சீன ட்ரொட்ஸ்கிஸ்ட் பெங் சூசி 1951 இல் நான்காம் அகிலத்திற்கு வழங்கிய அறிக்கையின் அறிமுகம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை  இங்கே  காணலாம்

1949 சீனப் புரட்சியைக் குறித்த பின்வரும்அறிக்கை, நவம்பர் 1951 இல் நான்காம் அகிலத்தின் மூன்றாம் மாநாட்டிற்கு மூத்த சீன ட்ரொட்ஸ்கிசவாதியான பெங் சூசி (Peng Shuzhi) ஆல் வழங்கப்பட்டதாகும். அது 1949 சீனப் புரட்சியின் தன்மையை குறித்து முக்கிய உட்பார்வையை வழங்குவதாலும், நான்காம் அகிலத்தினுள் அது முன்கொண்டு வந்த அரசியல் மற்றும் தத்துவார்த்த பிரச்சினைகளுக்காகவும் உலக சோசலிச வலைத் தளம் அந்த அறிக்கையை மறுபிரசுரம் செய்கிறது.

சியாங் கேய்-ஷேக்கின் கோமின்டாங் சர்வாதிகாரத்தினது தோல்வியும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) வெற்றியும் பல முக்கிய கேள்விகளை முன்நிறுத்தியது. இதற்கு கவனமான ஆய்வும் பரிசீலனையும் அவசியமாகி இருந்தது. திவாலான இரண்டு கட்ட புரட்சியின் அடிப்படையில் ஒரு ஸ்ராலினிச கட்சி, விவசாய ஆயுதப்படைகளின் தலைமையில் எவ்வாறு அதிகாரத்தைக் கைப்பற்ற முடிந்தது? இந்த புதிய ஆட்சியின் வர்க்க தன்மை என்ன? மிக முக்கியமாக, நான்காம் அகிலமும் சீன ட்ரொட்ஸ்கிஸ்டுகளும் அந்த தொழிலாள வர்க்கத்தினுள் என்ன முன்னோக்கைக் கொண்டு போராடுவார்கள்?

பெங் சூசி

நான்காம் அகிலம் அதன் மூன்றாவது மாநாட்டில், அரசியல்ரீதியில் ஒரேபடித்தான தன்மையிலான ஓர் உலக கட்சியாக இருக்கவில்லை. மிஷேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேல் தலைமையில் ஒரு சந்தர்ப்பவாத போக்கு எழுந்திருந்தது. அது, போருக்குப் பிந்தைய முதலாளித்துவ மறுஸ்திரப்பாட்டின் அழுத்தின் கீழ், தொழிலாள வர்க்கத்தில் சமூக ஜனநாயக, முதலாளித்துவ தேசியவாத மற்றும் குறிப்பாக ஸ்ராலினிசத்தால் மேலாதிக்கம் செலுத்திய அதிகாரத்துவத் தலைமைக்கு அடிபணிந்துபோனது.

கிழக்கு ஐரோப்பாவின் இடைத்தாங்கி அரசுகள் (buffer states) என்றழைக்கப்பட்டவை உருவானதைக் குறித்த ஒரு கவனமான ஆய்வுக்குப் பின்னர், நான்காம் அகிலம் அவற்றை ஊனமுற்ற தொழிலாளர் அரசுகள் என்று வரையறுத்திருந்தது. பனிப்போரின் ஆரம்பம் மற்றும் 1948 இல் மார்ஷல் திட்டம் தொடங்கப்பட்டமைக்கு, ஸ்ராலினும் சோவியத் அதிகாரத்துவமும், தனியார் நிறுவனங்களைத் தேசியமயமாக்கியும் மற்றும் கிழக்கு ஐரோப்பா எங்கிலும் அதிகாரத்துவ பொருளாதார திட்டமிடலை அமைப்புமயப்படுத்தியும் இதற்கு விடையிறுத்தனர். எவ்வாறாயினும் "ஊனமுற்ற" என்ற அந்த சொல்லை வலியுறுத்த வேண்டியிருந்தது. தொழிலாள வர்க்கத்தின் எந்த அரசியல் குரலும் இல்லாததும் அவர்களின் போராட்டங்கள் ஈவிரக்கமின்றி நசுக்கப்பட்டும் வந்த இத்தகைய "தொழிலாளர் அரசுகள்,” இவற்றின் நிலையில், பிறப்பிலேயே ஊனமுற்றவையாக இருந்தன.

