முன்னோக்கு

இந்த தொற்றுநோயை எதிர்த்து போராட என்ன செய்ய வேண்டும்

மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மில்லியன் கணக்கான மக்களின் உயிருக்கே அச்சுறுத்தலாக, ஒரு நூற்றாண்டில் மிக மோசமான தொற்றுநோய் வெடிப்புகளில் ஒன்றாக விளங்கும் கொரொனா வைரஸ் தொற்றுநோய் உலகெங்கிலும் பல நாடுகளுக்கும் தொடர்ந்து பரவி வருகிறது.

அந்நோயின் தீவிரத்தன்மையை வெள்ளை மாளிகை குற்றகரமாக நேர்மையின்றி உதறித் தள்ளியதற்கு நேரெதிராக, அமெரிக்காவில் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மட்டத்திலும் அரசாங்கத்தின் விடையிறுப்பு அலட்சியமாகவும் திறமையின்றியும் உள்ளது. இது உலகின் மிகச் செல்வவளம் மிக்க இந்த முதலாளித்துவ நாட்டில் முற்றிலும் திட்டமிடலும் தயாரிப்பும் இல்லாதிருப்பதை வெளிப்படுத்திக்காட்டுகின்றது.

இந்த வைரஸைப் பொதுவான சளிக் காய்ச்சலுடன் சமன்படுத்தி இதனால் ஏற்படும் உயிரிழப்புகளை வெள்ளை மாளிகைக் குறைத்துக் காட்டிக் கொண்டிருந்தபோதே கூட, ஐக்கிய நாடுகளின் உலக சுகாதார அமைப்பு (WHO) கொரொனா வைரஸ் தொற்றிய மக்களில் 3.4 சதவீதமானோர் உயிரிழந்திருப்பதாக மார்ச் 4 இல் அறிவித்தது.

பரிசோதனை சாதனங்கள் இல்லாத காரணத்தால் அமெரிக்காவில் தொற்றின் அளவைத் துல்லியமாக தீர்மானிக்க வழியின்றி உள்ளது.

மக்களின் உடல்நலம் தொடர்பாக ட்ரம்ப் நிர்வாகத்தின் அலட்சியம் மோசமாக இருப்பதுடன், அடிமைகள் தொடர்பான பண்டைய எகிப்து மன்னர்களான பரோவாக்களின் (pharaohs – பண்டைய எகிப்திய மன்னர்கள்) மனோபாவத்தை விடவும் சிலவேளை மோசமாக உள்ளது. ஊடகங்களோ மனித உயிரிழப்புகளை விட வோல் ஸ்ட்ரீட் பங்கு மதிப்புகளின் வீழ்ச்சியைக் குறித்து வருந்தி புலம்புவதற்கே அதிக நேரம் செலவிடுகின்றன.

இந்த தொற்றுநோய் வெடிப்பை எதிர்த்து போராட காங்கிரஸ் வெறுமனே 8.3 பில்லியன் டாலர் மட்டுமே அங்கீகரித்துள்ளது. இது ஆப்கானிஸ்தான் போருக்கான ஆண்டு செலவில் பத்தில் ஒரு பங்கை விட குறைவானதும், அமசன் தலைமை செயலதிகாரி ஜெஃப் பெஸோஸ் இன் செல்வ வளத்தில் பதினைந்தில் ஒரு பங்குமாகும்.

உடனடியான தலையீடு இல்லாவிட்டால், இந்த தொற்றுநோய் மக்களிடையே கட்டுப்பாடின்றி பரவி நிலைகுலைக்கும் அளவுக்கு உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. மிகவும் படுமோசமான சூழ்நிலையில், உலகளவில் மக்கள்தொகையில் ஏறத்தாழ 60 சதவீத மக்கள் பாதிக்கப்படலாமென இவ்வாரம் ஹார்வார்டு பல்கலைக்கழக டாக்டர் மார்க் லிப்சிட்ச் விவரித்தார். தற்போதைய உயிரிழப்புகளின் விகிதத்தின் அடிப்படையில் பார்த்தால், இது ஒரு மில்லியன் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் மரணங்களைக் குறிக்கும்.

