மோடி அரசாங்கம் மில்லியன் கணக்கான மக்களை மிக மோசமான கொரோனா வைரஸ் பாதிப்புக்குள் விட்டுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுதல் பற்றிய கவலை மிகவும் பரந்தளவில் அதிகரித்திருக்கும் வேளையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் மில்லியன் கணக்கான மக்களை மிக மோசமாக பாதிக்கப்படும் நிலையில் விட்டுள்ளது. காஸியாபாத் உள்ளூரில் வியாழன் அன்று பரிசோதித்ததில் ஒரு நபரும் மற்றும் மார்ச் 31 அன்று இத்தாலி பயணிகளை பரிசோதித்தில் 13 நபர்களுமாக நாட்டின் உறுதிப்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்திருக்கிறது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ச வர்தன் கூற்றுப்படி 27,000 பேர் சமூக கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

சிறுவர்கள் மத்தியில் வைரஸ் பரவாமால் தடுப்பதற்கு “முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக” மார்ச் 31ம் தேதிவரை பிராந்தியத்தின் அனைத்து ஆரம்ப பள்ளிகளை மூடுவதற்கு தலைநகர் புதுடெல்லியின் உள்ளூர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்தியாவின் மக்கள் தொகை அடர்த்தியாக இருக்கும் குறிப்பாக - புதுடெல்லி, மும்பாய், கொல்கத்தா மற்றும் சென்னை -போன்ற பரந்த நகரங்களில் மிக அதிகமாக உள்ள நிலையிலும் அத்துடன் பொது சுகாதாரம் மற்றும் தூய்மைப்படுத்தும் அமைப்புகள் மோசமான நிலையிலும் இருக்கும் போது, குணப்படுத்தமுடியாத மிகவேகமாகப் பரவக்கூடிய ஆபத்தினை இந்திய மக்கள் முகங்கொடுக்கின்றனர். இதனால் தொழிலாளர்கள் மற்றும் பிற கிராமப்புற மற்றும் நகர்புற ஏழைகள் மிகவும் அழிவுகரமான தாக்கத்துக்குள்ளாக்கப்படுவார்கள். நாட்டின் மிகப் பெரிய பணக்காரர் மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தின் சலுகைபெற்ற பிரிவினர் தனியார் மருத்துவமனைகளில் விலையுயர்ந்த சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள முடிகின்ற நிலையில் பெரும்பாலான தொழிலாளர்கள் பொது மருத்துவனையைத்தான் சார்ந்திருக்கிறார்கள்.

இருந்தபோதிலும், மோடியின் இந்து மேலாதிக்க பாரதிய ஜனதாக் கட்சி (பிஜேபி) அரசாங்கம், உலகம் முழுவதிலுமுள்ள அதன் சகாக்களைப் போல, தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு முழுமையாக விருப்பமின்மை மற்றும் இயலாமையைக் காட்டியிருக்கிறது. இந்த ஆபத்தை குறைத்து மதிப்பிடும் ஒரு இழிந்த முயற்சியாக “அச்சப்படுவதற்கு தேவையில்லை” என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அடுத்தடுத்த வந்த தேசிய மற்றும் மாநில அரசாங்கங்களால் வறிய நிலைமைகளுக்கு தள்ளப்பட்ட மில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்கள் எதிர்கொள்ளும் நிலை அவர்கள் தொடர்பான இந்திய ஆளும் உயரடுக்கின் அவமதிப்பு மற்றும் அலட்சியமுள்ள அரசாங்கத்தின் அணுகுமுறையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 800 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் ஒரு நாளைக்கு 2 அமெரிக்க டாலருக்கும் குறைவான வருமானத்தையே கொண்டிருக்கிறார்கள்.

டைம் டு கேர்” ஆக்ஸ்பாம் ஆய்வின் கூற்றுப்படி சமூகத்தின் உச்சியிலிருக்கும் 63 பில்லியனர்களின் செல்வம் 2018-19 நிதியாண்டு வரவுசெலவுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் உள்ளதைவிட அதிகமாக இருக்கிறது. இந்திய மக்கள்தொகையில் அடிநிலையில் இருக்கும் 70 சதவீதத்திலுள்ள 953 மில்லியன் மக்கள் வைத்திருப்பதைவிட இந்தியாவின் முதல் 1 சதவீதத்தினர் நான்குமடங்குக்கும் அதிகமான செல்வத்தை வைத்திருக்கின்றனர்.

