புதிய இந்து பேரினவாத குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதுமாக ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்தியாவில் ஆளும் இந்து மேலாதிக்க பாரதீய ஜனதாக் கட்சி (BJP) நான்கு நாட்களுக்கு முன்னர் சென்ற வாரத்தில் பாராளுமன்ற ஒப்புதலைப் பெற்று நிறைவேற்றிய குடியுரிமை திருத்த சட்டம் (Citizenship Amendment Act - CAA), 2019 இற்கு எதிராக நாடு முழுவதுமாக ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.

“மனிதநேயம்” போன்ற அலங்கார வார்த்தைகள் நிறைந்த CAA (குடியுரிமை திருத்த சட்டம்) என்பது, பிஜேபி யும் மற்றும் இந்துத்துவ நிழலுருவ அமைப்பான RSS இல் உள்ள அதன் கருத்தியல் வழிகாட்டிகளும் இந்தியா முதலில் ஒரு “இந்து தேசம்” என்று வலியுறுத்துவதற்காக தொடங்கிவைக்கப்பட்ட மற்றொரு ஆத்திரமூட்டலாகும் — அதில் முஸ்லீம்கள் இந்து மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்ளும் வரை மட்டுமே அவர்கள் “பொறுத்துக் கொள்ளப்படுகிறார்கள்”.

இந்த CAA, 2015 க்கு முன்னர் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தவர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் போன்ற அனைத்து முஸ்லீம் அல்லாதவர்களுக்கும் குடியுரிமை உரிமைகளை வழங்குகிறது.

இந்த மூன்று நாடுகளிலிருந்து தஞ்சம் புகுந்த முஸ்லீம் புலம்பெயர்ந்தவர்கள் வெளிப்படையாகவே விலக்கப்பட்டுள்ளனர் என்பதுடன், உள்துறை அமைச்சர் அவர்களை வர்ணித்தது போல “கறையான்கள்” போன்றே அவர்கள் நடத்தப்படுவார்கள். அத்துடன், இந்த பிராந்தியத்திலுள்ள பிற நாடுகளிலிருந்து தஞ்சம் புகுந்த அனைத்து புலம்பெயர்ந்தவர்களும் கூட விலக்கப்பட்டுள்ளனர். அதில், இலங்கை தமிழர்களும் மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கியாக்களும் அடங்குவர், இவர்கள் இருவருமே அரசு துன்புறுத்தலுக்கும் வகுப்புவாத வன்முறைக்கும் ஆளானவர்களாவர்.

தேசிய குடிமக்கள் பதிவேட்டை (National Register of Citizens-NRC) இந்தியா முழுவதுமாக நீட்டிப்பதற்கான தனது திட்டத்தை பிஜேபி நிறைவேற்றுவதற்கான முன்னேற்பாடாகவே CAA இன் உள்ளடக்கம் உள்ளது, அதன் மூலம் நாட்டின் 1.3 பில்லியனுக்கும் அதிகமான ஒட்டுமொத்த குடியிருப்பாளர்களும் அதிகாரிகளை திருப்திப்படுத்தும் வகையில் தாங்கள் இந்திய குடியுரிமைக்கு தகுதியானவர்கள் தான் என்பதை நிரூபிப்பதற்கு நிர்பந்திக்கப்படுவார்கள். முஸ்லீம்களைப் பொறுத்த வரை —அதாவது, தங்களது குடியுரிமையை நிரூபிக்க முடியாவிட்டால், CAA-NRC என்ற இருமுனை தாக்குதலினால், அவர்கள் நாடற்றவர்களாக அறிவிக்கப்படுவதற்கான, மேலும் தடுத்து வைக்கப்படுவதற்கான, மற்றும் நாடுகடத்தப்படுவதற்கான பிரத்யேகமான அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படுவார்கள் என்ற நிலையில்— அவர்களை அச்சுறுத்துவதற்கும், துன்புறுத்துவதற்கும் மேலும் பலியிடுவதற்கும் அது பயன்படுத்தப்படுமோ என குறிப்பாக அஞ்சுகின்றனர் (பார்க்கவும்: இந்து மேலாதிக்க குடியுரிமை சட்டத்திற்கு இந்தியா ஒப்புதல் அளிக்கிறது).

