மோடியின் ஆதரவாளர்கள் டெல்லியை வகுப்புவாத வன்முறையில் மூழ்கடிக்கையில், ட்ரம்ப் அவரை புகழ்கிறார்

மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று அகமதாபாத்தில் நடந்த ஒரு பேரணியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சிங்கமாக வருணித்தார், மேலும் தனது 36 மணி நேர இந்திய பயணத்தின் எஞ்சிய காலத்தில் இந்த “விதிவிலக்கான தலைவர்… தனது நாட்டுக்காக இரவும் பகலும் உழைப்பவர்” என்று தொடர்ந்து பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

ட்ரம்ப் அவ்வாறு செய்தபோதும், மோடியும் அவரது பாரதீய ஜனதா கட்சியினதும் பாசிசவாத கொள்கைகளின் மோசமான விளைவுகள் இந்தியாவின் தலைநகரான டெல்லியின் தெருக்களில் இரத்தக்களரியாக வெளிப்படுத்தப்பட்டன.

உள்ளூர் பாஜக தலைவர்களின் தூண்டுதலின் பேரில், "ஜெய் ஸ்ரீ ராம்" அல்லது" வாழ்க (இந்து கடவுள்) ராம்" என்று கோஷமிடும் இந்து பேரினவாதிகளின் கும்பல் வடகிழக்கு டெல்லியில் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில், முஸ்லிம்களைத் தாக்கி, முஸ்லிம்களுக்கு சொந்தமான வணிகங்களை சூறையாடி எரித்தனர்.

"வடகிழக்கு டெல்லியில் இன்னொரு மோதல்கள் நடந்த பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் நள்ளிரவு வரை இளைஞர்கள் குழுக்கள் தடிகள் மற்றும் கம்பிகளுடன் ஆயுதம் ஏந்தி கடைகள் மற்றும் முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடுகளுக்கு தீ வைத்தபடி ஒரு மோதலை தேடி அலைந்து திரிந்தனர். இவை அனைத்துமே காவல்துறையினரின் கண்முன்னேதான் நடந்தன, அவர்கள் அமைதியான பார்வையாளர்களாக நின்றார்கள் அல்லது வேறு பக்கமாக பார்த்தார்கள் அல்லது அவர்கள் மிகவும் தேவைப்படும்போது அவ்விடத்தில் காணாமல் போனார்கள் என்று கூறப்பட்டதாக” Indian Express செய்திநிறுவனம் தெரிவித்தது.

செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, டெல்லியின் மூத்த காவல்துறை அதிகாரி உட்பட 13 பேர் வகுப்புவாத வன்முறையில் இறந்துவிட்டனர், மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாஜக வின் கருத்தியல் வழிகாட்டியாக நீண்டகாலமாக பணியாற்றி வரும் நிழல் இந்து மேலாதிக்க அமைப்பான RSS இன் மற்றும் பாஜக வின் உள்ளூர் தலைவர்கள், இப்போது டெல்லியை மூழ்கடிக்கும் வகுப்புவாத வன்முறைக்கு நேரடி குற்றவாளிகளாவர். பாஜக அரசாங்கத்தின் முஸ்லீம் விரோத குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு எதிராக அவர்கள் பல வாரங்களாக வன்முறையைத் தூண்டி வருகின்றனர்.

உத்தரபிரதேசத்தில் பாஜக மாநில அரசு CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு பயன்படுத்திய கொடிய வன்முறையைப் பாராட்டுவது மற்றும் “அவர்களை சுட்டுக் கொல்" என்ற கோஷங்களுடன் தங்களின் ஆதரவாளர்களை வழி நடத்துவதும் இதில் அடங்கும்.

