ட்ரம்பின் இந்திய விஜயம் மற்றும் புது டெல்லி முஸ்லிம் விரோத படுகொலைகளைப் பற்றி இலங்கை தமிழ் தேசியவாத கட்சிகள் மயான அமைதி

V.Gnana and S. Jayanth
10 March 2020

பாசிசவாத கோடீஸ்வரரும் முஸ்லீம்கள் அமெரிக்காவுக்குள் வருவதை தடைசெய்தவரும் சீன-விரோதியுமான அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப், மற்றும் குஜராத் முஸ்லீம்-விரோத படுகொலைகளின் சூத்திரதாரியும், இந்தியாவின் ஒரே முஸ்லீம் பெரும்பான்மை மாநிலமான ஜம்மு-காஷ்மீரின் அரை சுயாட்சி அந்தஸ்தை சட்டவிரோதமாக நீக்கி, மத்திய அரசாங்கத்தின் நிரந்தர கட்டுப்பாட்டை திணித்த இந்து மேலாதிக்கவாத நரேந்திர மோடியும் பெப்பிரவரி 24 அன்று அகமதாபாத்தில் சந்தித்துக்கொண்டனர்.

ட்ரம்பும் மோடியும் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கும் போது, அங்கிருந்து சுமார் 11 மைல் தொலைவிலேயே கிழக்கு டெல்லியில் பாரதீய ஜனதா கட்சியாலும் (பி.ஜே.பி.) அது சார்ந்த இந்து மதவெறி அமைப்புகளாலும் தூண்டிவிடப்பட்ட முஸ்லிம் விரோத வன்முறைகள் நடந்துகொண்டிருந்தன. இது குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் மீதான தொடர் தாக்குதல்களின் உச்ச கட்டமாகும்.

இந்து மதவெறி கோஷங்களை எழுப்பியபடி வந்த கும்பல்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த தாக்குதல்கள் இரண்டு நாள் நீடித்ததுடன் இதுவரை 46 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்கள் உட்பட காயமடைந்த 200 க்கும் மேற்பட்டோர் மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர். வீடுகளுக்குள் இருந்தவர்கள் வெளியே இழுத்துச் செல்லப்பட்டு வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர். குழந்தைகள், முதியார், நூற்றுக்கணக்கான வீடுகள், கடைகள், பெட்ரோல் நிலையம் மற்றும் ஏராளமான வாகனங்களுடன் பள்ளிவாசல்களும் தீக்கிரையாக்கப்பட்டன.

205 மில்லியன் முஸ்லிம் சிறுபான்மை மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான மோடியின் தொடர்ச்சியான தாக்குதலின் மத்தியில், மோடியை ஜனநாயகத்திற்கான மனிதராக மகிமைப்படுத்திய ட்ரம்ப், “மோடி மத சுதந்திரத்திற்கு ஆதரவாக உள்ளார்”, “குடியுரிமை திருத்தத் சட்டம் குறித்து நான் பேச விரும்பவில்லை”, “மக்களுக்கு அரசு நல்லதையே செய்திருக்கும் என நம்புகிறேன்” என கூறி அவரைப் பலப்படுத்தியதோடு வன்முறைளை “உள்நாட்டு விவகாரம்” என உதறித்தள்ளினார்.

ட்ரம்ப், சீனாவுக்கு எதிரான சுற்றிவளைப்புக்கு இந்தியாவை முன்னணி நாடாக ஆயுதபாணியாக்கும் திசையில் நவீன கடற்படை ஹெலிகாப்டர்கள் உட்பட 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதை அறிவித்தார்.

ட்ரம்பின் பாராட்டுக்கள் புதுமையானவை அல்ல. மெக்சிக்கோவுடன் எல்லைச் சுவரைக் கட்டி, பத்தாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோரை தடுப்பு மையங்களில் அடைத்து அவர்களின் பிள்ளைகளை பெற்றோரிடமிருந்து பிரித்து, ட்ரம்ப் முன்னெடுக்கும் முஸ்லிம் விரோத, புலம்பெயர் விரோத கொள்கைகளையே அவரின் சமதரப்பான மோடியும் இந்தியாவில் பின்பற்றுகிறார்.

டெல்லி வன்முறைகள் இலங்கையில் 1983 தமிழர் விரோத படுகொலைகளை நினைவுக்கு கொண்டுவந்தன. அப்போதிருந்து 30 ஆண்டு காலமாக தொடர்ந்த இனவாத யுத்தம் பத்தாயிரக்கணக்கான தமிழர்களின் படுகொலையுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைகளுடன் முஸ்லிம் விரோத ஆத்திரமூட்டல்களும் தொடர்ந்து வருகின்றன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இலங்கையில் இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக பேசும் போது, மோடி அரசாங்கம் ஜம்மு-காஷ்மீரை துண்டாடியதை உதாரணமாக சுட்டிக் காட்டினார்.

