முன்னோக்கு

ஜனநாயகக் கட்சியினர் "நிரந்தர போரை" ஆதரிக்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வாஷிங்டனின் "முடிவில்லா போர்களை" நிறுத்துவதற்காக என்ற பெயரில் வடகிழக்கு சிரியாவில் இருந்து அமெரிக்க துருப்புகளைப் பின்வாங்கிக் கொள்வதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவு ஓர் அரசியல் நெருப்புப்புயலைக் கிளறி விட்டுள்ளது. பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சி சபாநாயகர் நான்சி பெலோசி, துருப்புகளை திரும்ப பெறுவதை எதிர்ப்பதில் ட்ரம்பை மிகத் தீவிரமாக பாதுகாக்கும் குடியரசுக் கட்சியின் செனட்டர் லிண்டே கிரஹாம் உடன் சேர்ந்துள்ளார். கிரஹாம் உடனான அவரின் சந்திப்பைக் குறித்து பெலோசி ட்வீட் செய்தார்: “சிரியா சம்பந்தமாக ஜனாதிபதியின் அபாயகரமான முடிவை உடனடியாக மாற்றுவதற்காக, நமக்கு இருகட்சியினதும், இரண்டு அவையினதும் கூட்டு தீர்மானம் ஒன்று அவசியப்படுகிறது என்பதில் உடன்படுவதே நமது முதல் இன்றியமையா பணியாக இருக்க வேண்டும்.”

ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர்கள் அமெரிக்கா சிரியாவிலிருந்து வெளியேறும் அச்சுறுத்தலை திட்டவட்டமாக கண்டித்ததுடன், அவர்களில் பலரும் அந்நாட்டில் பென்டகனின் ஐந்தாண்டு கால நேரடி இராணுவ தலையீட்டில் வாஷிங்டனின் பினாமி தரைப்படையாக சேவையாற்றிய சிரிய குர்திஷ் YPG ஆயுதக் குழுக்களின் சிக்கலான நிலையை கையிலெடுத்திருந்தனர்.

ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களில் முன்னணியில் வருவாரென எதிர்பார்க்கப்படும் ஜோ பைடன் அறிவித்தார்: “அவர் செய்தது, வெட்கக்கேடானது.” இதே பைடன், மில்லியன் கணக்கான ஈராக்கியர்களைப் பலிகொண்ட பொய்களின் அடிப்படையில் தொடுக்கப்பட்ட குற்றகரமான அமெரிக்க ஆக்கிரமிப்பு போருக்கு ஆதரவாக வாக்களிக்கையிலோ அல்லது நூறாயிரக் கணக்கானவர்களுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்ட லிபியா மற்றும் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான சிஐஏ போர்கள் தொடுக்கப்பட்டதில் அவர் வகித்த பாத்திரத்திற்காகவோ வெட்கப்படவில்லை.

பேர்ணி சாண்டர்ஸ், “தேசிய பாதுகாப்பு" சம்பந்தமான விவகாரங்களில் அவரின் நம்பகத்தன்மையை எடுத்துக்காட்டுவதற்கான ஒரு வாய்ப்பை தவறவிட்டு விடாமல் பின்வருமாறு அறிவித்தார்: “அமெரிக்க துருப்புகளுடன் சேர்ந்து நின்று சண்டையிட்டு உயிர்நீத்த கூட்டாளிகளுக்கு உங்கள் புறமுதுகைக் காட்டாதீர்கள். இதை செய்யாதீர்கள்.” அமெரிக்கா அதன் தெற்கு வியட்நாமின் அரசியல் மற்றும் இராணுவ கூட்டாளிகளை உதறி "வெட்டி விட்டு ஓடி" வந்து விட முடியாது என்பதே, 1960 கள் மற்றும் 1970 களின் போது, வியட்நாமில் இருந்து துருப்புகளைத் திரும்ப பெறுவதற்கு எதிராக ஜோன்சனும் நிக்சனும் வைத்த பிரதான வாதமாக இருந்தது என்பதை சாண்டர்ஸ் சர்வசாதாரணமாக மறந்துவிடுகிறார்.

அவர் பங்கிற்கு, எலிசபெத் வாரென் இரட்டை நாக்குடன் பேசுகையில், இந்த சந்தர்ப்பத்தின் சிறந்த பிதற்றலை காண முடிந்தது: “நம் துருப்புகளைத் தாய்நாட்டுக்குத் திரும்ப கொண்டு வர வேண்டும், ஆனால் அதை நாம் நமது பாதுகாப்புக்கு மதிப்பளிக்கும் விதத்தில் செய்ய வேண்டும்,” என்றார். வேறு வார்த்தைகளில் கூறினால், அமெரிக்கா சிரியாவில் தொடர்ந்து போர் தொடுக்க வேண்டும் என்பதே.

