கொரொனா வைரஸ் தொற்றுநோயும், முதலாளித்துவத்தின் தோல்வியும்

Andre Damon and David North
12 March 2020

மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலகளவில் பரவி வரும் கொரொனா வைரஸ் தொற்றுநோயின் பாதிப்புகள், அவற்றை சந்தைகளில் ஒரு விற்றுத்தள்ளலில் வெளிப்படுத்த தொடங்கிய நிலையில், திங்களன்று டோவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரியின் புள்ளிகள் வரலாற்றிலேயே அதன் படுமோசமான ஒரு வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டது.

டோவ் சந்தை 2,013 புள்ளிகள் அல்லது 7.79 சதவீதம் சரிந்தது. 23 ஆண்டுகளில் முதல் முறையாக சந்தையின் செயல்பாட்டு முறிவைத் தூண்டி, 15 நிமிடங்களுக்கு வர்த்தகத்தை இடைநிறுத்தம் செய்ய இட்டுச் செல்லும் அளவுக்கு அந்த வீழ்ச்சி மிகவும் வேகமாக இருந்தது. எரிசக்தித்துறை பங்குகள் அதிர்ச்சியூட்டும் விதத்தில் 20 சதவீதத்திற்கு வீழ்ந்தன, அதைத் தொடர்ந்து நிதியியல் பங்குகள், இவை 11 சதவீதம் வீழ்ந்தன, அதேவேளையில் அமெரிக்க இறையாண்மை கடன் பத்திரங்கள் முன்னொருபோதும் இல்லாதளவில் பாதுகாப்புக்கான பரபரப்புக்கு மத்தியில் சாதனை அளவிற்கு குறைந்து வீழ்ச்சி அடைந்தன.

இந்த விற்பனை சரிவு உலகளவில் அதிகரித்து வரும் கொரொனா வைரஸ் நோய்தொற்று எண்ணிக்கையின் பின்புலத்தில், அதுவும் குறிப்பாக இத்தாலி சம்பவங்களின் பின்புலத்தைக் கொண்டு நிகழ்ந்தது, அங்கே அரசாங்கம் நாடெங்கிலும் கட்டாய தனிமைப்படலை அறிவித்துள்ளது.

இத்தாலி, ஜேர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவில் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருவதற்கு மத்தியில் உலகளவில் அந்த நோய்தொற்று பரவுவதை அரசாங்கங்கள் தடுத்து நிறுத்த தவறி உள்ளன என்பது வாரயிறுதி வாக்கில் அதிகரித்தளவில் தெளிவானது.

Police officers and soldiers check passengers leaving from Milan main train station, Italy, Monday, March 9, 2020. (Claudio Furlan/LaPresse via AP)

ஏற்கனவே பலவீனமாக உள்ள நிலைமைகளின் கீழ் எதிர்பாராமல் வெளிப்படும் ஆனால் சமூகத்தை மிகப் பெரியளவில் பாதிக்கும் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுவதற்காக "கரும்பறவை" (black swan) என்ற சொற்பதம் சமீபத்திய ஆண்டுகளில் பொருளாதார அகராதிக்குள் நுழைந்துள்ளது.

இந்த தொற்றுநோய் மற்றும் அதன் பாதிப்பு குறித்து அதிகரித்து வரும் பதட்டமும் நிச்சயமற்றத்தன்மையுமே இந்த விற்றுத்தள்ளலுக்கு நெருக்கமான காரணமாக உள்ளது. ஆனால் இந்த விற்றுத்தள்ளலின் அளவு அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் ஆழ்ந்த பலவீனமான பெருளாதார நிலைமைகளுக்குச் சான்று பகிர்கிறது. 2008 முறிவு ஏற்பட்டு பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த உலக நிதியியல் அமைப்புமுறை ஒரு நாசகரமான முறிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது.

