முன்னோக்கு

கட்டலான் தேசியவாதிகள் சிறையடைப்பு: ஸ்பானிய அரசாங்கம் ஒரு பொலிஸ் அரசைக் கட்டமைக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

திங்களன்று ஒரு டஜன் கட்டலான் தேசியவாதிகளை தேசத்துரோக குற்றத்திற்காக ஒரு தசாப்த காலம் சிறையிலடைக்கும் மாட்ரிட்டின் தண்டனையும், அதை தொடர்ந்து பாரிய போராட்டங்கள் மீது ஒரு பொலிஸ் ஒடுக்குமுறைக்குப் பின்னர் கட்டலோனியாவில் அவசரகால நிலையை கொண்டு வருவதற்கான அச்சுறுத்தல்களும், ஸ்பெயினில் மட்டுமல்ல ஐரோப்பா எங்கிலும் சர்வாதிகாரத்தை நோக்கிய ஒரு பிரதான படியைக் குறிக்கின்றன. திங்களன்று வழங்கப்பட்ட தீர்ப்பு, பாசிச ஆட்சிக்கு ஆதரவான சமீபத்திய கருத்துக்களால் மதிப்பிழந்துள்ள ஒரு நீதிமன்றத்தின் இழிவார்ந்த மற்றும் சட்டத்திற்குப் புறம்பான ஒரு தீர்ப்பாகும்.

முன்னாள் கட்டலான் பிராந்திய துணை-பிரதமர் ஓரியோல் ஜுன்குவேராஸ் (Oriol Junqueras) தலைமையில் பிரதிவாதிகள் அழைப்பு விடுத்த அமைதியான போராட்டங்கள் அக்டோபர் 1, 2017 இல் அமைதியான முறையில் கட்டலான் சுதந்திரத்திற்கான ஒரு வெகுஜன வாக்கெடுப்புக்கு இட்டுச் சென்றது. அந்த வாக்கெடுப்பில் ஸ்பானிய துணை இராணுவ பொலிஸ் வாக்காளர்கள் மீது ஒரு வன்முறையான ஒடுக்குமுறையை நடத்தியது, வாக்குச்சாவடிகளில் பொலிஸ் தடியடி நடத்தியதற்கு வாக்காளர்கள் பாரிய பொது ஒத்துழையாமை கொண்டு விடையிறுத்த நிலையில் 1,000 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

நீதிமன்றம், யதார்த்தத்தைத் தலைகீழாக்கி, அது மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட சட்டத்திற்குப் புறம்பான அரசு வன்முறை அல்ல, மாறாக சட்டத்திற்குட்பட்ட அரசு அதிகாரத்திற்கு எதிரான ஒரு வன்முறையான மக்கள் கிளர்ச்சி என்று வாதிட்டது — ஆகவே ஜுன்குவேராஸ் மற்றும் ஏனையவர்கள் அதை தூண்டியதற்காக தேசவிரோத குற்றவாளிகள் ஆக்கப்பட்டனர்.

அக்டோபர் 14, 2019 திங்கட்கிழமை, ஸ்பெயின், பார்சிலோனாவின் புறநகர் பகுதியான எல் பிராட் விமான நிலையத்தில் ஓர் ஆர்ப்பாட்டத்தின் போது போராட்டக்காரர்களுடன் பொலிஸ் மோதியது (அசோசியேடெட் பிரஸ் புகைப்படம்/பெர்னாட் அர்மான்ங்)

அதிகரித்து வரும் ஒரு பொதுவேலைநிறுத்த அழைப்புகளுக்கு மத்தியில், ஸ்பெயின் மற்றும் ஐரோப்பாவில் உருவாக்கப்பட்டு வருகின்ற பொலிஸ் அரசுக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே உள்ளூர ஒரு மோதல் உருவாகிக் கொண்டிருக்கிறது.

