கொரொனா வைரஸ் தொற்றுநோயும், உலகளவில் சமூகமயப்படுத்தப்பட்ட மருத்துவத்தின் அவசியமும்

மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சீனாவின் வூஹானில் கடந்த டிசம்பரில் தொடங்கிய கொரொனாவைரஸ் தொற்றுநோய் ஓர் உலகளாவிய தொற்றுநோயாக தீவிரமடைந்துள்ளதுடன், இந்த பேரழிவைத் தடுப்பதற்கு ஓர் ஒருங்கிணைந்த சர்வதேச விடையிறுப்பு அவசியமாகிறது. இந்த நோயால் மில்லியன் கணக்கானவர்களின் உயிரிழப்பதைத் தடுப்பதற்கு, மருத்துவ மற்றும் தொழில்துறை ஆதாரவளங்களை உலகளவில் திட்டமிட்ட மற்றும் பகுத்தறிவார்ந்த முறையில் பயன்படுத்துவது இன்றியமையாததாகும்.

குணமாக்க இயலாத, தீவிரத் தொற்றும் தன்மை கொண்ட சுவாசப்பை நோயை உருவாக்கி உயிரைப் பறிக்கும் சாத்தியக்கூறு உள்ள இந்த தொற்றுநோய் அபாயம் குறித்து பல பத்தாண்டுகளுக்கு முன்னரே கண்டறியப்பட்டுள்ளது. பிரதானமாக 2002-2004 இல் சீனாவில் SARS என்றும், மற்றும் 2012-2014 இல் பிரதானமாக சவூதி அரேபியாவில் MERS என்றும் இரண்டு வெவ்வேறு கொரொனா வைரஸ்கள் பிராந்திய அளவில் வெளிப்பட்டன. ஆனால் 8,000 நபர்களுக்கு SARS நோய்தொற்று ஏற்பட்டு அதில் 774 நபர்கள் உயிரிழந்த நிலையில், இரண்டாண்டுகளில் 2519 நபர்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டு MERS ஆல் 886 நபர்கள் உயிரிழந்திருந்த நிலையில், எளிதில் தொற்றக்கடிய இந்த வூஹான் கொரொனாவைரஸ் (SARS-CoV-2) வெறும் இரண்டே மாதங்களில் 81,296 பேர்களுக்கு பரவி 2,770 நபர்கள் உயிரிழந்துள்ள நிலையில், உலகெங்கிலும் பரவி வருகிறது.

பெரும் எண்ணிக்கையிலான நோய் பரவல்கள் கிழக்கு ஆசியாவில் மட்டுமல்ல, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கிலும் அதிகரித்து வருகின்றன. இத்தாலியில் 383 பேர்களும் ஈரானில் குறைந்தபட்சம் 139 பேர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனா அதன் பொருளாதாரத்தின் பெரும்பகுதியை முடக்கியும், நூறு மில்லியன் கணக்கானவர்களை அடைத்து வைத்தும் கடுமையான நடவடிக்கைகள் மூலமாக, நோயாளிகளின் எண்ணிக்கையை 78,073 ஆக மட்டுப்படுத்தி, அந்நோய் பரவுவதைக் கணிசமானளவில் குறைக்க முடிந்துள்ளது. ஆனால், ஓர் உலகளாவிய தொற்றுநோயின் ஆரம்ப கட்டங்களில் மட்டுமே நாம் நிற்கின்றோம் என்பது வெளிப்படையாக உள்ளது.