ஞாயிற்றுக்கிழமை, பாஜக தலைவர் கபில் மிஸ்ரா வடகிழக்கு டெல்லியில் சிஏஏ இற்கு சார்பானவர்களை அணிதிரட்டினார், மேலும் தில்லி போலீசாருக்கு ஒரு "இறுதி காலக்கேடு" தருவதாக அறிவித்தார். அடுத்த மூன்று நாட்களுக்குள் அனைத்து சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களையும் தலைநகர வீதிகளில் இருந்து அகற்றவில்லை என்றால், அவரும் அவரது ஆதரவாளர்களும் அதைச் செய்வார்கள் என்றார். அதை அடுத்து வன்முறை மோதல்கள் விரைவில் தொடர்ந்தன.

ஆனால் மிஸ்ரா ஒரு சிறு குண்டர் மட்டுமே. ட்ரம்பின் "உண்மையான நண்பர்" மோடியும் அவரது பாஜக அரசாங்கமும் அரசியல்ரீதியாக அதற்கு பொறுப்பாளிகள். அவர்கள் தான் டெல்லியின் முஸ்லீம் மக்கள் மீது இப்போது நிகழ்த்தப்படும் அட்டூழியங்களுக்கு அனைத்து வகைகளிலும், உண்மையான காரண கர்த்தாக்களாவார்.

ஒரு கடுமையான பொருளாதார மந்தநிலையின் மத்தியில், இந்தியாவின் வேலையின்மை விகிதம் சமீபத்தில் 45 ஆண்டுகளின் உச்சத்தை எட்டியது, மற்றும் தொழிலாளர் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களின் அலை வீசியது, இப்படியான நிலைமையில் தான் மோடியும் அவரது பாஜகவும் இடைவிடாமல் இந்து வகுப்புவாதத்தைத் தூண்டுகின்றன. அவர்களின் நோக்கம் மும்மடங்கானதாகும். அவையாவன: பெருகிவரும் சமூக எதிர்ப்பிற்கு எதிராக அதிர்ச்சி துருப்புக்களாக தங்கள் இந்து மேலாதிக்க ஆதரவாளர்களை அணிதிரட்டுவது; வளர்ந்து வரும் மக்கள் கோபத்தையும் விரக்தியையும் பிற்போக்கிற்கு பின்னால் திசை திருப்புவது; மற்றும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவது.

ஆகஸ்ட் மாதத்தில். மோடி அரசாங்கம் இந்தியாவின் ஒரே இஸ்லாமிய மாநிலமான ஜம்மு மற்றும் காஷ்மீரின் அரை சுயாதீன அந்தஸ்தை சட்ட விரோதமாக விலக்கியது மேலும் அன்று முதல், இந்த பகுதி, முற்றுகைக்கு நிகரான ஒடுக்குமுறைக்கு உள்ளாகியுள்ளது.

பா.ஜ.க. மற்றும் அதன் வலதுசாரி இந்து கூட்டாளிகளின் பல தசாப்த கால வன்முறைமிக்க பிரச்சாரங்களுக்கு அடிபணிந்து, இந்தியாவின் உச்ச நீதிமன்றம், மோடி அரசாங்கத்தை முதலில் 16ம் நூற்றாண்டில் பாபரால் கட்டப்பட்ட பள்ளிவாசல் (Babri Masjid) இருந்த இடத்தில் இந்து கடவுளான, இராமருக்கு ஒரு கோவில் கட்ட ஆணை கொடுத்தது. இந்த பள்ளிவாசலானது பா.ஜ.க. தலைவர்களின் தூண்டுதலால் 1992-ம் ஆண்டு தரைமட்டம் ஆக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் மாதம் வேகமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இஸ்லாமிய எதிர்ப்பு CAA, முதல் முறையாக பெயரளவுக்கு மதசார்பற்ற இந்தியாவில் குடியுரிமையை நிர்ணயிப்பதில் மதம் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என்ற நிலையை உருவக்கியள்ளது. மேலும், இது "சட்ட விரோதமாக குடியேறியவர்களை" விரட்டுகிறோம் என்ற பெயரில் ஏழை முஸ்லிம்களை அச்சுறுத்த மற்றும் தொல்லை தர மற்றும் தள்ளி வைக்க ஒரு சட்டபூர்வமான நடைமுறையை உருவாக்கியது.

