வேலை நெருக்கடி, மற்றும் ஆழமடைந்து வரும் பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் இந்திய வரவு-செலவுத் திட்டம் மேலதிக சிக்கன நடவடிக்கைகளை திணிக்கிறது

Kranti Kumara
17 February 2020

மொழிபெர்ப்பின்மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்தியாவின் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி (BJP) அரசாங்கம், 2020-21 ஆம் நிதியாண்டிற்காக 30.4 டிரில்லியன் ரூபாய் (425 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்பு கொண்ட வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளது, அது இந்திய பெருவணிகத்திற்கும் மற்றும் செல்வந்தர்களுக்கும் ஓரளவு சலுகைகளை வழங்குவதுடன், உழைக்கும் மக்கள் மீதான சிக்கன நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது.

பெப்ரவரி 1 அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் பாராளுமன்றத்தில் வழங்கப்பட்ட இந்த வரவு-செலவுத் திட்டம், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் பெயரில் பாரிய பெருநிறுவன வரி வெட்டுக்கள் மற்றும் துரிதப்படுத்தப்பட்ட தனியார்மயமாக்கலை உந்துதல் உட்பட, ஒரு தொடர் பெருவணிக சார்பு நடவடிக்கைகள் பற்றி அரசாங்கம் அறிவித்து ஐந்து மாதங்களுக்குப் பின்னரே வெளியிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இடைக்காலத்தில், நுகர்வோர் தேவை மற்றும் வணிக முதலீட்டில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சி, மற்றும் திருப்பிச் செலுத்தப்படாத பெருவணிக கடன்களை கணக்கில் கொண்டு கடன் வழங்குவதற்கு வங்கிகள் காட்டிய தயக்கம் ஆகியவற்றின் காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சி கண்டது.

2019 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில், பணவீக்கம் கடுமையாக உயர்ந்திருந்தாலும், பொருளாதார வளர்ச்சி ஆறு ஆண்டுகளுக்கும் கூடுதலாக 4.5 சதவிகிதம் வீழ்ச்சி கண்டது.

இந்தியபிரதமர்நரேந்திரமோடிஹூஸ்டனில்பேசுகிறார் (AP Photo/Michael Wyke)

“அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய” இந்தியாவின் பொருளாதார மந்தநிலையை மேற்கோள் காட்டி, சர்வதேச நாணய நிதியம் (IMF) சமீபத்தில் 2020 ஆம் ஆண்டிற்கான அதன் பூகோள வளர்ச்சி முன்கணிப்பை குறைத்தது. மிக சமீபமாக அக்டோபரில் இந்தியா கணித்துள்ள பொருளாதார வளர்ச்சி விகிதமான 6.1 சதவிகிதத்துடன் ஒப்பிடுகையில், 2019 ஆம் ஆண்டில் அதன் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 4.8 சதவிகிதத்தையாவது அது எட்டும் என சர்வதேச நாணய நிதியம் இப்போது எதிர்பார்க்கிறது. 2020 ஆம் ஆண்டிற்கான தனது திட்டத்தை 5.8 சதவிகிதமாக இதுவும் குறைத்துள்ளது, அதாவது முந்தைய கணிப்பிலிருந்து கிட்டத்தட்ட ஒரு முழு சதவீத புள்ளியை இது குறைத்துள்ளது.

பெரிய மற்றும் சிறு வணிகங்கள் வேலைகளை அழிப்பதால், இந்தியாவின் வேலையின்மை விகிதம் உயர்ந்து, நகர்ப்புறங்களில் கிட்டத்தட்ட அது பத்து சதவிகிதத்தை எட்டியுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா “வேலையில்லாத வளர்ச்சியை” எதிர்கொள்வதாக சில பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ள அதேவேளை, பொருளாதாரமற்றும்அரசியல்வாரஇதழின்(Economic and Political Weekly) சமீபத்திய கட்டுரை, இந்தியா இப்போது “வேலையின்மையில் இருந்து வேலை இழப்பு [பொருளாதார] வளர்ச்சிக்கு” மாறிவிட்டதாக வாதிட்டது.

