இலங்கையில் தமிழ் தேசியவாதக் கட்சிகள் முஸ்லிம் விரோத பிரச்சாரத்தை மிகத் தீவிரமாக முன்னெடுக்கின்றன

இலங்கையில் நடைபெறவிருக்கும் 16 வது பாராளுமன்றத் தேர்தல், தமிழ் தேசியவாத கட்சிகள் அனைத்தினதும் முஸ்லிம் விரோத பிற்போக்கு அரசியலை அம்பலப்படுத்தியுள்ளது. தமிழ் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் எந்தவொரு அத்தியாவசிய பிரச்சினைகளையும் தீர்க்கமுடியாமல் திவாலாகிப்போயுள்ள இந்த அமைப்புக்கள், தமது சிங்கள மற்றும் இந்திய சமதரப்பினரைப்போலவே, உழைக்கும் மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்துவதற்கு போர்முழக்கம் கொட்டிக் கொண்டுள்ளனர்.

இன்று இந்தியாவில் நடப்பது போன்ற மதவெறி கலவரங்களுக்கு இலங்கையிலும் களம் அமைக்கும் திசையில் தமிழ் தேசியவாதிகள் மேலும் வலது நோக்கி வேகமாக சென்றுகொண்டுள்ளனர். இந்து வெறி பாசிச பாணியிலான இந்த போக்கு, 2016ல் வவுனியாவில் ஸ்தாபிக்கப்பட்ட சிவசேனை கட்சியின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தனின் பேச்சுக்களின் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் சிவசேனையின் சுவரொட்டிகள்

தனது கட்சியை ஆரம்பிக்கையில், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் பௌத்தர்களிடமிருந்து இலங்கையின் இந்துக்கள் அச்சுறுத்தல்களையும் சவால்களையும் எதிர்கொள்கின்றனர். தமிழ் இயக்கத்தின் தலைமை கிறிஸ்தவர்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. கடந்த 60 ஆண்டுகளாக இலங்கையின் இந்துக்கள், தமிழ் ஒற்றுமை என்ற பலிபீடத்தில் தமது நலன்களை தியாகம் செய்துள்ளனர், இனியும் அதை தொடர முடியாது, என சச்சிதானந்தன் தெரிவித்தார்.

சச்சிதானந்தன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையில் இருக்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் மத்திய குழு உறுப்பினரும் இக்கட்சியின் ஸ்தாபகரான எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் நினைவு அறங்காவல் குழுச் செயலாளரும், ஐக்கிய நாடுகள் சபையில் ஆலோசகராக ஆசியா, ஆபிரிக்கா, பசிபிக் நாடுகளில் பணியாற்றியவரும், 2015 இல் தமிழரசுக் கட்சியின் வவுனியா பொதுக்கூட்டத்தில் கட்சியின் நடுவண்குழு உறுப்பினராக செயற்பட்டவருமாவர்.

தனது கட்சியின் வேலைத் திட்டத்தை விளக்கிய அவர், "எமது முதல் குறிக்கோள் மத மாற்றத்தை நிறுத்துவதாகும். இந்து கோவில்களை மற்ற மதங்களின் அத்துமீறல்களிலிருந்து பாதுகாப்பதற்காக நாங்கள் இருக்கிறோம். உதாரணமாக, 1960 களில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி பண்டைய திருகேதீஸ்வரம் கோவிலுக்கு முன்னால் ஒரு பெரிய தேவாலயம் உள்ளது. மன்னார் மற்றும் முல்லைத்தீவில் நாங்கள் கத்தோலிக்கர்களிடமிருந்து சவால்களை எதிர்கொள்கிறோம், வவுனியாவில் இது பௌத்தத்தை திணிப்பதன் மூலம் காலனித்துவப்படுத்தும் பௌத்தர்களிடம் இருந்து வருகிறது. கிழக்கு மாகாணத்தில் இந்துக்கள் முஸ்லிம்களிடமிருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர்” என்றார்.