ஆரம்பத்தில் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் அதிகாரிகள் இந்த புதிய வைரஸைக் குறைமதிப்பிட முயன்றனர். நேற்றும் கூட, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தங்களின் பங்கு துறைகளைத் தவிர வேறெதையும் திரும்பி பார்க்காத நிதியியல் பிரபுத்துவத்தின் பரந்த பிரிவுகளின் சார்பாக பேசுகையில் சாத்தியமானால் சந்தைகளை மேலும் பீதியூட்டுவதற்கு கொரொனாவைரஸை [மூலப்பிரதியில் உள்ளவாறு] எந்தளவுக்கு சாத்தியமோ அந்தளவுக்கு மோசமாக ஆக்க," முயற்சிப்பதற்காக ஊடகங்களை கண்டித்தார். “அதேபோல தங்களின் இயாலமையுடன் ஜனநாயகக் கட்சி தோழர்கள் பேசுவதைத் தவிர, மொத்தத்தில் வேறெந்த நடவடிக்கையும் செய்யாமல் உள்ளனர். அமெரிக்கா தலைச்சிறந்த நிலையில் உள்ளது!” என்றும் அர்த்தமின்றி கண்டிப்பதற்கு ட்வீட்டரைக் கையிலெடுத்தார்.

புதன்கிழமை இரவு, ட்ரம்ப் ஒரு மழுப்பலான செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டி, அதில் அவர் அந்நோயின் கடுமையைக் குறித்து வேறுவிதமாக குறைத்துக் காட்டியதுடன், அதற்கான விடையிறுப்பிற்கு தன்னையும் அவரது அரசாங்கத்தையும் வெட்கமின்றி பாராட்டி கொண்டதுடன், அரசியல் எதிர்ப்பாளர்களையும் அவர் கண்டித்தார்.

இதுபோன்ற அலட்சியமான மற்றும் பொறுப்பற்ற கருத்துக்கள் ஒருபுறம் இருக்க, இந்த கொரொனாவைரஸ் மிகவும் அபாயகரமான மற்றும் உயிர்கொல்லும் ஓர் நோயாக உள்ளது. கண்டறியப்பட்ட 33,129 நோயாளிகளில் இப்போது சிகிச்சையில் இல்லாத முழுமையாக எட்டு சதவீதத்தினர் (2,770) உயிரிழந்துவிட்டனர். கண்டறியப்பட்ட 48,167 நோயாளிகள் இன்னமும் நோயுடன் போராடிக் கொண்டிருக்கின்றனர், 8,867 பேர் (18 சதவீதம்) மோசமான நிலைமையில் அல்லது அவசர சிகிச்சைக்கான நிலைமையில் உள்ளனர் — இவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருடன் இருக்கிறார்கள் என்றாலும், ஒவ்வொரு நோயாளிக்கும் பல்துறை சிறப்பு மருத்துவப் பணியாளர்களின் கவனிப்பு அவசியப்படும் அளவுக்குச் செயற்கை சுவாசம் மற்றும் செயற்கை காற்றோட்டத்தைப் பெறும் நிலையில் உள்ளனர்.

அனைத்திற்கும் மேலாக, உலக சுகாதார அமைப்பு (WHO) ஆலோசகரும் ஃப்ளோரிடா பல்கலைக்கழக பேராசிரியருமான Ira Longini புளூம்பேர்க் செய்திகளுக்குக் கூறுகையில், இந்த தொற்றுக்கிருமியை தடுக்க அதிதீவிர நடவடிக்கைகள் இல்லாவிட்டால், “உலகில் மூன்றில் ஒருவர்" இந்நோயால் பாதிக்கப்படலாம் என்பதையே தொற்றுநோய் துறை முன்மாதிரிகள் எடுத்துக்காட்டுகின்றன என்றார். இதனால் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளிலும் கூட உலகெங்கிலுமான மருத்துவமனைகளில், படுமோசமாக தொற்றுதலுக்குட்பட்ட, மிகவும் முதிர்ந்த நோயுடன் மில்லியன் கணக்கான நோயாளிகளுடன் நிரம்பி வழியக்கூடும்.

