லான்செட் மருத்துவ இதழில் மருத்துவர்களின் கடிதம் பிரசுரிப்பு: “ஜூலியன் அசான்ஜை சித்திரவதை செய்வதையும், அவருக்கு மருத்துவ சிகிச்சையளிக்க மறுப்பதையும் முடிவுக்கு கொண்டு வாருங்கள்”

Laura Tiernan
20 February 2020

மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலகின் மிகச் சிறந்த மருத்துவ வார இதழான லான்செட் (Lancet ), விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜின் உயிரைக் காப்பாற்ற அவசர நடவடிக்கை எடுப்பதற்கான தங்களது அழைப்பை நினைவூட்டும் விதமாக 18 நாடுகளைச் சேர்ந்த 117 மருத்துவர்கள் அனுப்பிய கடிதத்தை இந்த வாரம் பிரசுரித்துள்ளது. அசான்ஜின் தலைவிதியை தீர்மானிக்கக்கூடிய இலண்டனில் நடைபெறவுள்ள அவரது அமெரிக்க ஒப்படைப்பு விசாரணை தொடங்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களுக்கு முன்பாக அவர்களது கடிதம் வெளியாகியுள்ளது.

“ஜூலியன் அசான்ஜை சித்திரவதை செய்வதையும், அவருக்கு மருத்துவ சிகிச்சையளிக்க மறுப்பதையும் முடிவுக்கு கொண்டு வாருங்கள்” என்ற தலைப்பிலான மருத்துவர்களின் இந்த இரண்டு பக்க கடிதம், லான்செட் வார இதழின் கடிதப் பிரிவில் பிரசுரமாகியது. இதை, இங்கிலாந்தைச் சேர்ந்த டாக்டர் ஸ்டீபன் ஃப்ரோஸ்ட், ஆஸ்திரேலிய மருத்துவ உளவியலாளரான டாக்டர் லிசா ஜோன்சன், அமெரிக்க பசுமைக் கட்சியின் முன்னாள் தலைவரான டாக்டர் ஜில் ஸ்டெய்ன் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த வில்லியம் ஃப்ரோஸ்ட் ஆகியோர் எழுதியுள்ளனர்.

 இலண்டனில் வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திற்கு வெளியே அசான்ஜ் பற்றிய பொதுச் சுவர் விளம்பரத்தை ஒரு பாதசாரி கடந்து செல்கிறார் (AP Photo / Kirsty Wigglesworth)

“அசான்ஜின் வழக்கு… பன்முகத்தன்மை கொண்டது,” என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். “இது, சட்டம், பேச்சுரிமை, ஊடக சுதந்திரம், ஊடகவியல், வெளியீடு, மற்றும் அரசியல் ஆகியவற்றுடன் தொடர்புடையது. என்றாலும், இது மேலும், மருத்துவம் மற்றும் பொது ஆரோக்கியத்துடனும் தெளிவாக தொடர்புபட்டுள்ளது. இந்த வழக்கு, தொழில் ரீதியான நெருக்கமான மருத்துவ கவனிப்புக்கும் மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கும் உத்தரவாதமளிக்கும் பல தொடர்புபட்ட அம்சங்களை எடுத்துக்காட்டுகிறது.”

ஏறக்குறைய மூன்று மாதங்களுக்கு முன்னர், நவம்பர் 22 அன்று, அசான்ஜை சட்டவிரோதமாகவும், தன்னிச்சையாகவும் தடுத்து வைத்திருப்பதை எதிர்த்து 65 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இங்கிலாந்து அரசாங்கத்திற்கு பகிரங்கக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர். அதனைத்தொடர்ந்து டிசம்பர் 16 அன்று ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு இள்னொரு கடிதமும் அனுப்பப்பட்டது. எந்த அரசாங்கமும் அதற்கு பதிலளிக்கவில்லை.

உலகெங்கிலுமுள்ள தங்களது மருத்துவ சகாக்களிடம்– அதாவது லான்செட் இதழின் 1.8 மில்லியன் சந்தாதாரர்களிடம் - கோரிக்கை விடுக்கும் இந்த கடிதத்தின் ஆசிரியர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, சுவீடன், ஈக்வடோர் மற்றும் ஆஸ்திரேலிய அரசாங்கங்கள் அசான்ஜிற்கு எதிராக எடுத்த பல மனித உரிமை மீறல் நடவடிக்கைகளைப் பற்றி விவரிக்கிறது. அநேகமாக ஒரு தசாப்த காலமாக அசான்ஜ் “சட்டவிரோதமான மற்றும் தன்னிச்சையான தடுப்புக்காவலில்” வைக்கப்பட்டிருப்பதும், மற்றும் “நீண்டகால உளவியல் சித்திரவதைக்கு” அவர் ஆளாக்கப்பட்டிருப்பதும் இதில் அடங்கும்.

இலண்டனில் அசான்ஜிற்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், இராணுவ சர்வாதிகாரங்களால் பொதுவாக பிரயோகிப்படும் முறைகளில் மிரட்டலையும் அரசு கண்காணிப்பையும் எதிர்கொண்டுள்ளனர் என்பதை அறிந்து லான்செட் இதழின் வாசகர்கள் அதிர்ச்சியடையக்கூடும். “தூதரகத்தில் மருத்துவ கவனிப்பிற்கு ஏற்பாடு செய்யப்படுவது குறித்து சுற்றிலும் பயம் நிலவுவதை,” இந்தக் கடிதம் நினைவுபடுத்துகின்ற நிலையில், சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் தங்களது அடையாள விபரங்களை பொலிஸூக்கு தெரிவிக்க நிர்ப்பந்திக்கப்படுவர்.

“அசான்ஜிற்கு கிடைக்கக்கூடிய மருத்துவ கவனிப்பு குறித்து மேலதிக சமரசத்திற்கு முயற்சிக்கையில், பாதுகாப்பின்மை மற்றும் அச்சுறுத்தல் மிக்க சூழல் ஏற்கனவே வடிவமைக்கப்பட்டது என்பது கவலைக்குரியது” என்று அவர்கள் “எச்சரிக்கையுடன்,” குறிப்பிடுகின்றனர். இரகசிய காணொளி மற்றும் ஒலிப் பதிவுகளின் வெளிப்பாடு காட்டியுள்ளபடி, தூதரகத்திற்குள் 24/7 என்றளவிற்கு முழுநேர இரகசிய கண்காணிப்பு நடவடிக்கைக்கு அசான்ஜ் ஆளாகியுள்ளார்.

“தனிப்பட்ட முறையிலும், மற்றும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் மருத்துவர்கள் உட்பட அவரது பார்வையாளர்களுடனும் சேர்த்து அவர் கண்காணிக்கப்பட்டு வந்தார். தனியுரிமை, தனிப்பட்ட வாழ்க்கை, சட்ட சலுகை, மற்றும் பேச்சு உரிமை போன்ற அவரது உரிமைகள் மட்டும் அங்கு மீறப்படவில்லை, மாறாக மருத்துவருக்கும் நோயாளிக்குமான இரகசியத்தன்மையை பேணுவதற்கான அவரது உரிமையும் அங்கு மீறப்பட்டது.”

கையொப்பமிட்டவர்கள், “அசான்ஜ் சித்திரவதை செய்யப்படுவதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். உரிய மருத்துவ கவனிப்பை பெறுவதற்கான அவரது அடிப்படை உரிமை மறுக்கப்படுவதையும் நாங்கள் கண்டிக்கிறோம். அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்க முடியாமல் சுற்றிலும் நிலவுகின்ற பயம் மிக்க சூழலை நாங்கள் கண்டிக்கிறோம். மேலும், மருத்துவருக்கும் நோயாளிக்குமான இரகசியத்தன்மையை பேணுவது குறித்த அவரது உரிமை மீறப்படுவதையும் நாங்கள் கண்டிக்கிறோம். அவரது ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உரிமையிலும் மற்றும் மருத்துவ நடைமுறையிலும் அரசியல் தலையீட்டிற்கு அனுமதிக்க முடியாது” என்று அழுத்தமாகக் கூறுகின்றனர்.

அசான்ஜிற்கான மருத்துவர்கள் (மருத்துவர்கள் என கூட்டாக அறியப்படுவதால்) ஒரு புதிய வலைத் தளத்தை தொடங்கியுள்ளனர், மேலும் லான்செட் இதழுக்கு அவர்கள் எழுதிய கடிதம், “எங்களது அழைப்புக்களுக்கு மேலும் வலுவூட்டும் வகையில் எங்களது கடிதத்தின் கையொப்பதாரர்களாக எங்களுடன் இணைந்து கொள்ள சக மருத்துவர்களை நாங்கள் அழைக்கிறோம். தன்னிச்சையான தடுப்புக் காவல், சித்திரவதை மற்றும் மனித உரிமைகள் குறித்த உலகின் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மருத்துவர்களின் எச்சரிக்கையுடன் தங்களது அழைப்புக்களையும் சேர்த்துக் கொண்டுள்ள நிலையில் கூட, மருத்துவ அதிகாரம், மருத்துவ நெறிமுறைகள் மற்றும் ஆரோக்கிய பாதுகாப்பிற்கான மனித உரிமை ஆகியவற்றை அரசாங்கங்கள் ஓரங்கட்டிவிட்டன” என்ற கருத்தையும் இணைக்கிறது.

“அடிப்படை மருத்துவக் கொள்கைகளின் இந்த அரசியல்மயமாக்கல் எங்களுக்கு மிகுந்த கவலையளிக்கிறது, ஏனெனில் இது அசான்ஜ் விடயத்திற்கு அப்பாற்பட்ட தாக்கங்களை கொண்டுள்ளது. அரசியல் நோக்கம் கொண்ட மருத்துவ புறக்கணிப்பு ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது, இதன் மூலம் மருத்துவத் தொழிலை ஒரு அரசியல் கருவியாகக் கையாள முடியும். இது இறுதியில் எங்கள் தொழிலின் பக்கச்சார்பற்ற தன்மையையும், அனைவருக்கும் ஆரோக்கியத்திற்கான அதன் அர்ப்பணிப்பையும், எந்தத் தீங்கும் செய்யாத கடமையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.”

மருத்துவர்கள் கடுமையாக எச்சரிக்கிறார்கள், “சித்திரவதை குறித்த ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் எச்சரித்தபடி, இங்கிலாந்து சிறையில் அசான்ஜ் இறந்துவிடுவாரானால், அவர் இறந்துபோகும் அளவிற்கு கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டிருப்பார் என்பதே அர்த்தம். அத்தகைய சித்திரவதைகளில் பெரும்பாலானவை சிறையின் மருத்துவப் பிரிவிற்குள் மருத்துவர்களின் கண்காணிப்பிலேயே நடந்திருக்கும். இத்தகையதொரு பரிதாபம் வெளிப்படும் நிலையில், சித்திரவதை குறித்த தவறான பக்கத்திலும், வரலாற்றின் தவறான பக்கத்திலும் நிலைத்து நிற்க மருத்துவத் தொழிலால் முடியாது.”

அசான்ஜின் மருத்துவர்கள் திங்கள்கிழமை தங்களது கடிதத்தின் நகல்களை இங்கிலாந்து உள்துறை செயலர் பிரீத்தி படேலுக்கும், ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சரான மரிஸ் பெய்ன் க்கும் அனுப்பினர். சுகாதாரப் பாதுகாப்பு, மற்றும் சித்திரவதையிலிருந்து விடுபடுவதற்கான திரு அசான்ஜின் மனித உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இந்த தாமதமான நேரத்தில், தீர்க்கமாக செயல்படுமாறு நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கிறோம்,” என்று மருத்துவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

லான்செட் இதழுக்கு அவர்கள் எழுதிய இந்தக் கடிதம், “எங்களது முறையீடுகள் சாதாரணமானவை: மேலும் தாமதமாவதற்கு முன்பாகவே, அசான்ஜ் சித்திரவதை செய்யப்படுவதை முடிவுக்குக் கொண்டுவரவும், கிடைக்கக்கூடிய சிறந்த மருத்துவத்தை அவர் அணுகுவதை உறுதி செய்யவும் அரசாங்கங்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். ஏனையோருக்கு நாங்கள் விடுக்கும் கோரிக்கை இதுவே: தயவுசெய்து எங்களுடன் இணையுங்கள்” என்று நிறைவடைகிறது.