இலங்கை ஜனாதிபதி போர்க்காலத்தில் காணாமல் போனவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தம் முடிவடைந்து பத்து ஆண்டுகளுக்குப் பின்னர், இலங்கை ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ, போரின்போதும் அதற்குப் பின்னரும் காணாமல் போன 20,000 க்கும் மேற்பட்டோர் “உண்மையில் இறந்துவிட்டார்கள்” என்று ஒப்புக் கொண்டுள்ளார். ஜனவரி 17 அன்று ஜனாதிபதி செயலகத்தில் இலங்கைக்கான ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹன்னா சிங்கரை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது ஒரு அசாதாரண ஒப்புதல் ஆகும். காணாமல் போன உறவினர்களைப் பற்றிய தகவல்களைப் பெற குடும்ப உறுப்பினர்களின் பல ஆண்டுகளாக விடுத்து வரும் வேண்டுகோள்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. "காணாமல் போனவர்கள்" இறந்துவிட்டதாக அரசாங்கமும் இராணுவமும் அறிந்திருப்பதாக எந்த இலங்கை அதிகாரியும் இதற்கு முன்னர் ஒப்புக் கொள்ளவில்லை. அவ்வாறு செய்வது அவர்களின் இறப்புகளைப் பற்றி பல மோசமான கேள்விகளை எழுப்பும். இது வரை போரில் எவரும் காணமல் போகவில்லை என்று இராஜபக்ஷ மறுத்தே வந்துள்ளார்.

வெளிப்படையான கேள்வி என்னவெனில், காணாமல் போனோர் இறந்து விட்டனர் என்பது இராஜபக்ஷவுக்கு எப்படித் தெரியும்? பதில் எளிதானதாகும். புலிகளுக்கு எதிரான போரின் கொடூரமான இறுதி கட்டங்களில் அவரே பாதுகாப்பு செயலாளராக இருந்தார் – அது பாதுகாப்புத் துறையின் உயர் பதவி ஆகும். அவரது சகோதரர் நின்றைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் மற்றும் முப்படைகளின் தளபதியாகவும் இருந்தார்.

எனவே, கோட்டாபய இராஜபக்ஷ, இராணுவ உளவுத்துறை மற்றும் பொலிஸ் உட்பட, அதே போல் பெரும்பாலும் தமிழர்கள், அரசாங்க விமர்சகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் கடத்தல்கள், கொலைகள் மற்றும் பலாத்காரமாக காணாமல் ஆக்குதல் ஆகியவற்றில் ஈடுபட்ட இராணுவத்துடன் தொடர்புடைய கொலைப் படைகள் உள்ளடங்களாக 300,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட மிகப்பெரிய பாதுகாப்புப் படையினருக்கு பொறுப்பாக இருந்தார்.

சண்டே லீடர்பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, லங்கா நியூஸ்இன் பத்திரிகையாளரான பிரகீத் எக்னெலிகொட போன்ற அரசாங்க விமர்சகர்களின் படுகொலை, மற்றும் மாணவர்கள் உட்பட 11 பேர் கப்பம் பெறுவதற்காக கடத்தப்பட்டு கொல்லப்பட்டமை போன்ற மிக இழிபெயரெடுத்த வழக்குகளில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் இராணுவத் தளபதிகளும் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

புதிய ஜனாதிபதி, ஐ.நா. அதிகாரியிடம் பேசும்போது, காணாமல் போனவர்களில் பெரும்பாலோரை "வலுக்கட்டாயமாக கட்டாயப்படுத்தி" இயக்கத்தில் இணைத்துக்கொண்டதாக புலிகள் மீது குற்றம் சாட்ட முயன்றார். "சுமார் 4,000 இராணுவ வீரர்கள் காணாமல் போனதாக பட்டியலிடப்பட்டுள்ளனர், ஆனால் உண்மையில் அவர்கள் அனைவரும் மோதலின் போது இறந்துவிட்டார்கள், அவர்களின் உடல்கள் மீட்கப்படவில்லை" என்றும் அவர் கூறினார்.

இது, புலி சந்தேக நபர்கள் என அழைக்கப்படுபவர்களில் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கானவர்களை வெள்ளை வேன்களில் கடத்தி, சித்திரவதை செய்து கொல்வதில் பேர் போன கொடூரமான கொலைப் படைகளில் இராணுவத்தின் ஈடுபாட்டைக் மூடி மறைக்கும் இழிந்த முயற்சியாகும். சில சந்தர்ப்பங்களில், இராணுவ அதிகாரிகள் தவிப்பில் இருந்த குடும்ப உறுப்பினர்களிடமிருந்து கப்பம் பறிக்க முயன்றுள்ளனர்.

"காணாமல் ஆக்கப்பட்டமை" என்பது இராஜபக்ஷ சகோதரர்கள் தலைமை தாங்கிய அட்டூழியங்களின் ஒரு பகுதி மட்டுமே. போரின் இறுதி மாதங்களில் யுத்தம் மிகவும் மிலேச்சத்தனமாக முன்னெடுக்கப்பட்டது. இராணுவம் புலிகள் வசம் இருந்த குறுகிய பிரதேசத்தின் மீது விமானக் குண்டுவீச்சு, பல் குழல் ராக்கெட் ஏவுகணைகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தி மருத்துவம் மற்றும் ஏனைய உதவிகள் உட்பட அடிப்படை உள்கட்டமைப்புகளை அழித்தது. பொதுமக்களுக்கு இராணுவம் அறிவித்த பாதுகாப்பு வலையங்கள் எந்த வகையிலும் பாதுகாப்பாக இருக்கவில்லை. சுமார் 40,000 தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா மதிப்பிட்டுள்ளது.