வெள்ளிக்கிழமை தொடங்கி, நாட்டின் தலைநகரும் மிகப்பெரிய நகரமுமான தில்லியிலும், மேலும் மேற்குவங்கம், உத்திரபிரதேசம், பீஹார் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் பல பகுதிகளில் பெரியளவிலும், அத்துடன் நாடு முழுவதிலுமாக அனைத்து மாநிலங்களிலும் ஆங்காங்கே சிறியளவிலுமாக CAA க்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன. இன்று, மேற்கு வங்கத்தின் முதல்வரும், வலதுசாரி வங்காள பிராந்தியவாத திரிணாமூல் காங்கிரஸின் தலைவருமான மம்தா பானர்ஜி, CAA மற்றும் NRC இரண்டிற்கும் எதிராக கொல்கத்தாவில் நடைபெறும் ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கவுள்ளார். இதற்கிடையில், தென் மாநிலமான கேரளாவில், ஆளும் ஸ்ராலினிசக் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியும், உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் ஒரு தொடர்ச்சியான கூட்டு ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளன.

வெள்ளிக்கிழமையும், மேலும் மீண்டும் ஞாயிற்றுக்கிழமையும், CAA இற்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடிய ஆயிரக்கணக்கானோர் மீது பொலிஸ் தடியடியும், கண்ணீர்புகை குண்டு வீச்சும் நடத்தப்பட்டது. தெற்கு தில்லியில் நேற்று ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிசார் தடுத்துநிறுத்திய போது அங்கு வன்முறை வெடித்தது. இதனையடுத்து, ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக (Jamia Millia Islamia University-JMI) வளாகத்திற்குள் பொலிசார் அனுமதியின்றி நுழைந்ததுடன், அப் பல்கலைக்கழக தலைமை ஒழுங்குகாவலரான வசீம் அகமது கான் தெரிவித்த படி மாணவர்களும் ஊழியர்களும் பொலிசாரால் தாக்கப்பட்டுள்ளனர். ஐம்பதுக்கும் அதிகமான எதிர்ப்பாளர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியிருந்தது, அவர்களில் சிலர் படுகாயமடைந்திருந்தனர்.

தென்கிழக்கு தில்லியில் உள்ள அனைத்து பள்ளிகளையும் இன்று மூடுமாறு தில்லி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். முன்னதாக, நிலைமையைத் தணிக்கும் முயற்சியாகவும், அரசாங்கத்திற்கான ஆதரவைத் திரட்டுவது குறித்து சந்தேகத்திற்கு இடமின்றியும், JMI நிர்வாகம் இறுதி-பருவ காலத் தேர்வுகளை ஒத்திவைத்து, ஜனவரி முற்பகுதி வரை பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு உத்தரவிட்டது.

ஞாயிறன்று மாலை, உத்திரப்பிரதேசம், அலிகாரில் உள்ள அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர்ப்புகை, தண்ணீர் பீரங்கி மற்றும் இரப்பர் தோட்டாக்களை பிரயோகித்து அதன் பின்னரே பொலிசார் உட்புகுந்தனர். அப்போது குறைந்தது அறுபது மாணவர்கள் காயமடைந்தனர். CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தப்போவதாக அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் அறிவிப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வெள்ளிக்கிழமை அதிகாலை, மாவட்ட அதிகாரிகள் இணைய சேவையை நிறுத்தியதுடன், நான்கு பேருக்கு அதிகமானோர் கூடும் எந்தவொரு கூட்டத்தையும் குற்றமெனக் கருதும் குற்றவியல் தடைச் சட்டப் பிரிவு 144 இன் கீழ் அலிகார் பகுதி கொண்டு வரப்பட்டது.

மேலும், கிழக்கிந்திய மாநிலமான பீஹாரிலுள்ள இரண்டு பெரிய நகரங்களான கயா மற்றும் பாட்னாவிலும் பெரும் ஆர்ப்பாட்டங்கள் எழுந்தன. பீஹார் மாநில அரசாங்கத்தை வழிநடத்தும் மற்றும் பிஜேபி இன் நெருங்கிய கூட்டணிக் கட்சியுமான ஜனதா தளம் - JD (U), CAA இன் ஷரத்துக்களை ஆதரித்தது. என்றாலும், பொதுமக்கள் சீற்றத்தை எதிர்கொண்ட நிலையில், இப்போது பீஹாரில் NRC விரிவாக்கத்திற்கு இந்த கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கிறது.