இந்த சூழ்நிலையில், பிராந்தியம் முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவங்களைப் பற்றி, இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் சி.வி. விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி உட்பட சகல தமிழ் தேசியவாத கட்சிகளும் பெருந்தோட்டத்துறை தொழிற்சங்கங்களும் மற்றும் தமிழ் ஊடகங்களதும் மௌனம், ஆயிரம் வார்த்தைகளைப் பேசுகின்றது.

தசாப்த காலங்களாக இந்திய ஆளும் வர்க்கத்திற்கும் ஏகாதிபத்தியத்துக்கும் சேவை செய்து, அவற்றின் ஆதரவைப் பெறுவதன் மூலம் தங்களது அரசியல் மற்றும் பொருளாதார நலன்களைத் தக்கவைத்துக்கொள்வதற்காக முயற்சித்து வந்துள்ள இலங்கை தமிழ் கட்சிகள் அனைத்தும், இன்று சீனாவுக்கு எதிரான அமெரிக்கப் போர் தயாரிப்புகளுக்குள் இலங்கையை ஒருங்கிணைக்கும் வாஷிங்டனின் முயற்சிகளுக்கு முண்டு கொடுப்பதற்காக நேரடியாக பங்களிப்புச் செய்கின்றன. இதனால், டெல்லியானது காஷ்மீரில் முன்னெடுக்கின்ற கொடூரங்களுக்கும் அமெரிக்கா உலகின் பல்வேறு இடங்களில் அரங்கேற்றும் யுத்தக் குற்றங்களுக்கும் எதிராக இந்தக் கட்சிகள் சுண்டு விரலைத்தன்னும் உயர்த்த மறுக்கின்றன.

மாறாக, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக அமெரிக்காவின் முழு ஒத்துழைப்புடன் நடத்திய போரில், இலங்கை இராணுவம் செய்த யுத்தக் குற்றங்களை இலங்கையை சீனாவுக்கு எதிரான தனது மூலோபாயத்துடன் ஒருங்கிணைப்பதற்காக வாஷிங்டன் சுரண்டிக்கொள்வதற்கு தமிழ் கட்சிகள் ஒத்துழைக்கின்றன.

ட்ரம்ப்பின் இந்திய விஜயத்திற்கு சற்று முன்னதாக, இலங்கையில் யுத்தக் குற்றங்களுக்குப் பொறுப்பாளியான இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராக பெப்பிரவரி 13 அன்று அமெரிக்கா பயணத் தடை விதித்ததை பாராட்டுவதற்கு தமிழ் கட்சிகள் விரைந்தன. இதே வேளையில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை உதவி செயலாளர் அலிஸ் ஜி. வெல்ஸ் இலங்கைக்கு விஜயம் செய்து ஆர்.சம்பந்தன், எம். ஏ. சுமந்திரன் ஆகிய தமிழ் கூட்டமைப்பின் தலைவர்களுடனும் “சிவில் சமூக” தலைவர்களுடனும் கலந்துரையாடியுள்ளார்.

அமெரிக்க படைகள் சுதந்திரமாக நாட்டிற்குள் நுழையவும் இலங்கையை இராணுவத் தளமாகப் பயன்படுத்தவும் அனுமதிக்கும் இராணுவ நிலைநிறுத்தல் உடன்படிக்கையில் (சோஃபா) கையெழுத்திட கொழும்பு அரசாங்கத்தை நெருக்குவதன் பாகமாக, அமெரிக்கா சவேந்திர சில்வா மீது இந்த தடையை விதித்துள்ளது.

தமிழ் தேசியவாதிகளும் அவர்கள் சார்பான ஊடக அறிக்கைகளும், இந்த பயணத்தடையின் பின்னால் உள்ள அழிவுகரமான நோக்கங்களை மூடிமறைத்து, அதற்கு வக்காலத்து வாங்குவதில் ஈடுபட்டன. எம்.ஏ. சுமந்திரன், "போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களின் விளைவாக இது ஒரு சிறிய முன்னேற்றமாக நாங்கள் கருதுகிறோம்", “இதைப் பின்பற்றி ஏனைய நாடுகளும் பலருக்கு தடை விதிக்குமென நம்புகிறோம்” என்றார்.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன், “தமிழ் மக்களின் நீதிக்கான பயணத்தில் ஒரு முக்கிய கட்டம் தற்போது பரிணமித்துள்ளது” மைக் பொம்பியோவின் தீர்மானமாக “சில்வாவை மதிப்புக்குரியவரற்ற ஒருவராக அடையாளம் கண்டுள்ளதை நாம் மனப்பூர்வமாக மெச்சிப் பாராட்டுகின்றோம்” என்றார்.

