அமெரிக்க ஊடகங்கள் வீகர் "மனித உரிமைகள்" தொடர்பாக சீன-விரோத பிரச்சாரத்தை தீவிரப்படுத்துகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளிடம் இருந்து வெளிப்பட்டு வரும் சீனாவுக்கு எதிரான சரமாரியான தீவிர பிரச்சாரம், மேற்கு மாகாணமான ஜின்ஜியாங்கில் முஸ்லீம் வீகர் இன சிறுபான்மையினருக்கு எதிராக பயன்படுத்தப்படும் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் சம்பந்தமாக கசியவிடப்பட்ட சீன ஆவணங்களை நியூ யோர்க் டைம்ஸூம் சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்களின் கூட்டுக்குழுமமும் பிரசுரித்தபோது, மற்றொரு குறிப்பிடத்தக்க மட்டத்தை எட்டியுள்ளது.

அந்த ஆவணங்கள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (CCP) ஆட்சி மீது பழிசுமத்தவும் மற்றும் பெய்ஜிங் மீது தண்டிக்கும் வகையிலான நடவடிக்கைகளை திணிக்க வாஷிங்டனின் கோரிக்கைகளை அதிகரித்துக் கொள்ளவும் அமெரிக்க ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகளால் பற்றிக்கொள்ளப்பட்டுள்ளன. நேற்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ அறிவிக்கையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி “பாரிய சிறையடைப்புகளில் தனிநபர்களுக்கு எதிராக மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களை நடத்தி" வருகிறது என்பதற்கு "அதிகளவில்" ஆதாரங்கள் இருப்பதாக அறிவித்தார்.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் ஏனைய தலைவர்களின் உள்விவகார பேச்சுக்களின் சுமார் 200 பக்கங்கள் உட்பட அது கைப்பற்றிருந்த 24 ஆவணங்களின் சில அம்சங்களை விவரித்திருந்த அதன் நவம்பர் 16 கட்டுரையைத் தொடர்ந்து, நியூ யோர்க் டைம்ஸ் சீன ஆட்சியைக் கண்டித்து பல கருத்துரைகளை வெளியிட்டுள்ளது.

“இது ஒடுக்குமுறைமிக்க கட்டுக்கதை இல்லை. இது தான் சீனா,” என்று தலைப்பிடப்பட்டிருந்த நவம்பர் 18 தலையங்கம் ஒன்று, அந்த ஆவணங்கள் 1984 மற்றும் Brave New World நாவல்களை எதிரொலித்ததாக அறிவித்ததுடன், சீனாவின் "சீர்திருத்தக் கல்வி" முகாம்களை "நவீன-கால சர்வாதிபத்திய மூளைச்சலவையகங்கள்" என்று முத்திரை குத்தியது. “ஜின்ஜியாங்கில் பெய்ஜிங்கின் இரகசியங்கள்,” என்று அதே நாள் வெளியான மற்றொரு கருத்துரை, மேற்கு "பெரிதும் மவுனமாக" இருப்பதற்காக அதை விமர்சித்தது மற்றும் வாய்மூடி இருப்பதற்காக "மேற்கத்திய தலைவர்களையும், உலக வங்கி அல்லது ஐக்கிய நாடுகள் சபையையும் மன்னிக்க முடியாது" என்று அறிவித்தது.

இவை அனைத்தும் சிஐஏ மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறையால் எழுதப்பட்ட கதையாக இருப்பதுடன், ஊடகங்களோ சீனா மீது அவற்றின் ஆரவாரமான கண்டனங்களை வெளியிடுவதில் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக, “சீனாவில், ஒவ்வொரு நாளும் Kristallnacht தான் (நாஜிகளால் யூத படுகொலை ஆரம்பிக்கப்பட்டதை குறிக்கும்நாள்),” என்று தலைப்பிட்டு நவம்பர் 3 இல் வாஷிங்டன் போஸ்டில் ஓர் அருவருக்கத்தக்க கருத்துரை வெளியானது. அது ஆத்திரமூட்டும் வகையில் வீகர் இன மக்கள் சீனாவினால் கலாச்சார ஒடுக்குமுறைக்குள்ளாவதையும் மற்றும் அடைக்கப்பட்டிருப்பதையும், இரண்டாம் உலகப் போரின் போது சித்திரவதை முகாம்களில் மில்லியன் கணக்கானவர்களைக் கொன்று குவித்த நாஜிக்களின் யூத இனப்படுகொலையுடன் ஒப்பிட்டது.

