ஊடகத்துறை மீதான பூகோள யுத்தத்தின் மத்தியில், இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது

Naveen Dewage
27 March 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இலங்கை இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள கிழக்கு மாகாணத்தில் ஏழு ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 23 அன்று, மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தினால் (ம.த.ஊ.ச.) இயக்கப்படும், மட்டக்களப்பு ஊடக மையத்தின் ஒரு மாநாட்டு மண்டபத்தின் கதவின் ஊடாக போடப்பட்டிருந்த தமிழ் மொழியிலான ஒரு துண்டுப்பிரசுரத்தின் மூலமே இந்ந அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்த்து.

Death-threat leaflet targetting Batticaloa journalists

அன்றுமாலை, அந்த மண்டபத்தினைப் பாவிப்பதற்காக திறந்தபோது, சில உறுப்பினர்களால் அந்த துண்டுப்பிரசுரதம் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த அச்சுறுத்தல்கள், நவம்பர் மாதம் இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதிவியேற்றதைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு எதிராக புதுப்பிக்கப்படும் தாக்குதல்களின் ஒருபாகமாகவே விடுக்கப்பட்டுள்ளன.

“வெளிநாட்டு புலிகளின் நிதி உதவியுடன் செயற்படும் இந்த செய்தியாளர்கள் அரசாங்கத்துக்கு எதிரான செய்திகளைப் பரப்புகின்றார்கள். நாங்கள் அவர்களுக்கு மரண தண்டனையை விரைவில் விதிப்போம்.” என அந்த துண்டுப்பிரசுரங்கள் தெரிவித்தன.

செல்வகுமார் நிலாந்தன் (தமிழ் கார்டியன்), புண்ணியமூர்த்தி சிசிகரன் (சிரசரிவி), குணராசா சுபோஜன் மற்றும் நல்லதம்பி நித்தியானந்தன் (சக்திடி.வி.), கிருஸ்ணகுமார் (அரசுக்கு சொந்தமான சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு) மற்றும் வடிவேல் சக்திவேல், சுப்பிரமணியம் குணலிங்கம் (யாழ்ப்பாணத் தினக்குரல்) ஆகியோர் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். சண்டே லீடர்பத்திரிகையின் ஆசிரியர் லசன்த விக்ரமதுங்க, 2009 ஜனவரி 8 அன்று, கொழும்பு கல்கிசையில் உள்ள அவரது அலுவலகத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது, விமானப்படையின் சோதனைச் சாவடிக்கு 100 மீட்டர் தூரத்திலும் மற்றும் ஒரு உயர்பாதுகாப்பு வலயத்துக்கு அருகிலும் வைத்து, பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

விக்ரமதுங்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவையும் மற்றும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தினையும் விமர்சித்து வந்தவராவார். அவர் இராணுவ ஊழல்களை அம்பலப்படுத்தியிருந்தார். இந்த ஊழல்களுடன், தற்போதைய ஜனாதிபதியும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷவைத் தொடர்புபடுத்தினார். இதற்கு எதிராக ராஜபக்ஷ அவதூறு வழக்கு ஒன்றினை தொடர்ந்தார்.

Lasantha Wickrematunge funeral banners [Source: Wikimedia commons]

இந்த அச்சுறுத்தல்களையும் மீறி, ம.த.ஊ.ச. ஜனவரி 25 அன்று படுகொலை செய்யப்பட்ட இலங்கை ஊடகவியலாளர்களை நினைவு கூர்ந்து ஒரு நிகழ்வினை நடத்தியிருந்தது. இலங்கை ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர் அமைப்பினைச் சேர்ந்த ஒரு பெயர் குறிப்பிடாத ஊடகவியலாளர், ஜனவரி 23 அன்று “மரணதண்டனை” எனக் குறிப்பிடும் துண்டுப்பிரசுரத்தின் நோக்கம், “வீழ்ந்துபோன எமது சகாக்களுக்காக நாங்கள் நீதி கோருவதை உடனடியாக நிறுத்தும் ஒரு முயற்சியாகும்” எனக் கூறினார்.

சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனத்துடன் (ச.ப.ச.) தொடர்புடைய, ஊடக தொழிலாளர் தொழிற்சங்க சம்மேளனம் (ஊ.தொ.தொ.ச.), குறித்த 7 பத்திரிகையாளர்களும் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த இரண்டு அமைப்புகளும் எல்லைகளற்ற பத்திரிகையாளர்கள் அமைப்பும் இந்த துண்டுப்பிரசுர அச்சுறுத்தல்களைக் கண்டனம் செய்தன. பத்திரிகையாளர்களுக்கு “பொருத்தமான பொலிஸ் பாதுகாப்பினை” வழங்குமாறு கோரிக்கை விடுத்தன.