அமெரிக்க போர் எந்திரத்திற்கு 750 பில்லியன் டாலர் வரவு-செலவு திட்டக்கணக்கிற்கு ஒப்புதல் பெற்றுள்ள அதேவேளையில், ஈரானுடன் ஒரு மோதலுக்குத் தயாரிப்பு செய்ய கடந்த வாரம் தான் சவூதி அரேபியாவுக்கு கூடுதலாக 3,000 அமெரிக்க துருப்புகளை அனுப்ப உத்தரவிட்டுள்ள ட்ரம்ப், எந்தவிதத்திலும் ஒரு சமாதானவாதி அல்ல. அவர் முட்டாளும் கிடையாது. பெரும் போர்களுக்கு, குறிப்பாக சீனாவுக்கு எதிரான போர்களுக்கு, அவர் தயாரிப்பு செய்து வருகின்ற நிலையில், ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கில் வாஷிங்டனின் போர்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அவரின் பகிரங்கமான முறையீடுகளானது, இத்தகைய தலையீடுகளால் வெறுத்துப் போயுள்ள அமெரிக்க மக்களிடையே அனுதாபத்தைத் பெற்றுக்கொள்ளும் என்பது அவருக்குத் தெரியும்.

இது குறிப்பாக தங்களின் அன்புக்குரியவர்களின் இழப்பை அடுத்து சுமையை சுமந்து கொண்டிருக்கும் எண்ணற்ற குடும்பங்களின் விடயத்திற்கும் மற்றும் இரங்கத்தக்க சரீரரீதியான காயங்கள் மற்றும் மனநிலை பாதிப்புகளுடன் துயரகரமான விலை கொடுத்து வீடு திரும்பியுள்ள எண்ணற்ற குடும்பங்களின் விடயத்திற்கும் பொருந்தும். மிக முக்கியமாக, டைம்ஸ் இன் நடப்பு பிரதியின் தலையங்க கட்டுரை "அமெரிக்காவின் நிரந்தர போர்" என்பதில் ஒருமுனைப்படுகிறது. அது ஆப்கானிஸ்தானில் ஒரு சிப்பாயின் மரணம் அவரின் மனைவி மற்றும் குழந்தைகள் மீது ஏற்படுத்தும் பாதிப்புகளைக் குறித்து துயரகரமான விபரங்களைக் கொண்டுள்ளது.

கஷ்டப்படும் அந்த குடும்ப கதைக்கு முந்தைய ஒரு விளக்கவுரையில் நாவலாசிரியரும் முன்னாள் கடற்படை அதிகாரியுமான எலியாட் அக்கெர்மன் எழுதுகிறார்: “ஏறக்குறைய 7,000 [அமெரிக்கர்] உயிரிழந்த மற்றும் 50,000 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்த — அண்மித்து இரண்டு தசாப்த கால போரின் சுமையைப் பெருமளவில் நம் மக்களில் 1 சதவீதத்தினர் தாங்கி கொண்டிருக்கிறார்கள்.”

திங்களன்று ட்ரம்ப் ட்வீட் செய்தி வெளியிடுகையில், ஐயத்திற்கிடமின்றி அப்போரைப் பற்றிய டைம்ஸ் செய்தியைக் குறித்து அவர் தெரிந்து வைத்திருந்தார்: “மத்திய கிழக்கு குழப்பத்தில் நம்மைச் சிக்க வைத்தவர்கள் தான் பெரும்பாலும் அங்கே இருக்க விரும்புகிறவர்கள்! ஒருபோதும் முடிவுறாத போர்கள் முடிக்கப்படும்!” ட்ரம்ப் மோசடியாக தன்னை ஒரு போர் எதிர்ப்பு ஜனாதிபதியாக சித்தரித்து கொள்வதற்கான அரசியல் நிலைமைகளை ஜனநாயகக் கட்சியினர் உருவாக்கி வருகிறார்கள்.

ட்ரம்ப் மீதான ஜனநாயகக் கட்சி எதிர்ப்பின் பிற்போக்குத்தன்மை நியூ யோர்க் டைம்ஸின் பக்கங்களில் இருந்ததை விட அதிக வெளிப்படையாக வேறெங்கும் இருக்கவில்லை.