உலக சோசலிச வலைத் தளம், பெய்ஜிங் CCP ஆட்சிக்கு வக்காலத்து வாங்கவில்லை, எந்த வகையிலும் அரசியல் ஆதரவும் வழங்கவில்லை. 1978 இல் இருந்து அது முதலாளித்துவ மீட்சியை நடைமுறைப்படுத்தி உள்ள நிலையில், CCP தலைமை அதன் பலவீனமான சமூக அடித்தளத்தை உறுதிப்படுத்தும் முயற்சியில் அதிகரித்தளவில் சீன தேசியவாதத்தை தூண்டி விடுவதைச் சார்ந்துள்ளது. அது பெரிதும் ஹான் (Han) பேரினவாதத்தில் தங்கியிருப்பதானது ஜின்ஜியாங்கில் மட்டுமல்ல, மாறாக திபெத் மற்றும் ஏனைய பகுதிகளிலும் வாழும் ஏனைய இனச் சிறுபான்மையினரிடம் இருந்து அதை அன்னியப்படுத்தி உள்ளது. அது பிரிவினைவாத உணர்வுக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் பொலிஸ் அரசு ஒடுக்குமுறையை கொண்டு விடையிறுத்திருப்பது இன்னும் இந்த அன்னியப்படலை ஆழப்படுத்தி மட்டுமே உள்ளது.

சமீபத்தில் கசியவிடப்பட்ட ஆவணங்களின் தொகுப்பை போலி ஆவணங்கள் என்று பெய்ஜிங் நிராகரித்திருப்பதுடன் சேர்ந்து, ஜின்ஜியாங்கில் உள்ள அதன் தடுப்புக்காவல் மையங்களைச் "சீர்திருத்தக் கல்வி" மையங்களாக சித்தரிப்பதற்கான பெய்ஜிங்கின் முயற்சிகள் நம்பத்தகுந்தவையாக இல்லை. மறுபுறம், அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் கூட்டாளிகளும் தமது சொந்த பிற்போக்குத்தனமான நோக்கங்களுக்காக எரிச்சலூட்டும் விதத்தில் வீகர்கள் மீதான ஒடுக்குமுறையைச் தமக்கு சாதமகாக்கி வரும் விதம், அந்த ஆவணங்கள் குறித்து மிகைப்படுத்தப்பட்ட கூற்றுக்களிலேயே வெளிப்படுகிறது.

ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இதுவரையில் பிரசுரிக்கப்பட்டுள்ள இரண்டு தொகுப்பு ஆவணங்களில் எதுவொன்றுமே, குறைந்தபட்சம் ஒரு மில்லியன் வீகர் இன மக்கள் சீன "சீர்திருத்த முகாம்களில்" அடைக்கப்பட்டுள்ளதாக மேற்கத்திய ஊடங்கங்கள் திரும்ப திரும்ப கூறும் வாதங்களுக்கு ஆதரவாக இல்லை. இந்த விபரங்கள், ஒரு மிகப்பெரிய பொய்யின் இயல்பைக் கொண்டுள்ளன. இவை முடிவின்றி திரும்பதிரும்ப கூறப்படுவதுடன், பல்வேறு "வல்லுனர்களின்" “மதிப்பீடுகளின்" அடிப்படையில் இருப்பதைத் தவிர, ஆதாரபூர்வமானதாக இல்லை.

