நூறாயிரக்கணக்கான இந்திய வாகனத் தொழிலாளர்கள் பணிநீக்கங்கள் மற்றும் ஊதிய வெட்டுக்களை எதிர்கொள்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்தியாவில், வாகனங்களின் விற்பனை வீழ்ச்சிக்கு பதிலிறுப்பாக ஏப்ரல் முதல், வாகன உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் 350,000 வேலைகளும், வாகன ஒருங்கிணைப்பு தொழிற்சாலைகளில் 15,000 வேலைகளும் உட்பட, 365,000 க்கு அதிகமான வாகனத் தொழில்துறை தொழிலாளர்களின் வேலைகள் அழிக்கப்பட்டுவிட்டது. இரண்டு தசாப்தங்களில், சென்ற ஆகஸ்டில், பயணிகள் வாகனங்களின் விற்பனை 30 சதவிகிதமும் மற்றும் கார் விற்பனை 41 சதவிகிதமும் குறைந்து நேரடியாக 10வது மாதத்தில் வாகனத் தொழில் கடும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது.

சில கருத்துரையாளர்கள், வரவிருக்கும் மாதங்களில் சுமார் அரை மில்லியன் வேலைகள் குறைக்கப்படும் என்று முன்கணிக்கின்றனர். இந்த தாக்குதல், அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோ, ஐரோப்பா மற்றும் ஆசியா ஆகிய நாடுகளில் உள்ள வாகனத் தொழிலாளர்களின் வேலைகள், ஊதியங்கள் மற்றும் நிலமைகள் மீது அதிகரித்து வரும் பூகோள அளவிலான தாக்குதலின் ஒரு பாகமாகவுள்ளது.

இந்தியாவில் வாகனத் தொழில்துறை, சுமார் 37 மில்லியன் தொழிலாளர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வழங்குகிறது. உற்பத்தியாளர்களுள், மாருதி சுசூகி, ஹோண்டா, டொயோட்டா, ஹூண்டாய், நிசான் மற்றும் பிற ஜப்பானிய மற்றும் கொரிய நிறுவனங்களும், ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்ட் மற்றும் ஃபியட் ஆகிய அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வாகன உற்பத்தி நிறுவனங்களும், மற்றும் டாடா மோட்டார்ஸ், எம்&எம், பஜாஜ் மற்றும் ஹீரோ மோட்டார் கார்ப்பரேசன் போன்ற இந்திய உற்பத்தி நிறுவனங்களும் அடங்கும்.

இந்த கடும் சரிவு, வடக்கு ஹரியான மாநிலத்தில் குருகிராம்-மானேசர்-பவால் வாகனத்துறை மண்டலம், தென் தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் மற்றும் மறைமலை நகர், மேலும் மேற்கு மஹாராஷ்டிராவில் புனே ஆகிய இந்தியாவின் பிரதான வாகன உற்பத்தித் தொழில் பகுதிகளையும் மற்றும் இந்தியா முழுவதிலுமான வாகன உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்களையும் விழுங்கிவிட்டது. முன்னர் இந்திய வாகனத் தொழில்துறையில் பணிபுரிந்தவர்களான பீஹார், ஜார்கண்ட் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய வறிய இந்திய மாநிலங்களிலிருந்து உள்நாட்டிற்குள் புலம்பெயர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தங்களது சொந்த கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் திரும்பி கொண்டிருக்கின்றனர்.

* ஜப்பானிய கூட்டுத்தாபனமான மாருதி சுசூகி நிறுவனம், மானேசர் மற்றும் குர்கானில் அதன் தற்காலிக பணியாளர் சக்தியில் 6 சதவிகிதத்தை குறைத்துள்ளதுடன், செப்டம்பரில் இரண்டு நாட்கள் “உற்பத்தி நாட்கள் இல்லை” என்று அறிவித்தது. ஜூலையில் உற்பத்தி வீதம் 30 முதல் 35 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆகஸ்டில் நிறுவனத்தின் மொத்த விற்பனை (உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி உட்பட), சென்ற ஆண்டு இதே மாதத்தில் இருந்த விற்பனை அளவான 158,000 யூனிட்டுக்களில் இருந்து 32 சதவிகிதத்திற்கு அதிகமாக குறைந்து சுமார் 106,000 யூனிட்டுக்கள் அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளது.

