கொரோனா வைரஸ் ஆபத்து இருக்கின்றபோதிலும் ஜூலியன் அசான்ஜின் ஜாமீன் கோரிக்கை மறுக்கப்பட்டது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தற்போது லண்டனின் HMP பெல்மார்ஷ் சிறையில் உளவுபார்த்த குற்றச்சாட்டிற்காக ஒரு ஆயுள்தண்டனை வழங்க அமெரிக்காவிற்கு கையளிக்கப்படுவதற்கான தவணையில் உள்ள விசாரணையை எதிர்பார்த்திருக்கும் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஜ் ஜாமீன் வழங்குமாறு முன்வைத்த விண்ணப்பத்தை இங்கிலாந்து நீதிபதி வனேசா பாரிட்சர் (Vanessa Baraitser) நேற்று மறுத்துவிட்டார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் அவரது பலவீனமான ஆரோக்கியத்திற்கு "மிகவும் உண்மையான" மற்றும் "அபாயகரமான" ஆபத்து காரணமாக அசான்ஜின் சட்டக் குழு ஜாமீன் கோரிக்கையை முன்வைத்தது. ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு சேவைகளுடன் இணைந்து பிரிட்டிஷ் அரசாங்கம் உலகப் புகழ்பெற்ற பத்திரிகையாளர் இறந்து கிடப்பதைக் காட்டிலும் குறைவான ஒன்றையும் விரும்பவில்லை என்பதற்கு நீதிபதியின் முடிவு அதிக சான்றாக உள்ளது.

கொரோனா வைரஸ் நெருக்கடியின் போது இங்கிலாந்தின் நெரிசலான மற்றும் துன்பகரமான சிறையில் பாதிக்கப்படக்கூடிய, குறைந்த ஆபத்தான கைதிகளை விடுவிப்பதற்கான பலவிதமான அழைப்புகளுக்கு மத்தியில் பாரெய்ட்ஸரின் மறுப்பு வந்துள்ளது.

இங்கிலாந்து சர்வதேச மனித உரிமைகள் குழுவின் அலன் ஹோகார்ட் (Allan Hogarth), வயதான கைதிகள் மற்றும் மருத்துவ நிலைமைகளை கருத்தில் கொண்டு "தங்களுக்கு அல்லது சமூகத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாவிட்டால்" உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று கூறினார். கைதிகளின் ஆலோசனை சேவை முதிய அல்லது பலவீனமானவர்களுக்கும், பொது பாதுகாப்பு தண்டனைகளுக்காக காலவரையின்றி சிறைவாசம் அனுபவிப்பவர்களும், வெறுமனே அச்சுறுத்தலை முன்வைக்காதவர்களும் இப்போது விடுவிக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

விசாரணை தொடங்குவதற்கு முன்பே, 17,000 க்கும் மேற்பட்டோர் உள்துறை அமைச்சர் பிரீதி படேலுக்கு "COVID-19 பரவுவதற்கு முன்பு பெல்மார்ஷ் சிறையில் இருந்து ஜூலியன் அசாஞ்சை விடுவிக்க வேண்டும்" என்று ஒரு மனுவில் கையெழுத்திட்டனர்.

இங்கிலாந்தின் அடைப்பு காரணமாக, நீதிமன்றத்தில் வரவு குறைவாகவே இருந்தது, பல வழக்கறிஞர்கள் வலைத் தள சேவையூடாக பங்கேற்றனர். அங்கு பிரசன்னமாக இருந்தவர்களில் பாரிட்சர், ஒரு எழுதுவினைஞர், அசான்ஜின் முன்னணி பாதுகாப்பு சட்டத்தரணி எட்வார்ட் ஃபிட்ஸ்ஜெரால்ட் QC, ஐந்து ஊடகவியலாளர்கள் மற்றும் ஆறு விக்கிலீக்ஸ் ஆதரவாளர்கள் அடங்குவர்.

ஆரம்பத்திலேயே பாரிட்சர், சிறைச்சாலை அசான்ஜிற்கு 15 நிமிடம் ஒரு ஒளிப்பதிவு (video link) ஊடாகவே தொடர்புகொள்ள அனுமதித்ததாக அறிவித்தார். மீதமுள்ள விசாரணையை அவர் இல்லாத நிலையில் தொடர வேண்டியிருந்தது. நீதிமன்றத்தில் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட வழக்கறிஞர்களுடனான ஒலித்தொடர்பு பிரச்சினைகள் காரணமாக அசான்ஜ் சரியாக பங்கேற்க முடியவில்லை: “அவர்களின் உரையாடலில் பாதியை என்னால் கேட்க முடியாதிருந்ததாக,” அவர் ஒரு கட்டத்தில் கூறினார்.

