கொரொனாவைரஸ் தொற்றுநோய்: ஓர் உலகளாவிய பேரழிவு

சீன நகரமான வூஹானில் ஆரம்பித்த 2019-nCoV கொரொனாவைரஸ் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 43,000 ஐ கடந்து அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இப்போது குறைந்தபட்சம் 1,013 ஆக உள்ளதுடன், குறைந்தபட்சம் 25 நாடுகளில் குறைந்தபட்சம் ஒருவராவது இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பலபத்து நாடுகள் காய்ச்சல் மற்றும் வாந்தி-பேதி போன்ற அறிகுறிகள் கொண்ட நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வருகின்றன அல்லது தொற்றுநோய் கிருமிகள் பரவலாம் என்பதற்காக தயாராகி வருகின்றன.

இப்போது இந்த நோய்தொற்று, 2002-2003 இல் மிகக் கடுமையாக சுவாச உறுப்பு பாதிப்பு நோயால் (Severe Acute Respiratory Syndrome – SARS) பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விஞ்சியுள்ளதுடன், சீன மற்றும் உலகளாவிய அரசுகள் நடைமுறைப்படுத்தும் நோயாளிகளை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் தொடர்ந்து பரவி வருகிறது.

இந்த வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான அரசின் முயற்சியில், சீனா எங்கிலுமான நகரங்கள், குறிப்பாக இந்த புதிய கொரொனாவைரஸின் பிறப்பிடமான வூஹான் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ வெளியுலகிலிருந்து அடைக்கப்பட்டுள்ளது. மில்லியன் கணக்கானவர்கள் வீடுகளிலேயே தங்கியுள்ளனர், அதிக மக்கள்தொகை நிறைந்த நகரமான ஷாங்காய் உட்பட சீனாவின் முக்கிய நகர்புற மையங்களில் பலவும் கண்கூடாகவே "பேய் நகரங்களாக" மாறிவிட்டன. துணிந்து வெளியில் வருபவர்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களாக உள்ளனர், இவர்கள் சுமையேறிப்போயுள்ள மருத்துவமனைகளில் உதவிதேடியோ அல்லது ஏற்கனவே மருத்துவ சிகிச்சைகளில் இருந்து திரும்பியவர்களைக் கவனிப்பதற்காக உணவு மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களைத் தேடியோ வெளியில் வருகிறார்கள்.

கொரொனாவைரஸ் தொற்று ஓர் பேரழிவாக ஆகியுள்ளதுடன், பாதிக்கப்பட்டுள்ள பத்தாயிரக் கணக்கானவர்களுக்கும் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மில்லியன் கணக்கானவர்களுக்கும் ஒரு துயரமாக மாறியுள்ளது, உலகெங்கிலும் அனைத்து மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 14 நாட்களில் வூஹானிலோ அல்லது அதிகளவில் இந்நோயால் பாதிக்கப்பட்ட மற்ற பகுதிகளிலோ இருந்த எவரொருவரையும் கண்காணிப்பது மற்றும் தனிமைப்படுத்துவது உட்பட குடியிருப்போர் மற்றும் வாகனங்கள் நகர்வு மீது நேற்று பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தன. இவ்விரு நகரங்களுடன் இன்னும் 20 மாகாணங்களின் குறைந்தபட்சம் ஏனைய 80 நகரங்களும் இதில் இணைந்தன, குறைந்தபட்சம் 103 மில்லியன் மக்கள் பாதிக்கப்படும் விதத்தில் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ அவை மீது வெளியுலக தொடர்பு தடையை திணித்துள்ளன.