எவ்வாறாயினும், மோடி மற்றும் அவரது அரசாங்கத்திற்கு அதிர்ச்சியை கொடுக்கும் வகையில், CAA ஆனது, நாடு முழுதும் எதிர்ப்பை எதிர் கொள்வதுடன், இந்த எதிர்ப்பு, மதம் சாதி மற்றும் இனம் மொழி ஆகியவற்றை தாண்டி இந்திய தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் வல்லுனர்களையும் ஒன்றிணைத்துள்ளது.

பா.ஜ.க அரசாங்கம் மற்றும் இந்திய ஆளும் வர்க்கத்தின் மிகப் பெரிய அச்சம் என்னவென்றால், CAA க்கு எதிரான ஒரு பரந்த மக்கள் எதிர்ப்பு, கிளர்ச்சிமிக்க தொழிலாள வர்க்கத்துடன் ஒன்றாக கலந்து அதன் தலைமையின் கீழ் வந்துவிடும் என்பதாகும். இம்மாதிரியான ஒரு நிகழ்வானது ஜனவரியில் பொது வேலை நிறுத்தத்தில் முன்கூட்டியே வெளிப்படுத்தப்பட்டது. இந்த வேலைநிறுத்தத்தில் பல மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், பா.ஜ.க வின் சிக்கன நடவடிக்கை மற்றும் முதலீட்டாளர் சார்பு கொள்கை மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பு CAA முதலியவைக்கு எதிராக பங்கு பெற்றனர்.

அவரது பயணத்தின் முடிவில் டெல்லியில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், இந்திய தலைநகரத்தின் அதிகமான பகுதி வன்முறையால் சூழ்ந்திருக்கையில், ட்ரம்ப் மோடியின் பாதுகாப்புக்கு முன்வந்தார். அமெரிக்க அதிபரின் இஸ்லாமிய-எதிர்ப்பு தன்மை பெரும்பான்மையாக முஸ்லீம் மக்களை கொண்ட அரை டஜன் நாடுகளில் இருந்து வரும் மக்களை, அமெரிக்காவிற்குள் அனுமதிக்க எதிர்ப்பதன் மூலம் அப்பட்டமாக வெளிப்படுத்தப்படுகையில் அவர், மோடி மத சகிப்புத்தன்மையில் பற்றுள்ளவர் என்று பாராட்டியுள்ளார். "பிரதமர் மக்களுக்கு மத சுதந்திரம் வேண்டும் என்று விரும்புகிறார்” என்று ட்ரம்ப் கூறினார். மேலும் "இந்த விஷயத்தில் அவர்கள் இதில் கடுமையையாக உழைத்துள்ளனர்." என்றார்.

ட்ரம்ப் வழக்கம்போல் இதனை வெட்கமில்லாமல் குரூரமாகவும் வெளிப்படையாகவும் செய்துள்ளார். ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமானால் அமெரிக்காவின் அரசியல் நிறுவனம், ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகள் இரண்டும் மற்றும் பென்டகன் மற்றும் ஊடகம் அனைத்தும் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசாங்கத்தை முக்கிய கூட்டாளியாக கொண்டாடுகின்றனர் மேலும் வெளிப்படையாக அதன் பல்வேறு குற்றங்களை புறந்தள்ளி, மறைத்து மற்றும் குறைத்து காட்டியுள்ளனர்.

இதற்கு காரணம், அமெரிக்க ஏகாதிபத்தியம் சீனாவுக்கு எதிரான அதன் பொறுப்பற்ற இராணுவ-மூலோபாய தாக்குதலுக்கு இந்தியாவை முக்கியமானதாக கருதியுள்ளது. அணு ஆயுத இந்தியா, உலகில் நான்காவது பெரிய இராணுவ வரவு-செலவுத் திட்டத்தை கொண்டிருப்பது மட்டுமில்லாமல், சீனாவுடன் நீண்ட காலமாக பிரச்சனைக்குரிய எல்லையை பகிர்ந்துள்ளது. மேலும் சீனப் பொருளாதாரத்துக்கு உந்துதலளிக்கும் எண்ணெய் மற்றும் ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கிற்கு சீனா ஏற்றுமதி செய்யும் முக்கிய பாதையாக திகழும் இந்து மகாசமுத்திர கடல்பாதையையும் புவியியல் ரீதியாக ஆளுமை செலுத்துகின்றது.