பிஜேபி இன் முஸ்லீம் விரோத குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக நடந்து வரும் தேசியளவிலான போராட்டங்கள், வேலை நெருக்கடி, பரவலாக காணப்படும் வறுமை மற்றும் எப்போதும் ஆழமடைந்து வரும் சமூக சமத்துவமின்மை ஆகியவற்றால் ஏற்கனவே பெருகி வரும் மக்கள் சீற்றத்துடன் சேர்ந்து, பெரும் சமூக வெடிப்பைத் தூண்டக்கூடும் என்று ஆளும் வர்க்க வட்டாரங்களில் அச்சம் அதிகரித்து வருகிறது.

மோடியும் அவரது பிஜேபியும், இரண்டாவது பதவிக் காலத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கையில், உள்நாட்டு பெருவணிகத்தின் முரண்பட்ட கோரிக்கைகளையும், IMF போன்ற சர்வதேச நிதி மூலதனத்தின் ஊதுகுழல்களையும் எதிர்கொண்டனர்.

வரிக்குறைப்பு மற்றும் அரச செலவைக்குறைத்தல் ஊடாக “நிதி ஊக்கத்தை” வழங்குவதன் மூலம் அரசாங்கம் பொருளாதார வளர்ச்சியை முடுக்கி விடுவதற்கு இந்திய வணிகம் அதற்கு அழுத்தம் கொடுத்தது, அதாவது, சாலைகள், துறைமுகங்களை கட்டமைப்பது அல்லது மேம்படுத்துவது, மற்றும் மின் விநியோகம் போன்ற வணிகத்திற்கு பயனுள்ள உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான அரசாங்க செலவினங்களை அதிகரிப்பது, மற்றும் இன்னும் கூடுதல் வரி வெட்டுக்களை செயல்படுத்துவது ஆகியவற்றின் மூலம் நிதி ஊக்கம் வழங்க வேண்டும் என்பதாகும். மறுபுறம், சர்வதேச நாணய நிதியம், “நிதி கட்டுப்பாட்டை” பேணுவதும், வருடாந்திர வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை குறைப்பதற்கான அதன் முடக்கப்பட்ட முயற்சியை மீண்டும் தொடங்குவதும் அவசியமென இந்திய அரசாங்கத்தை கடுமையாக எச்சரித்தது.

சர்வதேச நாணய நிதியம் அதன் சமீபத்திய அறிக்கை ஒன்றில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 68.5 சதவிகிதமாக இருக்கும் இந்திய அரசாங்கக் கடன் “வளர்ந்து வரும் சந்தைகளில்” “மிக உயர்ந்தது” என்று புகார் கூறியது. இந்நிலையில், மோடி அரசாங்கம் புதிய உள்கட்டமைப்பு திட்டங்களை தவிர்க்க வேண்டுமென அது வலியுறுத்தியது, ஏனென்றால் “அவற்றை செயல்படுத்துவதற்கு தேவையான வருவாயை உருவாக்குவதற்கு” இந்தியாவின் கடன் “குறைக்கப்பட வேண்டும்” என்று கூறி, அதற்கு பதிலாக “கட்டமைப்பு சீர்திருத்தங்களில்” அது கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியது. அதாவது, IMF இன் கருத்துப் படி, இது தொழிலாளர்கள் பணிநீக்கம் தொடர்பாக எஞ்சியுள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்குவதில் கவனம் செலுத்த வேண்டும், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை மேலும் துரிதப்படுத்த வேண்டும், நிறுவனங்களுக்காக பெரியளவில் நிலங்கள் கிடைப்பதை எளிதாக்க வேண்டும், இல்லையெனில் வணிகம் மீது “சுமத்தப்பட்ட” ஒழுங்குமுறை “எளிதாக்க” வேண்டும் என்பதே.

இறுதியில், மோடியும் சீதாராமனும், பெரியளவிலான “நிதி ஊக்கத்திற்கான” அழைப்புக்களை மறுத்ததுடன், அதற்கு மாறாக சமூக செலவினங்களுக்கான சிக்கன நடவடிக்கைகளுக்கு அவர்கள் அழுத்தம் கொடுத்தனர்.