இந்த நோய்க்கு எண்ணற்ற ஆயிரக்கணக்கான அல்லது மில்லியன் கணக்கான இந்தியர்கள் பலியாகக்கூடும் எனும் அபாயத்திற்கும் இந்த பிரமாண்டமான சமூகத் துருவப்படுத்தலுக்கும், இந்திய அரசியல் ஸ்தாபனம் மிகப்பெரிய பொறுப்பாளியாக உள்ளது. உலகெங்கிலும் இருக்கும் அதன் சகாக்களைப் போல சீனா, இத்தாலி, ஈரான், தென்கொரியா மற்றும் ஜப்பான் போன்ற மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வருபவர்களின் விசாக்களை தடைசெய்வதைப் போன்று மோடி அரசாங்கமானது கொரோனா வைரஸ் பரவுதல் என்ற பெயரில் தேசியவாத எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை செயல்படுத்துகிறது.

வைரஸ் பரவுவதிலிருந்து தடுப்பதற்கு ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையங்களில் எல்லா நாடுகளிலிருந்தும் வரும் பயணிகள் பரிசோதிக்கப்படுவார்கள் என சுகாதாரத் துறை அமைச்சர் வர்தன் அறிவித்திருக்கிறார். மார்ச் 4 அன்று, “கொரோனா வைரஸ் பிரச்சனையின் மீது தயார்நிலை மறுஆய்வு மற்றும் பொறுப்பு” எனும் ஒரு அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு பிரதமர் அலுவலகத்தால் வழங்கப்பட்ட அறிக்கையில் “எங்கள் தயார் நிலையை மேம்படுத்துவதற்கு” இவைகள் “முக்கியமான மாற்றங்கள்” என மோடி அரசாங்கம் பெருமைப்பட்டுள்ளது.

மாநில அரசாங்கத்துடன் இணைந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் முறையான பரிசோதனை, தனிமைப்படுத்துதல் மற்றும் தடுப்புக்காப்பு போன்றவற்றை திறக்கவேண்டி விரைவாக செயல்படுத்துவதற்கு “முடிவுகள்” எடுக்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. இருந்தபோதிலும், இத்தகைய சுகாதாரப் பாதுகாப்பு திட்டத்திற்கு எவ்வளவு நிதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதில் பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையில் முற்றிலும் அமைதியாக இருக்கிறது.

மோடியின் அரசாங்கத்தின் கூற்றுக்கள் எதுவாக இருந்தாலும், அதிக அளவில் தேவையான சுகாதார பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு ஒரு விரைவான திட்டத்தை ஆரம்பிப்பதைப் போன்ற எந்தவொரு அர்த்தமுள்ள நடவடிக்கைகள் எடுப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. பிஜேபி அரசாங்கம் சமீபத்திய ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் பாதுகாப்பு செலவினங்களுக்காக ஒரு மிகப்பெருமளவில் 66 பில்லியன் அமெரிக்க டாலரை ஒதுக்கியிருக்கும்போது சுகாதாரத்திற்காக வெறும் 9.7 பில்லியன் அமைரிக்க டாலரை தான் ஒதுக்கியிருக்கிறது. அதன் பிற்போக்குத்தனமான புவிசார் அரசியல் விருப்பினை பின்தொடர்வதற்காகவும் சீனாவை அச்சுறுத்தும் நோக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தியத்துடன் அதன் கூட்டணியை வளர்ப்பதற்குமான அதன் ஆர்வத்துடன் ஒப்பிடுகையில் உழைக்கும் மக்கள் மற்றும் ஏழைகளின் ஆரோக்கியத்தில் இந்திய உயரடுக்கின் முழுமையான பெரும் அலட்சியத்தை இது அடிக்கோடிட்டுக்காட்டுகிறது.

போதுமான நிதியுதவி இல்லாத இந்தியாவின் பொது சுகாதார அமைப்பு ஒப்பீட்டளவில் தடுக்கக்கூடிய நோய்களைக் கூட சமாளிக்கமுடியாது. தமிழ்நாடு, வேலூரில் இருக்கும் ஒரு முன்னணி வைராலஜிஸ்ட் டாக்டர் யாகோப் ஜான் மார்ச் 4 அன்று Scroll.in க்கு அளித்து பேட்டியொன்றில் “காசநோய், மலேரியா மற்றும் கொலரா போன்ற பல்வேறு நோய்களை கண்காணிப்பதற்கு எங்களிடம் தனி நேரான திட்டங்கள் இல்லை” என கூறியுள்ளார்.