சிறை தண்டனைகளுக்கு எதிராக பார்சிலோனாவில் செவ்வாயன்று இரவு மீண்டும் போராட்டங்கள் வெடித்ததும், சோசலிஸ்ட் கட்சி (PSOE) பிரதம மந்திரி பெட்ரோ சான்சேஸ் ஸ்பெயினின் பிரதான நாடாளுமன்ற கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்த நிலையில், அவர் அறிவிக்கையில் அதற்கான அரசாங்கத்தினது விடையிறுப்பு "எவ்விதமானதாகவும் இருக்கலாம் என தெரிவித்தார்". புதிதாக நிறுவப்பட்டுள்ள பாசிசவாத Vox கட்சி தலைமையில், ஸ்பெயின் நாடாளுமன்ற கட்சிகள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டலான் மாகாண அரசாங்கத்தை பதவியிலிருந்து அகற்ற ஸ்பானிய அரசியலமைப்பின் 155 ஷரத்தைப் பயன்படுத்துவது, அல்லது இராணுவத்தை அணிதிரட்டுவது என பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி வருகின்றன.

இராணுவ ஒடுக்குமுறை அச்சுறுத்தல் மற்றும் மாட்ரிட்டில் இருந்து வரும் எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராக கட்டலோனியாவில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களைப் பாதுகாப்பதும் மற்றும் கட்டலான் தேசியவாத அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோருவது என்பது ஸ்பெயினிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்கள் முன்னிறுத்தப்பட்டுள்ள ஓர் அடிப்படையான பணியாகும்.

கட்டலான் தேசியவாத கைதிகளை விடுவிப்பதற்கான கோரிக்கையை முன்னெடுப்பது என்பது கட்டலோனியாவில் ஒரு சுதந்திர முதலாளித்துவ குடியரசை உருவாக்குவதன் மூலமாக ஸ்பெயினில் தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதற்கான அவர்களின் பிற்போக்கு வேலைதிட்டத்தையோ அல்லது கட்டலான் தொழிலாளர் மீது சமூக சிக்கன நடவடிக்கைகளைத் திணித்த அவர்களின் முன்வரலாறையோ எந்தவிதத்திலும் ஆதரிப்பதை உள்ளடக்கியது அல்ல. ஒரு சிறிய பெரும்பான்மையுடனான கட்டலோனியர்களின் உள்ளடங்கலாக, கட்டலான் பிரிவினைவாதம் தொடர்பான ஸ்பெயினில் பரந்த மக்களின் அதிருப்தி நியாயமானதும் அரசியல்ரீதியில் நியாயப்படுத்தக் கூடியதுமாகும். ஆனால் அவர்களைக் கைது செய்வதென்பது ஒரு பாசிசவாத நடவடிக்கையின் உள்ளார்ந்த பாகமாக உள்ளது, இதன் பிரதான இலக்குகள் ஸ்பானிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கமாகும்.

கட்டலோனியாவில் ஒடுக்குமுறைக்காக ஸ்பானிய பொலிஸ் மீதல்லாமல் போராட்டக்காரர்கள் மீது பழி சுமத்துவதன் மூலமாக, உச்ச நீதிமன்ற தீர்ப்பு அடிப்படை ஜனநாயக உரிமைகளை அழிப்பதற்கு அரசுக்கு ஓர் ஆயுதத்தை வழங்குகிறது. அதன் விகாரமான மற்றும் பிற்போக்குத்தனமான வாதம் சரியென ஏற்றுக் கொள்ளப்பட்டால், ஒரு மறியல் அணிவகுப்பில் ஒரு வேலைநிறுத்தக்காரரின் தலையை உடைக்கவோ அல்லது பல்கலைக்கழகத்தை ஆக்கிரமிக்கும் ஒரு மாணவரின் தலையை உடைக்கவோ, அரசுக்கு எதிரான வன்முறை கிளர்ச்சிக்கு அவர்களைக் குற்றவாளிகளாக அறிவித்து அவர்களுக்கு நீண்டகால சிறை தண்டனைகள் வழங்க, பொலிஸ்க்கு ஒரு இலத்தி மட்டுமே போதுமானதாக ஆகிவிடும். வேலைநிறுத்தம் செய்வதற்கான மற்றும் போராடுவதற்கான அரசியலமைப்புரீதியில் பாதுகாக்கப்பட்ட உரிமைகள் ஒன்றுமில்லாமல் ஆகிவிடும்.