நிதியமைச்சர் பின்னர் தொடர்ந்து, இந்தியாவின் பொருளாதாரம் விரைவில் சீர்செய்யப்படும் என்றும், 2008 க்குப் பிந்தைய பொருளாதார சரிவின் போது தேவையைத் தூண்டுவதற்காக முந்தைய காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கம் கோடிக்கணக்கான டாலர்களை வாரியிறைத்தது பற்றி வெளிப்படையாக குறிப்பிட்டு, பிஜேபி “அத்தகைய ஊதாரித்தனமான தவறுகளை மீண்டும் செய்யாது” என்று ஒப்புக் கொண்டு இதை பாதுகாத்தார்.

ஆனால் யதார்த்ததில், இந்திய முதலாளித்துவ உயரடுக்கும், அதன் அரசாங்கமும், சூழ்ச்சி செய்வதற்கு சிறிதளவு வாய்ப்பையே கொண்டுள்ளன. அதாவது, வரவு-செலவுத் திட்டத்தை தயாரிப்பதில், திட்டமிடப்பட்ட வரி வருவாயில் 42 பில்லியன் டாலர் பற்றாக்குறை ஏற்படும் நிலை, மற்றும் அதிகரித்தளவிலான கடன் நிதி செலவினங்களால் ஏற்பட்ட தாக்கம் ஆகியவற்றிற்கு இடையில் சிக்கியிருப்பதாக பிஜேபி உணர்ந்தது.

இந்த வரவு-செலவுத் திட்டம், 2019-20 ஆம் நிதியாண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.8 சதவிகிதத்திற்கு சமமாக பற்றாக்குறை இருக்குமென கணித்துள்ளது, அதாவது கடந்த ஜூலை மாத வரவு-செலவுத் திட்டத்தில் அரசாங்கம் உறுதியளித்ததைக் காட்டிலும் 0.5 சதவீதம் புள்ளிகள் உயர்ந்தும், மேலும் 2020-21 ஆம் நிதியாண்டில் 3.5 சதவிகித பற்றாக்குறையுடனும் அது இருக்கும். என்றாலும், பல ஆய்வாளர்கள், வளர்ச்சி, வரி வருவாய் மற்றும் தனியார்மயமாக்கல் வருமானங்கள் ஆகியவற்றின் மீதான நம்பிக்கையூட்டும் கணிப்புக்களை இந்த புள்ளிவிபரங்கள் அடிப்படையாகக் கொண்டவை என்று நம்புகின்றனர்.

425 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இந்தியாவின் மொத்த வரவு செலவுத் திட்டம் ஐக்கிய இராச்சியத்தைக் காட்டிலும் 40 சதவிகிதம் குறைவானது, அதிலும் இங்கிலாந்தின் 67 மில்லியன் மக்கள்தொகை என்பது இந்தியாவின் பெரும் மக்கள்தொகையில் (1.37 பில்லியன்) மிகச்சிறிய விகிதமே என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அரசாங்க கடனுக்காக செலுத்தப்படும் வட்டித் தொகை 7.1 டிரில்லியன் ரூபாயாக (100 பில்லியன் டாலர்) அல்லது ஒட்டுமொத்த நாட்டின் செலவினத்தில் சுமார் 23.5 சதவிகிதமாக உள்ளது. அதிலும், உலகின் மூன்றாவது பெரிய இந்தியாவின் 66 பில்லியன் டாலர் மதிப்பிலான இராணுவ வரவு-செலவுத் திட்டத்துடன் இதைச் சேர்த்தால் வரவு-செலவுத் திட்டத்தில் ஏறக்குறைய 40 சதவிகிதம் ஏற்கனவே கணக்கிடப்பட்டுள்ள நிலையில், பிற அனைத்து செலவினங்களுக்கும் வெறும் 18.2 டிரில்லியன் ரூபாய் (257 பில்லியன் டாலர்) மட்டுமே எஞ்சியுள்ளது.

மிகுந்த வறியவர்கள் மீதான தாக்குதல்

பிஜேபி இன் இந்த வரவு-செலவுத் திட்டம், பல்லாயிரக்கணக்கான கிராமப்புற ஏழைகள் சாப்பிடுகிறார்களா இல்லையா என்று உண்மையில் தீர்மானிக்கும் ஒரு திட்டமான, மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்திலிருந்து (MGNREGP) 1.3 பில்லியன் டாலர் நிதியை குறைத்து, கிராமப்புற ஏழைகளின் மிக வறிய பிரிவினருக்கான நலனில் கொடூரமான வெட்டுக்களைத் திணிக்கிறது.