உலக சுகாதார அமைப்பு (WHO) அதன் பெப்ரவரி 28 அறிக்கையில் சுட்டிக் காட்டியவாறு, “இந்த COVID-19 வைரஸ் மிகவும் தீவிரமாக தொற்றக்கூடிய புதிய நுண்ணுயிரி என்பதுடன், வேகமாகவும் பரவக்கூடியது. எந்தவொரு நிலையிலும் சுகாதார, பொருளாதார மற்றும் சமூக பாதிப்புகளை மிகப்பெரியளவில் ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டதாக கருதப்பட வேண்டும்.”

“தொற்று ஏற்படுத்துபவருக்கும் தொற்றுக்கு உள்ளாகும் நபருக்கும் இடையே பாதுகாப்பற்ற நெருக்கமான தொடர்பு ஏற்படும்போது" இந்த வைரஸ் "நீர்துளிகள் மூலமாகவும் பொருட்கள் மூலமாகவும் பரவுகிறது" என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது. “மனிதரிடம் இருந்து மனிதருக்கு COVID-19 வைரஸின் பரிவர்த்தனை பெரும்பாலும் குடும்பங்களுக்குள் நடந்து வருகிறது,” என்பதையும் WHO சேர்த்துக் கொண்டது.

தொற்று எண்ணிக்கையைக் கணிசமாக குறைக்கவும் மற்றும் எண்ணற்ற உயிரிழப்புகளை தடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்க முடியும். ஆனால் உலகெங்கிலுமான அரசாங்கங்களின் விடையிறுப்போ நாசகரமாக போதுமானளவுக்கு இல்லை, இதன் விளைவாக கூறவியலாத எண்ணிக்கையில் மக்கள் மரணிக்கக்கூடும். பாதிக்கப்படுபவர்களில் பரந்த பெரும்பான்மையினர் தொழிலாள வர்க்கத்தினராகவும், வறியவர்களாகவும் மற்றும் சமூகத்தின் இதர பாதிக்கக்கூடிய பிரிவுகளைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள்.

இந்த சமூக பேரழிவு தடுக்கப்பட வேண்டும். தொழிலாள வர்க்கம், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் அனைத்து பிரிவுகளும் இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்கவும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் அவசியமான கவனிப்பை வழங்கவும் அரசாங்கங்கள் அவசரகால நடவடிக்கை எடுக்குமாறு கோர வேண்டும். இதற்கு சமூக ஆதார வளங்களைப் பாரியளவில் மறுஒதுக்கீடு செய்வது அவசியமாகும்.

இந்த விடையிறுப்பானது, சமூகத்தின் தேவைகள் இலாப நலன்களுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டால் வழிநடத்தப்பட வேண்டும். பங்கு மதிப்புகள் மற்றும் இலாபங்கள் மீதான முதலாளித்துவ கணக்கீடுகள் இந்நோயை எதிர்த்துப் போராடுவதை மட்டுப்படுத்தவோ, பலவீனப்படுத்தவோ, அல்லது தடுக்கவோ அனுமதிக்க கூடாது.

இந்த நிலைப்பாட்டில் இருந்து நாம் பின்வரும் கோரிக்கைகளை எழுப்புகிறோம்:

ஒவ்வொரு நாட்டிலும் கொரொனா வைரஸைப் பரிசோதிப்பதற்கான செலவுகளை மிச்சப்படுத்துவது உடனடியாக கைவிடப்பட வேண்டும். நடைமுறைகளை சோதிப்பதற்கும், பாதுகாப்பான ஆடைகளை உற்பத்தி செய்வதற்கும், ஆக்சிஜன் எந்திரங்கள் மற்றும் ஏனைய அவசியமான தொழில்நுட்பங்களைக் கொள்முதல் செய்வதிலும், புதிய மருத்துவமனைகள் கட்டமைப்பதற்கும் மற்றும் இப்போதிருக்கும் மருத்துவமனை வசதிகளை விரிவாக்குவதற்கும் சர்வதேச அளவில் ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் முதலீடு செய்யப்பட வேண்டும்.

அனைவருக்கும் கிடைக்கக்கூடிய பரிசோதனைகள்: அறிகுறிகள் தென்படும் அனைவருக்கும் பரிசோதனைகள் அணுகக்கூடிய விதத்தில் இல்லையென்றால், கொரொனா வைரஸ் பரவுவதை எதிர்த்து போராடுவதற்கு வழியே இல்லை. அமெரிக்காவிலும் ஒட்டுமொத்த உலகெங்கிலும் உடனடியாக பரிசோதனைகள் கிடைக்க செய்ய வேண்டியது இன்றியமையாததாகும்.

