முன்னோக்கு

ஜோன்சனின் நாடாளுமன்ற ஒத்திவைப்பு: பிரிட்டிஷ் ஆளும் வர்க்கம் ஜனநாயக உரிமைகள் மீது போர் பிரகடனம் செய்கிறது

மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நாடாளுமன்றத்தை ஒத்தி வைப்பதென்ற பிரதம மந்திரி போரீஸ் ஜோன்சனின் முடிவு ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு வரலாற்று தாக்குதல் என்பதோடு, அதை தொழிலாள வர்க்கத்தின் வேலைகள், வாழ்க்கை தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான நாசகரமான விளைவுகளைக் கொண்டிருக்கக்கூடிய பிரெக்ஸிட் திட்டநிரல் மூலமாக பலவந்தமாக நடத்துவதற்கான ஒரு முயற்சியாக உள்ளது.

குறைந்தபட்சம், உடன்பாடு எட்டப்படாத பிரெக்ஸிட்டை —அதாவது, வர்த்தகம் மற்றும் சுங்க ஏற்பாடுகள் எதுவுமின்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதை— தடுப்பதற்காக பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களது திட்டங்களை முகங்கொடுத்த ஜோன்சன், செப்டம்பர் 9 அன்று ஐந்து வார காலத்திற்கு நாடாளுமன்ற அமர்வைக் குறைக்க தீர்மானித்துள்ளார், அவ்விதத்தில் அவர் புரூசெல்ஸ் உடன் மேற்கொள்ளும் ஏதேனும் ஒரு உடன்படிக்கையோ அல்லது உடன்பாடு எட்டப்பட்டாத நிலையோ, அக்டோபர் 31 இல் செய்து முடிக்கப்பட்ட ஒரு விடயமாக ஆகிவிடும்.

பிரிட்டிஷ் அரசியலமைப்பு ஷரத்துக்களைக் கிழித்தெறிவதற்கான ஜோன்சனின் நகர்வுகள் ஜனநாயக உரிமைகள் மீதான ஓர் உலகளாவிய தாக்குதலின் பாகமாகும். உலகெங்கிலும், ஆளும் உயரடுக்குகள், கையாள முடியாத சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை முகங்கொடுத்து, அதிகரித்தளவில் எதேச்சதிகார மற்றும் சர்வாதிகார வடிவங்களுக்கு அல்லது ஆட்சிக்கு திரும்பி வருகின்றன. “நாடாளுமன்றங்களின் தாயை" ஜோன்சன் ஒத்திவைத்திருப்பது, ட்ரம்ப் அரசாங்கத்தின் அவசரகால ஆட்சி மற்றும் ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவின் ஏனைய நாடுகளது இராணுவ மீள்ஆயுதமயப்படல் மற்றும் பொலிஸ் அரசு அதிகாரங்களின் கட்டமைப்பு ஆகியவற்றில் ஒரு துணுக்கு தான்.

அதிக சிக்கன நடவடிக்கைகள், தேசியவாதம் மற்றும் புலம்பெயர்ந்தோர்-விரோத வெறித்தனத்தை தூண்டி விடுதல், எதேச்சதிகார ஆட்சி வடிவங்களை ஏற்பது மற்றும் பாசிசவாத வலதை வளர்த்தல் என இவையே ஆழமடைந்து வரும் உலக முதலாளித்துவ நெருக்கடிக்கு ஐரோப்பா எங்கிலுமான அரசாங்கங்களின் விடையிறுப்பாக உள்ளது.

ஜோன்சன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதை, "தாட்சர் புரட்சியை" பூரணமாக நிறைவு செய்வதற்கான ஒரு வழியாக பார்க்கும் பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தின் பிரிவுக்காக செயல்படுகிறார். தொழிலாள வர்க்க சுரண்டல் மீது எந்த கட்டுப்பாடுகளும் இல்லாத நெறிமுறை தளர்த்தப்பட்ட ஒரு வரி சொர்க்கமாக பிரிட்டனை மாற்றுவதும் மற்றும் நலன்புரி அரசில் என்ன மிச்சசொச்சங்கள் எஞ்சியிருக்கிறதோ அவற்றை கலைத்து விடுவது அல்லது தனியார்மயப்படுத்துவதே அவரது குறிக்கோள் ஆகும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அபிலாஷைகளை உலக அரங்கில் செயல்படுத்துவதற்காக அமெரிக்காவில் ட்ரம்ப் நிர்வாகத்துடன் ஓர் அரசியல் மற்றும் இராணுவக் கூட்டணியே அவர் முன்னோக்கின் அஸ்திவாரமாக உள்ளது.