MGNREGP திட்டம், கிராமப்புற மக்களுக்கு கால்வாய் தோண்டுதல் போன்ற சிறிய, குறைவூதிய வேலைகளை வருடத்திற்கு நூறு நாட்களுக்கு வழங்க சட்டபூர்வமாக உத்தரவாதமளிக்கிறது. கிடைக்கக்கூடிய வேலைகளுக்கு தேவைக்கு அதிகமாகவே MGNREGP திட்ட வேலையை செய்ய பலரும் முயற்சிக்கின்ற நிலையில், இந்த திட்டம் ஏற்கனவே பலமுறை ஒதுக்கீட்டிற்கு கூடுதலாக நிதியை பெற்றிருந்தாலும், இந்த திட்டத்திற்கான வரவு-செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடாக இருந்த சொற்ப தொகையான 710 பில்லியன் ரூபாயில் இருந்து (10 பில்லியன் டாலர்) வெறும் 615 பில்லியன் ரூபாயாக (8.66 பில்லியன் டாலர்) பிஜேபி குறைத்துள்ளது. மிக வறிய கிராமப்புற தொழிலாளர்கள் இந்த கருமித்தனமான நலனை கூட பெற முடியாமல் மனம் சோர்ந்து போகும் வகையில், மோடி அரசாங்கம் அவர்களது ஊதியங்களுக்கான நிதியை விடுவிக்காமல் பலமுறை நிறுத்தி வைத்துள்ளது.

இந்த வரவு-செலவுத் திட்டம், சுகாதார நலனுக்காக மிகக் குறைந்த நிதி ஒதுக்கீடாக 675 பில்லியன் ரூபாயை (9.5 பில்லியன் டாலர்) வழங்குகிறது, இது ஒரு நபருக்கு ஆண்டு முழுவதற்குமாக 7.30 டாலரை (519 ரூபாய்) வழங்குவதாக அர்த்தமாகிறது. கல்வி செலவின ஒதுக்கீடு 993 பில்லியன் ரூபாயாக (14 பில்லியன் டாலர்) உள்ளது, அல்லது நியூ யோர்க் நகரத்தின் கல்வி வரவு-செலவுத் திட்டத்தைக் காட்டிலும் சுமார் 10 பில்லியன் டாலர் குறைவாக உள்ளது!

நுகர்வை அதிகரிக்கும் வகையிலும், மேலும் 98 மில்லியன் அல்லது பொருளாதாரத்தின் “முறையான” அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளில் முறைப்படுத்தப்பட்ட ஊதியங்கள் அல்லது சம்பளங்களைப் பெறும் இந்தியர்களை இலக்காகக் கொண்ட அதன் நடுத்தர வர்க்க ஆதரவாளர்களை சந்தேகத்திற்கு இடமின்றி சமாதானப்படுத்தும் வகையிலும் ஆண்டுக்கு 5.6 பில்லியன் டாலர் வரி வெட்டுக்களை பிஜேபி அறிவித்தது. வருடத்திற்கு 1.5 மில்லியன் ரூபாய்க்கும் (21,000 டாலர்) குறைவாக வருமானம் ஈட்டுபவர்களுக்கான வருமான வரி விகிதங்கள் 5 முதல் 10 சதவிகித அளவிற்கு குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் உரக்க தெரிவித்தார். என்றாலும், இந்த வெட்டுக்களிலிருந்து பயனடைய மக்கள் தங்களது தற்போதைய வரி விலக்குக்களையும் குறைப்புக்களையும் கைவிட வேண்டியிருக்கும். வழமையான தொழிலாளர்களில் 72 சதவிகிதம் பேர் ஆண்டிற்கு 216,000 ரூபாய் (3,040 டாலர்) முதல் சம்பாதிப்பதை எடுத்துக் கொண்டால், அது அரிதாகவே நுகர்வோர் தேவைக்கு பெரும் ஊக்கத்தை வழங்கும்.