இந்தியாவில் H1N1 சளிக்காய்ச்சலில் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 5 சதவீதம், சராசரி உலக அளவில் H1N1 ஆல் இறந்தவர்கள் 0.1 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 50 முறை அதிகம் என்ற உண்மையை மேற்கோள்காட்டி, இந்தியாவில் அதிகமான நோயாளிகள் இறக்கின்றனர் அதாவது திறம்படக் கண்காணிப்பதற்கும் நோய்களை சிகிச்சையளிப்பதற்கும் முடியாத காரணத்தினால் தான் இந்த நிலை என அவர் தெளிவுபடுத்தியுள்ளார். உலகளாவிய இறப்பு விகிதத்துடன் கொரோனா வைரஸ் தற்போது 3 சதவீதத்தில் இருக்கிறது, இந்தியாவில் ஒரு கணிசமான அதிக இறப்புக்களின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில் பேரழிவுகளைத் தரக்கூடிய விளைவுகளைத் தரும்.

இந்தியாவில் மருத்துவர்கள் 1,457 பேருக்கு 1 மருத்துவர் என்ற விகிதத்தில் இருக்கிறது WHO பரிந்துரையின்படி குறைந்தபட்சம் 1000 க்கு 1 இருப்பது நல்லது. தேசிய சுகாதார விபரம் 2019 கூற்றின்படி, அரசு மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளை நம்பி வாழும் கிராமப்புறங்களின் மக்களுக்கு 1 க்கு 10,296 சதவீகிதமாக அது வீழ்ச்சியடைகிறது. “கிராமப்புற பகுதிகளில் குறிப்பாக தகுதிவாய்ந்த சுகாதார நிபுணர்களின் கடுமையான பற்றாக்குறை இருக்கிறது” என்று இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் சிறிநாத் ரெட்டி கூறியுள்ளார்.

இந்தியா 1.34 பில்லியன் மக்களைக் கொண்ட ஒரு மிகப்பெரும் மக்கள்தொகையை கொண்டிருக்கிற நிலையில் பதிவுசெய்யப்பட்ட செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் அதிகபட்சமாக வெறும் இரண்டு லட்சம் (2,048,979) பேர் மட்டுமே இருக்கிறார்கள். மேலும் கொரோனா வைரஸ் போன்று வான்வழித் தொற்று நோயாளிகளைப் பாதுகாப்பதற்கு நோய்த் தொற்றுக் கட்டுப்பாட்டு பயிற்சி பெரும்பாலானவர்களுக்கு தேவையாக இருக்கிறது.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலைமைகளில் இருக்கும் நோயாளிகள் சிகிச்சைக்குப் போதுமான தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) வசதிகளைக் இந்திய பொது சுகாதார அமைப்பு கொண்டிருக்கவில்லை. “Covid-19 (கொரானா வைரஸ்) பாதிக்கப்பட்ட சுமார் 5 சதவீதமானவர்களுக்கு தேவைப்படும் போதுமான தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டில்கள் இல்லை” என கர்நாடகாவிலிருக்கும் மணிப்பால் வைராலாஜி கல்விநிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஜி. அருண்குமார் கூறியிருக்கிறார்.

உற்பத்தியாளர்கள் பூகோள ரீதியான தேவையை அதிகரிப்பதற்குத் தவறிய நிலையில் அறுவைச் சிகிச்சை முகக் கவசங்களின் விலை ஏற்கனவே பலமடங்கு அதிகரித்துவிட்டன. “உலகளவில், அரசாங்கங்கள் அவசரகாலத்தில் பயன்படுத்துவதற்காக இந்த தனிப்பட்ட பாதுகாப்பு பொருட்களை கையிருப்பில் வைத்திருக்கின்றன. இந்தியாவில் அத்தகைய அமைப்பு நம்மிடம் இல்லை” என அனைத்து உணவு மற்றும் மருந்து உரிம உரிமையாளர் அறக்கட்டளை (All Food and Drug License Holder Foundation) யின் தேசிய தலைவர் அபே பாண்டே கூறியுள்ளார். இந்தியாவில் அறுவைச் சிகிச்சை முகக் கவச உற்பத்தியாளர்கள் அதிகளவில் இல்லை. தொழிலில் ஆதிக்கம் செலுத்தும் சில டஜன் நடுத்தர அளவு நிறுவனங்கள் ஒரு நாளைக்கு 20,000 க்கும் 100,000 க்கும் இடையில் முகக்கவசங்களை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கின்றன. அது பெரும் எண்ணிக்கைக்களில் ஒரு தீடீர் தேவையை சமாளிக்க போதுமானதாக இல்லை.

