இலங்கையில் இன்னொரு தமிழ் தேசியவாத கட்சியான தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொதுத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கிறது

மார்ச் 3ம் திகதி யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளர் மாநாடு ஒன்றை நடத்திய தமிழ் தேசிய மக்கள் முன்னணி (TNPF) எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. சட்டத்தரணிகளை பெரும்பான்மையாக கொண்ட அந்த பட்டியலில், றோயல் கல்லூரி முன்னாள் அதிபர் உட்பட, சேவாலங்கா அறக்கட்டளையில் முக்கிய பதவிகளில் பணிபுரிந்த மத்தியதர வர்க்கத் தட்டினரே அடங்கியுள்ளனர்.

அமெரிக்கா திட்டமிட்ட ஆட்சிமாற்ற சதியின் மூலம் 2015 ஜனாதிபதி தேர்தலில் அதிகாரத்துக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவும், அதற்கு ஒத்துழைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பும் (TNA) அளித்த சீர்திருத்த வாக்குறுதிகள் அனைத்தும் ஒரு அரசியல் மோசடி என்பது அம்பலமாகி, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அதன் தமிழ் தேசியவாத, ஏகாதிபத்திய சார்பு அரசியலுக்கும் தமிழ் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் அதிருப்தி பெருகி வரும் நிலையில், அந்த எதிர்ப்பு, ஒரு சோசலிச முன்னோக்கின் பக்கம் திரும்பாமல், அதை மீண்டும் அதே பிற்போக்கு தேசியவாத, ஏகாதிபத்திய-ஆதரவு வேலைத்திட்டத்திற்குள் கட்டிவைக்கும் முயற்சியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இறங்கியுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, கடந்த சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தின் பாகமாக இருந்து தீவின் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தை அழித்த சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த ஒத்துழைத்தது பற்றியோ அல்லது குறைந்த பட்சம் தாம் பிரதிநிதித்துவப்படுத்தவதாக கூறும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்களை முன்னேற்றுவதற்கு ஆட்சியில் இருந்து எந்த முயற்சியும் மேற்கொள்ளாதது பற்றியோ அல்லது தமிழர் விரோத யுத்தத்தை தொடக்கிவைத்த ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) அல்லது அதை முடித்துவைத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) உடன் கூட்டு வைத்துக்கொண்டமை பற்றியோ தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு எந்த அடிப்படை வேறுபாடும் கிடையாது. மாறாக, தமிழ் முதலாளித்துவத்தின் நலனுக்கு ஏற்றவகையில் வெளியுறவுக் கொள்கையை எவ்வாறு கையாளுவது என்பதே அவர்களுக்கிடையே உள்ள தந்திரோபாய வேறுபாடுகளாகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பானது, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் (TULF) இரா. சம்பந்தன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் (ACTC) ந. குமரகுருபரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) ந. சிறிகாந்தா மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) சுரேஸ் பிரேமச்சந்திரனும் கையெழுத்திட்டு, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஊதுகுழலாக 2001 இல் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த கட்சிகளும் குழுக்களும் புது டெல்லியின் கைக்கூலிகளாகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையில் 2010 பெப்ரவரியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உருவாக்கப்பட்டது. 2009 இல் புலிகள் இராணுவ ரீதியில் நசுக்கப்பட்ட பின்னர், பாராளுமன்ற அரசியலுக்கு திரும்பிய தமிழ் தேசியவாதிகள், இன்னமும் பயங்கரவாத பட்டியலில் வைக்கப்பட்டிருக்கும் புலிகள் அமைப்பில் இருந்து தம்மை ஏகாதிபத்திய சக்திகளுக்கும், இந்திய, இலங்கை முதலாளித்துவத்திற்கும் வேறுபடுத்திக்காட்ட எடுத்த பல புலி நீக்க நடவடிக்கைகளின் முதல் வெளிப்பாடாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர்களின் வெளியேற்றம் இருந்தது.

வாஷிங்டனோ, புது டெல்லியோ தமிழீழ விடுதலைப் புலிகளுடனான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பெயரளவிலான இனங்காணலைக் கூட, அல்லது தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற வார்த்தை பிரயோகங்களுக்கு அழுத்தம் கொடுப்பதைக்கூட அவர்கள் விரும்பவில்லை.