குஜராத் படுகொலைகளின் சூத்திரதாரி என மோடிக்கு வாஷிங்டன் விதித்த பயணத்தடையை நீக்கி, அந்த மாநிலத்திலேயே அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் மோடியை “முதுபெரும் ஜனநாயகத்தின்” “மத நல்லிணக்கத்தின்” பாதுகாவலனாக கொண்டாடுகின்ற போது, வாஷிங்டன் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை விசாரித்து தண்டனை வழங்கும் என தமிழ் தேசியவாதிகள் சித்தரிப்பதை தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

காணாமல் போனவர்களை தேடி போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மீது நம்பிக்கை வைக்கத் தூண்டும் தமிழ் கட்சிகள், சவேந்திர சில்வா மீது பயணத் தடையை விதித்த போது அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் பொம்பியோ, இலங்கையுடனான வாஷிங்டனின் எதிர்காலத் திட்டம் பற்றி மேலும் கூறியவற்றை மூடிமறைத்து விட்டன.

“…இலங்கையுடனான இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கும், தற்போதைய மற்றும் வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க அதன் பாதுகாப்புப் படைகளை மாற்றியமைக்க உதவுவதற்கும் அமெரிக்கா உறுதியுடன் உள்ளது,” எனத் தெரிவித்த பொம்பியோவின் அறிக்கை, வாஷிங்டன் “பாதுகாப்பு ஒத்துழைப்பு, எங்கள் பயிற்சி, உதவி மற்றும் ஈடுபாடுகளின் அடிப்படை அங்கமாக மனித உரிமைகளுக்கான மரியாதையை தொடர்ந்து வலியுறுத்தும்” எனத் தெரிவிக்கிறது.

2015 இல், சீன சார்பானதாக அமெரிக்கா கருதிய மகிந்த இராஜபக்ஷ ஆட்சியை கவிழ்த்து, மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்கவினதும் ஆட்சியை நியமிப்பதற்கு அமெரிக்கா திட்டமிட்ட ஆட்சி மாற்ற சதிக்கு தமிழ் கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியது. சிறிசேன-விக்கிரமசிங்க ஆட்சியின் கீழ், உழைக்கும் மக்களதும் இளைஞர்களதும் மற்றும் காணாமல் ஆக்கப்பட்வர்களதும் பிரச்சினைகள் தீர்க்கப்படும், அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவர், இராணுவம் ஆக்கிரமித்துள்ள நிலங்கள் விடுவிக்கப்படும் மற்றும் யுத்தக் குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவர் என்றும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்றும் தமிழ் கூட்டமைப்பு உறுதிமொழி கொடுத்தது.

அப்போதிருந்தே வாக்குறுதிகளை பறக்கவிட்ட தமிழ் கூட்டமைப்பு, தொழிலாளர்களும் போரால் பாதிக்கப்பட்டவர்களும் முன்னெடுத்த போராட்டங்களில் இருந்து சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தை பாதுகாத்ததுடன், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளையும் நடைமுறைப்படுத்த ஒத்துழைத்தது. எதிர் கட்சித் தலைவராக இருந்த ஆர். சம்பந்தன், அரசியல் கைதிகளை விடுவிக்க “சிறைச்சாலை சாவிகள் என் சட்டைப் பையில் இல்லை” என்றும் “நீண்ட பயணத்தில் இருக்கையில் சின்ன சின்ன பிரச்சினைகளை தூக்கிப்பிடிக்க முடியாது” என்றும் திமிர்த்தனமான பதில்களை தெரிவித்தார்.

கடந்த வருடம் ஈஸ்ட்டர் பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து, சிறிசேன அழைப்பு விடுத்த “அனைத்துக் கட்சி கூட்டத்தில்” பங்குபற்றி அவசரகால சட்டத்தை மீண்டும் அமுல்படுத்தவும் பொலிஸ்-அரசு எதேச்சதிகாரத்தை ஸ்தாபிக்கவும் தமிழ் கூட்டமைப்பினர் வாக்களித்தனர்.

