழுங்கமைக்கவில்லை. சாத்தியமான போதெல்லாம், தொழிலாள வர்க்கத்தின் பொருளாதாரப் போராட்டங்களுக்கு ஒரு சுயாதீனமான அரசியல் தன்மையை கொடுப்பதற்கு அவர்கள் முயற்சி செய்தனர். வரலாறு, அரசியல் மற்றும் கலாச்சாரம் ஆகியவை குறித்து தொழிலாளர்களுக்கு கல்வியூட்டுவதற்காக போல்ஷிவிக்குகள் வேலைசெய்தனர். தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக அதன் சொந்தப் போராட்டங்களது வரலாறு குறித்த அறிவையும், ரஷ்யா மற்றும் ஐரோப்பாவிலான அரசியல் பொருளாதார நிலைமைகள் மற்றும் அபிவிருத்திகள் குறித்த ஒரு புரிதலையும், அத்துடன் சமூகத்தில் மற்ற வர்க்கங்கள் மற்றும் அடுக்குகளுக்கு எதிராய் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் மற்றும் சமூக நலன்களை உணர்ந்து கொள்வதையும் கொண்டுவருவதற்காக -வேறு வார்த்தைகளில் சொல்வதானால், தொழிலாள வர்க்கத்தில் சோசலிச நனவை அபிவிருத்தி செய்வதற்காக அவர்கள் அத்தனை முயற்சிகளையும் செய்தனர்.

போல்ஷிவிக்குகளுக்கும் மென்ஷிவிக்குகளுக்கும் இடையில் உடைவு ஏற்பட்டதன் பின்னர், போல்ஷிவிக்குகள், தன்னெழுச்சியான நனவுக்கும் சோசலிச நனவுக்கும் இடையிலான வித்தியாசத்தின் மீது வலியுறுத்தி வந்திருந்தனர். “தொழிலாள வர்க்க இயக்கத்தின் தன்னெழுச்சியான அபிவிருத்தி, அது, முதலாளித்துவ சித்தாந்தத்துக்கு தன்னைக் கீழ்ப்படியச் செய்து கொள்வதற்கே இட்டுச் செல்கிறது” என்று லெனின் என்ன செய்ய வேண்டும் என்ற நூலில் எழுதினார். ஏனென்றால் “தன்னெழுச்சியான தொழிலாள வர்க்க இயக்கம் என்பது தொழிற்சங்கவாதமாகும். ... தொழிற்சங்கவாதம் என்பது முதலாளித்துவத்திற்கு தொழிலாளர்களை சித்தாந்தரீதியாக அடிமையாக்குவது என்பதாகும். ஆகவே தான், நமது கடமை என்னவென்றால். ... தன்னெழுச்சிக்கு எதிராகப் போராடுவதும், இந்த தன்னெழுச்சியான, தொழிற்சங்கவாத பிரயத்தனங்கள் முதலாளித்துவ இறகின் கீழ் சென்று விடுவதில் இருந்து தடுத்து மாற்றுவதும்”, அதனை மாறாக புரட்சிகரக் கட்சியின் இறகின் கீழ் கொண்டுவருவதுமாகும். [10]

ட்ரொட்ஸ்கி ரஷ்யப் புரட்சியின் வரலாறு என்ற நூலில், பின்வரும் அட்டவணையை சேர்க்கிறார்.[11] பொருளாதார வேலைநிறுத்தங்களுக்கும் அரசியல் வேலைநிறுத்தங்களுக்கும் இடையில் ஒரு பிரிப்புக்கோடு வரையப்படுகிறது. ஒரு பொருளாதாரத்திற்கான வேலைநிறுத்தமானது கூலிகள், வேலைநேரம், அல்லது வேலைநிலைமைகள் சம்பந்தப்பட்டதாக இருந்தது. மறுபக்கத்தில், ஒரு அரசியல் வேலைநிறுத்தம் என்பது அரசாங்கக் கொள்கையை சவால் செய்தது, மற்ற தொழிலாளர்கள் அல்லது அவர்களது தலைவர்கள் துன்புறுத்தப்படுவதை எதிர்த்தது, அல்லது இரத்த ஞாயிறு போன்ற ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வின் அனுசரிப்பைக் குறித்ததாக இருந்தது.[12] பல வேலைநிறுத்தங்கள் அரசியல் கோரிக்கைகள் மற்றும் பொருளாதாரக் கோரிக்கைகள் இரண்டையும் கொண்டதாக இருந்தன என்பதும், ஒரு குறிப்பிட்ட வேலைநிறுத்தத்தில் பங்குபெறும் தனிப்பட்ட தொழிலாளர்களது நனவு, தலைமையால் எழுப்பப்படும் கோரிக்கைகளையும் தாண்டிச் செல்லக்கூடியது என்பதும் உண்மையே. இருப்பினும், அரசியல் வேலைநிறுத்தங்களின் வளர்ச்சி என்பது இந்தக் காலகட்டத்தில் தொழிலாள வர்க்க இயக்கத்தின் அரசியல் நனவுக்கான முக்கியமான அளவுகோலாக இருந்தது.

அரசியல் வேலைநிறுத்தங்கள், 1903-1917

1905 புரட்சியை பின்தொடர்ந்து வந்த பிற்போக்குத்தனத்தின் காலகட்டத்திற்குப் பின்னர் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டங்களது மீளெழுச்சியை ட்ரொட்ஸ்கி, இன்றும் குறிப்பிடத்தக்க விதத்தில் எதிரொலிக்கின்ற விதமான வார்த்தைகளைக் கொண்டு பின்வருமாறு விவரித்தார்:

பெரும் தோல்விகள் மக்களை ஒரு நீண்ட காலத்திற்கு ஊக்கும்குன்றச் செய்கிறது. நனவுடன் புரட்சிகரமான கூறுகள் பரந்த மக்களின் மீதான தங்களின் சக்தியை இழக்கின்றன. இன்னும் சாம்பலாக்கப்படாத தப்பெண்ணங்களும் மூடநம்பிக்கைகளுக்கும் மீண்டும் உயிர்பெறுகின்றன. .... ஐயுறவுவாதிகள் நகைமுரணாய் தலைகளை ஆட்டுகிறார்கள். இப்படித்தான் 1907-11 வரையான ஆண்டுகள் இருந்தன. ஆனால் பரந்த மக்களில் நடைபெறுகின்ற மூலக்கூறு அளவிலான நிகழ்ச்சிப்போக்குகள் தோல்வியின் உளவியல் காயங்களை ஆற்றுகின்றன. நிகழ்வுகளின் ஒரு புதிய திருப்பமோ, அல்லது கீழமைந்த ஒரு பொருளாதார உந்துதலோ, ஒரு புதிய அரசியல் சுழற்சியை திறக்கிறது. புரட்சிகரக் கூறுகள் மீண்டும் தங்களுக்கு செவிமடுப்பவர்களை காண்கின்றன. போராட்டம் ஒரு உயர்ந்த மட்டத்தில் மீண்டும் திறக்கிறது.[13]

புரட்சிக்கு முன்பாக புட்டிலோவ் தொழிற்சாலையில் வேலைசெய்த ஒரு போல்ஷிவிக் உலோகத் தொழிலாளியான அலெக்சாண்டர் புயுகோவின் நினைவுகூர்தலில் இருந்து ஒரு சிறிய துணுக்கை குறிப்பிட விரும்புகிறேன். இந்தப் பத்தியில், சக உலோகத் தொழிலாளிகளை வென்றெடுக்க அவர் செய்த முயற்சிகளை விவரிக்கிறார், அத்தொழிலாளிகளில் “திறன்மிக்க தொழிலாளர்கள்” என்று அப்போது குறிப்பிடப்பட்டவர்களின் மத்தியில் பொதுவாக இருந்த பழைய கைவினை தப்பெண்ணங்கள் சிலவற்றை எதிர்கொண்டதாக கூறுகிறார். போல்ஷிவிக்குகள் களமட்டத்தில் எத்தனை பல ஆண்டுகாலம் பொறுமையாக வேலைசெய்திருந்தனர் என்பது குறித்த ஒரு புரிதலை நமக்குத் தரக்கூடியதாக அது அமைந்திருக்கிறது. புயுகோ எழுதுகிறார்:

ஒரு மூத்த திறம்படைத்த fitter அல்லது turner இடம் சென்று ஒரு இளைஞர் பேச ஆரம்பிக்கும்போது உடனே சொல்லி விடுவார்கள்: “முதலில் ஒரு சுத்தியலை எப்படிப் பிடிப்பது, ஒரு உளியையும் கத்தியையும் எப்படிப் பயன்படுத்துவது எல்லாவற்றையும் கற்றுக் கொள், அதன்பின் நீ மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்க விஷயம் இருக்கின்ற மனிதனைப் போன்று வாதம் செய்யத் தொடங்கலாம்”. பல வருடங்களுக்கும் இதை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நீங்கள் ஒரு ஒழுங்கமைப்பாளராக ஆக வேண்டுமென்றால், நீங்கள் உங்கள் வேலையை நன்கு தெரிந்திருக்க வேண்டும். அதை நீங்கள் செய்து விட்டால் அப்போது அவர்கள் சொல்வார்கள் ’அவன் நல்ல பையன் தான், வேலையும் நன்றாக செய்கிறான், அரசியல் விஷயங்களிலும் நல்ல அறிவு இருக்கிறது’ என்று. [14]

போல்ஷிவிக் கட்சி, தொழிலாள வர்க்கத்தில் நடத்திய தனது பிரச்சாரங்களில், இன, பின்புல மற்றும் பாலின பேதம் கடந்து அத்தனை தொழிலாளர்களும் முதலாளித்துவம் மற்றும் போருக்கு எதிரான ஒரு போராட்டத்தில் ஐக்கியப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. போல்ஷிவிக் கட்சியில் இந்த நிலைமைகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பெண் தலைவர்கள் -நதீஸ்டா க்ரூப்ஸ்கையா, அலெக்ஸாண்ட்ரா கோலோண்டாய், எலினா ஸ்டாஸோவா மற்றும் பிறர்- இருந்தனர், உழைக்கும் வர்க்கப் பெண்களுக்காக ரபோட்னிட்சா (Rabotnitsa) என்ற ஒரு செய்தித்தாளும் கட்சியால் வெளியிடப்பட்டது. [15]

கிளாவ்டியா நிக்கோலேவா

ஒரு தொழிலாளியின் மகளான கிளாவ்டியா நிக்கோலேவா, 1893 இல் பிறந்தார், 1999 இல் அவர் போல்ஷிவிக் கட்சியில் இணைந்து விட்டார், அதாவது அப்போது அவருக்கு வயது வெறும் 16 தான் இருந்திருக்கும். 1917 இல், அவரது 24வது வயதில், அவர் பெட்ரோகிராடில் Rabotnitsa இதழின் ஆசிரியர் குழுவில் வேலை செய்து கொண்டிருந்தார் - ஒரு பெரும் அரசியல் பொறுப்பு. போல்ஷிவிக் கட்சியில் இதுமாதிரியான இளம் தலைவர்கள் பலர் இருந்தனர், இவர்களை அரசியலின் சிறுவயதுஞானிகள் என்று தான் விவரிக்க முடியும். புரட்சிக்குப் பின்னர், நிகோலேவா ட்ரொட்ஸ்கியை ஆதரித்தார், இடது எதிர்ப்பு அணியின் ஒரு அங்கத்தவராய் இருந்தார்.

தொழிலாளர்கள் அனைவருமே முதலில் போல்ஷிவிக்குகளுடன் உடன்பாட்டுக்கு வர அவசியமிருக்கவில்லை என்றாலும், ஒரு நெடிய தொடர்ச்சியான தலைமறைவு வேலை காலகட்டத்தின் மூலமாக, போல்ஷிவிக்குகள் பெட்ரோகிராட் தொழிலாளர்களின் மனதில் அரசியல் விடுதலை, சமூக மறுஒழுங்கமைப்பு, அமைதி, சமத்துவம் மற்றும் மனித முன்னேற்றம் ஆகிய நீண்டகாலக் கோரிக்கைகளுடன் தொடர்புபட்டவர்களாக ஆகியிருந்தனர். தொழிலாளர்களின் நலன்களுக்காகப் போராடுகின்ற மிகத் தீவிரமான, மிகத் துணிச்சலான, மற்றும் மிகக் கோட்பாடான போராளிகளாக போல்ஷிவிக்குகள் மரியாதை பெற்றனர்.

