போரிஸ் ஜோன்சன் தேர்ந்தெடுக்கப்பட்டமையும், கோர்பினிசத்தின் தோல்வியும்

மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வியாழக்கிழமை பிரிட்டன் பொது தேர்தலில் ஜெர்மி கோர்பின் தலைமையின் கீழ் தொழிற் கட்சி அடைந்த தேர்தல் தோல்வி, இடது மற்றும் தொழிலாளர் அமைப்புகள் என்று கூறிக் கொள்பவைகளின் அரசியல் திவால்நிலைமைக்கு மற்றொரு எடுத்துக்காட்டாக உள்ளது.

முன்னொருபோதும் இல்லாத சமூக சமத்துவமின்மை மற்றும் சோசலிசத்திற்கு அதிகரித்து வரும் ஆதரவுக்கு மத்தியில், கோர்பின் பரந்தளவில் வெறுக்கப்படும், உள்ளார்ந்து பிளவுபட்ட ஓர் அரசாங்கத்தை எதிர்கொண்டிருந்தார், அதன் தலைவர் பகுதியளவில் விகாரமாகவும் பகுதியளவில் கோமாளியாகவும் பார்க்கப்பட்டு வந்தார்.

இருப்பினும் கோர்பினும் தொழிற் கட்சியும் இந்த சூழ்நிலையைச் சாதகமாக்குவதற்கு இலாயக்கற்று இருந்தனர் என்பது மட்டுமல்ல, மாறாக தேர்தலில் பெரும் வித்தியாசத்தில் தோல்வியும் அடைந்தனர்.

தொழிற் கட்சியின் தோல்விக்கு வழங்கப்படும் மோசடியான விளக்கங்களுக்கு அங்கே முடிவே இருக்காது. ஜோன்சனின் வெற்றி கோர்பினின் "கடுமையான இடது" அரசியலின் விளைவு என்றும், ஒரு சோசலிசப் புரட்சியை நடைமுறைப்படுத்துவதற்கான அச்சுறுத்தல் மற்றும் இன்னும் இவ்வாறான காரணங்களின் விளைவு என்றும் வலது பிரகடனப்படுத்தும்.

தொழிற் கட்சி மற்றும் கோர்பின் தலைமையின் முன்வரலாறுடன் மிகவும் குறைவாக பரிச்சயப்பட்ட எவரொருவராக இருந்தாலும், அவருக்கு இந்த குற்றச்சாட்டு அபத்தமாக இருக்கும்.

கோர்பினிசவாதிகள் அவர்களின் சொந்த முன்-தயாரிப்பு செய்யப்பட்ட பல சாக்குபோக்குகளை வழங்குவார்கள், இவை பழியை அவர்களிடம் இருந்து தொழிலாள வர்க்கத்தின் மீது மாற்றுவதற்கான முயற்சியாக இருக்கும், கோர்பினுக்கு வாக்களிக்கும் அளவுக்கு தொழிலாள வர்க்கம் போதுமான அறிவொளியைப் பெறவில்லை என்று அவர்கள் குறை கூறுவார்கள்.

இந்த முடிவை, சர்வதேச நடுத்தர வர்க்க இடது தரந்தாழ்ந்த அனுதாப காட்சிப்படுத்தலைக் கொண்டு வாழ்த்தியது. “நானும் அழுகிறேன், நீங்களும் அழுகிறீர்கள்,” என்று ஜாக்கோபின் பத்திரிகையின் தலைப்பு புலம்பியது.

“இருப்பதைத் தக்க வைப்பதற்கான போராட்டமுமே கூட இன்னும் கடுமையாக இருக்கும். ஆனால் ஆறுதலான விடயம், குறைந்தபட்சம் இப்போது நம்முடன் சேர்ந்து அழுவதற்கு அதிக தோழர்கள் இருக்கிறார்கள்,” என்று அது குறிப்பிட்டது.

இவர்கள் வெறுக்கப்பட்ட மற்றும் மதிப்பிழந்த தொழிற் கட்சியை ஊக்குவித்த அவர்களின் சொந்த நடவடிக்கைகளின் விளைவுகளுக்காக அல்ல, அவர்களுக்காக அழுது கொண்டிருக்கிறார்கள்.

பிரிட்டன் இப்போது அதிதீவிர பழமைவாத அரசாங்கத்தால் தலைமை தாங்கப்படுகிறது, இது, போரீஸ் ஜோன்சனின் கீழ், “தாட்சர் புரட்சியை" பூரணத்துவப்படுத்துவதற்காக ஜனவரி 31 இல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற சூளுரைத்துள்ளது.