அமெரிக்கச் சார்பு அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர், வாஷங்டனும் ஐ.நா.வும் இராணுவம் செய்த குற்றங்களை விசாரிக்கும் பொறுப்பை இலங்கை அரசாங்கத்திடமே ஒப்படைக்கும் ஒரு கூட்டுத் தீர்மானத்தை மனித உரிமை பேரவையில் நிறைவற்றின. இந்த ஏமாற்று வேலையைத் திட்டமிடுவதில் தமிழ் கூட்டமைப்பு நேரடியாகவே பங்காற்றி இருந்தது.

மீண்டும், தமிழ் தேசியவாத கட்சிகள், 2019 நவம்பரில் நடந்த ஜனாதிபதி தேர்தலிலும், இனவாத யுத்தத்தை ஆரம்பித்து வைத்து முன்னெடுத்த ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிக்குமாறு அழைப்பு விடுத்தன. ஐக்கிய தேசிய கட்சியால் தூண்டிவிடப்பட்ட 1983 ஜூலை கலவரத்தில் 371 தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் 100,000 இற்கும் மேற்பட்டோர் வீடற்றவர்கள் ஆயினர்.

எவ்வாறெனினும், கொழும்பு அரசாங்கத்துடன் பேரம் பேசுவதற்காக வாஷிங்டனின் அல்லது புது டெல்லியின் ஆதரவைப் பெறுவதில் தமக்கிடையே தந்திரோபாய வேறுபாடுகளை மட்டுமே கொண்டுள்ள தமிழ் கட்சிகள், பிராந்தியத்தில் சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் ரத்தக்களறிமிக்க போர் தயாரிப்புகளுக்கு முண்டு கொடுப்பதில் விதவிதமான திட்டங்களை முன்வைக்கின்றன. தமிழ் கூட்டமைப்போ பெரும் வல்லரசுகளுடன் நேரடியான செயல் தொடர்புகளை பேணி வருகின்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கடந்த ஜனாதிபதி தேர்தலில், பெரும் வல்லரசுகளின் ஆதரவைப் பெறுவதற்காக, தமிழர்களின் வாக்குகளை வைத்துப் பேரம் பேசும் திட்டமொன்றை முன்வைத்தார். “இன்று இலங்கையை மையப்படுத்தி ஒரு பூகோளப் போட்டி நடக்கிறது. அது சீனா ஒருபக்கமும் மேற்கத்தைய, இந்தியாவுக்கும் இடையே நடக்கும் ஒரு போட்டியாகும். நிச்சியமாக வெல்ல விரும்பும் தரப்பு (ஜனாதிபதி வேட்பாளர்) ஏதோ ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர். அல்லது ஆகக் குறைந்தது அவருக்கு பின்னால் இருக்கக்கூடிய வல்லரசு தங்களுடைய நலன்கள் இதில் ஓரங்கட்டப்படக் கூடாது என்பதற்காக எங்களுடன் பேசி, எங்களுடைய மக்களை எப்படியென்றாலும் தாங்கள் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களிப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என்ற விடயத்தையும் நாம் பலதடவைகள் கூறி இருக்கிறோம்,” என்றார்.

கடந்த ஜூனில் தனது கட்சிக்கான “புதிய உபாயங்களை” விளக்குகையில், புது டெல்லியில் மோடியின் இந்து அடிப்படைவாத வலதுசாரி அரசாங்கம் ஆட்சிக்கு வந்திருப்பதையிட்டு மகிழ்ச்சி தெரிவித்த சி.வி. விக்னேஸ்வரன், “இந்தியாவில் பலம் பொருந்திய அரசாங்கம் ஒன்று பதவிக்கு வந்திருப்பதை நாம் வரவேற்க வேண்டும்” என ஆரம்பித்து, “இந்தியாவை இலங்கையின் வரலாற்று எதிரியாகவே கணித்து வந்துள்ள” சிங்கள முதலாளித்துவத்திற்கு எதிராக, வாஷிங்டனுக்கும் டெல்லிக்கும் எப்படி சிறப்பாக உதவமுடியும் என தனது பேராபத்து மிக்க முன்னோக்கை விளக்கினார்.