அதே நேரத்தில், நீடிக்கப்பட்ட சந்திரோதய புத்தாண்டு (Lunar New Year) விடுமுறைக்குப் பின்னர் நேற்று சீனா எங்கிலும் பணிகள் தொடங்கின. மக்கள் மீண்டும் பயணிக்க தொடங்கிய நிலையில், அவர்கள் அசாதாரண கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர். பொது போக்குவரத்து நிலையங்களிலும், அலுவலகங்களிலும், ஆலைகள் மற்றும் தொழில்துறை மையங்களிலும் உடல் வெப்பநிலையை அளவிட அரசாங்கம் அகச்சிவப்பு அலை கேமராக்களை அமைத்துள்ளது. குடியிருப்போர் மருத்துவத்துறை முகமறைப்பு இல்லாமல் அவர்களின் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வூஹான் மற்றும் பெய்ஜிங் உட்பட பல நகரங்களும் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு மண்டலங்களை அமைத்துள்ளது, அங்கே இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சந்தேகத்திற்குரியவர்கள் பலவந்தமாக அடைத்து வைக்கப்பட்டு வருகிறார்கள். தனிமைப்படுத்தலை மீறுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுமென அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

வூஹானிலும் ஹூபே மாகாணத்தின் ஏனைய இடங்களிலும் அத்தியாவசிய பண்டங்கள் தீர்ந்து வருவதாக இப்போது கவலைகள் நிலவுகின்றன. இன்று வரையில், சீன அரசாங்கம் 17,000 மருத்துவ பணியாளர்களையும் 3,000 க்கும் அதிகமான டன் பொருட்களையும் அம்மாகாணத்திற்கு அனுப்பி உள்ளது, இது ஓரளவுக்கு மருத்துவர்களும் செவிலியர்களும் முகங்கொடுத்து வரும் அழுத்தத்தைக் குறைத்துள்ளது என்றாலும் மருத்துவமனை படுக்கைகள் இன்னமும் பற்றாக்குறையிலேயே உள்ளன. ஆனால் உறுதி செய்யப்பட்ட 45 நோயாளிகள் உள்ள சிங்கப்பூர் மிகவும் மோசமடைந்த நோயாளிகளை மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்க ஆலோசித்து வருகிறது. “ஒவ்வொரு நோயாளியையும் மருத்துவமனையில் அனுமதித்து தனிமைப்படுத்தினால், எங்கள் மருத்துமனைகள் நிறைந்து விடும்,” என்று சனியன்று சிங்கப்பூர் பிரதம மந்திரி Lee Hsien Songon தெரிவித்தார்.

அந்த தொற்றுக்கிருமி உத்தியோகபூர்வமாக அறியப்பட்டுள்ளதையும் விட அனேகமாக வேகமாக பரவி வருகிறது என்ற அறிக்கைகளை அடுத்து லீ இன் கருத்துக்கள் வந்தன. இலண்டனின் இம்பீரியல் கல்லூரியில் தொற்றுநோய் வல்லுனர் நீல் ஃபேர்குசன் சனிக்கிழமை குறிப்பிடுகையில், “சீனாவில் மொத்த தொற்றுநோயில் 10 சதவீதம் அல்லது அதற்கும் குறைவாகவும், மற்ற நாடுகளில் ஒரு கால்வாசியும் தான் கண்டறியப்பட்டுள்ளது,” என்று எழுதினார். சீன சுவாச உறுப்பு நிபுணர் ஜொங் நான்ஷன் திங்களன்று பிரசுரித்த ஒரு ஆவணம், இந்த புதிய கொரொனாவைரஸின் வளர்ச்சி காலம் தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள 14 நாட்கள் இல்லை, 24 நாட்களாக இருக்கலாம் என்று ஊகிக்கிறார். இந்த நிலைப்பாடு, சீனாவின் ஹெனன் மாகாணத்தில் இந்நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு 17 நாட்களாகியும் எந்த அறிகுறியும் தெரியவில்லை என்பது கண்டறியப்பட்ட போது இன்னும் கூடுதலாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் தனிமைப்படுத்தும் நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டதில் இருந்து உலக மக்களிடம் இருந்து அளவுகடந்த ஒற்றுமையுணர்வு கிடைத்துள்ளது. அடைக்கப்பட்ட பகுதிகளுக்குப் பணமும் பொருட்களும் அனுப்புவதற்காக ஆயிரக் கணக்கான Go Fund Me தளங்களும் மற்றும் அதுபோன்ற ஏனைய தளங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்து சிகிச்சை அளிக்க பணி புரிந்து கொண்டிருக்கும் அதேவேளையில், மருத்துவர்களும் மருத்துவத்துறை தொழில்வல்லுனர்களும் 2019-nCoV ஐ முற்றிலுமாக அழிப்பதற்கான வழியைக் காண பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில், தனிமை மண்டலங்களில் சிக்கியுள்ள பத்து மில்லியன் கணக்கானவர்களும், எந்தளவுக்கு சாத்தியமோ அந்தளவுக்கு, அவர்களின் தொழில்வழங்குனர் அவர்களை வேலைக்குத் திரும்ப கோரிய போதினும் கூட, தங்களைத்தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டு, அந்த தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த அவர்களால் முடிந்தளவில் அனைத்தும் செய்துள்ளனர்.