ஒரு உருக்குலைந்த தொழிலாளர் அரசாக சோவியத் ஒன்றியத்தின் விடயத்தைப் போலவே, இந்த ஆட்சிகளும் முதலாளித்துவத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையே இடைமருவு அரசுகளாக இருந்தன. ஒன்று, சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் பாகமாக தொழிலாள வர்க்கம் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தை தூக்கியெறிய ஓர் அரசியல் புரட்சியை நடத்த வேண்டும், அல்லது ஸ்ராலினிஸ்டுக்கள் அதிகாரத்தில் இருந்தால் முதலாளித்துவத்தை மீட்டமைப்பதன் மூலமாக அவர்கள் தங்களின் தனிச்சலுகைகளைப் உறுதிப்படுத்திக்கொள்ள முனைவார்கள் என்பதை நான்காம் அகிலம் அறிவுறுத்தியது.

பப்லோவும் மண்டேலும் இந்த தற்காலிக வரையறையை அதற்கு நேரெதிராக மாற்றினார்கள். பப்லோவின் கருத்துப்படி, லியோன் ட்ரொட்ஸ்கி விவரித்ததைப் போல, ஸ்ராலினிசம் இப்போது தொழிலாளர் இயக்கத்தில் ஓர் எதிர்-புரட்சிகர புற்றுநோய் இல்லை, மாறாக பாரிய அழுத்தத்தின் கீழ் அதுவொரு புரட்சிகர நோக்குநிலை எடுக்கும் என்றார். முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கான மாற்றமானது "ஊனமுற்ற தொழிலாளர் அரசுகளினது நூற்றாண்டுகளை" உள்ளடக்கியிருக்கும் என்றவர் கருதினார். இந்த சூழலில், ஸ்ராலினிச அதிகாரத்துவவாதிகள் சுய-சீர்திருத்தத்திற்குள் சென்றுவிடுவார்கள் என்பதாக கூறி, நான்காம் அகிலத்தின் பங்கு அவர்களுக்கு ஆலோசகர்களாகவும் விமர்சகர்களாகவும் ஒரு பாத்திரத்தையே வகிக்க முடியும் என்ற அளவுக்கு குறைக்கப்பட்டது. பப்லோ சீனப் புரட்சியை அவரின் திருத்தல்வாத ஆய்வறிக்கைக்கான மேலதிக ஆதாரமாக கருதினார்.

பெங், மூன்றாம் மாநாட்டுக்கான அவரது அறிக்கையில், CCP அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு உதவிய விதிவிலக்கான சூழ்நிலைகளை மிகக் கவனமாக விவரித்தார். இவற்றில், நலிந்து போயிருந்த கோமின்டாங் ஆட்சியின் உள்ளார்ந்த அழுகல் மற்றும் ஊழல், மற்றும் அதனது பாதையை ஒரு அவநம்பிக்கைக்குரியதாக கருதி அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் கைவிடப்பட்டிருந்தமை, அக்டோபர் புரட்சியின் பெருமைகளை சோவியத் ஸ்ராலினிஸ்டுகள் மூலமாக CCP பொய்யாக கோருவதற்கான தகமை, மற்றும் சோவியத் ஒன்றியத்திடமிருந்து மாவோவின் விவசாய ஆயுதப்படைகளுக்கு கிடைத்த இராணுவ உதவிகள் ஆகியவை அதில் உள்ளடங்கி இருந்தன.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) வெற்றி, ஸ்ராலினிச வழிகாட்டுதல்களை மீறி "பாரிய மக்கள் அழுத்தத்தின்" விளைவு என்று வாதிட்ட மண்டேலுடன் [ஜேர்மைன்], பெங் அவர் அறிக்கையில் அதையொரு பிரச்சினையாக எடுத்திருந்தார்.

