தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற வேலைநிலைமைகளில் இருந்து பாதுகாப்பை கோருகையில், கோபம் அதிகரிக்கின்றது

21 March 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கொரொனா வைரஸ் தொற்றுநோய் பரவி வருகின்ற நிலையிலும் தொடர்ந்து வேலை செய்ய வைக்கப்படுவதன் மீதும், தங்களின் உயிர் மற்றும் வாழ்க்கையைப் பாதுகாக்க எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பதன் மீதும் அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்கள் மத்தியில் சீற்றம் அதிகரித்து வருகிறது.

இண்டியானா மாநிலம் முழுவதிலும் வேலையிடத்திற்கு வெளியே கூட்டமாக ஒன்றுகூடுவதற்குத் தடை செய்யப்பட்டுள்ள போதினும் கூட, செவ்வாயன்று மதியம், அம்மாநிலத்தின் டிப்டான் பியட் கிறைஸ்லர் ஆலையில் வாகனத் தொழிலாளர்கள், அவர்களின் வேலைநேரம் தொடங்குவதற்கு முன்னதாக வேலை செய்விக்கப்படுவதை எதிர்த்து போராட அவர்களின் ஆலைக்கு வெளியே ஒன்று கூடினர். அவர்கள் வேலை செய்யவில்லை என்றால், அவர்கள் வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று நிர்வாகம் அவர்களிடம் தெரிவித்தது, இந்த அச்சுறுத்தல் தொழிலாளர்களை வேலையிடங்களுக்குத் திரும்ப செய்வதற்காக அவர்களை மிரட்ட ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கத்தால் (UAW) ஆலைதழுவிய ஒரு கூட்டத்தின் போது ஆதரிக்கப்பட்டது.

Workers assemble Ford trucks at the Ford Kentucky Truck Plant in Louisville, KY (AP Photo/Timothy D. Easley)

அதே நாள், இண்டியானாவின் லீர் சீட்டிங் ஆலையில் பல தொழிலாளர்கள், வேலை செய்ய மறுத்ததால், உதிரிபாக ஆலை மற்றும் அருகிலிருந்த சிகாகோ உற்பத்தி ஆலை மூட நிர்பந்திக்கப்பட்டது. டெட்ராய்டில் பேருந்து ஓட்டுனர்களும் பாதுகாப்பற்ற நிலைமைகளில் வேலை செய்ய மறுத்துள்ளனர்.

இதற்கு முன்னதாக, திங்கட்கிழமை டெட்ராய்ட் புறநகர் பகுதியில் பியட் கிறைஸ்லரின் வாரென் ட்ரக் உற்பத்தி ஆலையில் பெயிண்ட் பிரிவு தொழிலாளர்கள் ஒரு வேலையிட நடவடிக்கை எடுக்கப்பட்டது, மேலும் கடந்த வியாழக்கிழமை ஒன்டாரியோ விண்ட்சரில் கனடிய பியட் கிறைஸ்லர் தொழிலாளர்களாலும் இதேபோன்றவொரு வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது. நாடுதழுவிய அடைப்புக்கு மத்தியிலும் தொடர்ந்து வேலை செய்ய நிர்பந்திக்கப்படுவதன் மீது இத்தாலி மற்றும் ஸ்பெயினில் வாகனத்துறை மற்றும் ஏனைய தொழில்துறை தொழிலாளர் பரந்த வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டுள்ளனர்.

டெட்ராய்டுக்கு வெளியே அமைந்துள்ள ஸ்டெர்லிங் ஹெட்ஸ் உற்பத்தி ஆலையில் உள்ளடங்கலாக, பல வாகனத்துறை தொழிலாளர்கள் ஏற்கனவே அந்நோயில் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து உற்பத்தி நடக்க வேண்டுமென்ற குற்றகரமான முடிவின் விளைவாகவே, பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களுக்கு ஏற்கனவே இந்த நோய்தொற்று ஏற்பட்டுள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அமெரிக்கா எங்கிலுமான உற்பத்தி ஆலைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு பிணையெடுப்பு பணத்தில் பத்து பில்லியன் கணக்கிலான டாலர்களைக் கோரி வரும் போயிங் நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகம் வீட்டிலிருந்தே வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையிலும், உற்பத்தியை தொடர்வதற்காக தொழிலாளர்களை நிர்பந்தித்து வருகிறது. ஏற்கனவே போயிங் நிறுவனத்தின் பல தொழிலாளர்களுக்கு கொரொனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது, நிச்சயமாக அது இன்னும் கூடுதலாக பரவியுள்ளது.