வேலைகள், சம்பளங்கள் மற்றும் வேலையிட நிலைமைகளை விலையாக கொடுத்து, ஜோன்சன், ட்ரம்ப் நிர்வாகத்துடனான கூட்டணியில் வர்த்தக மற்றும் இராணுவப் போரை நோக்கி நகர்வார். தேசிய மருத்துவச் சேவையை (NHS) இல்லாதொழிப்பதும், தேசியவாதத்தை முடுக்கி விடுவதும், புலம்பெயர்ந்தோர் விரோத நடவடிக்கைகளைத் திணிப்பதும் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது நேரடியாக தாக்குதலை நடத்துவதுமே அவரின் திட்டநிரலாக இருக்கும்.

இந்த தேர்தலில் ஊடகங்களால் உமிழப்பட்ட எல்லா விதமான அருவருக்கத்தக்க பொய்களுக்கும் மத்தியில், அவர்கள் கூறியதில் ஒரு விடயம் உண்மையாக இருந்தது: அதாவது, கோர்பின் பரந்தளவில் மக்கள் செல்வாக்கிழந்து இருந்தார் என்பதுதான்.

அவர் மக்கள் செல்வாக்கிழந்து இருந்தார் ஏனென்றால், அவர் தொழிற் கட்சி தலைமையைப் பெரும்பான்மையில் வென்றதில் இருந்து நான்காண்டுகளில், அவருக்கு வாக்களித்தவர்களின் நம்பிக்கையை அவர் முற்றிலுமாக காட்டிக் கொடுத்தார். பலவீனமாக, அலட்சியமாக, சோம்பேறித்தனமாக, எதுவொன்றுக்காக போராடுவதிலும் எந்தவொரு ஆற்றலையும் எடுத்துக்காட்ட விருப்பமில்லாதிருந்த கோர்பின், கோழைத்தனம் மற்றும் சரணடைவுக்கு ஆளுருவாக இருந்தார்.

பிளேயரிசவாதிகளை வெளியேற்றுவதற்கான முயற்சிகளை கோர்பின் எதிர்த்தார், சிரியா மீது குண்டுவீசுவதற்குச் சுதந்திரமாக வாக்களிக்க அனுமதித்தார், முப்படையைப் புதுப்பிக்க சூளுரைத்தார், நேட்டோ செலவின இலக்குகளை ஆதரித்ததுடன், அணுஆயுத பிரயோகத்தையும் அவர் பரிசீலிக்க இருப்பதாக அறிக்கைகள் வெளியிட்டார். அவரின் முக்கிய ஆதரவாளர்கள் போலியான யூத-எதிர்ப்புவாத குற்றச்சாட்டுக்களின் பேரில் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர், கோர்பின் அவர்களைப் பாதுகாப்பதில் ஒரு சுண்டுவிரலைக்கூட உயர்த்தவில்லை.

எவ்வாறிருப்பினும் கோர்பினின் தனிமனிதப் பண்பு, அவரினது திவாலான அரசியலின் வெளிப்பாடாக இருந்தது.Morning Starஇன் ஸ்ராலினிசவாதிகளுடனான கூட்டணியில் மையமிட்டிருந்த அவரின் ஒட்டுமொத்த அரசியல் தொழில் வாழ்வும், 2003 ஈராக் போர் போன்ற தொழிற் கட்சியின் மிகப்பெரும் அரசியல் குற்றங்களில் இருந்து தன்னைத் தொலைவில் நிறுத்திக் கொண்டதில் உள்ளடங்கி இருந்தது, அது பாராளுமன்ற உறுப்பினராக அவரின் பதவியை ஒருபோதும் தொந்தரவுக்கு உள்ளாக்கவில்லை.

தொழிற் கட்சியின் தோல்வியில் இருந்து என்ன அம்பலப்படுத்தப்பட்டுள்ளது என்றால், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தன்மையை நிராகரிக்க முயலும் ஒரு விதமான அரசியலாகும்.

கோர்பின் தலைமையின் கீழ், தொழிற் கட்சியானது, இனம், தேசியம், வம்சாவழி, பாலினம் மற்றும் பாலியல் நோக்குநிலை கொண்ட அடையாள அரசியலை அடித்தளமாக கொண்ட ஒரு திட்டநிரலை ஊக்குவிப்பதற்கு ஆதரவாக, எந்தவொரு வர்க்க முறையீட்டுக்கும் குழிபறித்தது.

நடுத்தர வர்க்க இடதின் சித்தாந்தவாதி சாந்தால் மூஃப், "இடது ஜனரஞ்சகவாத"த்தின் ஒரு புதிய அலைக்கு கோர்பின் மிக வெற்றிகரமான உதாரணமாக ஆகக்கூடும் என்று வர்ணித்தார், ஏனென்றால் அவர் "மிகப் பெரும் கட்சியின் தலைவராக இருந்து, தொழிற்சங்கங்களின் ஆதரவைப் பெற்றுள்ளார்." “வர்க்க அடித்தளத்தில் ஸ்தாபிக்கப்பட்ட... பாரம்பரிய இடது அரசியல் எல்லையை" அவர் நிராகரித்திருப்பதை இந்த முடிவு சார்ந்துள்ளது.