இறுதித் தாக்குதலில் இருந்து தப்பிய 250,000க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வவுனியாவில் முட்கம்பிகளால் சூழப்பட்ட இராணுவத்தால் நடத்தப்பட்ட “நலன்புரி முகாம்களில்” அடைத்து வைக்கப்பட்டனர். விசாரணை மற்றும் "புனர்வாழ்வு" என்ற பெயரில் இராணுவம் நூற்றுக்கணக்கான இளைஞர்களை இரகசிய இடங்களுக்கு இழுத்துச் சென்றது.

கோடாபய இராஜபக்ஷ நேரடியாக போர்க் குற்றங்களில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். ஐ.நா. நிபுணர் குழுவின் கூற்றுப்படி, புலிகளின் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை சரணடைய ஏற்பாடு செய்திருந்ததாகவும், வெள்ளைக் கொடிகளை ஏந்தி இராணுவ எல்லைக்குள் சென்று கொண்டிருந்த அவர்களை ஒட்டு மொத்தமாக படுகொலை செய்யுமாறு இராஜபக்ஷ உத்தரவிட்டதாகவும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளார். போரின் இறுதிக் கட்டத்தில் இராணுவத் தளபதியாக இருந்தமையால், பொன்சேகா இந்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்த முடியும்.

2019 ஏப்ரலில் கலிபோர்னியாவில் தொடங்கிய ஒரு சிவில் நீதிமன்ற வழக்கில், கனேடிய தமிழ் பிரஜையான ரோய் சமாதானனிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்கு உடல் மற்றும் உளவியல் சித்திரவதைகளைப் பயன்படுத்தியதாக இராஜபக்ஷ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. புலிகளுக்கு உதவி செய்தார் என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் கொழும்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் மூன்று ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

கொழும்பு வீதியில் பட்டப்பகலில் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக அவரது மகள் அஹிம்சா விக்ரமதுங்க சார்பாக இராஜபக்ஷ மீது இரண்டாவது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நவம்பரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது, இராஜபக்ஷ இராணுவத்தை "யுத்த வீரர்கள்" என்று பாராட்டியதோடு, தேர்தலில் வெற்றி பெற்ற 24 மணி நேரத்திற்குள் பல்வேறு குற்றங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சிப்பாய்களையும் விடுவிப்பதாக அறிவித்தார்.

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்தா கரன்னகொட மற்றும் முன்னாள் கடற்படை பேச்சாளர் ரியர் அட்மிரல் டி.கே.பி. தஸநாயக்க 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். ஜனாதிபதி அமைத்த ஒரு ஆணைக்குழு அவர்கள் மீதான விசாரணையை முன்னெடுக்க வேண்டாம் என சட்டமா அதிபரைக் கோரியிருந்தது.

இராஜபக்ஷவின் தேர்வு செய்யப்பட்டுள்ளமை ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் ஒரு எச்சரிக்கையாகும். ஆழ்ந்த பொருளாதார நெருக்கடி மற்றும் மீண்டும் தலைதூக்கும் தொழிலாளர்களின் போராட்டங்களின் மத்தியில் பொலிஸ்-அரசு நடவடிக்கைகளை திணிக்கத் தேவையான “வலிமையான மனிதர்” என்று இலங்கையில் ஆளும் உயரடுக்கின் பிரிவுகள் இராஜபக்ஷவை ஆதரிக்கின்றன. ஜனாதிபதியாக, அவர் ஏற்கனவே முக்கிய அரசு நிறுவனங்களை நிர்வகிக்க இராணுவ பிரமுகர்களை நியமித்துள்ளார்.

காணாமல் போனவர்கள் மற்றும் கொலைகளுக்கு பொறுப்பானவர்கள், அவர்களின் பதவிகளைப் பொருட்படுத்தாமல், கைது செய்யப்பட வேண்டும், குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) கோருகிறது. காணாமல் போன ஆயிரக்கணக்கானோரின் உறவினர்களுக்கு எப்போது, ஏன், எப்படி தங்கள் அன்புக்குரியவர்கள் கொலை செய்யப்பட்டனர், அவர்களின் உடல்கள் எங்கு புதைக்கப்பட்டுள்ளன என்பதை அறிய உரிமை உண்டு.

இந்த கொடூரமான குற்றங்களுக்கு காரணமானவர்கள் மீது வழக்குத் தொடுப்பதும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதும் முழு தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த போராட்டத்தின் மூலம் மட்டுமே முன்னெடுக்கப்பட முடியும். போரின் மூல காரணமான இலாப நோக்கு அமைப்பு முறையை ஒழிப்பதற்கான போராட்டத்தில் உழைக்கும் மக்களை ஒன்றிணைக்கும் ஒரு அரசியல் போராட்டத்தின் பகுதியாக தொழிலாள வர்க்கத்துக்கு இந்த அட்டூழியங்களின் உண்மையை அம்பலப்படுத்த முடியும்.

Loading