இலங்கை பிரதமர் இனப் பிரச்சினையை தீர்ப்பதாக பாசாங்கு செய்கிறார்

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க “அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் தமிழர்களின் இனப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணப்படும்” என்ற போலி வாக்குறுதியை அளித்தார். ஜூலை 15 அன்று, வட இலங்கையில் போரினால் நாசமாக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில், ஒரு கல்லூரி ஆண்டு விழாவில் கலந்துகொண்டபோது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் முன்னிலையில், அவர் இந்த வாக்குறுதியை வெளியிட்டார்.

அவரது அரசாங்கம் அதன் அமெரிக்க-சார்பு கொள்கைகள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்ட சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தியதால் வெகுஜனங்கள் மத்தியில் அவப்பேறு பெற்றுள்ள நிலையிலும், குறிப்பாக, இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதாக கொடுத்த வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டதால் தமிழ் சிறுபான்மையினர் மத்தியில் அதிருப்திக்கு உள்ளாகியுள்ள நிலையிலுமே அவர் இந்த வாக்குறுதிகளை வழங்கியுள்ளார். அவரது அரசாங்கம் இந்த ஆண்டு இறுதியில் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது அரசாங்கம் இனப் பிரச்சினையைத் தீர்க்கத் தவறியதை வஞ்சத்தனமாக நியாயப்படுத்திய விக்ரமசிங்க, அறிவித்ததாவது: “நாங்கள் ஒரு அரசியல் தீர்வைக் காணும் எதிர்பார்ப்பிலேயே வந்தோம், ஒன்றைப் பற்றி விவாதித்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எங்களுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை, பாராளுமன்றத்தில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை. எனவே அது இழுத்துச் செல்லப்பட்டது.”

“நானும் எனது கட்சியும் அதிகாரப் பகிர்வைச் செய்ய உறுதியாக இருக்கிறோம் என்று கூற விரும்புகிறேன். நீங்கள் விரும்பும் மற்றும் சிங்களவர்கள், முஸ்லிம்கள் மற்றும் பிறருக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரங்களை வழங்கும் அதிகாரப் பகிர்வை நாங்கள் செயல்படுத்துவோம்,” என கூறிய அவர், சிறுபான்மை மக்களின் உரிமைகளை காக்கும் நாயகனாக தன்னை காட்டிக்கொள்ள முயன்றார்.

விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.), நாட்டின் சிறுபான்மையினருக்கு எந்தவொரு சலுகையும் வழங்குவதை எதிர்க்கும் சிங்கள பேரினவாதத்தில் மூழ்கியுள்ள ஒரு கட்சியாகும். ஐ.தே.க., நாட்டின் நீண்ட கால தமிழர்-விரோத போரைத் தொடங்கி அதைப் பல தசாப்தங்களாக முன்னெடுத்த கட்சியாகும்.

விக்ரமசிங்கவின் வருகைக்கும் “அதிகாரப் பகிர்வு” மற்றும் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லீம் உழைக்கும் மக்களின் நலன்களுக்கும், முன்னாள் யுத்த வலயத்தில் கல்வியை மேம்படுத்துவதற்கும் எந்த தொடர்பும் கிடையாது. எவ்வாறாயினும், தமிழ் தேசியவாதக் கட்சிகள் கோரும் அத்தகைய அதிகாரப் பகிர்வு ஏற்பாடு, தமிழ், சிங்கள மற்றும் முஸ்லீம் முதலாளித்துவத்தின் நலன்களை மட்டுமே பாதுகாப்பதாக இருக்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, இலங்கை ஆளும் வர்க்கமானது அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் சீனாவின் மூலோபாய நலன்களுக்கு இடையில் ஆக்ரோஷமாக பிளவுபட்டுள்ளதுடன், தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கில் வாஷிங்டனின் புவி-அரசியல் நலன்களுக்கு சேவை செய்வதோடு பிணைந்துள்ளது.

விக்கிரமசிங்க, தமிழர்கள் மத்தியில் தனது தேர்தல் பலத்துக்கு முண்டு கொடுக்கவும், அமெரிக்க-சார்பு அரசாங்கத்தை ஸ்தாபிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைத் தக்கவைக்கவும், மற்றும் எதிர்வரவுள்ள வர்க்கப் போராட்டங்களை அடக்குவதற்கு பொலிஸ்-அரசு நடவடிக்கைகளை அமுல்படுத்தவும் அவநம்பிக்கையுடன் முயற்சிக்கின்றார்.