இலவச உயர்தர சிகிச்சை: பணமிருப்பவர்கள் மட்டுமே மருத்துவரைப் பார்க்க முடியும் என்றிருக்கும் ஒரு சமூகத்தில் கொரொனா வைரஸ் பரவுவதை நிறுத்துவது சாத்தியமே இல்லை. சராசரியான ஒரு குடும்பம் 400 டாலர் செலவுக்குப் பணம் செலுத்த முடியாத நிலையில் உள்ள அமெரிக்கா போன்ற ஒரு நாட்டில், இலவச சிகிச்சையை வழங்குவதையும் இந்நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதையும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாது.

ஒவ்வொரு நாடும் உடனடியாக இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்க தொடங்க வேண்டும் மற்றும் அனைவருக்கும் கொரொனா வைரஸ் தொடர்புபட்ட மொத்த மருத்துவச் செலவுகளும் வழங்கப்பட வேண்டும். மருத்துவக் கவனிப்பு ஒரு சிறப்புரிமையாக இருக்கக் கூடாது, அதுவொரு உரிமையாகும்!

அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு: தொழிலாளர்கள் நோய்வாய்பட்டிருக்கும் போது அவர்கள் வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டிருப்பதாக உணராமல் இருப்பதை உறுதிப்படுத்துவது இன்றியமையாததாகும். நிறுவனங்களும் அரசாங்கங்களும் அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை உடனடியாக வழங்கவேண்டும்.

மருத்துவக் கவனிப்பில் சமத்துவம்: அமெரிக்காவில், மருத்துவ ஆதார வளங்கள் பரந்தளவில் விகிதாசாரமற்ற முறையில் நிதியியல் செல்வந்த தட்டுக்களால் ஏகபோகமாக்கப்பட்டுள்ளது. மிகப் பெரும் செல்வந்தர்களுக்காக மன்ஹட்டன் மற்றும் ஹாம்டன்களில் முக்கிய பிரமுகர்களுக்கான அவசரகால சிகிச்சை அறைகளைக் குறித்த செய்திகள் ஏராளமாக வந்து கொண்டிருக்கின்றன, செல்வந்த தட்டுக்களால் அவர்களின் சொந்த மாளிகைகளிலேயே பாரியளவில் அவசரகால கிடங்குகளும் தனியார் மருத்துவ சிகிச்சை மையங்களும் கட்டமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த தொற்றுநோயை எதிர்த்து போராடுவதில் அங்கே முன்னுரிமை அடிப்படையிலான சிகிச்சை இருக்கக் கூடாது! மருத்துவக் கவனிப்பு மற்றும் சமத்துவம் என்பது ஒரு தார்மீக பிரச்சினை மட்டுமல்ல, மாறாக அதுவொரு அவசர சமூகத் தேவையாகும். செல்வந்தர்கள் மற்றும் பகட்டாரவார நடைமுறைகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கான தனியார் மருத்துவர்களும் உடனடியாக பொது மக்களுக்குச் சிகிச்சை அளிக்க உட்படுத்தப்பட வேண்டும். செல்வந்தர்களுக்கும் ஏனையோரைப் போலவே ஒரே மாதிரியான சிகிச்சையைப் பெறவே உரிமை உண்டு — அதை விட மேலானதை அல்ல.

அகதிகள், சிறைக் கைதிகள் மற்றும் வீடற்றவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்: உலகெங்கிலும் மில்லியன் கணக்கானவர்கள் வீடற்று உள்ளனர், இன்னும் மில்லியன் கணக்கானவர்கள் போர் மற்றும் வறுமையில் தப்பிக்க நாடுகளை விட்டு வெளியேறுகின்றனர், எண்ணிக்கையின்றி இன்னும் பலர் தொற்றுநோய்க்கு பலியாகக் கூடிய நிலைமைகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைக் கைதிகள், அகதிகள் மற்றும் வீட்டற்றவர்களின் நிலைமைகளை மேம்படுத்த அனைத்தும் செய்தாக வேண்டும் என்பதுடன், இத்தகைய நலிந்த மக்களுக்குச் சுகாதாரமான மற்றும் சிறந்த தரமான மருத்துவக் கவனிப்பு கிடைக்க செய்ய வேண்டும்.

