இலங்கை சோ.ச.க. ஜனாதிபதி வேட்பாளர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இலங்கையில் நவம்பர் 16 அன்று நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தன, அக்டோபர் 10 அன்று கொழும்பில் தேசிய நூலக கட்டிடத்தில் செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தினார்.

அரசாங்கத்திற்கு சொந்தமான தொலைக்காட்சி அலைவரிசைகளான ரூபவாஹினி மற்றும் வசந்தம் டிவி மற்றும் தனியாருக்குச் சொந்தமான ஸ்வர்ணவாஹினி, டன் டிவி, சிரச, அத தெரன மற்றும் ஐபிசி நெட்வொர்க் ஆகியவற்றிலிருந்தும் நிருபர்கள் கலந்து கொண்டனர். ஆங்கில மொழி டெய்லி மிரர் மற்றும் முன்னணி தமிழ் நாளேடுகளான தினகரன், விரகேசரி போன்ற அச்சு ஊடகங்களும் பத்திரிகையாளர்களை அனுப்பி வைத்திருந்தன. பெரும்பாலானவை செய்திகளை வெளியிட்டிருந்தன.

சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ், தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுவது ஜனாதிபதித் தேர்தலின் வரலாற்றில் மிகப் பெரிய எண்ணிக்கை ஆகும் என்பதை சுட்டிக்காட்டி நிகழ்வைத் தொடங்கினர். இந்த பெரிய வேட்பாளர் பட்டியல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் “நல்லாட்சி” எனப்படுவதால் உருவாக்கப்பட்ட “ஜனநாயக சூழலைப்” பிரதிபலிப்பதாக சில வர்ணனையாளர்கள் கூறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த கூற்றை நிராகரித்த டயஸ், அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமை, பிரதான ஸ்தாபகக் கட்சிகள் மீது பரவலாக நிலவும் வெகுஜன அதிருப்தியை இது குறிப்பதாகக் கூறினார். இலங்கை அரசாங்கம் எதிர்கொள்ளும் தீவிரமான அரசியல் மற்றும் பொருளாதார பேரழிவின் பிரதிபலிப்பே முதலாளித்துவ அரசியலில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி என்று அவர் மேலும் கூறினார்.

ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி, எதிர்க் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மற்றும் அவற்றுக்கு ஒத்துழைக்கும் வேட்பாளர்களிடம் இந்த நெருக்கடியைத் தீர்க்க வழி எதுவும் கிடையாது என டயஸ் கூறினார். பெரும்பான்மையான வேட்பாளர்கள் ‘நெருக்கடி’ என்ற வார்த்தையை கூட பயன்படுத்துவதில்லை.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோ.ச.க. மற்றும் அதன் முன்னோடியான புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகமும், தொழிலாள வர்க்கம், கிராமப்புற ஏழைகள், சிறுபான்மையினர் மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பயங்கரமான விளைவுகளைப் பற்றி எச்சரிப்பது மட்டுமன்றி, சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை ஒரே தீர்வாக முன்வைக்கின்றன, என்று டயஸ் கூறினார்.

"இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கு சோ.ச.க. எடுத்த முடிவின் அடிப்படை நோக்கமும்," 2000 ஆம் ஆண்டில் ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டதிலிருந்து ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிடுவதன் காரணமும் இதுவே ஆகும் என்று அவர் மேலும் தெணிவுபடுத்தினார்.

செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய பாணி விஜேசிறிவர்தன, சோ.ச.க.வின் அரசியல் தேசிய எல்லைகளுக்கு உட்பட்டது அல்ல என்றார். "அரசாங்கம் மற்றும் ஒட்டு மொத்த ஆளும் வர்க்கத்தின் வளர்ந்து வரும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது.

"சர்வதேச அளவில், ஏகாதிபத்திய சக்திகளுக்கிடையிலும் அமெரிக்க மற்றும் சீனா மற்றும் ரஷ்யா இடையே கடுமையான பொருளாதார தோல்வி மற்றும் கடுமையான புவிசார் அரசியல் பதட்டங்கள் உள்ளன. உலகெங்கிலும், அரசாங்கங்கள் உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் முழு சுமையையும் தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது சுமத்துகின்றன. ஒவ்வொரு நாட்டிலும், பயங்கரமான பொருளாதார சிக்கன நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றன.”

