லெனின், ட்ரொட்ஸ்கி மற்றும் அக்டோபர் புரட்சியின் மார்க்சிசம்

மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இது, உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு தலைவரும் (அமெரிக்க) சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவருமான டேவிட் நோர்த் மார்ச் 16 அன்று ஜேர்மனியில் உள்ள லைப்சிக் பல்கலைக்கழகத்தில் வழங்கிய விரிவுரையின் எழுத்து வடிவமாகும்.

லைப்சிக் புத்தகக் கண்காட்சியில் பங்கெடுப்பதற்கும் இங்கே லைப்சிக் பல்கலைக்கழகத்தில் உரையாற்றுவதற்கும் எனக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். புத்தகக் கண்காட்சியில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பதிப்பக அங்கமான மேஹ்ரிங் புக்ஸ், ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டைக் குறிக்கின்ற விதமான விரிவுரைகள் மற்றும் கட்டுரைகளின் இரண்டு தொகுதி சேகரம் ஒன்றை வைத்திருந்தது. அந்த இரண்டு தொகுதிகளது தலைப்பு ரஷ்யப் புரட்சியை ஏன் கற்க வேண்டும்? என்பதாகும். அவற்றில் உள்ளேயிருக்கும் உள்ளடக்கம் இந்தக் கேள்விக்கு பதிலளிக்கிறது என நான் முழுமையாக நம்புகிறேன்.

சுருக்கமாகச் சொல்வதென்றால், முன்வைக்கப்பட்ட மையமான அம்சங்கள் இதுதான், முதலாவது, ரஷ்யப் புரட்சியானது இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கிய நிகழ்வாகும்; இரண்டாவது, இருபத்தியோராம் நூற்றாண்டில் மனிதகுலம் இப்போது முகம்கொடுக்கின்ற உலகளாவிய நெருக்கடியானது ஒரு முற்போக்கான அடிப்படையில், அதாவது முதலாளித்துவ அமைப்புமுறைக்கு முடிவுகட்டுவதன் மூலமாக, தொழிலாளர்’அதிகாரத்தை நிலைநாட்டுவதன் மூலமாக, மற்றும் உலகப் பொருளாதாரத்தை ஒரு சோசலிச அடிப்படையில் ஜனநாயகமுறையில், சமத்துவமான முறையில், மற்றும் விஞ்ஞானபூர்வமான முறையில் மறுஒழுங்கு செய்வதன் மூலமாக தீர்க்கப்பட வேண்டுமாயின் இந்தப் புரட்சியின் படிப்பினைகள் கற்கப்பட வேண்டும்.

அக்டோபர் புரட்சியானது 1917 இல் ரஷ்யாவில் தொழிலாள வர்க்கத்தினதும் ஒடுக்கப்பட்ட பரந்த மக்களினதும் பாரிய சமூக எழுச்சியின் உச்சக்கட்டமாக இருந்தது. ஒரு அடிப்படையான அர்த்தத்தில் அது தனித்துவமானதாக இருந்தது, இன்றும் இருக்கிறது: ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கினை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்ற ஒரு மார்க்சிசக் கட்சியால் தலைமை கொடுக்கப்பட்டு, தொழிலாள வர்க்கத்தால் நனவுடன் நடத்தப்பட்ட முதல் புரட்சியாக, இன்றுவரையான ஒரே புரட்சியுமாக அது இருக்கிறது.

ரஷ்யப் புரட்சியை ஏன் கற்க வேண்டும்? முதல் தொகுதியில் பிரசுரிக்கப்பட்டுள்ள, சென்ற மார்ச் மாதத்தில், ரஷ்யப் புரட்சி குறித்த எனது முதல் விரிவுரையின் போது நான் கூறியதில் இருந்து மேற்கோளிடுவதற்கு என்னை அனுமதியுங்கள்.

விஞ்ஞானபூர்வ சமூக சிந்தனையின் வளர்ச்சியில் ஒரு இன்றியமையாத அத்தியாயமாக ரஷ்யப் புரட்சி ஒரு கவனமான ஆய்வைக் கோருகிறது. 1917 இல் போல்ஷிவிக்குகளின் வரலாற்று சாதனையானது விஞ்ஞானபூர்வ சடவாத மெய்யியலுக்கும் புரட்சிகர நடைமுறைக்கும் இடையிலான அத்தியாவசியமான உறவை எடுத்துக்காட்டியிருந்ததுடன், அதனை ஒரு உயர்ந்த மட்டத்திற்கு உயர்த்தியுமிருந்தது.

"புரட்சிகர தத்துவம் இல்லாமல் புரட்சிகர இயக்கம் இருக்க முடியாது” என்ற என்ன செய்ய வேண்டும்? என்ற நூலில் லெனின் கூறியிருந்த வசனத்தை போல்ஷிவிக் கட்சியின் பரிணாமவளர்ச்சி நிரூபணம் செய்தது. லெனின் தொடர்ச்சியாக வலியுறுத்தியதைப் போல, செவ்வியல் ஜேர்மன் கருத்துவாதத்தின், பிரதானமாக ஹேகலின் கருத்துவாதத்தின் (அதாவது இயங்கியல் தர்க்கமும், மற்றும் புறநிலை யதார்த்தத்தை அறிந்துகொள்வதில் வரலாற்றுரீதியாக அபிவிருத்தியடைந்த சமூக நடைமுறை வகிக்கின்ற செயலூக்கமான பாத்திரத்தின் அங்கீகரிப்பு) உண்மையான சாதனைகளை உள்வாங்கிக் கொண்டு அதனை விமர்சனரீதியாக மறுமதிப்பீடு செய்திருந்த மெய்யியல் சடவாத்தின் மிக உயர்ந்த வளர்ச்சி பெற்ற வடிவமே மார்க்சிசமாகும்.

வேறு எந்தவொரு புரட்சியிலும் மார்க்சிசத் தத்துவத்திற்கும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர நடைமுறைக்கும் இடையில் இத்தகையதொரு நனவான மற்றும் வெளிப்பட்ட உறவு இருந்தது கிடையாது. இந்த உறவின் தன்மையை இன்னும் துல்லியமாக விளக்கும் பொருட்டு, 2018 இல் நாம் அனுசரிக்கின்ற முக்கியமான வரலாற்று தினங்களை கவனத்தில் கொள்வது அவசியமாகிறது.

இந்த ஆண்டு கார்ல் மார்க்ஸ் பிறந்த 200வது ஆண்டாகும். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை பிரசுரிக்கப்பட்ட 170வது ஆண்டாகவும் இது அமைகிறது. மாபெரும் மெய்யியலாளர்களில், கார்ல் மார்க்ஸ் அளவுக்கு, நமது காலத்திலும் மிக சக்தியுடனும் நேரடியாகவும் பேசுவது வேறெவருமில்லை. அவரது வேலைகள், புரிந்துகொள்ளத்தக்க நவீன மொழி வடிவத்திற்கு “மறுமொழிபெயர்ப்பு” செய்வது அவசியமாயிருக்கவில்லை. 1858 மேயில் லஸ்ஸால் க்கு எழுதிய ஒரு கடிதத்தில் மார்க்ஸ் குறிப்பிட்டார்: "மெய்யியலாளர்களுக்கு கூட அவர்களது வேலைகளுக்கும் ஒரு முறையான வடிவம் இருந்தது. உதாரணத்திற்கு கூறுவதென்றால் ஸ்பினோஸாவிற்கு கூட அவரது அமைப்புமுறையின் உண்மையான உள்ளக கட்டமைப்பு அவரால் நனவுபூர்வமாக முன்வைக்கப்பட்ட வடிவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது”.

ஆனால் மார்க்ஸ் விடயத்தில், இதற்கு நேரெதிராய், மெய்யியலாளரின் முறையின் “உண்மையான உள்ளக கட்டமைப்புக்கும்” அது வெளிப்பாடு கண்ட வடிவத்துக்கும் இடையில் ஒரு குறிப்பிடத்தக்க பொருத்தமிருக்கிறது. ஹேகலின் சட்டத்தின் மெய்யியல் மீதான விமர்சனத்தில் தொடங்கி, மார்க்ஸ், தத்துவார்த்த சிந்தனையை மெய்யியல் கருத்துவாதத்தின் புதிர்ப்படுத்தும் குழப்பல்களில் இருந்து விடுவிக்கப் புறப்பட்டிருந்தார். ரவுல் பெக் இனால் எடுக்கப்பட்ட திரைப்படமான இளம் மார்க்ஸ் இல் ஒரு அருமையான தருணம் வருகிறது, ஏங்கெல்ஸ் முற்றிலும் இணக்கமற்ற அந்த புரட்சிகர பத்திரிகையாளரிடம் கூறுகிறார், ”நீர் தான் எமது காலத்தின் மாபெரும் சடவாத மெய்யியலாளர். எனதருமை மனிதரே, நீர் ஒரு மேதாவி.”