இந்த புதிய அச்சுறுத்தல்கள் – கடந்த காலத்தினைப் போல – அனேகமாக இராணுவம் அல்லது பொலிஸ் உடன் இணைந்து வேலை செய்யும் ஒரு துணைப்படைக் குழுவால் விடிக்கப்பட்டிருக்க முடியும். இந்த அமைப்புக்கள் கடத்தல்,வன்முறை தாக்குதல்கள் மற்றும் பத்திரிகையாளர்களையும் அரசியல் எதிரிகளையும் படுகொலை செய்தல் போன்ற குற்றங்களுடன் கொடூர வரலாற்றைக் கொண்டவையாகும். கடந்த தாசாப்தங்களில், இலங்கையில், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் டசின் கணக்கான பத்திரிகையளர்கள் துணைப்படைக் குழுக்களால் கொல்லப்பட்டுள்ளார்கள்.

வியாழக்கிழமை, உழைக்கும் பத்திரிகையாளர் கூட்டமைப்பு மற்றும் ஊ.தொ.தொ.ச. உட்பட இலங்கையில் உள்ள பல பத்திரிகையாளர் கூட்டமைப்பின் அங்கத்தவர்கள், அண்மைய அச்சுறுத்தல் மற்றும் துணைப்படைக் குழுக்களால் கொலப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் உடல் ரீதியில் பாதிக்கப்பட்ட சகல ஊடகத் தொழிலாளர்களையும் நினைவு கூர்ந்து, கண்டனம் தெரிவிக்கும் வகையில் “கறுப்பு ஜனவரி” ஆர்ப்பாட்டத்தை கொழும்பில் நடத்தினார்கள்.

ஜனவரி 23ம் திகதி மட்டக்களப்பு பத்திரிகையாளர்களுக்கு நடந்த அச்சுறுத்தலானது, இதேபோல, இம்மாத்தில் நடந்த பல சம்பவங்களில் ஒன்றாகும்.

* ஜனவரி 7 அன்று, “அரசாங்க உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தார்”, என்று பொலிஸ் குற்றஞ்சாட்டியதன் அடிப்படையில், தமிழ்கார்டியன்செய்தியாளர் செல்வகுமார் நிலாந்தனுக்கு மட்டக்களப்பு நீதிமன்றத்தினால் அழைப்பானை அனுப்ப்பட்டது. பின்னர் அவர் பினையில் விடுதலை செய்யப்பட்ட போதும் பெப்பிரவரி 28 நீதிமன்றத்தின் முன் நிற்க கட்டளையிடப்பட்டது.

ஏறாவூர் பொலிஸ் நிலைய அதிகாரிகள், அச்சுறுத்தும் வகையில், நிலாந்தனை சந்திக்க பல தடவை சென்றுள்ளனர். இந்த செய்தியாளர் தமது கடமைகளுக்கு இடையூறு செய்தார், என்று செங்கலடி பிரதேச செயலாளரான என். வில்வரட்ணம் 10 மாதங்களுக்கு முன்னர் மேற்கொண்ட போலி முறைப்பாட்டின் அடிப்படையிலேயே பொலிஸ் இந்த நடவடிக்கைகயில் ஈடுபட்டுள்ளது. எவ்வாறாயினும், பிரதேச செயலகத்தின் ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராக, சாதாரண பிரஜைகளால் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையை நிலாந்தன், செய்தியாக வெளியிட்டிருந்தார்.

* ஜனவரி 10 அன்று, லங்காதீபபத்திரிகையின் நீதிமன்றச் செய்தியாளர் நிமந்தி ரணசிங்க என்பவர், ஒரு பாதாள உலக குழுவினால் விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல் சம்பந்தமாக, ஒரு முறைப்பாட்டினைச் செய்வதற்காக, கொழும்புக்கு அருகில் உள்ள முல்லேரியா பொலிஸ் நிலையத்துக்குச் சென்றார். ஆனால், அந்தப் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, அந்த முறைப்பாட்டுக்கான ஆதாரம் இல்லை எனக் கூறி, அவரது முறைப்பாட்டினைப் பதிவதற்கு மறுத்துவிட்டார்.

* ஜனவரி 19 அன்று, யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் வலம்புரிபத்திரிகையின் செய்தியாளரான ஐ. ராஜேஸ்கரனின் மானிப்பாயில் அமைந்துள்ள வீடு, அடையாளம் தெரியாத குழுவினரால் சேதமாக்கப்பட்டது. டிசம்பரில் இவரது வீட்டுக்கு அருகில் உள்ள மற்றைய செய்தியாளரின் வீடும் சேதமாக்கப்பட்டது.

