முன்னோக்கு

சிக்காகோ சிம்பொனி இசைக்குழுவினரின் வேலைநிறுத்தம்

சோசலிசமும், கலாச்சார பாதுகாப்பும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தங்களின் வேலைநிறுத்தத்தில் இப்போது ஏழாவது வாரத்தில் உள்ள சிக்காகோ சிம்பொனி இசைக்குழு (CSO) கலைஞர்களுக்கு, அமெரிக்காவிலும் சர்வதேச அளவில் இருந்தும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் செயலூக்கமான ஆதரவு அவசியப்படுகிறது. பணயத்தில் இருப்பது அவர்களின் சொந்த சம்பளம், மருத்துவக் கவனிப்பு நலன்கள் மற்றும் ஓய்வூதியங்கள் மட்டுமல்ல, மாறாக உலக தரம் வாய்ந்த ஒரு இசைக்குழுவான CSO உட்பட கலாச்சாரத்தின் தலைவிதியே பணயத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அங்கே அடிப்படை வர்க்க பிரச்சினைகள் சம்பந்தப்பட்டுள்ளன. கிளாரினெட் வாசிக்கும் CSO இசைக்கலைஞர் ஜோன் புரூஸ் யெஹ் மிகச் சரியாக குறிப்பிட்டார், “இது வர்க்க போர் தொடுப்பாக தெரிகிறது, அதை நாங்கள் ஏற்க மாட்டோம்.” சேவை நிறுவன செயலதிகாரிகள், முதலீட்டு வங்கியாளர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்கள் உட்பட பெருநிறுவன பிரமுகர்களின் தலைமையில் செயல்பட்டு வரும் அந்த இசைக்குழுவின் பொதுக்குழுவான சிகாகோ சிம்பொனி இசைக்குழு அமைப்புக்கு (CSOA) எதிராக இசைக்கலைஞர்கள் எழுந்துள்ளனர்.

சிக்காகோ சிம்பொனி இசைக்குழுவின் 128 ஆண்டுகள் ஒரு சாதனையான கலாச்சார பொக்கிஷம், அது காப்பாற்றப்பட வேண்டும். இந்த இசைக்குழுவினர், பல நாடுகள், பல இனங்களைச் சேர்ந்த செறிந்தவார்ந்த பயிற்சி பெற்ற தொழில்நிபுணர்களின் ஒரு அமைப்பாக விளங்குகின்றனர். இந்த மட்டத்தில் இருக்கும் இசைக்கலைஞர்கள், CSO போன்ற ஒரு இசைக்குழுவில் இடம் பெற தேர்ச்சி ஆவதற்கே பல ஆண்டுகள் தயாரிப்புக்காக செலவிடுகிறார்கள். இதில் இடம் பெறுபவர்களும், பெரும்பாலான சமயங்களில், அவர்களின் கலைத்துவ வாழ்க்கையின் எஞ்சிய பகுதிகளை இந்த இசைக்குழுவிற்காகவும் அதன் இசைக்காகவுமே அர்ப்பணிக்கிறார்கள்.

சிக்காகோ சிம்பொனி இசைக்குழுவின் இயக்குனர்களும் நிகழ்ச்சி வழிநடத்துநர்களும், Georg Solti, Daniel Barenboim, Claudio Abbado மற்றும் Pierre Boulez உட்பட 20 ஆம் நூற்றாண்டின் இசை நிகழ்ச்சிகளில் தலைச்சிறந்தவர்களில் உள்ளடங்கி உள்ளனர். CSO இன் இப்போதைய இசைக்குழு இயக்குனர் ரிக்கார்டோ முதி (Riccardo Muti) "நான் என் இசைக்கலைஞர்களுடன் இருக்கிறேன்,” என்று அறிவித்து பாராட்டத்தக்க நிலைப்பாட்டை எடுத்துள்ளார், இது சிகாகோ டைம்ஸ் போன்ற பெருநிறுவன ஊடகங்களின் பிற்போக்குத்தனமான மரமண்டைகளிடம் இருந்து அவருக்கு விமர்சனங்களைப் பெற்று தந்துள்ளது.

1950 களில் பிரிட்ஸ் ரெய்னரின் (Fritz Reiner) முயற்சிகள் மூலமாக சர்வதேச முக்கியத்துவம் பெற்ற இந்த இசைக்குழு, ஆண்டுக்கு நூற்றுக்கும் அதிகமான அதன் நிகழ்ச்சிகளில் Bach, Beethoven, Brahms, Rimsky-Korsakov, Debussy மற்றும் ஏனைய டஜன் கணக்கான இசையமைப்பாளர்களின் கலாச்சார பொக்கிஷங்களுக்கு உயிர் கொடுத்துள்ளது.