போருக்கு முன்வந்த காலகட்டத்தில் போல்ஷிவிக்குகள் தொடர்பான ஒரு போலிஸ் அறிக்கையில் இருந்த வார்த்தைகளை ட்ரொட்ஸ்கி மேற்கோளிடுகிறார்: “தளர்ச்சியற்ற போராட்டத்திற்கும், எதிர்ப்புக்கும், தொடர்ச்சியான ஒழுங்கமைப்புக்கும் ஆயத்தமாக இருக்கின்ற மிக ஆற்றல்மிக்க துணிச்சல்மிக்க கூறாக இருப்பது எதுவென்றால், லெனினைச் சுற்றிய அந்தக் கூறு, அந்த அமைப்புகள் மற்றும் அந்த மக்கள் தான்.”[16] 1917 இன் ஆரம்பத்துக்குள்ளாக, Aivaz, Baranovskii, Vulcan, Nobel, New Lessner, Pheonix மற்றும் Puzyrev போன்ற தொழிற்சாலைப் பெயர்கள் போல்ஷிவிக் கட்சியின் அங்கத்தவர்களாகவோ அல்லது அனுதாபிகளாகவோ இருந்த போர்க்குணமிக்க தொழிலாளர்களது வலிமையான படையணிகளைக் குறிப்பதாக ஆகியிருந்தது.[17]

1917 பிப்ரவரியில், பெட்ரோகிராட்டின் தொழிலாள வர்க்கம் ஜாரிச ஆட்சியைத் தூக்கி வீசியதை நாம் அறிவோம், இந்த மாபெரும் கொந்தளிக்கும் அரசியல் தலைமைறைவு இயக்கம் வெடித்து வெளிப்படையாக வந்திருந்தது. பிப்ரவரி புரட்சியானது உண்மையில், ட்ரொட்ஸ்கி எழுதியதைப் போல, “பெருமளவுக்கு லெனினின் கட்சியால் கல்வியூட்டப்பட்ட நனவான மற்றும் புடம்போடப்பட்ட தொழிலாளர்களால் நடத்தப்பட்டிருந்தது”.[18] ஆயினும், பிப்ரவரியில் தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன புரட்சிகர இயக்கமானது இன்னும் ஐக்கியப்பட்டதாகவும் போல்ஷிவிக் கட்சியால் வழிநடத்தப்பட்டதாகவும் ஆகியிருக்கவில்லை. ஆகவே தான், ஜாரை வீழ்த்துவதில் தொழிலாளர்கள் வெற்றிபெற்றிருந்த அதேநேரத்தில், பிப்ரவரி புரட்சியானது பெட்ரோகிராட் எங்கிலும் மற்றும் நாடு முழுமையிலும் தொழிற்சங்கங்கள், தொழிற்சாலை கமிட்டிகள் மற்றும் சோவியத்துகள் உள்ளிட அத்தனை வடிவங்கள் மற்றும் அளவுகளிலும் தொழிலாளர்களது போராட்டங்களும் அமைப்புகளுமாய் பல்வேறு முரண்கூறுகள் கொண்ட வெடித்தெழுதலை முன்கொண்டு வந்தது.

All-Russian Conference of Factory Committees in Petrograd, 17 October 1917, with Trotsky and Riazanov in the center

தொழிற்சாலைக் குழுக்களும் தொழிலாளர்களது கட்டுப்பாடும்

பெட்ரோகிராட்டின் புரட்சிகரத் தொழிலாளர்கள் பிப்ரவரியின் போதும் அதற்குப் பின்னரும் ஏராளமான மற்றும் பல்தரப்பட்ட கோரிக்கைகளை எழுப்பினர், அவை அரசியல் வகை, பொருளாதார வகை என இரண்டு வகைப்பட்டதாகவும் இருந்தன. பிப்ரவரி புரட்சியைத் தொடர்ந்து, ஜாரைத் தூக்கிவீசுவதில் அவர்கள் செலவிட்ட நாட்களுக்கு முழு ஊதியத்தை வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் வைத்த கோரிக்கை குறிப்பாக ஒரு ஈர்ப்பான கோரிக்கையாக இருந்தது.

பிப்ரவரி புரட்சியின் போது, “குப்பை கொட்டல்” என்னும் ஒரு நிகழ்வு பரவலாய் இருந்தது. பெட்ரோகிராட் தொழிற்சாலைகளில் இருந்த தொழிலாளர்கள் மேலாளர்கள்களையும் பணிமனை முதல்வர்களையும் கிட்டத்தட்ட இழுத்துவந்து, அவர்களை சக்கரவண்டிகளில் வைத்து, தொழிற்சாலைக்கு வெளியில் வேகமாய் தள்ளி அவர்களை வெளியில் குவிப்பார்கள். இந்த “குப்பை கொட்டல்” நடைமுறை துரிதமாய் பற்றிக் கொண்டது பரவலானது. வரலாற்றாசிரியர் ஏ.ஸ்மித் எழுதுவதைப் போல:

“குப்பை கொட்டல்” என்பது தொழிலாளர்கள் மனிதர்களாக தங்களது கண்ணியத்தை திட்டவட்டம் செய்யும் அடையாளமாக இருந்தது, அவர்களது அன்றாட வேலை வாழ்க்கையில் இந்தக் கண்ணியத்தை அவர்களுக்கு இல்லாது செய்தவர்களை அவமானப்படுத்தும் சடங்கு போல அது இருந்தது. [19]

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், தொழிலாளர்கள் ஜாரை அகற்றியதுடன் மட்டும் திருப்தி கண்டுவிடவில்லை, தொழிற்சாலைகளில் இருந்த “குட்டி-ஜார்கள்” அத்தனை பேரையும் அகற்றுவதும் அவர்களுக்கு அவசியமாக இருந்தது.

பல தொழிற்சாலைகளில், தொழிலாளர்கள் இன்னும் முன்னேறிச் சென்றனர். தங்களது முதலாளிகளை “குப்பைகளாய்க் கொட்டிவிட்டு” அந்தத் தொழிற்சாலைகளது “கட்டுப்பாட்டை” அவர்கள் திட்டவட்டம் செய்தனர், தொழிற்சாலை கமிட்டிகள்தான் இந்தக் கட்டுப்பாட்டை செயல்படுத்துவதற்கு தொழிலாளர்கள் பயன்படுத்திய வடிவமாக இருந்தது. முந்தைய ஜார் சாம்ராஜ்யத்தின் அத்தனை தொழிற்சாலைகளும் இதனை அடியொற்றின. இந்த கமிட்டிகளின் வடிவமும் அமைப்பும் தொழிற்சாலைக்கு தொழிற்சாலை நகரத்து நகரம் மாறுபட்டதாய் இருந்தபோதிலும், “தொழிலாளர்களின் கட்டுப்பாடு” என்ற கருத்துரு தான், தொழிற்சாலைக் குழுக்களை, தொழிற்சங்கங்களில் இருந்து பிரித்துக்காட்டக் கூடியதாக இருந்தது.

தொழிற்சாலைக் குழுக்கள், அவர்களது தொழிற்சாலைப் புத்தகங்களைக் கைப்பற்றித் திறந்து பார்த்தன. சில சமயங்களில், தொழிற்சாலை போதுமான லாபமானதாக இல்லை என்று கூறி கூலிகளைக் குறைத்தே கொடுக்கச் சொல்லி முதலாளிகள் வலியுறுத்திய சமயத்தில் மேலதிகாரிகள் இலாபங்களைக் குவித்துக் கொண்டிருந்தனர் என்பதை அவர்கள் கண்டறிந்தனர். தொழிற்சாலைக் குழுக்கள் நிதி மற்றும் சரக்கு கையிருப்பைக் கணக்கெடுத்தனர். முதலாளிகளும் பிற்போக்குவாதிகளும் உற்பத்தியையும் விநியோகத்தையும் பலவீனப்படுத்துவதன் மூலமாக தொழிலாளர்களது’ இயக்கத்தை மதிப்பிழக்கச் செய்யும் முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டனர், குழுக்கள் இந்த முயற்சிகளை முறியடித்தன, அம்பலப்படுத்தின. வேலைக்கு எடுப்பது மற்றும் வேலையில் இருந்து நீக்குவதில் குழுக்கள் ஒருதரப்பாக கட்டுப்பாட்டைத் திட்டவட்டம் செய்தன. வசவுமய மேலாளர்களை வேலையை விட்டு நீக்குவதற்கும் கறுப்புப் பட்டியலிடப்பட்டிருந்த தொழிலாளர்களை மீண்டும் வேலையில் அமர்த்துவதற்கும் தங்களுக்கு உரிமை உள்ளதாக அவர்கள் அறிவித்தனர்.

17 அக்டோபர் 1917 அன்று பெட்ரோகிராடில் தொழிற்சாலைக் குழுக்களின் அனைத்து ரஷ்ய மாநாடு, மையத்தில் ட்ரொட்ஸ்கி மற்றும் ரியாசானோவ்

இந்த நிகழ்வுபோக்கு 1917க்கு முன்னரே ட்ரொட்ஸ்கியால் துல்லியமாக முன்கணிக்கப்பட்டதாய் இருந்தது. “பாட்டாளிகளினதும் விவசாயிகளினதும் ஜனநாயக சர்வாதிகாரம்” என்ற சுலோகம் தொடர்பாக லெனினுடன் ஏற்பட்ட மோதலில், ட்ரொட்ஸ்கி “புரட்சியின் ஒட்டுமொத்த பாதையிலும் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை நோக்கி தொடர்ந்து தள்ளப்படும்” என்பதை கணித்திருந்தார்.[20] ஜாரைத் தூக்கிவீசுவதுடனும் மற்றும் ஒரு முதலாளித்துவ-ஜனநாயக ஆட்சியை உருவாக்குவதுடனும் செயற்கையாக அதனை நிறுத்தி விட இயலாது. புரட்சியின் தலைமையான சமூக சக்தியாக, தொழிலாள வர்க்கம், வேலையிடத்தில் தொடங்கி, தனது நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் முன்னெடுப்பதற்குமான வர்க்க நடவடிக்கைகளை எடுப்பதில் இருந்து தடுக்கப்படக் கூடாது, தடுத்து விட முடியாது.

1917 போன்று சமூகப் போராட்டங்களது ஒரு சூறாவளி குறித்து விவாதிக்கையில், மொத்தமொத்தமான குணாதிசயப்படுத்தலை செய்வதில் ஒருவர் சிரமம் காணுவார். ஒவ்வொரு பொதுவான குணாம்சப்படுத்தலுக்கும், அங்கே விதிவிலக்குகள் இருந்தன, பிராந்திய வித்தியாசங்கள் இருந்தன, கால இடைவெளியில் மாற்றங்களும் ஏற்ற இறக்கங்களும் இருந்தன. போல்ஷிவிக்குகள், மென்ஷிவிக்குகள், சோசலிச புரட்சியாளர்கள் (SRs) மற்றும் யாருடனும் தம்மை இணைத்துக்கொள்ளாத தொழிலாளர்கள் என அத்தனை பேருமே தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற்சாலைக் குழுக்கள் இரண்டிலும் செயலூக்கத்துடன் இருந்தனர்.

இருந்தபோதிலும், 1917 இல் ரஷ்யாவை ஒட்டுமொத்தமாய் எடுத்துப் பார்க்கையில், தொழிற்சங்கங்கள் பழமைவாதத்துடன் அல்லது “அரசியல்ரீதியாக நடுநிலை”யுடன் இருப்பதற்கும், மென்ஷிவிக்குகள் மற்றும் SRக்களின் கொள்கைகளுக்கு ஆதரவாக இருப்பதற்கும் முற்பட்டன. இதனிடையே தொழிற்சாலைக் குழுக்கள் போல்ஷிவிக் ஆதரவின் ஒரு இரும்புக்கோட்டையாக ஆகியிருந்தன. போல்ஷிவிக்குகள் இந்தக் கமிட்டிகளின் உருவாக்கத்தை ஊக்குவித்தனர். தொழிற்சாலை குழுக்களின் பிரதிநிதிகள் சபைகள் போல்ஷிவிக் தீர்மானங்களை தொடர்ச்சியாக வழிமொழிந்து வந்தன.