“ட்ரம்ப் வெறுமனே ஒரு தார்மீக மற்றும் மூலோபாய பேரழிவை உருவாக்குகிறார்,” என்று தலைப்பிட்ட ஒரு தலையங்கத்தில், வடகிழக்கு சிரியாவிலிருந்து சுமார் 1,000 அமெரிக்க துருப்புகளைப் பின்னுக்கு இழுப்பதென்ற ட்ரம்பின் முடிவு "மூலோபாயரீதியில் இருப்பதைப் போலவே அதேயளவுக்கு தார்மீகரீதியிலும் முட்டாள்தனமாக இருக்கிறது,” என்று டைம்ஸ் குறைகூறும் அதேவேளையில், ஒரு முன்னாள் காலனித்துவ மத்திய கிழக்கு நாட்டில் "நடப்பில் இருக்கும்" சட்டவிரோத ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு "முழுமையாக தொடர வேண்டியதே" என்றும் வலியுறுத்துகிறது.

டைம்ஸ் குறிப்பிடுகிறது, "சிரியா மற்றும் துருக்கிக்கு இடையிலான எல்லையில் தன்னை மத்தியஸ்தராக நிலைநிறுத்த ஓராயிரம் முடிவுகள் அமெரிக்காவை வழிநடத்தின,” ஆனால் ட்ரம்பின் ஒரேயொரு "திடீர்" முடிவு "கடந்த சில நாட்களில் அப்பிராந்தியம் எங்கிலும் குழப்பங்களுக்கும் இரத்த ஆறு ஓடுவதற்கும் இட்டுச் சென்றது.”

சிரியாவில் அமெரிக்க துருப்புகளைச் சட்டவிரோதமாக நிலைநிறுத்துவதற்கு வழிகாட்டிய இத்தகைய "ஆயிரம் முடிவுகளில்" ஒவ்வொன்றும் அமெரிக்க மக்களின் முதுகுக்குப் பின்னால் எடுக்கப்பட்டன என்பதை, டைம்ஸ் பதிப்பாசிரியர்கள் குறிப்பிட மறுக்கிறார்கள்.

“அப்பிராந்தியம் எங்கிலும் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் மற்றும் இரத்த ஆறு” மீது அந்த தலையங்கத்தின் புலம்பல் முற்றிலும் பாசாங்குத்தனமானது. ISIS மீதான போர் என்றழைக்கப்பட்டதில், சிரியாவின் ரக்கா மற்றும் ஏனைய நகரங்களை வெறும் இடிபாடுகளாக சிதைத்த அமெரிக்க வான்வழி போரில் இதே குர்திஷ் YPG ஆயுதக்குழுக்கள் அதன் பினாமி தரைப்படை துருப்புகளாக சேவையாற்றி, பத்தாயிரக் கணக்கான சிரியர்கள் படுகொலை செய்யப்பட்ட போது நியூ யோர்க் டைம்ஸ் அதற்கு என்ன முக்கியத்துவம் கொடுத்தது? 12 வயது முதற்கொண்டு சுமார் 11,0000 கைதிகளை திறந்தவெளி சிறைகளின் தரைகளில் மந்தை மந்தையாக அடைத்து அவர்களைப் பட்டினிக்கு நிகராக விட்டு வைத்து, குர்திஷ் ஆயுதக்குழுக்கள் காவலுக்கு நின்றார்களே அந்த சிறையடைப்பு கூடங்களைக் குறித்து இந்த "சாதனை பத்திரிகை" என்ன அக்கறை காட்டியது?

அல்லது இதேபோல, இப்போது துருக்கிய இராணுவத்துடன் சேர்ந்து குர்திஷ் போராளிகள் குழுக்களுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்ற CIA-ஆதரவிலான இதே இஸ்லாமிய ஆயுதக் குழுக்களைப் பயன்படுத்தி —பின்னர் இவை ஜனநாயகக்-ஆதரவு "கிளர்ச்சியாளர்" என்று புகழப்பட்டு— ஆட்சி மாற்றத்திற்கான ஒரு போரைத் தொடங்கிய ஒபாமா நிர்வாகத்தின் மீது என்ன தார்மீக "வெட்கக்கேடு" சூட்டப்பட்டுள்ளது. அந்த போரில் சுமார் 500,000 சிரியர்கள் கொல்லப்பட்டார்கள், அந்நாட்டின் மக்கள்தொகையில் பாதி பேர் இடம் பெயர்ந்தார்கள், மில்லியன் கணக்கானவர்கள் நாட்டை விட்டே வெளியேற்றப்பட்டார்கள்.