வழமையான செயல்முறையின் இந்த வெளிப்படையான துஷ்பிரயோகங்களின் கீழ், அமெரிக்க வக்கீல்கள் விக்கிலீக்ஸ் நிறுவனரை சிறையில் வைத்திருப்பதை நியாயப்படுத்த ஏராளமான பொய்களை வழங்கினர்.

வழக்கறிஞர் கிளெய்ர் டோபின் முதலில் தனிப்பட்ட கைதிகளை விடுவிப்பது நீதிமன்றம் தொடர்பான ஒரு விஷயமல்ல, அது நீதித்துறை அமைச்சகத்திற்கு உரியது என்று கூறினார். நீதிமன்றம், "அரசாங்கத்தின் உரிமைகளை முன்கூட்டியே எடுத்துக்கொள்ள முடியாது" என்று அவர் கூறினார். ஆனால், 2019 செப்டம்பரில் பரெய்ட்ஸரின் தீர்ப்பின்படி அந்த மாதத்தின் “தலைமறைவானது தொடர்பான ஜாமீன்” பற்றிய தண்டனை காலாவதியாகி இருந்தபோதிலும், அசான்ஜ் இன்னும் அதிகபட்ச பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அசான்ஜை தடுப்புச்சிறையில் வைத்திருக்க அரசு தரப்பின் இரட்டிப்பான அபத்தமான கூற்றை பற்றி டோபின் இப்போது மீண்டும் கூறினார். ஆனால் உலகின் மிகப் பிரபலமான அரசியல் கைதியால் “தப்பியோடுவதற்கான ஆபத்து” இப்போது ஒரு தேசிய அடைத்தல் மற்றும் சர்வதேச பயணங்களை மூடுயிருப்பதின் மத்தியில் “மிகவும் கடினமானது.”

"அவர் தப்பியோடியதற்கு உறுதியான ஆதாரங்கள் உள்ளன," என்று அவர் கூறினார். "அவர் அதனை பரிசோதித்து, தோல்வியுற்றார்." என டோபின் கூறினார்.

இது, 2012 இல் ஈக்வடோர் தூதரகத்தில் தஞ்சம் அடைவதற்கும், ஒரு கொலைகார அமெரிக்க அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஒரு சர்வதேச மனித சூழலில் இருந்து தப்பிப்பதற்கும் அசான்ஜ் தனது புகலிட உரிமையைப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது. அசான்ஜை துன்புறுத்துபவர்கள் தங்களது கடந்தகால குற்றத்தை இன்று நியாயப்படுத்துவதற்கு அதனை பயன்படுத்துகின்றனர்.

டோபின் பின்னர் "கொரோனா வைரஸிற்கான அதிக ஆபத்துள்ள குழுக்களுக்குள் அசான்ஜ் இல்லை" என்றும், எப்படியிருந்தாலும் தொற்றுநோய்க்கான ஆபத்து சிறிதாகவே உள்ளது என்றும் குறிப்பிட்டார், "குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே சிறைச்சாலைகளுக்கு வருகை தடுத்து நிறுத்தப்பட்டதாக பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது." என்றார்.

அசான்ஜே ஒரு நீண்டகால நுரையீரல் நோயைக் கொண்டிருக்கிறார் மற்றும் கடந்த தசாப்தத்தில் உளவியல் சித்திரவதைக்கு உட்பட்ட மிருகத்தனமான தவறான நடத்தைகளால் கடுமையாக உடல் ரீதியாக பலவீனமடைந்துள்ளார். செவ்வாயன்று, அசாஞ்சிற்கான டாக்டர்களுக்கான பிரச்சாரக் குழு, “மருத்துவ ரீதியாக, சட்டரீதியாக, நெறிமுறையாகவும் மற்றும் உளவியல்ரீதியாகவும் பிணை வழங்கப்படவேண்டும் என்று ரிவீட் செய்தனர்.