அதுபோன்றவொரு "வல்லுனரான" அட்ரியன் ஜென்ஜ் (Adrian Zenz), ஜின்ஜியாங்கின் பாரிய தடுப்புக்காவல் முகாம்களை எடுத்துக்காட்டும் "ஜிகா பைட் அளவிலான கோப்புகள், பக்கம் பக்கமான அறிக்கைகள், ஆயிரக்கணக்கான அட்டவணைகள்" குறித்து குறிப்பிடப்பட்டு வருகின்ற பரப்பரப்பான கருத்துக்களுடன் அவரின் குரலையும் சேர்த்துக் கொள்வதற்காக, நியூ யோர்க் டைம்ஸ் நவம்பர் 24 இல் அவருக்கு அதன் பக்கங்களை ஒதுக்கியது. "மிகப்பெரியளவிலான அரசு கோப்புகளின் தொகுப்பு" அவருக்கும் கிடைத்திருப்பதாக தெரிவிக்கிறார். இதுவரையில் இன்னும் பகிரங்கமாக வெளியிடப்படாத இவற்றின் அடிப்படையில், 2017 இல் இருந்து 900,000 க்கும் 1.8 மில்லியனுக்கும் இடையிலான மக்கள் அடைக்கப்பட்டிருப்பதாக அவரின் சொந்த திருத்தப்பட்ட மதிப்பீட்டை முன்வைக்கிறார்.

இதுபோன்ற "மதிப்பீடுகளை" நாணயமானவை என்று ஏற்றுக் கொள்வதில் எச்சரிக்கையாக இருப்பதற்கு அனைத்து காரணங்களும் உள்ளன. ஜேர்மன் கல்வித்துறையாளரான ஜென்ஜ் வலதுசாரி சிந்தனைக் குழாம்கள் மற்றும் பிரசுரங்களின் ஒரு வலையமைப்புடன் இணைந்தவராவார். அது, சிஐஏ இன் முன்னணி அமைப்பான, ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கொடை (National Endowment for Democracy - NED) இடம் நிதியுதவி பெறும் உலக வீகர் மாநாடு (World Uyghur Congress) மற்றும் அமெரிக்க வீகர் கூட்டமைப்பு (American Uyghur Association) ஆகியவை உட்பட நாடுகடந்து அமைந்துள்ள வீகர் அமைப்புகளுடன் தொடர்புபட்டது. அவர் ஜேர்மனியில் ஐரோப்பிய கலாச்சார மற்றும் மத-வேதாந்த- பயிலகத்தில் விரிவுரையாளராகவும், வாஷிங்டனில் கம்யூனிசத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவார்த்த அமைப்பில் மூத்த ஆய்வாளராகவும் உள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை பிரச்சார செய்தி ஊடகமாக விளங்கும் ரேடியோ ப்ரீ ஆசியா மற்றும் இத்தாலியை மையமாக கொண்ட புதிய மதங்கள் மீதான ஆய்வு மையம் பிரசுரிக்கும் Bitter Winter இணைய இதழ் போன்ற ஊடகங்களால் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். (பார்க்கவும்: “The New York Times and its Uyghur ‘activist’”).

சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்களின் கூட்டுக்குழுமத்தால் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ஆவணங்கள், ஜின்ஜியாங்கில் சீன தடுப்புக்காவல் மையங்களுக்குள் நடக்கும் ஒடுக்குமுறை ஆட்சியின் ஒரு மேலோட்டமான பார்வையை வழங்குவதாக தெரிகின்றன என்றாலும் அவை பெரிதும் மதிப்பார்ந்தும் இருக்கவில்லை அல்லது அவை எந்த விதத்திலும் விளக்கமாகவும் இருக்கவில்லை. தப்பி ஓடுவதைத் தடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் மற்றும் கைதிகள் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் கையாள்வதைக் குறித்தும்; சந்தேகத்திற்குரிய வீகர் மக்கள் மீது பரந்த கண்காணிப்புக்கு நான்கு சிறிய உளவுத்துறை விளக்கங்களைச் சுட்டிக்காட்டியும்; “இன வெறுப்பு" மற்றும் "தீவிர சிந்தனைகளை" தூண்டியதற்காக வீகர் ஒருவர் மீதான வழக்கு மற்றும் தண்டனை குறித்து கவலை வெளிப்படுத்தும் பகிரங்கமான ஒரு நீதிமன்ற ஆவணத்துடனும்; சீன பாதுகாப்பு அதிகாரிகள் அந்த மையங்களைச் செயல்படுத்துவதன் மீது கவலைகளை வெளிப்படுத்திய ஒன்பது பக்க தந்தியையும் அவை உள்ளடக்கி இருந்தன.

