தொழிற்சங்கங்களின் கருங்காலி வேலைகளுக்கு மத்தியிலும் அதிகளவானோர் கல்விசாரா தொழிலாளர்களின் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அதிக சம்பளம் உட்பட ஏழு கோரிக்கைகளின் அடிப்படையில் பல்கலைக்கழக கல்விசாரா தொழிலாளர்கள் ஜூலை 30 அன்று நடத்திய வேலைநிறுத்தத்தில் அதிகளவோனர் பங்குபற்றி இருந்தனர். கூட்டுக் கமிட்டியில் இருந்து விலகிய பல தொழிற்சங்கங்கள் வெளிப்படையாக கருங்காலி வேலை செய்த நிலைமையிலும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்த பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியில், எழுத்துனர் மற்றும் தொழில்நுட்ப தொழிலாளர் சங்கம், தொழில்நுட்ப அதிகாரிகள் சங்கம், ஆய்வக ஊழியர் சங்கம், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் பல தொழிற்சங்கங்கள் உள்ளன. கருங்காலி மத்திய கமிட்டியில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினதும் தொழிற்சங்கங்கள் அடங்கியுள்ளன.

அரசாங்கமும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவும் தங்கள் கோரிக்கைகளை கலந்துரையாட பலமுறை மறுத்துவிட்டதால், அதை எதிர்ப்பதற்காக கூட்டுக் கமிட்டியால் இந்த வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, ஆனால் இன்றுவரை அவர்கள் கலந்துரையாடவில்லை.

மத்திய கமிட்டியின் காலைவாரி விடும் வேலை எந்தளவுக்கு இருந்தது என்றால், “30 ஆம் தேதி வேலைநிறுத்தத்தை இரத்து செய்தால் மட்டுமே,” 29 ஆம் திகதி நிதி அமைச்சருடன் நடக்கவுள்ள கலந்துரையாடலில் கூட்டுக் கமிட்டியின் இரண்டு பிரதிநிதிகளேனும் கலந்து கொள்ள முடியும், என அந்தக் கமிட்டியின் தலைவர்கள் கூட்டுக் கமிட்டியின் தலைவர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.

அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டால், இனி உறுப்பினர் தொழிலாளர்கள் மீதான தனது பிடியை தக்கவைத்துக் கொள்ள முடியாமல் போகும் என்ற அச்சத்திலேயே கூட்டுக் கமிட்டியானது மத்திய கமிட்டியின் பிற்போக்கு நிபந்தனையை நிராகரித்தது. வேலைநிறுத்த நாளில் ஒரு மறியல் போராட்டத்தை கூட ஏற்பாடு செய்ய கூட்டுக் கமிட்டி திட்டமிட்டிருக்கவில்லை. எப்போதும் தொழிலாளர்களை தடம்புரளச் செய்வதற்காக செயற்படும் அந்தக் கமிட்டியின் அதிகாரிகளின், ஒவ்வொரு வேலைநிறுத்தத்தினதும் முடிவில் செய்ததைப் போல், தொழிலாளர்கள் பங்கேற்பு குறைவாக இருந்தது என அவர்களைக் குறை கூறுவதற்கு எதிர்பார்த்திருந்தனர்.

ஜூலை 28 அன்று மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் கூட்டுக் கமிட்டியின் கூட்டத்தில், வேலைநிறுத்தத்திற்கு காலை வாரிவிட முயற்சித்த தொழிற்சங்கத் தலைவர்களின் உரைகளுக்கு அதிக நேரம் ஒதுக்கப்பட்ட போதிலும், கல்விசாரா தொழிலாளர்களின் போராட்டத்தில் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை முன்வைக்க முயன்ற சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர் தெய்ஹின் வசந்தவிற்கு பேச நேரம் கொடுக்கப்படவில்லை. அதிகாரத்துவம், நன்றி உரை கூறி கூட்டத்தை முடித்தது.

தொழிற்சங்கத் தலைவர்களின் கீழறுக்கும் நடவடிக்கைகள் மற்றும் கருங்காலி வேலைகள் இருந்தபோதிலும், கல்விசாரா ஊழியர்களில் பெரும்பான்மையினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்களில் பலர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தும் நோக்கத்துடன் அன்று பல்கலைக்கழக வளாகத்தில் தங்கியிருந்த போதிலும், ஆர்ப்பாட்டங்களையும் கூட்டங்களையும் தடுக்க அதிகாரத்துவம் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டது.

இரண்டு உரைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட கூட்டத்தை நடத்திய மொரட்டுவ கூட்டுக் கமிட்டி அதிகாரி, தொழிலாளர்களை வீட்டிற்கு அனுப்பினார். வேலைநிறுத்தம் நடந்த நாளில் உறுப்பினர்களை வீட்டிலேயே இருக்குமாறு களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் மங்கள தாபரே என்ற கூட்டுக் கமிட்டித் தலைவர் அறிவுறுத்தினார்.

பல பல்கலைக்கழகங்களில் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களின் கீழறுப்பை எதிர்கொண்டும், ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்து போராட்டத்தை புதுப்பிக்க முயன்றனர். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சுமார் 3,000 கல்விசாரா ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் இணைந்தனர், அவர்களில் நூற்றுக்கணக்கானோர் பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்தில் இருந்து கலஹா சந்திக்கு ஊர்வலமாகச் சென்று அங்கு ஒரு போராட்டத்தை நடத்தினர்.

