முன்னோக்கு

ஜெனரல் மோட்டார்ஸ் இலாபங்களைக் கோருகின்ற நிலையில், அமெரிக்காவில் சுவாச கருவிகளின் பற்றாக்குறை பத்தாயிரக் கணக்கான உயிர்களை அச்சுறுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்கா எங்கிலுமான நகரங்களில், COVID-19 தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் இரட்டிப்பாகி வருகின்ற நிலையில், மருத்துவமனைகளோ அவற்றின் முழுமையான கொள்திறனை நெருங்கி வருகின்றன. சுமார் 20,000 புதிய நோயாளிகள் அறிவிக்கப்பட்டதும், வெள்ளிக்கிழமை நோயாளிகளின் எண்ணிக்கை 100,000 ஐ தாண்டியது. 250 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததுடன், இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,500 க்கு அதிகமானது.

இதற்கிடையே மருத்துவர்களும் செவிலியர்களும் தேசியளவில் பாதுகாப்பு துணைக்கருவிகள் மற்றும் மருத்துவச் சிகிச்சை சாதனங்களின் பற்றாக்குறையை முகங்கொடுத்துள்ளனர்.

கொரொனா வைரஸ் உயிரிழப்பு எண்ணிக்கையைப் பரந்தளவில் அதிகரிப்பதில் ஒரு முக்கிய காரணியாக, உயிர்காக்கும் சுவாசக் கருவிகளின் பற்றாக்குறை வேகமாக அதிகரித்து வருகிறது.

Nurses at Mount Sinai West in garbage bags. (Photo: Facebook, Diana Torres)

அமெரிக்காவில் இந்த தொற்றுநோயின் மையமாக வேகமாக மேலெழுந்து வருகின்ற மெட்ரோ டெட்ராய்டில், ஹென்றி ஃபோர்ட் மருத்துவத்துறை நோயாளிகளை எச்சரித்து, “பற்றாக்குறைகளின் காரணமாக" “கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பவர்களை" “தீவிர சிகிச்சைப் பிரிவிலோ அல்லது செயற்கை சுவாச சிகிச்சையிலோ தங்க வைக்க" முடியாமல் போகலாம் என்று குறிப்பிட்டது. முன்னாள் மருத்துவத்துறை செயலதிகாரியான டெட்ராய்ட் நகரசபை தலைவர் மைக் டக்கன், “அவர்கள் நேர்மையாக தெரிவித்திருக்கிறார்கள்,” என்று அறிவித்து நேற்று அக்கடிதத்தைப் பாராட்டினார்.

ஏனைய மருத்துவ சிகிச்சை முறைகளோ இன்னும் அதிக கொடூரமான நடவடிக்கைகளுக்குத் தயாரிப்பு செய்து வருகின்றன. வாஷிங்டன் மற்றும் அலபாமா மாநிலங்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர்காக்கும் சிகிச்சையை மறுப்பதற்கு அனுமதிக்கும் உத்தரவாணைகளைச் செயல்படுத்தி வருகின்றன.

செயற்கை சுவாசக் கருவிகளை முறைப்படுத்தி பயன்படுத்துவது மீதான மாநிலத்தின் அவசரகால திட்டம் "முறைப்படுத்தி பயன்படுத்தும் தருணத்தில் குறிப்பாக புத்தி சுவாதீனமான சில குறிப்பிட்ட நபர்களுக்குச் செயற்கை சுவாசக் கருவிகளை வழங்குவதைத் தவிர்க்குமாறு சுட்டிக்காட்டுகிறது... 'கடுமையாகவோ அல்லது அதிகமாகவோ மனநலம் பாதிக்கப்பட்டிருக்கும்' 'நோயாளிகளுக்கு செயற்கை எந்திர சுவாசக் கருவிகளின் உதவிகளை வழங்க வேண்டாமென' மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளன … இந்த கொள்கை குழந்தைகளுக்கும் பொருந்தும்,” என்று அலபாமா மனநல நோய் ஆலோசனை திட்டம் கொண்டு வந்த ஒரு சட்டமசோதா குறிப்பிட்டது.

மருத்துவத் தொழில் வல்லுனர்கள், சில நாட்களுக்குள்ளேயே, யார் வாழ வேண்டும் யார் சாக வேண்டுமென தீர்மானிக்க நிர்பந்திக்கப்பட்டு, படுமோசமான பெருங்கவலையில் வாழ விடப்படுவார்கள்.

“நமக்கு பத்தாயிரக் கணக்கான செயற்கை சுவாசக் கருவிகள் அவசியப்படுமென யாருமே ஒருபோதும் அவர்களின் பயங்கரமான கனவிலும் கூட நினைத்திருக்க மாட்டார்கள்" என்று ட்ரம்ப் வாதிடுவது முற்றிலும் ஒரு பொய்யாகும். உண்மையில், தொற்றுநோய் நிபுணர்களும் மருத்துவத்துறை தொழில் வல்லுனர்களும் மற்றும் அரசுதுறைகளுமே கூட எண்ணற்ற அறிக்கைகள் மற்றும் கட்டுரைகளில் துல்லியமாக அதுபோன்ற எச்சரிக்கைகளைச் செய்திருந்தன.