சிரியாவில் குர்திஷ் மக்கள் மீது நடத்தப்பட்டு வருகின்ற வன்முறை துயரகரமானது. இதில் குர்திஷ் முதலாளித்துவ தேசியவாத தலைமை வகிக்கும் பாத்திரம், என்னவாக இருந்தாலும், குறுகிய கண்ணோட்டம் கொண்டது மற்றும் குற்றகரமானது. மீண்டுமொருமுறை, அவர்கள் இனரீதியான ஒரு குர்திஷ் அரசை துண்டாடி பெறுவதற்காக ஏகாதிபத்தியத்தின் ஆதரவைப் பெற முடியுமென்ற நம்பிக்கையில், ஏகாதிபத்தியத்தின் வாகனமாக செயல்பட்டார்கள். அதன் விளைவுகள் முற்றிலும் அனுமானித்தக்கதாகவே இருந்தன. ஈரானின் ஷா மற்றும் ஈராக்கின் சதாம் ஹூசைனுக்கு இடையே மத்தியஸ்தம் செய்யப்பட்ட 1975 உடன்படிக்கையை தொடர்ந்து குர்தியர்கள் காட்டிக்கொடுக்கப்பட்ட பின்னர் ஹென்றி கிஸ்ஸிங்கர் ஈனத்தனமாக குறிப்பிட்டவாறு, “மறைமுகமான நடவடிக்களை உதவியளிக்கும் பணியுடன் குழப்பிக் கொள்ளக் கூடாது.”

நியூ யோர்க் டைம்ஸ் தலையங்கம், அதன் மிகவும் வெறுக்கத்தக்க பத்தியில், ட்ரம்பின் நடவடிக்கையை ஓர் அமெரிக்க வரலாற்று உள்ளடக்கத்தில் நிறுத்துகிறது, அதாவது "ஒரு சமயத்தில் கூட்டாளிகளாக இருந்தவர்கள் அவர்களின் தலைவிதிபடி கைவிடப்பட்டதற்கான உதாரணங்கள் நிறைய உள்ளன — கியூபா பிக்ஸ் வளைகுடா மீதான படையெடுப்பு; தெற்கு வியட்நாம் வீழ்ச்சி …"

பிக்ஸ் வளைகுடா படையெடுப்பையும் சைகோன் வீழ்ச்சியையும் வாஷிங்டனின் "காட்டிக்கொடுப்புகளுக்கு" உதாரணங்களாக டைம்ஸ் காட்டுவது அந்த முன்னாள்-தாராளவாத ஊடகத்தின் மிகப்பெரும் வலதுசாரி திருப்பத்திற்கு சான்று பகிர்கிறது.

1961 இல் ஜனாதிபதி ஜோன் எஃப். கென்னடி, அமெரிக்காவின் பகிரங்கமான ஆதரவு அவசியமில்லையென CIA இல் இருந்து உத்தரவாதங்களைப் பெற்றிருந்த நிலையில், அவருக்கு முன்பிருந்த ட்வைட் ஐசன்ஹோவர் திட்டமிட்டிருந்த கூலிப்படை படையெடுப்பைக் கைவிட முடிவெடுத்தார். ஆனால், அந்த கூலிப்படைகள் பிக்ஸ் வளைகுடாவின் கடற்கரையில் சுற்றி வளைக்கப்பட்டு அந்த படையெடுப்பு தோல்வி அடைந்தது என்பது தெளிவானதும், சிஐஏ, அந்த படையெடுப்பைக் காப்பாற்ற அமெரிக்க விமானப்படை பொறுப்பேற்க வேண்டுமென கென்னடிக்கு அழுத்தமளித்தது.

சிஐஏ இன் இயக்குனர், இழிபெயர் பெற்ற அலென் டுல்லெஸ், ஓர் அவமானகரமான தோல்வியைத் தவிர்க்க அந்த அமைப்பின் மிரட்டலுக்கு கென்னடி அடிபணிவார் என்று கருதினார். ஆனால் கென்னடி —சோவியத் ஒன்றியத்துடன் ஒரு பனிப்போர் மோதல் தூண்டப்படுமென அஞ்சி— பலவீனமாக திட்டமிடப்பட்ட ஒரு சாகசத்தை, ஆட்சி மாற்றத்திற்கான முழு அளவிலான ஓர் அமெரிக்க போராக மாற்றுவதில்லை என்று முடிவெடுத்தார். அப்போது, தாராளவாத ஜனநாயக வாதிகளால் கென்னடியின் நடவடிக்கை சிஐஏ இன் அபாயகரமான நடைமுறையை தைரியத்துடன் நிராகரித்ததாக பார்க்கப்பட்டது. இப்போதோ டைம்ஸ் கென்னடியின் நடவடிக்கையை ஒரு காட்டிக்கொடுப்பாக எடுத்துக்காட்டுகின்றது.