முஸ்லீம் சிறுபான்மையினர் அதிகமுள்ள மேற்கு வங்கத்தில், மிகுந்த வன்முறை மிக்க ஆர்ப்பாட்டங்கள் வெடித்தமை, சமீபத்திய பிஜேபி ஆத்திரமூட்டல் குறித்த பொதுமக்கள் சீற்றத்தை வெளிப்படுத்தியது. அங்கு சனிக்கிழமை, ஆர்ப்பாட்டக்காரர்கள் வாகன போக்குவரத்தை தடுத்ததுடன், பல இரயில்களையும் இரயில் நிலையங்களையும் தாக்கினர். இந்நிலையில், கொல்கத்தா நகரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஹவுரா, மால்டா, முர்ஷிதாபாத், வடக்கு 24 பர்கானாக்கள் மற்றும் தெற்கு 24 பர்கானாக்கள் போன்ற ஐந்து மாவட்டங்களில் அதிகாரிகள், பகுதியளவிலோ அல்லது முழுமையாகவோ இணைய சேவையை இடைநிறுத்தம் செய்துள்ளனர்.

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் சென்னையிலும் மற்றும் பிற நகரங்களிலும் கூட CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்துள்ளன. இவை, முஸ்லீம்கள் குறித்த சட்டத்தின் பாரபட்சமான விலக்கு, மற்றும் இலங்கை நாட்டின் தமிழ் எதிர்ப்பு போரிலிருந்து உயிர் தப்பி வந்த தமிழர்களுக்கு குடியுரிமை உரிமைகளை வழங்க இது மறுப்பது மற்றும் தற்போதைய அதன் சிங்கள-பேரினவாத கொள்கைகளையும் கண்டிக்கின்றன. 100 க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் சேலம் நகரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு மாநிலமான அசாமிலும் பரவலாக போராட்டங்கள் நடந்துள்ளன, இவை குறிப்பாக இன-பேரினவாத தன்மையைக் கொண்டிருந்தன, பங்களாதேஷில் பிறந்த இந்துக்களுக்கும் அவர்களது சந்ததியினருக்கும் குடியுரிமை வழங்குவது குறித்து, CAA மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

CAA எதிர்ப்பு கிளர்ச்சிக்கு தலைமை தாங்கிய குழுவான அனைத்து அசாம் மாணவர்கள் ஒன்றியத்தின் (AASU) முக்கிய ஆலோசகரான சமுஜ்ஜல் பட்டாச்சார்யா, கடந்த வெள்ளிக்கிழமை நடந்த பேரணியில் பேசுகையில், “அனைத்து சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்களையும் நாடுகடத்துவேன்” என்று மோடி உறுதியளித்து “காட்டிக் கொடுப்பது” குறித்து கண்டனம் தெரிவித்தார். ”எந்தவொரு சட்டவிரோத பங்களாதேஷியைக் கூட அவர் திருப்பியனுப்பவில்லை,” என்று பட்டாச்சாரி புகார் செய்தார். “மாறாக இப்போது அவர்களை வரவேற்கிறார்.”

அசாமில் நடந்த இந்த ஆர்ப்பாட்டங்கள் குறித்து இந்திய அரசு அதன் குரூரமான குணாம்சத்தை வெளிப்படுத்தும் வகையில் கொல்லும் சக்தியை பயன்படுத்துவது உட்பட 2,000 க்கும் அதிகமானோரை தடுப்புக்காவலில் வைப்பதன் மூலம் பதிலிறுத்துள்ளது. பாதுகாப்பு படையினரின் தோட்டக்களுக்கு குறைந்தது நான்கு பேராவது பலியாகினர். பலியான ஐந்தாவது நபரான, எண்ணெய் டிரக் ஓட்டுநர், எதிர்ப்பாளர்களால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஞாயிறு பிற்பகுதியில், அசாம் தலைநகரம் குவாஹாத்தியில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு உத்தரவை “தளர்த்தும்” வகையில் போதுமானளவு சட்ட ஒழுங்கு மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

அசாமிய இன-பேரினவாதிகளால் கடுமையான வறுமை மற்றும் பரந்தளவிலான வேலையின்மை குறித்த பரவலான பொதுமக்கள் கோபத்தை சுரண்ட முடிந்துள்ளது. இயற்கை வளங்கள் மிகுந்திருந்தும், பெருமளவில் வளர்ச்சியடையவிடாமல் கைவிடப்பட்டுள்ள அசாம் மாநிலத்தில், பல தசாப்தங்களாக, இந்திய முதலாளித்துவமும், ஒரு சிறிய உள்ளூர் உயரடுக்கினரும் அரசிலிருந்து செல்வத்தை சுரண்டிக் கொண்டுள்ளனர்.