விலைகளை அதிகரிப்பதை தடுத்துநிறுத்த வேண்டும்: ஒவ்வொரு குடும்பங்களுக்கும் மற்றும் மருத்துவத்துறை தொழிலாளர்களுக்கும் மருந்துகளும் சுகாதார பொருட்களும் கிடைக்குமாறு செய்ய வேண்டும். இந்த நெருக்கடியிலிருந்து இலாபமீட்ட முனையும் அனைவரும் குற்றத்திற்குப் பொறுப்பானவர்களாக நிறுத்தப்பட வேண்டும்.

பாதுகாப்பானவேலையிடநிலைமைகள்: மருத்துவப் பணியாளர்களில் இருந்து ஆலைகள், சரக்கு கிடங்குகள், சில்லறை வர்த்தகம் மற்றும் சேவை தொழிலாளர்கள் வரையில் ஒவ்வொரு பணியாளர்களுக்கும் பாதுகாப்பான வேலையிட சூழலை வழங்குவதற்கு முதலாளிமார்களும் அரசாங்கமுமே பொறுப்பாகும்.

பாதுகாப்பு மீதான மேற்பார்வையை தொழில்வழங்குனரிடமே ஒப்படைக்க கூடாது. தொழில்வழங்குனரால் பாதுகாப்பு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றன மற்றும் இந்நோய் பரவுவதை எதிர்த்து போராடுவதற்கு அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதை உறுதிப்படுத்த தொழிலாளர்கள் அவர்களின் சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்க வேண்டும். தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற சூழலில் வேலை செய்ய நிர்பந்திக்கப்படவில்லை என்பதையும், நோய்வாய்பட்டிருக்கும் சக தொழிலாளர்கள் அவசியமான சிகிச்சை மற்றும் உதவிகளை பெற்று வருகிறார்கள் என்பைதயும் இந்த குழுக்கள் உறுதிப்படுத்தும்.

இந்நோயால் பாதிக்கப்பட்டவர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர் என்றானால் அது புறக்கணிப்பையும் ஒதுக்கி விடப்படுவதையும் அர்த்தப்படுத்துமென எவரொருவரும் அஞ்சுவதாக இருக்கக் கூடாது. நோயாளிகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பாதுகாப்பாக இருப்பதையும், சமூக ஆதரவும் அவசியமான உணவுப் பொருட்களைப் பெறுவதையும் உறுதிப்படுத்த தொழிலாளர்கள் அவர்களின் அண்டைப் பகுதிகளிலும் குழுக்களை உருவாக்க வேண்டும்.

சர்வதேச ஒத்துழைப்புக்காக: ஈரானுக்கு எதிரான அமெரிக்க பொருளாதார தடையாணைகள் 3,000 க்கும் அதிகமான கொரொனா வைரஸ் நோயாளிகளைக் கொண்ட ஒரு நாட்டில் கடுமையான மருத்துவ பற்றாக்குறைகளை உருவாக்கி வருகிறது. மேலும் அமெரிக்க அரசியல் ஸ்தாபகம் சீன விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்களை பூதாகரமாக காட்டுவதற்கான ஒரு பிரச்சாரத்தைத் தொடுத்து வருகிறது. அனைத்து தடையாணைகளும் உடனடியாக நீக்கப்பட்டு, சர்வதேச மருத்துவ ஒத்துழைப்பு மீதான அனைத்து கட்டுப்பாடுகளும் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்!

இந்த அபாயகரமான நோய்க்கு விடையிறுக்கையில், மனிதகுலத்தின் தேவையே முதன்மையானது என்ற கோட்பாடே நம்மை வழி நடத்த வேண்டும். மில்லியன் கணக்கானவர்களின் உயிர்வாழ்வை அச்சுறுத்தும் ஒரு தொற்றுநோயை எதிர்த்து போராடுவதைத் தனியார் இலாபத்தின் பரிசீலனைகளுக்கு அடிபணிய வைத்திருக்க முடியாது.