இரண்டாம் உலக போருக்குப் பின்னர், ஸ்ராலின், மதிப்பிழந்த முதலாளித்துவ கட்சிகளுடன் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அரசாங்கங்களை உருவாக்கும் என்று வலியுறுத்தி, அவ்விதத்தில் தளர்ந்து தள்ளாடிக் கொண்டிருந்த முதலாளித்துவ ஆட்சிக்கு முட்டுக் கொடுத்து, தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியைக் காட்டிக் கொடுத்தார். பிரான்ஸ் மற்றும் இத்தாலியில், ஸ்ராலினிஸ்டுகள் தொழிலாள வர்க்கத்தை முற்றாக நிராயுதபாணியாக்கி, சோசலிசத்திற்கான எந்தவொரு போராட்டத்தையும் முடக்கினார்கள்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சொல்லுக்குச்சொல் மாஸ்கோவின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றியது. மாவோ இரண்டாண்டுகளாக சியாங் கேய்-ஷேக் உடன் ஒரு கூட்டணி அரசாங்கம் அமைக்க முயன்று வந்தார் என்பதுடன், யெனெனில் (Yenan) CCP இன் பலமான பிடியைத் தேசியவாத ஆயுதப்படைகள் கைப்பற்றி, மாவோவுக்கு கைது ஆணை பிறப்பித்த பின்னரும் கூட, சியாங் கேய்-ஷேக்கை தூக்கியெறிவதற்கு அழைப்பு விடுக்க மறுத்தார்.

“பாரிய பெருந்திரளான மக்கள் அழுத்தத்திற்கு" விடையிறுப்பதில் இருந்து வெகுதூரம் விலகி, CCP, தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள், மாணவர்களின் போராட்டங்கள் மற்றும் கிராமப்புற மக்களின் அமைதியின்மையைத் தடுத்தது. இது, சியாங் கேய்-ஷேக் அவரின் படைகளைப் பலப்படுத்தி நகரங்கள் மீது கட்டுப்பாட்டை எடுக்க அனுமதித்து, மிகப் பெரியளவில் புரட்சிகர இயக்கத்தை ஆபத்திற்குட்படுத்தியது. மாவோ இறுதியில் அக்டோபர் 1947 இல் சியாங் கேய்-ஷேக்கை தூக்கியெறிய அழைப்பு விடுத்தபோது, அது ஸ்ராலினுடனான முரண்பாட்டினால் அல்ல, மாறாக வாஷிங்டனின் ஆக்ரோஷ பனிப்போர் கொள்கைகளுக்கு ஸ்ராலினின் விடையிறுப்பின் காரணத்தினாலாகும்.

பெங், சீன மற்றும் யூகோஸ்லாவிய நிலைமைகளுக்கு இடையிலான வேறுபாடுகளை வரைந்து காட்டினார், அங்கே யூகோஸ்லாவியாவில் ஜோசிப் டிட்டோவின் கீழ் கம்யூனிஸ்ட் கட்சி, ஜேர்மன் இராணுவத்திற்கும் மற்றும் அதன் ஒத்துழைப்பாளர்களுக்கும் எதிராக கிளர்ச்சியாளர்களின் யுத்தத்தின் கோரிக்கைகளினால் ஸ்ராலின் கட்டளையிட்ட வரம்புகளை மீறுமாறு நிர்பந்திக்கப்பட்டிருந்தது. ஸ்ராலின் மற்றும் அவரின் ஏகாதிபத்திய கூட்டாளிகளின் ஆதரவுடன் 1944 இல் முதலாளித்துவ வர்க்கத்தின் ஓர் அணியுடன் யூகோஸ்லாவியாவில் அமைக்கப்பட்ட அந்த கூட்டரசாங்கம் விரைவிலேயே வீழ்ச்சி அடைந்தது. கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி, அதற்கடுத்த மூன்றாண்டுகளில் தொழில்துறையின் முக்கிய பிரிவுகளை தேசியமயமாக்கியது. 1948 இல் டிட்டோவிற்கும் ஸ்ராலினுக்கும் இடையே ஒரு வெளிப்படையான மோதல் வெடித்தது.