எனினும், தொழிலாள வர்க்க விரோத கம்யூனிச விரோத சமுக அடித்தளத்தை கொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி, குறிப்பாக தமிழ் கூட்டமைப்புக்கு அமெரிக்க, இந்திய ஆளும் தட்டுக்களுடன் செயற்பட கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் அதனது வெளியுறவு கொள்கைகளை தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களின் பேரில் சிறப்பாக கையாளவில்லை என குறைகூறுவதையே தனது பிரதான செயல்பாடாக தொடர்ச்சியாக கொண்டுள்ளது.

இது பற்றி அண்மையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில், “இன்று இலங்கைத் தீவினை மையமாக வைத்து ஒரு பூகோள அரசியல் போட்டி இடம்பெறுகின்றது. அந்த பூகோள அரசியலில் தமிழ் மக்களுக்கும் காத்திரமான இடமுண்டு. அப்போட்டி ஊடாக தமிழர்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவமானது தமிழர்களுக்கான நிகரற்ற பேரம்பேசும் சக்தியாகும். எனவே அதனை அடிப்படையாக வைத்து, தமிழ் மக்களின் அரசியல் நலன்களை முன்னிலைப்படுத்தி சர்வதேச அரசியலை கையாளுமிடத்து தமிழ் தேசத்திற்கான அங்கீகாரத்தினை பெற்றுக்கொள்ளலாம் என்பது எமது திண்ணமான நிலைப்பாடு” என தெளிவுபடுத்தினார்.

பொன்னம்பலத்தின் கருத்துக்கள், 33 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தகை தேசியவாத இயக்கங்களின் வர்க்க குணாம்சத்தைப் பற்றி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தெளிவுபடுத்தியதை நிரூபித்துள்ளது. அது தெரிவித்ததாவது:

“90 வருடங்களுக்கு முன்பு லெனின் எச்சரித்தது போன்று, ஓர் ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தினுடைய முதலாளித்துவத்தின் தேசிய சுயநிர்ணய உரிமை பற்றிய எண்ணக்கரு என்னவெனில், தனது சொந்த பிரத்தியேக முன்னுரிமைகளை பாதுகாத்துக்கொள்வதும், மற்றும் ஒரு “சுதந்திரமான” நாட்டினுள் தொழிலாளர்களையும், விவசாயிகளையும் சுரண்டுவதற்கான சிறப்பான நிலைமைகளை உருவாக்கிக்கொள்வதுமாகும். இந்த சுயநலமானது, தொழிலாள வர்க்கத்தை ஒடுக்குவதனூடாக உழைப்பிலிருந்து உபரி இலாபத்தை சுரண்டுவதில் தன்னை அடித்தளமாக கொண்டுள்ள முதலாளித்துவத்தின் வர்க்க குணாம்சத்தில் புறநிலைரீதியாக வேரூன்றியுள்ளது. முதலாளித்துவ தேசியவாதத்தின் அனைத்து கன்னைகளின் கொள்கைகளையும், புலிகள் போன்ற தீவிர போக்குகளின் கொள்கைகளையும், இந்த வர்க்க காரணிகளே வழிநடத்துவதுடன் அவர்களின் அரசியல் சாமுத்திரிகா இலட்சணத்தையும் தீர்மானிக்கின்றன. முதலாளித்துவத் தேசியவாதிகள் ஒவ்வொரு கட்டத்திலும் விடுதலைப் போராட்டம் தங்கள் "கட்டுப்பாட்டிலிருந்து கைநழுவி" முதலாளித்துவ ஆட்சியை பாதுகாப்பதற்கு எதிரான ஒரு அச்சுறுத்தலாக மாறிவிடாமல் பாதுகாத்துக் கொள்வார்கள்” என 30 வருடங்களுக்கு முன்னர் எச்சரித்தது. இது இன்று முழுமையாக உறுதிப்படுத்தப்படுகின்றது. (பார்க்க: ஸ்ரீலங்காவின் நிலைமை பற்றியும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அரசியல் கடமை பற்றியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்குழுவின் அறிக்கை [PDF])

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சமுக அடித்தளம், புலிகள் அழிக்கப்பட்ட பின்னர், புலம்பெயர் நாடுகளில் உள்ள ஒரு பகுதி வணிகத் தட்டுக்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூலம் நலன் பெறமுடியாமல் போன தீவில் உள்ள மத்தியதர தட்டுக்களின் ஒரு பகுதியினருமாகும்.