2008 நிதியியில் நெருக்கடிக்கு விடையிறுப்பாக முதலாளித்துவ அமைப்புமுறையை ஸ்திரப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட அந்த அணுகுமுறைகள் பாரியளவில் சொத்துக் குமிழியையும் ஒரு புதிய பொறிவுக்கான நிலைமைகளையும் உருவாக்கி உள்ளன. ஒவ்வொரு மிகப்பெரும் நிதியியல் அமைப்பையும் நொடிந்து போக செய்த அந்த நிதியியல் பதட்டத்திற்கு விடையிறுப்பதில், புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகங்கள் வங்கிகளின் இருப்புநிலைக் கணக்குகளுக்குள் நூறு பில்லியன் கணக்கான டாலர்களைக் கைமாற்றின. இதைத் தொடர்ந்து "பணத்தை அச்சடித்து விடும்" நடைமுறை (quantitative easing) மற்றும் பல ஆண்டுகளாக பூஜ்ஜிய வட்டிவிகித கொள்கைகள் ஆகியவற்றின் மூலமாக 4 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமாக செலுத்தப்பட்டது.

கூடுதல் நிதி உள்ளீடுகளுடன் நிதியியல் சந்தைகளின் ஒவ்வொரு துளியையும் மத்திய வங்கிகள் கணக்கில் எடுத்திருந்தன. மிக முக்கியமாக, கடந்த வாரம் தான், பெடரல் ரிசர்வ் மேலும் அரை சதவீத வட்டிவிகித குறைப்பின் மூலமாக பங்கு மதிப்புகளின் முந்தைய சரிவுக்கு விடையிறுத்தது.

நிதியியல் சந்தைகளுக்குள் தசாப்த காலமாக பொதுப் பணத்தைப் பாய்ச்சியதன் விளைவாக, டோவ் மதிப்பு நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த நிகழ்வுபோக்கு தான், சமூக வளத்தை நிதியியல் செல்வந்த தட்டுக்களுக்கு மேல்நோக்கி மறுபங்கீடு செய்த இயங்குமுறையாக இருந்தது. ஆனால், இவ்வளவு நீண்டகாலமாக எது மூடிமறைக்கப்பட்டு இருந்ததோ —அதாவது, சந்தை மதிப்புகளுக்கும் நிஜமான உற்பத்திக்கும் இடையிலான ஒன்றையொன்று சார்ந்த தொடர்பு— இந்த நெருக்கடியால் அம்பலப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த விற்றுத்தள்ளல் ஒரு நிலைமையை முன்னறிவிக்கிறது, அதில் வினியோக சங்கிலித் தொடரே முறியக் கூடிய சாத்தியக்கூறு உட்பட இந்த நோய்தொற்றால் அச்சுறுத்தப்படும் பொருளாதார நடவடிக்கையின் பாரிய சுருங்குதலில் இருந்து பங்குச் சந்தை தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள முடியாது.

சந்தைகள் அடிமட்டத்தில் உள்ளனவா அல்லது அடிமட்டத்திற்கு அருகாமையில் உள்ளனவா என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் சுகாதார அவசரநிலையானது பொதுவான பொருளாதார வெளியீடு மீது ஏற்படுத்தும் பாதிப்பைத் தீர்மானிப்பது சாத்தியமில்லாத போது எவ்வாறு ஒரு பகுத்தறிவார்ந்த கணக்கீட்டைச் செய்ய முடியும்? ஒட்டுமொத்த உற்பத்தியும் வினியோக ஆலைகளும் மூடப்பட நிர்பந்திக்கப்படுகின்ற போது என்ன நடக்கும்? அமசன் அல்லது ஏனைய பிரதான பெருநிறுவனங்கள் இதுபோன்றவொரு நிலைமையைக் கொண்டு எவ்வாறு “சூதாடும்”?

ஒவ்வொரு நாளும் சந்தையின் ஏற்ற இறக்கங்கள் என்னவாக இருந்தாலும் சரி —ஐயத்திற்கிடமின்றி ஒவ்வொரு மேல்நோக்கிய இயக்கமும் மீட்சிக்கான அறிகுறியாக பிரகடனப்படுத்தப்படும் என்ற நிலையில்— சமூக நெருக்கடியோ தீவிரமடைந்து வருகிறது.

திங்கட்கிழமை விற்றுத்தள்ளலுக்கான அடிப்படை காரணம் உலகளாவிய இந்த நோய்தொற்றை விட ஆழமானது என்கின்ற அதேவேளையில், இந்த நோயின் தாக்கம் ஏற்கனவே மிகப் பெரியளவில் உள்ளது. ஏதோவொரு அல்லது வேறேதேனுமொரு மிகவும் மோசமான சூழலை உணர வேண்டியதாக இருந்தால், மனித உயிர்களின் அர்த்தத்தில் விளைவுகள் முற்றிலும் பேரழிவுகரமாக இருக்கும்.