உயர் தொழில்நுட்பங்கள் இல்லாத, அல்லது தசாப்தங்களாக ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகள், உள்நாட்டு போர்களால் சீரழிக்கப்பட்டுள்ள, அல்லது —ஈரான் விடயத்தைப் போல— பழி வாங்கும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தடையாணைகளால் சீரழிக்கப்பட்டுள்ள, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கும் இந்நோய் பரவி வருகையில், இந்த அபாயம் அனைத்தையும் விட மிகப் பெரியளவில் உள்ளது.

மனிதகுலமே நாசமாவதில் இருந்து இந்த தொற்றுநோயைத் தடுப்பதற்குச் சர்வதேச அளவில் ஓர் ஒருங்கிணைந்த விடையிறுப்பு இன்றியமையாததாகும். நோயாளிகளைத் தனிமைப்படுத்தக் கூடியதாகவும், நோய் பரவும் வேகத்தைத் தடுக்கக்கூடியதாகவும், சுவாசப்பை தொற்று மூலமாக இந்த நோய் தொற்றை உண்டாக்கும் நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை வழங்குவதற்கு அவசியமான ஆதாரவளங்களை அர்ப்பணிக்கக்கூடிய உலகளாவிய சுகாதார அமைப்புமுறை மிகவும் முக்கியமாகும். அவசிய சிகிச்சைகள் மற்றும் மருத்துவச் சாதனங்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை, நிதியியல் சந்தைகளின் கட்டளைக்கும், இலாபகர முனைவுக்கும் அல்லது ஏகாதிபத்திய போர் கொள்கைகளுக்கும் அடிபணிய வைத்திருக்கக் கூடாது.

நவீன விஞ்ஞானம் இந்த நோய்க்கு எதிராக மிகப்பெரும் சக்தி வாய்ந்த கருவிகளுடன் மருந்துகளை வழங்குகிறது. இது 1918 சளிக்காய்ச்சல் கொள்ளைநோய் போல (flu epidemic) முந்தைய உலகளாவிய தொற்றுநோய்களுக்கு முரண்பட்ட விதத்தில் அந்தளவுக்கு அதிக தீவிரமுள்ளதாக இருக்காது. இந்த தொற்றுநோய் ஏற்பட்டு வெறும் இரண்டே மாதங்களில், அந்த தொற்றுக்கிருமியின் உள்ளார்ந்த மரபணு RNA குறியீடு, அதன் புறக்கூட்டு வடிவம், அது மனித உடலில் எந்த கலங்களையும் மற்றும் உள்வாங்கிகளை இலக்கில் வைக்கிறது என்பதைக் குறித்தெல்லாம் பரந்த அறிவு கிடைத்துள்ளது. அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பா உட்பட சர்வதேச அளவில் பல்வேறு குழுக்கள் ஏறக்குறைய அடுத்த ஆண்டுக்கு முன்னரே தடுப்பூசிகளை மருத்துவரீதியில் பரிசோதித்து விடும் நம்பிக்கையில், அவற்றை உருவாக்க போட்டியிட்டு வருகின்றன.

மலேரியாவுக்கு அல்லது ஃபாபிலவிர் (fapilavir) நோய்க்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும், chloroquine போன்ற முன்பே இருக்கும் மருந்துகள் இந்த கொள்ளைநோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தலாம் என்பதையும், கொரொனாவைரஸை தடுக்கும் மற்றும் குணமாவதைத் தீவிரப்படுத்தும் என்பதையும் சீனாவில் மருத்துவமனை பரிசோதனைகள் எடுத்துக்காட்டுகின்றன.

ஆனால் அதேநேரத்தில், இந்த நோய்தொற்று முதலாளித்துவத்தின் நாசகரமான பகுத்தறிவின்மையை அம்பலப்படுத்தி வருகிறது: அது தசாப்தங்களாக சர்வதேச தொழிலாள வர்க்கம் உருவாக்கி உள்ள ஆதாரவளங்கள் மற்றும் செல்வ வளத்தை வீணடித்து, கொரொனாவைரஸ் க்கு மனிதகுலம் தயாரிப்பின்றி இருக்க விட்டு வைத்துள்ளது.