மோடியின் கீழ் இந்தியா, வாஷிங்டனின் சீன எதிர்ப்பு போர் உந்துதலில் முன்னிலை அரசாக மாறியுள்ளது. புதுடெல்லி, தனது துறைமுகம் மற்றும் விமானத் தளங்களை அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களுக்கு திறந்துள்ளது, தென் சீனக் கடல் பிரச்னையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஆதரித்துள்ளது. மேலும் வாஷிங்டனின் முக்கிய ஆசியா-பசிபிக் கூட்டாளிகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இருதரப்பு மற்றும் முத்தரப்பு ஒத்துழைப்பை விஸ்தரித்துள்ளது.

நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில், தானும் மோடியும் எவ்வாறு "நான்கு முனை முன்முயற்சியை புத்துயிர் பெற செய்கிறார்கள்" என்பது குறித்து ட்ரம்ப் உற்சாகமாக இருந்தார். அதாவது, நேட்டோ பாணியிலான, சீன எதிர்ப்பு கூட்டணியில் அமெரிக்காவுடன் இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவை ஒன்றிணைப்பதாகும்.

அவ்வாறு இருந்தாலும், பாசிச தன்மையுடைய கோடீஸ்வரரும், புலம்பெயர்ந்தோருக்கு எதிரான “அமெரிக்கா முதல்” என்னும் அமெரிக்க ஜனாதிபதி இந்து மேலாதிக்கவாதியான, எதேச்சதிகார மோடியுடன் உண்மையான அரசியல் நெருக்கத்தை உணருகிறார் என்பதில் சந்தேகமில்லை.

ட்ரம்பின் இந்தியா வருகையின் தீமூட்டும் புவிசார் மூலோபாய நோக்கங்களுக்கு அப்பாற்பட்ட முக்கியமான அரசியல் பிரச்சினைகளை இது சுட்டிக்காட்டுகிறது, கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் வகுப்புவாத சீற்றங்களால் இது வெளிச்சத்தில் காட்டப்பட்டுள்ளது.

அனைத்து இடங்களிலும் நெருக்கடி நிறைந்த முதலாளித்துவ உயரடுக்கினர் தொழிலாள வர்க்கத்தை அச்சுறுத்தும், திசை திருப்பும் மற்றும் பிளவுபடுத்தும் நோக்கத்துடன் தீவிர வலதுசாரி, வகுப்புவாத மற்றும் பாசிச சக்திகளை ஊக்குவித்து வருகின்றனர்.

  •  ஜேர்மனியில் தேசிய பாதுகாப்பு எந்திரத்திலுள்ள சக்திவாய்ந்த பகுதிகளும் அரசியல் ஸ்தாபகத்தினரும் தீவிர வலதுசாரி AfD யை தேசிய பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக மாற்ற சதி செய்துள்ளன.
  •  பிரான்சில், ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், பெரும் சமூக வெட்டுக்களை திணிப்பதற்கு, பொலிஸ் வன்முறை மற்றும் புதிய "இயல்பு நிலையாக்கப்பட்ட" அவசரகால சட்ட நடவடிக்கைகளை பயன்படுத்துகின்ற வேளையில், நாஜி ஒத்துழைப்பாளரான மார்ஷல் பெத்தானை மறுவாழ்வு செய்ய நகர்ந்துள்ளார்.
  •  சிங்கள உயரடுக்கின் 30 ஆண்டுகால தமிழ் எதிர்ப்புப் போரின் இறுதிக் கட்டங்களை இயக்குவதில் முக்கிய பங்கு வகித்த இலங்கை ஜனாதிபதி கோத்தாபாய இராஜபக்ஷ, சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பெருகிவரும் எதிர்ப்பைத் தகர்த்தெறியும் நோக்கத்துடன் பௌத்த மேலாதிக்கத்தை தூண்டுகிறார்.