தொழிற்சாலைக் குழுக்களுக்கு சட்ட அந்தஸ்தைக் கொடுக்கின்ற அதேநேரத்தில், அவற்றின் பாத்திரத்தை அடிப்படையாக தொழிற்சங்கங்களின் பாத்திரத்திற்கு மட்டுப்படுத்தி வைப்பதன் மூலமாக தொழிற்சாலைக் குழுக்களை எதிர்கொள்வதற்கு இடைக்கால அரசாங்கம் முற்பட்டது. ஜூன் 13 அன்று தொழிற்சாலைக் குழுக்களின் ஒரு காங்கிரசில் பேசிய லெனின், தொழிலாளர்கள் இத்தகைய முயற்சிகளை நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். “தோழர்களே, தொழிலாளர்களே, நீங்கள் உண்மையான கட்டுப்பாட்டைப் பெறுகிறீர்களா என்று பாருங்கள், கற்பனையான கட்டுப்பாட்டை அல்ல” என்று அறிவித்த லெனின், “வெறும் காகிதத்தில் மட்டும் இருக்கின்றதான கற்பனையான கட்டுப்பாட்டை ... ஸ்தாபிப்பதற்கான அத்தனை தீர்மானங்கள் மற்றும் ஆலோசனைகளையும் மிகத் தீர்மானகரமான விதத்தில் நிராகரியுங்கள்” என்றார்.[21]

தொழிற்சாலைக் குழுக்கள் துரிதமாகப் பரவின, தொழிற்சாலைக் குழுக்களின் ஜூன் காங்கிரசில், 5,000 தொழிலாளர்களுக்கு மேல் கொண்ட தொழிற்சாலைகளின் 100 சதவீதம் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டிருந்தது. உற்பத்தி செய்யப்படும் தளத்திலிருந்து தங்களது சக-தொழிலாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, உற்பத்தி வரிசைகளில் (assembly lines) இருந்து புதிதாய் இந்த மாநாடுகளில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

முதலாளிகள், தங்களால் முடிந்த அளவுக்கு, இந்த குழுக்கள் உருவாவதற்கு எதிராய் போராடிப் பார்த்தனர். 19 தொழிலாளர்கள் வேலைபார்த்த ஒரு தோல் உற்பத்தி பட்டறையில் தொழிலாளர்கள் ஒரு குழுவை உருவாக்க முயற்சி செய்தபோது, முதலாளி அந்த மொத்தத் தொழிலாளர்களையும் வேலையிலிருந்து நீக்கிய ஒரு குறிப்பு இருக்கிறது. [22] மற்ற நிகழ்வுகளில், நிர்வாகம் குழுக்களின் தலைமையை வேலையிலிருந்து அகற்ற முயன்றது, தொழிலாளர்கள் தலைவர்களை மீண்டும் பணியிலமர்த்தக் கோரி வேலைநிறுத்தத்தில் இறங்கத் தள்ளப்பட்டனர்.

தொழிலாளர்களும் அவர்களது குடும்பங்களும் பட்டினியால் வாடும்போது, தொழிற்சாலைக் குழுக்கள் உணவுகளை வாங்குவதோடு விநியோகத்தை ஒழுங்கமைக்க முயன்றன. தொழிற்சாலைக் குழுக்கள் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் ஒழுங்கை நடைமுறைப்படுத்தின, குடிப்பழக்கத்திற்கு அடிமையாவதற்கு எதிரான ஒரு பிரச்சாரத்தையும் அவை நடத்தின. புரட்சிகரக் காலகட்டத்தின் குழப்பநிலையான மற்றும் அராஜகநிலையான வேளைகளின் போது, தொழிலாளர்’ கமிட்டிகள் உற்பத்தி பாதிக்காமல் பார்த்துக் கொண்டன, இன்றியமையாத கருவிகள், ஆடைகள் மற்றும் பொருட்களை உற்பத்தி செய்தன.

அதிகாரிகளுக்கு மிகவும் மன உளைச்சலைத் தந்ததாக இருந்தது என்னவென்றால், பல தொழிற்சாலைக் கமிட்டிகளும் இடைக்கால அரசாங்கத்தின் இராணுவப் படைகளின் மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என்று அறிவித்து, செங்காவலர்கள் என்று அழைக்கப்படும் தங்களது சொந்த ஆயுதமேந்தியப் போராளிக் குழுக்களை உருவாக்கினர். குறிப்பாக போல்ஷிவிக் தொழிற்சாலைகளில் செங்காவலர்கள் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டு வந்தனர், அவர்கள் தான் மிகவும் போர்க்குணமிக்கவர்களாய் இருந்தனர்.

பீட்டர்ஹோஃப் பகுதியில் ஏப்ரல் 26 அன்று, தொழிலாளர்கள் யாரெல்லாம் செங்காவலர் படையில் சேர முடியும் என்பதற்கான வரையறை அமைத்தனர்:

தொழிலாள வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே சேரலாம். எந்த தகுதியில்லாத அல்லது மன ஊசலாட்டம் கொண்ட மனிதர்களும் அதன் பொறுப்புகளில் வந்துவிடக் கூடாது என்பதற்கு நம்மிடம் உத்தரவாதம் வேண்டும். செங்காவலர் படையில் சேர விரும்பும் எவரொருவரும் ஒரு மாவட்ட சோசலிசக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டிருக்க வேண்டும். [23]

செங்காவலர் படையில் ஆண்கள் பெண்கள் இருவரும் இருந்தனர். செங்காவலர்கள் தொழிற்சாலைப் பகுதிகளுக்கு பாதுகாப்பு வழங்கினர், அதி-வலது சக்திகளின் தீவைப்பு நடவடிக்கைகளில் இருந்து தொழிலாளர்களது வீடுகளையும் வேலையிடங்களையும் பாதுகாத்தனர். தொழிலாள வர்க்கம் மட்டுமே எதிர்ப்புரட்சிகர சக்திகளுக்கு எதிராக ரஷ்யப் புரட்சியின் தேட்டங்களை பாதுகாக்கவும் முன்னெடுக்கவும் முடியும் என செங்காவலர் படை பிரகடனம் செய்தது. மென்ஷிவிக்குகள் செங்காவலர் படை உருவாக்கத்தைக் கண்டனம் செய்தனர், அதன் உருவாக்கத்தை “லெனினிசக் கலகம்” என்று குறைகூறினர்.

வல்கான் தொழிற்சாலையில் இருந்து செங்காவலர்கள்

தொழிற்சாலைக் கமிட்டிகள் கலாச்சார கேள்விகளை பெரும் ஆர்வத்துடன் எடுத்துக் கொண்டன. புட்டிலோவ் தொழிலகங்களில், தொழிலாளர்கள் ஸ்தாபித்த ஒரு கலாச்சார மன்றத்தில் ஒரு நூலகமும் சிற்றுண்டிச் சாலையும் இருந்தன.[24] இந்த கழகத்தில் 2,000 பேர் அங்கத்தவர்களாய் இருந்தனர். “தொழிலாள வர்க்க பொதுமக்களை ஒரு சோசலிச சிந்தனையில் ஐக்கியப்படுத்துவதைம் அபிவிருத்தி செய்வதையும்” தனது நோக்கமாக வரையறை செய்த அந்த கழகம், “அதற்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் கலாச்சாரத்தின் மீது தங்கியிருக்கின்ற பொது அறிவும் பொது அபிவிருத்தியும் அவசியமானவையாகும்” என்றது.[25]

Vasilevskii தீவில் புதிய விடியல் என்ற பெயரில் 1917 மார்ச்சில் ஒரு மன்றம் தொடங்கப்பட்டது, வெகுவிரைவில் பைப் தொழிலாளர்களில் இருந்து 800 பேர் அதில் அங்கத்தவர்களாகியிருந்தனர். இந்த மன்றம் தொழிலாளர்களுக்கு புவியியல் ஆய்வுச் சுற்றுலாவுக்கும், ஸ்டீமர் ஆய்வுச்சுற்றுலாவுக்கும், உரைகளுக்கும், அத்துடன் இசைக் கச்சேரிக்கும் ஏற்பாடு செய்தது. [26]

துப்பாக்கித் தொழிற்சாலை மன்றம் திறக்கப்பட்டபோது, ரஷ்ய இசையமைப்பாளரான Modest Mussorgsky இன் பாடல்கள் அங்கு இசைக்கப்பட்டதோடு, Internationale மற்றும் Workers’ Marseillaise ஐச் சேர்ந்த தொழிலாளர்கள் இசைக் குழுவினரின் இசைக்கச்சேரியும் நடந்தது. “இந்த மன்றத்தில் 4,000 புத்தகங்கள் இருந்த ஒரு நூலகம், ஒரு வாசிப்பு அறை, ஒரு சிறிய திரையரங்கம், ஒரு பள்ளி ஆகியவை இருந்தன. எழுத்தறிவு, சட்ட விவகாரங்கள், இயற்கை விஞ்ஞானம் மற்றும் கணிதம் ஆகியவற்றில் மாலை வகுப்புகள் நடத்தப்பட்டன.”[27]

பெட்ரோகிராட்டில் இருந்த தொழிலாளர் மன்றங்களில், புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர்களான அலெக்சாண்டர் ஆஸ்ட்ரோவ்ஸ்கி, லெவ் டோல்ஸ்டாய், நிக்கோலா கோகோல், மற்றும் ஜேர்மன் நாடக ஆசிரியரான Gerhard Hauptmann மற்றும் பிறரது எழுத்துக்கள் நாடகங்களாய் போடப்பட்டன. [28]

போல்ஷ்விக்குகள் இடைக்கால அரசாங்கத்தை அல்லது போரை ஆதரிக்க மறுத்தனர் என்பது நாம் அறிந்ததே. அந்த ஆண்டு முழுமையிலும் மற்ற அத்தனை போக்குகளுக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தில் ஒரு அரசியல் போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்தனர். நிகழ்வுகளின் தாக்கத்தினால், தொழிற்சாலைகள் ஒன்றன்பின் ஒன்றாய் போல்ஷிவிக்குகளின் பக்கம் சாய்ந்து கொண்டிருந்தன. ரஷ்ய புரட்சியின் வரலாற்றில், ட்ரொட்ஸ்கி குறிப்பாக புட்டிலோவ் தொழிற்சாலையின் ஒரு ஒருங்கிணைப்பாளரை தனித்துப் பாராட்டுகிறார்:

40,000 தொழிலாளர்கள் கொண்ட புட்டிலோவ் தொழிற்சாலை, புரட்சியின் முதல் மாதங்களின் போது, சோசலிச புரட்சியாளர்களின் ஒரு கோட்டையாக இருந்தது. ஆனால் அதன் காவலர்களால் அந்தக் கோட்டையை போல்ஷிவிக்குகளிடம் இருந்து பாதுகாத்து விட முடியவில்லை. மிகப் பெரும்பாலும் போல்ஷிவிக் தாக்குதலின் தலைமையில், கடந்த காலத்தில் ஒரு தையல்காரராய் இருந்த வோலோடார்ஸ்கி, காணக்கூடியவராய் இருந்தார். அமெரிக்காவில் சில காலம் வாழ்ந்திருந்தவரும் அத்துடன் ஆங்கிலம் சிறப்பாகப் பேசக் கூடியவருமான ஒரு யூதரான வோலோடார்ஸ்கி ஒரு மிகச் சிறந்த வெகுஜனப் பேச்சாளராக இருந்தார். தர்க்கரீதியாக, மேதைமையுடன் மற்றும் துணிச்சலுடன் பேசக் கூடியவர். பல்லாயிரம் பேர் கலந்து கொள்கின்ற பொதுக்கூட்டங்களில், அவரது அமெரிக்க தொனியானது அவரது குரலுக்கு ஒரு தனித்துவமான வெளிப்பாட்டை அளித்துக் கொண்டிருந்தது. “நவாரா பகுதியில் அவர் வந்துசேர்ந்த தருணம் முதலாக” தொழிலாளி மினிச்சேவ் கூறுகிறார், “புட்டிலோவ் தொழிற்சாலையின் களம் சோசலிச புரட்சியாளர்களது கால்களில் இருந்து நழுவத் தொடங்கியது, கிட்டத்தட்ட இரண்டு மாத காலத்தில் புட்டிலோவ் தொழிலாளர்கள் போல்ஷிவிக்குகளின் பக்கம் சென்று விட்டிருந்தனர்.” [29]

அமெரிக்காவில் போரின் சமயத்தில், வோலோடார்ஸ்கி சர்வதேச தையற்காரர்கள் தொழிற்சங்கம் மற்றும் சோசலிஸ்ட் கட்சியில் செயலூக்கத்துடன் இருந்தார். நியூயோர்க்கில் ஒரு செய்தித்தாளுக்கு அவர் எழுதினார். ரஷ்யாவுக்கு வந்த பின்னர் ட்ரொட்ஸ்கியின் Mezhraiontsy இல் அவர் இணைந்தார், பின் ட்ரொட்ஸ்கியுடன் போல்ஷிவிக் கட்சியில் இணைந்தார். 1918 இல் சோசலிச புரட்சியாளர்களால் அவர் படுகொலை செய்யப்பட்டார்.

