கொரொனா வைரஸ் தொற்றுநோய்க்கு ஓர் ஒருங்கிணைந்த உலகளாவிய அவசரகால நடவடிக்கைக்காக!

மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, பரவி வரும் கொரொனா வைரஸ் தொற்றுநோய்க்கு உலகளாவிய ஓர் ஒருங்கிணைந்த அவசரகால நடவடிக்கைக்காக அழைப்பு விடுக்கிறது. இந்நோய் பரவுவதைத் தடுக்க அரசாங்கங்கள் அவசியமான ஆதாரவளங்களை கிடைக்க செய்து, பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சையும் கவனிப்பும் வழங்க வேண்டும் மற்றும் பொருளாதார பின்விளைவுகளால் பாதிக்கப்படக் கூடிய நூறு மில்லியன் கணக்கானவர்களின் தொழில் வாழ்க்கை பாதுகாக்கப்பட வேண்டுமென தொழிலாள வர்க்கம் கோர வேண்டும்.

இது மிகவும் அபாயமானதாகும். அறிவிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை உலகளவில் 100,000 ஐ அணுகி வருகிறது, அண்மித்து 3,000 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் சீனாவில் உள்ளனர் என்றாலும், இந்த வைரஸ் உலகெங்கிலும் பரவி வருகிறது. இத்தாலியில் நூற்றுக் கணக்கான நோயாளிகள் (14 அறிவிக்கப்பட்ட உயிரிழப்புகள்); ஈரான் (26 மரணங்கள்); மற்றும் தென் கொரியா (13 மரணங்கள்) உட்பட 47 நாடுகளில் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நோயின் மையங்களுக்கு பயணித்திராதவர்களுக்கும் அது பரவத் தொடங்கி இருப்பதை சுட்டிக்காட்டும் விதத்தில், வியாழக்கிழமை, ஜேர்மனியும் அமெரிக்காவும் இரண்டுமே நோய் எவ்வாறு தொற்றியது என்பதற்கான வெளிப்படையான ஆதாரம் இல்லாத ஐந்து நோயாளிகள் குறித்து அறிவித்தன. இதற்கிடையே ஈரானில் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள், அறிவிக்கப்பட்டிருக்கும் எண்ணிக்கையை விட மிகவும் அதிகமாக உள்ளனர். அந்நாட்டின் துணை சுகாதார அமைச்சரே நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குனர் ஜெனரல் Tedros Adhanom Ghebreyesus வியாழக்கிழமை கூறுகையில், அந்நோய் தம்மை தாக்காது என்று நம்புவது எந்தவொரு நாட்டுக்கும் "உயிராபத்தான தவறாக" இருக்கும் என்றார். அந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகள் இல்லையென்றால், அது இறுதியில் உலகின் மூன்றில் இரண்டு பங்கினரைத் தாக்கக்கூடும், அதாவது நூறு மில்லியன் கணக்கானவர்களின் மரணங்களை இது குறிக்கும் என்று WHO ஆலோசகர் Ira Longini தெரிவித்தார்.

இந்த வைரஸினால் ஏற்படும் பொருளாதார சேதம் 2008 நிதியியல் நெருக்கடியின் அளவையே விஞ்சிவிடக்கூடும். 2008 நெருக்கடியால் தூண்டிவிடப்பட்ட மந்தநிலை உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5 சதவீதம் வீழ்ச்சி அடைவதற்கு இட்டுச் சென்றதுடன், பத்து மில்லியன் கணக்கானவர்களின் வேலைகளை அழித்தது.

இந்த நெருக்கடியைக் கட்டுப்படுத்துவதற்கு ஆளும் உயரடுக்குகள் மற்றும் அரசாங்கங்களின் விடையிறுப்பானது, அலட்சியத்தின் குற்றகரமான மட்டம் மற்றும் திராணியின்மையுடன் சேர்ந்து உள்ளது. இது அமெரிக்காவில் மிகவும் வெளிப்படையாக தெரிகின்றது.

அனைத்திற்கும் மேலாக பெருநிறுவன மற்றும் நிதியியல் உயரடுக்கின் எதிர்கால நிலை மீது கொரொனா வைரஸ் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து மட்டுமே கவலை கொண்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப் இந்த அபாயம் குறித்து குறைத்துக் காட்ட முனைந்துள்ளதுடன், அதற்கான தயாரிப்பு மட்டத்தையும் மிகைப்படுத்திக் காட்ட முயல்கிறார். புதன்கிழமை அவர் அதற்கு “என்ன நடந்தாலும் நாங்கள் முற்றிலும் தயாரிப்புடன் உள்ளோம்” என தெரிவித்தார்.