உங்கள் கைகளை அடிக்கடி கழுவுங்கள்” போன்ற “அனைவருக்கும் அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகள்” போன்ற வழிகாட்டுதல்களை வழங்குவதுடன் சுகாதாரத் துறை சுருக்கிக்கொண்டாலும் இந்தியாவின் பெரும்பான்மையான மக்களுக்கு இது கடினமானதாகும்.

இங்கிலாந்தைத் தளமாகக் கொண்ட ஒரு தொண்டு நிறுவனமான வாட்டர்ஏய்ட் மூலம் வழங்கப்பட்ட 2018 அறிக்கையின்படி, கிட்டத்தட்ட 163 மில்லியன் மக்கள் (12 சதவீதம்) வீட்டுக்கருகில் சுத்தமான தண்ணீருக்கான வழியின்றி இருக்கிறார்கள். 2030 இல் 50 சதவீத தண்ணீர் பற்றாக்குறை இந்தியாவில் இருக்கும் என ஆசிய அபிவிருத்தி வங்கியானது முன்கணித்திருக்கிறது. இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 19,000 கிராமங்களுக்கு 2016-17 இல் வழக்கமான நீர் வழங்கல் இல்லாதிருந்தது என குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சக புள்ளிவிபரம் காட்டுகிறது. இது கொரோனா வைரஸ் நோயின் தீடிர் வெறியாட்டம் மில்லியன் கணக்கான இந்தியர்களுக்கு எவ்வளவு பயங்கரமானதாக இருக்கப்போகிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

அதே நேரத்தில், 2018-19 இல் 87 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்த இந்தியா-சீனா வர்த்தகத்தின் மீது, நோய்த்தொற்று தாக்கத்தினால் மில்லியன் கணக்கான வேலைகள் அபாயத்தில் இருக்கின்றன. நுண்ணுயிர் எதிர்ப்பிகள், உரம், ஆடை மற்றும் வாகனங்கள் என பல்வேறு இந்திய நிறுவனங்கள் சீனாவிலிருந்து விநியோகிக்கப்படும் பொருட்களை நம்பியிருக்கின்றன மேலும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் விநியோகப்பொருட்கள் அளிப்பில் ஏதாவது தடைகள் ஏற்படுமாயின் அது இந்தியாவிற்கு நீண்டகால பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும்.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய மூலப்பொருட்கள் தடைபட்டதால் ஏற்கனவே இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.செவ்வாயன்று, இந்தத் தொழிலுக்கு அதன் வெளிப்படையான அனுமதியின்றி நுண்ணுயிர் எதிர்ப்பிகளில் (antibiotics) பயன்படுத்தப்படும் 26 மருந்துகள் மற்றும் சேர்வைப் பொருட்களை (ingredients) ஏற்றுமதி செய்வதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவிட்டது. இலங்கையைப் போன்ற ஒப்பீட்டளவில் இந்தியாவிலிருந்து மலிவு மருந்துகளை நம்பியிருக்கும் மற்ற நாடுகளை இது மோசமாக பாதிப்புக்குள்ளாக்கியது.

இந்த தீவின் பொது சுகாதார அமைப்பு பெரும்பாலும் இந்தியாவலிருந்து வரும் மருந்துகளையே பயன்படுத்துகின்றது. இந்த நாடுகளில் அவர்களுடைய அடிப்படை சுகாதாரத் தேவைகளுக்காக அரசு மருத்துவமனைகளை சார்ந்து இருக்கும் பெரும்பான்மையான தொழிலாள வர்க்கமும், கிராமப்புற ஏழைகளுமே பெரும் பாதிப்புக்குட்பட்டவர்களாக இங்கே இருக்கிறார்கள்.

Loading