கோர்பினின் தோல்வி குறித்து இப்போது அழுது புலம்பிக் கொண்டிருப்பவர்கள் என்ன கண்டுபிடித்திருக்கிறார்கள் என்றால், அவர்களின் சொந்த மூளைக் குழப்பங்களும் விருப்பத்திற்குரிய சிந்தனைகளும், கோர்பினின் வாக்கு எண்ணிக்கையில் இருந்திருக்க வேண்டிய, பரந்த பெருந்திரளான மக்களால் பகிர்ந்து கொள்ளப்படவில்லை என்ற உண்மையைக் காண்கிறார்கள்.

கோர்பின் இத்தேர்தலில் வென்றிருந்தாலும் கூட, அவர் மகாராணியின் கரங்களில் முத்தமிட பக்கிங்ஹாம் மாளிகைக்கு வந்திருப்பார், பின்னர் தொழிற் கட்சியின் வலது தரப்பினர் மேலாதிக்கம் செலுத்தும் ஒரு மந்திரிசபையை அறிவித்திருப்பார். பிளேயர் இல்லையென்றாலும், முன்னணி பிளேயரிசவாதிகள் தான் 10 டவுனிங் வீதியில் அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்கள் என்பதே வருந்தத்தக்க உண்மையாகும்.

கிரீஸை சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு ஏவலாளியாக, அகதிகளுக்கான வெறுக்கத்தக்க சிறைக்கூடமாக மற்றும் நடைமுறையளவில் பொலிஸ் சர்வாதிகாரமாக மாற்றிய "தீவிர இடது" சிரிசா அரசாங்கத்தை விட, கோர்பினின் காட்டிக்கொடுப்பு முன்னெப்போதையும் விட அதிக வெறுக்கத்தக்கதாக இருந்திருக்கும்.

கோர்பின் அரசாங்கத்தில் சமூக சீர்திருத்தம் சம்பந்தமான ஒரேயொரு குறிப்பும் அங்கே இருந்திருக்காது. அடையாள அரசியலின் அவசியப்பாடுகளுடன் பொருந்திய விதத்தில் பல்வேறு இனம், வம்சாவழி, பாலினம் மற்றும் பாலியல் அம்சங்களைத் திருப்திப்படுத்தும் விதத்தில் நியமனங்கள் இருந்திருக்கும் என்பது மட்டுமே ஒரேயொரு வித்தியாசமாக இருந்திக்கும்.

கோர்பினின் தோல்வி வெறுமனே தொழிற் கட்சியை மட்டும் அம்பலப்படுத்தவில்லை, மாறாக "சோசலிசத்திற்கான நாடாளுமன்ற பாதை" என்ற ஒட்டுமொத்த முன்னோக்கையும் அம்பலப்படுத்தி உள்ளது. போர், வறுமை, மற்றும் சமூக சமத்துவமின்மை ஆகிய மிகப் பெரும் கேள்விகளை, புத்திசாலித்தனமாக நடத்தப்படும் தேர்தல் பிரச்சாரங்களைக் கொண்டு தீர்த்து விட முடியாது.

தொழிலாள வர்க்கத்தைப் பாரியளவில் அணித்திரட்டுவதும் மற்றும் உலகளவில் வர்க்க போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதுமே மனிதகுலம் எதிர்கொண்டிருக்கும் எந்தவொரு மிகப்பெரும் சமூக பிரச்சினையையும் தீர்ப்பதற்கான முன்நிபந்தனையாகும்.

இந்த போராட்டத்துடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கின்றதும், பிரெக்ஸிட் சம்பந்தமான இழிவார்ந்த தேசியவாத விவாதத்தை எதிர்த்து போராடுகின்றதும் மற்றும் சர்வதேச பாட்டாளி வர்க்க ஐக்கியத்திற்கான ஒரு வேலைத்திட்டத்தைக் கொண்டுள்ளதுமான ஒரு இயக்கம் மட்டுமே, தொழிலாள வர்க்கத்தின் நம்பிக்கையையும் வென்று, அதை சோசலிசத்திற்கான போராட்டத்தில் வழிநடத்த முடியும்.

இது தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னோக்காகும்.

மேலதிக வாசிப்புகளுக்கு,

பிரிட்டனின் பொதுத் தேர்தலும், சோசலிசத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் எதிர்வரவிருக்கும் போராட்டமும்

[12 December 2019]

இங்கிலாந்து தொழிற் கட்சி தேர்தல் விஞ்ஞாபனம்: முதலாளித்துவத்தை பாதுகாப்பதற்கான மாதிரி திட்டம் [PDF]

[22 November 2019]

பிரிட்டன் பொது தேர்தல் விவாதத்தில் கோர்பினின் "இடது" பாசாங்குத்தனங்கள் அம்பலமாயின

[21 November 2019]

சோசலிச சமத்துவக் கட்சி பிரிட்டன் பொது தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துகிறது

[18 November 2019]

Loading