ஹேகலின் சட்டத்தின் மெய்யியல் மீதான மார்க்சின் விமர்சனத்தை ஏங்கெல்ஸ் குறிப்பாக சுட்டிக் கொண்டிருந்தார். 1843 இல் எழுதப்பட்ட இந்த படைப்பில், மார்க்ஸ் ஹேகலின் மெய்யியல் கருத்துவாதத்தின் மையமான பிரச்சினைக்கு கவனத்தை ஈர்க்கிறார்:

சடப்பொருளின் தர்க்கமல்ல, தர்க்கத்தின் சடப்பொருள் தான் மெய்யியல் கூறாகும். தர்க்கம் அரசை நிரூபணம் செய்வதற்காய் சேவை செய்யவில்லை, மாறாக அரசுதான் தர்க்கத்தை நிரூபிப்பதற்காய் சேவைசெய்கிறது.

அதாவது, ஹேகல் அரசு மற்றும் அதன் சட்டங்களை தூய சிந்தனையின் நகர்வில் இருந்து, தர்க்கத்தின் அருவமான வகைகளின் சுய-இயக்கத்தில் இருந்து தருவித்தார். இது சடப்பொருளுக்கும் நனவுக்கும் இடையிலான உண்மையான உறவின் தலைகீழ் வடிவாக, கருத்துவாத மெய்யியலின் களத்தில் அமைந்ததாக இருந்தது. ஹேகலின் அமைப்பை விமர்சனம் செய்வதற்கு, நனவைக் காட்டிலும் சடப்பொருளின் பிரதானத்தை, அதாவது நனவானது ஒரு சட பிரபஞ்சத்தின் நகர்வில் இருந்து தேற்றம் பெறுகிறது பிரதிபலிக்கிறது என்பதை திட்டவட்டம் செய்கின்ற மெய்யியல் சடவாதத்திற்குத் திரும்புவது அவசியமாயிருந்தது. ஹேகலின் கருத்துவாதத்தின் மீதான மார்க்சின் விமர்சனமானது —நாம் சற்றுமுன் குறிப்பிட்ட காட்சியில், ஏங்கெல்ஸ் பாராட்டுவதற்கு பயன்படுத்துகின்ற மிகப் பிரபலமான வாசகம் சொல்கிறவாறாய் “தலைகீழாக உள்ள ஹேகலை நேராக நிறுத்தும்”— 1844 க்கும் 1847 க்கும் இடையில் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸினால் கூட்டாக சாதிக்கப்பட்ட சமூக, வரலாற்று மற்றும் அரசியல் சிந்தனையிலான புரட்சிக்கான தத்துவார்த்த அடித்தளத்தை ஸ்தாபித்தது.

1845 இல் எழுதப்பட்ட ஜேர்மன் கருத்துவாதம்(The German Ideology) நூலில் (ஆயினும் 80 வருடங்களுக்கு அது பிரசுரமாகாமல் இருந்தது), மார்க்சும் ஏங்கெல்சும் தமது சடவாத மெய்யியலை, மறைந்த தங்களது குருவின் அடியொற்றி நடந்த இளம் ஹேகலியர்களது கருத்தியலுடன் பேதப்படுத்திக் காட்டினர்:

சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு இறங்கி வருகின்ற ஜேர்மன் மெய்யியலுக்கு நேரெதிரான விதத்தில், இங்கே பூமியில் இருந்து வானம் நோக்கி மேலே செல்கின்றதான ஒரு விடயமாகும். அதாவது, சதை வடிவமாய் இருக்கின்ற மனிதர்களிடம் வந்தடைவதற்கு மனிதர்கள் என்ன சொல்கிறார்கள், என்ன கற்பனை செய்கிறார்கள், என்ன கருதிக் கொள்கிறார்கள் என்பதில் இருந்தோ, அல்லது மனிதர்கள் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறார்கள், சிந்திக்கப்படுகிறார்கள், கற்பனை செய்யப்படுகிறார்கள், கருதிப்பார்க்கப்படுகிறார்கள் என்பதில் இருந்தோ ஆரம்பிப்பதல்ல; மாறாக, உண்மையான, செயலூக்கமான மனிதர்களிடம் இருந்து, மற்றும் இந்த வாழ்க்கை-நிகழ்ச்சிப்போக்கின் கருத்தியல் ரீதியான எதிர்வினைகளை மற்றும் எதிரொலிப்புகளை விளக்கிக்காட்டும் அவர்களது உண்மையான வாழ்க்கை-நிகழ்ச்சிப்போக்கின் அடிப்படையில் இருந்து ஆரம்பிப்பதாகும்.

இந்த வேலையின் விளைவாக வரலாற்றின் சடவாதக் கருத்தாக்கம் குறித்த விளக்கம், நவீன முதலாளித்துவ அமைப்புமுறையின் இயக்க விதிகள் குறித்த விஞ்ஞானபூர்வ ஆய்வின் மீதான அதன் செயலுறுத்தல், மற்றும் இந்த தத்துவார்த்த அடித்தளத்தின் மீது, சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் நனவான அரசியல் ஒழுங்கமைப்பு, மற்றும் உலக சோசலிசப் புரட்சியின் மூலோபாயம் மற்றும் தந்திரோபாயத்தின் உருவாக்கம் ஆகியவை உண்டாகின. மார்க்ஸ் வரலாறு குறித்த தனது சடவாதக் கருத்தாக்கத்தை 1859 இல் எழுதிய அரசியல் பொருளாதாரத்தின் மீதான ஒரு விமர்சனம் நூலின் முகவுரையில் சுருங்க விவரித்தார்:

மனிதர்கள், அவர்களது வாழ்வின் சமூக உற்பத்தியில், அவர்களது விருப்பத்தினால் ஒதுக்க முடியாத மற்றும் விருப்பத்திற்கு சுயாதீனமான திட்டவட்டமான உறவுகளுக்குள், அவற்றின் பொருளியல் உற்பத்தி சக்திகளது அபிவிருத்தியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு ஏற்ப இருக்கக் கூடிய உற்பத்தி உறவுகளுக்குள், நுழைகிறார்கள். இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தத்தில் தான் சமூகத்தின் பொருளாதாரக் கட்டமைப்பு, உண்மையான அடித்தளம் அடங்கியிருக்கிறது, அதன் மீது தான் ஒரு சட்ட மற்றும் அரசியல் மேற்கட்டுமானம் எழுந்து நிற்கிறது, அதற்கிணங்க சமூக நனவின் குறிப்பிட்ட வடிவங்கள் இருக்கின்றன. பொருளியல் வாழ்வின் உற்பத்தி முறை தான் பொதுவாக சமூக, அரசியல் மற்றும் புத்திஜீவித வாழ்க்கை நிகழ்ச்சிப்போக்கான நிலைமைகளை உருவாக்குகின்றது. மனிதர்களின் நனவு அவர்களின் இருப்பைத் தீர்மானிப்பதில்லை, மாறாக, அவர்களது சமூக இருப்புத்தான் அவர்களது நனவைத் தீர்மானிக்கிறது.

மார்க்ஸ், தனது வாழ்நாள் முழுவதிலும், தனது தத்துவார்த்த வேலையின் சடவாத அடித்தளங்களின் மீது வலியுறுத்தினார். 1867 இல் வெளியான மூலதனம் முதல் தொகுதிக்கு எழுதிய அறிமுகத்தில் மார்க்ஸ் விளக்கினார்:

எனது இயங்கியல் முறை ஹேகலிய முறையில் இருந்து வித்தியாசமானது மட்டுமல்ல, அதற்கு நேரெதிரானதுமாகும். ஹேகலைப் பொறுத்தவரை, மனித மூளையின் வாழும்-நிகழ்சிப்போக்கு, அதாவது அது சிந்திக்கின்ற நிகழ்சிப்போக்கு, இதனை அவர் ‘கருத்து’ என்ற பெயரின் கீழ் ஒரு தனியான கருப்பொருளாகவும் கூட மாற்றி விடுகிறார், அதுவே உண்மையான உலகத்தின் படைப்பாளியாகவும் இருக்கிறது, உண்மையான உலகம் வெறுமனே ’கருத்தின்’ வெளிப்புற, நிகழ்வுப்போக்கான வடிவமாக மட்டுமே இருக்கிறது. எனக்கோ, அதற்கு நேரெதிராய், கருத்தியல் என்பது சடவுலகம் மனித மூளையால் பிரதிபலிக்கப்பட்டு, சிந்தனை வடிவங்களாக மாற்றப்படுவது என்பதற்கு மேலாக எதுவுமில்லை.

மார்க்ஸ் அவரது சடவாத மெய்யியல் ஹேகலிய அல்லது மெய்யியல் கருத்துவாதத்தின் வேறெந்த வகையுடனும் இணக்கம் காணச் செய்யப்படுவதற்கான அத்தனை முயற்சிகளையும் எதிர்த்தார். 1868 இல், லூட்விக் குகெல்மான் என்ற தனது நல்ல நண்பருக்கு எழுதிய ஒரு கடிதத்தில், மார்க்ஸ், மூலதனம் ஒரு ஹேகலிய திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருந்ததாக இளம் பேராசிரியர் ஒய்கன் டூரிங் கூறியதை வெளிப்படையாக மறுத்திருந்தார்.