2018 முதல் உலகெங்கிலும் பரவியிருக்கும் வேலைநிறுத்தங்கள் மற்றும் அரசாங்க எதிர்ப்பு வெகுஜன ஆர்ப்பாட்டங்களின் அலையானது நடைமுறையில் காட்டியிருப்பது என்னவென்றால், தொழிலாள வர்க்கம் முன்வரும் போது, அது ஒரு வர்க்கமாக அவ்வாறு செயல்படுவதுடன், அனைத்து இன, சிறு இனக்குழு, வகுப்புவாத மற்றும் பாலின எல்லைகளை கடந்து தொழிலாளர்களை ஒன்றிணைக்கிறது.

இது அமெரிக்காவைப் போலவே இந்தியாவிலும் உண்மை தான்

ஆனால் தொழிலாள வர்க்கத்தின் புறநிலையான ஐக்கியம் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் பொதுவான வர்க்க நலன்களை வெளிப்படுத்தி காட்டும் ஒரு சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டத்தால் அரசியல் ரீதியாக உயர்த்தப்பட வேண்டும். மேலும் முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு பூகோளரீதியான தாக்குதலாக அவர்களின் போராட்டங்களை இணைப்பதற்காக அரசியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இதற்கு தேசியவாத, வகுப்புவாத, இனவாத வலது மற்றும் தீவிர வலதுசாரிகளுக்கு எதிரான ஒரு விடாப்பிடியான போராட்டம் தேவை. ஆனால் இது, தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பொருளாதார தேசியவாத வேலைத்திட்டத்திற்கு எதிராகவும், இன, பாலினம் மற்றும் உயர் மத்தியதர வர்க்க அடையாள அரசியலின் பிற வடிவங்களை உருவாக்குபவர்களுக்கு எதிரான போராட்டமுமாகும். உயர் மத்தியதர வர்க்கத்தினர் செல்வத்தை மேல்மட்டத்திலுள்ள 10 சதவிகிதத்தினரிடையே மறுபகிர்வு செய்ய முற்படுகிறார்கள், மேலும் சமூக சமத்துவத்துக்கான போராட்டத்திலும் ஏகாதிபத்தியப் போருக்கு எதிராகவும் உழைக்கும் மக்களின் வர்க்க ஒற்றுமைக்கு கடுமையாக விரோதப் போக்கைக் கொண்டுள்ளனர், ஏனென்றால் அது அவர்களின் சொந்த சலுகைகளுக்கு அச்சுறுத்தல் என்று அவர்கள் உணர்கிறார்கள்.

உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் பூகோளரீதியான உற்பத்தியின் செயல்பாட்டால் ஒன்றுபட்டு, நவீன தொலைத் தொடர்பு மூலம் தங்கள் போராட்டங்களை ஒருங்கிணைக்க முடிந்த நிலையில், கம்யூனிஸ்ட் அறிக்கையின் கண்காணிப்புச் சொல்லை உணர்ந்து கொள்வதற்கு நிலைமைகள் இன்று போல் ஒருபோதும் உகந்ததாக இருந்தது இல்லை: “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்.”

ஆனால் அவ்வாறு செய்ய, தீவிர வலதுசாரி தேசியவாதம், இனவாதம், மற்றும் வகுப்புவாதம் அல்லது நச்சு போலி அடையாள அடையாள அரசியல் போன்றவற்றின் ஊடாக பிற்போக்குத்தனத்தை முன்கொண்டுவரும் ஒரு அழுகும் சமூக ஒழுங்கினை கடுமையாக எதிர்ப்பதற்கு தொழிலாளவர்க்கத்தினது அரசியல் கல்வி மற்றும் அணிதிரட்டல் தேவையாக உள்ளது. தொழிலாள வர்க்கம். இந்த பணிக்காகவே உலக சோசலிச வலைத்தளம், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு மற்றும் அதன் பகுதியாக இருக்கும் சோசலிச சமத்துவக் கட்சிகள் அர்ப்பணம் செய்துள்ளன.

Loading