பென்டகன் போர் பயிற்சியில் ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் அணுவாயுதத் தாக்குதலை தொடங்குகிறார்

ரஷ்யாவை குறிவைக்கும் “Defender 2020” என்ற பாரிய பயிற்சியை நடத்துவதற்காக 20,000 க்கும் மேற்பட்ட துருப்புக்களும் மற்றும் 20,000 இராணுவ வாகனங்களும் ஐரோப்பாவை சென்றடைய தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்க பாதுகாப்புச் செயலர் மார்க் எஸ்பர், ரஷ்ய துருப்புக்களுக்கு எதிராக அணுவாயுதங்களை பிரயோகிப்பது உட்பட, அமெரிக்க மூலோபாய கட்டளையகத்தின் தலைமையகமான நெப்ராஸ்கா மாநிலத்தைச் சேர்ந்த ஒமாஹா நகரில் நடந்த ஒரு போர் பயிற்சியில் பங்கேற்றார்.

“இந்த சூழ்நிலை காட்சியானது, ரஷ்யாவிற்கு எதிராக நீங்கள் போர் செய்யும் ஒரு நிலையில், நேட்டோ பிராந்தியத்திலுள்ள ஒரு தளத்திற்கு எதிராக குறைந்த விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் மட்டுப்படுத்தப்பட்ட அணுவாயுதங்களை பயன்படுத்த ரஷ்யா முடிவு செய்யும் ஒரு முன் எதிர்பாராத நிகழ்விற்கு எவ்வாறு பிரதிபலிப்பது என்பதை உள்ளடக்கியது,” என்று பாதுகாப்புத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அதன் சுருக்க அறிவிப்பில் தெரிவித்தது.

செய்தியாளர்கள் அழுத்தம் கொடுத்த நிலையில், “மட்டுப்படுத்தப்பட்ட” எதிர் தாக்குதல் என்று பென்டகன் குறிப்பிட்ட விதத்தில் தான், இந்த பயிற்சியின் போது ரஷ்ய துருப்புக்களுக்கு எதிராக அமெரிக்கா அணுவாயுதத்தை ஏவியது என்று கூறி அது வெறும் பயிற்சி தான் என்று பென்டகன் தெளிவுபடுத்தியது.

“அதாவது, பயிற்சியின் போது, அணுவாயுத தாக்குதல் மூலம் பதிலடி கொடுப்பது போல நாங்கள் உருவகப்படுத்தினோம்,” என்று பென்டகன் அறிக்கையாளர் தெரிவித்தார்.

பின்னணி அறிக்கை வெளியீட்டின்போது, செய்தியாளர்களில் எவரும், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் அணுவாயுதங்களைப் பயன்படுத்துவது ஒரு முழு அளவிலான அணுவாயுத பரிமாற்றத்திற்கு இட்டுச் செல்லுமா என்பது போன்ற வெளிப்படையான கேள்வியைக் கேட்கவில்லை. ஆனால் ஊடகவியலாளரான ஃபிரெட் காப்லானின் (Fred Kaplan) சமீபத்திய கருத்தின் படி, ஒரு “‘மட்டுப்படுத்தப்பட்ட’ தாக்குதல் என்பது மட்டுப்பட்டிருக்கும் என நம்பும் ஒரு போர் பயிற்சியை எந்தவொரு நாடும் ஒருபோதும் உத்தியோகபூர்வமாக நடத்தியதில்லை. விடயங்கள் மிக விரைவாக கட்டுப்பாட்டை மீறியுள்ளன.” என்றார்.

ரஷ்ய அதிகாரிகள் இந்த பயிற்சியை ஒரு அச்சுறுத்தலாகவே கருதினர். ரஷ்ய சட்டமன்றத்தின் மேல் சபையின் வெளியுறவுக் குழுவின் தலைவரான கோன்ஸ்டான்டின் கோசச்சேவ் (Konstantin Kosachev), இந்த போர் பயிற்சியை மத்தியதூர அணுவாயுத சக்தி (Intermediate Range Nuclear Forces-INF) ஒப்பந்தத்திலிருந்து சமீபத்தில் அமெரிக்கா விலகியதுடன் தொடர்புபடுத்தினார்.