உண்மையில், அமெரிக்க அரசாங்கம் ஒரு மிகப்பெரும் நோய்தொற்றுக்கு முற்றிலும் தயாரிப்பின்றி உள்ளது. அந்த வைரஸை முறையாக பரிசோதனை செய்வதற்கும் கூட அங்கே எந்த நடைமுறையும் இல்லை. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் எங்கிருந்து நோய்தொற்று ஏற்பட்டதென தெரியாத முதல் நோயாளியாக அடையாளம் காணப்பட்டு அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு, முதலில் நோயின் அறிகுறிகள் வெளிப்பட்ட சில நாட்களுக்குப் பின்னரும் கூட அதைப்பற்றி பரிசோதனை செய்யப்படவில்லை.

அங்கே மருத்துவ சிகிச்சை தொழிலாளர்களுக்கு அவசியமான சுவாச முகமூடிகள் உட்பட மிகவும் அடிப்படையான மருத்துவச் சாதனங்களின் கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. அரசிடம் சுமார் 30 மில்லியன் மட்டுமே கைவசம் உள்ள நிலையில், 300 மில்லியன் அவசியப்படக்கூடும் என்று மதிப்பிடப்படுகிறது.

துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் இண்டியானா மாநிலத்தில் ஆளுநராக இருந்த போது அவரின் செயலின்மை மற்றும் பிற்போக்குத்தனமான மத சித்தாந்தம் அங்கே HIV தொற்று ஏற்படுவதற்கு பங்களிப்பு செய்த நிலையில், அவர் ட்ரம்ப் நிர்வாகத்தில், கொரொனா வைரஸ் விடையிறுப்புக்கு அரசாங்கத்தின் முக்கிய பிரமுகராக நியமிக்கப்பட்டுள்ளார். நிர்வாகத்தின் விடையிறுப்புக்கு முரண்பாடாக எச்சரிக்கை விடுக்கும் எந்தவொரு அதிகாரியையும் வாய் மூட செய்வதே இந்த நியமனத்தின் பிரதான நோக்கமாகும்.

விரிவார்ந்த மற்றும் அவசர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கோரி தொழிலாள வர்க்கம் போராட வேண்டும். இந்நெருக்கடி பின்வருவனவற்றை கோருகிறது:

1. ஓர்உலகளாவியஅணிதிரட்டல்

இந்த கொரொனா வைரஸ் க்கான விடையிறுப்பு தேசிய மட்டத்தில் ஒரு நாட்டுக்குள் ஒருங்கிணைத்து செய்ய முடியாது. தொற்றுக்கிருமியானது எல்லைகளையோ அல்லது நுழைவனுமதியையோ மற்றும் புலம்பெயர்வுக்கான கட்டுப்பாடுகளையோ பற்றி அக்கறைப்படுத்துவதில்லை. போக்குவரத்து மற்றும் பொருளாதார ஒருகங்கிணைப்பின் உலகளாவிய வலையமைப்புகள் இந்த வைரஸை ஓர் உலகளாவிய பிரச்சினையாக மாற்றி உள்ளன.

தீர்வு உலகளாவியதாக இருக்க வேண்டும். இந்த கொரொனா வைரஸைக் கட்டுப்படுத்த, குணப்படுத்த, இறுதியில் வேருடன் களைந்தெறிவதற்குரிய திறமையான எதிர்நடவடிக்கைகளை முன்னெடுப்பதைத் தாமதிக்க மட்டுமே சேவையாற்றும் "தேசிய நலன்கள்" மற்றும் புவிசார் அரசியல் மோதல்களால் ஏற்படும் இடர்பாடுகள் இல்லாமல், உலகெங்கிலுமான விஞ்ஞானிகள் அவர்களின் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்க வேண்டும். ஈரான் மீது திணிக்கப்பட்டதைப் போல, அனைத்து வர்த்தகப் போர் நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார தடையாணைகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும். எந்தவொரு மனித உயிருக்கும், அவசரமாக அவசியப்படும் மருத்துவச் சிகிச்சை அவர்கள் பிறந்த அவர்களின் தேசிய அல்லது இன அடையாளத்தின் அடிப்படையில் மறுக்கப்படக்கூடாது.