புட்டிலோவ் தொழிற்சாலைக் குழு தொழிலாளர்களை மாலை வகுப்புகளில் கலந்து கொள்ள உற்சாகப்படுத்தியது: “அறிவு தான் எல்லாமே என்ற சிந்தனை உங்கள் நனவில் ஆழமாகச் செல்லட்டும். அதுவே வாழ்வின் சாரம், அது மட்டுமே வாழ்வின் அர்த்தமாக முடியும்.”[30]

கலாச்சாரம் மற்றும் அறிவொளி இயக்கம் குறித்த கேள்விகள் இப்போது மிக இன்றியமையாத பற்றியெரியும் கேள்விகளாய் இருந்தன. ... தோழர்களே, விஞ்ஞான அறிவு பெறுகின்ற சந்தர்ப்பத்தை நழுவ விடாதீர்கள். ஒரேயொரு மணி நேரத்தையும் கூட பயனற்று வீணடிக்காதீர்கள். ஒவ்வொரு மணி நேரமும் நமக்கு விலைமதிப்பில்லாததாகும். நாம் எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கும் வர்க்கங்களை விரட்டி நெருங்குவது மட்டும் போதாது, அவர்களை விஞ்சிச் செல்ல வேண்டும். அதுவே வாழ்க்கையின் கட்டளை, அதை நோக்கித்தான் அதன் விரல் சுட்டிக்காட்டுகிறது. நாம் இப்போது நமது சொந்த வாழ்க்கையின் எஜமானர்களாய் இருக்கிறோம், ஆகவே அறிவின் அத்தனை ஆயுதங்களது எஜமானர்களாக நாம் ஆக வேண்டும்.”[31]

புட்டிலோவ் உருக்கி ஒட்டுநர் மத்தியில் எழுத்தறிவு 94.7 சதவீத அளவுக்கு உயர்வாய் இருந்ததாக ஒரு கணக்கெடுப்பு தெரிவித்தது. பெட்ரோகிராட்டின் உலோகத் தொழிலாளர்கள் மத்தியில் இது பொதுவாக 92 சதவீதமாக இருந்தது. அதேசமயத்தில் ஐரோப்பிய ரஷ்யாவின் நாட்டுப்புறங்களுடன் ஒப்பிடுகையில் இது 17 சதவீதமாக இருந்தது.[32]

பல வழிகளிலும், பிப்ரவரிக்குப் பின்னர் தொழிலாளர்களது’ கட்டுப்பாட்டின் வெளிப்பாடானது, அரசியல் தளத்தில் நிலவிய ”இரட்டை அதிகார”த்தின் வேலையிடப் பிரதிபலிப்பாக இருந்தது. வேலையிடங்களில் கட்டுப்பாட்டின் குறிப்பிட்ட அம்சங்கள் புரட்சிகரத் தொழிலாளர்களின் கரங்களுக்குள் அறிவிப்பின்றி சென்றிருந்தன, அதேநேரத்தில் சட்ட உரிமையும் முடிவெடுக்கும் உரிமையும் சட்டரீதியாக முதலாளிகளின் கரங்களில் தொடர்ந்து இருந்தது.

தொழிலாளர்களின் கட்டுப்பாடு என்ற நிகழ்வுப்போக்கு, சரியான நிலைமைகளில், “திட்டமிட்ட பொருளாதாரத்திற்கான ஒரு பள்ளி”யாக இருந்தது என்று ட்ரொட்ஸ்கி அழைத்தார். இந்த வரிசையில், 1917 இன் போது, புட்டிலோவ் தொழிற்சாலைக் கமிட்டி வேலைத்தள குழுக்கள் அமைப்பது குறித்து பின்வரும் விரிவான வழிகாட்டல்களை வழங்கியது:

அடிமட்டத்தில் வாழ்க்கையைப் பார்த்துக் கொள்ளக் கூடியதாக இருக்கின்ற இந்தக் குழுக்கள் முடிந்த அளவுக்கு சுதந்திரத்தையும் முன்முயற்சியையும் வெளிப்படுத்தியாக வேண்டியது அவசியமாகும். தொழிற்சாலைகளில் இருக்கும் தொழிலாளர் அமைப்புகளின் வெற்றி முழுக்க இதனையே சார்ந்தேயுள்ளது. சுய-மேலாண்மைக்கு (self-management) பழக்கப்படுத்திக் கொள்வதன் மூலமாக, தொழிலாளர்கள், தொழிற்சாலைகள் மற்றும் வேலைகளின் தனியார் உடைமை ஒழிக்கப்பட்டு, உற்பத்தி சாதனங்களும், அவற்றுடன் சேர்ந்து தொழிலாளர்களின் கரங்களால் கட்டியெழுப்பப்பட்ட கட்டிடங்களும், ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கத்தின் கரங்களுக்குள் வந்துசேர்கின்ற அந்த நேரத்திற்கு தயாரிப்பு செய்கின்றனர். இவ்வாறாய், சின்னச்சின்ன விடயங்களை செய்கின்ற வேளையில், உழைக்கும் மக்கள் [rabochii narod] அரும்பாடுபடுகின்ற மாபெரும் சர்வமுதலான இலட்சியத்தை நாம் எப்போதும் மனதில் கொண்டிருக்க வேண்டும்.[33]

பிப்ரவரி புரட்சியால் அடிவாங்கியிருந்த ஆளும் வர்க்கம், ஒரு குறுகிய காலத்திற்கு தொழிலாளர்கள்’ கட்டுப்பாட்டிற்கு இணங்கியிருக்கத் தள்ளப்பட்டது. ஆனால், முதலாளிகள் தங்களது சமநிலையை மறுபடியும் பெற்றுவிட்ட உடனேயே, அவர்கள் தங்களது சிறப்புசலுகைகளை மீண்டும் திட்டவட்டம் செய்வதற்கு தீர்மானம் பூண்டிருந்தனர்.

“சாராம்சத்தில் சமரசமற்றதாக இருந்த தொழிலாளர்களது கட்டுப்பாட்டு ஆட்சியின் முரண்பாடுகள், அதன் வட்டமும் அதன் கடமைகளும் விரிவாக்கம் பெற்று விரைவில் சகிக்கமுடியாததாக ஆகின்ற மட்டத்திற்கு தவிர்க்கவியலாமல் கூர்மையடையும்” என்று ட்ரொட்ஸ்கி பின்னர் எழுதினார்.[34] இந்த “இரட்டை அதிகார” நிலைமையில் இருந்து வெளிவருகின்ற இரண்டே வழிகள் மட்டுமே இருந்தன என்று ட்ரொட்ஸ்கி விளக்கினார்: ஒன்று தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியாக வேண்டும் இல்லையேல் ஒரு எதிர்ப்புரட்சிகர சர்வாதிகாரம் ஆகும்.

கோர்னிலோவ் விவகாரம்

1917 இல் ரஷ்யாவில், இரண்டாவது மாற்றானது ஜெனரல் கோர்னிலோவின் ஆட்சிக்கவிழ்ப்பு சதிமுயற்சியின் வடிவத்தை எடுத்தது, இது “கோர்னிலோவ் விவகாரம்” எனப்பட்டது. இந்த ஆட்சிக்கவிழ்ப்பின் பொருட்சூழல் ஏற்கனவே முந்தைய உரையில் விவாதிக்கப்பட்டிருக்கிறது.

லாவ்ர் கோர்னிலோவ், ஆகஸ்ட் 1917

அத்தனை குறிப்புகளின் படியும், லாவ்ர் கோர்னிலோவ் ஒரு அடாவடித்தனமான மற்றும் மனதைக் கவராத ஒரு ஆளுமையாக இருந்தார். அவரது சகா ஜெனரல் ஈவ்ஜினி மார்ட்டினோவ் அவரை “அரசியல் விடயங்களில் முழுமையான மடையர்” என்று வருணித்தார், ஜெனரல் மிகைல் அலெக்ஸீவ் அவரை “சிங்கத்தின் இதயமும் செம்மறியாட்டின் மூளையும் கொண்ட ஒரு மனிதர்” என வருணித்தார். [35] துருப்புகளின் வரிசைகள் அவர்களது சீருடையில் அணிவகுப்பு நடத்தும் போது, தனது ஆதரவாளர்களின் கூட்டத்தை முறைத்தபடி, அவர்களுடன் தானும் சீருடையில் அணிவகுப்பு செய்வது கோர்னிலோவுக்குப் பிடித்தமான ஒன்றாகும். குட்டையான கவட்டைக் கால்கள் உடையவராக இருந்த அவர், ஒரு மூர்க்கமான வெறிநாயின் பிம்பத்தை வளர்த்துக் கொண்டார். Ku Klux Klan போன்று ரஷ்யாவில் இருந்த கறுப்பு நூற்றுவர்களின் இன் ஒரு அனுதாபியாக அவர் இருந்தார்.

கோர்னிலோவின் இராணுவக் காலம் குறிப்பாக பேர் சொல்லும்படியானதாக இல்லை. 1915 இல் காடுகளில் சுற்றிக் கொண்டிருந்தபோது ஆஸ்திரியர்களால் அவர் சிறைப்பிடிக்கப்பட்டார், ஆனால் எப்படியோ சமாளித்து அங்கிருந்து தப்பித்து விட்டார். தோல்வியடைந்த கெரென்ஸ்கி தாக்குதலின் போது, பின்வாங்குகின்ற துருப்புகளின் மீது கண்மூடித்தனமாக சுட உத்தரவிட்டதன் மூலமாக அவர் தன்னை தனித்து வெளிப்படுத்தினார். சிப்பாய்கள் இதற்காகவே அவர் மீது வெறுப்பு கொண்டனர் என்றால், அதி-வலது வட்டாரங்களில், இது அவரை ஒரு தேசிய நாயகனாக ஆக்கியது. போரில் ரிகாவை கைவிட்ட பின்னர், சிப்பாய்கள் உண்மையில் தீரத்துடன் போரிட்டு வந்திருந்தனர் என்றபோதும், கோர்னிலோவ் சிப்பாய்களை கோழைத்தனத்திற்காக, வீதியோரத்திலேயே இஷ்டக்கணக்கில் சுட்டுத்தள்ளுமாறு உத்தரவிட்டார். இந்த அடாவடித்தனங்களை செய்வதற்கு அதிகாரிகள் மறுத்தபோது, கோர்னிலோவ் ஆவேசமடைந்ததோடு கீழ்ப்படியாமைக்காக அந்த அதிகாரிகள் மீது இராணுவ நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுக்கவும் அச்சுறுத்தினார்.

கோர்னிலோவின் அரசியல் வேலைத்திட்டம் முரட்டுத்தனமானதாய் இருந்தாலும் எளிமையானதாய் இருந்தது. இரண்டு முகம் கொண்ட அலெக்ஸாண்டர் கெரென்ஸ்கி, மென்ஷிவிக்குகள் மற்றும் சோசலிச புரட்சியாளர்கள் போன்ற “மிதவாத” சோசலிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நோக்கம் கொண்டவராக இருந்தாரென்றால், கோர்னிலோவ் அப்படியான எதையும் செய்வதற்கு தலையசைக்காதவராக இருந்தார். கோர்னிலோவை பொறுத்தவரை, போல்ஷிவிக்குகள், மென்ஷிவிக்குகள் மற்றும் சோசலிஸ்ட் புரட்சியாளர்கள் ஆகிய அத்தனை சோசலிஸ்டுகளுமே “ரஷ்யாவின் உள்முகமான எதிரிகள்” அவர்கள் அந்நிய சக்திகளின் ஊதியம் பெறும் உளவாளிகளாக இருப்பதற்கும் அநேக சாத்தியமுண்டு. கோர்னிலோவ் தலைநகருக்குள் அணிவகுப்பார், தொழிலாளர்’ அமைப்புகளை தகர்த்தெறிவார், தலைவர்களை தூக்கிலிடுவார், அவர் பாதையில் குறுக்கே வரும் எவரொருவருக்கு எதிராகவும் பீரங்கிகளை பயன்படுத்துவார்.