கடந்த 12 மாதங்களில், குருகிராம்-மானேசர்-பவால் தொழில்துறை மண்டலத்தில் 50,000 தொழிலாளர்கள் அவர்களது வேலைகளை இழந்துவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பிராந்தியத்தில் பெரிய வாகன நிறுவனங்களுக்கு விநியோகம் செய்யும் 3,000 வாகன உதிரிபாகங்களின் ஆலைகள் அவற்றின் உற்பத்தியை சுமார் 30 சதவிகிதம் குறைத்துள்ளன.

* 2017-18 ஆம் ஆண்டில், இந்தியாவின் மோட்டார் வாகன ஏற்றுமதியில் 45 சதவிகிதத்தையும் மற்றும் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தியில் 33 சதவிகிதத்தையும் தமிழ்நாடு கொண்டிருந்தது. “ஆசியாவின் டெட்ராய்ட்” என்றறியப்படுவதான அந்த மாநிலத்தின் தலைநகரமான சென்னை, 20 விநாடிகளில் ஒரு காரை தயாரிக்கும் மற்றும் 90 விநாடிகளில் ஒரு வணிக வாகனத்தை தயாரிக்கும் திறனைக் கொண்டது எனக் கூறப்பட்டது.

தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ள வாகனத் தொழில்துறை பணிநீக்கங்கள் மற்றும் வேலை வெட்டுக்கள் பற்றிய நம்பகமான புள்ளிவிபரங்கள் கிடைக்கவில்லை என்றாலும், சமீபத்திய மாதங்களில் 10,000 க்கும் அதிகமான தொழிலாளர்கள் அவர்களது வேலைகளை இழந்துவிட்டனர் என்று Hindu நாளிதழ் தெரிவிக்கிறது. இந்தியாவின் இரண்டாவது பெரிய வணிக வாகன உற்பத்தியாளரான அசோக் லெய்லாண்ட், அதன் ஐந்து ஆலைகளில் தமிழ்நாட்டில் உள்ள இரண்டில் ஐந்து முதல் பதினெட்டு நாட்களுக்கு அதன் உற்பத்தியை இடைநிறுத்தம் செய்துள்ளது.

விற்பனையைப் பொறுத்தவரை, இந்தியாவின் வாகனத் தொழில்துறை உலகில் நான்காவது இடத்திலுள்ளது என்பதுடன், இது இந்திய பொருளாதாரத்தின் மந்தநிலையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உற்பத்தித் துறையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தோராயமாக 50 சதவிகித பங்கையும், மேலும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவிகிதத்தையும் இந்த தொழில்துறை கொண்டுள்ளது.

இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (Society of Indian Automobile Manfacturers-SIAM) ஒரு சமீபத்திய அறிக்கை, வாகன விற்பனை வீழ்ச்சியடைந்தமைக்கு இந்தியாவின் மந்தமான பொருளாதாரம், மற்றும் அதிகரிக்கப்பட்ட சாலை வரிகள், பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் அதிக வட்டி விகிதங்கள் உட்பட அதிகபட்ச உடைமை செலவினங்கள் குறித்து குற்றம்சாட்டியதுடன், அரசாங்கத்திடமிருந்து சலுகைகளை கோரியது.