உலக-தரம் வாய்ந்த ஓர் இசைக்குழுவைக் கட்டமைப்பதற்கும் பேணி வளர்ப்பதற்கும் அவசியமான சம்பளம் மற்றும் நலன்களைத் தொடர்ந்து வழங்குவதற்கு போதிய ஆதாரவளங்கள் இல்லை என்ற கூற்று அவமதிப்புடன் நிராகரிக்கப்பட வேண்டும். சிக்காகோ சிம்பொனி இசைக்குழு சமீபத்தில் வருடாந்தர நுழைவுச்சீட்டு விற்பனையில் சாதனை படைத்திருந்தது. CSO நிர்வாகத்திடம், நன்கொடை நிதியாக 300 மில்லியனுக்கும் அதிகமான டாலரும் அதன் முதலீட்டு நிதியில் 60 மில்லியனும் உள்ளது.

சிக்காகோ நகர வரலாற்றில் முன்னெப்போதும் இருந்ததை விட இன்று அதிக செல்வவளம் குவிந்துள்ளது, பிரதானமாக இவை தொழில்துறை அழிப்பில் இருந்தும், பள்ளிகள் மற்றும் ஏனைய பொது சொத்துக்களைத் தனியார்மயப்படுத்தியதில் இருந்தும் ஆதாயமடைந்துள்ளவர்களின் பைகளில் நிரம்பி உள்ளன.

ஃபோர்ப்ஸ் தகவலின்படி சிக்காகோ 17 பில்லியனர்களின் தாயகமாக உள்ளது. அந்த பட்டியலில், சிட்டாடெல் முதலீட்டு நிறுவன தலைமை செயலதிகாரி கென் க்ரெஃபின் (நிகர மதிப்பு 10 பில்லியன் டாலர்); இடர்பாட்டு சொத்து முதலீட்டாளரும் CSOA பொதுக்குழு தலைவர் ஹெலென் ஜெல்லின் கணவருமான சாம் ஜெல் (5.5 பில்லியன் டாலர்); Pritzker கூட்டுக்குழுவுடன் அரசியல்ரீதியில் இணைப்பு கொண்ட Hyatt விடுதி சொத்துக்களின் வாரிசுகள்—தோமஸ் (4.2 பில்லியன் டாலர்), ஜிஜி (3.2 பில்லியன் டாலர்), பென்னி (2.7 பில்லியன் டாலர்) மற்றும் ஜே.பி., இப்போதைய இலினோய் ஆளுநர் (3.4 பில்லியன் டாலர்); கோச் உணவகங்களின் ஜோசப் கிரென்ட்ஸ் (2.8 பில்லியன் டாலர்); ரியல் எஸ்டேட் மற்றும் காசினோ சூதாட்ட ஜாம்பவானும் ஜனநாயக கட்சிக்கு நன்கொடை சேகரிப்பாளருமான நெய்ல் ப்ளூஹ்ம் (4 பில்லியன் டாலர்) ஆகியோர் உள்ளடங்குவர்.

இலினோய் ஆளுநரின் செல்வவளமே CSO ஒட்டுமொத்த செயல்பாட்டுக்கான வரவு-செலவு திட்டக்கணக்கை (சுமார் 73.7 மில்லியன் டாலர்) 45 ஆண்டுகளுக்குப் பூர்த்தி செய்துவிடும். பராக் ஒபாமாவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதிகளை வாரியிறைத்த அவர் சகோதரி பென்னியின் செல்வவளம் கூடுதலாக 36 ஆண்டுகளைச் சேர்க்கும். இதுவும் CSO இன் நுழைவு கட்டண விற்பனை உட்பட அதற்கு வேறெந்த வருவாயும் இல்லை என்று அனுமானித்தாலே இவ்வாறு உள்ளது. சிகாகோவில் சமூக சமத்துவமின்மையின் நிலை இந்தளவுக்கு உள்ளது, அமெரிக்கா மற்றும் உலகெங்கிலுமான நகரங்களிலும் இது பிரதிபலிக்கிறது.