சர்வதேச அளவில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடம் இருந்து சீனாவை நோக்கிய அனுதாபம் என்பது அதிகரித்து வரும் தேசிய விரோத நிலைமைகளின் கீழ் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாக ஒரு வக்கிரமான கருத்துரையில், தனியார் முதலீட்டு நிதி நிறுவன மேலாளர் Kyle Bass சனிக்கிழமை ட்வீட் செய்கையில், “நாம் நமது பொருட்களை எடுத்துக் கொண்டு திரும்ப தாய்நாட்டுக்குச் செல்ல வேண்டும். இந்த சீன தொற்றுக்கிருமி GT இன் [அரசுடைமை பத்திரிகை குளோபல் டைம்ஸ்] நிர்வாகிகளின் மீதும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏனையவர்களின் மீதும் தனது ஆத்திரத்தை தீர்த்துக்கொள்ளட்டும்” என்றார்.

கொரொனாவைரஸ் நோய்தொற்று ஒரு பொருளாதார போட்டியாளரான சீனாவைப் பலவீனப்படுத்தி, அமெரிக்காவை மையமாக கொண்ட நிறுவனங்கள் "அவற்றின் வினியோக சங்கிலியை மீளாய்வு செய்ய பரிசீலனைக்குரிய மற்றொரு விடயமாக இருக்கும்… ஆகவே அது வட அமெரிக்காவின் வேலைகள் மீண்டும் திரும்புவதைத் தீவிரப்படுத்த உதவுமென நினைக்கிறேன்" என்று அமெரிக்க வர்த்தகத்துறை செயலர் வில்பர் ரோஸ் குரூர திருப்தியுடன் கூறிய ஒரு வாரத்திற்கும் அதிகமான சில நாட்களுக்குப் பின்னர் Bass இன் கருத்து வந்தது. வர்த்தக அமைச்சகம் கூட பின்வருமாறு குறிப்பிட்டது: “அதன் மக்களுக்கும் உலகின் ஏனைய பகுதிகளுக்கும் நிஜமான அபாயங்களை மூடிமறைக்கும் நீண்ட வரலாறைக் கொண்ட ஒரு நாட்டுடன் வர்த்தகம் செய்வதன் பின்விளைவுகளைப் பரிசீலிப்பது மிகவும் முக்கியமாகும்,” என்று குறிப்பிட்டது.