அமெரிக்காவிலும் ஏனைய ஒவ்வொரு முன்னேறிய நாட்டிலும் இந்நோய்க்கான விடையிறுப்பானது, குழப்பம், ஒருங்கிணைப்பின்மை, முற்றிலும் தயாரிப்பின்மை ஆகியவற்றால் குணாம்சப்பட்டுள்ளது.

உலகிலேயே மிகப் பணக்கார, தொழில்நுட்பரீதியிலும் விஞ்ஞானரீதியிலும் மிகவும் முன்னேறிய நாடான அமெரிக்கா —சிலிக்கான் படுகையின் தாயகமாக மற்றும் உலகின் மிகவும் பெருமைமிகு பல்கலைக்கழகங்களைக் கொண்ட இந்நாடு— இந்த தொற்றுநோயைச் சமாளிக்கக்கூடிய வகையில் மிக குறைந்தபட்ச பரிசோதனை செய்வதற்கும் கூட தகைமையற்று உள்ளது.

நாடெங்கிலும், நோயாளிகளும் மருத்துவர்களும் எப்பாடுபட்டாவது பரிசோதனை செய்ய கோரி வருகின்றனர் ஆனால் பெடரல் அதிகாரிகளோ மறுத்து வருகின்றனர். கொரொனா வைரஸ் நோயாளிகளைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கு பெரும்பாலான மருத்துவமனைகளில் சுத்தமான இடவசதி இல்லை என்பதை West Coast இன் சமீபத்திய செவிலியர் ஆய்வு ஒன்று கண்டறிந்தது. இந்த வெடிப்பை எதிர்கொள்ள மிகவும் அடிப்படை மருத்துவ பொருட்களும் கூட வேலையிடங்களில் இல்லை என்பதை குறித்த செய்திகள் உள்ளன, அதேவேளையில் போக்குவரத்து தொழிலாளர்களும் விமானத்துறை பணியாளர்களும் வேலையிடங்களில் பாதுகாப்பு சாதனங்கள் அணிவதற்கு தடுக்கப்பட்டுள்ளனர்.

ட்ரம்பால் புதிதாக நியமிக்கப்பட்ட அவரின் சொந்த தலைமை தளபதியே கூட ஒரு கொரொனா வைரஸ் நோயாளியுடன் தொடர்பில் வந்ததற்காக தனிமைப்படுத்தப்படும் அளவுக்கு குழப்பம் நிலவுகிறது, அதேவேளையில் நோய் தொற்று இருந்த ஒரு நபருடன் ஜனாதிபதி அவரே ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார் என்பதால் அவரையும் பரிசோதிக்க வேண்டுமா என்பதற்கு வெள்ளை மாளிகையால் பதிலளிக்க முடியவில்லை.

நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து தற்போதைய விகிதத்தில் அதிகரித்தால், விரைவிலேயே இப்போதிருக்கும் மருத்துவமனை படுக்கைகளின் எண்ணிக்கை நிரம்பிவிடும், அது இந்நோயின் தாக்கும் திறனை இன்னும் வேகமாக அதிகரிக்க இட்டுச் செல்லுமென வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தளவிற்கான நெருக்கடிகள் நனவில் ஆழமான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. லியோன் ட்ரொட்ஸ்கி எழுதியதைப் போல, “புரட்சிகர சகாப்தங்கள், சமூக வீழ்ச்சிகளின் சகாப்தங்கள், ஒட்டுமொத்தமாக சமூகத்தையே தலைகீழாக திருப்பி போட்டுவிடும்.” சமூகம் ஒரு வர்க்கத்தின், ஒரு ஆட்சி முறையின், ஓர் ஒட்டுமொத்த சமூக ஒழுங்கின் தோல்வியைக் கண்கூடாக பார்த்து வருகிறது.

அமெரிக்க சமூகத்தின் தகைமையின்மையை அம்பலப்படுத்தி உள்ள மரியா மற்றும் ஹார்வே சூறாவளிகள், கலிபோர்னியா காட்டுத்தீ மற்றும் போயிங் 737 மேக்ஸைச் சுற்றிய அழிவுகள் என இவற்றுக்கான நாசகரமான விடையிறுப்புகளில் இருந்து மிகப்பெரும் சமூக பிரச்சினைகளைத் தீவிரமாக தீர்க்க வேண்டியிருப்பது வரையில், தொடர்ச்சியான பல சம்பவங்களில் இந்த தொற்றுநோய் தான் மிகவும் கண்கூடான ஒன்றாக உள்ளது.