ஒவ்வொரு நாளும் நூற்றுக் கணக்கான மக்களுடன் தொடர்பில் வரும் சேவைத்துறை தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள்.

இணையவழி விற்பனையில் தேவை அதிகரித்திருப்பதைப் பூர்த்தி செய்ய அமசன் நூறாயிரக் கணக்கான தொழிலாளர்களை நியமித்து வருகிறது. நிர்வாகத்தினர் வீட்டிலிருந்தே பணியாற்றி வருகின்ற அதேவேளையில், அமசன் சரக்கு வைப்பறைகளின் படுமோசமான நிலைமைகள் அதை போலவே உள்ளன. Buzzfeed News க்கு ஒரு தொழிலாளி கூறினார், “அவர்கள் எந்த முற்பாதுகாப்பு தீர்வுகளும் முன்வைக்கப்படவில்லை, ஆனால் தொழிலாளர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டால் பின்னர் எங்களுக்கு சம்பளம் வழங்கப்படும், இது தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கவோ அல்லது அது பாதிப்பதால் ஏற்படும் துயரத்தை [மற்றும்] மரண அபாயத்தைக் குறைக்கவோ உதவாது,” என்றார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தொழிலாளர்களின் உயிர்களை அமசன் கைவிட்டுவிட கூடியதாக கருதுகிறது. இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு அது வழங்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பும் இலாபத்தை அதிகரிப்பதற்காக வியாபாரச் செலவின் பாகமாக கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.

சமூகம் செயல்படுவதற்கு அத்தியாவசியம் இல்லாத தொழில்துறையிலும் தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என்பது பகுத்தறிவானதல்ல. மருத்துவக் கவனிப்பு போன்ற இன்றியமையா தொழில்துறையில் உள்ள தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பான வேலையிட நிலைமைகள் வழங்கப்பட வேண்டும். நாடெங்கிலும் உள்ள மருத்துவ தொழிலாளர்கள், மிகவும் அடிப்படை பாதுகாப்பு சாதனங்கள் கூட இல்லாமல் மிகவும் அபாயகரமான நிலைமைகளில் தங்களின் முக்கிய வேலைகளைத் தொடர அவர்கள் நிர்பந்திக்கப்பட்டு வருகிறார்கள் என்ற உண்மையின் மீது சீற்றம் கொண்டுள்ளனர்.

ஏனைய தொழிலாளர்கள் தற்காலிக வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர் அல்லது அவர்களின் வேலை நேரம் மற்றும் சம்பளத்தில் கூர்மையான வெட்டைப் பெற்றுள்ளனர். வேலைவாய்ப்பின்மை ஏற்கனவே அதிகரிக்க தொடங்கி உள்ளது, அது ஏறத்தாழ 20 சதவீதம் அளவுக்கு உயரக்கூடும் என்று மதிப்பிடப்படுகிறது. Uber மற்றும் Lyft ஓட்டுனர்களும் மற்றும் "சிறிய தற்காலிக ஒப்பந்தங்களுடன் நிரந்தரமற்ற தொழிலாளர்களை கொண்ட பொருளாதாரத்தின்" ஏனைய தொழிலாளர்களும் வேலை கிடைத்தாலும் கூட தொடர்ந்து அபாயகரமான நிலைமைகளுக்கு முகம்கொடுக்கின்றனர்.

தங்களின் மற்றும் தங்களினது சமூகத்தின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பையும் காப்பாற்றிக் கொள்ள கூட்டு நடவடிக்கை எடுக்க முனையும் தொழிலாளர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் தொழிற்சங்கங்களால் தடுக்கப்படுகின்றனர். பெருநிறுவனங்களின் இத்தகைய நாகரீக சேவகர்களைப் பொறுத்த வரையில், அவர்கள் பிரதிநிதித்துவம் செய்வதாக கூறும் தொழிலாளர்களின் உயிர்களை விட நிறுவனங்களின் இலாப நலன்களே முன்னுரிமையில் நிற்கிறது.