இந்தப் பிற்போக்குப் பிரச்சாரம், வேறுபட்ட இன, மத, மொழி பின்னணியை கொண்ட உழைக்கும் மக்களிடையே பதட்டங்களை தூண்டவும், இலங்கையில் பொலிஸ்-அரசு சர்வாதிகார ஒடுக்குமுறை சட்டங்களை மேலும் இறுக்கமாக்குவதற்குமான நிலைமைகளை சாதகமாக்கும்.

இறுதியில் இலாபமடைய இருப்பவர்கள், தமது புவியரசியல் நோக்கங்களுக்காக இலங்கையை தளமாக பயன்படுத்த முயலும் ஏகாதிபத்திய சக்திகளும், தொழிலாள வர்க்கத்தை பங்களதேஷை விட மிகவும் குறைந்த கூலியில் சுரண்ட கணக்கிடும் நாடுகடந்த கூட்டு நிறுவனங்களும், அவர்களுக்கு சேவைசெய்யும் உள்ளூர் ஆளும்தட்டுக்களும் மட்டுமேயாகும்.

பனிப்போர் காலத்தில் மத்திய கிழக்கில் சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்கை உடைப்தற்காக அமெரிக்க ஏகாதிபத்தியம் வளர்த்தெடுத்த மூஸ்லீம் அடிப்டைவாதிகளை, அது இன்றுவரை தனது மூலோபாய நலன்களை உறுதிப்படுத்தவும் தனக்கு எதிரான ஆட்சிகளை கவிழ்க்கவும் பயன்படுத்தி வருகிறது. வாஷிங்டன் மட்டுமன்றி ஐரோப்பாவும் இந்த பயங்கவாத அமைப்புக்களை தமது நலன்களை முன்னெடுப்பதற்கான கருவியாக பயன்படுத்துவதுடன், அதே பயங்கரவாத நடவடிக்கைகளை காரணம்காட்டி, உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை ஒடுக்குவதற்கும் உழைக்கும் மக்களை பிளவுபடுத்தவும் முஸ்லீம் விரோத பிரச்சாரத்தை தூண்டிவிடுவது ஒரு உலகளாவிய நிகழ்ச்சிப்போக்காகும்.

பாரிய சதி நடவடிக்கைகளுக்கூடாகவும் வர்க்கப் போராட்ட நெருக்கடிகளுக்கூடாகவும் ஒவ்வொரு நாளையும் தாண்டிக்கொண்டிருந்த கொழும்பு ஆளும்தட்டுக்கள், கடந்த வருட ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலை சுரண்டிக் கொண்டு, முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான வெறிப்பிரச்சாரத்தை தூண்டிவிட்டதோடு, உள்நாட்டு போரின் காலத்து பொலிஸ், இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் அரங்குக்கு கொண்டுவந்தன.

தமக்கிடையே தந்திரோபாய வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், இலங்கை ஆளும் தட்டின் பாகமாக இருக்கும் தமிழ் தேசியவாதிகளும் தமிழ் தொழிலாளர் ஒடுக்கப்பட்ட மக்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க அதே பிற்போக்கு வழிமுறைகளேயே இந்த தேர்தல் பிரச்சாரங்களில் மையமாக கொண்டுள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக அனுப்பப்பட்ட எச்சரிக்கைகள ஏற்கனவே அரசாங்கம் அறிந்திருந்தது என்ற செய்தி வெளியான பின்னரும்கூட, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் “இந்த (முஸ்லிம்) தீவிரவாதிகள் நாட்டை பின்நோக்கி கொண்டு சென்று விடாத வகையில் நாம் ஒன்றுபட்டு வலிமையாக வேண்டும்” என்று டுவீட் செய்தார். அத்தோடு, கூட்டமைப்பு கொழும்பு ஆட்சியை பாதுகாக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விட்ட அனைத்துக் கட்சி கூட்டத்திலும் பங்குபற்றி ஜனநாயக உரிமைகள் அனைத்தையும் ஒடுக்கவல்ல அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்துவதற்கு ஆதரவழித்தது.