மில்லியன் கணக்கான மக்களைக் காப்பாற்ற பணம் இல்லை என்ற எந்தவொரு வாதமும் ஓர் இழிவான பொய்யாகும். அமெரிக்காவில் மட்டுமே, அங்கே 30 மில்லியன் டாலருக்கும் அதிகமான செல்வவளம் கொண்ட 13,000 க்கும் அதிகமான தனிநபர்கள் உள்ளனர். பில் கேட்ஸ், ஜெஃப் பெஸோஸ் மற்றும் வாரென் பஃபெட் ஆகிய வெறும் மூன்று நபர்கள் அமெரிக்க சமூகத்தின் மிக வறிய அரைவாசி மக்களை விட அதிக செல்வவளத்தைக் கொண்டுள்ளனர்.

நிதி பற்றாக்குறைகளானது, மிகப்பெரும் செல்வந்தர்களின் செல்வவளத்தை அவசரமாக கையகப்படுத்துவதன் மூலமாக பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

இந்த நெருக்கடிக்கான ஓர் உடனடி அவசர விடையிறுப்பைக் கோருவதற்கும், இதற்கான செலவுகளைப் பெருநிறுவனங்கள், அரசாங்கங்கள் மற்றும் நிதியியல் செல்வந்த தட்டே ஏற்க வேண்டுமென கோருவதற்கும், தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய இயக்கத்தைக் கட்டமைப்பது அவசியமாகும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு அதன் பெப்ரவரி 28, 2020 அறிக்கையில் குறிப்பிட்டவாறு:

முதலாளித்துவ அரசாங்கங்கள் இத்தகைய அவசரகால நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டுமென கோருகையில், சர்வதேச தொழிலாள வர்க்கம் அதன் அடிப்படை நோக்கமான அதாவது முதலாளித்துவ அமைப்புமுறையை முடிவுக்குக் கொண்டு வருவதை கைவிட்டுவிடக் கூடாது. மாறாக, அவசரகால நடவடிக்கைக்கான போராட்டமானது தொழிலாள வர்க்கத்தின் நனவை உயர்த்தும் என்பதுடன், சர்வதேச வர்க்க ஒற்றுமையுணர்வுக்கான தேவையைக் குறித்த அதன் புரிதலை அபிவிருத்தி செய்து, அதன் அரசியல் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

இதுபோன்றவொரு தொற்றுநோய் வெடிப்பை நிறுத்துவதற்கு நவீன மருத்துவ தொழில்நுட்பம் முன்னொருபோதும் இல்லாத வாய்ப்புகளை வழங்குகிறது. ஒரு நுண்ணுயிரி குறித்து இந்தளவுக்கு முன்கூட்டியே இவ்வளவு விடயங்கள் ஒருபோதும் தெரிய வந்திருக்கவில்லை: அதன் மரபணு தொடர்ச்சி அறியப்பட்டுள்ளது மற்றும் ஒரு சில வாரங்களுக்கு உள்ளேயே பயனுள்ள பரிசோதனைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஆனாலும் இந்நோயின் வெடிப்பு, நவீன மருத்துவ தொழில்நுட்பத்தின் மிகப்பெரும் உத்தரவாதத்திற்கும் தனியார் செல்வவள திரட்சியை அடிப்படையாக கொண்ட ஒரு சமூகத்தின் முற்றிலும் பகுத்தறிவற்ற தன்மைக்கும் இடையே விரிவடைந்து வரும் இடைவெளியை அம்பலப்படுத்துகிறது.

இந்த தொற்றுநோயின் விளைவு என்னவாக இருந்தாலும், இந்த நெருக்கடியானது, காலநிலை மாற்றத்தில் இருந்து இயற்கை பேரழிவுகள் மற்றும் தொற்றுநோய்கள் வரையில் மனிதகுலம் முகங்கொடுக்கும் உயிர்பிழைப்புக்கான அச்சுறுத்தல்களை முதலாளித்துவத்தால் கையாள முடியாது என்ற உண்மையை மறுக்க முடியாதபடிக்கு நிறுவிக் காட்டுகிறது. கொரொனா வைரஸ் நெருக்கடி சமூகத்தின் சோசலிச மறுஒழுங்கமைப்பிற்கான அவசர அவசியத்தை முன்நிறுத்துகிறது.

Loading