பெருநிறுவனங்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றை நிதியமைச்சர் நிறைவேற்றினார். அதாவது, பங்குதாரர்களுக்கு ஈவுத்தொகையை விநியோகிக்கும் போது பெருநிறுவனங்கள் நேரடியாக அரசாங்கத்திற்கு செலுத்தக்கூடிய பங்கு விநியோக வரி (Dividend Distribution Tax-DDT) நீக்கப்படுவதாக அவர் அறிவித்தார். இந்த வரிகள் தற்போது ஈவுத்தொகையை பெறும் மக்களால் செலுத்தப்படவுள்ளன, அதாவது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் என்றல்லாமல், பல விடயங்களில், வரிவிதிப்பு விகிதம் குறைவாக இருக்கும்.

கடந்த செப்டம்பரில் சீதாராமன் பெருநிறுவன வரி விகிதங்களை பெரியளவில் குறைப்பதற்கு அறிவித்தார், சமீபத்தில் வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வின் (Economic Survey-ES) படி இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களுக்கு அது பெரிதும் பயனளித்தது. அவற்றிற்கான வரி குறைப்புக்களால் பண வீழ்ச்சி நிகழ்ந்த போதிலும், தற்போதைய வரி செலுத்த வேண்டிய தொகையிலிருந்து 18.5 முதல் 27.3 சதவிகிதம் வரை அவை இலாபமீட்டும் என ES மதிப்பிட்ட நிலையில், பெருநிறுவனங்கள் தங்களது நிதிகளை மறுமுதலீடு செய்ய முன்வராமல், இருப்புக் கணக்கில் ஒதுக்கி வைக்கின்றன.

இந்த மாத வரவு-செலவுத் திட்டத்தில், 2019-20 இலக்கை இரட்டிப்பாக்கும் வகையில் 2.1 டிரில்லியன் ரூபாய் (30 பில்லியன் டாலர்) அளவிற்கு வரவிருக்கும் நிதியாண்டிற்கான ஒரு பிரம்மாண்டமான தனியார்மயமாக்கல் உந்துதலுக்கும் சீதாராமன் அறிவித்துள்ளார். இதில், மிகப்பெரிய, மற்றும் முழுக்க முழுக்க அரசுக்கு சொந்தமான ஆயுள் காப்பீட்டுக் கழகம், மற்றும் தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியா ஆகியவற்றின் பங்குகளின் ஒரு பகுதியை அரசாங்கம் விற்பனை செய்யவிருப்பதும் அடங்கும். அதாவது, அதிக இலாபம் ஈட்டும் பாரத் பெட்ரோலியம் (BPCL) நிறுவனத்தின் அதன் ஒட்டுமொத்த 53.3 சதவிகித பங்குகளையும், மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய கடற்படைக்கு சொந்தமான இந்திய கப்பல் கழகத்தின் அதன் 64 சதவிகித பங்குகளையும், மற்றும் இந்திய கொள்கலன் கழகத்தின் அதன் 31.8 சதவிகித பங்குகளையும் அரசாங்கம் விற்கவுள்ளது என்ற கடந்த நவம்பர் அறிவிப்புடன் இதுவும் சேர்கிறது.

இந்திய தொழிலாளர்கள் மீதான மோடி அரசாங்கத்தின் ஐந்தரை ஆண்டு கால தாக்குதலை எதிர்த்து ஜனவரி 8 அன்று இந்தியா முழுவதுமாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒருநாள் பொது வேலைநிறுத்தத்தில் ஒருங்கிணைந்து ஈடுபட்டனர், அத்தகைய தாக்குதல்களில் பொதுச் சொத்துக்கள் பெரு வணிகங்கள் வசம் ஒப்படைக்கப்படுவது முக்கியமானதாகக் கருதப்பட்டது.