எனது வெளிக்கொணரல் முறை ஹேகலிய முறை அல்ல, ஏனென்றால் நான் ஒரு சடவாதி, ஹேகல் ஒரு கருத்துவாதி, இது அவருக்கு [டூரிங்] மிக நன்றாய் தெரியும். ஹேகலின் இயங்கியல் அத்தனை இயங்கியலுக்குமான அடிப்படை வடிவமாக இருக்கிறது, ஆனால் அது அதன் புதிர்ப்படுத்தும் வடிவத்தை அகற்றி விடுகின்ற பின்னர் தான்; துல்லியமாக இதுவே எனது வழிமுறையை வேறுபடுத்திக் காட்டுவதாகும்.

முதலாளித்துவ அமைப்புமுறையின் பொருளாதார மற்றும் சமூக முரண்பாடுகள் குறித்த தமது பகுப்பாய்வுகளில் வரலாற்றின் சடவாதக் கருத்தாக்கத்தை மார்க்ஸும் ஏங்கெல்ஸும் பயன்படுத்தியமை, முன்னெப்போதையும் விட, சமகால உலகத்தில் மிகவும் சரியானதாக ஊர்ஜிதம் பெறுவதாக இருக்கிறது. முதலாளித்துவத்தின், குறிப்பாக கடந்த கால் நூற்றாண்டு காலத்திலான, உலகளாவிய விரிவாக்கம், நிரந்தரமான மற்றும் தொடர்ச்சியாக தீவிரமடைந்து செல்கின்றதொரு நெருக்கடியான நிலையை உருவாக்கி விட்டிருக்கிறது. சோவியத் ஒன்றியத்தின் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இருந்த ஸ்ராலினிச ஆட்சிகளின் கலைப்புக்குப் பின்னர் பிரகடனம் செய்யப்பட்ட ஃபுகுயாமாவின் “வரலாற்றின் முடிவு” என்னும் ஆய்வுமுடிவு நிகழ்வுகளால் மறுக்கப்பட்டு விட்டிருக்கிறது என்று சொல்வதும் கூட கிட்டத்தட்ட புளித்துப்போன சொல்வழக்கு போல ஆகி விட்டிருக்கிறது. மார்க்ஸால் அம்பலப்படுத்தப்பட்ட அத்தனை முரண்பாடுகளும் இப்போது முன்கண்டிராத தீவிரத்துடன் தங்களை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றன. செல்வக் குவிப்பானது அசாதாரணமானதொரு சமூக சமத்துவமின்மையின் மட்டத்துடன் கைகோர்த்து நடைபெறுகிறது. உலகின் ஒரு சில டசன் எண்ணிக்கையிலானோர் இந்த கிரகத்தின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் முக்கால்வாசிப் பேரை விடவும் அதிகமான செல்வத்தைக் கட்டுப்படுத்துவதுடன் கையகப்படுத்திவைத்தும் உள்ளனர். முதலாளித்துவ சமூகத்தின் உண்மையான நிலை அதன் அநீதிகளில், மற்றும் வேறெந்த யோசனையுமற்று சொந்த செல்வத்தை பெருக்கிச் செல்வதிலான அதன் இலக்குகளில், மோசமான ஜனரஞ்சக கேலிக்கூத்தையும் மிஞ்சிச் சென்று கொண்டிருக்கிறது. கல்வி, சுகாதாரப் பராமரிப்பு, வீட்டு வசதி மற்றும் ஒரு பாதுகாப்பான முதிர்ந்த வயதுக் காலம் என ஒவ்வொரு அதிமுக்கியமான சமூக வட்டத்திலும், முதலாளித்துவ சமூகம் பின்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது, கடந்த நூற்றாண்டின் மட்டுப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களையும் கூட அது கைதுறந்து கொண்டிருக்கிறது.

உலகின் இன்றைய நிலைமை குறித்து ஆளும் உயரடுக்குகளால் கொடுக்கப்படுகின்ற விவரிப்புகளே தெளிவாகப் பேசுகின்றன. அணு ஆயுத நாடுகளுக்கு இடையிலான ஒரு பிரளயகரமான போரின் சாத்தியம் பரவலாக ஒப்புக்கொள்ளப்படுகிறது.

இருந்தும் கூட, உலகளாவிய நெருக்கடியின் மத்தியிலும், கல்வியுலகின் கவுரவமான பதவிகளைப் பிடித்துக் கொண்டிருக்கும் குட்டி-முதலாளித்துவ போலி இடது அரசியலின் புத்திஜீவிப் பிரதிநிதிகள் மார்க்சிசம் மரணமடைந்து விட்டதாகப் பிரகடனம் செய்கின்றனர். நிறம், பாலினம், இனம், உளவியல், சூழலியல், பால் பிரச்சினைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் ஏராளமான பேராசிரியர்கள் மார்க்சிசம் இன்றைய உலகத்தின் பிரச்சினைகளுக்கு ஒரு வழிகாட்டியை வழங்கமுடியாது என்று திட்டவட்டமாக கூறுகின்றர். மார்க்சிசத்தின் தத்துவார்த்த சுற்றுவரைக்கு வெளியில் தான் பதில்கள் காணப்பட்டாக வேண்டுமாம். சமகால மார்க்சிசத்திற்கு இன்றியமையாத துணைவன் (Critical Companion to Contemporary Marxism) என்ற கண்ணை ஈர்க்கின்ற தலைப்பைத் தாங்கியுள்ள ஒரு தொகுதி பின்வருமாறு சொல்கிறது:

நாம் இனியும், வெளியேற்றங்கள் மற்றும் உடைவுகளைத் தூண்டுகின்ற பல்வேறு பொருள்விளக்கங்களுக்கு இடையிலானதைக் குறிப்பிடுகின்ற, மார்க்சிசத்திற்குள்ளான ஒரு நெருக்கடியை, கையாளவில்லை..... உத்தியோகபூர்வமாக அதனைக் குறிப்பிட்டதாக இருந்த ஸ்தாபனங்கள், கட்சி அல்லது மற்றவை காணாமல் போவதும், மற்றும் கலாச்சார வட்டத்தில் இருந்தும், கூட்டு ஞாபகத்தில் இருந்தும், மற்றும் தனிமனித மனக்காட்சிகளில் இருந்தும் அது அழிக்கப்படுவதுமாய் ஒன்றை விஞ்சி இன்னொன்றாய் அடுத்தடுத்து பின்தொடர, மார்க்சிசம் என்பதன் இருப்பே சம்பந்தப்பட்டதான ஒரு நெருக்கடிக்கு நாம் முகம்கொடுத்திருக்கிறோம்...

பூர்டியு தொடங்கி, ஹாபர்மாஸ் மற்றும் ஃபூக்கோ வழியாக, டெரிடா வரையிலும் நாம் முன்வைக்கின்ற முக்கிய ஆசிரியர்கள் எந்தவகையிலும் மார்க்சிஸ்டுகளாக அடையாளம் காணப்பட முடியாதவர்கள். மற்றவர்களுடன், இத்தகைய ஆளுமைகளும் இல்லாமல் எந்தவொரு மீள்கட்டுமானமும் செய்யமுடியாததாக எமக்குத் தெரிகின்றது. அவர்கள் மார்க்சிசத்திற்குள் உட்கிரகிக்கப்பட முடியாத, ஆனால் நமக்கு மிகவும் விலைமதிப்பில்லாததாக இருக்கக் கூடிய நமது கலாச்சாரத்தின் மற்ற கூறுகளை அவர்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

சமகால மார்க்சிச-விரோதிகளுக்கான ஒரு துணைவன் என்பதே இந்தத் தொகுதிக்கு மிகப் பொருத்தமான தலைப்பாய் இருந்திருக்கும். வெளியீட்டாளர்களும், ஆசிரியர்களும், பங்களிப்பாளர்களும் “மார்க்சிசத்தின் நெருக்கடி”யை அதனை கருத்துவாத, பகுத்தறியாவாத மற்றும் வெளிப்படையான மார்க்சிச-விரோத சிந்தனைகளின் பல்வேறு வடிவங்களுக்குள்ளாக கலைப்பதன் அடிப்படையில் தீர்ப்பதற்கு முனைகின்றனர். இந்த திட்டப்பணியில் தவறான தத்துவார்த்த கருத்தாக்கங்கள் மட்டும் சம்பந்தப்படவில்லை. இந்த மார்க்சிச-விரோத தத்துவார்த்தக் கருத்தாக்கங்களின் பின்னால் அக்டோபர் புரட்சியின் ஒட்டுமொத்த தத்துவார்த்த மற்றும் அரசியல் மரபுக்கு குரோதமான குட்டிமுதலாளித்துவப் பிரிவுகளின் —அதன் மிக வசதியான அடுக்குகள்— நலன்களில் வேரூன்றிய பிற்போக்குத்தனமான அரசியல் நிலைப்பாடுகள் இருந்தன.

உதாரணமாக, சமகால போலி-இடதுகளின் ஒரு முன்னணி கல்வித்துறைப் பிரதிநிதியான அலன் பாடியு, 2011 இல் எழுதினார்:

மார்க்சிசம், தொழிலாளர்’ இயக்கம், வெகுஜன ஜனநாயகம், லெனினிசம், பாட்டாளி வர்க்கக் கட்சி, சோசலிச அரசு ஆகிய அனைத்தும் இருபதாம் நூற்றாண்டின் கண்டுபிடிப்புகள், இனியும் நமக்கு உபயோகமானவையாக இல்லை.