ஜோன்சனின் நாடாளுமன்ற ஒத்திவைப்பு, பிரெக்ஸிட்டுக்கு அழுத்தமளித்த பிரிட்டிஷ் ஆளும் வர்க்க அணிகளது ஜனநாயக-விரோத மற்றும் தேசியவாத திட்டநிரலை அம்பலப்படுத்துகிறது. பிரெக்ஸிட்டுக்கு வாக்களித்த பல தொழிலாளர்கள், பிரிட்டனின் பிரதான நகர்புற பகுதிகளின் பெரும்பகுதிகளைத் தொழில்துறை பாலைவனங்களாக மாற்றுவதற்குத் தலைமை தாங்கிய வெஸ்ட்மின்ஸ்டரின் ஆளும் உயரடுக்கு அவர்களின் குரோதத்தைப் பதிவு செய்வதற்காக அவ்வாறு வாக்களித்திருந்தனர். ஆனால் இந்த உணர்வை பிரெக்ஸிட்டை ஆதரிக்கும் டோரிக்களும் அப்போது பிரிட்டன் சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்த நைஜல் ஃபாராஜூம் சாதகமாக்கிக் கொண்டார்கள், அவர்கள் புரூசெல்ஸிடம் இருந்து "சுதந்திரம்" மற்றும் புலம்பெயர்ந்தோர்-விரோத நடவடிக்கைகள் தேசிய சுகாதார சேவைக்கு அதிக நிதிகள் வழங்கும் என்றும், "பிரிட்டிஷ் தொழிலாளர்களுக்கே பிரிட்டிஷ் வேலைகள்" என்றும் வாதிட்டனர். இது பொய்களிலேயே மிகப்பெரிய பொய்யாக இருந்தது. பிரெக்ஸிட் என்பது அதிக சிக்கன நடவடிக்கைகள், அரசு ஒடுக்குமுறைக்குத் திரும்புதல், வெளிநாட்டவர் விரோத வெறி மற்றும் தேசியவாதத்தைக் கொண்டு சமூகத்தை நஞ்சூட்டுதல் என்பதை அர்த்தப்படுத்தும்.

பிரெக்ஸிட்டுக்குப் பின்னர் பிரிட்டனின் "உலகளாவிய போட்டித்தன்மைக்காக" அது எதைச் சார்ந்திருக்குமோ அந்த கடுமையான சிக்கன நடவடிக்கைகள் உருவாக்கும் அரசியல் மற்றும் சமூக எதிர்ப்பை ஒடுக்குவதில், அவர் கடந்து செல்லமாட்டார் என்று எந்த கோடும் இல்லை என்பதையே ஜோன்சனின் நாடாளுமன்ற ஒத்திவைப்பு எடுத்துக்காட்டுகிறது. “ஆப்ரேஷன் Yellowhammer” என்ற குறியீட்டு பெயர்கொண்ட நடவடிக்கை “பொது சீர்குலைவு அதிகரிப்பு,” “சமூக பதட்டங்கள்" மற்றும் வேலைநிறுத்தங்களைக் குறித்து எச்சரிக்கிறது. இந்த அச்சுறுத்தலைச் சமாளிக்க 10,000 கலகம் ஒடுக்கும் பொலிஸ் அணிதிரட்டப்படும், அது 30,000 வழமையான துருப்புகள் மற்றும் 20,000 மேலதிக காத்திருப்பு துருப்புகளால் மீளபலப்படுத்தப்படும்.

ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கை தரங்கள் மீதான மரணகதியிலான அச்சுறுத்தலை உணர்ந்திருப்பதானது, மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே ஜோன்சனுக்கு அரசியல் எதிர்ப்பை ஒருங்கிணைத்துள்ளது. ஆனால் ஜோன்சனுக்கு எதிரான போராட்டத்தில் நுழையும் அவர்கள் முகங்கொடுக்கும் தீர்க்கமான அரசியல் பணி என்பது ஆளும் உயரடுக்கின் அனைத்து கன்னைகளிடம் இருந்தும் சுயாதீனமான ஒரு போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை நோக்கி நோக்குநிலை கொள்வதாகும்.