2015 ஜனாதிபதித் தேர்தலில், வாஷிங்டன் திட்டமிட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்தார். போலி இடது குழுக்கள் மற்றும் மத்தியதர வர்க்க இயக்கங்களின் ஆதரவோடு, ஐ.தே.க. மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பும், “நல்லாட்சி” ஒன்றை அமைப்பதாகவும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகவும் வாக்குறுதியளித்து, மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் பொலிஸ்-அரசு வழிமுறைகள் மீதான உழைக்கும் மக்களதும் இளைஞர்களதும் எதிர்ப்பை, அமெரிக்க-சார்பு அரசாங்கத்தை ஸ்தாபிப்பதன் பேரில் திசைதிருப்பிவிட்டன.

இருப்பினும், நான்கு ஆண்டுகளின் பின்னர், உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை. அதற்கு பதிலாக சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கமானது இராஜபக்ஷ நிறுத்திய இடத்திலிருந்து சிக்கன மற்றும் பொலிஸ்-அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவத் தோல்விக்குப் பின்னர் பத்து வருடங்கள் கடந்தும் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பைத் தொடர்வதோடு, பாதுகாப்புப் படைகள் இன்னமும் நிலங்களை கையகப்படுத்துவதோடு பௌத்த கோவில்களைக் கட்டுவதன் மூலம் அங்கு சிங்களமயமாக்கலை பலப்படுத்துகின்றன.

இவற்றுக்கு எதிராக, போரின் முடிவில் இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் அன்புக்குரியவர்களை கண்டு பிடித்து தருமாறும், பாதுகாப்புப் படையினர் ஆக்கிரமித்துள்ள நிலங்களை கைவிடுமாறும். குற்றச்சாட்டுகள் இன்றி காலவரையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியும் தமிழர்கள் பல இடங்களிலும் மறியல் போராட்டங்களையும் இடைவிடாத சத்தியாகிரக பிரச்சாரங்களையும் முன்னெடுக்கின்றனர்.

தெற்கில், கடந்த மாதங்களில் தோட்டத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழகம், ரயில்வே மற்றும் தபால் துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வேலையற்ற பட்டதாரிகளும் ஊதிய உயர்வு, நல்ல வாழ்க்கை நிலைமைகள் மற்றும் தொழில் வாய்ப்புகளைக் கோரி, வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டங்கள் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கம் மீண்டும் எழுச்சி பெறுவதன் ஒரு பகுதியாகும்.

இந்த வர்க்கப் போராட்டங்களை அடக்குவதற்காக, பொலிஸ் மற்றும் இராணுவத்திற்கு எதேச்சதிகாரமான பலத்தை வழங்கும் மற்றும் வேலைநிறுத்தங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் தடைசெய்வதற்காக அவசரகால விதிமுறைகளை புதுப்பிக்கவும் நீட்டிக்கவும் சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களைப் பற்றிக்கொண்டுள்ளது. கடந்த மாத இறுதியில் அரசாங்கம் புகையிரதம் மற்றும் ஏனைய அரச போக்குவரத்துச் சேவைகளில் வேலை நிறுத்தம் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தடை செய்துள்ளது.

ஏறத்தாழ சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கத்தின் பங்காளியாக இருந்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதன் சிக்கன வரவு செலவுத் திட்டம், பொலிஸ்-அரசு அடக்குமுறைகள், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் அவசரகால சட்டங்களை ஆதரித்து வருகின்றது.

எல்லாவற்றுக்கும் மேலாக, உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் மற்றொரு ஆபத்து எதுவெனில், இலங்கை அரசாங்கத்துடன் வாஷிங்டனின் இராணுவ கூட்டணிகளாகும். சீனா மற்றும் ஈரானுக்கு எதிரான போருக்கான தயாரிப்புகளுக்கு வாஷிங்டன் இலங்கைத் தீவை இந்து சமுத்திரத்தில் ஒரு அமெரிக்க இராணுவத் தளமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. படைகளை நிலை நிறுத்துவதற்கான (சோஃபா) உடன்படிக்கையின் கீழ், அமெரிக்க இராணுவம் நாட்டில் சுதந்திரமாக நடமாட முடியும் என்பது ஏற்கனவே அம்பலத்துக்கு வந்துள்ளது. (பார்க்க: இலங்கை பிரதமர் அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஊக்குவிக்கிறார்)