கட்டலான் தேசியவாதிகள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது பிரிக்க முடியாதபடிக்கு கட்டலான் பொது வாக்கெடுப்புக்குப் பின்னர் இருந்து Vox ஐ ஊக்குவிக்கவும் மற்றும் பாசிசத்திற்கு மறுவாழ்வு கொடுப்பதற்குமான ஆளும் வர்க்கத்தின் இடைவிடாத பிரச்சாரத்துடன் பிணைந்துள்ளது. ஜூனில், இந்த தீர்ப்பு குறித்து உச்ச நீதிமன்றம் விவாதித்து வந்தபோது, “1 அக்டோபர் 1936 இல் இருந்து நவம்பர் 1975 இல் அவர் மரணம் வரையில் அரசு தலைவராக" சட்டபூர்வமாக இருந்தவர் அவர் என்று வாதிட்டு, அது பாசிசவாத சர்வாதிகாரி பிரான்சிஸ்கோ பிராங்கோவின் சடலத்தைத் தோண்டி எடுப்பதற்கான ஒரு முன்மொழிவைத் தற்காலிகமாக தள்ளுபடி செய்தது. இவ்விதத்தில் அது, ஸ்பானிய உள்நாட்டு போரைத் தொடங்கி வைத்த அவரினது பாசிசவாத ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கு நான்கு மாதங்களுக்குப் பின்னர், 1 அக்டோபர் 1936 இல் பிராங்கோ தன்னைத்தானே அரசு தலைவராக பதவி பிரமாணம் செய்து கொண்டது சட்டபூர்வமானதே என்று தீர்ப்பளித்தது.

ஸ்பானிய உள்நாட்டு போர் ஸ்பெயின் எங்கிலுமான நகரங்களை நாசகரமாக அழித்ததுடன், 200,000 இடதுசாரி தொழிலாளர்கள் மற்றும் புத்திஜீவிகளைப் படுகொலை செய்யவும் மற்றும் சித்திரவதை முகாம்களில் 400,000 மக்களை அடைத்து வைப்பதற்கும் இட்டுச் சென்றது. இவ்வாறு இருப்பினும் "டொன் பிரான்சிஸ்கோ பிராங்கோவின் முக்கியத்துவம்" குறித்து அதிக சாதகமான புரிந்துகொள்ளல் இல்லை என்பதால் தான் மக்கள் நலனுக்கு அது "அசாதாரணமானரீதியில் பாதிப்பு" ஏற்படுத்தியதாக தெரிகிறது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பிராங்கோயிசத்தை சட்டப்பூர்வமாக்குவது என்பது தவிர்க்கவியலாமல் கட்டலோனியாவுடன் ஸ்பானிய அரசின் முரண்பாடுகளைக் கூர்மையாக்குகிறது. ஸ்பானிய உள்நாட்டு போரில் பிராங்கோவின் வெற்றி மற்றும் 1940 இல் பிரான்சின் நாஜி ஆக்கிரமிப்பு ஆகியவற்றுக்குப் பின்னர், நாடு கடத்தப்பட்டிருந்த கட்டலான் தேசியவாத தலைவர் லூயிஸ் கொம்பானிஸ் (Lluis Companys) ஐ நாஜி கெஸ்டாபோ படுகொலை செய்வதற்காக ஸ்பானிய பாசிசவாதிகளிடம் ஒப்படைத்தது.