உள்ளாட்சி அரசாங்கங்கள், மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் செல்வந்தர்களுக்கான வரிகளை வெட்டி, சமூகத்திற்கான செலவுகளைக் குறைத்து வருகின்ற நிலையில், இசைக்குழுக்களும் ஏனைய கலாச்சார அமைப்புகளும் அதிகரித்தளவில் பிரபுத்துவ கொள்கைகளுக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டியுள்ளன. இசைக்குழுக்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் பிற கலாச்சார அமைப்புகளின் உயிர்பிழைப்பு அதிகரித்தளவில் செல்வம் கொழித்த பணக்காரர்களின் கருணையைச் சார்ந்துள்ளது.

கலைகளுக்கான 2012 தேசிய நன்கொடை ஆவணமான "அமெரிக்காவில் கலைகளுக்கு எவ்வாறு நிதி வழங்கப்படுகிறது,” என்பதன் தகவல்படி, இலாபத்திற்காக அல்லாமல் செயல்படுகின்ற அமெரிக்க கலை அமைப்புகள் அவற்றுக்கான நிதியில் மத்திய அரசிடம் இருந்து வெறும் 1.2 சதவீதம் மட்டுமே பெற்றன, இத்துடன் சேர்ந்து உள்ளாட்சி மற்றும் மாநில அரசாங்கங்களிடம் இருந்து 5.5 சதவீதம் பெற்றன. இலாபமற்ற கலைகளுக்கான மொத்த நிதியில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் (20.3 சதவீதம்) அதிகமான நிதி தனிநபர்களிடம் இருந்து வந்தது.

ஆதாரவளங்களைத் தேடிய பிலடெல்பியா, ஹொனொலுலு மற்றும் நியூயோர்க்கின் சைராகியூஸ் இசைக்குழுக்கள் சமீபத்திய ஆண்டுகளில் திவால்நிலைமையைப் பதிவு செய்துள்ளன. பிலடெல்பியா இசைக்குழு அதன் இசைவாசிப்பாளர்களுக்கான அதன் ஓய்வூதிய கடமைப்பாடுக்களில் இருந்து தப்பிக்கும் ஒரு முயற்சியில் திவால்நிலையை அறிவித்தது. டெட்ராய்ட் சிம்பொனி இசைக்குழுவின் இசையமைப்பாளர்கள் 2010-11 இல் ஒரு கடுமையான போராட்டம் நடத்தினர், ஆனால் அந்த வேலைநிறுத்தம் தனிமைப்படுத்தப்பட்டதால், அவர்கள் இறுதியில் விட்டுக்கொடுப்புகளை ஏற்க நிர்பந்திக்கப்பட்டனர், அது இசைக்குழுவைச் சேதப்படுத்தியது.

இந்த இசையமைப்பாளர்களுக்கு சிக்காகோவின் தொழிலாள வர்க்கத்தில் பரந்த ஆதரவு உள்ளது. தெற்கு மற்றும் மேற்குப்புற தொழிலாள வர்க்க பகுதிகள் உட்பட, இந்நகரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் CSO இசைக்கலைஞர்கள் இலவச அனுமதி கச்சேரிகளை நடத்தி உள்ளனர், அவர்கள் கூட்டம் எந்தளவில் இருந்த போதினும் வாசித்துள்ளனர். பரந்த மக்களுக்கான முறையீட்டுடன் பிணைப்பதே அவர்களின் போராட்டத்திற்கு வெற்றி தரும் என்று இசைக்கலைஞர்கள் மிகச் சரியாகவே காண்கிறார்கள்.

அனுமானிக்கத்தக்கவாறு, வேலைநிறுத்தம் செய்து வரும் இந்த இசைக்கலைஞர்களின் பின்னால் ஆதரவை அணித்திரட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றுமே செய்யவில்லை. சிக்காகோ தொழிலாளர் கூட்டமைப்பு அதன் வலைத் தளத்தின் முதல் பக்கத்தில் இந்த வேலைநிறுத்தம் குறித்து எதுவுமே குறிப்பிடவில்லை என்பதோடு, இசைக்கலைஞர்களுக்கு ஆதரவாக ஓர் அறிக்கையும் கூட வெளியிடவில்லை. ஒரு மாதத்திற்கும் முன்னர் AFL-CIO கடமைக்காக ஒரு அறிக்கை வெளியிட்டதோடு சரி, அத்துடன் அதை கைவிட்டுவிட்டது.