அந்த உலகளாவிய போக்குகள் எவ்வாறு இலங்கையில் வெளிப்படுத்தப்பட்டன என்பதை விளக்கிய விஜேசிறிவர்தன, “திறைசேரி செயலாளர், அரசு நிறுவனங்களுக்கு செலவினங்களை மேலும் 10 சதவீதம் குறைக்க உத்தரவிட்டார். இதற்கு முன்னர் செலவுகளை 15 சதவிகிதம் குறைப்பதற்கு அவர் உத்தரவிட்டிருந்தார்,” எனத் தெரிவித்தார்.

அத்தகைய சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக சர்வதேச அளவில் தொழிலாளர்கள் வேலைநிறுத்த நடவடிக்கைகள் அதிகரித்து வருவதை சோ.ச.க. ஜனாதிபதி வேட்பாளர் சுட்டிக்காட்டியதோடு, புவிசார் அரசியல் பதட்டங்கள் அதிகரித்து வருவதையும் மூன்றாம் உலகப் போரின் அபாயத்தையும் பற்றி எச்சரித்தார்.

"சோ.ச.க. இந்த நெருக்கடிக்கு அதன் சோசலிச தீர்வை முன்வைக்கிறது, அதாவது, ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை முன் வைக்கின்றது. எளிய மொழியில், சர்வதேச அளவில் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்திற்காக போராட வேண்டியதன் அவசியத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். இலங்கையில், ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிசக் குடியரசு என்ற வடிவில் ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகள் அரசாங்கதை ஸ்தாபிப்பதை நாங்கள் முன்மொழிகிறோம்.”

சோ.ச.க.வின் சோசலிச வேலைத்திட்டத்தை கோடிட்டுக் காட்டிய அவர் கூறியதாவது: “தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் பெருந்தோட்டங்கள், நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களை மக்கள்மயமாக்க நாங்கள் பரிந்துரைக்கிறோம். முதலாளித்துவத்தின் கீழ், தனியார் இலாபத்திற்காகவே உற்பத்தி செய்யப்படுகிறது. அரசியல் அதிகாரத்தை தொழிலாள வர்க்கம் கைப்பற்றுவதற்காகவும் தனியார் இலாபத்திற்காக அல்லாமல் மனித தேவைகளுக்காக உற்பத்தியை ஒழுங்கு செய்வதற்காகவுமே சோ.ச.க. போராடுகிறது. தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளையும் ஒழுக்கமான கல்வி மற்றும் சுகாதாரத்தையும், ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கான ஒரே வழி இது மட்டுமே.”

நிறுவனங்களை தேசியமயமாக்குவதற்கான சோ.ச.க.வின் அழைப்பு சாத்தியமானதா, கட்சி எத்தனை உறுப்பினர்களைக் கொண்டுள்ளது மற்றும் கட்சி ஏனைய "சோசலிச" கட்சிகள் மற்றும் ஜே.வி.பி. உடன் கூட்டுச் சேருவதைப் பற்றி யோசிக்கின்றதா என ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார். சோ.ச.க. வின் வேலைகள் மக்களுக்கு பொருந்துமா மற்றும் சில அரசியல் ஆய்வாளர்கள் இன்று சோசலிசமோ முதலாளித்துவமோ பொருந்தாது அதற்கு இடைப்பட்ட ஒரு அமைப்பு முறைதான் சாத்தியம் எனக் கூறுகிறார்களே? இன்னொரு நிருபர் கேட்டார்.

தேர்தலில் ஒரு வேட்பாளரை போட்டியிட வைப்பதன் மூலம், தொழிலாள வர்க்கம், கிராமப்புற ஏழைகள், சிறுபான்மையினர் மற்றும் இளைஞர்களுக்காக சோ.ச.க. குரல் கொடுக்கின்றது என டயஸ் விளக்கினார். “தெற்காசிய பிராந்தியத்தில் வேலை செய்வதற்கு அர்ப்பணித்துக்கொண்டுள்ள உறுப்பினர்களை சோ.ச.க. கொண்டுள்ளது, இருப்பினும், கட்சி தற்போதுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையில் திருப்தி அடையவில்லை, அது எப்போதும் தனது வேலைகளை விரிவுபடுத்தவும் வெகுஜனக் கட்சியாக மாறவும் முயல்கிறது. அதன் வெளியீடான உலக சோசலிச வலைத் தளம், தினசரி புதிய கட்டுரைகளை வெளியிடுவதோடு, 20 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கிறது.