ஐரோப்பிய ஒன்றியமும் அதன் அனைத்து உறுப்பு நாடுகளும் ஸ்பானிய ஆளும் வர்க்கத்தின் சதித்திட்டத்தில் நேரடியாக உடந்தையாய் உள்ளன. சிறையில் இருந்தே ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜுன்குவேராஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி என்று சட்ட விதிவிலக்குரிமை கோர முடியும். ஆனால் இந்த விதிவிலக்கு உரிமையை அவர் பெறலாமா என்பதைத் தீர்மானிக்க ஐரோப்பிய ஒன்றிய நீதித்துறை தீர்ப்பாணையம் ஒரு விசாரணையை முன்கொண்டு வந்தபோது, ஒரேயொரு ஐரோப்பிய ஒன்றிய அரசு கூட நீதிமன்றத்திடம் அதன் வாதங்களை முன்வைக்கவில்லை. அவை அனைத்துமே நனவுபூர்வமாக, மறைமுகமாகவேனும், பாசிசத்தை சட்டப்பூர்வமாக்கி அடிப்படை ஜனநாயக உரிமைகளை ஒழிப்பதற்கான ஸ்பானிய முதலாளித்துவ வர்க்கத்தின் நகர்வுகளை ஆதரித்தன.

ஐரோப்பிய ஒன்றிய கொள்கைகளுக்கு எதிராக வேலைநிறுத்தங்களும் அரசியல் போராட்டங்களும் மீட்டுயிர் பெற்று வருவதற்கு மத்தியில், கட்டலோனியாவில் இந்த தீர்ப்பானது, ஜனநாயக உரிமைகளுக்குக் குழிபறிக்கவும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் எங்கிலும் போராட்டத்தை ஒடுக்குவதற்குமான முனைவின் மிகக் கூர்மையான வெளிப்பாடு மட்டுமே ஆகும்.

கடந்த வாரம், பிரிட்டனில், 1,600 க்கும் அதிகமான காலநிலை மாற்ற போராட்டக்காரர்கள் இலண்டனில் கைது செய்யப்பட்டார்கள், நகரத்தில் எங்கேனும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கும் மாநகர பொலிஸ் தடை விதித்தது.

வெறுக்கப்படும் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் சமூக சமத்துவமின்மைக்கு எதிராக “மஞ்சள் சீருடை” போராட்டக்காரர்களின் பாரிய கைது நடவடிக்கைகளை தொடங்கியதுடன், அவர் பாசிசவாத சர்வாதிகாரி பிலிப் பெத்தனைப் புகழ்ந்துரைத்த பிரான்சில், பொலிஸ் மீண்டும் மீண்டும் அமைதியான போராட்டக்காரர்களை அடித்து நொருக்கி பின்னர் தங்களைத்தாங்களேப் பாதுகாத்து கொள்ள முயன்றவர்களையும் கைது செய்தது. ஒரு பெண் போராட்டக்காரரைப் பாதுகாப்பதற்காக ஒரு பொலிஸ்காரரின் கவசம் மீது குத்தியதற்காக 30 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒரு முன்னாள் குத்துச்சண்டை வீரர் கிறிஸ்டியான் டெற்றான்ஜே இன் வழக்கு அவமானத்திற்குரியதாகும். இது ஜனநாயக உரிமைகள் செல்லுபடியற்றதாக ஆக்கப்பட்ட இரண்டாண்டு கால அவசரகால நிலைக்குப் பின்னர் நடந்தது.

ஜேர்மனியில், நவபாசிசவாத ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) கட்சி, பாரிய போராட்டங்களுக்கு மத்தியில், பிரதான எதிர்கட்சியாக உயர முடிந்துள்ளது என்பது ஐரோப்பாவில் நவபாசிசவாத வளர்ச்சியின் மிகவும் அபாயகரமான வெளிப்பாடாகும்.

சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச கலைப்பு முதலாளித்துவ வர்க்க புத்திஜீவிகளை "வரலாறு முடிந்து விட்டது" என்றும், சோசலிசத்தின் மரணம் மற்றும் தாராளவாத ஜனநாயகத்தின் என்றென்றைக்குமான வெற்றி என்றெல்லாம் பிரகடனப்படுத்த இட்டு சென்று அண்மித்து மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர், ஐரோப்பா எங்கிலுமான ஆளும் வர்க்கங்கள் மீண்டுமொருமுறை சர்வாதிகாரத்தை நோக்கி திரும்பி வருகின்றன. மிக முக்கியமாக, ஸ்பானிய அரசு எந்திரத்தினுள் பாசிசவாத போக்குகள் மீளெழுவது "தாராளவாத" சமூக ஜனநாயகவாதி சான்சேஸ் இன் கவசத்தின் கீழ் நடக்கிறது.