எவ்வாறாயினும், விக்கிரமசிங்கவின் வாக்குறுதிகள் பொய்யானவை என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நன்கு அறியும். தமிழ் மக்களுக்கான போராளியாக சித்தரிக்க தமிழ்த் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் மீண்டும் முயற்சிக்கத் தள்ளப்பட்டார். ஜூலை 25 அன்று பாராளுமன்றத்தில், தமிழர்கள் கொழும்பு ஆளும் வர்க்கத்தால் ஏமாற்றப்பட்டு வந்தது பற்றிய ஒரு நீண்ட பட்டியலை முன்வைத்து 70 நிமிடங்களுக்கு மேல் உரையாற்றினார்.

"புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும், மேலும் சர்வதேச சமூகத்திற்கும் நமது மக்களுக்கும் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற அரசாங்கம் விரைவாக செயல்பட வேண்டும். அதற்காக நீண்ட நேரம் காத்திருக்க தமிழ் மக்கள் தயாராக இல்லை,” என்று அவர் அறிவித்தார். “எங்களுக்கு சரியான தீர்வு வழங்கப்படாவிட்டால், நாங்கள் வேறு முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும், இந்த அரசாங்கத்தால் தொடர முடியாது”, என்றும் அவர் எச்சரித்தார்.

1948 உத்தியோகபூர்வ சுதந்திரத்தில் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டதிலிருந்தே தமிழர்-எதிர்ப்பு பாரபட்சங்களை ஆரம்பித்து ஆதரித்த ஒரு கட்சியுடனேயே சம்பந்தன் தனது கோரிக்கைகளை அவநம்பிக்கையுடன் முன்வைத்தார். ஐ.தே.க. இன் முதல் நடவடிக்கை, தமிழ் பேசும் இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களின் பிரஜா உரிமையை பறித்ததாகும். சிங்கள கிராமப்புற இளைஞர்கள் கிளர்ச்சிகளையும் தொழிலாளர்களின் போராட்டங்களையும் இரத்த வெள்ளத்தில் அடக்கியதில் ஐ.தே.க. பேர் போனதாகும்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இராஜபக்ஷ அரசாங்கத்தின் போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணையை உள்ளக விசாரணையாக மாற்றியது சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கமே ஆகும். இதற்கு தமிழ்க் கூட்டமைப்பும் ஆதரவளித்திருந்தது. சீனாவின் செல்வாக்கிலிருந்து விலக்கிக் கொள்ள அழுத்தம் கொடுப்பதற்காக இராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது பல சுற்று தீர்மானங்களுக்கு அனுசரணை அளித்திருந்த வாஷிங்டன், அமெரிக்க-சார்பு அரசாங்கம் அமைக்கப்பட்ட உடன் பின் வாங்கிக்கொண்டது.

இராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் முஸ்லிம் விரோத வன்முறைகளில் ஈடுபட்ட பௌத்த அதிதீவிரவத சக்திகள், சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கீழும் தாராளமாக செயற்படுகின்றன. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்ளின் பின்னர், முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. வர்க்கப் போராட்டங்களை எதிர்கொள்கின்ற எல்லா சமயத்திலும் தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதற்காக இனவாதத்தை ஒரு கருவியாக இலங்கை ஆளும் வர்க்கம் பயன்படுத்தி வந்துள்ளது.

இந்த உண்மைகள், விக்கிரமசிங்கவினது வாக்குறுதிகளும் தமிழ் கூட்டமைப்பின் பாசாங்குகளும் மோசடியானது என்பதையும் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீதான இன்னொரு சுற்று தாக்குதல்களை அர்த்தப்படுத்துகின்றன.

இனப் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும். போர் மற்றும் இனப் பாகுபாடுகளின் தோற்றுவாயான இலாப நோக்கு அமைப்பு முறையை தூக்கி வீசி, இன மற்றும் மத பிளவுகளுக்கு அப்பால் சமுதாயத்தை மறுஒழுங்கு செய்யும் சோசலிச முன்நோக்கின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்காகப் போராடுவது சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே.

Loading