அதிகளவில் தொற்றக்கூடிய, குணப்படுத்த முடியாத மற்றும் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நிமோனியாவை உண்டாக்கும் கொரொனாவைரஸின் அபாயம் அண்மித்து 20 ஆண்டுகளுக்கு முன்னரே அறியப்பட்டுள்ளது. SARS மற்றும் MERS தொற்றுநோய்களுக்குப் பின்னர், EcoHealth Alliance இன் 2017 ஆராய்ச்சி, மனிதர்களைத் தொற்றக்கூடிய சாத்தியமுள்ள கொரொனாவைரஸின் நூற்றுக் கணக்கான இனப்பெருக்க விதைகளை ஆசிய வௌவால்கள் ஏற்படுத்தி இருப்பதைக் கண்டறிந்தது. இருப்பினும், தடுப்பூசிகள், முக்கிய மருந்துகள் மற்றும் முன்னெச்சரிக்கை முறைகள் மிகப்பெரும் தனியார் முதலீட்டாளர்களின் இலாப நோக்கங்களுக்கு அடிபணிய செய்யப்பட்டிருந்த நிலையில், ஒரு மிகப்பெரும் நோய்தொற்று அபாயத்திற்கு எந்த தயாரிப்பும் செய்யப்படவில்லை.

மருத்துவ மற்றும் தொழில்துறை உள்கட்டமைப்பில் முதலீடு செய்ய பாரியளவில் ஆதாரவளங்கள் அவசியப்பட்ட வேளையில், அதற்கு பதிலாக அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மிகப் பெரும் பணக்காரர்களுக்கு 2008-2009 வங்கி பிணையெடுப்புகளுக்கும், அத்துடன் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்புகள் போன்ற அமெரிக்க-நேட்டோ போர்களுக்காகவும் ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் வீணடிக்கப்பட்டன. அமெரிக்கா எங்கிலுமான நகரங்களில் மருத்துவமனைகள் மூடப்பட்ட வேளையில், ஐரோப்பிய ஒன்றியமோ சிக்கன நடவடிக்கைகளைத் திணித்தது, இது மருத்துவத்துறை ஊதியங்களையும், பணியாளர் மட்டங்களையும் அடிமட்டத்திற்குக் குறைத்தது.

அதுபோன்ற கொள்கைகள் ஓர் உலகளாவிய தொற்றுநோய்க்கு தயாராக இருப்பதற்காக கையிலிருக்கும் தொழில்நுட்பத்தைப் பகுத்தறிவார்ந்தரீதியில் பயன்படுத்துவதை மட்டும் தடுக்கவில்லை, மாறாக இப்போது அத்தகைய தொற்றுநோயைக் குணமாக்க அவசியமானரீதியில் அவசியப்படும் நடவடிக்கைகளையும் வெட்டி உள்ளன.

மத்திய கிழக்கில் கொரொனாவைரஸ் நோய்தொற்றின் குவிமையமாக உள்ள ஈரான், அனேகமாக இதற்கு மிகத் துல்லியமான எடுத்துக்காட்டை வழங்குகிறது. முதலில் 2012 இலும், பின்னர் மீண்டும் 2018 இல் ஈரானிய அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேறிய பின்னரும் திணிக்கப்பட்ட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தடையாணைகள் முக்கிய மருந்துகள் ஈரானுக்கு கிடைப்பதை குறைத்துள்ளன என்ற நிலைமைகளின் கீழ், நூற்றுக் கணக்கான ஈரானியர்கள் நோயில் விழுந்துள்ளதுடன், அந்நோய் வேகமாக பரவி வருகிறது.