வன்முறையைத் தூண்டி, இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தானை எதிரொலிப்பதாக எதிர்க்கட்சிகளை மோடியும் அவரது பிஜேபி யும், கடுமையாக குற்றம்சாட்டி கண்டித்து தங்களது இந்து மேலாதிக்க CAA க்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு பதிலிறுத்துள்ளனர். பிஜேபி இன் மேற்கு வங்க மாநில பிரிவின் தலைவரான திலீப் கோஷ், “பங்களாதேஷ் முஸ்லீம் வன்முறையை” எதிர்க்க தனது கட்சி மக்களை வீதிக்கு கொண்டு வரவிருப்பதாக உறுதிபூண்டார். “திரிணாமூல் காங்கிரஸின் ஆதரவுடன்,” “பங்களாதேஷ் ஊடுருவல் முஸ்லீம்கள் மேற்கு வங்கத்தில் தேச விரோத நடவடிக்கைகளில் திளைத்துள்ளனர்” என்றும் “இது முன்னிகழ்ந்திராதது. இதைவிட அதிர்ச்சியூட்டும் விடயம் என்னவென்றால், பொலிஸ் எவரையும் கைதுசெய்யவில்லை என்பது தான்” என்று சாடினார்.

விரைவாக மோசமடைந்து வரும் பொருளாதார சூழ்நிலையையும் மற்றும் குறிப்பாக தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் வளர்ந்து வரும் பரந்த எதிர்ப்பையும் எதிர்கொள்ளும் நிலையில், இந்தியாவை இந்து இராஷ்டிரா அல்லது தேசமாக மாற்றுவதற்கான தனது முயற்சியை மோடி அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. இது, தனது இந்து மேலாதிக்க அடித்தளத்தினரை அதிர்ச்சி துருப்புக்களாக அணிதிரட்டவும், மேலும் மக்களை அச்சுறுத்தவதற்காகவும் பிளவுபடுத்துவதற்காகவும், அதிகரித்துவரும் சமூக சீற்றத்தையும் விரக்தியையும் பிற்போக்கு பாதைகளில் திசைதிருப்ப வகுப்புவாதத்தை பயன்படுத்தவும் நோக்கம் கொண்டுள்ளது.

இந்த தசாப்தத்தின் தொடக்கத்தில் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி கண்ட பின்னர் இந்திய முதலாளித்துவம் பிஜேபி க்கு பின்னால் அணிதிரண்டமையானது, மோடியின் கீழ் பிஜேபி, பெரும்பான்மையான மாநிலங்களில் அதிகாரத்தின் பங்கையும், மேலும் தேசிய அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி பதவி மீதான கட்டுப்பாட்டையும் கொண்ட அதன் பிரதான தேசிய கட்சியாக உருவாக்கியது. பிஜேபி அதன் நீண்டகால இந்துத்துவ திட்டத்தை செயல்படுத்துவதில் சில பிரிவுகள் அதனுடன் கைகோர்த்துக் கொண்டுள்ளன என்றாலும், மோடி விரைவில் ஒரு சூறாவளியை சந்திக்கக் கூடும் என்று அஞ்சுகின்றனர், அதேவேளை பெருவணிகங்களோ உலக அரங்கில் அதன் கொள்ளையடிக்கும் நலன்களை உறுதிப்படுத்துவதற்கும், சமூக தீங்கிழைக்கும் முதலீட்டாளர் சார்பு “சீர்திருத்தங்களை” முன்னெடுப்பதற்கும் அவரை ஒரு சிறந்த பகடைக் காயாக கணக்கிட்டு அந்த இந்து “பலசாலியுடன்” இன்னமும் ஒட்டிக்கொண்டு தான் இருக்கின்றன.

கடந்த வாரம் CAA இயற்றப்பட்டது மோடி அரசாங்கத்தின் இராஜதந்திர நாட்காட்டியை சீர்குலைத்துள்ளது. CAA மற்றும் NRC இன் வெளிப்படையான முஸ்லீம் எதிர்ப்பு மற்றும் பங்களாதேஷ் மக்கள் எதிர்ப்பு உந்துதலின் காரணமாக, பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சரான அப்துல் மொமென் மற்றும் உள்துறை அமைச்சரான அசாதுஸ்மான் கான் இருவரும் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இந்தியாவிற்கு விஜயம் செய்ய திட்டமிட்டிருந்ததை இரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இருப்பினும், இந்தியாவை குரோதப்படுத்தும் வகையிலோ, மற்றும் புது தில்லியின் அரசியல் ஆதரவிற்கும் முதலீடுகளுக்கும் ஆபத்து விளைவிக்கும் வகையிலோ அல்லாமல், அவர்களது வருகை தள்ளிவைக்கப்பட்டதற்கான காரணமாக CAA ஐ அவர்கள் குறிப்பிடவில்லை.