செவ்வாய்கிழமை மாலை, ஒரு குற்றகரமான தொழிற்சங்க அமைப்பான ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கம், இதன் ஒட்டுமொத்த உயர்மட்ட தலைமையும் பெடரல் ஊழல் குற்றச்சாட்டுகளின் குற்றப்பத்திரிகையின் கீழ் அல்லது குற்றப்பத்திரிகை அச்சுறுத்தலின் கீழ் உள்ள நிலையில், அது எந்த நடவடிக்கையும் எடுக்க போவதில்லை என்பதை அறிவித்தது. அதற்கு பதிலாக, “வேலையிடங்களில் CDC பரிந்துரைத்துள்ள சமூக விலக்கு நடவடிக்கைகளுக்கு இணங்க புதிய முறைகளை" கொண்டு வரும் நிறுவனங்களுடன் மட்டுமே அது இணைந்து செயல்படும் என்று குறிப்பிட்டது.

இந்த உடன்பாட்டை "பகுதியான அடைப்பு" என்று UAW வலியுறுத்தி உள்ளது. உண்மையில் பணிமுறையில் ஏறத்தாழ குறைப்புடன் உற்பத்தி தொடரும். தொழிலாளர்களின் உயிரே ஆபத்தில் இருந்தாலும் அவர்களிடம் இருந்து இலாபத்திற்கான ஒவ்வொரு பைசாவையும் உறிஞ்சி எடுக்கும் விதத்தில் உற்பத்தியை நடத்திக் கொண்டே இருப்பதே நோக்கமாகும்.

செவ்வாய்கிழமை இரவு, தொழிலாளர்கள் சமூக ஊடகங்களில் சீற்றத்துடன் விடையிறுத்தனர். அந்த உடன்பாட்டை அறிவித்த UAW பேஸ்புக் பக்கத்தில் வந்த கருத்துரைகளில் உள்ளடங்கி இருந்தவை: “ஆகவே மீண்டும், எதுவும் செய்யப்படவில்லை, தொழிலாளர்கள் பாதுகாக்கப்படவில்லை;” “ஒரு பாரிய வெளியேற்றம் எவ்வாறு இருக்கும்?;” “ஏற்கனவே ஆலைகளை மூடுங்கள்;” “நீங்கள் [UAW] மணிக்கணக்கில் பேச்சுவார்த்தை நடத்துகிறீர்கள், பின்னர் நாங்கள் ஏற்கனவே என்ன செய்து கொண்டிருக்கிறோமோ துல்லியமாக அதையே முடிவு செய்கிறீர்கள்… ஒப்பந்த பேச்சுவார்த்தைகளைப் போல தெரிகிறது!”

வைரஸ் மேற்கொண்டு பரவாமல் தடுக்கவும் மற்றும் மில்லியன் கணக்கானவர்களின் உயிர்களைப் பாதுகாக்கவும், அத்தியாவசிய தேவையில்லா அனைத்து வேலையிடங்களும் உடனடியாக மூடப்பட வேண்டும்! எந்தவொரு தொழிலாளரும், ஆணோ பெண்ணோ, அவர் வாழ்வை அபாயத்தில் வைக்க வேண்டுமென எதிர்பார்க்க கூடாது. அனைத்து உற்பத்தியும், மருத்துவத்துறை சாதனங்கள் உள்ளடங்கலாக அவசர அத்தியாவசியமானவற்றை உற்பத்தி செய்வதை நோக்கி திருப்பி விடப்பட வேண்டும். தாங்கள் செய்வது உயிர்களைக் காப்பாற்றும் என்று தெரிந்தால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியாகவே தொடர்ந்து வேலை செய்வார்கள், ஆனால் இந்த வேலையும் விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவத்துறை நிபுணர்களால் கண்காணிப்பு செய்யப்பட்டு, பாதுகாப்பான நிலைமைகளின் கீழ் நடத்தப்பட வேண்டும்.