உயரடுக்கு ஜாரிச இராணுவ தட்டினர், அரசாங்க அதிகாரத்தைச் சேர்ந்தவர்கள், நிலவுடைமையாளர்கள், மற்றும் வணிக மற்றும் வங்கி முதலைகளை பொறுத்தவரை, கோர்னிலோவ் ஒரு தேசியக் காவலரின் ஒளிவட்டம் கொண்ட ஒருவராக வெகுவிரைவில் ஆனார். ஒட்டுமொத்த பிரதான நீரோட்ட ஊடகங்களும் அவரை ஆதரித்தன. போரிஸ் சாவின்கோவ் உள்ளிட்ட முன்னணி SR க்கள் மற்றும் கெரென்ஸ்கியின் ஆதரவும் கூட அவருக்குக் கிட்டியது.

பெட்ரோகிராட்க்கு கோர்னிலோவ் அணிவகுக்கும் முன்பாக, கெரென்ஸ்கிக்கும் கோர்னிலோவுக்கும் இடையில் ஒரு தொடர் சூழ்ச்சிகள் நிகழ்ந்திருந்தது. கெரென்ஸ்கி, கோர்னிலோவுக்கு சளைக்காத “கோர்னிலோவ் வித்தைக்காரர்”. பெட்ரோகிராட்டின் தொழிலாளர்களை நசுக்குவதற்கு அவசியமாக இருந்ததாக இரண்டு பேருமே உடன்பட்ட ஒரு “இரத்தமும் இரும்புமான” அரசாங்கத்திற்கு தலைமையில் யார் இருப்பது என்பதுதான் இந்த இரண்டு மனிதர்களுக்கும் இடையிலான மோதலாக இருந்தது. அரசியல் ஸ்தாபகத்திற்குள் கோர்னிலோவுக்கு வளர்ந்துவரும் ஆதரவைப் பயன்படுத்திக் கொள்ள முனைந்து, தனது சொந்த ஆதாயத்திற்காகவே, கெரென்ஸ்கி, கோர்னிலோவை இராணுவத்தின் தலைவராக ஜூலை 31 (18, O.S.) அன்று நியமனம் செய்தார்.

ஆகஸ்டு 24 (11, O.S.) அன்று, கோர்னிலோவ் அவரது படைத் தலைவரிடம் “லெனின் தலைமையிலான ஜேர்மன் முகவர்களையும் உளவாளிகளையும் தூக்கிலிடுவதற்கும்” “பெட்ரோகிராட் சோவியத்தை அது வேறெங்கிலும் மறுபடி கூட இயலாத வண்ணம் கலைப்பதற்கும்” சரியான நேரம் என்று தெரிவித்தார். [36] ஆகஸ்டு 25 (12, O.S.) அன்று, பெட்ரோகிராட்க்கு அணிவகுத்துச் செல்ல இராணுவத்திற்கு கோர்னிலோவ் உத்தரவிட்டார். அவர் அறிவித்தார்: “ஆகஸ்டு 28 மாலைக்குள்ளாக பெட்ரோகிராட் புறநகர்ப் பகுதிகளில் இராணுவம் காவல்நிற்கும். ஆகஸ்டு 29 அன்று பெட்ரோகிராட் இராணுவச் சட்டத்தின் கீழ் பிரகடனம் செய்யப்பட வேண்டும் என்று நான் வேண்டுகிறேன்.”

பெட்ரோகிராட்க்கு அனுப்பப்பட்ட துருப்புகளில் ஜாரின் “கொடூர படையணி” எனப்பட்ட Caucasian Native Cavalry Division ம் இடம்பெற்றிருந்தது. கோர்னிலோவ் ஆதரவாளர்கள் தலைநகரில் ஓடவிருக்கும் இரத்த ஆற்றுக்கு தாங்கள் கொண்டிருந்த ஆர்வத்தை மறைக்க முடியாதவர்களாய் இருந்தனர். அவர்கள் வெளிப்படையாக பீற்றிக் கொண்டனர்: “மலையேறும் அந்த வீரர்கள் யாரைக் கொல்கிறோம் என்பது குறித்து அக்கறை கொள்வதில்லை”.[37] பின்னாளில் வெள்ளை இராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட சுலோகங்கள் நினைவுக்கு வரலாம்: “எங்களுக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் கிடையாது! கடவுள் எங்களுடன் இருக்கிறார் ... வலது மற்றும் இடதின்!” [38] ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளுடன் தொடர்புபட்ட சுலோகத்தை இதற்கு நிகரான நவீன வடிவமாகக் கூறலாம்: “அனைவரையும் கொல்லுங்கள், அவர்களை கடவுள் பார்த்துக் கொள்ளட்டும்!”.

இராணுவத்தைக் கொண்டு கோர்னிலோவ் பெட்ரோகிராட்டில் என்ன செய்ய திட்டம் கொண்டிருந்தார்? ரஷ்யாவில் 1905 புரட்சி தோற்கடிக்கப்பட்ட போது, இராணுவம் மாஸ்கோவின் பிரெஸ்ன்யா பகுதியை ஷெல்களை வீசி நாசப்படுத்தியது. தொழிலாளர்களும் அவர்களது குடும்பங்களும் நிரம்பிய அந்த ஒட்டுமொத்த தொழிற்சாலைப் பகுதியுமே, குப்பைக் கூளங்களாய் குறைக்கப்பட்டு விட்டது. இரயில்வே பாதைகள் எங்கிலும் தண்டனைப் பயணங்கள் நடந்தன: “துருப்புகள் ஒரு இரயில் நிலையத்துக்குள் வரும், கண்ணில் படும் எவரையும் -பெண்கள், குழந்தைகள், இரயில்வே தொழிலாளர்கள் யாராயிருந்தாலும்- அவர்களை சுட்டுத் தள்ளும். மக்களை பீதியுறச் செய்வதற்காக சிலர் ஆங்காங்கே தூக்கிலிடப்பட்டனர்.”[39]

1917 இல் இருந்து 1871க்கு எவ்வளவு தொலைவோ அவ்வளவு தொலைவு தான் இன்றைக்கும் 1971க்கும் என்பதை இச்சமயத்தில் நினைவுகூர்வது நல்லது. பாரிஸில் கம்யூனார்ட்டுக்கள் மொத்தமாய் படுகொலை செய்யப்பட்டதானது, போல்ஷிவிக் கட்சியின் பல உறுப்பினர்களது ஆயுட்காலத்தில் நடந்த ஒன்றாக இருந்தது, ஆகவே தலைமை அந்த அபாயத்திலிருந்து பார்வையை விலக்கி விடவில்லை. 1918 இல் பின்லாந்தில் எதிர்ப்புரட்சியாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய போது, 100,000க்கும் அதிகமான பின்லாந்தின் தொழிலாளர்கள் மொத்தமாய் படுகொலை செய்யப்பட்டதாக விக்டர் சேர்ஜ் மதிப்பிடுகிறார்.

கோர்னிலோவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில், யூத விரோதம் என்னும் நோய் பீடிப்பின் ஒரு வலுவான கூறும் அங்கே இருந்தது என்பதையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும். கோர்னிலோவ்வாதியான ஜெனரல் அன்டோன் டெனிக்கின் உடன் சில காலம் செலவிட்ட பிரிட்டிஷ் போர் செய்தியாளர் ஜோன் ஏர்னெஸ்ட் ஹோட்க்சன் பின்வரும் அவதானிப்பைச் செய்தார்:

டெனிக்கின் உடன் நான் ஒரு மாதத்திற்கு அதிகமாய் இருக்கவில்லை, அதற்குள்ளாகவே ரஷ்ய எழுச்சியில் யூதர்கள் ஒரு மிகப் பெரும் கூறாக இருந்தனர் என்ற முடிவுக்கு வர நான் தள்ளப்பட்டேன். இராணுவத்தின் அதிகாரிகளும் வீரர்களும் நாட்டின் அத்தனை பிரச்சினைகளுக்குமான நடைமுறைரீதியான பழியை, யூதத்தின் மீது சுமத்தினர். ஒட்டுமொத்த கொந்தளிப்புமே சர்வதேச யூதர்களின் சில மாபெரும் மற்றும் இரகசியமான சமூகத்தின் வேலையாக இருந்தது என்றும், இவர்கள் ஜேர்மனியிடம் இருந்து பணத்தையும் உத்தரவுகளையும் பெற்றுக் கொண்டு, உளவியல்ரீதியான தருணத்தை பிடித்துக் கொண்டு அரசாங்கத்தின் கடிவாளத்தை கைப்பற்றி விட்டனர் என்றும் அவர்கள் கூறினர். அப்போது கிடைக்கத்தக்கதாய் இருந்த அத்தனை தரவுகளும் தகவல்களும் இந்த வாதத்திற்கு வண்ணம் சேர்ப்பதாகவே இருந்தன. போல்ஷிவிக் கமிசார்களில் 82 சதவீதத்திற்குக் குறையாத பேர் யூதர்களாய் இருந்தனர், லெனினுடன் அலுவலகத்தைப் பகிர்ந்து கொண்ட ஆக்ரோஷமான சமரசப்படாத “ட்ரொட்ஸ்கி” ஒரு யூதர், அவரின் உண்மையான பெயர் புரோன்ஸ்டீன். டெனிக்கினின் அதிகாரிகள் மத்தியில், மிக விநோதமான மற்றும் விசித்திரமான வசனங்களுக்கு அவர்களை இட்டுச் செல்லுமளவுக்கு இந்த சிந்தனை பயங்கர கடுமையுடன் விடாப்பிடியாக பீடித்திருந்த ஒன்றாக இருந்தது.[40]

உள்நாட்டுப் போரின்போது, வெள்ளை இராணுவங்கள் ஐரோப்பிய-ரஷ்யா முழுமையிலும் யூதர்களைப் படுகொலை செய்தன, அவர்களைப் பின்பற்றியவர்களை ”யூத-கம்யூனிஸ்டுகளின் இதயங்களில் நிழலாடுகின்ற அந்த பேயை” ஒழிக்கவிருப்பதாகக் கூறி அச்சுறுத்தினர். பல வரலாற்றாசிரியர்களும் அவரவர் கோணத்தில் இருந்து, ரஷ்ய உள்நாட்டுப் போரின் வன்முறை குறித்து வருந்துவார்கள், ஆனால் ட்ரொட்ஸ்கியும் செம்படையும் எதிர்த்து நின்றது என்ன என்பது நினைவில் கொள்ளப்பட வேண்டும். வெள்ளை இராணுவத் தலைவர்கள் பலரும், அவர்களது வாழ்க்கையில் பின்னாளில், நாஜிக்களுக்கு ஆதரவளித்தார்கள் அவர்களுடன் ஒத்துழைத்தார்கள் என்பது அப்போது அவர்களுக்கு ஆச்சரியமளிக்காது.[41] இந்த சக்திகள் தான் கோர்னிலோவ் சதியின் பின்னால் அணிதிரட்டப்பட்டிருந்தார்கள்.

கோர்னிலோவின் கோரிக்கைகள் குறித்து இளவரசர் ஜோர்ஜ் லிவாவ் மூலம் முதன்முதலில் கெரென்ஸ்கி கேட்டறிந்தபோது, அவர் அதனை நகைச்சுவை என்று கருதி வாய்விட்டு சிரித்து விட்டார். இது சிரிப்புக்குரிய விடயமல்ல என்று அவருக்கு இறுக்கமான முகத்துடன் தெரிவித்த இளவரசர் லிவாவ், கெரென்ஸ்கிக்கு உயிர் மீது ஆசையிருந்தால் அவர் பெட்ரோகிராடை விட்டு முடிந்த அளவு விரைவாக அகன்று விட வேண்டும் என்று தெரிவித்தார். பெட்ரோகிராட்டில் அணிவகுப்புக்கு தலைமை கொடுப்பதற்கு, கோர்னிலோவ், தேவைப்பட்டால் “ஒட்டுமொத்த சோவியத் அங்கத்தவர்களையும் தூக்கிலிடுவதற்கு” தயங்கப் போவதில்லை என்று அறிவித்திருந்த ஜெனரல் அலெக்சான்டர் கிரைமோவை தெரிவு செய்தார். [42] ஆகஸ்டு 28 அன்று, கோர்னிலோவ் வெற்றி பெறவிருப்பதை எதிர்பார்த்து பெட்ரோகிராட்டில் பங்குச்சந்தை மேல்நோக்கி உயர்ந்தது.