சமீபத்தில் சீனாவிற்கு சென்றிருந்த வெளிநாட்டினரை அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிப்பதே கொரொனாவைரஸிற்கு அமெரிக்க அரசாங்கத்தின் விடையிறுப்பாக உள்ளது, அதேவேளையில் 1960 களுக்குப் பின்னர் முதல்முறையாக அதன் சொந்த குடிமக்களையே தனிமைப்படுத்துவதையும் நடத்தி வருகிறது. அது அதன் சொந்த குடிமக்களை அமெரிக்காவுக்குத் திரும்ப அழைத்து வருவதற்கு 1,000 டாலர் விமானக் கட்டணமும் கோரி உள்ளது. மேலும் அவர்களுக்குத் தேவையான எந்தவொரு சிகிச்சைக்கும் மற்றும் அவர்களைக் கட்டாயமாக இராணுவத் தளங்களில் வைப்பதற்கும் கட்டணம் விதித்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதே கொடுமையான நிலைப்பாடுகளை போன்றே சர்வதேசரீதியான பிரதிபலிப்புகளும் உள்ளன. சீன குடிமக்கள் வர வேண்டாம் என்று, ஆசியாவில் பல இடங்களில், வணிக அமைப்புகள் சீனமக்களுக்கு எதிரான அறிவிப்பு பலகைகளை வைத்துள்ளன, இதனால் வெளிநாடுகளில் வாழும் சீன மக்கள் அத்தியாவசிய சேவைகளைப் பெறுவதற்காக தங்களை கொரியர்கள் என்றோ அல்லது பொதுவாக "ஆசியர்கள்" என்றோ கூறுவதற்கு நிர்பந்திக்கப்படுகிறார்கள். சீனாவில் உள்ள ஆஸ்திரேலிய குடிமக்களை வெளியேற்றுவதற்கான முயற்சியில், அவர்கள் "சட்டவிரோத" அகதிகள் என்றழைக்கப்படுபவர்களை அடைத்து வைக்க இந்திய பெருங்கடலில் கட்டமைக்கப்பட்டுள்ள ஒரு தொலைதூர அமைவிடமான கிறிஸ்துமஸ் தீவுக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள். கொரொனாவைரஸ் ஓர் "உடனடி அச்சுறுத்தல்" என்று பிரிட்டன் நேற்று அறிவித்தது, இது அந்நோயால் பாதிக்கப்பட்ட எவரொருவரையும் தனிமைப்படுத்தி அடைத்து வைக்க அரசை அனுமதிக்கும்.

பிரேசிலில், இங்கே இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் கீழ் எட்டு பேர் உள்ளனர் மற்றும் பாதிக்கப்பட்டவர் என்று யாரும் உறுதி செய்யப்படவில்லை என்கின்ற நிலையில், அந்த வலதுசாரி அரசாங்கம் ஏற்கனவே பொது சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளது. அது சீனாவிலிருந்து நாட்டுக்குத் திரும்ப அழைத்து வரப்பட்ட 34 நபர்களை விமானப்படை தளங்களில் தனிமைப்படுத்தி உள்ளது, அங்கே அவர்கள் அடுத்த 15 நாட்கள் தங்க வைக்கப்பட்டிருப்பார்கள். அந்த இராணுவத் தளத்தில் இராணுவ வாத்தியக்குழுவின் நேரடி வாசிப்பை பார்ப்பது மட்டுமே அவர்கள் செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கும் சில விடயங்களில் ஒன்றாகும்.

ஏற்கனவே மருந்துத்துறை நிறுவனங்கள் இதை குணப்படுத்துவதற்கான முயற்சிகளில் இருந்து இலாபத்தை ஈட்ட கருதி வருகின்றன. சில நிறுவனங்கள் அவற்றின் சொந்த குழுக்கள் குணப்படுத்தும் மருந்தை உருவாக்கி உள்ளதாக அறிவித்ததும் அவற்றின் பங்குகள் விலை ஏறத்தாழ 110 சதவீதம் அதிகரித்துள்ளன. அவை மனித உயிர்களைப் பாதுகாக்க விரும்பவில்லை, மாறாக 8.54 ட்ரில்லியன் உலகளாவிய மருந்துத்துறை சந்தையில் பெரும் பகுதிகளைக் கைப்பற்ற விழைகின்றன.

சர்வதேச அளவில் சாதாரண மக்களுக்கும் ஆளும் உயரடுக்கிற்கும் இடையே நிலவும் முரண்பாடான விடையிறுப்புகள், உலகளாவிய தொற்று நோயின் அபாயத்தை வெறுமனே தற்காலிகமாக கட்டுப்படுத்துவதற்கு மட்டுமல்ல, மாறாக தடுப்பதற்கும் மற்றும் முற்றிலுமாக இல்லாதொழிப்பதற்கும் என்ன மாதிரியான சமூக அமைப்புமுறை தேவைப்படுகிறது என்பதன் மீதான கேள்வியை முன்னிறுத்துகிறது. அமெரிக்காவும் சீனாவும் அவற்றின் பாதுகாப்புத்துறை வரவு-செலவு திட்டக்கணக்கில் ஒவ்வொரு ஆண்டும் நூறு பில்லியன் கணக்கான டாலர்களைச் செலவிடுகின்ற அதேவேளையில், முறையாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால் கொரொனாவைரஸ் மற்றும் இதர பிற நோய்தொற்றுக்களைத் தடுக்கக்கூடிய மருத்துவ மற்றும் விஞ்ஞான அமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீட்டையோ அவை விருப்பமின்றி முன்பை விட குறைத்துக் கொண்டே செல்கின்றன.