“முதலாளித்துவ சமூகம் முன்னெப்போதும் இல்லாத வகையில் வரலாற்று நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால், எமது பணி பொருத்தமானது என்று சோ.ச.க. உறுதியாக நம்புகிறது. இந்த நெருக்கடி ஒரு புறநிலை உண்மையாக இருப்பதோடு அது சோ.ச.க. பரிந்துரைக்கும் மாற்றீடான சோசலிச வேலைத் திட்டத்தின் அவசியத்தை வெளிப்படுத்தியுள்ளது.”

ஜே.வி.பி. பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில், டயஸ் கூறியதாவது: “ஜே.வி.பி. ஒரு சோசலிஸ்ட் கட்சி அல்ல. சோ.ச.க. தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்கு வென்றெடுக்க போராடுவதுடன், கூட்டணிகளை உருவாக்குவதிலும் சோசலிசத்தின் எதிரிகளுடன் கலந்துரையாடுவதிலும் ஆர்வம் காட்டவில்லை. இத்தகைய அமைப்புகளுடன் இணைவதன் மூலம் சோசலிசத்தை செயல்படுத்த முடியாது.

"அதன் வரலாறு முழுவதும், ஜே.வி.பி. முதலாளித்துவத்திற்கு சேவை செய்ததுடன் முதலாளித்துவ கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டுள்ளது. இப்போது அது சோசலிசத்திற்கு எதிராக முதலாளித்துவத்தைப் பாதுகாக்க அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஒரே உண்மையான சோசலிஸ்ட் கட்சி சோ.ச.க. தான் என்பதை ஜே.வி.பி. நன்கு அறியும், அதனால்தான் அது போலி-சோசலிச பொய்யர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்ற போதிலும், சோ.ச.க. உடன் பேச்சுவார்த்தைக்கு வருவதில்லை. இது சோ.ச.க. சரியான பாதையில் உள்ளது என்பதற்கான சான்றிதழ் ஆகும்.”

தொழிற்துறையை தேசியமயமாக்குவது குறித்த கேள்விக்கு, டயஸ் பதிலளித்தார்: “சோ.ச.க. தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றது. சிறிமா பண்டாரநாயக்க [1970-77 காலப்பகுதியிலான அரசாங்கம்] மேற்கொண்ட பிற தேசியமயமாக்கல்கள் சோசலிச நடவடிக்கைகள் அல்ல, மாறாக அந்த தொழில்துறைகளை பராமரிப்பதற்கான பொறுப்பை முதலாளித்துவ அரசு ஏற்றுக்கொண்டு செயல்படுத்தியது. இதற்கு சோசலிசத்துடன் எந்த தொடர்பும் இல்லை.

"ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை செயல்படுத்த, தொழிலாளர்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கான அமைப்புகளைக் கொண்டிருக்க வேண்டும். முன்னாள் சோவியத் யூனியனில், அதன் ஆரம்ப நாட்களில், அது சோவியத்துகளைக் கொண்டிருந்தது –அவைதான் தொழிலாளர் சபைகள்- அதில் தொழிலாளர்கள் ஜனநாயக ரீதியாக இந்த திட்டத்தை கலந்துரையாடி அதற்கேற்ப முடிவுகளை எட்டினர்.”

ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. வேட்பாளர் கோடாபய இராஜபக்ஷ, தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் விவசாயிகளுக்கு இலவசமாக கோதுமை மா வழங்குவதாக உறுதியளித்தபோது, இது நடைமுறையில் சாத்தியமா என்று யாரும் கேட்கவில்லை என்று டயஸ் கூறினார். யார் வென்றாலும், இராஜபக்ஷ மற்றும் பிற வேட்பாளர்கள் இப்போது அளித்துள்ள வாக்குறுதிகளைப் பொருட்படுத்தாமல், தொழிலாளர்கள், சிறு விவசாயிகள் மற்றும் ஏழைகள் மீது சிக்கன நடவடிக்கைகளை சுமத்துவர் என்று அவர் எச்சரித்தார்.

"பெரிய கட்சிகள் மூன்றில் இரண்டு பங்கு அல்லது ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவதை நாங்கள் கண்டிருக்கிறோம், ஆனால் சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அப்படியே இருக்கின்றன. முதலாளித்துவ கட்சிகளின் வேலைத்திட்டம் சந்தேகத்திற்கு இடமின்றி தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை, ஈக்வடோரில் இப்போது நடந்து வருவதைப் போன்ற சமூகப் போராட்டங்களுக்குள் தள்ளும். போராடும் இந்த மக்களை, முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் அணிதிரட்ட சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது.”

Loading