தொழிற்சாலைப் பகுதிகளுக்கு செய்தி எட்டியதும், தொழிற்சாலைகள் ஒன்றன்பின் ஒன்றாய் எச்சரிக்கை சங்கை ஊதத் தொடங்கின. பெட்ரோகிராட்டின் தொழிலாளர்கள் ஏற்கனவே 1905 ஐ கடந்து வந்திருக்கிறார்கள் என்பதால், கோர்னிலோவை நகரத்திற்குள் அனுமதித்தால் அவர் என்ன செய்வார் என்பதை அவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள். தொழிற்சாலைப் பகுதிகளில் இருந்த போல்ஷிவிக் தலைவர்கள் இந்த அபாயம் குறித்து வருடம் முழுமையிலும் எச்சரித்து வந்திருந்தனர். ஆளும் வர்க்கம் வெறுமனே அதன் சமயத்திற்காக காத்திருக்கிறது, விரைவிலேயோ அல்லது கொஞ்சம் தள்ளியோ, அது தன் போலியான சீர்திருத்தங்களையும் போலியான கூட்டணிகளையும் கைவிட்டு தொழிலாள வர்க்கத்தை தன் படைவலிமையைக் கொண்டு நசுக்குவதற்கு முயற்சி செய்யும் என்பதை போல்ஷிவிக்குகள் விளக்கியிருந்தனர். எச்சரிக்கை ஒலியை செவிமடுத்த தொழிலாளர்கள் வீதிகளில் இறங்கினர், போல்ஷிவிக் தலைவர்கள் ஏற்கனவே அவரவர் நிலைகளில் இருந்தபடி நகரைப் பாதுகாப்பதற்குத் தேவையான உத்தரவுகளை வழங்கிக் கொண்டிருந்தனர். சில மணி நேரங்களுக்குள்ளாக, நகரம் தனது முழு விஸ்தீரணத்துடன் தயாராய் இருந்தது, ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாள வர்க்கம் முழு ஆற்றலுடன் எழுந்து நின்றது.

மே மாதத்தில், மென்ஷிவிக் தலைவரான இராக்லி செரட்டெலி மற்றும் சோவியத்தின் தலைமை குரோன்ஸ்டாட்டின் மிகத் தீவிரப்பட்ட மாலுமிகள் மீது வழக்கு தொடுத்தபோது, ட்ரொட்ஸ்கி அந்த மாலுமிகளைப் பாதுகாத்து நின்றார். “ஒரு எதிர்ப்புரட்சிகர ஜெனரல், புரட்சியின் மீது சுருக்குக்கயிறை வீசுவதற்கு முயலும்போது, கடேட்டுகள் அந்த கயிற்றுக்கு சோப்புப் போடுவார்கள், குரோன்ஸ்டாட்டின் மாலுமிகள்தான் நம்முடன் சேர்ந்து சண்டையிட்டு இறப்பதற்கு வருவார்கள்” என்று ட்ரொட்ஸ்கி செரெட்டெலியை எச்சரித்தார்.[43] ட்ரொட்ஸ்கி கூறியது அத்தனையும் சரியாய் இருந்தது: எதிர்ப்புரட்சிகர ஜெனரல் குறித்து அவர் கூறியது சரியாய் இருந்தது, கடேட்டுகள் குறித்து அவர் கூறியது சரியாய் இருந்தது, குரோன்ஸ்டாட் மாலுமிகள் குறித்து அவர் கூறியதும் சரியாய் இருந்தது. கோர்னிலோவ் வாசலில் நிற்கிறார் என்ற தகவலறிந்ததும், குரோன்ஸ்டாட்டின் மாலுமிகள் தலைநகருக்கு அணிவகுத்தனர், முழு ஆயுதபாணியாக, அதனைப் பாதுகாப்பதற்கு தங்களது உயிரையும் கொடுப்பதற்கு அவர்கள் தயாராய் நின்றனர்.

அரோரா மாலுமிகள் ட்ரொட்ஸ்கியிடம் ஆலோசனை பெறுவதற்காக அவர் அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலைக்கு ஒரு தனிக் குழுவை அனுப்பினர்: அவர்கள் குளிர்கால அரண்மனையைப் பாதுகாக்க வேண்டுமா, அல்லது குளிர்கால அரண்மனையை தகர்க்க வேண்டுமா? என்று கேட்டனர். முதலில் கோர்னிலோவ் விவகாரத்தை முடியுங்கள் பின் கெரென்ஸ்கியுடன் கணக்குத் தீர்க்கலாம் என்று ட்ரொட்ஸ்கி அவர்களிடம் தெரிவித்தார்.

நகரத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளுக்கு போல்ஷிவிக் கட்சிதான் முன்னணியில் நின்றது. நகரின் ஒட்டுமொத்த மக்களும் அணிதிரட்டப்பட்டனர், அகழிகள் தோண்டப்பட்டன, கம்பி வேலிகள் பின்னப்பட்டன, கோட்டை அரண்களுக்கு விநியோகம் ஒழுங்கமைக்கப்பட்டது. மென்ஷிவிக்-சர்வதேசியவாதியான நிக்கோலாய் சுக்ஹானோவ் பின்னர் இவ்வாறு அவதானித்தார்:

[எதிர்ப்புரட்சிக்கு எதிரான போராட்டத்திற்கான] குழு, பாதுகாப்பு தயாரிப்புகளை செய்வதில், பரந்த எண்ணிக்கையில் தொழிலாளர்கள்-சிப்பாய்களை அணிதிரட்ட வேண்டியிருந்தது. ஆனால் இந்த பரந்த எண்ணிக்கையிலானோர், அவர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட மட்டத்திற்கு, போல்ஷிவிக்குகளாலேயே ஒழுங்கமைக்கப்பட்டனர், அவர்களையே பின்பற்றினர். அந்த சமயத்தில், அவர்களது அமைப்பு மட்டுமே பெரியதாக, ஒரு அடிப்படை ஒழுங்கினால் பிணைக்கப்பட்டிருந்ததாக, அத்துடன் தலைநகரின் ஜனநாயகரீதியாக மிகக் கீழிருந்த மட்டங்களுடன் பிணைப்புக் கொண்டதாக இருந்தது. அது இல்லாதிருந்தால், குழு கையாலாகததாய் இருந்திருக்கும். போல்ஷிவிக்குகள் இல்லையென்றால், தங்கள் மதிப்பைத் தொலைத்து விட்டிருக்கக் கூடிய பேச்சாளர்களின் விண்ணப்பங்கள் மற்றும் வெட்டிப் பேச்சுகளைக் கொண்டுதான் அது காலத்தைக் கடத்தியிருக்க முடியும். போல்ஷிவிக்குகள் இருந்ததால், ஒழுங்கமைந்த தொழிலாளர்கள் மற்றும் சிப்பாய்களின் முழு சக்தியை குழு தன் கரங்களில் கொண்டிருந்தது.[44]

கோர்னிலோவின் ஆதரவாளர்கள் தந்திகளை அனுப்புவதற்கு முயன்றபோது, தபால்தந்தி தொழிலாளர்கள் அவற்றை அனுப்ப மறுத்தனர். கார்களில் ஏறி அரசாங்கக் கட்டிடங்களுக்கு அழைத்துச் செல்ல கூறப்பட்ட போது, கார் ஓட்டுநர்கள் அவர்களை அழைத்துச் செல்ல மறுத்தனர். அவர்கள் துண்டறிக்கைகள் அச்சிட முயன்றபோது, அச்சுக்கோர்ப்பு தொழிலாளர்கள் எந்திரங்களைத் தொட மறுத்து விட்டனர். படை அதிகாரிகள் கோர்னிலோவுக்கு ஆதரவளிக்க தமது சிப்பாய்களுக்கு உத்தரவிட்ட போது, சிப்பாய்கள் அந்த அதிகாரிகளைப் பிடித்து சிறைவைத்து விட்டனர். போர் துறையுடன் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளில் இருந்த தொழிலாளர்கள் அவர்களுக்கென ஆயுதங்களைத் தயார் செய்து அவற்றை களத்துக்கு எடுத்துச் சென்றனர்.

ஜூலை நாட்களைத் தொடர்ந்து, இடைக்கால அரசாங்கம் செங்காவலர் படைகளிடம் இருந்து ஆயுதங்களை அகற்றுவதற்கு முனைந்தது, ஆனால் அவர்களை தலைமறைவாகச் செய்வதில்தான் அது வெற்றிபெற்றது. பழைய மற்றும் பயன்குறைந்த ஆயுதங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்வதற்கு தொழிலாளர்கள் அனுமதித்தனர், ஆனால் மதிப்புமிக்க ஆயுதங்களை எங்கெல்லாம் முடியுமோ அங்கு மறைத்து வைத்து விட்டனர். இந்தக் காலகட்டத்தின் போது, போல்ஷிவிக்குகள் செங்காவலர் படையை தொழிற்சாலைப் பகுதிகளின் ஒரு ஆயுதமேந்திய போராளிக்குழு என்பதில் போல்ஷிவிக் இராணுவத்தின் ஒரு மையமாக அபிவிருத்தி செய்திருந்தனர். தொழிற்சாலைக் கமிட்டிகளைப் போல, செங்காவலர் படைகளும் உத்தியோகபூர்வமாக கட்சி-சாராதவையாக இருந்தபோதிலும், ஒவ்வொரு படையணியிலும் மற்றும் தலைமையிலும் போல்ஷிவிக் தொழிலாளர்கள் தான் அதிகமான அளவில் பங்குபற்றியிருந்தனர். செங்காவலர் படைப்பிரிவுகளுக்கு போல்ஷிவிக் கட்சியானது இராணுவ வழிகாட்டுநர்களையும், இயன்ற இடங்களில், ஆயுதங்களையும் வழங்கியது. இராணுவப் பயிற்சிகள் முதலில் தொழிலாளர்களது வீடுகளிலும் குடியிருப்புகளிலும் நடத்தப்பட்டன, அதன்பின் பகிரங்கமாக தொழிற்சாலை வளாகங்களில் நடத்தப்பட்டன.

கோர்னிலோவ் பெட்ரோகிராடை நோக்கி அணிவகுப்பு நடத்திய நிலையில், செங்காவலர் படையணிகள் துப்பாக்கிகள் மற்றும் எந்திரத் துப்பாக்கிகளை ஏந்தி வீதிகளில் தோன்றின. பத்தாயிரக்கணக்கானோரது வலிமையுடன், செங்காவல்படையினர் பெட்ரோகிராட்டின் அத்தனை மூலோபாயரீதியான இடங்களின் மீதும் விரைவாக கட்டுப்பாட்டை ஸ்தாபித்திருந்தனர். தொழிற்சாலைப் பகுதிகளில், செங்காவல் படையினர் ஆளெடுக்கும் நிலையங்களை உருவாக்கினர், அதில் தன்னார்வலர்களின் நீண்ட வரிசைகள் உருவாயின.

இரயில்வே தொழிலாளர்கள், சிப்பாய்களை யாரும் இருப்புப்பாதை வழி கொண்டு செல்லக் கூடாது என்று எச்சரிக்கைகள் விடுத்தனர். இரயில் பெட்டிகளில் மரக் கழிவுகளை அடைத்து இரயில்பாதைகள் எங்கிலும் வைத்து விட்டனர், ஒவ்வொரு திசையிலும் பல மைல் தூரத்திற்கு இரயில் பாதைகளை தகர்த்து விட்டனர். சில இடங்களில், அவர்கள் கோர்னிலோவின் துருப்புகளை இரயில்களில் ஏற்றி அவர்களை பெட்ரோகிராட்டுக்கு எதிர்திசையில் அனுப்பி வைத்து விட்டனர். வெகுவிரைவில் நூற்றுக்கணக்கான மைல்கள் பாதையெங்கிலும் க்ரைமோவின் படைகள் நிர்க்கதியாக நின்று கொண்டிருந்தன.

அதன்பின் பெட்ரோகிராட்டில் இருந்து வந்திருந்த புரட்சிகரப் பேச்சாளர்கள் அந்த நடுவழியில் நின்று கொண்டிருக்கும் இரயில்களில் ஏறி துருப்புகளுக்கு உரையாற்றத் தொடங்குவார்கள். தன் கமாண்டின் கீழான சிப்பாய்கள் என்ன செய்வது என்பதை முடிவு செய்வதற்கு கூட்டங்கள் நடத்துவதும், கமிட்டிகளைத் தேர்வு செய்வதும், அதிகாரிகளைக் கைதுசெய்வதும், தீர்மானங்கள் நிறைவேற்றுவதுமாய் இருந்ததைக் கண்டு கிரைமோவுக்கு எவ்வளவு கடுப்பு இருந்திருக்கும் என்பதை ஒருவர் கற்பனை பண்ணிப் பார்க்க முடியும். ஒன்றன்பின் ஒன்றாக, கோர்னிலோவின் படையணிகள் மீது செங்கொடிகள் தோன்றத் தொடங்கின. கொடுமை பிரிவு (Savage division) என்பதாகச் சொல்லப்பட்ட படைப்பிரிவும் கூட, சோவியத் காங்கிரசுக்கான முஸ்லீம் பிரதிநிதிகளைச் சந்தித்த பின்னர், செங்கொடியை உயர்த்தியது. கோர்னிலோவின் சதி, சில நாட்களுக்குள்ளாக காற்றில் கரைந்து போயிருந்தது.

