கொழும்பில் சோ.ச.க. / ஐ.வை.எஸ்.எஸ்.இ. பொதுக் கூட்டம்: ஜூலியன் அசான்ஜ் மற்றும் செல்சி மனிங்கை விடுதலை செய்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜூலியன் அசான்ஜ் மற்றும் செல்சி மானிங்கை விடுதலை செய்வதற்காக ட்ரொட்ஸ்கிச இயக்கம் முன்னெடுக்கும் சர்வதேச பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அமைப்பும் ஜனவரி 2 அன்று கொழும்பில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தவுள்ளன.

இங்கிலாந்தின் அதிகபட்ச பாதுகாப்பு கொண்ட பெல்மர்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவும் சர்வதேச அளவில் ஒருங்கிணைந்து செய்த சதித்திட்டத்தால் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இந்த ஏகாதிபத்திய சக்திகளின் குற்றங்களை அம்பலப்படுத்தியமைக்காக அவர் துன்புறுத்தப்படுகிறார். இந்த கொடூரமான தாக்குதல் அசான்ஜிற்கு எதிரானது மட்டுமன்றி, கருத்துச் சுதந்திரத்தையும் உண்மையை அறியும் உரிமையையும் மதிக்கின்ற உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் எதிரானதாகும்.

தங்கள் ஏகாதிபத்திய எஜமானர்களுக்கு இணங்க செயற்பட்ட உலகம் பூராவும் உள்ள பிரதான ஊடகங்கள், அசான்ஜிற்கும் அமெரிக்க போர்க்குற்றங்கள் பற்றிய இரகசிய தகவல்களை விக்கிலீக்ஸுக்கு வழங்கிய தைரியமான அமெரிக்க அம்பலப்படுத்தாளர் செல்சி மனிங்கிற்கும் அதிகரித்து வரும் வெகஜன ஆதரவையும் மீறி வஞ்சத்தனமாக மௌனம் காக்கின்றன. அசான்ஜுக்கு எதிராக சாட்சியமளிக்க மறுத்தமைக்காக, மனிங் அமெரிக்காவில் காலவரையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அசான்ஜிற்கு முறையான மருத்துவ வசதி வழங்கப்பட வேண்டும் என்று உலகெங்கிலும் உள்ள 65 பிரபல மருத்துவர்கள் "பகிரங்க கடிதங்கள்" அனுப்பியுள்ள போதிலும், சர்வதேச அளவில் 700 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களிடமிருந்து அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், இந்த ஊடக மௌனம் பேணப்படுகிறது. சித்திரவதை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் நில்ஸ் மெல்சர், அசான்ஜ் மீதான நீடித்த துன்புறுத்தல் சித்திரவதைக்கு ஒப்பானது என்றும் அவர் சிறையில் மரணிக்கக் கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.

ஆஸ்திரேலிய பிரஜையான அசான்ஜை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கான வழக்கு, பெப்ரவரி 25 அன்று பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. பிரிட்டிஷ் அதிகாரிகள், அவர் விரைவில் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவதை உறுதிசெய்ய சந்தேகத்திற்கு இடமின்றி சதி செய்கிறார்கள். அங்கு அவர் உளவுப்பார்த்தமைக்கான போலி குற்றச்சாட்டின் பேரில் ஒரு கங்காரு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவதோடு அவருக்கு 175 ஆண்டுகளுக்கும் அதிக கால சிறைத்தண்டனை விதிக்கப்படக் கூடும்.

அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் நட்பு நாடுகளும், பத்திரிகை சுதந்திரத்தின் மீதான ஜனநாயக விரோத தாக்குதல்களை அதிகரிப்பதன் ஒரு பகுதியாகவும், வெகுஜன போர் எதிர்ப்பு உணர்வையும் அரசாங்கங்களின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான எதிர்ப்பையும் அச்சுறுத்துவதன் ஒரு பாகமாகவும் அசான்ஜ் மற்றும் மனிங்கைத் தண்டிக்கின்றன. ஜனநாயக உரிமைகள் மீதான இந்த பிற்போக்கு தாக்குதலைத் தோற்கடிக்க, அனைத்துலகத் தொழிலாள வர்க்கத்தின் சக்தி அணிதிரட்டப்பட வேண்டும்.

அசான்ஜ் மற்றும் மானிங் மீதான தாக்குதலை எதிர்க்குமாறும், கொழும்பில் நடைபெறும் சோ.ச.க. / ஐ.வை.எஸ்.எஸ்.இ. கூட்டத்தில் பங்குகொள்ளுமாறும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளை மதிக்கும் அனைவருங்கும் நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.

திகதி மற்றும் நேரம்: ஜனவரி 2, வியாழன், மாலை 4 மணி.

இடம்: பொது நூலக கேட்போர் கூடம், கொழும்பு.

Loading