நியூ யோர்க் டைம்ஸின் ஆவணத் "தொகுப்பு" வித்தியாசமான தன்மையில் உள்ளது. அது வீகர் தீவிரவாதிகளின் தீவிர வன்முறை தாக்குதல்களுக்கு "சீர்திருத்தக் கல்வி" வேலைத்திட்டம் மற்றும் கண்காணிப்பைத் தொடங்குவதை உயர்த்திக் காட்டும் CCPஇன் உள்விவகார விவாதங்கள் மீது குவிந்திருந்தது. தென் சீனாவின் குன்மிங் ரயில்வே நிலையத்தில் பயணியர் மற்றும் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட இரத்தந்தோய்ந்த தாக்குதலைத் தொடர்ந்து ஏப்ரல் 2014 இல் ஜனாதிபதி ஜி ஜின்ஜியாங் விஜயம் செய்தார். கத்திகள் மற்றும் கறி கொத்தும் ஆயுதங்கள் ஏந்திய எட்டு தாக்குதாரிகள் 29பேரைக் கொன்றதுடன் 130க்கும் அதிகமானவர்களைக் காயப்படுத்தினர். பொதுமக்களின் சீற்றத்திற்கு மத்தியில், அதிகாரிகள் கடுமையாக இருக்க வேண்டும் என்றும், “எந்தவகையிலும் கருணை காட்டக் கூடாது" என்று அதிகாரிகளுக்கு அறிவித்த ஜி, “பயங்கரவாதம், ஊடுருவல் மற்றும் பிரிவினைவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு" அழைப்பு விடுத்தார்.

ஜி "தன்னை மன்னித்துக் கொள்ள மேற்கத்திய உதாரணங்களைக் காட்டுவதன் மீதும் மற்றும் செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதல்களுக்கு அமெரிக்கா எவ்வாறு விடையிறுத்தது என்பதை ஆய்வு செய்யுமாறு சீன அதிகாரிகளை வலியுறுத்துவதன் மீதும் நியூ யோர்க் டைம்ஸ் தலையங்க ஆசிரியர் குழு "ஆச்சரியத்தை" வெளிப்படுத்துகிறது. யதார்த்தத்தில் சொல்லப்போனால், அமெரிக்காவின் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" உலகெங்கிலுமான எதேச்சதிகார ஆட்சிகளுக்கு முன்மாதிரியாக ஆகியிருப்பதைத்தான் ஜி உறுதிப்படுத்துகிறார். புஷ் நிர்வாகம் ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் அதன் சட்டவிரோத படையெடுப்புகளுக்குச் போலிக்காரணமாக மட்டும் 2001 தாக்குதல்களை பற்றிக்கொள்ளவில்லை, மாறாக அவ்விரு நாடுகளிலும் அதன் சொந்த தடுப்புக்காவல் மற்றும் சித்திரவதை முகாம்களை அபிவிருத்தி செய்வதற்காகவும் அதைச் செய்திருந்தது. அது இழிபெயரெடுத்த குவாண்டனமோ வளைகுடா நரகத்தையும் நிறுவியது அங்கே எதிரி படையினர் என்றழைக்கப்படுபவர்கள் குற்றச்சாட்டின்றி காலவரையின்றி அடைக்கப்பட்டனர்.