“எதிரியின் தாக்குதலுக்கு அணுவாயுத பதிலடிக்கான பயிற்சிகளை நீங்கள் நடத்தி, அதன்மூலம் அத்தகைய தாக்குதல் நிகழக்கூடும் என்று மக்கள் ஏற்றுக்கொள்ளும் படி செய்கிறீர்கள், எனவே நீங்கள் பேச்சுவார்த்தை நடத்தவோ அல்லது ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திடவோ முன்வராமல், அதற்கு மாறாக நீங்களே ஆயுதபாணிகளாகிவிடுகிறீர்கள்,” என்று RIA Novosti என்ற ரஷ்ய உள்நாட்டு செய்தி முகமைக்கு கோசச்சேவ் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு, INF ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. இந்த ஒப்பந்தமானது 500 முதல் 5,500 கிலோமீட்டர் தூரத்திற்கு இடைப்பட்ட தொலைதூர அணுவாயுத ஏவுகணைகள் உட்பட, தரையிலிருந்து பயன்படுத்தும் ஏவுகணைகளின் பயன்பாட்டை தடை செய்தது.

அமெரிக்கா தனது அணுவாயுத படைக்கலத்தை மிகப்பெரியளவில் விரிவுபடுத்தியும் நவீனப்படுத்தியும் வருகிறது. டிசம்பரில், ஒப்பந்தத்தை மீறும் வகையில் தொலைதூர ஏவுகணை சோதனையை வாஷிங்டன் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த நகர்வுகள், “ரஷ்யா மற்றும் சீனா போன்ற போட்டியாளர்களுக்கு எதிரான அதிதீவிர மோதல்கள்” என்று குறிப்பிட்டு இந்த மாதம் நடைபெற்ற முனீச் பாதுகாப்பு மாநாட்டில் பாதுகாப்புச் செயலர் மார்க் எஸ்பர் பேசியது தொடர்பான அமெரிக்க தயாரிப்புக்களின் பகுதியாக உள்ளன.

வெள்ளிக்கிழமை சுருக்க அறிவிப்பில், அமெரிக்க அணுவாயுத படைக்கலத்தை விரிவுபடுத்துவதற்கான அமெரிக்க அரசாங்கத்தின் அசரவைக்கும் 1 டிரில்லியன் டாலர் திட்டம் பற்றி விளக்கமாக பேசுவதற்கு அமெரிக்க அதிகாரிகள் முற்பட்டு, “நீங்கள் காணும் பெரும்பாலான அணுவாயுத நவீனமயமாக்கம் என்பது ஒபாமா அரசாங்கத்தின் முந்தைய நிர்வாகத்தின் கீழ் முன்னரே நீங்கள் தொடங்கிவிட்டீர்கள். இப்போது நாங்கள் அதை வெறுமனே தொடர்கிறோம்” என்று தெளிவுபடுத்தினர்.

கடந்த மூன்று மாதங்களாக, அமெரிக்க கடற்படை, மும்முனை நீர்மூழ்கிக்கப்பலில் பொருத்தப்பட்ட தொலைதூர ஏவுகணைகளில் பல புதிய “குறைந்த விளைவுகளை ஏற்படுத்தும்” ஏவுகணைகளை பயன்படுத்தின. இந்த நடவடிக்கை ஆயுதக் கட்டுப்பாட்டு நிபுணர்களால் பரவலாகக் கண்டிக்கப்பட்டது. இந்த பயிற்சிகள், சாதாரண அணுவாயுத ஏவுகணைகளின் வெடிக்கும் சக்தியின் ஒரு சிறு பகுதியை மட்டுமே கொண்டிருந்தாலும், இந்த ஆயுதங்கள் “மூலோபாய” அணுவாயுதங்களிலிருந்து பிரித்தறிய முடியாதவை என்பதுடன், இவற்றின் பயன்பாடு மனதில் தோன்றும் பெரும்பாலான காட்சிகளின் படி முழு அளவிலான அணுவெப்ப பரிமாற்றத்தைத் தூண்டும் என்பதுடன், மனித நாகரிகத்தின் ஒட்டுமொத்த அழிவிற்கு இட்டுச் செல்லும்.

