ஒடுக்குமுறைக்கு எதிராக, கொலம்பிய தொழிலாளர்கள் கடந்த வாரத்தில் இரண்டாவது தேசிய வேலைநிறுத்தத்தை மேற்கொண்டனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

புதன்கிழமை, கொலம்பிய தொழிலாளர்களும் விவசாயிகளும் கடந்த வார இரண்டாவது தேசிய வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.

பல தசாப்தங்களில் கடந்த வியாழக்கிழமை, ஜனாதிபதி இவான் டுக்கே இன் வலதுசாரி ஜனநாயக மைய (Democratic Center - CD) நிர்வாகத்திற்கு எதிராக நூறாயிரக்கணக்கானவர்கள் அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதான மிகப்பெரிய தேசிய வேலைநிறுத்தத்தை தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு படையினர் எதிர் தாக்குதலை நடத்தினர், அதில் மூன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இதற்கு பதிலிறுப்பாக, சனிக்கிழமை மாலை டுக்கேயின் தனிப்பட்ட குடியிருப்பிற்கு வெளியே ஆயிரக்கணக்கானவர்கள் அணிவகுத்தது உட்பட, மீண்டும் பெரும் ஆர்ப்பாட்டங்கள் அங்கு வெடித்தன. நாடு முழுவதும் இரவில் கேசெரோலாஸோ (Cacerolazos) ஆர்ப்பாட்டம் நடந்துள்ளன, அப்போது அதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்திற்கு செவிசாய்க்கப்படாததை அடையாளப்படுத்தி வெற்றுப் பானைகள் மற்றும் பாத்திரங்களை தட்டி பேரொலி எழுப்பினர்.

திங்களன்று பிற்பகுதியில், நடமாடும் இடையூறு தடுப்புத் தடை (Mobile Anti-Disturbances Squadron-ESMAD) கலகப் பிரிவு பொலிசார் சனிக்கிழமை நடத்திய கண்ணீர்புகைக் குண்டு சூட்டினால் தலையில் தாக்கப்பட்டு பின்னர் மருத்துவமனையில் இறந்து போன 18 வயது டிலான் குரூஸ் பற்றிய செய்தி வெளியானது. குரூஸின் மரணம், அமைதியான ஆர்ப்பாட்டங்களுக்கு ESMAD பதிலிறுப்பின் மிருகத்தனத்தை குறித்துக் காட்டியுள்ளதுடன், டுக்கே க்கு எதிரான பெரும் எதிர்ப்பை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. வேலைநிறுத்தத்திற்கு முன்பாக, சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு டுக்கேக்கான ஒப்புதல் மதிப்பீடு படு மோசமாக 26சதவிகிதமாக இருப்பதைக் காட்டியது, போராட்டங்கள் தொடங்கிய பின்னர் இது மேலும் கீழ்நோக்கிய வீழ்ச்சியைக் கண்டது.

கடந்த வாரம் ட்விட்டரில், #ParoNacionallndefinido, அல்லது “காலவரையற்ற தேசிய வேலைநிறுத்தம்” என்ற குறுங்கொத்துச் செய்தி (hashtag) கொலம்பியா முழுவதும் பிரபலமாகியிருந்தது. சிலி மற்றும் ஈக்வடோரில் நடந்த பரந்தளவிலான போராட்டங்கள், அத்துடன் பெரும்பாலானோரை போராடுவதற்கு உந்தித் தள்ளியதான பொலிவியாவில் நிகழ்ந்த இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றிலிருந்து கொலம்பியர்கள் மிகுந்த உத்வேகத்தை பெற்றுள்ளனர். சிலி, ஆறு வார கால ஆர்ப்பாட்டங்களில் அதன் மூன்றாவது தேசிய வேலைநிறுத்தத்தை நடத்தி முடித்ததற்கு மறுதினம் கொலம்பியர்களின் பொது வேலைநிறுத்தம் நடைபெற்ற நிலையில், ஒட்டுமொத்த தென் அமெரிக்க கண்டமும் சமூக வெடிப்புக்களால் சிதைந்து போயுள்ளது.