புகழ்பெற்ற போலிஇடது பிரபலமும் அரைகுறை புத்திஜீவியுமான Slavoj Žižek லெனின் 2017: நினைவுகூரல், திரும்பக்கூறல், மற்றும் பண்படுத்தல் என்ற (Lenin 2017: Remembering, Repeating, and Working Through) அவரது சமீபத்திய புத்தகத்தில் கூறுகிறார்:

நாம் முகம்கொடுத்தாக வேண்டும்: இன்று, லெனினும் அவரது மரபியமும், நம்பிக்கையின்மை தரக்கூடிய ஒரு தேதியிட்ட, ஒரு செயலிழந்துவிட்ட ‘நிகழ்களத்துக்கு’ உரியதாக உணரப்படுகின்றனர். புரிந்துகொள்ளத்தக்க விதத்தில் லெனின் சமகால வாழ்க்கைக்கு இப்போது மையமாக இருக்கக் கூடிய பிரச்சினைகள் பலவற்றையும் கண்டுகொள்முடியாதவராக (சூழலியல், விடுதலைபெற்ற பாலியலுக்கான போராட்டங்கள், இன்ன பிற.) இருந்தார் என்பது மட்டுமல்ல, அவரது முரட்டுத்தனமான அரசியல் நடைமுறை இப்போதைய ஜனநாயக உணர்திறன்களுக்கு முற்றிலும் பொருத்தமற்றவற்றையாக இருக்கிறது, அரசால் நடத்தப்படுகின்ற ஒரு மையப்படுத்தப்பட்ட தொழிற்துறை அமைப்பாக புதிய சமூகம் குறித்த அவரது இலட்சியப்பார்வை வெறுமனே பொருத்தமற்றவையாக இருக்கிறது, இன்னும் பலவும்?

மார்க்சிசத்தின் இந்த விமர்சகர்களில் எவரொருவரும் எந்த நம்பகமான தத்துவார்த்த மற்றும் அரசியல் மாற்றினை வழங்குவதாக இல்லை. மார்க்சிசமும் இருபதாம் நூற்றாண்டின் மற்ற “கண்டுபிடிப்பு”களும் “நமக்கு இனியும் உபயோகமானவையாக இல்லை” என்று பிரகடனம் செய்த அதே திருவாளர் பாடியு இரண்டு வருடங்களுக்குப் பின்னர் எழுதினார்: “நமது இப்போதைய சூழ்நிலைகளை சிந்திப்பதற்கும் மாற்றுவதற்கும் இயக்க செயல்பாட்டாளர்கள் பயன்படுத்த முயலுகின்ற அரசியல் செயல்வகைகளில் பெரும்பாலானவை, இப்போதுள்ள வடிவத்தில் பெருமளவுக்கு பிரயோசனமற்றவையாக இருக்கின்றன.” பொருத்தமான வகையில் அந்தக் கட்டுரையின் தலைப்பு “நமது சமகால கையாலாகாத்தனம்” என்பதாக உள்ளது.

சமகால போலிஇடதுகளின் புத்திஜீவித்தன திவால்நிலையை விவாதிக்கையில், இன்னுமொரு ஆண்டுதினத்திற்கு கவனம் ஈர்ப்பதை என்னால் தவிர்க்க இயலவில்லை. இந்த ஆண்டு உலக அளவில் பாரிய சமூக எழுச்சியை கண்டதொரு ஆண்டான 1968 நிகழ்வுகளின் —வியட்நாமில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராட்டம் மற்றும் இந்த நவ-காலனித்துவ போருக்கு எதிராக உலகெங்கிலும் நடந்த பாரிய மாணவர் ஆர்ப்பாட்டங்கள் முதலாக, பிரான்சில் முதலாளித்துவத்தின் உயிர்வாழ்வையே அச்சுறுத்திய 1968 மே-ஜூன் நிகழ்வுகள், மற்றும் செக்கோஸ்லாவக்கியாவில் ஸ்ராலினிச-எதிர்ப்பு பிராக் வசந்தம் வரையில்— ஐம்பதாவது ஆண்டாகவும் இருக்கிறது.

அந்த முக்கியமான ஆண்டில், அரசியல்-தீவிரப்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் இடது புத்திஜீவித் தட்டின் பரந்த பிரிவுகள் மீது செல்வாக்கு செலுத்திய தத்துவார்த்தப் படைப்புகள் என்னவாக இருந்தன? மார்க்சிசம் “எல்லோர் மனதிலும்” இருந்தது. ஆனால் அந்த “மார்க்சிசமானது”, அதன் தத்துவார்த்த அடித்தளங்களிலும் அரசியல் நோக்குநிலையிலும், போல்ஷிவிக் கட்சியின் நடைமுறைக்கான அடிப்படையை உருவாக்கிய மார்க்சிசத்தில் இருந்து ஆழமாய் வேறுபட்டதாக இருந்தது. 1968 தலைமுறை மீது செல்வாக்கு செலுத்தியது மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் பள்ளியாக இல்லை, மாறாக மக்ஸ் ஹோகெய்மர், தியோடோர் அடோர்னோ, வால்டர் பெஞ்சமின், வில்ஹெல்ம் ரைய்ச், மற்றும் அனைவரிலும் மிகப் பிரபலமாயிருந்த, ஹெர்பேர்ட் மார்க்கூஸ ஃபிராங்பேர்ட் பள்ளியாக இருந்தது.

ஃபிராங்க்பேர்ட் பள்ளியின் இரண்டு குணாம்சங்களை வலியுறுத்திக் கூறியாக வேண்டும்: முதலாவதாய், தொழிலாள வர்க்கத்துக்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான அதன் போராட்ட அபிவிருத்திக்கும் அது காட்டுகின்ற அலட்சியம், மற்றும் இன்னும் வெளிப்பட்ட குரோதமும் கூட. முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் தீர்மானகரமான புரட்சிகரப் பாத்திரம் குறித்த செவ்வியல் மார்க்சிசக் கருத்தாக்கத்தை நிராகரித்தமை ஃபிராங்பர்ட் பள்ளியின் வரலாற்று அவநம்பிக்கை மற்றும் ஐயுறவின் அத்தியாவசியமான அம்சமாக இருந்தது. இந்த அவநம்பிக்கையானது 1918க்கும் 1933க்கும் இடையில் ஜேர்மன் தொழிலாள வர்க்கம் பெற்ற தோல்விகளுக்கான ஒரு விரக்தியான எதிர்வினையாக அரசியல்ரீதியாக விளக்கப்பட முடியும். ஹோகெய்மர் மற்றும் மார்க்கூஸ போன்ற புத்திஜீவிகளுக்கு, இந்தத் தோல்விகள் தொழிலாள வர்க்க அரசியல் கட்சிகளான அதாவது, சமூக ஜனநாயக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தவறுகள் மற்றும் காட்டிக்கொடுப்புகளின் விளைபொருளாக விளக்கப்படக் கூடாது, மாறாக தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரமற்ற தன்மைக்கான எடுத்துக்காட்டாக விளக்கப்பட வேண்டும் என்றனர்.

1927 இலேயே, “ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தின் கையாலாகாத்தனம்” என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையில் மக்ஸ் ஹோகெய்மர் எழுதினார்: “முதலாளித்துவ உற்பத்தி நிகழ்சிப்போக்கானது.... சோசலிசத்திலான ஆர்வத்திற்கும் அதன் அமுலாக்கத்திற்குத் தேவையான மனிதப் பண்புகளுக்கும் இடையில் ஒரு ஆப்பை செருகியிருக்கிறது.”

ஃபிராங்பேர்ட் பள்ளியின் அரசியல் அவநம்பிக்கையானது 1933 பெருந்துன்பத்தினாலும் நாஜிசம் மற்றும் இரண்டாம் உலகப் போரின் பயங்கரங்களாலும் தீவிரப்பட்டது. பிராங்க்பேர்ட் பள்ளி கல்வியாளர்களது மார்க்சிசத்தில் எஞ்சியிருந்த கொஞ்சம், அவர்கள் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஏகாதிபத்திய ஒழுங்குக்கு, குறிப்பாக ஹோகெய்மர் மற்றும் அடோர்னோ விடயத்தில், கொன்ராட் அடிநோவர் (“Der Alte”), லூட்விக் ஏர்ஹார்ட் (“Der Dicke”), இன்னும் ஜியோர்க் கூர்ட் கிஸ்ஸிங்கர் (“Der Nazi”) ஆகியோரின் அரவணைப்பின் கீழ் முதலாளித்துவ ஜனநாயக அரசு மீள்கட்டுமானம் செய்யப்படுவதற்கு ஏற்ப, தங்களை தகவமைத்துக்கொள்வதை மூடிமறைத்துக்கொள்வதற்கு சற்று அதிகமாக மட்டுமே இருந்தது.