காப்லான் சமீபத்தில் எச்சரித்த படி, “பல ஆண்டுகளாக, பொதுவான மற்றும் அணுவாயுத போருக்கு இடையிலான இடைவெளியை குறைப்பதால் குறைந்த விளைவுகளை ஏற்படுத்தும் அணுவாயுத பயன்பாடு கூட பதட்டத்தை ஏற்படுத்துகின்றன என்று ஆயுதக் கட்டுப்பாட்டு ஆலோசகர்கள் விவாதித்துள்ளனர். அவை பெரிதும் போருக்கு பயன்படும் ஆயுதங்களாகவே வடிவமைக்கப்பட்டிருப்பவை என்பதால் ஒரு ஜனாதிபதி, நெருக்கடி நேரத்தில், அவற்றை பயன்படுத்த பெரிதும் விருப்பம் கொள்ளக்கூடும்.”

பென்டகன் அணுவாயுத பயிற்சியை தொடங்கிய அதே நாளான வெள்ளியன்று, அமெரிக்க பீரங்கி வண்டிகள், துருப்புக்கள் மற்றும் உபகரணங்களை உள்ளடக்கிய முதல் இராணுவப் பிரிவு ஜேர்மன் துறைமுகமான பிரேமர்ஹாவனுக்கு (Bremerhaven) “Defender 2020” பயிற்சிக்காக சென்றடைந்தன. 25 ஆண்டுகளில் ஐரோப்பாவில் பயன்படுத்தப்படும் பெரியளவிலான அமெரிக்க இராணுவ பிரசன்னமாக, அட்லாண்டிக் கடல் பகுதி எங்கிலுமாக 20,000 சிப்பாய்களை அனுப்பியது உட்பட, 37,000 துருப்புக்கள் இந்த பயிற்சியில் ஈடுபடுத்தப்படும்.

“ரஷ்யாவுடன் தான் ஏற்படுத்திக் கொண்டுள்ள பாதுகாப்பு ஒழுங்கை ஐரோப்பா நம்புவது இனி செல்லுபடியாகாது” என்று முன்னணி ஜேர்மன் சிந்தனைக் குழாமைச் சேர்ந்த பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கொள்கை குறித்த நிபுணரான கிளவுடியா மேஜர் (Claudia Major), Deutsche Welle இற்கு தெரிவித்தார். “ரஷ்யா ஒரு மூலோபாய பங்காளியாக இனிமேல் நீடிக்காது. ‘ஐரோப்பாவில் நம்மை நாமே எப்படி தற்காத்துக் கொள்வது?’ என்ற கேள்வியை ஐரோப்பியர்கள் மீண்டும் கையிலெடுக்க வேண்டும்”. என்றார்.

ட்ரம்ப் எதிர்ப்பு குடியரசுக் கட்சியினரின் கன்னையுடன் சேர்ந்து ஜனநாயகக் கட்சியினரின் ரஷ்யாவிற்கு எதிரான ட்ரம்ப் நிர்வாகத்தின் அச்சுறுத்தல்கள், மாஸ்கோவிற்கு எதிராக தேவைக்கு குறைவான மோதல் போக்கையே ட்ரம்ப் நிர்வாகம் கொண்டுள்ளது என்ற குற்றச்சாட்டுக்களை மையப்படுத்தும் அவர்களது ரஷ்ய விரோத பிரச்சாரத்தை தீவிரப்படுத்துகிறது.