இந்த தட்டுக்களின் சார்பில், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழ் வணிகர்களின் நிதிகளை நேரடியாக முதலீடு செய்யவைத்து, எந்தவித வாழ்வாதாரமும் அற்ற போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் தொழிலாளர்களையும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களையும் கொத்தடிமை நிலை சுரண்டலுக்கு உட்படுத்துவதற்கான அரசியல் அங்கீகாரத்தை பெறவே தமிழ் தேசிய மக்கள் முன்னணி வாக்கு கேட்கின்றது. இதற்காக போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியிலும் சமூக அடித்தளங்களை உருவாக்க முயல்கிறது.

புலம்பெயர்ந்த வணிகத் தட்டுக்களின் உதவியுடன் முன்னாள் போராளிகளுக்கு சிறு சிறு உதவி செய்து விளம்பரம் தேடுவது மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நடத்தும் போராட்டங்களில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை தாங்கிய வண்ணம் தலையீடு செய்து, ஏகாதிபத்திய சக்திகளை ஜனநாயகத்தின் பாதுகாலர்களாக காட்டுவது போன்ற இழிசெயல்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஈடுபடுகின்றனர்.

தீவில் உழைக்கும் மக்களுக்கு சிறைச்சாலையாக இருக்கும் திவாலாகிப்போன ஒற்றையாட்சி அமைப்பு முறைக்குள், ஏகாதிபத்திய மற்றும் இந்திய ஆளும் தட்டின் அனுசரணையோடு, தமிழ் குட்டி முதலாளித்துவ தட்டுக்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துவதே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அரசியலாகும். “தமிழ் மக்கள் காலாகாலமாக எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் தமிழ் மக்களுக்கான அரசியல் அதிகாரம் என்பதுதான் இப்போது மிக முக்கியமான தேவையாக உள்ளது. குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த அதிகாரம்தான் எமக்கு தேவை” என இந்தக் கட்சி வலியுறுத்துகிறது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்மொழியும் “ஒரு நாடு – இரு தேசம்” என்ற தீர்வு, தமிழர் விரோத இனவாதத்தை தூண்டி விடுவதற்கு சிங்கள இனவாதிகளின் கைகளிலேயே பயன்படும். உலகத் தொழிலாளர்களின் மறு எழுச்சியின் பாகமாக இலங்கையில் நாளாந்தம் வளர்ச்சியடைந்து வரும் வர்க்கப் போராட்டத்தில் தமிழ் தொழிலாளர்களும் ஐக்கிப்பட்டு போராடுகின்ற சூழ்நிலையிலயே இந்த பிரிவினையான தீர்வை முன்வைக்கின்றது.

“இரண்டு தேசங்களின் கூட்டான ஒரே நாடு” என்ற “கோட்பாடு”, ஒற்றையாட்சியின் கீழ் தமிழ் முதலாளித்துவத்திற்கு அதிகாரத்தில் 50க்கு 50 வேண்டும் என கேட்டு திவாலாகிப்போன, அகில இலங்கை தமிழ் காங்கிரசின் முன்னோக்கில் இருந்து வேறுபட்டதல்ல.

ஒரு பேரழிவுகரமான உலகப் போருக்கு அச்சுறுத்துகின்ற வகையில், இந்திய பெருங்கடலில் சீனாவின் அதிமுக்கியமான கப்பல் போக்குவரத்து பாதைகளை குறிவைத்து இலங்கையை ஒரு கடற்படைத் தளமாக மாற்றுவதற்கு அமெரிக்க, இந்திய ஆளும் தட்டுக்கள் போடும் திட்டங்களின் பின்னால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தன்னை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இதை தெளிவுபடுத்திய பொன்னம்பலம், “இந்தியா கூறும் அனைத்தையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று நாங்கள் கூறுவதற்காக, எங்களை இந்திய எதிர்ப்பாளர்கள் என்று கூறுவது போலிக் குற்றச்சாட்டாகும். ‘இந்தியாவின் நலன்களுக்குள் எமது நலன்களையும் உள்ளீர்த்து’ அதில் வெற்றிபெறும் நிலைமையை ஏற்படு்ததவேண்டும் என்பதே எமது முயற்சியாக இருக்கின்றது” என்றார்.