அரசு கணக்குவழக்கு அலுவலகத்தின் 2003 அறிக்கை ஒன்று எச்சரிக்கையில், “சுவாச தொற்றுநோய்க்குப் பெரும்பாலும் அவசியப்படும் செயற்கை சுவாசக் கருவிகள் போன்ற மருத்துவச் சாதனங்கள் சில மருத்துவமனைகளில் போதுமானளவுக்கு இல்லை,” என்று குறிப்பிட்டது. “ஒரு கடுமையான தொற்றுநோயின் போது, சான்றாக செயற்கை சுவாச இயந்திரங்களின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது...,” என்று குறிப்பிட்டு 2005 இல் மனித சுகாதார சேவைத்துறை சளிக்காய்ச்சல் வகையான ஒரு தொற்றுநோய் திட்டத்தை வெளியிட்டது.

2017 இல் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் “சளிக்காய்ச்சல் தொற்றுநோய்களுக்கான சுவாசக் கருவிகளைக் கையிருப்பில் வைத்தல்,” என்று தொற்றுநோய் நிபுணர்களிடம் இருந்து பிரசுரித்த ஓர் அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டது: “செயற்கை சுவாச உதவி தேவைப்படும் எல்லோருக்கும் சிகிச்சை அளிக்க தீவிர சிகிச்சைப் பிரிவில் போதுமான ஆதாரவளங்கள் இல்லை என்பதன் மீது குறிப்பிடத்தக்க கவலை நிலவுகிறது. தற்போதிருக்கும் எண்ணிக்கை மிதமான கடும் தொற்றுநோய்களைக் கையாளக்கூட போதுமானதில்லை என்று முந்தைய ஆய்வுகள் வாதிடுகின்றன...”

ஆனால், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டினதும் கீழ், மத்திய அரசாங்கம் எதையும் செய்யவில்லை. கடந்த இரண்டு தசாப்தங்களில் ஒவ்வொரு ஆண்டும் இராணுவத்திற்காக செலவிடப்பட்ட தொகை, தேசியளவில் ஒரு மில்லியன் செயற்கை சுவாசக் கருவிகளைக் கையிருப்பில் வைக்க தேவையான செலவை விட 50மடங்கிற்கும் அதிகமாகும். இதுபோன்றவொரு கையிருப்பை உருவாக்க சுமார் 15 பில்லியன் டாலர் செலவாகி இருக்கலாம், இது வங்கிகளின் பிணையெடுப்புக்குப் பயன்படுத்தப்பட்டதில் ஒரு மிகச் சிறிய பகுதி தான்.

இப்போதோ சுவாச கருவிகளின் கடுமையான பற்றாக்குறையை முகங்கொடுத்துள்ள நிலையில், பிரதான பெருநிறுவனங்களோ விலை ஏற்றம் மற்றும் இலாபமீட்டல் வழிமுறைகள் மூலமாக மிகப்பெரும் இலாபங்களை உருவாக்க COVID-19 தொற்றுநோயை ஒரு சந்தர்ப்பமாக காண்கின்றன.

வெள்ளிக்கிழமை நியூ யோர்க் டைம்ஸ் அறிவிக்கையில், சுவாசக் கருவிகளை உருவாக்குவதற்கு நிறுவனம் கோரிய விலை கொடுக்க ட்ரம்ப் நிர்வாகம் மறுத்து விட்டதால் ஜெனரல் மோட்டார்ஸின் திட்டங்கள் கைவிடப்பட்டதாக குறிப்பிட்டது.

இந்த நகர்வு, "மதிப்பீட்டுச் செலவை ஏற்க முடியுமா என்பதை மதிப்பிட கூடுதல் அவகாசம் தேவையென மத்திய அவசரகால மேலாண்மை முகமை தெரிவித்த பின்னர் எடுக்கப்பட்டது. விலை பட்டியல் 1 பில்லியனுக்கும் கூடுதலாக இருந்தது, மேலும் பல நூறு மில்லியன் டாலர் முன்கூட்டியே ஜெனரல் மோட்டாஸிற்குச் செலுத்த வேண்டியதாக இருக்கும்.” ஜெனரல் மோட்டார்ஸ் 6.5 பில்லியன் டாலர் இலாபமீட்டியதாக கடந்தாண்டு அறிவித்தது.

“1.5 பில்லியன் விலைப்பட்டியலில் ஒரு சுவாசக் கருவி சுமார் 18,000 டாலருக்கு வருகிறது. ஒப்பிட்டுப் பார்க்கையில், மொத்த செலவு, ஏறத்தாழ பென்டகனின் அதிநவீன போர் விமானம் 18F-35s வாங்குவதற்கு நிகராக உள்ளது,” என்பதையும் டைம்ஸ் சேர்த்துக் கொண்டது.