ஹெர்பேர்ட் மார்க்கூஸ முதலாளித்துவ சமூகத்தை நோக்கிய ஒரு கூடுதல் விமர்சனபூர்வமான மற்றும் தீவிரப்பட்ட அணுகுமுறையை பராமரிப்பதற்கு முயற்சி செய்தார். ஆயினும் ஒரு புரட்சிகர சக்தியாக தொழிலாள வர்க்கத்தை அவர் நிராகரித்தமை பின்வருமாறு குறைவின்றி வெளிப்படையானதாக இருந்தது:

இப்போது தொழிலாள வர்க்கத்தின் பிரச்சினைக்கு வருவோம். நான் கூறினேன், இன்றும் கூறுகிறேன், அமெரிக்கத் தொழிலாள வர்க்கம் ஒரு புரட்சிகர வர்க்கம் கிடையாது....இப்போதைய நிலைமையில், அமெரிக்கத் தொழிலாள வர்க்கம் ஒரு புரட்சிகர வர்க்கமாக இல்லை என்ற உண்மையைக் கொண்டு பார்க்கின்றபோது, அரசியல் நனவானது, தீவிரப்பட்ட அரசியல் நனவானது, மாணவர்கள், கறுப்பின மற்றும் மாநிற சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் இன்னபிற சிறுபான்மை ஒருங்கிணைப்பில்லாத குழுக்களில்தான் குவிந்திருக்கிறது என்று நான் கூறினேன்.

நான் ஏற்கனவே கூறியிருப்பதைப் போல, மார்க்சிசத்திற்கு எதிராக அபிவிருத்தி செய்யப்பட்ட தத்துவார்த்தக் கருத்தாக்கங்கள், இறுதி ஆய்வில், குறிப்பிட்ட சமூக மற்றும் அரசியல் நலன்களில் வேரூன்றியிருக்கின்றன. ஃபிராங்பேர்ட் பள்ளியின் தத்துவாசிரியர்கள் ஜேர்மன் குட்டி முதலாளித்துவத்தின் பிரிவுகளது கண்ணோட்டத்தை வெளிப்படுத்தினர். மேலும், ஃபிராங்பேர்ட் பள்ளியின் முக்கிய பிரதிநிதிகள், சோவியத் ஒன்றியத்திலான ஸ்ராலினிச ஆட்சிக்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்டத்திற்கு செயலூக்கமான அரசியல் ஆதரவு கூட வேண்டாம், ஆர்வமும் கூட காட்டவில்லை. இது, ஃபிராங்பேர்ட் பள்ளியின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்து கொள்வதில் மிகப்பெரும் முக்கியத்துவம் கொண்ட ஒரு அரசியல் உண்மையாகும் என்பதில் சந்தேகமில்லை. ஆயினும், அதன் தத்துவார்த்த-மெய்யியல் வேர்களை பரிசீலனை செய்யாமல் அலட்சியம் செய்வது தவறாகி விடும். பிராங்பேர்ட் பள்ளியில் வெளிப்பாடு கண்ட தத்துவார்த்த செல்வாக்குகளின் மீதான ஒரு ஆய்வானது இந்த புத்திஜீவித போக்கையும் அதன் பல வாரிசுகளையும் புரிந்துகொள்வதற்கு மட்டுமல்ல, போல்ஷிவிசம் மற்றும் அக்டோபர் புரட்சியின் மார்க்சிசத்தில் இருந்து அதன் அடிப்படையான வித்தியாசத்தை அடையாளம் கண்டுகொள்வதற்கும் கூட அவசியமானதாகும்.

ஜேர்மன் தொழிலாளர் இயக்கத்தின் அபிவிருத்தியில் மார்க்சிசம் ஒரு செறிவான பாத்திரம் வகித்தது. ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தின் வெகுஜனக் கட்சியாக சமூக ஜனநாயகக் கட்சியை (SPD) உருவாவதற்கான தத்துவார்த்த அடித்தளத்தை அது அளித்தது. தொழிலாள வர்க்கத்தின் முன்னேறிய பிரிவுகள் மார்க்சிசத்தின் அடிப்படையில் கல்வியூட்டப்பட்டன என்பதிலும் குட்டி-முதலாளித்துவ புத்திஜீவித்தட்டின் பரந்த தட்டுகளின் மீதும் மார்க்சிசம் செல்வாக்கு செலுத்தியது என்பதிலும் எந்த சந்தேகமுமில்லை. ஆனால் குட்டி-முதலாளித்துவ புத்திஜீவித் தட்டுக்கும் மார்க்சிசத்துக்குமான உறவு பெரும்பாலும் அரைமனதானதாகவும் இன்னும் குரோதமானதாகவும் கூட இருந்தது என்பதை வலியுறுத்திக் கூறியாக வேண்டும். இது ஒரு சிக்கலான விடயம், நீண்ட வரலாற்று ஆய்வுக்கான பொருளாக இருந்து வந்திருக்கிறது. இந்தப் பிரச்சினை குறித்த ஒரு சுருக்கமான பார்வையே இந்த விரிவுரையின் சுற்றுவரைக்குள் சாத்தியமானதாகும்.

1890களில் சமூக ஜனநாயகக் கட்சி, சட்டவிரோதமாயிருந்த நிலைமையில் இருந்து தொழிலாள வர்க்கத்துக்குள்ளாக கிட்டத்தட்ட சவாலற்ற ஆளுமையாக எழுந்து வந்த அந்த புள்ளியில்தான் துல்லியமாக, குட்டி-முதலாளித்துவ புத்திஜீவித் தட்டின் பிரிவுகள் அந்த இயக்கத்தின் மார்க்சிச அடித்தளங்களுடன் அதிருப்தி பெருகிச் சென்றதை வெளிப்படுத்தின என்பது திகைப்பூட்டுகின்ற வரலாற்று ஒருங்கொத்த நிகழ்வாகும். குறிப்பாக, மார்க்சிசத்தின் மெய்யியல் சடவாதம், நனவை விடவும் சடப்பொருளின் பிரதான நிலை, சமூக அபிவிருத்தியின் விதிகளால் ஆளப்படும் தன்மை, மற்றும் பொருளாதார சக்திகளின் மேலாதிக்கமான செல்வாக்கு ஆகியவற்றின் மீதான அதன் வலியுறுத்தல் ஆகியவை SPD இனை சுற்றியிருந்த குட்டி-முதலாளித்துவ சுற்றுவட்டத்தின் பிரிவுகளுக்குள்ளாக அதிகரித்த ஆட்சேபத்தை எழுப்பியது. மார்க்சிசம், சமூக நிகழ்சிப்போக்குகளின் விதிகளால் ஆளப்படும் தன்மை மீதும், அகநிலை முன்முயற்சியை விடவும் புறநிலையின் அவசியத்தின் மீதும், நனவற்ற இன்னும் பகுத்தறிவற்ற தூண்டுதல்களையும் காட்டிலும் நனவான நோக்கத்தின் மீதும் அளவுக்கதிகமான முக்கியத்துவம் அளித்ததாக அவர்கள் வாதிட்டனர். மெய்யியல் சடவாதத்தில் வேரூன்றியதாக இருந்த மார்க்சிச நிர்ணயவாதமானது, சுதந்திர விருப்பம் மற்றும் தனிமனித முன்முயற்சியின் மீதான தனிமனித வெளிப்பாட்டை ஊக்கம்குன்றச் செய்தது என அவர்கள் வாதிட்டனர்.

மார்க்சிச சடவாதம், சமூக-பொருளாதார சக்திகள் மற்றும் நிகழ்ச்சிப்போக்குகளின் பிரதானத்தின் மீது வலியுறுத்தியதற்கும், விஞ்ஞான அறிவையும் புறநிலை உண்மையையும் உள்ளுணர்வுக்கும் அகநிலை விருப்பத்திற்கும் மேலாக உயர்த்தி அமர்த்தியதற்கும் எதிராக, அரசியல் மற்றும் புத்திஜீவிதப் போக்குகள் முன்மாதிரி உத்வேகத்தை மார்க்சிடம் இருந்து அல்லாமல், ஷோப்பென்ஹவர் மற்றும் நீட்ஷ இடம் இருந்து பெற்றன. அப்படியான ஒரு போக்கு பிரபல அராஜகவாத அறிஞர் குஸ்டாவ் லான்டவர் ஆல் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டது. அவர் மார்க்சிச சடவாதத்தின் ஒரு கடுமையான எதிரியாக தன்னை அறிவித்துக் கொண்டார்:

விடயங்களில் வரவிருக்கும் நிலையை நாம் சாத்தியமாக அல்லது இன்னும் அவசியமாகக் கூட உணர்கிறோம் ஏனென்றால் நாம் அதை நேசிக்கிறோம் விரும்புகிறோம். மனிதன்தான் அத்தனை விடயங்களின் அளவீடு, கருத்தாக்கங்கள் எல்லாம் உணரப்படுகின்ற பொருட்களின் கண்ணாடியாக இருப்பதான புறநிலை அறிவு எதுவும் கிடையாது.... சோசலிஸ்டுகள் முதலில் தங்கள் விருப்பத்தின் கட்டுப்பாடற்ற வெளிப்பாட்டைக் கொடுப்பார்கள், பின் அந்த விடயம் அடையவும் முடியக் கூடியதுதான் என்று அவர்கள் ஏன் நம்புகிறார்கள் என்பதைத் தெளிவாக்குவார்கள் என்றால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மாறாக இயற்கையில் அடித்தளம் கொண்ட, ஒரு திட்டவட்டமான பாதையின் நிபந்தனையற்ற அவசியத்தை பிரகடனம் செய்வதென்பது... எல்லாமே தானாக அபிவிருத்தி காணும் என்ற மூடநம்பிக்கையைக் கொண்டு.... இயக்கத்தின் உந்துசக்தியை முடக்குவதாக இருக்கும்.....