இதற்கு நேரெதிராக, மாவோ, டிட்டோவுக்கு எதிராக ஸ்ராலினின் பக்கம் சார்ந்தது உட்பட மாஸ்கோவின் நிலைப்பாட்டுடன் பிணைத்துக் கொண்டார். அவரின் "புதிய ஜனநாயகம்" வேலைத்திட்டத்தின் கீழ், மாவோ, சியாங் கேய்-ஷேக் உடன் தாய்வானுக்குத் தப்பி சென்ற "அதிகாரத்துவ முதலாளித்துவவாதிகளை" தவிர்த்து, வெளிப்படையாகவே சீன மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் சொத்துடைமை மற்றும் இலாபங்களை பாதுகாத்தார். அவரது அரசாங்கம் குறிப்பாக முதலாளித்துவ வர்க்கம் மற்றும் குட்டி-முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதிகளைக் கொண்டிருந்தது. 1950 இல் கொரிய போர் வெடித்த போதுதான், அது CCP ஐ 1953 இல் அறிவிக்கப்பட்ட அதிகாரத்துவ சோவியத் பாணியிலான பாதைகளில் முதல் ஐந்தாண்டு பொருளாதார திட்டத்துடன் முதலாளித்துவ சொத்துடைமைகளைத் தேசியமயமாக்குவதை விரிவுபடுத்த நிர்பந்தித்தது. சீன முதலாளித்துவ வர்க்கம் மீதான முழுமையான சொத்து பறிமுதல் நடவடிக்கை 1956 இல் தான் நிறைவடைந்தது.

பெங் அபிவிருத்தி செய்திருந்த பகுப்பாய்வு மாவோ ஆட்சி குறித்து பப்லோ மற்றும் மண்டேலின் புகழுரைகளைக் குறுக்காக வெட்டியது. மே 1952 இல் நான்காம் அகிலத்தின் 11 வது பிளினத்தின் சர்வதேச செயற்குழு பேரவையில் (International Executive Committee - IEC), மண்டேல் வழங்கிய ஓர் அறிக்கை பெங்கை மட்டந்தட்டி, அவரை ஒரு குறுங்குழுவாதியாக முத்திரை குத்துவதை நோக்கி திரும்பி இருந்தது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் திடீர் வலது, இடது திருப்பங்களைக் கொண்ட சந்தர்ப்பவாத கொள்கைகளை நிராகரித்துவிட்டு, மண்டேல் அந்த ஆட்சியின் "இடது திருப்பங்களை", தவிர்க்கவியலாமல் உண்மையான சோசலிசத்தை நோக்கி அணிவகுப்பதற்கான முன்அறிகுறியாக வலியுறுத்தினார்.

“சீனக் கம்யூனிஸ்ட் கட்சி,” “ஒரு சந்தர்ப்பவாத மற்றும் அனுபவவாத பாணியில் தொடங்கியுள்ளது, இது உண்மை தான், ஆனால் அது நிரந்தர புரட்சி தத்துவத்தை அதன் சொந்த பாணியில் செயல்படுத்துவதற்கான யதார்த்தத்தைத் தொடங்கி உள்ளது” என மண்டேல் அறிவித்தார். லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவம் விவரித்ததாவது, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் தொல்சீர் முதலாளித்துவ புரட்சிகள் நடத்திய பணிகளை, சீனா போன்ற காலங்கடந்து முதலாளித்துவ அபிவிருத்தி அடைந்த நாடுகளில், முதலாளித்துவ வர்க்கம் அல்ல, தொழிலாள வர்க்கமே நடத்துவதற்குத் தகைமை கொண்டது, மேலும் அவ்வாறு செய்கையில் அது சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் பாகமாக சோசலிச கொள்கைகளை நடைமுறைப்படுத்த நிர்பந்திக்கப்படும் என்று விவரித்தது.