பிக்ஸ் வளைகுடா தோல்விக்குப் பின்னர், கென்னடி “CIA ஐ ஆயிரம் துண்டுகளாக கிழித்து காற்றில் பறக்க” விட அவர் விரும்பியதாக கென்னடியின் கூற்று மேற்கோளிடப்பட்டது. இந்த கருத்து வெளியாகி இரண்டரை ஆண்டுகளுக்குள், அவர் படுகொலை செய்யப்பட்டார். பலரைப் பொறுத்த வரையில், இந்த "காட்டிக்கொடுப்பும்" கென்னடியின் படுகொலையும் ஒரு தற்செயலான நிகழ்வல்ல என்று கருதப்படுகிறது.

வியட்நாம் விடயத்தில், அமெரிக்க மக்களின் பரந்த பெரும்பான்மையினரைப் பொறுத்த வரையில், ஏப்ரல் 1975 இல் சைகோனில் இருந்து அமெரிக்கா திரும்பி வந்த அவமானகரமான சூழ்நிலைகள் ஒரு குற்றகரமான போருக்கு கிடைத்த ஒரு பொருத்தமான முடிவாக இருந்தது.

டைம்ஸ் இந்த வரலாறை மாற்றி எழுதுவதானது அமெரிக்க ஆளும் உயரடுக்கினதும் மற்றும் செல்வ செழிப்பான உயர்மட்ட நடுத்தர வர்க்கம் மற்றும் பணக்காரர்கள் மத்தியில் உள்ள அப்பத்திரிகையின் சொந்த முக்கிய வாசகர்களினதும் வலதை நோக்கிய பாய்ச்சலைப் பிரதிபலிக்கிறது.

இன்று, ஜனநாயகக் கட்சி சிஐஏ இன் ஊதுகுழலாக உள்ளது, அது மூடிய கதவுகளுக்குப் பின்னால் ட்ரம்புக்கு எதிரான அதன் பதவிநீக்க குற்ற விசாரணைகளை முற்றிலுமாக, ரஷ்யாவை நோக்கி வெள்ளை மாளிகை பட்டவர்த்தனமாக ஒரு சமரச வெளியுறவுக் கொள்கையை ஏற்றுள்ளது என்ற உளவுத்துறை முகமைகளின் கவலைகளுக்காக வடிவமைத்துள்ளது.

1960 கள் மற்றும் 1970 களின் நடுத்தர வர்க்க போராட்ட இயக்கங்களில் இருந்து எழுந்த அனைத்து போலி-இடது அமைப்புகளையும் ஏகாதிபத்திய-சார்பு அமைப்புகள் என்று மிகைப்படுத்தாமல் விவரித்து விட முடியும், இவை ஜனநாயகக் கட்சிக்குப் பின்னால் வால் பிடித்து கொண்டு ஆக்கிரமிப்பு போர்களை "மனித உரிமைகளுக்காக" என்ற பெயரிலும் "ஜனநாயக புரட்சிகள்" என்றழைத்தவாறும் நியாயப்படுத்துகின்றன.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பெரும் பிரிவுகள் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு விரோதமாக இருந்தாலும், போர்-ஆதரவு ஜனநாயகக் கட்சியினரின் முகாமில் எந்த மாற்றீட்டையும் காண முடியாது உள்ளனர்.

ட்ரம்புக்ககு எதிரான போராட்டம் ஜெயிக்க வேண்டுமானால், அது ஜனநாயகக் கட்சிக்கு எதிராகவும் சுயாதீனமாகவும் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். அதன் குறிக்கோள், சிஐஏ மற்றும் வோல் ஸ்ட்ரீட் வரையறுப்பதைப் போல "தேசிய பாதுகாப்பை" பாதுகாப்பதாக இருக்க முடியாது, மாறாக, அதற்கு பதிலாக, சோசலிசத்திற்கான போராட்டமாகவும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காகவும் இருக்க வேண்டும்.

Loading