கொழும்பு ஆளும் தட்டு, தமது ஆட்சியதிகாரத்தை பலப்படுத்துவதன் பேரில், முஸ்லிம் விரோத நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக, ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலை எவ்வாறு சுரண்டிக் கொண்டதோ, அதேபோல், 30 வருட உள்நாட்டு யுத்தத்தின் பேரழிவில் இருந்து இன்னமும் மீழமுடியாதிருக்கும் தமிழ் உழைக்கும் மக்களை மத, ஜாதி, பிராந்திய அடிப்படையில் பிளவுபடுத்த தமிழ் தேசியவாதிகளும் ஒருவருக்கொருவர் முந்திக்கொள்கின்றனர்.

கட்சியை ஸ்தாபித்து 3 வருடங்களில், சச்சிதானந்தன் இன்று சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிரான இந்துத்துவ பாசிச பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விடுகிறார். "இலங்கையானது இந்து பௌத்த பூமி, வேறு யாருக்கும் சொந்தமில்லை. ஆறுமுக நாவலர் மாட்டிறைச்சி சாப்பிட வேண்டாம் என வலியுறுத்தியவர். எங்கள் நாட்டில் மாடுகளை வெட்டுவதனை அனுமதிக்க முடியாது. விரும்பின் உங்கள் நாடுகளுக்குச் சென்று அங்கே மாடுகளை வெட்டுங்கள். இங்கே வந்தால் எங்கள் பூமியின் மரபுகளை பேணி நடவுங்கள். இல்லையெனில் நீங்கள் உங்கள் நாடுகளுக்கே திரும்பி விடுங்கள்” என்று அவர் மிரட்டுகின்றார். எல்லா அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் இந்த பிற்போக்கு தீவிரவாத பிரச்சாரத்தின் அபாயத்தை அலட்சியம் செய்துள்ளன.

இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக கலவரங்களை தூண்டுவதில் பேர்போன இந்திய சிவசேனா தலைவர் சஞ்சாய் ராவுத், “எங்கள் கட்சி ஒரு இந்து கட்சி. நாங்கள் உலகெங்கிலும் உள்ள இந்துக்களின் நோக்கங்களை ஆதரிக்கிறோம். நாங்கள் (இலங்கை) சிவசேனைக்கு ஆதரவளிக்கிறோம்” என்று உறுதிப்படுத்தினார். சிவசேனாவின் தற்போதைய தலைவரும் அதன் ஸ்தாபகர் பால் தக்கரேயின் மகனுமான உத்தவ் தக்கரே தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சராக உள்ளார்.

இந்த பின்னணியில், இலங்கையில் தேர்தல் அறிவிப்பு வெளியாகிய உடனேயே, ‘’தமிழ் தேசியம் காக்க, சைவ வாக்காளர்கள் யாவரும், சங்கங்கள் உள்ளூராட்சி சபைகள், மாகான சபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் சைவமும், தமிழும் காக்கும் வேட்பாளர்களுக்கே வாக்களியுங்கள்’’ என்ற சுவரொட்டிகளை சிவசேனை யாழ் மாவட்டத்தின் வடமராட்சி, தென்மராட்சி மற்றும் வவுனியா போன்ற பகுதிகளில் ஒட்டி ஆத்திரமூட்டலை அவிழ்த்துவிட்டுள்ளது.

சச்சிதானந்தனின் அரசியல் அபிவிருத்தி, கடந்த 50 வருடங்களாக அவர் பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ் தேசியவாத சமூக எதிர் புரட்சி அரசியல் திவால்நிலையின் விளைபொருளாகும்.

இந்த நிலைமையில், முன்னாள் வட மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்ற புதிய கட்சியின் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன், ‘’பல மதங்கள், தங்கள் மதங்கள்தான் உண்மையானவை, இதர மதங்கள் பிழையென்று மக்களிடையே பரப்பி, பல விதமான பிரச்சனைகளை ஏற்படுத்தியிருந்ததால், அதனுடைய எதிர்வினையாகவே இந்த மாதிரி அமைப்புக்கள் வந்திருக்கின்றன ‘’ எனக் கூறி அதி வலது சிவசேனையின் உருவாக்கத்தை நியாயப்படுத்தினார். இத்தகைய இந்து அடிப்படைவாத அமைப்புகள் பிரதமர் நரேந்திர மோடியின் பாரதீய ஜனதா கட்சி அரசாங்கத்தின் ஆதரவுடன் முஸ்லிம் விரோத வன்முறைகளில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையிலேயே விக்னேஸ்வரன் இந்த நியாயப்படுத்தலை செய்துள்ளார்.

நடைபவனியில் சைவகுண்டர்கள் (நன்றி வவுனியா நெட்)

இவற்றுக்கு மேலாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் இரண்டாக உடைந்து, தமிழ் தேசிய சைவ மக்கள் கட்சி என்ற பேரில் வவுனியாவில் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளது. மன்னார் நகர சபையில் இதே இயக்கத்தை சேர்ந்த ஒரு கத்தோலிக்கர் தலைவராக இருப்பதே இவர்கள் உடைவுக்கு கூறும் காரணமாகும்.

வடக்கை போலவ கிழக்கிலும், 2004 ஆம் ஆண்டில், பிரிவினைவாத விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்து சென்று தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பை ஸ்தாபித்து, இலங்கை இராணுவத்தின் ஒரு கூலிப்படையாக செயற்பட்டு வந்த விநாயகமூர்த்தி முரளீதரன் என்ற கருணா, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் தேர்தலில் இறங்கியுள்ளார். தற்போதைய பாராளுமன்றத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்திருக்கும் இவர், அண்மையில் ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது, “இந்த தேர்தல் களம், வேறு மாவட்டங்களுக்கு அல்லது வேறு மாகாணங்களுக்கு வேறு விதமாக அமையலாம். ஆனால், கிழக்கு மாகாணத்திற்கு இது முக்கியத்துவம் அமைந்த தேர்தலாக மாற்றமடைந்திருக்கின்றது. இதை முஸ்லிம் இனம் தக்க வைக்குதா அல்லது தமிழ் இனம் தக்க வைக்குதா என்ற கட்டத்தில் இந்த தேர்தல் களம் அமைந்திருக்கின்றது”. என்று குறிப்பிட்டார்.

தற்போது, கிழக்கில், முஸ்லிம் விரோத பிரச்சாரத்தை அப்பட்டமாக மேற்கொண்டு வரும் கருணா, விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதியாக இருந்த காலத்தில்தான், 1990 ஆகஸ்டில் காத்தான்குடி, ஏறாவூர், அக்கரைப்பற்று மற்றும் அம்பாறை போன்ற இடங்களில் 300க்கு மேற்பட்ட அப்பாவி முஸ்லிம் மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கிழக்கிலுள்ள மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பல தலைமுறையாக வாழ்ந்து வருவதுடன் அநேகமானோர் வறிய விவசாயிகளும் சிறு வணிகர்களும் ஆவர்.

முஸ்லீம் விரோத போக்கு என்பது தமிழ் தேசியவாதிகளிடையே பதில் சொல்லமுடியாத குற்றவியல் அரசியல் தொடர்ச்சியை கொண்டுள்ளது. 1990 களில் 72 மணிநேர இடைவெளியில் விடுதலைப் புலிகள் வடமாகாணத்தில் காலங்காலமாக வசித்து வந்த 50,000 க்கும் மேற்பட்ட முஸ்லீம் சிறுபான்மை சமூகத்தினை முற்றாக வெளியேற்றினர்.

