இலங்கை சோ.ச.க. ஜனாதிபதி வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தனவின் அறைகூவல்இந்தியாவின் தெலுங்கானாவில் வேலைநிறுத்தம் செய்யும் போக்குவரத்துத் தொழிலாளர்களைப் பாதுகாத்திடுங்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்தியாவின் தெலுங்கானாவில் வேலைநிறுத்தம் செய்யும் போக்குவரத்துத் தொழிலாளர்களைப் பாதுகாக்குமாறு நவம்பர் 16 அன்று நடக்கவுள்ள இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தன பின்வரும் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

தெலுங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கூட்டுத்தாபனத்தின் (டி.எஸ்.ஆர்.டி.சி) வேலை நிறுத்தம் செய்யும் உங்கள் சக தொழிலாளர்கள் மீது நரேந்திர மோடி தலைமையிலான இந்தியாவின் மத்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் மாநில அரசு நடத்தும் பிற்போக்கு தாக்குதலில் இருந்து அவர்களைப் பாதுகாக்குமாறு இந்தியா, இலங்கை மற்றும் தெற்காசியா முழுவதும் உள்ள தொழிலாளர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.

சுயாதீனமான அரசுக்கு சொந்தமான டி.எஸ்.ஆர்.டி.சி.யை மாநில அரசுடன் இணைக்குமாறு கோரி போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே 48,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்வதாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அக்டோபர் 5 அன்று எதேச்சதிகாரமாக அறிவித்தார். அவர்கள் கொடூரமான வேலை நிலைமைகள், வேலைப் பளு மற்றும் சம்பளப் பற்றாக்குறைக்கும் முடிவுகட்டுமாறும் கோரினர்.

டி.எஸ்.ஆர்.டி.சி. தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த ராவ் திமிர்த்தனமாக நிராகரித்ததோடு மட்டுமல்லாமல், தொழிலாளர்களின் செப்டம்பர் மாத சம்பளத்தையும் சட்டவிரோதமாக நிறுத்தி வைத்துள்ளார். பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் "எந்தவொரு ஊழியர் சங்கத்திலும் சேரமாட்டோம்" என்ற உறுதிமொழியைக் கொடுக்கும் வரை "பணியில் சேர்க்கபட" மாட்டார்கள் என்றும் அவர் அச்சுறுத்தினார்.

தொழிலாளர்கள் கடுமையாக போராடி வென்ற வேலைநிறுத்தம் செய்யும் உரிமை, தொழிற்சங்க பிரதிநிதித்துவத்தை ஒழுங்கமைக்கப்பதற்கான சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட உரிமை, வேலைக்கு ஊதியம் பெறும் உரிமை ஆகியவற்றின் மீதான இந்த மூர்க்கத்தனமான தாக்குதலை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.

இந்த தாக்குதல் ஏற்கனவே பதினொரு தொழிலாளர்களின் உயிரைப் பறித்திருக்கிறது. நான்கு தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டனர், மேலும் ஏழு பேர் தங்கள் தொழில்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரங்கள் குறித்த கவலையால் பாதிக்கப்பட்டு மாரடைப்பால் இறந்துள்ளனர்.

இது, அரசுக்கு சொந்தமான பஸ் சேவையை தனியார்மயமாக்க திட்டமிடும் மோடி அரசாங்கத்தின் உத்தரவின் பேரில், மாநில அரசின் திட்டமிட்ட தாக்குதலே என்பது தெளிவாகிறது. ஒரு பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் மோடியின் இந்து-மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சி, “பொருளாதார சீர்திருத்தம்” என்ற போர்வையில் பொதுத்துறை நிறுவனங்களை பெருமளவில் தனியார்மயமாக்கும் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.

பொது போக்குவரத்து நிறுவனத்தை முழுமையாக தனியார்மயமாக்குவதற்கான ஒரு சாக்குப்போக்கை உருவாக்கும் பொருட்டு, தெலுங்கானா மாநில அரசு டி.எஸ்.ஆர்.டி.சி. இல் நிதியை துடைத்துக் கட்டுகிறது. இது போக்குவரத்துத் தொழிலாளர்கள் மீதான சுரண்டலை கடுமையாக தீவிரப்படுத்துவதோடு பயணிகள் மீதும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். அவர்களில் பெரும்பாலோர் வறுமையில் வாடும் மக்களாவர்.

டி.எஸ்.ஆர்.டி.சி. தொழிலாளர்களின் போராட்டம் நாட்டுக்கு நாடு உலகளவில் தொழிலாளர்கள் நடத்தும் வெகுஜன வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் ஒரு பகுதியாகும் என்ற உண்மையை நான் வலியுறுத்த விரும்புகிறேன். உலக முதலாளித்துவ முறைமையே வரலாற்று ரீதியில் நெருக்கடியில் மூழ்கியிருப்பதே இந்த நெருக்கடியின் தோற்றுவாயாகும். (பார்க்க: “சிலி முதல் லெபனான் வரை: தொழிலாள வர்க்க தாக்குதல் உலகம் முழுவதும் பரவி வருகிறது”)

இலங்கையில் பல்கலைக்கழக கல்விசாரா தொழிலாளர்கள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் ரயில் தொழிலாளர்கள் அண்மையில் நடத்திய வேலைநிறுத்தங்கள் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் புரட்சிகர இயக்கத்தின் ஆரம்ப கட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இந்தியா, இலங்கை, தெற்காசியா மற்றும் சர்வதேச அளவில் உள்ள தொழிலாளர்கள் தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு பிரிவினர் மீதும் இந்த பிற்போக்குத்தனமான சமூக தாக்குதல்களை கட்டவிழ்த்து விட முதலாளித்துவ அரசாங்கங்களை அனுமதிக்கக் கூடாது. அதிகரித்து வரும் அரசாங்க மற்றும் பெருநிறுவன தாக்குதலுக்கும் எதிராக போராட, தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று மற்றும் புறநிலை ஐக்கியமானது வேலைத் தளங்களிலும் தேசிய எல்லைகளைக் கடந்தும் நனவுப் பூர்வமாக கட்டியெழுப்பப்பட்டு ஸ்தாபிக்கப்பட வேண்டும். சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அத்தியாவசியமான ஒருங்கிணைந்த போராட்டம், சர்வதேச சோசலிச வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

Loading