ஜனவரி 16 அன்று, சர்வதேச மன்னிப்புச் சபை, “ இலங்கையில் உள்ள மனித உரிமை அமைப்புக்கள், ஊடக அமைப்புக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள்” என்னும் தலைப்பில் ஒரு விசேட அறிக்கையை வெளியிட்டிருந்தது. இந்த ஜனவரிக்கும் மற்றும் கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் இடைப்பட்ட காலத்தில் “மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஊடக அமைப்புக்களினதும் அலுவலகங்களுக்கு டசினுக்கும் அதிகமான தடவைகள், அதிகாரிகள் முன்னறிவிக்கப்படாத வகையில் சென்று விசாரணை நடத்தியிருந்தனர்.

மனித உரிமைகள் மற்றும் ஊடக செயற்பாட்டாளர்கள், “குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு உட்பட இலங்கைப் பொலிஸ் அதிகாரிகள், அதேபோல் அரச புலனாய்வாளர்களாலும் விசாரிக்கப்படுகின்றார்கள்,” என அந்த அறிக்கை கூறுகின்றது.

டிசம்பரில், பெருநிறுவன ஊடக தலைவர்களைச் சந்தித்த ஜனாதிபதி ராஜபக்ஷ, அவர்களுடைய வெளியீடுகளை அரசாங்க கொள்கைகளுடன் ஒருங்கிணைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். “நாட்டின் கௌரவத்தினை பத்திரிகைத் துறையின் ஊடாக உயர்த்துவதன் மூலமாக, ஊடக அமைப்புக்கள் நாட்டிற்கான தமது கடமைகளை நிறைவு செய்வார்கள் என நான் எதிர்பார்க்கின்றேன்,” என அவர் கூறினார்.

அவரது சகோதர்ரான மகிந்தராஜபக்ஷ ஜனாதிபதியா இருந்தபோது, - 2005 இல் இருந்து 2015 வரை – ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தார். இந்த காலத்தில், பத்திரிகையாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுப்பது, கொலைகள் மற்றும் காணாமல் ஆக்கப்படுதல் என்பன அடிக்கடி நடந்தன.

ஊடகத் தொழிலாளர்கள் மீதான தாக்குதல் பற்றி விசாரணை செய்து அம்பலப்படுத்தப்படும் என்ற உத்தரவாத்துடன், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அதிகாரத்துக்கு வந்தபோதிலும், எந்த மாற்றமும் நடக்கவில்லை. அரசியல் ஆய்வாளரும் மற்றும் கேலிச் சித்திரவாளருமான பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை, மற்றும்ரிவிரபத்திரிகையின்முன்னாள் ஆசிரியர் உபாலி தென்னக்கோன் மற்றும் நேன்பத்திரிகையின் துணை ஆசிரியர் கீத்நொயார் மற்றும் அதன் பத்திரிகையாளர் நாமல் பெரேரா ஆகியோர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பான பொலிஸ் விசாரணைகள், அரசியல் ரீதியில் தாமதப்படுத்தும் உத்தியே தவிர, வேறொன்றும் நடக்கவில்லை.

உண்மையில், ஊடக்தொழிலாளர்கள் மீதான மிரட்டல் மற்றும் துன்புறுத்தல் மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல்களும், சிறிசேன – விக்ரமசிங்க நிர்வாகத்தின் கீழும் தொடர்ந்து கொண்டிருந்தன. இது, விருது பெற்ற எழுத்தாளர் சக்திக சத்குமாரவை சிறையில் தள்ளியதுடன், கலைஞர் மாலக தேவப்பிரியவுக்கு எதிரான பொலிஸ் அச்சுறுத்தலும் மேற்கொள்ளப்பட்டன. இவர்களுக்கு எதிராக, தீவிர–வலதுசாரி பௌத்த பிக்குகளினால் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த ஒடுக்குமுறைகள் நடைபெற்றன.

இலங்கையில் தொடரும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக சுதந்திரம் மீதான தாக்குதல்கள், சர்வதேச நிகழ்வுகளின் ஒரு பாகமாகவே நடைபெறுகின்றன. இந்த துன்புறுத்தல் மற்றும் சிறை வைத்தலும், பிரிட்டனில் விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜை சிறையிலடைத்து, உளவுபார்த்தல் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரை அமெரிக்காவுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதன் மூலமாக இது கூர்மையாக வெளிப்படுகின்றது.

ராஜபக்ஷ, ஜனாதிபதியாகப் பதவியேற்றதில் இருந்து, தொடர்ந்துவரும் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் பற்றி பெரு நிறுவன ஊடகங்கள் அலட்சியம் செய்து வந்துள்ளன. அவை மட்டக்களப்பு பத்திரிகையாளர்கள் மீதான மரண அச்சுறுத்தல்கள் பற்றி ஒரு வசனம் கூட வெளியிடவில்லை. வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் வெடிப்பதால் பதட்டமடைந்துள்ள புதிய அரசாங்கம், சர்வாதிகார ஆட்சி முறைகளை நோக்கி நகர்வதால், வளர்ந்து வரும் இந்த அச்சுறுத்தல்கள் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான ஒரு பரந்த ஒடுக்குமுறையின் பகுதியாகும்.