மருத்துவச் சாதனங்கள் உற்பத்தி நிறுவனம் Ventec உடனான பங்காண்மையுடன், அது சுவாசக் கருவிகளை உருவாக்க முன்நகருமென அதற்குப் பின்னர் ஜிஎம் அறிவித்தது.

ட்ரம்ப் நிர்வாகம் அதன் பங்கிற்கு, பெருநிறுவனங்கள் மீது எந்த கோரிக்கைகளையும் அது திணிக்க விரும்பவில்லை என்பதால் சுவாசக் கருவிகள் மற்றும் பிற சாதனங்களின் உற்பத்தியை அமலாக்கும் பாதுகாப்பு சாதனங்களினது உற்பத்தி சட்டத்தைப் பயன்படுத்த பல வாரங்களாக மறுத்து வந்தது. வெள்ளிக்கிழமை ட்ரம்ப் அறிவிக்கையில் ஜிஎம் ஏற்கனவே அது செய்வதற்கு உறுதியளித்ததைச் செய்யுமாறு அதை "நிர்பந்திக்க" அவர் அச்சட்டத்தைப் பயன்படுத்த இருப்பதாக அறிவித்தார்.

உதிரிபாகங்களின் வினியோகம் பற்றாக்குறையில் உள்ள நிலையில், அடுத்த இரண்டு மாதங்களில் தேவைப்படும் அளவுக்கு ஏறத்தாழ சுவாசக் கருவிகள் எதுவும் பாரியளவில் கிடைக்க வாய்ப்பில்லை. “கோடைகாலம் தொடங்கும் வரையில் ஒட்டுமொத்த ஊக்குவிப்பும் ஒன்றும் பெரிய விளைவை ஏற்படுத்தாது என்று தொழில்துறை செயலதிகாரிகள் தெரிவித்தனர்—அனேகமாக தொற்றுநோய்களின் 'இரண்டாம் அலை' காலம் வரையில்,” என்று டைம்ஸ் குறிப்பிட்டது.

எவ்வளவு செலுத்துவது, எவ்வளவு ஜிஎம் இலாபமீட்டும் என்று ட்ரம்ப் நிர்வாகமும் அந்த வாகனத்துறை பெருநிறுவனமும் பேரம்பேசிக் கொண்டிருக்கையில், மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்.

மிகப்பெரும் மருத்துவத்துறை உற்பத்தி நிறுவனங்கள் உட்பட அனைத்து பிரதான பெருநிறுவனங்களையும் பொதுத்துறை நிறுவனங்களாக ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் மாற்றுவதற்கு சோசலிச சமத்துவக் கட்சி போராடிக் கொண்டிருக்கிறது. அனைத்து ஆதாரவளங்களும், பெருநிறுவனங்களைப் பிணையெடுக்கவும் மற்றும் வோல் ஸ்ட்ரீட் முதலீட்டாளர்களின் சொத்துக்களுக்கு விலை கொடுக்கும் பிணையெடுப்புகளுக்காகவும் அல்ல, மாறாக சுவாசக் கருவிகள் மற்றும் இதர சாதனங்களை உற்பத்தி செய்வதற்கும் மற்றும் மருத்துவமனைகள் கட்டமைப்பதற்குமான ஓர் அவசரகால திட்டத்திற்காக கிடைக்கச் செய்யப்பட வேண்டும்.

உயிர்களைக் காப்பாற்றும் விதத்தில் தனியார் சொத்துக்களைக் கிடைக்கச் செய்வதைப் பொறுத்த வரையில், அது வேகமாக செய்யப்பட வேண்டும். பரந்த தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான முன்னேற்றங்களும் மனிதகுலத்தின் பாரிய உற்பத்தி சக்திகளும், இலாப முனைவு மற்றும் தேசிய-அரசு அமைப்புமுறையால் அவற்றின் மீது நிறுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும்.

இந்த கொரொனா வைரஸ் நெருக்கடியைக் கையாள்வதற்கும், மற்றும் அதற்கு தயாரிப்பு செய்வதற்குமான, ஒவ்வொரு தீவிர முயற்சியும் உற்பத்தி கருவிகளினது தனிச்சொத்துடைமையால் வீணடிக்கப்படுகின்றன. பொருளாதார வாழ்க்கை ஆளும் வர்க்கத்தால் இலாபம் மற்றும் செல்வத் திரட்சியின் அடிப்படையில் வழிநடத்தப்படுகிறதா, அல்லது தொழிலாள வர்க்கத்தால் சமூக தேவைக்காக வழி நடத்தப்படுகிறதா, முதலாளித்துவமா அல்லது சோசலிசமா என்பதே அடிப்படை பிரச்சினையாகும்.

இந்த போராட்டத்தை முன்னெடுக்க சோசலிச சமத்துவக் கட்சியில் இணையுமாறு நாங்கள் அனைத்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.

Loading