ஆனால் மாவோவின் "புதிய ஜனநாயகம்,” புரட்சியின் முதலாவது முதலாளித்துவ கட்டத்தில் முதலாளி வர்க்கத்திற்கு தொழிலாள வர்க்கத்தை அடிபணிய செய்து, அதேவேளையில் சோசலிசத்திற்கான போராட்டத்தை தொலைதூர எதிர்காலத்திற்குப் பின்தள்ளிப்போட்டிருந்த, மதிப்பிழந்த மென்ஷிவிக் இரண்டு-கட்ட தத்துவத்தின் புத்துயிரூட்டலாக இருந்தது. மாவோயிச ஆட்சி அதன் சொந்த உயிர்பிழைப்புக்காக, கொரிய போர் மற்றும் சீனா மீதான அமெரிக்க பொருளாதார தடைகளால், அதன் சொந்த இரண்டு-கட்ட தத்துவத்ததிற்கே முற்றிலும் முரண்பட்ட நடவடிக்கைகளை எடுக்க நிர்பந்திக்கப்பட்டது. எவ்வாறிருப்பினும் இது எந்த அர்த்தத்திலும் மாவோ ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி முன்னோக்கை தழுவியிருந்ததைக் குறிக்கவில்லை, இது அடுத்தடுத்து அதன் கொள்கைகளின் நெளிவு சுளிவுகளில் வெளிப்பட்டவாறு, இரண்டு-கட்ட தத்துவத்தை நியாயப்படுத்தியமை இறுதியில், முதலாளித்துவ மீட்சியில் போய் முடிந்தது.

மண்டேல் அறிவித்தார், பெங் "கம்யூனிஸ்ட் கட்சியின் கடந்த கால குற்றங்களை, இன்று அது அவ்வாறு செய்யவில்லை என்ற போதும், தொடர்ந்து பிடிவாதமாக கண்டிப்பதன் மூலமாக, உள்ளது உள்ளவாறே யதார்த்தத்திற்கு" அவர் கண்களை மூடிக் கொண்டு அவநம்பிக்கைவாதம் மற்றும் ஐயுறவுவாதத்தை நோக்கி செல்கின்றார் என்றார். CCP இப்போது ட்ரொட்ஸ்கியின் கருத்துக்களை ஏற்றுள்ளது என்ற மண்டேலின் அபத்தமான வாதம், “ஒரு சந்தர்ப்பவாத மற்றும் அனுபவவாத பாணிக்கு" மத்தியில், மாவோவாதிகள் சீன ட்ரொட்ஸ்கிஸ்டுகளை படுகொலை செய்வதைத் தீவிரப்படுத்தியிருந்தபோது வந்தது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூர்க்கமான ட்ரொட்ஸ்கிச-விரோத தன்மையை ஒப்புக்கொண்ட மண்டேல் அதேவேளையில், அவர்களை இன்னல்படுத்துபவர்களை நோக்கி "உரிய நேரத்தில் அவசியமான திருப்பத்தை" எடுக்க தவறியதற்காக சீனாவில் இருந்த அவரின் சொந்த தோழர்கள் மீதும் பழிசுமத்தினார்.

நவம்பர் 1953 இல், அமெரிக்க ட்ரொட்ஸ்கிச சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) தலைவர் ஜேம்ஸ் பி. கனன், மரபார்ந்த ட்ரொட்ஸ்கிசத்தின் அடிப்படை கோட்பாடுகளை மீளபலப்படுத்த நான்காம் அகிலத்தின் பிரிவுகளுக்கு அழைப்பு விடுக்கும் ஒரு "பகிரங்க கடிதத்தை" வெளியிட்டு பப்லோவாதத்திற்கு எதிராக சர்வதேச போராட்டத்தைத் தொடங்கினார்.