வேலையிலிருந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் முழு சம்பளம் வழங்கப்பட வேண்டும், பெருநிறுவனங்கள் மற்றும் அரசு ஆதாரவளங்களில் இருந்து இதற்கான நிதி ஒதுக்கப்பட வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு வழங்கப்பட வேண்டும். வருமானம் குறைவதைக் காணும் எந்தவொரு தொழிலாளரும் அடிப்படை அத்தியாவசிய தேவைகளைப் பெறுவதை உறுதி செய்யும் பொருட்டு, இந்த கொரொனா வைரஸ் நெருக்கடியின் போது வாடகை, அடமானக் கடன் மற்றும் மாதாந்தர சேவைக் கட்டணங்கள் இடைநிறுத்தம் செய்யப்பட வேண்டும்.

இத்தகைய கோரிக்கைகளைப் பூர்த்தி செய்ய "பணம் இல்லை" என்ற வாதம் எல்லாவற்றையும் விட மிகவும் அர்த்தமற்ற வாதமாகும். இந்த பெருநிறுவனங்கள் அனைத்தும் அவற்றின் தொழிலாளர்களை சுரண்டியதன் மூலமாக பில்லியன் கணக்கில் இலாபங்களைக் குவித்துக் கொண்டுள்ளன. ட்ரில்லியன் கணக்கான பணம் வோல் ஸ்ட்ரீட்டை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக இத்தகைய ஆதார வளங்கள் அவசர சமூக தேவைகளைப் பூர்த்தி செய்ய திருப்பி விடப்பட வேண்டும்.

இத்தகைய கோரிக்கைகளுக்காக போராட, தொழிலாளர்கள் ஊழல்பீடித்த தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, அவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பைக் காப்பாற்றுவதற்காக, சாமானிய தொழிலாளர்கள் ஆலை குழுக்கள் மற்றும் வேலையிட குழுக்களை உருவாக்க வேண்டும்.

எதிர்ப்பை ஒழுங்கமைக்கவும், கூட்டங்கள் மற்றும் விவாதங்களை நடத்தவும், ஏனைய தொழில்துறையில் உள்ள தொழிலாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும், சர்வதேச அளவில் தொழிலாளர்களுடன் ஒருங்கிணையவும் தொழிலாளர்கள் சமூக ஊடகங்கள் உட்பட அவர்கள் வசமிருக்கும் அனைத்து வழிவகைகளையும் பயன்படுத்த வேண்டும். தொழிலாளர்களின் உரிமைகளை தனித்தனி நடவடிக்கைகளின் மூலமாக அல்ல, மாறாக ஒருமித்த போராட்டத்தின் மூலமாகவே பாதுகாக்க முடியும்.

இது, அனைவருக்கும் இலவச மற்றும் சமமான மருத்துவ சிகிச்சை மற்றும் முழுமையான பரிசோதனையை வழங்குவதற்கான கோரிக்கைகள் மற்றும் உயிராபத்தான அந்த வைரஸை எதிர்த்து போராட பாரியளவில் ஆதாரவளங்களை மறுஒதுக்கீடு செய்வதற்கான கோரிக்கைகள் உட்பட, ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தையும் பாதுகாப்பதற்கான ஒரு வேலைத்திட்டத்துடன் இணைந்திருக்க வேண்டும். நிதியியல் செல்வந்த தட்டுக்களிடம் இருந்து ட்ரில்லியன் கணக்கான டாலர்களைப் பறிமுதல் செய்து, இந்த தொற்றுநோய்க்கு உலகளாவிய ஒருங்கிணைந்த விடையிறுப்புக்காக செலவிட வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்யின் தேசிய குழு நேற்று பின்வருமாறு அறிவித்தது: “பெருநிறுவன இலாபம் மற்றும் தனியார் சொத்துக்கள் மீதான பரிசீலனைகளை விட உழைக்கும் மக்களின் தேவைகளே முற்றிலும் நிபந்தனையற்ற முன்னுரிமையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதே இந்த நெருக்கடிக்கான விடையிறுப்பை வழிநடத்தும் முக்கிய கோட்பாடாக இருக்க வேண்டும். ஆளும் வர்க்கம் அதனால் என்ன இயலும் என்று கூறுவது தொடர்பானதல்ல, மாறாக பெருந்திரளான மக்களுக்கு என்ன தேவை என்பதே விடயமாகும்.”

இந்த வேலைத்திட்டத்தை ஒழுங்கமைத்து இதற்காக போராடுவதற்கு இதுவே நேரமாகும். மில்லியன் கணக்கான உயிர்கள் பணயத்தில் உள்ளன.

Tom Hall and Joseph Kishore