மார்க்சிசம் ... நமது சகாப்தத்தின் பிளேக் தொற்றாக இருக்கிறது, சோசலிச இயக்கத்தின் சாபமாக இருக்கிறது என்பதை அதன் முகத்தைப் பார்த்து கூறப்பட்டாக வேண்டும்.

லான்டவர் வெளிப்படுத்திய இந்தக் கண்ணோட்டங்கள், முதலாளித்துவ மற்றும் குட்டி-முதலாளித்துவ புத்திஜீவித் தட்டின் கணிசமான பிரிவுகள் நனவின்மையை ஆராய்வதில் அதிகமாக ஈர்க்கப்பட்டுக் கொண்டிருந்த ஒரு புத்திஜீவித சூழலின் உள்ளடக்கத்தில் எழுந்ததாகும். விஞ்ஞானம் அசாதாரணமான முன்னேற்றங்களை செய்துகொண்டிருந்த போதிலும் கூட, இந்த அடுக்குகள், யதார்த்தத்தையும் இறுதி உண்மையையும் புரிந்துகொள்வதற்கான ஒரு திறவுகோல் அகநிலை அனுபவத்தை ஆய்வுசெய்வதில் இருந்ததான உறுதியான நம்பிக்கையால் பீடிக்கப்பட்டிருந்தன.

இது எந்த வகையிலும் ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியாவில் மட்டும் வெளிப்பாடு கண்டதான ஒரு போக்காக இல்லை. அது ரஷ்யா உள்ளிட ஐரோப்பா முழுமையிலும் பதிலிறுப்பைக் கண்ட ஒரு பரந்த புத்திஜீவித நிகழ்வுப்போக்காக இருந்தது. இந்தத் தாக்குதல் மெய்யியல் சடவாதத்தின் மீது இழைத்த பாதிப்புகள் மிக நீண்டகால விளைவுகளை கொண்டனவாக இருந்தன. அது பின்வரும் கேள்விகளை எழுப்பியது: சோசலிசக் கட்சிகளின் வேலைத்திட்டம், மூலோபாயம் மற்றும் தந்திரோபாயமும், மற்றும் தொழிலாள வர்க்கத்தின் நடைமுறையும், நனவிலிருந்து சுயாதீனமாக நிலவக் கூடிய ஒரு புறநிலை யதார்த்தத்தின் மீதான ஒரு விஞ்ஞானபூர்வ ஆய்வை அடிப்படையாகக் கொண்டு அமைய வேண்டுமா, அல்லது உள்ளுணர்வு மற்றும் அகநிலை விருப்பத்தின் அடிப்படையில் அமைய வேண்டுமா? தொழிலாள வர்க்கத்தின் இலக்குகளும் நடவடிக்கைகளும் சமூக அபிவிருத்தியின் புறநிலை விதிகளைப் புரிந்து கொள்வதன் அடிப்படையில் அமைக்கப்பட வேண்டுமா, அல்லது ஜோர்ஜ் சோரெல் மற்றும் பிறர் வலியுறுத்தியதைப் போல, உளவியல்ரீதியாக ஆத்திரமூட்டக் கூடிய கட்டுக்கதைகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட வேண்டுமா?

ரஷ்ய சமூக ஜனநாயகக் கட்சியின் போல்ஷிவிக் கன்னையில், அலெக்சாண்டர் போக்டனோவ் மற்றும் அனட்டோல் லுனாசார்ஸ்கி ஆகிய இரண்டு முக்கியமான ஆளுமைகள், கொஞ்சமாயில்லை என்று சொல்லக் கூடிய மட்டத்திற்கு நீட்ஷ இன் பாதிப்பினால், சோசலிசத்துக்கான போராட்டத்தில் இன்னும் அதிகமான அளவில் உணர்ச்சிகர உள்ளடக்கம் கொண்டுவரப்படுகிறதான விதத்தில் மார்க்சிசமானது திருத்தப்பட வேண்டும் என்று வாதிட்டனர். லுனாசார்ஸ்கி ஒரு புதிய சோசலிச மதம் ஒன்றை உருவாக்கினால் புரட்சிகர இயக்கத்தை நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொண்டு காப்பாற்றி வரலாம், அதன்மூலமாக 1905 புரட்சியின் தோல்வியைத் தொடர்ந்த அவநம்பிக்கையையும் விரக்தியையும் எதிர்கொள்ள முடியும் என்றும் கூட ஆலோசனை வைத்தார். லுனாசார்ஸ்கி உரத்துக் கூறினார்: "மனிதகுலத்தின் ஆற்றல்வளத்தை, நமது ஆற்றல்வளத்தைப் போற்றுவோம், அதனைப் போற்றுதற்குரிய ஒரு ஒளிவட்டத்தால் பிரதிநிதித்துவம் செய்வோம், அதனை இன்னும் வலிமையுடன் நேசிப்பதற்காக.” ரஷ்ய சோசலிஸ்டுகள் மீது நீட்ஷ கொண்டிருந்த தாக்கத்தின் ஒரு ஆய்வில் ஒரு வரலாற்றாசிரியர் குறிப்பிட்டதைப் போல, லுனாசார்ஸ்கியின் “போதனையானது மக்களுக்குப் பிடிக்காத ஆனால் அவசியமானதொரு வேலைக்கு ஆதரவைக் கொண்டுவருவதற்காக படைத்தலைவர்கள் மேற்கொள்ளும் செயற்கை ஊக்குவிப்பு மற்றும் போலியான உற்சாகமூட்டல் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது: இப்போதைய சமூக நெருக்கடியில் மதத்தால் உருவாக்கப்படுகின்ற உற்சாகம் மட்டுமே சோசலிசத்தின் வெற்றிக்கு அவசியமான வலிமையையும் ஊக்கத்தையும் தர முடியும் என்ற உறுதியான நம்பிக்கையை லுனாசார்ஸ்கி அடிக்கடி வெளிப்படுத்துகிறார்.”[1]

லுனாசார்ஸ்கியின் மதப் பரவசத்தைக் கண்டு நகைத்த லெனின் அவரை “ஆசிர்வதிக்கப்பட்ட அனட்டோல்” என்று குறிப்பிடத் தொடங்கினார். ஆனால் தனது பிழைபுரிந்து கொண்டிருந்த தோழருக்கு ஒரு நகைப்பூட்டக் கூடிய புனைப்பெயரை கொடுத்ததோடு லெனின் தன்னை மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. சோசலிச இயக்கத்துக்குள்ளாக அகநிலை மற்றும் பகுத்தறியா போக்குகள் அபிவிருத்தி காண்பதன் அபாயகரமான அரசியல் தாக்கங்களை உணர்ந்து கொண்ட லெனின், சடவாதமும் அனுபவவாத-விமர்சனமும் என்ற தனது மகத்தான தத்துவார்த்த படைப்பை எழுதினார். மெய்யியல் சடவாதத்தை சளைக்காது பாதுகாத்து அவர் எழுதிய இந்த படைப்பைப் போல லெனினின் வேறெந்தப் படைப்பும் அத்தகையதொரு ஆவேசத்தைத் தூண்டவில்லை. என்ன செய்ய வேண்டும்? கூட அவ்வளவு கடுமையாக கண்டனம் செய்யப்படவில்லை. சடவாதமும் அனுபவவாத-விமர்சனமும், ‘கொச்சையான சடவாதத்தின்’ ஒரு படைப்பு; அது அனுமதிக்கமுடியாத விதத்தில் சடப்பொருளுக்கும் நனவுக்குமான உறவை எளிமைப்படுத்துகிறது; நனவு என்பது வெறுமனே சடவாத உலகின் ஒரு பிரதிபலிப்பு என்றும் மனிதனின் சிந்தனையும் நடைமுறையும் சடவாதத் தூண்டல்களுக்கான ஒரு நிரலாக்கப்பட்ட பதிலிறுப்புக்கு மேலான ஏதொன்றுமில்லை என்றுமான ஒரு “பண்படாத” கருத்தாக்கத்தை ஊக்குவிக்கிறது என்றெல்லாம் கூறப்படுகிறது. இன்னும், சடவாதமும் அனுபவவாத-விமர்சனமும் எழுதும்போது, லெனின் ஹேகலைப் படித்திருக்கவில்லை என்றும் இயங்கியல் அவருக்குப் பரிச்சயமாகி இருக்கவில்லை என்றும் கூட சொல்லப்படுவதாக இருக்கிறது.