அதிலேயே தங்கியிருப்பதை ஆதரிக்கும் பிரிட்டிஷ் முதலாளித்துவ வர்க்கத்தின் அணி, அதன் கொள்கைகள் மீது நாடாளுமன்றத்தின் புனிதத்தன்மையைத் துணைக்கு இழுத்துப் போர்த்திக் கொள்கின்ற அதேவேளை, தொழிலாள வர்க்கத்திற்கும் ஜனநாயக உரிமைகளுக்கும் விரோதமாக இருப்பதில் ஜோன்சனை விட அது ஒன்றும் குறைந்ததில்லை. அது தங்கியிருப்பதை ஆதரிக்கும் டோரிக்களால் ஆனது, அவர்கள், 2016 வரையில், பிரெக்ஸிட் ஆதரவாளர்கள், தாராளவாத ஜனநாயகவாதிகளுடன் நெருக்கமான கூட்டணியில் இருந்தனர், இந்த தாராளவாத ஜனநாயகவாதிகள் 2015 வரையில் அவர்களின் கூட்டணி பங்காளிகளாகவும், பெருவணிகங்களின் பிளேயரிச தலையாட்டிகளாகவும் இருந்தனர். அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தைப் பாதுகாப்பதில் மட்டுமே வேறுபடுகின்றனர் ஏனென்றால் வர்த்தகப் போர் நடவடிக்கைகளைப் பின்தொடர்வதற்கு ஒரே சந்தையில் உறுப்பினராக இருப்பது மற்றும் அதை அணுகுவது, அதேவேளையில் அக்கண்டத்தில் வாஷிங்டனின் பிரதான கூட்டாளியாக இருப்பதே வணிகம் மற்றும் நிதியின் மேலோங்கிய கண்ணோட்டமாக உள்ளது. ஜோன்சனுக்கு எதிராக அவர்கள் ஜெயித்துவிட்டால், ஐரோப்பிய ஒன்றிய கட்டளையால் சிக்கன நடவடிக்கைகள் திணிக்கப்பட்ட கிரீஸ், போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயினில் நிரூபிக்கப்பட்டதைப் போலவே, அன்றைய தினமே தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தாக்குதல் தொய்வின்றி தொடரப்படும்.

பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தின் "தங்கியிருப்பதை ஆதரிக்கும்" அணி தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் என்று ஒருவர் எந்த பிரமைகளும் கொண்டிருக்க வேண்டாம். ஐரோப்பா எங்கிலும், ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் ஐரோப்பிய ஒன்றியத்தை ஆதரிக்கும் அணிகள், ஜேர்மன் மாபெரும் கூட்டணி அரசின் உயர்மட்டங்களில் நவ-பாசிசவாதிகளை ஊக்குவிப்பதில் இருந்து, பிரான்சில் அமைதியான போராட்டங்களை இமானுவல் மக்ரோன் ஒடுக்குவதும் மற்றும் நாஜி ஒத்துழைப்புவாத சர்வாதிகார பிலிப் பெத்தனை அவர் புகழ்ந்துரைப்பது வரையில், ஜனநாயகம் மீதான கடுமையான தாக்குதல்களை நடத்தி உள்ளன.

மிகவும் வஞ்சகமான அரசியல் பாத்திரம் தொழிற் கட்சி தலைவர் ஜெர்மி கோர்பினால் வகிக்கப்பட்டது. சிக்கன நடவடிக்கைகள் மற்றும் இராணுவவாதத்தைத் தோற்கடிப்பது, தொழிற் கட்சியில் உள்ள பிளேயரிச செல்வாக்கை முடிவுக்குக் கொண்டு வருவது மற்றும் டோரிக்களுக்கு எதிராக போராடுவது ஆகிய வாக்குறுதிகளின் அடிப்படையில் தான் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்காண்டுகளாக, அவர் மூலதன நலன்களைப் பாதுகாப்பதற்கு அவர் தலைமையிலான ஓர் அரசாங்கத்தை நம்பலாம் என்று அவர் விமர்சகர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளைக் கொண்டே, பிளேயரிசவாதிகள் மற்றும் வலதுசாரி ஊடகங்களின் தாக்குதல்களை அவர் எதிர்கொண்டு வருகிறார். இப்போது, ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு டோரிக்களின் கூட்டணியில் தங்கியிருப்பதை ஆதரிக்கும் எதிர்கட்சிகள் அனைத்தையும் ஐக்கியப்படுத்தவும் மற்றும் ஆக்டோபர் 31 பிரெக்ஸிட்டை தாமதப்படுத்தவும் ஒரு "காபந்து அரசாங்கத்திற்கு" தலைமை தாங்க முன்மொழிந்து வருகிறார். இது பிரெக்ஸிட் சம்பந்தமாக தொழிலாள வர்க்கத்தை ஆழமாக பிளவுபடுத்தவும் மற்றும் ஜோன்சனைச் சுற்றி குழுமி நிற்கும் வலதுசாரி சக்திகளைப் பலப்படுத்தவும் மட்டுமே சேவையாற்றும்.