வெல்லம்மடமவில் உள்ள ருஹுனு பல்கலைக்கழக வளாகத்தின் முன் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். ஸ்ரீ ஜெயவர்தனபுரா பல்கலைக்கழகத் தொழிலாளர்கள் அதன் பிரதான நுழைவாயிலுக்கு அருகே ஒரு போராட்டத்தை நடத்தினர், அதே நேரம் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர்கள் அறுபத்தேழு கிலோமீட்டர் தூரம் பயணித்து கிளிநொச்சி விவசாய பீடத்தில் ஊர்வலம் ஒன்றை நடத்தினர்.

கூட்டுக் கமிட்டியின் தலைவர் தம்மிகா எஸ். பிரியந்த, அமைச்சரை அல்லது பல்கலைக்ழக மானியங்கள் ஆணைக் குழுவை சந்திக்க கிடைக்காவிட்டாலும், வேலைநிறுத்தம் “பெரும் வெற்றியுடன்” முடிவுக்கு வந்தது என்றார். பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால், அது ஒரு "சாதகமான பிரதிபலிப்பு" எனக் கூறி தொழிலாளர்களை ஏமாற்ற அதைப் பயன்படுத்தியிருப்பார்.

கூட்டுக் கமிட்டியைச் சேர்ந்த ஒரு தொழிற்சங்கத்தின் பேராதனைப் பல்கலைக்கழக கிளைத் தலைவர், உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) செய்தியாளர்களிடம் பேசும்போது, “வேலைநிறுத்தம் மாணவர்களின் நேரத்தை அழித்து வருகிறது, மேலும் புதிய உத்திகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்” என்று இழிந்த முறையில் கூறினார். வேலை நிறுத்தங்களினால் தொழிலாளர்கள் "மாணவர்களின் நேரத்தை வீணடிப்பதாக" ஆட்சியாளர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு இணங்க, இனிமேல் ஒரு வேலைநிறுத்தத்தையும் நடத்தாமல் இருக்க தொழிற்சங்க அதிகாரத்துவம் தயாராகி வருகிறது என்பதே இதன் அர்த்தமாகும்.

இந்த "புதிய தந்திரோபாயங்கள்" எனப்படுபவை, வேலைநிறுத்தங்கள் உட்பட தொழில்துறை நடவடிக்கைக்கு முற்றிலும் எதிராக உள்ள ஆட்சியாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் என்றே அவர்கள் கூற வருகின்றனர்.

எவ்வாறாயினும், வேலைநிறுத்தம் செய்யும் பல தொழிலாளர்களின் கருத்துக்கள் தொழிற்சங்கத் தலைவர்களின் கருத்துக்களுக்கு முற்றிலும் மாறுபட்டவை ஆகும். மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளி ஒருவர், “கோரிக்கைகள் கிடைக்கும் வரை ஒரு நாள் வேலைநிறுத்தம் நீண்ட காலத்திற்கு தொடர வேண்டும்” என்று கூறினார். "கடந்த காலங்களிலிருந்தே தொழிலாளர்கள் போராடுவதன் மூலமே தங்கள் உரிமைகளை வென்றுள்ளனர். தொழிற்சங்கத்தின் தலைவர்கள் கருங்காலி வேலை செய்தால், அவர்கள் எங்கள் கால்களை வாரிவிட்டால், நாங்கள் தொழிற்சங்கங்களை விட்டு வெளியேறி, நீங்கள் சொல்லும் விதத்தில் புதிய அமைப்புகளை உருவாக்க வேண்டும், ”என்று அவர் மேலும் கூறினார்.

இலங்கையிலும் சர்வதேச அளவிலும் வளர்ந்து வரும் வர்க்கப் போராட்ட அலைகளின் முக்கிய அம்சங்கள் இந்த வேலைநிறுத்தத்திலும் மீண்டும் வெளிப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களுக்கும் அதன் அதிகாரத்துவத்திற்கும் எதிரான ஒரு தொழிலாளர் கிளர்ச்சியின் வளர்ச்சி முக்கிய அம்சமாகும். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தொழிற்சங்கம் வேலை நிறுத்தத்தில் பங்கெடுக்காமைக்கு எதிராக மொரட்டுவ பல்கலைக்கழக கிளையின் உறுப்பினர்கள் தொழிற்சங்கத்தை விட்டு வெளியேறுவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளனர். இது வேறு இடங்களிலும் காணப்படும் ஒரு நிலைமை ஆகும்.

இந்த போராட்டங்களில், ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் எந்தவொரு உரிமையையும் பெற முடியாது என்பதை தொழிலாளர்கள் தெளிவாக அனுபவித்து வருகின்றனர். தொழிற்சங்கத் தலைவர்கள் கோரும் பேச்சுவார்த்தைக்கு கூட வாய்ப்பு அளிக்காமல் இருக்க ஆட்சியாளர்கள் எடுத்துள்ள முடிவு இதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

கல்விசாரா ஊழியர்களின் ஒரு நாள் வேலைநிறுத்தமானது முதலாளித்துவ அரசாங்கத்திற்கும் முதலாளித்துவ அமைப்பிற்கும் எதிரான அரசியல் போராட்டம் இன்றி, தொழிலாள வர்க்கம் தனது உரிமைகளை வெல்ல முடியாது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அந்த அரசியல் போராட்டத்திற்கு முற்றிலும் விரோதமாக இருக்கும் தொழிற்சங்கங்களின் பிடியில் இருந்து விடுபட, தொழிலாளர்கள் உடனடியாக தங்கள் சொந்த நிறுவன வடிவங்களான தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கத் தொடங்க வேண்டும்.

Loading