ஐரோப்பிய மற்றும் அமெரிக்காவின் பிரதான முதலாளித்துவ சக்திகளால் அமைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த மற்றும் அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மில்லியன் கணக்கானவர்களுக்கும் உடனடி கவனிப்பு வழங்கப்பட வேண்டும். இத்தகைய முகாம்கள், இந்த வைரஸ் பரவுவதற்குரிய பிரதான அபாயமான பகுதிகளாக ஆகிவிடக்கூடும். தற்போது இதுபோன்ற முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களுக்கும், பாதுகாப்பான வீட்டுவசதி மற்றும் மருத்துவச் சிகிச்சையை அணுகுவதற்கான வசதி வழங்கப்பட வேண்டும்.

பயணிப்பவர்கள் அல்லது நோய்தொற்று ஏற்பட்டவர்களைத் தனிமைப்படுத்த வேண்டி இருந்தால், ஜனநாயக உரிமைகள் மதிக்கப்படும் விதத்திலும், தனிநபர் கண்ணியத்தைப் பேணும் விதத்திலும் அது செய்யப்பட வேண்டும்.

2. மருத்துவக்கவனிப்புமற்றும்சிகிச்சைக்குபாரியளவில்ஆதாரவளஒதுக்கீடுவேண்டும்

இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் உலகெங்கிலும் உயர்ந்த தரத்திலான மருத்துவக் கவனிப்பை உறுதியளிக்க உடனடியாக நூறு பில்லியன் கணக்கான டாலர்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த நோய்தொற்று எங்கெல்லாம் உண்டாகிறதோ அங்கே கவனிப்பை ஒருங்கிணைக்க, மருத்துவக் கவனிப்பு வல்லுனர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் ஒரு சர்வதேச குழு ஏற்படுத்தப்பட வேண்டும்.

அமெரிக்காவில் அரசியல் ஸ்தாபகம், 2 பில்லியன் டாலர் போதுமா (வெள்ளை மாளிகையின் நிலைப்பாடு) அல்லது 8 பில்லியன் டாலர் அவசியப்படுமா (ஜனநாயகக் கட்சியின் நிலைப்பாடு) என்றவொரு "விவாதத்தில்" ஈடுபட்டுள்ளது. இவ்விரு தொகைகளுமே இந்த உலகளாவிய நெருக்கடியின் அளவுடன் ஒப்பிடுகையில் ஒரு வாளி நீரில் ஒரு துளியைப் பிரதிநிதித்துவம் செய்கிறது.

ட்ரம்ப் நிர்வாகம் இந்த கொரொனா வைரஸிற்காக அது முன்மொழிந்திருக்கும் நிதி ஒதுக்கீட்டை விட ஐந்து மடங்கு அதிகமாக அதன் பிற்போக்குத்தனமான அமெரிக்க-மெக்சிகோ எல்லைச்சுவருக்காக செலவிட்டுள்ளது. அமெரிக்க போர் எந்திரத்திற்கு நிதி வழங்குவதன் மீது ஒவ்வொருநாளும் சுமார் 3 பில்லியன் டாலர் செலவிடப்படுகின்றன.

மருத்துவக் கவனிப்பு மற்றும் சிகிச்சைக்கான இந்த ஒதுக்கீடுகள் காப்பீடுத்துறை நிறுவனங்கள், மருந்து உற்பத்தித்துறை நிறுவனங்கள் மற்றும் மருத்துவத்துறை நிறுவனங்களால் நெறிமுறைப்படுத்தப்படக் கூடாது. எந்தவொரு எதிர்கால தடுப்பூசிகள் உட்பட ஒவ்வொருக்குமான சிகிச்சை, அனைவருக்கும் சமத்துவமான முறையில் கட்டணமின்றி வழங்கப்பட வேண்டும்.

மிகப்பெரும் மருத்துவக் கவனிப்பு நிறுவனங்கள், கொரொனா வைரஸ் மற்றும் ஏனைய மருத்துவ அவசர நிலைமைகளால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் அவசர சமூக தேவையைப் பூர்த்தி செய்வதற்கு, ஜனநாயகரீதியில் கட்டுப்படுத்தப்படும் பொது நிறுவனங்களாக மாற்றப்பட வேண்டும்.