இலண்டன் நகர வங்கியாளர்கள் கோர்பனின் பாத்திரத்தை மிகவும் சரியாக புரிந்து வைத்துள்ளனர், அதனால் தான் பைனான்சியல் டைம்ஸ் தலையங்கம் குறிப்பிடுகையில், “உடன்பாடு எட்டப்படாத பிரெக்ஸிட்டை எதிர்ப்பவர்கள் பின்னர் அவர்களின் கருத்துவேறுபாடுகளை ஒதுக்கி விட்டு, அரசாங்கத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். இது தங்கியிருப்பதை ஆதரிக்கும் மிகவும் தீவிர டோரிக்களுக்கும் மற்றும் தாராளவாத ஜனநாயகவாதிகள் போன்றவர்களுக்கும் கூட உகந்ததாக இருக்காது, பிரெக்ஸிட் நிகழ்முறையைப் பாதிக்கும் சமயத்தில் திரு ஜோன்சனைப் பதவியிலிருந்து இறக்குவது தொழிற் கட்சியின் ஜெர்மி கோர்பினின் கீழ் ஒரு காபந்து அரசாங்கத்தையும் உருவாக்க வேண்டியிருக்கும் — இந்த விளைவு குறித்து அவர்கள் வலதிலிருந்து அஞ்சுகிறார்கள். ஆனால் மேலோங்கிய முன்னுரிமை பிரிட்டிஷ் ஜனநாயகத்தின் பாதுகாப்பாக இருக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டது.

தங்கியிருப்பதை ஆதரிக்கும் ஆளும் வர்க்க அணியின் குறிக்கோள், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதல்ல, மாறாக இலண்டன் நகரின் நலன்களைப் பாதுகாப்பதாகும். கடந்த முறை பிரிட்டனின் ஆளும் உயரடுக்கு 1931 இல் ஒரு தேசிய நல்லிணக்க அரசாங்கத்தில் தஞ்சம் அடைந்தது, அப்போது தொழிற் கட்சி தலைவர் ராம்சே மக்டொனால்ட் வோல் ஸ்ட்ரீட் பொறிவின் பாதிப்பைத் தடுப்பதற்காக என்று கூறி டோரிக்களுடன் இணைந்தார். இதற்கு பாரிய வேலைவாய்ப்பின்மை, ஜேர்மனி மற்றும் இத்தாலியில் பாசிசவாத ஆட்சிகளின் எதிரொலியாக ஓஸ்வால்ட் மொஸ்லெயின் பாசிசவாதிகளது பிரிட்டிஷ் கூட்டரசின் (British Union of Fascists) தோற்றம், அதற்கு வெறும் எட்டாண்டுகளுக்குப் பின்னர், உலகப் போர் கொடூரங்களுக்குள் மனிதயினத்தை மூழ்கடித்தமை என தொழிலாள வர்க்கம் விலை கொடுத்தது.

லியோன் ட்ரொட்ஸ்கி 1929 இல் எழுதுகையில், ஒரு நாடு மாற்றி ஒரு நாட்டில் ஜனநாயகம் ஏற்கனவே சர்வாதிகாரத்திற்கு வழிவிட்டு வரும் ஒரு ஐரோப்பிய கண்டத்தை ஆய்வு செய்தார்:

“இன்றைய தின முரண்பாடுகளின் அழுத்தத்தின் முன்னால், இவை சர்வதேசத்தினது ஆகட்டும் அல்லது உள்நாட்டினது ஆகட்டும் அல்லது, மிகப் பெரும்பாலும், இரண்டும் சேர்ந்ததாக ஆகட்டும், ஜனநாயக அமைப்புகள் நிலைத்து நிற்க முடியாது என்பதை எடுத்துக்காட்டி உள்ளன. நல்லதோ கெட்டதோ, இது தான் உண்மை.