போட்டி நாடான சீனாவிற்கு எதிராக, இந்தியாவை உலக மூலதனத்திற்கான உற்பத்தி சங்கிலி மையமாக மாற்றுவதே முக்கியமான தனது குறிக்கோள்களில் ஒன்று என மோடி அரசாங்கம் பிரகடனப்படுத்தும் அதேவேளை, அமெரிக்கா மற்றும் பிற பெரிய முதலாளித்துவ சக்திகளைப் போல இந்தியாவும் பாதுகாப்புவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகரித்தளவில் முயன்று வந்தது. இந்த வரவு-செலவுத் திட்டம், பாதணிகள், குளிர்சாதனப் பெட்டிகள், தளவாடங்கள், பொம்மைகள் மற்றும் மொபைல் போன் பாகங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீதான வரிகளை கடுமையாக அதிகரித்தது. இது தற்செயலானது அல்ல, பாதிக்கப்பட்ட பல பொருட்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யும் பெரிய ஏற்றுமதியாளராக சீனா இருப்பது குறிப்பிடத்தக்கது.

மோடி அரசாங்கம் வரவு-செலவுத் திட்ட எண்களில் மோசடி செய்வது மற்றும் அதிகரிப்பது தொடர்பாக நியாயப்படுத்தும் இழிபெயரை சம்பாதித்து வைத்துள்ளது. நீண்ட கால நெருக்கடியில் பொருளாதாரம் சிக்கியிருந்தாலும், அதன் பல வரவு செலவுத் திட்ட கணக்கீடுகள் 2020-21 ஆம் ஆண்டிற்கான 6 முதல் 6.5 சதவிகிதம் வரை மிகைப்படுத்தப்பட்ட வளர்ச்சி விகித திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. இப்படியாக அதனால், வருவாய் புள்ளிகளை அதிகரிக்கவும், உருவாக்க முடியும் என்பதுடன், அதன் விளைவாக ஒரு சிறிய முற்றிலும் கற்பனையான நிதி பற்றாக்குறை மதிப்பீட்டையும் அதனால் உருவாக்க முடியும்.

மூன்று மணி நேரங்கள் கொண்ட சீதாராமனின் வரவு-செலவுத் திட்ட உரை முழக்கத்திலிருந்து, பல இலட்சக்கணக்கானவர்களை பசி மற்றும் பட்டினியின் விளிம்பிற்கு தள்ளிய ஒரு சமூக பொருளாதார பேரழிவுக்கு மோடி அரசாங்கம் தலைமை தாங்குகிறது என்பதை ஒருவர் எந்த விதத்திலும் சிரமத்துடன் தான் புரிந்துகொள்வார். நிதியமைச்சரின் கருத்துப் படி, “பொருளாதாரத்தின் அடிப்படைகள் வலுவாக இருந்து வருகின்றன என்பதுடன், அவை பெரும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிசெய்துள்ளன. பணவீக்கம் நன்கு கட்டுக்குள் உள்ளது.”

வரவு-செலவுத் திட்ட உரையைத் தொடர்ந்து சில மணிநேரங்களில் இரண்டு பெரிய பங்குச் சந்தை குறியீடுகள் சுமார் 2.5 சதவிகிதம் வீழ்ச்சியடைந்த நிலையில், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஊக வணிகர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் இந்தியாவின் பங்குச் சந்தை ஏற்கனவே வீழ்ச்சியை கண்டது.

இது, இந்திய பொருளாதாரத்திற்கான வாய்ப்புகள் குறித்த அச்சங்கள், மற்றும் அரசாங்கத்தின் பாரிய தனியார்மயமாக்கல் உந்துதலை ஆதரிக்கும் அளவிற்கு சந்தைகள் “போதுமானளவு நிதியை” கொண்டிராது என்ற கவலை ஆகிய இரண்டினால் நிகழ்ந்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஆயுள் காப்பீட்டுக் கழகம், ஏர் இந்தியா மற்றும் பிற சொத்துக்களை விற்பதன் மூலம் அரசாங்கம் நிதிகளை உறிஞ்சிக் கொள்ள முனைவதால், தனியார் வணிகங்கள் நிதிச் சந்தைகளில் இருந்து போதுமான மூலதனத்தை திரட்ட முடியாது என்ற அச்சங்கள் நிலவுகின்றன.

ஆசிரியர் பின்வரும் கட்டுரையையும் பரிந்துரைக்கிறார்:

BJP to table Indian budget amid mounting economic crisis, popular anger
[1 February 2020]