“ரஷ்யர்கள் ஏன் இன்னும் ட்ரம்பை விரும்பி தேர்வு செய்கின்றனர்,” என்ற தலைப்பிடப்பட்ட கட்டுரையில், ட்ரம்ப் ரஷ்யாவுடன் “மென்மையாக” நடந்து கொண்டுள்ளார் என்ற தனது கூற்றை வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளரான மேக்ஸ் பூட் பாதுகாத்தார். மேலும், “குடியரசுக் கட்சியினர் கூறுவது போல, ரஷ்யாவிற்கு எதிராக அவை பயன்படுத்தப்படாதவை என்ற சூழ்நிலையின் கீழ் தான் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை உக்ரேனுக்கு ட்ரம்ப் அனுப்பினார் என்பது தான் உண்மை” என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் அவர், “போஸ்ட் செய்தியிதழ் குறிப்பிட்டது போல, ‘ரஷ்யாவால் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு நடவடிக்கையாக,’ ஜூலை 2017 இல், பயிற்சி குறித்த, மற்றும் மிதமான சிரிய கிளர்ச்சியாளர்களை வழங்குவதற்கான இரகசிய திட்டத்தை ட்ரம்ப் முடிவுக்குக் கொண்டு வந்தார்” என்று கூறினார். பூட் மேலும், “சிரியாவில் மட்டுமல்லாமல், லிபியாவிலும் கூட ரஷ்ய திட்டங்களுக்கு ட்ரம்ப் வசதி செய்து கொடுத்துள்ளார்” என்றும் தெரிவித்தார்.

ஜனநாயகக் கட்சியினரின் பதவிவிலக்குல் குற்றச்சாட்டு உந்துதல் இந்த போர் சார்பு அடிப்படையில் தான் வடிவமைக்கப்பட்டிருந்தது, காங்கிரஸ்காரர் ஆடம் ஷிஃப் உடன், ஜனாதிபதி ட்ரம்பின் குற்றச்சாட்டு விசாரணையின் இரண்டாவது நாளன்று செனட் சபையிலிருந்து பேசுகையில், உக்ரேனுக்கும் அதன் மக்களுக்கும் அமெரிக்கா உதவுகிறது, அப்போது தான் ரஷ்யாவுடன் அங்கு போராட முடியும், இங்கு ரஷ்யாவுடன் நாங்கள் போராட வேண்டியதில்லை” என்று அறிவித்தார்.

சென்ற மாதம், ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக Doomsday கடிகாரத்தை பராமரித்து வரும் Bulletin of Atomic Scientists அறிக்கை, பனிப்போரின் உச்சத்தில் கியூப ஏவுகணை நெருக்கடி (Cuban Missile Crisis) ஏற்பட்டது உட்பட, வரலாற்றின் வேறெந்த காலத்தைக் காட்டிலும், மனித நாகரிகம் நள்ளிரவுக்கு நெருக்கமாக, அதாவது ஒட்டுமொத்த அழிவிற்கு நெருக்கமாகச் சென்று கொண்டிருப்பதாக எச்சரித்தது.

“நாகரிகத்தின் முடிவை குறிக்கும் ஒரு அணுவாயுதப் போர் திட்டமிட்டோ அல்லது தவறு அல்லது சாதாரண தகவல் தொடர்பின்மை என எதன் மூலமாகவோ தொடங்கப்பட்ட கூடியதாக இருப்பது ஒரு உண்மையான சாத்தியமாகும்,” என்று குழு தனது ஆண்டு அறிக்கையில் தெரிவித்தது. அதாவது, “அணுவாயுத போருக்கான அச்சுறுத்தல் முறியடிக்கப்பட்டுவிட்டது என்ற எந்த நம்பிக்கையும் ஒரு கானல் நீரே.”

Loading