ஐரோப்பா மற்றும் ஆசியாவில் ஸ்ராலினிச ஆட்சிகளை வெட்கக்கேடாக பப்லோ தழுவியதை எதிர்த்து, கனன் வலியுறுத்துகையில், சோசலிச புரட்சிக்கான மிகப் பெரிய தடை ஸ்ராலினிசமாகும், “அது தொழிலாளர்களின் நம்பிக்கையைக் காட்டிக்கொடுத்து, அவர்களைத் திரும்ப சமூக ஜனநாயகத்தின் கரங்களில் ஒப்படைத்து, அவலநிலைக்குள் தள்ளி அல்லது முதலாளித்துவத்தின் பிரமைகளுக்குள் தள்ளிய பின்னரும் கூட, அது ரஷ்யாவில் அக்டோபர் 1917 புரட்சியின் பெருமைகளைச் சாதகமாக்கி தொழிலாளர்களை ஈர்த்து வருகிறது,” என்று வலியுறுத்தினார்.

கனன் எழுதினார், “ஸ்ராலினிசத்திடம் சரணடையாமல் ஏகாதிபத்தியத்தையும் மற்றும் (தேசியவாத அமைப்புகள் அல்லது தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் போன்ற) அதன் குட்டி-முதலாளித்துவ முகமைகள் அனைத்தையும் எவ்வாறு எதிர்த்து போராடுவது என்பதை அறிவதும்; அதற்கு நேரெதிராக, ஏகாதிபத்தியத்திடம் சரணடையாமல் (இறுதி பகுப்பாய்வில் ஏகாதிபத்தியத்தின் குட்டி-முதலாளித்துவ முகமையாக விளங்கும்) ஸ்ராலினிசத்தை எவ்வாறு எதிர்த்து போராடுவது என்பதை அறிவதும்,” அவசியமாகும் என்றார்.

அந்த "பகிரங்க கடிதம்" ஆகஸ்ட் 1953 பிரெஞ்சு பொது வேலைநிறுத்தத்தின் பப்லோவாத காட்டிக்கொடுப்பையும், ஜூன் 1953 இல் கிழக்கு ஜேர்மன் தொழிலாளர்களின் எழுச்சியை நசுக்க ஸ்ராலின் சோவியத் துருப்புகளை ஒன்றுதிரட்டியதை பப்லோ மூடிமறைத்ததையும் விரிவாக விவரித்தது. சீன ட்ரொட்ஸ்கிஸ்டுகளை "ஒரு புரட்சியிலிருந்து வந்த அகதிகள்" என்று புறக்கணித்த பப்லோவின் அணுகுமுறையையும் கனன் கண்டித்தார். கனன் விவரித்தார் "ஸ்ராலினிசத்தை நோக்கிய பப்லோவின் சமரசவாத போக்கு அவரை தவிர்க்கவியலாமல் மாவோ ஆட்சியை றோஜா நிறத்தில் சிறப்பானதாக எடுத்துக்காட்டுவதற்கும் அதேவேளையில் நமது சீனத் தோழர்களின் உறுதியான, கோட்பாட்டுரீதியான நிலைப்பாட்டின் மீது கரிபூசுவதற்கும் இட்டுச் செல்கிறது.”

பெங் மற்றும் சீன ட்ரொட்ஸ்கிஸ்டுகள், பப்லோ மற்றும் மண்டேலுக்கு எதிராக, SWP உடனும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை உருவாக்குவதற்கும் சார்பான நிலைப்பாட்டை எடுத்தனர். கனனுக்கு எழுதிய ஒரு கடிதத்தில், பெங் சீன ட்ரொட்ஸ்கிஸ்டுகளைக் குறித்த பப்லோவின் அவதூறுகளையும், அவர் முழுமையாக மாவோயிசத்தை ஏற்றிருந்ததையும் விரிவாக விளக்கினார். டிசம்பர் 22, 1952 மற்றும் ஜனவரி 8, 1953 இல் நாடு தழுவிய தேடுதல் நடவடிக்கையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஒட்டுமொத்த கைது நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், 1,000 க்கும் அதிகமான சீன ட்ரொட்ஸ்கிஸ்டுகள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களைச் சிறையில் அடைத்தது. பாரிய கைது நடவடிக்கைகளைக் கண்டித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெங் எழுதிய பகிரங்க கடிதத்தை பிரசுரிப்பதை பப்லோ பல மாதங்கள் காலங்கடத்தினார்.