முடிவுரை:

ட்ரொட்ஸ்கி பின்னர் இவ்வாறு அவதானித்தார்: “கோர்னிலோவுக்கு எதிராக எழுந்த இராணுவம் தான் பின்னர் அக்டோபர் புரட்சியின் இராணுவமாக ஆகவிருந்தது.” [45] கோர்னிலோவ் முன்னேறுவதைத் தடுத்து நிறுத்தியதன் மூலம், தொழிலாள வர்க்கம் முதன்முறையாக ஒரு புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையின் மற்றும் வழிகாட்டலின் கீழ் தனது ஆற்றலை வெளிப்படுத்தியிருந்தது. எதிர்ப்புரட்சி சக்திகளுடன் மோதி தங்களது வலுவை அளவிட்டிருந்த பெட்ரோகிராட்டின் தொழிலாளர்கள் சுற்றிப் பார்த்து சூழ்நிலையை அளவெடுத்தனர். போல்ஷிவிக்குகளின் தலைமையில், அவர்கள் கோர்னிலோவை விடவும் வலிமையானவர்களாக இருந்தனர். கெரென்ஸ்கி மற்றும் SRக்கள் மற்றும் மென்ஷிவிக்குகள் இடையே இருந்த அவரது ஆதரவாளர்களை காட்டிலும் அவர்கள் வலிமையானவர்களாக இருந்தனர். அவர்களை தடுத்து நிறுத்துவதற்கு எந்த சமூக சக்தியும் இருக்கவில்லை. பரவசமான மனோநிலை அங்கிருந்தது. நாட்டை ஒரு படுபயங்கர அழிவில் இருந்து காப்பாற்றியிருந்த நாயகர்களாக தொழிலாளர்களும் சிப்பாய்களும் தங்களை உணர்ந்தனர். ஆயுத-வாகன பிரிவைச் சேர்ந்த ஒரு சிப்பாயால் நினைவுகூரப்பட்ட மனோநிலையை, ட்ரொட்ஸ்கி மேற்கோள் காட்டியிருந்தார், “ம், இந்த அளவுக்கு தீரம் இருக்குமேயானால், நம்மால் ஒட்டுமொத்த உலகத்தையும் எதிர்த்துப் போராட முடியும்.”[46]

முதலாளித்துவ வர்க்கத்துடன் எந்தக் “கூட்டணி”யும் இருக்கக் கூடாது என்பதை போல்ஷிவிக்குகள் மிகச் சரியாக எச்சரித்திருந்தனர். கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே தொழிலாள வர்க்கத்தை மீண்டும் அடிமை நிலைமைக்குத் தள்ள முதலாளித்துவ வர்க்கம் தீர்மானம் பூண்டிருந்தது. மென்ஷிவிக்குகள் மற்றும் SRக்கள் உள்ளிட முதலாளித்துவ வர்க்கத்துடன் சமரசம் காண்பதை ஆதரித்த அத்தனை கட்சிகளுமே மதிப்பிழந்து விட்டிருந்தன. போல்ஷிவிக்குகள் எச்சரித்திருந்ததைப் போல, தெரிவு ஒரு எதிர்ப்புரட்சிகர சர்வாதிகாரத்திற்கும் தொழிலாளர் அதிகாரத்திற்கும் இடையிலானதாக இருந்தது. அதிகாரத்தை தாங்களே கைப்பற்றியாக வேண்டியதைத் தவிர்த்த வேறு எந்த தெரிவும் தங்களுக்கு இல்லை என்பதைத் தொழிலாளர்கள் கண்டனர்.

விவசாயிகள் மத்தியிலும் சிப்பாய்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மத்தியிலும் அடித்தளம் கொண்டிருந்த SR கட்சி ஒரு பாரிய உருக்குலைவைச் சந்தித்தது. SR தலைமையின் ஒரு பிரிவு கோர்னிலோவ் சதியில் ஆழமாக சம்பந்தப்பட்டிருந்தது, எந்த கணிசமான நிலச் சீர்திருத்தங்களையும் பெறத் தவறியதின் விளைவாக கட்சி ஏற்கனவே வீழ்ச்சி கண்டு கொண்டிருந்தது. “சோவியத்தின் பெரும்பான்மை கட்சிகளின் மீது ஏற்கனவே நம்பிக்கையை இழந்திருந்த பரந்த மக்கள், எதிர்ப்புரட்சியின் அபாயத்தை தங்கள் சொந்தக் கண்களைக் கொண்டு கண்டனர்” என்று அக்டோபரின் படிப்பினைகள் என்னும் நூலில் ட்ரொட்ஸ்கி எழுதுகிறார். “இப்போது இந்தச் சூழ்நிலையில் இருந்து வெளிவரும் வழியை போல்ஷிவிக்குகள் மட்டுமே நமக்குக் காட்ட முடியும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர்.” [47]

கோர்னிலோவ் சதி தோற்கடிக்கப்பட்டதை ஒட்டி, போல்ஷிவிக்குகள் மாஸ்கோ மற்றும் பெட்ரோகிராட் சோவியத்துகளிலும், அத்துடன் பெருகும் எண்ணிக்கையிலான பிராந்திய சோவியத்துகளிலும் பெரும்பான்மையை வென்றனர். ஊரால்ஸ் (Urals) இல் 150,000 தொழிலாளர்களை பிரதிநிதித்துவம் செய்த ஒரு தொழிற்சங்க காங்கிரசில், போல்ஷிவிக் தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டன. மாஸ்கோ கோட்டை சிப்பாய் ஒருவர் பின்வருமாறு நினைவுகூர்ந்தார், “அத்தனை துருப்புகளுமே ஒரு போல்ஷிவிக் நிறத்தைப் பெற்று விட்டன.... சீக்கிரமே ஜெனரல் கோர்னிலோவ் பெட்ரோகிராட்டின் வாசலில் வந்து நிற்பார் என்ற [போல்ஷிவிக்குகளின்] கூற்று என்ன விதமாக உண்மையாக ஆகியிருந்தது என்ற விதத்தில் அத்தனை பேரும் மலைத்துப் போயிருந்தனர்...”[48] தொழிற்சாலை மற்றும் வேலைத்தள குழுக்களின் அனைத்து-ரஷ்ய மாநாடு ஒன்று “தொழிலாளர்களின் கட்டுப்பாடு ஒட்டுமொத்த நாட்டின் நலனின் பாலானது அது புரட்சிகர விவசாயிகள் மற்றும் புரட்சிகர இராணுவத்தால் ஆதரவளிக்கப்பட்டாக வேண்டும்” என்று அறிவிக்கின்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. ட்ரொட்ஸ்கி இவ்வாறு நினைவுகூர்ந்தார்: “ஒரு புதிய பொருளாதார ஒழுங்கிற்குக் கதவுதிறந்த இந்தத் தீர்மானம், ரஷ்யாவின் அத்தனை தொழிற்துறை நிறுவனங்களது பிரதிநிதிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது, ஐந்து வாக்குகள் மட்டுமே எதிராய் விழுந்தன, ஒன்பது பேர் வாக்களிப்பை புறக்கணித்தனர்.”[49]

லியோன் ட்ரொட்ஸ்கி

சோவியத்துகளில் போல்ஷிவிக் பெரும்பான்மை எழுந்தமையானது ரஷ்ய புரட்சியில் ஒரு திருப்புமுனையாக இருந்தது. கோர்னிலோவ் விவகாரத்துக்கு முன்னதாக, பிப்ரவரிக்குப் பின்னர் ஸ்தாபிக்கப்பட்ட சோவியத்துக்களின் அமைப்புமுறையில் போல்ஷிவிக்குகள் சிறுபான்மையாக இருந்திருந்தனர். அக்டோபர் 8 அன்று (செப்டம்பர் O.S.), புரட்சிகர ரஷ்யாவின் மிக முக்கியமான பொறுப்பாக வாதிடத்தக்க, பெட்ரோகிராட் சோவியத்தின் தலைவர் பொறுப்புக்கு, புதிய பெரும்பான்மையானது, 1905 புரட்சியின் போது சோவியத்தின் முன்னணி செய்தித்தொடர்பாளராக சேவைசெய்திருந்த லியோன் ட்ரொட்ஸ்கியை தேர்வு செய்தது. அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட சமயத்தில், ட்ரொட்ஸ்கி, சிறையில் இருந்து அப்போதுதான் விடுதலையாகியிருந்தார் என்றாலும், சட்டநுணுக்கரீதியாக கெரென்ஸ்கி அரசாங்கத்தின் மூலம் உயர்மட்ட துரோகக் குற்றச்சாட்டின் கீழ் இன்னும் இருந்தவராகவே இருந்தார். அவர் மேடையேறிய சமயத்தில், ஒருவர் அவதானித்ததைப் போல “கரவொலியின் ஒரு சூறாவளி” கொண்டு தொழிலாளர்கள் மற்றும் சிப்பாய்கள் பிரதிநிதிகளால் அவர் வரவேற்கப்பட்டார்.” [50]

”போல்ஷிவிசம் நாட்டை பற்றிக் கொண்டது” என்று ட்ரொட்ஸ்கி எழுதுகிறார். ”போல்ஷிவிக்குகள் ஒரு வெல்லமுடியாத சக்தியாக ஆயினர். மக்கள் அவர்களுடன் இருந்தனர்.”[51] சிறுபான்மையில் இருந்து பெரும்பான்மைக்கான இந்த துரிதகதியிலான மாற்றம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் போல்ஷிவிக் தலைமைக்குள்ளாக ஒரு கூர்மையான சர்ச்சை எழத் தூண்டியது. அந்த சர்ச்சை தான் அடுத்த உரையின் பேசுபொருளாக இருக்கப் போகிறது.

நியூயோர்க் டைம்ஸ் “பிப்ரவரி புரட்சியும் கெரென்ஸ்கி தவறவிட்ட வாய்ப்பும்” என்ற தலைப்பில் பிரசுரித்திருந்த ஒரு கட்டுரையில், “கோர்னிலோவ்” என்ற பெயரையே வசதியாக அது முழுவதுமாய் விட்டு விட்டிருக்கிறது. [52] அக்டோபருக்குப் பின்னர் சோவியத் அதிகாரம் ஸ்தாபிக்கப்பட்டதற்கு வருத்தப்படுகிறது, ஆனால் அந்த மாற்று வெறுமனே விட்டுவிடப்படுகிறது. ஆனால் நியூயோர்க் டைம்ஸுக்கு நன்றாய் தெரியும், ஏனென்றால் 1917 இல், உண்மையில் பார்த்தால், நியூயோர்க் டைம்ஸ், ”குறைகூறத்தக்க வகையில் நீண்டகாலம் அமைதியாக இருந்து விட்டிருந்ததன் பின்னர், கடைசியில் ஒருவழியாக, ரஷ்யா துரிதமாகக் கரைந்து போவதை நிறுத்தவும், அதனை ஒரு தேசமாகப் பராமரிக்கவும், அதன் கலைப்பை தடுத்து நிறுத்தவும், ஒரே வார்த்தையில் சொன்னால், அதனைக் காப்பாற்றவும் ஒன்றுதிரண்டிருந்த சக்திகளின் பிரதிநிதியாக மட்டுமே அவர் இருந்தார்” என்று அறிவித்து கோர்னிலோவை வழிமொழிந்திருந்தது. [53]

நியூ யோர்க் டைம்ஸ் செப்டம்பர் 12, 1917 இல்கோர்னிலோவை ஆதரிக்கிறது

மக்மீக்கன் இன்னும் வெளிப்படையாய் இருக்கிறார். கோர்னிலோவ் விவகாரம் குறித்து அவர் பின்வருமாறு எழுதுகிறார்: “ஒரு கிட்டப்பார்வையான நடவடிக்கையில், கெரென்ஸ்கி போல்ஷிவிக்கின் இராணுவ அமைப்பை மீண்டும் ஆயுதபாணியாக அனுமதித்தார், இதன்மூலம் இரண்டு மாதங்கள் கழித்து அவரை வெளியேற்றுவதற்கு அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களை அவர்களால் பெற்றுக்கொள்ள முடிந்திருந்தது.”[54] இங்கே அர்த்தம் மிக எளிமையாக இருக்கிறது. போல்ஷிவிக்குகளை ஆயுதங்களைப் பெற “அனுமதிக்க” மறுப்பது என்பதன் அர்த்தம், பெட்ரோகிராட்க்கு கோர்னிலோவை “அனுமதிப்பது” என்பதாகும்.