கடந்தாண்டு, ஓர் ஈரானிய மருத்துவர் அமெரிக்காவின் ABC செய்திகளுக்குக் கூறுகையில், “ஒவ்வொரு 20 நபர்களில், குறைந்தபட்சம் பத்து நபர்களிடமாவது அவர்களுக்கு அவசியப்படும் மருந்துகள் தீர்ந்துவிட்டதாக நாங்கள் கூற வேண்டியுள்ளது,” என்றார். பெரும்பாலும் கொரொனாவைரஸ் நோயாளிகளை இன்னும் மோசமாக்குவதற்கோ மரணத்திற்கோ இட்டுச் செல்லும் ஆஸ்துமா, நீரிழிவு நோய் மற்றும் புற்றுநோய் போன்ற பல நோய்கள் உள்ளடங்கலாக, இக்கட்டான நிலைமைகளுக்கான பல மருந்துங்களும் அங்கே பற்றாக்குறையில் உள்ளன. இது பகுதியளவே ஆகும் ஏனெனில் அமெரிக்க நிதித்துறை பழிவாங்கும் விதத்தில் ஈரானுக்கு மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்து வரும் சர்வதேச நிறுவனங்கள் மீது வழக்கு தொடுத்திருந்தது.

கடந்தாண்டு, அட்லாண்டிக் கவுன்சில் சிந்தனைக் குழாம் குறிப்பிடுகையில், ஈரானில் "2012-2013 இல், மருந்து பொருட்களின் விலை 50-75 சதவீதம் அதிகரித்தது. பொருளாதார கீழ்நோக்கிய சரிவு மற்றும் வேலைவாய்ப்பின்மையின் அதிகரிப்புடன் சேர்ந்து, ஈரானிய நோயாளிகளால் மிகக் குறைவாகவே மருந்துகளை வாங்க முடிகிறது. 2013 இல் ஈரானில் நடத்தப்பட்ட கள ஆய்வின்படி, ஆஸ்துமா, புற்றுநோய் மற்றும் பல்வேறு செலரோசிஸ் (sclerosis) நோயாளிகளும் மருந்து பொருட்களின் பற்றாக்குறையாலோ அல்லது விண்ணை முட்டும் விலைகளாலோ போராடி வந்தனர். பல புற்றுநோய் நோயாளிகளும் மருந்துகளின் விலை உயர்வு காரணமாக சிகிச்சை பெறுவதை நிறுத்தி விட்டிருந்ததாக அந்த ஆய்வு மேற்கொண்டு கண்டறிந்தது,” என்று குறிப்பிட்டது.

இன்று ஈரான், கொரொனா வைரஸ் தொற்றுநோயின் பிடியில் மூழ்கி வருகிறது, அந்நோய் பாரசீக வளைகுடா நாடுகளுக்கு மட்டுமல்ல, மாறாக ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுக்கும் பரவி வருகிறது. அந்நாடுகளது மருத்துவக் கட்டமைப்பு தசாப்தங்களாக அமெரிக்க-நேட்டோ தடையாணைகளாலும், குண்டுவீச்சுக்கள் மற்றும் இராணுவ ஆக்கிரமிப்புகளாலும் சீரழிக்கப்பட்டுள்ளன.

மில்லியன் கணக்கானவர்களின் வாழ்க்கை அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கையில், கொரொனாவைரஸ் க்கு எதிரான தீவிர போராட்டத்தை ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் நிதியியல் பிரபுத்துவத்தின் கைகளில் விட்டுவிட முடியாது. ஈரானுக்கு எதிரான தடையாணைகள் நீக்கப்பட வேண்டும், இந்த தொற்றுநோய் அச்சுறுத்தலை எதிர்த்து போராட உலகளவில் நூறு பில்லியன் கணக்கான டாலர்கள் செலவிடப்பட வேண்டும், மனிதகுலத்தின் விஞ்ஞான மற்றும் தொழில்துறை ஆதாரவளங்கள் முழுமையாக உழைக்கும் மக்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்.

Loading