“மின் பொறியியலுடன் உவமைப்படுத்தினால், ஜனநாயகம் என்பதை தேசிய அல்லது சமூக போராட்டத்தால் சுமையேறிய (overload) மின்னோட்டங்களில் இருந்து பாதுகாக்கும் பாதுகாப்பு சுவிட்சுகள் மற்றும் மின்சுற்று தடுப்பான்களின் (circuit breakers) ஒரு அமைப்புமுறையாக வரையறுக்கலாம். நீண்ட நெடுகாலத்திற்கு முன்பிருந்தே, மனிதகுல வரலாற்றின் எந்தவொரு காலத்திலும் நமது எதிர்விரோதங்கள் அளவுக்கு அதிக மின்னேற்றம் அடைந்திருக்கவில்லை. ஐரோப்பிய மின்வடங்களின் வெவ்வேறு இடங்களில் மிகவும் அடிக்கடி மின்வட மிகைசுமையேற்றம் (overload) நிகழ்கிறது. மிகவும் உயர்ந்தளவில் மின்னேற்றம் பெற்ற வர்க்க மற்றும் சர்வதேச முரண்பாடுகளின் பாதிப்பின் கீழ், ஜனநாயக பாதுகாப்பு சுவிட்சுகள் எரிந்து போகின்றன அல்லது வெடித்து விடுகின்றன. இன்றியமையாத விதத்தில் இதை தான் சர்வாதிகாரத்தின் குறுக்கு மின்னோட்ட செயலிழப்பு பிரதிநிதித்துவம் செய்கிறது.”

உலக நிலைமை குறித்த இந்த விவரிப்பு இன்றும் உண்மையைத் தாங்கியுள்ளது. இன்றியமையா சந்தைகள் மற்றும் ஆதாரவளங்கள் மீது கட்டுப்பாட்டைப் பெறுவதன் மீது தீவிரமயப்பட்ட ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதல்கள், வர்க்க விரோதங்களை உடையும் புள்ளிக்குக் கொண்டு வந்துள்ள முன்பில்லாத சமூக சமத்துவமின்மை வளர்ச்சியோடு சேர்ந்து, எவ்வாறு வர்த்தகப் போர் மற்றும் இராணுவ மோதலைத் தூண்டிவிட்டு வருகின்றன என்பதற்கு பிரெக்ஸிட் நெருக்கடி ஒரேயொரு வெளிப்பாடு மட்டுந்தான்.

அதே நேரத்தில், தொழிலாளர்கள்: சீனாவில் இருந்து இந்தியா வரையில், பிரான்சின் "மஞ்சள் சீருடை" போராட்டங்கள் வரையில், ஹாங்காங் மற்றும் போர்த்தோ ரிக்கோவில் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டம் வரையில், மெக்சிகோவில் வாகன உதிரிப்பாக தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் வரையில், அமெரிக்காவில் வாகனத்துறை தொழிலாளர்களின் உள்ளூர உருவாகிக் கொண்டிருக்கும் வேலைநிறுத்த இயக்கம் வரையில் உலகெங்கிலும் போராட்டத்தில் நுழைந்துள்ளனர். இந்த சமூக சக்தி, சர்வதேச தொழிலாள வர்க்கத்தை நோக்கி, பிரிட்டன் தொழிலாளர்கள் அவர்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அவர்களின் போராட்டத்தைத் திருப்ப வேண்டும்.

பிரெக்ஸிட்டை ஆதரிக்கும் அல்லது எதிர்க்கும் ஆளும் வர்க்க பிரிவுகள் உடனான அனைத்து கூட்டணிகளையும் நிராகரிப்பதே பிரிட்டனில் தொழிலாளர்களுக்கு முன்னிருக்கும் ஒரே பாதையாகும். அதற்கு பதிலாக, அவர்கள் ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்கான கோரிக்கையில் வெளிப்படும், சோசலிசத்திற்காக, பிரிட்டிஷ், ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்க அபிவிருத்திக்காக போராட வேண்டும்.

Loading