கோர்னிலோவ் தடுத்து நிறுத்தப்பட்டிருக்காவிட்டால், இயல்பாகவே நாம் இன்று 1917 அக்டோபர் புரட்சி குறித்து கற்றுக்கொண்டிருக்க முடியாது. அக்டோபர் புரட்சி இல்லையென்றால், நமது உலகம் முற்றிலும் மாறுபட்டதாக இருந்திருக்கும் என்பது எல்லாரும் அறிந்ததே. 1917 ஆம் ஆண்டு முதலாவது சோசலிச தொழிலாளர் அரசின் அடித்தளத்தை குறித்திருக்காது. பதிலாக இருபதாம் நூற்றாண்டின் முதல் இனப்படுகொலை சர்வாதிகாரத்தின் அடித்தளத்தை, ஸ்பெயின் அல்லது இத்தாலி அல்லது ஜேர்மனியில் அல்ல, 1917 ரஷ்யாவில் குறித்து நின்றிருக்கும்.

1917 ஆகஸ்டின் கோர்னிலோவ் சதி வெற்றி பெற்றிருக்குமாயின், அது பெட்ரோகிராட்டில் இரத்த வெள்ளத்திற்குத் தயாரிப்பு செய்து கொண்டிருந்ததாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த வெறிபிடித்த ஜெனரல்கள், யூத-விரோத நோய்பீடித்தவர்கள் மற்றும் மதவெறியர்களது ஒரு கும்பலை அதிகாரத்துக்குக் கொண்டுவந்திருக்கும். சோசலிஸ்டுகள் அத்தனை பேரையும் சுவர் பார்த்து நிற்கவைத்து கொன்ற பின்னர், இந்த கும்பல் கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியாவெங்கும் கால்பரப்பி, அங்கே காணுமிடமெல்லாம் சோசலிஸ்டுகளை ஒழித்துக்கட்டியிருப்பார்கள். அவர்களின் இந்த செயல்திட்டத்திற்கு ரஷ்ய முதலாளிகள், ஜெனரல்கள் மற்றும் பிரபுக்களின் உற்சாகமான ஆதரவும் கிடைத்திருக்கும், பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் ஆதரவும் சேர்ந்து கிட்டியிருக்கும்.

நியூயோர்க் டைம்ஸ் போன்றவர்களிடம் இருந்து போல்ஷிவிக்குகள் மீதான கண்டனங்களை கேட்கும்போது, அவர்கள் கோர்னிலோவையே தெரிவுசெய்திருந்திருப்பார்கள் என்பதே அவர்கள் உண்மையில் கூறுவதாக இருக்கிறது. 1917 இல் கோர்னிலோவ் தோற்கடிக்கப்பட்டதில் நியூயோர்க் டைம்ஸ் ஆவேசமடைந்தது, நூறு வருடங்களுக்குப் பின்னரும் அது குறித்த கோபம் அவர்களுக்கு இருக்கிறது. பெட்ரோகிராட்டில் இருந்த தொழிலாள வர்கக்த்திற்கும், பூமிக் கோளத்தின் மனிதநாகரிகத்திற்கும் அதிர்ஷ்டவசமான விதத்தில், கோர்னிலோவ் 1917 இல் தடுத்து நிறுத்தப்பட்டார், அவர் தனது வேலைத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு அனுமதிக்கப்படவில்லை.

அமெரிக்காவின் பழைய தென்பகுதி அடிமை உடைமையாளர்களின் ஆட்சி காலத்து நாட்களில், ஒரு அடிமைக்கு வாசிக்கக் கற்றுக் கொடுப்பது என்பது சட்டத்திற்கு எதிரானதாக இருந்தது. அடிமைகள் மத்தியில் அரசியல் நனவு எழுந்துவிட்டால் என்னவாகும் என்று நினைத்துப்பார்த்து அடிமைகளது உரிமையாளர்கள் மிரட்சிகண்டிருந்தனர். அதே வழியில்தான் இன்று, 2017 இல், தொழிலாளர்களையும் இளைஞர்களையும் ரஷ்யப் புரட்சியின் வரலாற்றில் இருந்தும் பாரம்பரியங்களில் இருந்தும் துண்டிப்பதற்கு அத்தனை முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அரசியல் நனவான தொழிலாளர்கள், ஒரு புரட்சிகர மார்க்சிச கட்சியால் ஒழுங்கமைக்கப்பட்டு தத்துவார்த்தரீதியாக வழிநடத்தப்படும்போது, அவர்களால் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதை மனிதகுலத்தின் ஒடுக்கப்பட்ட பரந்த மக்கள் கண்டுவிட்டால் என்னவாகும் என்பது குறித்து ஆளும் வர்க்கங்கள் மிரட்சி கண்டிருக்கின்றன. இதுதான் போல்ஷிவிக்குகளுக்கு எதிராக 2017 ஆம் ஆண்டில் செலுத்தப்படுகின்ற பொய்மைப்படுத்தல்கள் மற்றும் அவதூறுகளது புதிய அலைக்கான முகாந்திரமாக இருக்கிறது.

போல்ஷிவிக் கட்சி ஒரு அரசியல் நனவான வெகுஜன இயக்கத்திற்குத் தலைமைகொடுத்தது. இந்த இயக்கத்தின் தாக்கம், காலம் மற்றும் இடம் கடந்து இணைகாண முடியாததாகும். இதுதான் இதுவரையான உலக வரலாற்றின் மிக சக்திவாய்ந்த மற்றும் முற்போக்கான இயக்கமாக இருந்து வந்திருக்கிறது. சர்வதேசத் தொழிலாள வர்க்கமானது, இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் சவால்களுக்கு முகம்கொடுக்க அது எழுகின்ற வேளையில், அது மேலும் முன்னேறி செல்ல முடியும், முன்னேறி சென்றாக வேண்டும்.

போல்ஷிவிக் கட்சியின் வேலைத்திட்டமானது, ஏகாதிபத்தியப் போருக்கும் மனிதனை மனிதன் சுரண்டும் நிலைக்கும் முற்றுப்புள்ளி வைக்கின்ற ஒரு மிக முன்னேறிய மற்றும் பகுத்தறிவான மட்டத்தில் ஒட்டுமொத்த பூமிக்கோளத்தின் மனித நாகரிகத்தையும் மறுஒழுங்கு செய்வதற்குக் குறைந்த எதனையும் குறிக்கவில்லை. அத்தனை அரசாங்கங்களையும் கீழிறக்குவதும், அத்தனை எல்லைகளையும் திறந்து விடுவதும், அத்தனை போர்களையும் நிறுத்துவதுமே அவர்களின் நோக்கமாக இருந்தது. இந்த வேலைத்திட்டம் ரஷ்யாவில் மட்டுமல்லாது உலகெங்கிலும் வெகுஜன ஆதரவைக் கண்டதென்றால், அதன்காரணம், அது, உலக வரலாற்றின் மிகச் சக்திவாய்ந்த மற்றும் முற்போக்கான சமூக சக்தியான சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் புறநிலை நலன்கள் மற்றும் போராட்டங்களுடன் ஒரு புள்ளியில் சந்தித்தது என்ற காரணத்தால் தான்.

Endnotes:

[1] Sean McMeekin, The Russian Revolution: A New History (New York: Basic Books, 2017), p. xv.

[2] Ibid., p. 12.

[3] Ibid., p. xii

[4] Rex A. Wade, The Russian Revolution 1917 (Cambridge: Cambridge University Press, 2017), p. 97.

[5] S.A. Smith, Red Petrograd (Cambridge: Cambridge University Press, 1983), pp. 9–10.

[6] Leon Trotsky, History of the Russian Revolution (Chicago: Haymarket Books, 2008), p. 26.

[7] Smith, Red Petrograd, p. 29.

[8] Ibid., p. 14.

[9] Ibid., p. 38.

[10] V.I. Lenin, “What Is To Be Done?,” Collected Works, Vol. 5 (Moscow: Progress Publishers, 1960), pp. 384–85.

[11] Trotsky, History of the Russian Revolution, p. 27.

[12] Smith, Red Petrograd, p. 49.

[13] Trotsky, History of the Russian Revolution, p. 28.

[14] Cited in Smith, Red Petrograd, p. 29.

[15] Wade, The Russian Revolution 1917, pp. 117-118.

[16] Trotsky, History of the Russian Revolution, p. 28.

[17] Smith, Red Petrograd, p. 52.

[18] Trotsky, History of the Russian Revolution, p. 110.

[19] Smith, Red Petrograd, p. 57.

[20] Accessed at: wsws.org/en/articles/2008/10/rrev-o21.html

[21] V.I. Lenin, “Speech at Conference of Shop Committees,” Collected Works, Vol. 24 (Moscow: Progress Publishers, 1964), p. 557.

[22] Smith, Red Petrograd, p. 80.

[23] Ibid., pp. 100-101.

[24] Ibid., p. 96.

[25] Ibid.

[26] Ibid.

[27] Ibid.

[28] Ibid., p. 97.

[29] Trotsky, History of the Russian Revolution, p. 304.

[30] Smith, Red Petrograd, p. 95.

[31] Ibid.

[32] Ibid., p. 34.

[33] Ibid., p. 81.

[34] Leon Trotsky, “The Question of Workers’ Control of Production (1931),”

Accessed at: https://www.marxists.org/archive/trotsky/germany/1931/310820.html

[35] Alexander Rabinowitch, The Bolsheviks Come to Power, (Chicago: Haymarket Books, 2004), p. 97.

[36] Ibid., p. 109.

[37] Trotsky, History of the Russian Revolution, p. 506.

[38] А. Литвин, Красный и белый террор 1918–1922, Эксмо, 2004, p. 174. (Cited on Wikipedia at: https://en.wikipedia.org/wiki/White_Terror_(Russia))

[39] Fred Williams, “The Legacy of 1905 and the Strategy of the Russian Revolution,” Why Study the Russian Revolution? Vol. 1 (Oak Park, MI: Mehring Books, 2017), p. 60.

[40] John Ernest Hodgson, “With Denikin's Armies: Being a Description of the Cossak Counter-Revolution in South Russia, 1918-1920,” (London: Temple Bar Publishing Co., 1932), pp. 54–56. (Cited on Wikipedia at: https://en.wikipedia.org/wiki/Anton_Denikin)

[41] Nikolai Markov, for instance, was a figure associated with the Black Hundreds and the far-right Union of the Russian People. He was close to General Nikolai Yudenich, who supported the Kornilov revolt and later was a leader in the White army. In 1928 he became a supporter of the Nazi Party, and he conducted propaganda tours for the Nazis during the 1930s. During the Second World War, the Nazis raised the Russian Protective Corps (Russkii Korpus) in occupied Serbia, formed of 11,000 White émigrés. The unit was commanded by Boris Shteifon, a tsarist general who served in the White army and then later collaborated with the Nazis. Anastasy Vonsyatsky was a White officer who was evacuated from the Crimea along with other participants in the White insurrection under General Pyotr Wrangel. After emigrating to the United States, he became a leader of the Russian Fascist Party.

[42] Rabinowitch, The Bolsheviks Come to Power, p. 109

[43] Trotsky, History of the Russian Revolution, p. 595.

[44] Cited in Rabinowitch, The Bolsheviks Come to Power, p. 132.

[45] Leon Trotsky, My Life (New York: Pathfinder Press, 1970), p. 431.

[46] Trotsky, History of the Russian Revolution, p. 562.

[47] Leon Trotsky, Lessons of October (Oak Park, MI: Mehring Books, 2016) ePub edition, Chapter 6. (ISBN 978-1-893638-63-1).

[48] Trotsky, History of the Russian Revolution, p. 562.

[49] Ibid., p. 673.

[50] Isaac Deutscher, The Prophet Armed: Trotsky, 1879-1921 (New York: Verso Books, 2003), p. 237.

[51] Trotsky, History of the Russian Revolution, p. 672.

[52] John Quiggin, “The February Revolution and Kerensky’s Missed Opportunity,” New York Times, March 6, 2017.

[53] “Why Korniloff Rebelled” (New York Times, September 12, 1917).

[54] Sean McMeekin, “Was Lenin a German Agent?” New York Times, June 19, 2017.

Loading