சடவாதமும் அனுபவவாத-விமர்சனமும் குறித்த இத்தகைய விவரிப்புகள் அவரது குறிப்புக்களை மட்டுமல்லாது லெனினின் புத்திஜீவித சுயசரிதத்தையும் ஒழுக்கமற்று திரிக்கின்றன. சடவாதமும் அனுபவவாத-விமர்சனமும் நூலில் லெனின் சடவாதத்திற்கும் இயங்கியல் தர்க்கத்திற்கும் இடையிலான உறவை மிக அற்புதமாக விளங்கப்படுத்தியிருக்கின்ற ஏராளமான பத்திகளை ஒருவர் காண முடியும். ஆயினும் அவர் நனவைக் காட்டிலும் சடப்பொருளின் பிரதானத்தினை, சிந்தனையில் இருந்து சுயாதீனப்பட்ட ஒரு சடவாத உலகின் புறநிலை இருப்பின் பிரதானத்தினை நிச்சயமாக வலியுறுத்தினார் தான். ஹேகலின் தர்க்கத்தின் மீது லெனின் கொண்டிருந்த ஆழமான மரியாதை ஹேகலது கருத்துவாத அடித்தளங்கள் மீதான விமர்சனத்தால் எப்போதும் புடம்போடப்பட்டிருந்ததாகும். லெனின், தனது வாழ்வின் இறுதி வரையிலும், கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெடரிக் ஏங்கெல்ஸின் தத்துவார்த்த வழிமுறையையும் பாரம்பரியத்தையும் பாதுகாப்பதற்கு திடமான உறுதிபூண்டவராய் திகழ்ந்தார். நனவில் இருந்து சுயாதீனமாக இருக்கின்ற புறநிலை உலகை அங்கீகரிப்பதே ஒரு சடவாத அறிவுஆய்வியலின் (epistemology) அத்தியாவசிய அடிப்படையை உருவாக்கியது. இந்த சடவாத அறிவுஆய்வியல் தான், தொழிலாள வர்க்கத்தின் நடைமுறைக்கு அடித்தளமாகக் கொள்வதற்குரிய விஞ்ஞானபூர்வமாக வேரூன்றிய ஒரு வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கை உருவாக்குவதற்கான தத்துவார்த்த அடித்தளமாக இருந்தது. சடவாதமும் அனுபவவாத-விமர்சனமும் இல் ஒரு முக்கியமான பத்தியில் லெனின் எழுதினார்:

பொருளாதாரப் பரிணமிப்பின் (சமூக வாழ்வின் பரிணாம வளர்ச்சி) இந்த புறநிலை தர்க்கத்தை, அதன் பொதுவான மற்றும் அடிப்படையான அம்சங்களுடன், புரிந்து கொள்வது மனிதகுலத்தின் மிக உயர்ந்த பணியாக இருக்கிறது; அப்போதுதான் அதற்குத் தக்கபடி ஒருவரது சமூக நனவையும் மற்றும் அத்தனை முதலாளித்துவ நாடுகளது முன்னேறிய வர்க்கங்களது நனவையும் முடிந்த அளவு திட்டவட்டமான, தெளிவான மற்றும் விமர்சனபூர்வமான ஒரு வகையில் தகவமைத்துக் கொள்ள முடியும்.

தொழிலாள வர்க்கம் வரலாற்று மற்றும் சமூக அபிவிருத்தியின் விதிகளைப் புரிந்துகொண்டாக வேண்டும், அத்துடன் முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு புரட்சிகரப் போராட்டத்தை நடத்துவதற்கும் உலகத்தை மாற்றுவதற்கும் புறநிலை அபிவிருத்திகளை சரியாக பகுப்பாய்வு செய்ய அதனால் இயல வேண்டும் என்பதே இதன் பொருளாகும். இந்த அடிப்படையில் மகத்தான ரஷ்ய மார்க்சிஸ்டுகள் —எல்லோரையும் விட லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி— 1917 இல் தொழிலாள வர்க்கத்தை அதிகாரத்திற்கு தயாரிப்பு செய்தனர், இட்டுச் சென்றனர்.

சடவாதத்திற்கு லெனின் கொண்டிருந்த உறுதிப்பாடு வெறுமனே மேலோட்டமான புத்திஜீவித்தன தன்மை கொண்டதல்ல. சடவாதத்தை பாதுகாத்தமையானது அரசியல் அபிவிருத்திகள் குறித்த ஒரு சரியான மதிப்பீட்டை உருவாக்குவதற்கும், தொழிலாள வர்க்கத்தின் கடமைகளை துல்லியமாக வரையறை செய்வதற்கும், மற்றும் ஒரு சரியான அரசியல் மற்றும் நடைமுறை நோக்குநிலையை வழங்குவதற்குமான போராட்டத்துடன் பிரிக்கவியலாது பிணைந்திருந்தது. மெய்யியல் சடவாதத்திற்கும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நோக்குநிலைக்கும் இடையிலான அத்தியாவசிய பிணைப்பானது லெனினால் பலமுறை வலியுறுத்தப்பட்டது. “மார்க்சிசத்தின் மூன்று மூலங்களும் மூன்று பாகப்பகுதிகளும்” (“The Three Sources and Three Component Parts of Marxism”) என்ற அவரது 1913 கட்டுரையில், லெனின் எழுதினார்:

மார்க்சிசத்தின் மெய்யியல், சடவாதமாகும். ஐரோப்பாவின் நவீன வரலாறு முழுமையிலும், குறிப்பாக பிரான்சில் அனைத்து வகையான மத்தியகால குப்பைகளுக்கும் எதிரான, ஸ்தாபனங்கள் மற்றும் சிந்தனைகளில் நிலவிய நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான ஒரு தீர்மானகரமான போராட்டம் நடந்த பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில், சடவாதம் மட்டுமே, சீர்மையான, இயற்கை விஞ்ஞானத்தின் அத்தனை கற்றுக்கொடுப்புகளுக்கும் உண்மையான, அத்துடன் மூடநம்பிக்கைகள், மந்திரங்கள் மற்றும் இதுபோன்றவற்றுக்கு குரோதமான ஒரேயொரு மெய்யியலாக நிரூபணமாகியிருக்கிறது. ஆகவே தான், ஜனநாயகத்தின் எதிரிகள், எப்போதும் தங்கள் அத்தனை முயற்சிகளையும் சடவாதத்தை “மறுப்பதன்” மீது, பலவீனப்படுத்துவதன் மீது, அதன் மீது அவதூறு செலுத்துவதின் மீது செலுத்தி வந்திருக்கின்றனர், அத்துடன் எப்போதும் ஏதோவொரு வழியில் மதத்தை பாதுகாப்பதற்கு அல்லது அதனை ஆதரிப்பதற்கு நிகரான விதத்தில், மெய்யியல் கருத்துவாதத்தின் பல்வேறு வடிவங்களுக்கு வக்காலத்து செய்து வந்திருக்கிறார்கள்.

1917க்கு முந்தைய ஆண்டுகளில் லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி எழுதியவற்றை ஒரு ஆய்வு செய்தால் அரசியல் முன்னோக்கு மற்றும் பகுப்பாய்வு பிரச்சினைகளில் ஒரு தீவிரமான மற்றும் சளைக்காத கவனக்குவிப்பு இருந்ததைக் காணலாம். வழிமுறைரீதியாக இயங்கியல் மற்றும் வரலாற்று சடவாதத்தில் வேரூன்றியதாக இருந்த லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் மார்க்சிசம், எல்லாவற்றையும் விட, உலக முதலாளித்துவத்தின் அதிகரித்துச் செல்லும் நெருக்கடியின் இயங்குநிலையையும் அந்த நெருக்கடி ரஷ்யாவுக்குள்ளாக ஏற்படுத்தக் கூடிய தாக்கங்களையும் புரிந்துகொள்வதைக் கொண்டு ஆக்கிரமிக்கப்பட்டிருந்து. மீண்டும் லெனினை, இம்முறை 1913 இல் அவர் எழுதிய காரல் மார்க்சின் வாழ்க்கைச் சரித-தத்துவார்த்தக் கட்டுரையில் இருந்து மேற்கோளிடுவோம்:

ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் முற்றிலுமாய் அத்தனை வர்க்கங்களுக்கும் இடையிலான உறவுகளின் ஒட்டுமொத்தத்தை புறநிலையாக பரிசீலனை செய்து பார்ப்பதும், அதன்பின் அந்த சமூகத்தினால் அடையப்பட்டிருக்கும் புறநிலையான வளர்ச்சி நிலையையும், அதற்கும் மற்ற சமூகங்களுக்கும் இடையிலான உறவுகளையும் பரிசீலனை செய்து பார்ப்பதுமே ஒரு முன்னேறிய வர்க்கத்திற்கான சரியான தந்திரோபாயத்திற்கான அடிப்படையாக சேவை செய்ய முடியும்.