கடந்த தசாப்தத்தைப் பொறுத்த வரையில், ஒட்டுமொத்த பொருளாதார அரசியல் வாழ்வும் ஈவிரக்கமின்றி செல்வவளத்தை மேல்நோக்கி மறுபகிர்வு செய்வதை நோக்கி நோக்குநிலை கொண்டிருந்தது. ஆனால் இந்த தொற்றுநோயில் இருந்து காலநிலை மாற்றம் வரையில் எல்லா மிகப்பெரிய சமூக பிரச்சினைகளுக்குமான தீர்வுக்கும் சமூகத் தேவையைப் பூர்த்தி செய்வதை நோக்கி திருப்பிவிடப்பட்ட நிதி ஆதாரவளங்கள் அவசியப்படுகின்றன.

ஒரு மிகப்பெரிய நெருக்கடிக்குப் பின்னர் சமூகம் மிகவும் வித்தியாசமாக தெரிகிறது. வாழ்க்கை வடிவங்களே மாறிவிடுகின்றன, சமூக உறவின் வடிவங்கள் மாறிவிடுகின்றன, அரசு வடிவங்களும் மாறி விடுகின்றன.

அமெரிக்க புரட்சியின் மரபியத்தில் வெளிப்பாட்டை கண்ட ஜனநாயக அபிலாஷைகள் மீது அவதூறு பரப்பவும் மற்றும் இழிபடுத்திக் கூறவும் ஆளும் வர்க்கம் ஆனமட்டும் அனைத்தும் செய்து வருகின்ற நிலையில், அது குறித்து சமீபத்தில் நிறைய விவாதம் நடந்துள்ளன.

ஆனால் இந்நாட்டை ஸ்தாபித்த ஆவணங்கள், “மனித சம்பவங்களின் போக்கில்… எப்போதெல்லாம் எந்தவொரு அரசாங்க வடிவமும் அழிவார்ந்த முனைகளில் இருக்கையில், அதை மாற்றுவதற்கும் அல்லது அதை அழிப்பதற்கும் மக்களுக்கு உரிமை உள்ளது,” என்று காலத்தால் அழியாத வார்த்தைகளுடன் தொடங்குகின்றன என்பதை நினைவுபடுத்துவது மதிப்புடையதாக இருக்கும்.

இப்போது நாம், சமூகத்தில் முன்னர் மேலாதிக்கம் செலுத்தி வந்த சமூக மற்றும் அரசியல் உறவுகளைச் சவால் விடுக்க அவசியப்படுத்தும் ஒரு சம்பவத்திற்கு மத்தியில் உள்ளோம்.

இந்த நெருக்கடியின் விளைவு என்னவாக இருந்தாலும், சில விடயங்கள் ஏற்கனவே தெளிவாக்கப்பட்டுள்ளன. நவீன சமூகம், எல்லா பிரச்சினைகளையும் பெருந்திரளான மக்களைப் பாதிக்கும் உலகளாவிய பிரச்சினைகளாக முன்நிறுத்துகிறது. சமூகம் எதிர்கொள்ளும் மிகப்பெரும் வரலாற்று சவால்களை, தேசிய-அரசுகள் அடிப்படையிலும் மற்றும் செல்வவளத்தைத் தனியாள் முறையில் குவிப்பதன் கோட்பாட்டின் அடிப்படையிலும் அமைந்த ஒரு சமூக ஒழுங்கமைப்பின் கட்டமைப்பிற்குள்ளே தீர்க்க முடியாது.

இந்த நெருக்கடி அடுத்த கட்டத்திற்குக் கட்டவிழ்ந்து வருகிறது என்றாலும், ஏற்கனவே அது உலகளவில் ஒரு பலமான சேதியை வழங்கி உள்ளது: அதாவது, முதலாளித்துவம் வெளியேற வேண்டும். சமூகம் ஒரு விஞ்ஞானபூர்வ பகுத்தறிவார்ந்த அடித்தளத்தில் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த நெருக்கடி சமூகத்தை சோசலிச அடித்தளத்தில் மாற்றுவதை ஓர் அவசர அவசியமாக முன்னிறுத்துகிறது.