3. பொருளாதாரவிளைவுகளால்பாதிக்கப்பட்டஅனைவருக்கும்நேரடியானநிதிஉதவிமற்றும்வருமானநஷ்டஈடு

கொரொனா வைரஸ் மற்றும் அதன் பரந்த பொருளாதார பாதிப்புகளது உடனடி விளைவுகளால் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் அவர்களின் வேலை இழப்புகள் அல்லது வேலைநேர குறைப்புகளை முகங்கொடுத்துள்ளனர். அவர்களின் இழப்புகளுக்கு முழுமையாக நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும்.

அரசாங்கங்களும் முதலாளித்துவ உயரடுக்குகளும் இதுபோன்றவொரு அவசர விடையிறுப்புக்கு பணம் இல்லை என்று வாதிடுவார்கள். இதுவொரு பொய்! இராணுவச் செலவினங்களுக்காக முதலாளித்துவ அரசாங்கங்கள் செலவிடும் தொகை ட்ரில்லியன் டாலர்களில் சென்று கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் வருடாந்தர இராணுவ வரவு செலவு திட்டக்கணக்கு மட்டுமே ஒரு ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமாகும். அனைத்திற்கும் மேலாக, அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைமையில் பிரதான முதலாளித்துவ அரசாங்கங்கள் பங்குபத்திரங்களின் சந்தை மதிப்பை உயர்த்துவதற்கு நடைமுறையளவில் வரைமுறையின்றி பணத்தை ஒதுக்கி உள்ளன. 2008 பொறிவிற்குப் பின்னர் ஒருசில வாரங்களுக்குள், அமெரிக்க அரசாங்கம் பங்குச் சந்தைக்குள் பணப்புழக்கத்தை வழங்குவதற்காகவும் மற்றும் மோசடி முதலீட்டாளர்களுக்குப் பிணையெடுப்பு வழங்குவதற்கும் இரவோடு இரவாக தேசிய கடனை இரட்டிப்பாக்கியது.

அனைத்திற்கும் மேலாக, மலைப்பூட்டும் அளவிலான தொகை உலக மக்கள்தொகையில் மிகச் சிறிய சதவீதத்தினரால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உலகின் 500 மிகப்பெரும் செல்வந்தர்களின் செல்வவளம் கடந்தாண்டு மட்டும் 1.2 ட்ரில்லியன் டாலர் அதிகரித்த பின்னர், அண்மித்து 6 ட்ரில்லியன் டாலரில் நிற்கிறது. அவசரத்திற்கேற்ப அவசியப்படும் அளவுக்கு செல்வந்த தட்டுக்களின் செல்வவளம் மீது அரசாங்கங்கள் அவசரகால வரிகளை விதிக்க வேண்டுமென தொழிலாள வர்க்கம் கோர வேண்டும்.

இத்தகைய அவசரகால நடவடிக்கைகளை முதலாளித்துவ அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்த கோருகையில், சர்வதேச தொழிலாள வர்க்கம் அதன் அடிப்படை நோக்கத்தைக் கைவிட்டுவிடக் கூடாது: அதாவது முதலாளித்துவ அமைப்புமுறையை முடிவுக்குக் கொண்டு வருவதை. மாறாக, அவசரகால நடவடிக்கைக்கான போராட்டமானது தொழிலாள வர்க்கத்தின் நனவை உயர்த்தும் என்பதுடன், சர்வதேச வர்க்க ஐக்கியத்திற்கான தேவையைக் குறித்த அதன் புரிதலை அபிவிருத்தி செய்து, அதன் அரசியல் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

முதலாளித்துவம் ஒரு காலங்கடந்த பொருளாதார அமைப்புமுறை என்பதையும், மனித முன்னேற்றத்திற்கு ஒரு தடையாக உள்ளது என்பதையும் தற்போதைய இந்த நெருக்கடி எடுத்துக்காட்டுகிறது. இந்த தொற்றுநோய் முன்வைக்கும் அபாயமும் மற்றும் பேரழிவுகரமான தாக்கங்களைக் குறித்த உலகளாவிய எச்சரிக்கைகளும், முதலாளித்துவ அமைப்புமுறை உலகளாவிய சோசலிசத்திற்கு வழிவிட்டே ஆக வேண்டும் என்பதையே நிரூபிக்கிறது.

பரிந்துரைக்கப்படும்ஏனையகட்டுரைகள்:

The science and sociology of SARS
[12 May 2003]

The science and sociology of SARS
[13 May 2003]

Loading