1917க்கு முன்பாக லெனினுக்கும் ட்ரொட்ஸ்கிக்கும் இடையில் கருத்துவேறுபாடுகள் இருந்து வந்தபோதிலும் கூட, அவர்களின் பணி சோசலிச இயக்கத்தின் மூலோபாய நோக்குநிலையை அபிவிருத்தி செய்வதிலேயே கவனம் குவித்திருந்தது. 1914 இல் போர் வெடித்ததை அடுத்து, உலக நெருக்கடி குறித்த லெனினின் ஆய்வு ஒரு அசாதாரணமான ஆழத்தையும் தீவிரத்தையும் பெற்றது, 1917 இல் போல்ஷிவிக் கட்சியின் நோக்குநிலைக்கு அது மிக ஆழமான விளைவுகளைக் கொண்டதாக இருந்தது. 1915-1916 இல் ஏகாதிபத்தியம் என்னும் நூல் எழுதுவதன் கீழமைந்திருந்த தத்துவார்த்த உழைப்பானது போல்ஷ்விக்குகளின் மூலோபாயத்தின் மிக முக்கியமான மாற்றத்திற்கு இட்டுச் சென்றது, அது லெனினின் ஏப்ரல்ஆய்வறிக்கையில் வெளிப்பாடு கண்டது. ட்ரொட்ஸ்கி வேறொரு அரசியல் பாதையைப் பின்பற்றி வந்து கொண்டிருந்தாலும் கூட, 1917 இல் அவர் வகித்த அசாதாரணமான பாத்திரம், முந்தைய பன்னிரண்டு ஆண்டு காலத்தின் போது, நிரந்தரப் புரட்சித் தத்துவத்தை அவர் அபிவிருத்தி செய்ததின் மூலம் தயாரிக்கப்பட்டிருந்தது.

எந்தப் புரட்சியும் விருப்பு இல்லாமல், அதாவது, உச்ச அளவு அகநிலை உறுதிப்பாடு இல்லாமல் நடக்க முடியாது. ஆயினும் விருப்பும் உறுதிப்பாடும் புறநிலை யதார்த்தத்தின் ஒரு சரியான மதிப்பீட்டைக் கொண்டு வழிநடத்தப்பட்டாக வேண்டும், அதன்மீதுதான் சோசலிச இயக்கத்தின் நடைமுறை அடிப்படையாகக் கொண்டாக வேண்டும். ஒரு தத்துவார்த்த கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால், அகநிலை விருப்பைப் புகழ்ந்து போற்றுவதை நிராகரிப்பதுதான் மார்க்சிசத்தை அராஜகவாதம், மாவோயிசம், மற்றும் வெகுஜன நடுத்தர-வர்க்க இயக்கங்களில் மிகவும் எதிர்ப்புரட்சிகரமானதான, பாசிசம் உள்ளிட குட்டி-முதலாளித்துவ தீவிர அரசியலின் எண்ணிலடங்கா வகைகளில் இருந்து பிரிக்கும் அரசியல் நடவடிக்கைக்கான ஒரு அடிப்படையாகும். 1921 இல் கம்யூனிச அகிலத்தின் மூன்றாவது மாநாட்டிற்கு முன்னதாக வழங்கிய ஒரு உரையில், ட்ரொட்ஸ்கி விளக்கினார்:

புறநிலை அம்சத்தில் இருந்து அகநிலை அம்சத்தை நாம் விலக்கி விட்டோமேயானால், தர்க்கரீதியாக இந்த மெய்யியலானது தூய புரட்சிகர சாகசவாதத்திற்கு இட்டுச் செல்கிறது.

புறநிலையை அகநிலையுடன் இயங்கியல்ரீதியாக ஐக்கியப்படுத்துவதற்கு மகத்தான மார்க்சிசப் பள்ளியில் நாம் கற்றிருக்கிறோம் என்றே நான் நம்புகிறேன். அதாவது, நமது நடவடிக்கைகளுக்கு அடித்தளமாக அகநிலை விருப்பின் இந்த அல்லது அந்த வெளிப்பாட்டை மட்டும் கொள்ளாமல், தொழிலாள வர்க்கம் நமது இந்த அகநிலை விருப்பிற்கு இணங்கக் கொண்டுவரப்பட வேண்டும் என்ற உறுதிப்பாட்டையும் அத்துடன் பாட்டாளி வர்க்கத்தின் நடவடிக்கைக்கான விருப்பானது புறநிலை சூழ்நிலையால் தீர்மானிக்கப்படுகிறது என்ற உறுதிப்பாட்டையும் கொண்டிருக்க வேண்டும் என்பதை நாம் கற்றிருக்கிறோம்.

இரண்டு வருடங்களுக்குப் பின்பு, ட்ரொட்ஸ்கி சோவியத் ஒன்றியத்தில் அதிகாரத்துவத்தின் வளர்ச்சிக்கு எதிரான போராட்டத்தில் ஏற்கனவே ஈடுபட்டு வந்ததொரு சமயத்தில், லெனினின் வேலையில் புறநிலை யதார்த்தத்தின் விஞ்ஞானபூர்வ மதிப்பீட்டிற்கும் அகநிலை விருப்பத்திற்கும் இடையிலமைந்த உறவை மிக அற்புதமாக விளக்கினார்:

லெனினிசம் என்பது, எல்லாவற்றுக்கும் முதலில் யதார்த்தவாதம், புரட்சிகர நடவடிக்கையின் கண்ணோட்டத்தில் இருந்து யதார்த்தத்தின் மிக உச்சமான பண்புரீதியான மற்றும் அளவுரீதியான அங்கீகரிப்பு. துல்லியமாக இந்தக் காரணத்தினால் தான் இது வெறுமையான ஆர்ப்பாட்டவாதத்தின், யதார்த்தத்தில் இருந்து தப்பி திரைக்குப் பின்னால் ஓடுவது, செயலூக்கமற்ற விதத்தில் நேரத்தை இழப்பது, கட்சியின் பாரம்பரியத்தைக் காப்பாற்றுவதான சாக்கில் நேற்றைய தவறுகளை ஆணவத்துடன் நியாயப்படுத்துவது ஆகியவற்றுடன் இணக்கப்படுத்த முடியாததாகும்.

லெனினிசம் என்பது சம்பிரதாயவகை தப்பெண்ணங்களில் இருந்தும், வறட்டுவைராக்கியவாதத்தை அறநெறியாக்குவதில் இருந்தும், புரட்சிகர நடவடிக்கைக்கான விருப்பத்தை தடுமாறச் செய்ய முனைகின்ற புத்திஜீவித பழமைவாதத்தின் அத்தனை வடிவங்களில் இருந்தும் உண்மையான சுதந்திரம் என்பதாகும். ஆனால் லெனினிசம் “எதுவும் ஏற்றுக்கொள்ளப்படும்” என்பதைக் குறிப்பதாக நம்புவது ஒரு திருத்தமுடியாத தவறாகப் போகும். [புதிய பாதை]

அசாதாரண சிக்கலான ஒரு உலகத்தில் நாம் வாழ்கிறோம். உலகளாவிய வீச்சு கொண்ட, பரந்த மற்றும் பெரும் சக்திவாய்ந்த உற்பத்தி சக்திகள், மனிதகுலத்தை விஞ்சிச் செல்பவையாக தென்படுகின்றன. நிச்சயமாக, ஆளும் வர்க்கத்தை அவை விஞ்சிச் செல்கின்றன, முதலாளித்துவ அமைப்புமுறையின் பொருளாதார தர்க்கத்தை மனதில் கொண்டு, இந்த சக்திகளை சமூகரீதியாக முற்போக்கான விதத்தில் எவ்வாறு அபிவிருத்தி செய்வது, பயன்படுத்துவது என்பது ஆளும் வர்க்கத்துக்குத் தெரியவில்லை. இதுவே முடிவில்லாமல் வரிசையாக தொடர்ந்து செல்லும் பொருளாதார நெருக்கடிகள், தீவிரமடையும் சமூக இடப்பெயரல்கள், மற்றும் அணு ஆயுதங்களை கொண்டு யுத்தத்திற்கு செல்லக்கூடிய ஒரு மூன்றாம் உலகப் போரின் பெருகும் அபாயம் ஆகியவற்றின் கீழமைந்திருக்கும் அத்தியாவசியமான பிரச்சினையாகும்.

முதலாளித்துவ வர்க்கத்தால் தீர்க்கவியலாத இந்த வரலாற்றுப் பிரச்சினையை, தொழிலாள வர்க்கம், உலகளாவிய உற்பத்தி சக்திகளில் அது பெற்றிருக்கக் கூடிய புறநிலையான இடத்தின் காரணத்தால், தீர்க்க முடியும். ஆனால், தனது அகநிலை நனவை புறநிலை யதார்த்தத்தின் ஒரேவரிசையில் அதனால் கொண்டுவர இயலுகின்ற மட்டத்திற்கே அதனை இது சாதிக்க முடியும். புரட்சிகர மார்க்சிசக் கட்சியே நனவை யதார்த்தத்துடனும், புறநிலை அரசியல் அவசியத்தை வெகுஜன புரட்சிகர நடைமுறையுடனும் ஒரேவரிசையில் கொண்டுவருவதற்கான அத்தியாவசியமான அரசியல் சாதனமாகும். இவ்வாறு ஒரேவரிசையில் கொண்டுவரப்படுவது 1917 இல் சாதிக்கப்பட்டது. அது மீண்டும் சாதிக்கப்பட்டாக வேண்டும், இந்தப் பணியை சாதிப்பதே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் மைய இலட்சியமாகும்.

[1] “Empiriocriticism: A Bolshevik Philosophy?,” by Aileen Kelly in Cahiers du Monde russe et soviétique, Volume 22, No. 1 (January–March 1981), p. 104

Loading