சீனாவிற்கு எதிரான அதன் சமீபத்திய "மனித உரிமைகள்" பிரச்சாரத்தின் அப்பட்டமான பாசாங்குத்தனத்தை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றவியல் நடவடிக்கைகளே அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. குவாண்டனமோ வளைகுடா சிறை முகாம் இன்னமும் செயல்பாட்டில் இருக்கிறது என்பது மட்டுமல்ல, மாறாக தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் ஒரு நல்ல வாழ்வைத் தேடி வந்ததை மட்டுமே ஒரே “குற்றமாக” கொண்டுள்ள புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகளுக்காக 200 க்கும் அதிகமான தடுப்புக்காவல் மையங்களின் ஒரு வலையமைப்பை அமெரிக்கா நடத்தி வருகிறது. 2018 நிதியாண்டில், அமெரிக்காவில் அன்றாடம் 40,000 க்கும் அதிகமானவர்களும், ஓராண்டில் அண்மித்து 400,000 பேர் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர். 2003-16 க்கு மத்தியில் குறைந்தபட்சம் 166 பேர் தடுப்புக்காவலில் இருந்த போதே உயிரிழந்தனர்.

வாஷிங்டன் அதன் ஒட்டுமொத்த சொந்த துஷ்பிரயோகங்களை நடத்தியவாறு அதன் முக்கிய கூட்டாளிகளினது அதேபோன்ற நடவடிக்கைகளைப் புறக்கணித்த அதேவேளையில், ஆட்சி மாற்ற நடவடிக்கைகள், இராணுவ ஆத்திரமூட்டல்கள் மற்றும் போர்களை நியாயப்படுத்த அது "மனித உரிமைகள்" பிரச்சாரங்களை முரசு கொட்டிய நீண்ட வரலாறைக் கொண்டுள்ளது. உண்மையில், புஷ் நிர்வாகத்திற்கு ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர்களுக்கு சீனாவின் ஆதரவு தேவைப்பட்ட போது, அது ஜின்ஜியாங்கில் பெய்ஜிங்கின் சொந்த "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" மீது கண்மூடிக் கொண்டது. இப்போதோ ட்ரம்ப் நிர்வாகம் சீனாவுக்கு எதிராக அதன் வர்த்தகப் போர் மற்றும் இராணுவக் கட்டமைப்பைத் தீவிரப்படுத்தி வருவதால், அது சீனாவைப் பலவீனப்படுத்தும் மற்றும் அதன் விளைபயனாக அதை உடைக்கும் நோக்கில் வீகர் ஒடுக்குமுறை மீது அதன் பிரச்சார நடவடிக்கைகளை அதிகரித்து வருகிறது.

ஜின்ஜியாங்கை இலக்கில் வைப்பதென்பது தற்செயலானதல்ல. அந்த மேற்கு மாகாணம் வளங்கள் நிறைந்த மூலோபாய இடத்தில் அமைந்துள்ளது என்பது மட்டுமல்ல, மாறாக அது ஜனாதிபதி ஜி இன் ஒரே இணைப்பு ஒரே பாதை (Belt and Road) திட்டத்தின் குவிமையமாகவும் விளங்குகிறது. இத்திட்டம் ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்குடன் யுரேஷிய பெருநிலத்தை இணைக்கும் நோக்கில் மற்றும் சீனாவைச் சுற்றி வளைக்கும் அமெரிக்க முயற்சிகளைப் பலவீனப்படுத்தும் நோக்கில் ஒரு பாரியளவிலான உள்கட்டமைப்பு திட்டமாகும். சர்வதேச சீற்றத்தை முடக்கிவிடுவதன் மூலமாகவும் ஊக்குவிப்பதன் மூலமாகவும், அல்லது ஜின்ஜியாங்கில் எதிர்ப்பையும் அமைதியின்மையையும் அதிகரிப்பதன் மூலமாகவும் கூட, பெய்ஜிங்கின் திட்டங்களை அதனால் குழப்ப முடியும் என்று அமெரிக்கா கணக்கிடுகிறது.