டுக்கே, தேசிய வேலைநிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்திருந்த முக்கிய தொழிற்சங்கங்களின் தலைவர்கள் மற்றும் மாணவர் குழுக்கள் அடங்கிய வேலைநிறுத்தக் குழுவுடனான (Comité del Paro) ஒரு கூட்டத்தை நடத்தியதன் மூலம் இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவான எழுச்சிக்கு பதிலிறுத்தார். இதில் மத்திய தொழிலாளர் சங்கம் (Central Union of Workers-CUT), தொழிலாளர் பொது கூட்டமைப்பு (General Confederation of Workers-CGT), கொலம்பியாவின் தொழிலாளர் கூட்டமைப்பு (Confederation of Workers of Colombia-CTC), மற்றும் பிற முக்கிய தொழிற்சங்கங்கள் அடங்கும், இவையனைத்துமே கொலம்பியாவில் பல தசாப்தங்களாக வர்க்கப் போராட்டத்தை நசுக்குவதற்கு வேலை செய்துள்ளன.

கொலம்பியாவில் சமூக சமத்துவமின்மையும் அரசு வன்முறையும் தாங்கிக்கொள்ள முடியாததாகி விட்ட நிலையில், கோபத்தை வடிகால் கட்டும் ஒரு வழியாக தொழிற்சங்கங்கள் முதலில் தேசிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விட்டன. ஆகஸ்டில் குண்டுவெடிப்புத் தாக்குதலில் இராணுவம் குறைந்தது எட்டு குழந்தைகளை கொன்றது குறித்தும், மற்றும் அக்டோபரில் கவுகாவில் ஐந்து பழங்குடித் தலைவர்கள் கொல்லப்பட்டது குறித்தும் நவம்பர் தொடக்கத்தில் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, மாணவர்களும் பழங்குடியினக் குழுக்களும் தொழிற்சங்கங்களுடன் இணைந்து தேசிய வேலைநிறுத்தத்தின் அளவை பெரிதும் விஸ்தரித்தனர்.

வேலைநிறுத்தக் குழு, டுக்கே நிர்வாகம் மற்றும் வணிகத் தலைவர்கள் ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் நடைபெற்றன. கூட்டங்களின் போது, போராட்டக்காரர்கள் மத்தியில் நிலவும் பெரும் சீற்றத்தை சிதறடிக்க போலி ஜனநாயக வித்தையை காட்டும் விதமாக, அரசாங்கம், வணிக மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களுக்கு இடையில் நான்கு மாத கால சிறந்த தேசிய உரையாடல்கள் (Gran Conversación Nacional) நடத்தப்பட வேண்டும் என டுக்கே முன்மொழிந்தார். மேலும், வேலைநிறுத்தக் குழுவின் தலைவர்கள் முன்வைக்கும் மிகக் குறைந்த கோரிக்கைகளைக் கூட அவர் ஒப்புக்கொள்ள மாட்டார் என்பதை டுக்கே தெளிவுபடுத்தியிருந்தார். அதிகரித்தளவில் தீவிரமயமாக்கப்பட்ட மக்கள் மத்தியில் டுக்கே இன் முன்மொழிவை விற்க முடியாது என்பதை நன்கு அறிந்திருந்த வேலைநிறுத்தக் குழுவின் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறி மற்றொரு தேசிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விட தூண்டப்பட்டனர்.

இந்த வெளிநடப்பிற்கு பின்னர், வேலைநிறுத்தக் குழுவின் தலைவர்கள் 13 சீர்திருத்த கோரிக்கைகள் அடங்கிய ஒரு “விஞ்ஞாபனத்தை” வெளியிட்டனர். இதில், கடந்த ஆண்டு சட்டவிரோதமாக இயற்றப்பட்ட பிற்போக்கு வரி மசோதாவை திரும்பப் பெறுதல், பரவலாக வெறுக்கப்படும் ESMAD கலகப் பிரிவு பொலிஸின் கலைப்பு, அரசு சொத்துக்கள் தனியார்மயமாக்கப்பட மாட்டாது என்ற உபயோகமற்ற உறுதிமொழிகள், கொலம்பியாவின் புரட்சிகர ஆயுதப் படைகள் (Revolutionary Armed Forces of Colombia-FARC) கொரில்லா இயக்கத்துடன் சம்பந்தப்பட்ட மோசடியான 2016சமாதான உடன்படிக்கைகளை மீண்டும் செயல்படுத்துதல், தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுடன் சுற்றுச்சூழல் மற்றும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் டுக்கே நிர்வாகத்தால் இயற்றப்பட்ட வேறுபட்ட சிக்கன நடவடிக்கைகளை திரும்பப் பெறுதல் ஆகியவை அடங்கும்.

இந்த கோரிக்கைகள் எதுவும் கொலம்பியாவின் ஆளும் உயரடுக்கின் அல்லது அவர்களின் ஏகாதிபத்திய புரவலர்களின் இலாப நலன்களை பாதிக்காது. ஒட்டுமொத்த நாடும் போராட்டத்தில் சிக்கித் தவிக்கையில் தொழிற்சங்கத் தலைவர்கள் இத்தகைய வலிகுறைப்பு நடவடிக்கைகளை முன்வைப்பதானது, முதலாளித்துவத்தை பராமரிப்பதையும், அமெரிக்க ஏகாதிபத்தியம் கொலம்பியாவை அடிமைப்படுத்துவதையும் அடிப்படையாகக் கொண்ட அவர்களது பிற்போக்கு முன்னோக்கையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

புதன்கிழமை, அமெரிக்க வெளியுறவு செயலர் மைக் பொம்பியோ, தனது நிர்வாகத்திற்கு “உறுதியான ஆதரவை” வழங்க உறுதியளிக்கும் படி டுக்கே க்கு தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்தார். வெளியுறவுத்துறை செய்திக் குறிப்பு ஒன்று, பொம்பியோ “கொலம்பியாவில் சமீபத்திய ஆர்ப்பாட்டங்களுக்கு பதிலிறுப்பாக ஜனாதிபதி டுக்கே நடத்திய தேசிய உரையாடலை வரவேற்றார்” என்று தெரிவித்தது.

கடந்த வாரம், அமெரிக்காவிற்கான கொலம்பிய தூதர் பிரான்சிஸ்கோ சாண்டோஸ் கால்டெரோன் க்கும் நாட்டின் வெளியுறவு அமைச்சராக பதவியேற்க இருக்கும் கிளவுடியா புளூம் க்கும் இடையேயான தொலைபேசி உரையாடல் கசிவிற்குப் பின்னர், டுக்கே ஐ சந்திப்பதற்காக பொகோட்டாவிற்கு கால்டெரோன் பயணித்தார். இந்த கசிந்த தொலைபேசி உரையாடலில், தற்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை, வெனிசுவேலாவில் ஆட்சி மாற்றத்திற்கான தனது திட்டங்களை நிறைவேற்றுவதில் போதிய தீவிரத்துடன் இல்லை என்று கால்டெரோன் கேலி செய்திருந்தார்.

திங்களன்று டுக்கே ஐ சந்தித்த பின்னர், கால்டெரோனுக்கு எதிராக எந்தவித கண்டனமும் எழவில்லை என்ற நிலையில், நேரடியாக வாஷிங்டனுக்கு அவர் அனுப்பப்பட்டார். கொலம்பியாவில் சமூக பதட்டங்களை வெளிப்புறமாக திசை திருப்புவதற்கும், நாட்டில் ஒரு இராணுவ சதித்திட்டத்திற்கான நீண்டகால திட்டங்களை செயல்படுத்துவதற்கும் ஒரு வழிமுறையாக டுக்கே நிர்வாகம், வாஷிங்டனுடன் இணைந்து, வெனிசுலாவில் இராணுவத் தலையீட்டிற்கான ஒரு சாக்குப்போக்கை எதிர்காலத்தில் உருவாக்க முயற்சிக்கக்கூடும் என்பதற்கான உண்மையான வாய்ப்பு உள்ளது.

20ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில், 1964 இல் உள்நாட்டு மோதலைத் தொடங்குவதன் மூலம், பல்லாயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்றதற்குப் பொறுப்பான பாசிச துணைப்படைகளுக்கு ஆயுதங்களை வழங்கியதன் மூலம் கொலம்பிய அரசு இலத்தீன் அமெரிக்காவில் மிகவும் வலதுசாரிகளில் ஒன்றாக உருவெடுத்தது. மேலும், மோசடியான வகையில் "போதைப்பொருள் மீதான போர்" என்பதன் பாகமாக இந்த பிராந்தியத்தில் ஆயுத விற்பனை மற்றும் இராணுவ உதவிகளில் பில்லியன் கணக்கான டாலர்களை ஈட்டும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முக்கிய வாடிக்கையாளர் நாடாக கொலம்பியா உள்ளது.

இந்த நீண்ட கால பிற்போக்குத்தனத்தினதும் மோதல்களினதும் ஒட்டுமொத்த தாக்கம் மிகவும் பிரமாண்டமானது. கொலம்பியாவில் இப்போது உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் 7.6 மில்லியனுக்கும் அதிகமானோராக உள்ளனர் அல்லது நாட்டின் மக்கள் தொகையில் 15 சதவீதத்திற்கும் அதிகமானோராவர், மற்றும் உலகின் மொத்த இடம்பெயர்ந்தோரில் கிட்டத்தட்ட 20 சதவீதம் ஆகும். இந்த நாடு மிகப்பெரிய சமூக சமத்துவமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளது, அதாவது இந்நாட்டின் மூன்று பெரும் செல்வந்தர்கள் சமூகத்தின் கீழ்மட்ட பத்து சதவிகிதத்தினரைக் காட்டிலும் அதிக செல்வத்தைக் கொண்டுள்ளனர், அதே நேரத்தில் 12.7 மில்லியனுக்கும் அதிகமான கொலம்பியர்கள் ஒரு நாளைக்கு 2 அமெரிக்க டாலருக்கும் குறைவான வருமானத்தில் தான் வாழ்க்கையை கழிக்கின்றனர்.

நாட்டின் வரலாறும், அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மீது தொடரும் வன்முறையான அடக்குமுறையும் நிரூபிப்பது போல, கொலம்பிய ஆளும் வர்க்கம் மற்றும் வெளிநாட்டு முதலாளிகளின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசுக்கு விடும் முறையீடுகள் பயனற்றவையே. இதுவே, தேசிய வேலைநிறுத்தங்களின் உத்தியோகபூர்வ தொழிற்சங்கத் தலைமையால் முன்வைக்கப்பட்டு வரும் திவாலான முன்னோக்காகும்.

வர்க்கப் போராட்டத்தை கொடூரமாக ஒடுக்கியதற்கான கொலம்பியாவின் நீண்ட வரலாறு ஒருபுறம் இருந்தபோதிலும், நூறாயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கியிருப்பது, வெகுஜனங்களிடையே ஏற்பட்டிருக்கும் மகத்தான தீவிரமயமாக்கல் போக்கை சுட்டிக்காட்டுகிறது. டுக்கே நிர்வாகம் மற்றும் முழு மாநில எந்திரத்தையும் புரட்சிகரமாக தூக்கியெறிய, அரசு அனுமதித்த தொழிற்சங்கத் தலைமையை எதிர்த்து, கொலம்பிய தொழிலாளர்கள் தங்களது சொந்த சாமானிய தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு பகுதி குழுக்களை அமைக்க வேண்டும்.

Loading