பெங் சூசி 1920 இல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட போது அதில் இணைந்ததில் இருந்து கம்யூனிச இயக்கத்தில் ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டவர். கிழக்கு உழைப்பாளர்களுக்கான கம்யூனிச பல்கலைக்கழகத்தில் பயில்வதற்காக சோவியத் ஒன்றியத்திற்கு அனுப்பப்பட்ட இளம் கட்சி உறுப்பினர்களின் முதல் குழுவில் இருந்தவர்களில் பெங்கும் ஒருவராவார். 1924 இல் சீனாவுக்குத் திரும்பி வந்த அவர், மத்திய குழுவிலும் மற்றும் 1925 ஆரம்பத்தில் அதன் உயர்மட்ட தலைமை அமைப்பான மத்திய நிலைக்குழுவிலும் (Central Standing Committee) தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், கம்யூனிஸ்ட் கட்சி கோமின்டாங்கிற்கு அடிபணிய செய்யப்பட்டதை எதிர்த்தார், இந்நடவடிக்கை 1927 இல் ஓர் அழிவு மாற்றி இன்னோர் அழிவை உண்டாக்கி இருந்தது. ஸ்ராலினின் காட்டிக்கொடுப்பு பற்றிய ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வு மீது நம்பிக்கை கொண்ட பெங், சீனாவின் இடது எதிர்ப்பில் இணைந்தார், CCP இல் இருந்து வெளியேற்றப்பட்டார்.

சீன ட்ரொட்ஸ்கிஸ்டுகள் அனைத்து தரப்பில் இருந்தும், சியாங் கேய்-ஷேக் ஆல், ஏகாதிபத்திய சக்திகளால் மற்றும் CCP ஆல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். பெங், ஏனைய ஒன்பது ட்ரொட்ஸ்கிஸ்டுகளுடன் சேர்ந்து, கோமின்டாங் பொலிஸால் அக்டோபர் 1932 இல் கைது செய்யப்பட்டு, ஐந்தாண்டுகள் நான்கிங் மாதிரி சிறையில் (Nanking Model Prison) அடைக்கப்பட்டார். இரண்டாம் உலக போருக்குப் பின்னர், ஒரு முன்னணி ட்ரொட்ஸ்கிச தலைவராக, அவர் ஹாங்காங்கில் பிரிட்டிஷ் பொலிஸால் தேடப்பட்டு வந்ததால், முதலில் வியட்நாமுக்கும், பின்னர் ஐரோப்பாவுக்கும் தப்பியோட நிர்பந்திக்கப்பட்டார், அங்கே ஐரோப்பாவில் அவர் நான்காம் அகிலத்தின் தலைமையில் செயலூக்கத்துடன் பங்கெடுத்தார்.

அவரினதும் SWP இனதும் மேலதிக அரசியல் பரிணாமம் குறித்து,உலக சோசலிச வலைத் தளத்தில் மறுபிரசுரம் செய்யப்படும் இரண்டாவது ஆவணமான 1955 இல் சோசலிச தொழிலாளர்கள் கட்சியின் தீர்மானமும் 1949 சீனப் புரட்சியும் என்பதன் அறிமுகத்தில் விவரிக்கப்படும்.

பெங்கின் அறிக்கையை இங்கே வாசிக்கலாம்: The Causes of the Victory of the Chinese Communist Party over Chiang Kai-Shek, and the CCP’s Perspectives

Loading