உலகெங்கிலுமான தொழிலாளர்களும் இளைஞர்களும் உணர்ந்துள்ளவாறு, தொற்று நோய்களுக்கான விடையிறுப்பு என்பது தேசிய எல்லைகளைக் கடந்து விரிவாக்கப்பட வேண்டும். எப்போதும் விரிவடைந்து கொண்டே இருக்கும் சமூக சமத்துவமின்மை, தீவிரமடைந்து வரும் காலநிலை மாற்றம் மற்றும் அதிகரித்து வரும் போர் அச்சுறுத்தல் உட்பட ஏனைய ஒவ்வொரு சமூக பிரச்சினையையும் போலே, இந்த கொரொனாவைரஸ் தொற்றுநோயும் ஒரு சர்வதேச தீர்வு அவசியப்படும் ஓர் உலகளாவிய பிரச்சினையாகும். அனைத்திற்கும் மேலாக, இதுபோன்ற நோய்கள் பரவுவதற்கு எதிரான போராட்டம் என்பது உயிரிழந்தவர்களிலிருந்தும் மற்றும் மரணிப்போரில் இருந்தும் இலாபமீட்டுதவற்காக மட்டுமே மருந்து கண்டறிய செயல்படும் பெருநிறுவனங்கள் மற்றும் பங்குடைமையாளர்களின் கைகளில் கட்டுப்படவிடப்படக்கூடாது.

ஆகவே இந்த புதிய கொரொனாவைரஸின் நோய்தொற்றால் எச்சரிக்கை அடைந்திருப்பவர்கள் தொழிலாள வர்க்கத்தை நோக்கி திரும்புவது முக்கியமாகும். தொழிலாள வர்க்கம் தான் இந்த தொற்றுநோயின் சுமையை ஏற்றுள்ளது. தொழிலாள வர்க்கம் தான் தன்னை புறநிலைரீதியாகவும் அதிகரித்தளவிலும் ஒரு சர்வதேச வர்க்கமாக வரையறைப்படுத்தி வருகிறது. தொழிலாள வர்க்கத்தின் சமூக நலன்கள் தான் முதலாளித்துவத்தைத் தூக்கியெறிவதிலும், உற்பத்தி கருவிகளின் தனியார் சொத்துடைமையை நீக்குவதிலும், ஒவ்வொரு உயிரும் உயர்ந்த மட்டத்திலான வாழ்க்கை தரங்கள் மற்றும் மருத்துவ கவனிப்பை பெறுவது உட்பட மனிதகுல தேவையைப் பூர்த்தி செய்வதன் அடிப்படையில் ஒரு பொருளாதார அமைப்புமுறையை ஸ்தாபிப்பதற்காகவும் உள்ளது.

தொற்றுநோய்கள், பூகோள வெப்பமயமாதல், வேலைகளின் அழிப்பு, சமூக சமத்துவமின்மை, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் உலக போர் அச்சுறுத்தல் என நமது காலத்திய இந்த மிகப்பெரும் சமூக பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, விஞ்ஞானமும், தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித்திறனும் உள்ளன. அதே நேரத்தில், பகுத்தறிவார்ந்த மற்றும் ஒருங்கிணைந்த ஜனநாயக முறையிலான உலக பொருளாதாரத் திட்டமிடலைக் கொண்டே உலக மக்களின் வாழ்க்கை தரங்களை மேலுயர்த்த முடியும் மற்றும் வாழ்நாளை தரமுடையதாக ஆக்க முடியும். இந்த இலக்கை, உலக சோசலிச புரட்சி முறை மூலமாக அடையக் கூடிய ஒரே சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும்.  

Loading