பிரதம மந்திரி நரேந்திர மோடியின் அரசாங்கம், வட்டி விகிதங்களைக் குறைப்பதன் மூலம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதங்களில் காணப்படும் வீழ்ச்சியை தடுத்து நிறுத்த தீவிரமாக முயற்சிக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு உத்தியோகபூர்வ வட்டி விகிதத்தை நான்கு முறை குறைத்து, அதனை 5.4 சதவிகிதமாக்கியுள்ளது. புதிய கார்களை வாங்கும் அரசுத் துறைகள் மீதான தடையை நீக்குவதன் மூலம் தேவையை அதிகரிக்க அது முயற்சிக்கும் என்றும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

என்றாலும், பணிநீக்கம் செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான வாகனத் தொழிலாளர்களுக்கு எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை. மாதத்திற்கு 6,000 முதல் 8,000 ரூபாய் (86 – 115 அமெரிக்க டாலர்கள்) வரை மட்டுமே சம்பாதிக்கும் ஒப்பந்த வாகனத் தொழிலாளர்கள், மோசமான சூழ்நிலையை எதிர்கொள்கிறார்கள், மேலும் வாகனத் தொழில்துறை நெருக்கடி ஆழமடைகின்ற நிலையில், நிரந்தரத் தொழிலாளர்களுக்கும் அதே நிலை உருவாகும்.

தனது அரசாங்கம் ஒரு சமூக எரிமலையின் மீது அமர்ந்து கொண்டிருக்கிறது என்பதை மோடி நன்கறிவார் அதனால் ஆழ்ந்த அரசாங்க விரோத உணர்வை திசைதிருப்பும் முயற்சியில், இந்து வகுப்புவாதத்தை தூண்டி வருகிறது. முஸ்லீம் பெரும்பான்மை மிக்க ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜனநாயக விரோத இராணுவ அடைப்பை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது என்பதுடன், அசாம் மாநிலத்தில், இந்திய வேலைகளை தட்டிப்பறித்துக் கொள்ளும் “வெளிநாட்டினர்” என்று மோசடியாக நூறாயிரக்கணக்கானவர்களை பழித்துக் கூறி அவர்களை சுற்றிவளைக்க அது திட்டமிடுகிறது.

இந்திய வாகனத் தொழிலாளர்கள் தங்கள் பெருவணிக முதலாளிகளுக்கு சவால் விடத் தொடங்கியுள்ளனர், அத்துடன் அதிக ஊதியங்கள் மற்றும் மேம்பட்ட வேலை நிலைமைகளைக் கோருகின்றனர். ஒரகடம் சிறப்பு பொருளாதார மண்டலத்தில், சுமார் 500 மதர்சன் தானியங்கி வாகனத் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் (Motherson Automotive Technology and Engineering-MATE) தொழிலாளர்கள், புதிதாக உருவாக்கப்பட்ட தங்களது தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கக் கோரி ஆகஸ்ட் 26 அன்று காலவரையற்ற நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.

ஜூலை 18 அன்று, குர்கான்-மானேசர் தொழில்துறை மண்டலத்தைச் சேர்ந்த 1,000 க்கும் மேற்பட்ட வாகனத் தொழிலாளர்கள், இந்திய அரசும் மாருதி சுசூகி நிர்வாகமும் தொடுத்த அரக்கத்தனமான ஜோடிப்பு வழக்கின் மூலம் ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் 13 வாகனத் தொழிலாளர்களை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஒப்பந்த வாகனத் தொழிலாளர்களின் கடுமையான வேலை நிலைமைகளுக்கு எதிராக போராட அவர்கள் துணிந்ததால், புதிதாக உருவாக்கப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர் சங்கத்தின் 12 செயற்குழு உறுப்பினர்கள் உட்பட 13 தொழிலாளர்கள் 2017 ஆம் ஆண்டில் ஜோடிக்கப்பட்ட கொலை குற்றச்சாட்டுக்களின் பேரில் தண்டனைக்கு ஆளானார்கள்.