சிஐஏ மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறையும் உலக வீகர் மாநாடு மற்றும் அமெரிக்க வீகர் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளின் ஊடாக ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள வீகர் மக்களுடன் நெருக்கமான, நீண்ட கால தொடர்புகளைக் கொண்டுள்ளன என்பது மட்டுமல்ல, மாறாக மத்திய கிழக்கில் சண்டையிட்டு வரும் வீகர் இஸ்லாமியவாத தீவிரவாதிகளுடனும் புதிய உறவுகளை உறுதியாக்கியுள்ளன. சிஐஏ மற்றும் அமெரிக்க இராணுவமும் பெயரளவுக்கு இஸ்லாமிய அரசுக்கு எதிராக இலக்கு வைத்திருப்பதாக கூறினாலும், யதார்த்தத்தில், ரஷ்யா மற்றும் ஈரானால் ஆதரிக்கப்பட்டுள்ள அசாத் ஆட்சியைப் பிரதானமாக கவிழ்ப்பதை நோக்கமாக கொண்ட, அருவருக்கத்தக்க சிரியப் போரில் அல் கொய்தாவுடன் தொடர்புபட்ட போராளிகளைச் சார்ந்துள்ளன.

ஹேக்கில் (The Hague) பயங்கரவாத-தடுப்புக்கான சர்வதேச மையத்தினது 2017 கொள்கை விளக்கத்தின்படி, ஆயிரக்கணக்கான வீகர் தீவிரவாதிகள் சிரியா சண்டையில் ஈடுபட்டுள்ளனர். சிலர் இஸ்லாமிக் அரசில் (IS) இணைந்தனர் என்றாலும், மிகப் பெரும் பகுதியினர் துருக்கிய இஸ்லாமிக் கட்சியைச் (TIP) சேர்ந்த அல் கொய்தாவின் ஜபாத் அல்-நுஸ்ரா குடையின்கீழ் செயல்பட்டு வருகின்றனர். 2017 இல் இருந்து, சிரியாவில் உள்ள வீகர் போராளிகள் குழுக்கள் அதிகரித்தளவில் மத்திய கிழக்கை அல்ல மாறாக சீனாவைத் தான் அவர்களின் பிரச்சாரத்திற்கான குவிமையமாக கொண்டிருந்தனர். அல் கொய்தா மற்றும் இஸ்லாமிக் அரசு காணொளிகள் சீனாவுக்கு எதிராக ஒரு ஜிஹாத் (புனிதப் போர்) க்கு அழைப்பு விடுப்பதற்கு மத்தியில், TIP தலைவர் அப்துல் ஹக் அறிவிக்கையில், “சீனா நமக்கு மட்டும் எதிரி இல்லை, மாறாக அனைத்து முஸ்லீம்களுக்கும் எதிரி,” என்று அறிவித்தார்.

இந்த ஜிஹாத் பிரகடனம் மற்றும் கடந்த இரண்டாண்டுகளில் ஆக்ரோஷமான அமெரிக்க பிரச்சார நடவடிக்கையின் தீவிரப்பாடு ஆகியவை ஒரே நேரத்தில் ஒன்றுசேருவது பலவற்றை தெளிவாக்குகின்றது. ஆப்கானிஸ்தானில் ஜெயிக்க முடியாத ஒரு போரில் சோவியத் ஒன்றியத்தினை சேற்றினுள் அமுக்கிவிட 1980 களில் அமெரிக்க ஏகாதிபத்தியம் அல் கொய்தா உட்பட வலதுசாரி இஸ்லாமியவாதிகளைச் சாதகமாக பயன்படுத்தியதைப் போலவே, பெய்ஜிங்கில் சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைப் கீழறுப்பதற்கு ஜின்ஜியாங்கில் ஒரு புதிய "புனிதப் போரை" ஆதரித்து உதவலாமா என்று சிஐஏ மற்றும் பென்டகனின் பிரிவுகள் ஆகக்குறைந்தது பரிசீலிக்கும் என்பதில் ஐயத்திற்கிடமில்லை.

Loading