ஸ்ராலினிச மற்றும் பப்லோயிச பொடெமோஸ் கட்சி போன்ற செல்வசெழிப்பான உயர்மட்ட நடுத்தர வர்க்க கட்சிகளின் கட்டமைப்புக்குள், மிக மிக அடிப்படையான உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டமும் கூட சாத்தியமில்லை. பொடெமோஸ் கட்சி 2017 இல் இருந்து கட்டலோனியாவை இலக்கில் வைத்த மாட்ரிட்டின் பாசிசவாத பிரச்சாரத்திற்கு எதிராக ஸ்பெனில் அரசியல் எதிர்ப்பைக் குலைத்து விடவும் மற்றும் குரல் வளையை நெரிக்கவும் தொடர்ந்து இடைவிடாது செயல்பட்டுள்ளது. அது, ஸ்ராலினிச மற்றும் சமூக-ஜனநாயக தொழிற்சங்கங்களுடன் அணிசேர்ந்து, அதன் ஐந்து மில்லியன் வாக்காளர்களிடையே ஒரேயொரு பாரிய போராட்டத்திற்குக் கூட அழைப்புவிடுக்கவில்லை, இந்த தொழிற்சங்கங்கள் கட்டலோனியாவில் ஒடுக்குமுறைக்காக இலக்கு வைக்கப்பட்ட தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக ஐக்கியப்பட்ட நடவடிக்கைகளை எடுக்க மறுத்துள்ளன.

அதற்கு பதிலாக, கட்டலோனியா மீதான ஒடுக்குமுறை பிரச்சாரத்திற்கு PSOE தலைமை வகிக்கின்ற நிலையிலும் கூட, பொடெமோஸ் அதனுடன் ஒரு கூட்டணி அரசாங்கம் அமைக்க அழைப்பு விடுத்து வருகிறது. இந்தாண்டு தொடக்கத்தில் தோல்வியடைந்த அரசு பேச்சுவார்த்தைகளின் போது அரசு விவகாரங்களில் சான்சேஸிற்கு "முழு விசுவாசத்துடன்" இருக்க சூளுரைத்த பொடெமோஸ் பொது செயலாளர் பப்லோ இக்லெஸியாஸ், கட்டலான் தீர்ப்புக்குப் பின்னர் அதன் மீது அவரின் வெறுப்பைக் காட்டிக் கொண்டதற்கு மத்தியில், “ஒவ்வொருவரும் சட்டத்தை மதித்து அத்தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்,” என்றார்.

சர்வாதிகாரம் மற்றும் பாசிசவாதத்தை நோக்கிய ஆளும் வர்க்கங்களின் திருப்பத்தை எதிர்த்து போராடுவதற்கு இத்தகைய திவாலான சக்திகளுடன் முறித்துக் கொண்டு, சர்வதேச தொழிலாள வர்க்கத்தை நோக்கி திரும்புவது அவசியமாகும்.

தங்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க போராடி வரும் கட்டலோனியா தொழிலாளர்கள் சமூகத்தின் சோசலிச மாற்றத்திற்கான ஒரு பொதுவான போராட்டத்தில் மற்றும் ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்காக போராடுவதில் ஸ்பெயினிலும், ஐரோப்பா எங்கிலும் உள்ள அவர்களின் வர்க்க சகோதர சகோதரிகளுக்கு முறையிட வேண்டும். இது ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் (ICFI) பிரிவுகளைக் கட்டமைக்கும் போராட்டத்தில் இருந்து பிரிவிக்கவியலாததாகும்.

Loading