வர்க்கப் போர் கைதிகளான ஜூலியன் அசான்ஜ் மற்றும் செல்சி மனிங்கை விடுவிக்க ஒரு வெகுஜன இயக்கத்தை உருவாக்குங்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பின்வரும் அறிக்கை, இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தனவால் வெளியிடப்பட்டது. அசான்ஜ் மற்றும் மானிங்கை உடனடியாக விடுவிக்க அழைப்பு விடுக்கும் ஒரே வேட்பாளர் விஜேசிறிவர்தன மட்டுமே ஆவார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் நிறுவனர் மற்றும் வெளியீட்டாளரான ஜூலியன் அசான்ஜ் மற்றும் தகவல் அம்பலப்படுத்திய செல்சி மானிங்கின் விடுதலைக்காக ஒரு வெகுஜன இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தில் சேருமாறு தெற்காசியா மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

ஈராக்கில் பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கண்மூடித்தனமாக கொல்லப்படுவதையும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளின் சட்டவிரோத நடவடிக்கைகள் உள்ளிட்ட அமெரிக்க போர்க்குற்றங்களை வெளிப்படுத்த அவர் துணிந்ததால் அசான்ஜ் துன்புறுத்தப்படுகிறார். விக்கிலீக்ஸுக்கு பல்லாயிரக்கணக்கான ஆவணங்களை வழங்கிய முன்னாள் அமெரிக்க இராணுவ வீரர் செல்சி மானிங், அசான்ஜிற்கு எதிரான ஒரு இரகசிய நீதிமன்றத்தின் முன் சாட்சியமளிக்க மறுத்த காரணத்தால் அமெரிக்க சிறையில் தவிக்கிறார்.

இந்த தைரியமான நபர்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை. அமெரிக்காவும் அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகளும் உண்மைக்கா முன்நிற்கின்ற அனைத்து நேர்மையான ஊடகவியலாளர்களையும் போராளிகளையும் மிரட்டவும் மௌனமாக்கவும் முயற்சிப்பதாலேயே அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு கொடூரமான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

அசான்ஜ் மற்றும் மனிங் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதானது ஒவ்வொரு நாட்டிலும் உழைக்கும் மக்களின் பேச்சு சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாகும். ஏகாதிபத்திய சக்திகள் அச்சுறுத்தப்படும்போது, அவை விரைவாக “சட்டத்தின் ஆட்சி” மற்றும் “இயற்கை நீதி” மற்றும் முதலாளித்துவ ஆட்சியின் சர்வாதிகார யதார்த்தத்தை வெளிப்படையாகக் காட்டுகின்றன.

இங்கிலாந்தின் பெல்மார்ஷ் சிறைச்சாலையில் தனிமையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜூலியன் அசான்ஜ் மீதான நடவடிக்கை சரீர மற்றும் உளவியல் சித்திரவதைகளுக்கு ஒப்பாகும். சித்திரவதை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் நில்ஸ் மெல்சர் மற்றும் அசான்ஜின் தந்தை ஜோன் ஷிப்டன் ஆகியோர், விக்கிலீக்ஸ் நிறுவனர் அதிகபட்ச பாதுகாப்பு சிறையில் இருந்தால் இறந்துவிடக்கூடும் என்று எச்சரித்துள்ளனர். பிரிட்டிஷ் நீதித்துறை அதிகாரிகள், அடுத்த பெப்ரவரி மாதம் அசான்ஜை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கு முன்னதாக, அவரை கங்காரு நீதிமன்ற பாணியில் நடத்துகின்றனர். உளவு பார்த்ததற்காக 17 குற்றச்சாட்டுக்கள் உட்பட, அசான்ஜிற்கு எதிராக 18 குற்றச்சாட்டுகளை அமெரிக்க நீதித்துறை முன்வைத்துள்ளது, மேலும் அமெரிக்க நீதிமன்றங்களால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவர் 175 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அதைவிட மோசமானதை எதிர்கொள்வார்.

அசான்ஜ் மற்றும் மானிங் துன்புறுத்தப்படுவதும் பேச்சு சுதந்திரம் மீதான தாக்குதல்கள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போருக்கான தயாரிப்புகளால் இயக்கப்படுகின்றன. எல்லா இடங்களிலும் முதலாளித்துவ அரசாங்கங்கள், எல்லா நாடுகளிலும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக கிளர்ந்தெழும் தொழிலாள வர்க்கத்தின் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் இயக்கத்தை ஊடக தணிக்கை, அச்சுறுத்தல் மற்றும் நேரடி அடக்குமுறை மூலம் நசுக்க முயல்கின்றன.

சிலி, லெபனான் மற்றும் அதற்கு அப்பால் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் வெடித்ததுடன், இந்தியாவில் தெலுங்கானா போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் மதர்சன் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தங்கள் மற்றும் இலங்கையில் கடந்த மாதங்களில் ரயில் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா பல்கலைக்கழக ஊழியர்கள் சம்பந்தப்பட்ட தொழில்துறை நடவடிக்கைகளும், தொழிலாளர்கள் தங்கள் சமூக நிலைமைகளைப் பாதுகாப்பதிலும், அதிகாரங்களை சவால் செய்வதிலும் உறுதியாக இருப்பதை சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் எந்த முதலாளித்துவ ஜனாதிபதி வேட்பாளர் அதிகாரத்தைப் பெற்றாலும் அதைப் பொருட்படுத்தாமல், இலங்கை தொழிலாளர்களின் தொழில்துறை மற்றும் அரசியல் நடவடிக்கை இன்னும் வீரியத்துடனும் உறுதியுடனும் முன்நகரும்.

அசான்ஜ் மற்றும் மானிங்கைப் பாதுகாக்க எல்லா இடங்களிலும் உள்ள தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த தைரியமான நபர்களை சிறையில் அடைத்து வைப்பது ஒவ்வொரு தொழிலாளியின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலாகும். தொழிற்சாலைகள் மற்றும் வேலைத் தளங்களில் சுயாதீன நடவடிக்கை குழுக்களை உருவாக்குவதன் மூலமும், அசான்ஜ் மற்றும் மானிங்கை உடனடியாகவும் நிபந்தனையுமின்றி விடுவிக்கக் கோரும் ஒரு சர்வதேச வெகுஜன இயக்கத்திற்கான போராட்டத்தை கட்டியெழுப்புவதன் மூலமும் இந்த தாக்குதலுக்கு பதிலிறுத்தவும் தோற்கடிக்கவும் வேண்டும்.

இலங்கை சோ.ச.க. ஜனாதிபதி வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தன
9 நவம்பர் 2019

Loading