இந்திய வாகனத் தொழிலாளர்கள் மீதான இந்த தாக்குதல், வாகனத் தொழில்துறை தொழிலாளர்களுக்கு எதிரான பூகோள அளவிலான தாக்குதலின் ஒரு பகுதியாகவுள்ளது. தற்போது, 155,000 வாகனத் தொழிலாளர்கள் தங்களது பெருநிறுவன வாகனத் துறை முதலாளிகள் திணித்துள்ள நிலைமைகளை எதிர்த்துப் போராட பெருமளவில் வாக்களித்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவில் 46,000 இற்கு மேற்பட்ட ஜெனரல் மோட்டார்ஸ் (GM) தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர். தென் கொரியாவில் கடந்த வாரம், 8,000 ஜெனரல் மோட்டார்ஸ் தொழிலாளர்கள் ஊதியம் மற்றும் மேலதிக கொடுப்பனவுத் தொகை முடக்கம் ஆகியவற்றிற்கு எதிராக இரண்டு நாள் வேலைநிறுத்தத்தை நடத்தினர்.

நிறுவனத்தின் கோரிக்கைகளை தொழிலாளர்கள் மீது திணிக்க இந்திய வாகனத் தொழிற்சங்கங்கள் வாகனத்துறை முதலாளிகளுடன் கைகோர்த்து செயல்படுகின்றன.

உதாரணமாக, நிறுவன கட்டுப்பாட்டிலுள்ள மற்றும் அரசு அனுமதி பெற்ற மாருதி உத்யோக் காம்கர் யூனியனின் பொதுச் செயலாளர் குல்தீப் ஜங்கு, மாருதி சுசூகி நிர்வாகம் “நீண்ட காலமாக பணிபுரிந்த ஒப்பந்தப் பணியாளர்களை விடுப்பில் அனுப்புவதற்கு பதிலாக, தற்காலிகத் தொழிலாளர்களை கூலிக்கு அமர்த்துவதை நிறுத்த வேண்டும்,” என்று ஊடகத்திற்கு தெரிவித்தார்.

இந்திய தொழிற்சங்கங்களுக்கான மையத்தின் (CITU) தலைவர் ஏ. சௌந்தரராஜன், நிர்வாகம் “இந்த [சாதாரண மற்றும் ஒப்பந்த] தொழிலாளர்களை எளிதாக பணிநீக்கம் செய்யமுடியும், ஏனென்றால் சாதாரண மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஒருமைப்பட அனுமதிக்கப்படுவதில்லை,” என்று NewsClick ஊடகத்திற்கு தெரிவித்தார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்டுப்பாட்டிலுள்ள தொழிற்சங்க கூட்டமைப்பு வாகனத் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கப்படுவதற்கு எந்தவித எதிர்ப்பையும் காட்டவில்லை என்பதுடன், நிறுவனத்தின் தாக்குதல்களை எதிர்த்துப் போராடுவது குறித்த வாகனத் தொழிலாளர்களின் முயற்சிகளை முறையாக தனிமைப்படுத்துகிறது.

இந்திய தொழிலாளர்கள், வாகனத் துறை முதலாளிகள் மற்றும் அரசாங்கம் உடனான அனைத்து சங்கங்களின் ஒத்துழைப்பை நிராகரிக்க வேண்டும் என்பதுடன், வாகனத் தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த தேசிய மற்றும் சர்வதேச அளவிலான இயக்கத்தை உருவாக்க சாமானிய தொழிற்சாலைக் குழுக்களை கட்டமைப்பதற்கு முன்முயற்சி எடுக்க வேண்டும். இந்திய வாகனத் தொழிலாளர்களுக்கான வேலைகள், வாழ்வூதியம் மற்றும் ஏற்புடைய வேலை நிலைமைகள் ஆகியவற்றை பாதுகாப்பது என்பது, உலகெங்கிலும் உள்ள அவர்களது வர்க்க சகோதர சகோதரிகள் உடனான அவர்களது ஒற்றுமைக்கான போராட்டத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது.

Loading