கடந்த வார இறுதியில் குவாஹாத்தியில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயுடன் ஒரு வருடாந்திர உச்சிமாநாட்டை நடத்த மோடி திட்டமிட்டிருந்தார், என்றாலும் தற்போது அங்கு நடந்து வரும் CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் காரணமாக அம்மாநாட்டை நடத்த முடியவில்லை. உச்சிமாநாட்டை வேறு இடத்தில் நடத்த இந்தியா விரும்பியது, ஆனால் ஜப்பான் அதற்கு மறுத்துவிட்டது. வடக்கே சீனாவின் எல்லையில் உள்ள ஒரு மூலோபாய பிராந்தியமான வடகிழக்கு இந்தியாவில் அதன் முதலீடுகளை முன்னிலைப்படுத்தும் வகையில் உச்சிமாநாட்டை பயன்படுத்த அது விரும்பியது என்பதுடன், அதன்மூலம் புது தில்லி மற்றும் டோக்கியோ ஆகிய இரண்டும், இந்தியாவிற்கும் தென்கிழக்கு ஆசியாவிற்கும் இடையில் வியத்தகு முறையில் மேம்படுத்தப்பட்ட வர்த்தகத்திற்கான அச்சாணியை உருவாக்க விரும்புகின்றன.

மோடி அரசாங்கத்தின் CAA உம் மற்றும் தேசியளவில் NRC ஐ தொடங்குவதற்கான அதன் திட்டங்களும், இந்திய துணைக் கண்டத்தின் 1947 மதப் பிரிவினையின் செயற்கையான மற்றும் முற்றிலும் பிற்போக்குத்தனமான தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் கட்சிகளின் ஆதரவுடன், தெற்காசியாவை விட்டு விலகிச் சென்ற பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள், வரலாறு, கலாச்சாரம் மற்றும் பொருளாதார தர்க்கங்களை மீறி, வெளிப்படையாக முஸ்லீம் பாகிஸ்தான் மற்றும் பெரும்பாலும் இந்து இந்தியா என்றும் இதை பிரித்தனர்.

இந்த பிரிவினையின் உடனடி தாக்கமாக பெரும் வகுப்புவாத வன்முறை வெடித்தது, அதன் விளைவாக ஒரு மில்லியனுக்கும் (பத்து இலட்சத்துக்கும்) அதிகமானோர் பலியானார்கள் மேலும் கிட்டத்தட்ட 20 மில்லியன் (2 கோடி) பேர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர். ஆனால் அதற்கும் மேலாக, இது, ஏகாதிபத்தியம் இப்பகுதியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவதற்கான வழிமுறையாக செயல்பட்ட பிற்போக்குத்தனமான வகுப்புவாத அரசு அமைப்பை உருவாக்கியது; பல போர்கள் மற்றும் போர்களின் நெருக்கடிகளுக்கு வழிவகுத்த பிற்போக்குத்தன உள்நாட்டு மோதல்களை வளர்த்துவிட்டது, இன்று இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அணுவாயுதமேந்திய மோதலுக்கு இப்பிராந்தியம் செல்லக்கூடிய அச்சுறுத்துலை கொண்டுள்ளது; மேலும், தெற்காசியாவின் பிற்போக்குத்தன ஆளும் உயரடுக்கினர் மூலம் வகுப்புவாதத்தை தூண்டுவதற்கும் மக்களை பிளவுபடுத்துவதற்கும் பயன்படுகிறது.

ஏகாதிபத்தியம் மற்றும் பிராந்திய போட்டி முதலாளித்துவ உயரடுக்கினரால் உருவாக்கப்பட்ட சமூக துயரங்கள், மற்றும் மாநில, வகுப்புவாத மற்றும் சாதிய ரீதியான பிளவுகளின் பிற்போக்குத்தன உணர்வுகளிலிருந்து வெளியேறுவதற்கான ஒரே வழி என்னவென்றால், ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இந்திய துணைக் கண்டம் முழுவதுமான தொழிலாள வர்க்கம் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்பதாகும்..

Loading