இதேபோல ஜனநாயக கட்சி அரசியல்வாதிகளும் ஒன்றும் கூறவில்லை. இரண்டாவது முறையாக ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் பிரச்சாரத்தில் உள்ள பேர்ணி சாண்டர்ஸ் CSO வேலைநிறுத்தம் குறித்து மவுனமாக உள்ளார். சிகாகோவை அரசியல் தாயகமாக கொண்ட பராக் ஒபாமா எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. குடியரசு கட்சிகள் மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்திற்குக் குறைவின்றி, சிகாகோவில் ஆட்சி செலுத்தும் ஜனநாயக கட்சியினர் சிக்காகோ தொழிலாள வர்க்கம் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்துவதையும் மற்றும் செல்வவளத்தைப் பணக்காரர்களுக்கு மறுபகிர்வு செய்து கொடுப்பதையும் ஆதரிக்கின்றனர்.

கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கும் விரிவாக்குவதற்குமான சமூக அடித்தளம் தொழிலாள வர்க்கமாகும். அனைத்து தொழிலாளர்களுக்கும் கலாச்சார உரிமை இருக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் CSO இசைக்கலைஞர்களின் பாதுகாப்பு இணைக்கப்பட வேண்டும். இது, கலைகள் மற்றும் இசையின் முக்கிய பாடப்பிரிவுகளை நீக்குவதை உள்ளடக்கி உள்ள பொதுக் கல்வி மீதான தாக்குதலை முடிவுக்குக் கொண்டு வருவதை உள்ளடக்கி உள்ளது.

இலாபமும் செல்வவளமும் ஒரு சிலரால் குவித்துக் கொள்ளப்படுவதையும் மற்றும் பரந்த பெரும்பான்மையினர் மீதான சுரண்டலையும் அடிப்படையாக கொண்ட ஒரு சமூகமான இந்த முதலாளித்துவம் பொருத்தமில்லாமல் இருப்பதே, கலாச்சாரத்தைப் பாதுகாப்பதிலும், விரிவாக்குவதிலும் அடிப்படை பிரச்சினையாக உள்ளது. தற்போதைய கலாச்சார நிலைமை 1938 இல் லியோன் ட்ரொட்ஸ்கியின் கருத்துக்களை உறுதிப்படுத்துகின்றன, “கலாச்சாரத்தின் மிகவும் சிக்கலான பகுதியான, மிகவும் உணர்வுபூர்வமான, அதேநேரத்தில் வெகு குறைவாகவே பாதுகாக்கப்பட்டுள்ள, கலையானது, முதலாளித்துவ சமூகத்தின் வீழ்ச்சி மற்றும் சீரழிவால் மிகவும் அதிகமாக பாதிக்கப்படுகிறது,” என்றார்.

கலாச்சாரத்தை அணுகுவதைப் பாதுகாப்பதற்கும் விரிவாக்குவதற்கும் சோசலிசத்திற்கான போராட்டம் அவசியமாகும். பெருநிறுவன மற்றும் நிதியியல் செல்வந்த தட்டுக்களின் செல்வவளம் பறிமுதல் செய்யப்பட்டு சமூக தேவையைப் பூர்த்தி செய்ய மறுபுறம் திருப்பிவிடப்பட வேண்டும். இசைக்குழுக்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் உட்பட கலாச்சார அமைப்புகள் அனைத்திற்கும் பில்லியன் கணக்கில் முழு அளவிலான நிதி ஒதுக்கப்பட வேண்டும். அந்த கலாச்சார அமைப்புகள் ஒவ்வொருவரும் அணுகக்கூடியதாக ஆக்கப்பட வேண்டும். வாழ்வதற்கு ஏற்ற வருமானம், ஓய்வூ நேரம், மற்றும் மனிதகுலத்தின் தலைச்சிறந்த கலாச்சார பொக்கிஷங்களை அணுகுவதற்கும் அனுபவிப்பதற்கும் அவசியமான அனைத்து பொருளாதார மற்றும் சமூக முன்நிபந்தனைகளும் எல்லா தொழிலாளர்களுக்கும் கிடைத்திருக்க வேண்டும்.

வேலைநிறுத்தம் செய்து வரும் இந்த CSO இசைக்கலைஞர்களை ஆதரிக்குமாறும், சமத்துவமின்மை மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக அனைத்து தொழிலாளர்களின் போராட்டங்களுடன் இசைக்கலைஞர்களின் போராட்டத்தையும் இணைக்குமாறும், உலக சோசலிச வலைத் தளம், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கிறது.

Loading