அக்குழுவின் செய்தித் தொடர்பாளர் லிசா ஜோன்சன், “புதன்கிழமை ஜூலியன் அசாஞ்சிற்கு ஜாமீன் வழங்கப்படாவிட்டால், அவர் சிறையில் Covid-19 இற்கு பலியாக்கப்பட்டு, அவரது மரணம் அரசியல் ரீதியாக ஊக்கமளிக்கப்பட்டு, வேண்டுமென்றே மருத்துவ புறக்கணிப்பால் செய்யப்பட்ட அரசால் அனுமதிக்கப்பட்ட கொலையாகும்” என ரிவீட் செய்தார்.

அசான்ஜிற்கான மருத்துவர்கள், “குறைந்த ஆபத்தான கைதிகளுக்கே Covid-19 தொற்றுநோய் ஒரு ஆபத்தாக இருக்கின்றது என்ற உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலை மேற்கோள் காட்டியும், சிறை ஆளுநர் சங்கத்தின் தலைவரினது அறிக்கையில் Covid-19 தொடர்பாக சிறைகளில் இறப்பு தவிர்க்க முடியாதது என்று குறிப்பிட்டதையும் மற்றும் London School of Hygiene and Tropical Medicine பேராசிரியர் ரிச்சர்ட் கோக்கர் "சிறைகளில் வைரஸ் விரைவாக பரவுவதற்கான கணிசமான ஆபத்து உள்ளது" என்பதையும் குறித்துக்காட்டி அசாஞ்சிற்கு இது இன்னும் கணிசமாக அதிகரித்த மரண அபாயத்தை பிரதிபலிக்கிறது” என்று எச்சரித்தனர்.

இந்த ஆபத்து ஒரு யதார்த்தமாகி வருவதற்கான தெளிவான அறிகுறிகள் உள்ளன. செவ்வாயன்று, 4,300 சிறை ஊழியர்கள் -மொத்தத்தில் 12 சதவிகிதம்- அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் அல்லது தனிமைப்படுத்தப்பட்டதால் வேலையிலிருந்து விலகி இருந்தனர். 10 சிறைகளில் 19 கைதிகள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் நான்கு சிறைகளில் நான்கு சிறை ஊழியர்கள் மற்றும் மூன்று கைதிகளை கொண்டுசெல்வோர் மற்றும் காவல் சேவை ஊழியர்கள் உள்ளடங்குகின்றனர். பெல்மார்ஷ் சிறை அமைந்துள்ள லண்டன், இங்கிலாந்தின் தொற்றுநோயின் மையமாகும்.

அசான்ஜ் ஒரு தப்பியோடிவிடும் ஆபத்து என்று அரசு தரப்பு கூறியது தொடர்பாக ஃபிட்ஸ்ஜெரால்ட், "அவர் ஈடுபட்டுள்ள சட்டப் போரை அவர் கைவிடுவார் என்பது மிகவும் சாத்தியமில்லை" என்று கூறினார். விடுதலை செய்வதன் கடுமையான நிபந்தனைகளை அவர் கோடிட்டுக் காட்டினார், அசாஞ்சின் பாதுகாப்பை உறுதி செய்ய தமது தரப்பில் தயாராக இருக்கும் கடுமையான நிபந்தனைகளை சுட்டிக்காட்டினார். இதில் அவரது நண்பர் மற்றும் தந்தையின் வீட்டுக் காவல், அவர் வீட்டின் உட்புறத்தை விட்டு வெளியேறினால் அதிகாரிகளை எச்சரிக்கும் GPS தடயத்தேடுதல், மற்றும் பிணைக்கான 12 ஜாமீன் காரணிகளையும் முன்வைத்தார்.

அசான்ஜின் உடல்நலம் மற்றும் உயிருக்கு ஏற்படும் அபாயங்கள் குறித்து, ஃபிட்ஸ்ஜெரால்ட் விளக்கினார், மருத்துவ நிபுணர் டாக்டர் சோண்ட்ரா கிராஸ்பி “அவர் குறிப்பாக ஆபத்தில் இருப்பதாகக் கருதுகிறார், ஒன்று, கொரோனா வைரஸ் வளர்ச்சியடைந்தால் அது அவருக்கு மிகவும் கடுமையான சிக்கல்களை உருவாகும்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

"அவரிடம் முக்கியமான அறிகுறிகள் தோன்றினால், பெல்மார்ஷ் தனது நிலையை சமாளிக்க முடியுமா என்பது மிகவும் சந்தேகமாக இருக்கும்" என்று கிராஸ்பி முடித்தார்.