முஸ்லிம் விரோதத்தை கிளறிவிட்டு புது டெல்லியின் பிராந்திய நலன்களுக்காக அப்பட்டமாக வக்காலத்து வாங்கிய முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியான விக்னேஸ்வரன், “இந்தியாவுக்கு இன்று இருக்கும் சவால்களை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் வடமேற்கே பாகிஸ்தான் வடகிழக்கே பங்களாதேஷ் உள்ளன. இரண்டுமே இஸ்லாமியப் பெரும்பான்மை அரசுகள். பாகிஸ்தான் அணு ஆயுத பலம் கொண்டது. அத்துடன் இந்தியாவினுள் 20 கோடிக்கும் மேலாக முஸ்லிம்கள் இருக்கின்றார்கள். காஷ்மீர் இன்னமும் பிரச்சனை நிலையிலேயே இருக்கின்றது. உள்நாட்டில் இஸ்லாமிய தீவிரவாதம் எழுந்தால் நாட்டின் பாதுகாப்பு சவால்களுக்கு உள்ளாகி விடும். எனவே அயல் நாட்டு, உள்நாட்டு இஸ்லாமிய பிரச்சனையை இந்தியா தற்போது எதிர்நோக்கியுள்ளது,” என பிரகடனம் செய்தார்.

“இந்தியாவின் தெற்கத்தைய கடல்சார் பாதுகாப்பு, இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் பின்னணியிலேயே தங்கியுள்ளது என்பதை இந்தியா உணரத் தொடங்கியுள்ளது” என்பதால் “இந்தியாவுடன் சுமுகமான உறவு முறையை” பேணி அந்த பயத்தை போக்குவதற்கூடாக தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களை நிவர்த்தி செய்து கொள்ளும் ஒரு வரைபடத்தை விக்னேஸ்வரன் முன்வைத்தார். இது இந்தியா தலையீடு செய்கின்ற எந்தவொரு யுத்தத்துக்கும் ஒத்துழைப்பதற்கான தயார் நிலையை வெளிப்படுத்துவதாகும்.

அதே சமயம், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மறு எழுச்சியின் பாகமாக குறிப்பாக இந்தியாவிலும் இலங்கையிலும் இன மத வேறுபாடுகளைக் கடந்து தொழிலாள வர்க்கம் போராட்டங்களுக்கு வருவதையிட்டு பீதியடைந்துள்ள தமிழ் முதலாளித்துவக் கட்சிகள், அந்தப் போராட்டங்களை நசுக்குவதற்காகவும் பிளவுபடுத்துவதற்காகவும் மோடி அரசாங்கம் கையாளுகின்ற முஸ்லீம்-விரோத பிரச்சாரத்துடன் கைகோர்த்துக்கொள்ளும் அதே வேளை, அதற்கு சமாந்தரமாக தமிழ் இனவாதத்தை கிளறிவிடுகின்றன.

நாளாந்தம் வளர்ச்சி கண்டு வரும் தொழிலாள வர்க்கப் போராட்டங்களை எதிர்கொள்வதற்காக, ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷ தன்னுடைய நிர்வாகத்தை இராணுவமயப்படுத்தி வருவதையிட்டு தமிழ் கட்சிகள் அனைத்தும் மௌனம் காப்பது இந்த அர்த்தத்திலேயே ஆகும்.

அமெரிக்க மற்றும் இந்திய ஆளும் கும்பல்கள் செய்கின்ற குற்றங்களுக்கு துணை போவதன் மூலம் தமது நலன்களைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கும் இத்தகைய தமிழ் கட்சிகள் மீது, வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் ஒடுக்கப்பட்ட மக்களும் மலையகத்தில் வாழும் தோட்டத் தொழிலாளர்களும் நம்பிக்கை வைப்பது பேராபத்துக்கே வழிவகுக்கும்.

முதலாளித்துவ தேசியவாதிகள் ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளிகளாக மட்டுமே பாத்திரம் வகிக்க முடியும் என லியோன் ட்ரொட்ஸ்கி வரையறுத்தமை, தமிழ் கட்சிகளின் செயற்பாடுகளின் மூலம் 70 ஆண்டுகளுக்கு பின்னரும் பொருத்தமானதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஒடுக்கப்பட்ட மக்களும் உள்நாட்டு யுத்தத்தில் காணாமல் போனவர்களின் குடும்பத்தினரும் தமது நியாயமான பிரச்சினைகளுக்கு ஒரு முற்போக்கான தீர்வைக்காண, தொழிலாள வர்க்கத்தை நோக்கியே திரும்பவேண்டும். தீர்க்கப்படாமல் புரையோடிப்போயுள்ள ஜனநாயக பிரச்சினைகளை தீர்ப்பதும் இனவாதம் மற்றும் மதவாதத்துக்கும் முற்றுப்புள்ளி வைப்பதும், அவற்றின் தோற்றுவாயான முதலாளித்துவ முறைமையை தூக்கி வீசுவதற்காக முன்னெடுக்கப்படும் உலக சோசலிசப் புரட்சிக்கான போராட்டத்தின் பாகமாகவே சாத்தியமாகும். இந்த முன்நோக்குக்காகப் போராடுவது சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே.