உலக சோசலிசமே காலநிலை மாற்றத்திற்கான ஒரே தீர்வு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்த வெள்ளிக்கிழமை 150 இக்கும் அதிகமான நாடுகளில் மில்லியன் கணக்கான மாணவர்களும், இளைஞர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களும் காலநிலை மாற்றத்தைக் குறைக்கவும் மற்றும் மாற்றவும் நீண்டகால அடிப்படையில் உடனடி நடவடிக்கைகள் கோரி உலகந்தழுவிய உலக காலநிலை வேலைநிறுத்தத்தில் பங்கெடுக்க உள்ளனர். சர்வதேச அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த போராட்டங்கள், உலகளாவிய புவிவெப்பமயமாதலுக்கு உலகெங்கிலுமான அரசாங்கங்கள் எந்த குறிப்பிட்ட நடவடிக்கைகளும் எடுக்க திராணியற்று இருப்பது குறித்து இளைஞர்களின் அதிகரித்தளவிலான புரிதலுக்கு விடையிறுப்பாக ஏற்பாடு செய்யப்படுகின்றன.

காலநிலை மாற்றம் ஏற்கனவே உலக மக்களின் பெரும் பிரிவினர் மீது நாசகரமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. டோரியன் சூறாவளி போன்ற படுபயங்கர சுற்றுச்சூழல் சம்பவங்கள் பில்லியன் கணக்கான டாலர்களை நாசப்படுத்துவதுடன், டஜன் கணக்கானவர்களின் ஒருவேளை ஆயிரக் கணக்கானவர்களின் வாழ்வைப் பறிக்கின்றன. உலக புவிவெப்பமயமாதல் அதிகரித்தளவில் விவசாயம் செய்யவியலாத நிலைமையை ஏற்படுத்துவதால் மனிதகுலத்தில் 821 மில்லியன் மக்கள் பட்டினி அபாயத்தில் உள்ளதாகவும், அனேகமாக அடுத்த பத்தாண்டுகளில் 3.2 பில்லியன் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் வாழவியலாத பகுதிகளில் வாழ விடப்படுவார்கள் என்றும் சமீபத்திய அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

உள்ளவாறே, உலக புவிவெப்பமயமாதலை மனிதகுலத்தில் எல்லோரையும் சமமாக பாவிக்கும் ஒரு கண்ணாடியைக் கொண்டு பார்க்க முடியாது. உலகெங்கிலுமான அதிகரித்தளவில் பலம் வாய்ந்த சூறாவளிகள், புயல்கள் மற்றும் காட்டுத்தீ ஆகியவை எடுத்துக்காட்டுவதைப் போல, மிகவும் வறிய 90 சதவீதத்தினர் தான், அதாவது தொழிலாள வர்க்கமே, சுற்றுச்சூழல் நெருக்கடியால் அதிகமாக பாதிக்கப்படுகிறது, இதனால் ஏற்கனவே வறுமை, பட்டினி மற்றும் போரை முகங்கொடுத்து வருகின்ற இந்த நூறு மில்லியன் கணக்கானவர்களின் சமூக அவலநிலை இன்னும் அதிகரிக்கிறது. ஏற்கனவே குறைந்தபட்சம் 210மில்லியன் மக்கள் "காலநிலை மாற்ற அகதிகள்" என்றழைக்கப்படுகின்றனர் — இவர்கள் காலநிலை மாற்றம் சம்பந்தமான பேரழிவுகளால் அவர்களின் வீடுகளை விட்டு நிரந்தரமாக தப்பிச் செல்ல நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.2050 க்குள் ஒரு பில்லியன் பேர்வரை இடம் பெயர்வார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிடுகிறது.

இதுபோன்ற பேரழிவுகள் இன்னும் அதிக பேரழிவுகரமான சம்பவங்களுக்கு முன்னோட்டமாக உள்ளன. உலக புவிவெப்பமயமாதல் தடுக்கப்படவில்லை என்றால், மில்லியன் கணக்கான தாவரங்களும் விலங்கினங்களும் வேகமாக மாறி வரும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்து கொள்ள இயலாமல் அழிந்து போகக்கூடும். பவளப்பாறை அழுத்தம் காரணமாக, அதாவது கடலின் வெப்ப அதிகரிப்பு மற்றும் அதிக கடல் அமிலத்தன்மையின் காரணமாக பவளப் பாறைகள் ஏற்படுத்தும் அழுத்தத்தால், பிரமாண்டமான பெருந்தடுப்பு மலைக்குன்றுகள் அழிக்கப்பட்டு, புவியின் உணவுச் சங்கிலி மற்றும் பொதுவான சுற்றுச்சூழல் ஸ்திரத்தன்மையின் முக்கிய பாகங்கள் அழிந்து போகலாம். அமேசன் மழைக்காடு எரிந்து போய், புவியின் நிலம் சார்ந்த பல உயிரினங்களின் பிறப்பிடங்களில் ஒன்று வெறும் சாம்பலாக மாறிவிடக்கூடும். அண்டார்டிகா மற்றும் கிரீன்லாந்தின் பனிப்பாறைகள் கடலில் உடைந்து விழுந்தால், கடல் மட்டங்கள் அதிகரித்து, உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு அல்லது ஒன்றரை பங்கிற்கு இடையிலான மக்களின் வசிப்பிடமாக விளங்கும் புவியின் கடலோர நகரங்கள் மூழ்கடிக்கபடலாம்.

காலநிலை மாற்றத்தை மாற்றுவதற்கான எந்தவொரு தீவிர முயற்சியும், படிமான எரிபொருள்களைச் சார்ந்திருப்பதில் இருந்து புதுப்பிக்கத்தக்க எரிபொருளுக்கு மாறுவதற்காக உலகின் எரிசக்தித்துறையை உலகளவில் விஞ்ஞானபூர்வமாக மறுசீரமைப்பதைச் சார்ந்திருக்கும். அதையொட்டி, இது போக்குவரத்து, பண்டங்கள் பரிவர்த்தனை, விவசாயம் மற்றும் இறுதியில் ஒட்டுமொத்தமாக சமூகத்தையே அதேயளவிற்கு மாற்றுவதை உள்ளடக்கி இருக்கும். இதுபோன்ற மாற்றங்களுக்காக தேசிய எல்லைகள், பெருநிறுவன இலாபங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு நலன்களை அவசியத்திற்கேற்ப வெட்ட வேண்டியிருக்கும். ஆனால் இந்த அமைப்புகள் முதலாளித்துவத்துடன் பிணைந்துள்ளன: அதாவது உலகம் எதிர்விரோத தேசிய அரசுகளாக பிளவுபட்டிருப்பதுடன், தனியார் இலாப திரட்சிக்கு பொருளாதார வாழ்வு அடிபணிய செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்று உலகின் உற்பத்தி சக்திகளைச் சர்வதேச அளவில் ஒருங்கிணைக்க தகைமை கொண்ட பொருளாதார வாழ்வின் ஒரே வடிவம் முதலாளித்துவத்திற்கு எதிரானதாகும்: சோசலிசம், இது தான் உலகின் உற்பத்தி சக்திகளைச் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டில் நிறுத்தும்.

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை இந்த கேள்வியிலிருந்து பிரிக்க முடியாது. ஐக்கிய நாடுகள் சபையும் உலகெங்கிலுமான பல்வேறு "இடது கட்சிகளும்" அவை காலநிலை மாற்றத்திற்கு எந்த அர்த்தமுள்ள தீர்வையும் முன்வைக்க இலாயக்கற்றவை மற்றும் அவற்றுக்கு விருப்பமும் இல்லை என்பதை நிரூபித்துக் காட்டியுள்ள நிலையில், அவற்றுக்குச் செய்யும் முறையீடுகள் எதற்கும் பிரயோஜனமற்றவை. மில்லியன் கணக்கானவர்களின் உணர்வுகள் சுற்றுச்சூழல் நெருக்கடிக்குத் தீர்வுகளைக் கோருகின்ற நிலையிலும் கூட, ஒவ்வொரு நாட்டு தலைவர்களும் 2015 பாரீஸ் உடன்படிக்கை உட்பட எந்தவொரு காலநிலை மாற்ற உடன்படிக்கையும் மாசுபடுத்தும் எரிவாயு வெளியேற்றங்கள் மீது நிஜமான கட்டுப்பாடுகள் எதுவும் கொண்டு வராமல் இருப்பதை உறுதிப்படுத்தவும், அதற்கு பதிலாக "அவர்களின்" எரிசக்தி பெருநிறுவனங்களுக்குப் புதிய பாதுகாப்புகள் வழங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் முண்டியடிக்கின்றனர்.

இத்தகைய தீர்மானங்கள் அதிகரித்தளவில் பிரதான ஏகாதிபத்திய சக்திகளால் அவற்றின் புவிசார் அரசியல் விரோதிகளை மிரட்டுவதற்குரிய கூறுபாடுகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. பராக் ஒபாமாவின் பதவி காலத்தில், சீனா தான் உலகின் மிக அதிகமாக மாசுபடுத்தும் நாடாக இருந்தது என்ற உண்மையானது வர்த்தக பேரம்பேசல்களில் நிறைவேற்றும் சாதனமாக்கி கொள்ளும் முயற்சியில் பயன்படுத்தப்பட்டது. ஜனநாயகக் கட்சியின் தற்போதைய 2020 ஜனாதிபதி வேட்பாளர்கள் ஜோ பைடென் மற்றும் பேர்ணி சாண்டர்ஸ் இருவருமே தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அனேகமான மிகவும் ஆக்ரோஷமான நடவடிக்கைகள் எடுக்க உறுதியளித்துள்ளனர்.

பெருநிறுவனங்களை அதிக "மாசுபாடற்ற" நிறுவனங்களாக ஆக்கும் முயற்சிகளோ படுமோசமாக உள்ளன, இந்த நெருக்கடிக்குச் சாமானிய மக்கள் மீது பழிபோடும் முயற்சியில் அவற்றின் செயலதிகாரிகள் "மிதமிஞ்சிய மக்கள்தொகையால்" "அதிக நுகர்வு" இருப்பது தான் காலநிலை மாற்றத்திற்கு நிஜமான காரணம் என்று பரப்பிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில், புவிவெப்பமயமாதலை முதலிடத்தில் இருந்து உருவாக்கும் வணிகங்கள் இந்த பெருநிறுவன தலைவர்களின் மேற்பார்வையில் நடக்கிறது. மாசுபடுத்தும் மொத்த வாயுக்களில் 70 சதவீதம் 1988 இல் இருந்து 2015 வரையில் வெறும் 100 பிரதான நிறுவனங்களால் வெளியிடப்பட்டதாக 2017 Carbon Majors அறிக்கை எடுத்துக்காட்டியது.

ஆகவே காலநிலை மாற்ற போராட்டங்களில் பங்கெடுக்கும் மாணவர்களும் இளைஞர்களும் நாடாளுமன்ற அரசியலில் இருந்து விலகி தொழிலாள வர்க்கத்தை நோக்கி திரும்புவது முக்கியமாகும். புவிவெப்பமயமாதலின் தாக்கத்தின் சுமையைத் தொழிலாள வர்க்கம் தான் அனுபவிக்கவிருக்கிறது. தொழிலாள வர்க்கம் தான் புறநிலைரீதியாகவும் அதிகரித்தளவிலும் தன்னை ஒரு சர்வதேச வர்க்கமாக வரையறுத்து வருகிறது. தொழிலாள வர்க்கத்தின் சமூக நலன்கள் தான், முதலாளித்துவத்தைத் தூக்கியெறிவதிலும், உற்பத்தி கருவிகளின் தனியுடைமையை நீக்குவதிலும், பாதுகாப்பு மற்றும் சுகாதார சூழல் உட்பட மனித தேவையைப் பூர்த்தி செய்யும் அடிப்படையில் ஒரு பொருளாதார அமைப்புமுறையை உருவாக்குவதிலும் தங்கியுள்ளன.

இந்த இயக்கத்தின் புறநிலை அடித்தளமானது, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு நாளொன்று 100மில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்தி ஏற்கனவே வாகனத் தொழில்துறை எங்கிலும் அதிர்ச்சி அலைகளை அனுப்பி உள்ள ஜெனரல் மோட்டார்ஸின் வாகனத்துறை தொழிலாளர்கள், ஐக்கிய வாகனத்துறை தொழிற்சங்கத்தை (UAW) எதிர்த்து நடத்தி வரும் வேலைநிறுத்தத்தில் மிகவும் கூர்மையாக வெளிப்பட்டுள்ளது. இது இந்தாண்டு தொடக்கத்தில் மெக்சிகோ வாகனத்துறை தொழிலாளர்களின் ஒரு வேலைநிறுத்த அலை மற்றும் பிரான்சில் "மஞ்சள் சீருடையாளர்கள்" போராட்டம், ஹாங்காங்கில் வெகுஜன போராட்டங்கள் மற்றும் ஆட்சியிலிருந்த ஆளுநரைப் பதவி விலகச் செய்த போர்த்தோ ரிக்கோ ஆர்ப்பாட்டங்கள் போன்ற பாரிய இயக்கங்களுக்குப் பின்னர் வந்துள்ளது.

காலநிலை மாற்றம், வேலை அழிப்புகள், அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மை, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் மற்றும் உலக போர் அச்சுறுத்தல் என நமது காலத்திய மிகப்பெரிய சமூக பிரச்சினைகளைத் தீர்க்க தேவையான தொழில்நுட்பங்கள் உள்ளன. அதே நேரத்தில், விஞ்ஞானபூர்வ திட்டமிடல் உலக மக்களின் வாழ்க்கை தரம் மற்றும் வாழும் தரத்தை அதிகரிப்பதை உறுதிப்படுத்தும். உலக சோசலிச புரட்சி முறை மூலமாக, இந்த நோக்கத்தை எட்டக்கூடிய ஒரே சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கமாகும். சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு இந்த முன்னோக்கிற்காக போராட இளைஞர்கள் அனைவரையும் வலியுறுத்துகிறது.

Loading