இதே போன்றே, கிழக்கில் கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சதாசிவம் வியாழேந்திரன், 2018ல் முற்போக்குத் தமிழர் அமைப்பை உருவாக்கி, ஜனாதிபதி கோட்டபாயவின் ஆதரவாளராக உருவெடுத்துள்ளார். கடந்த வருட ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து தென் பகுதியிலுள்ள சிங்கள-பௌத்த அதிதீவிரவாத ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர்களில் ஒருவரான அதுரலிய ரத்ன தேரர், கண்டியில் அன்றைய முஸ்லீம் அமைச்சர்களையும், மாகாண ஆளுநர்களையும் பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரத நாடகத்தை மேற்கொண்டபோது, வியாழேந்திரன் மட்டக்களப்பில் பிக்குவுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

மார்ச் 15ம் திகதி அம்பாறையிலுள்ள கல்முனை தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற ஈழ மக்கள் ஜனநாயக கட்சி என்ற இராணுவத்தின் இன்னுமொரு கூலிப்படைக் கட்சியின் தலைவரும், தற்போதைய கோட்டபாய அரசின் மீன் வளத்துறை மந்திரியுமாகிய டக்ளஸ் தேவானந்தா, கருனாவுடன் இணைந்து அம்பாறையிலுள்ள முஸ்லிம்களை தேர்தலில் தோற்கடிப்பதற்கான தனது தயார் நிலையைக் வெளிப்படுத்தினார். ‘’எங்களுக்குள் பிரச்சனை இல்லை. நாங்கள் பொதுவான நிலைப்பாட்டில் உள்ளோம்’’ என்றார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஸ்தாபிக்கப்பட்ட சுதந்திர அரசுகள் என்றழைக்கப்படுபவற்றில் எதுவும் வெகுஜனங்களின் ஜனநாயக அபிலாசைகளையோ அல்லது அடிப்படையான சடத்துவ தேவைகளையோ பூர்த்தி செய்ய இலாயக்கற்றவை என்பதை இந்திய உபகண்டத்தின் அனுபவங்கள் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த நிகழ்வுப்போக்கில், தேசிய முதலாளித்துவம் ஏகாதிபத்திய சூறையாடலின் பிரதான பங்காளியாகவே செயல்பட்டிருக்கிறதே அன்றி, தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக அல்ல.

இந்த அரசுகள், அழுகிப் போய்க்கொண்டிருக்கும் முதலாளித்துவத்திற்கான ஒரு சிறைக்கூடமாக நிரூபிக்கப்பட்டுள்ளன. இத்தகைய நிலைமைகளில் இருந்தே, முதலாளித்துவத்தின் ஆரவாரமான ஒப்புதலுடன் இனவாத, மதவாத யுத்தப் பயங்கரங்கள் எழுகின்றன. முதலாளித்துவ ஆட்சி நீடிக்கும் வரை இத்தகைய நிலை மாறப்போவதில்லை என்பதையே கடந்த கால அனுபவங்கள் தீர்க்கமாக நிரூபித்துள்ளன.

தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்கள், அரசு அதிகாரத்தை தம் கையிலெடுக்கவும் பொருளாதார வாழ்க்கையை தனியார் இலாபத்திற்காக அன்றி, சமூகத் தேவைகளின் அடிப்படையில் மறுஒழுங்கு செய்வதற்காக ஒரு சோசலிச, சர்வதேசிய மற்றும் ஏகாதிபத்திய-எதிர்ப்பு இயக்கத்துடன் தம்மை இணைத்து போராடுவது இன்றியமையாததாகும்.

சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே இன, மத, மொழி கடந்து தொழிலாள வர்க்கத்தை சோசலிச சர்வதேசிய முன்னோக்கில் ஐக்கியப்படுத்த போராடும் ஒரே இயக்கமாகும். அது தெற்காசிய சோசலிச அரசுகளின் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச அரசு என்ற வடிவிலான தொழிலாளர்-விவசாயிகளின் அரசை ஸ்தாபிக்கப் போராடுகின்றது.

இந்த பொதுத் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்களை ஆதரிக்குமாறும், அதை தொழிலாளர், ஒடுக்கப்பட்ட மக்களின் கட்சியாக கட்டியெழுப்ப முன்வருமாறும் உலக சோசலிச வலைத் தள வாசகர்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

Loading