ஃபிட்ஸ்ஜெரால்ட் தொடர்ந்து கூறுகையில், அசான்ஜ் தொடர்ந்து சிறையில் இருந்தால் "தப்பிக்க முடியாத சூழ்நிலைகளில் அவர் கடுமையாக ஆபத்தில் சிக்கிவிடுவார்". அடைத்தல் நடைமுறைகளால் முன்வைக்கப்படும் “அவரது மன ஆரோக்கியத்திற்கும் அவரது மனித தொடர்புக்கும் ஆபத்தானது” அதிகரிக்கிறது. இது அசான்ஜே தனது வழக்கறிஞர்களுடன் ஏற்கனவே குறைந்த தொடர்பு நேரத்தை மேலும் கட்டுப்படுத்தும்.

அசாஞ்சிற்கு வைரஸுடன் தொடர்பு கிடைக்கும் அபாயம் குறைவாக இருப்பதாக அரசு தரப்பு பரிந்துரைத்ததற்கு பதிலளித்த ஃபிட்ஸ்ஜெரால்ட், “நாங்கள் பெல்மார்ஷை அணுக முற்பட்டபோது, கொரோனா வைரஸ் காரணமாக 100 ஊழியர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இது பெல்மார்ஷில் கொரோனா வைரஸ் பிரச்சினை இல்லை என்பதை காட்டவில்லை”.

"உலகளாவிய தொற்றுநோய்... திரு அசான்ஜின் விடுதலைக்கான காரணங்களை வழங்காது" என்று ஒரு அறிவிப்புடன் பாரிட்சர் பதிலளித்தார். கைதிகளை வைரஸிலிருந்து பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் ஆலோசனையை "ஆதாரம் சார்ந்த மற்றும் நம்பகமான மற்றும் பொருத்தமானது" என்றும் நம்புவதற்கான எவ்வித காரணமும் தனக்கு இல்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

தீர்ப்பைத் தொடர்ந்து, சித்திரவதை தொடர்பான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் நில்ஸ் மெல்சர் பின்வருமாறு ட்வீட் செய்தார், “ஆச்சரியமில்லை. அசான்ஜின் உடல்நலம், நீதி அல்லது [சட்டத்தின் விதி] ஆகியவற்றை இங்கிலாந்து கவனத்திற்கு எடுத்திருந்தால், அவர் துன்புறுத்தப்பட்டோ சிறையில் அடைக்கப்பட்டோ அல்லது தகவல் சுதந்திரத்தை ஒடுக்குவதற்காவும் சித்திரவதைக்கும் யுத்தக் குற்றங்களுக்கும் தண்டனையிலிருந்து பாதுகாப்பளிப்பதாக கூறும் ஒரு நாட்டிற்கு கடத்தப்படுவதையும் எதிர்நோக்கியிருக்கமாட்டார்".

அசாஞ்சிற்கான டாக்டர்களின் சார்பில் பேசிய டாக்டர் ஸ்டீபன் ஃப்ரோஸ்ட் (Stephen Frost), உலக சோசலிச வலைத் தளத்திடம், “ஜூலியன் அசான்ஜிற்கு பிணை மறுக்கப்பட்டதில் நாங்கள் ஆச்சரியப்படுகிறோம். ஏனெனில் நிபுணர் சாட்சி மருத்துவ சான்றுகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், அவர் பிணையில் விடுவிக்கப்பட வேண்டும் என்று கடுமையாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கிடைக்கக்கூடிய சான்றுகளின் அடிப்படையில், 2012 முதல் முறையான மருத்துவ வசதி கிடைக்காத நிலையில், திரு. அசான்ஜ் மருத்துவர்களால் கடுமையாக நோயெதிர்ப்பு குறைபாடு உடையவர் என்று கருதப்பட வேண்டும், எனவே குறிப்பாக பெல்மார்ஷ் போன்ற சிறையில் கொரொனா வைரஸால் ஆபத்தான தொற்றுக்குட்பட்டு இறக்கும் நிலையில் உள்ள ஒருவராக இருக்கின்றார். திரு. அசான்ஜ் பெல்மார்ஷ் சிறையில் இருக்கும் ஒவ்வொரு நாளும் அவரின் வாழ்விற்கான ஆபத்து பெரிதும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றது.

Loading