மோடி தலைமையிலான இந்திய ஆளும் தட்டு, கடந்த ஆகஸ்டில், இந்தியாவின் ஒரே முஸ்லீம் பெரும்பான்மை மாநிலமான ஜம்மு-காஷ்மீரில் அதன் அரை-தன்னாட்சி அரசியலமைப்பு அந்தஸ்தை நீக்கியதுடன், அப்போதிருந்து அந்த பிராந்தியத்தை பாரியளவிலான பாதுகாப்பு படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் திறந்த சிறைச்சாலையாக வைத்துள்ளது. அதேபோல பிஜேபி அரசாங்கத்தின் முஸ்லீம் விரோத குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிரான, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை வன்முறை கொண்டு அடக்குவதோடு, போராட்டக்காரர்களை “துரோகிகள்” தேசவிரோதிகள்” என பிஜேபி தலைவர்கள் தூற்றுவதோடு, சுட்டுக் கொல்வதற்கும் அழைப்புவிடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

சிறுபான்மை மக்களின் ஜனநாயக உரிமைகளை அழித்தொழிப்பதை தனது ‘நலன்களுக்கு’ உகந்ததாக கருதும் இந்திய ஆளும் தட்டுடனயே, ‘எமது நலன்களையும் உள்ளீர்த்து’ அதில் வெற்றிபெறும் நிலைமையை ஏற்படு்த்தப் போவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூறுகின்றது. இது, இலங்கையில் ஏனைய சிறுபான்மையினரின் “ஜனநாயக உரிமை” தொடர்பான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிற்போக்கு நிலைப்பாடு பற்றிய ஒரு எச்சரிக்கை ஆகும்.

தமக்கு சார்பான சிறிசேன-விக்கிரமசிங்க ஆட்சிக்காலத்தில், “சர்வதேச சமூகமும்” “ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையும்” இலங்கை போர் குற்றங்கள் தொடர்பாக எப்படி நடந்துகொண்டனரோ அதையும் விட மேலும் ஒரு படி போய், அமெரிக்காவின் சீனாவுக்கு எதிரான போரில் முன்னணி அரணாக இருக்கும் மோடி அரசாங்கம் நடத்திய அப்பட்டமான ஜனநாயக விரோத நடவடிக்கையை அவை கண்டனம் கூட செய்யவில்லை.

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் முறையீடு செய்வதன் ஊடாக அப்பாவி தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்களுக்கு நீதி பெற்றுக்கொள்ள முடியும் என இதுவரை மக்களை ஏமாற்றிவந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கையாலாகத்தனம் பரந்துபட்ட மக்களின் கண்முன்னே அம்பலமாகி அதன் மீது நம்பிக்கை இழந்து வரும் நிலையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்வதன் மூலமே யுத்தக் குற்றவாளிகளை தண்டித்து நீதி பெறமுடியும் என முதலாளித்துவ நிறுவனங்களுக்கு மேல் நம்பிக்கை வைக்கச் செய்யும் இன்னொரு பொறியை வைக்கிறது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்பது இதுவரை ஆபிரிக்கா மற்றும் ஏனைய காலனித்துவ நாடுகளில் இடம்பெற்ற குற்றங்களையே விசாரித்து வந்தது, இந்த தடவைதான் முதல் முறையாக, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க செய்த யுத்த குற்றங்களை விசாரணைக்கு எடுக்க முடிவெடுத்திருந்தது. அந்த நீதிமன்றத்தின் உருவாக்கத்தில் அமெரிக்க கையெழுத்திட்டிருக்கவில்லை, ஆகையால் குற்றவியல் நீதிமன்றம் ஆப்கானிஸ்தான் குற்றங்களை விசாரிக்க எடுத்த முடிவினை இட்டு ஆத்திரம் கொண்ட ட்ரம்ப் நிர்வாகம், இது ஒரு "அரசியல் பழிவாங்கல்" என வர்ணித்து "பொறுப்பெடுக்கமுடியாத அரசியல் நிறுவனம் ஒரு சட்டபூர்வமான அமைப்பாக முகமூடியணிந்துள்ளது" என கண்டித்தது.

அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் யுத்தக் குற்றங்களை விசாரணை செய்யலாம் என முடிவு எடுத்து குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டபோது, "நீதிமன்றம் என்று அழைக்கப்படும் சட்டவிரோத துரோகியிடமிருந்து நமது குடிமக்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் வாஷிங்டன் எடுக்கும்” என வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பேயோ உறுதியளித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்மொழிந்த வேகத்திலேயே ஐரோப்பாவில் நடத்தப்பட்டு வந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கான எதிர்கால “நடைபவனி” மற்றும் “உந்துருளி” யாத்திரை என்ற முன்னோக்குகள் திவாலாகிப்போய் விட்டன.

முதலாளித்துவ அமைப்பு முறைக்குள், தமிழ் உட்பட எந்த சிறுபான்மை மக்களினதும் நியாயமான ஜனநாயக கடமைகளும் தீர்க்கப்பட முடியாது என்பதையே சுதந்திரம் என்ற பெயரில் உள்ளூர் முதலாளிகளிடம் ஆட்சி கைமாறிய இந்திய உபகண்டத்தின் கடந்த 70 ஆண்டு கால அனுபவங்களும் மிகவும் துன்பியலான வகையில் ஊர்ஜிதப்படுத்தியுள்ளது.

காலனித்துவ மக்களது தேசிய விடுதலைக்கான போராட்டங்களை ஆதரித்த அதேவேளை, நான்காம் அகிலத்தின் சார்பில் 1940-ல் எழுதும் பொழுது ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எச்சரித்தார்: ''காலங்கடந்த தேசிய அரசுகள் சுதந்திரமான ஜனநாயக வளர்ச்சியை மேலும் எதிர்பார்க்க முடியாது. இத்துப்போகும் முதலாளித்துவத்தால் சூழப்பட்டு ஏகாதிபத்திய முரண்பாடுகளால் பின்னி பிணைக்கப்பட்டுள்ள ஒரு பின்தங்கிய அரசின் சுதந்திரமானது, தவிர்க்க முடியாது அரை கற்பனையானதாக இருக்கும். அதன் அரசியல் ஆட்சி, உள்வர்க்க முரண்பாடுகளினதும் வெளி அந்தஸ்துகளினதும் செல்வாக்கின்கீழ் தவிர்க்க முடியாது மக்களுக்கு எதிரான சர்வாதிகாரத்தினுள் சரியும். இப்படியான ஆட்சிகள்தான் துருக்கியின் ''மக்கள்'' கட்சியின் ஆட்சியும் சீனாவின் கோமிண்டாங் ஆட்சியுமாகும். நாளை இதேபோல் காந்தியின் ஆட்சி இந்தியாவில் இருக்கும்.'' என தீர்க்கதரிசனமாக எச்சரித்தார்.

இந்த எச்சரிக்கை, இன்று துன்பியலான முறையில் நிரூபணமாகி உள்ளதை இலங்கை உட்பட இந்திய உபகண்டத்தின் மில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள் தமது அனுபவத்திற்கூடாக உணரத் தொடங்கியுள்ளனர். புரட்சிகர தலைமைக்கான நெருக்கடியைத் தீர்ப்பதே தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் மத்திய வரலாற்றுப் பணியாக உள்ளது. இனம் மதம் சாதி மொழி கடந்து ஒரு சோசலிச சர்வதேசிய முன்னோக்கில் தொழிலாளர், ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டி முதலாளித்துவ அமைப்பினை தூக்கி வீசி, பொருளாதாரத்தை சோசலிச வேலைத் திட்டத்தின் மூலம் மறு ஒழுங்கு செய்வதன் மூலம் சிறுபான்மை மக்களின் ஜனாநாயக உரிமைகளைப் பாதுகாக்க முடியும். இந்திய உபகண்டத்தில் இந்த வேலைத் திட்டத்துக்காகப் போராடும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சியாகும்.

Loading